பிள்ளைத்தமிழ் நூல்களின் காப்புப்பருவத்தில் வழக்கமாக விளிக்கப்படும் தெய்வங்களின் பட்டியலிலிருந்து வேறுபட்டு வெவ்வேறு தெய்வங்களையும், அடியார்களையும், திருச்சின்னங்களையும் விளிப்பதனைச் சில நூல்களில் காணலாம். திருவைந்தெழுத்தினையும் திருநீற்றினையும் விளித்தலை முன்னொரு அத்தியாயத்தில் கண்டோம். முருகனின் மற்றொரு தாயான கங்கையையும் வாகனமான மயிலையும் ஆயுதமான வேலையும் விளிப்பதனையும் கண்டோம். இந்தக்கட்டுரையில் எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் (கோவை கவியரசு நடேச கவுண்டர்) சிவனடியார்களும், முருகனடியார்களும் கழுத்திலணியும் உருத்திராக்கத்தினையும், சிவபிரானின் வாகனமாகிய திருநந்தி தேவரையும் விளித்துக் குழந்தை முருகனைக் காக்க வேண்டுவதனைப் பார்க்கலாம். இதுவும் ஒருவிதமான இறையன்பு கலந்த தாயன்பின் வெளிப்பாடே!
சூரியன் விண்மணி எனப்படுபவன். அவனைச் சிவனார் தனது ஒரு கண்ணாகக் கொண்டவர். சிவனாரின் முக்கண்களும் முறையே சூரியன், சந்திரன், நெருப்பு ஆகியவை ஆகும். ஆகவே சூரியனைத் தனது ஒரு வடிவாகக்கொண்ட முக்கண்மணியாகிய சிவபிரான் எனப்பொருள் கொள்ளவேண்டும். முப்புரத்தார் எனும் மூன்று அரக்கர்கள் பறக்கும் கோட்டைகளைத் தம்வசம் வைத்துக்கொண்டு தேவர்களைக் கொடுமை செய்து வந்தனர். தேவர்கள் சிவபிரானிடம் முறையிடவே அவர் ஒரு சிரிப்பாலேயே முப்புரங்களையும் அழித்து தேவர்களைக் காத்தார். அவருடைய கண்ணினின்றும் உகுத்த நீரில் தோன்றியது உருத்திராக்கம். இதனை அதனால் சிவகண்மணி எனவும் கூறுவது வழக்கமாகும். இதனைப் பிறவிப்பிணியைப் போக்கும் மணி எனவும் கூறுவர். ஏனெனில் உருத்திராக்கம் அணிவதனால் விளையும் நன்மைகள் மிகப்பலவாம். பிறவிநோய் நீக்குவதற்கு திருநீறு மருந்தும், உருத்திராக்கம் மணியும், திருவைந்தெழுத்து மந்திரமும் ஆவன என்பது பெரியோர் விளக்கமாம். ஆகவே அடியார்கள் இத்தகைய உருத்திராக்கமணியின் சிறப்புகளை எண்ணி உளம் மகிழ்வர்.
இத்தகைய உருத்திராக்கமணியை விளித்து நமது முருகமணியைக்காக்க வேண்டுகிறார்.
தெளிந்த மாசுமறுவற்ற மாணிக்கமணி போன்றவன் முருகப்பிரான். அந்தணர்கள் தமது பூசனைகளாலும் மந்திரங்களாலும் எப்போதும் தேடுகின்ற சுப்பிரமணியன் அவன். தேவர்களின் தலைவன் எனப்படும் தெய்வசிகாமணியும் அவனே! அவனை வழிபடும் அடியார்கள் தமது உள்ளத்தில் (உண்மையாக, நியாயமாக) வேண்டும் பொருட்களை வாரிவழங்கும் சிந்தாமணியும் அவனே!
ஒருதரம் சரவணபவா என்று உரைப்பவர் உளத்தினில் நினைத்ததெல்லாம் உடனே கைகூடுமென வேதங்கள் மொழியுதே உண்மையறி வானபொருளே! என்ற சீர்காழி கோவிந்தராஜனின் பாடலைக் கேட்டு உருகாதவர் யார்?
அவன் எட்டிக்குடி எனும் ஊரில் உறைகிறான். அவ்வூரின்கண் பெருமதிப்புள்ள மாணிக்கங்களால் இழைக்கப்பட்ட மாடமாளிகைகள் மிகுந்துள்ளன. அந்த வேலவனை நீ காத்தருள வேண்டும் என உன்னை வேண்டுகிறேன் எனப்பாடுகிறார்.
உருத்திராக்கம்:
விண்மணியை ஓருருவாக் கொண்ட முக்கண் மணிமுன்
விண்ணவர்கள் முப்புரத்தார் செய்கொடுமை விளம்பக்
கண்மணிநீ ருகுப்பவரு கண்மணியைப் பிறவிக்
கடியவினை நோய்கடியும் மணியையெணி மகிழ்வாம்
தெண்மணியை விப்பிரர்கள் தேடுசுப்ர மணியைத்
தேவசிகா மணியையடி யார்கள்சிந் தாமணியை
எண்மணிக ளொன்பதிழை மாடமலி கின்ற
எட்டிகுடி வேலவனைக் காவல்செய் கவெனவே.
(எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- நடேச கவுண்டர்)
***
அடுத்து நாம் காண்பது சிவபிரானின் அணுக்கத்தொண்டரும், வாகனமுமாகிய நந்திதேவரை விளித்து முருகனைக் காக்க வேண்டும் பாடல்.
ஒரு பசு அல்லது காளையானது தாம்புக்கயிற்றினால் பிணிக்கப்பட்டிருக்கும்; பசும்புல்லை உணவாகக்கொள்ளும். மானிடர்க்கு அடிமைப்பட்டு இருக்கும். இக்கருத்தினை மனித வாழ்விற்கும் உவமையாக்கி, நந்திதேவரை விளிக்கும் இப்பாடலில் அழகுறப் பொருத்தியுள்ளார் புலவர்பிரான்.
மானிட வாழ்வு மும்மலங்கள் ஆகிய பாசம் எனும் தாம்பினால் பிணிப்புண்டுள்ளதாகும்; நாம் உண்ணும் உணவும் விளைநிலங்களிலிருந்து பெறப்படும் புல்லாகிய உணவே! ஐம்புலன்களிலிருந்து பெறப்படும் நிரந்தரமற்ற இன்பங்களே இவை! ‘பராதீனப்படுதல்’ என்பது சுதந்திரமின்றி, மற்றோர் சொற்படி நடத்தல் என்பதாகும். ஏதோ ஒரு எசமானனுக்கு அடிபணிந்து அவன் கட்டளைப்படியே நாம் வாழ்கின்றோம் அல்லவா? நாமும் அந்தப் பசு போன்றவர்களே! இங்ஙனம் பாசத்தில் பசுக்களாக உழலும் நம்மைப் பதியாக நின்று நிலையான தனது பதத்தை அளித்துக் காக்க வல்லவன் அச்சிவபிரான் ஒருவனே! அவ்வாறு நாம் மேலான நற்கதியை அடையுமாறு நம்மீது கொண்ட நேசத்தால் ஈசன் அருளுகிறான். எவ்வாறு தெரியுமா?
ஆகமங்களும் வேதங்களும் விளக்கிடும் அத்துவித நெறியை- அதாவது பரமாத்மாவும் சீவாத்மாவும் ஒன்றே எனும் உண்மையை- அது தொடர்ந்து அவ்வாறே நடைபெறுமாறு மிகுந்த அருளுடனும் நேசத்துடனும் செய்விப்பவன் அந்தச் சிவபெருமானே; அவன் கல்லால மரத்தின் நிழலிலமர்ந்து மௌனகுருவாக முனிவோர்க்கு உபதேசிக்கும் சம்புவாவன். அது சரி. இங்கு நந்திதேவரைப்பற்றிக் கூறப்புகுந்தவர், சிவபிரானைப் பற்றிக் கூறுவானேன் எனும் வினா எழுகிறதல்லவா? இப்படிப்பட்ட சம்புவினிடம் அவனை அடுத்து, அவன் பக்கத்திலேயே நிற்பவர் நந்திதேவர். ‘சிவபிரானின் பக்கத்தில் இருப்பவர்,’ எனப் பேசப்படும் பெருமை உடையவனே என விளிக்கிறார் புலவனார். இப்போது அவருடைய முக்கியத்துவம் புரிகின்றதல்லவா?
மேலும் நகர்வலம் வரும்போதும் உலாப்போதுகளிலும் சிவபிரானைத் தரிசிக்க வருபவர்கள் கூட்டமாக வந்து அவர் பாதையை மறித்து நிற்கும்போது, தனது கைப்பிரம்பினால் அவர்களைத் தட்டி, விலக்கி, கூட்டத்தினை ஒழுங்கு செய்பவர் நந்திதேவர். அதனால் அவர் கையிலுள்ள பிரம்பு பிரமன் முதலானோர்களின் முடியிலுள்ள பூக்களின் தேனையும் வாசனையையும் உடையதாக இருக்கின்றது. ‘பிரமன் முதலானோர் முடிப்பூவின் பிரச நாறும் பிரம்பானே!’- அற்புதமான கற்பனை, இல்லையா? பெரிய பெயரான ‘நந்தி’ எனும் பெயர் படைத்தவனே, நறுமணம் கமழும் தாமரை மலரில் உறையும் இருநால்வரான எட்டுப் பெண்கள்- எட்டு இலக்குமிகளும் வாழும் செல்வவளம் படைத்த எட்டிக்குடியில் மருவும் வடிவேலவனைக் காக்கவே, என வேண்டுகிறார்.
(எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- நடேச கவுண்டர்)
எண்ணற்ற கற்பனைகள், தொன்மங்கள், நயங்கள், சொல்லாடல்கள்- அருமையான பாடல்கள்! பிள்ளைத்தமிழ் நூல்கள் இவையனைத்தும் நிரம்பிய சிற்றிலக்கியச் செல்வங்கள். இன்னும் தொடர்ந்து காண்போம்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்) {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, கற்பகம் பல்கலைக் கழகம், கோவை, நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி, தமிழ்த்துறைத் தலைவர்.} ************
ஆறுமுகனான குமரவேள் மீது இயற்றப்பட்டுள்ள பிள்ளைத்தமிழ் நூல்கள் அனைத்திலும் காப்புப் பருவத்தில் பிள்ளைத்தமிழ்நூல் இலக்கணப்படியே திருமாலில் துவங்கி, சிவபிரான், உமையன்னை, கணபதி, இந்திரன், அலைமகள், கலைமகள், சத்தமாதர், முப்பத்து முக்கோடி தேவர்கள் வேண்டிக்கொள்ளப்படுவர். சில நூல்களில் உருத்திராக்கம், திருநீறு, திருவைந்தெழுத்தான ‘நமசிவாய,’ ஆகியனவும் பாடப்பட்டுள்ளன.
வரகவி மார்க்க சகாயதேவர் அருளிச்செய்துள்ள திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் அருமையான ஆச்சரியங்கள் இவ்விதத்தில் நம்மை எதிர்கொள்கின்றன. முதலில் புலவர் பாடுவது இறையருளாம் ‘திருவருளை’ வேண்டித்தான். திருவருள், திருநீறு, மார்க்கசகாயசுவாமி, மரகதவல்லி, இவர்களை அடுத்து கங்கை எனும் நதிப்பெண்ணாள் குழந்தை முருகனைக்காக்க வேண்டிக்கொள்ளப்படுகிறாள். குமரனின் அவதாரத்தின்போது சிவனாரிடம் உதித்த ஆறு பொறிகளையும் தாங்கிக் காத்த தாயல்லவா அவள்?
பின், கணபதி, வைரவன் (சிவபிரானின் திருக்குமாரர்களுள் ஒருவன்) இவர்களை அடுத்து, குமரன்கைத் திருவேல், திருமயில், திருமுருகாற்றுப்படையும் திருப்புகழும் ஆகிய நூல்கள் முதலானோர்களும், பதினொன்றாவதாக பலதேவரும் காப்புப் பருவத்தில் விளிக்கப்படுகிறார்கள்.
முருகனைப்பாடும் சில பிள்ளைத்தமிழ் நூல்கள் அருணகிரிநாதரை விளிப்பதுண்டு; அல்லது முருகனின் தம்பியாகிய அரிகரபுத்திரன், வீரபத்திரர், தாயாரான கார்த்திகைப்பெண்டிர் ஆகியோர் விளிக்கப்படுவர்.
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூல் இவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது. இலக்கணப்படி, ஒற்றைப்படையில் பதினோரு பாடல்களைக்கொண்டு அமைந்துள்ளது. இதன் சில சிறப்பம்சங்களைக் கண்டு களிக்கலாமே!
***
கங்கை எனும் தாயை அழைத்து குமரனைக் காக்க வேண்டுபவர், பாடலின் முதல் பகுதியில் முருகனின் பெருமையையும், பிற்பகுதியில் கங்கையின் பெருமைகளையும் விரிக்கிறார்.
“கம்போநதி, குற்றமற்ற காவேரி, காளிந்திநதி, கோதாவரி, பாலிநதி எனப்படும் பாலாறு, கனகாநதி, கண்டிகை எனப்படும் உருத்திராக்கமும் குண்டிகை எனப்படும் கமண்டலமும் சூழ்ந்து விளங்கும் பம்பாநதி, வானத்தினின்று இழிதருதலால் வானதி எனவும் பெயர்படைத்த கங்கை, சீதைநதி எனப்படும் தமஸாநதி (அயோத்திலுள்ளது. இங்கு தான் இராமன், சீதை, இலக்குவன் மூவரும் அயோத்தி மக்களைப் பிரிந்து வனவாழ்க்கையை மேற்கொள்ளப் பயணித்தனர்; பின், சீதை கருவுற்றுத் தங்கியிருந்து, இலவ, குசர்களைப் பெற்றெடுத்ததும் தமஸா நதிக்கரையில் தான்), பாஞ்சாலிநதி ஆகிய தவம்செய்ய உகந்த கரைகளைக்கொண்ட புண்ணிய நதிகளாகப் பலவாகி பிரிந்து ஓடும் பாகீரதியே! பகீரதன் தன் தவத்தினால் ஆகாயத்தினின்றும் பூமிக்குக் கொண்டுவந்த கங்கை நதியே!” என கங்கையின் பெருமைகளைக் கூறி விளித்து, குமரனைக் காக்க வேண்டுகிறார்.
“எனது பாதகங்களையெல்லாம் (பாவங்கள்) நீக்கியவன் இந்த வேலவன். இவன் இமையோராகிய தேவர்களின் அரசன், குமரேசன்; எனது இதயத்து இருளாகிய அறியாமையைக் களைந்தெறியும் குகன். அழகான இனிய பால்போலும் மொழிபேசுபவளான உமையம்மை அளித்த அமுதக்கனி போன்றவன். கரனூர் ஆகிய திருவிரிஞ்சை எனும் ஊரில் வாழும் அடியவர்களின் பெருவாழ்விற்கு ஊன்றுகோலாக விளங்குபவன்; அவனைக் காத்தருள்வாய் தாயே!” என அமைகிறது இவ்வழகிய பாடல்.
கங்கையைப்பற்றிக் கூறப்புகுந்தால் பெரும் காப்பியமே இயற்றலாம். இங்கு முருகனின் பெருமைகளுக்கு இணையாக ‘எல்லா நதிகளும் கங்கையின் வடிவே’ எனும் அழகான பேருண்மையை விளக்கிய நயம் இரசிக்கத்தக்கது. வைதிகமுறையில் பூசனை செய்யும்போது ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளையும் ஆவாகனம் செய்து பூசை செய்வது நமது வழக்கம் அல்லவா? கங்கையின் பெருமை கொஞ்சநஞ்சமா? ஆகாயத்திலிருந்து அவள் வந்த கதையைக் கூறுவாரா? முருகப்பிரானின் பிறப்பில் அவள் வகித்த பெரும்பங்கை விளக்குவாரா? ஆகவேதான் மற்ற நதிகளனைத்துமே கங்கையில் அடக்கம் என நான்கு வரிகளில் கங்கையின் புகழை அழகுறப்பாடுகிறார் வரகவியார்.
***
திருவேல்
முருகனடியார்களுக்கு, வேலும் மயிலுமே என்றும் காத்து வழிநடத்தும் துணையாகும். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, குழந்தை முருகனைக் காப்பதற்கு, அவனுடைய கைவேலையே விளித்துப் பாடுகிறார் புலவனார். இது முருகனுக்கு உமையம்மை வழங்கிய வேல். ஆகவே தாய் கொடுத்தவேல் அவனைக் காக்கட்டும் என விளிப்பது மிகப்பொருத்தம்தானே?
“கொடிய அசுரர்களைக் கொன்று அவர்களுடைய குருதியில் நீராடி, அவர்களுடைய குடலை மாலையாகவும் தரித்துக்கொண்ட வேலே! பின் அவர்களுடைய உடலின் கொழுப்பையெல்லாம் அருந்தியதான வேலே! முருகன் உன்னைத் தன் கையில் பிடித்துள்ளான்,” எனப் புகழ்ந்து விளிக்கிறார்.
“ஆறு தலைகள் கொண்ட எங்கள் முருகனை, முதல்வனாகத் திகழ்பவனை, சிவந்த நிறம்கொண்டு திகழும் செவ்வேளை, இவ்வுலகமெல்லாம் புகழ்ந்து ஏத்தும் தேவனை, திருவிரிஞ்சை எனும் இப்பதியில் விளங்கும் எமது முருகனை என்றும் நீ துணைநின்று காக்க வேண்டும்,” என வேண்டிக்கொள்கின்றார்.
இந்த வேல் செய்ததாக புலவர் பாடும் செயல்களனைத்தும் முருகன், தான் அதனைக் கரத்தில் ஏந்திச் செய்தவையே! புலவர் அதனை அறியாதவரா? இருப்பினும், வேலை ஒரு தனிப்பொருளாக்கி, ‘இத்தகு வீரச் செயல்களைச் செய்த எமது முருகப்பிரானின் கரத்தில் நீ இருந்ததனால் அல்லவோ அவன் இவற்றைச் செய்ய இயன்றது,’ எனும் பெருமை தோன்ற இவ்வாறு பாடியருளியுள்ளார் எனக் கொள்ளலாமா? பாடலைக் காண்போம்:
வேலையும் மயிலையும் பெருமைப்படுத்தி முதல்முதலில் பாடியவர் அருணகிரிநாதராவார். வேல்விருத்தம், மயில்விருத்தம், வேல் வகுப்பு, மயில் வகுப்பு என அவர் பாடாத ஒன்றுமே இல்லை. அவ்வளவு முருகனிடம் ஆழ்ந்து அடைக்கலம் புகுந்தவர் அவர். அற்புதமான சந்தம் நடமிடும் பாடல்கள் அவை.
அவருடைய அடிச்சுவட்டில், இங்கு மார்க்கசகாய தேவர் மயிலை விளிப்பதனைக் காணலாமா?
“ஓ மயிலே! (மயூரமே!) வானத்தின் உச்சியான மேகக்கூட்டங்கள் நடுங்கவும், பெரிய மலைகள் தவிடுபொடியாகவும், அப்பொடித்துகள்களால் ஏழுகடல்களும் நிரம்பி மேடாகிவிடும்படியும் உனது தோகையை விரித்து அடித்து எழுந்து எட்டுத் திசைகளிலும் கண்மூடி இமைக்குமுன்பு உலாவி, என்றும் இவ்வாறு ஆடலைச்செய்து வாழும் அந்த முருகப்பிரான் ஏறுகின்ற மயிலே!” எனப் பெருமிதம் தோன்ற விளிக்கிறார். அதாவது மயில் இவ்வாறெல்லாம் செய்யுமாறு அதனைச் செலுத்துபவன் இம்முருகவேள். ஆகவே இந்த ஆடலை மயில் செய்வதாகவோ அன்றி, முருகனே செய்வதாகவோ, எவ்விதமாகவும் கொள்ளலாம்.
“இந்த முருகன் எம்மைத் தனது தொண்டனாகக் கொண்டு ஆள்பவன்; உருவில் சிறிய (குழந்தையானதால்) பெரிய தலைவனாவான்; நான்கு வேதங்களையும் உணர்ந்து அவற்றை மணிபோலும் மொழியால் உரைப்பவன்; அணிவதனால் குளிர்ச்சியும் மணமும் தரும் இன்பமான கடப்பமாலையை அணிந்தவன். திருக்கரனூரில் வாழ்கின்ற மரகதவல்லி எனும் கொடிபோன்ற அன்னை பெற்றெடுத்த சிவந்த சுடர் போலும் அழகன். அவனை நீ அன்போடு காக்க வேண்டும்,” என் வேண்டுகிறார்.
இன்னும் நக்கீரரின் திருமுமுருகாற்றுப்படையையும் அருணகிரியாரின் திருப்புகழையுமே விளித்து, குழந்தை முருகனைக் காக்க வேண்டுகிறார். புலவனாரின் பக்திப்பெருமிதத்தை, முருகனிடமும், முருகனடியார்களிடமும் அவர் கொண்டுள்ள அன்பை, நேசத்தை, உணர இவைகளே சான்றாகத் திகழுகின்றன எனலாம்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்) {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, கற்பகம் பல்கலைக் கழகம், கோவை, நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி, தமிழ்த்துறைத் தலைவர்.}
தொல்காப்பியர் காலம் முதல் தற்காலம் வரையில் இலக்கணக் கோட்பாடுகள் மரபுச்செய்யுள் வழியோ அல்லது உரைநடை வழியோ இவைதாம் இலக்கணங்கள் என்று இலக்கிய மரபை அறிவுறுத்திக் கொண்டே வருகின்றன. தமிழில் தோய்ந்தவர் அதனை முற்றும் அறிந்து இலக்கணம் யாப்பதில் சிக்கல்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை எனலாம். அவ்வழியினின்று தமிழ் தாய்மொழியாக அல்லாதோர் தமிழ் மொழியினைக் கற்று அதில் ஐந்திலக்கணம் படைக்கும் திறமையுடையோர் இயற்றிய முதல் நூலான தொன்னூல் விளக்கத்தின் வெண்பா யாப்பியல் கோட்பாடுகள் இக்கட்டுரையின் வழி ஆராயப்படுகிறது.
தொன்னூல் விளக்கம்- நூல் அறிமுகம்
ஐந்திலக்கணம் மரபுவழி இயற்றப்பட்ட நான்காவது இலக்கண நூலாகும். இந்நூல் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கி.பி 1730இல் எழுதப்பெற்றதாகும்.
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து அதிகாரங்களில் 370 நூற்பாக்களைக் கொண்டது. 18 இயல்களைக் கொண்டதாகவும் அமைகிறது.
மேலும் செயிண்ட் ஜோசப் அச்சகத்தின் யாகப் பிள்ளையால் அச்சிடப்பட்டுள்ளது.
1978இல் ச.வே.சுப்பிரமணியன் அச்சிட்டு பதிப்பு அடிப்படையாக வெளிவந்துள்ளது.
வீரமாமுனிவர்
1680ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் இத்தாலி நாட்டு வெனிஸ் மாகாணத்தில் காஸ்திகியோன் என்ற சிற்றூரில் பிறந்தவர். மதப்பணி நோக்கத்திற்காக 1710இல் தமிழகத்திற்க்கு வந்து, பின்னர், தமிழைக் கற்று பல்வேறு இலக்கிய இலக்கண அகராதிகள், மொழிபெயர்ப்பு நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றைத் தமிழுக்குத் தந்துள்ளார்.
காலம்
பெரும்பாலும் நாயக்கர்கள் அனைவரும் தெலுங்கு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இருப்பினும் “விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1706-1732) காலத்தில் தான் வீரமாமுனிவரால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது”1 என்பதை வரலாற்றாசிரியர் சுவாமிநாதன் குறிப்பிடுகின்றார்.
யாப்பதிகாரம்
நான்காவது அதிகாரமாக அமைந்த இது மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.
செய்யுளுறுப்பு
செய்யுளியல்
செய்யுள் மரபியல்
மொத்தம் 100 நூற்பாக்களைக் கொண்டதாகவும், இதில் முந்தைய 50 நூற்பாக்கள் செய்யுளுறுப்பு மற்றும் செய்யுளியல் பற்றியும் ஏனைய நூற்பாக்கள் பாட்டியல் மரபையும் உணர்த்துகின்றன.
செய்யுளுறுப்பு
செய்யுள் என்றால் என்ன? என்ற கேள்விக்குப் பொதுவான நேரடியான விடையை எந்தவித யாப்பு நூலும் கூறவில்லை. ஆயினும் கி.பி.10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அமுதசாகரம் என்ற நூலே இதனைப் பற்றி விளக்கம் தந்துள்ளது எனலாம்.
இதற்கு உரையாசிரியர்கள் “தோல், இரத்தம், இறைச்சி,மேதை, எலும்பு, மச்சை,சு வேதநீர் என்னும் எழுவகைத் தாதுக்களினாலும் உயிர்க்கு இடனாக இயற்றப்பட்ட உடம்பு போல, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நால்வகைச் சொற்களால் பொருட்கு இடனாகக் கல்வியறிவில் செய்யுளியற்ற வல்லோர் அலங்காரம் பெற இயற்றுவன செய்யுளாம்”2 என்று குறிப்பிடுகின்றார்.
நரம்பின் பிணிப்போடு ஒழுங்குபட நிரைத்து இணைத்திய பல எலும்புகளைப் பின்னித் தசையை நிரப்பிக் குருதியைத் தோய்த்துத் தோலை மூடி மயிர்மேல் பரப்பி அழகுபெற உயிர்க்கு கடனாகச் செய்யப்பட்ட உடலைப்போலப் பலவகை மொழிகள் ஒருப்பட எடுத்து அசை, சீர், அடி, தொடை என்று இவற்றானும் யாப்புறவீக்கி உணர்ந்த பொருட்கு இடனாகப் பல அலங்கார வகையால் சிறப்புறச் செய்யப்படுவன செய்யுள் எனப்படும்”3 எனச் செய்யுளுக்கு யாப்பினைக் கூறும் நூல்களினுள் இரண்டாவதாக விளக்கம் தருவதாக இந்நூல் அமைகின்றது. மேலும் நன்னூல் கூறிய விளக்கத்தினை அடியொற்றியே தொன்னூல் விளக்கமும் செய்யுள் என்பதற்கு விளக்கம் அளிப்பதைக் காணமுடிகிறது.
உறுப்பு வேறுபாடு
தொல்காப்பியம் முதல் இன்றளவும் யாக்கப்பெறும் யாப்பிலக்கண நூல்கள் வரையிலும் செய்யுள் உறுப்பு அளவில் வேறுபாடு கொண்டதாகக் காணப்படுகிறது.
தொல்காப்பியம் 344 எனவும், காக்கைப்பாடினியம் நூற்பாவை வைத்துக்கூறாவிடினும், அதன் உறுப்புக்கள் ஆறு என அறியமுடிகிறது.
இலக்கண விளக்கம்
“எழுத்தசை சீர்தளை அடிதொடை என்ற மூஇரண்டு உறுப்பும் மேவரச் சிவணிப் 5
என்பதால் ஆறு உறுப்புகள் என்றும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை எட்டு என்றும் கூறிய முடிவு இந்நூலில்,
“எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும் வழுத்திய செய்யுள் மருவு உறுப்பு எனவே” (நூற்பா, 203)
என்று செய்யுளுக்கான உறுப்புக்களாக ஆறினையே முன்மொழிகின்றார். மேலும் எழுத்தினைப் பற்றி எழுத்ததிகாரத்துள் விரிவாக கூறியுள்ளபடியால் யாப்பதிகாரத்தில் அதனை விளக்கவில்லை.
அசை
தொல்காப்பியரின் நான்கசைக் கோட்பாட்டினின்று விலகி ஈரசைக் கோட்பாட்டினை வெளிப்படுத்துகின்றது.
“அசையே நேர் நிரையாம் இருவகைய” (நூற்பா, 204)
சீர்
ஈரசைச் சீர் நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை ஆகிய நான்கும் இயற்சீர் எனவும், இதன் பின்னர் முறையே நேரும் நிரையும் வரின் உரிச்சீர் எனவும், அவற்றில் நேர் என முடிந்தவை வெண்சீர் எனவும், நிரை வரின் வஞ்சிச்சீர் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுச்சீர் என்பன நாலசைச்சீர் பதினாறாகும்.
என்பதினால் பொதுச்சீர் வெண்பாவில் வராது என்றும் கூறப்பட்டுள்ளது.
தளை:
தளை ஏழு என்ற பொதுக் கொள்கையிலிருந்து வழுவாமல் இலக்கணம் வகுக்கின்றது.
“தளையாம் சீர் தம்முன் தலைப்படும் சுட்டே
அவை ஏழ் வகைய ஆகும்” (நூற்பா, 207 வரி.1-2)
”வெண்டளை என்பது வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும் என இரு வகைத்தே” (நூற்பா, 208)
இருவகை வெண்டளையை உணர்த்துகின்றார். 1.காய் முன் நேர் 2.மா முன் நிரை ஆகும்.
அடி
பொதுவாக எவ்வுறுப்பையும் விளக்கிவிட்டுப் பின் அதன் வகைகளை விளக்கிச் செல்வது தொன்னூல் விளக்கத்தில் இயல்பு. அதனடிப்படையில்,
“அடி என்ப தளைத்த அம்சீரா நடைஅவை
குறளடி இருசீர் சிந்தடி முச்சீர்
அளவடி நாற்சீர் ஐஞ்சீர் நெடிலடி
கழிநெடிலடி ஐந்தே கடந்த சீர் இவற்றுள்
எண்சீர் மிக்க அடி எனில் சிறப்பு அன்றே (நூற்பா, 211)
தளையால் பிணிக்கப்பட்ட சீரோடு வருவன அடி. குறளடி முதல் கழிநெடிலடி வரை ஐந்து வகைப்படும். ஓரடியின்கண் இரண்டு சீர் முதல் எட்டு சீர்வரை வரலாம். எட்டு மிக்கது சிறப்பினவன்று என்று அடி இலக்கணம் உணர்த்துகின்றார்.
தொடை
“தொடை என்பது ஈரடி தொடுப்பதாம் அவை அடைமுதல் மோனை அந்தம் இயைபே இடையே எதுகை எதிர்மொழி முரண் அள பெடையே அளபாம் என ஐ வகையே” (நூற்பா, 212)
எனத் தொடை பற்றியும் அதன் விகற்பம் பற்றியும் உணர்த்துகின்றார். தொடை ஐந்து வகைப்படும் எனவும், அந்த ஐவகையும் எட்டு வகையாக விகற்பம் பெறும் எனவும் குறிப்பிடுகின்றார். மேலும் அந்தாதி, இரட்டை,செந்தொடை என் மூன்றனையும் சேர்த்து தொடையும் தொடை விகற்பமும் நாற்பத்து மூன்று எனத் தொகையாக தொன்னூல் விளக்கம் உரைக்கின்றது.
வெண்பா
பா நான்கு என்ற கருத்திருக்க இந்நூல் ஐந்து என்று எடுத்துரைக்கிறது.
“வெண்பா அகவல் விரி கலி வஞ்சி மருட்பா என ஐவகைப்பா அன்றியும் துறை தாழிசை விருத்தம் தூக்கினம் மூன்றே” (நூற்பா, 219)
என ஐந்து வகைப்பா மற்றும் மூன்று பா இனம் பற்றியும் உணர்த்துகிறது. தூக்கு என்ற சொல் ’பா’ என்று முதன்முதலில் இந்நூலில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
என்று கூறுகிறார். வெண்பா, இயற்சீரும் வெண்சீரும் பயின்றும் வரும். ஈற்றடிக்கு முந்தைய அடிகள் நான்கு சீர் கொண்ட அளவடியாகவும், ஈற்றடி சிந்தடியாகவும், ஈற்றடி ஈற்றுச்சீர் அசைச்சீராகவும் வரும். அசைச்சீர் குற்றியலுகரம் மிகுந்தும் வரும்.
வெண்பாவினுள் பிறதளைகள் வராது என்றும், வெண்தளை வருவதால் அஃது செப்பலோசை பெற்றது எனவும் அறிவுறுத்துகின்றார்.
”ஏத்திசை வெண்சீர் இயற்சீர் தூங்கிசை ஒழுகிசை இரண்டும் உள எனில் ஆகும்” (நூற்பா,221, வரி 3-4)
தூங்கிசை, ஏந்திசை ஆகிய இரண்டும் கலந்து வருவது ஒழுங்கிசைச் செப்பல் ஆகும்.
”எதுவும் சிலகாலம் என்ப தறிந்தேன் இதுவும் கடக்கும் இழப்பில்லை – எத்துணை மாற்றம் அடைந்தாலும் மாற்றம் எனும்மொன்றே மாறிடாத் தன்மையாம் மெய்” (அதி அந்தாதி- அதி மெய்ப்பொருள்)
யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை நூற்கள் செப்பலோசை மூன்றாகப் பிரிகின்ற பொழுது பாடலில் இடம்பெற்றுள்ள எதுகையின் எண்ணிக்கையை வைத்தே ஏந்திசை, தூங்கிசை, ஒழுங்கிசை என்று பொருள் படுத்துவர்.
வெண்பா-வகைகள்
யாப்பெருங்கலம் வெண்பா வகையினை ஐந்து என்றே குறிப்பிடுகிறது. இதனை அமிர்தசாகரர்
என ஐவகைப் பாக்களுடன் ஆறாவதாக “சவலை” என்ற பாவிகற்ப வகையை இணைத்து ஆறு என்றே குறிப்பிடுகிறது.
”குறள் சிந்து இன்னிசை நேரிசை சவலை பஃறொடை என வெண்பா ஆறு அவற்றுள் ஈரடி குறளே இருகுறள் சவலை” (நூற்பா, 222, வரி1-3)
இருகுறள் இணைந்து இடையே தனிச்சொல்லின்றி வருமேயாயின் அது ’சவலை’ எனப்படுகிறது.
பாவினம்
பாவினம் மூன்றனுள் குறள் வெண்பாவின் இனம் வெண்செந்துறை. எச்சீரானும், எத்தளையாயினும், எவ்வடியாயினும் வந்து இரு அடி தம்முள் அளவொத்து வரும் என்று உணர்த்துகின்றார். வெண்துறை, சீர், தளை, அடி, விரவி மூன்றடி முதல் ஏழடி வரைவந்து, ஈற்றடி சிலஅளவு குறைந்து வரும்.
முடிவுகள்
ஏனைய இலக்கண நூல்களில் செய்யுளுக்கான உறுப்புகள் ஆறு, எட்டு, முப்பத்திநான்கு என்ற வேறுபாடு இருப்பினும், தொன்னூல் விளக்கம் ஆறு என்றே கூறுகின்றது. தளை ஏழு என முந்தைய மரபிலக்கணம் மாறாமல் வகுத்துள்ளார். அடி வகையினை ஐந்து எனவும், சீர் நான்கு எனவும் முறைப்படுத்தியுள்ளார். செய்யுள் என்பதற்கான நேரடிப்பொருள் விளக்கமும் இந்நூலின்கண் காணமுடிகிறது. வெண்பாவிற்காக யாப்புக் கோட்பாட்டை வகுக்கின்றபொழுது அதன் ஓசை வகைகள் எவ்வாறு பயின்றுவரும் என்பதினையும் கூறியுள்ளார். வெண்பாவின் வகைகள் தொல்காப்பியத்தினின்று வேறுபட்டு ஐந்து என்ற வீரசோழிய முறையை ஒத்துப்போவதாக அமைகின்றது. தூக்கு என்ற சொல்லினைப் பா என்பதற்குப் பொருளாக பயன்படுத்தியுள்ளதையும் அறிய முடிகிறது.
