Author: க. பாலசுப்பிரமணியன்

  • ஆறுபடை அழகா…. (1)

     

     

    திருப்பரங்குன்றம்

    பரங்குன்றப் பொருளான பரமனுடன் பார்வதியும்

    பண்ணோடு இசையாகிப் பரந்தாமன் திருமகளும்

    பங்கயத்தை விட்டெழுந்து  பாட்டிசைக்கக் கலைவாணி

    பாரெல்லாம் சேர்ந்ததுவே பரங்குன்றத் திருமணமே !

     

    தெய்வானை கைப்பிடிக்கும் திருக்காட்சி கண்டிடவே

    தேவர்கள் சேர்ந்திட்டால் தென்மதுரை தாங்கிடுமோ

    தினம்தோறும் காட்சிதரத் திருவுள்ளம் கொண்டவனே

    திரிபுரமும் போற்றிடுமே திருவருளே  திருக்குமரா !!

     

    கல்லாக இருந்தாலும் கருணையின் ஊற்றனறோ

    கந்தாவென அழைத்ததுமே கடுந்துயரும் விலகுமன்றோ

    கண்விழியின் அசைவினிலே கோள்விதிகள் மாறுமன்றோ

    குன்றுள்ளே மறைந்தாலும் கைகொடுப்பது குகனன்றோ!

     

    குறைநீங்க உனைவேண்டித் தவமிருந்தான் நக்கீரன்

    குறைநீக்கி அருள்தந்தாய் பொய்கையிலே பூத்தவனே

    ஆறுபடை போதாதென்று பாடவைத்தாய் அருந்தமிழில்

    ஆற்றுப்படை கேட்டிருக்க அண்டமெல்லாம் ஆடிடுமே !

     

    வலம்வந்து காத்திருப்பேன் வாசலிலே உனைத்தேடி

    வரமொன்று கேட்டிடவே வார்த்தைகள் ஏதுமின்றி

    வளர்கின்ற நாட்களிலே வருந்துயர்கள் நீக்கிடவே

    வாவென்று அழைக்குமுன்னே வந்தருள்வாய் வேலவனே !

     

    Share
  • தீபாவளி – மலரும் நினைவுகள்

    க. பாலசுப்பிரமணியன்

    நினைவலைகளில் முழுகி எழுந்திருக்கும்பொழுது -1957 – மதுரையிலே எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த நேரம்.. தீபாவளிக்கு சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்களின் துவக்கம்.. வீடு தோறும் பாட்டாசுகள். ஒரு பத்து ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு சென்றால் ஒரு பெரிய சாக்குப் பை நிறைய பட்டாசுகள்… வகை வகையாய் … ஓலை வெடியை வைத்துக்கொண்டு நித்தம்… காலையும் மாலையும் – கைகளிலெல்லாம் வெள்ளை வெளேரென்று பட்டாசு மருந்துகள்…

    “போய் கையை நல்லா சோப்பு போட்டு அலம்பிக்கொண்டு அப்புறம் சாப்பிட வா…” அன்னையின் ஆணை.

    நான்கு நாள் முன்னதாகவே பட்சணங்கள் தயாரிக்கும் பெரியவர்கள்… கைமுறுக்கு சுற்ற நாலு பேர்…

    “அம்மா.. அம்மா.. நானும் சுத்திப் பார்க்கட்டுமா”

    “வேண்டாம்.. தள்ளிப்போடா .. எண்ணை கொதித்துக்கொண்டிருக்கின்றது.. தண்ணி பட்டு வெடித்து விடப்போகின்றது…”  அப்போதுதான் டபால் என்று ஒரு சத்தம்.. சில நீர்த் துளிகள் எண்ணையில் தெளித்து ..

    “அய்யயோ ,, கையில் கொதிக்கிற எண்ணை தெளித்து விட்டது….. போய் அந்த இட்லிமாவை எடுத்து அங்கே போடு.. “

    ‘டேய்.. இந்தாடா. ” ஒரு பாதி வெந்த கைமுறுக்கை கையில் கொடுத்த அத்தை ” இது நல்ல மெதுவாக இருக்கும்.. ” அந்தச் சுவை இன்னும் நாவினில்..

    காலங்கள் ஓடுகின்றன… சில ஆண்டுகள் நகர.. பத்தாவது வகுப்பு..

    “அம்மா.. காலையில் சீக்கிரம் எழுந்து நாலு மணிக்கே பட்டாசு விடணும்…”

    மூன்று மணிக்கே தூக்கம் களைந்து விட , குளிக்கும் அறையில் ஒரு பெரிய பித்தளைப் பானையில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருக்கின்றது..

    “கொஞ்சம் அந்த விறகடுப்பை ஊதிவிடேன்.. ” இது பாட்டி.  தன்னுடைய அரைகுரைப் பார்வையை வைத்துக்கொண்டு ..

    அந்தப் பித்தளை ஊதுகுழலை வைத்து ஈரமான விறகில் மெதுவாக எரிந்துகொண்டிருக்கும் அக்கினி பகவானோடு .  பேசிக்கொண்டு. சில நேரங்களில் கண்ணனைப் போல் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு…

    “வரிசையாய் உட்காருங்கோ எல்லாரும்..:” நான், என் தம்பி, அத்தை குழந்தைகள் இருவர்.. “எனக்கு முதலில்.. எனக்கு முதலில்”.  இன்றும் நினைவில் சண்டைகள்… அழுகை..  “டேய், தீபாவளியும் அதுவுமா காலையிலே அழாதீங்கடா…”

    உறவுகள் வலுவாக இருந்த காலம்.. தேவைகள் குறைவாக இருந்த காலம்.. மகிழ்ச்சி நிரம்பியிருந்த காலம்…

    ” என்னுடைய கம்பி மத்தாப்பு சரியா எரியலை.. உன்னோடுதைக் கொடேன் ” என்று ஒருவன் கெஞ்ச ” அதெல்லாம் தர முடியாது ” என்று சொன்னவன் எங்கேயோ பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது அவன் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த முறத்திலிருந்து ஒன்றைத் திருட…

    வாழ்க்கை இனித்தது .. இனிப்புக்களை விட அதிகமாய்..

    இன்னிக்கு என்ன படம் ரிலீஸ்?  முதல் நாள் முதல் காட்சி போவதற்கான முயற்சிகள்…

    சிவாஜியும் பண்டரிபாயும் சேர்ந்து நடித்த அவள் யார் என்ற படம். நண்பகல் காட்சிக்காக காலை எட்டு மணிக்கே வரிசையில் நின்று..

    “டேய்.. அங்கே பாருடா… ஏறிக்குதிக்கிறான்.. ” என்று வரிசைக்காகச் சண்டைபோட்டு, தீபாவளிக்கான புதிய சட்டையைக் கிழித்துக்கொண்டு…

    நினைத்துப்பார்த்தால் வாழ்க்கை முழுமையாய்.. எத்தனை பாடங்களைச் சொல்லிக் கொடுத்தது.!!

    அடுத்த வருடம்…

    ” பாட்டி என்ன களிமண்ணா அங்கே…”

    “வெந்நீர் போடற மண்ணடுப்பு உடைந்திருக்கு .. ஒரு புது அடுப்பு பண்ணலாமென்று”

    “நான் பண்ணட்டுமா…” அந்தக் களிமண்ணோடு போராடி ஒரு அடுப்பை வடிவமைத்து.. ஒரு தொழில்நுட்ப பொறியியல் பட்டமே பெற்றிருக்கலாம்.

    காலங்கள் ஓடின..

    கல்லூரிக் காலம்… பட்டாசு மோகம் குறைந்து.. என்ன டிரஸ்?.. பெல் பாட்டம் பாண்ட் .. முழுக்கைச் சட்டை…

    “டிரஸ் சூப்பராக இருக்கே…” இது ஒரு சொந்தக்காரரின் நக்கலான வார்த்தைகள்…

    ஒரு முறை திருவல்லிக்கேணியில் குடியிருப்பு. நான்கு குடித்தனங்கள்… “ஹலோ , நண்பரே .. இந்த வருஷம் உங்க வீட்டிலே என்ன ஸ்வீட்?”

    “எனக்குத் தெரியாது.”

    “ஒரு ஐடியா பண்ணினால்  என்ன… மொத்தமா நாலுபேர் வீட்டுக்கும் சேர்த்து கோதுமை அல்வா பண்ணினால் .. “

    யோசனை வலுத்தது.  நாலு ஆண்கள் சேர்ந்து… ஒருவர் கோதுமையை ஊற வைத்து  ஆட்டுக்கல்லில் அரைத்து பாலெடுக்க, இருவர் அடுப்படியில்,,,

    “ரொம்ப நன்றாக வந்திண்டிருக்கே  ..” பக்கத்துக்கு வீட்டு மாமியின் கண் பட…

    கடைசி நேரத்தில் அல்வா கொஞ்சம் இறுகி விட…. அது “சாக்லேட் அவதாரத்தில் வெளியே வர…

    தீபாவளி இனித்தது.. அந்த சாக்லேட்டைப் போல…

    இன்று…

    “என்னங்க…” இது என் மனைவி… ” நாளைக்கு தீபாவளி… சீக்கிரம் கடைக்குப்போய் ஏதாவது ஸ்வீட்டும் மிக்ச்சரும் வாங்கிண்டு வாருங்க..

    காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.. பல நேரங்களில் மலரும் நினைவுகளில் நாம் மகிழ்வோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். !

    தீபாவளி வாழ்த்துக்கள் !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே  41

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களைக் கண்டு ஏன் பின்வாங்குகின்றோம்?

    வாசுவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவன் நன்கு படித்தவன். புத்திசாலி. ஆனால் அவனுக்கு தான் ஒரு புத்திசாலி என்ற எண்ணம் சற்றே தலைதூக்கி இருக்கும்.  எதற்கெடுத்தாலும் “எனக்குத் தெரியாததா என்ன?” “இதிலே என்ன புதுசா இருக்கு?”  என்று தேவையற்ற தர்க்கம் செய்து மற்றவர்களை நோகடிக்கும் மனப்பான்மை அவனுக்கு உண்டு. அதிலே அவனுக்கு ஒரு மகிழ்ச்சி.  சில நேரங்களில் அவன் தன்னுடைய தோழர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது “போனவாரம் நாம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபொழுது ..” என்று ஆரம்பித்தவுடன் அவனுடைய நண்பர்கள் தங்களுடைய சிரிப்பை உள்ளடக்கிக்கொண்டு  பரிதாபமாக அவனை ஒரு மனநோயாளியைப் போல் பார்ப்பார்கள். எவ்வளவு திறமை இருந்தாலும் தொழிலில் அவனால் முன்னேற முடியவில்லை. அவன் வேலைபார்க்கும் நிர்வாகிகள் இவனுடைய மனப்போக்கை ஏற்றுக்கொள்ளவில்லை. எத்தனை முறை எடுத்துக்காட்டியும் வாசு மாற மறுக்கிறான். அவனுடைய ‘தான்’ என்ற ஆணவப் போக்கு அவனுடைய வீழ்ச்சிக்கு காரணமாகவும் முன்னேற்றத்திற்குத் தடையாகவும் இருக்கிறது. மாற்றங்களைப் பற்றி அவனுடன் பேசினால் “மன்னிக்கவும். நான் இப்படித்தான். என்னால் மாற முடியாது.” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிடுவான்.

    செந்தில் இதற்கு முற்றிலும் மாறுபட்டவன். “அய்யா. ஒத்துக்கொள்ளுகின்றேன். மாற்றங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு மாற்றத்திற்கும் நான் விலைபோக முடியுமா.” என்று மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றான். “இல்லை செந்தில், நீ மாறவில்லையென்றால் வாழ்க்கையில் பின் தங்கிவிடுவாய்’ என்று எடுத்துச் சொன்னால் “அதெல்லாம் எனக்கு கவலையில்லை. மாற்றத்தைக் கண்டு என்னால் ஆட்டத்தை மாற்ற முடியாது” என்று தர்க்கம் செய்பவன். இந்த ஒத்துழையாமைப் போக்கினால் பல சந்தர்ப்பங்களில் அவன் பின் தள்ளப்பட்டிருப்பது அவனுக்குத் தெரியும்.

    ஆனந்த் இன்னொரு வகையில் தோல்விகளை வரவேற்பவன். “நான் எதற்கு அய்யா மாறவேண்டும்? “என்னுடைய நிறுவனத்தில் என்னை வேலைக்குச் சேர்த்தபோது கொடுக்கப்பட்ட பத்திரத்தில் அதெல்லாம் எழுதப்படவில்லை. இவர்கள் நாளைக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவார்கள். இதைச் செய் அதைச் செய் என்று சொல்லுவார்கள். இதனால் எனக்கு என்ன கிடைக்கபோகின்றது?” என்று சட்டங்கள் பேசி தன்னுடைய ஆதிக்கப் போக்கை நிலைநிறுத்த முயலுபவன். பல ஆண்டுகளாக செய்ததையே திரும்பத் திரும்பச் செய்து புதியதைக் கற்றுக்கொள்ளவும் அதன் தாக்கங்களை ஏற்றுக்கொள்ளவும் தயங்குபவன். சற்றே இவன் ஒத்துழைப்புள்ளவனாக இருந்திருந்தால் முன்னேற்றப் பாதையில் வேகமாகச் சென்றிருக்க வாய்ப்புக்கள் நிச்சயம் இருந்தது.

    தேவகிக்கு அவளுடைய நிறுவனத்தில் நல்ல பெயர். அவள் ஒரு நல்ல உழைப்பாளி. ஆனால் சில குடும்பச் சூழ்நிலைகளால் தன்னுடைய தொழில் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. “அய்யா, நான் மாற்றங்களைப் பற்றி நன்கு அறிவேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அது சரி. ஆனால் இந்த மாற்றங்களை நான் ஏற்றுக்கொண்டு நிகழ்வுபடுத்தினால் எனக்கு என்ன லாபம்? புதிய பதவி கொடுக்கப் போகின்றார்களா? அல்லது ஊதிய உயர்வு கொடுக்கப் போகின்றார்களா? அல்லது டாக்டர் பட்டம்தான் கிடைத்துவிடப்போகின்றதா?” என்று கேள்விக்கணைகளை சொருகி நம்மைத் திக்குமுக்காடச்  செய்திடுவாள். “பிரச்சனைகளை ஏற்படுத்தாதே. அந்த அம்மாவை விட்டுடுப்பா” என்று மேலதிகாரிகள் தங்களுடைய அடுத்த அடுக்கு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறுவர்.

    தேவகியின் முன்னேற்றம் அவளுடைய   சிந்தனைகளின் சில சறுக்கல்களால் தடைப்படுகிறது. மாற்றங்களுக்கும் கற்றல்களுக்கும் தங்களுடைய ஊதியத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை அவள் உணரவில்லை. எந்தப் பதவியில் இருந்தாலும் என்ன ஊதியம் பெற்றாலும் மாற்றங்களும் அவைகளைச் சார்ந்த கற்றல்களும் வளர்ச்சியின் சில நிர்பந்தங்கள் என்பதை அவள் புரிந்துகொள்ளவில்லை.

    சினேகாவுக்கு சற்றே பயந்த குணம். “நாம் புதிதாக ஏதாவது முயன்று அதில் தவறுகள் ஏற்பட்டால் அதன் விளைவுகளை யார் சந்திப்பது? தெரிந்ததைத் தெரிந்தபடி சிறப்பாகச் செய்துகொண்டிருந்தால் போதாதா? நமக்கு எதற்கு வம்பு, நாளைக்கு ஆயிரம் பதில் சொல்லவேண்டியிருக்கும்” என்று ஒதுங்கி நிற்பவள். திறமைகள் இருந்தும் அவள் பய உணர்வு அவளை முயற்சிக்கவே  விடாமல் தடுக்கின்றது.

    இனியன் -அவன் பெயருக்கு ஏற்றாற்போல் மற்றவர்களுடன் பழகுவதற்கு இனியன். நண்பர்கள் அதிகம். அவனைத் தேடியே நண்பர்கள் வருவார்கள். ஆனால் கொடுத்த வேலையைச் செய்யக்கூடியவன். தானாக முன்வந்து எதையும் செய்யமாட்டான்.” என்ன தம்பி, உங்க நிறுவனத்தில் புதிய பல முறைகளைக் கொண்டுவந்திருக்கின்றார்கள் போல் இருக்கிறதே” என்று ஒரு பெரியவர் அவனிடம் கேட்க ” ஆமாம் அய்யா, உண்மைதான். கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். யாராவது முதல்ல செய்த பின்பு அதோட விளைவு என்ன என்று பார்த்த பின்பு அதற்குப் பின் நான் முயற்சி செய்யலாமென்று நினைக்கின்றேன்.”

    மாற்றங்களைத் தவிர்ப்பதற்கும் மாற்றங்களைவிட்டு ஒதுங்கி தனித்து நிற்பதற்கும் பல காரணங்கள் உண்டு.

    1. என்னால் முடியாது ( I can’t)
    2. எனக்கு அவசியமில்லை. (I won’t)
    3. இதனால் எனக்கென்ன லாபம்? ( (What do I get?)
    4. உள்ளதும் போய்விடுமோ? (What if I lose?)
    5. பொறுத்திருந்து பார்ப்போமே! ( I will wait and see)

    ஆனால் மாற்றங்கள் இவர்களுடைய ஒப்புதலுக்காகவோ நாளைய வெற்றிக்காகவோ காத்திருப்பதில்லை.

    இதை நாம் உணர்ந்துவிட்டால் மாற்றங்களின் வழியாக நம்முடைய முன்னேற்றத்திற்கான ஏணிப்படிகளில் நாம் எளிதாக ஏற முடியும்.

    முயன்று பார்ப்போமா?

    (தொடரும் )

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 40

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களை ஏன் எதிர்கொள்ள வேண்டும்?

    ஒரு சிறிய நண்பர்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஒருவர் அனைவருக்கும் தெரிந்த ஒரு நண்பரின் நிலையைக் குறிப்பிட்டும் சொல்லும் பொழுது கூறினார் “அவர் வாழ்ந்து கெட்டவர். ஒரு காலத்தில் தன்னுடைய தொழிலில் மிகச் சிறப்பாக முன்னணியில் இருந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் தொழில் எடுபடவில்லை. பல புதிய புதிய தொழிலில் பல புதிய தயாரிப்பு முறைகளும் விளம்பரத் தேவைகளும் வந்துவிட்டதால் அவர் தொழில் படுத்துவிட்டது. தனது தொழில் என்றும் படுக்காது என்ற அசைக்கமுடியாத தன்னம்பிக்கையில் இருந்த அவர்   தோல்வியில் துவண்டு ஒரு மனநோயாளியாகவே ஆகிவிட்டார்.”  இந்த நிலை இன்று பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தோல்வியை எதிர்பார்க்காத பலர் அதைச் சந்திக்கும் பொழுது அதை எதிர்கொள்ள முடியாத நிலையில் தங்களுடைய வெளிமதிப்பு காலாவதியாகிவிடுமோ என்ற பயத்தில் தங்கள் தன்னம்பிக்கையை இழந்து வாழ்வின் முடிவுக்கே சென்று விடுகின்றார்கள். இதற்கு என்ன காரணம்?

    நாமெல்லாம் இன்று மாறிவரும் சமுதாயத்தின் அங்கத்தினர்களாக இருக்கின்றோம். மாற்றங்கள் என்றும் நிரந்தரமானவை. ஆனால் இன்று மாற்றங்களின் வேகம் அதிகரித்து விட்டது. இன்றைய அறிவுசால் சமுதாயத்தின்(Knowledge society)  காலச்சக்கரம் சில வாரங்கள் என்ற ஒரு கணிப்பினை சமூகவியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் பொருள் என்ன? சில அறிவுத்திறன்களின் தேவைகளும் தாக்கங்களும் பயன்முறைகளும் சில வாரங்களுக்குள் முடிந்து விடுகின்றன. அவைகளுக்கு புதிய அறிவுத்திறன்களும் அவற்றைச் சார்ந்த செயல்திறன்களும் விடைகொடுத்து விடுகின்றன. எனவே இத்தகைய மாற்றங்களுக்கு நாம் நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும். இந்தவகையான மாற்றங்கள் தொடர் நிகழ்வுகளாக இருப்பதால் நம்முடைய கற்றலும் திறன் ஈட்டல்களும் தொடர்ச்சியாக இருத்தல் அவசியமாகின்றது.

    சுமார் நாற்பது-ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய ஊர்திகள் (Cars) ஓட்டும்பொழுது நாம் இயந்திர பிரேக்குகளை  (Mechanical Brakes) உபயோகித்து வந்தோம். அந்த நிலை மாறி தற்பொழுது மின்னணுக்களால் இயக்கப்படும் (electronic brakes) பிரேக்குகளை உபயோகிக்கின்றோம். பழைய ஊர்திகளை பழுது பார்க்கும் மெக்கானிக்குகள் கூட இன்று கிடைப்பதில்லை. நாம் உபயோகித்த வானொலிப்பெட்டிகள் காணாமல் போய்விட்டன. நாம் பார்க்கின்ற தொலைக்காட்சி பெட்டிகளில் பலவித புதுமைகள் இணைக்கப்பட்டு விட்டன. நாம் ஒருகாலத்தில் உபயோகித்த தொலைபேசிகள் அருங்காட்சியகத்திற்குத் தேவையான பொருள்களாகி விட்டன. புதிய அலைபேசிகள் ஆதிக்கத்திலும் தாக்கத்தாலும் நம்முடைய சிந்தனைத்திறன்களும் செயல்திறன்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகின்றன. இதனுடைய தாக்கம் நமது மாணவர்கள் கற்கும் முறைகளிலும் செயலாற்றும் முறைகளிலும் ஏற்பட்டுக்கொண்டு வருகின்றது. அது மட்டுமின்றி, நமது வாழ்க்கைப் பாதைகளையும் மாறிவரும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் மாற்றங்கள் மிகுந்த அளவில் பாதித்து விட்டன. இதன் காரணமாக நாம் செய்யும் தொழில்களில் தொடர்ந்து மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்.

    எனவே இந்த மாற்றங்களில் நாம் பங்கீட்டாளர்களாக (Stakeholders) இல்லாவிட்டால் அவைகள் நம்மைப் பின்தள்ளிவிட்டு முன்னே சென்றுகொண்டிருக்கும். சிஸ்கோ (CISCO) என்ற ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர் ஒருமுறை தனது பேச்சினில் குறிப்பிட்டார்: “இனி வரும் சமுதாயத்தில் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களைப் பின் தள்ளுவதற்கான வாய்ப்பு குறைவே; ஆனால் வேகமாகக் கற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் மெதுவாகக் கற்றுக்கொள்ளும் நிறுவனங்களைப் பின்தள்ளிவிடும்.” ( In the Knowledge society, the big will not swallow the small, but the faster will swallow the slower).

    மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத நபர்கள், நிறுவனங்கள் மாற்றும் தொழில் அமைப்புக்கள், மாற்றங்களை முன்கூட்டியே நுகராத நபர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புக்கள் தங்களுடைய தோல்விகளுக்கும் வருங்காலச் சீரழிவுக்கும் தாங்களே வித்திட்டுக்கொள்ளுகின்றன. மாற்றங்களை நுகர்தலும், அறிதலும், அவற்றை ஏற்றுக்கொண்டு புதிய சிந்தனைகளையும் வழிமுறைகளையும் நடைபடுத்திக்கொள்ளுதலும், தோல்விகளைத் தவிர்ப்பதற்கு மட்டுமின்றி வருங்கால வெற்றிகளுக்கு வித்தாகவும் அமையலாம்.

    பழமையைப் பாராட்டுதலும், பழமையைப் போற்றுதலும், பழமைச் சின்னங்களைப் பாதுகாத்தலும் எவ்வளவுக்கெவ்வளவு அவசியமோ அவ்வளவுக்கவ்வளவு புதுமையை  ஏற்றுக்கொண்டு முன்னேற்றப்பாதையில்  செல்லுவதற்குத் தயார் செய்து கொள்ளவேண்டும். மாற்றங்களை ஏற்க மறுப்பவர்கள் மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களுடைய முன்னேற்றத்திற்கு தடைக்கற்களை தாங்களே முன்வைத்துக்கொள்கின்றார்கள்.

    மாற்றங்கள் நம்முடைய ஒப்புதலுக்காகவோ அல்லது விருப்பு வெறுப்புக்களுக்காகவோ காத்திருப்பதில்லை அல்லது பணிவதில்லை. அவைகள் இயற்கையின் மற்றும் மனித சிந்தனை வளர்ச்சியின் வெளிப்பாடுகள். நம்முடைய வேகத்தைக் கணித்து அவைகளுக்காகத் தங்களுடைய வேகத்தை அவைகள் சமன் செய்துகொள்வதில்லை. நாம் நமது தேவைகள் மற்றும் நிர்பந்தங்களுக்கேற்றவாறு இந்த மாற்றங்களின் வேகத்தை கணித்து முன்செல்லவேண்டும். மறுத்தால், நம்முடைய சமூக, பொருளாதார மற்றும் தொழில் துறைகளில் தொடர்ந்து தோல்விகளைத் தழுவ வேண்டியிருக்கும்.

    மாற்றங்கள் இயற்கையின் நியதி. மாற்றங்களைத் தவிர வேறெதுவும் மாறுவதில்லை என்பது முதுமொழி. வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிக் கூறிய வள்ளுவர் தந்த குறள் இந்த மாற்றங்களின் ஆதிக்கத்திற்கு இன்னொரு சான்று.

    இன்றிருப்பார் நாளையில்லை என்னும்

    பெருமை உடைத்து உலகு.

    மாற்றங்கள் என்பது நமது பார்வைகளின் மற்றொரு கோணம். மாற்றங்கள் நமது சிந்தனைகளின் இன்னொரு புதிய வெளிப்பாடு. எனவே மாற்றங்களைக் கண்டு நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் இந்த மாற்றங்கள் நம்முடைய கலாச்சார அடிப்படைகளைத் தாக்காத வண்ணமும் நம்முடைய பாரம்பரியங்களை சின்னா பின்னமாக நசுக்கி விடாத வண்ணமும் நாம் அவற்றை ஏற்று புத்திசாலித்தனமாக நிலைநிறுத்த வேண்டும்.

    மாற்றங்களால் நமக்கு ஏற்படும் இழப்புக்கள் தோல்விகள் அல்ல. அவைகள் நம்முடைய செயல்திறன்களில் உள்ள சிறிய குறைபாடுகளே. பலருக்கு நம்மால் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற ஒரு பயமும் சந்தேகமும் ஏற்படுகின்றது.

    இதை விளக்கும் வண்ணம் ஒரு மேலைநாட்டு மனநல நிபுணர் கூறுகின்றார்: “நாமெல்லாம் கோவிலில் ஒரு கயிற்றால் கல்தூண்களில் கட்டப்பட்ட யானையைப் போன்றவர்கள். அந்த யானை நினைத்தால் அந்தக் கயிற்றை ஒரு நொடியில் அறுத்துக்கொண்டு வெளிவர முடியும். ஆனால் நாம் கட்டப்பட்டுள்ளோம் என்ற ஒரு எண்ணம்  அதன் மனதில் இருக்கும் வரை அது அந்த இடத்தை விட்டு நகராது. அதுபோல் நம்மில் பலர் நம்முடைய வளர்ச்சியை சில சிந்தனைகளால் கட்டுப்போட்டிருக்கின்றோம். அந்த சிந்தனைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளுதல் அவசியம். இதைக் கற்றலின் இயலாமை (Learned Helplessness) என அழைக்கலாம்.”

    உண்மைதானே?

    நாமும் புதிய தரமான சிந்தனைகளையும் மாற்றங்களையும் பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப் பழகலாமே !

    (தொடரும்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 39

    க. பாலசுப்பிரமணியன்

    தோல்விகளுக்கு யார் காரணம் ?

    பல நேரங்களில் நாம் நம்முடைய தோல்விகளுக்கு மற்றவர்களைப் பொறுப்பாக்குகின்றோம். எப்பொழுதுமே நமது தோல்விகளுக்கு நாமே காரணமாக இருக்கின்றோம் என்பதை உணருவதில்லை அல்லது உணர மறுக்கின்றோம். தோல்விகளில் நம்முடைய பங்கு எவ்வளவு உண்மையானது என்பதை உணர்ந்தால் தன்னுடைய சுய கௌரவத்திற்கு தாக்குதல் ஏற்படுமோ என்ற பயத்தில் உண்மையிலிருந்து விலகி நிற்கின்றோம்.  மற்றவர்கள் நம்முடைய தோல்விக்காக நாம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நாம் ஏன் மற்றவர்களை நம்முடைய தோல்விகளுக்கு பொறுப்பாக்குகின்றோம்? இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

    1. நாம் நம்முடைய சுய தனித்திறன்களை அறிந்து கொள்வதிலும் . நம்முடைய தனித்திறன்கள் மீதும் நம்பிக்கை வைப்பதில்லை. அவைகளைக் குறைத்து மதிப்பிடுகின்றோம். அல்லது நமது திறன்கள் விலைபோகுமா என்ற ஒரு சந்தேகம் நமக்கு இருந்து கொண்டே இருக்கின்றது. நாம் நம்மை மற்றவர்களிடம் ஒப்பிடும் பொழுது பல நேரங்களில் நமது திறன்கள் மீது நாம் கொண்ட பார்வை துல்லியமாக இல்லாமல் பாரபட்சமாகவோ அல்லது ஒருவித தயக்கத்துடனோ இருக்கின்றது. இதை மற்றவர்கள் அறிந்து தங்களுடைய நம்பிக்கைகளின் அடிப்படையிலும் தங்களுடைய புத்திசாலித்தனமான உள்ளீடுகள் மூலமாகவும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிவிடுகின்றனர்.
    1. வெற்றிப்பாதைகளுக்கு ஏற்றவாறு நாம் நமது திறன்களை புதிப்பித்துக்கொள்வதில்லை. பல நேரங்களில் நாம் நம்முடைய பழைய அறிவுகள், சிந்தனைகள், கற்றல்கள், திறன்கள் ஆகியவற்றை பெரும் சொத்தாக நினைத்து அவைகளின் அடிவாரகங்களில் கட்டப்பட்ட மாளிகைகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காலப் போக்கில் இவைகள் உபயோகமற்றவைகளாகவும் தேவையற்றவைகளாகவும்  மாறி நமக்கு உதவாமல் உளுத்துப் போகின்றன. வேகமாக மாறிவரும் அறிவு மற்றும் திறன்களின் சந்தையில் நாம் தனிமரமாக தோல்வியின் சின்னமாக நின்றுவிடுகின்றோம். இதற்கு யார் பொறுப்பு? மற்றவர்களோ தங்கள் அறிவினையும் சிந்தனைகளையும் திறன்களையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாகக் கூர்மையாக்கிக் கொண்டு வருகின்றனர்.  வெற்றிக்கனியை பிடிப்பதற்குத் தங்களை தயார் செய்து கொண்டு வருகின்றனர். பல நேரங்களில் அவர்கள் நம்மை விட அனுபவத்தில் குறைந்தவர்களாகவும் வயதில் குறைந்தவர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. அந்த நேரங்களில் நாம் அவர்களைக் கண்டு பொறாமை கொண்டோ அல்லது வெறுப்புக் கொண்டோ அவர்களை நம்முடைய தோல்விகளுக்கு காரணமாகக் காட்டுகின்றோம். இதை வெல்ல ஒரே ஒரு வழி – நித்தம் நம்முடைய அறிவையும் திறன்களையும் சீர் செய்து கொண்டு இருப்பதுதான் !
    1. தோல்விகளைக் கண்டு துவளாமல் உயர்வது எப்படி என்று நாம் சிந்திப்பதில்லை.  ஒருமுறை எட்மண்ட் ஹில்லாரி (Edmund Hillary) எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக தன்னுடைய முதல் முயற்சியை மேற்கொண்ட பொழுது தோல்வியைத் தழுவினார். அவர் இமயத்தை விட்டு கீழே இறங்கியதும் அந்தச் சிகரத்தை ஒரு முறை நோக்கி சொன்னார்: ” நீ இதைவிட பெரியதாக உயரமுடியாது. ஆனால் நான் இப்பொழுது இருப்பதைவிட பெரியவனாக உயர முடியும்.” என்னே! ஒரு மனப்பான்மை. தோல்விகள் நமக்கு கற்றலையும் துணிவையும் கொடுக்கக்கூடியவை. அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளாமல் மற்றவர்களை அந்தத் தோல்விக்கு காரணமாக ஆக்குவது நமது குறுகிய மனப்பான்மையையும் நமது இயலாமையின் வெளிப்பாட்டையும் காட்டுகின்றது.
    1. சில நேரங்களில் தோல்விகளின் தாக்குதல்களிருந்து விடுபட நாம் மாறுபட்ட சிந்தனைகளைக் (Out of Box thinking) கையாள வேண்டும். நேர்கோட்டுச் சிந்தனை (Linear thinking) முறைகள் பல நேரங்களில் பயன் அளிப்பதில்லை. எனவே ஒவ்வொரு நேரத்தில் எப்படிப்பட்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று சிந்தித்து அதற்குத் தக்கவாறு கையாள வேண்டும். செகப்பிரியர் (Shakespeare) எழுதிய “வெனிஸ் நாடு வியாபாரி” (The Merchant of Venice) என்ற கதையிலே தன்னுடைய தேவைக்காக ஷைலக் (Shylock) என்பவரிடம் ஒரு தொகையைக் கடன் வாங்கிய அன்டோனியோ (Antonio) என்பவர் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அந்தக் கடனைத் திருப்பித் தருவதாக வாக்குறுதி அளிக்க, அது தவறினால் தன்னுடைய இதயத்திலிருக்கும் சந்தையிலிருந்து ஒரு பவுண்டு சதையைத் தருவதாக வாக்குறுதி அளிக்கின்றார். குறிப்பிட்ட காலத்தில் அந்தப் பணத்தை திருப்பித் தர முடியாததால் ஷைலக் ஒரு பவுண்டு இதயச் சதையைக் கேட்க பல நண்பர்கள் அதற்குப் பதிலாக பலமுறை அதிகமாகப் பணம் தருவதாகவும் தன்னுடைய கோரிக்கையைக் கைவிட்டுவிடுமாறும் ஷைலக்கை கேட்கின்றனர். இதற்குப் பணியாத அந்த வியாபாரி ஷைலக்கிடம் மாறுவேடத்தில் ஒரு வழக்குரைஞராக வந்த போர்ஷியா (Portia) என்ற பெண் அந்தக் கோரிக்கையை ஏற்று “உங்களுக்கு ஒரு பவுண்டு இதயச் சதை நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால் அதை எடுக்கும் பொழுது ஒரு துளி இரத்தம் வந்தாலும் உங்களுடைய பணம் மட்டுமின்றி உங்கள் வாழ்வும் போய்விடும் என்று கூறி அந்த வழக்கை வென்று விடுகின்றார். இந்த கதை ஒரு மாறுபட்ட சிந்தைக்கு (Lateral thinking) முகாந்திரமாக அமைகின்றது. பல நேரங்களில் மாறுபட்ட சிந்தனைகள் பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தோல்விகளைத் தவிர்ப்பதற்கும் ஏதுவாக அமைகின்றது.
    2. தோல்விகள் நிரந்தரம் அல்ல; மற்றும் தோல்விகள் ஒரு முடிவின் வெளிப்பாடு அல்ல. வாழ்க்கை என்ற பயணத்திலும் முன்னேற்றம் என்ற பாதையிலும் தோல்விகள் சில நேரங்களில் தடைக்கற்கள். அவைகளைக் கடந்து செல்ல நாம் பயில வேண்டும். இந்த வழியிலே வெற்றிகண்டவர்கள் சரித்திரம் படைக்கின்றார்கள் ஆபிரஹாம் லிங்கனின் (Abraham Lincoln) வாழ்க்கை இதற்கு ஒரு சான்று. இது போன்று சரித்திரம் படைத்தவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை நமக்கு பாடங்கள் சொல்லித் தருகின்றன. அவர்கள் வழிகள் நம்முடைய பாதைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அனுபவங்கள் ஆசானாக இருக்கும்பொழுது தோல்விகளுக்குத் தோள்கொடுக்கத் துயரங்கள் வருவதில்லை. தோல்விகளைப் பாராட்டுபவர்கள் இருக்கும் இடத்திலேயே நின்று குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்பதற்கு நபர்கள் மிகக் குறைவு.

    எனவே நாம் நிமிர்ந்து நிற்கப் பழகிக் கொள்ளவேண்டும். தோல்விகளைச்  சிறிய நிகழ்வுகளாகக் கருதி மேலே வாழ்க்கைப் பயணத்தைத் தொடர கற்றுக்கொள்ள வேண்டும்.

    என்ன, முயன்று பார்க்கலாமா ?

    (தொடரும் )

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே  38

    க.பாலசுப்பிரமணியன்

    தோல்விகள் நமக்கு என்ன சொல்லித் தருகின்றன?

     தோல்விகளும் தவறுகளும் கற்றலுக்கு அடிப்படை எனக் கருதப்படுகிறது. தோல்விகளைக்கண்டு துவளாமல் தவறுகளைக்கண்டு கலங்காமல் அவற்றிற்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து அந்தத் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற்றப் பாதையில் அடுத்த அடியை வைப்பதே வாழ்க்கையின் வெற்றிக்கு உத்திரவாதம் தரும். மாறாக, நமது கல்வித் திட்டங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் தவறுகளை சுட்டிக்காட்டி ஒருவரை அவமானப் படுத்துவதும் தரக்குறைவாக நினைப்பதும் வழக்கமாக ஆகிவிட்டது..  தவறுகள் ஏற்படக் காரணம்  என்ன, அதற்கு அலட்சியம் காரணமா, அறிதல் புரிதலில் குறைபாடுகளா , ஒருவரின் சிந்தனையில் ஏற்பட்ட குறைபாடுகளா அல்லது ஒருவரின் அணுகுமுறையில் இருக்கின்ற குறைபாடுகளா என அலசி ஆராய்ந்து அவற்றை திருத்த முயற்சிக்க வேண்டும்

    உலகின் மிகச் சிறந்த அறிவியல் மேதை ஐசாக் நியூட்டன் பல முறைகள் தவறு செய்து வெற்றிகண்ட பின் தன்னுடைய வெற்றியை பாராட்டியவகளிடம் ” இப்பொழுது  999 முறைகளில் எவ்வாறு இதைச் செய்யக்கூடாது என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று தனது தவறுகளே வெற்றிக்கு வழிகாட்டியது என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறினார் .இதே கருத்தின் பிரதிபலிப்பை நாம் ஐன்ஸ்டீன் போன்ற பல மேதைகளின் வாழ்க்கை வரலாறுகள் மூலம் அறிந்துகொள்கின்றோம். எனவே தவறுகள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல நேரங்களில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் தன் தவறுகளைத் திருத்திக் கொள்ளாத மனிதன் ஒரு மூடனாக கருதப்படுகின்றான்.

    நாமெல்லாம் உலகம் போற்றும் நோபல் பரிசுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம்.  இந்தப் பரிசினைப் பெற்றவர்களை உலகம் போற்றும் அறிவாளிகளாகக் கருதுகின்றோம். இந்தப் பரிசை நிறுவிய ஆல்பிரேட் நோபல் அவர்களின் பின்னணி என்ன?

    ஆல்பிரேட் நோபல் ஒரு மிகச் சிறந்த அறிவியல் மேதை. அவர் இரண்டாம் உலகப் போரின் பொழுது ட்ரை நைட்ரோ கிலிசரின் (Tri-Nitroglycerine) என்ற ஒரு வேதியல் பொருளால் தயாரிக்கப்பட்ட (dynamite) டைனமைட் என்ற பொருளைக் கண்டுபிடித்தார் அது  ஒரு வெடிமருந்தாக உபயோகப் படுத்தப் பட்டது. இதன் காரணமாக பல வீரர்கள் போர்க்களத்தில் உயிரிழந்தனர். அதனால் இவருடைய வேதியல் பொருளின் தேவை அதிகமானது. இவரால் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு பொருள் சேர்க்க முடிந்தது. ஒரு நாள் காலை அவர் வாழ்ந்த நகரத்தில் உள்ள காலைப் பத்திரிகையில் “மரணத்தின் தூதர் ” என்ற தலைப்பில் ஒரு இரங்கல் செய்தியும் அத்துடன் இவரது படமும் வெளியிடப்பட்டிருந்தது. அதைக் கண்ட நோபல் தன்னுடைய கண்டுபிடிப்பு எவ்வளவு தவறானது, அதனால் எப்படிப்பட்ட துன்பங்கள் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ளன என்று சற்றே சிந்தித்தார். மனம் மாறி தன்னுடைய சொத்து முழுவதையும் உலக நன்மைக்குப் பயன்படும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையிலும் அதைச்செய்தவர்களை பாராட்டிப் போற்றும் வகையிலும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதற்க்குக் கொடுத்துவிட்டார். சில நேரங்களில் தங்கள் தவறுகளை உணர்ந்தவர்கள் ஏற்படுத்திய மாற்றங்களையும் விந்தைகளை சொல்லவும் முடியுமோ ?

    கலிங்கத்துப் போரில் வெற்றிகொண்ட மாமன்னன் அசோகன் மனம் மாறி அமைதியையும் ஆக்க பூர்வமான அரசாட்சியையும் மேற்கொண்டது யாவரும் அறிந்ததே ! பல நேரங்களில் தவறுகள் குறுகிய சிந்தனைகளாலும்  தான் என்ற மமதையினாலும், ஆணவப் போக்கினாலும், அளவற்ற ஆசைகளாலும் ஏற்படுகின்றன. இது ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் நித்தம் நடக்கும் செயல்களில் வெளிப்படுகின்றன. இவைகளைக் கட்டுப்படுத்தி நாம் பொதுநலச் சிந்தனையோடு எவ்வாறு வாழ முடியும் என்று சிந்திக்க வேண்டும். அதுவே ஒரு சிறந்த வாழ்க்கைக்கு அறிகுறி.

    இந்த மாற்றங்களை வாழ்க்கையில் கொண்டு வருவது  ஒரு முடியாத செயலல்ல. ஆனால் இதற்கு மனத்தளவில் மாற்றமும் முயற்சியும் தேவை. இந்த மாற்றங்கள் மனித உணர்வுகளோடு சம்பந்தப்பட்டவை. எனவே உணர்வுகளின் தாக்கங்களை அறிந்து மாற்றங்களை செயல் படுத்துதல் மிக அவசியம். உலக அளவில் புகழ்பெற்ற ஜென் துறவி லா- ட்சு என்பவர் கூறுகின்றார்  ” மற்றவர்களை வெல்வதற்குப் படை வேண்டும். நம்மை நாமே வெல்வதற்கு வலிமை வேண்டும்.”

    தோல்விகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு வெற்றிப்பாதையில் நடைபோட வலிமை வேண்டும். இந்த வலிமையை நாம் எப்படிப் பெற முடியும்? தன்னம்பிக்கை, தன்னடக்கம், துணிவு, முயற்சி பொறுமை, நிதானம், செயல் திறன்கள் ஆகிய பல நம்முடைய வெற்றிக்கு முன்னோடியாக அமைகின்றன.

    சும்மாவா சொன்னாங்க “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்”

    நாமும் எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்து பார்க்கலாமே. …

    (தொடரும்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே – 37

    க. பாலசுப்பிரமணி

     

    தோல்விகளுக்கு பொதுவான காரணங்கள் என்ன?

    வெற்றியும் தோல்வியும் ஒரு நிகழ்வின் இரண்டு எதிர்மறையான பரிமாணங்கள். வெற்றிவாகை சூடி மதம் பிடித்த உள்ளங்களோடு உலவுவதும் தோல்வியைக் கண்டு துவண்டு ஒதுங்குவதும் நலமான முதிர்ச்சியும் வளர்ச்சியும் அடைந்த உள்ளங்களின் வெளிப்பாடுகள் அல்ல. நிகழ்வுகள் பயணங்கள் ஆவதில்லை. பல நேரங்களில் தோல்விகள் எழுப்பும் வினாக்களிலே வெற்றிக்கான வித்துக்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அவைகளை நாம் ஏன் கண்டுகொள்வதில்லை என்று நம்மைப் பார்த்து ஏளனம் செய்து கொண்டிருக்கும். எனவே தோல்விகளின் இடைப்பாடுகளில் நடுவே அமர்ந்து அலசி ஆராய்ந்து நம் தவறுகளைத் திருத்திக் கொள்வதே உண்மையான கற்றலாகும். இந்த அலசலைச்  செய்யவோ அல்லது அவைகளின் உண்மைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ  நாம் தயங்கக்கூடாது அல்லது வெட்கப்படக்கூடாது. வெற்றி தோல்விகளின் காலப் பரிமாணங்கள் மிகவும் குறைவானவை. அவற்றைக் கடந்து வாழ்வின் இலக்கையும் வளத்தையும் மேன்மையையும் உணர்ந்து முன்னே செல்லக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    தோல்விக்குத் துணை போகும்பொழுது நம்பிக்கையின் ஆணிவேர்கள் அசைக்கப் படுகின்றன. அதற்கு இடம் கொடுக்கும் பொழுது அது நம்மைப் பார்த்து சிரிப்பது மட்டுமின்றி நம்மை நாமே தரக்குறைவாக எடைபோடக் காரணமாகின்றது.” நம்முடைய வீழ்ச்சிக்கு வேறு யாரும் பொறுப்பேற்க முடியாது. அதன் முழுப்பொறுப்பும் நமதே.” என்றும் “நம்முடைய சம்மதமின்றி யாரும் நம்மை வீழ்த்த முடியாது ” என்றும் மனநல வல்லுநர்கள் உறுதியாகக்  கூறுகின்றனர்.

    iதோல்வியை நாம் ஏன் ஏற்றுக்கொள்கின்றோம்? நமது தோல்விகளுக்கான பொதுவான காரணங்கள்தான் என்ன? சிலவற்றைக் காண்போமே !

    1. நமது இலக்குகளில் தெளிவு இல்லாமல் இருக்கலாம்.
    2. இலக்கை நோக்கிச் செல்லும் பாதைகள் தவறாக இருக்கலாம்.
    3. நமக்கே அந்த இலக்குகள் மீது போதுமான நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.
    4. நம்து முயற்சிகள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்
    5. நமது முயற்சியின் வேகமும் தாக்கமும் வலுவானதாக இல்லாமல் இருக்கலாம்.
    6. நமது திறன்கள் வெற்றியை அளிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்.

    7, நாம் பல நேரங்களில் நமது பார்வைகளை மற்றவரிடம் செலுத்தி அவர்களோடு ஒப்பிட்டு நமது திறன்களுக்கும்  முயற்சிகளுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கலாம்.

    1. நமது கற்றல், திறன்கள், ஆக்க சக்திகள் ஆகியவற்றை விலக்கி நாம் மற்றவர்களுடைய திறன்கள் ஆக்க சக்திகள் ஆகியவற்றை நமது பாதைகளில் இறக்குமதி செய்து முன்னேற்றத்திற்கு நாமே தடைக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.
    2. நமது செயல் கருவிகள் துருப்பிடித்தாக இருக்கலாம்.

    10.முயற்சிப் பாதைகளில் நாம் புதிய கற்றல்களைத் தவிர்த்து பின்னடைந்து கொண்டிருக்கலாம்.

    மேடைகளில் ஏறி பலமுறை முயன்றும் சரியாகப் பேச முடியாமல் திணறிய வின்ஸ்டன் சர்ச்சில் உலகின் ஒரு மிகச் சிறந்த பேச்சாளராக மாறியது சரித்திரம் கண்ட உண்மை. தன்னுடைய படைப்புக்கள் பல முறை திரும்பி வந்ததால் மனம் நொந்து போன ஜார்ஜ் பெர்னார்ட் ஷா உலகின் மிகப் பெரிய படைப்பாளியாக உருவானது உலகம் அறிந்ததே! தான் கண்டுபிடித்த கார்கள் விற்க முடியாமல் கடனில் அவதிப்பட்ட போர்ட் உலகின் ஒரு சிறந்த தொழிலதிபராக முன்னேறியது யாவரும் அறிந்ததே!

    படிக்கும் காலத்தில் நேரத்தை வீணடித்து நம்முடைய திறன்களை சீரழித்து மற்றவர்களுடைய மகிழ்ச்சியை நமது மகிழ்ச்சியாக நினைத்து தோல்விகளை முடிவுகளாகக் கருது எத்தனை இளைஞர்கள் மனநோய்களுக்கு இரையாகி இருக்கின்றார்கள்! இது வேதனையான விசயம். அது மட்டுமல்ல நாம் மற்றவர்கள் போல் வாழ முடியவில்லையே என நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்” அவர்கள் தோல்விகளின் காரணங்ளைப் புரிந்து கொள்ளவேண்டும்.

    சில நேரங்களில் நாம் எத்தனை முயற்சிகள்  செய்தாலும் பலன் கிடைப்பதில்லை..  காற்று எதிர்நோக்கி வீசுகின்றது. நம்மால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. “எதிர்நோக்காகக் காற்று வீசும் பொழுது திறமையான மாலுமிகள் தங்கள் பாய்மரங்களின் திசைகளை மாற்றி சரி செய்து கொள்ளுகின்றார்கள்” என்பது ஒரு வழக்கு மொழி. இதன் உட்கருத்தைப் புரிந்து செயல்படுபவர்கள் பாதிப்புக்களுக்கு ஆளாவதில்லை.

      பல நேரங்களில் நம்முடைய தோல்விகளுக்கு முன்னேற்றத் தடைகளுக்கும் காரணமாக இருப்பது நம்முடைய “இயலாமை மனப்போக்கு’  என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். காலப்போக்கில் இந்த மனப்போக்கு ஒரு உள்ளடங்கிய கற்றலாக மாறி எந்தப் புதிய முயற்சியிலும் திறனாக்கத்திலும் தடைக்கல்லாக அமைகின்றது. இதன் காரணமாக நாம் அடிக்கடி ” இது எனக்கு வராது. இதை என்னால் கற்றுக்கொள்ள முடியாது. இதற்கும் எனக்கும் ரொம்ப தூரம். இந்தக் கற்றலின பாக்கியத்தை இறைவன் எனக்கு அளிக்கவில்லை. ஒரு வயதுக்கு மேல் நாம் இந்தப் புதிய கற்றலலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இந்த வயதில் மூளை வேலை செய்யாது ” என்ற பலப்பல காரணங்களைக் கண்டுபிடுத்து  நம்மைச் சிறைப் படுத்திக்கொள்கின்றோம். இவை அத்தனையும் இயலாமை மனப்பான்மையின் அறிகுறிகள்.

     தற்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் நமது மூளையின் திறன்களையும் ஆக்க சக்தியையும்  வெளிச்சம் போட்டுக்காட்டி நமது தொடர் கற்றலின் ஆற்றல்களை விளக்குகின்றன.

    தோல்விகளைக் கண்டு துவழாமலும் வெற்றிகளின் போதையில் மயங்காமலும் சீராக வாழ்ந்துபார்க்க முயற்சிக்கலாமே !

    தொடரும்..

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 36

    க. பாலசுப்பிரமணியன்

    தோல்வி என்பது என்ன ?

    வெற்றிகளை மட்டும் சுவைத்து வாழ்ந்தவர்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் தோல்விகளைச் சந்திக்க முடியாமல் திணறுகிறார்கள். சிறிய தோல்விகளைக் கூட அவர்களால் சந்திக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. அவர்கள் தோல்விகளைத் தங்கள் சுயமரியாதைக்கும் தன்மானத்திற்கும் பங்கமாகக் கருதுகின்றனர். ஆகவே, தோல்விகள் வரும்பொழுது வாழ்க்கையிலிருந்து விலகி, ஒதுங்கி, மறைந்து தங்களைத் தாங்களே சின்னாபின்னமாக்கிக் கொள்கின்றனர். இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை அவர்களை மேலும் மேலும் பின்னடையச் செய்து உண்மையான  வாழ்க்கையிலிருந்து விரட்டுகின்றது. மன உளைச்சல், மன அமைதியின்மை மற்றும் இருளடைந்த பின்னோக்கான எண்ணங்களுக்கு ஆளாகி ஒரு நோயாளியாக உருவெடுக்கின்றனர். இன்றைய உலகில் இந்தப்போக்கு அதிக அளவில் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

    இதற்கு ஒரு முக்கிய காரணம் இன்றைய வாழ்க்கை முறைகள்தான். கூட்டுக்குடும்பமாக இருந்து பகிர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை விரட்டிவிட்டு இப்பொழுது நாம் தனியாக சிறிய குடும்பங்களாக வாழத் தொடங்கிவிட்டோம். இருப்பதை பகிர்தல், விட்டுக்கொடுத்தல், தியாகம், உணர்வுகளைப் போற்றுதல் மற்றும் மதித்தல் போன்ற பல பரந்த பாங்குகள் கூட்டுவாழ்க்கையில் கிடைத்தன, ஆனால், தற்காலத்தில் போட்டி மனப்பான்மைகள் வளர்ந்து, நீயா நானா என்ற வன்மம் வளர்ந்து, தனக்குக் கிடைக்காவிட்டாலும் மற்றவர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சிகள் தலைதூக்கி நம்முடைய சமுதாயத்தை வதைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலைகளில் எதிலும் எங்கும் எப்படியாவது வென்று விடவேண்டும் என்ற மனைப்பான்மை வளர்ந்து உண்மை நிலைகளை அறிந்தாலும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்குத் தவறான ஈனமான முறைகளில் ஈடுபட்டாவது நம்மை வெற்றிபெற்றவர்களாக உலகுக்கு காட்ட வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்துள்ளது.

    வயது வந்தவர்களிடம்  இருக்கின்ற இந்த உணர்ச்சிகள் கூட்டாகச் சமுதாயத்தை ஆள்வதால் அதுவே ஒரு இலக்கணமாக மாறி வளரும் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகக் காட்டப்படுகின்றது. ஆகவே சிறு குழந்தைகளும் இளைஞர்களும் கூட தோல்விகளைச் சாதாரணமாக ஏற்றுக்கொள்வதில்லை. இதன் தாக்கம் அவர்களுடைய மனநிலைகளையும் வளர்ச்சிப்போக்கையும் பாதிப்பதால் சமுதாயத்தில் ஒட்டுமொத்தமாக இந்த பிற்போக்கான எண்ணங்களின் ஆதிக்கம் நிலவி வருகின்றது. பல நேரங்களில் இவற்றைச் சரியான முறையில் அணுக முடியாதவர்கள் இதையே தங்கள் வாழ்வின் முற்றுப்புள்ளியாகக் கருதி தங்கள் இனிய வாழ்வை முடித்துக்கொள்ளத் துணிகின்றார்கள்.

    சற்றே உன்னிப்பாக அலசிப்பார்த்தால் ஒரு உண்மை வெளிப்படும். இவர்கள் தோல்விகளாகக் கருதுவது உண்மையில் தோல்விகளே அல்ல. இவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களுக்குத் தாங்களே கொடுத்துக்கொள்ளும் ஒரு மதிப்பீடுதான் இது. சில நேரங்களில் இந்த மதிப்பீடுகள் பெற்றோர்களாலும் உறவினர்களாலும் கொடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒப்பீடுகள் உண்மைக்குப் புறம்பானவை. அறிவியல் நோக்கோடு பார்க்கும்பொழுது ஒவ்வொரு மனிதனின் மூளையும் ஒவ்விதச் சிறப்போடு ஆர்வங்கள், ஈடுபாடுகள், சூழ்நிலைகள் ஆகியவற்றின் உள்ளீடுகளால் தாக்கப்பட்டு வளர்கின்றன. எனவே இரண்டு மனிதர்களை ஒரே நிலையில் வைத்து ஒப்பிடுவது இயற்கைக்குப் புறம்பானது. இதை உணர்ந்து கொண்டால் தோல்வி என்ற வார்தைக்குப் பொருளே இருக்காது. நிலைப்பாடுகள் மாறும் பொழுது அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

    “Every Child is born as a genius” என்று சொல்லுவார்கள். கல்வித் தகுதிகள் மாறுபடலாம், திறன்கள் மாறுபடலாம், பார்வைகள் மாறுபடலாம், ஆர்வங்கள் மாறுபடலாம், முயற்சி செய்யும் வழிகளும் இலக்குகளும் மாறுபடலாம். அவைகள் ஒருவரின் தோல்விக்கு அறிகுறி அல்ல. “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்பது வள்ளுவம். வாழ்க்கையை நாம் எவ்வாறு மகிழ்வோடும் நிறைவோடும் சிறப்போடும் அறத்தோடும் வாழ்கிறோம் என்பதே வாழ்க்கையின் வெற்றிக்கான குறியீடு.

    சற்றே அறத்தோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடரும்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே – 35

    க.பாலசுப்பிரமணியன்

    வெற்றிகள்ஒரு பார்வை 

    ஒரு வெளிநாட்டில் உடல் ஊனமுற்ற சிறுவர்களுக்கான ஒரு நூறு மீட்டர் ஓட்டப் பந்தயப்போட்டி நடந்து கொண்டிருந்தது. அதில் மூன்று இளைஞர்கள் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். இதில் ஒருவர் இளம் வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தன் கால்களை சற்றே இழுத்து நடந்து கொண்டிருந்தார். மற்றொருவர் நடக்க முடியாத காரணத்தால் ஊன்றுகோல்களை துணையாக்கி நடந்துகொண்டிருந்தார். மூன்றாமவர் ஒரு சக்கர வண்டியில் அமர்ந்து போட்டியில் கலந்து கொண்டிருந்தார். போட்டி துவங்கியதும் எதிர்பார்த்தபடி முதல் நபர் தன்னுடைய கால்களை சற்றே வேகமாக இழுத்துக்கொண்டு முன்னே சென்று கொண்டிருநதார். அவர் முன்னே செல்லும் பாதையில் சற்றே திரும்பி மற்றவர்கள் எந்த வேகத்தில் வந்துகொண்டிருக்கின்றனர்  என்று பார்த்தார். அந்த நேரத்தில் சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்தவரின் சக்கரம் சற்றே பாதை தவறி அருகில் இருந்த வேலியில் சிக்குண்டது. இதனால் அந்த வண்டி அருகே  மெதுவாகக்  கவிழ்ந்து கீழே விழ அந்த நபரும் கீழே விழுந்து விட்டார். உடனே முதலில் சென்று கொண்டிருந்த போட்டியாளர் இலக்கை நோக்கிச் செல்லாமல் திரும்பி அந்த வண்டியை சரியாக நிறுத்தி அந்த மூன்றாம் நபரை எழுப்பி அந்த வண்டியில் சரியாக அமர வைத்து அந்த வண்டியை லேசாக தள்ளிவிட்டார்.அவர் தள்ளிய வேகத்தில் அந்த வண்டி முன்னே சென்று  இலக்கைத் தாண்டியது.

    அந்தப் போட்டியில் பரிசு கொடுக்கும் நேரத்தில் மூன்றாவதாக வந்த முதல் போட்டியாளருக்குக் கிடைத்த வரவேற்பு  பிரமிக்கத் தக்கதாக இருந்தது. அவருடைய நறசெயல் அவருக்கு போட்டியில் இழப்பைத் தந்தாலும் அவருடைய  நற்பண்பு அவருக்குப் புகழையும் பெருமையையும் சேர்த்தது.

    போட்டிகள் வெறும் வெற்றியை நிர்ணப்பதற்காக மட்டும் அல்ல. கூடி ஒரு செயலில் பங்கேற்கும் பொழுது தொய்ந்து போன உள்ளங்களுக்கும் இடரில் தவறிவிட்ட நட்புக்கும் ஆற்றலில் பின்தங்கிய தோழமைக்கும் கைகொடுப்பதற்காக அரங்கேறும் ஒரு செயல். வெற்றிகள் ஒருவரின் பண்பை நிர்ணயிப்பதில்லை.

    வெற்றிகள் ஒரு திறனுக்கு மதிப்பீடு மட்டுமேயன்றி ஒருவரின் முழுத்தகுதிகளுக்குச் சான்றல்ல. வெற்றிகள் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில ஒரு செயலில் ஒருவரின் பங்கிற்குக் கிடைக்கும் ஒரு போற்றல். அதற்கு அப்பால் வெற்றிகள் ஒருவரின் வருங்காலத்தை நிர்ணயிப்பதில்லை. “வெற்றிகள் நம்மை ஊக்குவிக்கும் ஒரு மருந்து” என்பது உண்மைதான். அவை நம்மை மேலும் மேலும் சிறப்பாகச் செயலில் ஈடுபடுவதற்குத் துணை செய்யும் ஊக்கிதான்.

    அதில்   சந்தேகமில்லை. ஆனால் அவைகள் பல நேரங்களில் முடிவுகளாக அமைவதில்லை. அவைகள் முன்னேற்றத்திற்கான ஏணிப்படிகளாக மட்டும் அமைகின்றன. ஆகவே, வெற்றிகளை முடிவுகளாகக் கருதி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளுதல் தவறு. ஆனால் பலருக்கு இது புரிவதில்லை. தங்கள் மிகச்சிறிய   வெற்றிகளைத் தங்கள் வலிமைக்கும் நற்பண்பிற்கும் வாழ்க்கை வளத்திற்கும் முன்னுதாரணமாகக் காட்டி முரசு கொட்டிக்கொண்டு அலைகின்றார்கள். தங்கள் சாதாரணமான வெற்றிகளிக் கூடி மிகப்பெரிய சாதனைகளாகக் காட்டி மற்றவர்களைக் கவரவும் மற்றவர்களை தங்கள் வசம் ஆட்கொள்ளவும்  செய்கின்றார்கள். இதற்கு காரணம் வெற்றியின் மகிழ்ச்சி ஒரு போதையாக மாறி இவர்களை அடிமை கொள்ளுகின்றது. வெற்றியின் போதை ஒரு மனிதனின் அழிவுக்கு அறிகுறி. வெற்றியின் போதை ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல். வெற்றியின் போதை ஒரு மனிதனை சமுதாயத்திலிருந்து பிரித்து தனிப்படுத்துகின்றது. வெற்றியின் போதையில் அடிமையாகாதவர்கள் விவேகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றார்கள்.

    ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.. “Success is an event and a perception. Excellence is a journey; not a destination.“ வெற்றி என்பது ஒரு நிகழ்வு. அது ஒரு  பார்வை. சிறப்பு என்பது ஒரு பயணம்; அது இலக்கு அல்ல.”  இதை நாம் உணர வேண்டும். ஒரு வெற்றியை ஒரு நிகழ்வின் உரைகல்லில் மட்டும் உரசிப்பார்க்கவேண்டும். அதற்கு மேல் அதன் தாக்கங்களை எடுத்துச் சென்று நம் உள்ளத்தின் செயல்களின் உண்மைகளை மறைக்கவோ மூடவோ கூடாது. நாம் செய்யும் செயல்கள் மேலும் மேலும் சிறப்பிற்கு வழிவகுக்க வேண்டும். இந்தப்பயணத்தில் நமக்குப் பல புதிய உண்மைகள் வெளிப்படும். புதிய திறன்கள் சேரும். புதிய வெளிச்சங்கள் கிடைக்கும். புதிய பாதைகள் தென்படும். போட்டிகள் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை மதிப்பீடு செய்கின்றன.

    வெற்றிகளையும் தோல்விகளையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் நாம் பலவித மனஅழுத்தங்களுக்கும் மனநோய்களுக்கும் இரையாகக்கூடும். அவைகள் நமக்குத் தாழ்வு மனப்பான்மையையோ அல்லது உண்மையை விலக்கிய அயல்நோக்குகளையோ ஏற்படுத்தக்கூடும்.

    வெற்றிகளையும்  தோல்விகளையும் மனதில் சுமப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே தண்டனை கொடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் நிகழ்காலத்தை கடந்த காலத்திற்கு அடிமைப்படுத்தி நிகழ்கால சுகங்களை இழந்துவிடுகின்றனர்.. வெற்றிதோல்விகள் நம்மை ஒரு நிகழ்வின் பலன்களுக்கு அடிமைப்படுத்தி விடுகின்றன. இதனால் ஒரு செயலின் பொழுது நாம் நம்முடைய இலக்கின் வெற்றியில் மனத்தை ஈடுபடுத்தி செயலின் சுகத்தையும் திறனின் ஆழத்தையும் அனுபவிக்க மறந்து விடுகின்றனர். அல்லது மறுத்து விடுகின்றனர்.

    கண்ணன் கீதையில் அர்ச்சுனனுக்குச் சொல்கின்றான் “நன் கடமையில் ஈடுபடு. செயலின் பலன்களை என்னிடம் அர்பணித்துவிடு.”

    இதன் உட்கருத்தினை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.  செயலில் நாம் முழு மனதுடன் ஈடுபட்டு அதில் நம்மை அர்பணித்துக்கொண்டு விட்டால் மகிழ்வும் மன நிறைவும் ஏற்படும்.

    அப்படி நாமும் வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 34

    க. பாலசுப்பிரமணியன்

     

    நாம் யாரோடு போட்டிபோடலாம்?

    கூட்டமைப்புக்களில் நாம் ஒன்றாக இருக்கும் பொழுதும் வேலைபார்க்கும் பொழுதும் நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கக்கூடிய காட்சி – ஒருவரை மற்றவரோடு ஒப்பிட்டுப்பார்க்கும் மனப்பான்மை. இந்தச் செயல் ஒருவரை மற்றவரோடு போட்டி போடவும், காரண காரியங்களை அலசாமலும், கால நேரங்களின் மதிப்பீடுகளை மனதில் கொள்ளாமலும், சரி நிகரில்லாத இரு செயல்களையோ அல்லது மனிதர்களையோ ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஒரு போக்கை வளர்க்கின்றது. இப்படிப்பட்ட ஒப்பீடுகளை மனதில் கொண்டு நாம் சில மனிதர்களையோ அல்லது அவர்களின் செயல்களையோ நியாயப்படுத்துவது மட்டுமின்றி மற்றவரை தாழ்த்தியோ அல்லது குறைத்து மதிப்பீடு செய்தோ ஒரு அசாதாரணமான நிலையை உருவாக்குகின்றோம். அது மட்டுமல்ல அதன் விளைவாக  சிலருக்கு மன அழுத்தம். மன உளைச்சல் மற்றும் தாழ்வு மனப்பான்மையே வளர்க்கின்றோம். இது ஒரு மிகவும் தவறான செயல். எந்த ஒரு குழந்தையையும், மனிதரையும். வேலையாட்களையும் மற்றவர்களோடு ஒப்பிடுவதைத் தவிர்த்தல் மிக அவசியம். இது அந்தத் தனி மனிதரின் மற்றும் நிர்வாகத்தின் வளர்ச்சிக்கும் நலத்திற்கும் உகந்ததல்ல.

    குடும்பங்களும் நிறுவனங்களும் மற்றவர்களை பற்றிய மதிப்பீடுகளைக் கருத்தாக்கி வெளிப்படுத்துமுன் அவர்களின் தனிப்பட்ட சமுதாயப் பொருளாதார மற்றும் மனவளர்ச்சியின் சூழ்நிலைப் பரிமாணங்களை அறிதல் அவசியம். அந்தச் சூழ்நிலைகளின் பின்னணியிவ் தான் அவரை மதிப்பீடு செய்யவேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது மட்டுமே அவர்களின் வளர்ச்சி மற்றும் செயல் பரிமாணங்கள் துல்லியமாக வெளிப்படும். அவ்வாறு இல்லாமல் மற்றவர்களோடு அவர்களை ஒப்பிடும் பொழுது பலவிதமான நிறை குறைகள் நிச்சயமாக இருக்க வாய்ப்புக்கள் உண்டு.

    இப்படிப்பட்ட மதிப்பீடுகளின் காரணமாக அந்தக்கூட்டமைப்பில் உள்ளவர்களிடம் போட்டி மனப்பான்மைகள் எளிதில் உருவாகும். இப்படிப்பட்ட போட்டிகளில் சில நேரங்களில் நல்ல வளர்ச்சிக்கான ஆதாயங்கள் கிடைக்கலாம். அதே நேரத்தில் அது மனநலத்தை பாதிக்கக்கூடிய அளவில் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, கோபம். பொறாமை, வெறித்தனம் போன்ற பல ஆரோக்கியமில்லாத மன உணர்வுகளை விதைக்கவும், வளர்க்கவும், மற்றும் செயலாக்கம் செய்வதிலும் செய்யும். இது எந்தக் கூட்டமைப்பிற்கும், அது குடும்பமாக இருந்தாலும் சரி, நிறுவனங்களாக இருந்தாலும் சரி காலப்போக்கில் விரும்பத்தகாத சூழ்நிலைகளை உருவாக்கும். பல கூட்டமைப்புக்களில் அதன் தலைவர் அல்லது மற்ற ஒருவரின் ஆதிக்க மனப்பான்மையும் மற்றவர்களுக்கு விருப்பமில்லாத சூழ்நிலைகளை உருவாக்கித் தாழ்வு மனப்பான்மைகளை உருவாக்க காரணமாக அமைகின்றது.

    தற்காலச் சமுதாயத்தில் பல இடங்களில் இது போன்ற விரும்பத்தகாத போட்டிகள் குறைவின்றி காணக்கிடைக்கின்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு அதற்கு பலியானவர்கள் பல நேர்மையற்ற வழிகளையும் பண பலத்தையும் தரமற்ற தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுடைய தனிப்பட்ட மனநலம் கெடுவதுமட்டுமின்றி இது அந்தக் கூட்டமைப்பின் அடிப்படை அஸ்திவாரங்களை அசைக்கின்றது. மேலும் இந்தப் போட்டி மனப்பான்மையினால் நல்லுறவுகள் பாதிக்கப்பட்டு விவாதங்கள், வழக்குகள் மற்றும் சண்டைகள் உருவாகுகின்றன.

    அது மட்டுமல்ல, இந்தப் போட்டிகளில் வெற்றி பெற முடியாதவர்களும், இந்தப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களும் தாழ்வு மனப்பான்மைக்கு இரையாகி மனநல மருத்துவர்களை சந்திக்கும் நிலைகளுக்கு வந்து விடுகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு ஒரு அமைப்பினால் செய்யப்பட ஆராய்ச்சியில் இந்தத் தாழ்வு மனப்பான்மை தற்கால இளைஞர்களை அதிகம் பாதிப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இது உண்மையிலேயே கவலைக்குரிய செய்தி.

    காரணம்? பல குடும்பங்கள் தங்களுடைய வாரிசுகளுக்கு தேவையற்ற விருப்பமில்லாத மற்றும் உண்மைக்குப் புறம்பான பல இலக்குகளை நிர்ணயித்து விடுகின்றனர். மேலும், அதை அடைவதற்க்க்கான அழுத்தங்களை பல நிலைகளிலும் பல வழிகளிலும் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். இதனால் அந்த அடையமுடியாத இலக்குகளை நோக்கிப் பயணம் செய்பவர்களில் பலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தாழ்வு மனப்பான்மைகள் வளர்ந்து அவர்கள் தங்களைத்தாங்களே தோற்கடித்துக் கொள்கின்றனர்.

    ஆகவே ஒருவரை எவ்வாறு ஒப்பிடவேண்டும்? யாரோடு ஒப்பிடவேண்டும்? என்ற வினாக்கள் பல நேரங்களில் எழுந்த பொழுது அதற்குக் கிடைத்த ஒரு சரியான பதில் – ஒரு மனிதனை அவனுடைய வளர்ச்சி மற்றும் கற்றல் பாதையில் முன்னால் எப்படி இருந்தான்? இப்பொழுது எப்படி இருக்கின்றான்? அவன் வளர்ச்சிப்பாதையில் செய்யப்பட சாதனைகளுக்கான குறியீடுகள் என்ன? அவன் உள்ளுணர்வுகள் எந்த நலத்தோடு இருக்கின்றன? – என்பவைகளே குறிப்பீடுகள். ஆகவே, ஒரு மனிதன் தன்னைத் தன்னோடு மட்டும் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

    ஒரு ஆங்கிலப் பேரறிஞர் எழுதுகின்றார் : “ Life is not a competition. Find the stuff that makes your soul sing and be your own uniquely beautiful self.”

    வாழ்க்கை என்பது ஒரு போட்டியல்ல. நீ உன்னுடைய ஆன்மாவின் கீதத்தைக் கேட்கவேண்டும் மேலும் உன்னுடைய அழகான தனித்தன்மையோடு இருக்கவேண்டும்..”

    நாமும் இந்த முயற்சியோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 33

    கூட்டமைப்புக்களில் நமது பங்கு

    உலகத்தில் உள்ள அனைத்துத் தொழில் நிறுவனங்களும் ஒரு தனி மனிதனுடைய திறமைகளை அறிந்து, உபயோகித்து மற்றும் பாராட்டுவதில் பின் தங்குவதில்லை. அதே நேரத்தில், அந்தத் தனி மனிதன் ஒரு தீவாக இல்லாமல் மற்றவர்களோடு தோள் சேர்த்து உழைப்பதையே விரும்புவது மட்டுமின்றி அதையே ஒரு சிறப்பாகக் கருதுகின்றன. எவ்வாறு ஒரு இயந்திரத்தின் ஒரு தனிப்பகுதி மட்டும் சிறப்பாக இருந்தாலும் அந்த இயந்திரம் முழுதாகச் செயல்பட்டாலன்றி அதன் உற்பத்தித்திறன் முழுமையாக வெளிப்படாதோ அதேபோல் எந்தத் தொழிலும் அதைச் சார்ந்த அனைவரும் எண்ணத்தால், உணர்வுகளால் மற்றும் செயல்களால் ஒன்றி இணைந்து வேலை பார்க்கும்பொழுதே அதன் சிறப்பும் உற்பத்தித்திறனும் மேன்மையாகி ஒளிர்விடுகின்றன. ஆகவே இந்த கூட்டுச் சிந்தனையையும் இணைந்து வேலைபார்க்கும் திறனையும் எப்படி வளர்ப்பது என்பது பற்றிய பல ஆராய்ச்சிகள்  செய்யப்பட்டுள்ளன. இந்தக் கருத்துக்கள் தொழிற்கூடங்களுக்கு மட்டுமின்றி கூடி வாழும் குடும்பங்களுக்கும் பொதுவாகக் கருதப்படுகின்றன.

    இந்தக் கூட்டு முயற்சிகளுக்கு மிகவும் அத்தியாவசியமாகக் கருதப்படுபவை:

    1. நம்பிக்கை (Trust): நாம் கூட்டாக வேலைபார்க்கும் பொழுது நம்முடன் வேலைபார்ப்பவர்களை நம்முடன் சரி சமமாகக் கருதி நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை இல்லாமல் சந்தேகக் கண்களுடன் தோள் கொடுக்கும் பொழுது அவர்கள் சரியாக வேலை பார்த்தாலும் நமது சந்தேகங்கள் நம்மை வீழ்த்திவிடும். சந்தேகங்கள் பல நேரங்களில் நம்முடைய இயலாமையின் பிரதிபலிப்புகளாகக் கருதப்படுகின்றன. சந்தேகங்கள் பல நேரங்களில் நம் உள்மனதில் உள்ள பயங்களின் வடிவங்களாகக் கருதப்படுகின்றன. சில நேரங்களில் நம்முடைய சந்தேகங்கள் மற்றவர்களின் தன்னம்பிக்கையின் ஆணிவேர்களைக்கூட அசைத்து அவர்களை பலவீனமாக ஆக்கும் வாய்ப்புக்களை உருவாக்கவும் செய்யும் “மற்றவர்கள் நம்பிக்கைக்குரியவர்களா என்பதை கண்டுபிடிக்க மிகச் சிறந்த வழி அவர்களை நம்புவதுதான் .” என்று நாவலாசிரியர் எர்ன்ஸ்ட் ஹெமிங்ஸ்வே கூறுகின்றார். ஒருவனை நேசிப்பதைவிட அவனை நம்புவது அவனுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்று மனநல வல்லுநர்கள் கூறுகின்றனர். நாம் கூட இருப்பவர்களை நம்பாவிட்டால் கூட்டுத்தொழிலில் பிணைப்புகள் எளிதாகப் பிரிந்துவிடும்.
    1. அகந்தையின்மை (Absence of Ego): கூட்டுத்தொழில் செய்யும் இடங்களிலும் நேரங்களிலும் நான் என்ற அகந்தையை வெளிப்படுத்துதல் மிகவும் கொடியது மட்டுமின்றி அற்பமானதும் கூட. “தான்” என்ற அகந்தை இல்லாத மனிதனே இல்லை என்பது உண்மைதான். இது ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பரிமாணத்தில் ஒவ்வொரு வகையில் வெளிப்படுகின்றது.  ஆனால் கூட்டுத் தொழில் செய்யும் இடங்களிலும் கூட்டாக வாழும் இடங்களிலும் இந்த உணர்வு மற்ற எல்லாத் திறன்களையும் ஓரங்கட்டி அந்தப் பிணைப்பில் உள்ள அனைவரின் உள்ளத்திலும் வெறுப்பையும் போலித்தனத்தையும் வளர்க்கின்றது. நம்முடைய திறமைகள் முழுமையாக வெளிப்படாவிட்டாலும் மற்றவர்களுடைய திறமைகளையும் ஆக்கத்  திறன்களையும்  உணர்வுகளையும் மதித்து நடத்தல் மிக்க அவசியம். பல நேரங்களில் இந்த அகந்தை நம்மை உயர்வாகக் கருத்துவதற்குப் பதிலாக மற்றவர்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் நினைக்கத் தூண்டுகின்றது.  (Ego is not thinking too high of one’s own self, but too little of others ) ஆகவே தொழிற்கூடங்களில் அகந்தை உடையவர்கள் கூட்டுப் பொறுப்புக்களை நிர்வகிப்பதற்கும் தலைமை ஏற்பதற்கும் உகந்தவர்களாகக் கருதப்படுவதில்லை.. கூட்டுக் குடும்பங்களிலும் அகந்தை உள்ளவர்கள் அந்த அருமையான கூட்டமைப்பின் அழிவிற்கு ஆணிவேராக அமைகின்றார்கள்
    1. பகிர்ந்த பார்வை: (SHARED VISION) கூட்டுக்குடும்பமும் கூட்டுத்தொழில்களும் சிறப்படைய அதில் பங்கேற்கும் அனைவருக்கும் பகிர்ந்த பார்வையும் ஒருமித்த கருத்தும் தேவை. ஒரு அமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பார்த்துக்கொண்டிருந்தால் அந்த வேலையில் சற்றும் முன்னேற்றம் ஏற்படாது என்பது மட்டுமின்றி அதற்க்குச் செலவழித்த பொருள்களும் (Resources) நேரமும் வீணாகிவிடும். அது மட்டுமின்றி அந்த நிலை பல கருத்துவேறுபாடுகளுக்கு வழிவகுத்து அந்த கூட்டமைப்பின் அடித்தளங்களை ஆட்டிவிடும். பகிர்ந்த பார்வை என்பது ஒருமித்த நோக்கமும் கருத்தும். அந்தப் பகிர்ந்த பார்வையின் சில கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் நமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம். அந்தப் பகிர்ந்த பார்வையை நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுது தனிப்பட்ட முறையில் நாம் அதை வெறுக்கலாம். ஆனாலும், அது அந்தக் கூட்டுச் செயலுக்கும் கூட்டமைப்பிற்கும் பொதுவானதாக இருப்பதால் நாம் முழுமனதோடு அதில் ஈடுபடுதல் அவசியமாகின்றது. அவ்வாறு முழு மனதோடு நாம் பகிர்ந்த பார்வையை ஏற்றுக்கொள்ளாதபோது அந்தக் கூட்டமைப்பிற்கு நாம் ஒர முட்டுக்கட்டையாகி விடுகின்றோம். பகிர்ந்த பார்வையை ஏற்றுக்கொள்ளுதல் நமது வளர்ச்சியின் பண்பாட்டின் அறிகுறி. அது நம்முடைய வாழ்க்கை வழிகளை எளிதாக்கவும் மகிழ்ச்சியானதாக ஆக்கவும் உதவுகின்றது. ஒரு கூட்டமைப்பில் பகிர்ந்த பார்வையை வளர்ப்பதில் திறனுடையவர்கள் அந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்புக்களுக்குத் தகுதி உடையவர்களாக வளர்கின்றார்கள்.
    1. பங்கு அறிதல் (Role play): கூட்டமைப்பில் பங்கேற்கும் பொழுது அனைவரும் ஒரே விதமான வேலையைச் செய்தல் என்பது மிகவும் அரிது. பல நேரங்களில் ஒரே கூட்டமைப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான செயலைச் செய்ய வேண்டிய கட்டாயங்கள் ஏற்படலாம். அவ்வாறு செய்யும் பொழுது ஒரு வேலையை மேன்மையானதாகவோ அல்லது மற்ற வேலைகளை விடச் சிறந்ததாகவோ அல்லது தரக்குறைவானதாகவோ கருத வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கூட்டுச் செயலில் பல வித பங்குகள் இருக்கும். ஒவ்வொரு பங்கின் பரிமாணங்கள் ஒவ்வொரு விதமாக இருக்கும். எனவே கூட்டுத் தொழிலில் நமது பங்கினை அறிதல் மிக அவசியம். அந்தப் பங்கிற்கு அப்பால் நம்முடைய திறன்களையோ அல்லது கருத்துக்களையோ வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அப்படி நம்முடைய கருத்துக்கள் தேவைப்படும்பொழுது மாட்டும் நாம் ஈடுபட்டால் போதும். பல நேரங்களில் நம்முடைய பங்கை சரியாக அறியாத பொழுதிலும் அல்லது அந்தப் பங்கிற்கு அப்பால் நாம் அவசியமின்றி ஈடுபடும் பொழுது கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. நம்முடைய பங்கிற்கு அப்பால் நாம் தலைநீட்டும் பொழுது நமக்கு அவப்பெயர்களும் தலைகுனிவும் ஏற்பட சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒரு கூட்டமைப்பின் வெற்றி ஒவ்வொரு பங்குதாரரும் தன்னுடைய பங்குகளை நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் முழுமையாகவும் செய்வதிலேயே அமைந்துள்ளது.

    நம்முடைய கூட்டுப் பொறுப்புக்களில் நாம் இவைகளை பற்றி சற்றே சிந்திக்கலாமே !

    (தொடருவோம்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 32

     க.பாலசுப்பிரமணியன்

    கூடி வாழ்ந்தால்

    பல்லாண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சி… ஒரு  நகரத்தின் வெளிப்பகுதியில்  ஒரு  கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் இருந்த ஒரு தொழிலாளி அங்கிருக்கும் ஒரு மிகப்பளுவான பொருளை த்  தூக்குவதற்காக முயற்சி செய்துகொண்டிருந்தான். அவனால் அந்தப் பளுவை நகர்த்தக்கூட முடியவில்லை. அந்த இடத்தில அவன் வேலையை மேற்பார்த்துக்கொண்டிருந்த  ஒரு மேலாளர்  அவனைப் பார்த்துக் கண்டித்துக்கொண்டிருந்தான். அந்த வழியாக குதிரையில் வந்த  ஒருவர் இந்தக் காட்சியைக் கண்டு அந்த மேலாளரிடம்  கேட்டார்: “அந்தத் தொழிலாளி அந்தப் பளுவை நகர்த்துவதற்கு இவ்வளவு முயற்சி செய்துகொண்டிருக்கிறாரே  நீங்கள் அவருக்கு ஒரு கைகொடுக்கக் கூடாதோ?”

    சற்றே இவரை முறைத்துப் பார்த்த அந்த மேலாளர் “நான் அவனுக்கு கைகொடுப்பதா? அவன் ஒரு தொழிலாளி. நான் மேலாளர். அவனிடம் வேலை வாங்கத்தான் நான் நியமிக்கப் பட்டிருக்கின்றேன்.” என்று சொல்ல  குதிரையில் வந்த அந்த நபர் ஒன்றும் பேசாமல் கீழே இறங்கி அந்தத் தொழிலாளியிடம் சென்று அவருக்குக் கைகொடுக்கின்றார். அந்த வேலை முடிந்தபின் அந்த மேலாளரிடம் எதுவும் கூறாமல் தன்னுடைய குதிரையில் ஏறுகின்றார். அதைக் கண்ட அந்த மேலாளர் “இவனுக்கு உதவி செய்த நீங்கள் யார்?” எனக் கேட்டிடவே, வந்தவரோ “என் பெயர் ஜார்ஜ் வாஷிங்க்டன் . இந்த நாட்டின் அதிபதி.” என்று சொல்லிவிட்டு மேலே செல்கின்றாராம்.

    இந்தக் கதை உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் கதை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கருத்து என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    பல தொழில் நடக்கும் இடங்களில்  வேலை பார்ப்பவர்கள் கூட்டாகச் சேர்ந்து வேலை பார்க்க்காமல் தங்களுடைய பதவி, தகுதி போன்ற பல காரணங்களுக்குக்காக தங்களுடன் கூட வேலை பார்பவர்களுடன் கூட்டாக வேலை பார்க்காமல் பிரிந்து  நின்று தனியாக வேலை பார்க்கும் காட்சிகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். பதவி என்பது நமக்கு வேலைகளை மேர்பார்ப்பதற்கும் சிறப்பாக ஒழுங்குபடுத்திடுவதற்கும் புதிய உத்திகளால் நம்முடன் வேலை பார்ப்போரை வழிநடத்துவதற்கும் கொடுக்கப்படும் ஒரு தகுதி. அது நம்மை நம்முடன் வேலை பார்ப்பவர்களிடம் பிரித்து நம்மை ஒரு புதிய வர்கத்தினராக ஆக்கும் செயல் அல்ல. எனவே நம்முடன் உழைப்பவர்கள் திறன் மற்றும் உணர்வு நிலைகளை புரிந்து அவர்களுடன் கைகோர்த்துச் செல்வதே சிறந்த தொழில் தர்மமாகும்.

    அது மட்டுமல்ல.. கீழ்காணும் சில காட்சிகளை நாம் பல தொழில்  நடக்கும் இடங்களில் பார்க்கின்றோம்..

    1. “அவனுக்கும் சம்பளம் கிடைக்கின்றது. எனக்கும் சம்பளம் கிடைக்கின்றது. அவன் ஒரு வேலையைத் தவறாகச் செய்தானென்றால் எனக்கென்ன? அவனுடைய தவறுகள் என்னுடைய மேன்மையை வெளிப்படுத்துவதுதானே – என்ற தவறான நோக்கமும் சிந்தனையும்.
    2. “தம்பி, நீ நேற்றுதான் வேளையில் சேர்ந்தவன், நானோ இருப்பது ஆண்டுகளான உழைப்பவன். எனக்கு உன் ஆலோசனை தேவையில்லை. உன் வேலையை மட்டும் நீ பார்.” என்ற ஆணவத்தனம்.
    3. ‘நான் வேலை பார்பதற்குத் தான் சம்பளம் கொடுக்கிறார்கள். அவனுக்கு உதவி செய்வதற்க்கோ அல்லது அவனோடு சேர்ந்து செய்வதற்கோ அல்ல.” என்ற சுயநலச் சிந்தனை
    4. ” நான் அவனுக்கு உதவி செய்து அதனால் அவனுக்குச் சிறப்புக் கிடைத்து விட்டால் எனக்கு என்ன ஆவது?” என்ற கீழ்நோக்குச் சிந்தனை.

    சமுதாயம் என்று ஒன்று உருவானதே எல்லோரும் சேர்ந்து கூடி வாழவும், ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தேவைப்படும் பொழுது கைகொடுக்கவும், நம்மைப் போல் மற்றவர்களின் நலனையும் முன்னேற்றத்தையும் பாதுகாக்கவுமே ! இந்தக் கூடி வாழும் உணர்வு காகம் போன்ற பறவைகளிருந்து எத்தனையோ விதமான விலங்குகளின் சமுதாயங்களில் காணப்படுகிறது. மற்றவர்களை அடித்துத் துன்புறுத்திக் கொன்று தான் உண்ணும் உணர்வுகள் விலங்கினங்களில் காணப்பட்டாலும் பொதுவாக அவைகள் தங்கள் இனங்களை அழிப்பதில்லை. கூடி வாழ்தல் என்பது ஒரு நேயச் செயல். அது மனித இனத்தில் மிகவும் சிறப்பாக விளங்கி வருகின்றது. ஆனால் காலப்போக்கில் தங்களுடைய சுயத்தேவைகளுக்காக இந்த உணர்வுகளை நாம் நழுவ விட்டுக்கொண்டிருக்கின்றோம்.

    கூட்டுக்குடும்பங்கள் இந்த நல்லுறவுகளை வளர்த்துக்கொண்டும் வளப்படுத்திக் கொண்டும் இருந்தன. அவைகள் மறையத் தொடங்கிவிட்டன. தொழில் செய்யும் இடங்களில் கூட்டாக வேலைபார்த்தால் உற்பத்தித்திறனை வளர்ப்பதற்கும் தொழில்  தரத்தை உயர்த்தவும் மிக அவசியமானவை. தற்போதைய நிர்வாகத் திறன்களை வளர்க்கும் பயிற்சிகளில் கூறப்படும் கருத்துக்கள்:

    1. குழுவாகவும் அணியாகவும் வேலைசெய்தல் (Team work)
    2. பகிர்ந்த பார்வைகளை ஏற்றுக்கொள்ளுதல் (Shared vision)
    3. ஒத்துழைப்பு (cooperation)
    4. மோதல்களைத் தவிர்த்தல் (Conflict Resolution)
    5. குழுவைச் சார்ந்த கடமைகள், பொறுப்புக்கள் (Commitment to Team)
    6. கருத்து வேறுபாடுகளை மதித்தல், ஏற்றுக்கொள்ளுதல் (Respecting differences in perception)

    இந்தக் கருத்துக்கள் பொதுவாக எல்லாவிதமான கூட்டுப் பொறுப்புகளுக்கும் உண்மையானவை – அது குடும்பமாக இருந்தாலும் சரி, சமுதாயமாக இருந்தாலும் சரி அல்லது தொழில்கூடங்களாக இருந்தாலும் சரி.

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மைதானே !

    சற்றே நமது வாழ்விலும் இவைகளை பற்றிச் சிந்தினைக்கலாமே !

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே-  31

    க. பாலசுப்பிரமணியன்

    முன்னேற்றத்தின் ஏணிப்படிகள்

    ஒரு  கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதனுடைய முதலாளி சற்றே மேற்பார்வைக்காக உள்ளே நுழைந்தார். அங்கு அந்த வண்டிகளைப் பழுது பார்க்கும் தொழிலாளி ஒருவர் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த அந்த முதலாளி “தம்பி,  நீ எதற்க்காக இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கின்றாய்? எதைத் தேடிக்கொண்டிருக்கின்றாய்”  என்று வினவினார். உடனே அந்தத் தொழிலாளி ‘”அய்யா அந்தக் கார் கீழே சென்று உள்ளே சற்றே பழுது பார்க்கவேண்டும்.  கீழே படுத்துக்கொண்டு வேலை பார்க்கும்பொழுது போட்டுக்கொண்டிருக்கும் இந்த உடுப்புகள் அழுக்காகி விடும். எனவே கீழே போட்டுக்கொள்ளுவதற்காக ஏதாவது ஒரு பொருள் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கின்றேன்.” என்று பதிலளித்தார். “அப்படியா, அந்த வேலையை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?” என மீண்டுக் கேட்க அவரோ “ஒரு பத்து நிமிடங்களில் முடித்து விடலாம்.” என்று பதிலளித்தார். முதலாளி  சிரித்துக்கொண்டே “ஒரு பத்து நிமிட வேலைக்காக நீங்கள் இருபது நிமிடத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வேலை பார்ப்பதற்காக இந்த நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட் உடுப்புத்தானே.இது.” என்று சிரித்துக்கொண்டே தன்னுடைய கோட் மற்றும் டை ஆகிவைகளைக் கழட்டிவிட்டு அந்தக் காரின் கீழே தானே உள்சென்று பழுது பார்க்க ஆரம்பித்து விட்டார். அதைக்கண்ட அந்தத் தொழிலாளி சற்றே திகைத்து செய்வதறியாமல் நின்றார்.

    பல நேரங்களில் நாம் செய்ய வேண்டிய தொழில்களின் தேவை, தரம், அவசியம், மற்றும் நேரம் ஆகிவற்றைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் நேரங்களை வீணடித்துக்கொண்டிருக்கின்றோம். ஒரு வேலை செய்வது மாட்டும் முக்கியமானதல்ல. அதைத் திறன்படவும் புத்திசாலித்தனமாகவும் செய்தல் அவசியம். தற்காலத்தில் தொழில்களை செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள மூல மந்திரம் ” திறன், அளவு, வேகம்.’ ( SKILL, SCALE AND SPEED)

    எந்த ஒரு வேலையை நாம் செய்யும் பொழுதும் அதைத் திறனுடன்( SKILL)  செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும். திறனில்லாமல் செய்கின்ற வேலைகள் சிறப்பாக இல்லாதது மட்டுமின்றி அவை பல சமயங்களில் எவ்வ்ளவு நேரம் அதற்குத் தேவையோ அதைவிடப் பல மடங்கு நேரத்தை விழுங்கி விடும்.  நாம்  வழக்கத்தில் கேட்ட கதை இதுதானே:

    மரங்களை வெட்டுகின்ற ஒரு தொழிலாளி பல வருடங்களாக ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய ஒரு நாள் வேளையில் அவன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மரங்களை வெட்டிக்கொண்டிருந்தான். நாள்பட, அவன் உற்பத்தித்திறன் குறைந்ததும். அந்தத் தொழிற்கூடத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவன் மிகச் சிறப்பிப்பாகவும் அதிக உற்பத்தித்திறனுடனும் வேலை செய்துகொண்டிருந்ததை முதலாளி பாராட்டிய பொழுது அந்தப் பழைய தொழிலாளிக்கு மனவருத்தமும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது. காரணம்? அந்தப் புதிய தொழிலாளி தினம் வேலைக்கு வரும் பொழுது தன்னுடைய கருவிகளை சீர்படுத்தி வேலைக்கு உகந்ததாக கொண்டுவந்து கொண்டிருந்தான். பழைய தொழிலாளியின் கருவிகள் பல மாதங்கலாகச் சீர்படுத்தப்படவில்லை.

    நாம் வேலைக்குச் செல்லும் பொழுது நமது கருவிகள் வேலைக்கு உகந்ததாக இருக்கின்றனவா என்று நாம் சிந்திக்க வேண்டும் . அந்தக் கருவிகள் – சிந்தனைகளாக இருக்கலாம், வேலையைப் பற்றிய புதிய தேடல்களாக இருக்கலாம், வேலை செய்யும் சூழ்நிலைகள், அதைச் சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்கள் அல்லது புதிய செயல்முறைகளாக இருக்கலாம். அவைகள் நமக்குத் தெரியுமா? அதை எவ்வாறு கற்றுக்கொள்ளலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

    கற்றல் என்பது  வாழ்க்கையின் ஒரு தொடர் நிகழ்வு. அறிவுசால் சமுதாயத்தில்  அறிவையும் திறன்களையும் வளர்க்கும் உள்ளீட்டுக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டும் மேம்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. ஆகவே அந்த அறிவு நுணுக்கங்களையும் அவைகளின் பரிமாணங்களையும் அவைகளின் தாக்கங்களையும் தொடர்ந்து கண்காணிப்பது மட்டுமின்றி அவைகளைத் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். கற்றல் வெறும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாற்றும் நடப்பதல்ல. அறிவு உள்ளீட்டுக்களின் வேகங்களும் பரிமாணங்களும் மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் அவற்றிக்குத் தகுந்தாற்போல் நம்முடைய தொழில்சார்ந்த கற்றல் திறன்களையம் வளர்த்துக்கொண்டும் மாற்றிக்கொண்டும் இருத்தல் அவசியம். அதற்கு ஈடு கொடுக்காதவர்கள் வேகத்தின் விளையாட்டில் தோற்றுப்போவது மட்டுமின்றி வளர்ச்சிப் பணிகளுக்கு உபயோகமானவர்களாக இருக்கமாட்டார்கள்.

    நம்மில் பல பேர்கள் நம்முடைய படிப்புக்கள் கல்லூரி அல்லது பள்ளியிலேயே முடிந்து விட்டது என்ற தவறான கருத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் .அது நம்முடைய முன்னேற்றத்திற்கு நாமே அடித்துக்கொள்ளும் சாவு மணியாகும். விடுகின்ற ஒவ்வொரு காலையும் ஒரு புதிய சந்திப்பு. அது புதிய கருத்துக்களோடும் புதிய எதிர்பார்ப்புக்களோடும் விடுகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் நாம் இது வரை கற்காலத்திலேயே இருந்து கொண்டிருப்போம்.

    நான் ஒரு நிறுவனத்தின் தலைவரின் அறையிலே பார்த்த ஒரு சுவரொட்டி என்னை மிகவும் கவர்ந்தது. அதிலிருந்த வாசகம் இதுதான்:

    “ஆப்பிரிக்கக் காடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு மானும் தினசரி காலையில் கண்விழிக்கும் பொழுது “நேற்றைவிட இன்று வேகமாக ஓடவேண்டும் என்ற  உறுதியோடு எழுந்திருக்கின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் இன்று ஏதாவது ஒரு சிங்கத்திற்குத் தான் இரையாக வேண்டும் என்ற எண்ணமே !

    ஆப்பிரிக்கக் காடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு சிங்கமும் தினசரி காலையிலே கண்விழிக்கும் பொழுது “நேற்றைவிட இன்று வேகமாக ஓடவேண்டும்” என்ற உறுதியோடு  எழுந்திருக்கின்றது, அவ்வாறு இல்லாவிட்டால் இன்று தனக்கு இரை கிடைக்க வாய்ப்பில்லை என்ற எண்ணமே !

    நீங்கள் மானாக இருந்தாலும் சரி, சிங்கமாக இருந்தாலும் சரி, தினசரி காலையிலே கண்விழிக்கும் பொழுது  நேற்றை விட இன்று சிறப்பாகச் செயல் பட வேண்டும் என்ற எண்ணத்தில் கண்விழிக்க வேண்டும்.:

    என்ன உன்னதமான கருத்து!

    பல நேரங்களில் பல இடங்களில் சிலருக்கு வேலை கிடைத்தவுடன் “இனிமேல் நமக்குக்  கவலையில்லை. நம்முடைய ஓய்வு காலம் வரை நம்மை யாரும் அசைக்க முடியாது ” என்ற தவறான கருத்தோடு தங்கள்  தொழில் சிறப்பை இழந்து நிற்கின்றார்கள். .இன்னும் சிலரோ “நான் என்னதான் சிறப்பாக வேலை பார்த்தாலும்

    எனக்கு இன்னும் பத்து வருடங்களுக்கு வளர்ச்சி இல்லை . செய்தேன்ன பயன்? ” என்று தங்களைத் தாங்களே தோற்கடித்துக்கொண்டு வாழ்கின்றார்கள். .மற்றும் பலர் “எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். நான் மற்றவர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஏன் கற்றுக்கொள்ளவேண்டும்.?” என்ற சிந்தனையில் வாழ்கின்றார்கள். இன்னும் சிலர் “என்னுடைய வேலை ஒப்பந்தத்தில் நான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லையே” என்று விளையாட்டாகப் பேசி வளர்ச்சியைத் தவற விடுகின்றார்கள்.

    வளர்ச்சியும் முன்னேற்றங்களும் காலமும் இவர்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பதில்லை. திறன் – அளவு – வேகம் (SKILL, SCALE AND SPEED): இவைதான் நம்முடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஏணிப்படிகள்.

    சற்றே முயன்று பார்க்கலாமே !

    தொடரும்…

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 30

    க. பாலசுப்பிரமணியன்

     

    மகிழ்வும் திறனும் தொழிலுக்குத் தேவை

    பல நேரங்களில் நமக்கு நாம் விரும்பிய தொழிலோ அல்லது வேலைகளோ கிடைப்பதில்லை. எவ்வளவுதான் ஆர்வம் நமக்கு இருந்தாலும் குறிப்பிட்ட சில கல்வித்தகுதிகள் இல்லாததாலோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ நாம் விரும்பிய தொழில்களில் ஈடுபட முடிவதில்லை. ஆனாலும் நம் உள்மனதில் அந்தத் தொழிலைப் பற்றிய ஆர்வம் மற்றும் ஈடுபாடு இருந்துகொண்டே இருக்கின்றது. நாம் அந்த விருப்பங்களுக்கும் ஆர்வங்களும் மாறுபட்ட நிலையில் வேறு ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு விடுகின்றோம். சில சந்தர்பங்களில் இந்த மாதிரியான நிர்பந்தங்கள் குடும்பச்  சூழ்நிலைகளாலோ அல்லது பொருளாதாரச் சூழ்நிலைகளாலோ அல்லது சமுதாய கட்டுப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்கள் காரணமாகவோ அமையக்கூடும். அந்த நேரங்களில் பலருக்கு ஒரு தோல்வி மனப்பான்மையோ  அல்லது ஏமாற்றமோ ஏற்பட வாய்ப்புக்கள்  உண்டு. இந்தச் சூழ்நிலைகள் நமக்குத் தாழ்வு மனப்பான்மை, மன அமைதியின்மை. மன அழுத்தங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தவறான பார்வையை ஏற்படுத்தலாம். இதிலிருந்து மீண்டு நாம் எந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோமோ அதையே ஒரு பரிசாக ஏற்று அந்தத் தொழிலை மகிழ்வுடனும் சிறப்பாகவும்  செய்ய கற்றுக்கொள்ளவும் முயலவும் வேண்டும்.

    எந்தத் தொழிலைச் செய்தாலும் அதில் மகிழ்வும் ஈடுபாடும் இல்லாமல் செய்யும் பொழுது அது நமக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிடுகின்றது. அதையே மகிழ்வோடு செய்யும் பொழுது அது நல்வாழ்வுக்கு உரமாக மாறிவிடுகின்றது. உலகின் மிகப் பெரிய தத்துவ மேதை அரிஸ்டாட்டல் கூறுகின்றார் “மகிழ்வோடு செய்யும் எந்த வேலையும் மிகச் சிறப்பாக அமைகின்றது.”

    சில நேரங்களில் நாம் தொழிலில் நமக்கு அதைச் செய்வதற்கான வெகுமானமும் சம்பளமும் கிடைக்காததால் நம்முடைய ஈடுபாடுகளையும் மகிழ்வையும் குறைத்துக்கொள்கின்றோம். அது மட்டுமல்ல, நாம் நம்மைப் போன்ற பலருடன் நம்மை ஒப்பிட்டு நம்முடைய தரத்தை உயர்த்தியோ குறைத்தோ மதிப்பீடு செய்கின்றோம். இது ஒரு தவறான நோக்கு. இந்த ஒப்பீடுகள் ஓரளவிற்கு நம்முடைய திறனுக்கு அளவுகோலாக இருக்குமேயன்றி எல்லா நேரங்களிலும் நம்முடைய ஈடுபாட்டிற்கும் திறனுக்கும் நிரந்தரச் சான்று அல்ல. எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடோடு செய்யும் பொழுது நமது திறன் ஒளிர்கின்றது. அதில் கிடைக்கும் மகிழ்வே அந்தச் செயலை சரியாகச் செய்வதற்கான கூலியாக அமைகின்றது. இதையே பகவத் கீதையின் கர்மயோகத்தில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. “கர்மண்யேவாதிகாரஸ்தே; மா பலேஷு கதாசன” என்ற கூற்றில் கண்ணன் அர்ச்சுனனுக்கு கூறுகின்றார் “பலனை எதிர்பார்க்காமல் உன் கடமையைச் செய்.”

    சில நேரங்களில் நாம் மற்றவர்களிடம் சென்று “நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் தெரியுமா” என்று தங்களுடைய திறன்களையும் தொழில் வளர்ச்சியையும் பற்றி தற்பெருமையுடன் சொல்வதைக் கண்கூடாகக் காண்கின்றோம். சிறப்பாகத் தொழில் செய்பவர்களுக்கு இதற்கான அவசியம் இல்லை. “ஒரு சிறந்த வேலைக்காரனுக்கு அவன் தொழில் திறனே முகவரியாக அமைகின்றது”  என்று சொல்லப்படுகின்றது. அறிவுசால் சமுதாயத்தில் அறிவும் திறனும் உள்ளவர்களைத் தேடி உலகம் செல்கின்றது. இது நடைமுறை உண்மை. அவர்களுக்கு ஒரு விளம்பரமோ அல்லது பரிந்துரையோ தேவையில்லை. விளம்பரமும் பரிந்துரைகளும் கொண்டு தொழிலிலும் வாழ்விலும் முன்னேறுபவர்கள் அவர்களுடைய ஒவ்வொரு படியின் முன்னேற்றத்திலும் யாரையாவது தேடிக்கொண்டிருப்பார்கள். மற்றவர்களுடைய தயவும் ஒத்துழைப்பும் இல்லாமல் தங்களுடைய முன்னேற்றத்தின் சரித்திரத்தை அவர்களால் எழுத முடியாது.

    பல நேரங்களில் நல்ல திறனுள்ளவர்கள் என்ன திறமையிருந்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும்’ என்ற ஒரு பிற்போக்கான கருத்தை மனதில் நிறுத்தி தாங்கள் செய்யும் வேளையிலும் தொழிலும் தங்களுடைய முழுமையான உழைப்பை செலுத்தாமல் இருப்பார்கள். இவர்கள் அநேகமாகத் தோல்வியையே சந்திப்பார்கள். காரணம்- என்னதான் திறமையிருந்தாலும் கடின உழைப்புக்கு இணை ஏதுமில்லை. அமெரிக்க மனநல மற்றும் சமூகச் சிந்தனையாளர் மால்கம் கிளாட்வெல் என்பவர் கூறுகின்றார். “திறன்கள் மட்டும் போதுமானதல்ல. அந்தத் திறன்கள் அமைதியாக இருக்கும் பொழுது உங்களுடைய கடின உழைப்பு உங்களுக்காகப் பேசுகின்றது.”  சில சமயங்களில் நாம் நம்முடைய திறன்களை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. ஒரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது கேட்டேன் “உங்களுக்கு இந்தத் திறன்களெல்லாம் உண்டென்று உங்கள் மேற்பார்வையாளருக்குத் தெரியுமா?”

    அவர் அளித்த பதில் என்னைத் திகைப்படையச் செய்ததது. “இல்லை அய்யா. நான் அதெல்லாம் தெரியும் என்று சொன்னால் என்னை அதையெல்லாம் செய் என்று சொல்லுவார்கள். கொடுக்கின்ற சம்பளத்திற்கு அவர்கள் சொல்லுவதை மட்டும் செய்துவிட்டுப் போகவேண்டும்.” இந்த நோக்கு சரியானது அல்ல. நம்முடைய திறன்களை சரியான நேரங்களில் நாம் வெளிக்காட்டாவிட்டால் அவைகளின் பயன் என்ன? நமக்கு நம்மைத் தவிர யார் வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்?

    நாம் எந்தத் தொழில் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யலாமே  !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 29

    க. பாலசுப்பிரமணியன்

    தொழிலின் சிறப்பு

    மாற்றங்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை என்பதை நாம் புரிந்துகொண்டால் மாற்றங்களைச் சந்திப்பதற்கும் வாழ்வை வளமுடன் வாழ்வதற்கும் தேவையான சக்தியும் எண்ணங்களும் கருத்துப் பரிமாணங்களும் நமக்கு எளிதில் கிடைக்கும். இதற்குத் தகுந்தவாறு நமது அணுகுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வடித்துக்கொள்ளவும் உபயோகித்துக்கொள்ளவும் நாம் தயாராக வேண்டும்.

    எந்த ஒரு பிரச்சனையையும் நமது அணுகுமுறைகளால் சமாளித்து விடலாம். நமது அணுகுமுறைகள் நேர்மையானதாகவும் பரிசுத்தமானதாகவும் ஆக்கபூர்வமாகவும் இருத்தல் அவசியம். இவைகளில் எந்தவிதமான குறைகள் இருந்தாலும் நமக்கு கிடைக்கும் பலன்களில் அவைகளின் தாக்கமும் பாதிப்பும் இருக்கும்.

    உதாரணமாக மாணவப் பருவத்தில் சிலர் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்துகொள்ளும் பொழுது ‘இதெல்லாம் தேர்வில் வராது’ என்றோ ‘இந்த மாதிரிக் கேள்விகள் வந்தால் அவைகளை தயாரிப்பின்றியே சமாளித்து விடலாம் ‘ என்ற கருத்தும் அணுகுமுறையும் இருந்தால் நிச்சயமாக அவர்களுக்குத் தேர்வில் பாதிப்புக்கள் ஏற்படும். கற்றலின் சிறப்பே அறிவுத் திறன்களை வளர்த்துக்கொள்வதேயன்றி வெறும் தேர்வில் மதிப்பெண்களுக்காக மட்டும் தயாரிப்பில் ஈடுபடுதல் அல்ல. இது ஒரு கட்டிடத்திற்கு அடிவாரம் இல்லாமல் மேலே கட்டிடங்களைக் கட்டுவது போல.

    இதேபோல எந்த ஒரு தொழிலிலும் நாம் ஈடுபடும் பொழுது அந்தத் தொழிலுக்குத் தேவையான திறனும் கண்ணியமும் ஈடுபாடும் தேவையானது. மேலெழுந்தவாரியாக வெளிப்பூச்சு செய்வதுபோல மற்றவர்களுக்காக ஒரு வேலையைச் செய்யும் பொழுது நமது உள்மனதிற்க்குத் தேவையான நிறைவும் மகிழ்வும் கிடைக்காதது மட்டுமின்றி அந்தத் தொழிலின் மீதே நமக்கு ஒரு வகையான வெறுப்பும் பிடிப்பின்மையும் ஏற்பட்டுவிடும். தொடர்ந்து ‘எப்பொழுது இந்த வேலையை நாம் விட்டுவிடுவோம் என்ற எதிர்பார்ப்புக்களும் அதைச் சார்ந்த மனச் சோர்வும், அதன் பலனாக மன-உடல்நல பாதிப்புக்களும் ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகமாக அமையும்.

    “செய்யும் தொழிலே தெய்வம் என்ற மனப்பான்மை வேண்டும். எந்தத் தொழில் செய்தாலும் அது நாம் இறைவனுக்குச் செய்யும் ஒரு படைப்பாகக் கருதிச் செய்யும் பொழுது அதில் ஒரு நிறைவும் மகிழ்வும் ஏற்படும். நிறவெறியை எதிர்த்துப் போராடிய தலைவர் மார்ட்டின் லூத்தர் கிங் என்பவர் கூறினார்”  ஒரு மனிதன் தெருவைச் சுத்தம் செய்யும் பொழுது, மைக்கெல் அஞ்சேலோ ஒரு சிற்பம் வடித்ததைப் போலவோ அல்லது செகப்பிரியர் ஒரு கவிதை புனைந்தது போலவோ அல்லது பீத்தோவன் ஒரு பாடலுக்கு இசை அமைத்தது போலவோ நினைத்து அந்தத் தொழிலைச் செய்யவேண்டும். அதைச் செய்யும் பொழுது மண்ணிலும் வானிலும் இருக்கும் தேவதைகள் சற்றே நின்று வியந்து ‘இதோ இங்கே தெருக்கூட்டுபவன் தன் தொழிலை எவ்வாறு சிறப்பாகச் செய்கிறான் பாருங்கள் ” என்று தங்களுக்குள் உரையாடிக்கொண்டு செல்ல வேண்டும்.”

    தொழிலைச் செய்யும் பொழுது அது ஒரு உயர்ந்த அல்லது தாழ்ந்த தொழில் அல்ல. எல்லாமே ஒருவர் இந்த மனித இனத்திற்கும் இந்த மண்ணிற்கும் தாங்கள் செய்யும் ஒரு சேவையாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு செய்கின்ற ஒரு மனிதனுக்கு இந்த உலகில் உள்ள அனைவரும் தலை வணங்குவர்.  சில ஆண்டுகளுக்கு முன் மராட்டிய மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு மிகப் பெரிய தொழிலதிபரின் வண்டி ஓட்டுநர் அவரிடம் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வேலை பார்த்தபின் மாரடைப்பால் காலமாகின்றார். அடுத்த நாள் அவர் உடலுக்கு இறுதி மரியாதை அளிக்க பலர் கூடியிருந்த வேளையில் அந்தத் தொழிலதிபர் எந்தக்காரில் அவர் ஓட்டுநராக இருந்தாரோ அதை அலங்கரித்து அவருடைய சவ ஊர்வலத்திற்க்காகக் கொண்டு வந்தது மட்டுமின்றி அதைத்தானே மயானம் வரை ஒட்டிச் சென்றார். பலரின் கேள்விக்கு பதிலளிக்கும் வண்ணம் அந்தத் தொழிலதிபர் கூறியதாவது. “முப்பது ஆண்டுகள் இவர் என்னை பத்திரமாகக் காப்பாத்தி இந்த வண்டியை ஒட்டியிருக்கின்றார். அவருடைய தொழில் திறனுக்கும்கடமை உணர்வுக்கும்  நான் கொடுக்கும் சிறிய மரியாதை அவரைக் கடைசி ஊர்வலத்தில் நானே அழைத்துச் செல்வதுதான்.” பல இடங்களில் தங்கள் தொழிலில் நேர்மையுடனும் கடமையுணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொண்டவர்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் வரலாற்றுச் சிறப்புப் பெற்றவை.

    சில நேரங்களில் நாம் செய்கின்ற தொழிலுக்கும் அதில் நாம் காட்டும் ஈடுபாட்டிற்க்கும் நம்முடைய சிறப்பான திறன்களுக்கும் சரியான ஊதியம் கிடைப்பதில்லை. அல்லது நாம் சிறப்பாகத் தொழில் செய்தாலும் பல வித காரணங்களால் நமக்கு மற்றவர்களோடு நிகரான அங்கீகரிப்புக் கிடைப்பதில்லை. இவைகள் நம்முடைய தொழில் தர்மத்தையோ`அல்லது ஈடுபாட்டையோ, திறன்களையோ அல்லது கடமை உணர்வினையோ பலி  வாங்க அனுமதிக்கக்கூடாது. நமக்குப் பல நேரங்களில் நிகரான அங்கீகாரங்கள் கிடைப்பதில்லை. அது நம்முடைய திறனுக்கோ  அல்லது தனித்தன்மைக்கோ விமரிசனம் அல்ல. அவைகளுக்கு அப்பாற்பட்டு நாம் செய்கின்ற தொழில் இந்த மனித இனத்திற்கும் இறைவனுக்கும் நாம் செய்கின்ற ஒரு தோத்திரமாக இருந்தால் அதுவே நமது வாழ்க்கையின் பொருளும் வெற்றியும் ஆகும்.

    முயன்று பார்க்கலாமே !

    Share