மீ. விசுவநாதன்

ram

தருமத்தின் தோற்றமென இராமனையே காணும்
தரணியிலே பிறந்ததற்குப் புண்ணியங்கள் செய்தோம் !
கருமத்தை, பக்தியினை, கருணையின் சார
கல்யாண குணமான நட்பினது ஆழ
உருவத்தைக் கண்டன்றோ உயிராக எண்ணி
ஒவ்வொரு நொடியிலுமே உள்ளொளியைப் பெற்றுக்
கருவத்தை அழிக்கின்றோம் ; கவலையையும் இன்பக்
கடமையென ஏற்கின்றோம் ஸ்ரீராமன் பேரால் ! (1)

மனிதனென வந்ததால் மண்ணிலுள்ள மாய
வகையெல்லாம் அனுபவித்தான்; ஆசையையும், ராஜ
பனிபோன்ற வேடத்தின் பளுவினையும் நித்தம்
பட்டுத்தான் தெளிந்தானே பாசமிகு வள்ளல் !
தனியாக இருக்கின்றான் தவிக்கின்றான்; சீதை
தவத்தாளை மீட்டுவுடன் பிரிகின்றான்; பின்னே
இனிதாகப் பல்லாண்டு தர்மநெறி மாறா
இயல்போடு ஆட்சியினை பொறுப்புடனே செய்தான் ! (2)

பெற்றோரின் சொல்கேட்போர் எல்லோரும் ராமன் !
பிரியமுடன் இருப்போர்கள் எல்லோரும் ராமன் !
கற்றோரை மூத்தோரைப் பணிவோர்கள் ராமன் !
கடமைக்காய் தர்மநெறி காப்போர்கள் ராமன் !
மற்றோரின் கவலைகளைக் களைவோர்கள் ராமன் !
மனிதகுணம் மேலோங்கி வாழ்வோர்கள் ராமன் !
சுற்றமென அன்புதனைப் பெற்றவர்கள் ராமன் !
சுதந்திரமாய் நற்கருத்தை மதிப்போர்கள் ராமன் ! (3)

( 21.10.2016 08.24 am )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.