படக்கவிதைப் போட்டி 13-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் போட்டிக்கான படத்தை எடுத்துள்ள திரு. பாபு ராஜ், இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்த வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் ஆகியோருக்கு எங்கள் நன்றி!

little boy

மரக்கிளையில் குறும்பு கொப்பளிக்க அமர்ந்திருக்கும் இச்சிறுவனின் இதழ்களில், வெளிவரத் துடிக்கும் முறுவல் ஒன்று ஒளிந்திருக்கக் காண்கின்றேன். கணினி விளையாட்டுக்களே கதியென்றாகிவிட்ட இன்றைய நகரப் பிள்ளைகள் முற்றும் தொலைத்துவிட்ட இயற்கையோடு இயைந்த இனிய வாழ்க்கை இச்சிறுவனுக்காவது வாய்த்திருப்பதை எண்ணி நம் மனமும் குழந்தையாய்க் குதூகலிக்கின்றது.

அன்னையைப்போல் தன் கிளைக்கரங்களால் இச்சிறுவனை அணைத்திருக்கும் இம்மரத்திற்குத் தாழ்த்துகிறேன் என் சிரம்!

வல்லமை வாய்ந்த நம் கவிஞர்களுக்கு இப்படம் சிறந்ததோர் கற்பனைக்களம் அமைத்துத் தந்திருப்பதை அவர்களின் படைப்புக்கள் உறுதி செய்கின்றன.

இனி, போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் சிறப்பான சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ள கவிதை வரிகளை முதலில் பார்த்துவிடுவோம்.

***

யானையாகவும், ஒட்டகமாகவும், பல்வேறு வாகனங்களாகவும், படுக்கும் மெத்தையாகவும் தனக்குத் திகழும் மரத்தைப் போற்றும் சிறுவனை நம் கண்முன் காட்சிப்படுத்தியுள்ள திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கரின் வரிகள்…

ஒய்யார ஒட்டகமும் நீ
பறக்கும் குதிரையும் நீ தான்
அடி சறுக்காத யானையும் நீ
பஞ்சு மெத்தையும் நீ தான்..!

ஓடும் பஸ்ஸும் நீ தான்
நான் ஓட்டும் காரும் நீ தான்
வேகமெடுக்கும் பைக்கும் நீ
உன் முதுகிலேறி ஓட்டுவேன் நான்..!

இங்கிருந்தே நாம் போய் வரலாம்
டெல்லி மும்பாய் கொல்கத்தா
சுற்றிப் பார்ப்போம் சந்தோஷமா

வாழ்நாள்பூரா உன் நிழலில் தான்
காத்திடுவேன் உனை உயிர் போல்தான்
நாளை நான் கூட தாத்தாவாகலாம்
நீயும் என் பேரனை இது போல் சுமக்கலாம்..!

***

குறும்புகள் பல செய்து மரத்தின் காவல்காரனிடம் அகப்பட்டுக்கொண்டு விழிக்கும் சிறுவனின் நிலையைக் குறும்புடன் கூறும் திரு. ஜெயபாரதனின் வரிகள்…

சிந்தனைக்கு பள்ளிக்குச் செல்லாமல் 
துள்ளி  விளையாடும் 
கள்ளன் அவன்
கோலிக் குண்டு ஆடும் 
பாலன் அவன்
கண்ணன் அவன் என்று 
கவி பாடினான்
களிப்புடன் பாரதி ! அவன் 
திருவிளையாடல்
பெரிய புராணம் !
பள்ளிக்குப் போவாது  
மரமேறல் !
மாங்கனி திருடல் !
இன்று
அகப்பட்டுக் கொண்டான்
சுட்டிப் பயல் !
விழிப்பதைப் பார் !
காவல் காரன் கீழே
கம்புடன் !

***

மரத்தை வைத்தே, பொருள்பொதிந்த வாழ்வியல் நீதியை இந்தச் சுட்டிப் பையனுக்கு உணர்த்தும் திரு. கனவு திறவோனின் வரிகள்…

மரத்திற்குக் கிளைகள் பலவுண்டு
ஆனால் தண்டு ஒன்றுதான்
உயரப் போனதும் எதிலும் அமரலாம்
ஆனால் உயரப் போக
வழுக்கும் தண்டு
வசப்படாமலும் போகலாம்!
மரத்தைத் தாங்கமட்டும்
விழுதுகள் அல்ல
ஏற கைப்பிடியும் அது தான்
என்றுணர்ந்ததால்
நீ உயரத்தில்!

கிளைகளுக்கிடையில்
உன் இருக்கை
தெம்பைத் தருகிறது
[…]
மரக்
குரங்கு விளையாட அல்ல
உலகைப் பார்க்க

***

’மரங்கள் வளர்த்து வையம் காப்போம்!’ எனும் ஆக்கபூர்வமான கருத்தை வலியுறுத்தும் திரு. செண்பக ஜெகதீசனின் வரிகள்…

உயர்ந்த மரத்தினில் ஏறிநின்றே
உலகம் பார்க்கும் சின்னவனே,
பயிராய் இதனை வளர்த்திட்ட
பாட்டனை என்றும் மறவாதே,
உயிராய் மரங்களைக் காக்காமல்
வெட்டிச் சாய்ப்பதை விரும்பாதே,
இயன்ற வரையில் மரம்வளர்ப்போம்
இனிதாய் வையம் வளம்பெறவே…!

***

’பறவையாய் மாறினால் எல்லா மரங்களும் போதிதான்!’ எனும் புதிய சிந்தனையைப் பதியன் போடும் திரு. கவிஜியின் வரிகள்…

பறவையான பிறகு 
அமரும் மரங்களெல்லாம் 
போதியாகின்றன….

***

மாயக்கண்ணன்போல் லீலை செய்து, அம்மாவின் அடிக்குப் பயந்து மரத்தில் பதுங்கியிருக்கும் சிறுவனுக்கு நல்லுரை புகட்டும் திரு. சாயாசுந்தரத்தின் வரிகள்…

பாட்டி கூறிய இரவுக் கதையில் 
மாயக் கண்ணன் செய்த மயக்கும் லீலையை 
காலை எழுந்தவுடன் நீயும் செய்ய 
குச்சி வைத்து விரட்டும் அன்னை யசோதையிடம் 
தப்பித்து மரம் ஏறி அமர்ந்தாயோ நந்தனே ….
[…]
பொய்யற்றுச் சூது அற்று
கள்ளம் அற்று கபடம் அற்று
அன்பெனும் எல்லையில்லா
வானம் பார்க்க ஆளுக்கொன்றாய்
சொருகி வைத்த இறகு விரித்து
பறக்கலாம் சிறிதுக் காலம் கடந்த பின் …..
[…]
மரம் விட்டு இறங்கி வந்து
அம்மாவை அணைத்துக் கொள்ளேன்

***

மரத்திலேறிய காரணத்தைச் சிறுவனிடம் நயமாக வினவி, ”அச்சத்தையும் ஆசையையும் விட்டொழி!” எனும் அறவுரையையும் அவனுக்களிக்கும் திரு. பழனிச்சாமியின் வரிகள்…

மாட்டிக் கொண்ட பட்டத்தை எடுக்க
மரத்தின் மீதேறி அமர்ந்தாயோ
போட்டியைக் காண்கின்ற ஆசையை கிரிக்கெட் 
பொங்கிட வைத்து விட்டதோ
கூட்டுக்குத் திரும்புகின்ற குருவிகள் கண்டு
குதூகலம் அடைந்திட வந்தாயோ?
காட்டுப்புலி உன்னைத் துரத்த பயத்தில்
கலவரம் அடைந்து விட்டாயோ
[…]
பாட்டினில்
நான்சொல்லும் கருத்து இதுதான் 
பயம்ஆசை இரண்டும் வேண்டாமே!

***

கணினியில் கட்டுண்டு கிடக்காமல் கவின்மிகு மரக்கிளையில் அமர்ந்திருக்கும் சின்னவனின் மனத்தை அறிய வினாத்தொடுக்கும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

தொலைக்காட்சியும் கணினியும் கட்டுப்படுத்தாத
அற்புதச்
சிறுவனா நீ ? – வீட்டினுள் அடையாது
கொளுத்தும்
வெயிலுக்கு இதமாய்குளுமையான
வேப்ப
மரத்தில் தஞ்சம் புகுந்து விட்டாயோ ?
[…]
மரத்தில்
எத்தனை பறவைக் கூடுகள்
ஒவ்வோர்
கூட்டிலும் எத்தனை முட்டைகள்
தெளிவாய்
கணக்கெடுத்து வைத்துக் கொண்டாயோ ?
நாளை
நெல்லெடுத்து வைக்க வசதியாய் இருக்குமே !
[…]
பத்திரமாக பார்த்துக் கொள்!- இயற்கை
உனது
சொத்து !

***

”குடும்ப வறுமைக்கு உன்னைப் பலிகொடுத்துக் குழந்தைத் தொழிலாளி ஆக்கமாட்டேன்! வறுமையை வென்று வாழ்வை வசமாக்குவோம்!” என வீரவுரை பகரும் மறத்தாயை மாண்புறக் காட்டும் திரு. கொ. வை. அரங்கநாதனின் வரிகள்…

பொல்லாத வறுமையை காட்டி
உன்னைப் பள்ளிக்கு அனுப்பாமல்
[…]
மேலத் தெரு ஓட்டலுக்கு
உழைக்கச் சொல்லி அனுப்பி
அதில் உயிர் வாழ்வேன்
என  நினைத்துத்தான்
மரமேறிச் சென்று என்
மனத்தை வதைக்கிறாயா?

நீவீத் தலைவாரி 
நெற்றியில் முத்தமிட்டு 
பாடசாலை செல் பைந்தமிழே
என நாளும் வழியனுப்பும்
பாவேந்தன் பேத்தியடா நான்!
[…]
வறுமையை
வென்று
வாழ்வை வசமாக்குவோம்
வளர்ந்த மரமாகி
வறியவர்க்கு நிழல் கொடுப்போம்

***

மரக்கிளையில் தங்கும் பறவைகளும்கூட வாழ்க்கைப்பாடம் நடத்துவதை நயமுடன் நவிலும் திரு. மெய்யன் நடராஜின் வரிகள்…

…ஏறிய மரக்கிளையில்  வந்தமர்ந்த 
காக்கைகள் எனக்கு ஒற்றுமை பற்றியும் 
குயில்கள் சங்கீதத்தையும் 
கிளிகள் பேச்சின் இனிமையையும் 
மயில்கள் நடனத்தின் சூட்சுமத்தையும் 
சொல்லித்தந்த வேளை 
வந்தமர்ந்த கழுகுமட்டும் 
சமூகத்தில் நெளியும் 
மூட நம்பிக்கை பாம்பை வட்டமிடும்
பார்வை சொல்லிக் கொடுத்ததால் 
முயற்சிக்கிறேன்.

***

விகாசத்தோடு மரக்கிளைச் சிம்மாசனம் ஏறி நிகாசமற்ற ஆனந்தத்தோடு வீற்றிருக்கும் மாவீரனை நமக்கு அறிமுகப்படுத்தும் திருமிகு. வானதி வேதா. இலங்காதிலகத்தின் வரிகள்…

நிகாசம் இல்லாத ஆனந்தம்!
மகாராசா போலவோ ஒரு
மகாவீரன் போல இங்கு
விகாசமான ஒரு சிம்மாசனம்!
ஆகா! சொன்னீர்களே எல்லோரும்
ஏறாதே முடியாது என்று!
ஏகாடம் பண்ணாதீர்கள் யாரையும்!
சகாயம் எமக்குத் துணிவொன்றே!

(ஏகாடம் – ஏளனம்; விகாசம் – மலர்ச்சி;  நிகாசம் – உவமை)

 ***

படிப்பில் கோட்டைவிட்டு, அன்னையின் அடிக்கு பயந்து மரமேறிய பாலனுக்குப் புத்திமதி சொல்லும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…

…படிக்கும்போது
இல்லாத பயம்
அடிக்குப் பயந்து
மரமேறி அமருகிறாய்

போனால் போகட்டும்
வெற்றியும் தோல்வியும்
வீரனுக்கழகு
ஒன்பதாவதுதானே
அடுத்தமுறையாவது
அயராமல் படித்து
உயரப்பார்…

***

’மரம் இயற்கை தந்த வரமல்லவா!’ என்று வியந்துபோற்றும் சிறுவனின் நல்லுள்ளத்தைப் புகலும் திரு. ரோஷான் . ஜிப்ரியின் வரிகள்…

நான் வேறு
ஆயினும்….,
எப்படி பரப்பினாய்
எனக்கான கிளைகளை?
எதிர்பார்ப்பு அறியா
இயற்கை சேவகன்
நீ என்றால் அதற்கு
நிகருண்டா
உன்னை மரம் என்பவனோடு நான்
மல்லுக்கு நிற்பேன்
உன்னை வரம் என்று போற்றி
உயிர்வரை காப்பேன்.

***

உச்சிக்கிளையில் ஒய்யாரமாய் அமர்ந்து உலகை இரசிக்கும் சிறுவனுக்குள் எழும் இமயம்தொட்ட இறுமாப்பை இயம்பும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

இமயம் தொட்ட இறுமாப்பு
இதயம் நிரப்பி நிற்கிறது!
உச்சிக் கிளையின் உயரத்தில்
அச்சமின்றி நானும் வீற்றிருக்க
பச்சை இலைகளின் குழுமை
இச்சையுடன் என்னுள் பரவுகிறது!
[..]
பழக்கமாகிப் போன பழைய உலகத்தின் இயக்கத்தில்
வேறு ஒரு பரிமாணம் தெரிகின்றதே என்னுள்
உறுதியுடன் உச்சியில் அமர்ந்திருக்கும் போழ்து
தன்னம்பிக்கை என்னுள் சுடர்கிறதே பிரகாசமாய்
என் வதனம் மலர்க்கிறதே இறுமாப்புப் பூக்களை
உச்சிக் கிளையின் உயரம் உல்லாச அழகு
மெச்சுகின்றதே என் விக்கிரமாதித்த விடாமுயற்சியை!

***

மரக்கிளையில் அமர்ந்திருக்கும் ’இளையபாரதத்திடம்’ தொலைந்துபோன நம் தாய்த்திருநாட்டின் முகவரியை மீட்பாய்!” என அன்பு வேண்டுகோள் விடுக்கும் திரு. கோபாலகிருஷ்ணனின் வரிகள்…

மாநகர பூங்கா மரத்தினிலே, வியப்பும் ,பயமும் கலந்த உணர்வு கலவை
உன் கண்ணிலே கசிவதை உணரமுடிகிறது என்னால் .
ஏதோ வழக்கத்திற்கு மாறாய் நிகழ்வுகள் அரங்கேருகிற
உன் பார்வை விரிப்பில்
நம் ஊரில் விறகிலே வெந்த பானை இங்கே
மின்சாரத்திலே வேகுகிறதோ ?
[…]
இந்த சமுதாயத்தை கண்டு வேதனைப்படவும் அதை களையவேண்டும் என
கனா காண மட்டுமே எங்களுக்கு ஆண்டவன் சக்தியை கொடுத்திருக்கிறான்.
ஆனால் உன்னில் வீரிய சிந்தையாலும் விறைப்பேறிய தசைத்திறனாலும்
தொலைந்த நம் முகவரியை மீட்டெடுத்து மானுடம் எந்நாளிலும் மண்ணுலகில்
மகிழ்வாய் வாழ என் கனவுகளை உன் கரங்களில் சமர்பிக்கிறேன் …..

***

சிந்தனைக்கு நல்விருந்தாய்ச் ’சொல்விருந்து’ படைத்த கவிஞர்குழாத்திற்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்!

அதிக எண்ணிக்கையிலான கவிதைகளை (வழக்கம்போலவே) எழுதிக் குவித்திருக்கும் திரு. ஜெயபாரதன், திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கர் இருவருக்கும் என் சிறப்பான (ஸ்பெஷல்) பாராட்டுக்கள்!

***

இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை அடையாளம் காணவேண்டிய தருணமிது!

மானுடர்க்கு நிழல்தந்து, புசித்திடக் கனி தந்து, வெட்டினாலும் மரக்கட்டைகளாய்ப் பயன்தந்து உதவும் மரங்கள், மனிதன் மறந்துவிட்ட பொதுநலத்தை நாளும் நமக்கு நினைவுறுத்தும் இயற்கை தந்த வரங்களே! அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை ஊருக்கு உதவுகின்ற நயனுடையானைப் பயன்தரும் மரத்தோடு ஒப்பிட்டார்!

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
(குறள்: 216)

அவ்வகையில், தன் தந்தை அழியாமல் காத்துவைத்த மரத்திலமர்ந்து, அம்மரத்தைப்போலவே ”நானும் ஊருக்குப் பயன்படுவேன்! அத்தோடு நில்லாமல், மேலும் பல மரங்கள்நட்டு மன்னுயிர்களைக் காப்பேன்!” என்று இலட்சியச் சபதமேற்கும் உயர்ந்த உள்ளங்கொண்ட சிறுவனை நம்முன் உலவவிட்டிருக்கும் திரு. சுரேஜமீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

அக்கவிதை…

…நல்மரம் உன்னை
நானும் பார்த்தே
நன்றியாய் வளர்கிறேன்
நாளைய நிழலாய்
நம்பிக்கை தரவே
நன்னெறி யேகி
நாளும் பெற்றவர்
நயம்படக் காத்திட!

மரமாய் இருக்க
மனிதர்க்கு நிழலாய்
மாபெரும் கூடாய்
மனைதேடும் பறவைக்கு
தென்றல் தவழ
தேடிடும் கிளையாய்
தினமும் விளையாட
திண்ணையாய் எனக்கும்!

இன்னமும் வியப்பே
இதுகாறும் நீயிருக்க
எதிர்ப்படும் வீதியில்
எல்லாம் சாய்ந்தும்
உனைமட்டும் விலக்கி
உயிர் காத்தவர்
எந்தை எனும்போது
எண்ணிலடங்கா மகிழ்வே
[…]
உன்னிடம்
கற்று
உளதெலாம் கொடுத்து
ஓங்கும் புகழொடு
ஒற்றுமை சிறந்து
உலகம் போற்ற
உயர்வோம் என்றும்
உன்னால் பெருமை
இந்நாள் அறிந்தேன்
விளையாட்டாய்
வந்தயென்
விழிப்பார்வை திறந்தாய்
வீதியொரு
மரம்நட
வீறுகொண் டெழுவோம்!
இனிவரும் சமுதாயம்
இன்பமாய் வாழ்ந்திட
இன்றே உறுதிகொண்டு
இனிதாய் வளர்ப்போம்!
[…]
அழகிய
வனமாய்
ஆகட்டும் உலகெலாம்!

***

அறிவியல் வளர்ச்சியால் விரைவாய் அழிந்துவரும் அழகிய இயற்கையை எண்ணி வருந்தியும், சித்தப்பா தந்த மஞ்சள் சட்டையோடு மரக்கிளையில் அமர்ந்திருந்த தன் இளமைக்காலத்தை ஏக்கத்தோடு மனவெளியில் ஓடவிட்டும் பார்க்கின்ற ஓர் இனிய கவிதையைக் கண்டேன்; அதன் வரிகளில் இழையோடும் மெல்லிய சோகம் நெஞ்சைக் கனக்கச் செய்தது.

அக்கவிதை…

ஊரின் நுழைவில்
கண்மாய் தூர்த்துக் கிடக்கிறது
சாவடித் திருப்பம் கடந்ததும் வரும்
மாதையன் தாத்தாவின் தோட்டம்
கற்கள் நடப்பட்டு விற்பனைக்கு
மலர்வல்லி அம்மன்
கான்கிரீட் கோவிலுக்குள் குடி புகுந்து
நாட்கள் பலவாகி விட்டிருக்கலாம்
[…]
சின்னத்
தெரு முடிவில்
ஓங்கி நிற்கும் அய்யனார்
சோர்ந்து நிற்கிறார் வயதின் காரணமாய்
வடமூலைக் குளக்கரை ஒட்டிய
என் மறுவீடான அப்பச்சி மரத்தை
அடி நிழலில் நின்று நிமிர்ந்து பார்க்கையில்
சுடர் சித்தப்பா பரிசளித்த
பொத்தான்களற்ற மஞ்சள் சட்டையணிந்து
பால்யத்தைத் தேடிச் சோர்ந்த என்னையே
உற்றுப் பார்த்தபடி இருக்கிறேன்
பால்யத்தின் நான்.

இக்கவிதையின் ஆசிரியர் திரு. ஹரீஷைப் பாராட்டுக்குரியவராய்த் தேர்ந்தெடுக்கிறேன்.

***

கவிஞர்களே! போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றுவரும் உங்கள் ஊக்கமும், உற்சாகமும் என்னை எல்லையிலா மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

 

 

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 13-இன் முடிவுகள்

 1. அன்பிற்கினிய சகோதரி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி!  என் சக கவிஞர் குழுமத்திற்கும், அவர்தம் சொல்மாலைகளுக்கும் வாழ்த்துக்கள்!  

  இவ்வார சிறந்த கவிதையைப் புனைந்த திருவாளர்.ஹரீஷுக்கும் வாழ்த்துக்கள்!

  தமிழ் தாங்கிவரும் தன்னிகரில்லாப் படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் வரும் நாட்களுக்கு!

  அன்புடன்
  சுரேஜமீ
    

 2. படக்கவிதைப் போட்டி முடிவுகளில் வெற்றியாளர்களிற்கும், 
  இதைத் தெரிவு செய்தவர்களிற்கும், 
  பாராட்டு வரிகளிற்குச் சொந்தக்காரர்களிற்கும் 
  இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
  எனது வரிகளும் பாராட்டுப் பெற்றதற்கும் மிகுந்த நன்றியுடன் மகிழ்வும்.
  மிக ஆர்வமாக ஒருவரே பல வரிகள் எழுதுவதும்,
  ஒரு கிலோ மீட்டர் நீளக்கவிதைகள் எழுதுவதும் 
  இவர்கள் ஆர்வத்தை என்னவென்பது!!!!
  அனைவருக்கும் வாழ்த்துகள்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க