மீ.விசுவநாதன்

எவ்வுரு வானால் எனக்கென்ன – உனை
எளிதினில் உணர்ந்திட முயல்கின்றேன்
ஒவ்வொரு பாவாய் “நா”வைத்து – உன்
ஒளிமிகு அடிகளில் பயில்கின்றேன் !

சப்தமாய் வாக்கில் வரும்போது – உன்
சத்திய ஒலிதனைக் கேட்கின்றேன்
கொப்பெலாம் சாயக் காற்றடித்தால் -உன்
குரல்தரும் இசையென ரசிக்கின்றேன் !

தீபமாய் நின்று எரிகையிலே – உன்
தெளிவுரு அழகினைத் தொழுகின்றேன்!
கோபமாய்க் கடலாய்க் குதிக்கையிலே -வன்
கொடுமையை எதிர்க்கிற குணங்கண்டேன் !

மண்ணிலே வாழும் உயிரெல்லாம் – உன்
வடிவிலே இருக்கிற அழகென்பேன்
எண்ணிலே பஞ்ச பூதமெலாம் – உன்
இருவிழி வழிகிற அமுதென்பேன் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *