இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 37
மீனாட்சி பாலகணேஷ்
இராமேசுவரத் தீர்த்த மகிமைகள்!
பிள்ளைத்தமிழ் நூல்கள் குழந்தையின் வளர்ச்சியை மற்றுமின்றி, அந்நூல் சிறப்பிக்கும் பாட்டுடைத் தலைவி / தலைவன் உறையும் தலத்தின் பலவிதமான செய்திகளையும், சிறப்புகளையும் நமக்குத் தெரிவிக்கின்றன. நம் இந்திய / இந்துப் பண்பாட்டின் பலவிதமான தொன்மங்கள், புராணக்கதைகள், குழந்தைகளைப் போற்றும் நிகழ்ச்சிகள், தலவரலாறுகள், அந்தந்தத்தலத்தில் அக்கடவுளைத் தொழுவதன் பயன்பாடுகள், ஆகியனவற்றையும் அழகுற விளக்குகின்றன.
தமிழிலக்கிய வளர்ச்சியை நோக்கினோமானால், இடைக்கால கட்டத்தில் சமய இலக்கியங்களின் வளர்ச்சிக்காலத்தின் பிற்பகுதியில் தோன்றிய சிற்றிலக்கியங்களுள் கடவுளைக் குழந்தையாகக் கண்டுதொழும் பிள்ளைத்தமிழ் இலக்கியமே முதன்மை இடம் வகிப்பதனைக் காணலாம். இவை மேற்காணும் பலவிதமான சிறப்புகளும் கொண்டமைந்தமையால்தான் இவ்வாறுள்ளனவோ எனவும் கருதத்தோன்றுகிறது.
இப்போது நாம் காணப்போகும் பாடல்கள் இராமேசுவரத்தில் எழுந்தருளியுள்ள இராமநாதசுவாமியாம் சிவனின் இணையான சேதுபர்வதவர்த்தனியின் மீதானது. நயமிகுந்த பலபாடல்களிலிருந்து நாம் தேர்ந்துள்ளவை நீராடல் பருவத்தில் உள்ள இரு அழகிய பாடல்களாகும்.
இப்பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை இயற்றியவர் தமிழ் வல்லுனராகிய சேற்றூர்ச் சமஸ்தானத்து வித்துவான் மு. ரா. அருணாசலக் கவிராயரவர்கள் என அறிகிறோம். இப்பிள்ளைத்தமிழ் எழுந்தது பற்றிய சுவையான செய்தி ஒன்று உண்டு: தேவை என்னும் இராமேசுவரத்தில் எழுந்தருளும் இராமநாதமூர்த்தி- பர்வதவர்த்தனியின் மகிமையை உலகத்தோர் அறிவர். வள்ளன்மைமிக்க தேவிகோட்டை ஜமீந்தாருக்கு ஒரு ஆண்மகவு பிறப்பதற்காக செய்துகொண்ட வேண்டுதலின் மீதே இப்பிள்ளைத்தமிழ் நூலை இயற்றும்படி வேண்டிக்கொண்டனர்! ஆசிரியர் இந்நூலைப்பாடி முடித்தகாலை ஜமீந்தாருக்கு ஒரு ஆண்மகவு பிறந்ததாம். பிள்ளைப்பேற்றுக்காக இத்தலத்து ஐயனையும் அம்மையையும் வேண்டிக்கொள்வது மிகுந்த காலமாக இருந்துவரும் வழக்கு.
இராமேசுவரம் அமைந்துள்ள தீவில் உள்ளும் வெளியிலுமாக அறுபத்துநான்கு புனித தீர்த்தங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. கந்தபுராணம் இவற்றுள் இருபத்துநான்கை மிக முக்கியமானவையெனக் கூறுகிறது. இந்தப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, வெவ்வேறு விதமான பாவங்களைத் தொலைக்கலாம். இவற்றுள் பல இராமநாதசுவாமியின் திருக்கோவிலின் உட்புறமே உள்ளனவாம்.
சேதுபர்வதவர்த்தனி அம்மையை நீராட அழைக்கும் புலவர், மிகப்பொருத்தமாக, மானிடர்களாகிய நாம் நீராட உகந்த சில புனித தீர்த்தங்களின் கதையை அழகுற இப்பாடல்களில் இணைத்துப் பாடியுள்ளார். அவை என்னவென்று பார்க்கலாமே!
செய்ந்நன்றி கொன்ற பாவத்தினைத் தீர்ப்பது சங்க தீர்த்தமாகும். வத்சநாபர் எனும் முனிவர் தனது அத்தகையதொரு பாவத்தை இத்தீர்த்தத்தில் நீராடிப் போக்கிக்கொண்டதாக வரலாறு.
அக்கினி தீர்த்தம் மற்றொன்று; இந்த அக்கினியே சீதையவளின் கற்பின் திறத்தை உலகிற்கு உணர்த்தியமையால் உயர்வாகப் பேசப்படுகின்றது.
(கம்பராமாயணத்தில், இராமன் இராவணனை அழித்தபின்பு தன்னிடம் வந்த சீதையிடம், தான் அவள் கற்பைச் சந்தேகிப்பதாகக் கூறவே, அவள் மிகுந்த துயருற்று, தீயை மூட்டச்செய்து அதில் புகுகிறாள். ஆனால், அவளுடைய கற்பெனும் தீ அந்த அக்கினிதேவனையே சுடுகின்றது. அவன் நெருப்பினின்றும் வெளிப்போந்து சீதையை இராமனிடமளித்துக் கூறுவதாகக் கம்பரின் கவிநயம்:
அங்கி யான்; என்னை இவ் அன்னை கற்பு எனும்
பொங்கு வெந் தீச்சுடப் பொறுக்கிலாமையால்
இங்கு அணைந்தேன் உறும் இயற்கை நோக்கியும்
சங்கியா நிற்றியோ எவர்க்கும் சான்றுளாய்.
(கம்பராமாயணம்- யுத்த காண்டம்)
“எல்லாருக்கும் சாட்சியாக உள்ள பரம்பொருளே! நான் அக்னி பகவான் (யான் அங்கி). இந்த அன்னையாம் (சீதையின்) கற்பு என்ற கொழுந்து விட்டு எரியும் கனல் என்னைச் சுட்டெரிக்கவே, அதைப் பொறுத்துக்கொள்ளும் தன்மை இல்லாததால், இங்கு எழுந்து வந்தேன். எனக்கு உண்டானதனைப் பார்த்த பின்பும் நீ (சீதாப் பிராட்டியிடம்) ஐயம் கொண்டு நிற்கலாமா? ‘ எனக்கேட்பதாக அருமையாகப் பாடியுள்ளார். ஆகவே சீதையின் கற்புத்திறத்தை அறிவுறுத்தும் அக்கினி- அவனுடைய தீர்த்தம் என்றார் இங்கு பிள்ளைத்தமிழ்ப்புலவர்.)
இங்கு இராமேசுவரத்துக் கடலே அக்கினிதீர்த்தமாகும். சீதையின் கற்பின் கனல் எரித்ததாலும், தான் சீதையை தொட்டெடுத்து இராமனிடம் அளித்ததால் உண்டான பாவம் தொலைவதற்காகவும் அக்கினிதேவன், கடலில் மூழ்கி எழுந்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்துப் பாடப்படுவது முனிதீர்த்தம்- இது அறுபட்ட செங்கையும் காலும் திரும்ப வளர உதவியது என்கிறார்.
அடுத்தது இலக்குமி தீர்த்தம்- இது சிவார்ச்சனைக்கும் உபயோகப்படும்; வறுமைப்பிணியையும் அகற்றியருளும்.
அடுத்து காலபயிரவருக்கு கருணைசெய்து அவருடைய பிரம்மஹத்தி தோஷத்தை (செருக்குற்ற பிரமனின் ஒரு சிரத்தைக் கிள்ளியதால் வந்தது!) நீக்கிய சிவ தீர்த்தமாம். மேலும் இராமபிரான் இராவணன் முதலான சிவபக்தர்களைக் கொன்ற பிரம்மஹத்திப் பாவம் நீங்கவும் இங்கு பூசை செய்து இத்தீர்த்தத்தில் முழுகி எழுந்தாராம்.
இத்தகைய பெயரும் புகழும்பெற்று இராமேசுவரத்தில் இருக்கும் தீர்த்தங்களைப் பற்றியும் அவ்விடத்தின் நாயகியாகத் திகழும் உன் அருட்திறத்தையும் பற்றிப் பேசினால் கூட, அவ்வாறு பேசுவோரின் குறைகள் (மாசு) நீங்குமாறு செய்விப்பவள் நீ! அத்தகைய தாய் பொதியமலையினின்றெழும் பொருநை நதியின் நீரில் ஆடியருளுவாயாக!
உண்மையாய் உள்ளத்தில் உனை நினைந்து தவம் செய்வோர் தொழும் பர்வதவர்த்தனி அம்மையே! பொங்கிவரும் புதுவெள்ளநீரில் ஆடியருளே! என அடியார் வேண்டுவதாகப் பாடல் அமைந்துள்ளது.
செய்ந்நன்றி கொன்றபா வந்தவிர்த் திடுசங்க
தீர்த்தநற் சீதைகற்பின்
திறமறி வுறுத்துமக் கினிதீர்த்த மறுபட்ட
செங்கையுங் காலும்வளர
உய்ந்நன்றி செய்தமுனி தீர்த்தஞ் சிவார்ச்சனைக்
குபயோக மாவுஞற்ற
லுற்றுவறு மைப்பிணி யகற்றுலக் குமிதீர்த்த
முயர்கால வயிரவர்க்குப்
பெய்ந்நன்று தவிர்பிரம கத்தியகல் வித்தவொரு
பெரியசிவ தீர்த்தமென்றும்
பெயராவி ராமே சுரத்துன தருட்டிறம்
பேசுவார் மாசுபிரிய
மெய்ந்நன்றி யருளுநீ பொதியைநின் றெழுபொருநை
வெள்ளநீ ராடியருளே
மெய்த்தவர் தொழும்பர்வத வர்த்தனி வரும்புதிய
வெள்ளநீ ராடியருளே.
(சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்- நீராடல் பருவம்)
மற்றொரு பாடலில் இராமேசுவரம் பற்றிய சில புராணச் செய்திகளையும் (இராமாயணத்தில் காண்பவை) காணலாம்:
முற்காலத்தில் மலைகள் இறகுகள் கொண்டு பறக்கும் சக்தி அமையப்பெற்று இருந்தன. தேவர்கள் அரசனான இந்திரன் மலைகளின் இறகுகளைத் தனது வச்சிராயுதத்தினால் வெட்டி வீழ்த்திவிட்டான். மைந்நாக பர்வதம் எனும் மலை மட்டுமே வாயுபகவானின் அருளால் கடலினடியே சென்று இறகுகள் வெட்டப்படுவதினின்றும் பிழைத்தது. அந்த நன்றியுணர்ச்சியின் காரணமாகவே, வாயிவின் மைந்தனான அநுமன் இலங்கைக்குச் செல்லும் வழியில் கடலிலிருந்து அந்த மலை வெளிப்பட்டு அநுமன் தன்மீது தங்கி இளைப்பாறிச்செல்ல உதவியதாம். இந்திரன் தனது பிரம்மஹத்திப் பாவத்திலிருந்து விடுபட மூழ்கியெழுந்தது இராமேசுவரத்திலுள்ள சீதைகுண்டம் எனப்படும் தீர்த்தம் கொண்ட வாவியாகும்.
கோடிவேதப் பிராமணர்களைக் கொன்றதற்கு ஈடாகச் செய்யும் பாவத்தைக் குறைத்திடும் தீர்த்தம் பிரமகுண்டம் என்பது.
அடுத்தது அநுமகுண்டம் எனப்படும் சிறந்ததொரு வாவியாகும். இராவணனை வென்று இலங்கையிலிருந்து திரும்பும் வழியில் இராமேசுவரத்தில் பூசை செய்ய எண்ணி இராமன் அநுமனிடம் ஒரு இலிங்கத்தைக் கொண்டுவரக் கூறினார். அநுமன் வரத் தாமதமானதால் சீதை மணலினால் செய்த ஒரு இலிங்கத்தை வைத்துப் பூசைசெய்தார் இராமன். இலிங்கத்துடன் வந்த அநுமன் இதைக்கண்டு மனம்வாடித் தன் வாலினால் அந்த இலிங்கத்தைப் பெயர்க்க முயற்சிசெய்ய அவனது வால் அறுந்துவிழுந்ததாம். பின்பு இராமன் அநுமனைச் சமாதானம் செய்து அந்த இலிங்கத்தையே பூசை செய்தார் என்பது ஒரு வரலாறு. இன்றும் அந்த மணல் இலிங்கத்தைக் காணலாம்; முதல்பூசை அதற்கே! இவ்விடத்தேயுள்ள மற்றொரு தீர்த்தம் அநுமகுண்டம் என்பதாம். இதில் ஊற்றெடுக்கும் நீரிலாடுவோர் மகப்பேறு வாய்க்கப்பெறுவர் என்பது கண்கூடு.
இவ்வாறு இத்தகைய தீர்த்தங்களில் ஆடுபவர்களின் உள்ளங்களில் வேண்டியவற்றையெல்லாம் தரும் இராமேசுவரத்தில் இராமநாதப் பெருமானருகில் இருந்தருளும் இளமைவாய்ந்த பெண்மயிலே! வெற்றிபெறும் தமிழ்முனிவனான அகத்தியன் வாழும் மலையான பொதியமலையினின்று இழிதரு பொருநைநதி வெள்ளத்தில் நீராடியருளுவாயாக! உண்மையாய் உள்ளத்தில் உனை நினைந்து தவம் செய்வோர் தொழும் பர்வதவர்த்தனி அம்மையே! பொங்கிவரும் புதுவெள்ளநீரில் ஆடியருளே! என வேண்டுகிறார்.
குன்றிற கரிந்தவன் பிரமகத் திப்பவங்
குறைசெய்த சீதைகுண்டம்
கோடிவே தப்பிரா மணர்தமைக் கொல்கொலை
குறைத்திடும் பிரமகுண்டம்
அன்றிரா மன்பணி யிலிங்கத்தை ஈர்த்துவா
லற்றுவிழ அநுமன்விழு
மவ்விடத் தூற்றெடுத் தாடுவர் மகப்பெறுத
லடைவிக்கு மநுமகுண்டம்
என்றினைய தீர்த்தங்க ளாடுவா ரெண்ணியாங்
கெப்பலனு மென்றுநல்கும்
இராமே சுரத்தினி லிராமாநா தர்க்கரு
கிருந்தரு ளிளம்பெண்மயிலே
வென்றிபெறு தமிழ்முனிவன் மலயநின் றெழுபொருநை
வெள்ளநீ ராடியருளே
மெய்த்தவர் தொழும்பர்வத வர்த்தனி வரும்புதிய
வெள்ளநீ ராடியருளே.
(சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்- நீராடல் பருவம்)
நீராடற்பருவப் பாடல்களாகிய இவை, இராமேசுவரத்துள்ள பலவிதமான தீர்த்தங்களில் நீராடுவோருக்கு உண்டாகும் பலவிதமான நன்மைகளைப் பொருத்தமாக எடுத்துரைப்பதாம். இது இராமேசுவரத்துக்கே உரிய ஒரு சிறப்பாகும். அதனைப் பொருத்தமாக நீராடற்பருவத்தில் புலவர் எடுத்துரைத்தமை மிக அருமையானதாகும்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
********************************
_