-மேகலா இராமமூர்த்தி

இன்று அன்னையர் தினம். அன்னையரைக் போற்றிக் கொண்டாடவேண்டிய நன்னாள். கடந்த சில ஆண்டுகளாக உலகிலுள்ள பல நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு அன்னையர் தினத்தை வெகு உற்சாகத்தோடு கொண்டாடி வருவது நாமறிந்ததே!

அன்னையர் தினத்தை அன்னா ஜார்விஸ் எனும் பெண்மணி 1908-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி அமெரிக்காவில் பிள்ளையார்சுழிப் போட்டு ஆரம்பித்து வைத்தாலும் அதன் நதிமூலம் என்னவோ நம்மை இங்கிலாந்தை நோக்கி இழுத்துச் செல்கின்றது.

இடைக்காலத்தில், இங்கிலாந்தின் (Medieval England) பணக்கார வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்த சிறுவர், சிறுமியர் தம்முடைய எஜமானர்களின் வீடுகளிலேயே தங்கியிருந்து வேலை செய்வதே வழக்கமாயிருந்தது. தங்கள் சொந்த ஊர்களிலிருந்து வெளியூர்களுக்குச் சென்று இவ்வாறு பணிபுரிந்துவந்த இந்த ஏழைச்சிறுவர்கள் தம் சொந்த ஊர்களுக்குச் சென்று தம்முடைய வழிபடு தெய்வமாகிய அன்னை மேரியைத் தொழுவதற்கு எஜமானர்களால் ஒருநாள் விடுப்பு அளிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அவ் விடுமுறைதினம் மே மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது எனவும், அந்நாள் ’Mothering Sunday’ என்ற சிறப்புப்பெயரோடு அழைக்கப்பட்டது எனவும் தெரியவருகின்றது.

கிறித்துவ அன்னை மேரியை வழிபடச்செல்லும் அச்சிறுவர்கள் அவ்வழிபாட்டின்பின் தமையீன்ற அன்னையரையும் காண மலர்களோடும், மகிழ்வோடும் தம் இல்லங்களுக்குச் சென்றனர். அந்நன்னாளில் பழங்களினால் ஆன சிம்னல் (Simnel Cake) கேக்கையும் செய்து மகிழ்ந்திருக்கின்றனர் இங்கிலாந்து மக்கள். இன்றும் அந்தநாளை நினைவுகூறும் வகையில் ’சிம்னல் கேக்’ செய்யும் வழக்கம் இங்கிலாந்தில் இருக்கின்றதாம்.

இவ்வாறு இங்கிலாந்தில் முளைவிட்டு, அமெரிக்காவில் எழுச்சிபெற்ற அன்னையர் தினத்தை பின்பு உலகின் பெரும்பாலான நாடுகள் தத்து எடுத்துக்கொண்டுவிட்டன.

இனி, அன்னையர் தினத்தின் நாயகியரான அன்னையரைப் பற்றியும் சற்று சிந்திப்போம்.

அனைத்து உறவுகளினும் புனிதமானது அன்னையெனும் உறவே. அது உன்னதமானது; தன்னலமற்றது. பூமித்தாயினும் விஞ்சிய பொறுமையோடு நம் தாய்மார்கள் குடும்பங்களைத் தம் தியாகத்தால் தாங்கிப்பிடிப்பதால்தான் குடும்பம் எனும் கட்டமைப்பு இன்னும் நம் புண்ணிய பாரதத்தில் சிதறிப்போகாமல் உறுதியாய் நிற்கின்றது. குடும்பத்தின் விளக்காகத் திகழ்ந்து அதனைச் சுடர்விட்டு ஒளிரச் செய்பவள் தாய்.

முந்தித் தவமிருந்து முந்நூறு நாள் சுமந்து பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பவள் அன்னை. தன் பிள்ளைகளின் நல்வாழ்விற்காக உழைப்பதே தன் தலையாயக் கடமை எனும் எண்ணம் கொண்டவள் அவள். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி உண்ணச் சோறில்லாமல் தான் பட்டினி கிடக்கும் நிலைவந்தாலும், தன் பிள்ளைகளின் வயிறு வாடக்கூடாது என்று எண்ணி, இருப்பதைக் குழந்தைகளுக்குக் கொடுத்துக் காக்கும் வள்ளல் அவள்!

’ஈன்ற புறந்தருதல் என் தலைக்கடனே; சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்றாள் சங்ககாலத் தாயொருத்தி. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. பல குடும்பங்களில் தம் பிள்ளைகளைச் சான்றோராக்குவதும் அன்னையரே! கல்வியறிவு நிரம்பப்பெற்ற இன்றைய தாய்மார்கள் உண்டிகொடுத்துக் குடும்பத்தார்க்கு உயிர்கொடுப்பதோடு தம் கடமை முடிந்தது என்று நின்றுவிடாமல் கல்வியெனும் அழிவற்ற செல்வத்தையும் பிள்ளைகளுக்கு அளித்து இரண்டாவது ஆசிரியராகவும் செயலாற்றுகின்றனர்.

கற்றாரும் மற்றாரும் போற்றும் சான்றோனாகத் தன் மகனைப் பார்ப்பதில்தான் ஓர் தாய்க்கு எத்துணை மகிழ்ச்சி! அப்போது அவள் அடையும் உவகை அக்குழந்தையை ஈன்றபோது அவளடைந்த உவகையைவிட மிகப்பெரிது என்பார் தெய்வப்புலவர்.

”ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”
என்பது அவர் திருவாக்கு.

தாய்ப்பாலோடு வீரத்தையும் ஊட்டி வளர்த்தனர் அன்றைய தாயர் என்பதைச் சங்க நூல்கள் வாயிலாய் அறிந்து மகிழ்கின்றோம். தன் மகன் புறப்புண்பட்டு இறந்திருந்தால் அவனுக்குப் பாலூட்டிய மார்பை அறுத்தெறிவேன் என்று வீரத்தோடு முழங்கிய தாயையும், போரில் தன் தந்தையையும், கணவனையும் இழந்தபின்னும் தைரியம் இழக்காது குடும்பத்தின் கொழுந்தாக இருந்த ஒரே மகனையும் போருக்கு அனுப்புகின்ற மறத் தாயையும் கண்டு மெய்சிலிர்த்துப் போகிறோம் நாம்!

இன்னொருபுறம் அன்புமகள் தான் விரும்பிய காதலனோடு தன்னிடம் சொல்லாமல் சென்றுவிட, அவளை ஆசையோடு வளர்த்த அன்னை, அவள் வளர்த்த பிராணிகளையும், அவள் வைத்து விளையாடிய பொம்மைகளையும் கண்டுக் கண்ணீர்சொரிந்து ஏங்கியழுவதை நம் பண்டைய இலக்கியங்கள் உருக்கத்தோடு காட்டுவதைப் பார்த்து மனம் பதைக்கின்றோம்.

இதுவென் பாவை பாவை யிதுவென்
அலமரு
நோக்கின் நலம்வரு சுடர்நுதற்
பைங்கிளி
யெடுத்த பைங்கிளி யென்றிவை
காண்டொறுங்
காண்டொறுங் கலங்க
நீங்கின
ளோவென் பூங்க ணோளே. (ஐங்: 375)

காலங்கள் மாறலாம்; மனிதர்கொண்ட கோலங்கள் மாறலாம். ஆனால் என்றும் மாறாதது தன்னேரிலாத தாயன்பு. பிள்ளைகள் வல்லவராய் இருப்பதைவிட நல்லவராய் இருக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு தாயின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஆகும். தங்கள் எதிர்பார்ப்பு நன்முறையில் நிறைவேற வேண்டும் என்று எண்ணியே பல தாய்மார்கள் நம்முடைய புராணங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும் சிறந்த கதாபாத்திரங்களைப் பற்றியும் அவர்தம் குணநலன்கள் பற்றியும் தம் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்ப்பர்.

நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளுக்குச் சத்தியத்தின் நித்தியத்தை உணர்த்தியது, அவருடைய அன்னை புத்லிபாய் சிறுவயதில் அவருக்குச் சொல்லிய அரிச்சந்திரன் எனும் வாய்மை வழுவாத மன்னனின் வரலாறே என்று அறிகின்றோம். அதுபோல் மராட்டிய சிவாஜியை வீரசிவாஜியாக மாற்றியது அவருடைய அன்னை சொல்லிய வீரக்கதைகளே என்றும் கேள்விப்படுகின்றோம்.

மொழியைத் தாய்மொழியென்றும், நாட்டைத் தாய்நாடென்றும் போற்றிக் கொண்டாடும் நம் மரபே தாய்க்கு நாம்தரும் உயர்வைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது. படமாக ஆடிக்கொண்டிருக்கும் தெய்வங்களைவிடவும் நம்மெதிரில் நடமாடிக்கொண்டிருக்கும் தாய்மார்களே நாம் வணங்கி வழிபடவேண்டிய இல்லுறை தெய்வங்கள்.

தனக்கென்று தனியான ஆசைகள் எதையும் வைத்துக்கொள்ளாமல் தம் பிள்ளைகளுக்காவே வாழும் அன்னையருக்குப் பிள்ளைகள் கைம்மாறாகச் செய்யவேண்டியது என்ன? இல்லங்களை எழிலாக்கும் மனை விளக்குகளாம் அன்னையரின் ஆசைகளை, அவர்தம் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவதும், வயதான காலத்தில் அவர்களைப் புறக்கணிக்காது அன்போடு பேணிக்காப்பதுமே அவை.

அன்னையர் தினத்தன்று மட்டும் அன்னையரைக் கொண்டாடுவது அயல்நாட்டு மரபு; அன்பின் திருவுருவாய், ஆற்றலின் உறைவிடமாய்த் திகழும் அன்னையரைத் தினமும் கொண்டுவதே நம் இந்திய மரபு. எனவே அன்னையரை நிதமும் போற்றுவோம்; அன்னையர் தினத்தன்று இன்னும் சற்றுச் சிறப்பாகவே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.