மனித நேயம்
கவிஞர் ஜவஹர்லால்
சிரித்திடு மலர்கள் பூத்த
செடிக்கென ஆவ தில்லை;
பறித்துமே சூடிக் கொள்ளும்
பாவையை மகிழ்வில் ஆழ்த்தும்.
நெருக்கியே பழுத்தி ருக்கும்
நிறைசுவைக் கனிகள், காய்க்கும்
மரத்தினுக் காவ தில்லை;
மற்றவர்க் கின்ப மூட்டும்.
செடியொடு மரமும் அன்புச்
செயலினில் உயர்ந்தி ருக்கத்
துடிப்புடை மனிதர் அன்புத்
தொடர்பினில் துவளலாமா ?
இடுக்கணில் நைந்திட் டாலும்
இங்குள மற்றோர் காணும்
இடுக்கணைத் தீர்க்க முந்தும்
இதயமே மனித நேயம்.
அன்பினை அன்புக் காக்கி
அன்புடன் அரவ ணைத்தே
என்பினை உருக்கு மந்த
அன்பினுக் கெல்லை யில்லை.
அன்பெனும் ஒன்றே ஊற்றாய்
ஆங்கெதும் பேத மின்றி
அன்பினால் அணைத்துக் காக்கும்
அதுவேநல் மனித நேயம்.
சாதிகள் மதங்க ளில்லை;
சண்டையும் பிணக்கு மில்லை;
வீதிகள் ஊரென் றில்லை;
விழுந்தவர் யாரென் றாலும்
கோதியே எடுத்த ணைத்துக்
கண்ணீர் மாற்று தற்காய்
மீதியும் துடிக்கும் நெஞ்சே
மனிதாபி மான நெஞ்சாம்.
வெள்ளமே விழுங்க வீட்டை
இழந்துமே வந்தோர் தம்மை
உள்ளமே விரித்த ணைத்து
மசூதி, கோயி லெல்லாம்
உள்ளமே போல்தி றந்தே
உள்ளழைத் துபச ரிக்கும்
உள்ளமும் செயலும் காட்டும்
உயர்வதே மனித நேயம்.
அன்பினில் தோய்த்தெ டுத்தே
அருளுடன் அணைத்துக் காத்தே
என்பெலாம் பிறர்க்காய் ஈயும்
ஈடிலா உயர்ந்த பண்பே
மன்பதை உயர்த்தும் பண்பாம்,
மனிதனைக் காட்டு மந்த
அன்புடைச் செயல்தாம் இந்த
அவனியில் மனித நேயம்.