Author: அண்ணாகண்ணன்

  • பறந்து போ – திரை விமர்சனம்

    பறந்து போ – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    பறந்து போ படத்தைப் பார்த்த போது, கவலையாக இருந்தது. இது குழந்தைகளுக்கான படம் என முன்வைக்கும்போது சற்றே அச்சமாகவும் இருந்தது. படத்தின் அதீதமான காட்சிகள் பலவும் இயல்பானவையாகக் காட்டப்படுகின்றன. இவை தவறானவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல், சரிதான் எனக் குழந்தைகளே நினைக்கும் அளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    படத்தின் நாயகனாக வரும் சிறுவன் அன்பு (மிதுல் ரயான்), அப்பாவிடம் கோபித்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது சென்று விடுகிறான். அப்பா மிர்ச்சி சிவா, அவனைப் பல இடங்களில் தேடுகிறார். இதற்காகவே ஒரு பாடல் வைத்திருக்கிறார், இயக்குநர் ராம். வேர் இஸ் அன்பு? அன்பைக் காணவில்லை. காணோம் காணோம் கா கா காணோம். காத்தோடு காத்தா கரைஞ்சு போனானா? கிட்னாப்பர் கிட்ட மாட்டிக்கிட்டானா? டைம் மிஷின் ஏறித் தொலைஞ்சு போனானா? ஹைட் அண்ட் சீக்கே ஆட்றானா? என மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். காத்தோடு காத்தா கரைஞ்சு போனானா? என ஒரு குழந்தையைச் சொல்வது, மிகவும் அதிகப்படி. மதன் கார்க்கி இப்படி எழுதுவார் என எதிர்பார்க்கவில்லை.

    சிறுவன் தொலைவதும் அப்பா தேடுவதும் கண்டுபிடிப்பதும் ஏதோ நகைச்சுவை போல் வருகிறது. இதைப் பார்க்கும் சிறுவர்களுள் யாரேனும் இப்படி வேண்டுமென்றே தொலைந்தால் என்னாவது? இப்படிப் பெற்றோரிடம் சொல்லாமல், எங்காவது செல்வதும் பெற்றோரைத் தேட வைப்பதும் சரி எனப் பிள்ளைகள் நினைத்தால், எத்தகைய ஆபத்துகள், சிக்கல்கள் எழும் என இயக்குநர் யோசிக்கவே இல்லையா?

    அடுத்து, கிரஷ். பள்ளித் தோழியை அப்பா பார்த்தால், இவர் தான் உன் கிரஷ்ஷா? எனச் சிறுவன் அன்பு கேட்கிறான். தன் பள்ளித் தோழியைப் பார்க்கப் போகும்போது, நான் என் கிரஷ் வீட்டுக்குப் போகிறேன் என்கிறான். ஸ்லீப் ஓவர் எனச் சிறுவனும் சிறுமியும் சேர்ந்து படுத்துத் தூங்குகிறார்கள். பிறகு, அப்பா வேண்டும் என்கிறான் எனச் சொல்லி, சிறுவனைச் சிறுமியின் அம்மா தூக்கிக்கொண்டு வந்து, சிவா அறையில் படுக்க வைக்கிறார்.

    சிறுவர்கள் இயல்பாக நண்பர்களாக இருக்கலாம். இதில் கிரஷ் என்ற வார்த்தை எதற்கு? பூ கொடுப்பதும் ஓரக் கண்ணால் பார்த்துச் சிரிப்பதும் ஒன்றாகப் படுப்பதும் அவர்களுக்குத் தேவையற்ற கற்பனைகளைக் கொடுக்கும் வாய்ப்பு உண்டு. பத்து வயதுச் சிறுவர்களுக்கு இவையெல்லாம் தேவையா? பல திரைப்படங்களும் திரைப்பாடல்களும் பள்ளிப் பருவக் காதலைக் காட்டுவதால் அது இயல்பு என்ற எண்ணம் எழக் கூடாது. பல நிலைகளில் சமூக அடுக்குகள் கொண்ட தமிழ்ச் சமூகம், இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டது. இந்தப் பின்னணியில் உன் கிரஷ், என் கிரஷ் எனச் சிறுவர்கள் பேசுவது நல்லதில்லை. நகரத்து மாணவர்களுக்கும் கிராமத்து மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தும் வாய்ப்பும் இந்தப் புதிய பண்பாட்டுக்கு உண்டு.

    பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், சிறுவனை வீட்டில் பூட்டிவிட்டுச் செல்கிறார்கள். சிறுவன் அன்பு, பீட்சா, பர்கர் எனக் கேட்டும் ஆர்டர் செய்தும் சாப்பிடுகிறான். வேவ்போர்டு விளையாடுகிறான். வீட்டில் நெட்பிளிக்ஸ் பார்க்கிறான். வீடியோ கேம் விளையாடுகிறான். கொரிய இசைக்குழுவான பிடிஎஸ் இசைக்கும் பாடல்களைப் பார்க்கிறான். இந்தப் பெருநகர வழக்கங்களைக் காட்டுவதால், சிறுநகரத்திலும் கிராமத்திலும் இருந்து இதைப் பார்க்கும் சிறுவர்கள், தாங்களும் இவ்வாறு பீட்சா, பர்கர் சாப்பிட வேண்டும் எனக் கேட்கக்கூடும். பெருநகரத்திலேயே எல்லோர் வீடுகளிலும் இப்படி எந்த நேரமும் ஆர்டர் செய்து சாப்பிடுவதில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு, புதிய இயல்பாகச் சிறுவர்கள் அடம் பிடித்துக் கேட்கலாம்.

    படம் முழுவதும் ஒரு பொறுப்பின்மை விரவி இருக்கிறது. சிறுவன் அன்பு எண்ணெய் டின்னை உடைத்து, தரை முழுவதும் எண்ணெய் பரவியுள்ள நிலையிலும் அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பது போல் கேம் விளையாடுகிறான். அப்பாவே கண்டுபிடித்துத் துடைக்கிறார். தான் எண்ணெய் கொட்டியதால் மற்றவர்கள் வழுக்கி விழுந்துவிடுவார்களே, அவர்களை எச்சரிக்க வேண்டுமே என்று கூட அன்புக்குத் தோன்றவில்லை. படம் நெடுகிலும் இருசக்கர வாகனம் ஓட்டும் சிவா, பெரும்பாலும் தலைக்கவசம் அணியவில்லை. கடன் கொடுத்தவருக்கு உரிய பதில் சொல்லவில்லை. கடன் கொடுத்தவர் துரத்தும்போது சாலையோரப் பாப்கார்ன் கடையில் இடித்துப் பாப்கார்ன் சிதறுகிறது. அவருக்கு இவர்கள் எந்த இழப்பீடும் தரவில்லை.

    சிறுவன் அன்பு அடம் பிடிப்பதுடன் திமிராகவும் நடந்துகொள்கிறான். அப்பாவை வீட்டுக்குள் பூட்டி வைக்கிறான். உடனே இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான். 25 கி.மீ. தள்ளிக் கடை இருந்தாலும் உடனே பர்கர் சாப்பிட வேண்டும் என்கிறான். சாலையில் வேவ்போர்டு விளையாடுகிறான். மலை சூழ்ந்த இடத்துக்கு வீட்டை மாற்று என்கிறான். பெற்றோர் எதற்கும் கோபப்படாமல், ஐயம் ப்ரவ்டு ஆப் யூ என்கிறார்கள். அதிகம் செல்லம் கொடுக்கும் இந்தக் காலத்துப் பெற்றோர்களை இதில் காண முடிகிறது. ஆயினும் பிள்ளைகள் நினைத்ததை எல்லாம் உடனே செய்ய வேண்டும் என நினைக்கக் கூடாது. பெற்றோர்களும் அவர்கள் கேட்டதை எல்லாம் உடனே நிறைவேற்ற வேண்டும் என நினைக்கக் கூடாது.
    படம், இந்த வகையில் சமநிலையில் இல்லை.

    கிறித்துவப் பெண், இந்துவைக் காதலித்துத் திருமணம் செய்வதும் இந்த இந்து அப்பாவும் மகனும் முஸ்லிம் வீட்டுக்குப் போய்த் தங்குவதும் இயல்பாக உள்ளன. இதிலும் கிறித்துவப் பெண், தம் கணவரைத் தம் வீட்டார் சொல்வது போல் சாத்தானே என அழைப்பது இயல்பாக இல்லை.

    படத்தில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன. நல்ல விஷயத்துக்கு அடம் பிடியுங்கள். நீங்கள் அடம் பிடித்தால், உங்கள் அப்பாவின் புகைப் பழக்கத்தை விடச் செய்யலாம் என வழிகாட்டியது நன்று. சிறுவன் அன்பு துணிச்சலாக நீச்சல் அடிப்பதும் டிராக்டரை நிறுத்தி லிப்ட் கேட்பதும் புதிய நண்பர்களைப் பெறுவதும் புதிய விளையாட்டுகளைக் கற்பதும் சிறப்பாகக் காட்டப்பட்டு உள்ளன.

    மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையில், 11 பாடல்கள், படத்தில் இடம் பெற்றுள்ளன. பாடலுக்குத் தேர்ந்தெடுத்த சூழ்நிலைகளும் அதற்கு எழுதிய வரிகளும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால், பின்னணி இசையிலும் சூழலுக்கு ஏற்ற மனநிலைக்குப் படம் பார்ப்பவர்களைக் கொண்டு வருவதிலும் இசையமப்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.

    மாணவர்களிடம் திரைப்படம் செலுத்தக்கூடிய தாக்கம் மிகப் பெரியது. மாணவர்கள் படம் பார்க்கும்போது என்னென்ன விஷயங்களை எடுத்துக்கொள்வார்கள் என்ற கண்ணோட்டம், இயக்குநருக்குத் தேவை.

    ஊர் சுற்றுங்கள், உலகம் சுற்றுங்கள், புதிய இடங்களுக்குச் செல்லுங்கள், புதியவர்களைச் சந்தியுங்கள் என்பதே இயக்குநர் ராம் சொல்ல வந்த செய்தி. அவரது அனுபவத்திற்கு அவர் இன்னமும் சிறப்பாகப் பாத்திரங்களைப் படைத்திருக்கலாம். படத்தை எடுத்திருக்கலாம்.

    பறந்து போ – இன்னும் பறக்க வேண்டும்.

    Share
  • நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது சரியா?

    நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது சரியா?

    அண்ணாகண்ணன்

    ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ பாடலை அண்மையில் கேட்டேன். 1991ஆம் ஆண்டு வெளியான சிகரம் திரைப்படத்தில், வைரமுத்து எழுதிய பாடலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையமைத்துப் பாடியுள்ளார். மிக இனிய இசையும் குரலும் நல்ல பல வரிகளும் கொண்ட பாடல். மென்மையாக வருடி, உள்ளத்தை லேசாக்கக் கூடியது.

    வாராயோ வெண்ணிலாவே, நிலாவே வா, நிலா நிலா ஓடி வா என நிலவை அழைத்த கவிஞர்களின் வரிசையில் வைரமுத்து இணைந்தார். வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா என்றும் இவரே கேட்டார். வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலில் நிலவுடன் காதலையும் கலந்து பாடி ஈர்த்துள்ளார். இதில் இடம்பெற்ற ‘நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை!’ என்ற வரியை முதலில் கேட்ட போது, ஏதோ அரிய தத்துவம் போல் மயக்கியது. பிறகு தான் இது அறிவியலுக்குப் புறம்பானது என்பது புலப்பட்டது.

    இருவர் படத்தில் ‘பூ கொடியின் புன்னகை’ என்ற பாடலிலும் ‘நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை’ என எழுதியுள்ளார். அடிப்படை இல்லாத இப்படி ஒரு பார்வையை வைரமுத்து எங்கிருந்து பெற்றார் என்று தெரியவில்லை.

    சூரிய ஒளி, பூமியின் மேற்பரப்பில், குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிறத்தை அதிகமாகச் சிதறடிப்பதால் வானம் நம் கண்களுக்கு நீல நிறமாகத் தெரிகிறது. சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறமாக வானம் தெரிவதற்கு ஒளிச்சிதறலே காரணம். இந்த நிறங்கள் மாறக் கூடியவை. இந்த நிறங்களுக்கு அப்பால் எல்லையற்ற வெளியும் எண்ணற்ற கோள்களும் கற்பனைக்கு எட்டாத சக்திகளும் இருக்கின்றன. இந்த நிலையில், நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது அறியாமையின் வெளிப்பாடு.

    ஒன்றுமற்ற ஒரு வெற்றிடத்திலிருந்துதான் இவ்வளவு பெரிய பிரபஞ்சம் தோன்றியிருக்கிறது. எனவே வானம் என்பதே ஏதுமில்லாதது எனக் கூற இயலாது. மேலும், இந்த வெற்றிடத் தத்துவத்திற்கும் நீலத்தைப் பிரிப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

    ‘வானம் எனக்கொரு போதிமரம்’ என எழுதிய வைரமுத்து, நீலத்தைத் தான் வானம் என்று கருதி எழுதினாரா? வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனுசனை இன்னும் பார்க்கலையே என எழுதிய வைரமுத்து, வானத்தை இன்னும் சரியாகப் பார்க்கவில்லையா?

    Share
  • 3 BHK – திரை விமர்சனம்

    3 BHK – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்
    3 BHK திரைப்படத்தை இன்று பார்த்தேன். படத்தின் தொடக்கத்தில் காசா கிராண்டு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். இது வழக்கமானது தானே என்று நினைத்தால், இந்த ஒட்டுமொத்தப் படமும் காசா கிராண்டுக்கும் அது போன்ற இதர ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய விளம்பரப் படமாக அமைந்துள்ளது.
    வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கான எல்லாத் தூண்டில்களும் வலைகளும் சரியாக வீசப்பட்டுள்ளன. வாடகை வீட்டில் உள்ள சிக்கல்களை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் உள்ள கட்டுப்பாடுகள், போதாமைகள், சிக்கல்கள் அனைத்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. தண்ணீரை அளவாகப் பயன்படுத்த வேண்டும் என்பது தொடங்கி, மழைக் காலத்தில் வீட்டில் தண்ணீர் புகுந்துவிடுவது வரை. இதற்கு ஒரே தீர்வு, சொந்த வீடு வாங்க வேண்டும் (சொந்த வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது என்பது தனிக்கதை).
    சொந்த வீடு வாங்குவோருக்கான அடுத்த தூண்டில், இந்த இடம் பெரிய அளவில் வளரும். உங்கள் முதலீடு பல மடங்கு உயரும் என்பது. இதைப் படிப்படியாகப் படத்தில் காட்டுகிறார்கள். 2006க்கு முன்பு ஏழரை லட்ச வீடு, பிறகு பதினைந்து லட்சமாகி, அது பிறகு இருபத்தைந்து லட்சமாக உயருகிறது. இப்போது எவ்வளவு லட்சம் என்பதைச் சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களை மனத்தளவில் இந்த விலைக்குத் தயார் செய்வதற்கு இந்த முந்தைய விலை விவரம் உதவுகிறது.
    கடன் வாங்காமல் வீடு வாங்க முடியாது என்பது படத்தின் அடுத்த மையக் கருத்து. இது வசனமாகவே வருகிறது. எனவே கடன் வாங்கத் தயங்குபவர்களை அதிலிருந்து வெளிவந்து கடன் வாங்கத் தூண்டுகிறார்கள்.
    வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது என்பதை ஏதோ பெரிய வெற்றி என்பதைப் போல், பல முறைகள், பல காட்சிகளில் காட்டுகிறார்கள். வீட்டுக் கடன் அளிப்பவர்கள், உரிய சான்றுகள் இருந்தால் மட்டுமே அளிப்பார்கள். இது முழுவதும் வணிகம். இதில் குடும்பக் கண்ணீருக்கு எல்லாம் இடமில்லை. வருவாய்ச் சான்று உள்பட வங்கி கேட்கும் சான்றுகள் உங்களிடம் இருந்தால் கடன் கிடைக்கும். இல்லை என்றால் இல்லை. இதற்கு எல்லாம் ரொம்ப உணர்ச்சிவசப்படக் கூடாது. இப்போது நிலையான வருவாய் இல்லாவிட்டாலும், அதிக வட்டிக்கு வீட்டுக் கடன் கொடுக்கப் பலர் இருக்கிறார்கள். அவர்களின் குறி, வட்டி வருவாய் தான். அப்படியே உங்களால் கடன் கொடுக்க முடியாவிட்டால், வீட்டை ஜப்தி செய்து ஏலம் விட்டுவிடுவார்கள். எனவே, வீட்டுக் கடனால் வங்கிகளுக்கோ நிதி நிறுவனங்களுக்கோ பெரிய இழப்பு எதுவும் கிடையாது; லாபமே அதிகம்.
    சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள், புறநகரில், சற்று தூரத்தில், சிறு நகரங்களில், கிராமங்களில் மனையாக வாங்கி வீடு கட்டலாம்; தனி வீடும் வாங்கலாம். இந்த வாய்ப்புகளைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் அடுக்குமாடி வீட்டை மட்டுமே தேர்ந்தெடுக்குமாறு காட்சிகள் அமைந்துள்ளன. இது அடுக்குமாடி நிறுவனங்களுக்கே சாதகமானது.
    படத்தின் நிறைவுக் காட்சியில், சித்தார்த் வாங்கும் சொந்த வீடும் காசா கிராண்டு வீடாக இருப்பது தற்செயலானது இல்லை.
    அந்த வீட்டைப் பார்க்க வரும் வீட்டுத் தரகர் யோகி பாபு அதன் சுவரைத் தடவிப் பார்த்து, தரமாகத்தான் கட்டியிருக்கிறார்கள், உங்கள் அப்பாவைப் போல என்று சொல்வதும் தற்செயலானது இல்லை.
    படம் பார்க்கும் ரசிகர்களை வாடிக்கையாளர்களாக மாற்றும் உள்நோக்கத்துடன் இந்தப் படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார்கள். இதற்குள் கச்சிதமான குடும்பக் கதையை, அதன் உணர்ச்சிகரமான தருணங்களோடு, ஆசைகளோடு கனவுகளோடு காட்சிப்படுத்தி இருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.
    படத்தில் நடித்துள்ள சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்பட அனைவரும் இது விளம்பரப் படம் இல்லை; உண்மையான கதை என்ற உணர்வை ஏற்படுத்தும் படியாகவே நடித்திருக்கிறார்கள்.
    அடுக்குமாடி வீட்டின் சிக்கல்களை, வீட்டுக் கடன் வாங்குவதன் சிக்கல்களை இன்னொருவர் இன்னொரு படமாகத் தயாரிக்கலாம்.
    Share
  • பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு

    பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு

    பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

    அவர் குறித்து, 30 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய விருத்தம் இது.

    ஆண்பால் ஒளவை!

    – அண்ணாகண்ணன்

    பாட்டாலே பாரதிநீ! பளபளக்கும்
    பைந்தமிழால் அவன்தாசன்! படைத்த நூலால்
    கேட்டாலே இனிக்கின்ற கிப்ரான்! என்றும்
    கீழடையாத் தரத்தாலே ஷெல்லி! சென்ற
    நாட்டாலே புகழ்நாட்டும் தாகூர்! கொண்ட
    ஞானமதால் இறக்காத மில்டன்! நீதான்
    பூட்டாலே அடங்காத புஷ்கின்! வீழும்
    பூந்தமிழை வாழவைக்கும் சேது ராமன்!

    கற்பனையால் காதலினால் கண்ண தாசன்!
    கைத்திறத்தால் ஷேக்ஸ்பியர்நீ! கவிதை சொல்லும்
    கற்பகமாய் நின்றதனால் வேர்ட்ஸ்வொர்த்! நாளும்
    கழறுகின்ற தத்துவத்தால் சாக்ர டீஸ்நீ!
    அற்புதமாய் நிற்கின்ற அரிஸ்டாட் டில்தான்!
    அருந்தமிழின் கடலுக்குள் பாதை கண்ட
    உற்சவமே வாஸ்கோட காமா! என்றும்
    உண்மைகளின் சீருருவே சேது ராமா!

    கவித்தேரில் மற்றுமொரு கம்பன்! நல்ல
    கவிதைகளால் இன்னுமொரு இளங்கோ! வெண்பாப்
    புவிவென்ற புகழேந்தி உன்றன் பாட்டன்!
    போர்ப்பரணி கொட்டியதில் செயங்கொண் டான்நீ!
    குவியாத தாமரைநீ! ஒட்டக் கூத்தன்!
    கொலுவீற்ற தமிழால்நீ ஆண்பால் ஒளவை!
    செவிமோதும் அமுதத்தால் சேது ராமன்
    செம்மாந்த தமிழ்போல நீடு வாழி!

    Share
  • திருப்புவனம் அஜித்குமார் கொடூர மரணம்

    திருப்புவனம் அஜித்குமார் கொடூர மரணம்

    அண்ணாகண்ணன்

    திருப்புவனம் காவலர் அஜித்குமாரின் கொடூர மரணம், காவல் துறையின் கோர முகத்தைக் காட்டுகிறது.

    அஜித்குமாரை உடல் முழுவதும் ஈவு இரக்கமின்றி அடித்து, மிளகாய்ப் பொடி தடவி, சாகடித்த காவலர்களுக்கு எந்தக் குற்றவுணர்வும் இருக்காது. மேலதிகாரி சொன்னார், நான் செய்தேன் என்பார்கள். இது அவர்களுக்குச் சாதாரணம். ஆனால், பாதிக்கப்படும் மக்களுக்கோ அழியாத ரணம். சிரமறுத்தல் வேந்தருக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை, நமக்கோ பெரிய வாதை என்ற பாரதிதாசனின் பாடலே நினைவுக்கு வருகிறது.

    காவல் துறையினர், தங்கள் உயரதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் கண்டால், ஐயா / அம்மா எனப் பணிவாக அழைப்பார்கள். விறைப்பாக வணக்கம் வைப்பார்கள். அவர்கள் முன்னால் நின்றுகொண்டே கடமையாற்றுவார்கள். அதே நேரம், இதே காவலர்கள், சாமானிய எளிய மக்களை அதட்டி அழைப்பார்கள். வாடா போடா என ஒருமையில் பேசுவார்கள். அவர்களை உட்காரச் சொல்லாமல், நிற்க வைத்தே பேசுவார்கள். ஆதாரம் இல்லாவிட்டாலும் வெறும் சந்தேகம் இருந்தாலே அடித்து நொறுக்குவார்கள். அதிகாரம் மேலிருந்து கீழ்நோக்கிப் படிப்படியாகப் பரவும்.

    காவல் துறையினர் யாரையும் தடுத்து நிறுத்தி, அவர்களின் அடையாள அட்டையைக் கேட்க முடியும். தன்னை விசாரிக்கும் காவலரிடம் அடையாள அட்டையைக் காட்டுமாறு இங்கு யாரும் கேட்க முடியுமா?

    காவல் துறையினர் மீது மரியாதை எழ வேண்டுமே தவிர, பயம் வரக்கூடாது. காவல் துறை உங்கள் நண்பன் என ஒலிபெருக்கியில் பேசுவார்கள். ஆனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்த, லத்தியைச் சுழற்றுவார்கள். இவர்களின் லத்திக்குப் பயந்தே தள்ளுமுள்ளு ஏற்படும். யாருக்கு எந்தக் காயம், எந்த இழப்பு ஏற்பட்டாலும் இவர்களுக்குக் கவலை இல்லை. யாரும் இவர்களைக் கேள்வி கேட்க முடியாது.

    இந்தப் புண்ணிய பூமியில், ஜனநாயகத் திருநாட்டில், கேட்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது எனத் தலைநிமிர்ந்து யாரும் நடக்க முடியாது. காவல் துறையினர் மன்னர்களைப் போல் நடப்பார்கள். அவர்களுக்கு மக்கள் கூழைக் கும்பிடு போட வேண்டும். மதிக்காதவர்களை முட்டிக்கு முட்டி தட்டுவார்கள். சட்டத்தைத் தங்கள் கையில் எடுப்பார்கள். சிறைக் கழிவறையில் வழுக்கி விழவைத்து, மாவுக் கட்டுப் போடுவார்கள். நீதியை நிலைநாட்டியதாக நினைப்பார்கள்.

    காவல் துறையில் வெளிப்படைத்தன்மை இல்லாததே அடிப்படைச் சிக்கல். எல்லாக் காவல் நிலையத்திலும் கண்காணிப்புப் படக்கருவிகள் வைக்காதது ஏன்? அவை எந்த நேரத்திலும் இயங்குவதை உறுதி செய்யாதது ஏன்? காவல் துறையினர் மீது குற்றம் சாட்டப்படும்போது, அவர்கள் மட்டும் எளிதாகத் தப்பிவிடுவர். அந்த அமைப்பே கூட்டாகச் சேர்ந்து அவர்களைக் காப்பாற்றும்.

    இடைநீக்கம், இடமாற்றம், அபராதம் போன்றவை தண்டனையே கிடையாது. இதைச் செய்தவன் மூலம் ஏதோ நடவடிக்கை எடுத்தது போல் காட்டுகின்றார்கள். மனமாற்றம் ஏற்படுத்தவே தண்டனை என்றால், உண்மையில், தண்டனை பெற்றவர்களுக்கு இதனால் எந்த மனமாற்றமும் ஏற்படாது.

    அஜித்குமாருக்கு நடந்தது, நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாரும் எதற்கும் பொறுப்பு ஏற்க மாட்டார்கள். அதிகாரம் மிக்கவர்களுக்குச் சேவைகள் செய்து, அவர்களைக் காத்து நிற்பார்கள். எளிய மக்களை அடித்துத் துரத்துவார்கள். எனில், இந்த மக்களுக்கு யார்தான் பாதுகாப்பு?

    Share
  • யாரிசைக்க வருகுவதோ? – சில கேள்விகள்

    யாரிசைக்க வருகுவதோ? – சில கேள்விகள்

    அண்ணாகண்ணன்

    யாரிசைக்க வருகுவதோ? – ஒலி யாழினின்று வருகுவதோ? என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். 2022ஆம் ஆண்டு வெளியான ஹே சினாமிகா படத்தில் கோவிந்த் வசந்தா இசையில், மதன் கார்க்கி வரிகளில், பாம்பே ஜெயஸ்ரீ குரலில் வெளிவந்துள்ளது. மிக இனிய இசை, நெகிழச் செய்யும் வரிகள்.

    பாரதியாரின் எங்கிருந்து வருகுவதோ – ஒலி யாவர் செய்குவதோ? என்ற பாடலின் தாக்கம், இந்தப் பாடல் முழுவதும் வெளிப்படுகிறது.

    குன்றினின்றும் வருகுவதோ எனப் பாரதி கேட்பதை, மாமலையின் மீதிருந்தோ? என மதன் கார்க்கி கேட்கிறார். காற்றைக் கொண்டு தருகுவதோ எனப் பாரதி கேட்பதை, காற்றிலேறி வருகுவதோ? என மதன் கார்க்கி கேட்கிறார். யமுனை அலை பற்றிப் பாரதி கேட்க, கடல் அலை பற்றி மதன் கார்க்கி கேட்கிறார். ஆயினும் நாணறுந்த இன்பமெலாம் நானருந்த வருகுவதோ? என்ற மதன் கார்க்கியின் வரியை நான் மிகவும் ரசித்தேன்.

    இதன் பல்லவியில் ஒலி எங்கிருந்து வருகிறது என்று கேட்ட பிறகு, மாமலையின் மீதிருந்தோ? – வெள்ளி மாகமதன் மீதிருந்தோ? எனக் கேட்கிறார். வெள்ளி மாகம் என்பது எதைக் குறிக்கிறது? மாகம் என்பதற்கு மேலிடம், ஆகாயம், சுவர்க்கம், திக்கு, மேகம் எனச் சில பொருள்கள் அகராதியில் உள்ளன. மேகம் எனக் குறிப்பிட விரும்பினால் நேரடியாக வெள்ளி மேகமதன் மீதிருந்தா என்றே கேட்டிருக்கலாம். மாகம் என முற்றிலும் புதிய சொல் தேவையில்லை. வெள்ளி என்பதுடன் இணைத்துப் பார்த்தால், வெள்ளி ஆகாயம் என்பதே பொருளமைதியுடன் உள்ளது. இதைத்தான் மதன் கார்க்கி சொல்ல விரும்புகிறாரா?

    Share
  • ஈரான் – இஸ்ரேல் போரின் பரிமாணங்கள்

    ஈரான் – இஸ்ரேல் போரின் பரிமாணங்கள்

    அண்ணாகண்ணன்

    இப்போது ஈரான் வசம் அணு ஆயுதங்கள் மட்டும் இருந்திருந்தால், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் அதைத் தாக்கும் துணிச்சல் வந்திருக்காது. அண்மையில் தாக்கப்பட்ட உக்ரேன், பாலஸ்தீனம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய அனைத்தும் அணு ஆயுதம் இல்லாத நாடுகள்.

    ஈரான் மீதான தாக்குதலின் இன்னொரு பரிமாணம், அணு ஆயுதங்களின் அவசியத் தேவை. இன்றைய சூழலில் அணு ஆயுதம் இல்லாத நாடுகள், முழுமையான சுதந்திர நாடுகள் எனக் கொள்ள முடியாது. அவை, அணு ஆயுத நாடுகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்தாக வேண்டும். அவற்றின் வார்த்தையை மீறி ஏதும் செய்ய முடியாது. தங்கள் நாடுகளின் முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்க இயலாது. அவற்றின் வளங்களும் அவர்களுக்கே சொந்தம் எனக் கொள்ள இயலாது.

    நாளை ஈரான் வெற்றி கொள்ளப்பட்டால், அதன் எண்ணெய் வளம் முழுவதும் கொள்ளை போகும். அவர்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் தன்மானத்துடன் வாழ்வதற்கும் வாய்ப்பு மறுக்கப்படும். காரணம், அவர்களின் எதிரிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன.

    உலகில் அணு ஆயுதங்களை முற்றாக ஒழிக்க வேண்டும். அல்லது அவற்றை வைத்திருக்கும் உரிமையை அனைத்து நாடுகளுக்கும் வழங்க வேண்டும். அனைவருக்கும் ஒரே நீதி, ஒரே விதிகள் இருக்க வேண்டும். நாங்கள் வைத்திருப்போம். வேறு யாரும் வைத்திருக்கக் கூடாது என்பது ஒரு புதிய ஒடுக்குமுறை.

    இந்தச் சூழலில் சீனா, வட கொரியா போன்ற அணு ஆயுத நாடுகள் மனம் வைத்தால் மட்டுமே ஈரான் பிழைக்க முடியும். மேலும் அமெரிக்க ஆதரவு அணு ஆயுத நாடுகள், அமெரிக்க எதிர்ப்பு அணு ஆயுத நாடுகள் என்பவற்றை இரு அணிகளாகவே பார்க்க வேண்டும். அமெரிக்க எதிர்ப்பு அணு ஆயுத நாடுகள், தங்கள் சார்பு நாடுகளைப் பாதுகாக்க வேண்டும். அவற்றுக்குக் கூட்டாக அணு ஆயுத வல்லமை அளிக்க வேண்டும். இதன் மூலம், உலக வரைபடத்தில் புதிய எல்லைக் கோடுகள் வரையப்படும். உலக நாடுகளின் நிதியில் பெருமளவைத் தங்கள் நாடுகளின் பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டும். இது ஆயுத வியாபாரிகளுக்கே நன்மை தரும்.

    இதன் இன்னொரு பரிமாணம், நம் இன்றைய தலைமுறை மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்க்கையும் ஆபத்தில் இருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் அச்சுறுத்தலின் நடுவே தான் வாழ வேண்டும். தங்கள் உழைப்பின், உற்பத்தியின் பெரும் பகுதியைத் தங்கள் நாடுகளின் பாதுகாப்புக்கே செலவிட வேண்டும். எந்த நாடாவது தங்கள் முயற்சியால் அதிகம் வளர்ந்தால், இன்னொரு நாட்டால் ஒரே கட்டளையில் அதை நிர்மூலம் ஆக்க முடியும். ஏதேனும் ஒரு முட்டாள் முதல் அணுகுண்டை வீசிவிட்டால், அதன் பிறகு ஒட்டுமொத்த பூமியும் அதற்கு விலை கொடுக்க வேண்டும். அதன் பிறகு மனிதன் மட்டுமின்றி, பூமியின் கடைசி உயிரும் துடித்து அடங்குவதற்கு அதிக காலம் பிடிக்காது.

    Share
  • பேஸ்புக் வழியே வருவாய் ஈட்டுவது எப்படி?

    பேஸ்புக் வழியே வருவாய் ஈட்டுவது எப்படி?

    அண்ணாகண்ணன்

    பேஸ்புக் பல வகைகளில் வருவாய் ஈட்ட வகை செய்கிறது. பேஸ்புக் ஸ்டார்ஸ் என்ற வகையில், நமது பதிவுகளைப் பிடித்திருந்தால், நம் நேயர்கள் பேஸ்புக்கிற்குப் பணம் கட்டி, இந்த ஸ்டார்களை வாங்கி நமக்கு இத்தனை ஸ்டார்ஸ் எனக் கொடுக்கலாம். அதாவது நேரடியாக நமக்கு அனுப்பாமல், சற்றே சுற்றி வளைத்து நமக்கு அனுப்புவது. இதில் பேஸ்புக்கிற்கும் ஒரு சிறு பங்கு இருக்கும். ஒரு குறிப்பிட்ட பதிவில் ஒருவர் எவ்வளவு ஸ்டார்ஸ் பெற்றிருக்கிறார் என்பது பதிவிற்குக் கீழே தெரியும். நம் ஊரில் சுரேஷ் கண்ணனுக்கு இவ்வாறு நேயர்கள் ஸ்டார்ஸ் அனுப்பியிருப்பதை அவர் பகிர்ந்திருந்தார்.

    இதன் அடுத்த நிலைதான், பேஸ்புக் சப்ஸ்கிருப்ஷன்ஸ். ஒவ்வொரு பதிவுக்கும் ஸ்டார்ஸ் அனுப்பாமல், ஒட்டுமொத்தமாகப் பதிவர் ஒருவருக்கு நேயர்கள் சப்ஸ்கிரைப் செய்யலாம். மாதம் ரூ.89 கட்டி அவருடைய பதிவுகளைப் படிக்கலாம். இப்படிப் பணம் கட்டியவர்கள் மட்டுமே படிக்கும் / பார்க்கும் வகையில் பதிவுகளை வெளியிடலாம்.

    பேஸ்புக்கில் நாம் வெளியிடும் வீடியோக்களில் விளம்பரங்கள் இடம்பெறச் செய்து, வருவாய் ஈட்டலாம். இதற்கு ஒருவருக்குப் பின்தொடர்பவர்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இருக்க வேண்டும். நேரலை வீடியோக்களை வெளியிடும்போதும் இவ்வாறு விளம்பரங்கள் வழியே வருவாய் ஈட்டலாம்.

    பேஸ்புக்கில் நிறைய நிறுவனங்களுடன் விளம்பரக் கூட்டாளியாக இருந்து, அவர்களின் பொருள்களை விளம்பரப்படுத்தி மக்களை வாங்கச் செய்யலாம். நம் பதிவின் வழியாக அவர்கள் குறிப்பிட்ட பொருள்களைச் சென்றடைந்து, பொருள்களை / சேவைகளை வாங்கினால், அதில் நமக்கும் வருவாய் உண்டு.

    இவை அல்லாமல், நாம் பேஸ்புக்கில் எழுதும், வெளியிடும் ஆக்கங்களுக்கு அவற்றின் வரவேற்புக்கு ஏற்ப, பேஸ்புக் நமக்கு வருவாய் அளிக்கிறது. தோராயமாக ஒரு லட்சம் பார்வைகளுக்கு ஒரு டாலர் என்பது போல் இந்த வருவாய் இருக்கும். இதற்கு உங்கள் சுயவிவரத்தைத் தொழில்முறைப் பயன்முறைக்கு (புரபஷனல் மோடு) மாற்றிக்கொள்ள வேண்டும். இதை மாற்றுவதன் மூலம், நாம் படைப்பாளராக, படைப்புகளின் வெளியீட்டாளராக மனத்தளவில் மாறுகிறோம்.

    உங்கள் சுயவிவர முகப்புப் பக்கத்தில் வலது புறம், மேலும் என்பதைக் குறிக்க, மூன்று புள்ளிகள் (“…”) இருக்கும். அதைச் சொடுக்கி, அதில் தொழில்முறைப் பயன்முறையை இயக்கு (“Turn on Professional Mode”) என்பதை இயக்க வேண்டும். பேஸ்புக்கின் கொள்கைகளை, விதிமுறைகளை ஏற்று, வரி விவரம் (PAN Number), வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் ஒவ்வொரு பதிவும் எவ்வளவு பார்வைகளைப் பெறுகிறது, அதற்கு எவ்வளவு பேர் பின்னூட்டம் அளிக்கிறார்கள், பகிர்கிறார்கள் என்பதைப் பொறுத்து வருவாய் ஈட்டலாம்.

    இது சிறிய வருவாய் தான். ஆனால், சிறுதுளி பெருவெள்ளம் ஆகலாம். ஏராளமானோர் நாள்முழுவதும் பேஸ்புக்கில் இருக்கிறார்கள். எவ்வளவோ படிக்கிறார்கள், பார்க்கிறார்கள், பகிர்கிறார்கள். இவர்கள் சற்று முயன்றால் பார்வையாளர் இடத்திலிருந்து படைப்பாளர் நிலைக்கு உயரலாம். வருவாயும் ஈட்டலாம்.

    இதற்காகவே அந்தந்த நேரத்தில் எது பரபரப்பாக இருக்கிறதோ அதைப் பற்றி எழுதுவோர் இருக்கிறார்கள். அப்படி எந்த அலை மேலே செல்கிறதோ அதில் தொற்றிக்கொண்டால் நம் பதிவுகளின் பார்வைகளும் உயரும். ஆற்றல் உள்ளோர் புதிய அலைகளையும் உருவாக்கலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை. இருக்கும் அலைக்கு நாம் சற்று வேகம் கூட்டலாம்.

    மற்றவர் பார்வையைக் கவர வேண்டும் என்பதற்காக, ஆர்வத்தைத் தூண்டும் விதமாகத் தலைப்பு வைத்து, படம் வைத்து, வசைபாடி, அவதூறு செய்து, போலிச் செய்திகளைப் பரப்பி, சாதி / மத / அரசியல் காழ்ப்புகளைக் காட்டிப் பதிவுகளை இட வேண்டியதில்லை. மற்றவர் பதிவுகளைத் திருடி, நம் பதிவு போல் காட்ட வேண்டியதில்லை. நமக்குத் தெரிந்த செய்திகளை, உண்மையான விவரங்களை, அனுபவப் பகிர்வுகளை நம் மனத்திற்கு உண்மையாக எழுதலாம். நம் தனித் திறமைகளை வெளிப்படுத்தலாம். இதுதான் நீடித்த பயன் தரும்.

    எழுதும் செய்திகளைச் சுவையாக, சுருக்கமாக, புதுமையாக, விறுவிறுப்பாக, பயனுள்ளதாக எழுதுவது நம் கையில் தான் இருக்கிறது. இதை விரும்புவோர் நிச்சயம் இருப்பார்கள். நம் பதிவுகளில் தொடர்புடைய குறிச்சொற்களை இடுவதும் இவற்றை உரிய குழுக்களில், தளங்களில் பகிர்வதும் ஆர்வமுள்ள நண்பர்களுக்குத் தனிச் செய்தி அனுப்புவதும் இவற்றின் வீச்சை அதிகரிக்கும்.

    யூடியூபை விட பேஸ்புக்கில் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. பேஸ்புக்கில் நம் பதிவை விரும்பும் நேயர், நம்முடன் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம். இதில் படைப்பாளர் / பார்வையாளர் நெருக்கம் அதிகமாக இருக்கிறது. மேலும், பேஸ்புக்கின் நிரல், எந்த நேரத்தில் எந்தப் பதிவை அதிகப் பார்வைக்கு இட்டுச் செல்லும் எனக் கணிக்க இயலாது. திடீரென நமது பதிவு, பல லட்சம் பார்வைகளைப் பெறுவது சர்வ சாதாரணமாக நடைபெறுகிது.

    ஆனால், இது ஓரிரவில் நடைபெறுவதில்லை. இந்த எழுச்சிமிகு வீச்சுக்கு அடிப்படைப் பின்னணியாக, கடுமையான, தொடர்ச்சியான உழைப்பு இருக்கிறது. நாம் யாருக்காக எழுதுகிறோம் என்பதும் நம் நேயர்களைப் புரிந்துகொள்வதும் அவர்களை மதிப்பதும் அவர்களுக்குப் பதில் அளிப்பதும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வளர்ச்சியை ஒரு வரியில் சொல்வதானால், முயற்சி திருவினையாக்கும்.

    Share
  • வட இந்தியர்களிடம் கற்றுக்கொள்வோம்

    வட இந்தியர்களிடம் கற்றுக்கொள்வோம்

    அண்ணாகண்ணன்

    வட இந்தியாவிலிருந்து தமிழகம் வரும் அனைவரும் தொழிலாளிகளாகவே இருப்பதில்லை. அவர்களுள் சிலர் முதலாளிகளாகவும் இருக்கிறார்கள். தமிழகத்தின் முக்கியத் தொழில்களில் கணிசமான விழுக்காடு, வட இந்திய முதலாளிகள் வசம் உள்ளது. பெரு முதலாளிகளின் முதலீடும் முயற்சிகளும் பெரிது. இதே போன்று வட இந்தியச் சிறு முதலாளிகளும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

    வட இந்தியச் சிறு முதலாளிகள் சிலரை அண்மையில் கவனித்தேன். இவர்கள் அனைவரும் பாதுகாப்பான தொழில்களில் இருக்கிறார்கள். அதாவது காய்கறி, பழங்கள், பால் போன்று விரைவில் கெட்டுப் போகும் தொழில்களை இவர்கள் அதிகம் தொடுவதில்லை. விரைவில் கெடாத, நீண்ட காலம் ஆனாலும் அப்படியே இருக்கிற தொழில்களாகத் தேர்ந்தெடுத்து இவர்கள் கடை நடத்துகிறார்கள்.

    ஆயத்த ஆடை, ஜவுளித் துறை, மெத்தைகள், படுக்கை விரிப்புகள், பேன்சி கடைகள், காகிதக் கோப்பை, காகிதத் தட்டு, பிறந்த நாள் கொண்டாட்டப் பொருள்கள் (தொப்பி, ஜகினா, மெழுகுவர்த்தி.. போன்றவை), வாகன உதிரி பாகங்கள் (ஆட்டோமொபைல்ஸ்), மின்னியல், மின்னணுப் பொருள்கள் (எலக்ட்ரிக். எலக்ட்ரானிக்) டயர்கள், ஹார்டுவேர்ஸ், பொம்மைகள்… போன்றவற்றை விற்கும் தனிக் கடைகளைத் துணிவுடன் நடத்துகிறார்கள்.

    பலர் தங்கள் கடையில் முழுநேரம் வேலை செய்கிறார்கள். எனவே, ஆள்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. பொருள் விற்காவிட்டாலும் கெட்டுப் போகும் என்ற கவலையில்லை. இந்தப் பொருட்களுக்கு எப்போதும் தேவை இருக்கும் என்பது இன்னொரு வசதி. பெரும்பாலும் பில் கொடுக்க மாட்டார்கள். பில் கேட்டாலும் துண்டுச் சீட்டில், எஸ்டிமேட் தாளில் எழுதிக் கொடுப்பார்கள். கடை வாடகை, முன்பணம் மட்டும் இருந்தாலே தனிக் கடை போட்டுவிடலாம்.

    சிலர், ஒரு கடையில் நன்கு விற்பனை ஆகத் தொடங்கிய உடன், அதே போன்ற கடைகளை அக்கம் பக்கத்தில் நடத்துகிறார்கள். பெரிதாகப் பெயர்ப்பலகை வைத்து, வணிகப் பெயரை (பிராண்டு) வளர்க்காமல் அல்லது முன் நிறுத்தாமல், எளிமையாக நடத்துகிறார்கள். ஒரே ஊரில் ஒரே ஆள் ஐந்து பேன்சி கடைகள் நடத்துகிறார். ஐந்தையும் பார்த்தால் தனித் தனிக் கடைகளாகத் தெரியும். ஆனால், ஒரே ஆள் நடத்துவது. இதன் மூலம் இதில் ஏகபோகமாக முன்னேறுகிறார்கள்.

    முக்கியச் சாலைச் சந்திப்புகளில் நன்றாக இயங்கும் உணவகங்களை, காபி கடைகளை, இனிப்பகங்களை அப்படியே கையகப்படுத்தி நடத்துவதும் அதிகரித்து வருகிறது. இதைச் சென்னையிலும் கோவையிலும் கண்டேன். வெளியே பார்த்தால் தமிழ்ப் பெயராக இருக்கும். உள்ளே போனால் முழுக்க முழுக்க வட இந்திய உணவுகள்.

    உணவகங்களில் சப்பாத்தி, பரோட்டா, பூரி, சமோசா, கட்லட், பானி பூரி, சாட் உணவுகள் போன்ற சற்றே நீண்ட ஆயுள் உள்ள உணவுப் பொருள்களாக வைக்கிறார்கள். அதாவது, வாடிக்கையாளர் வந்து உட்கார்ந்து ஆர்டர் செய்த பிறகு சப்பாத்தி, பரோட்டா போட்டு எடுக்கலாம். முதலிலேயே மொத்தமாகச் சமைத்து வைப்பதில்லை. தங்களுக்கு எது நன்றாக வருகிறதோ அதை மட்டும் செய்கிறார்கள்.

    தமிழ்ப் பெயரைப் பார்த்து உள்ளே நுழைந்து, இத்தகைய உணவுகளைப் பார்த்துவிட்டு அந்தச் சுவை பிடிக்காமல் வெளியே வந்திருக்கிறேன். ஆனால், தொடர்ந்து மக்கள் உள்ளே போய்ச் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். லாபம் இல்லாமல் இப்படிக் கடை நடத்த மாட்டார்கள் என்பது உறுதி.

    தமிழர்கள், வட இந்தியர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

    Share
  • முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ!

    முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ!

    அண்ணாகண்ணன்

    முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ என்ற பாடலைச் சின்மயி, தீ ஆகிய இருவரின் குரல்களிலும் கேட்டேன். சின்மயி பாடியதே சிறப்பு எனப் பலரும் எழுதியதையும் படித்தேன். இது ஒரு வகையில் கலை மதிப்பீடாக வடிவம் பெற்றதைக் கண்டு மகிழ்ந்தேன்.

    இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிக இனிது. குழுவினரின் சேர்ந்திசையும் சிறப்பு. பின்னணி வாத்திய இசையும் மாறவில்லை. சின்மயி, தீ ஆகிய இருவருக்கும் இவை அனைத்தும் ஒன்றாகவே இருந்தன. ஆனால், சின்மயி வழங்கிய பாட்டனுபவம் தனி இனிமை உடையதாக இருக்கிறது. காரணம், அவர் பாத்திரத்தை மனத்தில் இருத்தி, சூழலுக்குள் தன்னை நிறுத்தி, வரிகளை உள்வாங்கி, அந்த உணர்வுடன் பொருந்தி, அனுபவித்து லயித்துப் பாடினார். அதுவே அனைவர் மனங்களையும் கொள்ளை கொண்டது.

    இதில் வேறு ஒரு கோணமும் இருக்கிறது. தீ பாடியதை ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்றுப் படத்திலும் இதர இசை ஓடைகளிலும் அங்கீகரித்துவிட்டார். தீயின் வடிவத்தில் இன்னும் ஆழம் போதவில்லை, பாவம் சரியில்லை என்பதைச் சுட்டிக் காட்டி, அது சரியாக வரும் வரை ரஹ்மான் அவரை மீண்டும் பாடச் செய்திருக்க வேண்டும். ஆனால், இது போதும் என ஏற்றுக்கொண்டதால் பாடலின் அனுபவத்தில் குறை ஏற்பட்டது. இது, தீயின் பிழை இல்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் பிழை. இவர் மட்டுமில்லை, இதர இசையமைப்பாளர்களும் இந்த பாவத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    ஆனால், இங்கு ரஹ்மானின் நல்ல குணம் ஒன்றையும் பாராட்ட வேண்டும். இளையராஜா பங்கேற்ற சில மேடை நிகழ்ச்சிகளில் அவர் பாடகர்களையும் வாத்திய இசைக் கலைஞர்களையும் பாடலை இடையில் நிறுத்தி, திருத்துவதைக் கண்டேன். இது என் பாட்டு, இது இப்படித்தான் இருக்க வேண்டும் எனப் பாடல் முழுமை அடைவதற்குள் பற்பல குறுக்கீடுகள். பாடல் ஒரு கூட்டு முயற்சி என்ற உணர்வை விடுத்து, நானே பெரியவன் என்ற எண்ணம் அவருள் ததும்பி இருக்கக் கண்டிருக்கிறேன். முத்தமழைப் பாடலில் தீயின் வடிவத்தைச் சின்மயி அழகுற மேம்படுத்திப் பாடியிருக்கிறார். இதை ஏ.ஆர்.ரஹ்மான் கைத்தட்டிப் பாராட்டுவதைக் கண்டேன். இப்படி மனம் திறந்து சிறந்ததை ஏற்றுக்கொண்டால், அடுத்த பாடலில் இந்தப் பிழை நேராமல் ரஹ்மான் கவனமாக இருப்பார்.

    சின்மயி அர்ப்பணிப்பு உள்ள பாடகர். தான் பாட வேண்டிய பாடலைப் பல முறைகள் பாடிப் பார்த்து, தொடர்ந்து மேம்படுத்துகிறார். அந்தப் பாத்திரத்துடன் மனம் ஒன்றிப் பாடுகிறார். அவரது ஆற்றலும் ஆளுமையும் ஒருசேர இந்த மேடையில் வெளிப்பட்டுள்ளன. இவரிடமிருந்து இந்த இயல்புகளைப் புதிய பாடகர்கள் கற்க வேண்டும்.

    சிறிய இடைவெளிக்குப் பிறகு சிலிர்த்து எழுந்துள்ள சின்மயியின் உன்னதம், நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற பாரதியின் வரிகளை நினைவூட்டுகிறது. இதே எழுச்சியை ஓவியத்தில் ரோஹிணி மணியிடமும் நடனத்தில் ருக்மிணியிடமும் காண்கிறேன். வீறு மிகுந்த உங்களுக்குத் தோல்வி என்பதே கிடையாது. இன்னும் இன்னும் வெற்றிகள் பெறுக! புதிய நட்சத்திரங்களாய்ப் புவி மீது எழுக!

    Share
  • ஒருத்தி மகனாய்ப் பிறந்து – ஆண்டாள் எழுதியது சரிதானா?

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து – ஆண்டாள் எழுதியது சரிதானா?

    அண்ணாகண்ணன்

    நள்ளிரவு 2.40 மணி. தாகத்தால் விழித்தேன். தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் படுத்தேன். அப்போது திடீரென இந்த வரி, நினைவுக்கு வந்தது. ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர. இதில் முன்னிலை, படர்க்கை சார்ந்து ஒரு சிக்கல் இருப்பது போல் தோன்றியது.

    பாடல் முழுவதும் முன்னிலையில் இருக்க, ஒளித்து என்பது மட்டும் படர்க்கையில் இருக்கிறது. பிறந்து, வளர, பிழைப்பித்து, நெருப்பென்ன நின்று, உன்னை, பறைதருதி எனப் பெரும்பாலும் முன்னிலையாகவே இருக்கின்றன. ஒளித்து என்பது மட்டும் படர்க்கையாக இருக்கிறது. அதாவது, இந்த இடங்களில் எல்லாம் அவர் தாமாகவே செய்கிறார். ஒளித்து என்பதில் மட்டும் இன்னொருவர் வந்து ஒளித்து வைக்கிறார்.

    இங்கே, ஒளித்து வளர என்பது சரியாக ஒட்டவில்லை. ஒன்று, ஒளிந்து வளர என இருக்க வேண்டும். அல்லது, ஒளித்து வளர்க்க என இருக்க வேண்டும். ஒளித்து வளர என்கிற போது, வசுதேவர் வந்து ஒளித்து வைக்கிறார். ஆனால், கண்ணன் தானாகவே வளர்கிறான், யசோதை வளர்க்கவில்லை எனப் பொருள் தோன்றுகிறது.

    ஆண்டாள், ஒளித்து வளர என எழுதியது சரிதானா? உங்கள் கருத்து என்ன?

    Share
  • மலைசூழ் கோவைப் பதிவாழ்க

    மலைசூழ் கோவைப் பதிவாழ்க

    மலைசூழ் கோவைப் பதிவாழ்க – வண்ண
    மயில்சூழ் கோவைப் பதிவாழ்க
    முகில்சூழ் கோவைப் பதிவாழ்க – இன்
    மொழிசூழ் கோவைப் பதிவாழ்க
    கலைசூழ் கோவைப் பதிவாழ்க – மிளிர்
    கவின்சூழ் கோவைப் பதிவாழ்க
    மரம்சூழ் கோவைப் பதிவாழ்க – நல்ல
    மனம்சூழ் கோவைப் பதிவாழ்க

    நறுநீர்க் கோவைப் பதிவாழ்க – உயர்
    நலம்சேர் கோவைப் பதிவாழ்க
    முறுவல் பூக்கும் முகம்வாழ்க – வாழ்வில்
    முழுமை சேர்க்கும் அகம்வாழ்க
    பொருள்சேர் கோவைப் பதிவாழ்க – வளர்
    புதுமை சேர்க்கும் புலம்வாழ்க
    அருள்சேர் கோவைப் பதிவாழ்க – தினம்
    அணிசேர் கோவைப் பதிவாழ்க

    வயல்சூழ் கோவைப் பதிவாழ்க – பெரும்
    வளம்சேர் கோவைப் பதிவாழ்க
    செயல்சூழ் கோவைப் பதிவாழ்க – பசும்
    செழுமை சேர்க்கும் செகம்வாழ்க
    இதம்சேர் கோவைப் பதிவாழ்க – இயற்கை
    எழில்சேர் கோவைப் பதிவாழ்க
    குறையொன்று இல்லாக் குடிவாழ்க – தூய
    குளிர்சேர் கோவைப் பதிவாழ்க

    – அண்ணாகண்ணன்

    Share
  • தண்ணீரும் காவிரியே!

    தண்ணீரும் காவிரியே!

    தண்ணீரும் காவிரியே! தார்வேந்தன் சோழனே!
    மண்ணாவதும் சோழ மண்டலமே! – பெண்ணாவாள்
    அம்பொற் சிலம்பி அரவிந்தத் -தாளணியும்
    செம்பொற் சிலம்பே சிலம்பு!

    இது கம்பர் தொடங்கி, ஒளவையார் முடித்த பாடல். முதலிரண்டு அடிகளைக் கம்பரும் அடுத்த இரண்டு அடிகளை ஒளவையாரும் பாடினார்கள் எனக் குறிப்பு இருக்கிறது.

    தண்ணீர் என்றால் அது காவிரிதான். வேந்தன் என்றால் சோழன்தான் எனப் போற்றும் பாடல். அடுத்த அடியில், மண்ணாவதும் சோழ மண்டலமே என்பதற்கு மண் என்றால் அது சோழ மண்டலம்தான் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், இதன் இன்னொரு பொருளை எண்ணித் துணுக்குற்றேன். மண்ணோடு மண்ணாவது என்றால் அது சோழ மண்டலம் என்ற பொருளும் இருக்கிறது. சோழன் மீது இருக்கும் காழ்ப்பில், பாண்டியர், சேரர் யாரேனும் இப்படி வஞ்சப் புகழ்ச்சியாகப் பாடிவிட்டார்களா?

    Share
  • 16ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    16ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    வல்லமை மின்னிதழ், 15 ஆண்டுகளை நிறைவுசெய்து 16ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் தமிழின் முதல் மின்னிதழ். பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற ஆய்விதழாக இரண்டு ஆண்டுகள் இருந்தது. தொடர்ந்து நடுநிலையுடன் படைப்புகளை வெளியிட்டு வருகிறது.

    இந்தப் பதினைந்து ஆண்டுகளில் வல்லமை, 19,831 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,949 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. தொடர்ந்து பங்களிக்கும் படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் மதிப்பீட்டாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம். அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    Share
  • பிராகுய் – தமிழ் உறவு | பலுசிஸ்தானிகள் நம் பங்காளிகள்

    பிராகுய் – தமிழ் உறவு | பலுசிஸ்தானிகள் நம் பங்காளிகள்

    அண்ணாகண்ணன்

    சென்னையிலிருந்து சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, பலுசிஸ்தான். அங்குப் பேசப்படும் பிராகுய் (பிராஹுய்) என்ற மொழியை, அழியும் நிலையில் உள்ள மொழியாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. பிராகுய், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழில் நாம் சொல்லும் அரிசி, பால் போன்ற சொற்கள், இதே பொருளில் பிராகுய் மொழியிலும் உள்ளன. இங்கு நாம் வா என்பதை, அவர்கள் பா என்கிறார்கள். இங்கு நாம் ஊர் என்பதை அவர்கள் உரு என்கிறார்கள். நாம் இரண்டு, மூன்று என்று சொல்வதை அவர்கள் ஈரத், மூசித் என்கிறார்கள். சிந்துச் சமவெளி நாகரிகம், தமிழ் நாகரிகம் என்ற கூற்றுக்கு இவை வலுச் சேர்க்கின்றன.

    பாகிஸ்தானின் மிகப் பெரிய மாநிலம், பலுசிஸ்தான். இங்கு சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் வசிக்கின்றனர். பலூச் விடுதலைப் படை, கடந்த 25 ஆண்டுகளாகத் தனி நாடு கேட்டுப் போராடி வருகிறது. மனித உரிமை மீறல், அடக்குமுறை போன்ற காரணங்களைக் கூறி, பாகிஸ்தானுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வருகிறது. இப்போது, தங்களைப் புதிய நாடாக ஐ.நா. அமைப்பும் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ் வேர்களைக் கொண்ட பலுசிஸ்தான், தனி நாடு ஆவதை வரவேற்கிறேன். ஆபரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக, இந்தியாவின் நட்பு நாடாக, சுதந்திர பலுசிஸ்தான் மலரட்டும். சமூக, சமய நல்லிணக்கத்துடன், அமைதியும் வளமும் வளர்ச்சியும் செழிக்கும் நாடாக, தனித்த மொழி, மரபு, பண்பாட்டு அடையாளங்களைத் தக்க வைத்து, இந்துஸ்தானின் சகோதர நாடாக எழுக பலுசிஸ்தான்.

    #Balochistan #BLA #Pakistan #India #operationSindoor #Brahui #Brahvi #Brohi

    Share