– எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா 

மழையின் பொறுமையினால்
மாவெள்ளம் தான்குறையும்
மாபூமி  பொறுமையினால்
மக்களெலாம் வாழுகிறார்
இரவின் பொறுமையினால்
இன்பமெலாம் விளைகிறது
இறைவனது பொறுமையினால்  jeya
இயக்கமே நடக்கிறதே!

தாயின் பொறுமையினால்
தான்குழந்தை வளர்கிறது
தந்தையின் பொறுமையினால்
தான்நிமிர்ந்து நிற்கிறது
குருவின் பொறுமையினால்
குணம்பெற்று உயர்கிறது
குவலயத்தில் பொறுமையது
கொடையாக விளங்குதன்றோ!

தருமனது பொறுமையினால்
சன்மார்க்கம் உயர்ந்ததுவே
சகுனியது பொறையின்மை
சதியாகக் குவிந்ததுவே
இமயமாய்ப் பாண்டவரை
எல்லோரும் மதிப்பதற்கு
ஏற்றதொரு வலிமைதந்த
இலக்கணமே பொறுமையன்றோ!

காந்தியது பொறுமையினால்
கண்டுநின்றார் சுதந்திரத்தை
சாந்தியுடன் வாழ்வதற்கும்
தத்துவமே பொறுமையன்றோ?
நீதிநேர்மை அத்தனையும்
நெறிதவறிப் போவற்குப்
பொறுமைபற்றி உணராதார்
பொறுப்புதான்  காரணமே!

தலைவர்க்கும் பொறுமையில்லை
தொண்டர்க்கும் பொறுமையில்லை
தலைநிமிர்ந்த  ஆணவத்தின்
தாள்பணிந்தே நிற்கின்றார்
நிலைகுலைந்து பலபோயும்
நினைத்துமே பார்க்காமல்
நிற்பதற்குப் பொறுமையிலா
நிற்பதுவே காரணமே!

புத்தபிரான் பொறுமையும்
புனிதநபி பொறுமையும்
உத்தமராம் யேசுபிரான்
உயர்ந்துநின்ற பொறுமையும்
சத்தியத்தாய் ஈன்றெடுத்த
வள்ளுவரின் பொறுமையும்
இத்தரைக்கு வந்திருந்தும்
ஏன்பொறுமை வரவில்லையோ!

பொறுத்தாரே அரசாள்வார்
பொங்கினார்க் காடுறைவர்
புவிதனிலே சிறந்தசெல்வம்
பொறுமையே எனவறிவோம்
நினைத்துமே எண்ணிவிட்டால்
நெஞ்சமதில் பொறுமையினை
இருத்தியே வைத்துவிட
எல்லோரும் விரும்பிடுவோம்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.