கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
KRISHNA FOR TODAY….!
————————————————

கண்ணனின் வாய்க்குள்ளே கண்ணனைக் கண்டதும்
அன்னை இழுத்தாள் அவசரமாய் -மண்ணுக்கு:
மாதாவின் கண்களுக்கு மாயத் திரையிட்ட
கீதா உபதேசா காப்பு….!
சூர்பணகை ஆனாலும் சுந்தரி ஆனாலும்
பார்ப்பன எல்லாம் பரம்பொருளே -தாற்பரியம்
தன்னை உணர்ந்து தவறா(து) இருந்திட
கண்ணனை நெஞ்சே கருது….!
சினம்மிகுந்த மாமன் சிறைபிறந்து ஆயர்
இனம்புகுந்து வாழ்ந்த இடையன் -மணம்குவிந்த
மண்ணணைநீர் மேகத்து வண்ணனை மாற்றான்தாய்க்
கண்ணனை நெஞ்சே கருது….!
தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
கோதா மணாளனே காப்பு….கிரேசி மோகன்….!