சின்னஞ்சிறுமியர் மண்ணால் சிறுவீடுகட்டி, சிற்றிலிழைத்து, விளையாட்டாக, பாவனையாகச் சோறுசமைத்தும், பாவைகளை (பொம்மைகளை) குழந்தைகளாகக் கருதியும் விளையாடுவது வழக்கம். ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் விளக்கப்படும் சிற்றில்பருவத்தில் சிறுவர்கள் வந்து இதனைக் காலால் எற்றி உதைத்து சிறுமியரை அழவைப்பார்கள் எனக் கூறப்படும். விந்தையாக, சிற்றில் இழைக்கும் சிறுமிகளின் இந்த அழகிய விளையாட்டும் பருவமும் பெண்பால் பிள்ளைத்தமிழில் பாடப்படவில்லை!
இருப்பினும் சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் கூர்ந்து நோக்கினால் வேறு ஏதேனும் பருவத்தில் ஓரிரு பாடல்கள் இக்கருத்தினைக் கோடிகாட்டிப் பாடப்பட்டிருக்கும்.
அவ்வகையில் இன்று நாம் காண்பது அழகிய சொக்கநாதப்பிள்ளை இயற்றியுள்ள திருநெல்வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து இரு பாடல்கள். வெவ்வேறு பருவங்களிலிருந்து எடுக்கப்பட்ட இப்பாடல்கள் சிற்றிலிழைத்துப் பாவைகளுடன் விளையாடும் சிறுமிகளைப் பற்றி நயம்பட உரைக்கின்றது.
****
திருநெல்வேலி எனும் திருத்தலம்! அவ்வூரின்கண் மரக்கிளைகளில் மலர்ந்து மணம்பரப்பும் மலர்களைக் கொண்டு சிறந்துவிளங்கும் சோலைகள்!
சிறுமிகள் விளையாடும் ஆரவாரம் நம்மை ஈர்க்கிறது! அருகே சென்று அவர்கள் விளையாட்டினை உற்று நோக்கலாமே!
கமலிக்கு ஐந்துபிராயமே நிரம்பியுள்ளது. தனது இடுப்பில் ஒரு பெரிய சங்கினைக் குழந்தைபோல இடுக்கிக்கொண்டு வருகிறாள். “தாமரையக்கா! எனக்குக் கொஞ்சம் குளத்துநீர் எடுத்துத் தாயேன். இந்தப் பிள்ளையைக் குளிக்க வைக்கோணும்,” என மழலை மாறாத கிளிக்குரலில் தாமரையிடம் வேண்டுகிறாள் கமலி! குளிப்பாட்டியாயிற்று! தனது பட்டுப்பாவாடையிலேயே குழந்தையின் உடலைத் துடைத்துவிடுகிறாள் அவள். கையோடு கொண்டுவந்துள்ள சிறிய மூட்டையிலிருந்து சிறு பட்டுத்துண்டுகளை எடுத்து, தனது கற்பனைக்குத் தோன்றியபடி, தனது சங்குக்குழவிக்கு அணிவித்து அலங்காரம்செய்து அழகு பார்க்கிறாள்.
குழந்தை சிணுங்குகிறதாம்! கவான் எனப்படும் தனது தொடைமீது அந்த மகவை இருத்திக்கொண்டு, “யாரடிச்சு நீ அழறே?” என்று தன் தாய் தம்பிப்பாப்பாவிற்குப் பாடுவதைப்போலத் தானும் பாடி மகிழ்கிறாள். பெரிய பெரிய மலர்களிலிருந்து ஒழுகும் தேனை, அப்படியே அந்த மலர்களின் அடிப்பாகத்தைக் குழந்தையின் வாயில் வைத்துப் புகட்டுகிறாள். “பாரடி! கமலியுடைய பிள்ளை உறங்கியே போச்சு,” என கண்ணம்மா வியக்கிறாள். சிறிது நேரம் சென்றதும், குழந்தை உறக்கத்திலிருந்து எழுந்து விட்டதாகப் பாவனைசெய்து, அதனைத் தன் இடையில் (ஒக்கலையில்) வைத்துக்கொண்டு உலவுகிறாள்: “பாப்பா, இங்கபாரு பட்டாம்பூச்சியை, இந்தப்பூ அழகா இருக்குதல்லவா? உனக்குப் பறிச்சுத் தரட்டுமா? அந்தக் கிளியைப் பாரடி கண்ணே!” என்றெல்லாம் ஆசைமொழிகளைக் குழந்தையிடம் பேசியபடி சோலையை வலம் வரும் கமலியைப்போல பல சிறுமிகள். குழந்தைகளுடன் உலவும் தாய்மார்கள் எனப் பல மழலைச் சிறுமிகள். ஆங்காங்கு நின்று தங்கள் குழந்தைகளின் அருமைபெருமைகள், வேடிக்கைவிளையாட்டுகளைப் பகிர்ந்து கொள்கிறர்கள்!
இல்லையில்லை! வாழ்க்கையைப் பழகிக் கொள்கின்றனர்.
இதுவே இந்தப் பாவை விளையாடலின் இரகசியம். தமது தாயைப் பார்த்துத் தாமும் இவைகளைச் செய்யக் கற்றுக் கொள்கின்றனர்.
பின்பு அக்குழவிகளை தமது மடியில் கிடத்திக்கொண்டு அழகு செய்கின்றனர். காதல்கணவனுடன் ஊடல்கொண்ட மகளிர் வெறுப்பில் அறித்தெறிந்த ஒளிமிகுந்த அணிகலன்கள் அங்கும் இங்கும் சிதறிக் கிடக்கின்றன! அவற்றைத் தேடி எடுத்து, அவற்றின் மணிகளைக் கோத்துத் தமது பாவைக்குழவிக்கு அணிவிக்கிறாள் பூங்குழலி. “அழகா இருக்கில்ல என் பாப்பா?” என்ற கேள்வி வேறு!
பின்பு, “உறங்கு கண்ணே!” எனத் தாலாட்டினையும் இசைக்கிறாள். இவ்வாறு தமது குழவிகளைக் கொஞ்சி விளையாடும் பல மழலைச் சிறுமியர் நிறைந்த ஊர் அன்னை காந்திமதி உறையும் நெல்லையம்பதியாம். அந்த அன்னையை ஒரு குழந்தையாக்கி அவளுக்கும் தாலாட்டு இசைக்கிறார் புலவர் அழகிய சொக்கநாதப்பிள்ளை. மலர்கள் நிறைந்த அழகிய கருங்கூந்தலை உடைய இக்காந்திமதியம்மை நெல்லைக்கே ஒரு அணிபோல ஒளிருகிறாள். அவளையும் ‘தாலோ! தாலேலோ!’ எனக் கண்வளர வேண்டுவது மிகப் பொருத்தமாக இல்லை?
(நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- அழகிய சொக்கநாதப்பிள்ளை- தாலப்பருவம்)
அனைத்துச் சிறுமிகளையும் போல அன்னை காந்திமதியும் சிறுமியாகிச் சிற்றிலிழைத்து, சிறு அடுப்பை மூட்டி, சோற்றினைச் சமைத்து மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறாள். தாய் அவளுக்கு அலங்காரம் செய்ய ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறாள். குழந்தையை ஆசையாக அழைக்கிறாள்:
மும்முரமாக பாவனைச் சமையலில் ஈடுபட்டிருப்பவளின் நெற்றியில் வியர்வை அரும்பியுள்ளதாம். ‘அதனைத் துடைத்துவிடுகிறேன் வா அம்மா!’ என்கிறாள் தாய். ‘மணல்வீடமைத்து, உண்பதற்காக முத்துக்களைக்கொண்டு சோறு சமைத்திருக்கிறாயே கண்ணே! அதைக் கொஞ்சம் எனக்குத் தருவாயோ?’ என ஆசையாகக் கேட்கிறாள்.
‘விளையாட்டினால், உடலிலும், ஆடைகளிலும் புழுதித்தூள் படிந்துள்ளதே பாப்பா! அதைத் துடைத்து விடுகிறேன், வா,’ என்கிறாள். மேலும், ‘வாசனை மிகுந்த நீரில் உன்னை நீராட்டி, உனக்கு அலங்காரம் செய்து, நீண்ட அழகான கண்களில் மையிடுகிறேன் வா அம்மா! உயர்ந்ததும் மதிப்பே அறிய முடியாததுமான பலவிதமான ஒளிவிடும் அணிகலன்களை உனக்கு அணிவிக்கிறேன்,” என்று ஆசைகாட்டுகிறாள்.
‘என் மடியில் இனிதாக அமர்ந்து பாலமுதம் நீ விரும்பியமட்டும் பருகலாம்,’ எனவும் கூறுகிறாள். பெருமை மிகுந்த தமிழில் பாடும் பாடல்கள் பலவற்றையும் கேட்டு உள்ளம் மகிழ்பவள் காந்திமதி அன்னை. திருநெல்லையில் உறையும் அவளை இவ்வாறெல்லாம் வேண்டி வருமாறு அழைக்கிறாள் அன்னை. வாராதிருப்பாளா காந்திமதி அன்னை?
(நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- அழகிய சொக்கநாதப்பிள்ளை- வாரானைப்பருவம்)
பருவங்களாக வரையறுத்துப் பாடப்படாத இரு இனிய சிறுமிப்பருவ விளையாட்டுகளை இப்பிள்ளைத்தமிழில் பாடிச் சொக்கவைத்துள்ளார் சொக்கநாத பிள்ளையவர்கள். இன்னும் வரும் பகுதிகளில் இவை போன்றவற்றைக் கண்டு களிக்கலாம்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
பிள்ளைத்தமிழ் நூல்கள் குழந்தையின் வளர்ச்சியை மற்றுமின்றி, அந்நூல் சிறப்பிக்கும் பாட்டுடைத் தலைவி / தலைவன் உறையும் தலத்தின் பலவிதமான செய்திகளையும், சிறப்புகளையும் நமக்குத் தெரிவிக்கின்றன. நம் இந்திய / இந்துப் பண்பாட்டின் பலவிதமான தொன்மங்கள், புராணக்கதைகள், குழந்தைகளைப் போற்றும் நிகழ்ச்சிகள், தலவரலாறுகள், அந்தந்தத்தலத்தில் அக்கடவுளைத் தொழுவதன் பயன்பாடுகள், ஆகியனவற்றையும் அழகுற விளக்குகின்றன.
தமிழிலக்கிய வளர்ச்சியை நோக்கினோமானால், இடைக்கால கட்டத்தில் சமய இலக்கியங்களின் வளர்ச்சிக்காலத்தின் பிற்பகுதியில் தோன்றிய சிற்றிலக்கியங்களுள் கடவுளைக் குழந்தையாகக் கண்டுதொழும் பிள்ளைத்தமிழ் இலக்கியமே முதன்மை இடம் வகிப்பதனைக் காணலாம். இவை மேற்காணும் பலவிதமான சிறப்புகளும் கொண்டமைந்தமையால்தான் இவ்வாறுள்ளனவோ எனவும் கருதத்தோன்றுகிறது.
இப்போது நாம் காணப்போகும் பாடல்கள் இராமேசுவரத்தில் எழுந்தருளியுள்ள இராமநாதசுவாமியாம் சிவனின் இணையான சேதுபர்வதவர்த்தனியின் மீதானது. நயமிகுந்த பலபாடல்களிலிருந்து நாம் தேர்ந்துள்ளவை நீராடல் பருவத்தில் உள்ள இரு அழகிய பாடல்களாகும்.
இப்பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை இயற்றியவர் தமிழ் வல்லுனராகிய சேற்றூர்ச் சமஸ்தானத்து வித்துவான் மு. ரா. அருணாசலக் கவிராயரவர்கள் என அறிகிறோம். இப்பிள்ளைத்தமிழ் எழுந்தது பற்றிய சுவையான செய்தி ஒன்று உண்டு: தேவை என்னும் இராமேசுவரத்தில் எழுந்தருளும் இராமநாதமூர்த்தி- பர்வதவர்த்தனியின் மகிமையை உலகத்தோர் அறிவர். வள்ளன்மைமிக்க தேவிகோட்டை ஜமீந்தாருக்கு ஒரு ஆண்மகவு பிறப்பதற்காக செய்துகொண்ட வேண்டுதலின் மீதே இப்பிள்ளைத்தமிழ் நூலை இயற்றும்படி வேண்டிக்கொண்டனர்! ஆசிரியர் இந்நூலைப்பாடி முடித்தகாலை ஜமீந்தாருக்கு ஒரு ஆண்மகவு பிறந்ததாம். பிள்ளைப்பேற்றுக்காக இத்தலத்து ஐயனையும் அம்மையையும் வேண்டிக்கொள்வது மிகுந்த காலமாக இருந்துவரும் வழக்கு.
இராமேசுவரம் அமைந்துள்ள தீவில் உள்ளும் வெளியிலுமாக அறுபத்துநான்கு புனித தீர்த்தங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. கந்தபுராணம் இவற்றுள் இருபத்துநான்கை மிக முக்கியமானவையெனக் கூறுகிறது. இந்தப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, வெவ்வேறு விதமான பாவங்களைத் தொலைக்கலாம். இவற்றுள் பல இராமநாதசுவாமியின் திருக்கோவிலின் உட்புறமே உள்ளனவாம்.
சேதுபர்வதவர்த்தனி அம்மையை நீராட அழைக்கும் புலவர், மிகப்பொருத்தமாக, மானிடர்களாகிய நாம் நீராட உகந்த சில புனித தீர்த்தங்களின் கதையை அழகுற இப்பாடல்களில் இணைத்துப் பாடியுள்ளார். அவை என்னவென்று பார்க்கலாமே!
செய்ந்நன்றி கொன்ற பாவத்தினைத் தீர்ப்பது சங்க தீர்த்தமாகும். வத்சநாபர் எனும் முனிவர் தனது அத்தகையதொரு பாவத்தை இத்தீர்த்தத்தில் நீராடிப் போக்கிக்கொண்டதாக வரலாறு.
(கம்பராமாயணத்தில், இராமன் இராவணனை அழித்தபின்பு தன்னிடம் வந்த சீதையிடம், தான் அவள் கற்பைச் சந்தேகிப்பதாகக் கூறவே, அவள் மிகுந்த துயருற்று, தீயை மூட்டச்செய்து அதில் புகுகிறாள். ஆனால், அவளுடைய கற்பெனும் தீ அந்த அக்கினிதேவனையே சுடுகின்றது. அவன் நெருப்பினின்றும் வெளிப்போந்து சீதையை இராமனிடமளித்துக் கூறுவதாகக் கம்பரின் கவிநயம்:
அங்கி யான்; என்னை இவ் அன்னை கற்பு எனும் பொங்கு வெந் தீச்சுடப் பொறுக்கிலாமையால் இங்கு அணைந்தேன் உறும் இயற்கை நோக்கியும் சங்கியா நிற்றியோ எவர்க்கும் சான்றுளாய்.
(கம்பராமாயணம்- யுத்த காண்டம்)
“எல்லாருக்கும் சாட்சியாக உள்ள பரம்பொருளே! நான் அக்னி பகவான் (யான் அங்கி). இந்த அன்னையாம் (சீதையின்) கற்பு என்ற கொழுந்து விட்டு எரியும் கனல் என்னைச் சுட்டெரிக்கவே, அதைப் பொறுத்துக்கொள்ளும் தன்மை இல்லாததால், இங்கு எழுந்து வந்தேன். எனக்கு உண்டானதனைப் பார்த்த பின்பும் நீ (சீதாப் பிராட்டியிடம்) ஐயம் கொண்டு நிற்கலாமா? ‘ எனக்கேட்பதாக அருமையாகப் பாடியுள்ளார். ஆகவே சீதையின் கற்புத்திறத்தை அறிவுறுத்தும் அக்கினி- அவனுடைய தீர்த்தம் என்றார் இங்கு பிள்ளைத்தமிழ்ப்புலவர்.)
இங்கு இராமேசுவரத்துக் கடலே அக்கினிதீர்த்தமாகும். சீதையின் கற்பின் கனல் எரித்ததாலும், தான் சீதையை தொட்டெடுத்து இராமனிடம் அளித்ததால் உண்டான பாவம் தொலைவதற்காகவும் அக்கினிதேவன், கடலில் மூழ்கி எழுந்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்துப் பாடப்படுவது முனிதீர்த்தம்- இது அறுபட்ட செங்கையும் காலும் திரும்ப வளர உதவியது என்கிறார்.
அடுத்தது இலக்குமி தீர்த்தம்- இது சிவார்ச்சனைக்கும் உபயோகப்படும்; வறுமைப்பிணியையும் அகற்றியருளும்.
அடுத்து காலபயிரவருக்கு கருணைசெய்து அவருடைய பிரம்மஹத்தி தோஷத்தை (செருக்குற்ற பிரமனின் ஒரு சிரத்தைக் கிள்ளியதால் வந்தது!) நீக்கிய சிவ தீர்த்தமாம். மேலும் இராமபிரான் இராவணன் முதலான சிவபக்தர்களைக் கொன்ற பிரம்மஹத்திப் பாவம் நீங்கவும் இங்கு பூசை செய்து இத்தீர்த்தத்தில் முழுகி எழுந்தாராம்.
இத்தகைய பெயரும் புகழும்பெற்று இராமேசுவரத்தில் இருக்கும் தீர்த்தங்களைப் பற்றியும் அவ்விடத்தின் நாயகியாகத் திகழும் உன் அருட்திறத்தையும் பற்றிப் பேசினால் கூட, அவ்வாறு பேசுவோரின் குறைகள் (மாசு) நீங்குமாறு செய்விப்பவள் நீ! அத்தகைய தாய் பொதியமலையினின்றெழும் பொருநை நதியின் நீரில் ஆடியருளுவாயாக!
உண்மையாய் உள்ளத்தில் உனை நினைந்து தவம் செய்வோர் தொழும் பர்வதவர்த்தனி அம்மையே! பொங்கிவரும் புதுவெள்ளநீரில் ஆடியருளே! என அடியார் வேண்டுவதாகப் பாடல் அமைந்துள்ளது.
மற்றொரு பாடலில் இராமேசுவரம் பற்றிய சில புராணச் செய்திகளையும் (இராமாயணத்தில் காண்பவை) காணலாம்:
முற்காலத்தில் மலைகள் இறகுகள் கொண்டு பறக்கும் சக்தி அமையப்பெற்று இருந்தன. தேவர்கள் அரசனான இந்திரன் மலைகளின் இறகுகளைத் தனது வச்சிராயுதத்தினால் வெட்டி வீழ்த்திவிட்டான். மைந்நாக பர்வதம் எனும் மலை மட்டுமே வாயுபகவானின் அருளால் கடலினடியே சென்று இறகுகள் வெட்டப்படுவதினின்றும் பிழைத்தது. அந்த நன்றியுணர்ச்சியின் காரணமாகவே, வாயிவின் மைந்தனான அநுமன் இலங்கைக்குச் செல்லும் வழியில் கடலிலிருந்து அந்த மலை வெளிப்பட்டு அநுமன் தன்மீது தங்கி இளைப்பாறிச்செல்ல உதவியதாம். இந்திரன் தனது பிரம்மஹத்திப் பாவத்திலிருந்து விடுபட மூழ்கியெழுந்தது இராமேசுவரத்திலுள்ள சீதைகுண்டம் எனப்படும் தீர்த்தம் கொண்ட வாவியாகும்.
கோடிவேதப் பிராமணர்களைக் கொன்றதற்கு ஈடாகச் செய்யும் பாவத்தைக் குறைத்திடும் தீர்த்தம் பிரமகுண்டம் என்பது.
அடுத்தது அநுமகுண்டம் எனப்படும் சிறந்ததொரு வாவியாகும். இராவணனை வென்று இலங்கையிலிருந்து திரும்பும் வழியில் இராமேசுவரத்தில் பூசை செய்ய எண்ணி இராமன் அநுமனிடம் ஒரு இலிங்கத்தைக் கொண்டுவரக் கூறினார். அநுமன் வரத் தாமதமானதால் சீதை மணலினால் செய்த ஒரு இலிங்கத்தை வைத்துப் பூசைசெய்தார் இராமன். இலிங்கத்துடன் வந்த அநுமன் இதைக்கண்டு மனம்வாடித் தன் வாலினால் அந்த இலிங்கத்தைப் பெயர்க்க முயற்சிசெய்ய அவனது வால் அறுந்துவிழுந்ததாம். பின்பு இராமன் அநுமனைச் சமாதானம் செய்து அந்த இலிங்கத்தையே பூசை செய்தார் என்பது ஒரு வரலாறு. இன்றும் அந்த மணல் இலிங்கத்தைக் காணலாம்; முதல்பூசை அதற்கே! இவ்விடத்தேயுள்ள மற்றொரு தீர்த்தம் அநுமகுண்டம் என்பதாம். இதில் ஊற்றெடுக்கும் நீரிலாடுவோர் மகப்பேறு வாய்க்கப்பெறுவர் என்பது கண்கூடு.
இவ்வாறு இத்தகைய தீர்த்தங்களில் ஆடுபவர்களின் உள்ளங்களில் வேண்டியவற்றையெல்லாம் தரும் இராமேசுவரத்தில் இராமநாதப் பெருமானருகில் இருந்தருளும் இளமைவாய்ந்த பெண்மயிலே! வெற்றிபெறும் தமிழ்முனிவனான அகத்தியன் வாழும் மலையான பொதியமலையினின்று இழிதரு பொருநைநதி வெள்ளத்தில் நீராடியருளுவாயாக! உண்மையாய் உள்ளத்தில் உனை நினைந்து தவம் செய்வோர் தொழும் பர்வதவர்த்தனி அம்மையே! பொங்கிவரும் புதுவெள்ளநீரில் ஆடியருளே! என வேண்டுகிறார்.
நீராடற்பருவப் பாடல்களாகிய இவை, இராமேசுவரத்துள்ள பலவிதமான தீர்த்தங்களில் நீராடுவோருக்கு உண்டாகும் பலவிதமான நன்மைகளைப் பொருத்தமாக எடுத்துரைப்பதாம். இது இராமேசுவரத்துக்கே உரிய ஒரு சிறப்பாகும். அதனைப் பொருத்தமாக நீராடற்பருவத்தில் புலவர் எடுத்துரைத்தமை மிக அருமையானதாகும்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்) {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, கற்பகம் பல்கலைக் கழகம், கோவை, நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி, தமிழ்த்துறைத் தலைவர்.}
இன்றைய சமுதாயம் நவீன நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. மேலும் இன்றைய சூழல் போட்டிகள் நிறைந்த ஒரு பரபரப்பான நிலையில் காணப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நிதானமில்லாதப் போக்கு நிலவுகிறது. மனிதன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள (survival) பிறரை அழிக்கவும் துணிகின்றான். இத்தகைய விலங்கியல் மனநிலையில் இருந்து மனிதனை மீட்கவும் நெறிப்படுத்தவும் தோன்றியதே வழிகாட்டலும்(Guidance) அறிவுரை பகர்தலும்(Counseling) என்ற துறையாகும். இத்துறை மனிதனின் தேவையையும் இயலாமையையும் புரிந்து கொண்டு அவற்றை நிறைவேற்றித் தரும் வழிமுறைகளை ஆராய்ந்து கூறும் துறையாக, உலகளாவிய நிலையில் சிறந்து விளங்குகிறது.
தமிழ்ச்சமூகச்சூழலில் வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் இருப்பினும், இது பற்றிய கொள்கைகள் கருத்துகள் இல்லாதது போலவும், புதிது போலவும் நிலவுகிறது. ஆனால் வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் சங்ககால ஆற்றுப்படை நூல்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை பண்பாட்டு நிகழ்வாக ஓர் அறச்செயலாக இருந்தமையை இலக்கியங்களின் வாயிலாக அறியமுடிகிறது. அவ்வடிப்படையில் சித்தர் பாடல்களில் இடம்பெறும் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தல் குறித்த செய்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் பற்றிக் கூறுவோர் , குறிப்பாக கல்வி மற்றும் உளவியல் சார்ந்த தளத்தில் ஆர்தர் ஜே.ஜோன்ஸ், குரோ மற்றும் குரோ, ருதர்ராங், ரோஜர்ஸ். கார்ல் போன்ற மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துகளை எடுத்துரைத்து அவற்றிலிருந்தே இத்துறை சார்ந்த பணிகளைத் தொடங்கினர். ஆனால் தமிழ் இலக்கியங்கள் காலந்தோறும் இத்தகைய பணியினைச் செய்து வந்துள்ளன. அந்தவகையில்சித்தர் பாடல்களில் இடம்பெறும் வழிகாட்டல் அறிவுரை பகர்தல் குறித்த சிந்தனையை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வழிகாட்டல்
வழிகாட்டுதல் என்பது ஒரு தனிநபர் தனது திறமைகளையும், தேவைகளையும் நன்கு புரிந்து கொண்டு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு செயல்படுவதாகும்.
“ வழிகாட்டுதல் என்பது தனிநபர்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதல்ல, மாறாக பிரச்சனைகளைத் தானே தீர்த்துக்கொள்ள உதவிடுதல் ஆகும். ” என்று கி.நாகராஜன் கருத்துரைக்கிறார்.( வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் ப.2)
குரோ மற்றும் குரோ(Crow & Crow.A) என்பவரது கருத்துப்படி “ எல்லா வழிகாட்டலின் அடிப்படைக்கருத்தும் திறன்மிக்கவர் பிறருக்கு வழிகாட்டி அவரைத் தன்வாழ்வு வளம் பெறத்தக்க வாழ்க்கைக் கண்ணோட்டத்தைத் தானே உருவாக்கிக் கொள்ளச் செய்து அதற்கேற்றவாறு முடிவுகளை எடுத்தும் செயற்படுத்தவும் உதவிடுதல்” என்கிறார்.( p .2)
தமிழ் இலக்கியங்களில் வழிகாட்டுதல் என்பது ஆற்றுப்படுத்துதல் என்ற சொல்லில் வழங்கப்படுகிறது. தொல்காப்பியத்தில் இதற்கான இலக்கணம் கூறப்பட்டுள்ளது,
“ கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்” (தொல். புறம் நூற். 36)
என்ற தொல்காப்பிய நூற்பாவின்வழி அறிவில் சிறந்த சான்றோர்கள் தாம் பெற்ற இன்பத்தை (பொருளை) பெறாதவர்களுக்கு பெற்று பயனடையும்படி கூறி வழிகாட்டியுள்ளனர். எனவே வழிகாட்டுதல் என்பது அறிவில் சிறந்த அல்லது அனுபவமிக்கவர்களால் சொல்லப்படுவதாகும்.
அறிவுரை பகர்தல்
மனிதன் ஒரு சோதனைக்கு உள்ளாகும் போதும் சரியான முடிவெடுக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடிய தருணத்திலும் வீட்டில் உள்ள அனுபவமிக்க பெரியோர்கள் மற்றும் படித்த அறிவாற்றல் கொண்டவர்களிடம் ஆலோசனையை நாடுகிறான்.
மனக்குழப்பத்தில் உழலும்போது நமக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டுப் பேசுவதும் மனச்சுமையைக் குறைத்து ஆற்றுப்படுத்திக் கொள்வதும் இயல்பான ஒன்றாகும்.
கார்ல்ரோஜர்ஸின் (Rogers Carl.R) கருத்துபடி,“ அறிவுரை பகர்தல் என்பது தொடர்ச்சியான நேர்முகத் தொடர்புகள் முலம் ஒருவரது மனப்பான்மைகளையும் நடத்தையையும் மாற்றியமைத்தலாகும்” என்கிறார். ( வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் ப.23)
வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் முறையே தனித்தனியே வரையறைகளைக் கொண்டிருந்தாலும் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தறிய முடியாத தொடர்பைக் கொண்டதாகும். ஒன்றின் துணையில்லாமல் மற்றொன்றின் பணி தனித்தியங்காது எனினும் வழிகாட்டலின் போது கையாளப்படும் உத்திமுறைகளுள் ஒன்றாகவே பின்பற்றப்படுகிறது.
சமூகத்திற்கும் தனிமனிதனுக்கும் பயன்படும் விதத்தில் வழிகாட்டல் அறிவுரை பகர்தல் பல வகைப்படுத்தப்படுகிறது. தனிமனிதனுக்காக தனிநபர் வழிகாட்டல், உடல்நிலைசார்ந்த வழிகாட்டல், ஆளுமைவளர வழிகாட்டல், பாலுணர்வு சார்ந்த வழிகாட்டல், மணவாழ்க்கை குறித்த வழிகாட்டல், குடும்பம் சார்ந்த வழிகாட்டல், முதியவருக்கு வழிகாட்டல், தலைமைப்பண்புக்கான வழிகாட்டல், தொழில்முறை வழிகாட்டல், ஓய்வுநேரத்தை சரியாகப் பயன்படுத்த வழிகாட்டல் என பல நிலைகளில் இதன் தேவையை உணர முடிகிறது.
சித்தர் பாடல்களில் வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும்
ஆதிகால சமூகவாழ்க்கையில் குடும்பத்தில் இருந்த மூத்தோரின் அறிவுரையை அனைவரும் கேட்டனர். ஆனால் இன்று பெருகிவரும் மக்கள்தொகை கூட்டுக்குடும்பவாழ்க்கை சிதைந்த சமூகநிலை, போட்டி, சச்சரவு மிகுந்த சிக்கலான சமூகச்சூழல், மாறிவரும் அறிவியல், அரசியல், பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் நுகர்வுக் கலாச்சாரமோகம் காரணமாக அனைத்து மனிதர்களுக்குமே வழிகாட்டல் தேவைப்படுகிறது.
இன்றைய சமுதாயம் பசி, தனிமனித ஒழுக்ககேடு, இலஞ்சம், தன்னிறைவின்மை, சுயநலம், பொறாமை, உழைப்பின்மை, பிறன்பொருள் பறிப்பு, போதை, அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கு எனப் பல சமூகச்சீர்கேடுகள் மிகுந்துள்ளது. மேலும் அறிவியல், சமுக, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பினில் உற்பத்தி, வினியோகம், போக்குவரத்து, பணப்பரிமாற்றம், செய்தித்தொடர்பு, கல்வி, மருத்துவம் ஆகிய அனைத்தும் சிக்கல் மிகுந்ததாக பணத்தை மையமிட்டதாக, கௌரவத்தை மையமிட்டதாக மாறியுள்ளன. எனவே இவற்றை தீர்க்க சரியான வழியில் செயல்பட சமூகத்திற்கு சித்தர்களின் வழிகாட்டல் அவசியமாகிறது.
சித்தர்களின் சிந்தனைகள் சமூகத்தையும் மனிதனையும் மேம்படுத்தும் வழிமுறைகளை எடுத்துக்கூறுவதாய் அமைந்துள்ளது. சித்தர்களின் வழிகாட்டல் குறித்து சற்குணன் கூறுகையில் “ சித்தர்கள் தங்களின் தூய சிந்தனைகளையே போதனைகளாக்கி மனித சமுதாயத்திற்கு வழிகாட்டிச் சென்றுள்ளனர். மேலும் சித்தர் இலக்கியம் முழுவதும் தனிமனிதனுக்கு உரிய வழிகாட்டல்கள் விழுமியங்களாகப் பதிவு செய்துள்ளனர்.” என்று கருத்துரைக்கிறார்.
சிவவாக்கியர், கடுவெளிச்சித்தர், குதம்பைச்சித்தர், கொங்கணர் போன்றோர் தனிமனிதனுக்கு உரிய நல்ல பழக்கவழக்கங்களையும் ஒழுக்கமுறைகளையும் சமுதாயத்திற்கு தேவையான அறிவுரைகளையும் கூறியுள்ளனர்.
என்று கடுவெளிச்சித்தர் பாடுகிறார். இவரது பாடல்கள் முழுவதுமே(29) தனிமனித மற்றும் சமூகத்திற்கு வழிகாட்டுபவையாகவே உள்ளது. பாவம் செய்யக்கூடாது, கோபம் கொள்ளக்கூடாது, கோள் சொல்லக்கூடாது, பிறருக்கு மோசம் செய்தால் உறவினருடன் அழிந்து போவாய் என்றும் நல்லவர்களின் தொடர்பை விலக்கிக்கொள்ளக்கூடாது, அறம் சார்ந்த செயல்களைச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார். மேலும் கஞ்சா, கள் குடிக்கக்கூடாது என்றும் கூறுகின்றார்.
குதம்பைச்சித்தர் கூறுகையில்,
“கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோளிவை
பாபத்துக்கு ஏதுவடி- குதம்பாய்
பாபத்துக்கு ஏதுவடி” (குதம்.சித்.பா. 83)
என்ற பாடலில் கோபம், பொறாமை, கொடிய சொல், வலியகோள்முட்டல் ஆகியவை பாவம் என்கிறார். மேலும் பொருளாசைக்கூடாது, உத்தமர்களை இகழக்கூடாது என்பன குதம்பைச்சித்தர் கூறும் வழிகாட்டலாகும்.
தனிமனித முன்னேற்றமின்றி ஒட்டுமொத்த நாட்டுயர்வு என்பது இயலாத ஒன்றாகும். ஒவ்வொருவரும் தத்தம் ஆற்றல்களை முழுமையாக உணர்ந்து செயலாற்றிட தனிமனித வழிகாட்டல் தேவைப்படுகிறது. தனிமனித ஒழுக்கக் கேட்டால் சமூகமும் நாட்டுயர்வும் பாதிக்கப்படும். இதனை உணர்ந்த கொங்கணர்,
ஏழை, இயலாதவர்களுக்கு உதவவேண்டும். தஞ்சம் என வந்தோர்க்கு வஞ்சம் செய்யக்கூடாது. பெரியோர்களை மனதளவிலும் வையக்கூடாது. மனம்நோகச் செய்யக்கூடாது என்கிறார். இதனை பின்வரும் பாடலடிகளின் வழி அறியலாம்.
“ ஏழைபனாதிக ளில்லையென்றாலவர்க்
கிருந்தா லன்னங் கொடுக்க வேண்டும் ” (கொங்.சித்.பா.86)
“ மவுனமாகவும் வையா தேயவர்
மனத்தை நோகவும் செய்யாதே” (கொங்.சித்.பா. 89)
சித்தர்கள் தங்கள் வழிகாட்டலை கண்டிப்புடன் கூறுகிறார்கள். சித்தர்கள் மனித சமுதாயத்திற்குக் காட்டிய வழிகாட்டலில் மிக முக்கியமானது,
சமயப்பொறை
சாதிசமய மறுப்பு
பிற உயிர்களை வருத்தாமை
கொல்லாமை
பசிதீர்த்தல்
பிறர்க்கு ஈதல்
அன்பே முக்திக்கு வழி
என்பன சமுதாயத்திற்கான வழிமுறைகளாகச் சித்தர்கள் கூறியுள்ளனர். சமூகத்திற்கு சாதியின் பெயரால் ,சமயத்தின் பெயரால் ஏற்படும் சண்டைகளையும் பூசல்களையும் தவிர்ப்பதற்கு சரியாக வழிகாட்டியுள்ளனர்.
தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் அடிப்படைத் தேவை மனிதநேயம் ஆகும். ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டினாலே இறைவனை அடையலாம் என்பதை,
“ எள்ளளவும் அன்பகத்தில் இல்லாதார் முக்தி
எய்துவதும் தொல்லுலகில் இல்லை ” (பாம்.சித்.பா- 89)
என்ற பாடலில் பாம்பாட்டிச்சித்தர் அன்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றார். இவண்.
“ அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்ந் தற்று ” (குறள்- 78)
என்ற வள்ளுவரின் குறளும் ஒப்ப நோக்கதக்கதாகும்.
இல்லறம் சிறக்க வழிகாட்டல்
இல்வாழ்க்கை என்பது பல்வேறு முரண்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்கின்றது. கருத்து வேறுபாடுகளும் பிரிவுகளும் இதில் தவிர்க்க முடியாதனவாக விளங்குகின்றன. குடும்பத்தில் நேரும் சிக்கல்களைத் தவிர்த்துச் சிறந்த இல்வாழ்வை மேற்கொள்வதற்கு சிவவாக்கியர் பல அறிவுரைகளைப் பகர்ந்துள்ளார். மனைவி மக்களோடு வருகின்ற விருந்தினரை உபசரித்து வாழ்கின்ற இல்லறவாழ்வே சிறப்பானது என்கிறார். இதனை
கணவன் மனைவியோடு சேர்ந்து வாழும் இல்வாழ்க்கையே சிறந்தது. இதில் கணவன் மனைவியோடு கருத்து முரண்பட்டு பிரிந்து வாழ்வதையும், மனைவி கணவனோடு கருத்து முரண்பட்டு பிரிந்து வாழ்வதையும் காணமுடிகிறது. இதற்கு காரணம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் இருப்பது தான். இல்வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்பட்டு, பிரிவு ஒன்றே தீர்வு என்று முடிவு செய்து நீதிமன்றத்தை நாடுவதால் குழந்தைகளும் உறவுமுறைகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிவவாக்கியர் கூறியதுபோல் கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்து இல்வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விருந்தோம்பல் முதலான அறங்களைக் கடைபிடிப்பது அவசியமாகும்.
முடிவுரை
தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான சித்தர் இலக்கியம் வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் பணியினைச் செம்மையாகப் பதிவு செய்துள்ளது.
மெய்ஞ்ஞானிகளாகிய சித்தர்கள் தனிமனித உயர்வே நாட்டுயர்வு என்பதை அறிந்து தனிமனிதனுக்குரிய ஒழுகலாறுகளை அறிவுறுத்தி வழிகாட்டியுள்ளனர்.
தனிமனித ஒழுக்கத்துடன் குடும்பம், நாடு, சமூகம் என அனைத்துக்குமான வழிகாட்டலை சித்தர்பாடல்களின் வழி காணஇயலுகிறது.
கணவன் மனைவி சேர்ந்து வாழும் இல்லற வாழ்க்கையே சிறப்பானது என்ற அறிவுரையை சிவவாக்கியர் பாடலின் வழி அறியமுடிகிறது
துணைநின்றநூல்கள்
சி.எஸ்.முருகேசன், சித்தர் பாடல்கள், (பெரியஞானக்கோவை) சங்கர் பதிப்பகம், சென்னை-49, 2012.
குழந்தை செங்கீரையாடுதலுக்கு இருவிதமாகப் பொருள் கூறப்படுகின்றது. முதலாவது, தவழும்பருவத்துக் குழந்தை, ஒருகாலை மடித்தும், மறுகாலை நீட்டியும் தலையை உயர்த்திப் பார்த்தும் தன் பவளவாயிலிருந்து அமுதத்திற்கு ஒப்பான உமிழ்நீர் ஒழுகத் தவழும் அழகினை விளக்குவது; மற்றொன்று, பொருளற்ற ஓசைகளை எழுப்பித் தாய்தந்தையரை மகிழ்விப்பது. கீர் என்றால் சொல் என்பது பொருள். நக்கீரர் என்பது நல்ல சொற்களைக் கூறுபவர் எனப் பொருள்படும். திருத்தமான பொருளற்ற மழலையொலி குழந்தை எழுப்புவதாம். இத்தகைய மொழியைக் கூறுதல் என்பது மங்கல வழக்காகச் செங்கீரை ஆடுதல் எனப்பட்டது. இந்த ஒலியை எழுப்பும் பருவமே செங்கீரையாடும் பருவம் எனவும் கூறலாம்.
‘ங்க்கா’ ‘ங்க்கு’ என நீரொழுகும் வாயைத்திறந்தும், பேசுவதனைப்போல் தலையை ஆட்டியபடியும், உற்சாகத்தில் குழந்தை தவழ்ந்தாடும். இதனைக் கண்ட தாயும் மற்றவர்களும் அக்குழந்தை எதனையோ பேச முயல்வதாகக் கருதி மகிழ்வார்கள். தாய் தலையசைத்துப் பேசுவதனைப்போலத் தானும் செய்ய முனையும்; முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் இதனைப் ‘போலச்செய்தல்,’ எனக் குறிப்பிடுவார்கள் என்கிறார்.
தாய் குழந்தையிடம் உரையாடுவது போன்றுஅடியார்கள் குழந்தை வடிவாகத் தாம் காணும் அன்னை தெய்வத்திடம் வரம் கேட்கிறார்கள். இதனைத் தாய் உளவியல் அல்லது அடியார்களாகிய மானிடர்களின் உளவியல் எனலாம். எப்போதுமே சிறுகுழந்தையை தெய்வவடிவாகக் காண்பது இந்தியப் பாரம்பரிய எண்ணம். அதிலும் பிள்ளைத்தமிழ் நூல்கள் தெய்வத்தைக் குழந்தையாக்கிப் பாடும்போது, தமது எல்லையற்ற அன்பை அக்குழந்தைமீது சொரிந்தும், தமது துன்பங்களைத் துடைக்கும் பரம்பொருளாக அத்தெய்வக்குழந்தையைக் கண்டு வேண்டுவதாகவும் பாடுவார்கள். தெய்வம் ஒன்றே நமது பிறவித்துயரைத் துடைக்கவல்லது என்பது இந்துக்கள் தீவிரமாக நம்பும் ஒரு கருத்து. அத்தெய்வத்தைக் குழந்தையாக்கி வழிபடும்போதிலும் பிறவித்துயரைத் துடைக்கவேண்டுவார்கள். இந்த உளவியல் கோட்பாட்டினை ஒற்றியே பிள்ளைத்தமிழ் நூல்களில் சில பருவங்களில் பாடல்கள் அமைந்துள்ளது சிந்திக்கத்தக்கது.
கோவை கவியரசு கு. நடேச கவுண்டர் எழுதியுள்ள சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் நூலில் இக்கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள செங்கீரைப்பருவப் பாடல்கள் இரண்டினை நாம் இங்கு காணப்போகிறோம்.
பெண்மகவு தனது வாயில் தேன்போலும் உமிழ்நீர் ஒழுக, தவழ்ந்தாடி வருகிறாள். “என்னிடம் ஓடிவா தாயே!” என அன்புமீதூர அழைக்கும் தாயினிடம் ஓடோடிச் செல்கின்றாள். நிமிர்ந்து தாயை நோக்கும் தலை; ஆசையும் அன்பும் பாசமும் பெருகத் தாய் (அடியார்) தனது குழந்தையை நோக்குகிறாள். அன்னை பராசக்தியே அங்கு அவள் கண்களுக்கு குழந்தையாகத் தென்படுகிறாள். பக்தியினால் புளகாங்கிதமுற்ற (அடியாரெனும்) அன்னை கேட்கிறாள்:
“நான் உனது அடியவள்; நீயே எனக்கு எல்லாம் என இருப்பவள்; ஆகவே, என்னை இனிமேலும் அன்னையர் வயிறாகிய பிறவிச்சேற்றினில் (அளறு- சேறு) திரும்பத் திரும்பப் பிறக்குமாறு செய்வாயா? எண்ணுதற்கு அரிய துயரங்களை எமக்களித்து பிறப்பு எனும் தண்டனையை எமக்குக் கொடுப்பாயா? எம் உடலில் பொருந்தியிருந்து மாறிமாறி எம்மை மயக்கும் ஐம்பொறிகள் காட்டும் வழியில் உழலுமாறு எம்மைச் செய்து விடுவாயா? பெண், பொன், மண் எனும் மூவாசைகள் (வேடணைகள்) எம்மை விடாமல் தொடர்ந்து வந்து துயர்செய்ய விடுவாயோ? உன்னுடைய மலரடிகளைப் பணிகின்ற அன்பில்லாதவர்களின் குழுவில் நாங்களும் சேர்ந்துநின்று உன்னையே மறந்துவிடச் செய்குவையோ?” எனக் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்(ள்). ‘இவ்வாறெல்லாம் எம்மைச் செய்துவிடாதே,’ எனும் ஆதங்கம் இவ்வடிகளில் தொனிப்பதனைக் காணலாம்.
ஒரு ஆதங்கத்தில், பக்திப்பெருக்கில், இவ்வாறு வினவிய தாய், பின்னர் இது வாய்திறந்து மறுமொழி உரைக்க இயலாத சிறுகுழந்தை என (ஒரு தாயின் போக்கில்) உணர்ந்து குழந்தையின் தலையசைப்பையே தனக்கு அது கூறும் மறுமொழியாகக் கருதுகிறாள். அதற்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறாள்.
“நான் கேட்கும் இந்த வினாக்களுக்கெல்லாம் நீ தயை புரிந்து எதிர்மறையாக விடைதருவது போல (அதாவது ‘இல்லை இல்லை! இவ்வாறெல்லாம் செய்ய மாட்டேன்’ எனக்கூறுவது போல) உனது தலையை (சென்னியை) இருபுறமும் அசைத்து, எனதன்னையே! நீ செங்கீரையாடி வருவாயாக!” என வேண்டி உள்ளம் கசிந்து பாடுகிறார். கேட்கவே இனிமையாக இல்லையா? உள்ளம் உருகவில்லையா?
குழந்தையும் தாய் தன்னிடம் ஏதோ கேட்பதைக் கண்டு தலையை இப்படியும் அப்படியும் அசைக்கிறது. தாயின் உடலும் உள்ளமும் மறுமொழி கிடைத்துவிட்டதால் மகிழ்ச்சியில் சிலிர்க்கிறன.
இதற்கு சைவசித்தாந்த அருளாளர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஒரு அருமையான விளக்கம் அளித்துள்ளார்: அவருடைய சொற்களிலேயே அதனைக் காண்போமே! :: சிவசக்தியாகிய அருட்சத்திதான் உயிர்களின் சீவத்துவத்தை நீக்கிச் சிவத்தை அளிப்பதற்காக மாயையிலிருந்து உடல், கருவி, உலகு, போகங்கள் ஆகியவற்றை அளித்துப் பிறப்பு- இறப்பில் செலுத்துகின்றது எனச் சைவசித்தாந்தம் கூறுகின்றது. உயிரறிவை விளக்கும்பொருட்டுக் கூட்டப்பட்ட மாயை, உயிரின் ஆணவமல சம்பந்தத்தால் அறிவை மயக்கம் செய்கின்றது. அந்த மயக்கம் தீர, திருவருளாகிய சிவசத்தியின் துணைவேண்டும். அடியான் தன் அச்சத்தைக் கூறி இத்தகைய துன்பத்தில் யான் புக என்னை விடுவையோ என வினா நிகழ்த்தி, குழந்தையாகிய சிவசத்தியிடம், ‘நான் அப்படிச் செய்யமாட்டேன்’ என்ற எதிர்மறை விடையைத் தலையை இருபுறம் அசைப்பதிலிருந்து பெற விழைகின்றான். சிவபக்தி நிறைந்த ஒருவர், தம்முடைய மானுடக்குழந்தையிடம் இவ்வினாக்களைக் கேட்டு, அக்குழந்தை எதிர்மறை விடையாகத் தலையசைக்க சிவசத்தியே தம்மைத் தெளிவிப்பதாகக் கருதி இன்பம் அடைவார்.
ஆசையுடன் அருமையாகப் பெற்றெடுத்த தன் குழந்தையே தாய்க்குப் பெரும் செல்வம். அக்குழந்தையைத் தனது தவப்பயனாகவும், குலதெய்வமாகவும், தன்னை வாழவைக்க வந்த பரம்பொருளாகவும், தனது உயிர் என்றும், கண் என்றும், கண்ணின் ஒளி எனவும், தான் பெற்ற பெருஞ்செல்வம் என்றும், தன்னைப்பெற்ற தாயாகவும் போற்றிக் கொண்டாடுவாள் அன்னை.
இந்த உளக்கருத்தில் இவ்வுத்தியை தாயின் நிலையில் நின்று கவிஞர் கையாண்டு அழகுறப்பாடுகிறார்:
“முன்பு ஒரு காலத்தில் தேவர்கள் குழு தம்மில் யார் பெரியவர் என்று வாதமிட்டுக் கொண்டிருந்தது; அப்போது அங்குசென்று அவர்களிடையே ஒரு துரும்பை நட்டு அவர்களுடைய அகந்தையை அழித்தானே அந்தச் சிவபிரான்தான் உனது மேனியின் ஒரு பாகத்தைக் கொண்டவனோ தாயே? அவனுடைய அருள் என விளங்கும் குணமும் நீயேதானோ?*
(* ‘ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்,’ எனும் திருமந்திர வரிகள் ஈண்டு நினைவுகூரத் தக்கன. ஒன்றேயான பரம்பொரும் உயிர்களுக்கு அருள்செய்யும்பொருட்டு இரண்டாகி, அவனது அருளாகி, சக்தி எனும் பெயரும் வடிவும் கொண்டு நிற்கின்றதாம்)
“என்றென்றுமே, பிறப்பு, இறப்பு, இவை தொடர்பான மலங்கள் முதலியன இல்லாமலிருத்தல் என்பதுதான் உமது இயல்போ? எண்ணிறந்த சராசரங்களாகிய உலகங்களை ஈன்றெடுத்து அவற்றில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நீ இனிய நற்கதியைத் தருவீர் அல்லவோ?
“உனது திருக்கோவிலில் நின்று கண்ணில் காணும் காட்சியாக உன்னைத்தொழுது வணங்கும் எளிய அடியாருக்கும் நீ அருளுவது உன்னுடைய வழக்கம் அல்லவா? இங்ஙனம் எல்லாம் அருளி எம்மை நீ எப்போதும் வாழ்விப்பாயா என நாங்கள் விருப்பமுற்றுக் கேட்டு நிற்கிறோம். ‘ஆம்’ எனும் விடை வழங்கும் முகமாக நீ உனது திருமுகத்தினை அசைத்து எங்களுக்குக் குறிப்புணர்த்தியபடி செங்கீரையாடியருள்வாயாக! (சென்ற பாடலில் எதிர்மறை விடையினை வேண்டித் தலையசைப்பை எதிர்பார்த்த தாய் இப்பாடலில் ‘ஆம்’ எனும் குறிப்பைத் தலையசைப்பினால் உணர்த்த வேண்டி நிற்கிறாள்).
“சீகாழியில் மேவும் திருநிலைநாயகியாகிய சுந்தரவல்லியே, செங்கீரையாடி அருளுவாயாக,” என வேண்டுகிறார் கவிஞர். இவ்வாறு குழந்தையின் தலையசைவுகளுக்கேற்ப மறுமொழிகளைக் கொண்டு மகிழ்ச்சியடையும் தாயின் இயல்பு அடியவராகிய கவிஞருக்கு அந்தப் பரம்பொருளின் பெருமைகளைப்பாடி மகிழும் உத்தியாக அமைகிறது.
இப்பாடல்கள் தாயினுடையவும், அவள் நிலையில் தம்மை இருத்திப் பரம்பொருளைக் குழந்தையாகக் கண்டு வணங்கும் பக்தனுடையவும் ஆகிய இருவருடைய மனநிலைகளையும் அவற்றில் எழும் சிந்தனைகளையும் மிக அழகாக விளக்குகின்றன. பாடப்படும் இப்பாட்டுடைத்தலைவி, குழந்தையா தெய்வமா எனும் சந்தேகத்திற்கே இடமில்லை. இருவரும் ஒன்றே- குழந்தையும் தெய்வமும் போற்றப்படவேண்டியவர்களே என்பது நன்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் பெரும்பாலானவை கடவுள்கள் மீதானவையே! இப்பிள்ளைத்தமிழ் நூல்களில் ஒவ்வொரு பருவத்தினையும் புலவர்கள் பாடும்போது அப்பருவத்திற்கான பத்துப்பாடல்களில் சில, அழகான கதைகளையும் தொன்மங்களையும் இணைத்தும், வேறு சில, சந்தநயம் மிகுந்தும், இன்னும் சில பாட்டுடைத்தலைவனின்/ தலைவியின் கடவுட்தன்மையைப் போற்றியும் பாடப்படும். இத்தகைய பாடல்களில், அவை அன்னையைப் பற்றிய பிள்ளைத்தமிழ் நூலாக இருப்பின், சைவசித்தாந்தக் கருத்துக்கள் பொதிந்து பொலிவனவாகப் பாடுவது பெரும்புலவோரின் தனிச்சிறப்பு. அவ்விதத்தில் கவியரசு நடேச கவுண்டர் அவர்கள் தமது சைவசித்தாந்தப் புலமையையும் பற்றையும் இலைமறைகாயாக இப்பாடல்களில் மிகவும் எளிமையாக ஆயினும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியவையாகக் காட்டியுள்ளது வியக்கத்தக்கதாம்.
இவை போலும் சிறப்புகளை வெவ்வேறு பிள்ளைத்தமிழ் நூல்களில் இனிவரும் அத்தியாயங்களில் தொடர்ந்து காண்போம்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
கல்வி மனித வாழ்விற்கு இன்றியமையாது வேண்டப்படும் ஒன்றாகும். கல்வி அறிவில்லாத சமுதாயம் என்றும் முன்னேறுவதில்லை இது வரலாறு. கல்வி என்பது வாழ்க்கையில் தோன்றும் அறியாமையை நீக்கி, அறிவைக் கொடுப்பதாகும். அனைவருக்கும் கல்வி என்பது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி அடிப்படைத்தேவைகளில் ஒன்றாகும். இதன்படி கல்வி குறித்து சித்தர்கள் அவர்கள் காலத்திலேயே சிந்தித்து, பல கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர் அதனை விளக்குவதாகவே இக்கட்டுரை அமைகிறது.
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” (புறம் – 183) என்று பாண்டியன் நெடுஞ்செழியனும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து கூறியுள்ளனர். எனவே கல்வி என்பது எல்லாருக்கும் பொதுவானது. எந்தத் தனிப்பட்டவருக்கும் சொந்தமானது அன்று. அதனால்தான் எல்லாரும் கற்க வேண்டும். பிச்சைப்பெரினும் கற்றல் நன்று என்று கூறியுள்ளனர் நம்முன்னோர்கள்.
கல்வி – உயர்ந்தோர்
கல்வி அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். முன்னைப் பழங்காலத்தில் எந்தத்தொழில் செய்து வந்தாலும் எக்குடியில் பிறந்திருந்தாலும் எந்தவித தடையும் இன்றி கல்விகற்று வந்தனர். ஆரியரின் வருகைக்குப் பிறகே நிலைமை தலைகீழாக மாறியது எனலாம். நால்வகை வருணப்பாகுபாடுகள் தோன்றியதன் அடிப்படையில் கல்வி என்பது ஒரு சாராருக்கு உரியதாக மாறிப்போனது. இதனை,
“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” (தொல்.அகத்.26) என்ற தொல்காப்பிய அடிகளின்வழி அறியலாம். இதற்கு உரைகூறும் நச்சினார்க்கினியர்,
“…அம்மூன்றனுள் ஒதற்பிரிவும் தூதிற் பிரிவும் அந்தணர் முதலிய முவரிடத்தன என்றவாறு. எனவே ஒழிந்த பகைவயின் பிரிவு அரசர்க்கே உரித்தென மேலே கூறுப. உயர்ந்தோரெனக் கூறலின் வேளாளரை ஒழித்தாரென்றுணர்க.” (ப-54)
எனக் கூறியுள்ளார். இதன்படி நச்சினார்கினியர் உயர்ந்தோர் எனக் கருதுவது அந்தணர், அரசர், வணிகரையே. இம்மூவர் மட்டுமே உயர்கல்வி கற்கவும் வெளிநாடு செல்லவும் தகுதி படைத்தவர்கள். நான்காம் சாதியினருக்கு அவ்வுரிமை கொஞ்சமும் இல்லை எனத்தெரிகிறது.
நாலாம் சாதியாம் சூத்திரர்கள், உழைக்கும் வர்க்கமாகிய பெரும்பான்மை மக்கள் படிக்கவே கூடாது எனத் தடைபோடப்பட்டது. அப்படி மீறிப் படித்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதாக மனுதர்ம விதி கூறுகிறது. என்பதை,
என்ற வரிகளின்வழி அறியலாம். ஒருவன் படிக்கக் கூடாது என அறிவுக்கு தடைபோடும் மனுநீதிக்கு எதிராக முழக்கம் இட்டவர்கள் சித்தர்கள் ஆவர்.
இவர்கள் கூறும் கல்விமுறை ஒழுக்கத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் குறிக்கிறது. ஆனால் சித்தர்களின் காலக்கட்டதில் குருகுலக் கல்விமுறை பயிலப்பட்டதை,
“மூங்கிலை வெட்டி நார் உரித்துப் பதப்படுத்தி நூல்களைத் தயாரித்தனர். அவை புத்தகம் என்றழைக்கப்பட்டன. அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அந்தணர்களும் மற்றும் வசதி மிகுந்தவர்களுமே கல்வி கற்றனர். கல்வியும் வேதங்கள் ,சாத்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் முதலானவற்றைக் கற்பிப்பதாகவே அமைந்திருந்தது. நாட்டில் வேத பாடசாலைகள் இருந்தன. குருகுலமுறையில் கல்வி கற்பிக்கப்பட்டது” என்ற இளமதி சானகிராமன் கருத்தால் குருகுலக்கல்வியும் வேதசாத்திரங்கள் பயிலப்பட்டதையும் அறியமுடிகிறது. (ப-211)
சித்தர்கள் கல்விமுறையானது மக்களின் அறிவை வளர்க்காமல் அறியாமை நிலைக்கு இட்டுச்செல்வதால் அர்த்தமற்றது, பொய்யானது என்று சாடினர். மேலும் பிராமணர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நியதியைக் கண்டு சீற்றம் கொண்டனர். சித்தர்களின் காலம் 15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இக்காலக்கட்டத்தில் நாயக்கர்கள் முதலான வேற்று மன்னர்களின் ஆட்சியில் தமிழகம் சிக்கியது. இக்காலநிலையில் கல்விநிலை குறித்து
“திருமலைநாயக்கர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகின்றார். இதில் 3000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாகச் செய்து தரப்பட்டுள்ளன. இதில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பிராமணர்களே. அவர்களைத் தவிர வேறு எவருமே இல்லை” என்று இராபர்ட் டி நொபிலி குறிப்பிடுகிறார். (ப.54). இவர் கருத்திலிருந்து பிராமணர்கள் தவிர மற்றவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதை அறியமுடிகிறது.
சித்தர்கள் பிராமணர்கள் தவிர மற்றவர்கள் கல்விபயில மறுக்கப்பட்டதையும் கல்வியாகக் கற்பிக்கப்பட்ட வேதபுராண சாத்திரங்களையும் கடுமையாக விமர்சித்தனர். ஏட்டுக்கல்வியானது பொய்க்கல்வி என்பதை,
என்ற வரியில் ஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கு உதவாது என்பதை உணர்த்துகிறது. இதனை நாம் நடைமுறையில் நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது. இன்றைய இளைஞர்களில் பலர் பார்க்கும் பணிக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியலாம். மேலும்,
என்ற வரிகளில் பகுத்தறிவு கொண்டு எதனையும் ஆராய்ந்து கூறும் மெய்க்கல்வியை கற்றால் மட்டுமே வாழ்வி ஈடேற்றம் கிடைக்கும் என்று இடைக்காடர் அறிவுறுத்துகின்றார்.
“ சதுர்வேதம் அறுவகைச் சாத்திரம் பல தந்திரம் புராணங்களைச் சாற்று மாகமம் விதம்வித மானவான வேறு நூல்களும் வீணாண நூல்களே யென்றாடு பாம்பே” (பாம்.சித்.பா.54)
என்ற பாடலில் பாம்பாட்டிச்சித்தர் நால்வகை வேதங்கள் ஆறுவகைச் சாத்திரங்கள், புராணங்கள், தந்திரம் ஆகமம் ஆகிய அனைத்தும் வீணாண நூல்கள் என்று குறிப்பிடுகின்றார். இவையாவும் பிதற்றல்களே என்று சிவவாக்கியரும் குறிப்பிடுகிறார், இதனை,
“ நட்டதாவரங்களும் நவின்ற சாத்திரங்களும் இட்டமான ஒமகுண்ட மிசைந்த நாலுவேதமும் கட்டி வைத்த புத்தகம் கடும் பிதற்றி தற்கெலாம் பெட்டதாய் முடிந்தே பிராணயான றியயோ” (சிவ.பா.184)
என்ற பாடலின்வழி மெய்ஞானமாம் இறைவனின் அருளை அடைந்தவர்களுக்கு மற்ற அனைத்தும் பிதற்றல்கள் என்று சாடுகின்றார்.
சித்தர்கள் மெய்ஞானமான இறைஞானம் பெற்றால் மற்றவை எல்லாம் தேவையில்லாதது என்கின்றனர். இதனை சுவாமி விவேகானந்தரும்,
“கல்வி என்பது இயற்கையாக மனிதனுள்ளே புதைந்துள்ள தெய்வீகமான பூரணத்தை வெளிக் கொணர்வதாகும்.” (ப-1).
எனவே ,பொய்யான புராண சாத்திரங்கள் தேவையில்லாதது. இயற்கையில் உள்ள தெய்வீகத்தை வெளிக்கொணர்வதே அடிப்படைத்தேவை என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். உலக வாழ்வு பற்றியும் உலகப்பொருள்கள் பற்றியும் மிகுதியாகச் சிந்தித்தவர்கள். இறுதியில் அனைத்துமே மாயை என்ற முடிவிற்கு வந்தவர்கள். நாம் சித்தர்கள் வரிசையில் முதலில் சொல்லக்கூடியவர் திருமூலர்தான். திருமந்திரத்தில் கல்வி, கேள்வி, கல்லாமை என்னும் முத்தலைப்பில் முப்பது பாடல்களில் கல்விகுறித்துக் குறிப்பிடுகிறார்.,
தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் கல்வி, கேள்வி, கல்லாமைக்கும் திருமூலர் சொல்வதற்கும் வேறுபாடுகள் சற்று மிகுதி. அவர்கள் எல்லாம் லோகாயதத்தை (பொருள் முதல்வாதம்) சொன்னார்கள் என்றால், திருமூலர் மெய்ஞ்ஞானத்தைச் (கருத்தியல் வாதம்) சொல்கிறார்.” என்று மு.அண்ணாமலை குறிப்பிடுகிறார். (தமிழ் நாட்டில் கல்வி அன்றும் இன்றும் ப.130)
கல்வியே தக்கதுணை
மனிதனுக்குக் கடைசிவரை தக்க துணையாக இருப்பது கல்வி மட்டுமே, மற்ற பொன், பொருள், உறவுகள் அனைத்தும் துணையாவதில்லை. என்பதை,
என்ற திருமந்திரவரிகள் பட்டறிவு பெற்றவர்கள் பேரின்பம் பெற்றவர்கள் என்கிறது. மேலும்,
“ கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொ ண்ணாது கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடாக் காட்சி கணக்கறிந் துண்மையைக் கண்ட நிற்கும் கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே” (திரு.316)
என்ற பாடலில் அனுபவக்கல்வியாம் மெய்ஞ்ஞானக் கல்வியே இறைவனை அடைய உதவும். மெய்ஞ்ஞானமே உண்மையான கல்வி என்று கூறுகிறார் திருமூலர்.
எனவே சித்தர்கள் கூறும் கல்வி அனுபவக்கல்வி ஆகும். இது உண்மைப் பொருளை உணர்ந்தறியும் மெய்ஞ்ஞானக் கல்வியை குறிக்கிறது. உலகியல் அறிவைத் தரும் பள்ளிக்கல்வியையும் வேத புராண, சாத்திரக் கல்வியையும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
சித்தர்களின் கல்வி குறித்த சாடல்களும் ஏசல்களும் நவீன உலகிற்கும் பொருந்தும். இன்றைய கவிஞர்கள் கல்விமுறை குறித்து,
“ குழந்தைகளே பாடப்புத்தகங்களாக இருக்கிறார்கள் அவர்கள் கையில் ஏன் காகிதக்குப்பைகளைத் தருகிறார்கள்” (பித்தன் ப-80)
என்ற கவிதையில் அப்துல் ரகுமான் புத்தகங்களைக் காகிதக்குப்பைகள் என்று கூறுகின்றார். எதிர்கால வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள ஏட்டுக்கல்வி வழிகாட்டவில்லை என்பதை கூறுவதில் சித்தர்களின் சாடல்முறையை நவீன கவிஞர்களும் பின்பற்றுகின்றனர்.
முடிவுரை
கல்வியில் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் மெய்மையை விளக்கும் கல்வியே மெய்ஞ்ஞானமாகும்.
சித்தர்கள் மெய்ம்மையியல் விஞ்ஞானிகளாகவும் அறிவுத்துறை விஞ்ஞானிகளாகவும் செயல்பட்டிருந்தார்கள் என்பதை அறியமுடிகின்றது.
திருமூலர் அனுபவக்கல்வியாம் மெய்மைக்கல்வியை வலியுறுத்துகிறார். மற்ற சித்தர்கள் வேதபுராணக் கல்வியாம் ஏட்டுக்கல்வியைக் கடுமையாகச் சாடியுள்ளனர். ஏனெனில் புராணக்கல்வி என்பது ஒருசாராருக்கு மட்டுமே உரிய கல்வியாகவும் கற்பனைக்கல்வியாகவும் அமைகிறது.
துணைநின்ற நூல்கள்
சி.எஸ்.முருகேசன், சித்தர் பாடல்கள், (பெரியஞானக்கோவை) சங்கர் பதிப்பகம், சென்னை-49, 2012.
பன்முகத்தன்மை கொண்ட நவீனத்துவத்துடன் விளங்கும் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். பல்வேறுபட்ட குடிமாந்தர்களின் வாழ்க்கை முறைமைகளைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாது பண்பாட்டுக்கூறுகளின் வடிவங்களையும் தன்னகத்தே பொதித்துள்ள கருவூலமாகத் திகழ்கிறது. அத்தகைய காப்பியத்தை எழுதிய இளங்கோ அரச மரபில் வந்தவர் என்பதோடு துறவு மேற்கொண்டவர் என்பதால் குறிப்பிடத்தக்க அம்சத்தை இக்காப்பியம் பெற்றிருக்கிறது. அன்றைய நிலையிலான அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றின் நிலையிலிருந்து உணர்த்தி நீதி, அறம், ஊழ்வினை, துறவு போன்றவற்றை போதிக்கின்ற அதேநேரத்தில் சமூக அநீதி, கொடுமைகளும் நிகழ்ந்தேறியிருப்பது பதிவாகியிருப்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
பொன்தொழிலாளர்கள் படுகொலை
கோவலன் கொலைசெய்யப்பட்ட நாளிலிருந்து பாண்டிய நாட்டில் மழை வளம்குன்றி பூமி வறண்டு பஞ்சம் பசி தலைதூக்கியது. வெக்கை நோய்களும் பரவின. இவற்றைக் கண்ட கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் பாண்டிய மன்னனானதும் நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம் கண்ணகியின் கடுங்கோபம்தான் எனக்கருதி ஆயிரம் பொற்கொல்லர்களை பலியிட்டுப் பூசை செய்தான். அதன்பிறகு நல்லமழை பெய்து நோய்களும் நீங்கின. மக்கள் நலம் பெற்றனர் என்பதை, இளங்கோ,
”அன்று தொட்டு பாண்டிய நாடு மழைவறம் கூர்ந்து வறுமை எய்தி, வெப்பு நோயும்|குருவும் தொடர, கொற்கையில் இருந்த வெற்றி வேற் செழியன், நங்கைக்கு பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று, நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும் நீங்கியது” (உரைபெறு கட்டுரை)
என்று குறிப்பிடுகின்றார். எவ்வித விசாரணையும் இல்லாமல் கோவலன் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து பாண்டிய நாடு வளம் பெறாமைக்குக் காரணம் கண்ணகியின் கடுங்கோபமேயாகும் என்று இதற்குப் பரிகாரமாக பொன்வேலை செய்யும் ஆயிரம் தொழிலாளர்களை (பொற்கொல்லர்களை) பலி என்ற பெயரில் படுகொலை செய்தது இதயத்தை உலுக்குகின்ற கொடுமையாக இருக்கிறது. ஒரு மன்னனுக்கு இருக்கக்கூடாத பெரும் மூடநம்பிக்கையுடன் தான் தோன்றித்தனமாக செயல்படும் ஹிட்லரிசத்தின் முன்மாதிரியாகவும் பார்க்கமுடிகிறது. இத்தகைய கொடுமை இவனோடு முடியாமல் பரவலாக்கல் என்னும் நோக்கத்தில் கொங்குநாட்டின் இளவரசர் இளங்கோசர் என்பானும் இலங்கைத் தீவின் கயவாகு மன்னனும் பலியிட்டு பூசைகள் செய்திருக்கின்றனர் என்பதை உரைபெறு கட்டுரையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. நீதிகேட்டுப் போராடிய கண்ணகி, தெய்வமாகிப் உயிர்பலி கேட்பதாகக் கருதி பலியிட்டிருப்பது வேத ஆகம விதிப்படி பார்ப்பனிய முறையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது திண்ணமாகிறது. மனித பலியிடுதலை ‘நரபலி’ என்பர். இவ்வழக்கமானது தொன்மைக்காலத்திலிருந்தே வருகிறது. பலியிடுதல் பற்றிய சடங்கு முறையை யசூர் வேதத்தில் (பலிச்சடங்கு வேதம்) கூறப்படுகிறது. “யசூர் வேதத்தில் புனித அதிகாரத்தின் (பிராமணர்கள்) ஆயுதம் பலிகள் ஆகும்” என்பதை எடுத்துரைக்கிறார் எஸ்.ஜி.சர்தேசாய் (2012:184). “கடவுளின் அருளைப்பெருவதுதான் சடங்குகளின் நோக்கம்” என்பதை எடுத்துரைக்கிறார் வி.புரோதோவ் (1988:60). பலி அக்னியில் பிறந்தது தெய்வ சோதியில் ஒன்றான அக்னி பலியிடுகிறவனின் பாவத்தை பட்சித்துப் போகும் அக்னியின் புண்ணியத்தால் பரலோகத்தில் சுடராவான்” என்று சதபத பிராமணம் குறிப்பிடுவதாக எடுத்துரைக்கிறார் தே.ஞானசேகரன்(2000:93). ஆகவே பலியிடுதல் தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாகக் கருதமுடியாது.
மாதவிக்குக் கோவலன் இழைத்த கொடுமை
மாதவி, முறைப்படியான ஆடல்கலையை நிகழ்த்தியமைக்குச் சோழ மன்னன் பச்சை மாலையையும் தலைக்கோல் பட்டமும் அதனோடு ஆயிரத்தெட்டு பொன் கழஞ்சுமாலையும் பரிசாகத் தந்தான். அம்மாலையை விலைகொடுத்து வாங்குபவர் மாதவிக்கு ஏற்ற கணவனாகலாம் என நகரின் இளைஞர்கள் கூடுமிடத்தில் ஒரு கூனிப்பெண் கூறியதைக்கேட்ட கோவலன் அதற்குண்டான விலையைக் கொடுத்து கூனியின் பின்னால் மாதவியுடன் சென்றுவிட்டான் என்பதை,
என்று இளங்கோ குறிப்பிடுகிறார். ஆயிரத்தெட்டு பொன்கழஞ்சு மாலையை விலை கொடுத்து வாங்கும் பணபலமும் மனவலிமையும் பெற்றிருந்த கோவலன், அன்பு மிக்க குற்றமற்ற கண்ணகியை மணந்து சிலகாலம் மட்டுமே ஆகியிருந்தது. சந்தையில் ஒருபொருளை ஏலம் எடுப்பதுபோல் ஏதுமறியாத ஆடல் நங்கையாகிய மாதவியை போகப்பொருளாக எண்ணித் தேவைக்கேற்பப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்துவிடலாம் என்ற யதேச்சதிகார எண்ணத்திலேயே கோவலன் மாதவியை விலை கொடுத்து வாங்கியிருக்கலாமென்று கருதமுடிகிறது. மேலும், மாதவி கணிகையர் குலம் என்பதை அறிந்து கோவலன் விலைமாதர் நோக்கில் இதை செய்திருக்கக்கூடும் என்பது புலனாகிறது.
மாதவி ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்தப் பிறகு தாயையும் பிள்ளையையும் பரிதவிக்க விட்டுவிட்டு கண்ணகியிடம், “வஞ்சகமும் பொய்யும் நிறைந்த ஒருத்தியோடு உறவாடி நற்குடியில் பிறந்த பெரியோர்கள் உருவாக்கி வைத்த செல்வத்தைத் தொலைத்து விட்டு நிற்கிறேன்” என்பதை
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி குலம் தருவான் பொருள் குன்றம் தொலைந்த இலம்பாடு நாணுத் தரும் எனக்கு என்ன…(கனாத்திறம் உரைத்த காதை- 69-71)
என்று கோவலன் கூறுகிறான். இது தன் தவற்றை, தனது ஒழுக்கமின்மையை, தன்னால் உண்டான குடும்பச்சிதைவை, மாதவியை விலைகொடுத்தேனும் வாங்கி நுகர்ந்து மீண்டும் கண்ணகியிடம் வந்துவிடலாம் என்ற இழிவான போக்கை மறைப்பதற்கான முயற்சியில் கண்ணகியைச் சாந்தப்படுத்திட ‘வஞ்சகமும் பொய்யும் நிறைந்த ஒருத்தியோடு’ என்று மாதவியைப் பழித்துரைக்கும் அவனின் கூற்று மாதவிக்கு இழைத்த அநீதியைக்காட்டுகிறது.
பிறன்மனை நோக்குகின்றவனைக் கொல்லும் சதுக்கப்பூதம் தன்மனைக்கு துரோகம் இழைக்கும் நயவஞ்சகரைத் தண்டிக்காமல் விட்டிருப்பது அரசர், அந்தணர், அடுத்து வணிகரையும் பூதம் தண்டிக்காமல் இருந்திருப்பதை இது காட்டுகிறது. மாதவியை தவறானவள் என்று கூறிய கோவலனின் நாக்கு மாதவியின் கடிதத்தைக் கோசிகமாணியிடம் வாங்கிப் படித்த பின்பு,
தன்தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி என்தீது என்றே எய்தியது உணர்ந்து ஆங்கு (புறஞ்சேரியிருத்த காதை 94-95)
என்ற பாடல் வரிகள் மூலம் ‘மாதவி குற்றமற்றவள் எல்லாம் என் தவறே’ என்று கோவலன் மனம் பிறழ்ந்து பேசியது மாதவிக்கு இழைத்த கொடுமை மட்டுமல்லாமல் இழந்த செல்வத்தைக் கண்ணகியின் வாயிலாகப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் தன்வழிக்கு நடத்த முற்பட்டிருக்கிறான் என்பது தெளிவாகிறது.
ஊழ் எனும் பெயரில் கொடுமை
கண்ணகியின் கதை முழுதும் சாத்தனார் கூறக் கேட்ட இளங்கோவடிகள், ஊழ்வினையை முன்வைத்தே எழுதப்படுவதை,
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதுஉம் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் (பதிகம் 55-60)
எனக் குறிப்பிடுகிறார். சாத்தனார் கூறிய கதையை வைத்துக்கொண்டு மனித எதார்த்த அல்லது திட்டமிட்டு நடத்திய தவறுகளுக்கெல்லாம் ஊழ்தான் என்பதை அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறார். புகார் நகரத்தின் வணிகனான கோவலன் கண்ணகியைப் பிரிந்து நாட்டிய நங்கை மாதவியுடன் சில காலம் வாழ்ந்து துன்பப்பட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்று கொலையுண்டதும் அதனால் கண்ணகி மதுரையை அழித்தது மட்டுமல்லாமல் பாண்டிய மன்னனும் கோப்பெருந்தேவியும் உயிர்நீத்தனர். இவை அனைத்திற்கும் அவரவர் செய்த ‘ஊழ்வினையைக்’ காரணம் காட்டுகிறார்.
கனாத்திறம் உரைத்த காதையில், தேவந்தி தன் கணவன் பாசண்டச்சாத்தனால் கைவிடப்பட்ட நிலையில் கணவனிடம் மீண்டும் சேர்வதற்குக் கோயில் கோயிலாக வேண்டி அலைகிறாள். அந்த வேளையில் கண்ணகியைச் சந்தித்து “நீ உன் கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டவள் அல்ல, பின் ஏன் பிரிய நேரிட்டது என்றால், முற்பிறப்பில் உன் கணவனுக்காக செய்ய வேண்டிய நோன்பினை செய்யத் தவறிவிட்டாய். அது நீங்கிடவேண்டுமானால் பூம்புகார் நகரிலே இருக்கும் சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு பொய்கையில் மூழ்கிப் பின்பு மன்மதக்கடவுளை வணங்கினால் இம்மையிலும் மறுமையிலும் உன் கணவனைப் பிரியாமல் வாழலாம்” என்று கூறினாள் என்பதைக் கூறுகிறார். முற்பிறப்பில் கண்ணகி நோன்பு மேற்கொள்ளவில்லை என்பதால் இப்பிறவியில் கணவனைப் பிரிய நேர்ந்தது என்னும் கருத்தானது நோன்பு என்னும் பெயரில் குடும்பம், வீடு என்ற நிலையில் பெண்களை மரபு மீறாமல் புற உலகைப்பற்றி அறியச்செய்யாமல் அடக்குமுறை ஏவப்பட்டிருக்கிறது என்பது புலனாகிறது.
மதிமயக்கத்தில் கோப்பெருந்தேவியின் பின்னால் ஓடிய மன்னன் பொற்கொல்லனின் பொய்க்குற்றத்தை ஆராயாமல் போகிற போக்கில் ‘கொன்று வருக’ என்று கூறியது முன்செய்த தீவினை பயன்முற்றி மூளப்போகிற நேரம் வந்தது என்பதை,
வினைவிளை காலம் ஆதலின் யாவதும் சினை அலர் வேம்பன் தேரான் ஆகி ஊர் காப்பாளரைக் கூவி ஈங்குஎன தாழ் பூங்கோதை தன்கால் சிலம்பு கன்றிய கள்வன் கையது ஆகின் கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்குஎன (கொலைக்களக் காதை 148-151)
இளங்கோ கூறுகிறார்.
கோவலன் வெட்டுண்டு கிடக்கும் பொழுது அநாதையாகிய கண்ணகி அழுது புரண்டு இத்தகைய பெரும் துன்பத்தை உண்டாக்கிய அரசன் இவ்வாறு செய்திட காரணம் தெரியாமல் தவிக்கும் எனக்கு நான் செய்த தீவினைதான் என்ன? என்பதை யாராவது சொல்ல மாட்டார்களா? என்று அழுது புலம்புவதை,
கட்டுரைக்காதையில் (155-170) கண்ணகி முன்பாக தோன்றிய மதுராபதித் தெய்வம் பாண்டியனும் கோவலனும் தவறு செய்யாதவர்கள். ஆனாலும், முன்செய்த தீவினை காரணமாக பழி ஒன்று உண்டு கேள் என்று கூறலானது. “சங்கமன் என்னும் வணிகன் சிங்கபுரத்துக் கடை வீதியில் தான் கொண்டு வந்திருந்த அணிமணிகளை விற்றுக்கொண்டிருந்த போது அப்பிறப்பில் பரதன் என்னும் பெயருடன் இருந்த உன் கணவன் கோவலன் அவனை அரசனிடம் கொண்டு சென்று இவன் பகை நாட்டு ஒற்றன் எனக் கூறி கொலை செய்தான். கணவனை கொன்ற செய்தியைக் கேள்வியுற்ற நீலி பதறித்துடித்து வீதியில் அழுதுபுரண்டு இது அரச நீதியோ எனக்கேட்டு வேதனையுடன் ஒரு மலை மீது ஏறி நின்று உயிர் துறக்கும்முன் எனக்கு இத்தகைய நிலைமையைச் செய்தவர்கள் யாரானாலும் நான் அடைந்த இத்துன்பத்தை அடைந்து மடிவார்கள்” எனக்கூறி உயிரை மாய்த்துக்கொண்டாள். இதுவரைப் பட்ட துன்பத்திற்கெல்லாம் காரணம் இதுவே. நான் சொல்ல வந்த உண்மைப்பொருளும் இதுவே என்று கூறியதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு நடப்பதற்கெல்லாம் காரணம் கோவலன் மற்றும் பாண்டியமன்னன் செய்த தீவினைதான் எனக்கூறும் இளங்கோ, பாண்டிமா தேவியின் இறப்பு, கோவலனின் தந்தை, கண்ணகியின் தந்தை ஆகிய இருவரும் துறவு கொண்டது, கோவலன் தாயும் கண்ணகியின் தாயும் இறந்து போனது, மாதரி தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டது, வழித்துணையாக வந்த கவுந்தியடிகள் நோன்பிருந்து இறந்தது, மாதவியும் மணிமேகலையும் துறவு கொண்டது, கோயிலில் ஆயிரம் பொற்கொல்லத் தொழிலாளிகள் பலியானது இவைகளுக்கெல்லாம் என்ன முன்வினை காரணமாக இருக்கிறது என்று கூறவில்லை என்பது நோக்கத்தக்கது.
திருட்டு வழக்கில் மன்னன் இழைத்த அநீதி
நாடக நங்கையர் ஆடிய ஆட்டத்திலும் பாடிய பாட்டினிலும் தன்னை மறந்து லயித்திருந்த பாண்டிய மன்னனைக் கண்ட கோப்பெருந்தேவி காணப்பொறுக்காதவளாகி மன்னனுடன் ஊடல் கொண்டு அதை வெளிக்காட்டாமல் தனக்குத் தலைவலி வந்ததென்று பொய் சொல்லி அரங்கை விட்டு வெளியேறி அந்தப்புரம் நோக்கி சென்றாள். இதையறிந்த மன்னனும் சமாதானம் செய்ய அந்தப்புரம் நோக்கி விரைந்தான். அந்த நேரத்தில் மன்னரின் காலைப்பிடித்து வணங்கி அரசியின் காற்சிலம்பைத் திருடிய கள்வன் என்னுடைய வீட்டருகில் இருக்கிறான் என்று பொற்கொல்லன் கூறியதைக்கேட்ட மன்னன்,
‘கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவா’ என்று உத்தரவிட்டான். ஆனால், இவ்வாறு கூறும் பொற்கொல்லனின் பேச்சைக்கேட்ட மன்னன் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆராயாமலும் குற்றவாளியிடம் விசாரணை நடத்தாமலும் கொலை செய்ய ஆணையிட்டது அரசனென்ற முறையில் நீதி தவறியிருப்பதைக் காட்டுகிறது. திருவள்ளுவர் செங்கோன்மை அதிகாரத்தில்,
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்.541)
என்றவழி, தன் குடிமக்கள் ஏதேனும் குற்றம் இழைத்தால் குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து ஒரு பக்கம் சாராது நடுவுநிலைமையுடன் உரிய தண்டனை வழங்குவதே முறையாகும் என்று கூறுகிறார்.
கட்டுரைக்காதையில் கணவனை இழந்த நிலையில் கோபமும் ஆவேசமும் கொண்டிருந்த கண்ணகியின் முன்பாக மதுராபதித் தெய்வம் தோன்றி பாண்டிய மன்னன் குற்றமற்றவன் என்பதற்குச் சான்றாக ஒரு கதை கூறியது. “வார்த்திகன் மகன் தட்சிணாமூர்த்தி என்னும் அந்தணச்சிறுவன் பராசரனிடம் அணிமணிகளைப் பரிசாகப் பெற்று வருகிறான். அணிமணிகளோடு அவன் இருப்பதைக் கண்ட காவலர்கள், பாண்டிய மன்னனின் ஆபரணங்களை வார்த்திகன் திருடிவிட்டதாகக்கூறி அவனைக் கொடுஞ்சிறையில் அடைத்தனர். இதைக்கேள்வியுற்ற அவனது மனைவி கார்த்திகை அழுதுபுரண்டு வீதியில் புலம்பி அழுதாள். இந்தக்கொடுமையை தாங்காமல் துர்க்கை, ஐயைக்கோயில்களின் கதவுகள் தாமாக மூடிக்கொண்டன. இதைக்கேள்வியுற்ற பாண்டிய மன்னன் தீர விசாரித்ததில் வார்த்திகன் மீது தவறு இல்லாததை உணர்ந்து,
நீர்த்தன்று இது என நெடுமொழி கூறி அறியா மாக்களின் முறை நிலைத் திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நும்கடன் என (115-117)
என்று கூறினான். ஆராயும் அறிவற்ற காவல் மக்களால் என்னுடைய அரச நீதி கெட்டுவிட்டது. என் தவறு பொறுத்தருள வேண்டும் தாயே! என்று கூறி நீர்வளம் மிக்க திருத்தங்கால் என்னும் ஊரையும் செல்வம் கொழிக்கும் வயலூரையும் பரிசாகத் தந்ததோடு வேந்தனானவன் நிலத்தில் விழுந்து வணங்குதல் என்ற மரபு இல்லை என்றாலும் வார்த்திகன் முன்பாக வீழ்ந்து வணங்கினான் என்ற கதையை கண்ணகியிடம் சொன்னது. ஆனாலும், திருட்டு வழக்கில் கோவலனுக்கு அநீதியும் வார்த்திகனுக்கு சன்மானமும் கொடுக்கப்பட்டிருப்பது அரச அநீதியாகும். கோவலன் வணிகன் என்பதாலும் வார்த்திகன் அந்தணன் என்பதாலும் அரச நீதி மாறுபடுவதைச் சிலம்பில் காணமுடிகிறது.
பூதங்கள் இழைத்த அநீதி
இந்திரவிழவூரெடுத்த காதையில் பூம்புகார் நகரின் சிறப்பைப்பற்றிக் குறிப்பிடுகையில் பொதுமக்கள் தவறு செய்கின்றபோது குறிப்பாகத் தவநெறியிலிருந்து தவறு செய்கின்றவர்களையும் மறைவாகத் தவறுசெய்கின்ற இழிந்த குணமுடைய பெண்களும் மன்னருக்கு துரோகம் இழைக்கும் அமைச்சர்களும் பொய்சாட்சி சொல்பவர்களும் புறங்கூறுபவர்களும், பிறன்மனை நோக்குபவர்களும் என் பாசக்கயிறுக்கு பலியாவார்கள் என்று நான்கு காத தூரம் கேட்கும்படி கொடிய குரலெழுப்பி கூவும். தவறு செய்பவர்களை அடித்துக்கொன்று தின்னும் சதுக்கப்பூதம் பூம்புகார் நகரில் இருந்தது. ஆனால், அரசன் செங்கோல் தவறினாலும் வழக்குரை மன்றத்தில் தீர்ப்புரைக்கும் நீதிபதி நடுவுநிலை மாறி ஒருபக்கமாக தீர்ப்புக்கூறினாலும் ஆங்கே தவறு நடந்ததை வாய்பேசாமல் அழுது வடிக்கும், கண்ணீர்க்குறிப்பால் உணர்த்தும் பாவைபூதம் மன்றமும் இருந்தது. பொதுமக்கள் தவறு இழைத்தால் சதுக்கப்பூதம் கொன்று தின்னும். ஆனால், மன்னனோ நீதிபதிகளோ தவறு செய்தால் பாவை பூதம் எதிர்த்துப்பேசாமல் தண்டிக்காமல் அழுதுபுலம்புவது என்பது பொதுமக்களுக்கு ஒரு நீதியும், அரசர், அந்தணர் போன்றோருக்கு மற்றொரு நீதியும் பூதங்களின் வடிவில் வழங்கப்பட்டிருப்பது சிலம்பில் பதிவாகியிருக்கிறது.
முடிவு
* பொய் சொன்ன குற்றத்திற்கு பொற்கொல்லர்களுக்கு மரண தண்டனை ஆனால் கொலை நிகழ்த்திய காவலர்கள் தண்டிக்கப்படவில்லை ஏனெனில் அதிகார வர்க்கத்தின் சமூக விரோதப்போக்கை நிறைவேற்றித் தருவதால் காலங்காலமாக இன்றளவும் காக்கப்பட்டு வருகிறார்கள்.
* பூதமாகினும் சட்டமாகினும் அரசனையும் அந்தணனையும் தண்டிக்க வலிமை கிடையாது. இவர்களுக்கு உட்பட்டே இயங்கும் என்பது புலனாகிறது. இன்றளவும் இம்முறை நீடிக்கிறது.
* மாதவியைப் போகப்பொருளாகவும் கண்ணகியை வணிக நோக்குடனும் நடத்திய கோவலன் இருவருக்கும் அநீதி இழைத்திருப்பது நடைமுறை மனித வாழ்வுக்கு உகந்ததில்லை.
* மனிதனின் தவற்றுக்கெல்லாம் முற்பிறவி, தீவினை, ஊழ்வினை என்று காரணம் கற்பிப்பது, குறிப்பாக அரசர், அந்தணர், வணிகர் தவற்றை மறைப்பதற்கான ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.
* அரசருக்கும் வணிகருக்கும் நடக்கும் வர்க்க முரண்பாடாகச் சங்கமன் கொலையும், கோவலன் கொலையும் அமைந்திருக்கிறது.
* கோவலன் ஆடல் கலையிலும் ஆடலழகியிடமும் லயித்துப்போனதால் பொருளோடு வாழ்வையும் உயிரையும் இழந்தான். கண்ணகியைப் பரிதவிக்கவும் விட்டான். பாண்டிய மன்னனும் ஆடல் கலையிலும் ஆடலழகியிடமும் லயித்து போனதால்தான் பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் இழக்க நேரிட்டது. இது மன்னர்களுக்கும் வணிகர்களுக்கும் பொறுப்பில் இருக்கும் எவரும் நெறிதவறி நடந்தால் நாட்டில் குற்றங்கள் மட்டுமே நடக்கும். இவர்களுக்கு ஏற்படும் இச்சையை அதிகாரத் தவறென்று சொல்லலாமேயொழிய ஊழ் என்று கருதமுடியாது.
மனிதன் சமுதாயம் என்ற அமைப்பில் இருந்து தனித்து வாழ்பவன் அல்லன். ஏனெனில் மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள், உணர்வுகள் அனைத்தும் சமுதாயத்தின் வழியேதான் நிறைவு பெறுகின்றன. பரவிக்கிடக்கும் தேவைகளைப் பெறத் தனி மனிதன் இன்னொரு மனிதனை நாடுகின்றான். தன்னுடைய உணர்வுகளைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொள்ளாமல், மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள எண்ணுவது மனித இயல்பு. இவ்வாறு தேவைகளும், எண்ணங்களும், தொடர்புகளும் பரிமாறப்படுவதால் சமுதாய அமைப்பு விரிவடைகிறது. கவிஞர்கள் சமுதாயத்தில் ஓர் அங்கமாகத் திகழக் கூடியவர்கள். படைப்பாளர்கள் வரிசையில் கவிஞர்களுக்கான இடம் முதன்மையானதாகும். சமுதாயத்தின் குரலைப் படியெடுத்து வெளியிடும் திறனில் கவிதைகள் தனியிடம் பெறத்தக்கன. அவ்வகையில் உவமைக் கவிஞர் சுரதாவின் கவிதைகள் வழிக் குமுகாயச் சிந்தனைகளை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குமுகாயம்
குமுகாயத்தில் வாழும் குடிமக்கள் ஒவ்வொருவரும் கொள்ளவேண்டிய குமுகாயச் சிந்தனை தம் குமுகாயம் அறிவார்ந்த – நேர்மையான – நல்ல வழியில் சென்று முன்னேறிச் சிறப்பதற்கான வழிவகைகளைச் சிந்தித்து செயல்படுத்த முனைதலே குமுகாயச் சிந்தனையாகும்.
எவர் ஒருவர் தம் அண்டை மக்களின் துன்பங்களைத் தம் துன்பமாக எண்ணித் துடித்து, அவற்றைப் போக்க முற்படுகிறாரோ அவரே குமுகாயச் சிந்தனையுள்ள மாந்தர் ஆவார். “குமுகாயவியலாரின் கோட்பாட்டின்படித் தனி மாந்தனின் செயல்பாடுகளிலிருந்து தான் குமுகம் உருவாகிறது என்பதை உணரமுடிகிறது. எனவே, நல்ல குமுகம் மலரவேண்டுமெனில் தனி மாந்தன் உயரவேண்டும். தனி மாந்தனின் நல்ல செயல்பாடுகளே குமுகத்தை உருவாக்குவன”1 “மனிதர்கள் பலர் சேர்ந்து வாழ்வது குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்தது சமூகம். சமூகத்தின் சட்ட திட்டங்கள், பழக்க வழக்கங்கள், செயல் முறைகள், ஒருவருக்கொருவர் உதவுதல், ஒழுங்கு முறைகள் ஆகியவற்றை நிர்ணயிப்பதே சமுதாயம் ஆகும்.”2 என்னும் கருத்தும் நோக்கத்தக்கதாகும். இவற்றின் மூலம் ஒரு குறிப்பிட்ட தனி இயல்பு கொண்ட மக்கள் கூட்டத்தைச் சமூகம் என்றும், சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்ட பொது ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டு வாழும் சமூகக் குழுக்களைச் குமுகாயம் என்றும் பிரித்து அறியமுடிகிறது.
சாதிப்பாகுபாடு
சமுதாயம் என்பது உணவு, உடை, மொழி, பண்பாடு முதலியவற்றின் அடிப்படையில் அமைவதாகும். இவற்றால் ஒன்றிணைந்திருந்த தமிழ்ச் சமுதாயம் சாதியாலும் சமயத்தாலும் பல பிரிவாகிப் போராடுவதைக் காணமுடிகிறது. இந்தியச் சமுதாயத்தையும் பெரிதாகப் பீடித்திருக்கும் நோய்களுள் ஒன்று சாதிப்பாகுபாடு. “இந்தியாவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் காணப்படுகின்றன. இச்சாதிகள் ஒவ்வொன்றும் மற்ற சாதிகளில் இருந்து தாங்கள் மேம்பாடுடையவையென நிலை நாட்ட விழைகின்றன”3 இக்கூற்றின் மூலம், இந்தியாவில் உள்ள சாதிப்பிரிவுகளையும், சாதியின் இயல்பையும் அறிந்து கொள்ளமுடிகிறது.
தொடக்க காலத்தில் சமுதாயத்தில், பிறப்பால் வேற்றுமை பாராட்டும் சாதிமுறை இல்லை. பிற்காலத்தில் ஏற்பட்ட சமயப் பிரிவுகளே இச்சாதி முறையைப் புகுத்தியுள்ளன. இதனை, “ஆரியர் வருகைக்கு முன்பு தமிழ்நாட்டில் சாதிமுறை என்பதே இல்லை”4 என்னும் கூற்றும், “மதமே வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஆரியர் வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் சாதி தோன்றியது”5 என்னும் கூற்றும் உறுதி செய்கின்றன. “ஆரியர் வருகையால் வருணம், ஏற்றத்தாழ்வுகள் முதலியன வந்து புகுந்து தமிழ்ச் சமுதாயத்தைச் சிதறடித்தன.”6 ஒன்றாக இணைந்திருக்க வேண்டிய சமுதாயம் பிரிந்து பாழ்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இதனை, உவமைக் கவிஞர் சுரதா கடுமையாகச் சாடுவதுடன், சாதி அமைப்பால் சிலர் உயர்ந்தோர் எனக் கூறிக் கொள்வதையும் கண்டிக்கின்றார்.
“செரிக்காத சோறாகும் மனித னுக்கே
தேவையற்ற சாதிமதம்…………….”7
இதில், சாதி வேறுபாடுகளைப் புகுத்த சமயமும் துணைநிற்கிறது என்பதால் அதனையும் சேர்த்தே கண்டித்துள்ளார். பண்டைக் காலத்தில் வேதங்களைப் பின்பற்றி நடந்த பிராமணர்களை ’வேதியர்’ என்று அழைப்பது மரபாக இருந்துள்ளது. ஆனால், இன்று எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் வேதங்களையும் இந்துசமய சாத்திரங்களையும் தழுவி நடப்போரை வேதியர் என அழைக்கலாம். இதனை,
“ஜாதி மதங்களைப் பாரோம்………………
வேதியர் ஆயினும் ஒன்றே, அன்றி
வேறு குலத்தவர் ஆயினும் ஒன்றே”8
என்று பாரதியார் பாடியுள்ளார். சமுதாயச் சீர்திருத்த எண்ணம் கொண்ட பாரதி, இந்தியாவில் காணப்பட்ட ஒற்றுமை இன்மைக்குக் காரணம் சாதி, சமய வேறுபாடுகள் என்று உணர்ந்து, அந்தணர், அந்தணர் அல்லாதவர் ஆகிய எல்லாரும் ஒன்றே என்னும் கருத்தில் சாதி, சமயம்அற்ற சமுதாயம் அமையக் குரல் கொடுத்துள்ளார். பாரதியின் தாசனுக்குத் தாசனான சுரதா,
“சாதியென்பார், மதமென்பார், சங்க டத்தைச்
சடங்கென்பார், சாத்திரகோத் திரங்க ளென்பார்
நீதியென்பார், மனுநீதி சிறந்த தென்பார்
நிலையற்ற உடலென்பார் நெய்பால் உண்பார்
வேதியர்யாம் வீதியர்நீர் என்பார் எல்லாம்
விதியென்பார் வினையென்பார் வேத மென்பார்
ஓதுகலை ஒருசிலர்க்கே உரிய தென்பார்
ஊழ்வினையே வையத்தின் வரலா றென்பார்”9
என்று பாடியுள்ளார். இதில், சாதி, மதம், சடங்கு முறை, சாத்திரம், மனுநீதி, விதி, வேதம், ஊழ்வினை ஆகியவை நையாண்டிக்கு உரியவை என எடுத்துரைத்துள்ளார்.
இந்து சமயத்தில் பிறவியிலேயே, சாதியும் உடன் பிறக்கிறது. நிறத்தால் அழகாக இருப்பதாலேயே ஒருவரை உயர்ந்தோர் எனக் கூறிவிட முடியாது. ஒரு மனிதனை உயர்ந்தோன் ஆக்கிக் காட்டுவது அவனுடைய பண்பாடே ஆகும். இதனை,
பண்டைக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் சாதிப் பிரிவுகள் இருந்ததில்லை. பிற்காலத்தில் புகுத்தப்பட்டவையே இப்பிரிவுகள். ஆனால், தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் தமிழர்கள் இதனை உணரவில்லை. எடுத்துச் சொன்னாலும் அவர்களுக்குப் புரியவில்லை. எனவே, இக்கருத்தினைத் தமிழர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதை,
“………………………….. கலப்பை மூலம்
நிலத்தில்நாம் உண்டாகும் கலப்பை மாந்தர்
நெஞ்சத்தில் உண்டாக்கி விடுவோ மாயின்
கலப்புமணம் உருவாக வழியுண் டாகும்
கலப்புமணத் தால்சாதி செத்தே போகும்”11
என்னும் கவிதை வழி வெளிப்படுத்தியுள்ளார். இதில், கலப்பு மணம் செய்தால் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்கிறார்.
உடன்கட்டை ஏற்றுதல்
பெண்களுக்கு ஏதிரான ஆண்களின் வன்முறைகளில் ஒன்றுதான் உடன்கட்டை ஏற்றுதல். கணவன் இறந்தஉடன் உடன்கட்டை ஏறும் பெண்கள் குறித்து இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. தொல்காப்பியம்,
என்று சுட்டியுள்ளது. அஃதாவது கணவனின் இறந்த உடலுடன் கூடவே எரிமூழ்கிய அவள் சமுதாயத்தில் முழுமையான நல்லபெண் ஆகிவிடுகிறாள். இதில், ‘நல்லோள்’ என்னும் சொல் கணவனுடன் எரிபுகும் பெண்ணைக் குறிக்கக் கையாளப்படிருக்கிறது.
“தம்முடன் இறக்கும் மனைவி, வேலைக்காரர், குதிரை போன்றவை தம்முடன் மறுஉலகுக்குச் செல்கின்றன என நம்பப்பட்டு வந்தது. ஆகவே பிரதானி ஒருவன் இறந்தபோது அவன் மனைவி வேளையாள் முதலியோரும் உடன் வைத்துக் கொளுத்தப்பட்டார்கள் அல்லது புதைக்கப்பட்டார்கள்”13 மனைவியை உடன்கட்டை ஏற்றுவதற்கு வேறு காரணமும் இருந்தது எனலாம். கணவன் இறந்தபின் அவன் மனைவி பிற ஆடவனைக் கணவனாகக் கொண்டு வாழ்வாள் என்னும் பொறாமைக் குணம் அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்திருக்கலாம். கணவன் இறந்தபின் குழந்தை இல்லாத மனைவிக்குச் சொத்துரிமைச் சென்று விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். இதனால் பெண்களை உடன்கட்டை ஏற்றியிருக்கலாம்.
நாட்டில் ஆணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியும் வரையறுக்கப்பட்டுள்ளன. மனைவி இறந்தால், கணவன் கிழவனாக இருந்தாலும் மறுமணம் செய்து கொள்ளலாம். அவன், கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளை மணந்து கொள்ளலாம். ஆனால், கணவனை இழந்த பெண், இளமையுடன் இருந்தாலும் அவள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது. கணவன் இறந்தஉடன் அவனுடன் உடன்கட்டை ஏறிவிட வேண்டும்.
“புடம்போட்ட பசும்பொன்னைப் போன்ற பெண்கள்
பூவோடும் பொட்டோடும் மஞ்ச ளோடும்
உடன்கட்டை ஏறிவரும் வழக்க மிங்கே
உண்டென்ப தறிவீர்நீர் ஆய்ந்து பார்த்தால்
முடம்பட்ட நெஞ்சத்தார் புகுத்தி விட்ட
முழுமூடத் தனமென்ற முடிவே தோன்றும்”15
என்னும் கவிதைகள் வழியாகச் சமுதாயத்திற்குச் சாட்டையடி கொடுத்துள்ளார். இவ்வாறு பெண் குலத்தைத் தீயிட்டுக் கொளுத்திய கொடுமைக்குக் காரணம் மக்களின் மூடத்தனமே எனக் கூறியுள்ளார். இம்மூடத்தனத்திற்குப் பலியான சிலரையும் எடுத்துக்காட்டுகின்றார். இதனை,
“சித்திரப்பெண் பத்தினியும் காஷ்மீ ரத்தில்
சிற்சிலரும் செஞ்சியிலோர் பதுமைப் பெண்ணும்
கத்துகடல் முத்தரசன் ராச ராசன்
காலத்து மங்கையரும் தீயில் தூங்கிச்
செத்ததைநாம் வரலாற்றில் அறிவோம் அன்னார்
தேன்வாழ்வை ஏன்கெடுத்துக் கொண்டா ரென்றால்
பத்தினிமார் உடன்கட்டை ஏறிச் செத்தால்
பரலோகம் கிட்டிடுமாம் எனவே செத்தார்”16 என்னும் கவிதை வழி அறியலாம். முடிவாகக் கவிஞர்,
“சித்திரத்தேர் தீப்பற்றி எரிதல் போன்ற
தீச்செயலைத் தடுப்பீரென் றெண்ணு கின்றேன்”17 என்று எடுத்துரைக்கின்றார்.
குடும்பமும் கல்வியும்
குடும்பம் என்னும் நிறுவனத்தின் நங்கூரமாகப் பெண்ணே கருதப்படுகிறாள். குடும்பத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பு பெண்ணுக்கு மட்டுமே உரியதாகிவிட்டது. பெண், தன்னுடைய குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளமிடுபவள் ஆகிறாள். குழந்தையின் மழலை மொழியினைத் திருவள்ளுவர்,
“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்”18
என்று எடுத்துரைப்பார். மனைவி இல்லாதவன் வாழ்க்கை கரும்பின் பூவைப் போன்றது. புத்தகம், முத்தமிடும் மனைவி, மழலைமொழி பேசும் மக்கள் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் சிறப்பினைத் தருவதாகும். புத்தகம் வாசிப்பதால் மனிதன் முழுமையான அறிவு பெறுகிறான். இதனை,
“புத்தகங்கள் முத்தமிடும் மனைவி சொற்கள்
புரியாத மழலைமொழி பேசும் மக்கள்
இத்தரைமீ தினில் ஒவ்வோர் மனிதனுக்கும்
இருப்பதுவே சிறப்பாகும் இருக்கு மாயின்
புத்தகத்தால் பேரறிவும் குழந்தைப் பேச்சால்
பூரிப்பும் மனைவி யினால் சுகமும் சேரும்
எத்தனைபேர் இருந்தென்ன? மனைவி யில்லான்
இல்வாழ்க்கைக் கரும்புக்கு வெறும்பூ வன்றோ?”19
என்னும் கவிதை வரிகள் மெய்ப்பித்துக்காட்டுகின்றன. மனிதனின் நுகர்வுக்கு வேண்டியனவற்றையும் அவற்றை எந்தந்தத் தருணத்தில் பெற வேண்டும் என்பதையும் அறுதியிட்டுக் கூறுகிறார். இதனை,
“திருமண வாழ்க்கையே சிறந்த பதிப்புரை
ஓரெட்டில் உணவும், ஈரெட்டில் கல்வியும்
மூவெட்டில் புதல்வனும் நாலெட்டில் பொருளும்
ஐயெட்டில் ஞானமும் அடைவதே சிறப்பாம்”20 என்னும் கவிதைக் காட்சிப்படுத்தியுள்ளது.
பெண்மை
பெண் உரிமையோடும் பெருமையோடும் கடமை உணர்வோடும் கண்ணியத்தோடும் இருக்க வேண்டும் எனக் கருதிக் கவிதைப் புனைந்தவர் சுரதா. காதலை மிகுதியாகப் பாடிப் பெண்ணின் அழகை நுட்பமாகப் பல்வேறு சொற்களால் புனைந்திருந்தாலும் பெண்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர். என் கடமை, என்னும் கவிதையில் ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை,
“ஒளிவீசும் காலையில்நான் எழுந்திருந்து
நுரைசெய்யும் ஆற்றில்நீ ராடச் செல்வேன்
நுணுக்கமுள்ள ஆசாரக் கோவை கூறும்
வரிவெண்பா நீதியைப்பின் பற்றி வாழ்ந்து
வருவதனால் நீரில்நான் உமிழ மாட்டேன்
………………………………………………………………………..
ஊரறிந்த பேரறிஞர் மேடைப் பேச்சை
ஒருநாளும் நான்கேட்கத் தவற மாட்டேன்
பாரறிந்த பைந்தமிழை அழிக்க வேண்டிப்
படைவந்தே எதிர்த்தாலும் அஞ்ச மாட்டேன்”21
என்று விரிவாகப்பாடியுள்ளார்.
மனைவிக்குக் கணவன்மேல் உண்மையான காதல் இருக்க வேண்டுமென்றால், அவளுடைய மனத்திற்குப் பிடித்தவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் இருத்தல் வேண்டும். எப்படிப்பட்டவனைக் கணவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் அவளே தீர்மானிக்க வேண்டும். யாரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை விட யாரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தமிழ்ப் பெண் ஒருத்தி கூறுவதாக,
என்று சுரதா கூறியுள்ளார். இந்தக் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் சிந்திக்கத்தக்கனவாக அமைந்துள்ளன.
ஒழுக்கம்
ஒழுக்கம் என்பது மக்களின் வாழ்வியலை முறைப்படுத்துவதில் முதன்மையானதாகத் திகழ்ந்து உயிரினும் மேலானதாகக் கருதப்படுகிறது. ஒழுக்கமுடைய வாழ்வே உயர்ந்த வாழ்வு என்பது பண்டையத் தமிழரின் கொள்கையாகும். மனிதனுக்கு புறத்தூய்மை, அகத்தூய்மை ஆகிய இரண்டும் வேண்டும். புறத்தூய்மை உடல் நோய்கள் வராமலும், அகத்தூய்மை அகநோய்கள் வராமலும் காக்கும். எனவே, அகமும் புறமும் தூய்மையாக இருத்தலே உயர்ந்த நாகரிகம். திருவள்ளுவர்,
“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்”23
என்ற கூறுகின்றார். புறத்தூய்மையை உடனடியாகக் கண்டுகொள்ள முடியும். அகத்தூய்மையைப் படிப்படியாக, அவரவர் நடத்தையின் மூலமே அறிந்துகொள்ள இயலும். ஒருவன் சமுதாயத்தில் வகிக்கும் பதவியையோ, செய்யும் தொழிலையோ வைத்து அவனுடைய அகத்தூய்மையை உறுதிப்படுத்தி விடக்கூடாது. வெளிஉலகிற்கு நல்லவனாகக் காட்சியளிக்கும் ஒருவன் அகத்தில் அழுக்கு நிறைந்தவனாக இருக்கலாம். இதனை,
“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளவும்,
கதவுள்ள போதே சாத்திக் கொள்ளவும்,
நன்கு தெரிந்த நடிகை …… ……..
நித்தம் இருமுறை நீராடு வாராம்
விடிந்ததும் ஒருமுறை வெந்நீரில் குளியலாம்
எல்லாம் முடிந்தபின் இன்னொரு குளியலாம்
………………………………………………………………………………….
ஆடை பாதியும் அழகு பாதியும்
தெரியக் காட்டும் திரைப்பட நடிகையோ,
அறிஞனோ, கலைஞனோ, அரசியல் தலைவனோ,
மடாதி பதியோ, மக்கள் திலகமோ,
கோப்பைக் கவிஞனோ, கோயில் குருக்களோ,
மற்றிங்கு வாழும் மக்கள் கூட்டமோ,
ஆயிரம் தடவை அன்றாடம் குளிப்பினும்
மிகத்தூய்மை பெறுவது மேனியே யன்றி
அகத்தூய்மை நீரால் அமைவ தில்லையே”24
என்னும் பாடல்களில் சுரதா சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கவிதையில் பலரையும் குறிப்பிடும் கவிஞர், அறிஞனையும் சேர்த்துக் கூறுகின்றார். பண்பாட்டை அறிவு உருவாக்கும், ஆனால் சில சமயம் தீமையைக் கூர்மைபடுத்தி விடுவதும் உண்டு. உணர்ச்சியைச் செம்மைப்படுத்தத் தவறிவிடுவதும் உண்டு. எனவே, தான் ஆங்கிலத்தில் ‘Intellectual Giants are moral Pygmies’ என்னும் பழமொழி வழங்குகிறது. ‘அறிவில் வானளாவ உயர்ந்திருப்பவர்களும் ஒழுக்கத்தில் குள்ளராக இருப்பதுண்டு’.
குடும்பக்கட்டுப்பாடு
செல்வங்களில் சிறந்தது குழந்தைச் செல்வம். ஆனால் அளவில் மிஞ்சினால், அதுவே குடும்பத்திலும், பின்பு நாட்டிலும் வறுமையைத் தோற்றுவிக்கும். மக்கள்தொகைப் பெருக்கம் இன்று உலகை மிரட்டும் சிக்கலாக மாறி வருகிறது. 138 கோடி மக்களைக் கொண்டுள்ள சீனா, உலகிலேயே அதிகபட்ச மக்கள் தொகையைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது. குறிப்பாக, சீனாவில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளத் தம்பதியருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது சீனாவில் குடும்பக் கட்டுப்பாட்டு விதி தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு, குடும்பக்கட்டுப்பாட்டு விதியைத் தளர்த்த சீன அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, மக்கள்தொகைப் பெருக்கத்தை உலக நாடுகள் கட்டுப்படுத்த வில்லையானால் உலகில் வறுமை, பஞ்சம், பட்டினி, நோய் போன்றவை பெருகும். இந்த எச்சரிக்கையை முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்திய அரசும் இதனை ஏற்று செயல்படுத்தி வருகிறது. இந்தக் கொள்கையைப் பெரியார், “பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்றவர்கள், பெண்கள் உடல்நலத்தை உத்தேசித்தும், பிள்ளைகளின் தாட்டீகத்தை உத்தேசித்தும், நாட்டின் பொருளாதார நிலையை உத்தேசித்தும் குடும்பச் சொத்துக்கு அதிகப் பங்கு ஏற்பட்டுக் குறைந்தும், குலைந்தும் போகாமல் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியமென்று கருதுகிறார்கள்”25 என்று எடுத்துக் கூறியுள்ளார். பெரியாரின் சிந்தனையை அடியொற்றி கவிதைகள் படைத்து வந்த பாரதிதாசன்,
“காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன
குற்றம்?”26 என்று பாடியிருக்கிறார். இதே சிந்தனையை, அவருடைய மாணவரான உவமைக் கவிஞர் சுரதா,
“பெருக்கெடுக்கும் உணர்ச்சியினால் ஒன்று பத்தாய்ப்
பெற்றெடுக்கும் குழந்தையெனும் கொழுந்தின் கூட்டம்
நெருக்கடியின் அடையாள மன்றோ? அந்த
நெருக்கடிக்கிங் கிடங்கொடுத்தால் குடும்ப வாழ்வே
சருக்குநிலம் ஆகிவிடும் அதனால், பெற்றோர்
தயவுசெய்து குடும்பநலம் காக்க வேண்டும்”27
என்று பாடுகிறார். மக்கள் செல்வம் மிகுதியானால், அறிவையும், கற்பனை வளத்தையும் குறைத்துவிடும் என்றும், அதனால் குடும்பத்தில் வறுமையும், நிம்மதியின்மையும் தோன்றும் என்றும் எடுத்துரைக்கின்றார்.
முடிவுரை
சாதி, சமய வேறுபாடுகளைக் கண்டிக்கும் கவிஞர், அவை மானிட சமூகத்திற்குத் தேவையற்றது எனச் சாடியுள்ளார். நிறத்தாலும், பிறப்பாலும் உயர்ந்தோர் என்று எண்ணக் கூடியவர்களை மடையர்கள் எனக் கண்டித்துள்ளார். பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் கண்டித்து, இந்த மூடத்தனமான கொடுமையைத் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். குடும்பத் தலைவனுக்கு மனைவியும் மழலையும் தரும் மகிழ்வும், புத்தகங்கள் தரும் அறிவும் அலாதியானவை என்பதைக் கவிதை வழி வெளிப்படுத்தியுள்ளார். இல்லாள் இல்லாதவனை இருந்தும் பயன் இல்லாதவன் என ஏளனமாகக் கூறியுள்ளார். தனக்குப் பிடித்தவனைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்குப் பிடிக்காதவனைத் தானே நிராகரிக்கும் உரிமையும் பெண்களுக்கு வேண்டும் எனக் குரல் கொடுக்கின்றார். மகளிர் தம் அன்றாட வாழ்வில் எவற்றை எல்லாம் கடைபிடித்து வாழ வேண்டும் எனப் பட்டியலிடுகின்றார். ஒழுக்கத்தினை உயிரினும் மேலாகக் கருதும் கவிஞர் சுரதா, ஒழுக்கம் இல்லாதவனை உள்ளத்தில் அழுக்கு நிறைந்தவனாகக் காட்சிப்படுத்தியுள்ளார். மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, தாய்மார்கள் குழந்தைச் செல்வங்களை அளவோடு பெற்றுக்கொள்ள அறிவுரை கூறும் கவிஞர், குடும்பக்கட்டுப்பாட்டுச் சிந்தனையையும் விதைத்துச் சென்றுள்ளார்.
சென்ற அத்தியாயம் வரை பெரும்பாலும் புலவர்கள் கற்பனை செய்து எழுதிய கதைகளையும், தொன்மங்களையும் பார்த்து மகிழ்ந்து வந்தோம்.
வித்தியாசமாக இப்போது, பிள்ளைத்தமிழ்ப் புலவர்கள் எடுத்தாளும் மற்ற செய்திகளையும் காணலாமே!
பிள்ளைத்தமிழின் காப்புப் பருவத்தினை எடுத்துக்கொண்டோமானால், குழந்தையைக் காப்பதற்காக முறைப்படி திருமாலிடம் துவங்கி, விநாயகர், சிவபெருமான், பார்வதி, அலைமகள், கலைமகள், பிரம்மா, இந்திரன், சப்தமாதர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் எனப் பலப்பல தெய்வங்களை விளிப்பதனைக் காணலாம். இவை பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்களின் காப்புப்பருவத்தின் பொதுவான அமைப்பாகும்.
முருகன் மீதான சில பிள்ளைத்தமிழ் நூல்களில் சிறப்பாகச் சைவசமயச் சின்னங்களாகிய திருநீற்றையும், ‘நமசிவாய,’ எனும் ஐந்தெழுத்தினையும், உருத்திராக்கத்தினையும் விளித்துக் குமரனாகிய குழந்தையைக் காக்கவேண்டுவர் புலவர்கள். திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழை இயற்றிய சிதம்பர அடிகளார் இவ்வாறு பாடியுள்ள இரு பாடல்களை இவ்வத்தியாயத்தில் காணலாமா?
கந்தசாமி எனப்போற்றப்படும் முருகப்பிரான் உறையும் திருப்போரூர் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அழகிய ஊராகும். இவ்விடம் சென்னையிலிருந்து 40 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. பிரணவ மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு. முருகன் அசுரர்களுடன் நிகழ்த்தியபோரில் கடற்போரானது திருச்செந்தூரிலும், தரைப்போரானது திருப்பரங்குன்றத்திலும், ஆகாயப்போரானது திருப்போரூரிலும் நிகழ்ந்தது எனப் புராணங்கள் கூறும். தற்காலத்தைப்போலவே புராணகாலத்திலும் முப்படைகளைக் கொண்டு போரிட்டனர் என்பது அறியத்தக்கது. சிதம்பர அடிகளார் திருப்போரூர் சந்நிதிமுறை எனும் நூலை இயற்றியுள்ளார். இதனுள் பிள்ளைத்தமிழ் முதலாக 36 தலைப்புகளில் பாடல்கள் இயற்றியுள்ளார். அன்னை மீனாட்சியின் மீதும் மீனாட்சியம்மை கலிவெண்பா எனும் நூலைப் பாடியுள்ளார்.
சைவர்களுக்கு, திருநீறு இன்றியமையாத ஒரு சமயச் சின்னமாகும். இதன் பெருமைகளும் கொஞ்சநஞ்சமல்ல. பாடலின் அமைப்பும் அதியற்புதமாகவுள்ளது. முதலிரு பகுதிகள் முருகனின் சிறப்பினையும், கடையிரு பகுதிகள் திருநீற்றின் சிறப்பினையும் அழகுற விளக்குகின்றன.
முதற்கண் திருநீற்றின் சிறப்புகளைக் காணலாம்: ஆதிபகவன் எனப்படும் இறைவனின் மெய்யறிவு வடிவாகிய நெருப்பில் தோன்றியது திருநீறு. அதுவும் இறைவனைப்போன்றே என்றுமுள்ளது; நித்தியமானது. திருநீறு சிவபெருமானின் திருவுருவாகக் கொள்ளப்படும்; அச்சிவபெருமானே மகாபற்பமாவார்- ஆகவே ‘ஞானவடி அழலிற் பூத்து,’ எனப்பட்டதாம். அதுமட்டுமின்றி, சிவபிரான் என்றுமுள்ளவராதலால் அவரைப்போன்று அவருடைய திருவடிவம் ஆகிய திருநீறும் என்றும் (நித்தியமாய்) உள்ளது. தன்னை அணிந்தவர்களுக்கு வேண்டியதனைத்தையும் தருவது. இறைவன் திருவருளால் பாற்கடற்கண் தோன்றிய தேவாமிர்தமானது தன்னை உண்டவர்களுக்கு, நரை, திரை, மூப்பு ஆகியவற்றை நீக்குவதனைப்போல, திருநீறும் தன்னைச் சிறிது வாயிலிட்டு உண்பவர்களுக்கு நோய்தீர்க்கும் அமுதமென விளங்குவது. ஆகவே ‘அருந்தினோர்கட்கு ஆரமுதாய்’ எனக்கூறப்பட்டது. இன்றும் பல இடங்களில் திருநீறு மருந்தாக உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது. விதிவழியே செல்லுகின்ற ஆன்மாக்களுடன் ஒன்றிணைந்த ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கியருளும் தன்மைகொண்டது. திருநீற்றினைக் குழைத்து மீன்று பட்டைகளாக நெற்றி, மார்பு, வயிறு, கைகள் முதலானவற்றில் அணிவது வழக்கம். இது ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கலையும் நீக்கியருளும் தன்மை கொண்டதாகையால் ‘நீதியறியும் பசுமலத்தை நீக்கும் ஒரு நற்குறி’ எனப்போற்றப்படுகிறது.
ஆதி பகவன் ஞானவடி அழலிற் பூத்து நித்தியமாய் அணிந்தோர் தமக்கு வசிகரமாய் அருந்தி னோர்கட் காரமுதாய் நீதி யறியும் பசுமலத்தை நீக்கு மொருநற் குறிகாட்டி நிகழ்பே ரின்பக் கடலூட்டி நின்ற புகழ்வெண் திருநீறே.
இந்தத் திருநீற்றினை அணிந்த குழந்தை முருகனை அது காக்க வேண்டும் எனப் புலவர் வேண்டுகிறார். அவன் சாமானியக் குழந்தையா என்ன?
‘ஒளிபொருந்திய மகரக்குண்டலங்களை அணிந்த அழகான தோள்கள் பன்னிரண்டினை உடையவன் அவன். சுருதி எனப்படுவதான வேதநூல்கள் (மறைகள்) முழங்கும் தண்டைகளை அணிந்த தனது இரு திருவடிகளையும் எனது தலையில் சூட்டியவன்; ‘மாது’ எனும் சிறப்பு அடைமொழி பெற்ற திருமகள் உறைகின்ற திருப்போரூரின் வாழ்வு அவனே!’ என்றும் கூறுகிறார். செல்வவளம் தழைத்து விளங்குவதால் திருமகளாகிய ‘மாது உறையும் சமரபுரி’ எனப்பட்டது. தேவர்களின் சிறந்த மணியாக விளங்குபவன் அவன். அழகான வேலினை ஏந்திய கையன்; மயிலில் ஏறி வருபவன். இவனை இத்திருநீறு ஈண்டுவந்து காத்தருள வேண்டும்.
முழுமையான பாடல் இதோ:
சோதி மகரக் குழைசெறிசுந் தரத்தோ ளீரா றுடையானைச் சுருதி யிரைக்குந் தண்டையந்தாள் துணையென் முடியிற் பொறித்தானை மாது வளருஞ் சமரபுரி வாழ்வை வானோர் சிகாமணியை வடிவே லரசை மயிலரசை வந்து புறங்காத் தளித்திடுமால் ஆதி பகவன் ஞானவடி அழலிற் பூத்து நித்தியமாய் அணிந்தோர் தமக்கு வசிகரமாய் அருந்தி னோர்கட் காரமுதாய் நீதி யறியும் பசுமலத்தை நீக்கு மொருநற் குறிகாட்டி நிகழ்பே ரின்பக் கடலூட்டி நின்ற புகழ்வெண் திருநீறே.
(திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- திருநீறு- சிதம்பர அடிகளார்)
*****
அடுத்து சிதம்பர அடிகளார் திரு ஐந்தெழுத்தின் பெருமையினைப் போற்றுகிறார். மணிமந்திர ஔடதங்கள் என்பன சிவகண்மணி எனப்படும் உருத்திராட்சம், ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து, திருநீறு ஆகியனவேயாகும். இவற்றுள் திருவைந்தெழுத்தின் பெருமை கூறப்படுகின்றது.
வாசம்கமழும் குராமலர்களையணிந்த வள்ளியம்மையின் நாயகன் குமரன்; கார்த்திகைப் பெண்டிரின் குடம்போலும் கொங்கைகளிலிருந்து பெருகிய பாற்கடலை உண்டு வயிறு நிரம்பியவன். அருணன் போல்பவன் இந்தக் குமரப்பெருமான்; இனிமையான சோலைகள் நிறைந்து பொலியும் சமரபுரி (போர் + ஊர்= போரூர்) எனும் திருப்போரூரில் நின்றுலவும் குமரனைக் காக்க வேண்டும்.
யார் காக்க வேண்டும்? திருவைந்தெழுத்து காக்கவேண்டும்! அது இக்குமரனின் தகப்பனாகிய சிவபெருமானின் பெருமைமிகு பெயராகும். தனயனை அதுவே காக்கும். அந்தத் திருவைந்தெழுத்தின் பெருமைகளைக் கூறப்புகுகிறார் அடிகளார்.
எண்ணுவதற்கு அரியதான பல உயிர்களும் (பாசம்) பந்தம் எனும் கரிய கடலைக்கடந்து கரையேற உதவும் மரக்கலமாகத் திகழுவதே இந்த ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து. திருவைந்தெழுத்தைக் கூறி பிறவிக்கடலை எளிதாகக் கடந்துவிடலாம் என்பது இதனால் பெறப்பட்டது. அன்பர்களாகிய அடியார்கள் தமது உள்ளங்களில் இவ்வைந்தெழுத்தை இருத்தி அதனையே ஐயன் திருவடிவாகக்கண்டு தியானம் செய்வார்கள். ‘உண்மைவிளக்கம்’ எனும் நூல் இதனை மிக நுட்பமாகக் கூறியருளும். இதனையே ‘அன்பர் உட்காட்சி’ என்கிறார். அரியமறைகளாகிய வேதங்களும் அறிவிக்க இயலாத அழகான பரமசுகப் பேற்றாயமைந்ததும் இவ்வைந்தெழுத்து ஒன்றே! அருமையான இறைவனுக்கு மிகவும் பொருத்தமான பெயர் இதுவே! சிவனுடைய பல பெயர்களில் மிகச்சிறப்பு வாய்ந்தது இப்பெயரே! அதனால் திருவைந்தெழுத்தாகிய ‘நமசிவாய’ என்பது ‘அரிய சிவன் உரிய பெயர்’ எனப்படுகிறது.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருவைந்தெழுத்தினைப்போற்றுவோமாக: ஏனெனில் இது நமது குமரனைக் காப்பதற்காகவே.
இதுபோலும் சமயச் சின்னங்களையும் சிறப்பான தொண்டர்கள், மற்றும் தெய்வங்களையும் காப்புப்பருவத்தில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் போற்றியுள்ளன. தொடர்ந்து சிலவற்றை வரும் அத்தியாயங்களில் வெவ்வேறு நூல்களினின்றும் கண்டு மகிழ்வோம்.
பிள்ளைத்தமிழ் நூல்கள், பிள்ளைப்பருவத்தின் இனிமையை மட்டுமே பாடாமல், அப்பிள்ளையைச் சார்ந்த சமய ஒழுக்கங்களையும், வழக்குகளையும் போற்றி உரைப்பது இயற்றிய புலவர்களின் பக்திநிலைக்கும், புலமைக்கும் சான்றான பதிவுகளாகவும் அமைந்துள்ளன.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
சொல்லாத சொல்லிற்கு நீ எஜமான்; சொன்ன சொல்லுக்கு அது எஜமான் – இது நூற்றுக்கு நூறு உண்மை என்று அனுபவம் கூறுகிறது. இதைத்தான் வள்ளுவர்,
யாகவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள். 127) என்று கூறியுள்ளார். பொருளற்ற சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதைத் தொல்காப்பியர்,
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” (தொல். பெயரியல் நூ. 1)
என்று வலியுறுத்துகிறார். இத்தகு சொற்பயன்பாடு குறித்த வள்ளுவர் கருத்துகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.
ஒத்த கருத்தை வலியுறுத்துவன:
அதிகாரந்தோறும் பத்து குறள்கள் என்று வள்ளுவர் தான் வகுத்துக் கொண்ட வரையறைக்குள் தாம் கூறவந்த பொருண்மையைக் கூறிமுடிக்க முடியாத சில இடங்கள் இருந்ததாகவே கருத வேண்டியுள்ளது. அதனால்தான் சில பொருண்மைகள் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களை வள்ளுவர் படைத்துள்ளார். ஒத்தக் கருத்துடைய அதிகாரங்களில் நுணுக்கமான பொருள் வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை நாம் ஒரு பொருள் பற்றியவையாகவே கருத வேண்டும். அப்பொழுதுதான் வள்ளுவர் கூறவந்த பொருண்மை முழுமை அடைவதாக இருக்கும். அவ்வகையில் சொற்களைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கியத்துவம் குறித்து வள்ளுவர் ஐந்து அதிகாரங்களைப் படைத்துள்ளார். அவை:
இனியவை கூறல் – அதிகாரம் 10
பயனில சொல்லாமை – அதிகாரம் 20
சொல்வன்மை – அதிகாரம் 65
அவையறிதல் – அதிகாரம் 72
அவையஞ்சாமை – அதிகாரம் 73
இங்ஙனம் ஒத்தப் பொருண்மையுடைய அதிகாரங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
நட்பு:
இப்பொருண்மையில் 5 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:
சிற்றினம் சேராமை – அதிகாரம் 46
நட்பு – அதிகாரம் 79
நட்பாராய்தல் – அதிகாரம் 80
தீநட்பு – அதிகாரம் 82
கூடாநட்பு – அதிகாரம் 83
குறிப்பறிதல்:
இப்பொருண்மையில் 3 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:
குறிப்பறிதல் – அதிகாரம் 71
குறிப்பறிதல் – அதிகாரம் 110
குறிப்பறிவுறுத்தல் – அதிகாரம் 128
தெரிந்துசெயல்:
இப்பொருண்மையில் 3 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:
தெரிந்துசெயல்வகை – அதிகாரம் 47
தெரிந்துதெளிதல் – அதிகாரம் 51
தெரிந்துவினையாடல் – அதிகாரம் 52
வினை:
இப்பொருண்மையில் 3 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:
வினைத்தூய்மை – அதிகாரம் 66
வினைத்திட்பம் – அதிகாரம் 67
வினைசெயல்வகை – அதிகாரம் 68
இல்வாழ்க்கை:
இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:
இல்வாழ்க்கை – அதிகாரம் 5
வாழ்க்கைத் துணைநலம் – அதிகாரம் 6
கல்வி:
இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:
கல்வி – அதிகாரம் 40
கல்லாமை – அதிகாரம் 41
குடிமை:
இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:
குடிமை – அதிகாரம் 96
குடிசெயல்வகை – அதிகாரம் 103
கொல்லாமை:
இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:
புலால் மறுத்தல் – அதிகாரம் 26
கொல்லாமை – அதிகாரம் 33
நெஞ்சு:
இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:
நெஞ்சொடு கிளத்தல் – அதிகாரம் 125
நெஞ்சொடு புலத்தல் – அதிகாரம் 130
படை:
இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:
படைமாட்சி – அதிகாரம் 77
படைச்செருக்கு – அதிகாரம் 78
புணர்ச்சி:
இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:
புணர்ச்சி மகிழ்தல் – அதிகாரம் 111
புணர்ச்சி விதும்பல் – அதிகாரம் 129
புலவி:
இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:
புலவி – அதிகாரம் 131
புலவி நுணுக்கம் – அதிகாரம் 132
பெரியார் தொடர்பு:
இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:
பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரம் 45
பெரியாரைப் பிழையாமை – அதிகாரம் 90
மேற்காண் செய்திகளின் அடிப்படையில் நோக்கும்பொழுது சொற்பயன்பாடு, நட்பு ஆகிய இரண்டு பொருண்மைகளுக்கு மட்டுமே தலா ஐந்து அதிகாரங்களை வள்ளுவர் படைத்துள்ளார். பிற பொருண்மைகளுக்கு இரண்டு அல்லது மூன்று அதிகாரங்களைப் படைத்துள்ளார் என்பதைக் காணமுடிகிறது.
இனி, கட்டுரையின் பொருண்மையான சொற்பயன்பாடு குறித்துத் தொடர்ந்து நோக்கலாம். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியுள்ளதைப்போல இனியவை கூறல், பயனில சொல்லாமை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய ஐந்து அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஒத்த தன்மையுடையவை அல்லது ஒத்தப் பொருண்மையுடையவை என்பதை ஆராய்வோம்.
இனியவை கூறல்:
ஒருவன் இனிமையான சொற்களையே கூறவேண்டும் என்ற கருத்தை வற்புறுத்தும் வள்ளுவர் இனிய சொற்கள், அன்பு கலந்தவை – ஈதலின் நன்று – அறச்செயல் – அணிகலன் – இம்மையும் மறுமையும் இன்பம் பயப்பன – என்றெல்லாம் கூறி,
என்பதன் மூலம் ஒத்த அறிவுடையாரிடத்து ஒத்த அறிவுடைய செய்திகளைப் பேசவேண்டும். இவ்வரன்முறை மீறினால் சொல்லப்படும் செய்தி தூய்மையற்ற முற்றத்தில் (தரையில்) கொட்டிய அமிழ்தத்திற்கு ஒப்பாகும் என்கிறார்.
அவையஞ்சாமை:
அவையில் அஞ்சாமல் பேசும் ஆற்றல் மிக்கோர் வாய்தவறியும் பிழை சொல்லார். அவையிலஞ்சாமல் கற்றார் மனங்கொள்ளுமாறு கூறுவோரே கற்றாருள் கற்றார் ஆவர். போர்க்களத்தில் அஞ்சாமல் சென்று சாகத்துணிந்தவர் பலரிருக்கச் சான்றோர் அவைக்களத்தில் அஞ்சாமல் சென்று உரைப்போர் ஒரு சிலரே என்று வள்ளுவர் அவையஞ்சா ஆற்றல் மிக்காரைப் புகழ்ந்துரைப்பர்.
அவையஞ்சி உரைக்குந்திறனற்றோரை, போரிட அஞ்சுந்தன்மை கொண்டானிடம் உள்ள வாள் போன்றதே அவையஞ்சுவான் கற்ற கல்வி – தாம் கற்றவற்றைக் கல்வித்திறமிக்க அவையினில் உரைக்க இயலாதவர் கற்ற கல்வி பயனற்றது – அத்தகையவன் கல்லாதவரை விடக் கீழானவன் என்றெல்லாம் கூறும் வள்ளுவர் அவையஞ்சுவோர் உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பானவர் என்பதை,
உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். (குறள். 730) என்ற குறளில் பதிவு செய்துள்ளார்.
இங்ஙனம் மேற்கண்டவாறு வள்ளுவர் சொல்லும் சொல்லின் முக்கியத்துவத்தை வள்ளுவர் இனியவை கூறல், பயனில சொல்லாமை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய ஐந்து அதிகாரங்களில் விளக்கமுற எடுத்துரைத்துள்ளார். ஆகையால் வள்ளுவரைப் பின்பற்றி சொல்லும் சொல்லை வெல்லும் சொல்லில்லை என்று அனைவரும் பாராட்டத்தக்க வகையில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிக்கு வித்திடுவோம்.
தமிழ் இணைய உலகு பரந்துபட்டது. அதன் விரிவு என்பது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களை உள்ளடக்கி வளர்ந்துவருகிறது.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பகுதிகளின் தமிழ்வளர்ச்சியை வெளிப்படுத்தும் ஒன்றிணைக்கும் ஊடகம் இணையம் மட்டும்தான். இவ்வகையில் அயல்நாடுகளின் இணையத் தமிழ் வளர்ச்சி ஒரு புறமும், தாயகமான தமிழ்நாட்டின் இணைய வளர்ச்சி ஒருபுறமும் வளர்ந்து வந்தாலும் இவையிரண்டும் ஒன்றுக்கொன்று சார்ந்தும், இணைந்தும் இயங்கும் நெருக்கத்தை இணையம்சார் போட்டிகள், இணைய இதழ்கள் அமைத்துத் தந்துவிடுகின்றன. இதன் காரணமாக இணையாத தமிழ்உள்ளங்கள் இணைந்து கரம் கோக்கும் புதுஉலகம் பிறந்துள்ளது.
சவாலே சமாளி
இருப்பினும் இணையத்தின் வளர்ச்சி ஒரு மூடுபொருளாகவே இருக்கிறது. இதற்கான காரணம் யாதென ஆராய வேண்டும். முக்கியமாக இணைய எழுத்தாளர்கள் தங்களை, தங்களின் தகவல்களை வெளியிடாமை அல்லது வெளிப்படுத்தாமை என்பது முக்கியமான காரணமாக அமைகின்றது. தம் எழுத்துகளை இணைய எழுத்தாளர்கள் கொண்டாடாமையும் ஒரு காரணம். நூல் வெளியீடு, பாராட்டுவிழா, விருதளிப்பு எதுவும் இணைய எழுத்திற்கு இல்லை என்பது மிக முக்கியமான காரணம். யாதாவது ஓர் அமைப்பு இணைய எழுத்துகளைப் பரிசளித்துப் பாராட்டி வெளிப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தினால் இக்குறை நீங்கும். இணைய எழுத்துக்கான தனித்தன்மை எதுவும் இல்லை என்பது இன்னுமொரு குறை. இணையத்தி்ல் எழுதி அச்சாக்குவது அல்லது அச்சாக்கி இணைய எழுத்தாக்குவது என்ற நிலையில் இணைய எழுத்திற்கான தனித்தன்மை இழக்கப்பெறுகிறது. இற்றைப் படுத்தப்படாமை என்பதும் மற்றொரு குறை. வலைப்பூ, முகநூல். இணைய இதழ், என்று பல பரிணாமங்களிலும் இணைய எழுத்தாளர்கள் கால்பதிக்க வேண்டி இருக்கிறது. இதன் காரணமாக ஒன்றை இற்றைப்படுத்துதல் மற்றதை விடுதல் என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.
இணைய எழுத்து என்பது ஒற்றைத் தன்மை உடையது அன்று. உடனுக்குடன் பதில் அல்லது விமர்சனம் அல்லது தாக்குதல் பெறத்தக்கது. இதன் காரணாக நேரடித் தாக்குதல் நேர வாய்ப்புண்டு. இதனைத் தாண்டி இணைய இலக்கியம் வளர்க்கப்பட வேண்டும். உருப்பட நூல்கள், இணைய நூல்கள், அகராதிகள் போன்றவற்றை இணையம் அளிக்க வேண்டும். பழமையைச் சேகரிக்க வேண்டும். புதுமையைப் புகுத்த வேண்டும். நிகழ்காலத்திலும் நீந்த வேண்டும். இந்த வித்தைகளைக் கற்றவர்கள் இணைய எழுத்தில் நீந்த இயலும். இணையம் என்பது தொழில்நுட்பம் சார்ந்தது. எழுத்து என்பது மனம் சார்ந்தது. மனம் இருப்பவருக்குத் தொழில்நுட்பம் காலை வாருகிறது. நுட்பம் அறிந்தவருக்கு எழுத்துச் செம்மை தவிக்கிறது. ’நீச்சல்காரன்’ தன் தமிழி்ல் தவறுகளைக் குறைக்கவே சொல்திருத்தியை உருவாக்கிக்கொண்டதாக ஒரு பேட்டியில் குறிக்கிறார். நுட்பம் தெரியாதவர் எத்தனை மாதம் யாரிடம் பயிற்சி பெறுவது?
மேலும் பெரிய பெரிய அச்சு ஊடக வெளிப்பாடுகள் இணையத்திலும் தனக்கென தனித்த நிலையில் இடம்பிடித்து வைத்திருக்கின்றன. அச்சு ஊடக எழுத்தாளுமைகளும் இணையத்தில் நிலைக்கப் பயிற்சி பெற்றுவிட்டன. கிடைத்த பெருவெளியையும் வாடகைக்கு விட்டுவிட்டு இணைய உலகம் இழந்தது அதிகமாகத் தெரிகிறது.
இணையத்தில் எழுத்தாளர்களே வாசகர்கள். வாசகர்களே எழுத்தாளர்கள். எழுத்தின் தகுதியும் வாசகத் தன்மையின் தகுதியும் மிஞ்சாமல் சென்று கொண்டிருப்பது மற்றொரு தடை. எழுத்தின் வாசனை கூட வேண்டும். வாசக மனப்பாங்கு ஒழிய வேண்டும்.
இவ்வளவு இடைஞ்சல்களுக்கு இடையில் நல்லதமிழ் வளர்க்க நான்கு பேர்கள் இல்லை…இல்லை நாலாயிரம் பேர்கள் இணையப் பெருவெளியில், பொதுவெளியில் உலா வருகின்றனர். அவர்கள் அனைவரையும் மதிப்பிட அல்லது ஒருங்கிணைக்க இந்தக் கட்டுரையாளனுக்கு இன்னும் தொடர்ந்து இயங்கும் வாய்ப்பு வரவேண்டும்.
இணைய எழுத்தின் தொகை
வலைப்பதிவர் சந்திப்புகள் அபூர்வமாக எங்கேனும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு குறிக்கத்தக்க ஒரு முயற்சி. இதில் மொத்தம் 331 வலைப்பதிவர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றது. இணைய எழுத்தாளர்கள் முன்னூறு பேர் கொண்ட தமிழ்க்குழுமத்தை அது கொண்டு கூட்டுகிறது.
மின்தமிழ் மடல்குழுமம் ஏறக்குறைய ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ஒருங்கிணைக்கிறது. இயக்கங்களை ஒருங்கு கூட்டுகிறது.
தமிழ்மணம். திரட்டி போன்ற வலைப்பூ அரங்கங்கள் தினம் தினம் பலநூறு இடுகைகளை ஒன்று சேர்க்கின்றன.
விக்கிப்பீடியா ஏறக்குறயை 750 தமிழ் படைப்பாளிகளை அடையாளப்படுத்துகிறது.
இவற்றின் வழியாக இணையத்தில் எழுதுபவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கான நிலைக்களன்கள் கிடைத்துள்ளன.
இணையக் களங்கள்
இணையக் களங்கள் பல திறத்தினவாகும். வலைப்பூக்கள் (பிளாகர்), இணைய இதழ்கள் (இன்டெர்நெட் மேகசீன்ஸ்), இணையக் குழுமங்கள் (குருப்ஸ்), மின்மடல் குழுக்கள் (இ மெயில் குருப்ஸ்), முகநூல் பதிவுகள். (பேஸ்புக்), கட்செவி (வாட்ஸ்அப் குழுக்கள்), டிவிட்டர் போன்ற பல இணையக் களங்கள் தற்போது விரிந்து வருகின்றன. ஒன்றுக்குள் ஒன்று இணையும் தொடுப்புகள் இவை அனைத்தையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டு வந்துவிடுகின்றன.
ஓர் எடுத்துக்காட்டிற்கு வரலாறு.காம் என்ற இணைய இதழை எடுத்துக்கொள்வோம். மிக முக்கியமான அச்சு ஊடகத்தினால் கொள்ளை போகாத பழைய தமிழகத்தின் நினைவுச் சுவடுகளைப் பதிவாக்கி ஆராயும் இதழ்தளம் இதுவாகும். வரலாற்று ஆய்வறிஞர் இராசமாணிக்கனார் வழியில் அவரின் புதல்வர் திரு கலைக்கோவன் அவர்களின் சீரிய வழிகாட்டலில் கமலக்கண்ணன் போன்றோரின் இணைய உதவியுடன் இயங்கும் இதழ்தளம் இதுவாகும். நேரில் சென்று களஆய்வு செய்து உண்மையை உறுதிப்படுத்தும் மிகச் சிறந்த ஆவணப் பெட்டகம் இதுவாகும்.
2004ஆம் ஆண்டுவாக்கில் இணையப் பிரவேசம் கண்ட இத்தளம் தனக்கென பல தொடுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. இதழாக்கம் மிக முக்கியமான மையப்பணி என்றாலும் பழைய இதழ்களைச் சேகரித்தல், காணொளிக் காட்சிகளை இணைத்தல், நிகழ்வுகளைப் பதிதல், முகநூல் தொடுப்பு, ஆய்வாளர்சார் தனித் தொடுப்புகள் என்று பல்வேறு இணைய இணைப்புகளை இதனுள் கொண்டுவந்து பழந்தமிழர் பண்பாட்டிற்கு வலிமை சேர்க்கப்படுகிறது. இதனுள் வரலாற்று அறிஞர்கள் கலைக்கோவன், நளினி, குடவாயில் பாலசுப்பிரமணியம் போன்ற ஆய்வறிஞர்களும், இளம் ஆய்வாளர்கள் பலரும் எழுதி வருகின்றனர். ஆனால் இதற்கான அங்கீகாரம், மக்கள் கவனிப்பு என்பது எவ்வளவு விழுக்காடு என்று ஆய்ந்தால் அதன் அளவு பெரும்பாலும் ஐம்பது விழுக்காட்டை எட்டாது. பணி செய்பவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். கவனியாதவர்கள் கவனியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
தமிழக இணைய இதழ்களான திண்ணை, முத்துக்கமலம், வல்லமை போன்றன தமக்கான பணிகளைச் செய்துகொண்டே இருக்கின்றன. அதற்கான வாசகர்கள் எவ்வளவு என்பது எண்ணிக்கை அளவில் குறைவே என்பதில் வருத்தம் எழத்தான் செய்கிறது.
பதிவுகள், சொல்வனம், சிறகு, தங்கமீன், தடாகம், வல்லினம், வார்ப்பு போன்ற அயல்நாடுசார் இணைய இதழ்கள் அயலகத் தமிழ் எழுத்தாளர்களைத் தமிழகத்திற்கு அறிமுகம் செய்கின்றன. இருப்பினும் இந்த இதழ் தயாரிப்பு, இணையச் செலவு இவற்றிற்கு உதவும் உயர்ந்த உள்ளங்கள் எங்கும் இல்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. ’விலையில்லா’ (தமிழகத்தின் நடையில் இலவசம் என்பதை விலையில்லா என்றே குறிக்கப்பெற வேண்டும்) இதழ்களின் விலைமதிப்பில்லா சேவை இதழாசிரியர்களின் நேரத்தை, பணத்தை, மூளையை எடுத்துக்கொள்கின்றன. கிடைத்தது என்ன என்பதற்கான பதில் எதுவும் இல்லை. விலையில்லாமல் இவற்றை விலைக்குக் கொண்டுவந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஆனால் அச்சுஊடகப் பேரரசுகளான குமுதம், ஆனந்தவிகடன் ஆகியனவற்றை இணையத்தில் விலையில்லாமல் வாசிக்க இயலாது. வாழ்க தமிழ்ச்சமூகம்!
இணையத்தில் எழுதப்படும் எழுத்துகளைப் பெரும்பாலும் இரண்டு வகையாகப் பகுத்துக்கொள்கின்றனர். ஒன்று விமர்சனப்படுத்துவது. மற்றொன்று சொந்தப்படைப்பு. விமர்சனப்படுத்துவது என்பதில் பார்த்த படம், படித்த புத்தகம், அரசியல் நிகழ்வுப் பகடி போன்றன அமைகின்றன. இவையே இற்றைக்கால இணையக் களன்களில் அதிகம். சொந்தமாக எழுதுதல் என்பது படைப்புலகும் சார்ந்தும் அமைகிறது. திறனாய்வு சார்ந்தும் அமைகிறது. இப்பகுதி சற்று பின்தங்கியே உள்ளது.
இந்த இன்னல்களையும் கடந்து இணையத் தமிழ் உயிர்வாழ்கிறது. அதன் ஆரோக்கியம் மிக முக்கியமானது. அதிவேகம் அதைவிட முக்கியமானது.
இணையத்தில் பொதுவான எழுத்து
இணையத்தில் பொதுவான எழுத்தின் தன்மையை அறிந்து கொண்டபின்னே அதன் நவீனத்துவத்தை அறிந்துகொள்ள இயலும். தமிழ் இணையத்தின் முக்கியப் புள்ளிகள் பலர். இக்கட்டுரையாளர் அறிந்த சிலரை இங்கு அறிமுகம் செய்வது இணையம் தாண்டிய வெளியுலகிற்குப் புதிதாக இருக்கலாம்.
அறிவியல் தமிழ்
கனடாவில் வாழ்ந்து வரும் மதுரை திருமங்கலத்துக்காரரான ஜெயபாரதன் அவர்கள் அணுசக்தி விஞ்ஞானி ஆவார். எண்பதை நெருங்கும் வயதுடைய அவர் அறிவியல் பணிகளை செய்துகொண்டே தமிழில் அறிவியல் செய்திகளைத் தரும் நிலையில் தன் படைப்பாக்கப் பணிகளை இணையத்தின் வழியாகச் செய்து வருகிறார். நெஞ்சின் அலைகள் என்ற இவரின் வலைப்பூ குறிக்கத்தக்க அறிவியல் தமிழ்ப்பணியைச் செய்து வருகிறது. திண்ணை, பதிவுகள் ஆகியவற்றில் இவருக்கென்று தனித்த இடம் உண்டு. இவருக்கென்று தனித்த வாசகர்கள் உண்டு.
பதிவுகள் இணைய இதழ்
2000ஆம் ஆண்டு முதல் கனடாவில் இருந்து வெளிவரும் பதிவுகள் இதழின் ஆசிரியர் வ.ந. கிரிதரன் குறிக்கத்தக்க ஒரு படைப்பாளி. நாவல்கள், கதைகள் போன்றவற்றை எழுதுவதுடன், சிறந்த கட்டுரைகளையும் இவர் எழுதி வருகிறார். இவரின் படைப்புகள் இணைய உலகில் பதிவுகள் இதழில் கிடைக்கின்றன.
தமிழ் மரபு அறக்கட்டளை
டி.எச்.எப். என்று சுருக்கமாக அழைக்கப்பெறும் தமிழ்மரபு அறக்கட்டளை பல்வேறு தமிழாக்கப்பணிகளைச் செய்துவருகிறது. குறிப்பாக இதன் நிறுவனர் மலேசியா கண்ணன் அவர்கள் வைணவ இலக்கிய ஈடுபாடு மிகுந்தவர். இவரின் ஆழ்வார்க்கடியான் மிகச்சிறந்த வைணவ இலக்கிய வலைப்பூவாகும். தமிழ்மரபு அறக்கட்டளையின் வளமார் பணிகளுக்கு இவர் மூலகாரணம்.
திருமதி சுபா (சுபாஷிணி) அவர்கள் ஜெர்மனியில் இருந்து தமிழகம் வந்து பல தமிழ் அமைப்புகளுடன் கலந்துரையாடி மின்தமி்ழ் வளர்ப்பவர். இவர் பல வலைப்பூக்களை வைத்துள்ளார். சுபாஸ்டிராவல் வலைப்பூ இவரின் பயணங்களைப் பதிவு செய்வது. இதுபோல் நூல் விமர்சனங்களுக்கு ஒரு வலைப்பூ, உலகப்பண்பாடு சார்ந்து ஒரு வலைப்பூ போன்றனவற்றை இவர் வைத்துக்கொண்டுள்ளார்.
தமிழ் மரபு அறக்கட்டளை, சுவடி மின்னாக்கம், நூல் மின்னாக்கம், மரபுக் காப்பகம் போன்ற பல பணிகளைச் செய்துவருகிறது. பிரித்தானிய நூலகம், தமிழ்ப்பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் ஒத்திசைவினைப் பெற்றுள்ளது.
இதன் வழியாகத் தமிழ்மரபு அறக்கட்டளை குறிக்கத்தக்க வளமார் பணிகளைச் செய்து வருகிறது என்பது பரவலாக்கப் பெறவேண்டியது.
தமிழக இணைய எழுத்தாளர்கள்
தமிழகம் சார்ந்த வலைப்பதிவர்கள் பலர் எண்ணத்தக்கவர்கள். திண்டுக்கல் தனபாலன், தேவகோட்டை கில்லர்ஜி, புதுக்கோட்டை முத்துநிலவன், தஞ்சை ஜம்புலிங்கம், ஈரோடு கதிர், ஆதிமூலகிருஷ்ணன், செல்வேந்திரன், கார்க்கி, பட்டர்ஃப்ளை சூர்யா, அப்துல்லா, வடகரை வேலன், சஞ்சய் காந்தி, வெயிலான், நாடோடி இலக்கியன், மோகன் குமார், முரளிக்குமார் பத்மநாபன், ஜெட்லி, ஜெய், ஹாலிவுட் பாலா, தராசு இவர்களுடன் கைகோக்கும் பெண் பதிவர்கள் தேனம்மை லக்ஷ்மணன், சும்மாவின் அம்மா, தமிழ்நதி, ரம்யா, வித்யா, லாவண்யா, கலகலப்ரியா, ரோகிணி, ராஜி, விஜி, சந்தனமுல்லை, ப்ரியா, மேனகாசாத்தியா, அனாமிகா, ஹுஸைனம்மா, ராமலட்சுமி போன்றோர் குறிக்கத்தக்கவர்கள். தமிழ்ப் பேராசிரியர்கள் வரிசையில் மு. இளங்கோவன் (புதுச்சேரி), ந. இளங்கோ (புதுச்சேரி), எம்.ஏ சுசீலா (மதுரை), கல்பனா சேக்கிழார் (அண்ணாமலை நகர்), எஸ். சிதம்பரம் (காந்திகிராமம்), மணிகண்டன் (திருச்சி), குணசீலன் (காரைக்குடி) போன்றோர் குறிக்கத்தக்கவர்கள்.
இவ்வாறு பொதுவான நிலையில் இணையத் தமிழை இயக்கும் இவர்கள் தாண்டி நவீன இலக்கியத்திற்கு வழிவகுக்கும் இணைய இணைப்புகள் உண்டு. அவற்றை ஆராய்வது இக்கட்டுரையின் மையம் ஆகின்றது.
நவீன இலக்கியப் போக்கும் இணையமும்
இலக்கியம் ஏதேனும் ஓர் இயக்கம் சார்ந்தே இயங்குகிறது. தற்போது பின்நவீனத்துவ காலம் என்று இலக்கியத்திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். பின்நவீனத்துவப் போக்கு கி.பி. 1950 முதலே தொடங்கிவிட்டது என்று கருதப்படுகிறது.
பின் நவீனத்துவ இலக்கியம் என்பது கட்டுடைப்பு இலக்கியம். இதற்கு வாகானது இணையதள எழுத்து. ஒரே தளத்தில் கவிதை எழுதலாம். கதை எழுதலாம். பயணம் செல்லலாம். புகைப்படம் ஒட்டலாம். குறும்படம் சேர்க்கலாம். இந்நிலையில் ஒரே மையத்தை நோக்கிப் பயணிக்காத எழுத்து உலகம் இணைய உலகம். இது பின்நவீனத்துவ போக்கிற்கு மிகப் பொருந்துவது.
பின் நவீனத்துவம் என்பதை மையத்தை சிதறடித்தல், ஒழுங்கை குலைத்தல், யதார்த்த மீறல், எதிர்நிலையாக்கல், கேள்விகளால் துளைத்தல், கேலிசெய்தல், பன்முகமாய்ப் பார்த்தல், சொற்களால் விளையாடுதல், அதிர்ச்சிகளைத் தருதல், கனவுநிலையில் மொழிதல், பேசக் கூடாதனவற்றைப் பேசுதல் என்ற நிலையில் நோக்கியாக வேண்டும். பெண்ணியம், தலித்தியம், பெரியாரியம் போன்றன பின் நவீனத்துவ சிந்தனை பெற்ற இயங்கள் ஆகும். இவை தமிழ்உலகில் தற்போது ஆட்சி புரிந்து வருகின்றன.
இணையத்திலும் பின்நவீனத்துவப் பாதை திறக்கப்பெற்றுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்வுகள் போன்ற பல தளங்களிலும் கட்டுடைப்பு நிமிடந்தோறும் நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
பின் நவீனத்துவப் போக்கின் சாயல் தெரிந்தோ தெரியாமலோ படைப்பு உலகிலும், திறனாய்வு உலகிலும், நடைமுறை வாழ்விலும் என மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்தே வருகின்றன. இவற்றை ஏற்றே ஆக வேண்டும்.
சிறுகதை
இணையத்தில் சிறுகதைகளுக்குத் தனித்த இடம் உண்டு. சிறுகதைகள்.காம், அழியாச்சுடர், எழுத்து போன்ற தளங்களில் பல எழுத்தாளர்களால் சிறுகதைகள் எழுதப்பெற்று வருகின்றன. ஆயிரத்து நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கதைகளைக் கொண்டுள்ளது சிறுகதை.காம் என்ற தளம். இத்தளம் தற்போது கட்டணம் செலுத்தினால் பார்க்கவேண்டிய நிலையை அடைந்துள்ளது.
தமிழ்ச்சிறுகதையை தமிழ்நாட்டுச் சிறுகதை, இலங்கைச் சிறுகதை, மலேசியச் சிறுகதை, சிங்கப்பூர் சிறுகதை, ஆஸ்திரேலியா சிறுகதை என்று இனம்பிரித்துக் காணமுடியாமல் ஒரு குடைக்குள் அடக்கியிருக்கிறது இணையம். இது அமைதியாக நடந்து வரும் பெருவெற்றி.
இக்கால இணையச் சிறுகதைகளின் தன்மையை அறிந்துகொள்ள சில சிறுகதைகளை ஆராயவேண்டியுள்ளது. கேபிள் சங்கர் எழுதிய ரமேஷும் ஸ்கூட்டிப்பெண்ணும் கதை சற்று மாறுதலானது. ரமேஜஷ் யாருக்கும் உதவாத யாருக்கும் செலவு செய்யாத கஞ்சத்தனம் கொண்டவன். அவனை அலுவலகம் முடித்தவுடன் தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிளம்புகிறார் அவர். நடுவழியில் ஒரு ஸ்கூட்டியை கிளப்பமுடியாமல் நிற்கிறாள் ஒரு இளம்பெண். நேரம் இரவு நடுநிசியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ரமேஷ் அவரை வண்டியை நிறுத்தச் சொல்லி அப்பெண்ணின் வண்டியைக் கிளப்ப முயற்சிக்கிறான். எரிபொருள் இல்லா நிலையில் அவரின் வாகனத்தில் உள்ள எரிபொருளை ஸ்கூட்டிக்கு மாற்றி அப்பெண்ணை வீடுபோக வழி செய்கிறான். ரமேஷ் செய்த இந்தக் காரியத்தால் நான்கு கிலோமீட்டர் அவரும் அவனும் அவர்களின் வண்டியைத் தள்ளிக்கொண்டே வந்து எரிபொருள் நிரப்பினார்கள். ரமேஷுடம் அவர் கேட்டார்… இளம்பெண் என்றால் வலிய வந்து உதவுவீர்களா என்று. அதற்கு ரமேஷ் சென்னா பதில் கதையின் திருப்புமுனையாகிறது. சார்…. இதேஇடத்தில் பல கற்பழிப்புகள் நடந்திருக்க….என் காதலியை நான் இதே இடத்தில் இழந்திருக்கிறேன். இந்தப் பெண்ணை இழந்து இன்னொரு காதலன் தவிக்கக் கூடாது என்றுதான் செய்தேன் என்றான். இதுவரை இது கதை. இதன் பின்குறிப்பாக ஒன்று தரப்பெறுகிறது. நண்பர் ராஜ் சொன்ன ஒரு சம்பவத்தின் தாக்கத்தில் எழுதியது என்பதே நவீனத்துவத்திற்கு இணையச் சிறுகதை நகர்கிறது என்பதற்கு அடையாளம். (கேபிள் சங்கரின் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதை.)
க. முருகதாசன் எழுதிய ’ஒரு திருடனும் அவனின் காதலியும்’ என்ற கதை இலங்கை புலம்பெயர் எழுத்து சார்ந்தது. ராஜேஸ்வரன் சந்திரகௌரி ஆகிய இருவரும் பால்யகால நண்பர்கள். அவர்கள் எதிர்பாராத விதமாக இலண்டனில் சந்திக்கிறார்கள். இருவரும் தங்களின் பால்யகால நினைவுகளை மீட்டெடுக்கிறார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும்போது ராஜேஸ்வரன் சந்திகௌரியின் பென்சில் ஒன்றைத் திருடிவிட இதன் காரணமாக அவனுக்குள் ஒரு திருடன் மறைந்திருந்தான். அதனை ஈடுசெய்ய சந்திரகௌரியின் பிறந்தநாள் அன்று ஒற்றை மஞ்சள்நிறப் பென்சிலை வழங்கி அதனுள் தான் செய்த திருட்டுத்தனத்தையும் எழுதி மன்னிப்பு கேட்டிருந்தான். அவள் அதனைப் பெற்றுக்கொண்டு கவனமாகக் கடிதத்தைப் படித்துவிட்டு அவனை அணைத்து அவள் ஒரு கடிதம் தந்தாள். அது 1966ஆம் ஆண்டு எழுதப்பெற்றது. ராஜேஸ்வரனுக்கு அவள் எழுதிய பழைய காதல் கடிதம் அது. ராஜேஸ்வரன் அக்கடிதத்தைப் படித்துவிட்டு அவளின் தோழியிடம் கேட்டான் இன்னும் சந்திரகௌரி திருமணம் செய்து கொள்ளவில்லையா என்று. அத்தோழி ஆம் என்றாள். இதன் பிறகு நடந்ததை நடப்பதை வாசகர் தாமே அறிந்து கொள்ளட்டும். (அக்னிக்குஞ்சு இதழில் வெளிவந்த கதை.)
ஒருபக்கக் கதைகள், சிறு சிறுகதைகள் என்பனவாகவும் இணையத்தில் எழுதப்பெறுகின்றன. எழுத்து இதழில் பல சிறுசிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு பெண் தன் கணவனை மருத்துவமனையில் சேர்த்திருந்தார். உடல்நலம் தேறி தன் கணவரை வீட்டுக்கு அழைத்துவரும் நிலையில் மருத்துவர் சில ஆலோசனைகளை வழங்கினார். உங்கள் கணவருக்கு ஓய்வு தேவை. சில தூக்க மாத்திரைகளைத் தந்துள்ளேன் என்றார் மருத்துவர். மனைவியும் அவற்றை வாங்கிக்கொண்டுக் கிளம்ப முயன்றபோது மருத்துவர் சொன்னார் இந்தத் தூக்க மாத்திரைகள் உங்களுக்கு என்று … இதனை ஆடிட்டர் செல்வமணி பதிந்துள்ளார்.
இவ்வாறு தமிழ்ச்சிறுகதையின் நவீனப் போக்குகளுக்கு இணையம் வழி வகுக்கிறது. பல்லாயிரம் கதைகள் எழுதப்பெற்று வருகின்றன. அவற்றைக் காணவும் ஆராயவும் படிக்கவும் நிறைய நேயர்கள் தேவை.
இணையதளம் உலாவும் கவிதைகள்
வார்ப்பு என்ற இணையக் கவிதை இதழ் வாரந்தோறும் புதிய புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் இணைந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் இணையத்தில் எழுதுபவர்கள். அவர்களின் கவிதைகள் இணையதளக் கவிதைக்களத்தில் முன்னிற்பனவாகும். நளாயினி தாமரைச் செல்வன் எழுதிய சிறுகவிதைகளில் நவீனத்துவச் சிந்தனை இருக்கிறது.
தலையில் காக்கா எச்சம்.
தற்செயல் நிகழ்வு.
தடை தாண்டு.
***
மழையில் நனை.
வழிநீர் கரை.
புதிதாய்ப் பிற.
பழைய மரபில் இருந்து விடுவித்துக் கொண்ட சிறுகவிதைகள் இவை. சிபிச் செல்வன் என்பவர் சில பின்நவீனத்துவக் கவிதைகளை மொழிபெயர்த்துத் தன் தளத்தில் தந்துள்ளார்.
மூலம்: வங்காளம் : ரத்தின் பந்தோபாத்யாய
ஆங்கிலம் வழி: அனுஸ்ரீபிரசாந்த்
மனைவியின் தினசரிப் பழக்கங்கள்
இனிமேல்
( ஆகையால்/எடுத்துக்காட்டாக/மேலும் )
காலையில் கோல்கேட்
மெல்லிய பிரிட்டானியா
சார்மினார்
நீலநிற ஜீன்ஸ்
சீர்ப்படுத்த முடியாத பெருங்குடல் வீக்கம்
சாலையில் வலது இடது புறங்களைப் பார்த்துவிட்டு கடந்துபோதல்
***
வரிக்குதிரை. போக்குவரத்து நெரிசல். வரிக்குதிரை
கடந்து கொண்டிருக்கிறது வரிக்குதிரை கடந்துகொண்டிருக்கிறது வரிக்குதிரை
கடந்துகொண்டிருக்கிறது வரிக்குதிரை
அந்த வரிக்குதிரை குளிர்கால சூரியத் தடுப்பிற்காகத் தொப்பி போட்டு
உல்லாச பயணம் மேற்கொள்கிறது
மிருகக்காட்சி சாலையில்
ஒவ்வொரு வருடமும்……
இத்யாதி
தொடர்பற்றுத் தொடரும் இத்தகைய கவிதைகளின் இணைவற்ற போக்கே பின்நவீனத்துவப் போக்காகின்றது, நிசப்தம் அறக்கட்டளை அமைப்பில் செயல்படும் வ. மணிகண்டன் எழுத்தாளர், பொறியாளர், சிந்தனையாளர். அவரது தளத்தில் பின்வரும் ஒரு கவிதை இடம்பெற்றுள்ளது. இதன் நவீனத் தன்மை அசல் நகல் குழப்பத்தில் வாசகனைத் தடுமாற வைப்பதை உணர முடிகின்றது,
வித்வான் ஷண்முகசுந்தரம் ஒரு தவில் கலைஞர்
அவர் எல்லோராலும் முட்டாளாக
மதிக்கப்படுபவரென்றால் அது மிகையாகாது
குறிப்பாக அவரது மூத்த சகோதரர் பாலண்ணன்
எவ்வளவு நேர்த்தியாக அடித்தாலும்
ஒரு அடி பிந்திவிடுவது ஷண்முகத்தின் வழக்கம்
அப்போதெல்லாம் பாலண்ணன் லாவகமாக
நாதஸ்வரத்தில் ஒரு இடியிடிப்பார்
சிலர் இவரை ‘தனித்தவில் கலைஞர்’ என்றும்
நகைச்சுவையாகக் கூறுவதுண்டு
அன்று மாவட்ட எல்லையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி
வாசித்துக் கொண்டிருந்த நூறு வித்வான்களில்
ஸ்ரீமான் ஷண்முகசுந்தரம்
ஒன்று, முதலாக இருந்தார்
அல்லது
கடைசியாக இருந்தார்
நிகழ்ச்சி முடிந்து
செம கடுப்பில்
அவரை அம்போவென கைவிட்டுக் கிளம்பினர்
தான் ஒரு முட்டாள் என்பதையறியாத
ஷண்முகசுந்தரம்
உண்மையாகவே தனித் தவிலடித்தபடி
நெடுஞ்சாலையில் நடக்கிறார்
டாரஸ் லாரியில் வந்த கடவுள்
நிறுத்தி
வருகிறீர்களா என்று கேட்டார்
அப்போது
ஸ்ரீமான் ஷண்முகசுந்தரத்திற்கு பெருமை பிடிபடவில்லை.
இதனை எழுதியவர் கவிஞர் கண்டராதித்தன். இவரின் கவிதையை அதன் நவீனத்தன்மையை வ. மணிகண்டன் வியந்துள்ளார்.
இணையக் கவிதைகள் பல பெரும்பாலும் பழைய பாடுபொருள்களை உடையன என்றாலும் நவீனத்தன்மையைத் தொட்டுப்பார்க்கும் கவிதைகளும் களத்தில உள்ளன.
பின்நவீனத்துவத் திறனாய்வுகள்
இணையத்தில் பெண்ணியம், பெரியாரியம், பொதுவுடைமை என்ற நிலைகளில் பல நவீனத்துவ இயத் திறனாய்வுகள் கோலோச்சுகின்றன. இணையத்தில் கிடைக்கும் பேரா பூரணச்சந்திரன், பேரா தமிழவன், பேரா அ. இராமசாமி, அ.மார்க்ஸ், ஜமாலன் ஞானி போன்றோர் தம் எழுத்துகளில் பின் நவீனத்துவப் போக்குகள் காணப்படுகின்றன. பெண்ணியம் சார்ந்து பல இணைய எழுத்துகளை பெண்ணியம் இதழ் வெளிப்படுத்தி வருகிறது. கட்டு்ரைகள், செவ்விகள், செய்திகள் என்று பெண்ணியச்சார்பில் இயங்கும் பெண்ணியம் தளம் குறிக்கத்தக்கது.
பெரியாரியக் கொள்கைகளை விளக்கும் குடியரசு, தமிழ் ஓவியா போன்றன பின் நவீனத்துவ நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. மார்க்சிய கொள்கைகளை முன்னெடுப்பதில் ந. ரவீந்திரனின் எழுத்துகள் கவனிக்கத்தக்கன. உளவியல் ஆய்வுகளில் சி.மா இரவிச்சந்திரனின் தளம் முக்கியமானது. இவற்றின் வழியாக பின்நவீனத்துவம் பற்றியும் அதனை ஆராயப்புகுத்தும் பயிற்சி குறித்தும் அறிந்துகொள்ள முடிகின்றது.
மொத்தத்தில் இணைய எழுத்து என்பது முன்னுக்கும் பின்னுக்கும் வலதிற்கும் இடதிற்கும் வாய்ப்பளிக்கும் ஒளிவுமறைவற்ற கணினித் திரையாகின்றது. இதன் பின்னுள்ளவர்கள் தங்களை வெளிப்படுத்தத் தயங்குவது ஏன் என்று புரியவில்லை. அவர்கள் வெளிப்பட வேண்டும். பழையதை பதிவு செய்யும் முன்னவர்கள் ஒருபுறம் இருக்க, நவீனத்தை நோக்கித் தமிழைநகர்த்த இணையத்தால் மட்டுமே இயலும். இந்தக் கருவியைச் சரியாக பயன்படுத்தவேண்டும். ஒரு நூலை அச்சாக்க ஒரு அச்சகம் வேண்டும். அதனை வெளியிட வெளியீட்டு நிறுவனம் வேண்டும். வண்ண அச்சு என்றால் கூடுதல் செலவு. இது எதுவுமில்லாமல் நாளும் எழுதக் கிடைத்த அற்புத வெளி இணையம். நவீனத்தை நோக்கி இன்றைய நிமிடத்தை நகர்த்துவோம். இணையத்தில் இணைவோம்.
‘மாந்தரை மீமிசை மாந்தராக மலர்த்துவன பாடல்களாகும். பாட்டுஉணர்வு உணர்வுகளின் உயர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே நம் முன்னோர்கள் சிறந்த பாட்டுணர்ச்சி உடையவர்களாகவும் இசையீடுபாடு கொண்டவர்களாகவும் விளங்கியுள்ளனர்’ என்ற கருத்தினைக் கொண்டவர் பெருஞ்சித்திரனார் ஆவார். மேம்பட்ட பாட்டுணர்வால், இருபதாம் நூற்றாண்டுப் பாட்டிலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவராக இவர் விளங்குபவர். இவரின் பாடல்களில் பொதிந்துள்ள குமுகச் சிந்தனைகளை இக்கட்டுரை முன்வைக்கின்றது.
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை. மாணிக்கம் என்பதாகும். சேலம் மாவட்டத்தில் பிறந்த இவர் உலக ஊழியர், தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார், மொழிஞாயிறு பாவாணர் உள்ளிட்ட அறிஞர்களிடம் தமிழ் கற்கும் வாய்ப்பினைப் பெற்றவர். இப்பெருமக்கள் யாவரும் இயல்பிலேயே தமிழறிவும், தமிழ் உணர்வும் தழைத்தவர்களாக விளங்கியவர்கள். இவர்களிடம் கற்ற பெருஞ்சித்திரனார் பின்னாளில் தமிழ் இலக்கிய உலகில் போற்றப்படும் முன்னோடிப் பாவலராக மலர்ந்தவர்.
பெருஞ்சித்திரனார் இளம் அகவையிலேயே பாடல் எழுதவும், பாவியம் புனையவுமான பேராற்றல் கொண்டிருந்தவர். தம் பதின்மூன்றாம் அகவையிலேயே பூக்காரி என்னும் பாவியம் வரைந்தவர். கையெழுத்து ஏடுகள் நடத்தியவர். புதுச்சேரி அஞ்சல் துறையில் பணியில் இணைந்த இவருக்குப் பாவேந்தரிடம் அமைந்த தொடர்பு, பாட்டுத்துறையில் மிகப்பெரிய ஈடுபாட்டை உருவாக்கியது. பணிமாறுதலால் கடலூருக்கு இவர் சென்றபொழுது அங்குத் தென்மொழி என்னும் இலக்கிய ஏட்டினைத் தொடங்கி(1959) நடத்தியவர். இக்காலகட்டத்தில் தென்மொழி ஏட்டிலும் தமிழகத்தில் வெளிவந்த பிற ஏடுகளிலும் தமிழுணர்வு தழைக்கும் பாடல்களை இயற்றி இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் தமிழுணர்வை ஊட்டும் பணியில் ஈடுபட்டவர்.
பெருஞ்சித்திரனார் ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து உள்ளிட்ட பாவியங்களையும், கனிச்சாறு, பள்ளிப் பறவைகள், நூறாசிரியம் உள்ளிட்ட பாட்டுத் தொகுதிகளையும் இயற்றியவர்.
பெருஞ்சித்திரனார் காலத் தமிழக நிலை
பெருஞ்சித்திரனார் பிறந்து (1933) வளர்ந்த காலகட்டம் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். பெரியாரின் தன்மதிப்புச் சிந்தனைகள், பகுத்தறிவுப் பார்வை, ஆரிய, புராண, இதிகாச எதிர்ப்புகள் நாடெங்கும் சுடர்விட்டு நின்றன. தவத்திரு மறைமலையடிகளாரின் தனித்தமிழ்ப் பார்வை தமிழகத்தில் நல்ல வளர்ச்சி பெற்ற சூழல் நிலவியது. பாவாணரின் மொழி, இன மீட்சி ஆய்வுகள் மக்களிடம் பரவலாக அறிமுகம் பொற்றிருந்தன. சமற்கிருத மேலாண்மை, கட்டாய இந்தித் திணிப்பு, ஆங்கில வல்லாதிக்கம் மேலோங்கியிருந்த காலகட்டத்தில் பெருஞ்சித்திரனாரின் இலக்கியப் பணி தொடங்கியது. தமிழகத்தில் நிலவிய இச் சூழலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கல்வி உலகத்தில் கருத்துடையோர் இருந்தமையையும் இங்குக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
வடமொழிச் சார்பாளர்களும், அம்மொழியிலிருந்தே தமிழுக்கு அனைத்தும் வந்தன என்போரும், வடமொழிச் சார்பின்றித் தமிழ் தனித்து இயங்காது என்போரும் அக்காலத்தில் மிகுந்திருந்தனர். தமிழ்ப் பேராசிரியர்கள் சிலரும் இக் கருத்துகளைக் கொண்டிருந்தனர். மேலும் கொச்சைத் தமிழ்தான் தமிழ் என்றும், தூய தமிழ் காலத்துக்கு உதவாது என்றும், இந்தி படிப்பது நன்மை தரும் என்றும் சில அறிஞர்கள் கருத்தினை முன்வைத்தனர். இவற்றை எதிர்க்கும் போர்முரசமாகப் பெருஞ்சித்திரனாரின் பாட்டுக்குரல் ஒலித்துள்ளது. தமிழீழப் போராட்டம் வேர்விட்டுப் பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருந்த காலம் பெருஞ்சித்திரனாரின் இயக்கப்பணிக் காலமாகும். இதனால் இயக்க ஈடுபாடுள்ள இளைஞர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பவராகவும் பெருஞ்சித்திரனார் விளங்கினார்.
பெருஞ்சித்திரனார் தமிழில் நல்ல புலமையும், தமிழியச் சிந்தனையும் கொண்டவராக விளங்கித் தமக்கெனத் தனித்த கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயல்படத் தொடங்கியவர். தமிழினத்தின் பெருமையையும் அவர்களின் மொழிச் சிறப்பையும் இடைக்காலத்தில் தமிழுக்கு நேர்ந்த கேடுகளையும் வரலாற்று வழியாக உணர்ந்திருந்த பெருஞ்சித்திரனார் தமிழர்களையும் தமிழ்மொழியையும் மேம்படுத்தும் நோக்கில் தம் படைப்புகளை வழங்கத் தொடங்கினார். தம் கொள்கைகளை நிலைநாட்டவும், தம் எதிர்ப்புகளை வெளிப்படுத்தவும் இவர் எழுதிய எழுத்துகள் இவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தமை போல் எதிர்ப்புகளையும், சிறைத்தண்டனைகளையும் பெற்றுத் தந்துள்ளமையை இவர் வரலாற்றைக் கற்கும்பொழுது அறியமுடிகின்றது.
தமிழ்நாடு என்பது இன்றுள்ள கன்னியாகுமரிக்குத் தென்பகுதியில் இருந்த பெருநிலபரப்பு; பண்டைக்காலத்தில் இது இலெமூரியாக் கண்டமாக விளங்கியது; இந்த நிலப்பரப்பில்தான் முதல் மாந்தன் தோன்றினான்; அவன் பேசியமொழி தமிழ்; இத்தமிழ் மொழியே உலக மொழிகளுக்குத் தாய்; ஆரியத்திற்கு மூலம்; இங்கு வாழ்ந்த மக்களே உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர்; காலப் பழைமையால் இவர்கள் பேசும் மொழிகளில் திரிபுகள் உண்டாயின எனத் தம் ஆசிரியர் பாவாணர் கொள்கைகளை முழுவதும் கொண்டவர் பெருஞ்சித்திரனார். மேலும் மதம் வழியாகப் பின்னப்பட்டுள்ள சமூக இழிவுகளிலிருந்து தமிழர்கள் விடுபட்டு, கலை, இலக்கியப் பண்பாட்டில் மேம்பட்டவர்களாக வாழவேண்டும் என்ற கொள்கையையும் வரித்துக்கொண்டவர்; ‘கெஞ்சுவதில்லை பிறர்பால்; அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை” என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தவர். எனவே இக்கருத்துகளை நிலைப்படுத்தவும், பரவலாக்கவும், தம் கொள்கைகளுக்கு முரண்பட்டவர்களை எதிர்த்துக் கருத்துரைக்கவும் அஞ்சாதவராகப் பெருஞ்சித்திரனார் விளங்கியவர். இக்கொள்கைகளை நிலைநாட்ட எழுத்தாலும் பேச்சாலும், இயக்கத்தாலும் பாடுபட்டவராகப் பெருஞ்சித்திரனாரை மதிப்பீடு செய்யலாம்.
பெருஞ்சித்திரனாரின் படைப்புகளில் தமிழ்க் குமூகத்தில் உள்ள சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள், புலவர்கள் அரசியல் தலைவர்கள், தொழிலாளர்கள், இதழாளர்கள் என அனைவரும் தமிழ்ப்பணியாற்ற வேண்டும், இழந்த பெருமையை மீட்க வேண்டும்; பகையை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும் என்பன உள்ளடக்கமாக அமைந்துள்ளன. மொழி வழியாகவே குமுகம் கட்டமைக்கப்படுகின்றது. அனைத்துக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது மொழி என்று உணர்ந்து சாதியாலும் மதத்தாலும் பிரிந்துகிடக்கும் தமிழர்களை ஒன்றிணைக்க முனைந்தார். சாதி ஒழிப்புப் பாடல்கள் பலவற்றை எழுதியவர். தமிழர்களை ஒன்றுபடுத்தும் பல பாடல்களும் இவரால் படைக்கப்பட்டுள்ளன.
“என்மொழி என்னினம் என்நாடு நலிகையில் எதனையும் பெரிதென எண்ணமாட்டேன் – வேறு எவரையும் புகழ்ந்துரை சொல்லமாட்டேன்! – வரும் புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும் பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்!- இந்த(ப்) பூட்கையில் ஓரடி தள்ளமாட்டேன்!
என்று கொள்கை வாழ்க்கை வாழ்ந்தவர் பெருஞ்சித்திரனார்.
“மூச்சுள்ள வரைக்கும் – உலகத் தமிழின முன்னேற்றம் ஒன்றே பேசுவேன் – அதில் ஏச்சுகள் பேச்சுகள் ஆயிரம் வரினும் எதிர்நின் றிருகை வீசுவேன்…….”
என்று பாடிய இவர்,
“எந்தக் கட்சியில் நீயிருந்தாலும் இனத்தை மறந்துவிடாதே! தமிழா இனத்தை மறந்துவிடாதே!’
என்று பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்த விழைந்து எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தமிழைக் கற்போரும் கற்பிப்போரும் பேசுவோரும் கணக்கின்றி உள்ளனர். வெற்று ஆரவாரக் கூச்சல்களால் பயன் இல்லை எனவும், ஒவ்வொருவரும் தமிழ்ப்பற்றுடன் விளங்கவேண்டும் எனவும் பெருஞ்சித்திரனார் விரும்பியவர். கல்வி நிலையங்கள் தமிழ்ப்பற்றை ஊட்டும் இடமாக விளங்கவேண்டும்; ஆசிரியர்கள் வகுப்பறைகளில் தமிழ்ப்பற்றை ஊட்டும் பணியைத் திறம்படச் செய்தல் வேண்டும்; மாணவர்கள் தமிழ்ப்பற்றுடன் இருக்க வேண்டும்; நாட்டை ஆளும் தலைவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கி ஆக்கப்பணிகளில் முன்னிற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுத் தமிழ்ப்பற்றுக்கு வழிகாட்டியவர். இத்தகு வைர வரிகளை மனத்துள் தேக்கிய மாணவர்களும், ஆசிரியர்களும், தலைவர்களும் கூடி இந்தி எதிர்ப்புப் போரில் வினையாற்றி வெற்றி வாகை சூடியமையை இங்கு எண்ணிப்பார்த்தல் வேண்டும். இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர்களின் தமிழ்ப்பற்றுக்குக் காரணமாகப் பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் அக்காலத்தில் விளங்கின.
தமிழ்த்தொண்டு செய்வோரின் கடமையைப் பின்வருமாறு குறிப்பிடுவார்.
“தமிழ்ப்பற்றை ஊட்டாத தமிழ்க்கல்வி தமிழர்க்குத் தீங்கு செய்யும்! தமிழ்ப்பற்றை எழுப்பாத கணக்காயர் தருந்தமிழால் தமிழர் தாழ்வர்! தமிழ்ப்பற்றை வளர்க்காத மாணவரால் தமிழ்நாட்டைக் கேடு சூழும்! தமிழ்ப்பற்றுக் கொள்ளாத தலைவரெல்லாம் தமிழ்நாட்டுப் பகைவ ராமே!” (1960, கனிச்சாறு, தொகுதி 1)
பேராயக் கட்சியினரும் அக்கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட அறிஞர்கள் சிலரும் வடவெழுத்துகளை வகைதொகையின்றிக் கலந்து எழுதினால்தான் தமிழ் வளரும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். தமிழ்ச்சுவையறியாத எளிய நிலை மக்களும் இக்கருத்தை மொழிவது உண்டு. இதனைப் பெருஞ்சித்திரனார்,
என்று கடிந்து எழுதியுள்ளார். தமிழ் மொழியில் பிற எழுத்தோ, பிற சொல்லோ கலந்தால் அதன் தூய்மை கெடும் என்பதை அறியாமல் அக்காலத்தில் ஆட்சியில் இருந்தோர் எடுத்த முடிவுகளைப் பெருஞ்சித்திரனார் துணிவுடன் கண்டித்துள்ளதை இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகின்றது.
தனித்தமிழ் இயக்க அறிஞர்களின் தொடர்ந்த செயல்பாடுகளால் வடவெழுத்து, வடசொற்கலப்பு தடுத்து நிறத்தப்பட்டு எங்கும் தூய தமிழ் நிலைபெற்றமை வரலாறாகும். ‘அபேட்சகர்’ என்பது வேட்பாளர் எனவும், ‘அக்கிரசனாதிபதி’ என்பது தலைவர் எனவும், ‘ஸ்டேஷன்’ என்பது நிலையம் எனவும், ‘வந்தனா உபசாரம்’ என்பது வரவேற்புரை எனவும் வழக்கிற்கு வந்தமைக்குத் தனித்தமிழ் அறிஞர்களின் உழைப்பு பெரிய அளவில் பயன்பட்டுள்ளது.
இளைஞர்களுக்குத் தமிழ்ச்சிறப்பை எடுத்துரைத்து அவர்களைத் தமிழ் மறவர்களாக மாற்றும் பணியைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் செய்துள்ளன. தமிழ்ச்சிறப்பு எடுத்துரைத்தல், தமிழ்ப்பகைவர்களை அடையாளம் காட்டல், பகைமுடித்து மொழிகாத்தல் என நெறிப்படுத்தும் பணியைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் செய்துள்ளன.
அறப்போர் புரி! சிறப்பாந் தமிழ் மறப்போர் புரிவாய்! – உயிர் துறப்பார்க் கினிப் பிறப்பார் வயின் இறப்பே தடடா!
சிறுத்தாய் என ஒறுத்தார்; துயர் பொறுத்தாய் பலநாள்! – உயர்(வு) அறுத்தார்; குரல் மறுத்தார்; நிலை நிறுத்தாய் நெடுந்தோள்!” (1963, கனிச்சாறு, தொகுதி 1)
என்று எழுதியுள்ள வரிகள் பெருஞ்சித்திரனாரின் தமிழ்ப்பற்றினையும் இன மேன்மைச் சிந்தனையையும் எடுத்துரைப்பதுடன் அவர்க்கு அமைந்திருந்த யாப்பாளுமையையும் புலமைச்செறிவையும் நமக்குப் புலப்படுத்துகின்றன.
பெருஞ்சித்திரனார் 1965 ஆம் ஆண்டு அளவில் இந்தி எதிர்ப்புப் பாடல்களைத் தம் இதழ்களில் எழுதி மாணவர்களுக்கும் மக்களுக்கும் தமிழ் உணர்வூட்டியதால் அரசால் சிறைசெய்யப்பெற்று, வேலூர்ச் சிறையில் தளைப்படுத்தப்பட்டார். அப்பொழுது மார்கழி மாதம் என்பதால் திருவெம்பாவை, திருப்பாவைப் பாடல்களைப் பெண்டிர் பாடுவதை அறிந்த பெருஞ்சித்திரனார் பாவைப் பாடல்களின் அமைப்பில் பாடல்களை எழுதிப் பெண்குலத்தைத் தமிழ்காக்கும் பணிக்கு அழைத்துத் தம் பங்களிப்பை வழங்கியுள்ளார். 30 பாடல்களைக் கொண்ட இப்பாடல்கள் ‘செந்தமிழ்ப்பாவை’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது.
மேற்கண்ட பாடலில் கற்றவர்களின் நிலையையும், அரசாட்சியில் இருப்பவர்களின் நிலையையும் எடுத்துரைத்துத் தமிழினம் அழியும் முன்பாக இவ்வினத்தைக் காப்பதற்குப் பெண்குலத்தோர் முன்வரவேண்டும் என்று குறிப்பிடுவதை இங்குக் கவனித்தல் வேண்டும்.
“செந்தமிழுக்குத் தீதோ? தெளிதேனில் வெங்கசப்போ? எந்தமிழர் செந்நாவுக் கிந்தியோ? ஏலோம் யாம்! கந்தை உடுப்போம்! கிழங்குண்போம் கான்செல்வோம்! இந்தி படிக்க இசையோம் யாம்” என்பதனை வெந்த உளத்தோடும் வெல்கின்ற வீறோடும் இந்தத் தமிழ் நிலத்தின் ஏந்திழையார் கூறுவரேல் வந்து புகுமோ? வடக்குமொழி? வார்குழலாய்! முந்தி எழுந்தே முழங்கேலோ ரெம்பாவாய்!
இந்தப் பாடலில் பழைய வடிவத்தை எடுத்துக்கொண்டு காலத்தேவைக்கு ஏற்ற கருத்தைப் பொதியவைத்து எழுதியுள்ள திறம் போற்றுதலுக்கு உரியது. குமுகத்தில் பெரும்பான்மைப் பெண்கள் பக்திவயப்பட்டவர்களாக இருப்பதும், சமய, மத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதும் கண்கூடு. இவர்களைச் சென்று சேரவேண்டிய கருத்துகளை இவர்களுக்கு அறிமுகமான வடிவத்தில் பெருஞ்சித்திரனார் வழங்கியுள்ளமை மிகச் சிறந்த உத்தியாகக் கொள்ள வேண்டும்.
மொழியியல் பேராசிரியர்கள் சிலர் எழுதுவதெல்லாம் இலக்கியம் என்று கூறும் கருத்தைப் பெருஞ்சித்திரனார் மறுத்து,
என்று இலக்கியம் எழுதுவோர் நல்லறிவு பெற்றவராகவும் மொழிநலம் பேணுபவராகவும் இருக்க வேண்டும் என்று கடிந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறைப் பேராசிரியரை இடித்து எழுதியுள்ளமை இவரின் மொழிக்காப்பு முயற்சிக்குச் சான்றாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் வெளிவரும் தாளிகைகள், இதழ்கள் யாவும் தமிழ்ப்பெயரின்றி வருகின்றன; தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான கருத்துகளையும் படங்களையும் தாங்கி வருகின்றன. இதனைக் கண்டித்துப் பல பாடல்களை எழுதியுள்ளார். மிகுதியான மக்கள் படிக்கின்றனர் என்றோ, இதழ் நடத்துபவர்கள் தமிழ்ப்பற்று உடையவர்கள் என்றோ சிறிதும் எண்ணாமல் தம் மொழிக்கு ஊறு ஏற்படுத்தும் வேலைகளை யார் செய்தாலும் அறச்சீற்றம் கொண்ட அரிமாவாகப் பெருஞ்சித்திரனார் பாடியுள்ளார்.
“தமிழரசின் அவைத்தலைவர் செய்தித்தாள் நடத்துகின்றார்; ‘தினத்தந்தி’ ‘ராணி’ என்றே! உமிழ்கின்ற கொச்சைநடை; உடை களையும் புகைப் படங்கள்; ஊர்கெடுக்கும் உரைகள்; காட்சி! தமிழ் நாட்டின் இளைஞர்கை மிளிர் தலெல்லாம் ‘பேசும்படம்’ ‘குமுதங்’கள் இழிந்த நூல்கள்! (1967, கனிச்சாறு, தொகுதி 1,பக்கம் 52)
எனவும்,
“அவாள் இவாள் என்னும் ஆனந்த விகடன் கவர்ச்சி ஓவியக் கழிசடைக் குமுதம்” (கனிச்சாறு, முதல்தொகுதி, பக்கம் 46)
எனவும் தமிழ்ப் பண்பாட்டைக் குலைக்கும் ஏடுகளைப் பெருஞ்சித்திரனார் கண்டித்து எழுதியுள்ளார். இவர் எழுதுவது போன்றே இவ்வேடுகளின் இதழ்ப்பணிகள் இருந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு ஏடுகள் வகைதொகையின்றித் தொடக்கத்தில் சமற்கிருதச் சொற்களைக் கலந்து எழுதுவதையும், தமிழ் மக்களின் அறிவை மழுங்கடிக்கும் செய்திகளைப் பரப்பியதையும், தமிழர் தலைவர்களின் செயல்பாடுகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தமையையும் இவண் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் இந்த ஏடுகள் அட்டைப்படங்களை வெளியிட்டு வருகின்றமை கவர்ச்சியைத் தந்து வணிகம் செய்யும் இழிசெயல் தொடர்வதை நாகரிகக் குமுகம் தம் ஆதரவு நல்கலைத் தவிர்த்தல் வேண்டும் என்கின்றார்.
‘தமிழ் வாழ்க தமிழ் வாழ்க’ என்று வெற்றுரை முழங்குவதால் தமிழ் வாழாது என்று கண்டு உணர்ந்து, இன்றைய அரசியல், பொதுமக்கள் நிலையினைத் தமிழ் வாழ வேண்டுமா? என்ற தலைப்பில் பெருஞ்சித்திரனார் பதிவு செய்துள்ளார்.
என்று கூறி தமிழறிஞர்களைப் பாதுகாப்பதன் வழியாகவும், இழந்த பெருமைகளை மீட்பதன் வழியாகவும் தமிழ் வளர்க்க முடியும் என்கின்றார் (1970, கனிச்சாறு,1: 55).
பெருஞ்சித்திரனார் பாடல்களில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய தாய்மொழி வழிக்கல்வி குறித்த செய்திகள், தமிழ் வழிபாடு (கனிச்சாறு 1: 83), தமிழக அரசு செய்யவேண்டிய தமிழ்ப்பணிகள், பொதுமக்கள் செய்ய வேண்டிய தமிழ்ப்பணிகள், மாணவர்கள் ஆசிரியர்கள் செய்யவேண்டிய தமிழ்ப்பணிகள் யாவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கண்ணெதிரே தமிழுக்கு நேர்ந்துவரும் அழிவுகளைக் கண்டு நேர்க்கூற்றாகவும், தாயின் கூற்றாகவும், பிறர்கூற்றாகவும் பாடல்களைத் தந்துள்ளார்.
“கனித்தமிழ் நிலத்தில் கண்ணெனும் தமிழில் கற்பதுதானே சரி! தனித்தமிழ் மொழியைத் தாழ்த்திய பகையைத் தணலிட்டே, உடன்எரி !” (கனிச்சாறு, தொகுதி 1, பக்கம்,58)
என்று பாடியுள்ளமை இதற்குக் காட்டாகும்.
சுனிதிகுமார் சட்டர்சி என்னும் வடநாட்டு அறிஞர் சமற்கிருத உதவியின்றித் தமிழ் இனிது இயங்காது என்றும், சமற்கிருதத்தின் தயவில் தமிழ் வளர்ந்தது என்றும் கூறியமையைக் கண்டிக்கும் பெருஞ்சித்திரனார், அறிஞர் தொ.பொ.மீ. உள்ளிட்டோர் இக்கருத்துக்கு உடன்பட்டு இருந்ததையும் கண்டிக்கத் தயங்கவில்லை. (கனிச்சாறு, தொகுதி 1: 60)
ஆங்கில இதழ் நடத்துவோர் அதில் பிழையின்றி நடத்த வேண்டும் என்று கூறிக்கொண்டு, தமிழில் இதழ் நடத்தும்பொழுது அதில் பிழை மலிய எழுதுவதைப் பெருஞ்சித்திரனார் கண்டித்துள்ளார் (கனிச்சாறு 1:62).
தமிழர்கள் கட்சியிலும், சாதியிலும் தம்மை இணைத்துக்கொள்வதை விடுத்து மொழியடையாளம் கொண்டு “தமிழர்” என்று கூற வேண்டுமெனப் பல பாடல்களில் எழுதியுள்ளார் (கனிச்சாறு 1: 62). தமிழ் இளைஞர்களும் பெண்களும் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் கூறுகின்றார். தமிழ்ப் பற்றில்லாதவர் எழுதும் நூல்களை ஒதுக்கும்படி வேண்டுகின்றார். தமிழ் நன்கு பயன்படுத்தாத திரைப்படங்கள், வானொலிகளைத் தவிர்க்க வேண்டும் என்கின்றார். தமிழர்களையும் தமிழர் பெருமைகளையும் இழிவுசெய்யும் வரலாற்று நூல்களைத் தவிடுபொடியாக்கி நீக்க வேண்டும் என்கின்றார். பணந்திரட்டும் நோக்கில் நடத்தப்படும் ஏடுகளின் இழிதொழிலை எடுத்துப் பாடியுள்ளார் (கனிச்சாறு1:74). காமச்செய்திகளைக் கவினார்ந்த சொற்களால் வெளிப்படுத்தும் கயவர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும் என்கின்றார் (கனிச்சாறு 1: 71).
தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் என்னும்பெயரில் தமிழ் அழிப்பு முயற்சி இருபதாம் நூற்றாண்டில் பலரால் முன்னெடுக்கப்பட்டு அவ்வப்பொழுது அறிஞர் பெருமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியைக் கடிந்து எழுதும் பெருஞ்சித்திரனார் நாட்டில் சாதி, மதம் காரணமாகவும், இன்னும் பல இழிவுகள் காரணமாகவும் மக்கள் பல்வேறு இன்னல்களை அடைந்து வருகின்றனர். அந்த நிலைகளை மாற்றாமல் எழுத்துச் சீர்திருத்தம் என்ற மாற்றம் வேண்டுகின்றனரே என்று கடிந்து கூறுவதைத்,
இன்று தமிழ்கற்றவர்களின் நிலையை நினைத்துப் பெருஞ்சித்திரனார் கவலை தோய்ந்து எழுதியுள்ளார். இலக்கண இலக்கியத் தேர்ச்சி இல்லை எனவும், புலமையில்லை எனவும், கொள்கைத் தோய்வு இல்லை எனவும் நேர்மை, ஒழுங்கு, மானம் முதலிய பண்புகள் இல்லை எனவும் கூறி, பெரியோரைச் சேர்தல், கிளையினைப் புரக்கும் இயல்பு யாவும் அற்றவர்களாக உள்ளனர் எனக் கூறி அற்றைநாள் புலவரைப் போல் ஒருவரும் இல்லை என்று குறிப்பிட்டுவிட்டு,
என்று நாட்டில் பெரும்புலமை வாய்த்த அறிஞர்கள் இருத்தல் வேண்டும் என்று தம் விருப்பத்தைப் பதிந்துள்ளார்.
நிறைவுரை
தமிழர்களின் உயர்வுக்குத் தமிழ்மொழியே அடிப்படையானது என்று பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அம்மொழியைக் காப்பதன் வழியாகவும், அம்மொழியினர் ஒன்றுபடுவதன் வழியாகவும் தமிழ்க் குமுகம் மேம்படும் என்ற கருத்தினையும் முன்வைத்துள்ளன. பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருந்த தமிழ்க் குமுகம் பலநிலைகளில் தாழ்வுற்றிருப்பதைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் எடுத்துரைத்துத் தமிழர்களும் தமிழ்மொழியும் மேம்பாடு உறுவதற்கான வழிமுறைகளையும் தீர்வுகளையும் சொல்லியுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் நிலவிய பிறமொழி வல்லாண்மை எதிர்ப்பு, தனித்தமிழ்க் காப்பு, சாதியெதிர்ப்பு, பெண்ணுரிமை, அரசியல் உள்ளிட்ட குமுகச் சிக்கலை நடுவணாகக் கொண்டு பல பாடல்களைத் தந்த பெரும்பாவலராகப் பெருஞ்சித்திரனார் விளங்கியுள்ளார்.
குறிப்பு: என் கட்டுரையை எடுத்தாள விரும்புவோர் இசைவுபெறுக. நூல் எழுதுவோர், வெளியிடுவோர் எடுத்த இடம் சுட்டுக.
நன்றி: தமிழ்த்துறை, சமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி
மனித வாழ்வியலுக்கு அடிப்படைத் தேவைகளாகத் திகழ்வது உணவு, உடை, இருப்பிடம் ஆகியன. மனிதகுல வரலாற்றில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதே பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவை. இவைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள், சிதைவுகள் அனைத்தும் வரலாறாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவைகளே ஒரு நாட்டின் அடையாளமாக ஆகிவிடுகின்றன. ஜப்பான் நாட்டின் அடையாளம் சற்றே வித்தியாசமானதாகவே தென்படுகிறது. சமீபத்தில் நான் லெஸ்லி டவுனர் அவர்களின் ஆங்கில வழி ஜப்பானிய “கெய்ஷா” என்ற விரிவான புதினத்தை தமிழில் மொழிபெயர்த்தபோது இந்த எண்ணம் உறுதியானது. ஒரு நாட்டின் முன்னேற்றம், அதன் வீழ்ச்சி என அனைத்தும் அந்நாட்டின் பெண்களின் நிலையை வைத்தே எளிதாக எடை போட முடியும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
மெய்க்கோ
உலக அரங்கில் நவீன ஜப்பான் பொருளாதாரத்தில் பெருமளவு முன்னேறியிருக்கின்றது. ஜப்பானியப் பெண்கள் அதிகாரம் மற்றும் தன்னாட்சியைப் பொறுத்தவரை பாரம்பரியமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். ஒரு ஆண் வீட்டின் தலைவனாகவும் குடும்பத்தின் வெளி உலக பொது விவகாரங்களைக் கட்டுப்படுத்தக்கூடியவராகவும் இருக்கின்றான். வீட்டில் உள்ள மனைவி குடும்பத்தை நிர்வகிப்பதில் கட்டுப்பாடுடன் செயல்படலாம். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பின்னர் ஜப்பானில் குடும்ப கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பங்களில் ஆணாதிக்கம் கண்டுவருகின்றது. 1947 அரசியலமைப்பில் பாலியல் சமத்துவக்கொள்கை நிறுவப்பட்டது. பாரம்பரியக் குடும்ப அமைப்பு சட்டக் கட்டமைப்பை கலைத்து வந்தாலும், பெண்கள் நிலையில் சட்ட மாறுதல்களால் நடைமுறைத் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புச் சட்டங்கள், கல்வி சமத்துவம், மற்றும் வேலை, தொழில் முன்னேற்றம் போன்றவைகள் சிறந்துள்ளன.
ஜப்பானில் பாரம்பரியக் கலைகள் என்பது காரியங்களைச் செவ்வனே செய்யும் விதத்தைக் கற்கும் வடிவமேயன்றி ஒருவர் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதற்கானது அல்ல. பூரணத்துவம் என்பதே இதன் கொள்கை; மரபின் பூரண வெளிப்பாடு, சரியான இடம், காலம் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு சரியான கிமோனோ உடையைத் தேர்ந்தெடுத்து அணிவது போன்றவை. ஒரு கெய்ஷா என்பவள், பாரம்பரிய முறையில் அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தம்மை முழுமையாக கலைக்கு அர்ப்பணிக்கும் ஒரு கலைஞர்.
கெய்ஷா என்பவர்கள் யார்?
கெய்ஷாவின் வரலாறுகள் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றாலும், அவை பழைமையான விபச்சாரத்தொழில் என்றே கருதப்பட்டும் வருகிறது. உலகளவில் பலர் ‘கெய்ஷா’ என்பது பாலியல் தொழிலாளி என்பதன் ஜப்பானியச் சொல் என்றே கருதுகிறார்கள். ‘courtesan’ என்கிற ‘அரசவை அணங்குகள்’ என்ற பதம் சற்று நெருக்கமாகத் தோன்றினாலும், அவர்களின் வரலாற்றை கருத்தில்கொண்டால் அது வேறு பாதைக்கு இட்டுச்செல்வதே நிதர்சனம். கெய்ஷா என்ற வார்த்தையின் பொருள், ‘கலைகளின் நபர்’ என்பது. ஆரம்பகால கெய்ஷாக்கள் ஆண்கள்தான். அவர்களுடைய முக்கியமான பணிகளே, நாட்டியம், இசை, கவிதை போன்றவைகளே.
கெய்ஷா வரலாறு:
பெண் பொழுதுபோக்காளர்களான, 7ஆம் நூற்றாண்டின் சபூருகோ, 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான ஷிராப்யோஷி போன்றோர்களை வேராகக்கொண்டிருந்தவர்களே கெய்ஷா என்பவர்கள். பிரபு வம்சத்தினருக்காகச் செயல்படுவதும், சக்கரவர்த்திகளின் காமக்கிழத்திகளாகவும் இருந்தனர். 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஜப்பானில் கேளிக்கை விடுதிகளின் முதல் தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டன. மற்ற பல ஜப்பானியக் கலாச்சார அம்சங்கள் போன்றே அவர்கள் சீன மிங் வம்சத்தினரைப்போன்ற மாதிரிகளாயினர். 1600களின் மத்தியில் மீண்டும் இடம்பெயர்ந்த பின்பு அவர்கள் ‘ஷிமபாரா’ என்றழைக்கப்பட்டனர்.
இதற்குள் ஈடோவில் யோஷி-வாரா எனும் ஒரு சதுப்புநில வாழிடம், தோகுகாவா ஷோகுனேட்டின் ஆதரவுடன் விபச்சார மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் விபச்சாரங்கள் தடை செய்யப்பட்டு, அதற்கான கடுமையான சட்டங்களும் போடப்பட்டன. இதோடு, எந்தவொரு வாடிக்கையாளரும் ஒரு விபச்சார விடுதியில் 24 மணி நேரங்களுக்குமேல் தங்க அனுமதியில்லை; அரசவை அணங்குகள் சாதாரண வண்ணமிட்ட கிமோனோக்கள் மட்டுமே உடுத்த வேண்டும்; சந்தேகப்படும்படியான அல்லது முன்பின் அறிமுகம் இல்லாத புதிதாக வருபவர்கள் குறித்து நகர ஆளுநர் அலுவலகத்தில் புகார் செய்ய வேண்டும் என்ற சட்டங்களும் போடப்பட்டன.
ஜப்பான் வெகு நாட்களாகக் காத்திருந்த, நூற்றாண்டுகளின் உள்நாட்டுப் போர்களைத் தொடர்ந்த அமைதியான காலங்களில், பல சாமுராய்கள் சமுதாயத்திற்கு இவர்களின் சேவைகளின் தேவைகள் இனி இல்லை என்பதைக் கண்டறிந்தனர். பல முன்னாள் பிரபு குடும்பங்களின் வாரிசுகள், யோஷிவாரா, ஷிமபாரா போன்ற இடங்கள் மெருகேற்றிக்கொள்வதற்கும், கலாச்சாரத்திற்கும் உகந்த இடம் என்ற எண்ணத்தில் அரசவை அணங்குகளாகியிருந்தனர். அமைதியானச் சூழல் மகிழ்ச்சியையும், வணிகர்களின் முன்னேற்றத்தையும் உயர்த்தியிருந்தன.
ஹானாமிச்சியினுள் பலவகையான அரசவை அணங்குகள் பிரிவுகள் இருந்தன, பத்தாண்டுகளில் தலைமை குரு மற்றும் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட தரங்கள் பல முறைகள் மாறியிருக்கின்றன என்றாலும் ஒருபோதும் அது நல்ல முறையில் அல்ல. 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் அந்தச் சூழ்நிலை சற்றே மாறி, கொயோட்டோ மற்றும் ஒசாகாவில் ஒரு புதிய முறையிலான பொழுதுபோக்காளர்கள் வந்தனர். ஆரம்பகால கெய்க்கோ ஆண்களாக இருந்தனர். பின் வெகு விரைவிலேயேத் தோன்றிய பெண்கள் ‘ஓடோரிகோ’ என்ற நாட்டியக்காரிகளாகவோ அல்லது ஷேமிசென் வாசிப்பவர்களாகவோ இருந்தனர். வெகு விரைவிலேயே பெண் கெய்ஷாக்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டனர். யோஷிவாராவில் இவர்களைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர பதிவிடும் முறையை துவங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு அவர்களை வரி செலுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டது. அவர்களுடைய நடை, உடை, பாவனைகள் என அனைத்தையும் தீவிரமாகக் கட்டுப்படுத்தினர். உண்மையில் இந்த சட்டத்திட்டங்களே கெய்ஷாக்கள் கலைஞர்களாகவும், பொழுதுபோக்காளர்களாகவும் உருவாக வழிவகுத்தது.
அரசவை அணங்குகளைக்காட்டிலும் மிகவும் எளிமையாகவே அவர்கள் உடுத்தியிருந்தபோதும் அவர்கள் நவீன தலைவர்களாகக் கருதப்பட்டனர். 20 ஆம் நூற்றாண்டுகளின் மத்தியில் இளம் பெண்கள் தங்கள் குடும்பத்தினராலேயே கெய்ஷா வாழ்க்கைக்கு விற்கப்பட்டதோடு அவர்களுடைய கன்னித்தன்மையும் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டு, ‘மிஸூ-ஏஜ் என்ற சடங்கிற்கு உட்படுத்தப்பட்டனர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இது போன்ற பழக்கங்கள் நிறுத்தப்பட்டு, கெய்ஷா தொழில் படிப்படியாக சரிவைச் சந்தித்தது.
“கெய்ஷாக்களிடம் வரும் ஆண்கள் பெரும்பாலும் சமூகத்தின் மிக உயர்மட்டத்தில் இருப்பவர்கள். அதனால் அந்த அகம்பாவங்களை சுமந்தவாறே வருவார்கள். கெய்ஷா செய்யும் முதல் காரியம் அவர்களின் அந்த ஆணவத்தை மறக்கச்செய்வதுதானாம். அதாவது அச்சம் சிறிதும் இல்லாமலும், அதேசமயம் அவர்களின் ஆணைகளுக்குப் பணியாமலும், அவர்களை கோபம் கொள்ளச்செய்யாமலும் இருக்கும் திறமைசாலிகளாம். அவர்களை ஒரு சாதாரண மனிதனாக்கிய பின்பு உறவு கொண்டு அதுபோன்றொரு சுதந்திர உணர்வை அவர்கள் வேறெங்கும் அனுபவித்திருக்கவே முடியாது என்ற நிலையை ஏற்படுத்திவிடுவார்களாம். அப்படி அங்கு வரும் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் சுயத்தை மீட்டெடுக்கும் கலையைத்தான் “கெய்ஷாக்கலை” என்கிறார்கள்.
தலைநகரங்களில் காணக்கூடிய இருபெரும் பிரபலமான ஹனாமிச்சி (கெய்ஷா விடுதிகள்) டோக்கியோவும், கொயோட்டோவும். டோக்கியோ யோஷிவாரா கேளிக்கை விடுதிகளில் காபூக்கி கலைஞர்களும், நடிகர்களும் வணிகப்பெருமக்களுடன் கலந்துறவாடிக்கொண்டிருப்பர். 1600 – 1868 ஈடோ காலங்களில் ஜப்பான் வெளியுலகத் தொடர்பை பெருமளவில் குறைத்திருந்ததோடு, ஒரு மிகப்பெரும் கலாச்சார முன்னேற்றம் கண்ட காலமாகவும் இருந்தது. நடிகர்கள், ஸூமோ மல்யுத்த வீரர்கள், கெய்ஷாக்கள் போன்றோரே, கேளிக்கை உலகின் வண்ணமிகு யுகியோயி என்கிற மரத்துண்டு ஓவியங்களின் (மிதக்கும் உலகின் படங்கள்) மாதிரிகளாகக் கலக்கிக்கொண்டிருந்தனர். கொயோட்டோவைப் பொறுத்தவரை ஷிமபாரா மாவட்டம் இன்றளவிலும் கெய்கோ எனக்குறிப்பிடப்படும் மெய்க்கோ பாரம்பரியமான தேநீர் இல்லங்களில் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியூட்டுபவர்களாக இருக்கின்றனர்.
ஒரு முதுமொழி பகர்ந்துள்ளதைப்போல, அரசவை அணங்குகளின் பொய் என்பது, ‘நான் உன்னை காதலிக்கிறேன்’, அந்த வாடிக்கையாளரின் பொய், ‘நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்’ என்பதுதான். ஒரு மனிதனின் வரவை தொடரச் செய்வதற்கு, தன் காதலை பிரகடனப்படுத்துவதைக்காட்டிலும் வேறு வழி ஏதும் இருக்கமுடியாது. பதினேழாம் நூற்றாண்டில், அரசவை அணங்குகளுக்கு காதலை பிரித்துவிடும் வழிகளைக் கற்பிக்கும் பாடப்புத்தகங்கள் இருந்தன. உதாரணமாக, ஒருவன் கிளம்பிச் செல்ல தயாராகும்போது, சில துளிகளாவது கண்ணீர் விடவேண்டியது மிக அவசியம். திட்டப்படி தேம்பி அழத்தெரியாத அனுபவசாலியாக இராமல் ஆரம்ப நிலையில் இருப்பவராக இருந்தால், அந்தப் புத்தகம் அவர்களுக்குக் கொடுக்கும் பாடம், தங்கள் கண் இமைகளை இரண்டு முறை இழுத்துவிட்டு, ஏதாவது சிறிய பொருளை ஒரு ஐந்து நிமிடத்திற்கு வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்க்கவேண்டும், அல்லது தங்கள் கிமோனோவின் கழுத்தின் உட்புறம் வரும் தீச்சுவாலைகள் தங்கள் கண்களை உறுத்தும் விதமாக இருத்தல் வேண்டும்.
ஜப்பானில் ஒழுக்கத்திற்கு முரணான கெய்ஷா என்ற பாலியல் அமைப்பும், மொத்த பாலுணர்வுக் கலாச்சாரமும், கடுமையான கன்பியூசயனிச சமூக அமைப்பினின்று எழுந்தது. சர்வாதிகாரத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பாமல் அடிபணிதல் ஒன்றே கன்பியூசனிசத்திற்கு தேவை. இந்த இருண்மையான உலகிலிருந்து இவர்கள் உருவான விதம் பற்றி தாம் அறிந்து கொண்டதை ஆழ்ந்த ஆய்வின் அடிப்படையில் வழங்கியுள்ளார், கெய்ஷா நூலின் எழுத்தாளர், லெஸ்லி டவுனர். ஆழ்ந்த அமைதியினூடே இருந்த அந்த மாயமான வரையறைக்குள்ளிருந்த ஒரு உலகில் வாழும் கெய்ஷாக்களைக் கண்டுபிடித்து சந்திப்பது சாமான்ய காரியமல்ல. விருது பெற்ற எழுத்தாளர், ஜப்பானிய அறிஞர், அருமையான கதை சொல்லியுமான லெஸ்லி டவுனர், பல மாதங்கள் அங்கேயே அவர்களுடனேயே வாழ்ந்து அந்த மாய உலகின் மறைவிலிருந்த குறிப்பிடத்தக்க பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளார். “பதினேழாம் நூற்றாண்டின் திருப்பத்தில் ஒருவேளை நீங்கள் கொயோட்டோவிற்கு வர நேர்ந்திருந்தால், கவர்ச்சியூட்டும் முன்னணி கேளிக்கை மனைகளாகப் பெருகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அந்த ஒழுக்கக் கேடான கேளிக்கைக் கும்பல் கிழக்கு மலைகளின் அடிவாரத்தில் உள்ள காமோ ஆற்றின் கரையிலுள்ள யசாகா ஆலயத்தின் அடர்சிவப்பு வாயில்வரை உங்களையும் இழுத்துச் சென்றிருக்கும்”, என்கிறார்.
ஆச்சரியமூட்டும் ஜப்பான் கலாச்சாரம்.. ஜப்பானியப் பெண்களின் பரிதாப நிலை….
’எங்கள் மனைவியர் வீட்டில் சமையல் மற்றும் குழந்தைகள் என்று கட்டுண்டிருந்தனர். அவர்களுடனான எங்களின் உறவுகள் எப்பொழுதும் வீட்டு விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்களாகவே இருக்கின்றன. இதைக்கடந்து, ஆண்களுக்கு மற்ற உலக நடப்புகள் பற்றிப்பேச ஒரு மேம்பட்ட வித்தியாசமான துணையாக, கலை மற்றும் கருத்துகள் பற்றி விவாதிக்கக்கூடிய ஒரு பெண் தேவைப்படுகிறாள். எங்களுக்கு மகிழ்ச்சியூட்டி உற்சாகப்படுத்துகிற, அறிவாளியான நன்கு படித்த பெண்கள் தேவை. ஒரு கெய்ஷா இருக்க வேண்டியதும் இப்படித்தான்”
1930 களின் மத்தியில் ஆன்றோர்கள், கவிஞர்கள், கெய்ஷாவை பணியமர்த்திய விடுதியாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் மற்றும் ஷிம்பாசி கெய்ஷா இல்லங்களின் கூட்டமைப்பின் இயக்குநர்கள் போன்ற அனைவரின் வாதங்களும் The Geisha Reader’ என்ற நூலில் தொடர் கட்டுரைகளாக வெளியிடப்பட்டன. அதில் கவிஞர் சக்குடாரோ ஹாகிவாரா, சமுதாயத்தில் கெய்ஷாவின் பங்கை ஒப்புக்கொள்ளக்கூடிய வாதமாக இப்படி முன்வைத்திருக்கிறார். இதிலிருந்தே ‘கெய்ஷா’ என்பதன் தத்துவம் தெளிவாக விளங்குகிறது.
ஆம், கெய்ஷாக்கள் ஜப்பானின் பழைய அரசாட்சிக் காலத்தில் அப்போதைய பிரபுக்களை மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்ட பெண்கள். இவர்களை உயர்குடித் தாசிகள் என்றும் சொல்லலாம். கெய்ஷா என்ற சொல்லின் பொருள், கலைபயின்றவள், அளிப்பவள் என்பது. ஆயிரம் ஆண்டுகளாக ஆண்களை மகிழ்விக்கும் கலையைக்கற்றுத் தேர்ந்த அதையே பிழைப்பாகவும் நடத்திக்கொண்டிருந்தவர்கள். காமம் என்பது உடற்சுகம் மட்டும் சம்பந்தப்பட்டதன்று. ஒரு ஆணின் அகங்காரத்தை நிறைவு செய்யும் வகையில் பல்வேறு கலைகளைப்பயின்றவர்கள். கெய்ஷாக்களின் காமக்கலைகளைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிகவும் விரிவான, தெளிவான நூல், லெஸ்லி டவுனரின், ‘கெய்ஷா’.
சுற்றுலாப் பயணிகளுக்கு ஜப்பானியத் தேநீர் பண்பாடு, காகித பொம்மைக்கலை, ஜென் பௌத்தம், ஹைகூ கவிதை, ஷிண்டோ மதம் என்று வழக்கமான அனைத்து சுற்றுலா கவர்ச்சிகளைக்காட்டிலும் மிகக் கவர்ச்சிகரமான ஒரு விசயம் என்றால் அது கெய்ஷாவாகத்தான் இருக்கும். ஜப்பானில் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் சொல் கெய்ஷா. பாலியலைக் கடந்து ஒரு தனிப்பட்ட சமூக அங்கீகாரம் பெற்றவள் கெய்ஷா. இவள் பிரபுக்களைத் தம் காதல் வலையில், மயக்கு மொழியில் சிக்க வைத்த கவர்ச்சி நாயகியோ அன்றி பாலியல் தொழிலாளியோ அல்ல. ஒரு சக்கரவர்த்தியாக இருந்தால்கூட அவளது விருப்பத்திற்கு மாறாக அவளைத் தீண்ட முடியாது. ஒரு கெய்ஷாவின் காதலுக்காக ஏங்கி பித்துப்பிடித்தவர்களும், தற்கொலை செய்து கொண்டவர்களும் பலர் உண்டு. அதேபோல் சாமுராய்களின் உறவிற்கு மிக உண்மையாக இருந்து, அவர்களுக்காகத்தம் உயிரையும் அர்ப்பணித்த கெய்ஷாக்களும் உண்டு.
இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், இந்த விசித்திரமான கெய்ஷா உலகத்தில் வலம் வரும் கணவன்களை ஜப்பானிய மனைவிகள் அங்கீகரிக்கிறார்கள் என்பதுதான். ஜப்பானியக் கலாச்சாரத்தின் முக்கியமான அங்கம் இந்த கெய்ஷா. ஜப்பானின் மறுக்க முடியாத அடையாளமும் கெய்ஷாதான். தனது இருபதாண்டு கால அனுபவத்தின் மூலம், ஜப்பானிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மர்ம முடிச்சுகளை தெளிவாக விளக்கியுள்ளார் லெஸ்லி டவுனர்.
கெய்ஷா தொழில் பழகுபவர்களை மெய்க்கோ என்பார்கள். மெய்க்கோவின் வாழ்க்கை முறைமைக்கும் கெய்ஷாவின் வாழ்க்கை முறைமைக்கும் பெரும் இடைவெளி இருந்தது. இது அழகை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதொரு தொழில் என்பதே உண்மை. சமூகப் பின்னணிக்கு இங்கு இடமில்லை. மெய்க்கோ பயிற்சிகளுக்கு கடின உழைப்பும், நீண்ட நேரமும் ஈடுபட வேண்டியிருந்ததால், அவர்கள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. சமீப காலத்திலும் சரி இன்றும் சரி இந்த இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. இதற்கான சரியான காலகட்டம் விபச்சாரம் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்ட 1958 ஆம் ஆண்டு என்று தன்னிடம் பேசிய அனைவரும் கூறியதாகச் சொல்கிறார் லெஸ்லி. கடந்த காலத்தில் காதல் என்பது தடை செய்யப்பட்ட கனியாக, சட்ட விரோதமாக இருந்த காரணத்தினாலேயே அதன்மீது அதீதமான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இன்றும்கூட கெய்ஷாக்கள் மதிப்பிழக்கச் செய்யும் செயல்களிலிருந்து விலகி இருப்பினும், அவர்கள் மதிக்கப்படுவதில்லை. அவர்கள் கொயோட்டோவின் அடையாளச் சின்னமாக இருந்தனர். மத்திய இரயில் நிலையத்திற்கு வருகிற பயணிகளை “கொயொட்டோவிற்கு வருக!” என்று வரவேற்கிற மெய்க்கோவின் படம் பொறித்த பதாகைகள் வரவேற்றன. கெய்ஷா உலகின் விளிம்பில் இருந்தவர்கள், தாங்கள் அறிந்த கெய்ஷாவை உயர்த்தும் விதமாக, அவர்களின், ஐதீகங்கள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை வெளிப்படையாக, மகிழ்ச்சியுடன் விவரிப்பார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மகளை ஒரு கெய்ஷாவாக ஆக அனுமதிப்பார்களா என்று கேட்டபோது, அவர்கள் தலையைச் சாய்த்து நோக்கியவாறு, முணுமுணுப்பாக, “ஆம்.. இது சற்று சிரமமான கேள்விதான்” என்பார்களாம்.
கெய்ஷா எண்ணிக்கையில் குறிப்பிட்ட அளவு வீழ்ச்சியும் இருந்தது. வயது முதிர்ந்த கெய்ஷாக்களும், கடைக்காரர்களும் காமோ நதி, ஈஸ்டர்ன் ஹில்ஸ் மத்தியில் இருந்த மொத்த பகுதிகளிலும், வடக்கிலிருந்து, நான்காவது பாலத்திலிருந்து ஐந்தாம் பாலம்வரை ஒரு வித்தியாசமான உலகமாகவே இருந்த நாட்களை நினைவுகூருவார்கள். ஒவ்வொரு வசிப்பிடமும் ஒரு தேநீர் இல்லமாகவோ அல்லது கெய்ஷா இல்லமாகவோ இருந்தது. ஒவ்வொரு கடையும் கெய்ஷா சமூகத்திற்கு பணிபுரிந்தது. உச்சமான 1920 களில், நாடு முழுவதும் 80,000 கெய்ஷாக்கள் இருந்தனர். கியானில் மட்டுமே 2,500 கெய்ஷாக்களும், 106 மெய்க்கோக்களும் இருந்தனர். 1948 களில், போருக்குப் பின்னர் தேநீர் இல்லங்கள் திறக்கப்பட்டபோது, அங்கு 1,200 கெய்ஷா மற்றும் 160 மெய்க்கோ மட்டுமே கொயோட்டோவில் இருந்தனர். அந்நாட்களில், பூக்கள் மற்றும் வில்லோ உலகம் செழித்தோங்கும் தொழிற்சாலைகளாக, நெறிமுறை மற்றும் சடங்குகளால் ஆளப்பட்டு வந்தன. தேநீர் கடைக்குக் கடை, மரக்காலணிகள் தடதடத்தபடி கெய்ஷாக்கள் செல்வர். தினந்தோறும் தேநீர் இல்ல தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தி வருவார்கள். சில நேரங்களில் நாள் முழுவதும், அடுத்த நாள் வரையிலும் கூட கேளிக்கைகளில் ஈடுபட்டவாறு இருந்தனர். ஆனால் 1999 வாக்கில், 195 கெய்ஷாக்களும், 55 மெய்க்கோ மட்டுமே கொயோட்டோவில் இருந்தனர். அதில் 90 கெய்ஷா மற்றும் 22 மெய்க்கோ கியானில் இருந்தனர். ஒரு கட்டத்தில் எவை அவர்களை கெய்ஷா ஆக்கியதோ அது மறைந்த பின்னும் அவர்கள் கெய்ஷா என்று அழைக்கப்படவில்லை. நவீன ஜப்பானில், அவர்கள் அதற்கு மேலும் கேளிக்கை தொழிலின் இதயமாகவும் இருக்கவில்லை, அல்லது அந்தத் தலைமுறையின் மிக விருப்பமான பெண்களாக – கடற்கன்னிகை போலவோ ஆராதிக்கப்படுபவர்களாகவோ இல்லை. காலத்திற்கு ஒவ்வாத ஒன்றாக ஆனபின் அவர்கள் எந்த விதமான பங்களிப்பை அளிக்க இயலும்?
ஆற்றோரத்து மக்களுக்கு இணையாக மதிப்பற்று இருந்த காபூக்கி நடிகர்கள், தலைவர்கள், மதிப்பிற்குரியவர்களாக மாறினர். மாற்றவொண்ணாத ஈடோ காலத்தில் புதையுண்டிருந்த அவர்கள் இப்போது மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக நாடக உடைகளை அணிந்துகொள்கிறார்கள். ஆனால் கெய்ஷாவே இந்தப் போக்கை தொடர விரும்பினாலும், அவர்களுக்கு அது வாய்க்கவில்லை. அந்த மலர் மற்றும் வில்லோ உலகின் சாரமே அதன் இரகசியம்தான்.
பணம் படைத்தவர்கள் மத்தியில் கெய்ஷாக்கள் இருந்தாலும் அதனால் பிழைப்பவர்கள் இல்லை அவர்கள் என்பதோடு அதனால் அவர்களுக்கு ஒரு இலாபமும் இருக்கவும் இல்லை.
ஒரு கெய்ஷாவின் குடும்பம் என்பது எப்படியிருக்கும் என்ற ஆர்வம் எழுவது இயற்கை.
ஆரம்பப் பள்ளியில் கெய்ஷாக்களின் மகள்கள் பலர் படித்துக்கொண்டிருந்தனர் . சில நேரங்களில், இன்னாருடைய தந்தைதான், இப்படியான ஒரு கட்டுமான தொழிலகத்தின் உரிமையாளர் இன்னாருடைய தந்தை ஒரு மருத்துவர் அல்லது ஒரு பல் மருத்துவர் அல்லது ஒரு நடிகர் என்றபடி வதந்திகளும் உலவின. ஏனைய ஜப்பான் மக்கள் இதை விநோதமானதாகக்கூட நினைத்திருக்கலாம் என்றாலும் இந்த கெய்ஷா மாவட்டங்களில் ஒரு பெற்றோர் குடும்பங்கள் என்பது சர்வ சாதாரணம்தான். இதனால் குழந்தைகள் குற்ற உணர்வால் சிரமப்பட்டார்களா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதுதான். உண்மையைச் சொல்லப்போனால் எவருக்கும் இரண்டாவது சிந்தனையேகூட இருந்ததில்லை. அவர்கள் கெடுக்கப்பட்டார்கள் என்ற ஒரே தொல்லைதான். அடிக்கடி அவர்கள், ‘இன்று மாமா வருகிறார்கள்!’ என்று சொல்வதைக் கேட்கலாம். அவர்களுடைய தந்தை வரும்போதெல்லாம் அவர்களுக்கு வேண்டுவது அனைத்தும் கிடைக்கும் என்பது அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவது. மேலும் “தயாரிப்புக்குக் கட்டணம்” என்பது அவளை உருவாக்கியதற்கும், அதுவரை வளர்த்ததற்கான கட்டணமும் ஆகும்.
அவள் பள்ளிவிட்டு திரும்பியவுடன், சுத்தம் செய்வது, மெய்க்கோவிற்கு உதவுவது மற்றும் கெய்ஷாவிற்கு கிமோனோ அணிவதிலும் மற்றும் ஒப்பனை செய்வதிலும் ஒத்தாசையாக இருக்க வேண்டும். அவள் ஓயாமல் உழைத்துக்கொண்டே இருந்ததோடு, அவளுக்கென்று நண்பர்களும் கிடையாது. அவளுக்கு 7 மற்றும் 20ந் தேதி என மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே விடுப்பு கிடைக்கும். இதெல்லாம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அந்நாட்களில், அனைத்து இடங்களிலும் குழந்தைகள் நிரம்பியிருந்தனர். அது சாதாரணமானதாகவே இருந்தது. எவருமே, யார் யாருடைய பெற்றோர் என்று கேட்டதே இல்லை.
ஆக்கிரமிப்புக்கு முன்பாக, அதாவது 1958 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கு முன்பாக, ‘ஸெகென்’ – அழகான இளம் பெண்களைத் தேடி கிராமப்புறத்தின் ஏழ்மை நிறைந்த பகுதிகளுக்குச் சென்று அவர்களைக் கொயோட்டோவிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்கு மேலும் பயிற்சி கொடுப்பது வழக்கம். அந்நாட்களில் பணிப்பெண்கள் கொயோட்டோவிற்கு ஆறு அல்லது ஏழு வயதிற்குள் வந்து விட்டாலும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் மற்றும் பயிற்சிக்குப் பிறகு பதினொரு வயதில் மெய்க்கோ ஆகிவிடுவார்கள். அதனாலேயேதான் அவர்கள், தாங்கள் அதிகம் உயரமாக வளராதபோதும், தங்கள் உயரத்தை கூட்டிக் காட்ட நான்கு அங்குலம் உயரத்திற்கு காலணி அணிந்திருந்தார்கள். நவீன கால மெய்க்கோக்கள் தங்கள் வாடிக்கையாளர்களைக்காட்டிலும் அதிக உயரமாகக் காட்டிக்கொள்கிறார்கள். இன்னும் பலவித மாற்றங்கள் இருந்துகொண்டிருந்தன. முந்தைய போர்க்கால நாட்களில் கொயோட்டோவின் பெரும்பாலான மெய்க்கோக்கள் கெய்ஷா குடும்பங்களிலிருந்துதான் வந்தனர்; அவர்கள் தாய்மார்கள், பாட்டிமார்கள் மற்றும் சில நேரங்களில் அவர்கள் கொள்ளுப்பாட்டிகள் கூட கெய்ஷாவாக இருந்திருக்கின்றனர். நாட்டுப்புறத்திலிருந்துவந்த பெண்கள், சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்தனர். ஆனால், நாகரீக காலங்களில், பல கெய்ஷா மகள்கள் வேறு தொழிலை மேற்கொள்ளவோ அல்லது ஒரு சாதாரணமான மனிதனை மணந்து, ‘சாதாரண’ வாழ்க்கை வாழவோதான் விரும்பினார்கள். சில மூத்த முன்னாள் கெய்ஷாக்கள் தங்களுடைய உண்மையான பெயரைச் சொல்லி குறிப்பிடுவதைக்கூட விரும்பவில்லை. காரணம், தன் மகன்கள், மகள்கள், தற்போது பேரக்குழந்தைகள் மற்றும் மதிப்பிற்குரிய ஏனைய குடும்ப உறுப்பினர்கள் உட்பட எவருக்கும் தான் ஒரு கெய்ஷாவாக இருந்தது தெரியாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.
பண்டைய நாட்களில், வறுமை காரணமாக பெற்றோரே தங்கள் குழந்தைகளை விற்கும் நிலை இருந்தது. போருக்கு முன்னால், கெய்ஷாவின் பெண்கள் தங்களுடைய ஆறாவது வயது, ஆறு மாதம், ஆறு நாட்களில் நாட்டிய வகுப்புகள் செல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அந்நாட்களில், இது ஒரு முக்கியமான தொழிலாகக் கருதப்பட்டதோடு, போல்ஷாய் பாலே மாணவர்கள் போல இளம் வயதிலேயே குழந்தைகள் தமது பயிற்சியைத் துவங்கினர். நவீன கால மெய்க்கோ பதினான்கு அல்லது பதினைந்து வயதுவரை தங்களுக்கான பயிற்சியை ஏதும் மேற்கொள்ளவில்லை. இதற்குள் முறையான கல்வி பயின்றிருந்தனர். இந்தக் கல்வி அவர்களை கேள்வி கேட்கச் செய்திருந்தது. நாட்டிய வகுப்பில் திரும்பத் திரும்ப பயிற்சி செய்ய வேண்டும். சீடனாக கீழ்படிந்து நடக்க வேண்டும். ஒரு கெய்ஷா குடும்பத்தின் நான்காம் தலைமுறை என்ற உயரிய தகுதியுடைய ஒரு எழுபது வயது முதிய பெண்மணி, ‘பழைய காலங்களில் பெண்களிடம் குறைந்தபட்ச அடிப்படை மரியாதைகளையாவது எதிர்பார்க்க முடிந்தது,’ என்று ஆச்சரியத்தில் புருவம் உயர என்னிடம் கூறினார். தற்போது, அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை: ஒரு கிமோனோவை எப்படி அணிவது, எப்படி நடப்பது, எவ்வாறு அழகாக, ஒரு முட்டி மற்றையதைவிட, ஒன்று அல்லது இரண்டு அங்குலம் உயரமாக இருக்கும்படி மண்டியிடவோ அல்லது ஃபியூசுமா என்ற சரிவு, காகிதக் கதவுகளை, கைகள், விரல்கள் மற்றும் கட்டை விரலை நேராக வைத்துக்கொண்டு ஒன்றாக சேர்த்து நளினமாக அழுத்தம் கொடுத்து திறக்கும் முறைமையையோ அறிந்திருக்கவில்லை. சிலர் அதற்கு முன்பு தரை விரிப்பில் (டடாமி) உட்கார்ந்ததே இல்லை. சிலருக்கு சாப்ஸ்டிக்குகளைப் பயன்படுத்தவும்கூடத் தெரியவில்லை. ‘அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும்!’ என்று ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் கூறியதையும் குறிப்பிடுகிறார் லெஸ்லி.
சிகையலங்காரம் என்பது அவர்களின் முக்கியமான அடையாளமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் இஷிஹாரா, கியானின் பழம்பெரும், மெய்க்கோ மற்றும் தாயூ சிகையலங்காரங்கள் குறித்து நான்கு நூல்கள் எழுதியுள்ளார். தாயூ அரசவை அணங்குகளின் தனிப்பட்ட சிகையலங்காரத்தை உருவாக்கத் தெரிந்த ஒரே மனிதர் ஜப்பானிலேயே அவர் மட்டும்தான். ‘ஈடோ காலங்களில் ஒருவரைப் பற்றிய அனைத்தும் அவருடைய முடியைக்கொண்டே சொல்ல முடியும்’, என்கிறார் பேராசிரியர் இஷிஹாரா.
ஆம், அந்நாட்களில் ஒவ்வொரு வகுப்பு மனிதர்களுக்கும் ஒவ்வொரு விதமான சிகையலங்காரம் இருந்துள்ளது. அதை வைத்தே அவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய தொழில் மற்றும் அவர்கள் எந்த நாட்டின் எந்தப் பகுதியிலிருந்து வருகிறார்கள் போன்ற அனைத்தையும் கூற முடியும். அது இன்றும் தொடரும் ஒரே இடம், கெய்ஷா உலகம் மட்டுமே. கெய்ஷா தொழிலின் ஒவ்வொரு பருவத்திற்கும் வித்தியாசமான சிகையலங்காரமும், ஜப்பானின் வெவ்வேறு பகுதி கெய்ஷாக்களுக்கும் வெவ்வேறு விதமான கிமோனோவும் உண்டு.
‘ரிப்பன், நகைகள், பட்டு மலர்கள், பேகல் வடிவில் முடியை உருட்டி உயரமாக உச்சந்தலை கொண்டையுடன், கூடிய ஒரு சிகையலங்காரம்தான் மெய்க்கோவின் முதல் சிகையலங்காரம். இதன் அர்த்தம் அவள் இளமையாகவும், அழகாகவும் இருக்கிறாள் என்பதுதான். ‘ஓஃபுகு’ என்ற கீழ் முடிச்சிட்ட, சற்று குறைவான சிகை அலங்காரங்களுடன் இருந்த சிகையலங்காரத்தின் விளக்கம், அவள் மேலும் கன்னியாக இல்லை என்பதால் வாழ்த்தப்படவேண்டியவள் என்பதுதான். மெய்க்கோ தன் பதின்மூன்றாம் வயதிலேயே இது போன்ற சிகையை அணிந்துகொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். கெய்ஷாக்கள், அந்த இளம் பதின்மூன்று வயதில், அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ, கன்னி கழிக்கப்பட்டது வேதனையான விசயம். இதனை ‘மீசுகே சடங்கு’ என்கிறார்கள்.
சில முக்கியமான விசேசங்களுக்கு, ‘யாக்கோ – ஷிமாடா’ என்ற புத்தாண்டு விழாக்களுக்கான அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்தும் உயர் அலங்காரம் உண்டு. ‘காட்சூயாமா’ என்பது பதினேழாம் நூற்றாண்டின், குளியல் இல்ல பணிப்பெண் ஒருத்தியின் பெயர் கொண்ட சிகையலங்காரம் பின்னாட்களில் அவள் பிரபல அரசவை அணங்கு ஆனாள். உண்மையிலேயே பேரழகாக இருந்த மெய்க்கோக்களின் இறுதி சிகையலங்காரம், ‘சேக்கோ’ என்ற உச்சிக்கொண்டை சிகையலங்காரம். அவள் கெய்ஷாவாகப் பட்டம் பெறும் இறுதி மாதத்திற்கு முன்பு செய்து கொள்ளும் அலங்காரம் சாக்கோ. ஒரு முன்னாள் மெய்க்கோவை அடையாளம் காட்டுவது அவளுடைய உச்சந்தலையில் காணப்படும் வட்ட வடிவ வழுக்கைதான். ஐந்தாண்டுகளாக வாரத்திற்கு வாரம், சிகையலங்காரம் செய்பவரால் இழுத்துக் கட்டப்பட்டு, அந்த முடி திரும்ப வளராமலே போனதால் ஏற்பட்ட சொட்டை அது.
லெஸ்லி, பேராசிரியர் இஷிஹாராவின் பணியை அழகாக விளக்குகிறார். “தான் தேர்ந்தெடுத்த அந்தப் பொருளான தலை முடியை வைத்து அழகை உருவாக்கப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கலைஞனைப்போல இருந்தார். ஒரு சிறிய கரி கன்னான் மீது சுருள் இரும்புகளை சூடாக்கிக்கொண்டு முடி நீண்டு பளபளப்பாக ஆகும்வரை கேசத்தை இழுத்துப் பிடித்தான். பின் நறுமண கேச எண்ணெயுடன் வாரிக்கொண்டு, பின்ஸுயூக் எண்ணெய் (ஸுமோ மல்யுத்த வீரர்களின் உச்சிக்கொண்டை அழுத்தமாக இருப்பதற்காக பயன்படுத்தும் எண்ணெய்) யுடன் தலையை வாரி, முடியைப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டார். தலையின் மகுடப்பகுதியில் உள்ள முடியில் ஆரம்பித்து, அதை இறுக்கமாக ஒரு குதிரைவால் கொண்டையாகக் கட்டிக்கொண்டு, கையில் தயாரித்த காகிதச் சுருள்களைக் கட்டி, அடர்த்தியாகத் தெரியும்படியும், உச்சந்தலையில் முடிச்சாக வரும்படி அதைத்தள்ளிக் கட்டினார். அவர், பின்னந்தலை முடியில் சுருள், சுருளாகவும் முடிச்சிட்டு, பின் ஒரு சன்னமான மரக்குச்சியைச் செருகி அது தன் இடத்தில் வாட்டமாகப் பொருந்தும்படிச் செய்தார். அப்படியே முன்னந்தலை முடியும் சுருளாக்கப்பட்டது. பின் அவர் பக்கவாட்டில் இருந்த இரண்டு பகுதிகளைப் பிரித்து அதில் பின்ஸூக்கே எண்ணெயைத் தடவி, சுருட்டிக்கொண்டு, அவைகளை இரண்டு சிறகுகளைப் போன்று அமைத்து மத்தியில் இருந்த கொண்டையுடன், முகத்தின் இரு புறமும் வரும்படி முடிச்சிட்டார். முடிப்பட்டை (ரப்பர் பேண்ட்) போன்ற ஒரு சன்னமான மரப்பட்டை பேண்ட்டை எடுத்து அந்தச் சிறகுகள் போன்ற அமைப்பின் மத்தியில் செருகி, அது இறுக்கமாகப் பொருந்துமாறும், ஒவ்வொன்றின் இடையிலும் பொய் முடியையும் செருகி உள்ளே சரியாகப் பொருந்துமாறும் செய்தார்.
பின் அவர் ஒரு முடிக்கற்றையை எடுத்து, திபெத்திய யாக் மாட்டின் கரிய முடி வாலை எடுத்து அதை மெய்க்கோவின் முடியுடன் சேர்த்துக் குதிரை வால் கொண்டையாகக் கட்டினார். அவர் அனைத்தையும் ஒன்றாகச்சீவி, முன்புறமாக மடித்து, பின்புறமாக முடிச்சிட்டு, அதைத் திறந்து, விரித்து, மடித்து – ஆகா, அங்கு ஒரு பேகல் போன்ற உருவமைப்பில் கொண்டை. இறுதியாக அவர், முன்னந்தலை முடியை வளைத்து, அதை நடுவில் இருந்த கொண்டையுடன் இணைத்தார். மேலும் அவர் அந்த பேகலின் இடையில் ஒரு ஊசியைச் செருகி அழுத்தமாக நிற்கச் செய்து, கடினமான கருப்பு காகிதத்தின் சில துண்டுகளால் அச்சிறகுகளின் வடிவம் குலையாமல் நிற்கவும் மற்றும் ஒரு ஜோடி வழுவழுப்பான சிகப்பு ரிப்பன்களும் கட்டினார். இந்த மொத்த அலங்காரமும் செய்து முடிக்க கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் ஆனாலும், இறுதியில் அது உறுதியாகவும், பளபளப்பாகவும், விளையாட்டு நேரத்திலோ தூங்கும் நேரங்களிலோகூட அவிழாமல் ஒரு வாரம்வரை அழுத்தமாகவே இருந்தது” என்கிறார்.
அந்நாட்களில் கொயோட்டோ முழுவதும் விலையுயர்ந்த பட்டு விற்பனையாளர்கள் மற்றும் கிமோனோ வியாபாரிகள் நிறைந்திருந்தனர். அவர்கள் மெய்க்கோவை கவனித்துக்கொள்ளும் செவிலித் தாய்மார்களுக்காக அந்த டான்னா என்ற புரவலன் அந்தப் பெண்ணிற்கு ஒரு வீடு வாங்கித்தந்து, அவளுக்குரிய கன்னி கழிப்பு சடங்கிற்கான செலவும் ஏற்று அவளுக்கு ஊதியமும் அளித்து வருவான்.
முந்நூரு ஆண்டுகளாக, ஆண்கள் பணமளிப்பது பெண்கள் கொடுக்கும் பாலியல் இன்பத்திற்காக மிகவும் யதார்த்தமாக இருந்திருக்கிறது. தற்போது அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. 1958 முதல் இவைகளனைத்தும் பெரும் மாற்றத்திற்குள்ளானது. தற்போது இன்னும் தீவிரமாக உள்ளது. அனைத்து மெய்க்கோக்களும் தங்கள் நடனத்தில் கவனம் செலுத்துகின்றனர்.
ஷேமிசென்
கெய்ஷாவின் முக்கியமான வாத்தியக்கருவியான ஷேமிசென் 3 சரமுள்ள வீணை. ஓகினாவான் சேன்ஷின் என்பதன் மாற்றாக நம்பப்படுகிறது. ஷேமிசென்னின் நீளம் 1.1 முதல் 1.4 மீட்டர் வரை இருக்கும். முதன் முதலில் ஈடோ காலமான 1600-1868 களில் கேளிக்கை மாவட்டங்களில் பிரபலமாக இருந்ததோடு காபூக்கி, புன்ராகூ நிகழ்ச்சிகளிலும் அழகுக்காக பயன்படுத்தப்பட்டது. காபூக்கி பல்வேறு நடன இசை, நீண்ட இசையின் சொந்தமானதொரு வடிவை உருவாக்கிக்கொண்டது. ஷேமிசென் செஞ்சந்தன மரத்தினால் தயாரிக்கப்பட்டு, பூனை அல்லது நாயின் தோலினால் அதன் தலைப்பகுதி மூடப்பட்டிருக்கும். சரங்களை முறுக்கப்பட்ட பட்டாகவும், ஆப்புகளை பாரம்பரிய முறைப்படி தந்தத்தினால் செய்யப்படுகின்றன. பாரம்பரியமாக ஷேமிசென் வாசிப்பவர்கள் கடினமாகவும், உணர்ச்சியற்றும் இருக்கவேண்டியுள்ளன.
இகெபானா – மலர் அலங்காரம்
ஜப்பானிய இகெபானா என்ற மலர் ஏற்பாடு மிகவும் சிக்கலான ஒன்று. இதைக் கற்றுக்கொடுப்பதற்கு பல பள்ளிகள் உள்ளன. அந்தப்பள்ளிகளால், செடிகள், பூச்சாடிகள் பொறுத்து பலவிதமான அலங்காரங்கள் செய்ய கற்பிக்கப்படுகின்றன. பலவிதமான மாற்றங்களுக்குப்பிறகும் இன்றும் இகெபானா என்ற மலர் ஏற்பாடு மேல்மட்டத்தினருக்கு மட்டுமே உரித்ததாக உள்ளது.
இன்று ஜப்பானில் 3,000 இகெபானா பள்ளிகளும், உலகைச்சுற்றி ஆயிரக்கணக்கான பள்ளிகளும் உள்ளன. உலகளவில் 60,000 ஆசிரியர்கள் உள்ளனர். ஜப்பானில் பெரும்பாலும் 15 மில்லியன் இளம் பெண்கள் இகெபானா பழகியுள்ளார்கள்.
ஜப்பானிய கிமோனோ
ஜப்பானியக் கிமோனோ என்பது உலக மக்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பாரம்பரிய உடையாகும். ‘கிமோனோ’ என்பதன் பொருள் ’ஆடை’ என்பது. 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலங்கள் வரை ஜப்பானியர்கள் அனைவரும் உடுத்திய உடை. மெய்ஜி காலங்களில் மெல்ல மெல்ல இறக்குமதி செய்யப்பட்ட கால் சராய்களுக்கு மாற்றம் கண்டன. ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும், பருவங்களுக்கும் ஒவ்வொரு விதமான கிமோனோக்கள் உண்டு. அன்றாட பயன்பாட்டில் இருக்கும் சாதாரண கிமோனோ தவிர கலைஞர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய கலைநயம் மிக்க கிமோனோக்கள் தற்காலங்களில் அதிகம் காணப்படாவிட்டாலும் இன்றும் திருமணங்கள், பட்டமளிப்பு விழாக்கள் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளில் பரவலாக அணியப்படுகிறது. அதிகமாக காணப்படாததன் காரணம் இதன் அதிக விலைதான். ஒரு நல்ல தரமான கிமோனோ உடையின் விலை ஒரு மில்லியன் யென் ஆகிறதாம். மற்றொரு காரணம் மிக வித்தியாசமான இந்த உடையமைப்பு. ஓபி என்ற அலங்காரப்பட்டை அணிவது இளம் பெண்களுக்கு மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. இதனை அணிவதற்கு அவர்கள் பெரியவர்களிடமோ அல்லது கிமோனோ பள்ளியிலோ பயற்சி எடுக்க வேண்டியுள்ளது.
ஜப்பானியர்களின் கண்களிலும் கெய்ஷா மற்றும் மனைவிகளுக்கு பெருத்த வேறுபாடு உண்டு; ஜப்பானியப் பெண்களின் இரு துருவங்களான கெய்ஷாக்களும் மனைவியரும் கிமோனோ அணிவதில் பெரும் வேறுபாடு உண்டு. கெய்ஷாக்கள் சொல்ல முடியாத அளவிற்கு கவர்ச்சியாக இருந்தனர்; ஆனால் அது குறிப்பையும் தெரிவையும் காட்டும் மிக நுட்பமான கவர்ச்சியாக இருந்தது.
ஒரு கெய்ஷாவிற்கு, ஒரு கிமோனோவை தேர்ந்தெடுப்பதும், அதை அணிவதும் அவளுடைய பாரம்பரிய நடனப் பயிற்சி அல்லது ஷேமிசென் வாசிப்பின் கற்றல் போன்றவற்றிற்கு ஈடானது. கிமோனோ என்பது ஒரு தேநீர் விழா, பூக்கள் அலங்காரம், அல்லது தூரிகை ஓவியம் போல மிக நுட்பமானதும் மற்றும் சிக்கலானதுமானதொரு கலை. மிக சன்னமான, ஆடம்பரமான பட்டு நூலில் நெய்யப்பட்ட கிமோனோக்கள் மிக நேர்த்தியாகவும், பல நேரங்களில் மிகவும் சிக்கலான வடிவமைப்புகளுடன் சாயமேற்றப்பட்டிருந்தது; இடங்களின் வரை படங்கள், பாலங்கள், நீர் நிலைகள், மரங்கள் மற்றும் பறவைகள் போன்றவைகளும் ஒரு கிமோனோவின் ஊடே உருண்டு கிடந்ததோடு நகை போன்ற வண்ணங்களும் தீட்டப்பட்டிருந்தன.
ஒரு கெய்ஷா பருவ காலத்திற்கேற்ற கிமோனோவை இயல்பாகத் தேர்ந்தெடுப்பாள். குளிர் மாதங்களுக்கு, செப்டம்பர் மாதச் சூறாவளியிலிருந்து குளிர்பனி ஊடாக, செர்ரி மலர்கள் உதிரும் ஏப்ரல் மாத இறுதி வரை, அவள் மொத்தமான சில்க் துணியால் ஆன இரண்டு அடுக்கு கிமோனோவில் கிரேப் உள்ளடுக்கு வைத்ததை அணிகிறாள். மே மற்றும் ஜூன் மாதங்களில் அவள் மெலிதான ஒற்றை அடுக்கு கிமோனோவுக்கும், கொளுத்தும் கோடையான ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவள் மிகவும் சன்னமான பஞ்சு போன்ற மென்மையான சில்க் உடைக்கும் மாறிவிடுவாள்.
காலணிகள்
பாரம்பரியமான ஜப்பானியக் காலணிகள் குறிப்பிட்ட அந்த ஆடை அணியும்போது மட்டுமே அணியப்படுகிறது. ஸோரி என்பது, கிமோனோவுடன், முக்கியமான நிகழ்ச்சிகளில் அணியப்பட்டும் வைக்கோற்புல் அல்லது சாயம் பூசிய மரத்தினாலான காலணிகள். ’கெட்டா’ என்பது சாதாரண வேளைகளில் யுகாட்டா எனும் உடையுடன் அணியும் உயரமான மரக்காலணிகள். இந்த வகை கெட்டா காலணிகள் தற்காலங்களில் ஸூமோ மல்யுத்த வீரர்களின் பாதங்களில் காணமுடிகிறது. அவர்கள் நடந்து வரும் முன்னே மிக வித்தியாசமான ஓசைகள் வந்து சேரும். முதிய ஜப்பானிய மக்கள் குறிப்பிட்ட இந்த ஓசையை நாகரீக காலங்களில் இழந்துவிட்ட முக்கியமான விசயங்களில் ஒன்றாகக் கருதுகின்றனர்.
ஒரு கெய்ஷாவாக ஒரு பெண் பயிற்சி பெறுவதில் பலவகை சிரமங்கள் உள்ளதால் தற்காலத்தில் கெய்ஷா பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டன.
உசாத்துணை:
கெய்ஷா – ஆங்கிலத்தில் லெஸ்லி டவுனர்/ தமிழில் பவள சங்கரி