இலக்கியம்கவிதைகள்

வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்!

-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

மனிதனது மனமெல்லாம் மதம்நிறைந்தே இருக்கிறது
மதமகன்று போவதற்கு மதமொன்றே உரமாகும்
மதமதனை மனிதவினம் மயக்கமுடன் நோக்குவதால்
மதவாதம் மனிதனையே மாண்டுவிடச் செய்கிறது!

யானைக்கு மதமேறின் பாகனையே கொன்றுவிடும்
ஞானமின்றி இருப்பாரின் மதவெறியோஅழித்துவிடும்
நானென்னும் ஆணவத்தால் நல்மதமும் கெடுகிறது
நம்பினார்க் கெடுவதில்லை நால்வேதம் சொல்கிறது!

பலமதங்கள் பலகருத்தைப் பலவழியில் பகன்றாலும்
பாரிலுள்ள மதமனைத்தும் பாதகத்தைப் பகரவில்லை
பண்புநிறை உள்ளமொடு பலருமே வாழ்கவென்று
பக்குவமாய்ச் சொல்லுவதைப் பலருமே கேட்பதில்லை!

எந்த மதமானாலும் சொந்தம் கொண்டாடிடுங்கள்
பந்தமுடன் மதம்சொல்லும் வழியினிலும் சென்றிடுங்கள்
வெந்தழலில் வீழ்த்துகின்ற வேதனைகள் தவிர்த்துவிடின்
எந்தமதம் ஆனாலும் எல்லோரும் போற்றிடுவார்!

நதிகள் பலவிருந்தாலும் கலக்குமிடம் கடலன்றோ?
நம்மதங்கள் பலவிருந்தும் உணர்த்துமிடம் இறையன்றோ?
நாமதனை உணராமல் நாளுமே மதம்கொண்டால்
நம்மனத்தில் மதமின்னும் நாளுமே வளருமன்றோ!

விலங்கினுக்கும் மதமில்லை பறவைக்கும்
மதமில்லை
விளக்கதனில் விழுகின்ற விட்டிலுக்கும் மதமில்லை
விவேகநிறை மனிதனுக்கோ மதம்நிறைய இருந்தாலும்
விவேகமதைக் கைவிட்டு வேற்றுமையே காணுகிறான்!

மதங்கள் பலவிருந்தாலும் மனம்சிறக்க வேண்டாமா?
மதவெறியை ஊட்டுவதால் மானிடமே மாண்டிடுமே!மதமென்னும் கருவதனைப் புனிதமாய்க் கொண்டுவிடின்மதம்பிடிப்பார் நிலைமாறி
வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்!

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க