கிரேசி மோகன்
————————————————–

vallidevyani_murugan_02

ஒயிலாய் குறத்தி ஒருபக்கம், வேழ
மயிலாள் மறுபக்கம் மேவ -மயிலம்
அமர்ந்த முருகா அருள்வாய் எனக்கு
திமிர்ந்த ஞானத் துணிவு….(1)

மோனை எதுகையாய் ஆனை குறவள்ளி
மானை மணந்த தமிழழகா -சேனை
தளபதியே சூரன் தலைபறித்த சூரா
உளமதிலே உட்கார் உவந்து….(2)

வள்ளி மகளோடு புள்ளி மயிலேறும்
வெள்ளி மலையோன் விழிமைந்தா -உள்ளிருக்கும்
ஆன்ம குகனே அகந்தை அழித்தெனக்கு
வான்வசம் ஆக்கிட வா….(3)

விடையேறு பாகன் விழிவந்த வேலா
படையேறி வாழ்கின்ற பிள்ளாய் -கடையோரம்
வைத்தேன் கவியெழுதி விற்றுன் அனுபூதி
துய்த்தேன் தமிழ்வணிகத் தில்….(4)

உடைந்தாலும் கண்ணாடி உள்ளதைக் காட்டும்
குடைந்தாலும் கற்பாறை கோயிலாகும் -அடைந்தாலும்
ஆறு கடலைத்தான் சேறும் அதுபோல
ஏறு மயிலோன்கண் ஏகு….(5)

பாம்பன் ஸ்வாமிகள் கோயில்….
—————————————-
உப்பு மிளகிட்டு சுப்பனின் சன்னிதியில்
தப்புத்தப்(பு) என்றுகன்னத் தாளமிட்டு -அப்புறம்
பாம்பன் சுவாமிகள் பாதம் பணிந்தளிக்கும்
சாம்பலை நெற்றியில் சூடு….(6)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *