மீனாட்சி பாலகணேஷ்

கங்கையும் வேலும் மயிலும் துணை!

ame2

ஆறுமுகனான குமரவேள் மீது இயற்றப்பட்டுள்ள பிள்ளைத்தமிழ் நூல்கள் அனைத்திலும் காப்புப் பருவத்தில் பிள்ளைத்தமிழ்நூல் இலக்கணப்படியே திருமாலில் துவங்கி, சிவபிரான், உமையன்னை, கணபதி, இந்திரன், அலைமகள், கலைமகள், சத்தமாதர், முப்பத்து முக்கோடி தேவர்கள் வேண்டிக்கொள்ளப்படுவர். சில நூல்களில் உருத்திராக்கம், திருநீறு, திருவைந்தெழுத்தான ‘நமசிவாய,’ ஆகியனவும் பாடப்பட்டுள்ளன.

வரகவி மார்க்க சகாயதேவர் அருளிச்செய்துள்ள திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் அருமையான ஆச்சரியங்கள் இவ்விதத்தில் நம்மை எதிர்கொள்கின்றன. முதலில் புலவர் பாடுவது இறையருளாம் ‘திருவருளை’ வேண்டித்தான். திருவருள், திருநீறு, மார்க்கசகாயசுவாமி, மரகதவல்லி, இவர்களை அடுத்து கங்கை எனும் நதிப்பெண்ணாள் குழந்தை முருகனைக்காக்க வேண்டிக்கொள்ளப்படுகிறாள். குமரனின் அவதாரத்தின்போது சிவனாரிடம் உதித்த ஆறு பொறிகளையும் தாங்கிக் காத்த தாயல்லவா அவள்?

பின், கணபதி, வைரவன் (சிவபிரானின் திருக்குமாரர்களுள் ஒருவன்) இவர்களை அடுத்து, குமரன்கைத் திருவேல், திருமயில், திருமுருகாற்றுப்படையும் திருப்புகழும் ஆகிய நூல்கள் முதலானோர்களும், பதினொன்றாவதாக பலதேவரும் காப்புப் பருவத்தில் விளிக்கப்படுகிறார்கள்.

முருகனைப்பாடும் சில பிள்ளைத்தமிழ் நூல்கள் அருணகிரிநாதரை விளிப்பதுண்டு; அல்லது முருகனின் தம்பியாகிய அரிகரபுத்திரன், வீரபத்திரர், தாயாரான கார்த்திகைப்பெண்டிர் ஆகியோர் விளிக்கப்படுவர்.

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூல் இவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது. இலக்கணப்படி, ஒற்றைப்படையில் பதினோரு பாடல்களைக்கொண்டு அமைந்துள்ளது. இதன் சில சிறப்பம்சங்களைக் கண்டு களிக்கலாமே!

***

கங்கை எனும் தாயை அழைத்து குமரனைக் காக்க வேண்டுபவர், பாடலின் முதல் பகுதியில் முருகனின் பெருமையையும், பிற்பகுதியில் கங்கையின் பெருமைகளையும் விரிக்கிறார்.

ame

“கம்போநதி, குற்றமற்ற காவேரி, காளிந்திநதி, கோதாவரி, பாலிநதி எனப்படும் பாலாறு, கனகாநதி, கண்டிகை எனப்படும் உருத்திராக்கமும் குண்டிகை எனப்படும் கமண்டலமும் சூழ்ந்து விளங்கும் பம்பாநதி, வானத்தினின்று இழிதருதலால் வானதி எனவும் பெயர்படைத்த கங்கை, சீதைநதி எனப்படும் தமஸாநதி (அயோத்திலுள்ளது. இங்கு தான் இராமன், சீதை, இலக்குவன் மூவரும் அயோத்தி மக்களைப் பிரிந்து வனவாழ்க்கையை மேற்கொள்ளப் பயணித்தனர்; பின், சீதை கருவுற்றுத் தங்கியிருந்து, இலவ, குசர்களைப் பெற்றெடுத்ததும் தமஸா நதிக்கரையில் தான்), பாஞ்சாலிநதி ஆகிய தவம்செய்ய உகந்த கரைகளைக்கொண்ட புண்ணிய நதிகளாகப் பலவாகி பிரிந்து ஓடும் பாகீரதியே! பகீரதன் தன் தவத்தினால் ஆகாயத்தினின்றும் பூமிக்குக் கொண்டுவந்த கங்கை நதியே!” என கங்கையின் பெருமைகளைக் கூறி விளித்து, குமரனைக் காக்க வேண்டுகிறார்.

