காதோடு ஒரு கவிதை
மீ. விசுவநாதன்
காகிதம் மேலே பறக்கிறது – பணக்
காகிதம் போலே தெரிகிறது
போகியாய்ப் போன மனிதனுக்கு – உள்
புத்தியில் சூடு வலிக்கிறது (காகிதம் …..)
இருட்டிலே கொட்ட மடிக்கிறது – ஒளி
இருப்பதைப் பொய்மை மறைக்கிறது
திருட்டிலே காலம் கடந்தவர்க்கு – இன்று
திக்கெலாம் அச்சம் அடைக்கிறது (காகிதம் …..)
பதுக்கிய செல்வம் கவலையென – தெருப்
பாடகன் பாட்டு ஒலிக்கிறது
செதுக்கிய சிற்பம் சிரிப்பதுபோல் – என்
சிந்தனைத் தூய்மை இருக்கிறது (காகிதம் …..)
ஆயிரம் செல்வ மிருந்தாலும் – அது
அமைதியை என்றும் தருவதில்லை
வாயிலும் உள்ளும் ஒளியிருந்தால் – எந்த
வழியிலும் செல்ல பயமுமில்லை (காகிதம் …..)
(21.11.2016 06.30 am)