ஆறுபடை அழகா…. (1)
திருப்பரங்குன்றம்
பரங்குன்றப் பொருளான பரமனுடன் பார்வதியும்
பண்ணோடு இசையாகிப் பரந்தாமன் திருமகளும்
பங்கயத்தை விட்டெழுந்து பாட்டிசைக்கக் கலைவாணி
பாரெல்லாம் சேர்ந்ததுவே பரங்குன்றத் திருமணமே !
தெய்வானை கைப்பிடிக்கும் திருக்காட்சி கண்டிடவே
தேவர்கள் சேர்ந்திட்டால் தென்மதுரை தாங்கிடுமோ
தினம்தோறும் காட்சிதரத் திருவுள்ளம் கொண்டவனே
திரிபுரமும் போற்றிடுமே திருவருளே திருக்குமரா !!
கல்லாக இருந்தாலும் கருணையின் ஊற்றனறோ
கந்தாவென அழைத்ததுமே கடுந்துயரும் விலகுமன்றோ
கண்விழியின் அசைவினிலே கோள்விதிகள் மாறுமன்றோ
குன்றுள்ளே மறைந்தாலும் கைகொடுப்பது குகனன்றோ!
குறைநீங்க உனைவேண்டித் தவமிருந்தான் நக்கீரன்
குறைநீக்கி அருள்தந்தாய் பொய்கையிலே பூத்தவனே
ஆறுபடை போதாதென்று பாடவைத்தாய் அருந்தமிழில்
ஆற்றுப்படை கேட்டிருக்க அண்டமெல்லாம் ஆடிடுமே !
வலம்வந்து காத்திருப்பேன் வாசலிலே உனைத்தேடி
வரமொன்று கேட்டிடவே வார்த்தைகள் ஏதுமின்றி
வளர்கின்ற நாட்களிலே வருந்துயர்கள் நீக்கிடவே
வாவென்று அழைக்குமுன்னே வந்தருள்வாய் வேலவனே !