நிர்மலா ராகவன்

மகிழ்ந்திருங்கள்

நலம்-1

`நான்கு வயதிலிருந்தே எல்லா பாட்டுப் போட்டிகளிலும் நான்தான் முதல்! எனக்குப் பாடகராக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் என் பெற்றோர் என்னைக் கலந்து பேசாமல், இஞ்சினீயராக ஆக்கிவிட்டார்கள்!’ நாற்பது வயதாகிவிட்ட ஒருவரின் ரகசியப் புலம்பல் இது.

தனக்குப் பிடித்த துறையை பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவருக்குச் சுதந்திரம் அளிக்கப்படவில்லை.

`மகனுக்கு நல்லதுதானே செய்கிறோம்!’ என்று நினைத்து அவர்கள் செய்தது அவருக்குப் புரிந்தாலும், கௌரவமான பதவியோ, நல்ல வருமானமோ அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. வேண்டாவெறுப்பாகவே உத்தியோகம் பார்க்க வேண்டிய நிலைமை.

மகிழ்ச்சியை எப்படி அடைவது?

நமக்கு வேண்டும் என்பதை அடைந்தால் மகிழ்ச்சி. இது மனிதருக்கு மனிதர் மாறுபட்டிருக்கும்.

`என் குழந்தைகள் உடல் உபாதை எதுவுமில்லாது, சிரித்தபடி இருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்!’ என்கிறார் ஒரு தாய்.

`எனக்குப் பிடித்த ஒரு காரியத்தை நல்லவிதமாகச் செய்து முடித்தால்!’ — இன்னொருவர்.

பலர் மனதில் எழும் கேள்வி: `நான் எவ்வளவோ பாடுபட்டும் எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றனவே?’

கதை

ஒரு காய்கறிச்சந்தையில் இந்திய தம்பதி இருவர் இட்லி வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். இட்லியுடன் இருவகை சட்னி. மலாய், சீனர்கள் எல்லாரும் ஆசையுடன் வாங்கிப்போனார்கள்.

அந்த மாது என்னிடம் கூறினார், “போன வாரமும் கடைபோட்டோம். ஒரே நஷ்டம்!”

வியாபாரம் செய்தால் நிறைய பணம் ஈட்டலாம் என்று நம்பி வந்திருக்கிறார்கள். ஆனால், அதற்குமுன் கணக்கு கற்கத் தவறிவிட்டார்கள்.

சுவையான, அளவில் பெரிதான இட்லிகள். இரண்டு இட்லி நாற்பத்தைந்து காசு என்று ஏதோ விலை சொல்லி, அதற்குமேல் ஒருவர் வாங்கிப்போனால், அதற்கான கிரயத்தைச் சரியாகச் சொல்லத் தெரியாது, வாய்க்கு வந்ததைக் கேட்டு வாங்கியிருக்கிறார்கள்.

`இரண்டு இட்லிக்கு இவ்வளவு செலவாகிற்று. அதைவிடக் கூடுதலாக விலை சொன்னால்தான் லாபம்,’ என்றெல்லாம் கணக்குப்போடத் தெரியாமல் போக, ஆழம் தெரியாமல் காலை விட்டிருக்கிறார்கள்.

ஒரு காரியத்தைச் செய்யுமுன், அதற்கான திறமை நம்மிடம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளவேண்டாமா?

பொதுவாக, எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிட்ட நம் இலக்கு சரியாக இருக்க வேண்டும். அதன்பின், அதை நோக்கி உழைக்க வேண்டும் — என்ன இடர் வந்தாலும் மனந்தளராது.

“உழைப்பு, விளையாட்டு, மௌனம் மூன்றும் கலந்தது வெற்றி”. (ஐன்ஸ்டைன்)

மௌனம் எதற்கு என்று யோசித்தோமானால், நாம் செய்யப்போவதைப்பற்றி எல்லாரிடமும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கக்கூடாது என்பது புரிகிறது. எல்லாரும் நம்மைப்போலவே சிந்திப்பார்கள் ன்று சொல்ல முடியாது. ஊக்குவிப்பதற்குப் பதில் அச்சத்தை ஏற்படுத்திவிட்டுப் போய்விடுவார்கள். ஆரம்பத்திலேயே தளர்ச்சி அடைந்துவிடுவோம்.

விளையாட்டு என்பது ஒரே காரியத்தை அலுக்கும்வரை செய்யாது, போதுமான ஓய்வு அல்லது வேறு காரியங்களிலும் ஈடுபடுவது என்று கொள்ளலாம். செய்பவருக்கு அலுப்பு தட்டினால், அக்காரியம் சோடையாகிவிடும்.

இதெல்லாம் ஒரு வெற்றியா!

வெற்றி, மகிழ்ச்சி என்பதெல்லாம் சமூகத்தில் ஒருவருக்கு என்ன இடம், அவரிடம் என்னென்ன இருக்கிறது என்பதைப் பொறுத்தல்ல.

இக்காலத்தில் பதவி மோகம் என்ற வியாதி பெரும்பான்மையோரை ஆட்டுவிக்கிறது. விலையுயர்ந்த கார்கள் பல, கிலோ கணக்கில் தங்க நகைகள், பட்டங்கள் இதெல்லாம் ஒருவருக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருமா என்பது யோசிக்க வேண்டிய சமாசாரம்.

சட்டத்துக்கு உட்பட்டு இவ்வளவும் சம்பாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். எப்படி எப்படியோ சேர்த்த சொத்தைப் பிறர் கண்ணில் படாது ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டுமே, பிடிபட்டுவிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் உழன்றிருந்தால் மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்?

வெற்றி கிட்ட

எந்த ஒரு காரியத்தில் ஈடுபடும் முன்னரும் பயம் எழுவது தவிர்க்க முடியாதது. `வெற்றி பெற்றே தீருவேன்!’ என்ற தீவிரம் `தோல்வி அடைவோமோ?’ என்ற பயத்தைப் போக்கிவிடும்.

நாற்பது வயதுக்குமேல் ஒரு பெண்மணி நீச்சல் கற்றுக்கொள்ள முடியுமா?

எனக்கு வயது ஒரு பொருட்டாகவே படவில்லை. வீடியோவைப் பார்த்துக் கற்க ஆரம்பித்தேன். முதலில் திணறலாக இருந்தது. அவ்வப்போது என் மகள் வந்து கற்றுக்கொடுக்க முயற்சித்து, `உன் டீச்சர்கள் உனக்கு எப்படித்தான் பாடம் சொல்லிக்கொடுத்தார்களோ!’ என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

எந்த ஒரு காரியத்தையும் எப்படிச் செய்வது என்பது அவரவர் திறமையையும் துணிச்சலையும் பொறுத்தது. முப்பதுக்குமேல் வயதானவர்களுக்கு எந்த புதிதான விஷயத்தைக் கற்பிப்பதானாலும், சிறுவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல், `இப்படிச் செய், அப்படிச் செய்’ என்று கூறுவது தவறு. இம்முறையால், `என்னால் முடியுமா?’ என்ற அவர்களுடைய குழப்பமும், பயமும் இன்னும் அதிகரிக்கும்.

நீருக்குள் மூச்சு விடுதல், கைகளை எப்படி அசைப்பது என்று ஒவ்வொன்றாகச் சொல்லி, நீந்துவதை அவர்கள் போக்கில் விடவேண்டும். (என் மகள் ஆரம்பப்பள்ளி மாணவியாக இருந்தபோது, இருபதடி உயரத்திலிருந்து நீருக்குள் குதிக்கச்சொல்வார்கள். அந்த வயதில் பயம் தெரியாது. எப்படியோ திணறி, நீர்மட்டத்துக்குமேல் வந்துவிடுவாள்).

பெரியவர்களின் மனநிலை புரியாது, ஒரு நீச்சல் பயிற்சியாளர், தன்னிடம் பழகவந்த பெண்களுக்குத் தான் சொல்வது புரியவில்லையே என்ற எரிச்சலுடன், `உங்களுக்கு ஆங்கிலம் புரியுமா, இல்லையா?’ என்று விரட்ட, எல்லாரும் அவரிடம் கற்பதை நிறுத்திக்கொண்டார்கள்.

சில பெண்கள், `நீச்சலால் உடல் குண்டாகி விடுகிறது!’ என்று பாதியில் விட்டார்கள். புதிய உடற்பயிற்சியினால் பசி அதிகமாக எடுக்கத்தான் செய்யும். அதற்காக உணவின் அளவை அதிகரித்தால், எடை கூடாமல் என்ன செய்யும்?

வேறு சிலர் முகம் கறுத்துவிடுகிறது என்று நிறுத்தினார்கள்.

எதைக் கற்கும்போதும் பல இன்னல்களுக்கும், தடங்கல்களுக்கும் ஆளாகுவது தவிர்க்க முடியாத ஒன்று. அதற்காகப் பயந்து பாதியில் விட்டால் முழுமையாகக் கற்பது எப்படி?

நான் நீச்சல் கற்கும்போது, (நிசமாகவே) கண்ணை மூடிக்கொண்டு எதிரில் நீந்திவந்து கொண்டிருந்த ஒருவர் கைகளை சுழற்றிப்போடும்போது, அது அறைவதுபோல் என் முதுகில் பட, நான் அமிழ்ந்து போய்விட்டேன். எப்படி நீருக்குமேலே வருவது என்று புரியாமல் திணறிக்கொண்டு, ஏதேதோ முயற்சிகள் செய்தபோது, ஆபத்பாந்தவனாக ஒரு கரம் என்னைத் தூக்கிவிட்டது. காவலர்தான்.

சிறிது நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பின் வீடு திரும்பினேன். ஒரு பெண்மணி, `என்னையும் ஒரு தடவை காப்பாற்ற நேரிட்டது,’ என்று கூறியது பலம் தருவதாக அமைந்தது.

வழக்கம்போல் மறுநாளும் உற்சாகம் குன்றாது போனேன்.

நீச்சல் காவலர்கள் என் மகளிடம் சொன்னார்களாம், `எங்களுக்கு தண்ணீரில் இறங்கிச் சொல்லிக்கொடுக்க அனுமதி கிடையாது. ஆனால் உன் தாயின் மன உறுதி அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்புகிறது!’ என்று. குளத்திற்கு வெளியே நின்ற நிலையில், கையசைவைச் சொல்லிக் கொடுத்தார்கள்.

தண்ணீரில் அமிழ்ந்து கிடப்பது எனக்குப் பிடித்த விஷயம். உடலில் புத்துணர்ச்சி பெருகும். ஒவ்வொரு நாளும் இதுவரை உபயோகப்படுத்தப்படாத ஒரு பாகத்தில் வலி உயிர்போகும். இருந்தாலும், எடுத்த முயற்சியை அரைகுறையாக விட மனமிருக்கவில்லை.

மிக ஆழமாக இல்லாத இடத்திலேயே பயமின்றி, சாவகாசமாக நீந்திக்கொண்டிருந்தவளை, ஒரு காவலர், `நீங்கள் ஆழமான இடத்தில் LAPS செய்யத் தயாராகிவிட்டீர்கள்,’ என உற்சாகப்படுத்த, அடுத்த கட்டத்துக்குத் தாவினேன். அதனால், இரண்டு மாதங்களில் 500 மீட்டர் தொலைவு நீந்த முடிந்தது. ஒரு நாள் விடாது போவேன்.

வெற்றி என்பது எடுத்த காரியத்தில் பிரச்னைகளையும், தோல்விகளையும், பிறரது கேலியையும் லட்சியம் செய்யாதிருப்பது.

யாரோ சொல்கிறார்களே என்று நமக்கு உடன்பாடில்லாத ஒன்றில் ஈடுபட்டால், திருப்தியோ, மகிழ்ச்சியோ கிடைக்காது — ஆரம்பத்தில் பார்த்த பொறியாளர்போல். விரக்திதான் மிஞ்சும்.

நமக்குப் பிடித்தவற்றை, நம் தகுதியை உணர்ந்து செய்தால் வெற்றியும், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியும் உறுதி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.