கிரேசி மோகன்
——————————–

ரத்தினப் பூஅசோகம் முத்தாக சிந்துவாரம்
பத்தரை மாத்துப்பொன் கர்ணிகாரம் -அத்தனை
போதும் அணியிருந்த போதும் வசந்தத்தின்
போதணிந்தாள் பார்வதிஅப் போது….(176)

மலைப்பூங் கொத்தால் மளுக்கென்று சாயும்
தளிர்க்கொடி போலத் துவண்ட -மலைப்பெண்
செங்கதிர் வண்ணத்தில் சேலையில் போந்துகனக்
கொங்கையாள் ஆனாள் கொடி….(177)

மோகமவன் நாணுக்கு மாற்றாய் மகிழம்பூ
நாகமென மாலையை நுண்ணிடையில் -மேகலையாய்
பத்திரமாய் வைத்தனன், பார்வதி சாயுமதை
தத்தளித்தால் தாங்கித் தடுத்து….(178)

வாசிவாசி என்றென்றும் நாசி சுவாசிக்கும்
வாசம் முகர்ந்திட வண்டுவந்து -மூச
இதழ்கனியைச் சுற்றி, இளங்கமல மொட்டால்
அதைவிரட்டும் பார்வதி அங்கு….(179)

மாசிலா அங்கங்கள் மன்மதன் பத்தினியே
கூசுவாள் வெட்கி குனிந்துதலை -ஈசன்
தவதனுசை வெல்ல இவள்மனசே வாளி
சவமணலில் காமன் செருப்பு….(180)

பதியாகப் போகின்ற பாதியின் வாசல்
சதியாய்ப் பிரிந்தவள் சேர்ந்து -மிதித்தாள் (OR) விதியால்
உவப்புடன் தன்னுள் சிவபிரான் ஆன்ம
தவப்பலன் கண்ட தினம்….(182)….கிரேசி மோகன்….!

வாசி அடக்கிய ஈசனார் பாரத்தால்
காசினியை ஆயிரம் கைத்தலையால் -தூசென
தாங்கிடும் சேடன் தவித்திட அன்புசிவம்
ஓங்கு தவம்கலைத்தார் ஓம்….(183)

பணிவிடை செய்துவந்த பார்வதியைப் பற்றி
பனிவிடை ஈசரிடம் போற்ற -கனிவாய்
புருவத்தைத் தூக்க புரிந்துகொண்ட நந்தி
வரவேற்றான் கன்றாய் வளைந்து….(184)

ஆர்வமுடன் அங்குற்ற பார்வதியின் தோழிகள்
தேர்வுசெய்த பூக்கள் தொகுதியை -நீர்விளங்கும்
வார்சடையோன் பாதத்தில் வைத்து வணங்கியபின்
கார்சிதைவாய் தூவிக் களிப்பு….(185)

கூந்தலில் சூடிய கோங்குமலர் காதணி
மாந்தளிர் மண்ணில் மயங்கிவிழ -பாந்தமாய்
உச்சந் தலைதரையில் உற்றிட பார்வதி
அச்சிவன் பாதம் அடைவு (OR) அணைப்பு….(186)

உன்னையன்றி வேறோர் பெண்ணை மனைவியாய்
எண்ணாத கேள்வனை ஏற்றிடுவாய் -திண்ணமாய்
மெய்யதைச் சொன்னான் மகாதேவன், மூத்தோர்கள்
பொய்யுரைப் பாரோ புகல்….(187)

மூளும்தீ வாயில் முழுகப்போம் விட்டிலாய்
வேளவன் பார்வதி வந்ததால் -தோளின்வில்
நாணை வருடி நமச்சிவாயர் நெஞ்சென்ற
தூணை இலக்காய்த் துணிபு….(188)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *