க. பாலசுப்பிரமணியன்

தொழிலின் சிறப்பு

மாற்றங்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை என்பதை நாம் புரிந்துகொண்டால் மாற்றங்களைச் சந்திப்பதற்கும் வாழ்வை வளமுடன் வாழ்வதற்கும் தேவையான சக்தியும் எண்ணங்களும் கருத்துப் பரிமாணங்களும் நமக்கு எளிதில் கிடைக்கும். இதற்குத் தகுந்தவாறு நமது அணுகுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வடித்துக்கொள்ளவும் உபயோகித்துக்கொள்ளவும் நாம் தயாராக வேண்டும்.

எந்த ஒரு பிரச்சனையையும் நமது அணுகுமுறைகளால் சமாளித்து விடலாம். நமது அணுகுமுறைகள் நேர்மையானதாகவும் பரிசுத்தமானதாகவும் ஆக்கபூர்வமாகவும் இருத்தல் அவசியம். இவைகளில் எந்தவிதமான குறைகள் இருந்தாலும் நமக்கு கிடைக்கும் பலன்களில் அவைகளின் தாக்கமும் பாதிப்பும் இருக்கும்.

உதாரணமாக மாணவப் பருவத்தில் சிலர் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்துகொள்ளும் பொழுது ‘இதெல்லாம் தேர்வில் வராது’ என்றோ ‘இந்த மாதிரிக் கேள்விகள் வந்தால் அவைகளை தயாரிப்பின்றியே சமாளித்து விடலாம் ‘ என்ற கருத்தும் அணுகுமுறையும் இருந்தால் நிச்சயமாக அவர்களுக்குத் தேர்வில் பாதிப்புக்கள் ஏற்படும். கற்றலின் சிறப்பே அறிவுத் திறன்களை வளர்த்துக்கொள்வதேயன்றி வெறும் தேர்வில் மதிப்பெண்களுக்காக மட்டும் தயாரிப்பில் ஈடுபடுதல் அல்ல. இது ஒரு கட்டிடத்திற்கு அடிவாரம் இல்லாமல் மேலே கட்டிடங்களைக் கட்டுவது போல.

இதேபோல எந்த ஒரு தொழிலிலும் நாம் ஈடுபடும் பொழுது அந்தத் தொழிலுக்குத் தேவையான திறனும் கண்ணியமும் ஈடுபாடும் தேவையானது. மேலெழுந்தவாரியாக வெளிப்பூச்சு செய்வதுபோல மற்றவர்களுக்காக ஒரு வேலையைச் செய்யும் பொழுது நமது உள்மனதிற்க்குத் தேவையான நிறைவும் மகிழ்வும் கிடைக்காதது மட்டுமின்றி அந்தத் தொழிலின் மீதே நமக்கு ஒரு வகையான வெறுப்பும் பிடிப்பின்மையும் ஏற்பட்டுவிடும். தொடர்ந்து ‘எப்பொழுது இந்த வேலையை நாம் விட்டுவிடுவோம் என்ற எதிர்பார்ப்புக்களும் அதைச் சார்ந்த மனச் சோர்வும், அதன் பலனாக மன-உடல்நல பாதிப்புக்களும் ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகமாக அமையும்.

“செய்யும் தொழிலே தெய்வம் என்ற மனப்பான்மை வேண்டும். எந்தத் தொழில் செய்தாலும் அது நாம் இறைவனுக்குச் செய்யும் ஒரு படைப்பாகக் கருதிச் செய்யும் பொழுது அதில் ஒரு நிறைவும் மகிழ்வும் ஏற்படும். நிறவெறியை எதிர்த்துப் போராடிய தலைவர் மார்ட்டின் லூத்தர் கிங் என்பவர் கூறினார்”  ஒரு மனிதன் தெருவைச் சுத்தம் செய்யும் பொழுது, மைக்கெல் அஞ்சேலோ ஒரு சிற்பம் வடித்ததைப் போலவோ அல்லது செகப்பிரியர் ஒரு கவிதை புனைந்தது போலவோ அல்லது பீத்தோவன் ஒரு பாடலுக்கு இசை அமைத்தது போலவோ நினைத்து அந்தத் தொழிலைச் செய்யவேண்டும். அதைச் செய்யும் பொழுது மண்ணிலும் வானிலும் இருக்கும் தேவதைகள் சற்றே நின்று வியந்து ‘இதோ இங்கே தெருக்கூட்டுபவன் தன் தொழிலை எவ்வாறு சிறப்பாகச் செய்கிறான் பாருங்கள் ” என்று தங்களுக்குள் உரையாடிக்கொண்டு செல்ல வேண்டும்.”

