வாழ்ந்து பார்க்கலாமே 40
க. பாலசுப்பிரமணியன்
மாற்றங்களை ஏன் எதிர்கொள்ள வேண்டும்?
ஒரு சிறிய நண்பர்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஒருவர் அனைவருக்கும் தெரிந்த ஒரு நண்பரின் நிலையைக் குறிப்பிட்டும் சொல்லும் பொழுது கூறினார் “அவர் வாழ்ந்து கெட்டவர். ஒரு காலத்தில் தன்னுடைய தொழிலில் மிகச் சிறப்பாக முன்னணியில் இருந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் தொழில் எடுபடவில்லை. பல புதிய புதிய தொழிலில் பல புதிய தயாரிப்பு முறைகளும் விளம்பரத் தேவைகளும் வந்துவிட்டதால் அவர் தொழில் படுத்துவிட்டது. தனது தொழில் என்றும் படுக்காது என்ற அசைக்கமுடியாத தன்னம்பிக்கையில் இருந்த அவர் தோல்வியில் துவண்டு ஒரு மனநோயாளியாகவே ஆகிவிட்டார்.” இந்த நிலை இன்று பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தோல்வியை எதிர்பார்க்காத பலர் அதைச் சந்திக்கும் பொழுது அதை எதிர்கொள்ள முடியாத நிலையில் தங்களுடைய வெளிமதிப்பு காலாவதியாகிவிடுமோ என்ற பயத்தில் தங்கள் தன்னம்பிக்கையை இழந்து வாழ்வின் முடிவுக்கே சென்று விடுகின்றார்கள். இதற்கு என்ன காரணம்?
நாமெல்லாம் இன்று மாறிவரும் சமுதாயத்தின் அங்கத்தினர்களாக இருக்கின்றோம். மாற்றங்கள் என்றும் நிரந்தரமானவை. ஆனால் இன்று மாற்றங்களின் வேகம் அதிகரித்து விட்டது. இன்றைய அறிவுசால் சமுதாயத்தின்(Knowledge society) காலச்சக்கரம் சில வாரங்கள் என்ற ஒரு கணிப்பினை சமூகவியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் பொருள் என்ன? சில அறிவுத்திறன்களின் தேவைகளும் தாக்கங்களும் பயன்முறைகளும் சில வாரங்களுக்குள் முடிந்து விடுகின்றன. அவைகளுக்கு புதிய அறிவுத்திறன்களும் அவற்றைச் சார்ந்த செயல்திறன்களும் விடைகொடுத்து விடுகின்றன. எனவே இத்தகைய மாற்றங்களுக்கு நாம் நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும். இந்தவகையான மாற்றங்கள் தொடர் நிகழ்வுகளாக இருப்பதால் நம்முடைய கற்றலும் திறன் ஈட்டல்களும் தொடர்ச்சியாக இருத்தல் அவசியமாகின்றது.
சுமார் நாற்பது-ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய ஊர்திகள் (Cars) ஓட்டும்பொழுது நாம் இயந்திர பிரேக்குகளை (Mechanical Brakes) உபயோகித்து வந்தோம். அந்த நிலை மாறி தற்பொழுது மின்னணுக்களால் இயக்கப்படும் (electronic brakes) பிரேக்குகளை உபயோகிக்கின்றோம். பழைய ஊர்திகளை பழுது பார்க்கும் மெக்கானிக்குகள் கூட இன்று கிடைப்பதில்லை. நாம் உபயோகித்த வானொலிப்பெட்டிகள் காணாமல் போய்விட்டன. நாம் பார்க்கின்ற தொலைக்காட்சி பெட்டிகளில் பலவித புதுமைகள் இணைக்கப்பட்டு விட்டன. நாம் ஒருகாலத்தில் உபயோகித்த தொலைபேசிகள் அருங்காட்சியகத்திற்குத் தேவையான பொருள்களாகி விட்டன. புதிய அலைபேசிகள் ஆதிக்கத்திலும் தாக்கத்தாலும் நம்முடைய சிந்தனைத்திறன்களும் செயல்திறன்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகின்றன. இதனுடைய தாக்கம் நமது மாணவர்கள் கற்கும் முறைகளிலும் செயலாற்றும் முறைகளிலும் ஏற்பட்டுக்கொண்டு வருகின்றது. அது மட்டுமின்றி, நமது வாழ்க்கைப் பாதைகளையும் மாறிவரும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் மாற்றங்கள் மிகுந்த அளவில் பாதித்து விட்டன. இதன் காரணமாக நாம் செய்யும் தொழில்களில் தொடர்ந்து மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்.
எனவே இந்த மாற்றங்களில் நாம் பங்கீட்டாளர்களாக (Stakeholders) இல்லாவிட்டால் அவைகள் நம்மைப் பின்தள்ளிவிட்டு முன்னே சென்றுகொண்டிருக்கும். சிஸ்கோ (CISCO) என்ற ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர் ஒருமுறை தனது பேச்சினில் குறிப்பிட்டார்: “இனி வரும் சமுதாயத்தில் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களைப் பின் தள்ளுவதற்கான வாய்ப்பு குறைவே; ஆனால் வேகமாகக் கற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் மெதுவாகக் கற்றுக்கொள்ளும் நிறுவனங்களைப் பின்தள்ளிவிடும்.” ( In the Knowledge society, the big will not swallow the small, but the faster will swallow the slower).
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத நபர்கள், நிறுவனங்கள் மாற்றும் தொழில் அமைப்புக்கள், மாற்றங்களை முன்கூட்டியே நுகராத நபர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புக்கள் தங்களுடைய தோல்விகளுக்கும் வருங்காலச் சீரழிவுக்கும் தாங்களே வித்திட்டுக்கொள்ளுகின்றன. மாற்றங்களை நுகர்தலும், அறிதலும், அவற்றை ஏற்றுக்கொண்டு புதிய சிந்தனைகளையும் வழிமுறைகளையும் நடைபடுத்திக்கொள்ளுதலும், தோல்விகளைத் தவிர்ப்பதற்கு மட்டுமின்றி வருங்கால வெற்றிகளுக்கு வித்தாகவும் அமையலாம்.
பழமையைப் பாராட்டுதலும், பழமையைப் போற்றுதலும், பழமைச் சின்னங்களைப் பாதுகாத்தலும் எவ்வளவுக்கெவ்வளவு அவசியமோ அவ்வளவுக்கவ்வளவு புதுமையை ஏற்றுக்கொண்டு முன்னேற்றப்பாதையில் செல்லுவதற்குத் தயார் செய்து கொள்ளவேண்டும். மாற்றங்களை ஏற்க மறுப்பவர்கள் மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களுடைய முன்னேற்றத்திற்கு தடைக்கற்களை தாங்களே முன்வைத்துக்கொள்கின்றார்கள்.
மாற்றங்கள் நம்முடைய ஒப்புதலுக்காகவோ அல்லது விருப்பு வெறுப்புக்களுக்காகவோ காத்திருப்பதில்லை அல்லது பணிவதில்லை. அவைகள் இயற்கையின் மற்றும் மனித சிந்தனை வளர்ச்சியின் வெளிப்பாடுகள். நம்முடைய வேகத்தைக் கணித்து அவைகளுக்காகத் தங்களுடைய வேகத்தை அவைகள் சமன் செய்துகொள்வதில்லை. நாம் நமது தேவைகள் மற்றும் நிர்பந்தங்களுக்கேற்றவாறு இந்த மாற்றங்களின் வேகத்தை கணித்து முன்செல்லவேண்டும். மறுத்தால், நம்முடைய சமூக, பொருளாதார மற்றும் தொழில் துறைகளில் தொடர்ந்து தோல்விகளைத் தழுவ வேண்டியிருக்கும்.
மாற்றங்கள் இயற்கையின் நியதி. மாற்றங்களைத் தவிர வேறெதுவும் மாறுவதில்லை என்பது முதுமொழி. வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிக் கூறிய வள்ளுவர் தந்த குறள் இந்த மாற்றங்களின் ஆதிக்கத்திற்கு இன்னொரு சான்று.
இன்றிருப்பார் நாளையில்லை என்னும்
பெருமை உடைத்து உலகு.
மாற்றங்கள் என்பது நமது பார்வைகளின் மற்றொரு கோணம். மாற்றங்கள் நமது சிந்தனைகளின் இன்னொரு புதிய வெளிப்பாடு. எனவே மாற்றங்களைக் கண்டு நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் இந்த மாற்றங்கள் நம்முடைய கலாச்சார அடிப்படைகளைத் தாக்காத வண்ணமும் நம்முடைய பாரம்பரியங்களை சின்னா பின்னமாக நசுக்கி விடாத வண்ணமும் நாம் அவற்றை ஏற்று புத்திசாலித்தனமாக நிலைநிறுத்த வேண்டும்.
மாற்றங்களால் நமக்கு ஏற்படும் இழப்புக்கள் தோல்விகள் அல்ல. அவைகள் நம்முடைய செயல்திறன்களில் உள்ள சிறிய குறைபாடுகளே. பலருக்கு நம்மால் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற ஒரு பயமும் சந்தேகமும் ஏற்படுகின்றது.
இதை விளக்கும் வண்ணம் ஒரு மேலைநாட்டு மனநல நிபுணர் கூறுகின்றார்: “நாமெல்லாம் கோவிலில் ஒரு கயிற்றால் கல்தூண்களில் கட்டப்பட்ட யானையைப் போன்றவர்கள். அந்த யானை நினைத்தால் அந்தக் கயிற்றை ஒரு நொடியில் அறுத்துக்கொண்டு வெளிவர முடியும். ஆனால் நாம் கட்டப்பட்டுள்ளோம் என்ற ஒரு எண்ணம் அதன் மனதில் இருக்கும் வரை அது அந்த இடத்தை விட்டு நகராது. அதுபோல் நம்மில் பலர் நம்முடைய வளர்ச்சியை சில சிந்தனைகளால் கட்டுப்போட்டிருக்கின்றோம். அந்த சிந்தனைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளுதல் அவசியம். இதைக் கற்றலின் இயலாமை (Learned Helplessness) என அழைக்கலாம்.”
உண்மைதானே?
நாமும் புதிய தரமான சிந்தனைகளையும் மாற்றங்களையும் பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப் பழகலாமே !
(தொடரும்)