Author: மீ. விசுவநாதன்

  • “சிவ ஜோதி”

     

    சிவபிரதோஷம்
    “சிவ ஜோதி”

    மீ.விசுவநாதன்

    amv
    கோடிகோடி ஆண்டுகள் ஓடி -காலம்
    கொண்டாட்ட மாகவே செல்கிறது
    ஆடிஆடி ஆனந்த மாக – சிவம்
    அற்புதமாய் மோனமும் காக்கிறது

    தானதவ வேள்விகள் யாவும் – ஒரு
    தர்மத்தின் பேரிலே வாழ்கிறது
    வானமழைப் பூவினை பூமி – தன்
    வம்சங்கள் வேர்விடக் கொள்கிறது

    உண்டவிடம் உத்தம மாகி – இங்கு
    உயிர்த்தேனாய் ஜீவனை ஆக்கியது
    அண்டமெலாம் ஆக்கிய ஈசன் – நம்
    ஆத்மனாக உள்ளிருள் நீக்கியது

    தீயுடனே நீரையும் கொண்டு – சம
    நீதியினைக் காட்டுவான் ருத்ரன்
    ஓயுதலே கொண்டிடா சக்தி – சிவ
    ஜோதியிலே நிற்றலே முக்தி !

    (இன்று 08.04.2017 சனிப்பிரதோஷம்)

    Share
  • ஸ்ரீராமன்

                      மீ.விசுவநாதன்

     

    sri-rama-pattabhishekam

     

     

     

     

     

     

     

     

     

     

     

    அவரைப்போல் ஒவ்வொரு நாழியும் – நான்

    ஆக நினைக்கிறன் அன்போடு

    சுவரைப்போல் ஆணவம் நின்றெனை – தினம்

    சுற்றி அடிக்குது வம்போடு !

     

    நினைவெல்லாம் உத்தமப் பாதையை – நான்

    நேரே கடந்திட விழைகின்றேன்

    பனையளவாய்ப்  பந்தமும் பாசமும் – உடன்

    பற்றி இழுத்திடத் தவிக்கின்றேன் !

     

    அரண்மனையின் வாழ்விலும் தாழ்விலும் -அவன்

    அமைதி அடைந்ததை அறிகின்றேன்

    முரண்பலவாய்க் கொண்டுள என்னுளே – ராம

    மூல ஒலியினை உணர்கின்றேன் !

     

    தர்மமான  வாழ்வினைப் போற்றிட – இறை

    தானே ராமனைக் காட்டியது

    நிர்மலமாய் உள்ளமும் நின்றிட – ராம

    நீதி காப்பதே முக்தியது !

        (இன்று 04.04.2017 ஸ்ரீ ராமநவமி)

    Share
  • சிவன்போன்ற ரூபன்

     

     

    மீ.விசுவநாதன்

    எதிபாராத் திருப்பங்கள் தந்து
    எதிர்கொள்ள வைக்கின்ற சக்தி
    புதிர்போல இருக்கின்ற வாழ்வை
    புரிந்திடவே செய்கின்ற தாய்மை
    அதிராமல் மெலிதாகப் பேசி
    அன்போடு காக்கின்ற ஆசான்
    துதிகின்றேன் குருநாதர் தாளை
    துளிர்விடுமே ஆனந்த வேளை !

    உள்ளென்று புறமொன்று பேசா
    உயர்ஞான சத்தியத்தின் ஜோதி
    புள்ளான அன்னத்தைப் போல
    பொலிவான கருணையினை மட்டும்
    அள்ளியள்ளித் தருகின்ற வள்ளல்
    அவர்தானே பாரதீதீர்த் தரெனும்
    வெள்ளிமலை சிவன்போன்ற ரூபன் !
    வினையமுள்ள சீடருள்ளே வாசன் !

    (இன்று சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள்
    அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின்
    வர்த்தந்தி தினம் (பிறந்த தினம்) 02.04.2017 )

    Share
  • “தேசத்தை நேசி”

     

    மீ.விசுவநாதன்

    உதிரத்தைப் பாலாகத் தந்தாள் – தாய்
    உணர்வோடு தாய்நாடு என்னும் – நல்
    உயர்வினைச் சிந்தையில் வைத்தாள் !

    அதிஞானம் பெற்றாலும் என்றும் – மன
    அகங்காரம் கொள்ளாத பண்பால் – உள
    அமைதியைப் போற்றிடு என்றாள் !

    அதிராத வார்த்தையைப் பேசி -நீ
    அன்போடு தேசத்தை நேசி -என
    அறிவிலே தெளிவினைத் தந்தாள் !

    புதிரான புவனத்தில் நித்தம் – புதுப்
    பூப்போலே ஆனந்த மாக – நீ
    பொலிகவே பொலிகவே என்றாள் !

    கொடிதன்னில் தேசத்தைப் பாரு – அதன்
    குலம்வாழக் காத்திடுவாய் நீடு – எனும்
    கொள்கையை என்னுளே வைத்தாள் !

    கொடிதன்னில் பூத்திருக்கும் பூப்போல் -இங்கு
    குடிவாழும் உயிர்க்கூட்டம் என்று – நற்
    குருவென ஞானமே தந்தாள் !

    கொடிதான காரியங்கள் செய்யும் – தீக்
    கூடத்தின் வேர்நீக்கு என்றே – தொப்புள்
    கொடியிலே சத்தியம் பெற்றாள் !

    கொடிதெய்வம் என்கின்ற எண்ணம் – சிறு
    குழந்தையாய் இருக்கின்ற போதே – என்
    உளத்திலே பதித்தவள் சென்றாள் !
    ( 25.01.2017 20.45 pm)

    Share
  • “ஸ்ரீ சிவரமணார்ப்பணம்”

    மீ.விசுவநாதன்

    av

    av1

    பிறப்பே இலாத உனக்காக – ஒரு
    பெரிய விழாவே நடத்துகிறேன்- உன்
    பேரையும் சொல்லிநா(ன்) ஆடுகிறேன்

    பிறப்பாய் எடுத்த ரமணரிடம் – உன்
    பித்தாய் உருகி வணங்குகிறேன் – ஒரு
    பேச்சுமே இல்லைதான் வாயடைத்தேன்

    இறப்பும் இனிதாய் இருப்பதற்கு – உன்
    எளிய பெயரைச் செபிக்கின்றேன் – “நான்”
    என்னிலே என்னையே தேடுகிறேன்

    சிறப்பாய் உனக்குப் பிடிக்கின்ற – ஒரு
    வில்வ இலையாய் இருக்கின்ற – என்
    சிந்தையை உன்னிடம் வைக்கின்றேன்

    துறப்பே சுகமாய் இருக்குமென – அவர்
    சொன்ன உயிர்ச்சொல் சிவமென்றே – தினம்
    சுந்தரச் சூழலில் வாழுகிறேன்

    (இன்று 11.01.2017 “திருவாதிரை”
    ஸ்ரீ சிவன், ஸ்ரீ ரமணரின் திருநட்சத்திரம்)

    Share
  • சிவபிரதோஷம் – “என்னே நடிப்பு”

    மீ.விசுவநாதன்

    ரவிவர்மா
    ரவிவர்மா

    உன்னை விழுந்து வணங்காமல் – வெறும்
    உதவாக் கரைகளின் கால்களிலே – பெரும்
    உதவிகள் கேட்டே வணங்குகிறேன்.

    தென்னை மரமாய் உயர்ந்தாலும் – பெரும்
    திருட்டுத் தனங்களைச் செய்கின்ற – தேசத்
    திருடரின் முன்னே கிடக்கின்றேன் .

    என்னே நடிப்பு பணத்திற்காய் – இங்கே
    இருக்கும் இழிந்தவர் செய்கின்றார் – இதை
    எப்படி ஈசா ரசிக்கின்றாய் !

    தின்னும் உணவினைத் தெய்வமென – யாரும்
    தெளிந்தே வாழ்ந்தன(ர்) ஓர்காலம் – அது
    திரும்பிட நீதான் அருளாயோ !

    முன்னை வினையின் பயனோசொல் – இந்த
    முட்டாள் மனிதரின் மூர்க்கமெலாம் – ஏன்
    மௌனமாய் இன்னும் இருக்கின்றாய் !

    (இன்று பிரதோஷ நன்னாள் – 10.01.2017 )

    Share
  • ஒருஆயுள் கைதியின் கோரிக்கை

     

    மீ.விசுவநாதன்

    தேவைக்கு மேலொரு காசினைத்
    தேடினால் நான்குற்ற வாளிதானே!
    நாவைத்தான் கட்டிடா நானுமோர்
    நாட்டிலே பொய்கூறும் பிள்ளைதானே !
    சேவைக்கு நெஞ்சிலே கொஞ்சமும்
    சிந்தனை செய்யாத கள்ளனானேன் !
    சாவைத்தான் எண்ணிடா மானுடச்
    சாத்திரம் கூறுமொரு வேடனானேன் !

    மாடாக நித்தமும் வேலைசெய்
    மாந்தரின் கூலியிலே சூடுவைதேன் !
    கோடானு கோடியாய்ச் சூதினைக்
    கொட்டியே நல்லோரை நோகடித்தேன் !
    கூடாத நட்பினால் கூடியே
    கொஞ்சமா கொண்டாட்ட(ம்) ஆடிருப்பேன்?
    தேடாத ஈசனைத் தேடுறேன்
    தீவினை தீர்த்தெனையும் காத்திடாயோ !

    (அறுசீர் விருத்தம் வாய்பாடு:
    காய், கூவிளம், கூவிளம், கூவிளம்,காய்,காய்)

    (14.12.2016 10.08 am)

    Share
  • கலைச்செல்வி ஜெயலலிதா

     

    மீ.விசுவநாதன்

    26-1448504357-jayalaitha2311-600
    கலைச்செல்வி ஜெயலலிதா நல்ல கீர்த்தி
    கற்பூர புத்தியுடன் துணிவும் கொண்ட
    தலைவியென தமிழ்நாட்டை ஆண்ட போதும்
    தரணியே மெச்சுகின்ற அம்மா வானார் !
    அலையலையாய்ப் புதுத்திட்டம் போட்டு ஏழை
    அடிவயிற்றுப் பசிதன்னை போக்கி வந்தார்!
    நிலையெனவே அவர்புகழ்தான் ஓங்கி மக்கள்
    நெஞ்சினிலே பல்லாண்டு அம்மா வாழ்வார் !

    Share
  • காதோடு ஒரு கவிதை

     
    மீ. விசுவநாதன்

     
    காகிதம் மேலே பறக்கிறது – பணக்
    காகிதம் போலே தெரிகிறது
    போகியாய்ப் போன மனிதனுக்கு – உள்
    புத்தியில் சூடு வலிக்கிறது (காகிதம் …..)

    இருட்டிலே கொட்ட மடிக்கிறது – ஒளி
    இருப்பதைப் பொய்மை மறைக்கிறது
    திருட்டிலே காலம் கடந்தவர்க்கு – இன்று
    திக்கெலாம் அச்சம் அடைக்கிறது (காகிதம் …..)

    பதுக்கிய செல்வம் கவலையென – தெருப்
    பாடகன் பாட்டு ஒலிக்கிறது
    செதுக்கிய சிற்பம் சிரிப்பதுபோல் – என்
    சிந்தனைத் தூய்மை இருக்கிறது (காகிதம் …..)

    ஆயிரம் செல்வ மிருந்தாலும் – அது
    அமைதியை என்றும் தருவதில்லை
    வாயிலும் உள்ளும் ஒளியிருந்தால் – எந்த
    வழியிலும் செல்ல பயமுமில்லை (காகிதம் …..)
    (21.11.2016 06.30 am)

    Share
  • தீபாவளி

     

    மீ.விசுவநாதன்

    images

    வெற்றிக் களிப்புதான் தீபா வளியாம் – அக
    தீப ஒளியில் தெரிவதுவாம் !
    நெற்றித் திலகமாய் நின்று நிலைத்து – அது
    நிறைந்த அன்பைப் பகிர்வதுவாம் !
    பிள்ளைக் குணமெனக் கூடி மகிழ்ந்து- அது
    தினமும் அகிலம் சுற்றுவதாம்!
    கள்ளம் கபடமே இல்லா உறவாய் – இக்
    கலியை அழிக்கத் தோன்றுவதாம்!

    புதுமை பலவெனத் தேடித் பிடித்து – இப்
    பூமி செழிக்க விதைத்திடுமாம்!
    முதுமை இலாதொரு ஞான மளித்து -நம்
    மோகத் திரையைக் கிழித்திடுமாம் !
    பறவை யெனமனம் பாய்ந்து திரியும் – அப்
    பழக்கம் திருத்தி நெறிதருமாம் !
    சிறகை ஒடுக்கியே சிந்தனை செய்ய -ஒளி
    சிறந்த வழியைத் திறந்திடுமாம்!

    (இன்று 28.10.2016 வெள்ளிக்கிழமை இரவு
    தீபாவளிப் பண்டிகை, நாளை சனிக்கிழமை
    அதி காலை நரகசதுர்த்தி)

    Share
  • ஜெய் ஸ்ரீராம்

     
    மீ. விசுவநாதன்

    ram

    தருமத்தின் தோற்றமென இராமனையே காணும்
    தரணியிலே பிறந்ததற்குப் புண்ணியங்கள் செய்தோம் !
    கருமத்தை, பக்தியினை, கருணையின் சார
    கல்யாண குணமான நட்பினது ஆழ
    உருவத்தைக் கண்டன்றோ உயிராக எண்ணி
    ஒவ்வொரு நொடியிலுமே உள்ளொளியைப் பெற்றுக்
    கருவத்தை அழிக்கின்றோம் ; கவலையையும் இன்பக்
    கடமையென ஏற்கின்றோம் ஸ்ரீராமன் பேரால் ! (1)

    மனிதனென வந்ததால் மண்ணிலுள்ள மாய
    வகையெல்லாம் அனுபவித்தான்; ஆசையையும், ராஜ
    பனிபோன்ற வேடத்தின் பளுவினையும் நித்தம்
    பட்டுத்தான் தெளிந்தானே பாசமிகு வள்ளல் !
    தனியாக இருக்கின்றான் தவிக்கின்றான்; சீதை
    தவத்தாளை மீட்டுவுடன் பிரிகின்றான்; பின்னே
    இனிதாகப் பல்லாண்டு தர்மநெறி மாறா
    இயல்போடு ஆட்சியினை பொறுப்புடனே செய்தான் ! (2)

    பெற்றோரின் சொல்கேட்போர் எல்லோரும் ராமன் !
    பிரியமுடன் இருப்போர்கள் எல்லோரும் ராமன் !
    கற்றோரை மூத்தோரைப் பணிவோர்கள் ராமன் !
    கடமைக்காய் தர்மநெறி காப்போர்கள் ராமன் !
    மற்றோரின் கவலைகளைக் களைவோர்கள் ராமன் !
    மனிதகுணம் மேலோங்கி வாழ்வோர்கள் ராமன் !
    சுற்றமென அன்புதனைப் பெற்றவர்கள் ராமன் !
    சுதந்திரமாய் நற்கருத்தை மதிப்போர்கள் ராமன் ! (3)

    ( 21.10.2016 08.24 am )

    Share
  • அரிய பரிசு

     
    மீ. விசுவநாதன்

    sri
    போக்கிடம் காணாத போது
    புகலிடம் தந்தவரைப் போலே
    பூக்களைத் தூவியொரு பாதை
    போட்டவர் பேரென்ன தோழி !
    தாக்கிடும் வன்பசியைப் போக்கத்
    தாய்யெனக் கைக்கொண்டு சேர்த்து
    ஆக்கிய நல்லுணவு தந்த
    அன்பினைப் போற்றுகிறேன் வாழி!

    மூடனாய் ஊர்சுற்றி வந்த
    முகத்தினை நேசமுடன் பார்த்துச்
    சூடனாய்க் கல்விதனைக் காட்டிச்
    சோதியாய்க் காட்டியதார் தோழி !
    பாடநான் வாய்திறந்த போது
    பளிச்சென வார்த்தைகளைக் கொட்டிப்
    போடுநீ உன்கவிக்குள் என்றே
    சொன்னவள் “சாரதாவே” வாழி !
    (14.10.2016 01.56 am)

    Share
  • கலைவாணி

     
    மீ.விசுவநாதன்

    aka
    கற்கும் குணமே கலைவாணி !
    கர்வம் துளியும் தலைகாட்டா
    சொற்ப அறிவும் கலைவாணி !
    சுடரும் ஒளியாய் விரிவானாய்
    நிற்கும் கருணை கலைவாணி !
    நிசமோ பொய்யோ உலகத்தில்
    அற்பப் பொருளின் உயிர்க்குள்ளும்
    ஆழ்ந்து கிடப்பாள் கலைவாணி !

    புத்தம் புதிய மலர்போலே
    பூமி முழுதும் அவள்மாயை !
    பித்தன் எனக்குள் இயல்பான
    பிரும நிலையும் அவள்சாயல் !
    கத்துங் குழந்தை குரலுக்கும்
    கணினி உலகின் திறனுக்கும்
    வித்தை விதைக்கும் விவசாயி
    வேதக் கருவாம் கலைவாணி !
    (09.10.2016 19.38 pm)

    Share
  • பஞ்ச பூத சக்தி

     

    மீ.விசுவநாதன்

    எவ்வுரு வானால் எனக்கென்ன – உனை
    எளிதினில் உணர்ந்திட முயல்கின்றேன்
    ஒவ்வொரு பாவாய் “நா”வைத்து – உன்
    ஒளிமிகு அடிகளில் பயில்கின்றேன் !

    சப்தமாய் வாக்கில் வரும்போது – உன்
    சத்திய ஒலிதனைக் கேட்கின்றேன்
    கொப்பெலாம் சாயக் காற்றடித்தால் -உன்
    குரல்தரும் இசையென ரசிக்கின்றேன் !

    தீபமாய் நின்று எரிகையிலே – உன்
    தெளிவுரு அழகினைத் தொழுகின்றேன்!
    கோபமாய்க் கடலாய்க் குதிக்கையிலே -வன்
    கொடுமையை எதிர்க்கிற குணங்கண்டேன் !

    மண்ணிலே வாழும் உயிரெல்லாம் – உன்
    வடிவிலே இருக்கிற அழகென்பேன்
    எண்ணிலே பஞ்ச பூதமெலாம் – உன்
    இருவிழி வழிகிற அமுதென்பேன் !

    Share
  • திருவோணம்

    -மீ.விசுவநாதன்

     

    vamana1

     

    திருவேணும் என்போர்க் கெல்லாம்
       –திருமாலின் பார்வை வேணும்!
    திருவோண நாளில் பெருமாள்
       –திருவடியை எண்ண வேணும்!
    ஒருஅடியால் உலகைத் தொட்டு
       –ஒருஅடியை விண்ணில் வைத்து
    மறுஅடியைத் தலையில் ஆழ்த்தி
       –மகாபலிக்கு ஞானம் தந்தான்! 

    சிறுவனாக வந்து உள்ளச்
        –செருக்கினைத் துடைத்த போது
    மறுபிறவி இல்லா மன்னன்
        –மகாபலிக்கு மண்ணில் மீண்டும்
    வரும்படிக்கு வரமும் தந்தான்!
        –வரவேற்று மகிழ்ந்த மக்கள்
    திரும்பியதம் மன்னன் கண்ட
        –திருவோண தினமே வாழி!

     

     

    Share