தொழிலைச் செய்யும் பொழுது அது ஒரு உயர்ந்த அல்லது தாழ்ந்த தொழில் அல்ல. எல்லாமே ஒருவர் இந்த மனித இனத்திற்கும் இந்த மண்ணிற்கும் தாங்கள் செய்யும் ஒரு சேவையாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு செய்கின்ற ஒரு மனிதனுக்கு இந்த உலகில் உள்ள அனைவரும் தலை வணங்குவர்.  சில ஆண்டுகளுக்கு முன் மராட்டிய மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு மிகப் பெரிய தொழிலதிபரின் வண்டி ஓட்டுநர் அவரிடம் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வேலை பார்த்தபின் மாரடைப்பால் காலமாகின்றார். அடுத்த நாள் அவர் உடலுக்கு இறுதி மரியாதை அளிக்க பலர் கூடியிருந்த வேளையில் அந்தத் தொழிலதிபர் எந்தக்காரில் அவர் ஓட்டுநராக இருந்தாரோ அதை அலங்கரித்து அவருடைய சவ ஊர்வலத்திற்க்காகக் கொண்டு வந்தது மட்டுமின்றி அதைத்தானே மயானம் வரை ஒட்டிச் சென்றார். பலரின் கேள்விக்கு பதிலளிக்கும் வண்ணம் அந்தத் தொழிலதிபர் கூறியதாவது. “முப்பது ஆண்டுகள் இவர் என்னை பத்திரமாகக் காப்பாத்தி இந்த வண்டியை ஒட்டியிருக்கின்றார். அவருடைய தொழில் திறனுக்கும்கடமை உணர்வுக்கும்  நான் கொடுக்கும் சிறிய மரியாதை அவரைக் கடைசி ஊர்வலத்தில் நானே அழைத்துச் செல்வதுதான்.” பல இடங்களில் தங்கள் தொழிலில் நேர்மையுடனும் கடமையுணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொண்டவர்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் வரலாற்றுச் சிறப்புப் பெற்றவை.

சில நேரங்களில் நாம் செய்கின்ற தொழிலுக்கும் அதில் நாம் காட்டும் ஈடுபாட்டிற்க்கும் நம்முடைய சிறப்பான திறன்களுக்கும் சரியான ஊதியம் கிடைப்பதில்லை. அல்லது நாம் சிறப்பாகத் தொழில் செய்தாலும் பல வித காரணங்களால் நமக்கு மற்றவர்களோடு நிகரான அங்கீகரிப்புக் கிடைப்பதில்லை. இவைகள் நம்முடைய தொழில் தர்மத்தையோ`அல்லது ஈடுபாட்டையோ, திறன்களையோ அல்லது கடமை உணர்வினையோ பலி  வாங்க அனுமதிக்கக்கூடாது. நமக்குப் பல நேரங்களில் நிகரான அங்கீகாரங்கள் கிடைப்பதில்லை. அது நம்முடைய திறனுக்கோ  அல்லது தனித்தன்மைக்கோ விமரிசனம் அல்ல. அவைகளுக்கு அப்பாற்பட்டு நாம் செய்கின்ற தொழில் இந்த மனித இனத்திற்கும் இறைவனுக்கும் நாம் செய்கின்ற ஒரு தோத்திரமாக இருந்தால் அதுவே நமது வாழ்க்கையின் பொருளும் வெற்றியும் ஆகும்.

முயன்று பார்க்கலாமே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *