Author: ஜெயராமசர்மா

  • கைகோத்துக் காத்துநிற்போம்!

    -எம் .ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

     

    mahatma-gandhi

     

    பசித்திருந்தார் தனித்திருந்தார்
    விழித்திருந்து செயற்பட்டார்
    பழிபாவம் தனைவெறுத்துப்
    பக்குவமாய் வாழ்ந்திருந்தார்!

    தனக்கெனவே பலகொள்கை
    இறுக்கமாய்க் கடைப்பிடித்தார்
    தளர்ந்துவிடும் வகையிலவர்
    தனைமாற்ற விரும்பவில்லை!

    பொறுப்புகளைப் பொறுமையுடன்
    பொறுப்பேற்றே ஆற்றிநின்றார்
    வெறுத்தாலும் பலவற்றை
    விருப்பமுடன் அவர்செய்தார்!

    மற்றவரை மனம்நோக
    வைக்காமல் இருந்துவிட
    மனத்தளவில் வேதனையை
    வைத்துவிட்டார் மாமனிதர்!

    தன்வீட்டை நினையாமல்
    தாய்நாட்டை நினைத்துநின்றார்
    தாய்சொல்லைத் தட்டாத
    தனயனாம் காந்திமகான்!

    தாய்சொல்லே வேதமாய்
    தான்மனத்தில் கொண்டதனால்
    தாய்நாட்டின் விடுதலைக்காய்
    தனையிழக்கத் துணிந்துநின்றார்!

    உடையை மாற்றினார் உணவை மாற்றினார்
    படையை மாற்றினார் பாதைகூட மாற்றினார்
    ஆயுதத்தை மாற்றினார் அஹிம்சைதனை ஏற்றினார்
    அகிலம்பார்த்து வியந்துநிற்க அரக்கத்தையும் ஓட்டினார்!

    நீதிபார்த்து நின்றுநின்று நிமிர்ந்து செயலாற்றினார்
    சாதிபேதம் தனையுடைத்துச் சமத்துவத்தைப் போற்றினார்
    பாதியாடை தானுடுத்திப் பார்வியக்கச் செய்திட்டார்
    பாரதத்தை மீட்டெடுத்த பாரதத்தின் பொக்கிஷம்!

    பண்புகாத்து பலரும்போற்ற பாரதத்தை உருவாக்க
    பட்டபாடு கொஞ்சமல்ல காந்திமகான் வாழ்வினிலே
    காந்திபட்ட பாடெல்லாம் கடுகளவு நினையாமல்
    காற்றிலே பறக்கவிட்டுக் கவலையின்றித் திரிகின்றார்!

    நீதியொரு பக்கம் நிட்டூரம் மறுபக்கம்
    சாதியொரு பக்கம் சதிகாரர் நாற்பக்கம்
    கள்ளமின்றிச் சிரிக்கின்ற காந்திபடம் காசுதனில்
    கள்ளப்பண முதலைகளோ நல்லவராய் உலவுகிறார்!

    காசுபற்றி நினையாத காந்திமகான் இப்போது
    காசுதனில் இருந்தாலும் கவலையுடன் தானிருப்பார்
    காந்திதனைக் காசில்வைத்துக் கலப்படங்கள் செய்வாரைக்
    காந்தி ஜயந்திதனில் கல்லெறிந்து கொல்லல் வேண்டும்!

    மதுவெறுத்த காந்திமகான் மனம்மகிழ வைப்பதற்கு
    மதுக்கடையை ஒழித்துவிட மனத்திலெண்ணம் வருமாயின்
    புதிதான பாரதத்தைப் பூமியிலே கண்டிடலாம்
    அதுதானே காந்திமகான் ஜயந்திக்கே அர்த்தமாகும்!

    கொடியேற்றம் மலர்வளையம் கொண்டாட்டம் பேச்சரங்கம்
    வெளிவேஷம் எல்லாமே காந்திக்குப் பொருத்தமல்ல
    பழிபாவம் தருகின்ற பாதகங்கள் தனையொழித்துப்
    பாரதத்தை மீட்டுவிட்டால் காந்திக்குப் பெருமைவரும்!

    காந்தி ஜயந்திதனைக் கருத்துடனே மனத்திருத்திக்
    காந்தி மனம்விரும்பும் காரியங்கள் செய்துநிற்போம்
    காந்தி மகான் கண்டெடுத்த கண்ணான சுதந்திரத்தைக்
    காந்தி மகான் வாழ்த்திநிற்கக் கைகோத்துக் காத்துநிற்போம்!

     

    Share
  • மலராக்க முனைந்திடுவோம்!

    -எம் .ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    முள்ளிருக்கும் செடியினிலே
    முகிழ்த்துவரும் ரோஜாவோ
    முள்பற்றிக் கவலையின்றி
    முறுவலுடன் பூத்துநிற்கும்!
    சொல்கொண்டு குத்துவதை
    மெள்ளவே ஒதுக்கிவிடின்
    சுமையெம்மைத் தாக்காது
    சுகம்பற்றி நினைத்திடலாம்!

    காந்திமகான் மார்பினிலே
    காலாலே உதைத்தவர்க்குக்          roses-and-thorns
    காலணியைத் தான்செய்து
    காந்திமகான் பரிசளித்தார்
    வாங்கிநின்ற வெள்ளையரோ
    மனதார உருகிநின்று
    காந்தியது பொறுமைகண்டு
    கண்திறந்து நின்றனரே!

    தொழுநோய்க்குத் தொண்டுசெய்ய
    துணிவுகொண்ட  தூயவராம்
    பழுதில்லாத் துறவறத்தைப்
    பாரினிலே பெற்றவராம்
    அன்னையாம் திரேசாவை
    அவமதித்த ஆட்களையே
    அரவணைத்த காரணத்தால்
    அவருயர்ந்தார் அவனிதனில்!

    சிலுவைதனில் அறைந்தார்கள்
    சித்ரவதை செய்தார்கள்
    பலவகையில் வசைவுகளைப்
    பகர்ந்துமே நின்றார்கள்
    அவையெல்லாம் தாங்கியவர்
    ஆண்டவரே மன்னியென
    அன்புடனே வேண்டியதால்
    அவர்வணங்கும் பேறுபெற்றார்!

    கல்லிலே கட்டிக்
    கடலிலே போட்டார்கள்
    கொல்லுதற்கு நஞ்சுதனை
    அஞ்சாமல் கொடுத்தார்கள்
    எல்லையில்லாக் கொடுமைசெய்தும்
    எதையுமவர் தாங்கிநின்று
    நல்லபடி சொல்லிநின்றார்
    நமசிவாய எனும்நாமம்!

    அவமானம் அசிங்கம்
    அத்தனையும் தாங்கியவர்
    அகிலமதில் இமயமாய்
    ஆகியே இருக்கின்றார்
    பொறுத்தவரே நிறைவடைவார்
    பொங்கினார் பொசுங்கிடுவார்
    வெறுத்தொதுக்கு வெறுப்பேற்றின்
    விரையமே வந்துநிற்கும்!

    வாழ்க்கையிலே முட்களாய்
    பலவந்து குத்திடினும்
    வாழவேண்டும் எனநினைத்தால்
    முட்கள்கூட  மலராகும்
    மலர்ந்துவிடச் செய்வதற்கு
    வழிவகுக்கும் மனம்வேண்டும்
    வழியில்வரும் முட்களையும்
    மலராக்க முனைந்திடுவோம்!

     

     

    Share
  • வெறுத்துவிடல் முறையாமோ?!

    -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    jaya

    கறுப்பென்றால் வெறுக்கின்றார்
    காறியும் உமிழ்கின்றார்
    கறுத்தநிறம் கொண்டோரை
    வெறித்தனமாய்த் தாக்குகிறார்
    நிலத்திலுள்ள கறுப்பரெல்லாம்
    நிமிர்ந்துநிற்கும் நிலைபார்த்து
    வெறுத்தவரே வியக்கின்றார்
    விருப்பமின்றிப் பார்க்கின்றார்!

    காந்தியைக் கறுப்பரென்று
    காலாலே மிதித்தார்கள்
    கருணையின்றி அவர்வாழ்வில்
    கஷ்டம்பல கொடுத்தார்கள்
    சாந்திதனை வேண்டியவர்
    சாப்பிடவே மறுத்ததனால்
    கறுப்பரெனப் பார்த்தவரே
    கதிகலங்கிப் போனார்கள்!

    கறுப்பினத்தை விலங்கெனவே
    கண்டுநின்ற கூட்டத்தார்
    கனவுகாணா வகையினிலே
    கறுப்பரே தலைமையானார்
    வெறுத்தொதுக்கி நின்றவினம்
    பொறுத்தொதுங்கிப் போகாமல்
    வீரமுடன் எழுந்ததனால்
    வெற்றிகொண்டே  நிற்கிறதே!

    வான்கறுக்கா நின்றுவிடின்
    மழைவருதல் இல்லையன்றோ?
    இரவுவரவில்லை என்றால்
    பகலுக்கே அர்த்தமுண்டோ?
    கறுப்புநிற ரத்தமதைக்
    கண்டுவிடல் சாத்தியமா?
    கறுப்பதனை வெறுப்பதற்குக்
    காரணம்தான் விளங்கவில்லை!

    கறுப்பதனை வெறுப்போர்கள்
    கறுப்புமுடி வருவதற்கு
    காசுபல செலவழித்துக்
    காணுகிறார் இன்பமதில்!
    கறுப்புடுப்புப் போடுகிறார்
    கறுப்புக்கார் வாங்குகிறார்
    கறுப்புநிறப் பொருள்வாங்கி
    காணுகிறார் மனமகிழ்வை!

    வெள்ளைநிற முள்ளவரே
    வெள்ளைமுடி வெறுக்கின்றார்
    விதம்விதமாய்ச் சாயத்தை
    விலைகொடுத்தே வாங்குகிறார்
    அள்ளியள்ளி அதைப்பூசி
    ஆனந்தம் காணுகிறார்
    அவர்வெறுத்த கறுப்புதனை
    அவரேற்றே  மகிழுகிறார்!

    வெள்ளையினக் கூட்டத்தை
    வென்றுநின்ற மாமனிதர்
    நெல்சனாம் மண்டேலா
    நெஞ்சுரத்தைப் பார்த்துவிட்டு
    கறுப்புநிற ரோஜாவாய்க்
    கருத்தினிலே கொண்டதனால்
    பொறுப்புமிகு பதவிபெற்றார்
    கறுப்புநிறப் பெருமகனும்!

    வெள்ளைநிற முடையோரின்
    விருப்பமெலாம் மாறிடினும்
    வெள்ளையரை விரட்டிவிட்டோர்
    வேறுருவம் கொண்டுவிட்டார்
    கள்ளமனம் அவரிடத்தில்
    மெள்ளவுருக் கொண்டதனால்
    கறுப்புதனை அவருமிப்போ
    வெறுப்புடனே நோக்குகிறார்!

    வெள்ளையாய்ப் பிள்ளைபெற
    விதம்விதமாய் உண்ணுகிறார்
    வெள்ளையாய்ப் பெண்தேடி
    விரைந்தோடி அலைகின்றார்
    உள்ளமதை வெள்ளையாய்
    உருவாக்க மறுக்கின்றார்!
    கள்ளமனம் எல்லாமே
    கறுப்பாக இருக்கிறதே!

    சாமியிருக்கும் கருவறையும்
    சரியான கறுப்புத்தான்
    சாமிசிலை அத்தனையும்
    சரியான கறுப்புத்தான்
    தாயினது கருவறையும்
    சரியான கறுப்புத்தான்
    கறுப்பதனை குறையெனவே
    வெறுத்துவிடல் முறையாமோ!

     

    Share
  • கண்டிடுவோம் தமிழ்ப்பணியை!

    -மகாதேவ ஜெயராமசர்மா  – மெல்பேண், அவுஸ்திரேலியா

    பிறப்பறியாத் தமிழன்னை பெற்ற மைந்தன்
    சிறப்புடனே தமிழ் கற்றுத் தேறிநின்றார்
    உவப்புடனே தமிழ்தன்னை உளத்தில் ஏற்றி
    ஓயாமல் தமிழ்சிறக்க உழைப்பை  ஈந்தார்
    களைப்பின்றிப் பலநூல்கள் கருத்தாய்த் தந்தார்
    கற்றவரும் மற்றவரும் விரும்பி யேற்றார்
    தனித்தமிழே உயிராக எண்ணி நின்றார்
    தன்பெயரைத் தனித்தமிழாய் ஆக்கிக் கொண்டார்!

    மறைமலையார் பெயர்கேட்கின் மகிழ்ந்திடுவாள் maraimalaiatikalதமிழன்னை
    குறையில்லாத் தமிழ்வளரக் குதித்திட்டார் களமதனில்
    சிரமீது தமிழ்வைத்தார் சிந்தையெலாம் தமிழ்நிறைத்தார்
    பலமொழிகள் தமிழ்மீது படையெடுக்கத் தடையானார்
    தமிழ்மொழியின் தூய்மையது தனித்துவமாய் இருப்பதற்குத்
    தனித்தமிழே தேவையெனத் தலைநிமிர்ந்து அவருரைத்தார்
    அமுதான தமிழ்மொழியில் அன்னியத்தை அகற்றவெனத்
    தனியான இயக்கம்கண்டார் தமிழான அடிகளாரும்!

    பன்மொழிகள் அறிவிருந்தும் பசுந்தமிழைப் பற்றிநின்றார்
    சொன்னயமும் பொருணயமும் சுவையாக எழுதிநின்றார்
    நன்னயமாய்ப் பலவற்றை நாளுமே கொடுத்துநின்றார்
    நாட்டிலுள்ளார் நற்றமிழை நாடிநிற்ற வழிசமைத்தார்
    சங்கத்தமிழ் பின்னாலே தமிழ்குறையைக் கண்டறிந்தார்
    சங்கத்தமிழ் தூய்மையினைத் தமிழ்பெறுதல் வேண்டுமென்றார்
    இங்கிதமாய் யாவருக்கும் எடுத்துரைத்தார் தனித்தமிழை
    இதனாலே மறைமலையார் இருக்கின்றார் தமிழுலகில்!

    தமிழ்நாட்டில் இப்பொழுது தமிழைநாம் தேடுகிறோம்
    தமிழ்பிறந்த மண்ணிலிப்போ தமிழ்தயங்கி வருகிறது
    அமுதான தமிழ்மொழியில் அன்னியமே செறிந்திருக்கு
    அதைஅணைத்து நிற்பதிலே அகமகிழ்ந்து நிற்கின்றார்
    நல்லதமிழ் பேசிவிட்டால்  நாகரிகம் குலையுதென்பார்
    தொல்லைத் தமிழ்பேச்சினையே சுவையெனவே எண்ணுகிறார்
    நல்லதமிழ் நாடிநின்ற நம்மடிகள் இருந்திருப்பின்
    எல்லையிலாத் துன்பமதை ஏற்றிருப்பார் உள்ளமதில்!

    அடிகளார் செய்தபணி அன்னைத் தமிழ்ப்பணியே
    அதைமனதில் கொள்ளாமல் அனைவருமே இருக்கின்றோம்
    ஆங்கிலத்தைக் கற்றிடுவோம் அனைத்துமொழி கற்றிடுவோம்
    ஆனாலும் அருந்தமிழை அகமதிலே இருத்திவைப்போம்
    பாங்கான இலக்கியங்கள் பசுந்தமிழில் இருக்கிறது
    பாருங்கள் எனும்பாங்கில் பலசொன்னார் மறைமலையார்
    தூயதமிழ் எழுதிடுவோம் துடிப்புடனே பேசிடுவோம்
    வாருங்கள் தனித்தமிழை வளர்த்திடுவோம் எனவழைத்தார்!

    மறைமலையார் தமிழ்ப்பணியை மறந்துவிடல் முறையன்று
    மாமொழியாம் தமிழதனை மணிமகுடம் ஏற்றிநிற்போம்
    தமிழ்வளர்ச்சிப் பாதையிலே தடைவந்தால் தகர்த்தெறிவோம்
    தமிழ்வாழ உழைத்துநின்ற தமிழடிகள் மனம்மகிழ்வார்
    அடிகளார் எடுத்தபணி ஆல்போன்று பெருக்கமுற்றால்
    அன்னைத் தமிழ்மொழியும் அதியுயர்வு அடையுமன்றோ?
    ஆதலால் யாவருமே அடிகளார் எண்ணமதைக்
    காதலுடன் மனமிருத்திக் கண்டிடுவோம் தமிழ்ப்பணியை!

     

     

    Share
  • எல்லோரும் விரும்பிடுவோம்!

    – எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா 

    மழையின் பொறுமையினால்
    மாவெள்ளம் தான்குறையும்
    மாபூமி  பொறுமையினால்
    மக்களெலாம் வாழுகிறார்
    இரவின் பொறுமையினால்
    இன்பமெலாம் விளைகிறது
    இறைவனது பொறுமையினால்  jeya
    இயக்கமே நடக்கிறதே!

    தாயின் பொறுமையினால்
    தான்குழந்தை வளர்கிறது
    தந்தையின் பொறுமையினால்
    தான்நிமிர்ந்து நிற்கிறது
    குருவின் பொறுமையினால்
    குணம்பெற்று உயர்கிறது
    குவலயத்தில் பொறுமையது
    கொடையாக விளங்குதன்றோ!

    தருமனது பொறுமையினால்
    சன்மார்க்கம் உயர்ந்ததுவே
    சகுனியது பொறையின்மை
    சதியாகக் குவிந்ததுவே
    இமயமாய்ப் பாண்டவரை
    எல்லோரும் மதிப்பதற்கு
    ஏற்றதொரு வலிமைதந்த
    இலக்கணமே பொறுமையன்றோ!

    காந்தியது பொறுமையினால்
    கண்டுநின்றார் சுதந்திரத்தை
    சாந்தியுடன் வாழ்வதற்கும்
    தத்துவமே பொறுமையன்றோ?
    நீதிநேர்மை அத்தனையும்
    நெறிதவறிப் போவற்குப்
    பொறுமைபற்றி உணராதார்
    பொறுப்புதான்  காரணமே!

    தலைவர்க்கும் பொறுமையில்லை
    தொண்டர்க்கும் பொறுமையில்லை
    தலைநிமிர்ந்த  ஆணவத்தின்
    தாள்பணிந்தே நிற்கின்றார்
    நிலைகுலைந்து பலபோயும்
    நினைத்துமே பார்க்காமல்
    நிற்பதற்குப் பொறுமையிலா
    நிற்பதுவே காரணமே!

    புத்தபிரான் பொறுமையும்
    புனிதநபி பொறுமையும்
    உத்தமராம் யேசுபிரான்
    உயர்ந்துநின்ற பொறுமையும்
    சத்தியத்தாய் ஈன்றெடுத்த
    வள்ளுவரின் பொறுமையும்
    இத்தரைக்கு வந்திருந்தும்
    ஏன்பொறுமை வரவில்லையோ!

    பொறுத்தாரே அரசாள்வார்
    பொங்கினார்க் காடுறைவர்
    புவிதனிலே சிறந்தசெல்வம்
    பொறுமையே எனவறிவோம்
    நினைத்துமே எண்ணிவிட்டால்
    நெஞ்சமதில் பொறுமையினை
    இருத்தியே வைத்துவிட
    எல்லோரும் விரும்பிடுவோம்!

     

     

    Share
  • வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    மனிதனது மனமெல்லாம் மதம்நிறைந்தே இருக்கிறது
    மதமகன்று போவதற்கு மதமொன்றே உரமாகும்
    மதமதனை மனிதவினம் மயக்கமுடன் நோக்குவதால்
    மதவாதம் மனிதனையே மாண்டுவிடச் செய்கிறது!

    யானைக்கு மதமேறின் பாகனையே கொன்றுவிடும்
    ஞானமின்றி இருப்பாரின் மதவெறியோஅழித்துவிடும்
    நானென்னும் ஆணவத்தால் நல்மதமும் கெடுகிறது
    நம்பினார்க் கெடுவதில்லை நால்வேதம் சொல்கிறது!

    பலமதங்கள் பலகருத்தைப் பலவழியில் பகன்றாலும்
    பாரிலுள்ள மதமனைத்தும் பாதகத்தைப் பகரவில்லை
    பண்புநிறை உள்ளமொடு பலருமே வாழ்கவென்று
    பக்குவமாய்ச் சொல்லுவதைப் பலருமே கேட்பதில்லை!

    எந்த மதமானாலும் சொந்தம் கொண்டாடிடுங்கள்
    பந்தமுடன் மதம்சொல்லும் வழியினிலும் சென்றிடுங்கள்
    வெந்தழலில் வீழ்த்துகின்ற வேதனைகள் தவிர்த்துவிடின்
    எந்தமதம் ஆனாலும் எல்லோரும் போற்றிடுவார்!

    நதிகள் பலவிருந்தாலும் கலக்குமிடம் கடலன்றோ?
    நம்மதங்கள் பலவிருந்தும் உணர்த்துமிடம் இறையன்றோ?
    நாமதனை உணராமல் நாளுமே மதம்கொண்டால்
    நம்மனத்தில் மதமின்னும் நாளுமே வளருமன்றோ!

    விலங்கினுக்கும் மதமில்லை பறவைக்கும்
    மதமில்லை
    விளக்கதனில் விழுகின்ற விட்டிலுக்கும் மதமில்லை
    விவேகநிறை மனிதனுக்கோ மதம்நிறைய இருந்தாலும்
    விவேகமதைக் கைவிட்டு வேற்றுமையே காணுகிறான்!

    மதங்கள் பலவிருந்தாலும் மனம்சிறக்க வேண்டாமா?
    மதவெறியை ஊட்டுவதால் மானிடமே மாண்டிடுமே!மதமென்னும் கருவதனைப் புனிதமாய்க் கொண்டுவிடின்மதம்பிடிப்பார் நிலைமாறி
    வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்!

     

     

    Share
  • உயர்வினையே உணர்ந்திடலாம் !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

     

    உலகத்தில் பிறந்திடுதல் உயர்வான நிலயென்று

    உம்பர்களே எண்ணுவதாய் உரைத்திடுவார் வாசகரும்

    உலகத்தில் பிறந்தாரோ பிறப்பதனை உணராமல்

    பித்தேறி பலசெய்து  பேதலித்துநிற்கின்றார் !

     

    மானிடராய் பிறந்துவிடல் மாநிலத்தில் பெரும்பயனே

    ஆறறிவை பெற்றுநிற்கும் அருமையவர்க்கு அமைந்ததுவே

    தாறுமாறாய் நடக்காமல் தடம்புரண்டு போகாமல்

    நேரான வழிசெல்ல நிற்கிறதே அறிவாகும் !

     

    அறிவுபெற்ற மனிதனிடம் அசிங்கம்பல இருக்கிறது

    ஐந்தறிவு ஜீவன்கூட அசிங்கம்பல செய்வதில்லை

    பேரறிவு பெற்றுவிட்டோம் எனவெண்ணி நின்றுநிதம்

    பிரியமில்லாக் காரியங்கள் பெருமளவில் செய்கின்றார் !

     

    வாழ்கின்ற வேளையிலே மற்றவர்க்கு இடைஞ்சலின்றி

    வாழ்க்கையினை அமைத்துவிட்டால் வாழ்வினுக்கே வளமாகும்

    வாழ்க்கைதனை வீழ்த்துதற்கு வழியாக வாழ்ந்திடுவார்

    வாழ்க்கையிலே பிறப்பதனை வரட்சியாய் ஆக்கிநிற்பார் !

     

    பூமிதனில் பிறப்பார்கள் சாமியாய் மாறுவதும்

    பூனிதனில் பிறப்பார்கள் சாத்தானாய் மாறுவதும்

    யார்கொடுத்த வரமென்று நாமொருக்கால் சிந்திக்கின்

    அவரவரின் மனவெழுச்சிதான் அதற்குக் காரணமாம் !

     

    யேசுநபி காந்திமகான் நிறைவுடைய ரமணரிஷி

    பூமியிலே பிறப்பதனை புனிதமாய் ஆக்கிநின்றார்

    பாவிகளை ரட்சித்தார் பலவற்றை சொல்லிநின்றார்

    ஆர்வமுடன் கேட்டவர்கள் அறிவுபெற்று விழிப்படைந்தார் !

     

    வேதமொடு உபநிடதம் விதம்விதமாய்க் கற்றாலும்

    பாதகமாம் எண்ணமதை பதுக்கியே வைத்திருப்பார்

    பூதலத்தில் என்னாளும் பொழுதையே அழிக்கின்றார்

    பாதகத்தை ஒழித்துவிடின் பயனாகும் இப்பிறவி !

     

    பிறக்கின்றார் யாவருமே இறப்பதனைக் கண்டிடுவார்

    இருகின்ற வாழ்க்கையிலே எல்லோர்க்கும் உதவிடுவோம்

    பிறவியிலே மற்றவரை பேணிநின்று வாழ்ந்துவிடின்

    பிறப்பெடுத்த பெரும்பயனைப் பெற்றிடுவோம் யாவருமே !

     

    பார்க்கின்றோம் சிரிக்கின்றோம் பலவற்றைப் பேசுகிறோம்

    உண்கின்றோம் உடுக்கின்றோம் உல்லாசம் காணுகிறோம்

    ஊனமே இல்லாமல் வாழுகின்றோம் எனநினைத்தால்

    உண்மையிலே பிறப்பதனின் உயர்வினையே உணர்ந்திடலாம் !

     

    Share
  • இறைவாஅருளிவிடு நீ !

     

         ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா )

     

    நிலத்துக்கும் சண்டையடா நீருக்கும் சண்டையடா

    நிலமுனக்குச் சொந்தமல்ல நீருனக்குச் சொந்தமல்ல

    இயற்கையினை பங்குபோட்டு இணக்கமின்றி இருந்துவிடின்

    நிலத்தினிலே நிம்மதியை எப்படித்தான் காணுவதோ ?

     

    ஓடிவரும் நீரென்றும் ஒருபக்கம் பார்ப்பதில்லை

    வீசிவரும் காற்றென்றும் வீண்வாதம் செய்வதில்லை

    பரந்துநிற்கும் கடல்கூட பாரபட்சம் பார்ப்பதில்லை

    பார்மீது உள்ளவரோ பகைகொண்டே வாழுவதேன் ?

     

    பூமிதனைக் குடைந்து புதையல் பலஎடுக்கின்றார்

    காடுதனை அழித்துக் காசுபல தேடுகிறார்

    நாடுதனை அழித்து நாகரிகம் என்கின்றார்

    கேடெல்லாம் செய்துவிட்டு கீதைபற்றிப் பேசுகிறார் !

     

    ஓடிவரும் நீரதனை உருப்படியாய் ஆக்கிவிடின்

    நாடெல்லாம் நலன்விளையும் நன்றாகப் புரிந்திடுங்கள்

    நீரதனைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை

    பாருக்குப் பரிசாகக் கிடைத்தநீரை பறிக்கலாமா ?

     

    படித்திருந்தும் பண்பறியார் பறிப்பதையே எண்ணுகிறார்

    குடிகின்ற நீரையுமே பறித்துவிட எண்ணுகிறார்

    நடிக்கின்ற நாடகத்தை விட்டெறிந்து விட்டுவிட்டு

    நாடுபற்றி எண்ணிவிட்டால் நலம்வந்து சேர்ந்துவிடும் !

     

    கோபம்வந்தால் கொழுத்துவதும் கொலைசெய்து நிற்பதுவும்

    வாழ்நாளில் நடப்பதற்கு வழிவகுத்தல் நல்லதல்ல

    பாவம்செய்து வாழ்ந்துவிடில் பலனேதும் வருவதில்லை

    ஆதலால் யாவருமே அமைதிபற்றி நினைத்திடுவோம் !

     

    பலமொழிகள் பேசிடினும் பசியாவர்க்கும் ஒன்றேயாம்

    பலவினமாய் இருந்தாலும் பசித்தவுடன் உண்டிடுவார்

    இவையாவும் சமமாயின்  ஏன்னீரைத் தடுக்கின்றார்

    இவர்களது மனம்திருந்த இறைவாநீ அருளிவிடு !

     

     

    Share
  • சும்மா இரு !

          

          (   எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

     

     

    சும்மாஇரு என்று சொல்லுவது எளிதாகும்

    சும்மா இருப்பதுதான் சுகமான நிலையாகும்

    சும்மா இருந்துவிட நினைக்கின்றார் யாவருமே

    இம்மா நிலத்தினிலே என்றுமே உயர்ந்துநிற்பார் !

     

    சும்மா இருப்பது சுமையான காரியமே

    சுகம்கண்ட யாவருமே சும்மாஇருக்க மாட்டார்

    சுழன்றோடும் மனத்தாலே சும்மா இருப்பதற்கு

    சுதந்திரத்தைப் பெற்றுவிடல் சுகமான விஷயமல்ல !

     

    சும்மா இருந்ததனால் சுமைவிட்டார் ஞானியர்கள்

    இம்மா நிலத்தினிலே இவர்வணங்கும் பேறுபெற்றார்

    சும்மா இருந்தபடி சுவாசத்தால் பலபெற்றார்

    சுகமனைத்தும் துறந்ததனால் சும்மாவே இருந்தார்கள் !

     

    சும்மா இருந்துவிட்டால் சோறுதான் கிடைத்திடுமா

    சும்மா இருப்பதுதான் சோம்பலின் நிலையாகும்

    சும்மா இருந்துவிட்டால் சுதந்திரம் கிடைத்திடுமா

    சும்மாவை தூக்கியெறி துள்ளலுடன் வாழ்ந்திடலாம் !

     

    சும்மா இருந்துவிடின் அம்மாவும் வெறுத்திடுவாள்

    சும்மா இருந்துவிடின் துணையுமே துரத்திடுவாள்

    சும்மா இருந்துவிடின் தோழமையும் கிட்டவரான்

    சும்மா இருந்துவிடின் சுகத்துக்கே கேடாகும் !

     

    சும்மா இருப்பாரை சொறிநாயும் நோக்காது

    சும்மா இருப்பாரைச் சொந்தமுமே பார்க்காது

    சும்மா இருப்பார்க்கு சொர்கமுமே நரகமாகும்

    சும்மா இருப்பதற்கு சொல்லுகின்றார் பலகருத்தை !

     

    சும்மா இருஎன்று சொல்லுகின்ற நிலையினிலே

    சும்மா இருந்துவிடின் சோறுபற்றி நினைத்திடலாம்

    சும்மா இருஎன்னும் பொருள்பொதிந்து பார்த்துவிடில்

    இம்மா நிலத்திற்கது எட்டாத தத்துவமே !

     

    தத்துவமாய் இருக்கின்ற தகைமையுடை சொல்லதனை

    சாதாரண நிலையில் நாமெடுத்தால் வேறு அர்த்தம்

    உள்விழுந்து நோக்கிவிடின் உயர்கருத்தை கொள்ளுவதால்

    சும்மா நாமெண்ணிவிடும் சொல்லல்ல சும்மாயிரு !

     

    Share
  • என்னாளும் மகிழ்ச்சியன்றோ !

           ( எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

     

    வானம் மகிழ்வடைந்தால்

    மழையினைத் தந்துவிடும்

    பூமி மகிழ்வடைந்தால்

    புதுவிளைச்சல் கொடுத்துவிடும்

    சாமி மகிழ்வடைந்தால்

    சகலதும் கிடைத்துவிடும்

    ஆதலால் மகிழ்ச்சியினை

    அகிலமெலாம் விரும்புறதே !

     

    பூக்கொடுக்கும் மரங்களெல்லாம்

    பூமிக்கு மகிழ்ச்சிதரும்

    பழங்கொடுத்து மரங்களெல்லாம்

    பலருக்கும் மகிழ்ச்சிதரும்

    சினமகற்றி வாழ்ந்துவிடின்

    தினமுமே மகிழ்ச்சிதான்

    அதைமனதில் கொண்டுவிட்டால்

    அகிலமே மகிழ்ச்சியுறும் !

     

    பசித்தவர்க்கு உணவளித்தால்

    பசிதீர மகிழ்ச்சிவரும்

    அடித்தவரை அரவணைத்தால்

    அவர்மனமும் மகிழ்ச்சியுறும்

    பிடித்தமுடன் நடந்துகொள்ளின்

    பெரும்பாலோர் மகிழ்வுறுவர்

    அர்த்தமுடன் நாம்பழகி

    அனைவருமே மகிழ்ந்திடுவோம் !

     

    மற்றவரை மதித்துநின்றால்

    மகிழ்வுந்தன் கூடவரும்

    பெற்றவரை பேணிநின்றால்

    பெருமகிழ்ச்சி பெருகிவரும்

    கற்றவரைச் சேர்ந்துநின்றால்

    காலமெல்லாம் மகிழ்ச்சிவரும்

    கயவர்தமை ஒதுக்கிவிட்டால்

    கண்டிடலாம் மனமகிழ்ச்சி !

     

    நல்லநட்பு எப்போதும்

    நல்மகிழ்ச்சி நல்கிநிற்கும்

    பொல்லாத நட்பினால்

    பொசுங்கிவிடும் மகிழ்ச்சியெலாம்

    எல்லையில்லா மகிழ்ச்சிபெற

    எல்லோரும் விரும்புகிறோம்

    இறைவனிடம் சரணடைந்தால்

    என்னாளும் மகிழ்ச்சியன்றோ !

    Share
  • தினமுமே மகிழ்ந்திடலாம் !

      ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

     

     

    அளவுடனே உணவுண்டால்

    ஆரோக்கியம் அமைந்துவிடும்

    அளவுமீறி ஆகிவிடின்

    அனைத்துமே அழிந்துவிடும் !

     

    வாழ்வதற்கும் பணந்தேவை

    பணம்மட்டும் வாழ்வல்ல

    பணமெண்ணி வாழ்ந்துவிடின்

    பாழாகும் வாழ்க்கையது !

     

    படிக்கவேணும் வாழ்க்கையிலே

    பலவற்றை யாவருமே

    பட்டம்மட்டும் வாழ்வல்ல

    பண்பும்சேர்ந்து வரவேணும் !

     

    கோவிலுக்குப் போகவேணும்

    குறைசொல்லல் தவிர்க்கவேணும்

    பாவம்பற்றி எண்ணாமல்

    பலருக்கும் உதவவேணும் !

     

    மூத்தோரை வாழ்க்கையிலே

    முதலிடத்தில் வைக்கவேணும்

    ஆத்திரத்தை அடக்கிவிடின்

    அமைந்துவிடும் நல்லவாழ்வு !

     

    பொய்யென்னும் வார்த்தையினை

    பொசுக்கிவிட்டு வாழவேணும்

    மெய்யாக வாழ்ந்துவிடின்

    மேதினியே மகிழ்ந்துவிடும் !

     

    முன்னோர்கள் மொழிந்தவற்றை

    பொன்னாகக் கொள்ளவேணும்

    எம்மாலே இயன்றவரை

    எல்லோர்க்கும் உதவவேணும் !

     

    யார்மனதும் நோகாமல்

    நாமிருந்தால் நலன்பயக்கும்

    ஊருலகம் பழிப்பவற்றை

    ஒதுக்கிவிட்டால் உயர்வுவரும் !

     

    அப்பாவை அம்மாவை

    அழவிடுதல் முறையல்ல

    அவராசி கிடைப்பதுவே

    அனைவருக்கும் வாழ்வாகும் !

     

    மனம்மகிழ வாழ்வதற்கு

    வழிகள்பல இருக்கிறது

    தேர்ந்தெடுத்து வாழுங்கள்

    தினமுமே மகிழ்ந்திடலாம் !

     

    Share
  • சுகமுடன் என்றுமே வாழலாம் !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    சிரிப்பு ஒரு மருந்து

       தினமும் அதைநீ அருந்து

      அகத்தில் சிரிப்பு எழுந்தால்

      முகத்தில் சிரிப்பு மலரும் !

     

      குழந்தைச் சிரிப்பு குதூகலம்

      குருவின் சிரிப்பு பெருமிதம்

      தந்தை சிரிப்பு மனநலம்

      தாயின் சிரிப்போ தனித்துவம் !

     

     நட்பின் சிரிப்பு நற்கொடை

     நாட்டின் சிரிப்பு விடுதலை

     கற்பின் சிரிப்பு கண்ணகி

     கயவர் சிரிப்போ காரிருள் !

     

     அஹிம்சையின் சிரிப்பு காந்தியில்

     ஆன்மீகச் சிரிப்பு ரமணரில்

     மெளனத்தின் சிரிப்பு புத்தரில்

     வாழ்விலே சிறந்திடச் சிரித்திடு !

     

    ஆணவச் சிரிப்பு அழிவினில்

    ஆத்திரச் சிரிப்போ கொலையினில்

    நீதியின் சிரிப்பு தண்டனை

    நிம்மதி வேண்டினால் சிரித்திடு !

     

    பக்தியின் சிரிப்பு பக்குவம்

    பாவத்தின் சிரிப்பு  தண்டனை

    சத்தியச் சிரிப்பே உத்தமம்

    சாந்தியாய் இருந்திடு சிரித்திடு !

     

    நித்தமும் வாழ்க்கையில் சிரித்துநில்

    நிம்மதி உன்னிடம் வந்திடும்

    சொத்தென சிரிப்பினை நினைத்திடு

    சுகமுடன் என்றுமே வாழலாம் !

     

    Share
  • காத்துவிட வருவீரா !

     எம் . ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்திரேலியா 

     

    வீரத்துறவியே நெஞ்சிலே ஆன்மீக

    சாரத்தை நிறைத்தவரே

    பாருக்கு வேராகி பக்குவத்தை

    ஊருக்கு உரைத்தவரே

    ஞானத்தின் திருவுருவே வாழ்வில்

    மோனத்தைக் கண்டவரே

    நால் வேதத்தை உள்வாங்கி

    நல்வாழ்வுக்கு அளித்தவரே !

     

    பாரதத்தாய்  ஈன்றெடுத்த பண்புளமே

    பார்வியக்க பலபகன்ற பகலவரே

    ஊரலைந்து நெறிவளர்த்த உத்தமரே

    உண்மையினை உணரத் துடித்தவரே

    சீரான குருதேடித் திருந்தவரே

    சிறப்புடனே உபதேசம் பெற்றவரே

    பாரைவிட்டு விரைவாக சென்றவரே

    பார்பிழைக்க அழைக்கின்றோம் வருவீரா !

     

    சமயநெறி அத்தனையும் பார்த்துவிட்டு

    சரியான நெறிதேர்ந்து சொன்னவரே

    சராசரி சாமியார் தமைவெறுத்து

    சன்மார்க்க தொண்டனாய் நின்றவரே

    உலகினுக்கு புதுக்கருத்தை உரைத்தவரே

    ஒவ்வாத அத்தனையும் வெறுத்தவரே

    நிலவுலகில் நிலையாக நிலைத்தவரே

    நீழ்புவியை காத்துவிட  வருவீரா !

    Share
  • கண்டிடுவாள் கண்ணனையே !

    எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

     

              பத்தியம் இருந்தும் பலவிரவு விழித்திருந்தும்

              நித்தமே தன்பிள்ளை நினைவாக மனமிருத்தி 

              எத்தனையோ வேண்டுதலை இறைவனிடம் முறையிட்டும்

              பெத்தெடுப்பாள் பிள்ளைதனை பிரியமுடன் பேரன்னை !

     

              பேச்சுவரா நிலையினிலும் பேசவைப்பாள் பேரன்னை

              மூச்சுவிடும் முகம்பார்த்து முறுவலிப்பால் பேரன்னை 

              ஆச்சரியம் எனநினைப்பாள் அவள்பிள்ளை அழகினையே

              அப்பிள்ளை ஆனந்தம் அவளுக்கே அருமருந்தாம் !

     

              உச்சிமுதல் கால்பார்த்து உள்ளமெல்லாம் பூரிப்பாள்

              இச்சையுடன் இறுகணைத்து எப்போதும் கொஞ்சிடுவாள் 

              பச்சைநிற உடையுடுத்தி பார்த்திடுவாள் கண்ணனென

              மெச்சியார் பேசிடினும் மெய்மறப்பாள் பேரன்னை !

     

              பட்டுமெத்தைக் கன்னத்தைப் பார்த்தபடி அவளிருப்பாள்

              தொட்டுதொட்டு அதைத்தடவி துன்பமெலாம் மறந்திடுவாள்

              நட்டநடு நெற்றிதனில் வட்டமாய் பொட்டுவைத்து

              கிட்டநின்று ரசித்தபடி கிழுகிழுப்பாள் பேரன்னை ! 

     

             கிருஷ்ண ஜயந்திதனில் கிருஷ்ணனே எனநினைத்து

             கிங்கிணி சதங்கைகட்டி கிரீடமும் தலைவைப்பாள்

             தன்பிள்ளை காலடியின் தடம்பதிப்பாள் வீடெல்லாம்

             தன்வீடு வந்துவிட்டான் கண்ணனென்பாள் பேரன்னை !

     

            புல்லாங்குழல் கொடுப்பாள் புதுச்சட்டை போட்டிடுவாள்

            எல்லோரும் வருகைதர எடுத்திடுவாள் விழாவங்கு 

            நல்லசேதி தருவதற்கு கண்ணன்வந்தான் எனச்சொல்லி

            நயமுடனே தன்பிள்ளை கால்தடத்தைக் காட்டிநிற்பாள் !

     

            பார்த்தவர்கள் பரவசத்தால் பலவற்றைப் பகர்ந்தவுடன்

            வேர்த்துநிற்கும் பிள்ளைதனை விருப்புடனே தூக்கிவந்து 

            பார்த்திடுங்கள் கண்ணனையே பகர்ந்திடுங்கள் விருப்பமெலாம்

            கேட்டவுடன் கொடுத்திடுவான் இப்பொழுதே கண்ணனென்பாள் !

     

            பிள்ளையைக் கண்ணனாய் கண்டுநிற்கும் பேரன்னை

            உள்ளமெலாம் பக்தியது ஊற்றெடுத்தே வந்துநிற்கும் 

            கள்ளமனம் கரைந்துவிட கண்டிடுவாள் கண்ணனையே

            மெல்ல அவள்பிள்ளை விரும்பிடுவான் அவள்வழியே !

     

    Share
  • நாம் நினைப்போம்! 

    எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    உள்ளத்து உணர்வுகளை உலகினுக்கு எடுத்துரைக்கும்
    கள்ளமில்லா மனமுடயார் கவிதைகள்தாம்
    வாழ்கிறது
    வள்ளுவரின் கவிதையின்று வையகத்தில்
    நிலைப்பதற்குக் கள்ளமில்லா அவர்மனமே காரணமாய் ஆகியதே!

    எல்லோரும் வள்ளுவராய் இருந்துவிட முடிவதில்லை
    என்றாலும் இயன்றவரை ஏற்றதையே எடுத்துரைப்பார்
    நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து நாளுமவர் தந்துவிடின்
    நாட்டிலுள்ளார் மனங்களிலே நன்மதிப்பைப் பெற்றிடுவார்!

    சங்ககாலக் கவிதையெலாம் நாம்படித்துப் பார்த்துவிடின்
    இங்கிதமாய்ப் பலகருக்கள் இருப்பதையும் உணர்ந்திடலாம்
    எங்களது தமிழ்மொழியின் மங்காத செல்வங்களாய்
    இருக்குமந்த அருமையினை எல்லோரும் அறிந்திடலாம்!

    சொற்சுருக்கம் சுவைநுணுக்கம் அத்தனையும்
    அரவணைத்துச் சுந்தரத்தமிழ் கொண்டு செப்பிநின்ற கவிதையது
    இப்பொழுது அவையாவும் எல்லோரும் படிக்காமல்
    எம்மேக்கும் பீயேக்கும் எடுக்கின்றார் படிப்பதற்கே!

    பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற பாடமாய்ப்
    பண்டிதர்க்கும் புலவர்க்கும் பரீட்சிக்கும் புத்தகமாய்ப் பண்டைத் தமிழிலக்கியங்கள் இருக்கின்ற
    பாங்கினையே
    பார்க்கின்றோம் எனநினைக்கில் பரிதாபம் எழுகிறது!

    சங்கத் தமிழ்படித்தால் சரியான கவிதைவரும்
    பொங்கிவரும் தமிழுணர்வைப் புதுவழியில் செலுத்திடலாம்
    கவிதையெனும் பெயர்சூடி வருகின்ற கவிதையெலாம்
    காலமென்னும் வரலாற்றில் காணாமல் போய்விடுமே!சாகாத இலக்கியங்கள் நாம்படைக்கத் தேவையில்லை

    மனம்நோவாத இலக்கியங்கள் படைத்துவிட
    நினைத்திடுவோம்
    வாழ்நாளை வளமாக்கும் வகையிலே படைத்துவிடின்
    வரவேற்று அனைவருமே வாரியே அணைத்திடுவார்!

    புழுதியிலே புரளுகின்ற இலக்கியங்கள் புறந்தள்ளிப்
    பழுதில்லா வகையான இலக்கியங்கள் படைத்தளிப்போம்
    நிலவுலகில் யாவருமே நினைந்துநிற்கும் வகையினிலே
    நலமுடைய இலக்கியங்கள் படைதளிக்க
    நாம் நினைப்போம்!

     

     

    Share