-தமிழ்த்தேனீ

 

guru

சீடன்  : குருவே  நான்  என்னை உணர  என்ன செய்யவேண்டும்?

குரு : நீ உன்னை உணர  உள்ளே பார்க்க வேண்டும்.

சீடன் :   உள்ளே பார்க்க  எப்படிப் பயிற்சி எடுக்க வேண்டும்?

குரு : முதலில் வெளியே பார்க்கவேண்டும்  வெளியே பார்த்துப் பார்த்து  உள்வாங்கிக் கொண்டால் அதன் பிறகு உள்ளே பார்ப்பது சுலபமாகிவிடும்.

சீடன் :  அப்படியானால் ஆலயம் தொழவேண்டுமென்கிறீர்களா?

குரு : ஆலயம் தொழலாம்  ஆனால்  தெய்வத்தைக் காண வேண்டும்.

சீடன் :   தெய்வத்தை  எப்படிக் காண்பது?

குரு :  விக்ரகத்தின் மூலமாகக்  காணலாம் .    அப்பு வாயு தேயு ப்ரித்வி ஆகாயம்  என்கின்ற  வெறும் பஞ்சபூதங்களாகிய  நீர்  நெருப்பு நிலம் காற்று  ஆகாயம் ஆகியவைகளிலும்  காணலாம்;  அது உன்னுடைய  மன முதிர்ச்சியைப் பொறுத்தது.

சீடன் :  அப்படியானால் காணும் பொருட்கள் யாவிலும்  இறைவனைக் காணும்  அளவுக்கு  மனமுதிர்ச்சி அடைய   என்ன செய்ய வேண்டும்?

குரு :  உன்னை உணரவேண்டும்; உன்னை  உணர உள்ளே பார்க்க வேண்டும்.

சீடன் :  மீண்டும் தொடங்கிய  இடத்துக்கே வந்துவிட்டீர்களே   குருதேவா  சற்றே விளக்கமாக சொல்லக் கூடாதா!

குரு :   தொடங்கிய இடத்துக்கே  வருவதுதான் தெய்வம்.  ஆதி அந்தமில்லாமல் ஒரு புள்ளி என்றில்லாமல் அனைத்துப் புள்ளிகளிலும் இணைவதே  தெய்வம்.  அதனால்தான்  ஆதியும் அவனே அந்தமும் அவனே என்கிறார்கள்  விஷயம் அறிந்தவர்கள்.

சீடன் :  அப்படியானால் என் போன்ற  சாமானியர்களுக்கு  இறையை உணர   அல்லது எங்களை உணர  வேறு வழியே இல்லையா  குருதேவா?

குரு :  இருக்கிறது சீடனே!  பக்தி மார்க்கத்தில்  மர்க்கட நியாயம், மார்ஜால  நியாயம் என்று இருவகையைச் சொல்கிறார்கள் .  மர்க்கடம் என்றால்  குரங்கு , குரங்கு  எப்போதுமே  குட்டிகளைப் பற்றிக் கொள்ளாது ஆனால் குட்டிகள்  குரங்கைப் பற்றிக் கொண்டே இருக்கும்.   பற்றியதை விட்டுவிட்டால் குரங்குக் குட்டி  கீழே விழுந்துவிடும்.

ஆனால்  மார்ஜால நியாயம் என்பது  என்ன தெரியுமா?  மார்ஜாலம் என்றால் பூனை.  பூனை எப்போதும் தன் குட்டிகளை வாயால் பற்றிக் கொண்டே  இருக்கும்.   எப்போதும் கூடவே இருந்து அந்தக் குட்டிகளுக்கு  எழுந்து நடக்க  ஓட  எகிறிக் குதிக்க உணவை வேட்டையாடக்  கற்றுக் கொடுக்கும்.  அதுபோலத்தான்   இறைவனும் இரண்டு விதமானவன்.

சீடன் :  என்ன  குருவே  இறைவன் இரண்டு  விதமானவனா  அதெப்படி?

குரு :   நீ ஏற்கெனவே கேட்டாயே  என்னை நான் எப்படி உணர்வது  என்று.  அதற்கு எளிதான வழி ஒன்று இருக்கிறது.  அது உன்னிலிருந்து நீயே இரண்டாகப் பிரிந்து  உன்னையே நீ கண்காணிப்பது.,    த்வைதம் அத்வைதம் என்று சொல்வார்கள்.  ஒன்றுதான்  இல்லை இரண்டு   ஆனால்  இரண்டுமே ஒன்று  என்று  அது போலத்தான்.

சீடன் :  அதெப்படி முடியும்?

குரு :   கண்ணாடி அறையிலே  நீ இருக்கும் போது உன்னுடைய  பல பிம்பங்கள் தெரிகிறது. அத்தனையும் வெவ்வேறா  எல்லாம் நீதானே!  அது போலத்தான்  நீ இரண்டாகப் பிரிந்தாலும் அல்லது பலவாகப் பிரிந்தாலும் அல்லது  ஆயிரம் கோடி அணுக்களாகப் பிரிந்தாலும்  அது நீதானே?  உன்னிலிருந்து பிரிந்தவைதானே  அது?

சீடன் :   அது சரி  ஆனால்  இறை பிரிந்தால் என்ன ஆகும்?  ஒருவன் சிவன் என்கிறான் ஒருவன் விஷ்ணு என்கிறான்  யாரை நம்புவது?

குரு :   நீ யாரை நம்புவது  என்று குழம்பாதே  நீ யாரை நம்பினாலும் அவன்தான் இறைவன். அவன் சிவன்  விஷ்ணு  என்கிற பலவடிவங்களில்  இருந்தாலும்  எல்லாம் ஒன்றுதானே  என்பதை உணர்ந்துவிட்டால் அதன்பின்  உன் குழப்பங்கள் தீர்ந்துவிடும். ஆனால் யாரை  நம்பக் கூடாது  என்று முதலில் தெரிந்துகொண்டால்  அதன் பின் யாரை நம்புவது என்று எளிதாகப் புரிந்துவிடும்.

சீடன் :  குருவே ஒவ்வொருவர் ஒவ்வொரு மதத்தை பின்பற்றுகிறார்களே அதற்குண்டான விதிமுறைகள் மாறுகின்றனவே . ஒருவன் சொல்கிறான் கடவுளுக்கு உருவம் கிடையாது  என்று;  இன்னொருவன்  உருவம் உள்ளவன்தான்  கடவுள் என்கிறான். விக்ரக  வழிபாடு கூடாது என்கிறான் ஒருவன்;  விக்ரகத்தை ப்ரதிஷ்டை செய்து வழிபடுவதே சிறந்தது என்கிறான் மற்றொருவன்.

குரு :   சீடனே நீயும் மற்றவர்களும்  நானும் போய்ச்சேருமிடம்  ஒன்றுதான்  என்பதை அறிவு பூர்வமாக ஆத்ம பூர்வமாக ஒப்புக்கொண்டால்  எல்லாம் விளங்கிவிடும்.   போய்ச்சேருமிடம் ஒன்று என்றால் அவரவர்  தகுதிக்கு ஏற்ப  இரு சக்கர வாகனத்திலோ  காரிலோ விமானத்திலோ  போகிறார்கள். ஆனால் போய்ச்சேருமிடம் ஒன்றுதானே  என்பதை உணர்ந்து பார்.   இந்த  மதங்கள் என்பது வெறும் வாகனங்கள்தான்.  நாம் எப்போதாவது  வாகனத்தில் சென்று ஓரிடத்தை  அடைந்து விட்டால் அந்த  வாகனத்தையும் போகுமிடமெல்லாம் தூக்கிக் கொண்டா அலகிறோம்? இல்லையே… அதுபோலத்தான் மதம் என்பதும் அதிலே ப்ரயாணம் செய்யலாம்; ஆனால் தூக்கிக் கொண்டு  அலையக் கூடாது.

சீடன் :   எப்போது நான் என்னை உணர்ந்து  இறையை உணர்ந்து  குழப்பம் நீங்கித் தெளிவு கொள்ளப் போகிறேனோ தெரியவில்லை குருவே!

குரு :   சீடனே  நீயும் இறையும் வெவ்வேறு  என்று எண்ணுகிறாய்?

அப்படி அல்ல  என்பதை உணரத்தான் உன்னை உணர் என்றேன் . அதனால்தான் அணுவைச் சத கூறிட்ட அணுவிலும் உளன்  என்கிறார்கள்  இறைவனை .  ஆகவே நீ உன்னை உணர்ந்தால் இறையை உணரலாம் . இறையை உணர்ந்தால் உன்னை உணரலாம்.  அதன் பின் இறையும் நீயும் வெவ்வேறல்ல  என்பதையும் உணரலாம்.

சீடன் :   குருவே கடைசியாக ஒரு கேள்வி.  நான் என்னை உணர்கிறேனோ இல்லையோ  இறையை உணர்கிறேனோ இல்லையோ  குறைந்த பக்‌ஷம் என் கூடவே இருந்து காட்சிதரும் உங்களை உணர  நான் என்ன  செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள்!

குரு: சீடனே இறையும் நீயுமே வேறில்லை என்கிறேன்.  என்னை உணர  முயற்சிக்கிறேன் என்கிறாயே?  நீயே நான் நானே நீ  புரிகிறதா ?   இன்னும் புரியவில்லை என்றால்  முதலில்  உன்னை உணர்.

சீடன்: குருவே  எனக்கு மயக்கமாக வருகிறது.

குரு :    குழம்பினால்தானே தெளிவு வரும்;  அதனால் சீக்கிரம் நீ தெளிந்துவிடுவாய்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *