சித்திரம் வரையும் விரல்களானால் சிவனே உன்னைநான் வரைந்திருப்பேன் ! முத்திரை அறிந்த முனிகளானால் மௌன மின்னலாய் ஒளிர்ந்திருப்பேன் ! நித்திரை வேளை நினைத்திருந்தால் நீண்ட வேதனை அழித்திருப்பேன் ! எத்திரை போட்டு மூடியதோ இறைவா என்மனம் திறப்பதில்லை !
நந்தியைப் போலே நானிருந்தால் நன்றாய் உன்னிரு தாள்பிடிப்பேன் ! சிந்திய வார்த்தை இசையானால் சிறந்த கவியென சேவிப்பேன் ! அந்தியில் வானச் சிவப்பானால் அழகு நெற்றியில் கண்ணாவேன் ! எந்திர வாழ்வில் ஓடுவதால் ஈசன் பொன்னடி அறிவதில்லை !
பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.