-செண்பக ஜெகதீசன்

தினைத்துணையாக் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
(திருக்குறள்-433: குற்றங்கடிதல்)
 

புதுக் கவிதையில்…

வந்திடுமே
வாழ்வில் பழியென்று
அஞ்சுபவர்கள்,
கொஞ்சமாய்க் குற்றம்
தினையளவு வந்தாலும்,
கொள்வர் அதைப்
பனையளவாய்…! 

குறும்பாவில்…

பழிக்கு அஞ்சுபவர்கள்,
தினையளவு குற்றம்வரினும் கொள்வரதைப்
பனையளவாய்…! 

மரபுக் கவிதையில்…

வந்திடும் வாழ்வில் பழியென்றே
     -வருந்தி நாணும் குணமுடையோர்,
நொந்திடச் செய்யும் குற்றமது
     -நிலையில் சிறிய தினையளவில்
வந்த போதும் அதனைத்தான்
     -உருவில் பெரிய பனையதுபோல்
சிந்தையில் கொண்டு வெறுப்பாரே
     -செயலில் காட்ட மறுப்பாரே…! 

லிமரைக்கூ…

கண்டால் குற்றம் தினையளவில்,
கொள்ளுவர் அதனை பழிக்கஞ்சுவோர்
காணப் பெரிய பனையளவில்…! 

கிராமிய பாணியில்…

செய்யாதே செய்யாதே
குத்தமேதுஞ் செய்யாதே…
சிறுசுபெருசு கணக்கில்ல,
குத்தமேதுஞ் செய்யாதே… 

பழிபாவத்துக்குப் பயப்படுறவன்
பார்வயில இப்புடித்தான்-
தெனயளவு சிறுகுத்தமும்
அவனுக்கு
பனயளவாத் தெரியுமாமே… 

அதுக்கு,
செய்யாதே செய்யாதே
குத்தமேதுஞ் செய்யாதே…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *