இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 210 )

0

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்புடன் கூடிய வணக்கங்கள். நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது நமது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொண்டு பிறப்பதில்லை. காலநதியின் ஓட்டத்தில் நாம் வகுத்துக் கொண்டு செல்லும் இலக்கைச் சிலர் அடைகிறோம். சிலர் தாம் போட்ட இலக்கை விட்டு காலத்தின் வேகத்தினால் வேறு பாதையில் இழுத்துச் செல்லப்பட்டு தாம் எதிர்பார்த்திராத இலக்கினை எட்டுகிறார்கள். இதுதான் நம் வாழ்க்கையின் எளிமையான யதார்த்தம்.

இவ்வுலகத்தில் நம் மத்தியில் பலர் ஊடல் ஊனமுற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் பிறப்பினாலும், சிலர் வியாதிகளினாலும், சிலர் விபத்துகளினாலும், சிலர் கொடிய போரில் ஈடுபடுவதினாலும் இத்தகைய ஒரு துரதிருஷ்ட நிலையை அடைகிறார்கள். இவர்களை நாம் ” மாற்றுத் திறனாளிகள் – Physically chalanged “ என்று அழைக்கிறோம். ஆனால் மற்ற அனைவரிடத்தில் இருக்கக்கூடிய திறமைகள் என்று கருதப்படுபவை இவர்களிடமும் எந்த விதத்திலும் குறைவதில்லை. அதேபோல அவர்களது இலட்சிய வேட்கைகளும் குறைவதில்லை.

உடலில் எந்தக் குறைபாடுகளும் அற்றவர்கள் என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு இம்மாற்றுத்திறனாளிகள் தம்முடைய இலட்சியத்திற்காக அயராது உழைப்பவர்களாகக் காணப்படுகிறார்கள்.
சமீபத்தில் நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன். அது ஒரு ஆங்கில நிகழ்ச்சி DIY SOS – Big Build என்று அந்நிகழ்ச்சி அழைக்கப்படும். வாழ்வில் மிகவும் இடர்களைச் சந்திப்பவர்கள் தாம் வாழும் இல்லத்தில் பல குறைபாடுகளுடன் வாழ்வதைக் கண்டு அவர்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் பி.பி.ஸிக்கு எழுதுவார்கள் அவர்களும் அவ்வில்லத்தை அக்குடும்பத்தினருக்கு வேண்டிய வகையில் அமைத்துக் கொடுப்பார்கள். இத்திருத்த கட்டிட வேலையில் ஈடுபடுவோர்கள் அனைவரும் எதுவித ஊதியமும் பெறாமல் நல்லெண்ண அடிப்படையில் இலவசமாகவே தமது சேவையை அளிப்பார்கள்.

சமீபத்தில் நான் பார்த்த அந்நிகழ்வு நெஞ்சைத் தொடுவதாக அமைந்திருந்தது. 16 வயதே நிறைந்த ஒரு மாணவன் 6 அல்லது 7 வயதுவரை சாதரணமாக நடமாடிக் கொண்டிருந்தவன் காதிலே ஏற்பட்ட ஒரு கட்டியினால் இரண்டுமுறை ஆபரேஷனுக்குட்படுத்தப்பட்டான். விளைவு அதுவரை நடந்து கொண்டிருந்தவன் இடுப்புக்குக் கிழே பாரீசவாதத்தினால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டான். ஆனாலும் அவன் தன் இலட்சிய வேட்கையைக் கைவிடவில்லை. விளையாட்டில் மிகவும் ஈடுபாடுடையவனாக இருந்த அவன் சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு ஈடுபடக்கூடிய விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டான்.

அவனுடைய இலட்சியத்திற்கு அவனுடைய தாய் தந்தை தம்மாலான முழு ஒத்தாசையையும் நல்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களின் நிதி நிலைமை அவர்கள் வாழும் இல்லத்தை அவனுடைய வசதிகளுக்கேற்ப மாற்றியமைக்க முடியவில்லை. அவனுடைய நண்பர்கள் தொலைக்காட்சி நிலையத்திற்கு விண்ணப்பிக்க அவர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் அவனது இல்லத்தை அவன் வாழ்வதற்கு வசதியான வகையில் மாற்றிக் கொடுத்தார்கள். அவன் உடற்பயிற்சி செய்வதற்காக ஒவ்வொருநாளும் இரண்டுமுறை ஜிம்முக்கு அவனது தாய் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. இந்நிகழ்ச்சியின் திருத்த வேலைகளின் போது அவனது இல்லத்திலேயே அவனுக்கு ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்துக் கொடுத்தார்கள். அவ்வில்லத்தில் அவன் சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடியே தனக்குத் தேவையான உணவு வகைகளைச் சமைப்பதற்கான உபகரணங்களை அமைத்துக் கொடுத்தார்கள்..

அவ்விளைஞன் 2020 மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து தங்கப்பதக்கம் வெற்றி பெறுவதே தனது இலட்சியமாக வகுத்து அதற்காக முழுமூச்சுடன் உழைத்து வருகிறான். இம்முறை ரியோ நகரில் நடந்து முடிந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சீன தேசத்திற்கு அடுத்த அளவிலான பதக்கங்களைப் பெற்று , அதிக பதக்கம் பெற்ற நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கின்றது. இங்கிலாந்தில் இம்மாற்றுத்திறனாளிகளின் பயிற்சிக்காக, ஒலிம்பிக் , மற்றும் சர்வதேச போட்டிகளில் அவர்கள் பங்கு பற்றி வெற்றி பெறுவதற்கான பயிற்சிகளுக்கான ஊக்கம் பல இடங்களிலிருந்து வழங்கப்படுகிறது. அவர்களின் போட்டிகளுக்கு தொலைக்காட்சிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

மக்கள் மிகவும் ஆர்வத்துடன் அவர்களது போட்டிகளில் பார்வையாளர்களாகக் கலந்து அவர்களை ஊக்குவித்து வருகிறார்கள். காலம் அவர்களின் மீது போட்ட சவால்களை எதிர்ப்பது என்பது மிகவும் இலகுவான காரியம் அல்ல. ஆனால் அவ்வெதிர்ப்புக்கு சமுதாய முழு உணர்வுடன் கைகொடுக்க வருமானால் அவர்களது பாதை இலகுவாகிறது. அன்று நடைபெற்ற அந்நிகழ்ச்சியின் முடிவில் சமூகம் தனக்கு நல்கிய உதவிகளைக் கண்ணுற்ற அவ்விளைஞனின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகி ஓடியது.

எமது பின்புல நாடுகளில் உடல் ஊனமடைந்தவர்களை கெளரவமான பெயர்களால் அழைத்து வருகிறோம் ஆனால் அவர்களை நோக்கிய சமுதாயப் பார்வை எத்தகையது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அவர்களுக்குள் இருக்கும் தனித்திறமை அவர்களது குறைபாடுகளால் முடங்கிப் போய்விடாமல் வெளிக்கொணரப்படக் கூடிய சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றனவா ? இவைகள் இனி வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தினால் ஒரு முக்கிய பிரச்சனையாக அணுகப்படுவது ஒன்றே எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மாற்றமடையக்கூடிய வழிவகைகளை அவர்களுக்கு வகுத்துத்தரும். அனைவருமே ஒலிம்பிக் போட்டியில் வெற்றியாளர்களாக முடியாது ஆனால் வாழ்வுப் போட்டியின் வெற்றிக் கோட்டினைத் தட்டிப்பார்க்குமளவிற்கு அவர்களின் பாதையைச் செப்பனிட்டுக் கொடுக்கலாமல்லவா ?

ஒலிம்பிக் போட்டியில் கலந்து விட்டுத் திரும்பிய ஜக்கிய இராச்சிய மாற்றுத் திறனாளிகள் குழுவிற்கு விமானநிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டதோடு இங்கிலாந்து மகாராணி தானே அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளமை இந்நாட்டின் முதிர்ச்சியை நன்கு எடுத்துக் காட்டுகிறது.
மீண்டும் அடுத்த மடலில்.

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.