சித்தர் பாடல்களில் வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும்

0

                              ச.பிரியா

                              முனைவர் பட்டஆய்வாளர், தமிழாய்வுத்துறை

                              பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி

                              பெரம்பலூர்-621107. 

     இன்றைய சமுதாயம் நவீன நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. மேலும் இன்றைய சூழல் போட்டிகள் நிறைந்த ஒரு பரபரப்பான நிலையில் காணப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நிதானமில்லாதப் போக்கு நிலவுகிறது. மனிதன்  தன்னை நிலைநிறுத்திக் கொள்ள (survival) பிறரை அழிக்கவும் துணிகின்றான். இத்தகைய விலங்கியல் மனநிலையில் இருந்து மனிதனை மீட்கவும் நெறிப்படுத்தவும் தோன்றியதே   வழிகாட்டலும்(Guidance) அறிவுரை பகர்தலும்(Counseling) என்ற துறையாகும். இத்துறை மனிதனின் தேவையையும் இயலாமையையும் புரிந்து கொண்டு அவற்றை நிறைவேற்றித் தரும் வழிமுறைகளை ஆராய்ந்து கூறும் துறையாக, உலகளாவிய நிலையில் சிறந்து விளங்குகிறது.

             தமிழ்ச்சமூகச்சூழலில் வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் இருப்பினும், இது பற்றிய கொள்கைகள் கருத்துகள் இல்லாதது போலவும், புதிது போலவும் நிலவுகிறது. ஆனால் வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் சங்ககால ஆற்றுப்படை நூல்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை பண்பாட்டு நிகழ்வாக ஓர் அறச்செயலாக இருந்தமையை  இலக்கியங்களின் வாயிலாக அறியமுடிகிறது. அவ்வடிப்படையில் சித்தர் பாடல்களில் இடம்பெறும் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தல் குறித்த செய்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

            வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் பற்றிக் கூறுவோர் , குறிப்பாக கல்வி மற்றும் உளவியல் சார்ந்த தளத்தில் ஆர்தர் ஜே.ஜோன்ஸ், குரோ மற்றும் குரோ, ருதர்ராங், ரோஜர்ஸ். கார்ல் போன்ற மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துகளை எடுத்துரைத்து அவற்றிலிருந்தே இத்துறை சார்ந்த பணிகளைத் தொடங்கினர். ஆனால் தமிழ் இலக்கியங்கள் காலந்தோறும் இத்தகைய பணியினைச் செய்து வந்துள்ளன. அந்தவகையில்  சித்தர் பாடல்களில் இடம்பெறும் வழிகாட்டல் அறிவுரை பகர்தல் குறித்த சிந்தனையை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வழிகாட்டல்

        வழிகாட்டுதல் என்பது ஒரு தனிநபர் தனது திறமைகளையும், தேவைகளையும் நன்கு புரிந்து கொண்டு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு செயல்படுவதாகும்.

     “ வழிகாட்டுதல் என்பது தனிநபர்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதல்ல, மாறாக பிரச்சனைகளைத் தானே தீர்த்துக்கொள்ள உதவிடுதல் ஆகும். ” என்று கி.நாகராஜன் கருத்துரைக்கிறார்.( வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் ப.2)

         குரோ மற்றும் குரோ(Crow & Crow.A) என்பவரது கருத்துப்படி “ எல்லா வழிகாட்டலின் அடிப்படைக்கருத்தும் திறன்மிக்கவர் பிறருக்கு வழிகாட்டி அவரைத் தன்வாழ்வு வளம் பெறத்தக்க வாழ்க்கைக் கண்ணோட்டத்தைத் தானே உருவாக்கிக் கொள்ளச் செய்து அதற்கேற்றவாறு முடிவுகளை எடுத்தும் செயற்படுத்தவும் உதவிடுதல்” என்கிறார்.( p .2)

       தமிழ் இலக்கியங்களில் வழிகாட்டுதல் என்பது ஆற்றுப்படுத்துதல் என்ற சொல்லில் வழங்கப்படுகிறது. தொல்காப்பியத்தில் இதற்கான இலக்கணம் கூறப்பட்டுள்ளது,

           “ கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

           ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

           பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

           சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்”      (தொல். புறம் நூற். 36)

என்ற தொல்காப்பிய நூற்பாவின்வழி அறிவில் சிறந்த சான்றோர்கள் தாம் பெற்ற இன்பத்தை (பொருளை) பெறாதவர்களுக்கு பெற்று பயனடையும்படி கூறி வழிகாட்டியுள்ளனர். எனவே வழிகாட்டுதல் என்பது அறிவில் சிறந்த அல்லது அனுபவமிக்கவர்களால் சொல்லப்படுவதாகும்.

 

 

அறிவுரை பகர்தல்

          மனிதன் ஒரு சோதனைக்கு உள்ளாகும் போதும் சரியான முடிவெடுக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடிய தருணத்திலும் வீட்டில் உள்ள அனுபவமிக்க பெரியோர்கள் மற்றும் படித்த அறிவாற்றல் கொண்டவர்களிடம் ஆலோசனையை நாடுகிறான்.

          மனக்குழப்பத்தில் உழலும்போது நமக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டுப் பேசுவதும் மனச்சுமையைக் குறைத்து ஆற்றுப்படுத்திக் கொள்வதும் இயல்பான ஒன்றாகும்.

      கார்ல்ரோஜர்ஸின் (Rogers Carl.R) கருத்துபடி,“ அறிவுரை பகர்தல் என்பது தொடர்ச்சியான நேர்முகத் தொடர்புகள் முலம் ஒருவரது மனப்பான்மைகளையும் நடத்தையையும் மாற்றியமைத்தலாகும்” என்கிறார். ( வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் ப.23)

      வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் முறையே தனித்தனியே வரையறைகளைக் கொண்டிருந்தாலும் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தறிய முடியாத தொடர்பைக் கொண்டதாகும். ஒன்றின் துணையில்லாமல் மற்றொன்றின் பணி தனித்தியங்காது எனினும் வழிகாட்டலின் போது கையாளப்படும் உத்திமுறைகளுள் ஒன்றாகவே பின்பற்றப்படுகிறது.

    சமூகத்திற்கும் தனிமனிதனுக்கும் பயன்படும் விதத்தில் வழிகாட்டல் அறிவுரை பகர்தல் பல வகைப்படுத்தப்படுகிறது. தனிமனிதனுக்காக தனிநபர் வழிகாட்டல், உடல்நிலைசார்ந்த வழிகாட்டல், ஆளுமைவளர வழிகாட்டல், பாலுணர்வு சார்ந்த வழிகாட்டல், மணவாழ்க்கை குறித்த வழிகாட்டல், குடும்பம் சார்ந்த வழிகாட்டல், முதியவருக்கு வழிகாட்டல், தலைமைப்பண்புக்கான வழிகாட்டல், தொழில்முறை வழிகாட்டல், ஓய்வுநேரத்தை சரியாகப் பயன்படுத்த வழிகாட்டல் என பல நிலைகளில் இதன் தேவையை உணர முடிகிறது.

சித்தர் பாடல்களில் வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும்

              ஆதிகால சமூகவாழ்க்கையில் குடும்பத்தில் இருந்த மூத்தோரின் அறிவுரையை அனைவரும் கேட்டனர். ஆனால் இன்று பெருகிவரும் மக்கள்தொகை கூட்டுக்குடும்பவாழ்க்கை சிதைந்த சமூகநிலை, போட்டி, சச்சரவு மிகுந்த சிக்கலான சமூகச்சூழல், மாறிவரும் அறிவியல், அரசியல், பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் நுகர்வுக் கலாச்சாரமோகம் காரணமாக அனைத்து மனிதர்களுக்குமே வழிகாட்டல் தேவைப்படுகிறது.

       இன்றைய சமுதாயம் பசி, தனிமனித ஒழுக்ககேடு, இலஞ்சம், தன்னிறைவின்மை, சுயநலம், பொறாமை, உழைப்பின்மை, பிறன்பொருள் பறிப்பு, போதை, அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கு எனப் பல சமூகச்சீர்கேடுகள் மிகுந்துள்ளது. மேலும் அறிவியல், சமுக, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பினில் உற்பத்தி, வினியோகம், போக்குவரத்து, பணப்பரிமாற்றம், செய்தித்தொடர்பு, கல்வி, மருத்துவம் ஆகிய அனைத்தும் சிக்கல் மிகுந்ததாக பணத்தை மையமிட்டதாக, கௌரவத்தை மையமிட்டதாக மாறியுள்ளன. எனவே இவற்றை தீர்க்க சரியான வழியில் செயல்பட சமூகத்திற்கு சித்தர்களின் வழிகாட்டல் அவசியமாகிறது.

       சித்தர்களின் சிந்தனைகள் சமூகத்தையும் மனிதனையும் மேம்படுத்தும் வழிமுறைகளை எடுத்துக்கூறுவதாய் அமைந்துள்ளது. சித்தர்களின் வழிகாட்டல் குறித்து சற்குணன் கூறுகையில் “ சித்தர்கள் தங்களின் தூய சிந்தனைகளையே போதனைகளாக்கி மனித சமுதாயத்திற்கு வழிகாட்டிச் சென்றுள்ளனர். மேலும் சித்தர் இலக்கியம் முழுவதும் தனிமனிதனுக்கு உரிய வழிகாட்டல்கள் விழுமியங்களாகப் பதிவு செய்துள்ளனர்.” என்று கருத்துரைக்கிறார்.

      சிவவாக்கியர், கடுவெளிச்சித்தர், குதம்பைச்சித்தர், கொங்கணர் போன்றோர் தனிமனிதனுக்கு உரிய நல்ல பழக்கவழக்கங்களையும் ஒழுக்கமுறைகளையும் சமுதாயத்திற்கு தேவையான அறிவுரைகளையும் கூறியுள்ளனர்.

   “ சொல்லருஞ் சுதுபொய் மோசம் செய்தாற்

       சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்”

    “ நல்லவர் தம்மைத் தள்ளாதே – அறம்

          நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள்ளாதே”       (கடு.சித்.பா.1-2)

என்று கடுவெளிச்சித்தர் பாடுகிறார். இவரது பாடல்கள் முழுவதுமே(29) தனிமனித மற்றும் சமூகத்திற்கு வழிகாட்டுபவையாகவே உள்ளது. பாவம் செய்யக்கூடாது, கோபம் கொள்ளக்கூடாது, கோள் சொல்லக்கூடாது, பிறருக்கு மோசம் செய்தால் உறவினருடன் அழிந்து போவாய் என்றும் நல்லவர்களின் தொடர்பை விலக்கிக்கொள்ளக்கூடாது, அறம் சார்ந்த செயல்களைச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார். மேலும் கஞ்சா, கள் குடிக்கக்கூடாது என்றும் கூறுகின்றார்.

குதம்பைச்சித்தர் கூறுகையில்,

    “கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோளிவை

    பாபத்துக்கு ஏதுவடி- குதம்பாய்

    பாபத்துக்கு ஏதுவடி”    (குதம்.சித்.பா. 83)

என்ற பாடலில் கோபம், பொறாமை, கொடிய சொல், வலியகோள்முட்டல் ஆகியவை பாவம் என்கிறார். மேலும் பொருளாசைக்கூடாது, உத்தமர்களை இகழக்கூடாது என்பன குதம்பைச்சித்தர் கூறும் வழிகாட்டலாகும்.

      தனிமனித முன்னேற்றமின்றி ஒட்டுமொத்த நாட்டுயர்வு என்பது இயலாத ஒன்றாகும். ஒவ்வொருவரும் தத்தம் ஆற்றல்களை முழுமையாக உணர்ந்து செயலாற்றிட தனிமனித வழிகாட்டல் தேவைப்படுகிறது. தனிமனித ஒழுக்கக் கேட்டால் சமூகமும் நாட்டுயர்வும் பாதிக்கப்படும். இதனை உணர்ந்த கொங்கணர்,

     ஏழை, இயலாதவர்களுக்கு உதவவேண்டும். தஞ்சம் என வந்தோர்க்கு வஞ்சம் செய்யக்கூடாது. பெரியோர்களை மனதளவிலும் வையக்கூடாது. மனம்நோகச் செய்யக்கூடாது என்கிறார். இதனை பின்வரும் பாடலடிகளின் வழி அறியலாம்.

    “ ஏழைபனாதிக ளில்லையென்றாலவர்க்

           கிருந்தா லன்னங் கொடுக்க வேண்டும் ”    (கொங்.சித்.பா.86)

“  மவுனமாகவும் வையா தேயவர்

          மனத்தை நோகவும் செய்யாதே”  (கொங்.சித்.பா. 89)

        சித்தர்கள் தங்கள் வழிகாட்டலை கண்டிப்புடன் கூறுகிறார்கள். சித்தர்கள் மனித சமுதாயத்திற்குக் காட்டிய வழிகாட்டலில் மிக முக்கியமானது,

  1. சமயப்பொறை
  2. சாதிசமய மறுப்பு
  3. பிற உயிர்களை வருத்தாமை
  4. கொல்லாமை
  5. பசிதீர்த்தல்
  6. பிறர்க்கு ஈதல்
  7. அன்பே முக்திக்கு வழி

      என்பன சமுதாயத்திற்கான வழிமுறைகளாகச் சித்தர்கள் கூறியுள்ளனர். சமூகத்திற்கு சாதியின் பெயரால் ,சமயத்தின் பெயரால் ஏற்படும் சண்டைகளையும் பூசல்களையும் தவிர்ப்பதற்கு சரியாக வழிகாட்டியுள்ளனர்.

     தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் அடிப்படைத் தேவை மனிதநேயம் ஆகும். ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டினாலே இறைவனை அடையலாம் என்பதை,

      “ எள்ளளவும் அன்பகத்தில் இல்லாதார் முக்தி

      எய்துவதும் தொல்லுலகில் இல்லை ”   (பாம்.சித்.பா- 89)

 என்ற பாடலில் பாம்பாட்டிச்சித்தர் அன்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றார். இவண்.

  “ அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

    வற்றல் மரந்தளிர்ந் தற்று  ”    (குறள்- 78)

என்ற வள்ளுவரின் குறளும் ஒப்ப நோக்கதக்கதாகும்.

இல்லறம் சிறக்க வழிகாட்டல்

        இல்வாழ்க்கை என்பது பல்வேறு முரண்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்கின்றது. கருத்து வேறுபாடுகளும் பிரிவுகளும் இதில் தவிர்க்க முடியாதனவாக விளங்குகின்றன. குடும்பத்தில் நேரும் சிக்கல்களைத் தவிர்த்துச் சிறந்த இல்வாழ்வை மேற்கொள்வதற்கு சிவவாக்கியர் பல அறிவுரைகளைப் பகர்ந்துள்ளார். மனைவி மக்களோடு வருகின்ற விருந்தினரை உபசரித்து வாழ்கின்ற இல்லறவாழ்வே சிறப்பானது என்கிறார். இதனை

     “ மாதர் தோள்சேராத தேவர் மானிலத்தில் இல்லையே

      மாதர் தோள் புணர்ந்தபோது மனிதவாழ்வு சிறக்குமே

      மாதராகுச் சத்தியொன்று மாட்டிக் கொண்டதால்

      மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே”      (சிவ.பா.530)

என்றும்,

     “வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பீரேல்

     வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே”      (சிவ.பா. 533)

என்றும் பாடுவதின் வழி அறியலாம்.

      கணவன் மனைவியோடு சேர்ந்து வாழும் இல்வாழ்க்கையே சிறந்தது. இதில் கணவன் மனைவியோடு கருத்து முரண்பட்டு பிரிந்து வாழ்வதையும், மனைவி கணவனோடு கருத்து முரண்பட்டு பிரிந்து வாழ்வதையும் காணமுடிகிறது. இதற்கு காரணம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் இருப்பது தான். இல்வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்பட்டு, பிரிவு ஒன்றே தீர்வு என்று முடிவு செய்து நீதிமன்றத்தை நாடுவதால் குழந்தைகளும் உறவுமுறைகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிவவாக்கியர் கூறியதுபோல் கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்து இல்வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விருந்தோம்பல் முதலான அறங்களைக் கடைபிடிப்பது அவசியமாகும்.

முடிவுரை

  1. தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான சித்தர் இலக்கியம் வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் பணியினைச் செம்மையாகப் பதிவு செய்துள்ளது.
  2. மெய்ஞ்ஞானிகளாகிய சித்தர்கள் தனிமனித உயர்வே நாட்டுயர்வு என்பதை அறிந்து தனிமனிதனுக்குரிய ஒழுகலாறுகளை அறிவுறுத்தி வழிகாட்டியுள்ளனர்.
  3. தனிமனித ஒழுக்கத்துடன் குடும்பம், நாடு, சமூகம் என அனைத்துக்குமான வழிகாட்டலை சித்தர்பாடல்களின் வழி காணஇயலுகிறது.
  4. கணவன் மனைவி சேர்ந்து வாழும் இல்லற வாழ்க்கையே சிறப்பானது என்ற அறிவுரையை சிவவாக்கியர் பாடலின் வழி அறியமுடிகிறது

துணைநின்ற நூல்கள்

  1. சி.எஸ்.முருகேசன், சித்தர் பாடல்கள், (பெரியஞானக்கோவை) சங்கர் பதிப்பகம், சென்னை-49, 2012.
  2. இளம்பூரணர்(உ.ஆ) தொல்காப்பியம், பொருளதிகாரம், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18, 2001.
  3. Crow & Crow.A , An Introdution to Guidance principles and practices American Book company,1951.
  4. Rogers Carl.R, Counseling and Psychotherapy, Honghto Miffin ,1942.
  5. கி.நாகராஜன் மற்றும் ச.நடராஜன், வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும், இராம் பதிப்பகம், சென்னை-93, 2011.
  6. பரிமேலழகர்(உ.ஆ), திருக்குறள், சாரதா பதிப்பகம், சென்னை-14, 2004
  7. சை.சற்குணன், சித்தர் கருவூலம், அகில் பதிப்பகம் திண்டுக்கல்- 5, 2010.
  8. அ.குணசேகரன், சங்கஇலக்கியங்களில் வழிகாட்டலும் அறிவுரைபகர்தலும், அண்ணாமலைப்பல்கலைக்கழகம், சிதம்பரம்.-608 001,2004.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.