“எனது பாதகங்களையெல்லாம் (பாவங்கள்) நீக்கியவன் இந்த வேலவன். இவன் இமையோராகிய தேவர்களின் அரசன், குமரேசன்; எனது இதயத்து இருளாகிய அறியாமையைக் களைந்தெறியும் குகன். அழகான இனிய பால்போலும் மொழிபேசுபவளான உமையம்மை அளித்த அமுதக்கனி போன்றவன். கரனூர் ஆகிய திருவிரிஞ்சை எனும் ஊரில் வாழும் அடியவர்களின் பெருவாழ்விற்கு ஊன்றுகோலாக விளங்குபவன்; அவனைக் காத்தருள்வாய் தாயே!” என அமைகிறது இவ்வழகிய பாடல்.

கங்கை

எம்பாதகநீக்கிய வேலவனை இமையோர் அரசைக்குமரே சனையென்
னிதயத்திருளைக் களையுங்குகனை
அம்பால்மொழி யம்மையளித்தரு ளும்அமுதைக்கனி யைக்கரனூர் தனில்வாழ்
அடியார்பெருவாழ் வையளித்தருள்க
கம்பாநதிகோ தமைகாவேரி காளிந்தி கோதாவிரி பாலிநதி
கனகாநதிகண் டிகைகுண்டிகைசூழ்
பம்பாநதிவா னதிசீதைநதி பாஞ்சாலி தபோநதியே முதலாம்
பலவாநதியா னபகீரதியே.

கங்கையைப்பற்றிக் கூறப்புகுந்தால் பெரும் காப்பியமே இயற்றலாம். இங்கு முருகனின் பெருமைகளுக்கு இணையாக ‘எல்லா நதிகளும் கங்கையின் வடிவே’ எனும் அழகான பேருண்மையை விளக்கிய நயம் இரசிக்கத்தக்கது. வைதிகமுறையில் பூசனை செய்யும்போது ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளையும் ஆவாகனம் செய்து பூசை செய்வது நமது வழக்கம் அல்லவா? கங்கையின் பெருமை கொஞ்சநஞ்சமா? ஆகாயத்திலிருந்து அவள் வந்த கதையைக் கூறுவாரா? முருகப்பிரானின் பிறப்பில் அவள் வகித்த பெரும்பங்கை விளக்குவாரா? ஆகவேதான் மற்ற நதிகளனைத்துமே கங்கையில் அடக்கம் என நான்கு வரிகளில் கங்கையின் புகழை அழகுறப்பாடுகிறார் வரகவியார்.

***

திருவேல்

ame1

முருகனடியார்களுக்கு, வேலும் மயிலுமே என்றும் காத்து வழிநடத்தும் துணையாகும். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, குழந்தை முருகனைக் காப்பதற்கு, அவனுடைய கைவேலையே விளித்துப் பாடுகிறார் புலவனார். இது முருகனுக்கு உமையம்மை வழங்கிய வேல். ஆகவே தாய் கொடுத்தவேல் அவனைக் காக்கட்டும் என விளிப்பது மிகப்பொருத்தம்தானே?

“கொடிய அசுரர்களைக் கொன்று அவர்களுடைய குருதியில் நீராடி, அவர்களுடைய குடலை மாலையாகவும் தரித்துக்கொண்ட வேலே! பின் அவர்களுடைய உடலின் கொழுப்பையெல்லாம் அருந்தியதான வேலே! முருகன் உன்னைத் தன் கையில் பிடித்துள்ளான்,” எனப் புகழ்ந்து விளிக்கிறார்.

“ஆறு தலைகள் கொண்ட எங்கள் முருகனை, முதல்வனாகத் திகழ்பவனை, சிவந்த நிறம்கொண்டு திகழும் செவ்வேளை, இவ்வுலகமெல்லாம் புகழ்ந்து ஏத்தும் தேவனை, திருவிரிஞ்சை எனும் இப்பதியில் விளங்கும் எமது முருகனை என்றும் நீ துணைநின்று காக்க வேண்டும்,” என வேண்டிக்கொள்கின்றார்.

இந்த வேல் செய்ததாக புலவர் பாடும் செயல்களனைத்தும் முருகன், தான் அதனைக் கரத்தில் ஏந்திச் செய்தவையே! புலவர் அதனை அறியாதவரா? இருப்பினும், வேலை ஒரு தனிப்பொருளாக்கி, ‘இத்தகு வீரச் செயல்களைச் செய்த எமது முருகப்பிரானின் கரத்தில் நீ இருந்ததனால் அல்லவோ அவன் இவற்றைச் செய்ய இயன்றது,’ எனும் பெருமை தோன்ற இவ்வாறு பாடியருளியுள்ளார் எனக் கொள்ளலாமா? பாடலைக் காண்போம்:

முடியொராறுடை யானையெம்மையனை முதல்வனைச் செவ்வேளைப்
படியெலாம் புகழ்தேவனை விரிஞ்சையம் பதிமுருகனைக் காக்க
கொடியதானவர் குருதியிலாடிவெங் குடலெனுந் தொடைசூடி
நெடியயாக்கையின் நிணமெலாம் அருந்தியவவன் கையிநெடுவேலே.

வேலையும் மயிலையும் பெருமைப்படுத்தி முதல்முதலில் பாடியவர் அருணகிரிநாதராவார். வேல்விருத்தம், மயில்விருத்தம், வேல் வகுப்பு, மயில் வகுப்பு என அவர் பாடாத ஒன்றுமே இல்லை. அவ்வளவு முருகனிடம் ஆழ்ந்து அடைக்கலம் புகுந்தவர் அவர். அற்புதமான சந்தம் நடமிடும் பாடல்கள் அவை.

அவருடைய அடிச்சுவட்டில், இங்கு மார்க்கசகாய தேவர் மயிலை விளிப்பதனைக் காணலாமா?

“ஓ மயிலே! (மயூரமே!) வானத்தின் உச்சியான மேகக்கூட்டங்கள் நடுங்கவும், பெரிய மலைகள் தவிடுபொடியாகவும், அப்பொடித்துகள்களால் ஏழுகடல்களும் நிரம்பி மேடாகிவிடும்படியும் உனது தோகையை விரித்து அடித்து எழுந்து எட்டுத் திசைகளிலும் கண்மூடி இமைக்குமுன்பு உலாவி, என்றும் இவ்வாறு ஆடலைச்செய்து வாழும் அந்த முருகப்பிரான் ஏறுகின்ற மயிலே!” எனப் பெருமிதம் தோன்ற விளிக்கிறார். அதாவது மயில் இவ்வாறெல்லாம் செய்யுமாறு அதனைச் செலுத்துபவன் இம்முருகவேள். ஆகவே இந்த ஆடலை மயில் செய்வதாகவோ அன்றி, முருகனே செய்வதாகவோ, எவ்விதமாகவும் கொள்ளலாம்.

“இந்த முருகன் எம்மைத் தனது தொண்டனாகக் கொண்டு ஆள்பவன்; உருவில் சிறிய (குழந்தையானதால்) பெரிய தலைவனாவான்; நான்கு வேதங்களையும் உணர்ந்து அவற்றை மணிபோலும் மொழியால் உரைப்பவன்; அணிவதனால் குளிர்ச்சியும் மணமும் தரும் இன்பமான கடப்பமாலையை அணிந்தவன். திருக்கரனூரில் வாழ்கின்ற மரகதவல்லி எனும் கொடிபோன்ற அன்னை பெற்றெடுத்த சிவந்த சுடர் போலும் அழகன். அவனை நீ அன்போடு காக்க வேண்டும்,” என் வேண்டுகிறார்.

மயில்

am3
தொண்டனாக வெமைக்கொ ளுஞ்சிறு தோன்றலைச் சதுர்வேதநூல்
சொல்லுமாமணி வாயனைச்சுக மாயிருந்தும ணங்கொளும்
வண்டுசேர்தரு நீபமாலைய னைத்தி ருக்கர னூரில்வாழ்
மரகதக்கொடி பெற்றசெஞ் சுடர்மணியை யன்பொடு காக்கவே
அண்டகூட நடுங்கமால் வரைதூளி யாகஅத் தூளியால்
ஆழிஏழுநி ரம்பிமேடுப டக்கலாபம டித்தெழுந்
தெண்திசாமுக முங்கடைக்க ணிமைக்கு முன்னமு லாவியே
என்றுமாட லியற்றிவா ழவனேறு கின்றமயூரமே.

இன்னும் நக்கீரரின் திருமுமுருகாற்றுப்படையையும் அருணகிரியாரின் திருப்புகழையுமே விளித்து, குழந்தை முருகனைக் காக்க வேண்டுகிறார். புலவனாரின் பக்திப்பெருமிதத்தை, முருகனிடமும், முருகனடியார்களிடமும் அவர் கொண்டுள்ள அன்பை, நேசத்தை, உணர இவைகளே சான்றாகத் திகழுகின்றன எனலாம்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *