Author: மீ. விசுவநாதன்

  • அவன்,அது,ஆத்மா (23)

    ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 23

    “ஆடிப்பட்டம் தேடி விதை”

    ஆடிமாதம் அவனுக்கு மிகவும் பிடித்த மாதம். நல்ல காற்று வீசும். வயல் வெளிகளில் புதிய நாற்று நடப்பட்டு இளம்பச்சை நிறத்தில் கண்களுக்குக் குளுமையாக அவை காற்றில் அசைவதைக் காணவே கண்கள் கோடி போதாது. கன்னடியன் கால்வாயிலும், தாமிரவரணி ஆற்றிலும் தண்ணீர் நிறையப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். அந்தச் சிறிய வயதில் அவனுக்கு நண்பர்களுடன் அவன் தண்ணீரில் நீந்தி விளையாட இந்த ஆடிமாதமே சுகமாக இருக்கும். ஆற்றில் குளித்து விட்டு வரும் பொழுதே மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து மென்மையாக வீசும் காற்றில் ஈர ஆடைகள் உலர்ந்து விடும். வயல் வரப்புகளில் புற்கள் மெத்து மெத்தென்றிருக்கும். ஆடி மாதமானதால் எங்கோ இருக்கும் “வடக்கு பார்த்த செல்வி” அம்மன் கோவிலில் இருந்து வருகிற பக்திப் பாடல்கள் காற்றில் பறந்து வந்து அவனது காதுகள் வழியாக மனத்தைக் குதூகலப் படுத்தும். அந்தப் பாடல்களை ரசித்துக் கொண்டே அந்த வயல் வரப்புகளில் நடந்தும், ஓடியும், அந்த நாற்றுகளின் தளிர்த் தலைகளைத் தடவியும் அவன் வீட்டிற்கு வந்த காலங்கள் பசுமையான அனுபவமாக இருக்கிறது. “ஆடிப்பட்டம் தேடி விதை” என்னும் பழமொழிக்கேற்ப அவனுக்கு அம்மா அவனிடம் வெண்டக்காய், அவரைக்காய் போன்ற செடிகளின் விதைகளை வீட்டின் பின்புறம் விதைக்கச் சொல்லுவாள். அவனும் அவனுக்கு அக்கா பாலாவும் விதைகளை நடுவார்கள். தண்ணீர் விடுவார்கள். சில நாட்களில் பூமியைப் பிளந்து கொண்டு அந்த விதைகள் முளைக்கும். செடியாகவும், கொடியாகவும் அவைகள் வீட்டின் கொல்லைப் புறத்தில் வளர்ந்து அழகுதருகின்ற காலம் இந்த ஆடிமாதம்.

    அவனுக்கு செடிகள் வளர்ப்பதில் ரொம்பவும் ஆசை உண்டு. சின்னம்பிச் சித்தாப்பாவுக்கும் செடிகள் வளர்ப்பதில் ஆசை அதிகம். அவர் நிறையப் பூச்செடிகளும், “குரோட்ரன்ஸ்” செடிகளும் நட்டிருந்தார். மனோரஞ்சிதம் பூ கொல்லைப் புறம் முழுதும் வாசம் பரப்பிக் கொண்டிருக்கும். அவன் ஒருமுறை கருவேப்பிலைச் செடியை நட்டுவிட்டு, மறுநாள் அந்தச் செடியை மெதுவாகத் தோண்டி எடுத்துப் பார்த்துக் கொண்டிருபதைப் பார்த்த சின்னம்பிச் சித்தப்பா,” என்னடா..கண்ணா செடிக்கு வேரோடிருக்கான்னு அதைப் பிடுங்கிப் பாக்கறயா ” என்று வேடிக்கையாகக் கேட்டார். அவன் செடிகள் நட்டாலும், விதைகள் ஊன்றினாலும் நன்றாக வளரும் என்று அவர் அவனை நடச்சொல்லுவார். ஏதோ செடிகளின் நல்ல நேரம் அவைகள் வளர்ந்து செழித்தன. நீல நிறப் பூக்களுடன் அவரைகொடி பந்தலில் படர்ந்திருக்கும். கொத்து கொத்தாகக் காய்த்து உலுப்பும். அவனும், அவனுக்கு அக்காவும்தான் அனேகமாக அந்தக் காய்களைப் பறிப்பார்கள். பல நேரங்களில் குரங்குக் கூட்டம் வந்து கும்மாளம் போடும். “குரங்குகளுக்குப் போக உள்ள மிச்சம்தான் நமக்கு” என்று அவனுக்கு அம்மா சொல்லுவாள். நந்தியாவட்டை, செம்பருத்தி போன்ற பூக்களைப் பறித்து, ஒவ்வொன்றாக அவனுடைய வீட்டின் ரேழியில் உள்ள பூஜை அறைப் படங்களில் வைப்பது ஒரு தனி அனுபவம். ஆடி மாதச் செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமைகள் விசேஷமாகக் கொண்டாடப்படும். ஆடிச் செவ்வாய்க் கிழமைகளில் அவனுக்கு அக்காவுக்குப் புதுப் பாவாடை, சட்டை எல்லாம் எடுத்துத் தருவார்கள். அவளும் அவளது தோழியர்களும் ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு அந்தப் புதிய ஆடைகளை அணிந்து, அழகாகத் தலையை வாரிப் பூச்சூட்டி அலங்கரித்துக் கொண்டு “ஆடிச் செவ்வாய்த் தேடிக்குளி, அரச்ச மஞ்சளப் பூசிக்குளி” என்ற நாட்டுப்புறப் பாடலைப் பாடிய படியே வீட்டிற்கு வரும் அழகை அந்த கிராமத்தில்தான் பார்க்க முடியும். ஆடி வெள்ளிக்கிழமை அன்று அவனுக்கு அம்மா “சர்க்கரைப் பொங்கல்” செய்து அம்பாளுக்கு சுலோகங்கள் சொல்லி நிவேதனம் செய்வாள். அவன் அந்த சர்கரைப் பொங்கலுக்காகக் காத்துக் கொண்டிருப்பான். அம்மா செய்த அந்த சர்கரைப் பொங்கலின் ருசியே தனிதான். ஆடி வெள்ளிக் கிழமைகளில் சின்னச் சந்கரன் கோவிலுக்குச் சென்று வரும்படி அவனுக்கு அம்மா சொல்லுவாள். அவனும் சென்று வருவான். காரணம் அங்குள்ள ஆற்றங்கரையில் நன்றாக நீந்திக் குளிக்கும்படியாக வசதியான படித்துறைகள் இருக்கும். அவனும் நண்பர்களும் அங்கேயும் நீண்டநேரம் குளித்து விட்டு அவசர அவசரமாகக் கோவிலில் “கோமதி அம்மனை” தரிசனம் செய்துவிட்டு வருவார்கள்.

    “ஆடித் தவசு”

    adii

    ஆடித்தவசுத் திருவிழா திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவிலிலும், அம்பாசமுத்திரம் தாலுக்காவில் கோடரங்குளம் பகுதியில் இருக்கும் சின்னச் சங்கரன் கோவிலிலும்தான் மிகவும் விசேஷமாக நடைபெரும். அவன் அம்மசமுத்திரம் பகுதியில் இருக்கும் சின்னச் சங்கரன் கோவிலில் நடைபெறும் ஆடித் தவசு விழாவைதான் பலவருடங்கள் பார்த்திருக்கிறான். அவனுக்குச் சிறிய வயதில், ஏன் அவன் நான்காம் வகுப்புப் படிக்கும் வரை அவனை ஆடித்தவசு திருவிழாவுக்கு அவனுக்கு அப்பாத்தான் கூட்டிச் சென்றிருக்கிறார். எப்படி, அவனை நடக்க வைக்காமல் தன் இருதோள்களிலும் தூக்கி வைத்துக் கொண்டு சென்று வருவார். அவனது வீட்டில் இருந்து அந்தக் கோவில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவாவது இருக்கும். அவனைச் சுமந்து கொண்டு மாலை ஐந்து மணிக்கு தொந்திளிளாகம் தெரு வழியாக, திம்மராஜபுரம் ரயில்வே லைன் தாண்டி அணைக்கட்டு வழியாக சங்கரன்கோவிலுக்குச் செல்வார். அணைக்கட்டில் அவனை இறக்கி வைத்து, அவனுக்கு அந்தச் சூழலின் அழகைக் காட்டுவார். மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து வருகின்ற தாமிரபரணித் தண்ணீர் இங்கே ஒரு பெருங்கடல் போன்ற தோற்றத்தில் இருக்கும். இங்கிருந்துதான் கன்னடியன் கால்வாய்க்கும், தாமிரபரணி ஆற்றுக்கும் தண்ணீர் பிரிந்து செல்கின்றது. அதைப் பிரிக்கும் நீண்ட பாதை கருங்கற்களினால் அமைக்கப்பட்டிருக்கும். அதில் தண்ணீர் வழிந்தோடும். கால் பாதங்களுக்கு மேல் ஒரு அரையடித் தண்ணீர் சென்று கொண்டிருந்தால் மெதுவாகக் கடந்து கோவிலுக்குச் சென்று விடலாம். தண்ணீர் அதிகம் இருந்தால் அம்பாசமுத்திரம் சுற்றி வண்டிமறிச்சம்மன் கோவில் வழியாகத்தான் வரவேண்டும். அவனுக்கு அப்பா அவனைத் தோளில் சுமந்து கொண்டு மெதுவாக அந்த நீர்ப்பாதை வழியாக அக்கரைக்குச் சென்று விடுவார். அப்பாவுக்கு அந்தப் பாதைகள் எல்லாம் அத்துப்படி. அனேகமாக கல்லிடைகுறிச்சியில் இருந்து சின்னச் சங்கரன் கோவிலுக்கு வருபவர்கள் இந்த அணைக்கட்டுப் பாதையாகத்தான் வருவார்கள். “தவசு”த் திருநாள் காணக் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் மாலை ஆறரை மணிக்கெல்லாம் அலைமோதும். அதுசரி. ஆடித்தவசு என்றால் என்ன? என்று அவனுக்கு அப்பாவிடம் அவன் கேட்டான். “தனது சகோதரன் ஸ்ரீமன் நாராயணனையும், தன் கணவன் ஸ்ரீ சங்கரலிங்கரையும் ஒரு சேரக் காணவேண்டும் என்று கோமதி விரும்பினாள். விருப்பம் நிறைவேற அவள் தவம் இருந்தாள். “தவம்” என்பதைத் திருநெல்வேலி மாவட்டத்தில் “தவசு” என்று அழைப்பது வழக்கம். இறைவி தவம் செய்ய பூலோகம் வந்தாள். அவளுக்குத் துணையாக தேவர்கள் எல்லோரும் “பசுக்களாக” வந்தனர். பசுவை “கோ” வென அழைப்பர். அதனால் பசுக்களாகிய அந்த தேவர்கள் தொழுகின்ற அழகிய “மதி” போன்றவள், பூர்ண நிலவு போன்றவள் என்ற பொருளில் “கோமதி” என்று இறைவி அழைக்கப் பட்டாள். அந்த கோமதி தவசு செய்கிறாள். அதனால் தவசுக் கோலத்தில் தாமிரபரணி நதிக்கரையில் ஒரு மண்டபத்தில் இருக்கிறாள். தவத்தின் பயனாக முதலில் “சங்கர நாராயணராக”வும், பின்பு “சங்கரலிங்கமாகவும்” இறைவன் காட்சி தருகிறான். அந்த இறைவனை தவம் முடித்த “கோமதி” அம்மை மூன்று முறை வலம் வந்து, ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு கல்யாணக் கோலத்தில் கோவிலுக்குள் செல்வார்கள்.

    avan1

    இதன் உட்பொருள் “சிவன் விஷ்ணு என்ற பேதம் கிடையாது. தவமிருந்தால், அதாவது மனதை ஒருநிலைப் படுத்தி அனைத்தும் இறைவன் உருவே என்ற எண்ணத்தில் இருந்தால் மனதில் “சாந்தி” என்ற கல்யாண குணம் கிடைக்கும்” என்பதாகும்.

    இறைவி கோமதி, இறைவன் ஸ்ரீ சங்கரரை மூன்று முறை வலம் வரும் பொழுது, பக்தர்கள் தங்களின் பிராத்தனையாக உப்பு, மிளகு, காய்கறிகள், வாழப்பழம் போன்ற பொருட்களை அந்த இறைவியும், இறைவனும் உறையும் அழகிய “சப்பரத்தை” நோக்கி வீசுவார்கள். அது அங்கிருக்கும் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தில் விழும். அந்தக் காய்களோ, கனிகளோ அவன் மீது விழுந்து விடாதபடி அவனுக்கு அப்பா அவனைத் தன் தோள்களின் மீது வைத்துத் தன் கைகளால் அவனை அணைத்தபடி இருப்பார். சுவாமிக்கு தீபாராதனைகள் நடக்கும் நேரம்,” கண்ணா..கும்புட்டுக்கோ…சுவாமி நன்னாத் தெரியறாரா பாரு” என்று கேட்டு மெல்ல மெல்லக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு “சப்பரத்தின்” பக்கம் சென்று அந்தக் கற்பூரத்தை அவனுக்குக் கண்ணில் ஒற்றி விடுவார். வீபூதி வாங்கி அவன் நெற்றியில் இடுவார். இடி, மிதி, அடி எல்லாம் தான் வாங்கிக் கொண்டு அவனுக்கு “ஆடித்தவசு” தரிசனம் செய்து வைத்த அந்த அப்பாவுக்கு அவனால் என்ன கைமாறு செய்து விடமுடியும். அப்படிப்பட்ட பெற்றோர்களை மறக்காமல் இருக்கக் கூடிய நல்ல புத்தியை இறைவன் அவனுக்குக் கடேசி மூச்சு இருக்கும் வரை அருளவேண்டும் அவளவே.

    சின்னச் சங்கரன்கோவிலின் வரலாறு

    avanசின்னச் சங்கரன் கோவிலில் இருக்கும் சிவலிங்கம் சுயம்பு. அதற்கொரு கதை சொல்லக் கேட்டிருக்கிறான். முன்னொரு காலத்தில் சிவபக்தர் ஒருவர் ஒவ்வொரு நாளும் தன் பூஜை முடிந்தவுடன், நிவேதனப் பொருளான “சாதத்தை”க் காக்கைக்கு வைத்து வந்தார். அந்த சாதத்தைக் கவ்விக் கொண்டு அது பறந்து விடும். ஒரு நாள் அவர் அந்தக் காகம் ஏன் சாதத்தைச் சாப்பிடாமல் எங்கோ பறந்து செல்கிறதே, அது எங்கு செல்கிறது என்று கவனித்தார். அந்தக் காகம் அந்தக் காட்டுப் பகுதியில் ஒரு இடத்தில் அந்த சாதத்தை வைத்து விட்டு பக்கத்தில் ஓடுகின்ற தாமிரபரணித் தண்ணீரைத் தன் வாயில் எடுத்து வந்து சாதம் வைத்த இடத்தில் வாயில் உள்ள நீரைத் தெளித்தது. ஒரு செடியில் உள்ள பூவை அலகால் எடுத்து அதன் மீது வைத்தது. அதன் பின் அந்த சாதத்தை அந்த இடத்தில் வைத்து வழிபட்டது. அதன் பின் அந்தக் காகம் பறந்து சென்று விட்டது. இதைத் தள்ளி இருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த சிவபக்தர், காகம் வழிபட்ட இடத்தைத் தோண்டிப் பார்த்தார். அங்கே ஒரு சுயம்பு லிங்கம் இருப்பதைக் கண்டார். அதற்கு தினமும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தார். ஒருநாள் அவர் வராததைக் கண்ட ஊர் மக்கள் அவர் பூஜை செய்து வந்த இடத்திற்க்குச் சென்று பார்த்தனர். அப்பொழுது அவர் இந்த இடத்தில் சிவன் இருக்கிறார் என்று கூறி, அந்த லிங்கத்திலேயே மறைந்து விட்டார். அதனால் அந்த லிங்கத்திற்கு “சங்கரலிங்கம்” என்று பெயர் வந்தது. இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழும் மக்கள் தங்கள் வம்சத்திற்கு சங்கரன், சங்கரநாராயணன், சங்கரலிங்கம், தவசுப் பிள்ளை, உமையொருபாகன், கோமதி என்ற பெயர்களால் அழைப்பதைக் காணலாம்.

    இந்தக் கோவிலின் மூலவர் சங்கரலிங்கம். வடக்கு நோக்கி இருக்கிறார். அவரது மேனியில் ராகு, கேது என்ற நாக தேவதைகள் இருக்கின்றனர். அதனால் இந்தக் கோவிலின் மூலவரை மனதில் பிராத்தனை செய்துகொண்டு பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் விஷக்கடியில் இருந்து சுகம் பெறுகின்ற பக்தர்கள் இன்றும் இருக்கின்றனர். கோமதியை வேண்டிக்கொண்டு வெள்ளியில் செய்த கண்மலர்கள்,கை,கால்கள் எல்லாம் காணிக்கையாகச் செலுத்துவதுண்டு. அதற்குப் பலனும் உண்டு. நம்பினோர்க்கு தெய்வம்.

    அவனுடைய வீடு ஓட்டு வீடாக இருந்தது. அப்பொழுதெல்லாம் அதிகச் சூட்டின் காரணமாக ஓடுகளின் இடைவெளியில் இருந்து தேள், பாம்புகள் எல்லாம் வீட்டிற்குள் வரும். அது அனேகமாக அவனுக்கு அம்மாவின் கண்களில் படும். அதைப் பார்த்த உடனேயே அம்மா “கோமதி” “கோமதி” காப்பாத்து என்று சொல்லிக் கொண்டே இடுக்கியால் மெல்ல அதைப் பிடித்து வாய்க்கால் புறத்தில் கொண்டுப் போட்டு வருவாள். கொல்ல மாட்டாள். 1972ம் வருடம் அவனுக்குப் பூநூல் (உபநயனம்) போடுகின்ற தினத்திற்கு முந்தயநாள் அதிகாலையில் அவன் அவனுடைய வீட்டுச் சிறிய திண்ணையில் படுத்துக் கொண்டு கால்களை வீட்டின் வாசலில் உள்ள “சாயப்பட்டை கம்பி”க் கதவுகளில் நீட்டி வைத்துப் படுத்திருந்தான். காலையில் அவனுக்கு அம்மா அந்தக் கதவைத் திறக்க வந்த பொழுது ஒரு கட்டுவிரியன் பாம்பு அவன் காலுக்கு மிக அருகில் இருப்பதைப் பார்த்து, “கோந்தே..கண்ணா..கால மொள்ளத் தூக்கிக்கோ ..கோமதிமேல பட்டுடாதே…கோமதி …கோமதி” என்று மெல்லக் குரல் கொடுத்தாள். அவனும் மெதுவாகக் காலைத் தூக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு அந்தப் பாம்பையே பார்த்துக் கொண்டிருந்தான். அது அந்தக் கதவின் பட்டைக் கம்பியில் நன்றாகச் சுருண்டு இருந்தது. அதற்குள் அவனுக்கு அம்மா இடுக்கியைக் கொண்டுவந்து அந்தப் “பாம்பை” மெல்ல லாவகமாகப் பிடித்துக் கொண்டுபோய் வாய்க்கால் கரையில் விட்டு வந்தாள். அந்த விஷப்பாம்பை அவனுக்கு அம்மா அடித்துக் கொல்ல வில்லை. அவனுக்கு உறவினர் ஒருவர் அந்தப் பாம்பைக் கொல்லாம விட்டுட்டயே என்று அம்மாவிடம் கேட்டபொழுது, “கோமதி என்கொழந்தைய காப்பாத்தினா..நான் அவ கொழந்தையக் கொல்லலாமோ…” என்று பதில் சொன்னதை அவன் கேட்டான். அன்றிலிருந்து அவன் பாம்புகளைக் கொல்லுவதில்லை. ஏன் அவனறிந்து எந்த ஜீவராசிகளுக்கும் துன்பம் தருவதில்லை. அவன் பள்ளிக் காலங்களில் எத்தனையோ பாம்புகளின் வாலைப் பிடித்து இழுத்து மிக வேகமாகச் சுழற்றி வானில் வீசுவான். அது “சொத்”தென பூமியில் விழுந்து இறந்து போகும். நாய்கள் மீதும், குரங்குகள் மீதும் கல்லெறிந்து மகிழ்வான். அப்பொழுதெல்லாம் அவனுக்கு அம்மா அவனை வீட்டிற்குள் வைத்து ஒரு பிரம்பால் அடிப்பாள். அவன் கத்துவான். அழுவான். அப்பொழுது ,”ஒன்னபோலத்தானே அந்தப் பாம்புக்கும், நாய்க்கும் வலிக்கும்…ஏன் பாவத்தைப் பண்ணறாய்” என்று சொல்லிச் சொல்லி அடிப்பாள். அப்படி அடித்து அடித்தே அவனுக்குப் பாவத்தைப் போக்கி அந்தப் பாவத்தை எல்லாம் தான் வாங்கிக் கொண்டாள் அந்த அம்மா. அவனுக்கு அவளே கோமதி.

    ஆடிப்பெருக்கு

    ஆடிப்பெருக்கு அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் ரொம்ப குஷியான பண்டிகை. அவனுக்கு அம்மா வீட்டில் சர்கரைப் பொங்கல், புளியோதரை, தேங்காய்ச்சாதம், எளிமிச்சம்பழச் சாதம், எள்ளுஞ்சாதம், தயிர் சாதம் , வடகம் எல்லாம் சுவையாகச் செய்து வைப்பாள். அன்று பள்ளிக்குக் கூட விடுமுறைதான். காலையில் தாத்தா, அப்பா, அக்கா எல்லோருடனும் வீட்டில் சாப்பிடுவான். மாலையில் அவனுக்கும், அவனுக்கு அக்காவுக்கும் ஒரு பெரிய “காரியரில்” இந்த சித்ரானங்களை வைத்து இலைகளும் தந்து அவனுக்கு அம்மா ஆற்றங்கரைக்கு அனுப்பி வைப்பாள். கிராமத்தில் எல்லோரும் மாலை நாலரை மணிக்கே ஆற்றங்கரைக்குக் கிளம்பி விடுவார்கள். தெருவெல்லாம் “கலகல” வென்றிருக்கும். அம்மா வரமாட்டாள். அப்பா அவருடைய நண்பர் எம்.ஆர்.ஆதிவராகன் குடும்பத்தினருடன் அணைக்கட்டுக்குச் சென்று வருவார். தாத்தா ஆத்தங்கரைக்கு வந்து , பௌண்டரிக மண்டபத்தில் அவருடைய நண்பர்களுடன் இருப்பார். எங்களைக் கவனித்துக் கொண்டிருப்பார். அவருக்கு எங்களின் மீது எப்பொழுதுமே ஒரு தனிப் பிரியம் இருந்தது. ” சாப்பிடரத்துக்கு முன்னால மீனுக்குப் போட்டுட்டுச் சாப்புடுங்கோ” என்று சொல்லுவார். அவனுக்கு அக்கா அம்மா கொடுத்தனுப்பிய வெத்தலை, பாக்கு, பழங்கள் எல்லாம் ஒரு தட்டில் வைத்து தாமிரபரணியைப் பிராத்தனை செய்து அந்தத் தாம்பூலத்தைத் தண்ணீரில் கலப்பாள். பிறகு அம்மா கொடுத்தனுப்பிய உணவுகளில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து மீனுக்குப் போடுவாள். பிறகு ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு, கால்களைத் தண்ணீரில் தொங்கவிட்ட படியே அவன் இருப்பான். அவனுக்கு ஒரு இலையில் அக்கா உணவுகளைத் தருவாள். சந்தோஷமாகச் சாப்பிடுவான். நண்பர்கள் வீட்டு மனிதர்களுடன் கொண்டுவந்த உணவைப் பகிர்ந்து கொண்டு உண்ணுகின்ற ஆனந்தத்திற்கு எல்லையே கிடையாது. கபாலி, குட்டிச்சங்கர், பிரபு, சன்னதித்தெரு கண்ணன் போன்ற நண்பர்களுடனும் ஆற்று மணலில் விளையாடுவான். ஆற்றங்கரையில் எங்கு பார்த்தாலும் மக்கள் தண்ணீரின் அருகில் மணற்பரப்பில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அழகே அழகுதான். இருள் சூழத் துவங்கி விட்டதென்றால் மெல்ல மெல்ல எல்லோரும் வீடு திரும்பத் தயாராவார்கள். தாத்தா சந்தியாவந்தனம் முடித்துத் தயாராக இருப்பார். வீடு திரும்பும் பொழுது எல்லோரும் ஒரே குடும்பமாகச் சிரித்துப் பேசிக் கொண்டு கூட்டங்க்கூட்ட்டமாக வருவார்கள். தாமிரபரணி தன் குழந்தைகளைக் கண்ட மகிழ்ச்சியில் சிலிர்த்து சங்கீத ஒலியோடு அலையடித்து அலையடித்து மெல்லச் சென்று கொண்டிருப்பாள்.

    அவன் பத்தாவது படித்துக் கொண்டிருந்த வருட ஆடிப்பெருக்கன்று மாலையில் ஆற்றங்கரையில் உணவு உட்கொண்டு விட்டு நண்பர்களோடு விளையாடிக் கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்பொழுது மனநிலை சரியில்லாத ஒரு பெரியவர் அவனுக்கு முன்பாகத் தனக்குத்தானே பேசியபடி சென்று கொண்டிருந்தார். அவர், அவன் வசிக்கும் தெருவில் உள்ள ஒரு நல்லாசிரியரின் உறவினரும் கூட. அவன் அந்தப் பெரியவரைக் கேலி செய்தான். அவர் மெல்ல ஓடி ஓடிச் சென்றார். அவனும், அவனுக்கு நண்பன் ஒருவனும் அந்த மனநிலை சரியில்லாத பெரியவரைத் தொடர்ந்து கேலி செய்துகொண்டே வந்தனர். சிதம்பரேஸ்வரர் கோவில் வாசல் வந்ததும் அந்தப் பெரியவர் அங்கிருக்கும் அரசமரத்தடியில் உள்ள பிள்ளையாரை வணங்கிகொண்டிருந்த அவனுக்குத் தாத்தாவிடம் சென்று,” ஒய்..விஸ்வநாதையர்…ஒம்மோட பேரன் என்னக்கேலி பண்ணிண்டே வரான்…நீர்தான் அவனக் கேக்கணும்…” என்று சொல்லிவிட்டு வேகமாக சிவன் கோவிலுக்குள் சென்று விட்டார். அவனுக்குத் தாத்தா,” டேய்..கண்ணா…அந்தப் பெரியவர நீ கேலி பண்ணலாமா..அவர் மனசு சரியில்லாதவர்…அவரைக் கஷ்டப் படுத்தலாமா…அவர் நன்னாப் படிச்சவர்…ஏதோ அவரோட போறாத காலம் இப்படி இருக்கார்…இப்படி நீ கேலி பண்ணறது பாவம் இல்லையா…நம்மாத்துக் கொழந்தை இப்படிச் செய்யலாமா…அந்தப் பெரியவரக் கேலி பண்ணினது தப்புன்னு சொல்லி இப்ப இந்தப் புள்ளையார் முன்னாடி மூணு தோப்புக்கரணம் போடு..நமஸ்காரம் பண்ணு ” என்று சொல்லித் திருத்தினார். அன்று முதல் அவன் வேடிக்கையாகக் கூட யாரையும் கேலி செய்வதில்லை. அவனுடைய நல்ல காலம் அவனுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவர் வந்து அவனை நல்வழிப் படுத்துகின்றனர்.

    அப்படி அவனிடம் உயிராக இருந்து நல்வழிப் படுத்திய அவனுக்கு அப்பாவழித் தாத்தா விஸ்வநாதையர் அடுத்த வருட ஆடிபெருக்கிற்கு முன்பாகவே கார்த்திகை மாதத் தொடர் மழையில் ஒருநாள் இரவு சாப்பாட்டிற்கு பின்பு, அவரது நண்பர் கடலை ராமலிங்கமையரிடம் பேசிவிட்டு வரும் வழியில் சகதியில் சறுக்கிக் கீழே விழுந்தவர் இரண்டு நாட்களில் இறைவனடி சேர்ந்து விட்டார். நல்ல ஆத்மா. அவரை அவன் மறக்கவே மாட்டான்.

    30.07.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • சிவபிரதோஷம்

    -மீ.விசுவநாதன்

    முத்தான இளமையிலே பக்தி                         ஸ்ரீ சிவதாண்டவம்
       –முற்றாமல் இளமையிலைத் தேடி
    சத்தான பொழுதுகளைக் காதற்
       –சந்தையிலே கழித்தேனே பாவி!
    பித்தாகத் திரிந்தவனைக் கூட்டி
       –பிள்ளையெனச் சேர்த்தகுரு பாதம்
    பித்தாக ஆனேன்வாய் பொத்தி
       –பேச்செல்லாம் சிவநாம சக்தி !

    (அறுசீர் விருத்தம்: காய்,காய்,மா, காய்,காய்,மா)

     

    Share
  • “பாரதரத்னா அப்துல் கலாம்”

    மீ.விசுவநாதன்

     

     

    சலாம் சலாம்- எங்கள்
    “அப்துல் கலாம்” !
    கலாம் கனவு நாளை
    கனியும் எலாம் ! (சலாம் சலாம்…..)

    “அப்துல் கலா”மெனும் மனிதன் – தேச
    அமைப்பை மாற்றிய சரிதன் !
    உப்பள பூமியில் பிறந்தான் – அணு
    உச்சத்தைத் தொட்டவன் சிறந்தான் ! (1)

    கல்வியின் மதிப்பை அறிந்தான் – அதைக்
    கனவு கண்டுடன் கடந்தான் !
    நல்வினை மதித்து நடந்தான் -ஞான
    நட்புடன் மதியால் தெளிந்தான் ! (2)

    வள்ளுவன் பாரதி படித்தான் – அதை
    வழக்கப் படுத்தி நிமிர்ந்தான் !
    துள்ளுவன் குழந்தை போலே – அதில்
    துயரம் மறப்ப தாலே ! (3)

    இந்திய தேசத்தின் பெருமை -கலாம்
    எனும்விஞ் ஞானத் திறமை !
    எந்திர மனிதனா யின்றி – ஒரு
    எளியனாய்க் காட்டினான் நன்றி ! (4)

    (பாரதரத்னா அப்துல்கலாம் அஞ்சலிக் கவிதை)

    Share
  • அவன்,அது,ஆத்மா (22)

    ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 22

    கரந்தையார்பாளையம்ஸ்ரீ தர்மசாஸ்தா

    கல்லிடைகுறிச்சிக்கு மற்றொரு பெயர் கரந்தையார்பாளையம். இந்த ஊரில் வசிக்கும் அநேகம் குடும்பத்தினருக்கு ஸ்ரீ தர்மசாஸ்தா குலதெய்வமாக இருப்பார். இந்த ஊர் என்றில்லை. மதுரையும் மதுரைக்குத் தெற்கே உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, கடையம், தென்காசி, செங்கோட்டை, சுந்தரபாண்டியபுரம், கடையநல்லூர், இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்தராயிருப்பு போன்ற பல ஊர்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஸ்ரீ தர்மசாஸ்தாவே குலதெய்வமாக இருப்பார். பெயர்கள் வேண்டுமானால் சாஸ்தா, ஐயனார், ஐயப்பன், பூதநாதர் என்று இருக்கும். அப்படி அழைக்கிற பெயர்கள் எல்லாமே ஸ்ரீ தர்மசாஸ்தா வைத்தான் குறிக்கும். ஆண்களுக்கு ஹரிஹரன், ஹரிஹரபுத்திரன், ஐயப்பன், பூதத்தான், ஐயனார், குளத்துமணி என்றும், பெண்களுக்கு பூர்ண புஷ்கலாம்பாள் என்றும் பெயர் வைப்பார்கள். அதை வைத்தே அவர் எந்த ஊர்க்காரர் என்று கூட எளிதாகச் சொல்லி விடலாம். அந்த அளவுக்கு இப்பகுதியில் ஐயப்ப வழிபாடு பரம்பரை பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது.

    கம்பங்குடி வம்சம்

    akru

    முன்னொரு காலத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தாவிடம் அளவில்லாத பக்தி கொண்ட விஜயன் என்ற பெயருள்ள அந்தணர் வம்சத்தில் ஒரு தம்பதியர் கரந்தையார்பாளையம் என்ற கல்லிடைக்குறிச்சியில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சுவாமி ஐயப்பன் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தனர். அவர்களது தன்னலம் இல்லாத பக்தியை மெச்சி அவர்களுக்குக் கருணை காட்ட வேண்டும் என்று சுவாமி எண்ணினார். அதன்படி ஒருநாள் நல்ல மழை பெய்துகொண்டிருந்த இரவு வேளையில் ஸ்ரீ ஐயப்பன் ஒரு இளைஞன் உருவில் இவர்களது இல்லத்திற்கு வந்தார். வந்த இளைஞனின் பொலிவான முகத்தைப் பார்த்து அந்த தம்பதிகள் அவனைத் தங்கள் வீட்டிற்குள் அழைத்தனர். மழையில் நனைந்த உடலைத் துடைக்க ஒரு வஸ்திரமும் கொடுத்தனர். வந்த இளைஞன் தன் தலையைத் துவட்டிக்கொண்டே,” அம்மா எனக்கு மிகுந்த பசியாக இருக்கிறது. இந்த மழையில் நடு இரவில் இந்தக் காட்டு வெளியில் உணவுக்கு எங்கு செல்வேன்..நீங்கள் எனக்குக் கொஞ்சம் உணவு தந்தால் என் பசி தீரும்” என்றான். இப்பொழுது எங்கள் வீட்டில் உள்ள “கம்புப் பொடியினால் செய்த கூழ் இருக்கிறது..அதைத் தருகிறோம் …நீ உன் பசியாற்றிக்கொள்” என்று ரொம்பவும் கனிவோடு கூறினார். இளைஞனும் அந்தக் கம்பங்கூழைக் குடித்து விட்டு,” அம்மா இன்று இரவு மட்டும் இங்கே தங்க இடம் தாருங்கள்..இரவில் ஓய்வெடுத்துக் கொண்டு நாளை காலையில் சென்று விடுகிறேன்” என்று பணிவோடு கேட்டான். அந்த தம்பதியர்களும் அந்த இளைஞனுக்கு சமயம் அறிந்து உதவினர். அன்று இரவில் அந்த தம்பதியர்களுக்கு அந்த இளைஞன் ஸ்ரீ தர்மசாஸ்தாவாகத் தோன்றி,” அம்மா..நீங்கள் உங்களின் பக்தியினால் எனக்குத் தந்த “கம்பங்கூழ்” என் பசியைப் போக்கி எனக்கு மிகுந்த சந்தோஷம் தந்தது. இந்தக் “கம்பங்கூழ்” குடும்பத்திற்கே நான் அடிமை. உங்கள் வம்சமே “கம்பங்க்குடி” என்று தொன்றுதொட்டு வழங்கப் படும். உங்கள் குடும்பத்திற்கு எப்பொழுதும் காவலாக நான் இருப்பேன்” என்று கூறி மறைந்து விட்டார். அந்தக் கம்பங்குடி வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தான் கரந்தையார்பாளையம் “சாஸ்தா ப்ரீதி” சமயத்தில் பூஜையில் வைக்கப்படும் ஸ்தானிகர் பலகையில் “ஸ்ரீ தர்மசாஸ்தாவாக” அமர்வார்கள். இன்றும் கம்பங்குடி வம்சத்தைச் சேர்ந்த வயதில் மூத்தவரான ஸ்ரீ கிருஷ்ண ஐயர் மும்பையிலும், ஸ்ரீ சுரேஷ் என்பவர் பெங்களூரிலும் வசித்து வருகின்றனர். மும்பையில் வசித்து வருகின்ற திரு. வீரமணி, திரு. கணபதி போன்றவர்களும், சென்னையில் வசித்து வருகின்ற கல்லிடைகுறிச்சி தொந்திவிளாகம் தெருவைச் சேர்ந்த “அப்பாச்சி கிருஷ்ணையர்” குடும்பத்தினரும் கம்பங்குடி வம்சாவழியினர் தான். செல்லப்பிள்ளை வம்சத்தில் செல்லவிலாஸ் அப்பளம் ஸ்ரீ முத்துசாமி சாஸ்திரிகளின் குடும்பத்தினரும், ஸ்ரீ செல்லமணி ஐயர் குடும்பத்தினரும் உள்ளனர். இப்பொழுதும் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம், கொச்சின், நூரணி போன்ற இடங்களில் நடைபெறும் “சாஸ்தா ப்ரீதி” அன்று கரந்தையார்பாளய சமூகத்துக் கென்று முதல் மரியாதை செய்வார்கள் என்று ப்ரும்மஸ்ரீ ஹரிஹர சாஸ்திரிகளின் புதல்வரும், ஸ்ரீ தர்மசாஸ்தா பூஜா முறைகளில் நல்ல தேர்ச்சி உள்ளவருமான ஸ்ரீ H. குருசாமி அவர்கள் அவனிடம் சொன்னார்.

    கரந்தையார்பாளயம் சாஸ்தா ப்ரீதி

    akal
    கல்லிடைகுரிசியில் மொத்தம் பதினெட்டு அக்கிரஹாரங்கள் இருக்கிறது. அந்த பதினெட்டு அக்கிரஹாரத்தையும் எட்டு கிராமங்களாகப் பிரித்துள்ளனர். அவை வைத்தியப்பபுரம், தொந்திவிளாகம், ராமச்சந்திரபுரம், தென்னூர் கிராமம், ஸ்ரீவராகபுரம், பாட்டநயினார்புரம், முதலியப்பபுரம், ஏகாம்பரபுரம் என்பதாகும். இந்த ஒவ்வொரு கிராமத்தினரும் “கிழிக்காரர்கள்” என்று அழைக்கப்படுவர். ஒவ்வொரு வருடமும் “சாஸ்தா ப்ரீதி” வைபவத்தை ஆடி மாதத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் நாள் பார்த்து நடத்துவார்கள். இதைப் “பெரிய அடியேந்திரம்” என்றும் அழைப்பார்கள். அதற்கான கிராமக் கூட்டம் சாஸ்தாங்கோவிலில் வைத்து நடைபெரும். அந்த வருடம் எந்தக் கிராமத்தின் “கிழியோ” அவர்கள் அந்த வருடம் முழுவதும் கிராமத்தில் நடைபெறும் கோவில் விசேஷங்களில் கரந்தையார்பாளையம் சமூகக் கட்டளைகளையும், ஸ்ரீ சங்கர ஜயந்தி, சிருங்கேரி ஆச்சார்யாளின் வர்த்தந்தி தினம் போன்ற உற்ஸவங்களையும் பொறுப்பாக நடத்தவேண்டும். அதற்கான அறக்கட்டளை மூலம் வருகிற வட்டியில் இருந்து இந்த நிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டும். முக்கியமாக “சாஸ்தா ப்ரீதி”யை விமர்சையாகக் கொண்டாட வேண்டும். அதற்கு பக்தர்கள் தனியாகவே தாராளமாகக் காணிக்கைகள் கொடுத்து வருகின்றனர்.

    adi

    “சாஸ்தா ப்ரீதி”க்கு முந்திய தினம் வெள்ளிக்கிழமை மாலையில் ஆறு மணிக்கு மேலாக எந்த கிராமத்தின் கிழியோ, அந்த கிராமக் கோவிலில் வைத்திருக்கும் பெரிய “அடியேந்திரம்” (நிறைய ஓலைச்சுவடிகள் நிறைந்த ஒரு பெரிய கட்டு), ஸ்ரீ சாஸ்தாவின் பிரம்பு, “சங்கிலிவட்டை” (ஒரு வகை கை விளக்கு. இந்த விளக்கை முக்கியமாக சாஸ்தா பூஜையில் வைத்துப் பூஜிப்பார்கள்) போன்ற பொருள்களைத் தனித்தனியாக அந்தக் கிராமப் பெரியவர்களோ, கிராமக் கிழிகாரர்களோ கையில் ஏந்திவர, அவர்களுக்குத் தனித்தனியாக வண்ணக் குடையும் பிடித்துக் கொண்டு எல்லா கிராமத்திற்கும் நாதஸ்வர மேள தாளத்துடன் ஊர்வலமாக வந்து இறுதியாக சாஸ்தாங்கோவிலில் கொண்டு பூசைக்காக வைத்து நமஸ்கரிப்பர்கள்.

    அன்று இரவு சாஸ்தாங்கோவிலில் வைத்து ஸ்ரீதர்மசாஸ்தாவாக ஆசனத்தில் அமரக்கூடியவரின் கையில் ஒரு பெரிய வெள்ளைப் பூசணிக்காயை (சாம்பக்காய்)த் தருவார்கள். அதை அவர் இரண்டாக வெட்டி அங்கிருக்கும் “தலைமைச் சமயல்காரரிடம்” சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரணகோஷத்துடன் தருவார். அதைப் பெற்றுக்கொண்ட சமையல்காரர் சாஸ்தா ப்ரீதிக்கான காய்கறிகளை நறுக்குவதற்க்குத் தயாராகி விடுவார். அதன் பிறகு சாஸ்தா ப்ரீதி அன்று அன்னதானத்திற்குப் பந்தியில் எந்தெந்த கிராமத்துக் காரர்கள் எந்தெந்த உணவு வகைகளைப் பரிமாற வேண்டும் என்று சீட்டு எழுதிக் குலுக்கிப் போடுவாகள். அதில் யார் யாருக்கு என்ன வந்திருக்கிறதோ அதைதான் அந்த கிராமத்துக் காரர்கள் பந்தியில் பரிமாறவேண்டும். கிராமத்தின் ஒற்றுமைக்காக இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களிலும் முன்னோர்கள் எத்தனை கவனமாக இருந்திருக்கின்றனர் என்று அவன் நினைத்துப் பெருமைப் படுவான்.

    மறுநாள் சனிக்கிழமை அன்று சாஸ்தா ப்ரீதி. முன்பெல்லாம் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவிலில் வைத்துத்தான் சாஸ்தா ப்ரீதி நடக்கும். கோவிலின் தெற்குப் பிராகாரத்தில் உள்ள சாஸ்தா மண்டபத்தில்தான் பூஜைகள் நடைபெறும். அழகாக அலங்காரம் செய்திருப்பார்கள். பெரிய விளக்குகளில் சுவாமியை ஆவாகனம் செய்து பூஜிப்பார்கள். ஒரு விளக்கில் குருவையும். ஒரு விளக்கில் கணபதியையும், ஒரு விளக்கில் ஸ்ரீ தர்மசாஸ்தாவையும், ஒரு விளக்கில் பூரண புஷ்கலாம்பாளையும் ஆவாகனம் செய்வார்கள். ஸ்ரீ பூதனாதரை தெற்கு முகமாக வைத்து ஆவாகனம் செய்து அவருக்கு வடைமாலை சாத்துவார்கள். “சங்கிலி வட்டை” விளக்கிற்கும் பூமாலை சாற்றி பூஜையில் வைப்பார்கள். சகஸ்ரநாம அர்ச்சனை செய்வார்கள்.

    ஸ்ரீ தர்மசாஸ்தாவாக அமர்பவருக்கான ஸ்தானிகர் பலகையும், ஸ்ரீ தர்மசாஸ்தாவின் செல்லப்பிளைக்கான ஒரு பலகையும், பரிவார தெய்வங்களான யக்ஷி, சங்கிலி பூதத்தார் போன்றவர்களுக்கான பலகையும் போடுவார்கள். ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கான “வரவுப் பாடல்களை” மனம் உருகப் பாடுவார்கள். அதன் பிறகு சுவாமி நீராடச் செல்வார். ஒரு வண்ணக் குடையின் கீழே தர்மசாஸ்தாவாக இருப்பவரை அவரின் இரண்டு பக்கங்களிலும் பக்தர்கள் பிடித்துக் கொண்டு இரட்டை வரிசையாக சுவாமிப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார்கள். அவருக்கு முன்னால் சங்கிலி வட்டை தீபத்தை ஒருவர் இருகைகளிலும் தாங்கிக்கொண்டு வருவார். சாஸ்தாவின் பரிவார தெய்வங்களான சங்கிலி சாஸ்தா, யக்ஷி, குண்டாந்தடி சாஸ்தா போன்றவர்கள் முன்னால் ஆடிக் கொண்டே போவார்கள். அவர்களுக்கு தாகசாந்திக்காக இளநீரை பக்தர்கள் கொடுப்பார்கள். பெருமாள் கோவிலின் மேற்கு வாசல் வழியாக வந்ததும், அங்கு ஒரு வீட்டின் சுவரில் உள்ள சிறிய துவாரம் வழியாக ஸ்ரீ தர்மசாஸ்தா பார்ப்பார். அது பிலாவடி சாஸ்தா, மற்றும் ஆரியங்காவு சாஸ்தாவின் தரிசனம் என்று அவனுக்குப் பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள். மேலமாட வீதி வழியாக, ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவிலின் கன்னடியன் கால்வாய்ப் படித்துறையில் சுவாமிகளை நீராட்டுவார்கள். அது முடிந்து நேராக வடக்கு மாடத்தெரு வழியாக பெருமாள் கோவிலுக்குள் சென்று பூஜா மண்டபத்தில் அமர்ந்து சாந்தி பெறுவார்கள். சுவாமிக்கு தீபாராதனை செய்து காலை பூஜையைப் பூர்த்தி செய்வார்கள்.

    நீராடிவிட்டு வரும் ஸ்ரீ தர்மசாஸ்தாவின் கையில் ஒரு பெரிய வாழை இலைக்கட்டு தருவார்கள். அதை அவர் அந்த கிராமக் கிழிக்காரரிடம் தருவார். அதைப் பெற்றுக் கொண்டு உடனேயே அங்கு வந்திருக்கும் அத்தனை பக்தர்களுக்கும் அன்னதானம் பரிமாறத் துவங்கிவிடுவார்கள். மதியம் சுமார் மூன்று மணிவரை அந்த அன்னதானம் நடக்கும். முன்பெல்லாம் பெருமாள் கோவிலின் அனைத்துப் பிராகாரங்களிலும் நான்கு ஐந்து முறை அன்னதானப் பந்திகள் நடைபெறும். பெரிய அடுப்பு தோண்டி அதன்மீது வைக்கப்பட்ட பெரிய வார்ப்புகளில் பாயசம் வைப்பார்கள். அதை இரண்டு மூன்று பேர்கள் கிண்டிக்கொண்டே இருப்பார்கள். (அந்தப் பெரிய வார்ப்புகளைத் தூக்குவதற்கே ஒரு பத்துபேர்கள் இருப்பார்கள். அவை எல்லாம் கண்கொள்ளாக் காட்சிகள். பசுமையான நினைவுகள்.

    ak
    இரவிலும் பகலைப் போலவே பூஜை முடிந்து, சுவாமி நீராட்டல் நடக்கும். அதன் முடிவில் நிவேதனம் செய்து, தீபாராதனை செய்து பூர்த்தி செய்வார்கள். மறுநாள் சூரியநாராயண பூஜை. காலையில் ஆத்திய ஹிருதயம், சூரிய நமஸ்கார மந்திரங்கள் சொல்லி நமஸ்கரிப்பார்கள். அன்று காலையில் பத்து மணிக்கெல்லாம் அன்னதானம் துவங்கிவிடும்.

    இரவில் கிராமக் கூட்டம் நடைபெறும். அதில் அடுத்த வருடம் எந்த கிராமத்துக் காரர்களின் கிழியோ அவர்களிடம் “கிழியை” ஒப்படைப்பார்கள். அதை அந்த குறிப்பிட்ட கிழிக்கார கிராமஜனங்கள் சரணகோஷத்துடன் , மேளதாளத்துடன் “அடியேந்திரத்தையும், சாஸ்தாவின் பிரம்பு, சங்கிலி வட்டை தீபத்தையும் ” எடுத்துச் சென்று அவர்களது கிராமக் கோவிலில் வைத்து விட்டு நிவேதனம், தீபாராதனைகள் செய்து பூர்த்தி செய்வார்கள். அன்று இரவு சமூகத்தின் கட்டளையில் ஸ்ரீ ஆதிவாராகப் பெருமாளுக்குச் “சிறப்பு கருடசேவை” நடைபெறும்.

    இப்பொழுதெல்லாம் “சாஸ்தா ப்ரீதி” ஸ்ரீ சாஸ்தாங்கோவிலில் வைத்தே மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தக் கோலாகலமான உற்சவத்திற்கு எல்லா ஊர்களில் இருந்தும் பக்தர்கள் தவறாது வந்து கலந்து கொள்கின்றனர். அவனும் சந்தர்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் தவறாமல் கலந்து கொண்டு ஸ்ரீ தரமசாஸ்தாவை எல்லோருக்குமாகப் பிராத்தனை செய்து வருகிறான். சுவாமியே சரணம் ஐயப்பா.

    “தத்வமஸி” – நீயே அதுவாக இருக்கிறாய்.

     அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • காலம் (15)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x1501111111

    விடியும் பொழுதே வினைகள் விலகும் !
    முடியும் முனைப்பே முழுமைத் துடிப்பை
    உணர்த்தி உயர்த்தும் ! உடனே எழுவாய் !
    மணக்கிற வாழ்வுன் மதி. (141) 20.05.2015

    நிலமெல்லாம் வீடானால் நெற்பயிர்க் கெங்கு
    நிலமென்ற கேள்வி நிலைக்கும் – உலகில்
    விவசாயம் ஓங்கினாலே வீடுயரும் ! பச்சை
    நிறச்சாயம் பூமி நிறம். (142) 21.05.2015

    அழுதழுது என்ன ! அகமாத்மா சுத்தம் !
    பழுதேதும் வாராது ! பந்தம் அழுதாலும்
    பத்துநாள் போனவுடன் பாயாசம் தேடுமே !
    முத்த னறிவான் முதல். (143) 22.05.2015

    “ஆண்டவன் சுவாமிகளுக்கு சதாபிஷேகம்”

    பெருமாளைக் கண்டதோர் பேரின்பம் எங்கள்
    குருவின் தரிசனம் கூட்டித் தருகிறது !
    ஆண்டவன் என்றுமே ஆசார்யன் தோற்றமாய்
    வேண்டினேன் ஆண்டவா வீடு. 21.05.2015

    காக்காய் கரைந்தால் கனிவான அன்பர்கள்
    ஷோக்காய் விருந்துக்கு ஜோடியாய் வாக்காய்
    வருவார்கள் ! காக்கை வயிற்றுப் பசியில்
    வரும்சத்தம் “நல்விருந்தே வா !” (144) 23.05.2015

    “பாசம்” கவலையின் பாலுறவு ; “அன்பென்றால்”
    நேசக் கரம்நீட்டும் நெஞ்சுறவு – மாசிலா
    நற்”கருணை” எல்லோரும் நம்முறவாய்ப் பார்க்கின்ற
    பற்றிலா ஞானப் பனி. (145) 24.05.2015

    பணக்கார பந்தாவில் பாயாசம் ஊட்டும்
    மணப்பந்தல் நாடகங்கள் மாயம் – குணத்தோடு
    சும்மா கதைசொல்லிச் சோறுதரும் பெற்றநம்
    அம்மாவி(ன்) அன்பே அமுது. (146) 25.05.2015

    அவன்முங்கிக் கொண்டான் அழகிய முத்து !
    தவமதுதான் ! நன்கு தனியாய் , கவனித்தால்
    பூவாய் மலர்ந்து புறப்படும் வாசமாய்
    ஆவாய் உனக்குள்ளே ஆழ்ந்து. (147) 26.05.2015

    விறுவி ரெனவே விரைந்து நடக்கும்
    எறும்பு ! தடைகளை எல்லாம் திரும்பி
    எதிர்த்துக் குறியாய் இயல்பாகப் போகும் !
    பதறாது சென்றால் பலன். (148) 27.05.2015

    வெற்று மொழிகளில் வேதாந்தம் பேசலாம்
    முற்றும் துறந்த முனிபோலச் சொற்களால்
    பற்றைத் துறக்கலாம் ! பாசாங்கு நாடகங்கள்
    சற்றும் உதவாச் சரக்கு. (149) 28.05.2015

    குப்பையைக் கூட்டிக் குவித்த இடத்தைநாம்
    எப்படியோ தூய்மை இடமாக்க செப்படி
    வித்தைகள் செய்கிறோம் ! வீசிய வாசனை
    மொத்தமாய்ப் போக முயல். (150) 29.05.2015

     

    Share
  • அவன், அது , ஆத்மா

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 21

    “குலதெய்வம் சீராங்குளம் ஸ்ரீ புளியங்க்காவய்யன் ஸ்ரீ தர்மசாஸ்தா “

    asmv

    அவனுக்குக் குலதெய்வம் தர்மசாஸ்தா. கல்லிடைகுறிச்சிக்கு தெற்கே மணிமுத்தாறு மலையடிவாரத்தில் இருக்கின்ற “சீராங்க்குளம்” என்ற இடத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ புளியங்காவய்யன் தர்மசாஸ்தா. ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஒரு முறையேனும் குடும்பத்தினர் அனைவரும் இரண்டு, மூன்று மாட்டு வண்டிகளில் காலை ஏழு மணிக்குப் புறப்பட்டுச் சென்று வழிபாடு முடித்துவிட்டு வரும் பொழுது மாலை மூன்று மணி ஆகிவிடும். அவனுக்குத் தந்தை வழிப் பாட்டி, தாத்தா, சின்னத் தாத்தா, சித்திப் பாட்டி, அப்பா, அம்மா, அக்கா, சித்தாப்பா, சித்தி, அத்தைகள் என்று ஒரு பெரிய உறவுக் கூட்டமாகச் சென்று தரிசனம் செய்து வருவார்கள். வண்டியில் செல்லும் பொழுது வண்டிக்காரரின் அருகில் “கோஸ் பெட்டி”யில் அமர்ந்து வருவதுதான் அவனுக்கு ரொம்பவும் பிடித்தமானது. கல்லிடைகுறிச்சி “ரயில்வே லைன்” தாண்டி, வண்டி செல்லும் பொழுது, சாலையின் இரு பக்கமும் தோட்டமும், வயல்வெளிகளும், பெரிய குளங்க்களுமாகக் கண்ணுக்கு விருந்தாக இருக்கும். மாட்டு வண்டியில் பயணம் செய்வதே தனி சுகம்தான். “ஏலே..எங்கனலே போறே..நேரே ரோட்டப் பாத்துப் போங்கலே” என்று கையில் வைத்திருக்கும் ஒரு நீண்ட பிரம்பால் வண்டி மாட்டின் பின்புறம் தட்டிய படியே வண்டிக்காரர் மாட்டுடன் பேசிக் கொண்டே ஓட்டுவது ரசனையாக இருக்கும். அவனும் அந்த வண்டிக்கரரிடம் கேட்டு மாட்டின் கயிறுகளைப் பிடித்துக் கொண்டு வண்டி ஓட்டி இருக்கிறான். ஆனால் அப்போது வண்டிமாடுகள் ஒரு பக்கமாக சென்று விடும். “அம்பி.. கயற எங்கட்ட கொடு ….உன்னால புடிக்க முடியாது மாடு வயக்காட்டுல இறங்கிடும்ல ” என்று சிரித்துக் கொண்டே அவனிடம் இருந்து அந்தக் கயிறை வாங்கிக்கொள்வார்.

    amsv
    குலதெய்வக் கோவிலுக்கு நேரே கிழக்கில் ஒரு பெரிய குளம் உண்டு. அதில் எப்பொழுதும் தண்ணீர் நிரம்பி இருக்கும். கோடையில் கொஞ்சம் குறைவாக இருக்கும். கொக்குகளும், நாரைகளும், மைனா, குருவி போன்ற பறவைகளும் அந்தக் குளத்தின் நீரின் மீது பறந்து செல்லும் அழகை அவன் கண்கொட்டாமல் ரசித்துப் பார்ப்பான். கோவிலுக்கு தென்புறம் மலைப் பகுதியும், மேற்குப் பகுதியிலும், வடக்குப் பகுதியிலும் பச்சை வயல்களுமாக கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். கோவிலுக்கு வடபுறத்தில் ஒரு பெரிய ஆலமரம் உண்டு. அதில் நிறைய பறவைகள் அமர்ந்திருக்கும். அந்த ஒலி மனதிற்கு உல்லாசமாக இருக்கும். காற்று ஜிலு ஜிலுவென்று வரும். அந்த ஆல மர நிழலில்தான் வண்டியை நிறுத்தி, மாடுகளைக் கட்டி வைப்பார்கள். வண்டிக்காரர் கோஸ் பெட்டியில் தலை வைத்து படுத்து விடுவார். சுகமான காற்றில் அவர் அங்கே தூங்கி ஓய்வெடுப்பார். மற்றவர்கள் பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று விடுவார்கள். கோவிலைப் பூசாரி திறந்து விட்டதும், குடும்பத்து ஆண்களும் பெண்களும் கோவிலைச் சுத்தமாகப் பெருக்கி, பக்கத்துக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கோவிலின் தரையில் தெளித்துத் துடைப்பார்கள். அதன் பிறகு சுவாமியின் சன்னதிப் படிகளிலும், சன்னதியிலும், முன்புறத்திலும் அழகாகக் கோலம் போடுவார்கள். சுவாமிக்கு அபிஷேகப் பொருட்களை நேர்த்தியாக அவனுக்குத் “தாத்தாக்கள்” சன்னதியில் வைப்பார்கள். சித்தப்பாக்கள் எல்லோரும் வட்டமாக அமர்ந்து கொண்டு பழங்களை உரித்தும், வெல்லம், தேன், கற்கண்டு போன்ற பொருள்களைச் சேர்த்தும் ஒரு பெரிய பாத்திரத்தில் பஞ்சாமிருதம் தயாரிப்பார்கள். அவனும், அவனுக்கு அக்கா பாலா, அவனது அத்தையின் மகன் (அத்தான்) ஸ்ரீதர் ஆகியோரும் பழங்களை உரித்தும், வெல்லத்தைப் பொடி செய்தும் கொடுப்பதுண்டு. “டேய்..கண்ணா..கைய எச்சில் பண்ணக் கூடாது..” என்று அவனுக்குச் சித்தப்பாக்கள் மெல்லிய குரலில் சொல்லுவார்கள்.

    அவனுக்குப் பாட்டி, அம்மா, சித்தி, அத்தை எல்லோரும் “தேங்காய்ப்பால் பாயசம்” (தேங்காயைத் துருவி, அந்தப் பூவை நன்றாக அரைத்துப் பாலெடுத்துக் கொதிக்க வைத்து அதில் வெல்லம், கொஞ்சம் நெய் , ஏலம் சேர்த்துச் செய்யும் பாயசம்- சாஸ்தா பாயசம் என்பார்கள் ), “சர்கரைப் பொங்கல்”, பொங்கல், “ஹவிஸ்” (வெறும் சாதம்) போன்ற உணவு வகைகளை சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்காக அங்கிருக்கும் ஒரு சிறிய மடப்பள்ளியில் உள்ள விறகு அடுப்பில் தயார் செய்வார்கள். வெளிப் பிராகாரத்தில் இருக்கும் ஆட்டுக்கல்லில் (இந்தத் தலைமுறைக்கு அது “மிக்ஸி”. ஆட்டுக்கல்லில் நடுக்குழியில் போடும் பொருளை, கல்உருளையால் சுற்றிச் சுற்றி அரைபார்கள். “மிக்ஸி”யில் போடும் பொருள் சுற்றிச் சுற்றி வந்து அரைபடும். இதுதான் கால மாற்றம்) துருவிய தேங்காய்ப் பூவை ஆட்டுக்கல்லில் நன்றாக அரைத்து பாயசம் செய்வதற்காக அத்தையோ, அம்மாவோ, சித்தியோ கொண்டு தருவார்கள். எல்லோரும் சேர்ந்து வேலைகளைப் பகிர்ந்து கொள்வது என்ற நல்லமுறை குலதெய்வத்தின் முன்பு கற்றுக்கொள்ளும் கூட்டுக் குடும்பப் பாடமாகவே அவனுக்கத் தோன்றும்.

    ” ப்ரும்மஸ்ரீ சங்கர வாத்தியார் “

    asankப்ரும்மஸ்ரீ சங்கர வாத்தியார் தான் அந்தக் கோவிலின் பூஜைகளை நீண்ட காலமாகச் செய்து வருகிறார். அவருக்கு, குலதெய்வக் காரர்களின் குடும்ப உறவுகள் எல்லோரையும் நன்றாகத் தெரியும். வேதம் கற்றவர். நிறைய இளைஞர்களுக்கு வேதம் கற்றுக் கொடுத்துக் கொண்டுமிருந்தவர். நாங்கள் குலதெய்வ வழிபாட்டிற்கு வரப் போகிறோம் என்ற செய்தியைச் சொன்னால் போதும், அவரே கூட இருந்து மனதிற்குத் திருப்த்தியாக பூஜைகளைச் செய்து கொடுப்பார்.

    ஸ்ரீ சங்கர வாத்தியார் அந்தக் கோவிலின் மூலஸ்தான ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கும், அம்பாளுக்கும், அவர்கள் முன்பு இருக்கும் ஐயப்பனின் “யானை”வாகனத்திற்கும், உள்ளே தென்மேற்கு மூலையில் இருக்கும் விநாயகர், வடகிழக்கில் இருக்கும் சிவலிங்கம் அனைவருக்கும் நல்லெண்ணெய் தேய்ப்பார். கோவிலுக்கு உள்ளே தென்பகுதியில் இருக்கும் ஸ்ரீ சங்கிலி பூதத்தார், வடபகுதியில் இருக்கும் பெரிய மாடன் – சின்ன மாடன் போன்ற காவல் தெய்வங்களுக்கும் பளபளவென எண்ணையைத் தடவி அபிஷேகத்திற்குத் தயாராக வைப்பார்.

    amsv1சுவாமி சன்னதிக்கு முன்னால் கோலத்தின் மீது இரண்டு பெரிய வாழை இலைகளைப் போட்டு அதில் பச்சரிசியைப் பரப்பி அதன்மீது நூல் சுற்றிய நன்னீர் நிறைந்த கும்பத்தை வைத்து, அதனுள் மாவிலையையும், தேங்காயையும் வைப்பார். குடுபத்துப் பெரியவர்களிடம்,” மாமா பூஜைய ஆரம்பிக்கலாமா” என்று கேட்பார். “சரி..” என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். உடனே குடுபத்துப் பெரியவரை கும்பத்தின் அருகில் வடக்கு திசையைப் பார்த்து அமர வைத்து “சங்கல்ப” மந்திரம் சொல்லி ஆரம்பிப்பார். ஸ்ரீ ருத்ரம், சமகம், புருஷ சூக்தம் போன்ற மந்திரங்களை அவருடன் அந்த மந்திரங்கள் தெரிந்த குடும்பத்துப் பெரியவர்களும் சேர்ந்து சொல்லுவார்கள். மந்திர ஜபம் முடிந்தபின்பு சுவாமிக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி அபிஷேகம், பாலபிஷேகம், வாசனைத்திரவியப் பொருட்கள் கலந்த நன்னீர் அபிஷேகம், தயிர், தேன், சந்தன அபிஷேகம், இளநீர், பன்னீர் அபிஷேகம் முடித்து, ஜபித்த கும்ப ஜலத்தினால் குலதெய்வத்தைக் குளிர்விப்பர்கள். இறுதியாக “விபூதி” அபிஷேகம் செய்து கற்பூரம் காண்பித்து அபிஷேகத்தைப் பூர்த்தி செய்வார்கள்.

    சுவாமிக்கு எடுத்து வந்திருந்த புதிய வஸ்திரங்களையும், அழகிய பூமாலைகளையும் சுவாமிக்கும், காவல் தெய்வங்களுக்கும் அணிவித்தபின்பு, ” மாமா …அர்ச்சனை பண்ணலாமா…நேவித்யம் தயாராயாச்சா…” என்று சங்கர வாத்தியார் கேட்ப்பார். “ஓ..பேஷாப் பண்ணுங்கோ…” என்று அவனுக்குத் தாத்தா சொல்லுவார். அர்ச்சனை முடிந்து, “பாயசம், சக்கரப் பொங்கல், பொங்கல், சாதம், பானகம், பழம், வெற்றிலை பாக்குடன் நிவேதனம் செய்வார். அடுத்ததாக சுவாமியின் சன்னதியில் வரிசையாக பதினெட்டு இடங்களில் கற்பூரம் ஏற்றி அனைவரும் ஒரே குடும்பமாக, ஒரே குரலாக “சுவாமியே சரணம் ஐயப்பா…எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா ..சீரான்குளம் ஸ்ரீ தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா ….சபரிகிரி வாசனே சரணமையப்பா ..” என்று சரண கோஷம் சொல்லி “ஒன்னாம் திருப்படி சரணம் பொன்னையப்பா..” என்ற படிபாடலைப் பாடி நமஸ்காரம் செய்வார்கள். அதன் பின்பு “பூதநாத சதானந்தா சர்வபூத தயாபரா..ரக்ஷ ரக்ஷ மகாபாகோ சாஸ்த்ரே துப்யம் நமோன்னமாக” என்று சொல்லியும், “லோகவீர்யம் மகாபூஜ்யம் சர்வரக்ஷாஹரம் விபும் …பார்வதி ஹிருதயானந்தம் சாஸ்தாரம் குலதெய்வதம்” (பிரணமாமிகம் என்ற பாடமும் உண்டு) என்ற சுலோகத்தையும் சொல்லி எல்லோரும் சுவாமி சன்னதியில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிப்பர்கள். அதன் பிறகு சுவாமி பிரசாதங்களை சங்கர வாத்தியார் அவனுக்கு தாத்தாவிடம் மந்திரங்கள் சொல்லித் தருவார். தாத்தா அதை மிகுந்த பக்தியுடன் பெற்றுக்கொண்டு தனது சகோதரர்கள், குடும்பத்து உறவுகள் அனைவருக்கும் தருவார். அனைவரும் அதைக் கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். அவனுக்குத் தாத்தா சாஸ்தாவின் விபூதிப் பிரசாதத்தை அவனுக்கும், அவனக்கு அக்கா பாலாவுக்கும், அத்தையின் மகன் ஸ்ரீதருக்கும் நெற்றியில் இடுவார். அதன் பிறகு வாத்தியாருக்கு தக்ஷிணை கொடுப்பார். வாத்தியாருக்கு எங்களையும் நமஸ்காரம் செய்யச் சொல்லித் தானும் குடும்பத்தோடு நமஸ்கரிப்பார்.

    அதன் பிறகு அனைவரும் அந்தக் கோவிலுக்கு உள்ளேயே வரிசையாக அமர்ந்து கொள்வார்கள். அனைவருக்கும் இலையில் பிரசாதம் பரிமாறுவார்கள். அதை அமிர்தமாக அனைவரும் சேர்ந்து உண்பார்கள். அந்தக் கோவிலுக்கு வெளியில் வயல் காட்டில் வேலை செய்து கொண்டிர்ப்பவர்களை அழைத்து அவர்களுக்கும் பிரசாதம் வழங்குவார்கள். கூட வந்த வண்டிக் காரருக்கும் கோவிலுக்குள் அழைத்து பிரசாத உணவைப் பரிமாறுவார்கள். பிரசாதம் சாப்பிட்ட இடத்தைத் தூய்மை செய்த பின்னர் அனைவரும் கோவில் வாசலில் இருக்கும் “கல்யானையின்” அருகில் வந்து நிற்பார்கள். குடும்பத்துக்குப் பெரியவரான அவனுக்குத் “தாத்தா” சுவாமியைப் பிராத்தனை செய்து கொண்டு “தேங்காய் வடல்” போடுவார். அனைவரும் மீண்டும் குலதெய்வத்தை நமஸ்கரித்து விட்டு ஆலமரத்தடியில் இருக்கும் மாட்டு வண்டியில் ஏறி வீட்டிற்குத் திரும்புவார்கள். வீட்டிற்குள் நுழையும் பொழுது மதியம் மூன்று மணி ஆகியிருக்கும்.

    மாட்டுவண்டியில் ஏறும் முன்பாக ஒரு முறை அவனுக்கு ஒன்று விட்ட “ரமணிச் சித்தப்பா” அங்குள்ள குளக்கரையில் அவனது கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்தபடி அங்கிருக்கும் பறவைகளின் அருகில் அழைத்துச் சென்று காட்டினார். அவைகள் பயமில்லாமல் அந்த குளக்கரையில் இருந்த அழகும், நீர்ப்பரப்பில் பறந்து சென்ற அழகும் சித்திரம் போல அவளுள்ளே இருக்கிறது. ரம்யமான இடம். இயற்கை அழகை ரசிப்பதும், போற்றுவதும் கூட அவனுக்குக் குலதெய்வ வழிபாடுதான்.

    இன்று வரை அவன் ஒவ்வொரு வருடமும் அவனுக்கு முன்னோர்கள் காட்டிய வழியில் குடும்பத்தோடு குலதெய்வத்தைச் சென்று வழிபட்டு வருகின்றான். இப்போதெல்லாம் கோவிலுக்குப் போகும் பாதை நன்றாக இருக்கிறது. அவனுக்கு சித்தப்பா குடும்பத்தினரும் தவறாமல் வழிபாட்டு வருகின்றனர். அவனது ஒன்று விட்ட சகோதரன் “ராஜா” வேலையாக “துபாய்” நகரத்தில் இருந்தாலும் குலதெய்வத்திற்கு மறக்காமல் வழிபாடுகள் செய்து வருகிறான். இதுபோலவே சீரான்குளம் ஸ்ரீ தர்மசாஸ்தாவைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் குடும்பம் குடும்பமாகவே வந்து வழிபாடு செய்துவிட்டு மனநிறைவோடு வாழ்ந்து வருகின்றனர். இப்பொழுது சங்கர வாத்தியாரின் மகன்தான் கோவில் பூஜைகளைக் கவனித்து வருகிறார். அவர் வேதம் படித்தவர். C. A . படித்த பண்புள்ள பட்டதாரியும் கூட.

    முன்பு அவனுக்கு அப்பாவும், சிங்கம்பட்டி கணக்கையரின் மகன் V. குருசாமி அவர்களும், K. S. சங்கரசுப்ரமணியன் (அம்பி மாமா) அவர்களின் துணையுடன் இந்தக் கோவில் நிர்வாகத்தைக் கவனித்து வந்தனர்.

    K. S. சங்கரசுப்ரமணியன் (அம்பி மாமா), ரங்கநாத வாத்தியாரின் பெண் திருமதி. பொன்னா, மகாதேவன் , குருசாமி சாரின் மகன் G. வெங்கடராமன், ஸ்ரீ சங்கர வாத்தியார் போன்ற நல்லோர்களின் தொடர்ந்த முயற்சியாலும், சிருங்கேரி ஜகத்குரு அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் பரிபூர்ண கிருபையாலும் “ஜய வருடம் தை மாதம் 25ம் தேதி ஞாயிற்று கிழமை (08.02.2015)” காலை ஒன்பதுக்கு மேல் பத்தரை மணிக்குள் மிதுன லக்னத்தில் பூர்ண புஷ்கலாம்பாள் ஸமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர சுவாமிக்கும், மற்றுமுள்ள பரிவார தேவதைகளுக்கும் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. அவரைக் குலதெய்வமாகக் கொண்ட நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் கலந்து கொண்டனர். தொலைதூரத்தில் இருப்பவர்கள் அவரை மனதாரப் பிராத்தித்துக் கொண்டு தங்களால் இயன்ற கைங்கர்யம் செய்து நமஸ்கரித்தனர். கும்பாபிஷேக சமயத்தில் அவன் ஒரு கவிதை எழுதி குலதெய்வத்தின் திருவடிகளில் பக்தியோடும், மிக்க பணிவோடும் அனைவருக்காகவும் சமர்ப்பித்தான். அதை அவன் இப்பொழுது உங்களோடு பகிர்ந்து கொள்கின்றான்.

    சீராங்குளம் ஸ்ரீ தர்ம சாஸ்தா

    காட்டுப் புறத்திலே கோவில் – “சாஸ்தாasmv3
    காக்கும் குலதெய்வ மாகும்”
    ஏட்டுப் படிப்புகள் வேண்டாம் – ஈசன்
    ஏற்கிற நல்மனம் போதும் !
    வீட்டுக் கவலைகள் போகும் -பக்தி
    வித்துத் தவமர மாகும்
    மூட்டுக் கனலினை உள்ளே – “நான்”
    முற்று மழிந்திடக் காண்பாய் ! (1)

    சீராங் குளமெனும் ஊரில் – அய்யன்
    சீரோ டிருகிறான் பாரில் !
    பாரா திருப்பதே இல்லை – அவன்
    பக்தர்க்குச் சோதனை இல்லை !
    பேரும் புகழுடன் வைப்பான் – குலப்
    பெருமை உயர்ந்திட நிற்பான்
    வாரும் அனைவரு மிங்கே – “சாந்தி
    வளத்தைப் பெருக்கிடு மின்றே !” (2)

    “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே” என்ற முதுமொழிக்கேற்ப மனம், மொழி, வாக்காலும், உடலாலும், இயன்ற பொருளாலும் குலதெய்வத்தைக் கொண்டாடு வோம். வம்சம் வளமையோடும், வல்லமையோடும், தர்மசிந்தனையோடும், நிறைவான மனத்தோடும், ஆரோக்கியத்தோடும் பல்லாண்டுகள் வாழும். அவனுக்கு அதில் ஆழமான நம்பிக்கை உண்டு.

    16.07.2015
    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    படங்கள்  உதவி   “, K.V. அன்னபூர்ணா . நன்றி.

    Share
  • காலம் (14)

    மீ.விசுவநாதன்

    vallamai111-300x150111111

    தொந்தி சரியத் துவண்டு நடக்கின்றாய் !
    பந்தியில் நன்றாய்ப் பசிக்குமேல் வந்ததை
    தொப்பையில் கொட்டுகிறாய் ! தூங்காதே ஏங்குகிறாய் !
    உப்பை விலக்கியே உண். (131) 10.05.2015

    முகநூலில் வாழ்த்தியே மோகத்தை உன்னுள்
    தகதகக்க ஏற்றுவர் ! தாகந் தவிக்க
    மணிக்கணக்காய் வாய்பிளந்து மௌனத்தில் நிற்பாய் !
    பணிமறக்கச் செய்யும் பவிசு. (132) 11.05.2015

    தொத்து வியாதி தொடவே நடுங்குவர் ;
    சொத்து வியாதி சுகமென நித்தமும்
    சுற்றிக் கிடந்தே சுரண்டத் துடிப்பரே !
    பற்றறு , பாடம் படி. (133) 12.05.2015

    நீலகண்டா என்மன நீலவண்ணா என்றுநீ
    ஆலயம் சென்றே அமைதியைத் தேடுறாய் !
    பிஞ்சுக் குழந்தையின் பிள்ளை மொழியிலே
    தஞ்சமே ஆண்டவன் தான். (134) 13.05.2015

    ஒருஊரில் ஒர்ராஜா ! உற்சாக வெள்ளம்
    தெருவெல்லாம் ஓட , தெரிந்தே திருடினான்
    மக்கள் பொருட்களை ; மன்னன் திறமையைத்
    திக்கெலாம் பாராட்டு தே (135) 14.05.2015 வியாழன்

    வாரி வழங்கும் மனதில் நிறைவென்றால்
    சேரியில் வாழ்ந்தாலும் சிந்தனையில் பாரிதான் !
    நாட்டிலே தர்மமும் ஞானமும் ஓங்குவது
    தொட்டில் பழக்கத் துளி. (136 ) 15.05.2015 வெள்ளி

    ஊரில் சிலபேர்கள் ஒன்றாய்த் திருடினர் ;
    பாரில் ஒருவனைப் பக்குவமாய் ஆடாக்கி
    மூன்றுபேர் சேர்ந்து முதல்பலி செய்தனர் !
    தின்றவன் தேடுறான் நீர். (137) 16.05.2015

    சாமியார் பேச்சிலே சத்தியம் உண்டென்று
    தூவிய பூவால் தொழுதானே பாதத்தை !
    சாமியார் கண்களின் சாயம் வெளுத்திட,
    தூவிய பூவில் துயர். (138) 17.05.2015

    எனக்கென்றே எண்ணினால் எல்லாம் சுமைதான் !
    மனக்கூத்தன் ஆசையை மற்றோர் நலத்தில்
    திருப்ப வருமத் திருப்தி சுகமாம் !
    இருப்பதி(ல்) ஈதல் இனிப்பு. (139) 18.05.2015

    பேத்தியும் பேரனும் பேசுகின்ற பேச்செலாம்
    ஆத்திரம் போக்கும் அருமருந்து – ஊத்திய
    பூங்காற்றாய் உட்சென்று பொங்கிவரும் அற்புத
    மூங்கில் துளைவழி மூச்சு. (140) 19.05.2015

    Share
  • “இசையே நீ என்றும் வாழ்வாய் …..”

    மீ.விசுவநாதன்

    msv

    பிறப்பும், வாழ்வும், இறப்பும் இயற்கை. இந்தக் கால ஓட்டத்தில் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து மண்ணில் நல்ல வண்ணம் வாழவேண்டும் என்று நினைவில் நிற்கும்படியான செயல்களைச் செய்து விட்டுத்தான்ச் செல்லவேண்டும். அப்படிச் சென்றிருக்கிறார் “மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்” அவர்கள். அவர் இன்று (14.07.2015) அதிகாலையில் மறந்த செய்தி அறிந்து மனம் வருந்தியது. அடுத்தநொடியே அந்த மேதையின் இசையை என் இதயம் இசைக்கத் துவங்கியது. ஒரு அற்புத இசைக்கலைஞர். ஒன்றா இரண்டா எத்தனையோ மெட்டுக்கள் எப்போதும் நம் இதயத்தைத் தென்றலாக, மயிலிறகாக வருடிக்கொண்டே இருக்கிறது. கவியரசர் கண்ணதாசனும் அவரும் இணைந்து தந்த தமிழ் இசைக் கொடை அனந்தம். அதில் ஒருதுளிதான் “ஸ்ரீ கிருஷ்ணகானம்”. அதில் உள்ள ஒன்பது பாடல்களுமே அமிர்தக்கடல்தான். அந்த இசைத் தொகுப்பில் இருக்கும் “ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ” என்ற பாடலை ஒலிப்பதிவு செய்யும் பொழுது இரவு மணி பனிரெண்டு என்று சொல்வார்கள்.

    “எம்.எஸ் .வி”. அவர்கள் இசையமைக்கும் அழகை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு இரண்டு முறைகள் கிடைத்தன. அதில் ஒன்று நான் நண்பர்களுடன் திருவல்லிக்கேணி வசந்தாமேன்ஷன் விடுதியில் தங்கி இருந்த பொழுது, விடுதியின் சொந்தக்காரர் 1978ம் வருடம் “மே” மாதத்தில் ஒரு படம் எடுக்க பூஜை போட்டார். அந்த நிகழ்ச்சிக்கு படத்தயாரிப்பாளரான விடுதியின் சொந்தக்காரர் என்னை அழைத்திருந்தார். (எனக்கு அதில் விருப்பம் இருந்த காரணத்தால்) ஜெமினி ஸ்டுடியோவில் பூஜையுடன் பாடல் ஒலிப்பதிவு. படத்தின் இயக்குனர் மல்லியம் ராஜகோல்., எம்.எஸ்.வி. இசையமைப்பில் கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டேன். எம்.எஸ்.வி. அவர்கள் மெட்டுச் சொல்ல அதற்கு “இங்கே ஒரு சங்கம் அதில் சங்கம் அடைந்தேனே …அங்கே ஒரு அங்கம் அதில் அங்கம் வகித்தேனே” என்ற அழகான வரிகளைக் கவியரசர் சொல்ல, அதற்குத் தகுந்த இசையமைத்த எம்.எஸ்.வி. அவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்குப் பாடிக் காட்ட, எம்.எஸ்.வி. அவர்களின் உதவியாளர் ஜோசப்கிருஷ்ணா துணையுடன் அந்த மிக இனிமையான பாடல் ஒலிப்பதிவான தருணம் இன்றும் எனக்கு அதே இனிமையுடன் நினைவிருக்கிறது. பணப்பிரச்சனையால் அந்தப் படம் பாதியிலேயே நின்று போனது. ஆனால் அந்தப் பாடல் என் நெஞ்சிலே நின்று விட்டது.

    இரண்டாவது முறை 1999ம் வருடம் “அண்ணாமலை கைதொழ” என்ற தேவார, திருவாசகப் பாடல்களின் இசைத் தொகுப்புக்கு எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைக்கும் பொழுது முழுமையாக இரண்டு தினங்கள் அவருக்கு வெகு அருகிலேயே இருந்து ரசிக்கும் பாக்கியம் பெற்றென். அ.ச.ஞானசம்மந்தன் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பதினேழு பாடல்களுக்கு மெட்டமைத்து, தனது குழுவினருடன் அவர் இசையமைத்த அழகையும், அந்த இசையிலேயே அவரும் மூழ்கிக் குளித்த அவரின் ஆழ்ந்த ஈடுபாட்டையும் நேரில் கண்டு ஆனந்தம் அடைந்தேன்.

    “இலக்கிய சிந்தனை” அமைப்பாளர்களில் ஒருவரான R. A. K. பாரதி அவர்கள் என்னிடம்,” விஸ்வநாதா…தேவார, திருவாசகத்தில் இருந்து சில பாடல்களை அறிஞர் அ.ச.ஞா. தேர்வு செய்திருக்கிறார். அதற்கு “எம்.எஸ்.விஸ்வநாதன்” இசையமையகப் போகிறார். இரண்டு நாட்கள் அதன் ஒலிப்பதிவு மைலாப்பூர், கச்சேரி ரோட்டில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் நடக்கவிருக்கிறது. ஒனக்கு இதிலெல்லாம் ஈடுபாடுண்டே..முடிந்தால் இரண்டு நாட்கள் லீவு போட்டு வாயேன். மிகக் குறைந்த பேர்கள்தான் இருப்பார்கள். அ.ச.ஞானசம்மந்தன் இருப்பார். முடிந்தால் சீதாவையும் (என் மனைவி) கூட்டிக்கொண்டு வா” என்றார். இரண்டு நாட்கள் லீவு போட்டுவிட்டு காலையில் எட்டு மணிக்குச் சென்று இரவு பதினோரு மணிக்குத்தான் திருபினேன்.

    ஒலிப்பதிவுக் கூடத்தின் உள்ளே அ.ச.ஞா. அவர்கள் அமர்ந்திருந்து ஒவ்வொரு தேவார திருவாசகப் பாடலுக்கும் ஒரு சிறு உரை தருவார். அதை எம்.எஸ்.வி.அவர்கள் நுணுக்கமாகக் கேட்டுப் பதிவு செய்வார். ஒலிப்பதிவு முடிந்தவுடன் அ.ச.ஞா. கூறும் அற்புதமான விளக்கங்களைக் கேட்டு ரசிப்பார். அடுத்ததாக எந்தப் பாட்டு யார் பாட வேண்டும் என்று திட்டமிட்டபடி பாட அழைத்திருந்தார். இசையமைக்கும் குழுவினர் ஒரு கூடத்தில் இருப்பார்கள். அவர்களுக்குக் குறிப்புகள் தந்து வழிநடத்துவார். உடனே தனது இடத்திற்கு வந்து பாடகர்களுக்கான பாடலைத்தந்து, அதை எப்படிப் பாடவேண்டும் என்றும் கற்றுத் தருவார். குறித்த காலத்தில் ஒலிப்பதிவை முடித்துவிட்டு, அதை அங்கே உடனேயே போட்டுக் காட்டி ஒப்புதல் பெற்றுக் கொள்வார்.

    “அண்ணாமலை கைதொழ” என்ற அத்தொகுப்பில் அப்பர் தேவாரத்தில் இருந்து “எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே ..சிந்தை உள்ளும் சிரத்துளும் தங்கவே” என்ற பாடலுக்கான இசைக்குறிப்பை (பதிவு செய்த ஒலிநாடாவை) எஸ்.பி.பி. இடம் தந்து,” பாலு..இதக் கேளு..பாடு” என்றார். எஸ்.பி.பி. அதைப் பணிவோடு பெற்றுக்கொண்டு எம்.எஸ்.வி.யையும், அங்கே அமர்ந்திருந்த அ.ச.ஞா. அவர்களையும் வணங்கி விட்டுப் பாடுவதற்காக ஒலிப்பதிவுக் கூடத்திற்குள் சென்று விட்டார். அவர் சென்றவுடன், “பாலுவிடம் ரொம்பப் பணிவும், கிரகிப்புத்தன்மையும் ஜாஸ்த்தி. என்ன சொல்லிக் கொடுகிரோமோ அதை அப்படியே பாடி இசையமைப்பாளர்களின் செல்லப் பிள்ளையாய்டுவான்” என்று அங்கிருந்த அ.ச.ஞா., ப.லஷ்மணன், பாரதி ஆகியோர்களிடம் கூறினார். பாடல்களை எல்லாம் “டிராக்”கில் பாடியவர் எம்.எஸ்.வி.யின் உதவியாளராக இருக்கும் அனந்தநாராயணன். அவர் எம்.எஸ்.வி.யின் செல்லப்பிள்ளை.

    “தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்” என்ற திருவாசகப் பாடலை கிருஷ்ணராஜாவும், ராகவேந்தரின் மகளும் பாடினர். அந்தப் பாடலில் “தேராந்த வீதிப் பெருந்துறையான் நிருனடஞ்செய்” என்று ஒரு வரி வரும். அதற்கு இசை அமைக்கும் பொழுது எம்.எஸ்.வி.யிடம் அ.ச.ஞா. அவர்கள், ” எம்.எஸ்.வி….இந்த இடத்துல இறைவன் தேரில் ஊர்வலம் வருகிறார்…” என்று சொல்லும் பொழுது, ” ஆங்….புரிஞ்சுது..புரிஞ்சுது..என்று சொல்லி “மாலாரி” ராகத்தில் அதை மிக அழகாக அமைத்தார். நாதஸ்வரம், மேளம் என்று அந்த இசை அமர்க்களமாக இருக்கும். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ப.லஷ்மணன் பரவசப்பட்டு எம்.எஸ்.வி.யின் கையைப் பிடித்துப் பாராட்டினார். அந்தப் பாடலைக் கேட்டாலே உடம்பெல்லாம் சிலிர்க்கும்.
    .
    இரண்டாவது நாள் “சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக” என்ற திருவாசக, திருப் பொன்னூசல் பாடலை “சிந்து” பாடினாள். ரொம்பவும் அற்புதமான, மனம் ஊஞ்சலாடுகின்ற வண்ணம் அந்தப் பாடலுக்கு மெல்லிசைமன்னர் இசையமைத்திருப்பார். அந்தப் பாடல் ஒலிபதிவு செய்து முடிக்கும் பொழுது இரவு மணி பதினொன்று. அப்பொழுது அங்கிருப்பவர்களிடம்,” இதப் போல்லத்தான் “ஆயர்பாடி மாளிகையில்” பாட்டையும் நள்ளிரவுல ஒலிபதிவு செய்தோம்” என்றார் எம்.எஸ்.வி.

    அப்பொழுது என்னுடன் என் மனைவியும், என் மைத்துனி “கலாவும்” இருந்தனர். கலா நன்றாகக் கர்நாடக சங்கீதம் கற்றவர். நான் எம்.எஸ்.வி.அவர்களிடம்,” இவங்க என் மச்சினி..கலா ..கர்நாடக சங்கீதம் கற்றவர்” என்று அறிமுகம் செய்து வைத்தேன். உடனே அவர் தன் ஆர்மோனியப் பெட்டியின் மீது தனது வலதுகை விரல்களைப் பரப்பியபடி,” அம்மா..எங்க..ஒரு பாட்டுப் பாடு” என்றார். கலாவும் கொஞ்சம் பாடினாள். ,” அம்மா ஒனக்கு நல்ல சாரீரம் இருக்கு…நிறைய பிராக்டீஸ் பண்ணனும் ..நல்ல வருவே..” என்று வாயார வாழ்த்தினார் அந்த இசை மேதை.

    ஒவ்வொரு மேடையிலும் தன் இசை நிகழ்ச்சியைத் துவங்கும் முன்பு கவிஞர் கண்ணதாசன் எழுதிய “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்” என்ற பாட்டை பாடி முடித்ததும்,” எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்” என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. பாடி முடிப்பார். இன்று நானும் “எங்கள் கண்ணதாசன் புகழோடு எம்.எஸ்.வி.புகழையும் பாடுங்களேன்” என்று அந்த புருஷோத்தம மூங்கில்களைப் பிராத்திக்கின்றேன்..

    Share
  • சிவபிரதோஷம்

    மீ.விசுவநாதன்

     

    asiva

    சித்திரம் வரையும் விரல்களானால்
    சிவனே உன்னைநான் வரைந்திருப்பேன் !
    முத்திரை அறிந்த முனிகளானால்
    மௌன மின்னலாய் ஒளிர்ந்திருப்பேன் !
    நித்திரை வேளை நினைத்திருந்தால்
    நீண்ட வேதனை அழித்திருப்பேன் !
    எத்திரை போட்டு மூடியதோ
    இறைவா என்மனம் திறப்பதில்லை ! 

    நந்தியைப் போலே நானிருந்தால்
    நன்றாய் உன்னிரு தாள்பிடிப்பேன் !
    சிந்திய வார்த்தை இசையானால்
    சிறந்த கவியென சேவிப்பேன் !
    அந்தியில் வானச் சிவப்பானால்
    அழகு நெற்றியில் கண்ணாவேன் !
    எந்திர வாழ்வில் ஓடுவதால்
    ஈசன் பொன்னடி அறிவதில்லை ! 

    ((அறுசீர் விருத்தம் : மா, விளம், காய், மா, விளம், காய்)
    (13.07.2015)

    Share
  • அவன், அது , ஆத்மா (20)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 20

    “நா.பா. என்னும் இலட்சியவாதி”

    அவனுக்கு நா. பார்த்தசாரதியின் (நா.பா) கதைகள் பிடிக்கும். அவர் கதைகளில் இருக்கும் சத்திய வேட்கையும், கவித்துவமான நடையும் அவரது கதைகளைப் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தை அவனுக்குள் ஏற்படுத்தி இருந்தது. அதோடு மணிவண்ணன் என்ற பெயரில் அவர் எழுதிய கவிதைகளிலும் அவனுக்கு நாட்டமிருந்தது. அவரது “தீபம்” பத்திரிகையை நூலகத்தில் படித்திருக்கிறான். சென்னைக்கு வந்த பிறகு தவறாமல் அதை வாங்கிப் படித்தும் வந்தான். அது அவனது இலக்கியப் பசிக்குக் கொஞ்சம் தீனி போட்டு வந்தது.

    1971ம் வருடம் ஏப்ரல் மாதம் கல்லிடைகுறிச்சியில் ஸ்ரீராமநவமி உற்சவ சமயத்தில் ஒரு பட்டிமன்றம் நடந்தது. “ராம நாம யக்ய மண்டலி” என்ற அமைப்பின் மூலமாக “டாபே” மகாதேவன் என்பவரின் முயற்ச்சியால் வீரப்பபுரம் தெருவில் அமைக்கப் பட்டிருந்த பெரிய பந்தலில் வைத்து நடைபெற்ற அந்தப் பட்டிமன்றத்திற்கு நடுவர் நா.பார்த்தசாரதி . பாரதி கலைக்கழகத் தலைவர் பாரதி இரா.சுராஜ், பாரதி காவலர் கே.ராமமூர்த்தி, ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணிக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் “தமிழ் ஐயா” என்று அழைக்கப் பட்ட “லக்ஷ்மிநாராயணன்”, பேராசிரியர் பழனிச்சாமி, திலகர் வித்யாலய உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் கே.ஏ. நீலகண்ட ஐயர் போன்ற தமிழ் அறிஞர்கள் அந்தப் பட்டிமன்றத்தில் தமிழருவியாகக் கொட்டிக் களித்தனர். தம்பியரில் சிறந்தவர் இலக்குவனா, பரதனா, கும்பகர்ணனா என்பதே பட்டிமன்றத் தலைப்பு. ஒவ்வொரு அணியினரும் தங்கள் கருத்தை எடுத்துரைக்கும் பொழுது பார்வையாளர்கள் கைகளைத் தட்டித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொடிருந்தனர். இறுதியில் தீர்ப்புச் சொன்ன நா.பா. அவர்கள்,” இது உங்கள் பட்டிமன்றம். இங்கு பேசியவர்களின் கருத்துக்களை நீங்கள் ரொம்பவும் கைதட்டி ரசித்தீர்கள். அதனால் அதிகமாக “ஐம்பத்தொரு முறை கைதட்டல்கள்” வாங்கிய அணியையே வென்றதாகத் தீர்பளிக்கிறேன்” என்று ஒரு புதிய கோணத்தில் தீர்ப்பு வழங்கினார். அப்பொழுது அவராற்றிய தமிழுரையில் அவன் சொக்கித்தான் போனான். அவரது அந்த மேடைப் பேச்சு அவனைக் காந்தம்போல அவரிடம் ஈர்த்தது. நூலகத்தில் அவரது நாவல்களைத் தேடிப் படித்தான். அவனது பி.யூ.சி. வகுப்புக்கு நா.பா.வின் “பிறந்த மண்” என்ற அற்புதமான நாவலைப் பாடமாக வைத்திருந்தனர். அவன் ரசித்து ரசித்து அந்த நாவலைப் படித்தான். இன்றும் அந்தப் புத்தகத்தை அவன் பத்திரமாக வைத்திருக்கிறான். அந்தப் பழைய புத்தகத்தைப் புரட்டும் பொழுது அதைப் பாடாமாக நடத்தி விளக்கிய ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணிக் கல்லூரியின் பேராசிரியர் ஆழ்வான் சார் நினைவுக்கு வருவார்.

    bank

    “பேங்க் கிருஷ்ணமூர்த்தி மாமா”

    கல்லிடைகுறிச்சியில் நா.பா.வின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணமூர்த்தி. அவர் முதலில் “இந்தோ கமர்ஷியல் பேங்க்”ல் வேலை செய்து, பின்னாளில் அது பஞ்சாப் நேஷனல் பேங்க்கோடு இணைந்ததால் அதிலும் பணியாற்றி ஒய்வு பெற்றவர். அவரை எல்லோரும் பேங்க் கிருஷ்ணமூர்த்தி என்றுதான் அழைப்பார்கள். நல்ல தமிழார்வமும், இலக்கிய ஆர்வமும் கொண்டவர். ஒருமுறை நா.பா. கல்லிடைகுறிச்சிக்கு வந்திருந்த பொழுது பேங்க் கிருஷ்ணமூர்த்தி மாமாவும் , நா.பா.வும் ஒரு மாலை வேளையில் ஆற்றங்கரைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தனர். அவன் சிவன்கோவில் வாய்க்கால் பாலத்தின் திண்டில் அமர்ந்து கொண்டிருந்தான். அப்பொழுது அவர்கள் இருவரும் அவனைக் கடந்து செல்வதைப் பார்த்து அவனுக்கு நா.பா.விடம் பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவன் மெதுவாக அவர்களுக்குப் பின்னால் ஒரு இருபதடி தூரத்தில் அவர்களைத் தொடர்ந்து நடந்தான். அவர்கள் பாதையை விட்டு வயல்வரப்புகள் வழியாக நடக்கத் தொடங்கினர். நா.பா. மேற்குத் தொடர்ச்சி மலையையும் , வயல் வெளிகளையும் தன்னுடைய கைகளைக் காட்டிக் காட்டிப் பேசியபடியே சென்று கொண்டிருந்தார். ஆயிரங்கால் மண்டபம் கடந்து, ஆற்றங்கரைக்குள் இறங்கி அங்கிருக்கும் சிறிய சிவன் பாறைக்கு எதிரில் பரந்திருந்த ஆற்று மணலில் அமர்ந்து கொண்டனர். அப்பொழுதெல்லாம் ஆற்றில் நிறைய மணல் இருக்கும். மணற்கொள்ளை அவ்வளாவாக நடைபெறாத காலம். அவன் அந்தச் சிவன் பாறையில் ஏறி அமர்ந்து கொண்டு, அவர்களைப் பார்த்தும், ஆற்று நீரைப் பார்த்துக் கொண்டும் சிறிது நேரம் இருந்தான். பிறகு மெதுவாக எழுந்து அவர்களின் அருகில் சென்றான். அவன் அவர்கள் பக்கமாக வருவதைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி மாமா,” என்ன கண்ணா …இங்கவா..இவரைத் தெரியுமோ” என்றார். அவன் அவரது கதைகளைப் படித்திருக்கிறேன் என்றும், நேரில் பார்த்ததில்லை என்றும் சொன்னான். கிருஷ்ணமூர்த்தி மாமா நா.பா.விடம்,” இவன் பேர் விஸ்வநாதன்…கவிதைகள் எழுதுவான்…இலக்கியத்தில் நல்ல ஆர்வமுண்டு என்றார். “அப்படியா” என்று என்னைப் பார்த்து,” நிறையப் படியுங்கள்..எழுத்து தானாக வரும்” என்று நா.பா. அவனை வாழ்த்தினார். அவனுக்கு உள்ளத்தில் ஏக குஷி. சில மாதங்கள் சென்று கலைமகள் பத்திரிகையில் “நீல நயனங்கள்” என்றொரு நாவலை நா.பா. எழுதினர். அதில் அந்தக் கல்லிடைகுறிச்சியின் அழகையும், வயல்வெளிகளின் பசுமையையும், தாமிரபரணியின் குளிர்ச்சியையும் பதிவு செய்திருப்பார். நா.பா.வின் கம்பீரமான தோற்றமும், நிமிர்ந்தபடியே கைகளை வீசிக்கொண்டு நடக்கும் அழகும், நல்ல தமிழ்ப் பேச்சும் அவனுக்கு அவர்மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.

    ஒருசமயம் அவனுக்கு நண்பரும், சிறந்த எழுத்தாளரும் , கவிஞருமான சுப்ரபாலன் அவர்களின் அசோக்நகர் இல்லத்தில் 15.08.1987ம் வருடம் “இந்திய சுதந்திர தினத்தன்று” பாரதி கலைகழகம் சார்பில் கவியரங்கம் நடைபெற்றது. நா.பா.தான் தலைமை தாங்கினார். கவிதைக்கு “தேசம் எனது தேசம்” என்று தலைப்புத் தந்திருந்தனர். கவிமாமணி தமிழழகன், கவிமாமணி நா.சீ.வரதராஜன், கவிமாமணி தேவநாராயணன், கவிமாமணி பஞ்சநதீசன் போன்ற மூத்த கவிஞர்களுடன் நிறையக் கவிஞர்கள் கலந்து கொண்டு நல்ல கவிதைகளைப் படைத்தனர். அவனும் அன்று ஒரு கவிதையைப் படித்தான். அவன் கவிதையைப் படித்து முடித்தவுடன்,”உங்களது கவிதையில் ஒழுங்கும், இன்றைய நடைமுறையின் கோபமும் இருக்கிறது. இன்னும் இதுபோல் நிறைய ஆழமாக சிந்தித்து எழுதுங்கள்” என்று நா.பா. பாராட்டினார். அதை அவன் ஒரு மோதிரக் குட்டாகக் கொண்டான். கவிமாமணி தேவநாராயணன் அவனது கவிதையைப் பாராட்டியதோடு, சுதந்திர தினத்தன்று தியாகிகளின் பெருமையைச் சொல்ல வேண்டும் என்ற அவரது கருத்தைச் சொன்னார். அடுத்ததாக தேவநாராயணன் அவரது கவிதையைப் படிக்க அழைக்கப்பட்டார். அருமையான கவிதையை அவர் படித்து, இசைத்தார். அதில் பாரத தேசம் புண்ணிய தேசம் என்ற தனது கருத்தை வலியுறித்தி இருந்தார். அப்பொழுது நா.பா. அவர்கள் , “நமது பாரதம் மட்டும் புண்ணிய தேசமில்லை. எல்லா தேசமுமே புண்ணிய தேசந்தான். நமது நாட்டில் கள்ளப் பணத்தைக் கொண்டு “சுவிஸ்வங்கி”யில் போடுபவர்கள் இல்லையா..நேர்மைக் குறைவான அரசியல் வாதிகள் இல்லையா…அதேபோல மற்ற தேசங்களில் சிறந்த மனிதர்கள் இல்லையா, இலக்கியம் இல்லையா….அதனால் வாழுகின்ற மனிதர்களின் குணநலன்களைக் கொண்டுதான் ஒரு தேசத்தை நாம் கணிக்க வேண்டும்” என்றார். அப்பொழுது கவிமாமணி தேவநாராயணன் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்திப் பேசினார். ஒரு சிறிய இலக்கியச் சர்ச்சையே அப்பொழுது அங்கு நடந்தது. அதெல்லாம் அவனுக்கு ஒரு அனுபவமாகப் பட்டது. கவிமாமணி தேவநாராயணனுக்கு அவன்மீது ஒரு தனி வாஞ்சையே உண்டு. அந்தக் கவியரங்கத்திற்கு அவனது மனைவியும், எழுத்தாளருமான “சீதாலக்ஷ்மி விஷ்வநாத்”தும் வந்திருதார். அவரும் நா.பா.வின் தீவிர ரசிகை. அன்று அவன் படித்த அந்தக் கவிதையை நீங்களும் இங்கே படிக்கப் பதிவு செய்கிறான்.

    “தேசம் எனது தேசம்”

    “இவரொரு இந்தியர் ! தீவிரத் தியாகிதான் !
    சிவனென இருக்காமல் சிறைக்கதவுக் குள்ளும்தன்
    இந்திய மண்ணிற்காய் சிந்திய ரத்தமிவர்
    பிந்திய பிறப்புக்குத் தெரியவா போகிறது ?
    மனதினது தூய்மையை மாசுபடா திருக்கவே
    தினமுமே தாய்மண்ணைத் தியானமாய்ச் செய்துவந்த
    உன்னதத் தியாகிகளின் உணர்ச்சிமிகு வாழ்க்கையை
    இன்றைய இளைஞனின் இதயந்தான் அறியுமா?

    தாமிரப் பட்டயம் தருவார்கள் எனஎண்ணியா
    ஆயிர மாயிரமாய் அந்நிய உடைமைகளைத்
    தீயிலே கருக்கிநம் விடுதலை வேள்வியை
    தீவிரப் படுத்தினர் ! திரண்டதன் செல்வங்கள்
    அனைத்தையும் இந்ததன் அற்புத நாட்டினது
    கனவுகள் நனவாகக் கற்பூரங் காட்டினர் !

    ஏழ்மையின் கொடுமையில் இவரது குடும்பங்கள்
    கூழுக்கு அலைகிற கொடுமைகள் பெற்றினும்
    பாரதப் பரம்பரை பண்புடன் வாழவே
    வீரவிடு தலையைத்தான் வேண்டியே பெற்றனர்!

    பாரத பூமியோ பசுமையில் செழித்தநல்
    நீர்வளம் மிகுந்ததோர் நித்திய சுமங்கலி !
    ஞானத்தில் ஓங்கிய ஞானியர் உள்மனம்
    நாடிடும் ஈசனை நமக்குள்ளே காட்டிடும்
    பக்தியில் மிகுந்தநற் பண்புள்ள நாடிது !
    எத்தனை வேற்றுமை இருந்திட்ட போதிலும்
    ஒருமுகமாய் எல்லோரும் ஒருகுலமாய் நின்றுகொண்டு
    வருவதனைத் தன்னாட்டின் வளமான மேன்மைக்காய்
    சூழ்சிகளை விரட்டியும் சோதனையே வந்தாலும்
    வாழ்த்தியும் வணங்கியும் “வந்தேமா தரத்தினை”
    ஓதியும் தரமுடனே ஒளிமிகுந்த உளத்துடனே
    சாதிமத பேதமின்றி சரிநிகராய் வாழ்ந்தனர் !

    இரவுபகல் பாராமல் செய்துவந்த தியாகத்தால்
    வரவெனநம் சுதந்திரம் வந்ததே இப்படித்தான்!
    தியாகத்தின் பரம்பரை திரும்பியே பார்க்கையில்
    மாயமாய்ப் போனதே மண்ணினது பக்திதான்!

    ஊழலே இன்றெங்கும் ஊர்வலமாய்ச் சுற்றியே
    வாழலாம் வாவெனவே வாசலில் கூவுதே !
    தியாகியின் பிள்ளையே திருடரின் தலைவானாய்ப்
    போகிறான் இன்றிந்தப் புண்ணியமாம் பூமியிலே !

    பொய்களும் கரும்பணப் புழக்கமும் கொடுமைக்
    கைகளாய் நீண்டதோர் கயமைமிகு நாடென
    மாறியே போனதை மறைக்கவா சொல்வது?
    காறியே உமிழாதோ கண்ணிய நல்மனங்கள்!

    பத்திரிக்கை கூடத்தான் பகல்வேடம் போடுதய்யா !
    இத்தனையும் மீறியிங்கே எவனோதான் துணிந்தெழுந்து
    உண்மையை எழுதினாலோ உதைபடுவார் என்கிற
    கண்ணியங் குறைந்தகீழ் கயமையாய்ப் போனதே !

    பிஞ்சான மனங்களைப் பிரியமாய்க் கவர்ந்தே
    நஞ்சினைப் பாய்ச்சும் கல்வியின் திட்டங்கள்!
    நுனிப்புல்லை மேய்கின்ற நூலாளர் கூட்டத்தைப்
    பணியிலே அமர்த்திய பாபத்தின் சுமைகளுக்கு
    இக்கால இளைஞர்தான் எதிகாலம் தவித்திடுவார் !
    தக்கதோர் கல்வியைத் தரும்சூழல் நிலைஇல்லை!
    நிறைகளைக் காணாமல் நீசரின் செயல்களால்
    குறையேதான் கண்டானிக் குருடனென எவறென்னைப்
    பழித்தாலும் எனக்கொரு பாதகமும் இல்லையடா !
    சுழித்தோடும் காலத்தின் சூக்குமத்தை கவிதையாய்ப்
    படிக்கின்ற பேறுபெற்றேன்! பளிச்செனச் சொல்லவே
    பிடித்தஎன் பேனாவோர் பேரமும் பேசாது!

    தேசம் எனது தேசம் -அதில்
    நாசம் விளைதல் நன்றோ? – யாரும்
    கூசும் செய்கை கூடிப் போனால்
    தேசம் என்ன தேசம்?”

    அந்தக் கவியரங்கம் முடிந்து அனைவருக்கும் வயிறார உணவு பரிமாறப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்த அனைவரிடமும் நா.பா. மிகுந்த வாஞ்சையோடு பேசிகொண்டிருந்தார். அவனிடம்,” நீங்கள் எங்கே வேலை பார்க்கிறீர்கள்?” என்றார். “காட்பரீஸ் கம்பெனியில்” என்றான். உடனே அவர்,” உங்களுக்கு ஆதிலக்ஷ்மணனைத் தெரியுமா” என்றார். “தெரியும். அவர்தான் எனக்கு வேலை வாங்கித்தந்தார்” என்றான். ஆதிலக்ஷ்மணன் அந்தக் கம்பெனியில் உயர் அதிகாரியாகப் பணியில் இருந்தவர். நா.பா.வின் நெருங்கிய நண்பர். பம்பாய்த் தமிழ்ச் சங்கத்திற்கும் தலைவராக இருந்து, தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், நாடகக் கலைஞர்களையும், பேச்சாளர்களையும் தமிழ்ச் சங்கத்திற்கு அழைத்துப் பெருமைப் படுத்தியவர். அவரைப் பற்றி அவன் தனியாகவே இங்கே ஒரு அத்தியாயத்தில் பதிவு செய்ய இருக்கிறான்.

    09.07.2015 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

     படம்  உதவி   “, கிச்சாப்பூ” . நன்றி.

    Share
  • காலம் (13)

     

    மீ.விசுவநாதன்

    vallamai111-300x15011111

     

    மலையில், இலையில், மணிக்கிளிப் பொந்தில்,
    அலைகடல் மீதில், அழகுச் சிலையென
    அத்தனை மீதுமே ஆதவன் பட்டாலும்
    சுத்தமே என்றும் சுடர். (121) 30.04.2015

    குற்றாலம் என்றால் குளிரருவி எண்ணந்தான்
    முற்றாக உள்ளிருக்கும் ! மோனத்தில் முற்றாய்க்
    கலந்தால் , “கருணையே” கண்ணொளியாய் நன்கு
    மலர்ந்து சிரிக்கும் மலர். (122) 01.05.2015

    ஒவ்வொரு நாளுமே ஓரோர் அனுபவம்
    கவ்விப் பிடித்துக் கலக்குவதில் ஜிவ்வென்றே
    உள்ளுள்ள தேன்கூட்டில் ஓர்துளி சிந்துவதால்
    அள்ளிக் களிக்கு(ம்) அகம். (123) 02.05.2015

    குழந்தையின் கண்களில் கோகுலக் கண்ணன்
    கழலினைக் காண்கிறேன் ! காதல் பழகி
    பகையை மறக்கிறேன் ! பாப்பா முகத்து
    நகையே புதுமை நகை. (124) 03.05.2015

    பேச்சில், சிரிப்பில், பிரிய நடிப்பிலே,
    கூச்சமே இல்லாக் குலவலில் சீச்சீ
    இவர்போல் கபடதாரி எங்கடா சொல்லு ?
    எவர்க்குள்ளும் கொஞ்ச(ம்) இவர். (125) 04.05.2015

    போதையில் வீழ்ந்து புரண்டு கிடக்கிறான்
    பாதையில் ! எப்படியோ பாரிலே “மேதைகளும்,
    ஞானியரும், நண்பருடன் நானும்” புகழ்போதை
    மானிடத் தோற்றத்து மாசு. (126) 05.05.2015

    இருக்கின்ற நாள்வரை எல்லோர்க்கும் நன்மை
    பெருக்கிடும் வார்த்தையே பேசி வருவோம் ;
    செருக்கின்றி பண்பும் சிறப்புமாய்ச் செல்ல
    பெருமாள் கருணை பெரிது (127) 06.05.2015

    மலரும் தினத்தில் மனதின் சிறுமை
    உலரும் படியாய் ஒளியோன் அருள்க !
    பலரும் இணைந்து பலமாய் இருந்தால்
    புலரும் உலகே புதுசு. (128) 07.05.2015

    தேர்வில் மதிப்பெண் திகட்டிடப் பெற்றாலும்
    ஊரிலே கல்லூரி ஒன்றிலும் சேர
    முடியாதாம் ! சாதிகள் முட்டி முனகும்
    பிடிவாதப் போக்கே பிழைப்பு. (129) 08.05.2015

    சிறகை விரித்தேன் சிறுநொடிப் போதில்
    திறந்த வெளியில் திரிந்து பறந்தேன் !
    அடடா ! அடடா ! அடைமழை , வெய்யில்
    இடையிலே தானே இதம். (130) 09.05.2015

    Share
  • அவன், அது , ஆத்மா (19)

    ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 19

    “பசு தேவதை”

    அவனுக்கு அப்பா வழித் தாத்தா விஸ்வநாதையர் இரவுச் சாப்பாட்டுக்குப் பின்பு வீட்டு வாசலில் ஒரு கயிற்றுக்கட்டிலை போட்டு அமர்ந்து கொள்வார். அவனைத் தன்பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டு சின்னச் சின்னக் கதைகள் சொல்வார். சிலநேரங்களில் அவன் அந்தக் கட்டிலில் இரவு ஆகாயத்தைப் பார்த்தபடி படுத்துக் கொண்டே கதைகளைக் கேட்பான். அவனுக்கு தைரியம் வரவேண்டும் என்பதற்காக அவனைத் தனியாக பக்கத்துத் தெருவான “பாட்டநயினார் புர”த்தின் கடேசிவரைப் ஓடிப் போய்வரச் சொல்லி, அவன் போவதையே பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி ஒருநாள் இரவில் அவன் ஓடிச் சென்று ராமச்சந்திரபுரம் தெருவின் முதல் வீடான நீலகண்டன் சத்திரத்தின் வாசலில் படுத்திருந்த ஒரு கருப்புநிற பசு மாட்டைப் பார்த்து பயந்துபோய்த் தலைதெறிக்கத் தாத்தாவை நோக்கி ஓடியே வந்தான். அப்பொழுதெல்லாம் தெருவிளக்குகள் அதிகம் இல்லாத காலம். மூச்சிரைக்க வந்து நின்ற அவனை அவனது தாத்தா அணைத்துக் கொண்டு,” ஏண்டா கண்ணா ….இப்படி மூச்சிரைக்க ஓடிவரே…” என்றார். “தாத்தா..அங்க ஒரு கருப்புப் பசுமாடு படுத்துண்டிருக்கு…அதப் பாத்தா எனக்கு பயமா இருந்துது..” என்றான். அதற்கு,” இதுக்குப் போயி இப்படி பயப்படறே…வா எங்கூட” என்று அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு அந்த மாடு படுத்துக் கொண்டிருந்த இடத்தின் அருகில் சென்று அதைத் தடவிக் கொடுத்தார். நல்ல இருட்டு வேளை. அவனுக்கு உள்ளூர பயமாகவே இருந்தது. அவனது பயத்தைப் போக்க,” இங்கவா…நீயும் இதோட கழுத்தத் தடவிகொடு..ஒண்ணும் செய்யாது” என்று அவனது வலது கையைப் பிடித்து அந்த பசு மாட்டின் கழுத்தில் தடவிக்கொடுக்கச் சொன்னார். அவனும் மெதுவாகத் தடவிக் கொடுத்தான். அது தன் தலையைத் தூக்கி நன்றாகத் தன் கழுத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. “நீ இத இருட்டுல பாத்துட்டு கருப்புப் பசுமாடுன்னு சொன்னாய்…இப்பநன்னாப் பாரு…இது கருப்பா…இல்லைடா..இது சந்தனநிறம். நம்மத்துக்குக் காலைல வருமே அதே பசுமாடுதான்…இத “கோமதி”ன்னு கூப்பிடுவோம்…” என்று அவனுக்குச் சொல்லிக் கொண்டே மீண்டும் வீட்டு வாசலில் போட்டிருந்த காயிற்றுக் கட்டிலின் அமர்ந்து கொண்டார். அவனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, “பசுமாடு தேவதை. அதோட ஒடம்புல எல்லா தேவதைகளும் இருக்கறதாச் சொல்லுவா.” என்றார். “ஏன் பசுமாட்டோட நெத்தியையும், பின்புறத்தையும் தொட்டுக் கண்ணுல ஒத்திகாரா?” என்ற அவனது கேள்விக்கு அவர் அழகாக ஒவ்வொரு அங்கத்திலும் என்னென்ன தேவதைகள் இருக்கிறார்கள் என்று சொன்னது இன்றும் அவனுக்கு நினைவிருக்கிறது.

    “பசுவோட தலைல சிவனும், நடு நெத்தில பார்வதியும்,..இரண்டு கொம்போட அடில பிரும்மாவும், விஷ்ணுவும் இருக்கா..ரெண்டு கொம்பு நுனிலையும் கோதாவரி போன்ற நதிகள்லாம் இருக்கு..ரெண்டு கண்ணும் சூரிய சந்திரா, ரெண்டு காதுலயும் அஸ்வினி தேவர்கள் இருக்கா …யமன் இதயத்துல இருக்கார்…வருணன் நாக்குலயும், வாயு பல்லிலையும், இந்திரன் கழுத்திலையும் இருக்கார்.. பசுவோட மூத்திரத்தில கங்கையும், அது போடற சாணில யமுனையும் இருக்கு…வயத்துல பூமாதேவியும், பசுவோட பின்புறத்துல லெஷ்மிதேவியும் இருக்கா…அது மட்டும் இல்ல..இன்னும் எல்லா தேவர்களும் பசுவாட உடம்பு பூராவும் இருக்கா..அதனாலதான் பசுவ நாம தேவதைன்னு சொல்லறோம். கன்னுக் குட்டி பால் குடிச்ச அப்பறம்தான் நாம பால் கறக்கணும். அது குடிக்காம நாம கறந்து குடிச்சா மகா பாவம்….. அதுக்கு ஆத்திக் கீரை, அருகம்புல் எல்லாம் கொடுத்தாப் புண்ணியம்…நம்மாத்துல வாசல்ல வருமே அந்த பசுமாட்டுக்கு கோமதின்னு பேரு. நீ நாளைக்கு அது வரும்போது அத “கோமதின்னு” கூப்புடு அது ஒன்னத் திரும்பிப்பாக்கும்…அதத் தொட்டுக் கண்ணுல ஒத்திண்டு பிரதக்ஷிணம் பண்ணு…நீ ரொம்ப நன்னா இருப்பாய்..” இப்படி அவனுக்கு தாத்தா சொன்னது அவரது குரலிலேயே இன்றும் அவனது காதுகளில் ஒலிக்கிறது. பசுக்களைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குத் தாத்தாவின் நினைவு வரும். இப்பொழுதும் அவனுக்கு முடியும் பொழுதெல்லாம் ஆத்திக்கீரையும், கொஞ்சம் வெல்லமும் எடுத்து, மனதில் பிராத்தனை செய்துகொண்டே பசுவுக்குக் கொடுக்கிறான். அவள் “அவனது” மனக்கவலைக்கு மருந்தாகிறாள். சாந்தி தருகிறாள்.

    “கோலாட்டப் பல்லக்கு”

    aaaஅவனுக்கு நினைவு தெரிந்து கோலாட்டப் பல்லக்கை அவன் முதலில் பார்த்தது தொந்திவிளாகம் தெரு நீங்கலாக மற்ற தெருக்காரப் பெண்களும், சிறுமியர்களும் சேர்ந்து நடத்தியதுதான். அதனை முறைப்படுத்தியவர்கள் “வராகசீதாலட்சுமி” என்ற “சிண்டா” மாமியும், (எம்.ஆர்.ஆதிவராகன் மாமாவின் தாயார்), “வள்ளியம்மாள்” என்ற “பிசுக்குட்டி” மாமியும் (கே.எஸ்.சங்கரலிங்கம் ஐயரின் மனைவி) என்று அவனுக்கு அக்கா பாலா சொன்னாள். கிராமத்துப் பெரியவர்கள் எல்லோரும் அதற்கு நிதி உதவி செய்வார்கள். “கண்ணா… சிண்டாமாமி இருக்கும் போது, ஒரு முறை யானை மீது பசுவன் பிள்ளை அமர்ந்து, மடியில் “பசுவும், கன்றையும்” வைத்துக் கொண்டு கம்பீரமாக நடந்த கோலாட்டப் பல்லக்கு அற்புதம்டா” என்று அவனுக்கு அக்கா ரொம்பவும் பூரிப்போடு சொன்னாள். தொந்திவிளாகம் தெருக் காரர்கள் தனியாகக் கோலாட்டப் பல்லக்கு நடத்துவார்கள். அதுவும் சிறப்பாக இருக்கும்.

    மழையை வேண்டிப் பிரார்த்தனை செய்து “தீபாவளி அம்மாவசை” அன்று வயல்காட்டிற்குச் சென்றுakicha மண் எடுத்து வருவார்கள். அந்த மண்ணில் ஒரு பசுவும், கன்றும் செய்து பூஜை செய்வார்கள். கோலாட்டப் பல்லக்கு விழாவுக்கு ஒரு நல்ல நாளும் குறிப்பார்கள். கிராமத்தில் உள்ள சிறுமியர்கள் முதல், வயதானவர்கள் வரை ஒவ்வொரு குழுவாக அமைத்துக் கொள்வார்கள். மண்ணெடுத்துச் செய்து பூஜை செய்துவருகின்ற “பசுவும் கன்றும்” இருக்கும் இடத்தில் தினமும் நல்ல நல்ல பாடல்களால் கோலாட்டம் அடித்து மகிழ்வார்கள். அதைப் பார்க்கவே ரொம்பவும் சந்தோஷமாக இருக்கும். அதன் பிறகு ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து கிராமத்தில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் சென்று கோலாட்டம் அடித்துப் பண்டிகைக்காக பணம் வசூல் செய்வார்கள். அதில் ஒரு பாட்டு மிகவும் முக்கியமானது. அதன் அழகான வரிகள் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதை யார் எழுதினார்கள் என்பது தெரியவில்லை. தலைமுறையாகப் பாடப் பட்டு வருகிற அந்தப் பாடலே “கோலாட்டப் பல்லக்கு”ப் பாட்டு என்றுதான் சொல்லுவார்கள். அந்தப் பாடலை அவனுக்கு நண்பன் “கிச்சாபூ” ( கிருஷ்ணன் என்ற பெயர்) பாட்டுடீச்சர் திருமதி. லலிதா அவர்களிடம் கேட்டு வாங்கி அவனுக்குச் சொன்னான். மேலும் இப்பொழுது நடக்கும் கோலாட்டப் பல்லாக்கிற்கு வயற்காட்டில் மண்எடுத்து, பசுவனை அதே வயற்காட்டில் கொண்டு வைக்கும் வாய்ப்பும் தனக்குக் கிடைகிறது என்றும் அவனிடம் “கிச்சாப்பூ” சொல்லி மகிழ்ந்தான்.

    “கோலேனாக் கோலே
    பாலா லீலானாக் கோலே
    பாலவிலோச்சன லீலா விலோசன
    பால பிரபஞ்ச கோலே ….

    பசுவா பசுவையா
    உனக்குப் பணம்தர யாருமில்லை
    இன்றைக்கு வாவென்று நாளைக்கு வாவென்று
    ஏய்கிறாளே பசுவா..

    மழை ரொம்பப் பெய்யவேண்டும் – சுவாமி
    குளங்கள் பெருக வேண்டும்
    பூமியில் போட்டதெல்லாம்
    பொன்னாய் விளைய வேண்டும்
    பொதி ரொம்பக் காணவேண்டும்…

    எட்டடிக் குச்சுக் குள்ளே – சுவாமி
    எத்தனை நாளிருப்பீர்
    மச்சு வீடு கட்டித் தாரேன்
    குச்சு வீடு காட்டித் தாரேன் –சுவாமி
    மலையாளம் போய்வாரும்…. (கோலேனாக் கோலே)

    ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வட்டமாக நின்றும், குதித்துக் குதித்தும் அவர்கள் அடிக்கும் கோலாட்டம் இசையோடு கேட்கவே சுகமாக இருக்கும்.

    “ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் இருந்த தியாகி டாக்டர் லக்ஷ்மி அம்மாள் வீட்டில் கோலாட்டம் அடிக்கும் குழந்தைகளை வரவழைத்து கோலாட்டம் அடிக்கச் சொல்லி மிகவும் ரசித்து ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய்கள் தருவார்கள் (அந்தக் காலத்தில் அது பெரிய தொகை) என்று அவனுக்கு அக்கா பாலா சொன்னாள். மேலும் கிராமத்தை விட்டு வெளியில் மெயின் ரோட்டில் உள்ள நடேசையர் வீட்டிலும் இரண்டு இடங்களில் கோலாட்டம் அடிக்கச் சொல்லி பணம் தருவார்கள் என்றும், குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்காக ஏதேனும் பக்ஷணமும் தருவார்கள் என்றும் அவனுக்கு அக்கா சொன்னாள்.

    adeஇப்படிப் பாடிப் பிரித்த பணத்தில் கோலாட்டப் பல்லக்கு விழா நடத்துவார்கள். ஒரு பிரும்மசாரிப் பையனுக்குப் புதிய வேஷ்டி, அங்க வஸ்திரம் தந்து, மிக அழகாகப் பூக்களால் அலங்கரிக்கப் பட்ட வண்டியில் அந்தப் பையனை அமரச் செய்து , அவனது மடியில் “பசுவும் கன்றும்” பொம்மையைத் தருவார்கள். கோலாட்டமடிக்கும் பெண்கள் வயதிற்கு ஏற்றார்ப்போலக் குழுக்களாக , வட்டமாக நின்று கொள்வார்கள். மாலையில் நல்ல நேரத்தில் பல்லக்கு ஊர்வலம் புறப்படும். வண்ண விளக்குகள் மின்ன, நாதஸ்வர மேளத்துடன், கோலாட்டப் பாடலும் காற்றில் மிதந்து வந்து அனைவரது காதுகளிலும் ஆனந்தக் களிப்பூட்டும். அதை அவன் நன்றாக அனுபவித்திருக்கிறான். அத்தனை தெருக்களுக்கும் அந்த ஊர்வலம் செல்லும். நல்ல நல்ல பாடல்களை தேர்வு செய்து பாடுவார்கள். கிராமத்துப் பெரியோர்களும், வாலிபர்களும் ஊர்வலத்தின் இரண்டு பக்கமும் ரசித்தபடி வருவார்கள். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி.

    ஊர்வலம் முடிந்து புறப்பட்ட இடத்திற்கு வந்த பின்பு “பசுவனை” அலங்கார வண்டியில் இருந்து இறக்கிவைத்து அனைவரும் கோலாட்டம் அடித்துக் கொண்டே, அந்த “பசுவையும், கன்றையும்” எந்த வயற்காட்டில் இருந்து மண்எடுத்துச் செய் தார்களோ அதே வயற்காட்டில் கொண்டு வைத்து விட்டு வருவார்கள். அப்படி வரும் பொழுதே இடியும் மின்னலுமாக மழை கொட்டும். மழையில் நனைத்தபடியே அனைவரும் வருவார்கள். இந்த அனுபவத்தை அவன் நிறைய முறை அனுபவித்திருக்கிறான். கோலாட்டப் பல்லக்கில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் ஒரு பெரிய வீட்டில் வைத்து “இனிப்பு, தாளகம், பொங்கல், வடகம்” என்று அன்னதானம் நடைபெறும். அனைவரும் வயிறாரச் சாப்பிடுவார்கள்.

    akol

    இப்பொழுதும் அந்த அருமையான கோலாட்டப் பல்லக்கு விழாவை முன் நின்று நடத்தி வருகிறார் திருமதி கிருஷ்ணவேணி அம்மாள் (வேணி மாமி என்றால்தான் அனைவருக்கும் தெரியும்). அவர் கே.எஸ்.காசிவிஸ்வநாத ஐயரின் மனைவி. கிராமத்துக் குழந்தைகள், பெரியோர்கள் என்று அனைவரிடமும் மிகவும் வாஞ்சையாக இருந்து இந்த விழாவை, கிராம மக்களின் முழு ஆதரவோடு தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இது தவிர பெண்களுக்கும், சிறுமியர்க்கும் பாடல்கள், ஸ்லோகங்கள் என்று கற்றுத் தருகிறார்கள். புதிய பாடல்களுக்கு நல்ல இசையமைத்துப் பாடக்கூடிய திறமை வாய்ந்த திருமதி. லலிதா அவர்களின் பங்கை கிராமமே பாராட்டும். தொந்திவிளாகம் தெருவில் இருந்த ஸ்ரீ ரங்கநாத வாத்தியாரின் மனைவிதான் (ரெங்கவாத்தியாராத்து மாமி) அந்தத் தெருவின் கோலாட்டப் பல்லாக்கிற்க்கு “பசுவும் கன்றும் ” பொம்மையைச் செய்வார்கள். நல்ல குரலில் பாடவும் செய்வார்கள். அந்தத் தெருவில் நடக்கும் பல்லாக்கு விழாவும் வெகு விமர்சையாக இருக்கும். அந்தக் கிராமத்தில் நல்ல ஒற்றுமை உண்டு. மற்ற கிராமங்களுக்கு அது இன்றும் ஒரு முன் மாதிரியாகத்தான் திகழ்கிறது. அவன் அந்தத் தெருவில்தான் பிறந்தான் என்பதில் அவனுக்குத் தனிப் பெருமை உண்டு.

    எல்லோருக்கும் பெய்யும் மழையாக இந்தக் கோலாட்டப் பல்லாக்கு உற்சவம் நடைபெருகிறது. முன்காலப் பெரியோர்கள் கலாசாரத்தை எப்படிப் பாதுகாத்து வந்தார்கள் என்பதற்கு அவனது கிராமம் ஒரு நல்ல உதாரணம்.

    Share
  • காலம் (12)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x15011111
    நினைவுச் சுமைகள் நிறைந்த மனமே
    வினையைச் சுமக்கும் ; விரைந்து முனைந்து
    எதையும் மறக்கும் இதயம் இருந்தால்
    அதுவேதான் முக்தி அறி. . (111) 20.04.2015

    என்ன குறையுள்ளே எல்லாமே ஆனந்தம் !
    தன்னை அறிந்த தனிஒருவன் என்றும்
    வெளியே திரியாதான் ! வெந்த பொருளாய்
    எளியோனாய்க் காண்பா(ன்) எதிர். (112) 21.04.2015

    புகழும் ஒருவித போதை விஷமே !
    இகழும் செயலுள் எளிதாய் நுழைந்து
    அதனுள் எதையோ அசைபோட்டுப் பார்க்கும்
    அதனால் அதனை அழி. (113) 22.04.2015

    கோபத்தில் மேனி கொதிக்கிறது ! வீணான
    வாதப் பிரதிவாதம் வம்பெனவே ஏதேதோ
    பேதம் வளர்ந்து பிரிகிறது நெஞ்சங்கள் !
    சேதமிலாச் சொல்லே சிறப்பு. (114) 23.04.2015

    புல்லருக்கும் கண்ணால் புரிந்தான் கருணையே !
    நல்லுரையே நாரணன் ஞானமாய் எல்லோர்க்கும்
    வில்லடித்தான் கோபுர மீதேறி என்பதன்றோ
    கல்லில் பதிந்த கவி. (115) 24.04.2015
    (இன்று ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி தினம்)

    கோடை மழைபோல் கொடுக்கும் குணம்வரவும்
    ஆடை அணிகலனில் ஆசை உடைபடவும்
    ஓடுகிற எண்ணம் ஒடுங்கி அடைபடவும்
    கூடுகிற நாளே குறி. (116) 25.04.2015

    திருவிழாக் கொண்டாட்டம் தேரோட்ட மெல்லாம்
    ஒருவராய் எல்லோரும் ஊரில் பெருமையாய்
    வாழத்தான் வைத்தார்கள் ! மாறுபா டெல்லாமே
    பாழ்மனத் தீமைப் பசி. (117) 26.04.2015

    பூகம்பம் வந்து பொலபொலெனப் போனதே
    வேகமாய்க் கட்டிடங்கள் ! வீடிழந்து பாவமாய்
    மக்கள் தவிக்க மதமாற்றக் கூட்டமோ
    இக்கணமும் செய்யுதே ஏய்ப்பு . (118) 27.04.2015

    முடிந்தவரை நல்ல முறையில், தமிழைக்
    கடித்துக் குதறாமல் கற்றுப் படித்தாலே
    காலமெலாம் வாழுமே கற்பூரச் செந்தமிழ்!
    ஞாலத்தில் தாய்மொழியே நன்று. (119) 28.04.2015

    கூட்டைத் திறந்து குதித்துப் பறக்கின்ற
    காட்டுக் குருவிக்குக் கட்டளைகள் போட்டே
    அடக்க நினைக்கிறாய் ! ஆசை மனமோ
    மடக்க நிமிரும்நாய் வால். (120) 29.04.2015

    தொடரும்

    Share
  • சிவபிரதோஷம்

    மீ.விசுவநாதன்

    இரவா பகலா இறைவோய்நீ ! இரண்டு மான பொருளோநீ !
    இரவாப் புகழின் எழிலோநீ ! இருந்தும் இல்லா உருவோநீ !
    அரவாய் அமுதாய் கலப்போநீ ! அழகுக் கவிதை நெருப்போநீ !
    வரவாய் எனக்குள் உறவோநீ ! வசவில் லாத துறவோநீ (4)

    சுகமாய் வலியாய் இருந்தேநீ சுழலும் விதியாய் வருவாய்நீ !
    நகமும் சதையு மானாய்நீ ! நரனில் முக்தி மானாய்நீ
    அகமும் புறமும் ஒளிர்ந்தாய்நீ ! அசுர சுரனின் குணத்தில்நீ
    நிகரே இல்லா பலவான்நீ ! சிவனே தமிழ்நற் கவியேநீ ! (8)

    (அறுசீர் விருத்தம் அரையடி வாய்பாடு: மா, மா, காய்)

    (29.06.2015)

    Share
  • காலம் (11)

     

    மீ.விசுவநாதன்

    vallamai111-300x15011111

    ஆத்திரம் , ஆணவம் , ஆசை , அதெல்லாமே
    கோத்திரம் பார்த்தா குவிகிறது – ஆத்திகன்
    நாத்திகன் யார்க்குமே ஞானம் பொதுச்சொத்து!
    மாத்திரைப் போதில் வரும். (101) 10.04.2015

    மழைத்துளி ஆச்சர்யம் ; மண்புழு நண்பன் ;
    பழையபடம் ஆனந்தம் ; பண்ணும் பிழையிலாப்
    பாட்டுக் கொடுப்பினை ; பாரமே ஏதுமில்லாக்
    கூட்டுக் களிதான் குஷி. (102) 11.04.2015

    ஓவியம் பார்ப்பதும் , ஓர்கவிதை உள்ளத்தில்
    தாவி உதிப்பதும் , தாமரைப் பூவிலே
    ஆவி கலப்பதும் , ஆண்டவன் ஆசியைத்
    தூவித் தெளிக்கும் துளி. (103) 12.04.2015

    கவிழ்ந்தும் நிமிர்ந்தும் கனிந்தும் சிரித்தும்
    தவழ்ந்தும் விழுந்தும் தளிராய் எழுந்தும்
    தவறாத நம்பிக்கை சக்தியுடன் பிள்ளைத்
    தமிழாய் வளர்தல் தவம் (104) 13.04.2015

    படிப்பது நன்கு பதிவதும் , நாடித்
    துடிப்பெலாம் என்றும் துடிப்பாய் முடிகொண்ட
    சங்கத் தமிழ்போல சத்தாய் ஒலிப்பதும்
    எங்கள் குருவருள் ஈர்ப்பு (105) 14.04.2015

    மீன்நீந்தும் ஆறுமாய் விண்மீனின் வானுமாய்
    “நான்”நீந்தும் ஆழ்மனதில் ஞானமே வீண்தானே !
    ஏனென்றால் ஆணவம் என்றுதான் ஓயுமோ ?
    ஏனத்தில் ஓட்டை எனில். (106) 15.04.2015

    ஓடும் ரயிலில் ஒருநாள்ப் பயணமாய்
    நாடும் உறவினை நான்காண ஓடினேன் !
    போடும் உணவிலும் பூசலைப் பேசினார் !
    காடுவரை நீங்காத காய். (107) 16.04.2015

    பெரிதான கோவில் ! பிரும்மாண்ட சிற்ப
    அரிதான காட்சி ! அழகாய் எரியும்
    விளக்கில்லை பூஜை விளக்கங்க ளில்லை !
    பளபளப்பி லேது பரம். (108) 17.04.2015

    குடுகுடுப்பைப் காரனைக் கூட்டிவா இங்கே !
    கடுகடெனப் பேசும் கலியில் , படுகுஷியாய்
    “நல்லகாலம் ஐயா ! நடப்பது நல்லதென்பான் !”
    பொல்லாப்பு வேண்டாப் புகழ் (109) 18.04.2015

    வெளிநாடோ உள்நாடோ வேடங்கள் ஒன்றே ;
    துளிகூட மாறாத தோற்றம் வெளிவேஷம் !
    உள்ளே கலகமும் ஊர்முன் சிரிப்புமாய்
    கள்ளனாய் வாழும் கலி. (110) 19.04.2015

    Share