எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

 

          பத்தியம் இருந்தும் பலவிரவு விழித்திருந்தும்

          நித்தமே தன்பிள்ளை நினைவாக மனமிருத்தி 

          எத்தனையோ வேண்டுதலை இறைவனிடம் முறையிட்டும்

          பெத்தெடுப்பாள் பிள்ளைதனை பிரியமுடன் பேரன்னை !

 

          பேச்சுவரா நிலையினிலும் பேசவைப்பாள் பேரன்னை

          மூச்சுவிடும் முகம்பார்த்து முறுவலிப்பால் பேரன்னை 

          ஆச்சரியம் எனநினைப்பாள் அவள்பிள்ளை அழகினையே

          அப்பிள்ளை ஆனந்தம் அவளுக்கே அருமருந்தாம் !

 

          உச்சிமுதல் கால்பார்த்து உள்ளமெல்லாம் பூரிப்பாள்

          இச்சையுடன் இறுகணைத்து எப்போதும் கொஞ்சிடுவாள் 

          பச்சைநிற உடையுடுத்தி பார்த்திடுவாள் கண்ணனென

          மெச்சியார் பேசிடினும் மெய்மறப்பாள் பேரன்னை !

 

          பட்டுமெத்தைக் கன்னத்தைப் பார்த்தபடி அவளிருப்பாள்

          தொட்டுதொட்டு அதைத்தடவி துன்பமெலாம் மறந்திடுவாள்

          நட்டநடு நெற்றிதனில் வட்டமாய் பொட்டுவைத்து

          கிட்டநின்று ரசித்தபடி கிழுகிழுப்பாள் பேரன்னை ! 

 

         கிருஷ்ண ஜயந்திதனில் கிருஷ்ணனே எனநினைத்து

         கிங்கிணி சதங்கைகட்டி கிரீடமும் தலைவைப்பாள்

         தன்பிள்ளை காலடியின் தடம்பதிப்பாள் வீடெல்லாம்

         தன்வீடு வந்துவிட்டான் கண்ணனென்பாள் பேரன்னை !

 

        புல்லாங்குழல் கொடுப்பாள் புதுச்சட்டை போட்டிடுவாள்

        எல்லோரும் வருகைதர எடுத்திடுவாள் விழாவங்கு 

        நல்லசேதி தருவதற்கு கண்ணன்வந்தான் எனச்சொல்லி

        நயமுடனே தன்பிள்ளை கால்தடத்தைக் காட்டிநிற்பாள் !

 

        பார்த்தவர்கள் பரவசத்தால் பலவற்றைப் பகர்ந்தவுடன்

        வேர்த்துநிற்கும் பிள்ளைதனை விருப்புடனே தூக்கிவந்து 

        பார்த்திடுங்கள் கண்ணனையே பகர்ந்திடுங்கள் விருப்பமெலாம்

        கேட்டவுடன் கொடுத்திடுவான் இப்பொழுதே கண்ணனென்பாள் !

 

        பிள்ளையைக் கண்ணனாய் கண்டுநிற்கும் பேரன்னை

        உள்ளமெலாம் பக்தியது ஊற்றெடுத்தே வந்துநிற்கும் 

        கள்ளமனம் கரைந்துவிட கண்டிடுவாள் கண்ணனையே

        மெல்ல அவள்பிள்ளை விரும்பிடுவான் அவள்வழியே !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.