க. பாலசுப்பிரமணியன்

சுய-அடையாளங்களின் மாறும் பரிமாணங்கள்

education-1-1

உலகின் மிகச் சிறந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்வியைப் பற்றி தன் கருத்துக்களை வெளியிடும்பொழுது மிக அழகாகக் கூறினார்:

” ஒருவன் தனது பள்ளிக்காலத்தில் கற்றவைகள் அனைத்தும் மறந்த பின் எது மீதி இருக்கின்றதோ அதுவே கல்வியாகும்.” (Education is what remains after one has forgotten what one has learned in the school)

மேற்படிக் கூற்று மிகவும் சிந்திக்கவேண்டிய ஒன்று. வார்த்தைகள், கருத்துக்கள், சிந்தனைகள் இவற்றையெல்லாம் கடந்து அவற்றை அலசி ஆராயக்கூடிய  திறன் மிகவும் இன்றியமையாதது. மாறிவரும் உலகத்தில் பல கருத்துக்கள், செயல்முறைகள், திறன்கள், சமுதாய நோக்கங்கள், அரசியல் பார்வைகள் மற்றும் அறிவியல், தொழில் சார் நுட்பங்கள் அதிவேகத்தில் மாறிக்கொண்டும் தங்கள் ஆதிக்கங்களை வளர்த்துக்கொண்டும் மாற்றிக்கொண்டும் வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் பள்ளிகளில் நாம் கற்றுக்கொண்ட பல உண்மைகள் கருத்துக்கள் கேள்விக்குறியாகவும் தவறாகவும் வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் நடைமுறைக்கும் பயனற்றதாகவும் மாறிவிடுகின்றன. ஆகவே, ஒருவருடைய கற்றலில் நிலைபெற்ற உண்மைகள், அறிவுத்துகள்கள் ஓதுக்கப்பட்டு புதிய தேடல்களும், புதிய அறிவியல் நோக்கங்களும், புதிய செயல்பாட்டுத் திறன்களும் தேவைப்படுகின்றன. மனித மனமும் மூளையும் இவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் மட்டுமின்றி அவற்றால் நடைமுறையில் பயன்படுத்தக் கூடிய நிர்பந்தத்தில் இருக்கின்றன. ஆகவே புதிய கற்றல்களும் புதிய திறன்களில் பயிற்சியும் முதிர்ச்சியும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் இந்த மாற்றங்களை   ஏற்றுக்கொள்ளுவதுமட்டுமின்றி அதற்கான புதிய கற்றலுக்குத் தங்களைத் தயார்செய்து கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகின்றது.  இந்த மாற்றங்கள் தொடர்ச்சியானவை. எனவே இதைச்சார்ந்த கற்றலும் தொடர்ச்சியானதாக அமைகின்றது. இந்தக் கற்றல் எப்பொழுது நிறைவு பெரும் என்று அடிக்கடி கேள்வி எழுப்பப்படுகின்றது. சற்றே கூர்ந்து நோக்கினால் இந்தக் கற்றல் நமது கடைசி மூச்சு உள்ளவரை விரும்பியோ விரும்பாமலோ நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆகவே தான் தற்காலக் கல்வி வல்லுனர்களும், சமுதாயச் சிந்தனையாளர்களும், மூளைநரம்பியல் ஆராய்ச்சியாளர்களும் கற்றலை  ஒரு “வாழ்நாள் தொடர் செயலாகக்” (LIfe Long Learning) கருதுகின்றனர்.

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்று போற்றிய நாம் இன்று இவைகளுக்கு அப்பாலும் தேவைப்படுகின்ற பல திறன்களை கற்றலின் முக்கிய மிகத்தேவையான குறியீட்டுக்களாகக் கருதி போற்றிக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் இருக்கின்றோம். “வருங்காலத்தின் தாக்கங்கள்” ( The Future Shock ) என்ற ஒரு அரிய சிந்தனையைத் தூண்டும் புத்தகத்தை எழுதிய ஆல்வின் டாப்ளர் (Alvin Toffler) என்ற மேதை தன்னுடைய புத்தகத்தில் சமூக மாற்றங்களையும் அதற்குத்தக்கவாறு எவ்வாறு கற்றலும் செயல்திறன்களும் மாறிவருகின்ற என்பதை அலசும்பொழுது கூறும் ஒரு சீரிய கருத்து: “கற்றலின் மாற்றங்களின் தாக்கத்தைவிட, இந்த மாற்றங்களின் வேகத்தின் தாக்கங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை”. அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களின் வேகங்கள் நம்மை பிரம்மிக்கவைக்கக் கூடியதாக அமைந்துள்ளன. இந்த வேகங்களின் மாற்றங்கள் நாளொரு பொழுதும் பொழுதொரு வண்ணமும் நம்மை பின்னடையச் செய்துகொண்டிருக்கின்றன. இந்த வேகங்களின் தாக்கல் கற்றலின் அடிப்படைக் கருத்துக்களையும் சிந்தனைப் பின்னல்களையம் மாற்றுவதுமட்டுமின்றி பலவற்றை தற்கால வாழ்க்கைக்குத் தேவையற்றதாகவும் மாற்றிக்கொண்டிருக்கின்றன.

சமுதாய மாற்றங்களை மிகப்பெரிய அளவில் நான்கு பருவங்களாக அவர் நோக்குகின்றார்:

  1. விவசாயம் சார்ந்த காலம் (Agricultural Society)
  2. தொழில்வளர்ச்சி சார் காலம் (Industrial ‘society)
  3. தகவலியல் சமூகக் காலம் (Informatics Society)
  4. அறிவுசால் சமூகக் காலம் (Knowledge Society)

இந்த நான்கு காலங்களிலும் கருத்துக்களின் வாழ்வுக்காலத்தை ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது, முதலாக வரும் விவசாயம் சார்ந்த காலத்தில் கருத்துக்கள் பல நூற்றாண்டுகளுக்கு தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்த தொழில் சார் சமுதாயத்தில் இந்தக் கருத்துக்களின் வாழ்வுக்காலம் குறைந்து சில நூற்றாண்டுகளாக மட்டும் ஆனது. மூன்றாவதாக வரும் தகவலியல் காலத்தில் கருத்துக்களின் வாழ்வுக் காலம் சில பத்தாண்டுகளாகக் குறைந்து விட்டது. தற்போதைய அறிவுசால் சமுதாயக் காலத்தில் கருத்துக்களின் வாழ்வுக்காலங்கள் மிகக்குறைந்து சில ஆண்டுகளாக மட்டும் மாறிவிட்டன. இதன் தாக்கங்கள் கற்றலின் அடிப்படைத்தளங்களை ஆட்டிவிட்டது மட்டுமின்றி, கற்றலின் நோக்கம், முறைகள், எதிர்பார்ப்புக்கள் மற்றும் வேகத்தை அதிக அளவில் பாதித்து வருகின்றன. இதனால்தான் தற்போதைய மாணவர்களின் கற்றல் வகைகளும், போக்குகளும் சில பத்தாண்டுகளுக்குமுன் இருந்ததைவிட முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றன. இதைக்கருத்தில் கொண்டே ஆல்வின் டாப்ளர் கூறுகின்றார் “இருபத்தியொன்றாம் ஆண்டின் அறிவிலி எழுதப் படிக்கத் தெரியாதவன் அல்ல; ஆனால் எவனொருவன் கற்கவும், கற்றலை மறக்கவும் மற்றும் புதிய கற்றலுக்கு மாறவும் தயங்குகிறானோ அவனே அறிவிலி” (The Illiterate of the 21st century is not one be those who cannot read and write, but those who cannot learn, unlearn and relearn)

கற்றலின் இந்த அதிவேக மாற்றங்கள் ஒரு தனிமனிதனின் சுய அடையாளங்களின் வடிவங்களையும் தன்மைகளையும் நோக்கங்களையும் வெகுவாக மாற்றிவருகின்றன. ஆகவே தற்கால மாணவர்களிடம் இந்த வேகத்தின் பாதிப்பால் ஏற்படுகின்ற சுயஅடையாள நெருக்கடிகள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. இவற்றை சமாளிப்பதும் இதற்குத் தேவையான தீர்வுகள் ஏற்படுவதற்க்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதும் கல்வியாளர்களுக்கும் கல்விநிலையங்களுக்கும் பெற்றோர்களுக்கும் சமுதாயங்களுக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கற்றல் ஒரு ஆற்றல் 72

  1. காலை வணக்கம்.உங்கள் கட்டுரை தொடர வாழ்த்துக்கள்.

  2. தங்கள் அன்பான வாழ்த்துக்கு உளங்கனிந்த நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *