ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 23

“ஆடிப்பட்டம் தேடி விதை”

ஆடிமாதம் அவனுக்கு மிகவும் பிடித்த மாதம். நல்ல காற்று வீசும். வயல் வெளிகளில் புதிய நாற்று நடப்பட்டு இளம்பச்சை நிறத்தில் கண்களுக்குக் குளுமையாக அவை காற்றில் அசைவதைக் காணவே கண்கள் கோடி போதாது. கன்னடியன் கால்வாயிலும், தாமிரவரணி ஆற்றிலும் தண்ணீர் நிறையப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். அந்தச் சிறிய வயதில் அவனுக்கு நண்பர்களுடன் அவன் தண்ணீரில் நீந்தி விளையாட இந்த ஆடிமாதமே சுகமாக இருக்கும். ஆற்றில் குளித்து விட்டு வரும் பொழுதே மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து மென்மையாக வீசும் காற்றில் ஈர ஆடைகள் உலர்ந்து விடும். வயல் வரப்புகளில் புற்கள் மெத்து மெத்தென்றிருக்கும். ஆடி மாதமானதால் எங்கோ இருக்கும் “வடக்கு பார்த்த செல்வி” அம்மன் கோவிலில் இருந்து வருகிற பக்திப் பாடல்கள் காற்றில் பறந்து வந்து அவனது காதுகள் வழியாக மனத்தைக் குதூகலப் படுத்தும். அந்தப் பாடல்களை ரசித்துக் கொண்டே அந்த வயல் வரப்புகளில் நடந்தும், ஓடியும், அந்த நாற்றுகளின் தளிர்த் தலைகளைத் தடவியும் அவன் வீட்டிற்கு வந்த காலங்கள் பசுமையான அனுபவமாக இருக்கிறது. “ஆடிப்பட்டம் தேடி விதை” என்னும் பழமொழிக்கேற்ப அவனுக்கு அம்மா அவனிடம் வெண்டக்காய், அவரைக்காய் போன்ற செடிகளின் விதைகளை வீட்டின் பின்புறம் விதைக்கச் சொல்லுவாள். அவனும் அவனுக்கு அக்கா பாலாவும் விதைகளை நடுவார்கள். தண்ணீர் விடுவார்கள். சில நாட்களில் பூமியைப் பிளந்து கொண்டு அந்த விதைகள் முளைக்கும். செடியாகவும், கொடியாகவும் அவைகள் வீட்டின் கொல்லைப் புறத்தில் வளர்ந்து அழகுதருகின்ற காலம் இந்த ஆடிமாதம்.

அவனுக்கு செடிகள் வளர்ப்பதில் ரொம்பவும் ஆசை உண்டு. சின்னம்பிச் சித்தாப்பாவுக்கும் செடிகள் வளர்ப்பதில் ஆசை அதிகம். அவர் நிறையப் பூச்செடிகளும், “குரோட்ரன்ஸ்” செடிகளும் நட்டிருந்தார். மனோரஞ்சிதம் பூ கொல்லைப் புறம் முழுதும் வாசம் பரப்பிக் கொண்டிருக்கும். அவன் ஒருமுறை கருவேப்பிலைச் செடியை நட்டுவிட்டு, மறுநாள் அந்தச் செடியை மெதுவாகத் தோண்டி எடுத்துப் பார்த்துக் கொண்டிருபதைப் பார்த்த சின்னம்பிச் சித்தப்பா,” என்னடா..கண்ணா செடிக்கு வேரோடிருக்கான்னு அதைப் பிடுங்கிப் பாக்கறயா ” என்று வேடிக்கையாகக் கேட்டார். அவன் செடிகள் நட்டாலும், விதைகள் ஊன்றினாலும் நன்றாக வளரும் என்று அவர் அவனை நடச்சொல்லுவார். ஏதோ செடிகளின் நல்ல நேரம் அவைகள் வளர்ந்து செழித்தன. நீல நிறப் பூக்களுடன் அவரைகொடி பந்தலில் படர்ந்திருக்கும். கொத்து கொத்தாகக் காய்த்து உலுப்பும். அவனும், அவனுக்கு அக்காவும்தான் அனேகமாக அந்தக் காய்களைப் பறிப்பார்கள். பல நேரங்களில் குரங்குக் கூட்டம் வந்து கும்மாளம் போடும். “குரங்குகளுக்குப் போக உள்ள மிச்சம்தான் நமக்கு” என்று அவனுக்கு அம்மா சொல்லுவாள். நந்தியாவட்டை, செம்பருத்தி போன்ற பூக்களைப் பறித்து, ஒவ்வொன்றாக அவனுடைய வீட்டின் ரேழியில் உள்ள பூஜை அறைப் படங்களில் வைப்பது ஒரு தனி அனுபவம். ஆடி மாதச் செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமைகள் விசேஷமாகக் கொண்டாடப்படும். ஆடிச் செவ்வாய்க் கிழமைகளில் அவனுக்கு அக்காவுக்குப் புதுப் பாவாடை, சட்டை எல்லாம் எடுத்துத் தருவார்கள். அவளும் அவளது தோழியர்களும் ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு அந்தப் புதிய ஆடைகளை அணிந்து, அழகாகத் தலையை வாரிப் பூச்சூட்டி அலங்கரித்துக் கொண்டு “ஆடிச் செவ்வாய்த் தேடிக்குளி, அரச்ச மஞ்சளப் பூசிக்குளி” என்ற நாட்டுப்புறப் பாடலைப் பாடிய படியே வீட்டிற்கு வரும் அழகை அந்த கிராமத்தில்தான் பார்க்க முடியும். ஆடி வெள்ளிக்கிழமை அன்று அவனுக்கு அம்மா “சர்க்கரைப் பொங்கல்” செய்து அம்பாளுக்கு சுலோகங்கள் சொல்லி நிவேதனம் செய்வாள். அவன் அந்த சர்கரைப் பொங்கலுக்காகக் காத்துக் கொண்டிருப்பான். அம்மா செய்த அந்த சர்கரைப் பொங்கலின் ருசியே தனிதான். ஆடி வெள்ளிக் கிழமைகளில் சின்னச் சந்கரன் கோவிலுக்குச் சென்று வரும்படி அவனுக்கு அம்மா சொல்லுவாள். அவனும் சென்று வருவான். காரணம் அங்குள்ள ஆற்றங்கரையில் நன்றாக நீந்திக் குளிக்கும்படியாக வசதியான படித்துறைகள் இருக்கும். அவனும் நண்பர்களும் அங்கேயும் நீண்டநேரம் குளித்து விட்டு அவசர அவசரமாகக் கோவிலில் “கோமதி அம்மனை” தரிசனம் செய்துவிட்டு வருவார்கள்.

“ஆடித் தவசு”

adii

ஆடித்தவசுத் திருவிழா திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவிலிலும், அம்பாசமுத்திரம் தாலுக்காவில் கோடரங்குளம் பகுதியில் இருக்கும் சின்னச் சங்கரன் கோவிலிலும்தான் மிகவும் விசேஷமாக நடைபெரும். அவன் அம்மசமுத்திரம் பகுதியில் இருக்கும் சின்னச் சங்கரன் கோவிலில் நடைபெறும் ஆடித் தவசு விழாவைதான் பலவருடங்கள் பார்த்திருக்கிறான். அவனுக்குச் சிறிய வயதில், ஏன் அவன் நான்காம் வகுப்புப் படிக்கும் வரை அவனை ஆடித்தவசு திருவிழாவுக்கு அவனுக்கு அப்பாத்தான் கூட்டிச் சென்றிருக்கிறார். எப்படி, அவனை நடக்க வைக்காமல் தன் இருதோள்களிலும் தூக்கி வைத்துக் கொண்டு சென்று வருவார். அவனது வீட்டில் இருந்து அந்தக் கோவில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவாவது இருக்கும். அவனைச் சுமந்து கொண்டு மாலை ஐந்து மணிக்கு தொந்திளிளாகம் தெரு வழியாக, திம்மராஜபுரம் ரயில்வே லைன் தாண்டி அணைக்கட்டு வழியாக சங்கரன்கோவிலுக்குச் செல்வார். அணைக்கட்டில் அவனை இறக்கி வைத்து, அவனுக்கு அந்தச் சூழலின் அழகைக் காட்டுவார். மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து வருகின்ற தாமிரபரணித் தண்ணீர் இங்கே ஒரு பெருங்கடல் போன்ற தோற்றத்தில் இருக்கும். இங்கிருந்துதான் கன்னடியன் கால்வாய்க்கும், தாமிரபரணி ஆற்றுக்கும் தண்ணீர் பிரிந்து செல்கின்றது. அதைப் பிரிக்கும் நீண்ட பாதை கருங்கற்களினால் அமைக்கப்பட்டிருக்கும். அதில் தண்ணீர் வழிந்தோடும். கால் பாதங்களுக்கு மேல் ஒரு அரையடித் தண்ணீர் சென்று கொண்டிருந்தால் மெதுவாகக் கடந்து கோவிலுக்குச் சென்று விடலாம். தண்ணீர் அதிகம் இருந்தால் அம்பாசமுத்திரம் சுற்றி வண்டிமறிச்சம்மன் கோவில் வழியாகத்தான் வரவேண்டும். அவனுக்கு அப்பா அவனைத் தோளில் சுமந்து கொண்டு மெதுவாக அந்த நீர்ப்பாதை வழியாக அக்கரைக்குச் சென்று விடுவார். அப்பாவுக்கு அந்தப் பாதைகள் எல்லாம் அத்துப்படி. அனேகமாக கல்லிடைகுறிச்சியில் இருந்து சின்னச் சங்கரன் கோவிலுக்கு வருபவர்கள் இந்த அணைக்கட்டுப் பாதையாகத்தான் வருவார்கள். “தவசு”த் திருநாள் காணக் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் மாலை ஆறரை மணிக்கெல்லாம் அலைமோதும். அதுசரி. ஆடித்தவசு என்றால் என்ன? என்று அவனுக்கு அப்பாவிடம் அவன் கேட்டான். “தனது சகோதரன் ஸ்ரீமன் நாராயணனையும், தன் கணவன் ஸ்ரீ சங்கரலிங்கரையும் ஒரு சேரக் காணவேண்டும் என்று கோமதி விரும்பினாள். விருப்பம் நிறைவேற அவள் தவம் இருந்தாள். “தவம்” என்பதைத் திருநெல்வேலி மாவட்டத்தில் “தவசு” என்று அழைப்பது வழக்கம். இறைவி தவம் செய்ய பூலோகம் வந்தாள். அவளுக்குத் துணையாக தேவர்கள் எல்லோரும் “பசுக்களாக” வந்தனர். பசுவை “கோ” வென அழைப்பர். அதனால் பசுக்களாகிய அந்த தேவர்கள் தொழுகின்ற அழகிய “மதி” போன்றவள், பூர்ண நிலவு போன்றவள் என்ற பொருளில் “கோமதி” என்று இறைவி அழைக்கப் பட்டாள். அந்த கோமதி தவசு செய்கிறாள். அதனால் தவசுக் கோலத்தில் தாமிரபரணி நதிக்கரையில் ஒரு மண்டபத்தில் இருக்கிறாள். தவத்தின் பயனாக முதலில் “சங்கர நாராயணராக”வும், பின்பு “சங்கரலிங்கமாகவும்” இறைவன் காட்சி தருகிறான். அந்த இறைவனை தவம் முடித்த “கோமதி” அம்மை மூன்று முறை வலம் வந்து, ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு கல்யாணக் கோலத்தில் கோவிலுக்குள் செல்வார்கள்.

avan1

இதன் உட்பொருள் “சிவன் விஷ்ணு என்ற பேதம் கிடையாது. தவமிருந்தால், அதாவது மனதை ஒருநிலைப் படுத்தி அனைத்தும் இறைவன் உருவே என்ற எண்ணத்தில் இருந்தால் மனதில் “சாந்தி” என்ற கல்யாண குணம் கிடைக்கும்” என்பதாகும்.

இறைவி கோமதி, இறைவன் ஸ்ரீ சங்கரரை மூன்று முறை வலம் வரும் பொழுது, பக்தர்கள் தங்களின் பிராத்தனையாக உப்பு, மிளகு, காய்கறிகள், வாழப்பழம் போன்ற பொருட்களை அந்த இறைவியும், இறைவனும் உறையும் அழகிய “சப்பரத்தை” நோக்கி வீசுவார்கள். அது அங்கிருக்கும் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தில் விழும். அந்தக் காய்களோ, கனிகளோ அவன் மீது விழுந்து விடாதபடி அவனுக்கு அப்பா அவனைத் தன் தோள்களின் மீது வைத்துத் தன் கைகளால் அவனை அணைத்தபடி இருப்பார். சுவாமிக்கு தீபாராதனைகள் நடக்கும் நேரம்,” கண்ணா..கும்புட்டுக்கோ…சுவாமி நன்னாத் தெரியறாரா பாரு” என்று கேட்டு மெல்ல மெல்லக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு “சப்பரத்தின்” பக்கம் சென்று அந்தக் கற்பூரத்தை அவனுக்குக் கண்ணில் ஒற்றி விடுவார். வீபூதி வாங்கி அவன் நெற்றியில் இடுவார். இடி, மிதி, அடி எல்லாம் தான் வாங்கிக் கொண்டு அவனுக்கு “ஆடித்தவசு” தரிசனம் செய்து வைத்த அந்த அப்பாவுக்கு அவனால் என்ன கைமாறு செய்து விடமுடியும். அப்படிப்பட்ட பெற்றோர்களை மறக்காமல் இருக்கக் கூடிய நல்ல புத்தியை இறைவன் அவனுக்குக் கடேசி மூச்சு இருக்கும் வரை அருளவேண்டும் அவளவே.

சின்னச் சங்கரன்கோவிலின் வரலாறு

avanசின்னச் சங்கரன் கோவிலில் இருக்கும் சிவலிங்கம் சுயம்பு. அதற்கொரு கதை சொல்லக் கேட்டிருக்கிறான். முன்னொரு காலத்தில் சிவபக்தர் ஒருவர் ஒவ்வொரு நாளும் தன் பூஜை முடிந்தவுடன், நிவேதனப் பொருளான “சாதத்தை”க் காக்கைக்கு வைத்து வந்தார். அந்த சாதத்தைக் கவ்விக் கொண்டு அது பறந்து விடும். ஒரு நாள் அவர் அந்தக் காகம் ஏன் சாதத்தைச் சாப்பிடாமல் எங்கோ பறந்து செல்கிறதே, அது எங்கு செல்கிறது என்று கவனித்தார். அந்தக் காகம் அந்தக் காட்டுப் பகுதியில் ஒரு இடத்தில் அந்த சாதத்தை வைத்து விட்டு பக்கத்தில் ஓடுகின்ற தாமிரபரணித் தண்ணீரைத் தன் வாயில் எடுத்து வந்து சாதம் வைத்த இடத்தில் வாயில் உள்ள நீரைத் தெளித்தது. ஒரு செடியில் உள்ள பூவை அலகால் எடுத்து அதன் மீது வைத்தது. அதன் பின் அந்த சாதத்தை அந்த இடத்தில் வைத்து வழிபட்டது. அதன் பின் அந்தக் காகம் பறந்து சென்று விட்டது. இதைத் தள்ளி இருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த சிவபக்தர், காகம் வழிபட்ட இடத்தைத் தோண்டிப் பார்த்தார். அங்கே ஒரு சுயம்பு லிங்கம் இருப்பதைக் கண்டார். அதற்கு தினமும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தார். ஒருநாள் அவர் வராததைக் கண்ட ஊர் மக்கள் அவர் பூஜை செய்து வந்த இடத்திற்க்குச் சென்று பார்த்தனர். அப்பொழுது அவர் இந்த இடத்தில் சிவன் இருக்கிறார் என்று கூறி, அந்த லிங்கத்திலேயே மறைந்து விட்டார். அதனால் அந்த லிங்கத்திற்கு “சங்கரலிங்கம்” என்று பெயர் வந்தது. இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழும் மக்கள் தங்கள் வம்சத்திற்கு சங்கரன், சங்கரநாராயணன், சங்கரலிங்கம், தவசுப் பிள்ளை, உமையொருபாகன், கோமதி என்ற பெயர்களால் அழைப்பதைக் காணலாம்.

இந்தக் கோவிலின் மூலவர் சங்கரலிங்கம். வடக்கு நோக்கி இருக்கிறார். அவரது மேனியில் ராகு, கேது என்ற நாக தேவதைகள் இருக்கின்றனர். அதனால் இந்தக் கோவிலின் மூலவரை மனதில் பிராத்தனை செய்துகொண்டு பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் விஷக்கடியில் இருந்து சுகம் பெறுகின்ற பக்தர்கள் இன்றும் இருக்கின்றனர். கோமதியை வேண்டிக்கொண்டு வெள்ளியில் செய்த கண்மலர்கள்,கை,கால்கள் எல்லாம் காணிக்கையாகச் செலுத்துவதுண்டு. அதற்குப் பலனும் உண்டு. நம்பினோர்க்கு தெய்வம்.

அவனுடைய வீடு ஓட்டு வீடாக இருந்தது. அப்பொழுதெல்லாம் அதிகச் சூட்டின் காரணமாக ஓடுகளின் இடைவெளியில் இருந்து தேள், பாம்புகள் எல்லாம் வீட்டிற்குள் வரும். அது அனேகமாக அவனுக்கு அம்மாவின் கண்களில் படும். அதைப் பார்த்த உடனேயே அம்மா “கோமதி” “கோமதி” காப்பாத்து என்று சொல்லிக் கொண்டே இடுக்கியால் மெல்ல அதைப் பிடித்து வாய்க்கால் புறத்தில் கொண்டுப் போட்டு வருவாள். கொல்ல மாட்டாள். 1972ம் வருடம் அவனுக்குப் பூநூல் (உபநயனம்) போடுகின்ற தினத்திற்கு முந்தயநாள் அதிகாலையில் அவன் அவனுடைய வீட்டுச் சிறிய திண்ணையில் படுத்துக் கொண்டு கால்களை வீட்டின் வாசலில் உள்ள “சாயப்பட்டை கம்பி”க் கதவுகளில் நீட்டி வைத்துப் படுத்திருந்தான். காலையில் அவனுக்கு அம்மா அந்தக் கதவைத் திறக்க வந்த பொழுது ஒரு கட்டுவிரியன் பாம்பு அவன் காலுக்கு மிக அருகில் இருப்பதைப் பார்த்து, “கோந்தே..கண்ணா..கால மொள்ளத் தூக்கிக்கோ ..கோமதிமேல பட்டுடாதே…கோமதி …கோமதி” என்று மெல்லக் குரல் கொடுத்தாள். அவனும் மெதுவாகக் காலைத் தூக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு அந்தப் பாம்பையே பார்த்துக் கொண்டிருந்தான். அது அந்தக் கதவின் பட்டைக் கம்பியில் நன்றாகச் சுருண்டு இருந்தது. அதற்குள் அவனுக்கு அம்மா இடுக்கியைக் கொண்டுவந்து அந்தப் “பாம்பை” மெல்ல லாவகமாகப் பிடித்துக் கொண்டுபோய் வாய்க்கால் கரையில் விட்டு வந்தாள். அந்த விஷப்பாம்பை அவனுக்கு அம்மா அடித்துக் கொல்ல வில்லை. அவனுக்கு உறவினர் ஒருவர் அந்தப் பாம்பைக் கொல்லாம விட்டுட்டயே என்று அம்மாவிடம் கேட்டபொழுது, “கோமதி என்கொழந்தைய காப்பாத்தினா..நான் அவ கொழந்தையக் கொல்லலாமோ…” என்று பதில் சொன்னதை அவன் கேட்டான். அன்றிலிருந்து அவன் பாம்புகளைக் கொல்லுவதில்லை. ஏன் அவனறிந்து எந்த ஜீவராசிகளுக்கும் துன்பம் தருவதில்லை. அவன் பள்ளிக் காலங்களில் எத்தனையோ பாம்புகளின் வாலைப் பிடித்து இழுத்து மிக வேகமாகச் சுழற்றி வானில் வீசுவான். அது “சொத்”தென பூமியில் விழுந்து இறந்து போகும். நாய்கள் மீதும், குரங்குகள் மீதும் கல்லெறிந்து மகிழ்வான். அப்பொழுதெல்லாம் அவனுக்கு அம்மா அவனை வீட்டிற்குள் வைத்து ஒரு பிரம்பால் அடிப்பாள். அவன் கத்துவான். அழுவான். அப்பொழுது ,”ஒன்னபோலத்தானே அந்தப் பாம்புக்கும், நாய்க்கும் வலிக்கும்…ஏன் பாவத்தைப் பண்ணறாய்” என்று சொல்லிச் சொல்லி அடிப்பாள். அப்படி அடித்து அடித்தே அவனுக்குப் பாவத்தைப் போக்கி அந்தப் பாவத்தை எல்லாம் தான் வாங்கிக் கொண்டாள் அந்த அம்மா. அவனுக்கு அவளே கோமதி.

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் ரொம்ப குஷியான பண்டிகை. அவனுக்கு அம்மா வீட்டில் சர்கரைப் பொங்கல், புளியோதரை, தேங்காய்ச்சாதம், எளிமிச்சம்பழச் சாதம், எள்ளுஞ்சாதம், தயிர் சாதம் , வடகம் எல்லாம் சுவையாகச் செய்து வைப்பாள். அன்று பள்ளிக்குக் கூட விடுமுறைதான். காலையில் தாத்தா, அப்பா, அக்கா எல்லோருடனும் வீட்டில் சாப்பிடுவான். மாலையில் அவனுக்கும், அவனுக்கு அக்காவுக்கும் ஒரு பெரிய “காரியரில்” இந்த சித்ரானங்களை வைத்து இலைகளும் தந்து அவனுக்கு அம்மா ஆற்றங்கரைக்கு அனுப்பி வைப்பாள். கிராமத்தில் எல்லோரும் மாலை நாலரை மணிக்கே ஆற்றங்கரைக்குக் கிளம்பி விடுவார்கள். தெருவெல்லாம் “கலகல” வென்றிருக்கும். அம்மா வரமாட்டாள். அப்பா அவருடைய நண்பர் எம்.ஆர்.ஆதிவராகன் குடும்பத்தினருடன் அணைக்கட்டுக்குச் சென்று வருவார். தாத்தா ஆத்தங்கரைக்கு வந்து , பௌண்டரிக மண்டபத்தில் அவருடைய நண்பர்களுடன் இருப்பார். எங்களைக் கவனித்துக் கொண்டிருப்பார். அவருக்கு எங்களின் மீது எப்பொழுதுமே ஒரு தனிப் பிரியம் இருந்தது. ” சாப்பிடரத்துக்கு முன்னால மீனுக்குப் போட்டுட்டுச் சாப்புடுங்கோ” என்று சொல்லுவார். அவனுக்கு அக்கா அம்மா கொடுத்தனுப்பிய வெத்தலை, பாக்கு, பழங்கள் எல்லாம் ஒரு தட்டில் வைத்து தாமிரபரணியைப் பிராத்தனை செய்து அந்தத் தாம்பூலத்தைத் தண்ணீரில் கலப்பாள். பிறகு அம்மா கொடுத்தனுப்பிய உணவுகளில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து மீனுக்குப் போடுவாள். பிறகு ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு, கால்களைத் தண்ணீரில் தொங்கவிட்ட படியே அவன் இருப்பான். அவனுக்கு ஒரு இலையில் அக்கா உணவுகளைத் தருவாள். சந்தோஷமாகச் சாப்பிடுவான். நண்பர்கள் வீட்டு மனிதர்களுடன் கொண்டுவந்த உணவைப் பகிர்ந்து கொண்டு உண்ணுகின்ற ஆனந்தத்திற்கு எல்லையே கிடையாது. கபாலி, குட்டிச்சங்கர், பிரபு, சன்னதித்தெரு கண்ணன் போன்ற நண்பர்களுடனும் ஆற்று மணலில் விளையாடுவான். ஆற்றங்கரையில் எங்கு பார்த்தாலும் மக்கள் தண்ணீரின் அருகில் மணற்பரப்பில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அழகே அழகுதான். இருள் சூழத் துவங்கி விட்டதென்றால் மெல்ல மெல்ல எல்லோரும் வீடு திரும்பத் தயாராவார்கள். தாத்தா சந்தியாவந்தனம் முடித்துத் தயாராக இருப்பார். வீடு திரும்பும் பொழுது எல்லோரும் ஒரே குடும்பமாகச் சிரித்துப் பேசிக் கொண்டு கூட்டங்க்கூட்ட்டமாக வருவார்கள். தாமிரபரணி தன் குழந்தைகளைக் கண்ட மகிழ்ச்சியில் சிலிர்த்து சங்கீத ஒலியோடு அலையடித்து அலையடித்து மெல்லச் சென்று கொண்டிருப்பாள்.

அவன் பத்தாவது படித்துக் கொண்டிருந்த வருட ஆடிப்பெருக்கன்று மாலையில் ஆற்றங்கரையில் உணவு உட்கொண்டு விட்டு நண்பர்களோடு விளையாடிக் கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்பொழுது மனநிலை சரியில்லாத ஒரு பெரியவர் அவனுக்கு முன்பாகத் தனக்குத்தானே பேசியபடி சென்று கொண்டிருந்தார். அவர், அவன் வசிக்கும் தெருவில் உள்ள ஒரு நல்லாசிரியரின் உறவினரும் கூட. அவன் அந்தப் பெரியவரைக் கேலி செய்தான். அவர் மெல்ல ஓடி ஓடிச் சென்றார். அவனும், அவனுக்கு நண்பன் ஒருவனும் அந்த மனநிலை சரியில்லாத பெரியவரைத் தொடர்ந்து கேலி செய்துகொண்டே வந்தனர். சிதம்பரேஸ்வரர் கோவில் வாசல் வந்ததும் அந்தப் பெரியவர் அங்கிருக்கும் அரசமரத்தடியில் உள்ள பிள்ளையாரை வணங்கிகொண்டிருந்த அவனுக்குத் தாத்தாவிடம் சென்று,” ஒய்..விஸ்வநாதையர்…ஒம்மோட பேரன் என்னக்கேலி பண்ணிண்டே வரான்…நீர்தான் அவனக் கேக்கணும்…” என்று சொல்லிவிட்டு வேகமாக சிவன் கோவிலுக்குள் சென்று விட்டார். அவனுக்குத் தாத்தா,” டேய்..கண்ணா…அந்தப் பெரியவர நீ கேலி பண்ணலாமா..அவர் மனசு சரியில்லாதவர்…அவரைக் கஷ்டப் படுத்தலாமா…அவர் நன்னாப் படிச்சவர்…ஏதோ அவரோட போறாத காலம் இப்படி இருக்கார்…இப்படி நீ கேலி பண்ணறது பாவம் இல்லையா…நம்மாத்துக் கொழந்தை இப்படிச் செய்யலாமா…அந்தப் பெரியவரக் கேலி பண்ணினது தப்புன்னு சொல்லி இப்ப இந்தப் புள்ளையார் முன்னாடி மூணு தோப்புக்கரணம் போடு..நமஸ்காரம் பண்ணு ” என்று சொல்லித் திருத்தினார். அன்று முதல் அவன் வேடிக்கையாகக் கூட யாரையும் கேலி செய்வதில்லை. அவனுடைய நல்ல காலம் அவனுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவர் வந்து அவனை நல்வழிப் படுத்துகின்றனர்.

அப்படி அவனிடம் உயிராக இருந்து நல்வழிப் படுத்திய அவனுக்கு அப்பாவழித் தாத்தா விஸ்வநாதையர் அடுத்த வருட ஆடிபெருக்கிற்கு முன்பாகவே கார்த்திகை மாதத் தொடர் மழையில் ஒருநாள் இரவு சாப்பாட்டிற்கு பின்பு, அவரது நண்பர் கடலை ராமலிங்கமையரிடம் பேசிவிட்டு வரும் வழியில் சகதியில் சறுக்கிக் கீழே விழுந்தவர் இரண்டு நாட்களில் இறைவனடி சேர்ந்து விட்டார். நல்ல ஆத்மா. அவரை அவன் மறக்கவே மாட்டான்.

30.07.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அவன்,அது,ஆத்மா (23)

  1. அபாரம்.. எவ்வளவு தகவல்கள் இந்த ஆடியில் நீ (ஆடாமல்!)- தருகின்றாய். படிக்கும்போதே இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே. வாழ்க விசு!,

    யோகியார்

  2. நன்றி. ஸ்ரீ கோமதியை எங்களுக்கு அறிமுகம் செய்தவர் எங்கள் தாயார்    கோமா அவர்கள்.  ஈரப்புடவையை உடுத்திக்கொண்டு காலையில் முத லியப்பபுரம் தெருவிலிருந்து ஆடிமாதம்  தரிசனம் செய்து வருவார்.  என் உடல் நிலை தேறவேண்டும் என்று கோமதியிடம் முறை இடுவார்.  ஆடி தவசில் நீங்கள் சொல்வது போல் தரிசனம் செய்துள்ளேன். 
    எங்கள் தாயாரின் தாரக மந்திரம் “சங்கரலிங்கம், கோமதியம்மா , ஆவடைதாயே ” என்பது தான் . 

    நீங்கள் சொன்ன பெரிய மனிதர் லோஹா டீச்சரின் தந்தையார் என்று நினைக்கிறேன் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *