Category: ஆய்வுக் கட்டுரைகள்

ஆய்வுக் கட்டுரைகள்

  • (Peer Reviewed) குதித்தெழும் பிரபஞ்சம் ஒப்புரு

    ஸ்ரீ.நடராஜன் , முனைவர் ரெ.சந்திரமோகன்

    முதுஅறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை
    ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை
    மின்னஞ்சல்: natarajangravity@gmail.com, rathinam.chandramohan@gmail.com

    ====================================================

    குதித்தெழும் பிரபஞ்சம் ஒப்புரு

    பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும் , பிரபஞ்சத்தின் மூலநிலை மற்றும் அதன் இயக்கத்தைப் பற்றியும், பெருவெடிப்புத் தத்துவத்தில் மாற்றங்களையும் இக்கட்டுரை வாயிலாகக் காணலாம். மேலும் பிரபஞ்சமானது குதித்தெழும் ஒப்புருவாக ஆய்வு செய்யப்படுவதையும் இக்கட்டுரையில் காண்போம். பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பற்றிக் கணித முறையில் விளக்குவதற்குப் பல்வேறு ஒப்புருக்கள் இருந்தாலும், இயற்பியல் ரீதியிலான பெருவெடிப்புத் தத்துவமானது வெற்றிகரமான ஒப்புருவாக உள்ளது. பெருவெடிப்புத் தத்துவமானது, சமீபத்திய ஆய்வு முடிவுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    விரிவடையும் பிரபஞ்ச அமைப்பு, பிரபஞ்சப் பின்புல வெப்பநிலை ஆகியவை பெருவெடிப்புத் தத்துவத்திற்கு ஆதாரமாக அமைகின்றன. இப்பெருவெடிப்பு தத்துவத்தைப் பற்றிச் சற்று சுருக்கமாகக் காண்போம். இதன் வாயிலாகப் பெருவெடிப்புத் தத்துவமானது, எங்ஙனம் சிக்கல்களைச் சந்திக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். பெருவெடிப்புத் தத்துவத்தின் உருவாக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தொடங்குகிறது. காமோவ் மற்றும் அவர்களது குழுவினரால்[1] இத்தத்துவம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.

    பெருவெடிப்புத் தத்துவத்தின்படி பிரபஞ்சமானது, ஒரு சிறு புள்ளியில் இருந்து உருவாக ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது மூலநிலைப்புள்ளி(singularity) என்று அழைக்கப்படுகிறது. இம்மூலநிலைப் புள்ளியானது மிகுந்த அடர்த்தியுடனும், மிகுந்த அழுத்தத்துடனும், அதிக வெப்பத்துடனும் இருக்கும் என வரையறுக்கப்படுகிறது. இப்புள்ளியிலிருந்து பிரபஞ்சமானது விரிவடைந்து, குளிர்ந்து, தற்போது நாம் காணும் பரந்து விரிந்த பிரபஞ்சமாகத் தோற்றம் அளிக்கிறது என்பதைப் பெருவெடிப்புத் தத்துவம் முன்வைக்கிறது[2].

    இவ்வாறாக பிரபஞ்சமானது விரிவடையும் போது, வெப்பநிலை குறைவதால் அடிப்படைத் துகள்கள், அணுக்கள் மற்றும் அணுக் கூட்டங்கள் என்ற தொடர்ச்சியான மாற்றங்கள் உருவாகின்றன[3]. இச்செயல்பாடே தற்போதைய இயற்பியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்புருவுக்குச் சிறந்ததொரு ஆதாரமாக விளங்குகிறது. பிரபஞ்சம் விரிவடைவது மற்றும் அதன் வெப்பநிலை குறைவதுமான இரு பெரும் தத்துவங்கள் தற்போதும் நிரூபிக்கப்பட முடியும். வகை IA சூப்பர் நோவா தரவுகள்[4] மற்றும் பிரபஞ்சத்தின் பின்புல வெப்பநிலைத் தரவுகள்[5] ஆகியவை பெருவெடிப்புத் தத்துவத்திற்கு மாபெரும் வெற்றியைத் தருகின்றன. பிரபஞ்சம் விரிந்து கொண்டே இருப்பதை சூப்பர்நோவா தரவுகள் நிரூபிக்கின்றன. பிரபஞ்சம் குளிர்ந்து கொண்டே வருவதை பின்புல வெப்பநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வகையான பிரபஞ்சம் ஃப்ரீட்மேன் பிரபஞ்சம் என அழைக்கப்படுகிறது.

    இதுபோன்ற ஒரு சமன்பாடு ஐன்ஸ்டைனின் பிரபஞ்ச ஆய்வில் தெரிவிக்கப்பட்டது[6].
    ஐன்ஸ்டைனின் பிரபஞ்ச ஒப்புருவில் பிரபஞ்சம் விரிவடைவதைப் பிரபஞ்ச மாறிலி என்னும் சமன்பாட்டு நேரமைவின் மூலம் அவர் புகுத்தினார். பின்னர் வந்த அமெரிக்க வானியல் ஆய்வாளரான ஹப்பிள், பிரபஞ்சம் விரிவடைவதை நிரூபித்தவுடன்[7] ஐன்ஸ்டைன் தனது ஒப்புருவில் சேர்க்கப்பட்ட மாறிலியானது பிழை என்று அறிவித்தார்.

    இச்சமன்பாடுகள் செயலாக்கப்பட்ட அதே சமயம், இயற்பியலில் மணிமகுடமாகத் திகழும் குவாண்டம் இயற்பியலின் சமன்பாடுகள் வரையறுக்கப்பட்டும் வந்தன. குவாண்டம் இயற்பியலானது நுண்ணிய அளவிலான அடிப்படைத் துகள்கள், அலைகள் மற்றும் புலங்கள் ஆகியவற்றில் இயக்கத்தை வரையறுத்தது. மேலும் தொன்மை அளவில் சாத்தியமில்லாத சில மாறுபட்ட கருத்துகளையும் நிரூபித்தது. எடுத்துக்காட்டாக குவாண்டம் உட்புகுதல், துகள் – அலை இரட்டைக் கோட்பாடு மற்றும் நிலையில்லாக் கோட்பாடு ஆகியவை தொன்மை அளவில் சாத்தியமில்லாத அல்லது நிரூபிக்க முடியாத கோட்பாடுகளாகும். அவை குவாண்டம் அளவில் அதிகாரத்தில் உள்ளன[8].

    குவாண்டம் இயற்பியலின் குவாண்டமாக்கல் செயல்முறை அடிப்படை நிலையில், துகள்கள் மற்றும் அலைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான விளக்கத்தைத் தந்தது. உதாரணமாக மின்காந்த அலைகளைக் குவாண்டமாக்கல் என்னும் பகுப்பாய்வு செய்யும் போது அவை போட்டான்கள் எனும், சிறு சிறு ஆற்றல் சிப்பங்களாக அல்லது குவாண்டம் துகள்களாக இருப்பது தெரியவந்தது. இவ்வகையில் பிரபஞ்சத்தின் மூல நிலையும் குவாண்டமாக்கல் கணக்கீடுகளுக்குள் உட்புகுத்த முடியும் என்பதாக அறிவியல் அறிஞர்கள் ஆராயத் தொடங்கினர்.

    நீண்ட காலமாகப் பிரபஞ்சத்தின் மூல நிலையைப் பற்றிய கருத்துகள் வெளிவந்தாலும் எவற்றாலும் அங்கு உள்ள ஈர்ப்பு விசை பற்றியோ அல்லது காலவெளியின் நிலையைப் பற்றியோ தெளிவாக விளக்க முடியவில்லை. ஈர்ப்புவிசையைக் குவாண்டமாக்கும் பல்வேறு கருதுகோள் முயற்சிகளும்  இறுதியில் மூலப் புள்ளியில் குவாண்ட அமைப்புகளை விளக்க முடியாமல் நின்று விட்டன[9].

    மூலநிலைப் புள்ளியை அவ்வளவு சீக்கிரமாக குவாண்டமாக்கல் செயல்முறைக்கு உட்படுத்த முடியாததற்குக் காரணம், அங்கு அதிகமான கால வெளியின் வளைவுகள் இருப்பதும் மற்றும் பிரபஞ்சத்தின் பருமன் சுழியம் ஆவதும் ஆகும். மேலும் அங்கு குவாண்டம் விளைவுகள், மிக அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகவே மூலநிலையைத் தெளிவுறக் குவாண்டமாக்க முடியாததும் மேலும் ஈர்ப்பு விசையைக் குவாண்டமாக்க முடியாததுமான சிக்கலை இயற்பியலுக்குத் தந்தது. மேலும் ஈர்ப்பு விசையைக் குவாண்டமாக்கும் செயல்முறைகளில் பின்புலக் காலவெளியின் ஆதிக்கத்தைத் தவிர்த்ததான சமன்பாட்டினை உருவாக்குவது என்பது சாத்தியம் இல்லாததாகவே இருந்து வந்தது. மேலும் மூலப் புள்ளியைத் தவிர்த்த பிரபஞ்ச ஒப்புருவை உருவாக்குவதும் சாத்தியமில்லாததாகவே இருந்தது.

    இவ்வாறான சிக்கலைத் தவிர்க்கவே வளையக் குவாண்டம் பிரபஞ்ச ஒப்புரு[10] என்னும் ஒப்புருவானது முன்வைக்கப்படுகிறது. இவ்வொப்புருவில் காலவெளியானது சுழல் வலைப்பின்னல் அமைப்புகளால் கட்டமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு குவாண்டம் பரப்பும் குவாண்டம் அளவில் ஒரே மாதிரியான தொகுப்பைக் கொண்டிருக்கும் எனவும் வரையறுக்கப்படுகிறது. இவ்வாறாக பிரபஞ்சத்தின் காலவெளியானது குவாண்டமாக்கப்படுகிறது. அதாவது குவாண்டம் அளவில் பிரபஞ்சமானது தொடர்ச்சியாக இல்லாமல் சிறு சிறு குவாண்டம் பகுதிகளாக இருப்பதாக அறியமுடிகிறது.

    இத்தகைய கணிதவியல் அளவீடுகள் மூலம், மூலநிலைப் புள்ளியையும் எளிமையாக குவாண்டமாக்க முடியும். அதாவது மூலநிலைப் புள்ளியில் கொள்ளளவு என்பது சுழியமாக அமையாமலும், மேலும் காலவெளியின் வளைவுகள் குறிப்பிட்ட பெரும அளவுகளுக்குள் அமைவதையும் புரிந்துகொள்ள முடியும். ஆகையால் தொன்மை இயற்பியல் அளவில் விவரிக்க இயலாத பிரபஞ்ச மூலநிலைப் புள்ளியை குவாண்டம் அளவில் வளையக் குவாண்டம் பிரபஞ்ச ஒப்புரு மூலம் தெளிவாக விளக்க முடியும். மேலும் மூல நிலைப் புள்ளிக்குச் சற்று முன்னதான மற்றும் சற்றுப் பின்னதான சூழலிலிருந்து பிரபஞ்சம் எவ்வாறு பரிணமித்திருக்கும் என்பதையும் இக்கணித வரையறைகள் மூலம் சொல்ல முடியும்.

    இம்மூலநிலைப் புள்ளியில் பிரபஞ்சமானது வித்தியாசமான இயக்கவியலைப் பெற்றுள்ளது. தொன்மை இயக்கவியலைப் பொறுத்தவரையில் பிரபஞ்சமானது மூலநிலைப் புள்ளியில் இருந்து வெகு வேகமாகப் பரிமாற்றம் அடைந்து தற்போதுள்ள பிரபஞ்சம் வரையில் விரிந்து வந்ததாகச் சொல்லப்பட்டாலும், வளையக் குவாண்டம் பிரபஞ்சவியலைப் பொறுத்தவரை பிரபஞ்சமானது, மூல நிலைப் புள்ளியைப் பொறுத்து, குதித்தெழும் பிரபஞ்சமாக[11] ஒப்புமைப் படுத்தப்படுகிறது.

    அதாவது மூலநிலைப் புள்ளியை நோக்கி வரும் பிரபஞ்சம் மூல நிலைப் புள்ளிக்கு அருகில் மாறுநிலை அடர்த்தியை எய்தும். அப்போது பிரபஞ்சமானது குதித்தெழும் தன்மையுடன் மீண்டும் விரிந்து செல்லும். மேலும் இச்சூழ்நிலையில் ஈர்ப்பு விசையானது தள்ளும் இசையாக அல்லது விலக்கு விசையாகச் செயல்படுவதையும் இக்கருத்துருவாக்கம் முன்வைக்கிறது. ஆகவே பிரபஞ்சமானது குதித்தெழும் பிரபஞ்சமாக, குவாண்டம் இயக்கவியல் மூலம் கணித முறையில் வரையறுக்கப்பட முடியும். இவ்வாறான பிரபஞ்ச ஒப்புரு, பல்வேறு மூலநிலைச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    மேற்கோள்கள்
    1. Gamow, G. (1982). by G. Gamow, Phys. Rev. 70,572 . Unity Of Forces In The Universe (In 2 Volumes), 1, 459,1946.
    2. Linder, E. V. (2003). Exploring the expansion history of the universe. Physical Review Letters, 90(9), 091301.
    3. Wagoner, R. V. (1973). Big-bang nucleosynthesis revisited. The Astrophysical Journal, 179, 343-360.
    4. Riess, A. G., Strolger, L. G., Casertano, S., Ferguson, H. C., Mobasher, B., Gold, B., … & Tonry, J. (2007). New Hubble space telescope discoveries of type Ia supernovae at z≥ 1: narrowing constraints on the early behavior of dark energy. The Astrophysical Journal, 659(1), 98.
    5. Schlegel, D. J., Finkbeiner, D. P., & Davis, M. (1998). Maps of dust infrared emission for use in estimation of reddening and cosmic microwave background radiation foregrounds. The Astrophysical Journal, 500(2), 525.
    6. Winberg, S. (1972). Gravitation and cosmology. ed. John Wiley and Sons, New York.
    7. Hubble, E. (1929). A relation between distance and radial velocity among extra-galactic nebulae. Proceedings of the National Academy of Sciences, 15(3), 168-173.
    8. Sakurai, J. J., & Commins, E. D. (1995). Modern quantum mechanics, revised edition.
    9. DeWitt, B. S. (1967). Quantum theory of gravity. I. The canonical theory. Physical Review, 160(5), 1113.
    10. Bojowald, M. (2008). Loop quantum cosmology. Living Reviews in Relativity, 11(1), 4.
    11. Wilson-Ewing, E. (2013). The matter bounce scenario in loop quantum cosmology. Journal of Cosmology and Astroparticle Physics, 2013(03), 026.

    ===================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும், பிரபஞ்சத்தின் மூலநிலை மற்றும் அதன் இயக்கத்தைப் பற்றியும், பெருவெடிப்புத் தத்துவத்தில் மாற்றங்களையும் இக்கட்டுரை வாயிலாகக் காண முடிகிறது. மேலும் பிரபஞ்சமானது இக்கட்டுரையில் குதித்தெழும் ஒப்புருவாக ஆய்வு செய்யப்படுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பற்றிக் கணித முறையில் விளக்குவதற்குப் பல்வேறு ஒப்புருக்கள் இருந்தாலும், இயற்பியல் ரீதியிலான பெருவெடிப்புத் தத்துவமானது வெற்றிகரமான ஒப்புருவாக உள்ளது. பெருவெடிப்புத் தத்துவமானது, சமீபத்திய ஆய்வு முடிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விரிவடையும் பிரபஞ்ச அமைப்பு, பிரபஞ்சப் பின்புல வெப்பநிலை ஆகியவை பெருவெடிப்புத் தத்துவத்திற்கு ஆதாரமாக அமைகின்றன.

    தொன்மை இயக்கவியலைப் பொறுத்தவரையில் பிரபஞ்சமானது மூலநிலைப் புள்ளியில் இருந்து வெகு வேகமாகப் பரிமாற்றம் அடைந்து, தற்போதுள்ள பிரபஞ்சம் வரையில் விரிந்து வந்ததாகச் சொல்லப்பட்டாலும், வளையக் குவாண்டம் பிரபஞ்சவியலைப் பொறுத்தவரை பிரபஞ்சமானது, மூல நிலைப் புள்ளியைப் பொறுத்துக் குதித்தெழும் பிரபஞ்சமாக ஒப்புமைப்படுத்தப்படுகிறது. அதாவது மூலநிலைப் புள்ளியை நோக்கி வரும் பிரபஞ்சம், மூல நிலைப் புள்ளிக்கு அருகில் மாறுநிலை அடர்த்தியை எய்தும். அப்போது பிரபஞ்சமானது குதித்தெழும் தன்மையுடன் மீண்டும் விரிந்து செல்லும். மேலும் இச்சூழ்நிலையில் ஈர்ப்பு விசையானது தள்ளும் விசையாக அல்லது விலக்கு விசையாக செயல்படுவதையும் இக்கருத்துருவாக்கம் முன்வைக்கிறது. ஆகவே பிரபஞ்சமானது குதித்தெழும் பிரபஞ்சமாக, குவாண்டம் இயக்கவியல் மூலம் கணித முறையில் வரையறுக்கப்பட முடியும். இவ்வாறான பிரபஞ்ச ஒப்புரு, பல்வேறு மூலநிலைச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    பெரும் பாய்ச்சலில் பிரபஞ்சம் தோன்றி இருக்கலாம் என்று குறிப்பிடும் ஆய்வாளர்கள், தமது கோட்பாட்டைப் பெருவெடிப்பு நியதியோடு ஒப்பிட்டு இன்னும் தெளிவாக விளக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு சுருக்கவுரை பிறகு விரிவுரை, இறுதியில் முடிவுரை என்ற அமைப்பில் பிரபஞ்சத் தோற்றக் கோட்பாடுகளைப் படத்துடன் ஆய்வுக் கருத்துரையாக அமைத்துக் காட்ட வேண்டும்.

    ஆய்வாளர்கள், இந்தக் கட்டுரையையும் கவனித்திருக்கலாம்: http://www.vallamai.com/?p=82254

    ===================================================

    Share
  • (Peer Reviewed) சித்தர் இலக்கியங்களில் பெண்கள் குறித்த பதிவுகள்

     

    -முனைவர் க. இளமதி ஜானகிராமன்
    பேராசிரியர்,
    சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்,
    புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி- 605014.

    *******************************************************

    அந்தக் கரணங்கள் நான்கினுள் சித்தத்தை அடக்கி, யோகச் செயல்முறைகட்கு ஆட்படுத்தி, சித்திகளைப்பெற்று சித்தர்களாகி தாம் பெற்ற சித்திகளின் மூலம் சமுதாய மக்களை மேம்படுத்த உயரிய முற்போக்குக் கொள்கைகளைத் தம் பாடல்களில் எழுதி, அனைத்துத் தத்துவங்களின் உண்மைப் பொருள்களையும் புலப்படுத்தி இன்றைக்கும் இம்மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களின் இலக்கியங்களில் பெண்கள் பற்றிய பல்வேறு செய்திகளைப் பதிவு செய்துள்ளனர். அவற்றை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

    சக்தியே பெண் ஆவாள்

    பாரதி தம்முடைய பாடலில், ‘பெண் உருக்கொண்டு போந்துநிற்பது தாய் சிவசக்தியாம்’ என்பர். சட்டை முனியும் ‘அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம்’ என்றே தொடங்குவார். தேவருலகத்திலும் மற்றுமுள்ள எவ்வுலகத்திலும் பெண் எனும்  சக்தியைச் சேராதவர்கள் இல்லை. பெண்சக்தியோடு இணையும் பொழுதுதான் மனிதர்களின் வாழ்வும் சிறக்கும். இதனை வெளிக்காட்டவே நீலி, கங்கை எனும் இருவரையும் சிவபெருமான் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் இப்பூமியில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ்ந்தால்தான் உயர்வினை அடைய முடியும் என்பதை வெளிக்காட்டவே ‘உமாபதி’யாக அர்த்தநாரீசுரராக சிவபிரானும் சக்தியும் வெளிப்பட்டிருக்கின்றார்கள் எனும்  கருத்துக்களைப் புலப்படுத்தும் சித்தர்கள்,

    மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே
    மாதர்தோள் சேர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே
    மாதராகும் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
    மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்துகொண்டான் ஈசனே  (சிவவாக்கியார்பாடல்) என்றும்

    ஆணும் பெண்ணுமாய் அற்புதக் கோலம் நீடி (பட்டினத்தார் பொது) என்றும் பாடித் தெரிவிப்பார்.

    உலகத் தோற்றமும் ஒழுக்கமும்

    இவ்வுலகம் ஆதிபராசக்தி எனும் பெண் சக்தியில் தோன்றிப் பெண்சக்தியிலேயே ஒடுங்குகின்றது என்பதைக் காகபுசுண்டர் தம் காவியத்தில் உரைப்பர். இதனை இராமதேவர் முதலான சித்தர்களும் ஏற்பர். பிரளயங்கள் ஏற்பட்டு அனைத்தும் அடங்கிவிட்ட பிறகு பிரமம் இவ்வுலகத்தைத் தோற்றுவிக்க நினைக்கும்பொழுது காலத்தம்பத்தில்  ஆதிபராசக்தி   தோன்றி சிவன், திருமால்  போன்ற தெய்வங்களை அழைப்பாள். திருமால் தன் உந்திக்கமலத்தில் பிரமனை உருவாக்க அவருள் அடங்கியிருந்த  உயிரினங்களை  வெளிக்கொணர இவ்வுலகம் தோன்றுகிறது. ஒடுக்கக் காலத்தில் அனைத்தும் உருவாகியபடியே ஆதிபராசக்தியில் ஒடுங்கிவிடுகின்றன என்று காகபுசுண்டர் உரைப்பர். (காகபுசுண்டர் காவியம்)

    சித்திகளைத் தருபவள் சக்தியே

    சித்தர்கள் பெண் சக்தியே சித்திகளைத் தருகின்றது என்ற மெய்ம்மைப் பொருண்மையாகக் கொண்டமையால் தங்களது பாடல்களில் அவற்றைப் பதிவு செய்துள்ளனர். சட்டைமுனி, ‘சிவனது இடதுபுறத்தில் நிற்பவள் அட்டமாசித்தியினை அளிப்பவள், புகழ் வாய்ந்த இரத்தின ஆரம் பூண்டவள், இவளது  திருவடிவினைக் காண்பதற்கு நவகோடிதேவர், சித்தர் முதலானோர் நிற்பர். எருதின்மேல் ஏறுகின்ற அப்பன் ஏழை எனவே அவரிடம் சொல்லாமல் இவ்அம்மையின் முன்னே வைத்துக் கேட்டால் நாம் கேட்டதையெல்லாம் அருளிச்செய்வாள். அவளின் வழி அவற்றைப்பெற்று மவுனத்தைப் பெறவேண்டும்’ என்பர். (சட்டைமுனி முன்ஞானம் 100)

    தாயாகிய சக்தியின் செயற்பாடுகள்

    சட்டைமுனி, தாயாகிய சக்தியின் செய்பாடுகள் யோகசாதனைகள் செய்பவரிடத்து வெளிப்படும் என்பதை,

    உன்னிநின்ற மூலமுதலாறும் பார்த்தே
    உருகுகின்ற சுழுமுனையை யறிந்துபின்பு
    மன்னி நின்ற மதிமேல் சாம்பவியைக் கண்டு
    மருவிநின்று மணமுறைந்து சேர்த்து பின்பு
    பன்னிநின்ற இவ்வளவும் யோக மார்க்கம்
    பகலிரவு மற்றவிடம் ஞான மார்க்கம்
    கன்னி நின்ற விடங்கண்டா லவனே ஞானி
    காட்டுவாள் கேசரியைக் காட்டு வாளே ( சட்டை முனி பா:10)

    யோக சாதனைகளில் ஈடுபட்டவர்கள் ஞானமார்க்கத்தை நோக்கிச் செல்லவேண்டும். அவ்விடம் பகலும் இரவும் அற்றதாகும். அது கன்னி எனும் வாலைப்பெண்ணின் இடமாகும் அவ்விடத்தைக் கண்டவனே ஞானியாகும். அவ்வாலைப் பெண்ணே கேசரி எனும் வித்தையைக் காட்டுவாள்.

    காட்டுவாள் கிரிதன்னை மேலே யேற்றிக்
    கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்வாள்
    மூட்டுவாள் குளிகைவிட்டால் கணத்துக்குள்ளே
    மூதண்ட புவிகடந்து தெளிவுங் காணும்
    ஆட்டுவாள் அண்டரண்ட மாலை பூண்டாள்
    ஆதிவத்து அனாதிவத்து இரண்டுமொன்றே
    ஊட்டுவாள் நிற்குணத்தின் அமுதவல்லி
    உயர்ந்து நின்ற ஞானசக்தி யுறவு தானே (பா:11)

    வாலைப் பெண்ணானவள் தலையான மலையில் ஏற்றிவிடுவாள். ஏறாவிட்டால் கீழே தள்ளிவிடுவாள். குளிகையை உண்டு ஒருகண நேரத்திற்குள் இப்பெரிய உலகைக் கடந்து செல்வது போல உணர வைப்பாள். அவள் அண்டங்களையும் அவற்றில் வாழ்பவரையும் மாலையாக முடித்து அணிந்தவளாவாள். தகுதிவாய்ந்த அவளைவிட மிகச்சிறந்த உறவுயாருமில்லை எல்லாச் சமயத்தினரையும் திரோதானத்தால் அவள் மாயை செய்து ஆட்டுவிக்கின்றாள்.

    கேசரி யோகம்

    மனத்தின் முடிவு எல்லையில் தேவியின் திருவடி என்பதை கேசரி யோகத்தால் உணரலாம். கேசரி யோகத்தில் உள்ள வாலைத்தாயின் குண்டலித் தீயினது ஒளி கண்ணும் விண்ணும் கொள்ளாதது. கரை காணமுடியாதது. இதனைப் பறை என்றும் விண் படரும் செயல் என்றும் கூறுவர். அவளை மவுனத்தால் உணரவேண்டும். அவளை உருவம் ஒன்றும் இல்லாத மவுனச் செய்கையாகக் கொள்ளலாம். அவள் வான் மீது படரும் சோதியாகும். மவுனமுற்று இருந்தால் லயத்தின் நேர்மையில் உலகிற்கும் அம்மவுனமாகிய ஜோதி தெரியும்.

    கொங்கணரும் இக்கருத்தை உடன்படுவார். தோற்றத்திற்குக் காரணமாக இருக்கும் வாலைப்பெண்தான் ஐந்தெழுத்துமாக நின்றவள்; இவளே ஊமை எழுத்துமாவாள். இவளே ஞானத்தின் வகையாக நிற்பாள் என்பதை,

    ஆதியிலைந் தெழுத் தாயினாள் வாலைப்பெண்
    ஐந்தெழுத் துமென்று பேரானாள்,
    நாதியி னூமை யெழுத் திவள் தானல்ல
    ஞான வகையிவள் தானானாள்  (கொங்கணர்  பா:13)

    எனும் பாடலில் தெரிவிப்பர். இவர் கூறிய ஊமை எழுத்தினை விரிக்கும்பொழுது இவரே ஊமை எழுத்தே உடலாச்சு என்பர்.  இதனைச் சிவவாக்கியரும் தம் பாடலில் ,

    சக்தியாவது உன்னுடல் தயங்குசீவன் உட்சிவம்
    வித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே
    சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல்லிறந்த தோர்வெளி
    சக்தியும் சிவமும் ஆகிநின்ற தன்மையாவது உண்மையே (சிவ:372)

    என்று உரைப்பர். இப்பாடலில் நமது உடலாக நிற்பது சக்தி; உள்ளிருக்கும் உயிராக இருப்பது சிவன். இவ்விரண்டையும் சுற்றி ஐந்து கோசங்கள் கோட்டைகட்டி உள்ளன. உள்ளே கூடமாக ஒளி நிற்கின்றது. எனவே சக்தியும் சிவமுமாக நிற்பது உண்மையாகும். என்று உரைப்பதால் உயிர்களின் செயற்பாட்டிற்கு முதன்மையாக உடல் விளங்குவதை அறியலாம்.

    மகடூஉ முன்னிலை

    பெண்களை முன்னிலையாக வைத்துப் பாடுவது மகடூஉ முன்னிலை எனப்படும். இந்நிலையில் பட்டினத்தார், கொங்கணர், குதம்பைச்சித்தர், அழுகணிச்சித்தர் முதலானோர் பாடல்களைப் பாடுகின்றனர்.

    முந்தச் செகங்களுண்டானதுவும் முதல்
    தெய்வமுந் தேவருண்டானதுவும்
    விந்தையாய் வாலையுண்டானதுவும் ஞான
    விளக்கம் பாரடி வாலைப் பெண்ணே!  (கொங்கணர் பா.11)

    குதம்பைச்சித்தர்,

    வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போருக்கு
    பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய்
    பட்டயம் ஏதுக்கடி  (குதம்பை பா : 12) என்றும் பாடுவர்.

    நாயக நாயகி பாவனையில் பாடுதல்

    தன்னைப் பெண்ணாகவும் இறைவனை ஆணாகவும் வைத்துக்கொண்டு பாடுதல் நாயக நாயகி பாவனையாகும். பட்டினத்தார் தன்னைப் பெண்ணாகவே கொண்டு பாடுகிறார்.

    கன்னி அழித்தவனைக் கண்ணாரக் கண்டேன்டி
    என் இயல்பு நானறியேன் ஈதென்ன மாயமடி  என்றும்,

    கண்மாயம் இட்டாண்டி கருத்தையும் இழந்தேன்டி
    உள்மாயம் இட்டவனை உருஅழியக் கண்டேன்டி (பட்டினத்தார் பா:69) என்றும் பாடுவர்.

    பொது நிலையில் பெண்கள்

    சித்தர்கள் தங்களது பாடல்களில் பெண்கள் எவ்வாறு  இருந்தனர் என்பதையும் பதிவு செய்துள்ளனர். பெண்டிர் தம்மை அழகுபடுத்திக் கொள்வதில் விருப்பம் உள்ளவர்களாக இருந்தனர். தங்கத்தாலான அணிகலன்களை அணிந்தனர். வளம் குறைந்தவர்கள் பித்தளையினால் ஆகிய அணிகளை விளக்கி அணிந்தனர். கொம்பு இல்லாத உருண்டை மஞ்சளைத் தேய்த்து எண்ணெயும் கூட்டிமுகத்தில் பூசிக் கொண்டனர். சுட்டெரித்த சாந்தினைப் பூசி முகத்தில் நெட்டெழுத்தினைப் போலப் பொட்டிட்டுக்கொண்டனர். மெட்டி அணிந்தனர். இவர்கள் எதனையும் மனத்தில் வைத்திருக்கும் வன்மையில்லாதவர்கள். மானத்தினைக் காப்பது சேலைக்குமேல் எதுவுமில்லை என்று கருதினர். பத்து மாதங்கள் குழந்தையைச் சுமந்து இறைவனையே தியானித்துத் தொந்தி சரிய அங்கமெல்லாம் நொந்து பிள்ளைகளைப் பெறுவர். பெற்ற பிள்ளை ஆண் பிள்ளை என்று கூறினால் மகிழ்வர். தன் முலைப்பாலினைக் கொடுத்து வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள் மேலும் கட்டிலிலும் வைத்து இரவு பகல் என்றில்லாமல் அன்புடன் காப்பர். தேனே, அமிர்தமே, செல்வத்திரவியப் பூவே, மானே என்றழைத்து முகம் மேல் முகம் வைத்து முத்தாடி என்றன் மகனே என்றழைப்பர். குற்றம் குறை போக்கி வளர்ப்பர். தன் மகனுக்கு ஒரு வருத்தம் எனில் சிறிதும் தாங்கார். கணவனோ அன்றிப் பிறரோ இறந்து விட்டால் வீதி வரையில் அழுது கொண்டு வருவர். கணவன், தகப்பன் அண்ணன், தம்பி யாராயினும் பொருள் சம்பாதித்து வருபவர்களையே விரும்புவர். கற்புடைய குலமகளிர் பத்தினிப் பெண்டிர் என்று போற்றப்பெற்றனர்.

    கற்பு நிலை திரிந்தபெண்களும் இருந்ததைப் பட்டினத்தார் காட்டுவர்.  சமுதாயத்தில் கற்புடைய பெண்டிர் என்றும் போற்றப்பெற்றனர். சமுதாயத்தில் கற்புடைய பெண்டிர் இருந்ததைப் போன்று விலை மாதர்களும் இருந்தனர். இவர்கள் நாவார வேண்டிய இதம் சொல்வர். தன்னிடம் வந்தவனைப் பிரித்தால் இறப்பதாகக் கூறுவர். வருபவர்களுடன் ஒரு தன்மையாய் அமர்ந்து உண்பர். பொருள் தீர்ந்துவிட்டதெனில் போய் வரச்சொல்லி நடுத்தலையில் குட்டுவர். தினந்தோறும் பொய்யினையே பேசுவர். வம்பு பேசுவதில் சிறந்தவர். இவர்களுக்கென்று தனி வீதிகள் இருந்தன. ஆடவர்கள் பலர் தாங்கள் உழைத்து ஈட்டிய பொருளையெல்லாம் விலைமாதர்களுக்கே தந்து வாழ்ந்தனர். அதனால் நோய்வாய்ப்பட்டவர்களும் உண்டு. பொருள் அற்ற வறியவர்களை இவ்விலைமாதர் தங்களுடன் சேர்ப்பது இல்லை. தங்களை அழகுபடுத்திக் கொண்டு பட்டப்பகலில் வெளி மயக்குச் செய்து திரிவர்.  (க.இளமதி ஜானகிராமன் சித்தர் இலக்கியம் பக்:168-169)) என்று உரைப்பதின் வழி, பெண்கள் பொருளுக்காக ஆண்களை வயப்படுத்தும் நிலை மாறவேண்டும் என்றும் பெண்கள் தங்களுக்கான வாழ்க்கையைத் தாங்களே தேர்வு செய்து முழுமையுமாக  வாழவேண்டும் என்பதையும் புலப்படுத்துவர்.

    சித்தர்கள் பெண்களை வெறுப்பவர்கள் என்றும் அவர்களின் உடல் உறுப்புகளை இழிவாகப் பேசுபவர்கள் என்றும் பட்டினத்தார் பாடல்களைச் சான்று காட்டி உரைப்பவர்களும் உண்டு. பட்டினத்தார் வெளிமயக்கு செய்து ஆண்களிடம் பொருள் பெறும் பெண்களைக் குறித்துத்தான் அவ்விதம் பாடினாரே ஒழிய கற்புடைய பெண்களை அவர் குறைகூறவில்லை. அனைத்துச் சித்தர்களும் பெண்களைச் சக்தியின் உருவமாகவே காண்கின்றனர். கொங்கணர்,

    உந்தன் பத்தினிமார்களைப் பழித்துக்காட்டாத’ (கொங்கணர் பா:64)

    பெண்ணுமில்லாமலே ஆணுமில்லை யிது
    பேணிப் பாராடி வாலைப்பெண்ணே (கொங்கணர் பா.72) என்றும்,

    கற்புடைப் பெண்கள் குலம் வாழ்க – நின்ற
    கற்பை அளித்தவரே வாழ்க (கொங்கணர் பா:46) என்றும் வாழ்த்திப் பாடுவர்.

    முடிவுரை

    இக்கட்டுரையின் வாயிலாக, சித்தர்கள் பெண் சக்தியே இவ்வுலகத் தோற்ற ஒடுக்கங்களுக்குக் காரணமாகிறது, அனைத்திற்கும் மூலமாக உள்ளது, சித்திகளைத் தருவது, இன்பத்தை அளிப்பது, இறையுடன் ஒன்ற உறுதுணைபுரிவது எனும் நிலைகளில் பெண்மையைப் போற்றியுள்ளமை வெளிப்படுத்தப்படுகின்றது.

    *****

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    சித்தர்கள் என்றாலே இல்லற வாழ்வையும் பெண்டிரையும் பழித்துப் பேசும் இயல்பினர் எனும் பொதுப்பார்வையைத் தகர்க்கும் விதத்தில் சித்தர்கள் பெண்களைச் சக்தியின் வடிவாகப் போற்றியவர்களே; அவர்கள் இழித்தும் பழித்தும், தம் பாடல்களில், பேசியிருப்பது ஆடவரின் பொருளுக்காகத் தம் உடலை விற்கும் விலைமகளிரையே என்று இவ் ஆய்வுக்கட்டுரை சான்றுகளோடு விளக்குகின்றது. ஆயினும் முடிவுரைப் பகுதி கட்டுரையின் மையக்கருத்தை இன்னும் விரிவாகவும் விளக்கமாகவும் தொகுத்துரைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அத்தோடு, கட்டுரைக்குத் துணைசெய்த நூல்களின் பட்டியலும் இதில் விடுபட்டுப் போயிருக்கின்றது. ஆய்விதழ்களுக்குக் கட்டுரை அனுப்புவோர் துணைநூற்பட்டியலையும் இணைத்து அனுப்புவது இன்றியமையாதது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

    சித்தர் பாடல்களை இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் ஆராயவேண்டியதன் அவசியத்தை இவ் ஆய்வுக் கட்டுரை உணர்த்துகின்றது. ஆய்வாளர்கள், சிறுகதைகள் நாவல்கள் என்ற எளிமையான இலக்கிய வகைமைகளையே ஆய்வுசெய்து பட்டம்பெறுவதைக் காட்டிலும்,  அறிவியல்வழிசார் ஆன்மிகத்தில் ஆழங்காற்பட்ட,  சித்தர் இலக்கியங்களை ஆய்வுசெய்வதன் வாயிலாக அந்த ஞானிகள் கண்டறிந்த பல்வேறு அரிய உண்மைகளைச் சமூகத்துக்கு அறியத் தந்த பெருமைக்குரியோராகலாம். ஆய்வாளர்கள் சிந்திப்பார்களாக!

     

     

    Share
  • (Peer Reviewed) தமிழில் வினைப்பெயர்கள் – ஒரு தொடரியல் ஆய்வு

    தி.மோகன்ராஜ்

    (முனைவர்ப் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010)

    (கட்டுரையாளர், தொல்காப்பியத் தொடரியல் நோக்கில் ஐங்குறுநூறு என்ற தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். இவரது மின் அஞ்சல் : mohr_d12@yahoo.co.in; கைப்பேசி : +91 99947 81727)

    =================================

    தமிழில் வினைப்பெயர்கள் – ஒரு தொடரியல் ஆய்வு

    பெயர்ச்சொற்கள் தோற்றங்கொள்ளும் முறை

    ஒரு மொழியில் பெயர்ச்சொற்கள் நான்கு வகைகளில் புதியனவாக ஆக்கிக் கொள்ளப்படுகின்றன என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்.  இதனைப் பெயராக்கம் (Derivation of nouns) என்று வழங்குவர்.  அவை

    1. பெயரிலிருந்து பெயராக்கம்
    2. வினையிலிருந்து பெயராக்கம்
    3. பெயரடையிலிருந்து பெயராக்கம்
    4. வினையடையிலிருந்து பெயராக்கம்

    என்பனவாம்.

    முருகன், அழகன், தமிழ்க்கல்வி, நூலகம், முருகக்கடவுள் போன்றன பெயரிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள். இந்த வகையை ‘Derivation of nouns from nouns’ என்று அழைப்பர். வளர்பிறை, பொங்கல், கற்றவன், பாடுநர் போன்றன வினையிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள்.  இந்த வகையை ‘Derivation of nouns from verbs’ என்று அழைப்பர்.  நன்னடை, இன்னிசை, நல்லொழுக்கம் போன்றன பெயரடையிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள்.  இந்த வகையை ‘Derivation of nouns from adjectives’ என்று அழைப்பர். தமிழிலும் வேறுபல மொழிகளிலும் வினையடையிலிருந்து பெயர்ச்சொற்கள் உருவாவதில்லை. ஒருசில மொழிகளில் மட்டுமே இந்த வகையில் பெயர்கள் தோற்றம் கொள்கின்றன. இந்த வகையை ‘Derivation of nouns from adverbs’ என்று அழைப்பர்.  இக்கட்டுரை, வினையிலிருந்து தோற்றங்கொள்ளும் பெயர்ச்சொற்களைப் (Derivation of nouns from verbs) பற்றித் தொடரியல் நோக்கில் ஆய்கிறது.

    வினையிலிருந்து தோன்றும் பெயர்ச்சொற்கள்

    தமிழ்மொழியில் வினையை உறுப்பாகக் கொண்டு தோற்றங்கொள்ளும் பெயர்ச்சொற்களை ஐந்து பெரும் பிரிவுகளுள் அடக்கலாம்.  அவை

    1. வினையடிப் பெயர்
    2. வினைத்தொகை
    3. ஆக்கப்பெயர்
    4. தொழிற்பெயர்
    5. வினையாலணையும் பெயர்

    ஆகியன.  இவை வினைப்பெயர்கள் (Verbal nouns) எனப்படும்.  இந்த ஐந்து வகையான வினைப்பெயர்களின் தொடரிலக்கண இயல்புகள் ஒவ்வொன்றாக இக்கட்டுரையில் விளக்கப்பெறுகின்றன. (வினையடியின் விகுதி திரிந்து சில வினைகள், பெயரோடு இணைந்து பெயர்ச் சொற்களாக வரும். மண்வெட்டி, மரங்கொத்தி, தொலைபேசி, கடனாளி, தொழிலாளி போன்ற சொற்கள், அவ்வாறு உருவானவையே. இவை ஆக்கப்பெயர்களின்கீழ் அடங்குமெனினும் இக்கட்டுரையின் ஏனைய வகைப்பாட்டுச் சொற்களைப் போன்று சொல்லின் முதலில் நிற்காமல் இறுதியில் நிற்பனவாதலான் இக்கட்டுரையில் ஆராயப் பெறவில்லை.  இக்கட்டுரையின் வகைப்பாட்டில் கொள்ளப்பட்டுள்ள வினைகள் அனைத்தும் சொல்லின் முதலில் நிற்பன மட்டுமேயாம்.)

    1. வினையடிப் பெயர்

    பொதுவாகப் பல மொழிகளில் காணப்படுவதைப் போன்று தமிழிலும் ஒருசில வினையடிகள் பெயராகவும் செயல்படுகின்றன.  அடி, அணி, அருள், உரை, அறை, பூ, காய் ஆகியன வினையடியே பெயராக வந்த பெயர்ச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளாகச் ச.அகத்தியலிங்கம் பட்டியலிடுகிறார் (ச.அகத்தியலிங்கம், 2011, ப.75).  இவை போன்று குத்து, கனி, ஆள் ஆகிய வினையடிகளும் பெயர்ச்சொற்களாகச் செயல்படும் தன்மை கொண்டவை.  இவை தமிழ் இலக்கணிகளால் முதனிலைத் தொழிற்பெயர்கள் என்று வழங்கப்படும்.

    அட்டவணை-1: பெயராகவும் வினையாகவும் வரும் வினையடிகளின் எடுத்துக்காட்டுகள்

    வ.எண் பெயராக வினையாக
    1. அடி விழுந்தது நீ அவனை அடி
    2. காதில் உள்ள அணி அழகாக இருக்கிறது இந்த நகையை நீ அணி
    3. அருள்  கிடைத்தது இறைவா! எனக்கு அருள்
    4. ஆற்றிய உரை  சிறப்பாக அமைந்தது நீ பதில் உரை
    5. பூ மணக்கிறது முல்லை மாலையில் பூக்கும்
    6. காய் வாங்கினேன் மாமரம் காய்த்தது
    7. குத்து விட்டான் அவனைக் குத்து
    8. கனி  சுவையாக இருந்தது பழம் நன்றாகக் கனிந்தது
    9. ஓர் ஆள் வருகிறார் நீ இந்த நாட்டை ஆள்

    இவ்வாறு தோன்றும் பெயர்கள், தங்கள் வினைத் தன்மையை இழந்து, முற்றிலும் பெயர்ச்சொல்லின் தன்மையைப் பெறுகின்றன. தொடரமைப்பில் இவை பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர் (Adjective phrase), பெயரெச்சக் கிளவியம் (Adjective clause), வேற்றுமை உருபுகள் ஆகியவற்றை ஏற்று ஒரு பெயர்ச்சொல்லுக்கான அனைத்துப் பண்புகளையும் பெற்று அமைகின்றன.

    நல்ல அடி                               – பெயரடையை ஏற்றது

    விழுந்த அடி                           – பெயரெச்சத்தை ஏற்றது

    நல்ல பலமான அடி               – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    அவன் அடித்த அடி               – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    அவன் அடியைத் தாங்கிக் கொண்டான் – வேற்றுமை உருபை ஏற்றது

    ஓடு, நட, படி, கொடு போன்ற வினையடிகள் பெயர்ச்சொற்களாக அமைவதில்லை.  பூ, உரை, அடி, கனி போன்ற வினையடிகளே பெயர்ச்சொற்கள் ஆகின்றன.  இதன் மூலம் எல்லா வினையடிகளும் பெயராவதில்லை என்பதை அறியலாம் (பொற்கோ, 2011, ப.50).

    1. வினைத் தொகை

    ஒரு வினையடி முதலில் நின்று ஒரு பெயர்ச்சொல்லோடு இணையும்போது வினைத்தொகை அமைப்பில் ஒரு பெயர்ச்சொல் உருவாகிறது. உயர்திணை, வளர்தமிழ், சுடுசோறு, அடுமனை ஆகியன வினைத்தொகைகள்.  வினைத்தொகை மூன்று காலத்தையும் குறிப்பாக உணர்த்தும் என்று இலக்கணவியலார் விளக்குவர்.  ஒரு பொருளின் தன்மையையே வினைத்தொகையின் வினையடி உணர்த்துகிறது என்று மொழியியலார் கருதுகின்றனர் (ச.அகத்தியலிங்கம், 2011, ப.75).  கொல்களிறு என்பது இலக்கணவியலாளர்களால் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு என்று விளக்கப்படும் நிலையில், மொழியியலார் கொல்லும் பண்பினை உடைய களிறு என்றே விளக்குவர் (செ.வை.சண்முகம், 2008, ப.75).  எவ்வாறு இருப்பினும் வினைத்தொகையாக அமையும் பெயர்ச்சொற்கள், வினையடியே பெயராக அமைந்த பெயர்ச்சொற்களைப் போன்று தமது வினைப் பண்பினை இழந்து பெயர்ச்சொல்லின் பண்பினையே கொண்டுள்ளன.

    சுவையான சுடுசோறு                        – பெயரடையை ஏற்றது.

    கொதித்த சுடுசோறு                            – பெயரெச்சத்தை ஏற்றது

    நல்ல சுவையான சுடுசோறு          – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    அவன் வடித்த சுடுசோறு                  – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    அவன் சுடுசோற்றை உண்டான் – வேற்றுமை உருபை ஏற்றது.

     

    1. ஆக்கப்பெயர்

    வினையடிகளுடன் ஒருசில விகுதிகள் சேர்ந்து ஆக்கப்பெயர்கள் உருவாகின்றன.  அம், நர், அல், கை, வி, வை என்பன போன்ற பல விகுதிகளைக் கொண்ட ஆக்கப்பெயர்கள் தமிழில் உள்ளன. உயரம், ஓட்டுநர், வறுவல், அழுகை, கல்வி, பார்வை போன்ற ஆக்கப்பெயர்கள், அவ்வாறு உருவானவையே. இவையும் மேற்கண்ட வினையடிப் பெயர்கள் மற்றும் வினைத்தொகைகளைப் போன்று முழுமையாகப் பெயரின் தன்மையையே பெற்றிருக்கின்றன.

    நல்ல கல்வி                                 – பெயரடையை ஏற்றது

    உயர்ந்த கல்வி                        – பெயரெச்சத்தை ஏற்றது

    நல்ல திறமான கல்வி         – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    நான் கற்ற கல்வி                   – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    கல்வியால் உயர்ந்தான்   – வேற்றுமை உருபை ஏற்றது

     

    1. தொழிற்பெயர்

    தொழிற்பெயரும் ஆக்கப்பெயரைப் போன்றே வினையடிகளுடன் ஒருசில விகுதிகள் சேர்வதன் மூலம் உருவாகிறது. தல், அல் போன்ற பல விகுதிகளைக் கொண்ட தொழிற்பெயர்கள் தமிழில் காணப்படுகின்றன. வாழ்தல், ஓடுதல், ஓடல் ஆகியன தொழிற்பெயர்கள் ஆகும். மேற்கண்ட வினையடிப் பெயர்கள், வினைத் தொகைகள், ஆக்கப்பெயர்கள் போன்றல்லாமல் இவை தமது வினைத்தன்மையை முழுதும் இழக்காமலேயே பெயர்களாக அமைந்துள்ளன. அதாவது வேற்றுமை உருபுகளை ஏற்கும் அதே வேளையில் தொடரமைப்பில் இவை பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்காமல் வினைச்சொற்களைப் போன்று வினையடை, வினையெச்சம், வினையெச்சத் தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றையே ஏற்று வருகின்றன (நுஃமான், 2013, ப.69).

    அவன் ஓடுதலை விரும்பினான்       – வேற்றுமை உருபை ஏற்றது

    நன்றாக ஓடுதல் (நல்லது)                      – வினையடையை ஏற்றது

    எழுந்து ஓடுதல் (நல்லது)                        –  வினையெச்சத்தை ஏற்றது

    மிகவும் நன்றாக ஓடுதல் (நல்லது)  – வினையெச்சத் தொடரை ஏற்றது

    அவன் சொல்லும்போது ஓடுதல் (நல்லது)  –  வினையெச்சக் கிளவியத்தை ஏற்றது

    மேலும், வினைகள் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவி வருவதைப் போன்று தொழிற்பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவி, வாக்கியத்தில் இடம் பெறுகின்றன.

    அவனோடு ஓடுதல் (நல்லது)           – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

    மைதானத்தில் ஓடுதல் (நல்லது)     – ஏழாம் வேற்றுமையோடு வந்தது

    மேற்கண்ட தொடர்களை ‘ஓடுதல் அவனோடு நல்லது’ என்றும் ‘ஓடுதல் மைதானத்தில் நல்லது’ என்றும் வேற்றுமை ஏற்ற பெயரின் இடத்தை மாற்றியமைத்தால் பொருள் முழுவதுமாக மாறிவிடும். வேற்றுமையை ஏற்ற பெயர்கள் வினையைத் தழுவுவன போன்று இங்குத் தொழிற்பெயர்களையே தழுவி வந்துள்ளமை இதனால் பெறப்படும். (விகுதி பெற்ற தொழிற்பெயர்கள், விகுதி பெறாத தொழிற்பெயர்கள் என்று தொழிற்பெயர்கள் இருவகைப்படும். இத்தலைப்பின்கீழ் ஆராயப்பட்டுள்ள தொழிற்பெயர்கள் விகுதிபெற்ற தொழிற்பெயர்கள் ஆகும்.  விகுதிபெறாத தொழிற்பெயர்கள் மேலும் இரண்டு வகையாகப் பகுக்கப்படும். அவை முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.  அவற்றுள் முதனிலைத் தொழிற்பெயர்கள் வினையடி என்ற தலைப்பின் கீழ் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.  முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள் முதனிலைத் தொழிற்பெயர்களைப் போன்றே வாக்கியத்தில் செயற்படும் தன்மையன.)

    1. வினையாலணையும் பெயர்

    காலம் (தெரிநிலை, குறிப்பு), திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வினைமுற்றே பெயராக அமையின் அது வினையாலணையும் பெயர் எனப்படும். பெயர்ச்சொற்களில் ஒன்றாக இதனைத் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது (தொல்காப்பியம். நூ.70).  இவை மூவிடங்களிலும் வரும் (நன்னூல், நூ. 286).

    செய்தேன் வந்தேன் – தன்மை இறந்தகால வினையாலணையும் பெயர்

    செய்கிறாய் வா         – முன்னிலை நிகழ்கால வினையாலணையும் பெயர்

    செய்வன வந்தன      – படர்க்கை எதிர்கால வினையாலணையும் பெயர்

    படர்க்கையில் ஐம்பாலுக்கும் உரிமையாக வரும்.

    ஓடுபவன் வந்தான்

    ஓடுபவள் வந்தாள்

    ஓடுபவர் வந்தனர்

    ஓடுவது வந்தது

    ஓடுவன வந்தன

    வினையாலணையும் பெயர்கள் காலம் காட்டும் தெரிநிலை வினையிலும் காலம் காட்டாத குறிப்பு வினையிலும் தோன்றும். வந்தவள், வருகிறவள், வருபவள் என்று முக்காலத்திலும் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள் வரும்.  நல்லவன், நல்லவள், நல்லவர், நல்லது, நல்லன என்று குறிப்பு வினையாலணையும் பெயர்கள் அமையும்.

    தொடரமைப்பில் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள் தொழிற்பெயர்களைப் போன்றே செயற்படுகின்றன. அதாவது, வினையடை, வினையெச்சம், வினையெச்சத்தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றையே ஏற்றுவருகின்றன.

    நன்றாகப்  படிப்பவன் (வருகிறான்) – வினையடையை ஏற்றது
    முனைந்து  படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சத்தை ஏற்றது
    எதையும் நன்றாகப் படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சத் தொடரை ஏற்றது
    நான் சொல்லும்போது படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சக் கிளவியத்தை ஏற்றது

     

    குறிப்பு வினையாலணையும் பெயர்கள், தொடரமைப்பில் வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப்பெயர்களைப் போன்று பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.  தெரிநிலை வினையாலணையும் பெயர்களுக்கும் குறிப்பு வினையாலணையும் பெயர்களுக்கும் இடையில் தொடரியல் நிலையில் இது முக்கியமான ஒரு வேறுபாடாக அமைகிறது.

    சிறந்த நல்லவன் (வந்தான்)                     – பெயரடையை ஏற்றது

    படித்த நல்லவன் (வந்தான்)                     – பெயரெச்சத்தை ஏற்றது

    மிகவும் சிறந்த நல்லவன் (வந்தான்) – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    நான் பார்த்த நல்லவன் (வந்தான்)      – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    தெரிநிலை மற்றும் குறிப்பு வினையாலணையும் பெயர்கள் ஆகிய இரண்டும் தொழிற்பெயர்களைப் போன்று வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வருகின்றன.

    தமிழைப் படித்தவன் (வருகிறான்)     – இரண்டாம் வேற்றுமையோடு வந்தது

    தமிழால் உயர்ந்தவன் (வருகிறான்)   – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

    மேற்கண்ட தொடர்களில் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள், வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வந்துள்ளன.

    பண்பால் நல்லவன் (வந்தான்)        – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

    கையில் வாளினன் (வந்தான்)         – ஏழாம் வேற்றுமையோடு வந்தது

    மேற்கண்ட தொடர்களில் குறிப்பு வினையாலணையும் பெயர்கள் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வந்துள்ளன.

    இவ்விருவகைப் பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வருவதோடு மட்டுமன்றி வேற்றுமை உருபுகளையும் ஏற்றுவரும் பெற்றியன.

    படித்தவனைப் பார்த்தேன்  –  தெரிநிலை வினையாலணையும் பெயர்

    வேற்றுமையை ஏற்றது

    நல்லவனைப் பார்த்தேன் –    குறிப்பு வினையாலணையும் பெயர்

    வேற்றுமையை ஏற்றது.

    முடிவுத் தொகுப்பு

    இக்கட்டுரையினால் அறியலாகும் முடிவுகளைக் கீழ்வருமாறு பட்டியலிடலாம்.

    • தமிழில் பெயராக்க வகைகளில் வினையிலிருந்து தோன்றும் பெயர்கள் என்ற வகையும் ஒன்றாகும்.
    • வினையிலிருந்து தோன்றும் பெயர்கள் ஐந்து திறத்தன. அவை வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப்பெயர், தொழிற்பெயர், வினையாலணையும் பெயர் என்பனவாகும்.
    • வேற்றுமை உருபுகளை ஏற்றல், இந்த ஐவகைப் பெயர்களுக்கும் பொதுப் பண்பாக உள்ளது.
    • வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப் பெயர், குறிப்பு வினையாலணையும் பெயர் ஆகிய நான்கும் தொடரியல் அமைப்பில் பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.
    • தொழிற்பெயர்களும் தெரிநிலை வினையாலணையும் பெயர்களும் தொடரியல் அமைப்பில் வினையடை, வினையெச்சம், வினையெச்சத் தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.
    • வினையாலணையும் பெயர் மட்டும் காலம் (தெரிநிலை வினை மட்டும்), திணை, பால், எண், இடம் ஆகியவற்றைப் பெற்றுப் பெயராக அமைகின்றது.
    • வினைகள் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவுவது போன்றே தொழிற் பெயர்களும் வினையாலணையும் பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வாக்கியங்களில் அமைகின்றன. இத்தன்மை வினையடிப் பெயர்கள், வினைத்தொகை மற்றும் ஆக்கப்பெயர்களுக்கு இல்லை.

     

    உசாத்துணை

    • அகத்தியலிங்கம், சு., முனைவர், (2011). தமிழ்மொழி அமைப்பியல், சிதம்பரம் : மெய்யப்பன் தமிழாய்வகம்
    • ஆறுமுக நாவலர், (2011). நன்னூல் காண்டிகையுரை, சொல்லதிகாரம், சென்னை : முல்லை நிலையம்
    • நுஃமான், எம். ஏ., (2013). அடிப்படைத் தமிழ் இலக்கணம், கொழும்பு : பூபாலசிங்கம் புத்தகசாலை
    • பொற்கோ, டாக்டர், (2011). இலக்கண உலகில் புதிய பார்வை, தொகுதி 1, சென்னை : நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்
    • சண்முகம், செ.வை., (2011). தொல்காப்பியத் தொடரியல், சென்னை  : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
    • தொல்காப்பியம், சேனாவரையர் உரை, (2012). சென்னை : சாரதா பதிப்பகம்

    ====================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழில் வினைப்பெயர்கள் ஒரு தொடரியல் ஆய்வு என்னும் தலைப்பில் அமைந்துள்ள இக்கட்டுரை, சொல்லாக்க அடிப்படை மற்றும் தொடர் அமைப்பு நோக்கில் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக வினை வடிவங்கள் பெயர்களாகச் செயல்படும் தன்மையைச் சுட்டிக் காட்டி, அச்சொற்கள் எவ்வாறு தொடர்களில் பயின்று வருகின்றன என்பதைச் சான்றுகளுடன் விளக்கிக் கூறுகிறது. பெயர்ச்சொற்கள் ஆக்கம் பெரும் தன்மையின் நான்கு பகுப்புகள், சொல்லாக்கம் சார்ந்த அடிப்படையில் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றான வினையிலிருந்து பெயராக்கம் என்பதன் அடிப்படையில் வினை வடிவங்களின் வகைகள், அவற்றின் மூலம் ஆக்கம் பெறும் பெயர்கள், அவை எவ்வாறு தொடர்களில் பயின்று வந்துள்ளன என்பது குறித்து மிகவும் தெளிவாகவும் படித்தவுடன் புரிந்துகொள்ளும் தன்மையிலும் மிக எளிய நடையில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்னும் உத்தி முறையில் ஆய்வாளர் தனது கட்டுரையை அமைத்துள்ளார். ஆய்வாளர் மேலும் இதுபோன்ற ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, தமிழ் ஆய்வுலகிற்கு நலம் பயக்கும். ஆய்வாளருக்கு வாழ்த்துகள்.

    ====================================================

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 2

    -மேகலா இராமமூர்த்தி

    மாந்தக் கூட்டத்தின் ஆதிகுடிகள் மலைப்பகுதியை வாழ்விடமாகக் கொண்ட குறிஞ்சிநில மக்களே எனினும் காலப்போக்கில் மக்கட்தொகை பெருகப் பெருக அவர்கள் மெல்ல நகர்ந்து புலம்பெயர்ந்து  மலையை அணித்தேயிருந்த காட்டுப் பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். இதனையே முல்லைநிலம் என மொழிகின்றது தமிழ். இயற்கையோடு இயைந்து இனிமையாய் வாழ்வதற்கு ஏற்ற சூழலும் மலைப்பகுதியைவிடக் காட்டுப் பகுதியிலேயே மிகுதி. எனவே முல்லைநிலம் மனித நாகரிக வளர்ச்சியில் மகத்தான பங்காற்றியிருக்கின்றது என்பதை மறுக்கவியலாது.

    காட்டுப்பகுதியில் குடியேறி வாழத் தொடங்குவதற்கு முன்னரே மனிதர்கள் விலங்குகளை வளர்க்கப் பழகியிருந்தனர். எனவே முல்லைநிலத்தில் ஆனிரைகளையும், ஆடுகளையும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வளர்க்கத் தொடங்கினர். ஆதலால், ’ஆயர்கள்’ எனும் பெயர் இந்நிலமக்களைக் குறிக்கும் அடையாளப் பெயராயிற்று.

    மாடுகளை வளர்ப்பது, அவற்றினால் கிடைக்கும் பால்படு பொருள்களைப் பிறருக்கு விற்பது என்று ஆரம்பித்துச் செல்வ வளம் மிக்கதாய் இம்மக்களின் வாழ்க்கை மாறத் தொடங்கியது. ’மாடு’ என்றாலே ’செல்வம்’ என்ற பொருள் இதனால்தான் ஏற்பட்டது. வான்புகழ் வள்ளுவரும்,

    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
    ’மாடல்ல மற்றை யவை’
    எனும் குறளில் ’மாடு’ என்பதைச் செல்வத்துக்கான மாற்றுச்சொல்லாய்ப் பயன்படுத்தியிருப்பது ஈண்டு நினையற்பாலது.

    முல்லைநிலத்தின் தலைவனான ஆண்மகன், ’கோன்’ என்று அழைக்கப்பட்டான். பின்னாளில் ’கோன்’ எனும் சொல் நாட்டை ஆண்ட மன்னனுக்கும் ஆகிவந்தது.

    ”வரப்புயர நீர் உயரும்
    நீர் உயர நெல் உயரும்
    நெல் உயரக் குடி உயரும்
    குடி உயரக் கோல் உயரும்
    கோல் உயரக் கோன் உயர்வான்” என்ற பாடலில்  ஔவை, கோன் என்ற சொல்லை மன்னனுக்குப் பயன்படுத்தியிருக்கக் காண்கின்றோம்.

    மந்தைகளை மேய்க்கப் பயன்பட்ட கோலே பின்னாளில் அரசனின் செங்கோலாயிற்று. அத்தோடு சமூகத் தலைமையும் மெல்ல மெல்லப் பெண்கள் கையிலிருந்து ஆண்கள் கைக்கு இடமாறுவதற்கு முல்லைநிலச் செல்வ வாழ்க்கை வழியமைத்துக் கொடுத்தது. பெண்களுக்கு மட்டுமே ’அதிகம்’ வலியுறுத்தப்படும் கற்புக் கோட்பாடு தோற்றம்பெற்றதும் இங்குதான்!

    ”முல்லை சான்ற கற்பின் மெல்லியள் குறுமகள்” (அகம்-274) என்று முல்லைநிலப் பெண்ணின் கற்பு உயர்த்திப் பேசப்படுவதைச் சங்கப் பாடல்கள் சான்றாய் நின்று விளக்குகின்றன.

    முல்லைநில இளநங்கையொருத்தியை மணங்கொள்ளுதற்கு ஏறு தழுவுதலில் ஓர் ஆடவன் வெற்றிபெற வேண்டும் எனும் நிபந்தனையும் இந்நிலத்தில் விதிக்கப்பட்டதனை முல்லைக்கலி வாயிலாய் அறிகின்றோம்.
    ”கொல்லேற்றுக் கோடஞ்சு வானை  மறுமையும்
    புல்லாளே ஆயமகள்”
    (கலி-103) என்று ஆயமகளின் வீரவுள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றது முல்லைக்கலிப் பாடல்!

    தலைவன் பொருள்தேடவோ, அரசனுக்குப் பணிசெய்யவோ அல்லது கல்விகற்றிடவோ பிரிந்துசென்றிடும் காலத்தில் ’எப்போ வருவாரோ எந்தன் கலிதீர?” என்று அவனை எதிர்பார்த்து இல்லிலிருந்தபடியே அல்லலுற்று ஆற்றியிருத்தல் தலைவியின் கடனாயிற்று.

    தலைவனின் வரவுக்காகக் காத்திருந்து அவன் வரக்காணோமே என்று ஏங்கித் தவித்துத் தன்னருமைத் தோழியிடம் புலம்பும் முல்லைநிலத் தலைவியின் மனநிலையைக் குறுந்தொகைப் பாடலொன்றில் படம்பிடித்துக்காட்டுகிறார் ’ஒக்கூர் மாசாத்தியார்’ எனும் புலவர்பெருமாட்டி.

    ”இளமை பாரார் வள நசைஇச் சென்றோர்
    இவணும் வாரார் எவணரோ எனப்
    பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
    தொகுமுகை இலங்கெயிறு ஆக
    நகுமே தோழி நறுந்தண் காரே.” (ஒக்கூர் மாசாத்தியார்: குறுந்-126)

    ”என்னுடைய இளமையை நினையாது பொருளே பெரிதெனச் சென்ற தலைவர் இன்னும் திரும்பி வரவில்லை; அவர் எங்குளார் எனவும் நானறியேன். இதனைக் கண்டு, ”கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவேன்!” என்று வாக்குக்கொடுத்துச் சென்ற உன் தலைவர் பொய்த்துவிட்டார் பார்!” என முல்லை மொட்டுக்களையே தன் ஒளி பொருந்திய பற்களாகக் கொண்டு இக் கார்காலம் என்னை எள்ளி நகையாடுகின்றது” என்கிறாள் தலைவனைப் பிரிந்து தவித்திருக்கும் தலைவி.

    தொலைதூரம் சென்றவர்களோடு தொடர்புகொள்ளுதற்குத் தொலைபேசி வசதியற்ற அந்நாளில் குறித்த காலத்தில் கணவன் மீளவில்லை என்றால் அவன் வரவை எதிர்நோக்கியிருக்கும் மனைவியின் மனம் என்ன பாடுபடும்? எத்துணை அவலமுறும்? என்பதை எண்ணுகையில் தலைவியின் நிலைகண்டு நமக்கும் பெருவேதனை பிறக்கவே செய்கின்றது.

    ”அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்” (நற்-142) இயல்புடைய தமிழ்ப் பெண்டிர், கணவன் இல்லில் இல்லையென்றால் இல்லம் நாடிவரும் அறவோரைப் பேணுதல், அந்தணர் ஓம்புதல் முதலிய நற்செயல்களைச் செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாய் இருந்திருக்கின்றனர். சிலம்பின் தலைவியான கண்ணகியின் வாய்மொழிகளால் இக்கருத்து உறுதிப்படுகின்றது.

    அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
    துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை… 
    (சிலம்பு – கொலைக்களக் காதை: 71-73)

    (தொடரும்)

    *****

    துணைநூல்கள்:

    1. சிலப்பதிகாரம் மூலமும், ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையும்  – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
    2. கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்.
    3. குறுந்தொகை மூலமும் டாக்டர் உ.வே.சாமிநாதையர் உரையும்.
    4. அகநானூறு மூலமும் ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரையும்.
    5. நற்றிணை மூலமும் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்     உரையும்.

     

     

    Share
  • (Peer Reviewed) தமிழன்பன் கவிதைகளின் வெளிப்பாட்டில் சமூகத்தின் நிலை

    -மூ.சிந்து,
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை,
    ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    மலுமிச்சம்பட்டி,
    கோயம்புத்தூர் – 641050.
    மின்னஞ்சல்-sindujasms@gmail.com

    *****

    இன்றைய காலகட்டத்தில் மனிதனின் இயக்க நிலையானது திரும்பிப் பார்க்க நேரமின்றி சுற்றிக் கொண்டிருக்கும் கடிகார முள்ளிற்கு இணையாக ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கும் நிலையினை உணரமுடிகிறது. வேகமான உலகத்திற்கேற்ப மனிதனும் தன்னுடைய செயல்களில் சுருக்கமும் தெளிவும் தேடும் நிலையையும், அதே நேரத்தில் இரசிக்கும் தன்மையுடனும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்குள் கவிதைகளானது இயங்கிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

    படைப்பாளனின் மன உணர்வின்படி கவிதைகள் எழுதப்பட்டாலும், வாசிப்பாளன் ஏற்கும் மனநிலையில் மட்டுமே அக்கவிதையானது மதிப்பு பெறுகிறது. ஆகவே கவிதைகள் வரலாற்றில் புதுக்கவிதைக்கு என்று ஒரு தனிஇடம் உண்டு.

    காலச் சூழலுக்கு ஏற்ப மனிதன் தன்னை  மாற்றி இயக்கம் கொள்வதுபோல, இலக்கியங்களும் மாற்றம் கொண்ட நிலையினை இன்றைய காலகட்டங்களில் காணமுடிகிறது. சுருங்கக் கூறி விளங்க வைப்பதில் கவிதை இன்றைய சூழலில் முதன்மை பெற்று விளங்குவதைக் காணமுடிகிறது.

    கவிதையின் வளர்ச்சி நிலை

    நாளொரு வண்ணமுமாகப் படைப்பாளன் வளர்ந்து வரும் நிலையில் கவிதையானது வேகமாக வளர்ந்து வரும் நிலையினைக் காணமுடிகிறது. அத்தகைய சூழலில் படைப்பாளனின் படைப்புகளாக நாள்தோறும் புதுப்புது வடிவமாகக் கவிதையானது வடிவம் பெறும் நிலையினைக் கண்கூடாகக் காணலாம். கட்டுப்பாடுகளின்றி கவிதைகள் தோன்றும் இத்தகைய சூழல்களில் கவிதைகளின் தாக்கமானது வாசிப்பாளர்களிடையே பெரிய மாற்றத்தை உண்டாக்கியதையும், உண்டாக்குவதையும் காணமுடிகிறது.

    கவிதைகளின் வளர்ச்சி இன்றைய காலகட்டத்திற்கு முக்கிய ஒன்றாக அமைகிறது. படைப்பாளன் எவ்விதமான கட்டுபாடுகளின்றியும் தனித்து சுதந்தரமாகத் தனது பதிவுகளை வெளியிடும் சூழலும் இன்று அமைந்துள்ளதைக் காணலாம். விரிவாகக் கூறிச் செய்திகளை விளங்க வைப்பதைக் காட்டிலும் கவிதைகளின் வாயிலாக சமூகத்தில் எளிமையாகக் கூற வந்தக் கருத்தினைப் பதிவு செய்ய இயலுகிறது.

    சமூகத்தின் நிலை

    இன்றைய சமூகமானது பயனற்ற நிலையில் இயங்குவதும், மக்கள் தன்னிலை உணர்ந்து தனக்கேற்ற நிலையில் வாழாது, மற்றவர்கள் பார்வையில் தான் கொண்ட இடம், பெறும் மதிப்பு இவற்றை அடிப்படையாக் கொண்டு வாழும் சூழல் பெருகி வருவதையும் உணரமுடிகிறது. மனிதன் தன் வாழ்க்கையைப் பயனற்ற போக்கில் கழித்தும், வாழ்க்கையை இயல்பாகக் கொண்டாடாமல் செயற்கையாகக் கொண்டாடும் நிலையே இன்று பெருகி வருகிறது.

                     ‘கூட்டம் கூட்டம் கூட்டம்
                     கூடல் நகரில் கூட்டம்
                     கூட்டம் பார்க்கக் கூட்டம்
                     கூட்டம் கூட்டம்’…1

    என்ற கவிதையில் இன்றைய சமுதாயத்தில் மனித மனமானது எந்தச் செயலிலும் விரைவாக உட்புகுந்து அவற்றை இரசிப்பதில் எளிமையாக  நுழைந்து பயனுள்ளதா பயனற்றதா என்பதை எல்லாம் ஆராயாது இரசிக்கும் நிலையை மட்டுமே வெளிப்படையாகக் காணமுடிகிறது.

    மாணவர்களின் மனநிலை

    இன்றைய சூழலில் மாணவர்களின் மனமானது எந்த ஒரு செயலையும் எளிதாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்ளக் கூடியதாக விளங்குவதை அறியலாம். நகைச்சுவை என்பது எல்லா இடங்களிலும் தோன்றக் கூடியதில்லை. அவை சொல்லியும் வருவதில்லை. அவை தானாகத் தோன்றக் கூடியதாகும். தோன்றக்கூடிய இடமானது நல்லது, கெட்டது என்றப் பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் தோன்றி அருகில் இருப்பவர்களை ஆனந்தமயமாக வைக்க இந்த நகைச்சுவையானது முக்கியப் பங்கு பெறுகிறது.

                     ‘வாத்தியார் மனைவி
                       செத்ததற்கு
                       பள்ளி விடுமுறை
                       மாணவர் வருத்தம்
                       தலைமையாசிரியருக்கு
                       ஒரே ஒரு மனைவி மட்டும் தானா? 2

    என்ற கவிதையைக் கேட்டவுடன் அனைவரும் சிரிக்கும் நிலையில்  அந்த செய்திக்குப் பின்பு உள்ள சோகத்தை மறக்கக்கூடிய நிலையில் மாணவர்களின் நகைச்சுவையானது அமையப் பெறுவதும், இதில் மாணவர் பருவம் விளையாட்டுத்தனமாகவும், சந்தோசமாகவும் கழிக்கக் கூடிய ஒன்று என்பதையும் அப்பருவத்தில்  மாணவர்கள் குழுவாகவும் சந்தோசமாகவும் இன்ப துன்ப எல்லா நேரங்களிலும் ஒரே இயல்பில் தம் இனக்குழுவுடன் செயல்படுவதை உணரமுடிகிறது.

    அரசியல் நிலை

    இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவைக்கும், கேலி, கிண்டல் ஆகிய அனைத்துச் செயல்களுக்கும் முதன்மை இடம் கொடுத்து நிற்பது அரசியலாகும். மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் என்ற நிலை மாறி, மக்களையும், மக்களுடைய குடும்பத்தையும், மக்களின் வாக்குகளையும் தேர்ந்தெடுக்கும் நிலையாக மாறியுள்ளதைக் காணமுடிகிறது.

     அனைத்துப் பதவிகளுக்கும் கல்வி அடிப்படையாக விளங்கும். ஆனால் அரசியலில் மட்டும் எவ்விதமான அடிப்படைத் தகுதிகளுமின்றியும் எளிமையாக பதவியினைப் பெற முடியும் என்பதனை,

                      ‘அது வராவிட்டால் இது
    இது வராவிட்டால் அது
    எதுவும் வராவிட்டால் அரசியல்’ 3

    என்ற தமிழன்பனின் கவிதை வரிகளின் வாயிலாக இன்றைய அரசியல் நிலையைப் படம்பிடித்துக் கண்முன் காட்டுகிறது. மேலும், இன்று தேர்தல் நிலையினையும் அதில் பதிவாகும் வாக்குகள் இவை அனைத்தும் உண்மையா? என்பதனை யோசிக்க வைக்கிறது.

                     ‘ஓட்டுப் போட்டு விட்டு
    திரும்பிய பிணம் திடுக்கிட்டது
                       தனது கல்லறையில்
    வேறொரு பிணம் என்று’…….. 4

    மேற்கூறிய கவிதையின் வாயிலாக இன்றைய அரசியலில் வாக்களிக்கும் முறை என்பது நேர்மையற்ற நிலையில் இயங்கக் கூடியதாகவும், இறந்தவர்கள் கூட நமது அரசியலில் வாக்களிக்க முடியும் என்ற நிலையில் பொய்வாக்கு தேர்தலில் பதிவாகும்  நிலையினையும் இக்கவிதையானது படம்பிடித்துக் காட்டுகிறது.

    மனைவியின் ஏக்கம்

    மனைவியைப் பிரிந்து தன் குடும்பத்திற்காகக் கணவன் வேறு இடம் சென்று தொழில் மேற்கொள்ளும் நிலையில் கணவன் செல்லக்கூடிய இடம், தொழில், பிரிவு ஆகியவை மனைவிக்குத் துன்பம் தரக்கூடிய நிலையில், பிரிந்து செல்லும் கணவனை மீண்டும் பார்க்கும்வரை மனைவிக்குத் துன்பம் மிகும் என்ற நிலையில் மனைவியின் அன்பு வேண்டுகோளாக அமைவது

                      ‘வழியனுப்ப வந்த மனைவி
                       கண்ணீரோடு சொன்னாள்
                       பணம் அனுப்ப மறந்திடாதீங்க’5
    என்ற தமிழன்பனின் கவிதை வரிகளின் மூலம் இன்றைய காலகட்டத்தில் எல்லா நிகழ்வுக்கும் பணம் இன்றியமையாததாக அமைகிறது என்பதையும், பணம் இன்றி எச்செயலும் நடைபெறாது என்பதையும் உணர்த்துகின்றன.

    குடிமகனின் தவிப்பு

    பாரத திருநாட்டில் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாகும். ஆனால் இன்று நாட்டில் மதுவிற்கு அடிமையாகி மக்கள் குடிமக்களாக இருப்பதைக் காணமுடிகிறது.

     ‘அழுதான் நம்ம அப்பு
    காந்தி சிலையைக் கட்டிப் பிடிச்சு
    போதலையாம் தண்ணி மப்பு’6

    என்ற கவிதையின் வாயிலாக நாட்டு முன்னேற்றத்திற்குத் தூணாக விளங்க வேண்டிய இளைஞர்கள் குடிப்பழக்கத்தினால் தன்னிலை மறந்து நிற்கும் அவல நிலையினை வெளிப்படுத்துகிறது.

    முடிவுரை

    கவிதைகள் மனித வாழ்க்கையோடு ஒன்றியைந்ததாகவும், சமூகத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் எளிதில் புரியும் வகையில் மக்களிடையே கொண்டு சேர்க்கும் கருவியாகவும் சுருங்கக் கூறி விளங்க வைப்பதன் மூலமாக அனைவராலும் விரும்பி ஏற்கக்கூடிய ஒன்றாகவும் விளங்கும் நிலையினைக் காணமுடிகிறது.

    *****

    துணை நின்ற நூல்

    தமிழன்பனின் “என் வீட்டு எதிரே ஓர் எருக்கஞ் செடி” கவிதைத் தொகுப்பு.

    ***********************************************************************

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஆய்வாளர், புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரான தமிழன்பன் அவர்களின் கவிதைகளில் வெளிப்படும் சமூகநிலை குறித்து இக்கட்டுரையில் ஆய்ந்துள்ளார். மிக எளிமையாகவும் எதார்த்தமாகவும் தமிழகத்தின் சமூக நிலையைக் கவிஞர் தம் கவிதைகளில் பிரதிபலிப்பதை இக்கட்டுரை நமக்கு அறியத் தருகின்றது. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி ஆராய்ந்தால், தமிழன்பனின் “என் வீட்டு எதிரே ஓர் எருக்கஞ் செடி” கவிதைத் தொகுப்பில் வெளிப்படும் சமூகத்தின் நிலை என்றே தலைப்பு அமையலாம். தமிழன்பன் கவிதைகளின் வெளிப்பாட்டில் சமூகத்தின் நிலை எனச் சொல்வது பொருந்தாது. கவிஞரின் இதர கவிதைகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருந்தால் இக்கட்டுரை மேலும் வலிமை பெற்றிருக்கும்.

    பொதுவாக, படைப்பிலக்கியங்களின் மீது நிகழ்த்தப்பெறும் பெரும்பான்மையான ஆய்வுகள், உண்மையான ஆய்வுகளாக அமைவதில்லை. பல்வேறு ஆக்கங்களிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரிகளை எடுத்து, அவற்றை விளக்குவது, ஆய்வு ஆகாது. குறைந்த உழைப்பைக் கோருகிற, எளிதில் கட்டுரையை நிறைவு செய்கிற வாய்ப்பும் நோக்கமும், இவற்றில் உண்டு. ஆனால், இவற்றால் ஆய்வாளருக்குப் பெருமையோ, ஆய்வுலகிற்குப் புதிய கருத்துகளோ  கிடைப்பதில்லை. இவற்றை உணர்ந்து அசலான ஆய்வுக் கட்டுரைகளை எழுத, ஆய்வாளர்கள் முனைந்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    ***********************************************************************

    Share
  • (Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம் (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)

    (Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம்

    (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)

    முனைவர் ப. வேல்முருகன்

    தலைவர் & பேராசிரியர், தமிழ்த்துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

    திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: pdrvelmurugan@gmail.com; செல்பேசி    : 9488264166

    இர. ஆனந்தகுமார்

    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: anadhakumar001@gmail.com; கைப்பேசி            : 9488264166

    முன்னுரை

    மூலபாடம் என்பது ஒரு நூலின் மூல நூலாசிரியர் எழுதிய வடிவம் அல்லது அதை ஒத்த பாடம் ஆகும். இதை முன்னோர் சுத்த பாடம் என்று வழங்குவர். ஒரு நூல் சுவடிகளிலிருந்தும் காகிதப் பிரதிகளிலிருந்தும் பதிப்பு நூலாக வெளிவரும் பொழுது பல்வேறு மாற்றங்களைப் பெறுகின்றது. குறிப்பாகச் சுவடிகளிலும் தொடக்க காலக் காகிதப் பிரதிகளிலும் குறில் நெடில், மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஆகியவை ஒன்று போலவே தோன்றுகின்றன. அதனால் ஒரு நூல் ஏட்டுப் படிகளாகவோ அச்சுப் படிகளாகவோ வெளிவரும் பொழுது பல திரிபுகளுடன் அமைகின்றது. சுவடிகள், காகிதப் பிரதிகள், அச்சுப் பதிப்புகள் முதலியவற்றில் காணப்படும் பாடங்களையும், பாட வேறுபாடுகளையும் தொகுத்து, உண்மையான பாடத்தைக் கண்டறிய முயல்வது மூலபாடத் திறனாய்வு ஆகும்.

    ஏவா வில்தன் (EVA WILDEN), நற்றிணைக்குரிய சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியவற்றைத் தொகுத்து, ஆராய்ந்து நற்றிணைக்குச் செம்பதிப்பைக் (2008) கொண்டுவந்துள்ளார். இவரது பதிப்பு, நற்றிணைக்கு இதுவரை வெளிவந்த பதிப்புகளில் காணப் பெறாத வகையில், ஏடுகளில் உள்ள பாடங்களைத் தொகுத்து, அறிவியல் அடிப்படையில் மூலபாடத்தைத் தெரிவுசெய்யும் விதமாக அமைகிறது. இச்செம்பதிப்பிலும் சில விடுபாடுகள் உள்ளன. அவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

    நற்றிணை 11-ஆவது பாடலில் விடுபட்டுள்ள பாடங்களையும், பாட வேறுபாடுகளையும் இலக்கணம், அகராதிப் பொருள், உரைகள், ஒப்புமைப் பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டு மூலபாடத்தை உறுதிப்படுத்துவது இந்த ஆய்வுக் கட்டுரையின் கருதுகோளாக அமைகிறது. இதில் மூலபாட ஆய்வு அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.

    நற்றிணைக்குக் கிடைத்துள்ள சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியவை ஆய்வின் கருதுகோளை நிறுவுவதற்கான முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. மேலும்,

    S.M. Katre – Introduction to Indian Textual Criticism, அ.விநாயகமூர்த்தி – மூலபாடஆய்வியல் (1978), த.கோ.பரமசிவம்(ப.ஆ.) – சுவடிப் பதிப்பு நெறிமுறைகள் (1989), வெ.பழனியப்பன் – தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் (1990),மூ. இராமகிருட்டிணன் – பிரதிபேத ஆராய்ச்சி, வெ. பிரகாஷ் – பாட ஆய்வியல்: புறநானூறு பாடம், வடிவம் குறித்த ஆய்வு (ஆய்வேடு, 2012), ம.சா.அறிவுடைநம்பி – சுவடி ஆய்வு நெறிமுறைகள்(2013),Eva Maria Wilden – Studies in manuscript Cultures (2014), வெ. பிரகாஷ் – பாட ஆய்வியல் கையேடு (2014) முதலியோர்களின் நூல்கள், துணைமை ஆதாரங்களாக அமைகின்றன.

    நற்றிணை 11-ஆவது செய்யுள்

    ஏவா வில்தன் பதிப்பு :       

    “பெய்யாது வைகிய கோதை போல

    மெய்சாயி னையவர் செய்குறி பிழைப்ப

    வுள்ளி நொதுமலர் நேர்புரை தெள்ளிதின்

    வாரா ரென்னும் புலவி யுட்கொள

    லொழிக மாளநின் னெஞ்சத் தானே

    புணரி பொருத பூமண லடைகரை

    யாழி மருங்கி னலவ னோம்பி

    வலவன் வள்பாய்ந் தூர

    நிலவு விரிந்தன்றாற் கான லானே”.

    மூலபாடத்தைத் தெரிவு செய்வதற்குப் பாடலின் சூழல், பொருண்மை போன்றவை துணை நிற்கும். அவ்வகையில் நற்றிணை 11-ஆவது பாடலுக்கான சூழல், பொருள் விளக்கம்.

    கூற்று                         –           தோழி கூற்று (தோழி, தலைவிக்குச் சொல்லியது)

    துறை                          –

    காப்பு மிகுதிக்கண் இடையீடு பட்டு ஆற்றாளாய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

    துறை விளக்கம் –

    காவல் மிகுதியாலே தலைவனைக் தலைவனைக் கூடப்பெறாமல் ஆற்றாது வருந்திய தலைவியைத் தோழி நோக்கி நீ வருந்தாதேகொள், நிலவு விரிந்ததனால் அவர் இன்னே வருவரெனக் கூறுவோள் போன்று, காவல் மிகுதியால் இரவுக்குறி பிறழ்ந்ததும், அதனாலே தலைவி படுந்துன்பமும் சிறைப்புறத்திருந்த தலைவன் கேட்டு வரைவொடு புகுமாறு கூறுவது (நாரா.).

    செய்யுள் பொருள் விளக்கம்

    அவர் செய்த குறி இடையீடுபட்டு தவறுபட்டதனால், சூடாது கிடந்த பூமாலையைப் போல உடல் இளைத்தனை. அயலவர் பேசுகின்ற பழிச்சொல்லை நினைத்து, தெளிவாக வராமாட்டார் என்கின்ற ஐயத்தை உன் மனத்தின்கண் நினைக்காது விட்டொழிவாயாக. அலைகள் வந்து மோதியதால் நுண்மணலாக உள்ள கடற்கரையில், நண்டுகளின் மேல் தேர்ச்சக்கரங்கள் படாதவாறு பாதுகாத்து, தேர்ப்பாகன் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்துச் செலுத்த, கடற்கரைச் சோலையிலே நிலவு விரிந்தது. சுருங்கக் கூறின்,

    ‘அலவனுக்குத் (நண்டு) தீங்கு செய்யாது தேர் செலுத்த வேண்டும் என்று உரைக்கும் தலைவன், நீ பழிச்சொல்லால் வருந்தாதபடி வரைந்து இல்லறம் நிகழ்த்துவான்’ என்றவாறு.

    செய்யுளில் உள்ள பாடவேறுபாடுகள்

                                                              (அட்டவணை)

     

    ஏவா வில்தன் கொண்ட பாடம் ஏவா வில்தன் கொண்ட பாடங்களும் அவை இடம்பெற்ற பிரதிகளும் ஏவா வில்தன் கொண்ட பாடங்களிலிருந்து வேறுபடும் பாடங்களும் அவை இடம்பெற்ற பிரதிகளும்
    பெய்யாது பெய்யாது- G3, EN, VP, ER, EV, ET பெய்யாத       – C1, G1, G2

    பொய்யாது    – ETv

    நொதுமலர் நேர்புரை நொதுமலர் நேர்புரை- VP, ER, EV நொதுமல் ஏர்புரை- C1, C2, G1, G2,G3, EN

    நொதுமலர் ஏர்புரை  – ET

    நொதுமல் ஓருரை      – ETv

    யுட்கொளல் யுட்கொளல் –

    C1, C2, G1, G2,G3, EN, VP, ER, EV, ET

    யுட்கொளாஅல்- ETv
    நிலவுவிரிந்தன்றால் நிலவுவிரிந்தன்றால்- G1, ER, EV நிலவுவிரிந்தன்றால் – G2, EN, ET, VP

    நிலவுவிரிந்தன்றே   – ETv

    குறிப்பு

    C1                 உ.வே.சா. நூலகப் பிரதி (ஓலை)

    C2                உ.வே.சா. நூலகப் பிரதி (காகிதம்)

    G1, G2, G3 அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப்பிரதி (காகிதம்)

    VP                எஸ். வையாபுரிப்பிள்ளை

    EVA             ஏவா.    ஏவா வில்தன்

    EN               அ. நாராயணசாமி ஐயர்

    ER                மர்ரே. எஸ்.ராஜம்

    ET                 ஔவை சு. துரைசாமிப் பிள்ளை

    EV                 ஹச். வேங்கடராமன்

    ETv               ஔவை சு. துரைசாமிப் பிள்ளைப் பாடவேறுபாடு

     

    ஏவா வில்தன் பதிப்பில் விடுபட்ட பாடம்:’வளவன்‘

    அ) வலவன் – வளவன்

    ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில்  ‘வலவன்வள்பாய்ந்தூர’ (11:8) என்ற அடியில் இடம்பெறும் ‘வலவன்’ என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில்‘வளவன்’ என்ற பாடம் உள்ளது. இப்பிரதிகளில் உள்ள பிற பாடவேறுபாடுகளைச் (காண்க – அட்டவணை) சுட்டிக் காட்டும் ஏவா வில்தன்,C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடவேறுபாட்டினைப் பதிவு செய்யாது விட்டுள்ளார்.

    மேலும் செம்பதிப்பு முன்னுரையில் உச்சரிப்பு வேறுபாடுகள் எனும் தலைப்பில் ‘‘ஒள / அவ், ள்/ல, ர/ற கெளவை / கவ்வை ஆகியவை பொருள் மாறுபாடு செய்யாவிடினும் வட்டார (அல்லது ஏடெழுதும் தனிப்பட்ட ஒருவரின்) வழக்காறுகளைத் தெரிந்துகொள்ள உதவுமாதலால் இவை பதிப்புரையில் குறிப்பிடப்படுகின்றன” (ப.34) என்று பதிவு செய்துள்ளார். ஒலி வேறுபாட்டு அடிப்படையில் பாடல்களில் (36:8., 128:11., 295) உள்ள ஒலி வேறுபாட்டுச் சொற்களைச் (கெளவை / கவ்வை.,ஆகின்றியா / ஆகின்ரியா., அவ்வை / ஒளவை) சுட்டிக் காட்டும் இவர், ‘வலவன்’, ‘வளவன்’ என்ற பாடங்களிலுள்ள லகர ளகர ஒலி வேறுபாட்டினைப் பாடவேறுபாட்டுப் பகுதியில் சுட்டிக்காட்டவில்லை. இவ்வாறான முரண்பாடுகள், நற்றிணைச் செம்பதிப்பு என்ற கருத்தாக்கத்தைக் கேள்விக்குள்ளாகின்றன.

    (குறிப்பு: ஒப்புநோக்கி ஆய, பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம்(EFEO), நற்றிணைக்குச் சுவடி, காகிதப் பிரதிகளைத் தந்துதவியது.)

    நற்றிணைச் செம்பதிப்பு 11-ஆவது பாடலில் உள்ள ‘வலவன்’ என்ற பாடத்திற்கும், C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்திற்கும் பொருள் மாறுபாடுகள் உண்டு.

    ‘வலவன்’என்ற சொல் ‘தேர்ப்பாகன்’ என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் ஏழு இடங்களில் (நற்றிணை, 11:8, 78:10, குறுந்தொகை, 311:2, அகநானூறு, 20:15, 104:3, 190:12, 340:4, 354:8, 400:12, புறநானூறு, 27:8) வந்துள்ளது. ‘வளவன் ’என்ற சொல் சோழமன்னன் கிள்ளிவளவன் என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் ஏழு இடங்களில்  (புறநானூறு, 34:16, 60:10-11, 174:14-15, 226:6, 227:9, 393:24, 397:22-23) வந்துள்ளதைக் காண முடிகிறது.

    இருப்பினும் நற்றிணை 11-ஆவது பாடலில் இடம்பெற்ற ‘வலவன் வள்பாய்ந்தூர’ என்ற பாடலடிக்கு உரையாசிரியர்கள் ‘தேர்ப்பாகன் (குதிரையின்) கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்து செலுத்த’ என உரை எழுதியுள்ளனர். ஆனால் ஏவா வில்தனின் செம்பதிப்பில் விடுபட்ட பாடமான ‘வளவன்’ என்ற பாடத்தினை உரையாசிரியர்கள் எவரும் உரையிலும் பாடவேறுபாட்டுப் பகுதியிலும் குறிப்பிடவில்லை.

    காரணம் பாடலின் பொருண்மையை நோக்குகையில் குதிரையின் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்துச் செலுத்துகின்ற தேர்ப்பாகனைக் குறிக்கும் பாடமாக ‘வலவன்’ என்பது பொருத்தமாக உள்ளது. இவ்வாறன்றி C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்தைப் பின்பற்றி ‘வளவன் வள்பாய்ந்தூர’ எனப் பதிப்பித்து உரை எழுதினால்,  ‘சோழ மன்னனான கிள்ளிவளவன் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்து செலுத்த’ என்று உரைகொள்ள நேரிடும். ஆகவே பாடலின் பொருண்மைக்குத் தேர்ப்பாகனைக் குறித்து வரும் ‘வலவன்’ என்ற பாடமே ஏற்புடையதாகும்.

    வலவன் / வளவன் என்ற இருபாடவேறுபாடுகள் பிரதிகளில் காணப்படுகின்றன. அப்பிரதிகளில் ல/ள ஒலி வேறுபாடு பொருள் வேறுபாட்டுத் தன்மையில் அமைந்திருப்பினும் C1, G1, G2 ஆகிய பிரதிகளை எழுதினோர், அவ்வொலி வேறுபாட்டினை உணராது ‘வளவன்’ என்ற பாடத்தைப் பின்பற்றியுள்ளனர். எனவே இலக்கண அடிப்படையில் ஒலி வேறுபாடு உணர்த்தும் பொருண்மையில் ‘வலவன்’ என்ற பாடம் ஏற்புடையது.

    ஏவா வில்தன் பதிப்பில் விடுபட்ட பாடவேறுபாடு

    ஆ) உலோச்சனார் – கயமனார்

    பாடலுக்குள் இருக்கின்ற பாடவேறுபாடுகள் மட்டுமின்றி புலவர் பெயர்களில் காணப்படும் பாடவேறுபாடுகளையும் ஏவா வில்தன் தன்னுடைய பதிப்பில் குறிப்பிடுகிறார். சான்றாக

    பாலத்தனார் (G1+2: பாலாத்தனார்) (52),

    பெருங்கவுசிகனார் (EN, ER: கெளசிகனார், ET: கோசிகனார்) (139)

    ஆனால் இவர் ஒரு பாடலுக்குரிய புலவர் பெயர் முழுவதும் மாறுபடும் இடங்களைப் பாடவேறுபாட்டுப் பகுதியில் குறிப்பிடாமல் விட்டுள்ளார். காட்டாக, ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளையின் நற்றிணைப் பதிப்பில் “இங்கே உலோச்சனார் என்ற பெயரோடு கயமனார் என்ற பெயரும் ஓர் ஏட்டில் காணப்படுகிறது” (ப.56) என அடிக்குறிப்பில் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.

    துரைசாமிப்பிள்ளை (1966) பாடவேறுபாட்டுப் பகுதியில் இடம்பெற்ற செய்தி

    மேலும் சில பாடல்களில் புலவர்களின் பெயர்கள் முற்றிலும் மாறுபட்டு உள்ளன.

    நற்றிணைச் சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியனவற்றில் நல்விளக்கனார் (85), சல்லியங்குமரனார் (141), பராயனார் (155) ஆகிய புலவர்களின் பெயர்கள் எவ்வித மாறுபாடுகளுமின்றி காணப்படுகின்றன. ஆனால் துரைசாமிப் பிள்ளையின் நற்றிணைப் பதிப்பில் அப்புலவர்களின் பெயர்கள் முறையே நல்விளக்குன்றனார் (85), அரிசிலங்குமரனார் (141), பாரதாயனார் (155) என்று முற்றிலும் மாறுபட்டு உள்ளன.

    மேலும் நற்றிணை 64-ஆவது பாடலை உலோச்சனார் பாடியுள்ளதாக அனைத்துப் பிரதிகளிலும் காணப்படுகிறது.  ஆனால் துரைசாமிப் பிள்ளை, 64-ஆவது பாடலை உரோடகத்தனார் பாடியதாகவே குறிப்பிட்டு, குறிப்புப் பகுதியில் ‘‘ஏடுகளில் உரோடகத்தனார் பெயரே உள்ளது. முன்பாட்டை எழுதிய நினைவால் இப்பாட்டையும் உலோச்சனார் பாடியதாக ஏடெழுதினோர் தவறியிருக்கலாம்” (ப.254) என்று குறிப்பிடுகிறார். ஆகவே ஏவா வில்தன், புலவர்களின் பெயர்கள் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுவதை தமது நற்றிணைச் செம்பதிப்பில் குறிப்பிடவில்லை. ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையின் பாடலுக்குள் காணப்படும் பாடவேறுபாடுகள், புலவர் பெயர்களுக்குள் உள்ள பாடவேறுபாடுகள் ஆகியனவற்றைக் குறிப்பிடும் ஏவா வில்தன், இப்புலவர் பெயர் மாறுபாட்டைச் சுட்டிக் காட்டாதது, நற்றிணையின் செம்பதிப்பு முறையியலைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

    நற்றிணை 11- ஆவது பாடலில் மூலபாடத் தெரிவுகள்

    அ) பெய்யாது – பெய்யாத–பொய்யாது

    ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் ‘பெய்யாது வைகிய கோதை போல’ (11:1) என்ற பாடலடியில் உள்ள ‘பெய்யாது’ என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘பெய்யாத’ என்ற பாடம் உள்ளது. துரைசாமிப்பிள்ளை பதிப்பில் காணப்படும் பாடவேறுபாட்டுப் (ETv) பகுதியில் ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாடு காணப்படுகிறது.

    சங்க இலக்கியத்தில் ‘பெய்யாது’ என்ற பாடம் ‘சூடாது’, ‘பெய்யாது’ ஆகிய பொருள்களில் நான்கு இடங்களில் (நற்றிணை 11:1, 365:6. புறநானூறு.105:4, 266:1) வந்துள்ளது. ‘பெய்யாத’ என்ற பாடம் சங்க இலக்கியத்தில் இல்லை. துரைசாமிப் பிள்ளை பதிப்பு, பாடவேறுபாட்டுப் பகுதியில் காணப்படும் ‘பொய்யாது’ என்பது சங்க இலக்கியத்தில் ‘பொய்த்துப் போதல்’, ‘பொய்’, ‘உண்மைக்குப் புறம்பானது’ என்ற பொருளில் நான்கு (நற்றிணை 38:1, 2. ஐங்குறுநூறு. 66:1, 80:1) இடங்களில் வந்துள்ளது.

    ‘பெய்யாது வைகிய கோதை போல’ (11:1) என்ற பாடலடிக்கு உரையாசிரியர்கள் ‘சூடாது கிடந்த பூமாலையைப் போல’ என்று உரை தருகின்றனர். ஆனால் பெய்யாது என்ற பாடத்திற்கு மாற்றாக C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘பெய்யாத’ என்ற பாடம் உள்ளது. இப்பாடத்தை அடிப்படையாகக் கொண்டு ‘பெய்யாத வைகிய கோதை போல’ என்ற பாடலடிக்கு உரைகொண்டால் ‘சூடாத கிடந்த பூமாலை’ என்று பொருள்படும். ‘பெய்யாத’ என்ற பாடம், சங்க இலக்கியத்தில் இல்லை. இதனடிப்படையில் நோக்கினோமானால் உரையாசிரியர்கள் இதை மூலபாடமாகத் தெரிந்தெடுக்கவில்லை என்பதை உய்த்துணர முடிகிறது.

    துரைசாமிப் பிள்ளை பதிப்பின் பாடவேறுபாட்டுப் பகுதியில் ‘பெய்யாது’ என்ற பாடத்திற்கு ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாடு காணப்படுகிறது. இப்பாடவேறுபாட்டின் அடிப்படையில் ‘பொய்யாது வைகிய கோதை போல’ என்று பதிப்பு அமையும். இவ்விடத்து பொய்யாது என்பதற்கு ‘பொய்’ ‘பொய்த்துப்போதல்’ ஆகிய பொருள்கள் உள்ளன. இப்பொருள்களின் அடிப்படையில் ‘பொய்யாது வைகிய கோதை போல’ என்ற பாடலடிக்கு, ‘பொய்கூறாது கிடந்த பூமாலையைப் போல’ என்று உரைகொள்ள நேரிடும். இவ்வுரை பாடலின் பொருண்மைக்குப் பொருத்தமின்றி அமைவதால் ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாட்டை நீக்கி, G3, EN, VP, ER, EV, ET ஆகிய பிரதிகளில் உள்ள பாடமான ‘பெய்யாது’ என்பது பாடலின் பொருண்மைக்கு (‘சூடாது கிடந்த பூமாலையைப் போல’) ஏற்புடையதாக உள்ளதால் உரையாசிரியர்கள் இதனை மூலபாடமாகத் தெரிவு செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

    ஆ) நொதுமல் ஏர்புரை – நொதுமலர் ஏர்புரை – நொதுமலர் நேர்புரை – நொதுமல் ஓருரை

    C1, C2, G1, G2,G3, EN ஆகிய பிரதிகளில் ‘நொதுமல் ஏர்புரை’ என்ற பாடமும் ET பிரதியில் ‘நொதுமலர் ஏர்புரை’ என்ற பாடமும் அதே பிரதியில் ‘நொதுமல் ஓருரை’ (ETv) என்ற பாடவேறுபாடும் இருக்க, ஏவா வில்தன் VP, ER, EV ஆகிய பிரதிகளில் உள்ள ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடத்தையே மூலபாடமாகத் தெரிவு செய்துள்ளார். இருப்பினும் அவர் அப்பாடத்தை உறுதிப்படுத்துவதில் உள்ள சிக்கலைக் குறிப்பிடுகையில் ‘‘here the ER reading looks very much like an conjecture supposed to make sence of a number of unsatisfactory variants. As so Aften, we are not in a position to find out whether there were sources supporting such a reading’’ (ராஜம் பதிப்பில் காணப்படும் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடம்   திருப்தியற்ற பல மாறுபாடுகளைக் (நொதுமல் ஏர்புரை – நொதுமலர் ஏர்புரை – நொதுமலர் நேர்புரை – நொதுமல் ஓருரை) கொண்டுள்ளது.  ராஜம் பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடம் ‘நொதுமலர் நேர்புரை’ என்பது, அனுமானத்தால் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதை   உறுதிப்படுத்த ஆதாரங்கள் உள்ளனவா என்பதை ஆராயும் நிலையில் தான் இல்லை) என்று 11-ஆவது பாடலின் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார் ஏவா வில்தன்.

    இருப்பினும் இப்பாடங்களுக்கு யாப்பு முறைகளின்படியும், உலோச்சனாரின் நற்றிணைப் பாடல்களைத் தவிர ஏனைய பாடல்களை ஆராய்வதன் அடிப்படையிலும், உரையாசிரியர்கள் தரும் பொருண்மைகளின் அடிப்படையிலும் சரியான பாடத்தைத் தேர்வு செய்ய இயலும்.

    யாப்பு அடிப்படையில் -‘நொதுமல் ஏர்புரை”நொதுமலர் நேர்புரை‘

    உரையாசிரியர்கள் ‘நொதுமல் ஏர்புரை’, ‘நொதுமலர் நேர்புரை’ ஆகிய பாடங்களுக்குத் தரும் பொருண்மைகளின் அடிப்படையில் எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் சொல் அடிப்படையிலும் யாப்பு அடிப்படையிலும் வேறுபாடுகள் உள.

    •         நொது / மல்                ஏர் / புரை           மா முன் நேர் = நேரொன்றாசிரியத் தளை

                       நிரை   / நேர்              நேர் / நிரை

    • அ. நொது / மலர்             ஏர் / புரை            விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை

                       நிரை     நிரை           நேர் / நிரை

    • ஆ. நொது / மலர்            நேர் / புரை

                       நிரை   நிரை             நேர் / நிரை         விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை

    யாப்பு முறைப்படி 1)‘நொதுமல் ஏர்புரை’ என்ற பாடத்தைப் பிரித்தால் நேரொன்றாசிரியத் தளை வருகிறது. அதே நேரத்தில் 2) அ.‘நொதுமலர் ஏர்புரை’ மற்றும் ஆ.‘நொதுமலர் நேர்புரை’ ஆகிய பாடங்களைப் பிரித்தால் இயற்சீர் வெண்டளை வருகிறது. ஆகவே ஆசிரியப்பாவில் இயற்சீர் வெண்டளையும் விரவி வரலாம் என்பதால் பாடத்தைத் தெரிவு செய்வதில் மேலும் சிக்கல் ஏற்படுகிறது.

    அகநானூற்று உலோச்சனார் பாடலில் -‘நொதுமலர்‘

    ஒரு புலவர் பாடிய பாடலில் பாடவேறுபாடுகள் இருப்பின், அப்புலவர் பாடிய ஏனைய பாடல்களை ஆராய்ந்து, அதில் உள்ள பாடங்களைக் கொண்டு மூலபாடத்தை உறுதிப்படுத்தலாம். அவ்வகையில் உலோச்சனாரின் பாடல்கள், நற்றிணையில் மட்டுமின்றி குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ளன. அவற்றினைக் கொண்டு ஒப்பிடுகையில் அகநானூற்றில் ‘நொதுமலர் போல பிரியின் கதுமென’(300:11) என்ற அடியில் ‘நொதுமலர்’ என்ற பாடம் வந்துள்ளது.

    C2 (சுவடி)

    C3(சுவடி)

    C5(காகிதம்)

    C6(காகிதம்)

     

    C9 (காகிதம்)

    (C2, C3, C5, C6, C9 – உ.வே.சா. நூல் நிலையப் பிரதிகள்)

    ராஜகோபாலார்யன் (1933)

    வையாபுரிப்பிள்ளை (1940)

    பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார் (வெளியீடு, 1946)

    (குறிப்பு: ஒப்பு நோக்கி ஆய, பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம்(EFEO), அகநானூற்றுக்குச் சுவடி, காகிதப் பிரதிகளைத் தந்துதவியது.)

    மேற்குறிப்பிட்ட உலோச்சனார் பாடிய அகநானூற்றுப் பாடலைச் சுவடிகள் (C2,C3), காகிதப் பிரதிகள் (C5, C6, C9) பதிப்பு நூல்கள் (ராஜகோபாலார்யன், பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசி விசுவநாதன் செட்டியார், வையாபுரிப்பிள்ளை) ஆகியனவற்றைக் கொண்டு ஆராய்கையில் ‘நொதுமலர்’ என்ற பாடம் உள்ளதை அறிய முடிகிறது. மேலும் இப்பாடத்திற்கு வேறான பாடவேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதைத் தரவுகளின் வழியாக உறுதியிட முடிகிறது. ஆகவே உலோச்சனார் நற்றிணையிலும் ‘நொதுமலர்’ என்ற பாடத்தைத்தான் கையாண்டிருப்பார் என்பதைத் தரவுகளின் வழியாக ஊகிக்க முடிகிறது.

    உரையாசிரியர்கள் தரும் பொருள் –’ஏர்புரை‘, ‘நேர்புரை‘

    வையாபுரிப்பிள்ளை (VP) பதிப்பில் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடம் முதன் முதலில் காணப்படுகிறது. அப்பாடமே மர்ரே ராஜத்தின் (ER) சந்தி பிரித்த நற்றிணைப் பதிப்பிலும் உள்ளது. இவ்விரு பதிப்புகளும் உரையில்லாத மூலப் பதிப்புகள். அடுத்தடுத்த பதிப்புகளாக (உரையுடன்) வந்துள்ள வேங்கடராமன் (EV) மற்றும் ஏவா வில்தன் (EVA) ஆகியோர் தமது பதிப்புகளில் மேற்கண்ட பாடத்தையே மூலமாகக் கொண்டு ‘அயலவர் பழிச்சொல்’ என்று உரை கொள்கின்றனர்.

    பொ.வே.சோமசுந்தரனாரின் (நாராயணசாமி ஐயர் உரையுடன், இலக்கணக் குறிப்பும் ஆய்வுரையும் கொண்ட நற்றிணை உரை) இலக்கண ஆய்வுரையில் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடத்தைப் பாடவேறுபாடாகக் கொண்டு ‘அயலோர் வாய் நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்று குறிப்புப் பகுதியில் குறிப்பிடுகிறார். அவற்றைக் கொண்டு நோக்குகையில் ‘நேர்புரை’ என்பதற்கு ‘நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்ற பொருள் கிடைக்கிறது. இப்பொருள் வேங்கடராமன் பதிப்பிலும் ஏவா வில்தனின் பதிப்பிலும் இல்லை. ஆகவே பாடலின் பொருண்மைக்கு ‘நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்ற பொருளைத் தருகின்ற ‘நேர்புரை’ என்ற பாடத்தைக் கொள்ளாமல், ‘எழுதலையுடைய பழிச்சொல்’ (EN), ‘எடுத்துரைக்கும் அலருரை’ (ET) ஆகிய பொருள்களைத் தருகின்ற ‘ஏர்புரை’ என்ற பாடத்தையே ஏற்புடைய பாடமாகக் கொள்ளலாம்.

    முடிவுகள்

    • ஏவா வில்தன், நற்றிணைக்குக் கிடைத்துள்ள சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள், தொல்காப்பிய உரை மேற்கோளில் காணப்படும் நற்றிணைப் பாடல்கள் ஆகியனவற்றைத் தொகுத்து, பாடவேறுபாடுகளைப் பட்டியலிட்டு ஆராய்ந்து, நற்றிணைக்குச் செம்பதிப்பைக் கொண்டுவந்துள்ளார். இதுவரை வந்த நற்றிணைப் பதிப்புகளில் காணப்பெறாத வகையில், மூலபாடத்தை நிறுவும் முயற்சியை இவரது பதிப்பில் காணலாம். மேலும் நற்றிணைக்குக் கிடைத்துள்ள பிரதிகளில் காணப்படும் பாடங்களைத் தொகுத்துப் பட்டியலிடும் அதே நேரத்தில் பாடலுக்குள் காணப்படும் பாடங்களையும் பாடல் எழுதிய புலவர் பெயர்களில் காணப்படும் மாறுபாடுகளையும் குறிப்பிடாமல் விட்டுள்ளார்.
    • ‘வலவன்’ (11:8) என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘வளவன்’ என்ற பாடம் உள்ளது. இப்பிரதிகளில் உள்ள பிற பாடவேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் ஏவா வில்தன், C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்தினைச் சுட்டிக் காட்டவில்லை. அதே போல உலோச்சனார் என்ற பெயரோடு கயமனார் என்ற பெயரும் ஓர் ஏட்டில் காணப்படுகிறது என்ற துரைசாமிப் பிள்ளையின் அடிகுறிப்புச் செய்தியும் இவரது பதிப்பில் விடுபட்டுள்ளது.
    • நற்றிணை 11- ஆவது பாடலில் ‘பெய்யாது’(11:1) என்ற பாடத்திற்கு  ‘பெய்யாத’ , ‘பொய்யாது’ ஆகிய பாடவேறுபாடுகள் உள்ளன. அப்பாடவேறுபாடுகளுள் பாடலின் பொருண்மைக்கு ‘பெய்யாது’ என்ற பாடமே மிக அணுக்கமாக உள்ளது.
    • உலோச்சனாரின் பாடல்கள், நற்றிணையில் மட்டுமின்றி குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ளன. அவற்றினைக் கொண்டு ஒப்பிடுகையில் ‘நொதுமலர்’ என்ற பாடம் அகநானூற்றில் மட்டும் வந்துள்ளதால் நற்றிணையிலும் ‘நொதுமலர்’ என்ற பாடத்தைத் தான் உலோச்சனார் கையாண்டிருப்பார் என்பதைத் தரவுகளின் வழியாக அறிய முடிகிறது.
    • ‘நேர்புரை’, ‘ஏர்புரை’ ஆகிய பாடங்களில் உரையாசிரியர்கள் பொருள்கொள்ளும் அடிப்படையில் நோக்கும் பொழுது ‘ஏர்புரை’ என்ற பாடம் பொருத்தமுள்ளதாகத் தோன்றுகிறது.
    • ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் விடுபட்ட பாடங்களும் மூலபாடத் தெரிவில் இடர்ப்பாடுகளும் காணப்படுவதால் அவரது நற்றிணைச் செம்பதிப்பு என்பது கேள்விக்குள்ளதாக அமைகிறது. ஆக, ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் (2008) உள்ள ஏனைய பாடல்களையும் மூலபாடவியல், பதிப்பியல் நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தினால் மேலும் சில விடுபட்ட பாடங்களும் மூலபாடத் தெரிவில் உள்ள மாறுபாடுகளும் தெரிய வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆகவே ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பினை மீட்டுருவாக்கம் செய்தால், நற்றிணைச் செம்பதிப்பு என்பது சீர்மை பெறும்.

    துணைநூற்பட்டியல்

    • அறிவுடைநம்பி. ம.சா., சுவடி ஆய்வு நெறிமுறைகள், கருமணி பதிப்பகம், 27, சுப்பிரமணியர் கோயில் குறுக்குத்தெரு, இலாசுப்பேட்டை, புதுச்சேரி. சனவரி 2013.
    • இராமகிருட்டிணன். மூ., பிரதிபேத ஆராய்ச்சி, வேங்கடாசலபுரம், (வழி) தேனி, மதுரை. (ஆண்டு குறிப்பிடவில்லை).
    • ஏவா வில்தன் (ப.ஆ.)., நற்றிணை, சங்க இலக்கியங்கள் – செம்பதிப்பு வரிசை – 1.1., பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம் (EFEO) – 2008, தமிழ்மண்பதிப்பகம்.
    • வேங்கடசாமிநாட்டார். திரு. நாவலர் ந.மு. & வேங்கடாசலம் பிள்ளை. கரந்தைக் கவியரசு R. (பதவுரை, விளக்கவுரை), எட்டுத் தொகையுள் ஒன்றான அகநானூறு – மணிமிடை பவளம் (பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன்செட்டியார் அவர்களால் வெளியிடப்பெற்றது) திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், திருநெல்வேலி.ஜனவரி1946.
    • சுப்பிரமணியன். ச.வே., தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108. மார்ச்.2013.
    • சோமசுந்தரனார். பெருமழைப்புலவர் பொ.வே., (இலக்கணக்குறிப்பும் ஆய்வுரையும்) –           எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை நானூறு (பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் எழுதிய உரையும் விளக்கமும்), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், திருநெல்வேலி – 6, நான்காம் பதிப்பு1967.
    • துரைசாமிப்பிள்ளை.சு (உ.ஆ) ., நற்றிணை, அருணா பப்ளிகேஷன்ஸ், உஸ்மான் ரோடு, தியாகராய நகரம், சென்னை – நவம்பர்.1966& 1968.
    • நாராயணசாமி ஐயர். பின்னத்தூர் அ (உரையாசிரியர்)., எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை, சைவ வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னை.1915.
    • பரமசிவம். த.கோ.(பதிப்பாசிரியர்)., சுவடிப்பதிப்பு நெறிமுறைகள் (கருத்தரங்கக்கட்டுரைகள்), தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.மார்ச்1989.
    • பாலசுப்பிரமணியன்.கு.வெ(உரையாசிரியர்)., சங்க இலக்கியம் –நற்றிணை மூலமும் உரையும், நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்(பி) லிட், அம்பத்தூர், சென்னை – 600 098. ஐந்தாம் பதிப்பு. அக்டோபர் 2014.
    • பழனியப்பன்.வெ., தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்.1990.
    • பாகனேரி. வெ. பெரி. பழ. மு., திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், (வெளியீடு) லிமிடெட், திருநெல்வேலி.
    • பிரகாஷ். வெ., பாட ஆய்வியல் கையேடு, அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தா நத்தம், திருச்சி. 2014.
    • பிரகாஷ். வெ., பாட ஆய்வியல்: புறநானூறு பாடம், வடிவம் குறித்த ஆய்வு, முனைவர் பட்ட ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், 2012,
    • ராஜகோபாலார்யன் (ப.ஆ)., அகநானூறு மூலமும் பழைய உரையும், கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாசம், மயிலாப்பூர்.
    • விநாயகமூர்த்தி.அ., மூலபாட ஆய்வியல், பாலமுருகன் பதிப்பகம், 90, பாரதியார் தெரு, சுப்பிரமணியபுரம், மதுரை – 625 011.
    • வெள்ளை வாரணன். க (ப.ஆ) ., தொல்காப்பியம் செய்யுளியல் – உரைவளம், பதிப்புத் துறை, காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை – 625 021. 1989.
    • வேங்கடராமன்.ஹச்(உ.ஆ)., டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், 2, அருண்டேல், கடற்கரைச் சாலை, பெசண்ட் நகர், சென்னை – 600 098.
    • வையாபுரிப்பிள்ளை. எஸ்(ப.ஆ.)., சங்க இலக்கியம், எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும், சைவ சித்தாந்தம் மகா சமாஜம், மயிலாப்பூர், சென்னை. 1940.
    • Eva Mariya wilden., Studies in Manuscript Cultures, 204 Walter de Gruyter Gmbh & KG Berlin / Munchen / Bosten in Germany.
    • S.M. Katre., Introduction to Indian Textual Criticism, Karanatak Publishing House.
    • தமிழ் லெக்ஸிகன்., சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
    • நிகண்டுகள்., சாந்தி சாதனா, 125 சேமியர்ஸ் சாலை, சென்னை – 600 028.
    • மணியன்.,சங்க இலக்கிய வினை வடிவங்கள், திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம் – 86.
    • மாதையன்.பெ., சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 310. 2007.
    • பாண்டியராஜா.சு., சங்க இலக்கியத் தொடரடைவு, sangamconcordance.com
    • தமிழிணையக் கல்விக் கழகம்(tamilvu.org)

    ஆய்வுக் கட்டுரையாளர்களின் தன் விவரக் குறிப்பு

    முனைவர் ப. வேல்முருகன்

    தலைவர் & பேராசிரியர், தமிழ்த் துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

    திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: pdrvelmurugan@gmail.com; செல்பேசி    : 9488264166

    இவர் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில்., பி.எட்., பிஎச்.டி. பட்டங்களும் வரலாறு, தகவல் தொடர்பியல், மொழியியல் ஆகிய பாடங்களில் எம்.ஏ. பட்டங்களும் பெற்றுள்ளார். கணினி அறிவியல், ஹிந்தி மொழி, காந்தியச் சிந்தனை ஆகியவற்றில் சான்றிதழ் பயின்றுள்ளார். அடிப்படை மலையாள மொழியறிவு உடையவர்.

    இவர் சங்க இலக்கியம், இலக்கணம், மொழியியல், தொல்லியல், தகவல் தொடர்பியல், கவிதையியல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இப்பொருண்மைகளில் ஐந்து நூல்களை எழுதிய இவர் `எழுத்திலக்கண மாற்றம்’, `தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள்’ ஆகிய நூல்களுக்காக, இந்தியக் குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழ் இளம் அறிஞர் விருதும்,  `இலக்கண மரபும் இலக்கியப் பதிவும்’ என்ற நூலினுக்காகத் தமிழக முதல்வர் வழங்கும் சிறந்த நூலாசிரியர் விருதும் பெற்றுள்ளார். இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அறுபதிற்கும் மேலான எண்ணிக்கையில் வெளிவந்துள்ளன.

    இவர், பதினாறு ஆண்டுகள், ஆசிரியர் பணி அனுபவம் மிக்கவர்; தற்பொழுது திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்  தமிழ்த் துறைத் தலைவராகப் பேராசிரியர் நிலையில் பணி புரிந்து வருகிறார்.

    இர. ஆனந்தகுமார்

    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த் துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: anadhakumar001@gmail.com; கைபேசி        : 9488264166

    இவர் ஆசிரியர் பயிற்சியும், தமிழிலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில்., பட்டமும் பெற்றவர். மேலும் தமிழ் மொழியியலில் முதுகலைப் பட்டமும், மலையாள மொழியில் சான்றிதழ்ப் பட்டமும் (Certificate Course) பெற்றுள்ளார். தற்பொழுது திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில், முனைவர் பட்ட ஆய்வாளராக “நற்றிணைப் பாக்கள்: மொழியியல், இலக்கியவியல், கிளை மொழியியல், மூலபாடவியல் ஆய்வு” (உலோச்சனார் முதலியோரின் 133 பாக்கள் – சொல்லடைவுடன்) எனும் தலைப்பில் ஆய்வு செய்து வருகிறார். இவர், பன்னாட்டு ஆய்விதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

    ===========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பழந்தமிழ் இலக்கியங்களின் உண்மைத் தன்மையை அறிய, அவற்றின் மூலம் கண்டடைதல் என்பது, தேவையான ஒன்று. அந்த வகையில் ஏவா வில்தன் முன்னெடுத்த செம்பதிப்புப் பணி பாராட்டத்தக்கது. இவர் பதிப்பில் உள்ள சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் பதிப்புப் பணியில் ஈடுபடும் பதிப்பாசிரியர்கள் நினைவில் கொள்ளக் கூடிய பதிப்பு அடிப்படைகளையும் நற்றிணைப் பதிப்பில் உள்ள பாடவேறுபாடுகள் குறித்தும் விளக்கும் தன்மையில் கட்டுரை அமைந்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் ஆய்வாளர்கள், பதிப்பாசிரியரின் வலவன், பெய்யாது, நொதுமலர் போன்ற மூலபாடத் தெரிவின் முயற்சிகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மேலும் ஏர்புரை என்பது பொருத்தமான பாடமாகத் தோன்றுகிறது என்று யூகத்தின் அடிப்படையில் கூறுதல் பொருத்தமற்றது. ஆய்விற்குப் பொருத்தமான ஆதாரங்களை முன்வைத்து, பதிப்பாசிரியரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுதல் நலம் பயக்கும். மேலும், ஆய்வாளர்கள் பிறர் கருத்தை மறுக்கும் பொழுது, தன்மையான முறையில் மறுக்க வேண்டும். ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள், இத்தகைய செம்பதிப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைய வேண்டும். மாறாக, அவர்களின் பணியைப் புறந்தள்ளும் தொனி வந்துவிடக் கூடாது. எனினும், ஆய்வாளர்கள் இதுபோன்ற ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, தமிழுக்கு ஆக்கம் நல்கும்.

    ===========================================================

    Share
  • புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள்

    –துக்கை ஆண்டான்

    மீன்பிடி வலையரான முத்தரையர்களின் தீண்டாமை விலக்கு நிகழ்வுகளை பழங்காலச் சமூக வரலாற்று நோக்கில் காண்டிட, உள்ளது உள்ளபடி காட்டும் காலக் கண்ணாடியாக இருப்பவை இதில் இடம்பெறும் சில புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள்.

    பிறப்பு சார்ந்த சாதீயத் தீண்டாமை என்பது கண்ணிற்கு புலனாகாத வேலியும் சுவரும் போன்ற ஒரு திறந்தவெளிச் சிறைக் கட்டமைப்பு ஆகும் என்பது புரிதல். இந்தத் தீண்டாமை தமிழ்நாட்டில் எப்போது? எந்த வடிவில்? அறிமுகமானது. இதற்கு தாக்குண்ட சமூகங்கள் யாவை? என்பதை பார்ப்போமானால் இக்காலத்தே பலராலும் பரவலாக மேடையிலும், எழுத்திலும் விவரிக்கப்படுவது போல் ஊருள் நுழையவிடாமை, பொதுக் குளத்தில் நீர் மொள்ளத் தடை, எச்சில் துப்பத் தடை, வேட்டியை குறிப்பிட்ட முறையில் கட்டத் தடை போன்றதாக இருந்திட வில்லை. மாறாக, தொழில் சார்ந்து பிணம் தீண்டாமை என்ற வகையில் தான் அது முதன்முதலில் 15/16 ஆம் நூற்றாண்டில் தான் அறிமுகமாகின்றது. அதே நேரம் சாதீயத் தீண்டாமை இன்னும் பிற்பட்ட காலத்தில் 17/18 நூற்றாண்டுகளில் தான் அறிமுகமாகி இருக்க வேண்டும் என்ற ஊகக் கருத்திற்கு தக்கவாறு தான் தமிழ்நாட்டில் பறையர்கள் ஊருள் குடியிருக்க சுதந்திர உரிமை பெற்றிருந்ததையும், உயர் அரசு பதிவிகளில் இருந்ததையும்  புதுக்கோட்டை கல்வெட்டுகள் நமக்கு இயம்புகின்றன. சாதீயத் தீண்டாமைக்கு எடுகோளாக அம்பேத்கர் மனுதர்மத்தில் இருந்து வைக்கும் குறிப்புகள் பிணத் தீண்டாமையைப் பற்றி தான் பேசுகின்றனவேயன்றி சாதீய தீண்டாமை பற்றி பேசவில்லை.

    X  50 குறிப்பை எடுத்துவிட்டதால் இது பிணம் கையாள்வோரை பற்றியது என்பது படிப்பவருக்கு தெரியவராது

    //Ambedkar > Manu smriti says:

    1. 50. Near well-known trees and burial-grounds, on mountains and in groves, let these (tribes) dwell, known (by certain marks), and subsisting by their peculiar occupations.
    2. 51. But the dwellings of the Chandalas and the Shvapakas shall be outside the village, they must be made Apapatras and their wealth (shall be) dogs and donkeys.
    3. 52. Their dress (shall be) the garments of the dead,(they shall eat) their food from broken dishes, black iron (shall be) their ornaments and they must always wander from place to place.
    4. 53. A man who fulfils a religious duty, shall not seek intercourse with them; their transactions (shall be) among themselves and their marriages with their equals.
    5. 54. Their food shall be given to them by others (than an Aryan giver) in a broken dish; at night they shall not walk about in village and in towns.
    6. 55. By day they may go about for the purpose of their work, distinguished by marks at king’s command, and they shall carry out the corpses(of persons) who have no relatives; that is a settled rule.
    7. 56. By the King’s order they shall always execute the criminals, in accordance with the law, and they shall take for themselves the clothes, the beds, and the ornaments of (such) criminals. . (தூக்கில் இட்டால்  அங்கே குற்றவாளிகளின் பிணம்தான் விழும்) //

    X  50 குறிப்பை நீங்கிவிட்டால் இது பிணம் கையாள்வோரை பற்றியது என்பது படிப்பவருக்கு தெரியவராது.

    இக்கால் இந்தியாவில் 1108 சாதிகள் ஒடுக்கப்பட்ட அட்டவணை சாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுகூட மனுதர்மத்தால் சுட்டப்படவில்லை. மாறாக, பிணங்களை கையாளும் வெட்டியான் சாதியான சண்டாளர் பற்றி தான் குறிப்பு உள்ளது. இந்தியாவில் அத்தனை ஒடுக்கப்பட்ட சாதியரும் பிணத்தை கையாள்வதில்லை என்பது ஈண்டு கருதற்பாலது. ஆனால் கடந்த 125 ஆண்டுகளாக மேலை வரலாற்று ஆசிரியர் முதல் இக்கால தலித்திய இயக்கங்கள் வரை எல்லோரும் பிணம் கையாளும் வெட்டியான்களுக்கான இந்த மனு தர்மக் கருத்தை அத்தனை ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதும் திணித்துத் தவறாகக் காட்டி சாதீயத் தீண்டாமைக்கான உண்மையான மூல காரணத்தை, காரணகரை பிறர் அறியவிடாமல் செய்துவிட்டனர், செய்தும் வருகின்றனர். நெய்தல், குறிஞ்சி, முல்லை நில மக்களில் சாதீய தீண்டாமை அறவே இல்லாமல் இருக்க வயல் சார்ந்த மருத நிலத்தில் மட்டுமே இந்த 1,108 சாதிகள் இருக்கக் காரணம் என்ன? என்று இதுவரை எவரும் சிந்திக்கவில்லை. சிந்தித்தால் உண்மையான காரணகர் பிடிபட்டு விடுவார்கள். பின் மதமோ, பிராமணரோ, மனுதர்மமோ அதற்கு காரணம் அல்ல என்பது விளங்கிவிடும். கீழ்காணும் கல்வெட்டுகள் இதற்கு வலுவான சான்றுகளாக உள்ளன. ஊன்றிப் படிப்பவருக்கு இதில் அறிவுவெளிச்சம் கிட்டும்

    இனி புதுக்கோட்டை கல்வெட்டுகள்

    எண் 847. 21 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், புல்வயல், ஈசுவரன் கோவிலில் சுவாமி கோவிலின் மேற்புரச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    _ _ த்து சாகாத _ _ _ _ மேல் செ / ல்லாநின்ற  விக்கிறம வருசம் சித்திரை / 1445_ [4] நாள் வயலகநாட்டு புல்வயல் / ம _ _ ம ஊர் ஆக இசைந்து ஊரவ / ரோம் இவ்வூர் வலையரில் கடை _ / த _ _ ற்றில் கடம்பராய முத்தரைய / ர் [எ]ழுந்தராமை வென்ற முத்தரைய _ / பனையன் உள்ளிட்டாற்கும் உலகப்ப _ / யன் உள்ளிட்டாற்கும் நடுவிற்கூளபெ _ / ந[ச]ரதிருவன் உள்ளிட்டாற்கும் சயிரன் / உள்ளிட்டாற்கும் மேலைக்கூவ தேவே / ந்திர முத்திரையன் வகை  மணவாளர் / காத்தான் உள்[ளி]ட்டாற்கும் வள்ளி பெரி / யான் உள்ளிட்டாற்கும் ஆக இந்த மூன்று / வலையற்கும் கல்வெட்டிக்குடுத்தப / டி இவர்கள் திம்மைக்குச் செய்யுந் தொழில்பாடுகளில் நம்முடைய ஊற் / குள் பெண்டுகள் அல்லவானால் வலைச்சி முக்காட்டு இட்டுச்சவத்துக்கு மு / க்காட்டு இட்டு சவத்துக்கு முன்னே வயானத்துக்குக் கூட்டிப்போகிறதும் சவம் / அடிக்கினால் மற்றா நாள் தண்ணீர் சொரிஞ்சு காடு ஆற்றுகிறதும் இந்த இரண் / டு தொழிலுங் (தொழிலுங்) கழித்து குடுத்தமைக்கு ஊரவ / ர் சொற்படிக்கு தென்னவதரையர் எழுத்து.

    வயானம் – இடுகாடு; அடிக்கி – அடக்கம்; கழித்து – ஒதுக்கி; தின்மை –அமங்கல சடங்கு: வலைச்சி – மீனவத்தி.

    விளக்கம்: சக ஆண்டு 1445 (1523 AD) வயலக நாட்டு புல்வயல் ஊர் சபையோர். இவ்வூர் வலையரில் கடம்பராய முத்தரையர், எழுந்தராமை வென்ற முத்தரையர், பனையன் உள்ளிட்டார்,  உலகப்பனையன், நடுவிற்கூள திருவன், சயிரன், மேலக் கூவ தேவேந்திர முத்திரையன், மணவாளர் காத்தான், வள்ளி பெரியான் உள்ளிட்ட இம்மூன்று வலையர் மக்களுக்கும் கல்லில் வெட்டிக் கொடுத்த உரிமை யாதெனில் அமங்கல தொழில்பாடுகளில் நம்முடைய ஊரில் பெண்டுகள் இல்லாது போனால் வலைச்சியர் முக்காடு இட்டுக் கொண்டு பிணத்திற்கு முக்காடு இட்டு  பிணத்திற்கு முன்னே சென்று இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லவும், அடக்கம் செய்த மறுநாள் தண்ணீர் தெளித்து தோட்டம் ஏற்படுத்துவதுமான இரு தொழிலையும் ஒதுக்கிக் கொடுத்த ஊர்ச் சபையோரின் சொல்லை ஏற்று ஆமோதித்த தென்னவதரையர் எழுத்து.

    இக்கல்வெட்டு மூலம் ஈமத்தொழில் வலையர்க்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்பது தெளிவு. விளைவுகள் இதன் பின் தான் தெரியவரும்.

    எண் 926. 11 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், குடுமியாமலை, சிகாநாத சுவாமி கோவிலில் சுவாமி கோவிலின் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    ஸுபமஸ்து மன்மத ஆண்டு ஆனி மாதம் 8 நாள் நயினார் குடுமியார் நயினார் ஸ்ரீ பண்டாரக் காரியத்துக்குக் கடவார் / விசலூர் கோனாட்டு முத்திரையன் செலிந்திவன முத்திரைன் உட்பட்டாற்கு கல்வெட்டிக் குடுத்த / படி இவர்கள் பட்டடை காத்தும் பிணத்தின் முன்னே முக்காடு இட்டும் நடந்தபடியினாலே இவர்களை / பிறவூர் வலையர் சாதி நீக்கி இனம் பண்ணினபடியினாலே இவர்கள் குடி போயிருக்கையில் மல்லப்ப / னாயக்கர் பல்லவராயர் பண்டார உத்தாரமாக பட்டடை காவலும் முக்காடு இடவும் வேண்டாம் என் / று  கட்டளையிட்டபடியினாலே இந்தபடி இ சந்திராதித்தவரையும்  நடத்தக் கடவோமாகவும் இது காரியத்துக்கு / யாதாம் ஒருத்தர் அகுதம் பண்ணினால் கெங்கைக்கரையிலே கராம் பசுவைக் கொன்ற பாவத்திலே போக / கடவதாகவும் இப்படிக்கு தானத்தார் பரமேசுரர் பட்டர் எழுத்து. சைவ[ப்]பிறகாச பட்டர் எழுத்து / சீகாரியஞ் செய்வார் எழுத்து. கோயில் கணக்கு கோனாட்டு வேளார் எழுத்து. மல்லப்ப / னாயக்கப் பல்லவராயர் காரியத்து இ கடவார் தையலாபிள்ளை எழுத்து. விசலூர் வெள்ள எழுத்து. / மருங்கூ,ர் சேவகமுத்தரையன் பிடாரன் எழுத்து.

    பண்டாரம் – கோயில் நிர்வாகம்; உத்தாரம் – துணையாக, ஆதராவாக.

    விளக்கம்: 1415 AD மற்றும் 1475 AD இல் நிகழ்ந்த மன்மத ஆண்டுகளில் ஒன்றில் ஆனி மதம் 8 நாள் இக் கல்வெட்டு வெட்டப்பட்டிருக்க வேண்டும். கோவில் பணிக்குச் செல்லும் விசலூர் கோனாட்டு முத்திரையன், சிலந்திவன முத்திரையன் உட்பட்டாருக்கு கல்வெட்டு மூலம் தெரிவிப்பதாவது இவர்கள் பட்டடை காத்தும் பிணத்தின் முன் முக்காடு இட்டு நடந்து சென்றதால் பிறவூர்  வலையர்கள் இவர்களை சாதி நீங்கி ஈனம் செய்துவிட்டனர். அதனால் இவர்கள் குடிபோன இடத்தில் மல்லப்ப நாயக்கரான பல்லவராயர் கோவில் உத்தாரமாக இவர்கள் பட்டடை காவலும் முக்காடும் இடுவதற்கு தடைபோட்டார். இதாவது, கோவில் பணியை அனுமதித்து பிணப் பணியை தடை செய்துவிட்டார். அதன்படியே சந்திராதித்தர் வரை நடந்துகொள்ள வேண்டும் என்றும் இந்தக் கட்டளையை எவரேனும் மீறினால் அவர் கங்கைக் கரையில் கரவை மாட்டைக் கொன்ற குற்றத்தை சம்பாதித்தவர் ஆகுவார் என கோவில் ஸ்தானத்தார் (பொறுப்பாளர்) பரமேசுவர பட்டர், சைவப்பிரகாச பட்டர், திருப்பணி செய்வார், கோயில் கணக்கு கோனாட்டு வேளார், பல்லவராயர் பணியாளர் தையலாப் பிள்ளை, விசலூர் வெள்ளாளர், விசலூர் சேவக முத்திரையன் பிடாரன் ஆகியோர் கையெழுத்து இட்டனர்.

    இதன் மூலம் பிணத் தீண்டாமை சாதி விலக்கு பரவி பிணம் தீண்டலுக்கு எதிரான சமூக எதிர்வினை ஏற்பட்டதை அறிந்து கொள்ள முடிகின்றது.

    எண் 906. 17 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், குடுமியாமலை, சிகாநாத சுவாமி கோவிலில் சுவாமி கோவிலின் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    விக்கிறம ஆண்டு வைசாக மாதம் 25 நாள் குடுமியார்மலை நயினார் ஸ்ரீ பண்டார / திருவாசல் காரியத்துக்கு கடவர் தானத்தாரோம் மேற்படியூர் / வலைக்குன்[று] சூழ்நாட்டு முத்திரையன் கோனாட்டு முத்தி[ரை]யந் உள்ளிட்டாற்கு பிடிபாடு பண்ணிக் குடுத்தபடி பின்னுக்கு யி / ந்த ஊரிலே சாவு செத்தால் கட்டையும்மிட்டு முக்காட்டுமிட்டுத் தீ / ச் சட்டியுங் கொண்டு சுளுந்துங் கொளுத்தப் போய் சவங்காத்து / நின்று சுட்டு நடக்[கை]யில் யிக்காரியம் [செ]ய்ய யின வகையாது என்று / (கும்) போய்யிருக்கையில் யிந்தக்காரியம் மட்டும் வேண்டாம் என்று[ங்] /  கட்டளையிடுகையில் மற்றபடி[க்]கு நன்மைக்கு பந்தல் சுளுந்து கழங்க / யிலை  தகறற்றுஞ் செய்ய[வு]ம் குறைவறுப்பஞ் செயவும் நன்மைக்கு உண் / டான முறைமை எல்லா[ஞ் செ]ய்யவும் கொளம் ஏரி கரும்ப யிறையம் / யிராசகரமட்[ட]ம்மைப்பாடும்(ப்) பண்ணி தானத்தா(த்து)ற்கும் ஊராற்கும் / உள்ள காட்சி பல சு[வ]ந்தரமுண்டான சுவந்தரமுஞ் செய்து சுகத்திலே யிரு[க்]க கடவராகவும் யிற்படிக்கு / அதிகாரம் சிவந்தெழுந்தார் எழுத்து. பரமேசுவரபட்டர் எழுத்து. /  சிபப்பிறகாச பட்டர் எழுத்து. சிகாரிய[ஞ்] செய்வார் எழுத்து. கோயில் கண(கு)க்கு குடுமிகோநாட்டு வேளாந் எழுத்து.

    கட்டை – ஈம விறகு, உயிற்ற உடல்; சுளுந்து – தீப்பந்தம்; பண்டாரம் – கோயில் மேலாண்மைக் குழு; நன்மை – மங்கல நிகழ்ச்சி.

    விளக்கம்: மேலேகண்ட கல்வெட்டு எண் 847 இல் தந்த பிணத்தொழில் உரிமைக்கு ஏற்பட்ட எதிர்வினை இது. 1523 AD வைகாசி மாதம் 25 ஆம் நாள் வெட்டி கல்வெட்டு. குடுமியான் மலை சிகாநாதர் கோவில் திருவாசல் பணிசெய்யும் பொறுப்பாளர்கள். குடுமியான்மலை வலைக்குன்று சூழ்நாட்டு முத்திரையன், கோனாட்டு முத்திரையன் உள்ளிட்டார்க்கு பிடிபாடு (behavioural guidelines) வழங்கியதாவது. இனி இந்த ஊரில் சாவு விழுந்தால் பிணத்தை பாடையில் வைத்து, முக்காடு இட்டு, தீச்சட்டியை ஏந்தி சுளுந்து கொளுத்தி, பிணம் காத்தும் எரித்தும் வந்த வேலையை இனியும் செய்ய வகையில்லை என்பதால் இந்த அமங்கல வேலையை கைவிட்டு நன்மையான மங்கல வேலைகளான பந்தல் இடுதல், சுளுந்து (தீப்பந்தம்), கழங்கஇலை, இப்படி எல்லா வகை மங்கல வேலைகளையும்; குளம், ஏரி, கரும்பஇறை வேலை ஆகியன மட்டும் செய்து கோவில் பொறுப்பாளர்க்கும் ஊர் சபையோருக்கும் இடர் இல்லாமல் காணும்வண்ணம் உரிமையோடு செய்து ஊர்த்தடை இன்றி உரிமையுடன் சுகமாக வாழ்ந்துவர வேண்டும் என்று, இப்படிக்கு அதிகாரம் சிவந்தெழுந்தார், பரமேசுவர பட்டர், சிவப்பிரகாச பட்டர், ஸ்ரீகாரியம் செய்வார், கோயில் கணக்கு குடுமிகோநாட்டு வேளான் ஆகியோர் ஓலையில் கையெழுத்திட்டனர்.

    எண் 945. 7 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், திருவேங்கவாசல், வியாக்ரபுரீசுவரர் கோவிலில் மடப்பள்ளிக்கு வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    பிலவங்க ஆண்டு புரட்டாதி மாதம் 8 அந்தியது ஆவு / டைய பல்வராயர் திருவேங்கைவாசல் / வலையற்கு வரக்காட்டின காரியம் தாங்கள் / கோயில் சூலம்  போட்டபடியினாலே போiன / [னா]ர்கள் சூளக்காறர். சொன்னார்கள் எங்களுக்கு / சூலமும் வேண்டாம்மென்று. கட்டளையிட்டு கல் / லு வெட்டிப்  போடுகிறோம், தாங்கள் ____

    சூலக்காரர் – சூலம் பொறித்தோர்.

    விளக்கம்: பல்லவரான பல்லவராயர் புதுக்கோட்டையை ஆண்ட பின் மறைந்து அழிந்தபடியால் தொண்டைமான்கள் இராமநாதபுரம் சேதுபதி இசைவுடன் அங்கு அரசு பொறுப்பிற்கு வந்தனர், 17 ஆம் நூற்றாண்டில். தமிழ்வேந்தர் ஆட்சி இழப்பிற்கு பின்னும் நாயக்கர் ஆட்சிக்கு முன்னுமான இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த 1427 AD மற்றும் 1487 AD பிலவங்க ஆண்டுளில் ஏதோ ஒன்றில் புரட்டாசி மாதம் 8 ம் தேதி இக்கல்வெட்டு வெட்டப்பட்டது. கிழமை குறித்திருந்தால் நல்ல தெளிவு ஏற்பட்டிருக்கும்.

    ஆவுடை பல்லவராயர் திருவேங்கைவாசல் வலையரை வரவழைத்து எடுத்துக் கூறிய செயலாவது நீங்கள் கோயில் சூலம் இட்டபடியால் அந்த சூலக்காரர் சினந்து சொன்னார்கள் எங்ளுக்கு சூலமும் வேண்டாம் பிறிதும் வேண்டாம் என்று போய்விட்டார்கள். அதனால் கட்டளையிட்டு  கல்வெட்டிப் போடுகிறோம், இனி நீங்கள் என்று செய்தி முற்றுப் பெறாமல் விடுபட்டுள்ளது. பிற கல்வெட்டுச் செய்திகளை ஒப்பிட்டால் இவர்கள் பிணத் தொழிலை கைவிட வேண்டும் என்பதாகவே இருக்கும் என்று மட்டும் ஊகிக்க முடிகின்றது. 

    எண் 948. 3 வரி கல்வெட்டு. திருமெய்யம் வட்டம், தேக்காட்டூர், அகத்தீசுவரர் கோவிலில் தர்மசமர்த்தினி அம்மன் கோவிலின் கீழ்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    1. சவுமிய வருஷம் ஆடி மாதம் 26 நாள் கானனாட்டுத் தெற்காட்டுர் ஊர்கமைந்த ஊரவரோம் மேற்படியூர் புறஞ்சேரியிலிருக்கும் பறையற்குப் பிடிபாடு பண்ணிக்குடுத்தபடி, இவர்கள் முன்னுக்கு களஞ் செதுக்குகையில் இப்போ களஞ்செதுக்க_ _ _ _ _ ங்களு
    2. க்கு ஆற்றாதென்கையில் பின்பு ஊராகக் கூடிப் பறையரைக் களஞ் செதுக்க வேண்டாமென்று கட்டளையிட்டுக் குடுத்த (யிட்டுக் குடுத்த) படியிலே சந்திறாதித்தவரை செல்ல முன்னுண்டான சுவந்திரமும் பற்றி ஊருலே குடியிருக்கவும் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டி
    3. க் கொள்ளக்கடவாராகவும் _ _ _  வாணாதராயர் எழுத்து. தெற்காட்டூர் வேளார் எழுத்து. சொல்லி ஆடுவார் எழுத்து நாட்டுக் கணக்குத் தென்னவரையன் எழுத்து. இந்த _ _ _ _ மந்திருமே _ _ _ _ ம்பான் மூளி பெரியான் உள்ளி[ட்]டாரு.

    பிடிபாடு – வழிகாட்டு நெறி (Behavioral guidelines): களம் – வயல்;

    விளக்கம்: விசயநகர ஆட்சி உண்டான பின் 60 ஆண்டு குறிப்பு தமிழ்க் கல்வெட்டுகளில் இடம் பெற்றது. நாயக்கர் ஆட்சி என்றால் வேந்தர் பெயர், ஆட்சி ஆண்டு தமிழ்வேந்தர் காலத்தில் இருந்தது போலவே குறிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு அல்லாமல் இக்கல்வெட்டு சௌமிய ஆண்டு ஆடி 26 ஆம் நாள் என்று வெட்டப்பட்டுள்ளது. எனவே இது கம்பண்ணர் படையெடுப்பிற்கு பின்னான நிகழ்வு எனக் கொண்டால் 1429 AD அல்லது 1489 AD இல் வெட்டப்பட்டிருக்க வேண்டும். இதில் கிழமைக் குறிப்பு இருந்திருந்தால் சரியான ஆண்டை நம்மால் குறிக்க வியலும். அப்படி இதில் கிழமை ஏதும் குறிக்க இல்லை.

    கான நாட்டின் தெற்காட்டூர் ஊரூக்கு அமைந்த ஊர் சபையோர் இவ்வூரின் கண் உள்ள புறச்சேரியில் வாழும் பறையர் குல மக்களுக்கு பிடிபாடு (behavioural guidelines) ஏற்படுத்துகின்றனர். இவ்வூரில் முன் போல வயல்களை செதுக்க இயலாது என்று பறையர் கூறிவிட்டபடியால் ஊரார் ஒன்றுகூடி இனி பறையருக்கு வயல் செதுக்கும் பணியைத்தரக் கூடாது என்று முடிவெடுத்து கட்டளையிட்டபடி சந்திராதித்தர் வரை நடைமுறைப்பட வேண்டும். அதே வேளையில் முன்பிருந்த உரிமை போலவே (சுதந்திரம்) இப்போதும் இவர்கள் ஊருள்ளே குடிஇருப்பதற்கு கல்லிலும் செப்பேட்டிலும் எழுத்திலும் வடிக்கும் உரிமையை தந்தனர். அதை அரசர் வாணாதராயர் உள்ளிட்ட ஆட்சிப் பொறுப்பாளர்கள் ஆதரித்து கெயெழுத்திட்டனர்.

    ஊருக்குள் முன்னைப் போல் உரிமையோடு குடிபுக உரிமை இருப்பதை இக் கல்வெட்டு காட்டுவதால், குறிப்பாக தீண்டாமை நடைமுறைகளான காலில் செருப்பு அணியாமை, ஊர் குளத்தில் தண்ணீர் மொள்ளாமை, ஊருள் சில தெருக்களில் நடந்து போகாமை, வேட்டியை இந்த முறையில் தான் கட்ட வேண்டும், எச்சில் துப்பக் கூடாது என்பன போன்ற செயல்கள் இல்லாமையை காட்டுவதால் 15 ஆம் நூற்றாண்டும் அதற்கு முன்பும் தமிழகத்தில் சாதி தீண்டாமை ஒடுக்குமுறை இருந்ததே இல்லை என்பதற்கான பொன்னான சான்றாகும் இக்கல்வெட்டு.   

    எண் 956. 3 வரி கல்வெட்டு. திருமெய்யம் வட்டம், தேக்காட்டூர், அகத்தீசுவரர் கோவிலில் சுவாமி கோவிலின் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    1. ஆனந்த ஆண்டு ஆவணி மாதம் 5 நாள் தெற்காட்டூராக அ[மை]ந்த ஊரவரோம் [மேற்படி] யூர் பள்ளற்கும் பறைய[ற்கும்] _ _ _ _ _ _ பள்ளற்கு தவிலும் முரோசும் சேமக்கல  
    2. மும் நன்மை தின்மை பெருவினைக்குங் கொட்டி போக கடவராகவும். பறையர் அஞ்சு கா _ _ _ _ _ கடவ _ _ _ _ _ _ சந்திராதித்தவரை செல்ல[வு]ம் வீராண
    3. இந்தப்படி நடக்க கடவராகவு இற்படிக்கு வாணாதராயர் எழுத்து. வேளார் எ.ழுத்து. _ _ _ _ _ _ _ ழுத்து.

    விளக்கம்: 15 ஆம் நூற்றாண்டில் 1434 AD மற்றும் 1494 AD ஆகிய ஆண்டுகளில் ஆனந்த ஆண்டு நிகழ்கின்றது. அதில் கிழமை குறிப்பிடாத ஆவணி மாதம் 5 ஆம் நாள் தெற்காட்டூர் ஊர் சபையோர் அவ்வூரின் கண் வாழும் பள்ளர் பறையர்க்கு இடையே எழுந்த உரிமைப் போரில் மங்கல அமங்கல பெருவினைகளில் பள்ளர் தவிலும், முரசும் கொட்டிக் கொள்ளவும் சேமக்கலசம் கொண்டு செல்லவும் உரிமை வழங்கப்படுகின்றது. பறையருக்கான உரிமை பற்றிய கல்வெட்டு பகுதி சிதைந்துள்ளதால் அறியமுடியாமல் போய்விட்டது. இதை வாணாதராயர் உள்ளிட்ட சில அரச அதிகாரிகள் கட்டளையாக கையெழுத்திட்டு ஒப்புகின்றனர்.

    எண் 198. 32 வரி கல்வெட்டு. _ _ _ _ வட்டம், கீரனூர், உத்தமநாதசுவாமி கோவிலின் சுவாமி கோவில் வடபுறச்சுவர் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராச இராச தேவற்க்கு யாண்டு 28 ஆவதின் எதிராமாண்டு இரட்டைபாடி கொண்ட சோழவளநாட்டு உற[த்]தூர் கூற்றத்து

    ஊராய் இசைந்த ஊரோம் என நீண்டு நீர், நிலம், வயல், குளம் குறித்துக் குறப்பிடும் இக்கல்வெட்டில் பல அரையர்கள் இணைந்து இறைவருக்கு திருநாமத்துக்காணி, நாச்சியாருக்கு அமுதுபடி ஆகியவற்றுக்கு கல்வெட்டுப் பிரமாணம் கொடுத்தனர். பூசையும் திருப்பணியும் செய்ய கல்வெட்டிக் குடுத்தோம் என்று சில அரையர்கள் கூறுமிடத்து 26 ஆம் வரி தொடர்ச்சி

    1. வான் எழுத்து அஞ்ஞூற்று பரையன் எழுத்து தொண்டமனாடாழ்வன் எழுத்து. இராசாக்கியரையன் எழுத்து.எதிரிலிச் சோழன் நாடாழ்வான் எழுத்து. கொல்லத்தரையன் எழுத்து.
    2. மாணிக்கராயன் எழுத்து. கிடாரங் கொண்ட பரையன் எழுத்து. காங்கை நாடாழ்வான் எழுத்து. செம்பிய நாடாழ்வான் எழுத்து. உப்பிலிக் குடியில் ஈழங் கொண்டு நாடாழ்

    என்று 32 வரியில் அரையரும் பிறரும் கையொப்பமிட இக் கல்வெட்டு முற்றுகிறது.

    விளக்கம்: மூன்றாம் இராசராசனின் 28 ஆம் ஆட்சி ஆண்டிற்கு அடுத்து வந்த ஆண்டில் (1245 AD) வெட்டப்பட்ட கல்வெட்டு இது. இறைவர்க்கு திருநாமத்துக் காணியும் இறைவிக்கு அமுதுபடியும் குறித்து விவரம் தந்த பின் இதற்கு கையொப்பமிட்ட அதிகாரப் பொறுப்பில் இருந்த பறையர் அரசர், நாட்டுக் கிழான் பதவிகளில் இருந்தது பற்றி குறிக்கின்றது இக் கல்வெட்டு. அடுத்து வரும் கல்வெட்டுகள் அதற்கு மேலும் வலுச்சேர்க்கின்றன.

    எண் 421. 15 வரி கல்வெட்டு. திருமய்யம் வட்டம், விராச்சிலை பில்வவனேசுவரர் கோவிலில் சுவாமி கோவிலின் வடபுரச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீமத்கி[தி](தி)க்குமேல் கோச்சடை(ச்சடை)பன்மரான  த்ரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு நாலாவது கும்ப நாயற்று பூர்வபக்ஷத்துத் துதிகையும் வியாழக்கிழமையும் பெற்ற மிருஹஸீர்ஷத்து நாள் காநாடான விருதராஜ பயங்கர வளநாட்டுக் கானாட்டுப் படைப்பற்று விரையாச்சிலை ஊராக இசைந்த ஊரோம்

    அடுத்து நிலம், வயல், குளம், திசை போன்ற செய்தி உடைய வரிகள். 14 ஆம் வரி தொடர்ச்சி

    1. _ _ _ டயான் மக்கணாயன் தற்குறியும், கண்டன் பொருளன் தற்குறியும், அரசர் மக்களின் பரிமன விளா _ _ _ இராசாங்க நாடாழ்வார் தற்குறியும் இப்படிக்கு பிள்ளான் இராசநான இராசிங்க தேவன் எழுத்து. இப்படி[க்]கு பிறந்தான் சேவகநான கானாட்டுக் பரையன் எழுத்து. இப்படி[க்]கு வளத்தானான அரசர் மீகாமப் பரையன் எழுத்து. இப்படிக்கு நம்பி அஞ்நூற்றுவப் பேரரயன் தற்குறியும் அவையன் உலகுடையா
    2. ற்குறியும் வெள்ளூர் பெரயன் பொப்பாண்டான் தற்குறியும் அழகன் _ _ [ம்]பாண்டன் தற்குறியும் இந்த அனையர் தற்குறியும் இட்டு _ _ _ _ பிரமாணம் எழுதினேன் இவ்வூர் கணக்கு _ _ _ _ _ பெருமாள் எழுத்து. இப்படிக்கு இக்கோயில் சிவப்பிராமணரில் துக்கைபட்டர் சொக்கபட்டன் தற்குறியும் இட்டு சிவபாதகயார் வில்லியார் எழுத்து  _ _ _ _ _ மறமாணிக்கலயினார் எழுத்து. 

    விளக்கம்: சுந்தரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டு (1280 AD மே 2). கானாட்டு விரையாச்சிலை ஊராக அமைந்த ஊரின் ஊர்ச்சபையோர் கோவிலுக்கு நிலம் வழங்குதல் பற்றி கூறும் செய்திகளில் ஈறாக நாட்டுக் கிழான், அரையன் பதிவிகளில் இருந்த பறையர்கள் சான்று ஒப்பம் இடுகின்றனர். இதன் மூலம் பறையர் உயர் அதிகாரப் பொறுப்பில் இருந்ததை அறிய முடிகின்றது. இதாவது, பிற்பட்ட காலத்தில் ஒடுக்கப்பட்டோர் முற்பட்ட ஒரு காலத்தில் ஒடுக்குதலுக்கு ஆட்படாமல் வாழ்ந்தது உண்மை என்பதற்கு இக் கல்வெட்டு ஒரு சான்று. அப்படியானால் மதமும், பிராமணரும், மனுஸ்மிருதியும் இவர்களை ஒடுக்கி இருக்கவில்லை என்று தானே பொருள். உண்மையில், பின்னாளில் இவர்களை ஒடுக்கியது அரசியல் அதிகார அமைப்பு என்று தானே கொள்ள முடிகின்றது.

    எண் 393. 18 வரி கல்வெட்டு. திருமய்யம் வட்டம், விராச்சிலை பில்வவனேசுவரர் கோவிலில் சுவாமி கோவிலின் மேற்புரச் சுவரில் உள்ள கல்வெட்டு. எண் 393.

    1. ஸ்ரீ மேற்க்கித்தி[க்]குமேல் கோமாறுபன்மரான  திரிபுவனச் சக்கரவத்திகள் எம்மண்ட[லமுங் கொண்ட]ருளிய ஸ்ரீ குலசேகர தேவற்கு யாண்டு 15 வதின் எதிராமாண்டு கற்கடகநாயற்று பூர்வபக்ஷத்து வா_ஸியும் புதன்கிழமையும்
    2. பெற்ற மூலத்துநாள் கேரளசிங்கவளநாட்டு மட்டியூரான நிருபசேகர_ _ _ மங்கலத்து வரகுணீஸ்வரமுடைய நாயனார் திருமடைவிளாகத்துப் பெரிய திருக்கூட்டதுத்  தவணை முதலியார் மாணிக்க வாசகர் ஆளை

    இதன் பின் நிலம், வரி செய்திகள் இடம் பெறுகின்றன. இனி 15 ஆம் வரி தொடர்ச்சி

    1. படி சந்திராதித்தவற் செல்வதாக இன்னாயனார் திருக்கோயில் திருக் க[ற்]றளியிலே கல்வெட்டிக் குடுத்தோம் கோயில் வாசகப்பிச்ச முதலியாற்கு அரசு மக்களும் மறமுதலிகளும் இ[வ்வ]னைவோமும் இப்படிக்கு நாட்டான் கொண்டன் எழுத்
    2. து மங்கலநாடாழ்வான் எழுத்து. உய்யவந்த தேவன் எழுத்து. அஞ்நூற்றுவ தேவன் எழுத்து. கொண்டன் நாட்டான் எழுத்து வீரசிங்கப் பெரையன் எழுத்து. அஞ்நூற்று பரையன் எழுத்து. இராசசிங்க நாடாழ்வானும் பெருந்துறை
    3. ப் பெரையனும், பொற்கள் நெருங்கிப் பெரையனும், அரசமீகாமப் பெரையனும், நிலமை அழகியநாடாழ்வானும், கொண்டானும் இவர்கள் கைந்தர[யு]ம் இட்டு இவர்க[ள்] சொல்ல இப்ரமாணம் எழுதினேன் இவ்வூற் கணக்கு வயஸகமுடை
    4. யான், உய்யவந்தான் உலகுடையான் எழுத்து. இது பன்மாஹேஸ்வர் ரக்ஷை.

    விளக்கம்: குலசேகர பாண்டியனின் 15 ஆம் ஆட்சி ஆண்டிற்கு அடுத்து வந்த ஆண்டில் (1283 AD சூலை 7) இல் வெட்டப்பட்ட கல்வெட்டு இது.  வரகுண ஈசுவரருக்கு நிலக்கொடை வழங்குவது பற்றிய விவரத்தை கூறி, அதற்கு அடுத்து உயர் அதிகாரப் பதவிகளான அரையன், நாட்டுக் கிழான், படைத் தலைவர் பதவிகளில் இருந்த பறையர்கள் சான்று ஒப்பமிடுகின்றனர். கல்வெட்டு எண் 421 இல் இடம் பெறும் சில பெயர்கள் இதிலும் இடம் பெறுகின்றன. எனவே தீண்டாமை இவர்களை தமிழ்வேந்தர் ஆட்சியில் அண்டவேயில்லை, மாறாக இவர்களால் அயல்மொழியர்க்கு பயன் எதும் இல்லை என்று ஆகிவிட்ட 16/17 ஆம் நாற்றாண்டில் தான் அயல் மொழியர் ஆட்சியில் தான் இந்த ஒடுக்குமுறை ஏற்பட்டிருக்கலாம். ஆட்சி அதிகார மாற்றம் இவர்களுக்கு இந்த தாழ்ந்த நிலைமையை ஏற்படுத்தி இருக்க பின் ஏன் தேவையின்றி மனுஸ்மிருதி, பிராமணர், சைவ வைணவ மதங்களை இந்த இழுக்கிற்காக சாட வேண்டும்? இது அடுத்த தலைமுறையை, வருங்கால சமூகத்தை தவறாக வழிநடத்துவது அன்றோ?

    எண் 960. 44 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், குடுமியாமலை, சிகாநாத சுவாமி கோவிலில் இரண்டாம் கோபுர வாசலில் வலப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    நள வருஷம் ஆவணி மாதம் 12 தி கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழவள / நாட்டு குன்றுசூழ் நாட்டுப் பரம்பை [ஊர்] செருந்தா நம்புசெய்வாரும் பாண்டியனார் மகன் வன்னி / யர் உள்ளிட்டாரும் திருச்சிராப்ப[ள்]ளி  உடையார் அங்கிஷத்துக்கு கடவ உதை[யப் பெருமாளும்] / இன்மூவர் உள்ளிட்டாரோம் இன்னாட்டுப்ப[கை]த் தலைப்பாடி காவலான கீழைக்குறச்சி ஊராளிகளில் / வழித்துணையான மாவலிவாணாதராயன் உள்ளிட்டாரும் சோழகோன் பரையர் மகன் சூறாண்டாற்கும் பகை தீ / ந்து காவமுறி குடு[த்]த பரிசாவது மு[ன்]னாளிலே செய்யான் மாவலிவாணாதராயன் பள்ளர் பசகள் ஓடிப்போ நெருஞ்சிக் / குடியீலே இருக்கையில் இவர்க[ளூர்] மாடும் அ[ழி]த்து இந்த பள்ளரையும் பிடித்துக் கொண்டு வருகச்சிதே இந்த / நெருஞ்சிக்குடி ஊரார் பரம்பை ஊருலே கூப்பிட்டு வரு[கை]யில் கூப்பி[ட்]டு படைக்கச் சென்று சிற்றண்ணல்வாசலில் / செங்குளத்திலே சென்று முட்டி செய்யான் மாவலிவாணாத[ராயன்] உடனே படையாய் நம்புசெய்வார் மகனார் பண்டியனா / ர் படுகைஇல் இப்பழி கேட்பதாக சிற்றம்பலவரான நம்புசெய்[வா]ர் [இரண்]டு கரைநா[ட்டை] யுங்குவித்து ஒருமை மு[றி]யும் இட் / டு இவனை எழச் செய்வதாக இவன் வாசலிலே படையாய் பொரு[கச்சே] சிற்றம்பலவரான நம்புசெய்வாரும் இவர் மகனா _ _ _ _ ருச்சி / ராப்பள்ளி உடையாரும் பட்டு இ

    Share
  • (Peer Reviewed) பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உருவானதா? – இயற்பியல் ஆய்வு

    நடராஜன் ஸ்ரீதர், சந்திரமோகன் இரத்தினம்

    முது அறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி , தேவகோட்டை

     natarajangravity@gmail.com, rathinam.chandramohan@gmail.com

    ===========================================

    இயற்பியல் ஆய்வுகள், அவ்வப்போது பல வியத்தகு முடிவுகளை தருகின்றன. இயற்பியல் ஆய்வுகளில் கணித அளவீடுகளின் தாக்கம் பல புதுமையான விளக்கங்களை, தீர்க்கமுடியாத சிக்கல்களுக்கு வழங்குகின்றன. இயற்பியலின் மிகப் பெரிய கேள்வி இப்பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதாகும். பிரபஞ்ச இயக்கவியலுக்குப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு வியத்தகு மாதிரியான, ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து பிரபஞ்சம் எனும் கோட்பாட்டினைப் பற்றி இவ்வாய்வுக் குறிப்பில் காணலாம்.

    பெருவெடிப்புத் தத்துவம்

    பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்று கேள்வியின் பதிலாகப் பல்வேறு அமைப்புகள் முன்வைக்கப்பட்டாலும், அவற்றில் முன்னதாக நிற்பது பெருவெடிப்புத் தத்துவமே ஆகும். இயற்பியல் ரீதியிலும், கணிதவியல் ரீதியிலும் பெருவெடிப்புத் தத்துவம், சிறந்த முடிவுகளையே தருகிறது. மேலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட தரவுகள் கூட பெருவெடிப்புத் தத்துவத்தையே முன்மொழிகின்றன. உதாரணமாக பிரபஞ்சத்தில் பின்புல வெப்பநிலைத் தரவு [1] மற்றும் சூப்பர் நோவா தரவு [2]ஆகியவை பிரபஞ்சம் ஒரு சிறு புள்ளியில் இருந்து உருவாகி இருக்கும் என்பதை வலியுறுத்துகின்றன.

    இத்தத்துவத்தின் படி சுமார் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சமானது ஒரு சிறு புள்ளியில் அழுத்தப்பட்டு, அதிக வெப்பநிலையில், மீயழுத்தத்தில், மீயடர்த்தியில் உறங்கிய நிலையில் இருந்தது. பின்னர் சிறு சிறு துணுக்க அதிர்வுகளிற்குப் பிறகு, இந்தப் பிரபஞ்சமானது விரிவடைய ஆரம்பித்தது. இவ்விரிவடைதல் நிகழ்வு, மிக வேகமாக வீங்குதல் [3] நிகழ்வாக நடந்தது. நிகழும்போது வெப்பநிலையும் அழுத்தமும் குறையக் குறைய அடிப்படைத் துகள்கள், அணுக்கள்,  அணுக்கூட்டங்கள், வாயுக்கள், நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் என உருவாக்கின. இவ்வாறு உருவான இந்தப் பெரும் நாடகம் இன்றைய பிரபஞ்சம் என அழைக்கப்படுகிறது. இன்றைய பிரபஞ்சமானது குளிர்ந்த வெப்ப நிலையிலும் மேலும் விரிவடைந்து செல்லக்கூடிய நிலை கொண்டதாகவும் மிகப் பெரிய பரப்பளவில் தட்டையானதாகவும் அனைத்துத் திசைகளிலும் ஒரே மாதிரியான அமைப்புகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

    இத்தத்துவத்தின்படி, விரிவடையும் பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட அடர்த்தி வரும்வரை விரிவடையும். அவ்வாறான மாறுநிலை அடர்த்தி நிலைக்குப் பிரபஞ்சம் வரும்போது இப்பிரபஞ்சமானது, தனது விரிவடைதலை நிறுத்திக்கொள்கிறது. பிறகு  இப்பிரபஞ்சமானது சுருங்க ஆரம்பிக்கிறது. அவ்வாறான சுருங்குதல் மீண்டும் முந்தைய மூல நிலைக்குப் பிரபஞ்சத்தை எடுத்து வருகிறது. இதை பெருஞ்சுருக்கம் என அறிவியலாளர்கள்அழைக்கின்றனர்.

    இந்தப் பெரும் சுருக்கத்தின் இறுதியாகப் பிரபஞ்சம், மூலப் புள்ளியில் வந்து சுருங்குகிறது. மூல நிலையில் இருந்த மீயடர்த்தி , மீயழுத்த, மீவெப்ப நிலைக்குப் பிரபஞ்சம் செல்கிறது. இது பெருவெடிப்புக் கோட்பாடு என அழைக்கப்படுகிறது.

    சுழற்சிப் பிரபஞ்சம்

    பிரபஞ்சமானது ஒரு சிறு புள்ளியில் ஆரம்பித்துப் பெரிதாக விரிந்து மீண்டும் ஒரு புள்ளியில் வந்து முடிவடைகிறது. இந்த நிகழ்வில் பிரபஞ்சத்தில் உருவாகும் தோற்றப் பொருட்கள், இறுதியாக மூல நிலையில் வந்து முடிவடைகிறது. இது ஒரு பிரபஞ்சத்தின் வாழும் காலம் என அழைக்கப்படுகிறது. இத்துடன் பிரபஞ்சமே முடிவடைந்துவிட்டதா என்றால், இல்லை. அதற்கு மாற்றாகச் சில கணித முடிவுகளும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அம்முடிவுகளின்படி மூல நிலையிலிருந்து உருவாகி வளர்ந்து மீண்டும் மூல நிலையை அடையும் பிரபஞ்சம் ஒரு சுழற்சி நிகழ்வு எனப்படுகிறது. இந்நிகழ்ச்சியானது இத்தோடு நிற்பதில்லை. மீண்டும் துவக்க முறைகளுக்கு உட்பட்டு மற்றுமொரு பிரபஞ்ச இயக்கத்தை உருவாக்குகின்றன என்று கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இக்கோட்பாடு, சுழற்சிப் பிரபஞ்சக் கோட்பாடு [4] என அழைக்கப்படுகிறது.

    சுழற்சிப் பிரபஞ்சக் கோட்பாட்டின் படி, பிரபஞ்சமானது தொடர்ச்சியாக உருவாவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும். அதாவது ஒரு சுழற்சியின் முடிவானது மற்றொரு சுழற்சியின் ஆரம்பமாக இருக்கும். மேலும் இக்கோட்பாடு எல்லா இயற்பியல் விதிகளுக்கும் உட்பட்டு பிரபஞ்சத்தின் இயக்கத்தை தெரிவிக்கிறது. நிரூபிக்கப்பட்ட கணிதவியல் முறைகளும் இக்கோட்பாடு எல்லா விதத்திலும் சரியாக இருப்பதையே உறுதிப்படுத்துகிறது.

    துணுக்கப் பிரபஞ்சம்

    இவ்விரண்டு கோட்பாடுகளிலும் பிரபஞ்சத்தின் மூல நிலை அல்லது பிரபஞ்சத்தின் முடிவு நிலையைப் பற்றி ஆய்வு செய்வதற்குத் துணுக்க இயற்பியலானது தேவைப்படுகிறது. ஏனெனில் மிக நுண்ணிய அளவில் பிரபஞ்சம் சுருங்கி விட்ட பிறகு, தொன்மை இயற்பியல் சமன்பாடுகளால் அங்கு எழும் சிக்கல்களைத் தீர்க்க இயலாது. எனவே அங்கு துணுக்க இயற்பியல் இயக்கங்களின் ஆதிக்கம் பேரளவில் இருக்கும். பிரபஞ்சமானது துணுக்க நிலையில் மிகவும் வேறுபாடாக பரிணமிக்கிறது. துணுக்க முறையில் ஆய்வு செய்யும்போது இந்தப் பிரபஞ்சமே ஒரு வலையமைப்பாக ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு ஒன்றிணைக்கப்பட்டு இருப்பதாக அறிய முடியும்[17]

    இப்பிரபஞ்சத்தின் மூல நிலை மற்றும் இறுதி நிலையை நுணுகி ஆராயும் போது, வியத்தகு முடிவுகள் கிடைக்கின்றன. பிரபஞ்சம் முற்றிலுமாகச் சுருங்கி விடும் போது அங்கு வெற்றிடம் மட்டுமே ஏற்படுகிறது. இந்த வெற்றிடம், பகுதி அளவே அல்லது சிறிது நேரத்திற்கே நீடித்துப் பின் இன்னொரு புதுப் பிரபஞ்சத்தின் துவக்கத்தை நோக்கி இப்பிரபஞ்சம் மாற ஆரம்பிக்கிறது. ஒரு பிரபஞ்சத்தில் முடிவில் மற்றும் மற்றொரு பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஒரு வெற்றிடமானது காணப்படுகிறது. இந்த வெற்றிடமானது அதீத அதிர்வுகளைக் கொண்டதாகவும் இருக்கிறது[5].

    வெற்றிடத்தில் இருந்து பிரபஞ்சம்

    அப்படியாயின் அடுத்த ஒரு கேள்வி வரலாம். எவ்வாறு ஒரு பிரபஞ்சத்தின் முடிவு, இன்னொரு பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் தீர்மானிக்கிறது என்று. ஒருவாறாக முடிந்த பிரபஞ்சம் இறுதியாக வெற்றிடத்தைச் சந்திக்கிறது. இந்த வெற்றிடம் அடிப்படையில் வரைகணித அளவில் தட்டையான அமைப்புடையதாக இருக்கிறது. முழுப் பிரபஞ்சமும் துணுக்க அளவிலாக நிலைபெற்று அலைவுற்று நிற்கிறது.  மேலும் புது பிரபஞ்சத்தின் மூல நிலையும் இதே போன்ற துணுக்க வெற்றிட அளவிலேயே தொடங்குகிறது. முடிந்த பிரபஞ்சம் மற்றும் தொடக்க பிரபஞ்சம் எவ்வாறு இணைக்கப்படுகிறது என்பதற்கான நிகழ்தகவைத் துணுக்க உட்குடைதல் தீர்மானிக்கிறது[6]. துணுக்கஉட்குடைதல் என்பது தொன்மை இயற்பியல் அளவில் சாத்தியமில்லாத வழிமுறைகளை உறுதி செய்கிறது.

    இந்நிகழ்வு, தொன்மை இயற்பியல் முறையில் நிச்சயமாக தாவிக் குதித்துச் சென்றிருக்கக்கூடிய பாதைகளை ஊடுருவி உட்புகுந்து கடப்பதன் நிகழ்தகவை வெளிப்படுத்துகிறது. அதாவது தொன்மை முறையில் சாத்தியமே இல்லாத இயக்கத்தின் பாதைகளையும் துணுக்க முறையில் கடக்கும் நிகழ்வானது இயற்கையின் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது[7].

    இவ்வாறான துணுக்கக் குடைதல் பிரபஞ்சமானது, வெற்றிடத்திலிருந்து உருவாவதையும் தெரிவிக்கிறது. ஒரு பிரபஞ்சத்தின் முடிவிலிருந்து வெற்றிடம் வாயிலாக மற்றொரு பிரபஞ்சத்தின் துவக்கம் அமைகிறது. எவ்வாறு ஒரு கதிரியக்கத் தனிமத்திலிருந்து கதிரியக்கம் வெளிப்படுகிறதோ, அதற்கு எந்த ஒரு காரணமும் தேவைப்படுவதில்லையோ அதே போலவே பிரபஞ்சமானது வெற்றிடத்திலிருந்து உருவாவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்[8].

    இவ்வாறு வெற்றிடத்தில் இருந்து உருவாகும் பிரபஞ்சம் மிக அதிகமான விரிவடைந்தது பிற்கால அளவில் பெரியதாக ஒரு மாறுகிறது. இந்தச் சுழற்சி முறை தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பிரபஞ்சமானது வெற்றிடத்தில் இருந்து உருவாகும் என நிறுவப்படுகிறது.

    இவ்வாறான அறிவியல் ஆய்வு முடிவை தமிழ் இலக்கியங்களில் ஒப்பு நோக்கவும் முடியும். பிரபஞ்சத்தின் மூல நிலை வெற்றிடம் என்று தமிழ்க்  குறிப்புகளும் பல்வேறு இடங்களில் காணக் கிடைக்கிறது. திருமூலர்[9], மாணிக்கவாசகர்[10], அருணகிரிநாதர் [11], பாரதியார்[12], வேதாத்திரி மகரிஷி[13], வள்ளலார்[14], அப்பர் [15], மெய்கண்டதேவர் [16] என பலரும் பிரபஞ்சத்தின் மூல நிலை வெற்றிடமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் ஆழ ஆய்வு செய்யும்போது பல்வேறு குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அவற்றைக் கணித ரீதியிலோ அல்லது இயற்பியல் விதிகளிலோ ஆய்வு செய்யும்போது வியத்தகு விளக்கங்கள் கிடைக்கின்றன. பிரபஞ்சம் தோன்றிய விதங்களைப் பற்றிய குறிப்புகள், தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கலாம் என்று கூட வரையறுக்கப்பட முடிகிறது. மேலும் பிரபஞ்சமானது வெற்றிடத்தில் இருந்து உருவாக்கியிருக்க முடியும் எனவும் நம்மால் உறுதி செய்துகொள்ள முடிகிறது.

    மேற்கோள்கள்

    1. Schlegel, D. J., Finkbeiner, D. P., & Davis, M. (1998). Maps of dust infrared emission for use in estimation of reddening and cosmic microwave background radiation foregrounds. The Astrophysical Journal, 500(2), 525.
    2. Riess, A. G., Strolger, L. G., Casertano, S., Ferguson, H. C., Mobasher, B., Gold, B., … &Tonry, J. (2007). New Hubble space telescope discoveries of type Ia supernovae at z≥ 1: narrowing constraints on the early behavior of dark energy. The Astrophysical Journal, 659(1), 98.
    3. Guth, A. H. (1981). Inflationary universe: A possible solution to the horizon and flatness problems. Physical Review D, 23(2), 347.
    4. Lehners, J. L. (2008). Ekpyrotic and cyclic cosmology. Physics Reports, 465(6), 223-263.
    5. Tryon, E. P. (1973). Is the universe a vacuum fluctuation?. Nature, 246(5433), 396.
    6. Vilenkin, A. (1984). Quantum creation of universes. Physical Review D, 30(2), 509.
    7. Caldeira, A. O., & Leggett, A. J. (1981). Influence of dissipation on quantum tunneling in macroscopic systems. Physical Review Letters, 46(4), 211.
    8. Vilenkin, A. (1982). Creation of universes from nothing. Physics Letters B, 117(1-2), 25-28.
    9. திருமூலர், திருமந்திரம் ,387,385
    10. மாணிக்க வாசகர். திருவாசகம், சிவபுராணம், திருவண்டப்பகுதி
    11. அருணகிரிநாதர், கந்தரலங்காரம்.
    12. பாரதியார், பரசிவ வெள்ளம்
    13. வேதாத்திரி மகரிஷி, ஞானக்களஞ்சியம் -2, வேதாத்திரிபதிப்பகம்
    14. வள்ளலார், திருவருட்பா
    15. ஜகந்நாதன். கி.வா. அப்பர் தேவார அமுது, பூரவிபதிப்பகம்
    16. மெய்கண்டதேவர் ,சிவஞானபோதம்
    17. நடராஜன்.ஸ்ரீ, சந்திரமோகன். இர.(2017) தீதும்நன்றும்பிறர்தரவாரா – இயற்பியலாளரின் பார்வையில். மின்தமிழ்மேடை (11). 180-186. தமிழ் மரபு அறக்கட்டளை

    கலைச்சொற்கள் மேற்கோள் நூல்

    ஜெ. கோட்டாளம், அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவற்கான ஒரு கையேடு. https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5SzVpQ24tY0NGVXc

    இக்கட்டுரையில் கீழ்க்காணும் கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    துணுக்கம் – Quantum

    துணுக்க உட்குடைதல் – quantum tunneling

    =================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உருவானதா என்ற வினாத் தலைப்பில் இரட்டை ஆய்வாளர்கள், நடராஜன் ஶ்ரீதர் & சந்திரமோகன் இரத்தினம் ஆகியோர், இதுவரை பிரபஞ்சத் தோற்றம் எப்படி உருவானது என்று  விஞ்ஞானிகள் சிலர் யூகித்த ஒரு கோட்பாட்டை உதாரணங்களுடன் விளக்குகின்றனர். இக்கோட்பாடு, இதுவரை [2018]  பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டவையுள் ஒன்றே. வல்லமை வலையிதழில் வெளியிடத் தகுதியுள்ள ஆய்வுக் கட்டுரை. தமது கோட்பாட்டுக்குச் சில தமிழ் இலக்கிய நூல்களையும் சான்றாகக் காட்டியுள்ளனர். அவற்றின் வரிகளையும் ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கலாம்.  இதனுடன் தொடர்புடைய இந்தக் கட்டுரையை ஆய்வாளர்கள் கவனித்திருக்கலாம்: http://www.vallamai.com/?p=83914 

    =================================================================

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 6.2 (வருகைப்பருவம்)

    – மீனாட்சி பாலகணேஷ்


    குழந்தை முருகனுக்குப் பலவிதமான அலங்காரங்களைச் செய்துபார்க்கும் தாய், ஒரு கட்டத்தில் அவனே முதலும் முடிவுமான பரம்பொருள் எனத்தெளிந்து, மொழிகுழற அவன்புகழைப்பாடி அழைப்பதாக, திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழிலிருந்து கவிதை நயம் பெருகும் ஒரு பாடல்: ‘வா‘ எனும் சொல் பலவிதமான பொருட்களில் பலமுறை பயின்று வரும் நயமிகுந்த பாடல்.

    ‘அன்ன வாகனனாகிய பிரமனின் நாலுமுகங்களும் தொங்கிப்போகும்படி (பிரணவ மந்திரத்தின் பொருளை உணர்ந்து உரைக்காததனால்) அவனை அறைந்தவனே! தேவர்கள் துன்பம் நீங்கிட வாவியான சரவணப்பொய்கையில் மகவானவனே! கார்த்திகைப்பெண்டிர் அறுவர் முலைப்பாலைப் பருகியவனே!

    ‘மின்னல் போலும் பெண்ணான உமை விரும்பும் சடாமுடியன் சிவபிரானின் குருவானவனே! அரக்கர் குலத்தைத் தடிந்தவனே! வலிய வேடர்களின் மகளான வள்ளிமீது மையல் கொண்டலைந்தவனே! உன் பெயரைச் சொல்பவர்கள் மீது குறையாது அருளை வழங்குபவனே!

    ‘முதல்வனே! அனைத்துக்கும் முடிவானவனே! சித்திக்கும் முத்திக்கும் முதலானவனே! முருகா வா வா என மொழிகுழற உருகி வேண்டுவோர் முன்பு வாராதிருப்பது உன் பெருமைக்குத் தகுமோ?’

    ‘பொன்கொழிக்கும் ஆறான பொன்னி எனும் காவிரிநீர் பாயும் வளநாட்டை உடையவனே! வருக! தேவர்கள் அதிபதி இந்திரனும், திருமாலும் அயனும் விருப்பொடு சலாமிட்டு வணங்கும் சுவாமிமலை முருகனே வருகவே!’ என நெகிழ்ந்துருகி உளம்கசியும் பாடலிது.

    ‘அன்னவா கனனாலு முகநாலு முகமா
    அறைந்தவா அமரர் துன்பம்
    அகலவா வியினில் மகவானவா உடுமகளிர்
    அறுவர்முலை அமுதுண்டவா
    மின்னவா வியசடையர் குருவான வாஅசுரர்
    வேரைத் தடிந்தவா வல்
    வேடர்மகள் மால்கொண்ட லைந்தவா சொல்லுவார்
    மீதிலருள் குறையாதவா
    முன்னவா யாவைக்கு முடிவான வாசித்தி
    முத்திக்கு முதலானவா
    முருகவா வாவென்று மொழிகுழற ஓதுவோர்
    முன்னர்வா ராமைதகவா
    சொன்னவா றானநீர்ப் பொன்னிபாய் வளநாட
    சுப்ரமண் யாவருகவே…’

    தெய்வங்களை வழிபடும்போது பாதாதிகேச வருணனை எனப் பெண்தெய்வங்களையும், கேசாதிபாத வருணனை என ஆண்தெய்வங்களையும் போற்றி வழிபடுவது மரபு.

    இதற்கேற்ப ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்யலகரியில் அன்னையின் திருப்பாதங்களை வருணிக்கும் ஸ்லோகம் மிக இலக்கிய நயம் வாய்ந்தது. சௌந்தர்யலஹரியினை வீரை கவிராஜ பண்டிதர் என்பவர் சுவைகுன்றாது தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இதன் 87-வது பாடல் திருமண காலத்தில் ஐயன் அன்னையின் திருப்பதத்தை அம்மி மீது ஏற்றிவைத்த செயலைக் கூறுகிறது.
    “அன்னையே! உன் பாதங்கள் பஞ்சின்மேல் வைத்தாலும் வாடுகின்ற மென்மையான தன்மையுடையவை; சிவந்த தாமரை மலர் போன்றவை; இவ்வாறு அவற்றைப் போற்றாது சிலர் இதனை ஆமையின் மேல் ஓட்டிற்கு உவமை கூறி வீணாக வியப்பார்கள். கருநிற மிடற்றரானவரும் உனது கையை மணநாளில் பற்றுபவருமான (வரர்= வரிப்பவர், வரைந்து கொள்பவர்) பெருமான் மென்மையான உனது பாதத்தினை அம்மிக்கல் மீதும் ஏற்றி வைப்பாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்றோருக்கு வஞ்சகக் கொடியநெஞ்சை உடையவர் அவர் எனவே எண்ணத் தோன்றும். ஆயினும் சிறிது எண்ணிப் பார்த்தால் அவர் அவ்வாறானவர் அல்ல, உன்பால் மெத்த அன்பு கொண்ட ஆண்டகையான் என்பது தெற்றென விளங்கும்,” என்கிறார் புலவனார்.

    ‘பஞ்சு அழுத்தினும் வாடு நின்பத
    பங்கயத்து இணை ஒப்பெனா
    விஞ்சை கற்றவர் வன்புஅக் கம்
    டத்தை வீணில் வியப்பராம்
    அஞ்சனப் புயல் அங்கை நின்வரர்
    அம்மி மீதிலும் வைப்பராம்
    வஞ்சகக் கொடு நெஞ்சர் அத்தனை
    வல்லர் அல்லர் நினைக்கினே.’

    இதே கருத்தினில் அம்மையின் திருப்பாதங்களைப் பற்றிய ஒரு பாடலை திருவுத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் நூலில் காணலாம். ஆனால் அது வருகைப்பருவத்தில் அமையாது ஊசற் பருவத்தில் காணப்படுகிறது. இருப்பினும் பாடலின் நயத்திற்காகவும், பாடுபொருளின் சிறப்பிற்காகவும் இங்கு அது கூறப்பட்டது.

    பார்வதி பரமேசுவரர்களின் தெய்வத்திருமணம், வைதிக முறையில் நிகழ்கின்றது. இத்திருமணத்தைக் காண மறைகள் அனைத்தையும் உணர்ந்தவனான பிரமதேவன், முகுந்தன் எனப்படும் திருமால், குலிசம் எனும் வச்சிராயுதத்தைக் கையில் ஏந்திய தேவர்கள் தலைவனான இந்திரன், எனும் இவர்களைத்தவிர இன்னும் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் எண்ணற்ற புலவோரும் சித்தர்களும் திரண்டெழுந்துள்ளனர். அவர்கள், “இத்தெய்வத் திருமணத்தைக் காண நமக்கு இதுவென்ன பாக்கியம்?” என உள்ளம் நெகிழ்ந்து உருகுகின்றனராம்.

    சித்திரைத் திங்களில் பல திருக்கோவில்களிலும் ஐயன், அம்மையின் திருமண விழா நடைபெறும். அதுதான் இங்கு கூறப்படுகிறது.
    பக்தியினால் உருகும் அன்பர்கள் உள்ளம் பச்சாதாபத்தினாலும் உருகுகிறதாம். எதனால் என்று பார்ப்போமா?

    நமது வைதிகமுறைத் திருமணத்தில் ‘அம்மி மிதித்தல்,’ என ஒரு சடங்கு உண்டு. அதானது, மணப்பெண்ணின் இடது பாதத்தின் பெருவிரலை மணமகன் தனது வலக்கரத்தால் பிடித்தெடுத்து, ஒரு அம்மிக்கல்லின் மீதேற்றி வைப்பதாகும். இதன் பொருள் என்னவென்றால், “இந்தக் கல்லினைப்போல் கடினசித்தம் கொண்டவளாகி, மன உறுதியோடும், வலிமையோடும் வாழ்வில் என்னுடன் இணைந்து இன்பதுன்பங்களில் பங்குகொள்வாயாக,” எனக் கூறுவதாகும். இதற்கான மந்திரங்களை மணமகன் அப்போது உச்சரிப்பது வழக்கம்.

    சிவனுக்கும் பார்வதிக்கும் நடைபெற்ற திருமணத்திலும் இச்சடங்கினை மணமகனாகிய சிவபிரான் செய்தார். அன்பர்களால் புகழ்ந்து துதிக்கப்பட்ட (துதி மணக்கின்ற) அம்பிகையின் பாதங்களிலொன்றை எந்தையாகிய பிரான் எடுத்து அம்மிமேல் வைத்ததால், கடினமான அம்மிக்கல்லில் பட்டுச் சிவந்துபோன அப்பாதத்தைக்கண்டு அடியார்கள் மனம்வருந்தி உருகுகிறார்களாம். பாதத்தைக் கண்டு உருகியது ஒருபுறம்; இவ்வாறு ஐயன் அம்மையின் மலர்ப்பாதத்தைக் கல்லின்மீது வைக்கும் தொழிலைக் கண்டும் உள்ளம் உருகுகிறார்களாம்.

    ஏனெனில் ஒரு பெரியமனிதரை எந்த ஒரு சிறு செயலையும் செய்ய அவருடைய அடியார்களும், அன்பர்களும் விடமாட்டார்கள். அவர் செய்துவிட்டால் பொறுக்கவும் மாட்டார்கள்! சிவபிரான் என்ன சாமானிய மனிதரா?அந்தம் ஆதி அற்ற உயர்வானவனல்லவா? ஆனால் இந்தச் செயலை, சடங்கினை, அவனன்றி அவனுடைய திருமணத்தில் யாராலும் செய்ய இயலாதே! அதுமட்டுமல்ல; இப்போது அன்னையே அத்தன் செய்த அத்தொழிலுக்காக உருகுகிறாளாம்.

    தனது பாதத்தினை அவருடைய திருக்கரத்தாற் தூக்கி அம்மிமேல் இட்ட செய்கை மென்மையான அவளுடைய இதயத்தை உருக்கிவிட்டது. ஏன்? அவளை மணம் புரிந்து கொள்பவன் அகில சராசரங்களுக்கும் நாயகன். அகிலநாயகியான அவளுமே செயற்கரிய தவங்களைச் செய்தே அவனை அடைந்திருக்கிறாள். மற்றும் அவன் காலால் இட்ட பணியைத் தலையால் செய்ய தேவரும் மற்றோரும் காத்திருக்கிறார்கள். அவனோ தனது தகுதிக்கேற்றவண்ணம் பெருமிதம் கொண்டு நில்லாது, ‘இது நம் திருமணம்; இது ஒரு புனிதமான முதன்மையான சடங்கு,’ என்று உள்ளத்தில் கொண்டு, அம்மையின் பூம்பாதத்தைத் தன் திருக்கரத்தால் பற்றி, அதனை எடுத்து மென்மையாக அம்மிமேல் வைக்கிறான்.

    அந்த மெல்லிய பூப்போன்ற பாதத்தை அம்மிமேல் தூக்கிவைக்க அவனுடைய மனமும் ஒப்பியிருக்காதுதான். ஆயினும் ஐயன் செய்வதனை உலகமே பார்த்தபடி உள்ளது. உலகத்தோர் நன்னெறிகளைக் கடைப்பிடிக்க ஐயன் தானே முன்னுதாரணமாகி நிற்கிறான். ‘ரோல் மாடல்’ எனக் கூறுவதுண்டல்லவா? அதுதான் இதுவும்.

    திருமண வைபவத்தைக்கண்டு களித்துருகிய அடியார்கள் ‘அன்னையின் அடி நோகுமே’ என மனமுருக, ‘உலகிற்கே முதல்வன் தன்னடியைப் பற்றி தூக்கினாரே’ என அன்னை உருக, படிக்கும் நம்முள்ளத்தையும் உருக்கும் அழகிய பாடலிது.

    இது திருவுத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் எனும் நூலில் காணப்படும் ஊசற்பருவப் பாடல். இயற்றியவர் பெயர் அறியக் கிடைக்கவில்லை. தமிழ்நயம், சொல்நயம், சந்தநயம் எனப் பல அழகுகளும் கொண்டு பொலியும் நூலாகும் இது. பாடலடிகளைக் காண்போமே!

    ‘பாக்கியம் நமக்கிதென்னப்
    பார்த்துருக வும்சித்தி ரைத்திங்க ளென்னப்
    பதித்திடு மணச்சடங்கில்
    துதிமணக் கின்றநின் பதம் அம்மி மேலெந்தை
    தூக்கிவைத் துச்சிவந்த
    தொழில்கண்டு பின்னுருக நீயுமவர் கையினால்
    தூக்கிய தொழிற்குருகவும்
    …………………………….’

    அடியார்கள் மனதில் முளத்தெழும் எண்ணற்ற கற்பனைகள், வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பெற்றும், பட்டை தீட்டிய வைரங்களாகவும் ஒளிர்கின்ற அழகை பிள்ளைத்தமிழ் நூல்களில் பலவிடங்களில் கண்டு களிக்கலாம்; இறும்பூதெய்தலாம்.
    தளர்நடை பயிலத்துவங்கியுள்ளாள் குழந்தை. இதனையே, ‘கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி,’ என்கிறார் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். தத்தித் தத்தி மயில்போல நடந்து வரும் குழந்தையைக்கண்டு பரவசத்தில் உள்ளம் பறிகொடுத்து, தாயின் நிலையிலும், அடியாரின் நிலையிலும் இருவிதமாகவும் நின்று, அவளைப் பலவிதமாக வருணிக்கிறார் அவர். தெய்வக்குழந்தையல்லவா இந்த மங்களாம்பிகை? ‘இவளைக் கண்ணால் கண்டாலே பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரமெல்லாம் பறந்தோடும்; பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல ஆரவாரிக்கும்,’ என்பது பொருள்!

    சிவபிரானின் பெருமைகள் அனைத்தும் அன்னை மங்களவல்லிக்கே உரித்தாக்கப்படுகின்றன. சிவனும் சக்தியும் இணைபிரியாதவர்களல்லவா? அயனும் திருமாலும் அன்னமாகவும், வராகமாகவும் உருவெடுத்து ஐயனின் அடிமுடி காணப்புகுந்த வரலாறு இது. தீயோர்களை நாசம்செய்யும் சுதரிசனம் எனும் சக்கரப்படையை ஏந்தியவன் திருமால். அவன் ஒரு விலங்காக (பன்றி, வராகம்) வடிவெடுத்து தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானின் இரண்டு திருப்பாதங்களைத் தேடிக்காணமுயன்றான். பூமியின் அடிவரை சென்று தேடியும் காணஇயலாமையால் மனமும் உடலும் துவண்டு மீன்கள் நிறைந்த கடலில் (இங்கு பாற்கடலில் எனப் பொருள்கொள்ள வேண்டும்) விழுந்து இளைப்பாறுகிறான்.

    அடுத்து பிரமன் அன்னப்பறவை வடிவெடுத்து சிவனின் முடிதேடியதனை அழகுற விளக்குகிறார். உயர உயரப்பறந்து தேடியும், முடியைக் காண இயலவில்லை. இனி எங்குபோய்த் தேடுவது எனச் சிந்திப்பவனுக்கு ஒரு எண்ணம் உதிக்கின்றதாம். அவன் தேடிய சிவபிரானின் முடியானது ஊடல்கொண்ட அன்னையின் சின்னஞ்சிறு பாதங்களின்மேல் வைக்கப்பெற்றுள்ளது. ஆகவே, பிரமன் தான் தேடும் சிவபிரானின் முடியைக்காண ‘அன்னையின் பாதங்களை நாடினாலே போதுமே; ஆகவே, அதனைச் செய்வோம்,’ என எண்ணுகிறான். இனிய அரிய கற்பனை.

    குறுக்குவழியில் இலக்கை அடைவது பற்றிய சிந்தனை புராணகாலம் தொட்டு இருந்துள்ளது போலும்!! யாருக்கும் எட்டாத பரம்பொருளின் திவ்விய வடிவை, முடியை, எளிதிலடைந்து விட முடியுமா? முடியாதுதான். அண்ணல் சிவபிரானின் முடி அயன் கண்களுக்கெட்டாத கற்பகக்கனியாகி விட்டது.

    இனி என் செய்வான்? அன்னம் ஆகி (ஓதிமம்) வருந்திக் களைத்து நின்ற அவன் கருத்து குழந்தையாகி நடைபயிலும் அன்னையின் தேன்நிறைந்த மலர்போன்ற திருவடிகளில் பதிகின்றது. அது பயிலும் மென்னடையில் அவன் சிந்தையும் கருத்தும் பதிகின்றது; அயன் தேடிவந்ததென்னவோ, சிவபிரான் திருமுடிக்காட்சியைத்தான். ஆனால், அது எட்டாக்கனியாகிவிட்ட நிலையில், அன்னையின் நடையழகு அவன் கருத்தைக் கவர்ந்துகொண்டுவிட்டது. மற்ற அன்னங்கள் இவள் நடையைக் கற்க ஆவல்மிகுந்து அவளைப் பின் தொடர்கின்றன. தாமரைமலரில் வீற்றிருக்கும் இந்த (பிரம்மா) அன்னமும் அவைகளுடன் அன்னையைப் பின் தொடர்கின்றதாம்.
    இவ்வாறு அன்னங்கள் பின்தொடருமாறு தளர்நடை பயில்பவள், வானளாவ உயர்ந்த இமயமலையில் பிறந்த வனிதையாகிய மங்களவல்லி. இவள் தங்குமிடமோ வேதியர்கள் ஓதும் மறைவாழ்த்தொலி விண்ணளாவ முழங்கும் திருக்குடந்தை நகராகும். அம்மடந்தையை வருக வருகவே எனத் தாயர் அழைப்பதாகப் புலவர் கற்பனை விருந்து படைக்கிறார்.

    ‘ஊன்தோய் சுதரி சனப்படையா னொருமா
    வுருக்கொண்டு உம்பர்பிரான்
    உபய பதமும் காண்பான் புக்கு ஒன்றும்
    காணாது உழிதந்து
    மீன்தோய் பரவைப் புடைவிழுந்தான் விரும்பி
    யிவள்சிற் றடிதொடரின்மேற்
    விழைந்து முயன்ற முடிகாணன் மேவு
    மேவா விடினும் இவள்
    தேன்தோய் மலர்த்தாள் தொடர்பு ஒன்றே திருந்தும்
    …………………………………’

    சிந்தை களிகூர அன்னையின் கால்வண்ணம் கண்டோம். குழந்தையைக் காண்பதே மகிழ்ச்சிதரும். அதுவும், அணிமணி புனைந்து அலங்காரம் செய்விக்கப்பட்ட குழந்தையைக்காண ஆசை இன்னும் பெருகுமல்லவோ? தாயுள்ளத்தின் தாபமும் அன்பும் நிறைந்து ததும்பும் அழகிய கருத்துக்கொண்ட பாடல்கள் இன்னும் பலவுண்டு.

    சிவஞான முனிவர் இயற்றியுள்ள பிள்ளையார் மீதான கலைசை பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று, இருகைகளை ஊன்றித் தவழ்ந்து வரும் சிறு குழந்தை விநாயகனை, அவன் உருவிற்கேற்ப, ஒரு சிறு களிறு செய்யும் செயல்களால் வருணித்து மகிழ்கிறது.
    ‘இளமை பொருந்திய ஏறு எனத் தவழ்ந்து வரும்போழ்தில், தூண்போன்ற தும்பிக்கையால், பெருமூச்செறிந்தபடி நிலத்தைத் தோண்டியும், ஊழித்தீ போல பெருக்கெடுக்கும் செவியின் அசைப்பினால் உண்டான காற்று ஆகாயத்தைப் பிளந்தபடியும் அசைந்தாடி வரும் பீடும் பொருந்தி வரும் சிறு களிறு போன்று வருக,’ என விநாயகனை மழகளிறாகவே கண்டு மகிழ்கிறார்.

    இருகை யூன்றித் தவழ்ந்துமழ ஏற்றின் வருந்தோ றாங்காங்கே
    எறுழ்வன் புழைக்கை நெட்டுயிர்ப்பா னிருமா நிலத்தைக் குழிப்பதுவும்
    பெருகும் கடைக்கால் செயுஞ்செவிவான் பிளப்ப தேய்ப்பப் பல்காலும்
    பெயர்ந்து மடங்கி அசைந்தாடும் பீடும் தத்தம் பொறிதமக்கு
    மருவும் புலைன அவற்றிடமா மண்ணை அகழ்ந்தும் வெளிப்பரப்பை
    வளைத்தும் கவவிக் கொடுத்துதவும் வண்மை காட்ட அசைந்தசைந்து
    முருகுவிரியும் தொடைப்புயத்து முதல்வா வருக வருகவே
    மூரிக் கலைசைச் செங்கழுநீர் முனியே வருக வருகவே.

    இலக்கணப்படி வருகைப்பருவத்தின் பாடுபொருள், குழந்தையின் சிறுபாதங்களும் கால்களுமே ஆகும்.  திருமால் குழந்தையாகக் கால்களால் செய்த செயல்கள் பலவாம்: காளிங்கன் எனும் நச்சுப்பாம்பின் தலைமீது ஏறி நடம் புரிந்து அவன் ஆணவத்தை அடக்கியது, பின் வாமன அவதாரத்தில் மூவுலகும் ஈரடிகளால் முறைதிறம்பா வகையில் அளந்தது, மாயச்சகடத்தைக் காலால் உதைத்து, இறுத்து அரக்கனை அழித்தது எனப் பெரியாழ்வார் அனைத்தையுமே அழகுறப் பாடியுள்ளார்.

    உந்திபறத்தல் எனும் விளையாட்டை சிறுமியர் ஆடிப்பாடுவதாக அமைந்ததொரு அழகிய பெரியாழ்வார் பாசுரம்; இதிலும் கிருஷ்ணனின் திருவடித் தாமரைகள் போற்றப்படுகின்றன. ஸ்ரீராமனாகவும், கிருஷ்ணனாகவும் அவதரித்து, அவன் திருவடிகளால் செய்த கால்வண்ணங்களைப் பாடிப்பாடி மகிழ்கின்றனர் சிறுமியர். இதுவும் அரசனின் வீரச் செயல்களைப் புகழ்ந்துரைப்பது போன்றதே.
    ‘திருமுடி தாங்கி மூன்று உலகங்களையும் ஆண்டு எமக்கு அருள் செய்வாயாக,’ எனக் கானகம் சென்ற காகுத்தனைத் தொடர்ந்து சென்று வேண்டி நின்றான் அவன் தம்பி பரதன். ராமபிரானோவெனில் அவனுக்குத் தனது திருவடி நிலைகளை (பாதுகைகளை)க் கொடுத்து அருளினான்; அவனைப் பாடிப்பரவி உந்தீபற,’ என உந்திபறக்கின்றனர் சிறுமியர்.

    ‘முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு,உன்
    அடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த
    படியில் குணத்துப் பரதநம் பிக்கு,அன்று
    அடிநிலை ஈந்தானைப் பாடிப்பற
    அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.
    (பெரியாழ்வார் பாசுரம்- உந்தி பறத்தல்)

    ஸ்ரீ மகரக் குழைக்காதர் பிள்ளைத்தமிழின் புலவரும் அக்கால்களின் பெருமை வாய்ந்த செயல்களைப் பாடி மகிழ்கிறார்.
    ‘ஆலிலையில், திருவரங்கத்தில், பாற்கடலில் கண்வளரும் பச்சைநிறத்தவனே! நாகரத்தினத்தைத் தலையில் கொண்ட பாம்பான காளிங்கனின் கண்கள் பிதுங்குமாறு உனது சிவந்த தாமரைப்பாதங்களால் மிதித்துத் தள்ளி, அவன் வாலைப்பிடித்துச் சுழற்றி, இடையர்களைக் காக்க அவன் தலைமீது நடம்புரிந்த தலைவனே!’ என அவன் பெருமைகளைப் பேசுகிறார்.

    ‘பண்டா லிலையில்அரங் கத்துப்
    பாதாழியில் கண்துயில் கூரும்
    பச்சைப் புயலே பணா மகுடப் படப்
    பாந்தளின் கண்பிதுங்க நறும்
    தண்தாமரைச் செஞ்சரண் பெயர்த்துத்
    தள்ளிக் கடைவால் பிடித்து நெறி
    தழைக்கும் படிக்கு நடம்புரிந்த
    தலைவா ………………..’

    எனப் போற்றுகிறார்.

    இறையனுபவத்தையும் மழலையின்பத்தையும் ஒருசேரக் காட்டும் சிறப்பினைக் கொண்டமைந்தவை அருமையான இப்பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் எனலாம்.

    (இந்தத்தொடர் முனைவர், பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்கள் தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதி வந்ததன் தொடர்ச்சியாகும். பேராசிரியர் ஐயா முதல் ஐந்து பகுதிகளுடன் நிறுத்திக்கொண்டு இதனைத் தொடர்ந்து எழுதுமாறு என்னைப் பணித்துள்ளார். அன்னார் துவங்கிவைத்த அற்புதமான இத்தொடரை, பேராசிரியர் ஐயாவின் ஆசிகளுடன் எழுதுகிறேன்).

    (பிள்ளைத்தமிழ் பெருகி வளரும்)

    Share
  • ஏர்க்களக் காட்சி

    -முனைவர் ந.இரகுதேவன்

    புள்ளினங்கள் துயிலெழுந்து பாடித் துதிக்கும் புலர்காலைப் பொழுதில் – எம்
    நல்லுழவன் தோளேறிப் பயணித்த கலப்பை
    நுகத்தடி ஏற்று
    எருதுகளின் வல்லிசைவில் முன்னிழுத்து நடக்க
    மண்பிளந்துடைந்து விதைகளை ஏற்றது
    நிலம்
    மாடுகளின் குழம்புக் கால்பட்டு
    சீராக கரைபிரித்து நடக்கிறது ஏர்
    ஏர்க்கொழு பட்டுப் பிளந்த மண்ணில்
    சிற்றுயிரைக் கொத்திப் பொருக்க
    அண்டை உறவுகளென்று ஏர்க்காலின் பின்னோடுகிறது
    பறவைகள் அச்சமின்றி
    உழவோட
    உழக்கிழத்தி இரவடுப்பில் கிண்டிமூட்ட களியுருண்டைச்
    சிறுபுளிப்பும் – அம்மிக்கல்
    ‘நேக்கு நேக்கென்று’ சத்தமிட
    அரைத்தெடுத்த புளித்துவையலும் உழக்கிழவனுக்குணவாக
    உழத்தியின் தலையேறிய கூடைச்சோற்றுக் –
    காலைப் பழங்களியும்
    வழிநெடுக மணம் கசிந்த பயணித்தது
    நல்லுழத்தி வரவறிந்து பெருநடையைக் குறைத்தன
    மாடுகள் – ஆதிப்பசியழிக்கும்
    இவன் பசிக்கு சிறு ஓய்வு
    ஓய்வில்
    அரைபடாத தீவனத்தை
    சிறு உறக்கத் தவத்தோடு அரைத்தன
    நுரை ததும்ப
    சிறுநீற்றைக் கழித்தபடி நுகத்தடி விடைகள்
    இச்சிறுபொழுதில்
    முதுகமர்ந்த காக்கைக் குருவியெல்லாம்
    கடந்த பருவத்து நட்பைப் புதுப்பித்தன
    ‘அன்புடை நெஞ்சம் தாம் கலந்து’
    உலகூட்டும்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 6.1 (வருகைப்பருவம்)

    -மீனாட்சி பாலகணேஷ் 

    ‘ஓடிவருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ
    ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடீ,’ என்றார் பாரதியார்.

    சின்னஞ்சிறு குழந்தை நடக்கக் கற்றுக்கொள்வதனைக் காண்பது, அதனை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி, உவகைகொள்வது என்பது ஒரு தெய்வீக அனுபவம். சிவந்த தாமரைமலர் போலும் சின்னஞ்சிறு பாதங்கள் தத்தித்தத்தி நடந்துவரும் அழகை, தான் கீழே விழுந்து விடுவோமே எனும் அச்சமேயின்றி ஓடிவரும் இனிய செயலைக் காண ஆயிரம் கண்களும் போதாதுதான்!

    வரிசைக்கிரமமாக அமைந்த பிள்ளைத்தமிழின் ஆறாவது பருவம் வருகை அல்லது வாரானைப் பருவம் எனப்படும். குழந்தையின் பன்னிரண்டாவது மாதத்தில் இது நிகழ்வதாகக் கொள்ளப்படும்.

    நம் மனதுக்கினியவர்களின் நடையும், அதன் அழகும், அதுவே குழந்தையானால் அதன் கால் சதங்கை, சிலம்பு, இவற்றின் ஒலியும் மானிடர் அனைவருக்குமே மிகுந்த உற்சாகத்தைத் தருவதாகும்.

    தத்தித்தத்தித் தளர்நடை பயிலும் குழந்தையை அருகில் நின்று பார்க்கும் தாயின் உள்ளம் பாசத்தில் விம்முகின்றது. அந்தக்கால்களால் அவன் என்ன செயலெல்லாம் செய்யப்போகிறான், எங்கெல்லாம் செல்லப்போகிறான், அதை எவ்வாறெல்லாம் அழகுபடுத்திப் பார்க்கலாம் என்றெல்லாம் அவள் எண்ணங்கள் சிறகடிக்கின்றன. தன் குட்டனை, குழந்தையை, அழகுநடை பயிலும் மயிலாக, அசைந்து நடந்து வரும் அழகு யானைக்குட்டியாக, துள்ளிவரும் மானாக, எனவெல்லாம் பார்க்கிறாள்.

    ‘சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே அதை
    செவிமடுத்து எந்தன் மனம் களித்திடுமே,’

    எனும் ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யரின் பாடல் வரிகள், கண்ணனின் காற்சதங்கை ஒலியை மனதில் நிரப்பி மகிழ்விக்கின்றன.
    ‘நன்னுபாலிம்ப நடசி வச்சிதிவோ?’ என, (என்னைக் காக்கவேண்டி நீ நடந்து வந்தனையோ?) தியாகராஜரும் தமது கீர்த்தனை ஒன்றில் ஸ்ரீராமனைக் கேட்டு உருகுகிறார். ‘உயர்வான பரம்பொருளாகிய நீ ஏழை அடியேனுக்காக, தேரிலன்றி, குதிரை மீதிலன்றி, வெறும் கால்களால் நடந்து வந்தனையோ?’ எனும்போது உள்ளம் ஆனந்தத்திலும், பச்சாதாபத்திலும் விம்முகிறது அவருக்கு.

    இதனைப் பெரியாழ்வாரும் தமது பாசுரங்களில் பாடி மகிழ்ந்துள்ளதனைக் காணலாம். கண்ணன் நடப்பது சிறிய யானை மெல்ல அசைந்து நடப்பது போலிருக்குமாம். யானை தனது மதங்களைப் பெருக விட்டுக்கொண்டும், தனது காலில் இடப்பட்டுள்ள சங்கிலி ‘சலார்பிலார்’ என ஒலி எழுப்பும்படியும் தன் உடலின் இருபுறங்களிலும் தொங்கும் மணிகள் ஒலிக்குமாறும் நடப்பதுபோலக் கண்ணன் நடக்க வேண்டும் எனும் தாயின் ஏக்கத்தைப் பாடுகிறார்.

    ‘தொடர்சங் கிலிகை சலார்பிலார் என்னத்
    தூங்கு பொன்மணி ஒலிப்ப
    படுமும் மதப்புனல் சோர வாரணம்
    பைய நின்று ஊர்வது போல்…’

    திருவடிச் சதங்கைகள் ஓசை எழுப்ப, அரைச்சதங்கையின் மணிகள் ஒலிக்க, என் சார்ங்கபாணி தளர்நடை நடவானோ! என ஆவலாக வேண்டுகிறார்.

    அன்னையின் ஆவலை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை அழகுறச் சித்தரிக்கும் இப்பாசுரம், அவளுடைய பெருகியோடும் எல்லையற்ற அன்பின் உயர்வை எடுத்துக் காட்டுகிறது.

    ஆயினும் இவ்வாறெல்லாம் தான் போற்றிப் பெருமிதம் கொள்ளும் சிறுகுழந்தை, தான் வழிபடும் திருமாலே சிறு கிருஷ்ணனாக வந்த வடிவம் என அவருக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துள்ளது. ஆகவே அடுத்த பாடலில் அந்தக் குழந்தையான இறைவடிவே வந்து தன் வீடெங்கும், வீதியெங்கும் தன் பிஞ்சுப்பாதங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டுவது மற்றொரு சிலிர்க்க வைக்கும் அழகு.

    ‘ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம்
    உள்ளடி பொறித்து அமைந்த
    இருகாலும் கொண்டு, அங்கங்கு எழுதினாற்போல்
    இலச்சினை படநடந்து….’

    எனப் பெரியாழ்வாரின் தாயுள்ளம் விழைகின்றது.

    பிள்ளைத்தமிழ் நூல்களின் பாடல்கள் அனைத்துமே தாய், செவிலித்தாய் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் கூற்றாக அமைவது அதன் தனிச்சிறப்பாகும். அடியார்கள் தம்மை இத்தகைய நிலைகளில் இருத்திக்கொண்டு தாம் விரும்பும் இறைவடிவங்களைப் பாடிப்பரவுகின்றனர்.

    கிருஷ்ணனுடைய பாதங்களின் சிறப்பில் ஆழ்ந்துவிட்ட லீலாசுகர் எனுமடியார்ஆனந்த பரவசமாகி அவற்றை வர்ணிப்பது படிக்கின்ற நமக்கும் களிப்பைத் தருகின்றது:

    ‘வேறு புகல் இல்லாதவர்களுக்கு இத்திருவடிகள் ஒன்றே புகலிடமாக (அசரண-சரணாப்யாம்) உள்ளன. குழலூதியபடி கிருஷ்ணன் இத்திருவடிகளால் நடந்து வருகிறான் (ஆயாதி),’ என நெகிழ்கிறார் அடியார்.

    கிருஷ்ணனின் கல்யாண குணங்களில் ஆழ்ந்துவிட்ட நாராயண பட்டத்ரி, நாராயணீயத்தின் ஈற்றயல் ஸ்லோகத்தில் கிருஷ்ணனின் திருவடிகளை வழுத்தி, ஆத்மார்ப்பண லயிப்பில் உருகிக் கரைந்து தன்னையே இழந்து விடுகிறார்.

    ‘உனது சரீரத்திலேயே யோகிகளால் மிகவும் விரும்பப்படுவன உனது திருவடிகளே! ஆதரவற்றவர்களுக்கு அவையே புகலிடம். அடியார்களுக்கு அவை வேண்டியன அனைத்தையும் தரும் கற்பகத்தரு. கிருஷ்ணா! குருவாயூரில் உறைபவனே! (பவனபுரபதே) கருணைக்கடலே! இந்த உனது திருவடிகள் எனது இதயத்தில் எப்போதும் பதிந்து நின்று, எனது துயரங்களை விடுவித்து என்னை மிக உயர்வான பேரின்பச் செல்வத்தில் ஆழ்த்தட்டும்.’

    ‘வேண்டிக்கொள்ள வேண்டிய’வற்றின் உச்சநிலை வேண்டுதல் இது!  பி. லீலா எனவொரு பாடகி இருந்தார். அவருடைய இனிய குரலில், உள்ளத்தை உருக்கும் இந்த ஸ்லோகத்தினைக் கேட்கும்போது பட்டத்ரியின் தேடுதலை, ஆனந்த லயிப்பை ஒருவாறு புரிந்துகொள்ள இயலும். ‘ஒருவாறு’ என்றதன் காரணம், நாமே அந்த நிலைக்குச் சென்றால் தான் துல்லியமாக உணர இயலும். நாமெங்கே, பட்டத்ரி எங்கே?

    ‘யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ,’ என்பன ஸ்லோக வரிகள்.

    பிள்ளைத்தமிழுக்குத் திரும்பலாம்!!

    முருகப்பெருமானை, கதிர்காமத்திலுறையும் கந்தவேளை, தளர்நடை பயிலும் குழந்தையாக்கி, தாமே அன்னையாகி, தம்மிடம் நடந்து வருமாறு கைகளை நீட்டி வேண்டுகிறார் இதனை இயற்றிய சிவங். கருணாலயப் பாண்டியப் புலவர்.  தெய்வத்தன்மையினால் முருகனுக்குப் பட்டால் செய்த சிறு ஆடை இயல்பாகவே அமைந்ததாம்; அது நூலால் நூற்கப்படாமலும், ஊசியால் தைக்கப்படாமலும் விளங்குவது. அது நோன்பிருந்து நின்னையே நினைந்துருகும் அடியாரின் உள்ளம்போல அசைந்தாடுகிறது என்றார் புலவர்.

    ‘நூலாத நூலாடை ஊசியொடு குயிலாத
    நொய்யசின் மெய்யுறையது
    நோன்பிற்ற ழும்பிநின் னுள்ளுமுள மெனவாட…’

    மிகவும் உயர்வானவையே தன் தெய்வக்குழந்தைக்குப் பொருந்தும் என எண்ணும் தாயுள்ளத்தின் அன்பு இதில் புலப்படுகின்றது. இன்னும் கூறுவார்: அழகான பூச்செண்டு முடிக்கப்பட்ட கொண்டை ஆடுகிறது; (அவனருளால்) பூமியில் அறம் வழுவாமல் நடமாடுகிறது; உணவே அருந்தாது தவம் செய்வோர் உள்ளம் இறை எண்ணத்தில் அசைந்தாடுகின்றது; தளர்நடை நடக்கும் குழந்தையின் உடலும் தள்ளாடுகிறதாம். எட்டுக்கரங்களையும், நான்கு முகங்களையும் கொண்ட பிரமனின் பெருமிதம் சிதைந்தோட, தேவர்கள் சிறைநீங்கி ஓட, அசுரர்கள் படை தோற்று ஓடிடுமாறு செய்து, நாய்போன்ற எமது அவலம் தெறித்தோடுமாறும், உன்மீது அன்புகொண்டு நாங்கள் மெழுகுபோல உள்ளம் கசிந்து என்புருகிக் கண்களில் மழைநீர் போலக் கண்ணீர் பெருகி ஓடுமாறும் நீ எம்முன்பு நடைபயின்று வரவேண்டும்,’ எனும் வேண்டுதல்.

    தளர்நடை நடக்கும் குழந்தை ஆடி அசைந்து வருவதும் ஒரு தனியழகு.
    அதைக்கண்டு உள்ளம் மகிழ்வது அன்னையின் இயல்பு;
    கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பாடுவது அடியார் மரபு!
    ‘மாலாகி யாம் அழல் மெழுகின் நெக்கென்புருகி
    மழையோடவே வருகவே.’

    பிள்ளைத்தமிழ்ப் பாடல்களின் சிறப்பு தெய்வத்தின் பெருமையை குழந்தைப்பருவங்களுக்கான செயல்களில் வைத்துப் போற்றுவது. குழந்தையின் தெய்வத்தன்மையை உணராத அடியார் இல்லை! ஆகவே தாம் போற்றும் குழந்தையை, தெய்வத்தின் சிறப்புகளைக்கூறித் தம்முன் வருமாறு வேண்டுதல் இன்னொரு அழகு. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் தடாதகைப்பிராட்டியாகிய சிறு பெண்மகவை, குமரகுருபரனார் ‘வருக’வென அழைக்கும் பாடல்கள் நமது உள்ளத்தைக் கசிய வைப்பனவாகும்.
    ‘தேன்சிந்தும் மலர்கள் பொருந்திய நறுமணம் மிகுந்த கூந்தலை உடைய பெண்யானையே! வருக! முழுமையான ஞானவெள்ளமே வருக! பிறைசூடிய பெருமானின் மூன்று கண்களுக்கும் விருந்தாக அமைந்தவளே வருக!  ‘பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மூவருக்கும் மூலமாக விளங்கும் சத்தியே வருக! விதை இல்லாமலே விளைகின்ற பரமானந்தம் எனும் தெய்வீக விளைவே வருக!
    ‘பழமையான மறைகள் எனும் வேதங்களின் இளந்தளிரே வருக! அருள் பழுத்துக் கனிந்துள்ள கொம்பாயுள்ளவளே வருக! நின் அழகான கடைக்கண்ணின் கோடியில் பெருகிய அருள்வெள்ளத்தில் மூழ்கியுள்ள அடியார்களின் பிறவியாகிய நோய்க்கு மருந்தாக விளங்குபவளே வருக! இனிய பசிய குதலைமொழி பேசும் கிளியே வருக! மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே!’

    ‘பெருந்தேன் இறைக்கும் நறைகூந்தற்
    பிடியே வருக முழுஞானப்
    பெருக்கே வருக பிறைமௌலிப்
    பெம்மன் முக்கண் சுடர்க்கிடுநல்
    விருந்தே வருக…..’ என்பது பாடல்.

    தான் வழிபடும் அன்னை தெய்வத்தை ஒரு சிறு பெண்மகவாக்கி, தாமே தாயாகி, அவளுடைய அருமைபெருமைகளையெல்லாம் பாடி, அவளை ‘வருக’வென அழைத்துச் சீராட்டும் அடியாரின் உள்ளம் எப்படிப்பட்ட பேரானந்தத்தில் மூழ்கித் திளைக்கின்றதென்பதனைப் பிறிதொரு பாடலிலும் காணலாம்.

    ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
    தொடையின் பயனே நறைபழுத்த
    துறைத்தீந் தமிழின் ஒழுகுநறும்
    சுவையே அகந்தைக் கிழங்கைஅகழ்ந்து
    எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
    ஏற்றும் விளக்கே வளர்சிமய
    இமயப் பொருப்பில் விளையாடும்
    இளமென் பிடியே எறிதரங்கம்
    உடுக்கும் புவனம் கடந்துநின்ற
    ஒருவன் திருவுள்ளத்தில் அழ
    கொழுக எழுதிப் பார்த்திருக்கும்
    உயிரோ வியமே மதுகரம்வாய்
    மடுக்கும் குழற்கா டேந்தும் இள
    வஞ்சிக் கொடியே வருகவே..’

    என்றார். இதில் ‘அகந்தையெனும் ஆழ்ந்த வேரோடிய ஆணவக் கிழங்கை, அகழ்ந்து எடுத்து எறிந்து விடும் ஞானிகளின் உள்ளத்தில் ஏற்றிவைக்கப்படும் ஒளிவிளக்காக இருப்பவளே,’ என அன்னையின் பெருமையை உணர்த்தியது எண்ணவொண்ணாததொரு நயம் ஆகும். மேலும், ‘சிவபெருமான் தன் உள்ளத்தில் அழகாக எழுதிவைத்துக் கண்டு களிகொள்ளும் உயிரோவியமானவளே மீனாட்சியன்னை,’ என்றும் உரைக்கிறார். இப்பாடலுக்கு இன்னொரு சிறப்புமுண்டு. இளம் வயதிலேயே பெரும் ஞானியான குமரகுருபரனார் அன்னை மீனாட்சி மீது இப்பிள்ளைத்தமிழ் நூலை யாத்தனர். அன்னை மீனாட்சியம்மை மன்னர் திருமலை நாயக்கர் கனவில் தோன்றித் தன் திருமுன்பு அதனை அரங்கேற்றப் பணித்தாள். அவ்வாறே அரங்கேற்றமும் அம்மையின் திருக்கோயிலில் அவள் சந்நிதியில் நிகழ்ந்தது. மேற்காணும் இப்பாடலுக்குக் குமரகுருபரனார் பொருளுரைக்கும் போது அன்னையே அருச்சகரின் ஐந்தாறு வயது மகள் போலத் தோன்றி அரசர் திருமலை நாயக்கரின் மடியிலமர்ந்து இப்பாடலைக் கேட்டு ரசித்தாள். பாடல் முடிந்ததும் அரசர் கழுத்திலிருந்த முத்துவடத்தைக் கழற்றிக் குமரகுருபரர் கழுத்திலிட்டு மறைந்தனள். ஆகவே, அன்னையின் ஆமோதிப்பைப் பெற்றதொரு பிள்ளைத்தமிழ் நூலும் இதுவே எனப் பெருமை கொள்ளலாம். அன்னை தெய்வம் மீதான பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றிய அடியார் பலரும் சக்தி உபாசகர்களாகவும் இருந்துள்ளனர். தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையத்தினர் சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் எனவொரு நூலை வெளியிட்டுள்ளனர். இயற்றியவர் பெயர் தெரியவில்லை. இவர் ஐயத்திற்கிடமின்றி சக்தி உபாசகர். ஏனெனில், வாரானைப் பருவத்துப் பாடலொன்றில் ஸ்ரீசக்கரத்தில் உறையும் அம்பிகையான அவளைப் போற்றுகிறார். அம்பிகையின் ஸ்ரீ சக்கர வருணனை விரிவாகத் தரப் பட்டுள்ளது.

    ‘முச்சதுர மூவட்டம் ஈரெட்டும் ஓரெட்டு
    முளரியிதழ் சூழ்ந்ததற்குள்
    முகனையிற் பதினான்கு பத்துடன் பத்தெட்டு
    முக்கோண நடுவிந்துவாய்…..’ என ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பை விவரித்து,

    ‘சச்சபுட முதலான தாளங்கள் தாள்பொரச்
    சதகோடி திருமாதரார்
    சந்ததம் நடம்புரியும் நாற்பத்து முக்கோண
    சக்கர நாயகி வருகவே’ எனப்போற்றுகிறது.

    இவையனைத்தும் சக்தி உபாசகர்களின் துதிகள் தாமே? இது கிடக்க, வேறொரு இனியகாட்சியைக் காணச் செல்லலாமா?
    பிடிவாதம் செய்யும் ஒரு சிறு பெண்குழந்தை. அதனிடம் பொய்யாகச் சினம்கொண்டுபேசும் தாய்! இனிமையான காட்சி!
    “வா கண்ணே! முகம்கழுவி, உன்னைச் சிங்காரிக்கிறேன்,” என ஆசையாகத் தாய் அழைக்கிறாள். குழந்தைக்கோ விளையாட்டு மும்முரம். சிறு செப்புகளில் மண்சோறு சமைக்கிறாள். இலைகளைப் பறித்துப் பொரியல்செய்கிறாள். “அம்மா வா, நான் சமைத்த சோற்றைச்சாப்பிடு,” என்று மழலையில் அன்னைக்கும் கொஞ்சம் தருகிறாள்.

    கையில் பட்டுப்பாவாடை, கழுத்திற்கான அணிகலன்கள், மை, திலகம் முதலானவற்றை ஏந்தியபடி தாயின் அருகில் பணிப்பெண் நிற்கிறாள். குழந்தையின் புழுதிபடிந்த உடைகளையும் கைகால்களையும் கண்ட தாய் சலித்துக்கொள்கிறாள்.
    “நான் அழைக்கஅழைக்க நீ வராமலே இருந்தால், நான் இங்கிருந்து போய்விடுவேன். உனக்கு முகம், கைகால் கழுவி, உனது அழகான வேல்போலும் விழிகளுக்கு மைதீட்டமாட்டேன். பிறைமதிபோன்ற நெற்றியில் அழகிய திலகத்தையும் எழுதமாட்டேன். அழகான மணிகளால் செய்யப்பட்ட இந்த ஆபரணத்தை உனக்கு அணிவிக்கமாட்டேன்.”

    குழந்தைக்கு அலங்காரம் செய்துகொள்ள ஆசை; பெண்குழந்தையல்லவா? அலங்காரப்பிரியை அவள்! தனது விளையாட்டை விட்டுவிட்டுவர மனமில்லாமல் தாயை ஏக்கத்தோடு பார்க்கிறாள். இதுதான் வாய்ப்பெனத் தாய் தனது அச்சுறுத்தல்களைத் தொடர்கிறாள்.  “உன்னிடம் அன்பாகப் பேசவும் மாட்டேன் குழந்தாய்! புழுதிபடிந்த உன் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன் போ! அலங்காரம் செய்தபின் எனது முலைப்பாலையும் ஊட்டமாட்டேன். ஆசையாக எனது இடுப்பில் உன்னைத் தூக்கிவைத்துக்கொண்டு தேரோடும் வீதியில் சென்று நித்தமும் வேடிக்கை காட்டுவேனல்லவா? அதையும் செய்யமாட்டேனடி பெண்ணே!” குழந்தைக்குத் தாளவில்லை! இவையனைத்தும் அன்னையிடம் அவளுக்குண்டான தினசரி சலுகைகள். எப்படி அவற்றை இழக்கமுடியும்? குழப்பத்துடன் அன்னையைப் பார்க்கிறாள். அன்னையோ விடுவதாயில்லை! விரலால் எச்சரித்தபடி, “உனது சிவந்த கனிவாயில் முத்தமிட்டு உன்னைக் கொஞ்சமாட்டேனடி பார்த்துக்கொள்! அழகான மணிகள் குலுங்கும் தொட்டிலில் படுக்கவைத்து, உன்னை உறங்கவைக்கப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டும் பாடமாட்டேன் தெரியுமா?” என்கிறாள். இதற்குமேல் குழந்தைக்குத் தாங்கவில்லை. தனது சிறுசோற்றுச் செப்புக்களை வீசியெறிந்து விட்டு உதடுகள்நெளிய அழுகைபொங்கிவர ஓடோடிவந்து தாயின் சேலையில் முகம் புதைத்துக்கொண்டு அவளை அணைத்துக்கொள்கிறாள். தாயும் தனது பொய்க்கோபத்தினை விட்டொழித்து, குழந்தையை இறுக அணைத்துக்கொள்கிறாள். பார்க்கும் நம் முகங்களில் புன்னகை அரும்புகிறது இல்லையா?
    இவள் இமவானின் அகன்றமார்பில் (விசாலமான இமயமலையில்) தவழும் குழந்தையல்லவோ? இவளையா கோபிப்பது?
    ‘வருக வருக என் குழந்தையே! சாலிப்பதி எனப்படும் நெல்லையில் வாழ்கின்ற காந்திமதித்தாயே, விரைந்து வருகவே!’ என நாமும் பாடியவாறே குழந்தையை எண்ணத்தில் அணைத்துக் கொள்கிறோம்.

    ‘வாரா திருந்தா லினிநானுன் வடிவேல்
    விழிக்கு மையெழுதேன்
    மதிவாள் நுதற்குத் திலகமிடேன் மணியால்
    இழைத்த பணிபுனையேன்
    …………………………………………….
    தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய
    கனிவாய் முத்தமிடேன்
    திகழு மணித்தொட் டிலிலேற்றித் திருக்கண்
    வளரச் சீராட்டேன்…..’

    பேராதரம்- மிகுந்த அன்பு; ஒக்கலை- இடை.
    (நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்
    வித்துவான் அழகிய சொக்கநாதப்பிள்ளை)

    அன்னைத் தெய்வத்தைக் குழந்தையாக்கி இவ்வாறு வருந்தியும், வேண்டியும், உரிமையுடன் கோபித்தும், பின் கொஞ்சியும் அழைத்தால் அவள் வந்து அருள்செய்யாமல் இருப்பாளா?
    திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் பகழிக்கூத்தரும் இதுபோன்றே தாய் குழந்தை முருகனிடம் பொய்யாகச் சினம் கொள்வதாகப் பாடியுள்ளார். ‘உன் அரைஞாண் இறுக்கமாக உள்ளது. அதனை வாகாக தளர்த்திப் பூட்ட மாட்டேன். இலங்கும் மகர குண்டலத்தை எடுத்துக் குழைமீது அணிவிக்க மாட்டேன்; நெற்றியில் திலகம் தீட்ட மாட்டேன்,’ எனவெல்லாம் தாயின் பலவிதமான பொய்யானஅச்சுறுத்தல்கள்! இது போன்றே பழனி முருகனின் தாய்மாரும் பலவிதமாகக் கூறிக் கொஞ்சி அவனை வருமாறு அழைக்கின்றனர். சீர்காழி கோவிந்தராஜனின் இனிய தெய்வீகக் குரலில் இப்பாடலைக்கேட்டு ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

    ‘பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக சிறுசதங்கை
    புனைய வருக மணிப்பதக்கம் பூண வருக
    ………………………………………………..
    முத்த மிடற்கு வருகஎதிர் மொழிகள் மழலை சொலவருக
    தன்னே ரில்லா நுதல்திலகம் தரிக்க வருக விழியினில்மை
    சாத்த வருக ……………………………….
    வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ் வடிவேல் முருகா வருகவே!’
    (பழனிப்பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்- சின்னப்ப நாயக்கர்)

    இங்கு புலவர் முருகனின் தெய்வத்தன்மையைப் பாடுகிறார்; ஆயினும் அவனுடைய குழந்தை வடிவிற்கு அலங்காரம் செய்து, பொன்னும் மணியும் புனைவித்து, முகத்தோடணைத்துச் சீராட்டி மகிழ விரும்பும் தாயினது பேராவலையும் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு அணிகலனாகத் தன் குழந்தைக்கு அணிவித்து அழகுபார்க்க விழையும் தாயுள்ளத்தின் பேராவலையும் அன்பையும் இப்பாடல்கள் பதிவு செய்துள்ளன. இங்கு மெய்யடியார்களின் ஒரு அருமையான சிந்தனைத்துளியை எண்ணிப்பார்க்கலாம். தன் பிரியத்துக்குரிய தெய்வக்குழந்தை காலில் தண்டையும் சதங்கையும் கொஞ்ச அருகே வந்தால் எவ்வாறிருக்கும் எனும் எண்ணமே அவர்களைத் தாயன்பில் இன்புறுத்துகிறது. பக்தியில் நெகிழவைத்தும் அன்பில் மகிழ வைத்தும் சிலிர்ப்பூட்டுகின்றது.

    ‘தண்டையணி வெண்டையம் கிண்கிணிச தங்கையும்
    தண்கழல்சி லம்புடன் கொஞ்சவே…’

    எனும் அருணகிரிநாதரின் திருப்புகழின் சந்தநயத்தில் மகிழாதவர்கள் இல்லை.  ‘அந்தகன் வரும் தினம்’ எனும் மற்றொரு திருப்புகழில் அருணகிரிநாதர், முருகனை அழைப்பதும் மிகவழகான சந்தநயமும் கருத்துச் செறிவும் கொண்ட பாடல். தாயான உமையவளின் உள்ளம் மகிழுமாறு கால்களில் சின்னஞ்சிறு சதங்கைகள் கொஞ்சிட குழந்தை முருகன் ஓடோடி வருகிறான். அன்னையின் அன்புள்ளம், அவன் தன்னிடம் வந்து அளிக்கப்போகும் ஆசை முத்தத்திற்காக- ‘சங்கரி மனம் குழைந்துருக முத்தம்தர வரும் சரவணனுக்காக’- ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டுள்ளது என்பதனைக் கூறும் வரிகள் சிறப்பானவை.

    ‘தந்தன தனந்தனந் தனவெனச்
    செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
    தண்டைகள் கலின்கலின் கலின்எனத் திருவான
    சங்கரி மனங்குழைந் துருகமுத்
    தம்தர வரும்செழுந் தளர்நடைச்
    சந்ததி சகந்தொழும் சரவணப் பெருமாளே,’

    என்பன பாடலின் ஈற்றடிகள்.
    இதே போன்று முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழிலும் குழந்தை முருகனை, ‘பொன்னால் செய்தபெரிய கழல்கள் பாதச்சிலம்புகளோடு சேர்ந்து கலின் கலின் எனும் ஒலியினை எழுப்பவும், திருவரையில் உடைமணி கிணின் கிணின் என ஒலிக்கவும், மற்றும் பலவாபரணங்கள் பொலியவும் எம்மிடம் வருவாயாக!’ எனத்தாய் வேண்டும் பாடல் காணப்படுகிறது.

    ‘செம்பொற் கருங்குழல் அரிக்குரல் கிண்கிணி
    சிலம்பொடு கலின்கலினெனத்
    திருவரையில் அரைமணி கிணின்கிணின் எனப்பொலந்
    திண்டோளின் வளைகலிப்ப…’

    கேட்டவரம் தர ஒடிவரும் குழந்தை தெய்வம், கிண்கிணி சதங்கையொலிக்க ஆடியசைந்து வரும் குழந்தை எனக் கொஞ்சி, சிறுகுழந்தைத் தெய்வங்களை வாரியணைத்து உச்சிமுகர்ந்து கொண்டாட அன்னைமார் போன்று அடியார்களுக்கும் ஆவல் மிகுகிறது. தமது பக்திப்பெருக்கினையும் கவிதைச் சிறப்பினையும் சொற்களில் குழைத்தெடுத்துப் பாடல்களைப் புனைந்து வைத்துள்ளனர்.
    (இந்தத்தொடர் முனைவர், பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்கள் தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதி வந்ததன் தொடர்ச்சியாகும். பேராசிரியர் ஐயா முதல் ஐந்து பகுதிகளுடன் நிறுத்திக்கொண்டு இதனைத் தொடர்ந்து எழுதுமாறு என்னைப் பணித்துள்ளார். அன்னார் துவங்கிவைத்த அற்புதமான இத்தொடரை, பேராசிரியர் ஐயாவின் ஆசிகளுடன் எழுதுகிறேன்).

    (பிள்ளைத்தமிழ் பெருகி வளரும்)

    Share
  • தமிழர் உணவுப் பண்பாடு: இலக்கியப் பதிவுகளும் வாசிப்பு அரசியலும்

    கண்ணியம் அ. சதீஷ்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த்துறை
    ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி
    மயிலம் – 604 304

    பண்டைக் காலத்தில் தோன்றிய மூலப் பனுவலுக்குப் பல நூற்றாண்டுகள் கழித்து உரைகள் தோன்றின. உரைகள் தோன்றிய பல நூற்றாண்டுகள் கழித்து நாம் உரைகளின் ஊடாக மூலப் பனுவலை வாசிக்கின்றோம். அவ்வாறு வாசிக்கும் போது உரைகளின் மீதும் மூலப் பனுவல் மீதும் சமகாலக் கோட்பாடுகளின் ஊடான பார்வை தொழிற்படுவது இயல்பே. இப்படியான பின்புலத்தில் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தமிழர் உணவுப் பொருட்கள் குறித்தும் இலக்கண நூல்கள் கருப்பொருட்களில் ஒன்றாக உணவைக் குறிப்பிட்டு நில அமைப்பின் அடிப்படையில் ஒவ்வொரு திணைக்குமான உணவு வகைகள் எவையெவை என்பதைக் குறிப்பிட்டுள்ளமை குறித்தும், இவற்றின்மீது இடைக்கால மற்றும் பிற்கால இலக்கண ஆசிரியர்களும், உரையாசிரியர்களும் நிகழ்த்திய வாசிப்பு அரசியல் குறித்தும் விவாதிப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

    பண்டைத் தமிழரின் வாழ்வியல் நிலம் சார்ந்த திணை ஒழுக்கவியல் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்பதைத் தொல்காப்பியமும்  சங்கச் செய்யுட்களும் காட்டி நிற்கின்றன. அகம், புறம் என இரண்டு நிலைகளில் அவர்களின் வாழ்வியல் தொழிற்பட்டிருந்தது.

    அக வாழ்வியல் எழு திணைகளின் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை) அடிப்படையிலும் முப்பொருள்களின் (முதல், கரு, உரி)  அடிப்படையிலும் வகுத்துரைக்கப்பட்டது. முப்பொருட்களில் நிலமும் பொழுதுமாகிய முதற்பொருளும் தெய்வம், உணவு முதலிய கருப்பொருட்களும் அகவாழ்வியலே அன்றிப் புற வாழ்வியலுக்கும் அடிப்படையாக அமைந்தன. ‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே’  (தொல்.பொருள்.புறத்.நூ.2) முதலிய தொல்காப்பியப் புறத்திணை நூற்பாக்களே இதற்குச்      சான்றாக  அமைவதைக் காணலாம். தொல்காப்பியம்,

    தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
    செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
    அவ்வகை பிறவும் கருவென மொழிப       (தொல்.பொருள்.அகத்.நூ.17)

    என்ற நூற்பாவின் வாயிலாகத் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, இசைக் கருவிகள், தொழில், பண் ஆகியனவற்றைக் கருப்பொருட்களாகக் கூறிப் பிறவும் என்று சுட்டியுள்ளது. இந்நூற்பாவிற்கு உரை எழுதிய இளம்பூரணர்,

    முல்லை:  உணவு  –  வரகும்  முதிரையும்…  குறிஞ்சி:  உணவு  தினையும், ஐவனமும்வெதிர் நெல்லும்… பாலை: உணவு – ஆறலைத்தலான் வரும் பொருள்…மருதம்:உணவு- நெல்…நெய்தல்:        உணவு – உப்புவிலையும் மீன் விலையும் (தொல்.பொருள்.அகத்.நூ.17இளம்.உரை)

    என்று ஒவ்வொரு திணைக்குமான உணவுகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

    மற்றோர் உரையாசிரியரான நச்சினார்க்கினியர்,

    முல்லைக்கு உணா, வரகுஞ் சாமையும் முதிரையும்…குறிஞ்சிக்கு உணா, ஐவனநெல்லுந் தினையும் மூங்கிலரிசியும்… மருதத்திற்கு உணா, செந்நெல்லும் வெண்ணெல்லும்… நெய்தற்கு உணா,  மீன்  விலையும் உப்பு விலையும்… பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறைகொண்டனவும் (தொல்.பொருள். அகத்.நூ.17நச்சர்.உரை)

    என்று இளம்பூரணரைப் போன்றே நச்சினார்க்கினியரும் திணை அடிப்படையிலேயே உணவுப் பொருட்களைக் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்விருவர் உரையிலும் புலால் உணவுப் பொருட்கள் இடம்பெறாமைக் குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் தொல்காப்பியப் பொருளதிகார மரபியலில் நால்வருணத்தார் பற்றிய பகுதியில்  வணிகர்களுக்கு எட்டு வகையான உணவுப்பொருட்களை  உருவாக்கும் தொழில் உரியது என்பதைக் குறிக்கும்,

    மெய்தெரி வகையின் எண்வகை உணவின்
    செய்தியும் வரையார் அப்பா லான                 (தொல்.பொருள்.மர.நூ.79)

    என்ற நூற்பா உள்ளது. இந்நூற்பாவிற்கு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகியோரது உரைகள் உள்ளன. இளம்பூரணர் ‘எண்வகை உணவாவன நெல்லு, காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, போதும்பை இவையிற்றை உண்டாக்குகின்ற உழவு தொழிலும் வாணிகர்க்கு வரையா தென்றவாறு (தொல்.பொருள்.மர.நூ.79இளம்.உரை)’   என்றும், பேராசிரியர், ‘எண்வகை யுணவென்பன  பயறும் உழுந்தும்  கடுகும்  கடலையும்  எள்ளும் கொள்ளும் அவரையும் துவரையுமாம் (தொல்.பொருள். மர.நூ.78பேரா.உரை)’ என்றும், நச்சினார்க்கினியர், ‘நெல், காணம் (கேப்பை), வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், போதுமை (தொல்.பொருள்.மர.நூ.79பேரா.உரை)’ என்றும் உரையெழுதி யுள்ளனர். மூவரில் இளம்பூரணர் உரையும் நச்சினார்க்கினியர் உரையும் ஒரே வகையான உணவுப் பொருட்களையும் பேராசிரியர் முன்னை இருவர் கூறுவனவற்றிலிருந்து வேறுபட்ட உணவுப் பொருட்களையும் குறிப்பிடுகின்றனர். இந்நூற்பாவிற்கு வடமொழி சார்ந்த விளக்கங்களும் காணப்படுகின்றமையை,

    வடமொழி செவ்வியல் இலக்கியங்கள் தானியவகை, பருப்புவகை, காய்கறி, பழங்கள், மணப்பயிர், பால்தயிர், ஊன், போதை ஏற்றும் குடி வகை என எட்டுவகை உணவுகளைக் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியர் குறித்த எட்டும் இவையாக  இருக்கலாமோ  என்ற  ஐயமும்  ஆய்வாளரிடத்தே உள்ளது.

    (சங்கத் தமிழரின் உணவு மரபு – விவேகானந்தன் பொன்னையா, தாய்வீடு (கனடா) இதழில் வெளியான கட்டுரை, ஜுலை2014)

    என்ற கருத்துரை காட்டி நிற்கின்றது. உணவு பற்றி இரண்டு நூற்பாக்களில் குறிப்பிடும் தொல்காப்பியம் உணவு என்ற பொதுச் சொல்லை மட்டுமே பயன்படுத்தியுள்ளது. அவ்வுணவு வகைகள் எவையெவை என்பதைத் தொல்காப்பிய உரைகளின் வாயிலாகத்தான் தெரிந்துகொள்ள முடிகிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறிப்பிடும் உணவு வகைகளில் புலால் பொருட்கள் இல்லை. ஆனால் சங்க இலக்கியத்தில் புலால் உணவுகள் பற்றிய குறிப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன.

    • சில நூற்றாண்டுகள் இடைவெளி
    • நாடோடி – இனக்குழு – இனக்குழு தலைவன்- குறுநிலமன்னன் -மூவேந்தர்கள் என்ற பல வளர்ச்சிப் படிநிலைகள்,
    • நிலவுடைமைச் சமூகம் சார்ந்த தொகுப்பாக்கங்கள்

    ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டமைந்தவை சங்க இலக்கியங்கள். இச்சங்கச் செய்யுட்களில் தொல்காப்பியக் காலத்திற்கு முந்தைய பாடல்களும் உண்டு. தொல்காப்பியக் காலப் பாடல்களும் உண்டு, தொல்காப்பியக் காலத்திற்குப் பிந்தைய பாடல்களும் உண்டு.

    மூங்கில் அரிசி, தினை, சாமை, வரகு, இறுங்கு முதலிய அரிசி வகைகளும், எள்,  உழுந்து,  கொள்ளு  முதலிய  தானிய  வகைகளும், மா,  பலா,  வாழை,  காரை, துடரி, நாவல் முதலிய கனி வகைகளும், வேளை, வள்ளை, முஞ்ஞை முதலிய கீரை வகைகளும், அணில்வரி கொடுங்காய், நெல்லிக்காய், பாகற்காய் முதலிய காய் வகைகளும், வல்லிக் கிழங்கு முதலிய கிழங்கு வகைகளும், தேன் முதலியனவும் சங்ககால மக்களால் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைச் சங்கச் செய்யுட்கள் காட்டி நிற்கின்றன. இவை அனைத்தும் நிலத்தில் விளையக்கூடியனவும், இயற்கையாகக் கிடைக்கக் கூடியனவுமாகிய பொருட்களாகும்.

    இயற்கை விளைபொருட்கள் அன்றி இறைச்சிப் பொருட்களையும் சங்ககால மக்கள் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் சங்கச் செய்யுட்களின் வழி தெரிந்துகொள்ள முடிகிறது. பல்வேறு புலால் உணவுப் பொருட்களையும், அவற்றைக் கொண்டு வந்த முறைகளும், அவற்றை உணவாகச் செய்த முறைகளும், அவற்றை   உண்ட முறைகளும் விரிவான நிலையில் சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    புலால் உணவுகள் சங்க இலக்கியங்களில் ஊன், புலால், புலவு, கொழுங்குறை (பொருநர்.105), பைந்தடி (புறம்.14 12), பைந்துணி (புறம்.44 17), உணங்கல் போன்ற பல்வேறு பெயர்களில் சுட்டப் பெற்றுள்ளன. விலங்குகளும் பறவைகளும் மீன்களும் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளன.

    வேட்டையாடுதலும் மீன்பிடித்தலும் பண்டைத் தமிழரின் முக்கியத் தொழில்களாக இருந்தன. சங்க இலக்கியத்தில் உணவுக்காக வேட்டையாடியமை குறித்தும், மீன் பிடித்தமை குறித்தும் மிகுதியான அளவில் பதிவுகள் காணக் கிடைகின்றன.

    உடும்பு கொளீஇ வரிநுணல் அகழ்ந்து
    நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்
    கொண்டி எல்லுமுயல் எறிந்த வேட்டுவன்                (நற்.59)

    என்னும் நற்றிணைப் பாடலடிகளில் உடும்பு, நுணல், ஈயல், முயல் ஆகியவற்றை வேட்டையாடி வரும் வேட்டுவனின் செயல் பதிவு செய்யப்பட்டுள்ளது. விலங்குகளில் ஆட்டிறைச்சி (பொருநர்.103-140, புறம்.366:18-20, புறம்.261:8-9), ஆமான் என்றழைக்கபடும் காட்டுப்பசு இறைச்சி (சிறுபாண்.175-177), எலி இறைச்சி (நற்.83:4-9), பன்றி இறைச்சி (நற்.336:1-6, புறம்.374:8-10), முயல் இறைச்சி (புறம்.319:6-9), முளவு மா என்னும் முள்ளுடைய பன்றி இறைச்சி (ஐங்.364:1-2, புறம்.177:13-15, மலை.175-177), யானை இறைச்சி (அகம்.106:12, அகம்.169:3-7), மான் (இரலை, உழா, கடமா, நவ்வி, மரையான்) இறைச்சி (புறம்.150:5-15,  புறம்.152:25-27,  மலை.175-185,  அகம்.107:5-10)  ஆமை  (பட்.64, புறம்.42, புறம்.176), உடும்பு இறைச்சி (புறம்.325, புறம்.326, பெரும்பாண்.131-133, மலை.175-177) போன்றன உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்பெற்றுள்ளன.

    பறவைகளுள் அளகின் வாட்டு (கோழி) இறைச்சி (பெரும்பாண்.255-256), இதல் (கௌதாரி) இறைச்சி (புறம்.319:6-9), குறும்பூழ் (காடை) இறைச்சி (குறுந்.389:1-2), புறா இறைச்சி (புறம்.319:6-9) போன்றனவும், மீன் வகைகளுள் அயிலை மீன் (அகம்.70:2-4), ஆரல் மீன் (புறம்.212:3-4), இறால் மீன் (குறுந்.320:1-4, பட்.63-64), கெடிற்று மீன் (புறம்.384:8-9), சுறா மீன் (பட்.86-87, அகம்.10:10-12, நற்.103:9-11), வரால் மீன் (நற்.60: 3-6, அகம்.216:2-4), வாளை மீன் (புறம்.61:4-6, அகம்.320:1-4)போன்றனவும் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளன.

    மேலும் நண்டு (அளவன், கள்வன், ஞெண்டு) (சிறுபாண்.194-195), ஈயல் (அகம்.394) போன்றவற்றையும் சங்ககால மக்கள் உணவாகப் பயன்படுத்தியுள்ளனர். இறைச்சியையும் மீன் வகைகளையும் பதப்படுத்தி வைத்திருந்து உணவாக உண்ட நிலையையும் (அகம்.20:2,   பெரும்பாண்.100-104)   சங்கச்   செய்யுட்களில்   காணமுடிகிறது.

    புலால் உணவுகளைப் பச்சையாகவும், சுட்டும், வேகவைத்தும், சோறு சேர்த்தும், குழம்பு  வைத்தும்,  புலவு  செய்தும்  எனப்  பல  நிலைகளில்  உண்டனர் என்பதற்கான குறிப்புகள் சங்கச் செய்யுட்களில் காணப்படுகின்றன. படிநிலை சார்ந்த நாகரீக வளர்ச்சியின் பின்புலத்தில் இவற்றைப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். சோற்றோடு ஆட்டின் இறைச்சியைச் சேர்த்து உண்ட முறையை,

    எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
    தேமா மேனிச் சில்விளை யாயமொடு
    ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவர்            (சிறுபாண்.113)

    என்னும் பாடல் அடிகளாலும், வெண்சோறோடு நண்டு கலந்து உண்ட செய்தியை,

    அவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு
    கவைத்தாள் அலவன் கலவையோடு பெறுகுவீர் (சிறுபாண்.194-195)

    என்னும் பாடல் அடிகளாலும், ஈயலை வைத்துப் புளிக்குழம்பு செய்த நிலையை,

    ஈயல்பெய் தட்ட இன்புளி வெஞ்சோறு             (புறம்.119 3)

    என்ற பாடலடியாலும் அறிந்துகொள்ள முடிகிறது.

    நீண்ட  காலப்  பரப்பையும்,  வெவ்வேறு  நிலவியல்  அமைப்பையும்,  நாகரீக வளர்ச்சிசார் படிநிலைகளையும் தன்னகத்தே கொண்டனவாகக் காணப்படும் சங்கச் செய்யுட்கள்,  அனைத்து  நிலப்  பரப்புகளிலும்  நாடோடி  முதல் மூவேந்தர் வரையிலான அனைத்து வகை மக்களும் இயற்கை உணவுப் பொருட்களே அன்றி இறைச்சிப் பொருட்களையும் உணவாக உண்டனர் என்பதைக் காட்டி நிற்கின்றன. ஐவகை நிலங்களுள்,

    • குறிஞ்சி நிலத்தில் மூங்கிலரிசிச் சோறு, உடும்பின் இறைச்சி, கடமான் இறைச்சி, பன்றியின் இறைச்சி,  நெற்கள்,  பலாக்  கொட்டை, மோர், நெய், தேன், கிழங்கு வகைகள் ஆகியனவும்,
    • முல்லை நிலத்தில் தினையரிசிச் சோறு,  ஆட்டு இறைச்சி, மான் இறைச்சி, முயல் இறைச்சி, வான்கோழி இறைச்சி, பால், தயிர், மோர், நெய், கும்மாயம், புளியங்கூழ் ஆகியனவும்,
    • மருத நிலத்தில் செந்நெல் சோறு, வெண்ணெல்  சோறு,  கோழி  இறைச்சி, ஆமை இறைச்சி, மான் இறைச்சி, பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியனவும்,
    • நெய்தல் நிலத்தில் கொழியலரிக் கூழ், மீனுணவு, பன்றி இறைச்சி, புளித்த கள், பனங்கள், நெற்கள் ஆகினயவும்,
    • பாலை நிலத்தில் வெண்சோறு, நிணச்சோறு, புல்லரிசிச்சோறு, பன்றியின் இறைச்சி, காட்டுமான் இறைச்சி, உடும்பின் பொரியல் ஆகியனவும்,

    உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் இயற்கை உணவுப் பொருட்களே அன்றிப் புலால் உணவுப் பொருள்களும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு நிலத்திலும் எவையெவை உணவுப்பொருட்களாகப் பயன்படுத்தப்பெற்றன என்பதைத் தே.நமசிவாயம் தமது நூலில் விரிவாகப் பட்டியலிட்டுள்ளமையும் (தமிழர் உணவு, 2003:22) இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

    சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ள உணவு வகைகள் குறித்தும் அவை சமைத்த முறைமைகள் குறித்தும், சமையல் கருவிகள் குறித்தும், உணவு உண்ட முறைமைகள் குறித்தும் பக்தவத்சல பாரதி (தமிழர் உணவு), சு. அரங்கநாதன் (முல்லை நில உணவு முறைகள்), மா.இராசமாணிக்கனார் (சங்க காலத்து உணவும் உடையும்), அ.தட்சிணாமூர்த்தி (தமிழர் நாகரிகமும் பண்பாடும் – பண்டைய தமிழரின் உணவு), சி.சேதுராமன் (பண்டைத் தமிழர் உணவுகள்), சே. நமசிவாயம் (தமிழர் உணவு), பி.சரசு (தமிழ் இலக்கியத்தில் உணவியல்) ஆகியோர் விரிவான அளவில் தத்தம் நூல்களில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தமது நூல்களில் சங்க இலக்கியங்களில் காணலாகும் புலால் உணவுகள் குறித்தும் விரிவான   நிலையில்   பதிவு செய்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

    இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்கினியர் ஆகிய தொல்காப்பிய உரையாசிரியர்கள் சங்கச் செய்யுட்கள் மீதான தங்களின் ஆழ்ந்த வாசிப்பின் ஊடாகப் பல்வேறு சங்கப் பாடல்களை   உரைகளில்   மேற்கோள்களாகக்   காட்டியுள்ளனர்.

    தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் இரண்டு இடங்களில் உணவைப் பற்றிப் பொதுமையில் சுட்டிச்செல்ல அவற்றை விவரிப்பவை இவர்களின் உரைகளே. மரபியலில் வரும் நூற்பாவிற்கு இம்மூவர் உரைகளும் உள்ளன. அகத்திணையியலில் வரும் கருப்பொருட்கள் குறித்த நூற்பாவிற்குப் பேராசிரியர் உரை கிடைக்கவில்லை. இரண்டு நூற்பாக்களுக்கான உரைகளிலும் புலால் உணவுப் பொருட்கள் பற்றிய எவ்வித குறிப்பும் காணப்படவில்லை. சங்கச் செய்யுட்களில் இருவகை உணவுகளும் பரவலாகக் காணப்பட அவற்றில் ஆழ்ந்த புலமையுடைய உரையாசிரியர்கள் உணவு குறித்த  நூற்பாக்களுக்கான  உரைப்பகுதியில் இயற்கையான விளைபொருள் சார்ந்த உணவுப் பொருட்களையே பட்டியலிடுகின்றனர்.

    மரபியல் நூற்பாவிற்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஒரே வகையான உணவுப் பொருட்களையே சுட்டியுள்ளனர். பேராசிரியர் இவ்விருவர் கூறும் பொருட்களினும் வேறான உணவுப் பொருட்களைச் சுட்டிச் செல்கிறார். இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் குறிப்பிடும் கோதுமை என்னும் உணவுப் பொருள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில்  காணப்படாமையும், பேராசிரியர் வேறுபட்டு உரை எழுதியுள்ளமையும் தனித்த விவாதத்திற்கு உரியனவாகும்.

    தொல்காப்பியம் அன்பின் ஐந்திணைக்கும் உரிய கருப்பொருட்களுள் ஒன்றாகச் சுட்டிய  உணவுப் பொருட்கள்  குறிஞ்சி  முதலாய  ஒவ்வொரு  திணைக்கும் எவையெவை என்பதை இளம்பூரணர் உரையும் நச்சினார்க்கினியர் உரையுமே விவரிக்கின்றன. நிலத்தில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், கிழங்கு வகைகள், இயல்பாகக் கிடைக்கும் தேன், பண்டமாற்றால் வரும் பொருட்கள், திருடுவதால் வரும் பொருள்கள் ஆகியன உணவுப் பொருட்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. புலால் உணவுகள் பற்றிய குறிப்பு இருவர் உரைகளிலும் இல்லை. மீன் விற்று அதன் மூலம் வரும் பொருளை  உணவுப் பொருளாகக் குறிப்பிடும் உரையாசிரியர்கள் மீனை  உணவுப்  பொருளாகக்  குறிப்பிடவில்லை.

    உரையாசிரியர்களின் பார்வையில் தொல்காப்பியத்தை வாசிக்கின்ற பொழுது தொல்காப்பியம் குறிப்பிடும் உணவு வகைகளில் புலால் உணவுப் பொருட்கள் இல்லை என்றே பொருள்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் தொல்காப்பிய இலக்கணத்திற்கு  இலக்கியமாகவும் அதன் காலத்தோடு ஒத்தியலும் இலக்கியமாகவும் விளங்கும் சங்க   இலக்கியத்தில் புலால் உணவுகள் பற்றிய குறிப்புகள் நிரம்பக் காணக் கிடைக்கின்றன.

    தொல்காப்பிய அகப்புற வாழ்வியல் சார்ந்த இலக்கண வரையறைகளுக்குச் சங்கச் செய்யுட்களை அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு தங்களின் உரையை எழுதிச் செல்லும் உரையாசிரியர்கள் உணவுகள் பற்றிய வரையறைகளில்  சங்கச் செய்யுட்களில் பரவலாகக்   காணப்படும்  புலால் உணவுகளைக் குறிப்பிடாமல் சென்றதற்கான காரணங்களாக,

    • இயற்கை உணவுப் பொருட்களை மட்டுமே எடுத்துக்காட்டல்
    • சேமித்து வைத்துப் பயன்படுத்தும் பொருட்களை மட்டுமே எடுத்துக்காட்டல்

    போன்றனவற்றைக் கூறி மிக எளிமையாக அவ்வுரைகளைக் கடந்து போக முடியாது. இளம்பூரணரும்  நச்சினார்க்கினியரும்  இவ்வாறு  உரையெழுதியதற்கான பின்புலத்தை,

    • தொல்காப்பிய மூல நூலுக்கும் உரையாசிரியர்களின் காலத்திற்குமான கால இடைவெளி
    • அக்கால இடைவெளியில் நிகழ்ந்த – தோற்றம் பெற்ற சமூக – அரசியல் – சமய மாற்றங்கள்
    • இடைப்பட்ட காலப்பரப்பில் தோன்றிய இலக்கண நூல்களின் கருத்தாக்கங்கள்
    • உரையாசிரியர்களின் சமகால சமூக – சமயச் சார்பு

    ஆகியனவற்றின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும். அவ்வகையில் தொல்காப்பிய – சங்க இலக்கியக் காலத்தை அடுத்ததான சங்க மருவிய காலத்தில் எழுச்சி பெற்ற சமண, பௌத்த சமய எழுச்சி, குறிப்பாகச் சமண சமய எழுச்சி, தமிழ்ச் சூழலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. புலால் உண்ணுதலும் கள்குடித்தலும் குற்றங்களாக வரையறை பெற்றன. உயிர்க் கொலை கண்டிக்கப்பட்டது. இவற்றை அடிப்படையாகக் கொண்ட அற இலக்கியங்கள் உருப்பெற்றன. சங்க கால அக வாழ்வியல் மாற்றம் பெற்றது. ஐந்தாம் நூற்றாண்டளவில் எழுச்சி பெற்ற வைதீகச் சமயங்களான சைவமும் வைணமும் சமண, பௌத்த சமயங்களை எதிர்த்தன. இருப்பினும் புலால் உண்ணாமையை இச்சமயங்களும் ஏற்றன. சைவத்தில் புலால் உணவு ஏற்றுக்கொள்ளப்பெற்றதற்கான குறிப்புகள் (கண்ணப்ப நாயனார் வரலாறு முதலியன) காணப்படினும் அவை விதி விலக்குகள் போன்றவை. அதன் தொடர்ச்சி இன்றுவரை சிறு தெய்வ வழிபாட்டில் தொடர்வதைக் காணலாம்.

    உயிர்கொலை  மறுப்பு,  புலால்  உண்ணாமை  போன்றவற்றை  வலியுறுத்திப் பேசிய அவைதீக, வைதீக சமய இலக்கியங்களில் ‘யானை வேட்டுவன் யானையோடு வருதலும் உண்டு, குறும்பூழ் (காடை) வேட்டுவன் வெறுங்கையோடு வருதலும் உண்டு’ என்பன போன்ற கருத்துகள் காணப்படுகின்றன. இவை வேட்டைத் தொழில் குறித்த செயல்பாடுகளை அறக் கருத்தாக்கங்களை உருவாக்க எடுத்துக் கொண்டமையைக் காட்டுவனவாக அமைந்துள்ளன.

    தொல்காப்பிய மூல நூலுக்கும் உரையாசிரியர்களின் காலத்திற்கும் இடையில் அகப்பொருள் தொடர்பாகத் தமிழில் இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், நம்பியகப் பொருள் போன்ற நூல்கள் தோன்றின. இறையனார் அகப்பொருள் மூல நூலில்  கருப்பொருட்களின்  பட்டியல்  இல்லை.  அதன்  பிறகு தோன்றிய   தமிழ்நெறி  விளக்கம்   என்னும் நூலில் கருப் பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதோடு ஒவ்வொரு திணைக்குமான பொருட்கள் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. உணவு பற்றி,

    தினையே தருப்பண முதிரை செந்நெல்
    விலைகோ ளினையன மேவிய வுணவே          (தமிழ்நெறி.10)

    என்ற  நூற்பா  காணப்படுகிறது. இதில்  ஒவ்வொரு திணைக்குமான உணவுப் பொருட்கள் வரிசையாகக் கூறப்பட்டுள்ளன. இந்நூலுக்குப் பிறகு இறையனார் அகப்பொருள் நூலுக்குத் தோன்றிய நக்கீரர் உரையில்,

    குறிஞ்சிக்கு உணா, ஐவன நெல்லும் தினையும்… நெய்தற்கு உணா மீன் விலையும் உப்பு விலையும்… பாலைக்கு உணா ஆறலைத்தனவும் ஊரெறிந்தனவும்… முல்லைக்கு உணா வரகும் சாமையும்… மருதத்துக்கு உணா, செந்நெல்லும் வெண்ணெல்லும் (இறையனார் களவியல் உரை, ப.22-24)

    என ஒவ்வொரு திணைக்குமான உணவுப் பொருட்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இறையனார் களவியல் என்னும் நூலும் அந்நூலுக்கான உரையும் சைவ சமயம் சார்ந்தவை. இறையனார் களவியல் உரைக்குப் பிறகு நம்பியகப்பொருள் தோன்றியது இந்நூல் ஒவ்வொரு திணைக்குமான கருப்பொருட்களை விரிவான நிலையில் நூற்பாக்களாக வரையறுத்துக் காட்டியது.

     குறிஞ்சி    –  வேரல் ஐவனந் தோரை ஏனல் (நூ.20)

     பாலை      –  வழங்குகதிக் கொண்டன செழும்பதிக் கவர்ந்தன (நூ.21)

     முல்லை    –  தாற்றுக்கதிர் வரகொடு சாமை முதிரை (நூ.22)

     மருதம்    –  செந்நெல் வெண்ணெல் அந்நெல் அரிக்கிணை (நூ.23)

     நெய்தல்    –   புலவு மீனுப்பு விலைகளிற் பெற்றன (நூ.24)

    என்பன அந்நூலில் உள்ள ஒவ்வொரு திணைக்குமான கருப்பொருள் பற்றிய நூற்பாக்களுள் இடம்பெற்ற உணவு குறித்த அடிகளாகும். இந்நூல் வைணவச் சமயச் சார்பு கொண்டது.

    மேற்கண்ட வைதீக, அவைதீக சமயங்களின் கொள்கைப் பரலாக்கமும், தொல்காப்பியத்திற்குப் பிந்தைய தம் காலத்திற்கு முந்தைய இலக்கண நூல்களில் உள்ள வரையறைகளும் இளம்பூரணருக்குப் பின்புலமாக அமைந்தன எனலாம். இளம்பூரணர் காலத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் உரையெழுதிய நச்சினார்க்கினியருக்கு இளம்பூரணர் உரையும் கூடுதலான பின்புலமாக அமைந்தது. இவற்றோடு உரையாசிரியர்கள் இருவரின் சம காலத்திய சமயப் பின்னணியும் கவனத்தில் கொள்ள வேண்டும். இளம்பூரணருக்குச் சமணச் சமயப் பின்னணியும் நச்சினார்க்கினியருக்கு வைதீகச் சமயப் பின்னணியும் இருந்தன. வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் முதலிய ஐந்திலக்கண நூல்களும், மாறன் அகப்பொருள் என்னும் நூலும் முந்தைய நூல்கள், உரைகளின் கருத்துகளையே முன்னோர் மொழிப்பொருளாக அப்படியே ஏற்றுக் கொண்டன.

    கால இடைவெளி, நிறுவனமயமாக்கப் பட்ட சமயப் பின்புலம், முந்தைய இலக்கண ஆக்கங்கள், உரையாசிரியர்களின் சமகால அரசியல், சமய – சமூகப் பின்னணி போன்றவற்றின் அடிப்படையிலேயே தொல்காப்பிய உரையாசிரியர்கள் உணவு வகைகளில்  புலால்  உணவுப்  பொருட்களைச்  சுட்டாமல்  விடுத்தமையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    துணைநூற்பட்டியல்

    1. கோவிந்தராஜ முதலியார்  கா.ர.  (பதிப்பு),  களவியல்  என்னும்  இறையனார் அகப்பொருள் மூலமும் நக்கீரனார் உரையும், பவானந்தர் கழகம், சென்னை, 1939
    2. தட்சிணாமூர்த்தி அ., தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 2011
    3. தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் உரைவளம், அகத்திணையியல், ஆ.சிவலிங்கனார் பதிப்பு,உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம், சென்னை, 1991
    4. நமசிவாயம் சே., தமிழர்உணவு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,  சென்னை, 1981
    5. நாற்கவிராச நம்பி,  அகப்பொருள்  விளக்கம்  மூலமும்  உரையும்,  வித்துவான் சிவாநந்தையர் பதிப்பு, சோதிட பிரகாச யந்திரசாலை, 1097
    6. பக்தவச்சலபாரதி,பண்பாட்டுமானிடவியல், மணிவாசகர்  பதிப்பகம், கோவை, 1990
    7. வையாபுரிப்பிள்ளை ச. (பதிப்பு), சங்க இலக்கியம் பாட்டும் தொகையும், பாரி நிலையம், சென்னை, 1940.
    Share
  • அப்பர் திருத்தாண்டகத்தில் காஞ்சித் திருக்கோயில் தொன்மங்கள்

    சு. கோப்பெருந்தேவி1*, முனைவர் இரா. மதன் குமார்2*.,
    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

    ————————————-

    முன்னுரை
    சான்றோர்களால் சிறப்புப்பெற்றது, தொண்டைநாடு. அந்நாட்டின் காஞ்சிநகரமானது, ‘உலகுயிர்கள், பெருமானை வழிபட்டு உய்வதற்குரிய பெருஞ்சிறப்புடையது’ எனக் காஞ்சிப்புராணம் கூறுகின்றது. ‘க’ என்பது, பரம்பொருளாகிய பெருமானைக் குறிக்கும். ‘அஞ்சித்தல்’ என்பது, ‘வழிபடுதல்’ எனப் பொருள் தரும். அதன்வழி, ‘ஆருயிர்கள், பெருமானை வழிபட்டுய்வதற்கு உகந்த திருத்தலம்’ என்கின்ற குறிப்பில், ‘காஞ்சி’ என அந்நகரம் போற்றப்படுகிறது. புறத்திணையில், ‘காஞ்சி’ என்பது, நிலையாமையைக் குறிக்கும். நாம் அனைவரும், உடலின் நிலையாமையை உணர்ந்து, திருவருளாகிய அம்மையின் துணையுடன், பெருமானைப் பற்றி உய்வதற்கு வழிகாட்டுகின்ற அருள்நிலையமாக அந்நகரம் விளங்குகிறது. அந்நகருள், சைவப்பெருநெறிக்கு நிலைக்களமாகிய, திருமுறை பாடல்பெற்ற திருக்கோயில்கள் பல அமைந்துள்ளன. அவற்றுள், திருக்கச்சி ஏகம்பம், திருக்கச்சி மயானம் மற்றும் திருக்கச்சி மேற்றளி ஆகிய திருக்கோயில் தொன்மங்கள், அப்பரடிகளின் திருத்தாண்டகத்தில் சுட்டப்படுள்ளன. அத்தொன்மக் குறிப்புகளின், உள்ளுறையாக திருக்கோயில் வரலாறுகள் அமைந்து, பக்திநெறி உணர்த்தப்படுகின்ற அணுகுமுறையை, இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    திருத்தாண்டகத்தில், காஞ்சித் திருத்தலத் தொன்மங்கள்
    தேவார மூவரின், ஏழு திருமுறைகளாலும் போற்றப்பட்டுள்ள அரிய திருக்கோயில்களில் திருக்கச்சி ஏகம்பமும் ஒன்று. அப்பரடிகள், திருக்கச்சி ஏகம்பத்தை ஏழு திருப்பதிகங்களால் போற்றிப் பாடியுள்ளார். அவற்றுள், இரண்டு திருப்பதிகங்கள், திருத்தாண்டகத்தில் அமைந்துள்ளன. ஏகம்பத்தை இரண்டு திருப்பதிகங்களில் பாடியும் ஆவல் தீராதவராக, அத்திருமுறையில், பல இடங்களிலும் அவர், கச்சிஏகம்பத்தைப் போற்றியுள்ளார். அத்துடன், க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தில் (6:70:4) கச்சிப் பலதளியும், திருவினாத் திருத்தாண்டகத்தில் திருமேற்றளியும் (6:97:7), திருக்கச்சி மயானமும் (6:97:10) ஆகிய காஞ்சியின் பிற திருக்கோயில் தொன்மங்களும் சுட்டப்பட்டுள்ளன. அக்குறிப்புகள், திருக்கோயில் வரலாறுகளாகக் காஞ்சிப்புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

    அப்பரடிகள் உவந்த திருக்கோயில்
    ‘மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி
    ஏகம்ப மேயானை யென்மனத்தே வைத்தேனே’ (4:7:9)
    எனக் கச்சிஏகம்பத்தின் மீது, அப்பரடிகள் பெருவிருப்புடையவராக இருந்தார். அதனால்,

    ‘கலந்தார்தம் மனத்தென்றும் காதலானைக் கச்சியே கம்பனை’ (6:20:4)
    என்று போற்றி, ஏகம்பனைச் சிந்தை மறவாமல் பாடுகின்றார். நடுநாட்டின் திருஅதிகையில் இருந்து வீரட்டானனைப் பாடி மகிழ்ந்த களிப்பில், அங்கிருந்தே தொண்டை நாட்டின் ஏகம்பனையும், அடிகள் பாடி மகிழ்ந்துள்ளார். ‘ஏகம்பத்தைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே’ என்ற பெருவிருப்பில், அத்திருத்தலத்திற்காகப் பாடிய திருப்பதிகங்களிலும் சுட்டிக்கூறாத ஏகம்பத் திருக்கோயில் வரலாற்றுத் தொன்மத்தை, முன்கூட்டியே அதிகைத் திருப்பதிகத்தில் பாடி மகிழ்ந்திருப்பது, ஏகம்பன், அப்பரடிகளின் சிந்தையில் நீங்காமல் நிலைத்திருந்த பக்திக்குச் சான்றாகும்.

    அதனாலேயே, திருத்தாண்டகத்தால் ஏகம்பத்தைப் பணிந்த நிலையில், ‘ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே’ என்ற தொடரைப் பதிகமகுடமாக அப்பரடிகள், இரண்டு திருப்பதிகங்களிலும் (6:64,65) பதிவுசெய்துள்ளார். தொண்டராக, உழவாரப் படைதாங்கி, சைவத்தை வளர்த்தவராதலின், அப்பெருமகனார், ஏகம்பத்திலிருந்து அறம் வளர்த்த அம்மையை, ‘காமக்கோட்டி’ எனப் போற்றியுள்ளார்.

    காஞ்சிப்புராணத்தில் திருக்காமக்கோட்டம்
    பெருமான், ஊழிக்காலத்தில் ஒடுக்கியருளிய உலகங்களை மீண்டும் படைத்தருளத் திருவுள்ளம் கொண்டான். அதற்கென, வீரம் வெளிப்படுகின்ற பெருஞ்சிரிப்புடன், புனர்உற்பவத் திருக்கூத்தினை ஆடிக் களித்தான்.
    ‘அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி
    அழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப்
    பசைத்தவன்காண்’ (5:64:7)
    என்றவாறு, அண்டமுற நிமிர்ந்தாடிய பெருமான், அருளுருவாகிய சிவலிங்கமாக உலகாணித் தீர்த்தம் எனப்பெறுகின்ற பஞ்சநதிக்கரையில் இடம்கொண்டான். அத்திருமேனி, கொங்கண முனிவர் முதலான பலருக்கும் அருள்பேறுகள் பலவற்றையும் அருளிச்செய்த சிறப்புடன் விளங்கியது. அம்மையும், ‘திருக்காமக்கோட்டி’ என்னும் திருப்பெயருடன் அங்கிருந்து அத்திருவுருவினைப் போற்றி வழிபட்டாள். இன்றளவும், திருக்காஞ்சி நகரத்தில், அம்மை வீற்றிருந்தருள்கின்ற திருக்கோயிலானது, ‘திருக்காமக்கோட்டம்’ என விளங்குகிறது.

    காமம்-விருப்பம்; கோடு-வளைவு; கோட்படுத்துதல்-வளைத்தல். செந்நிறத்தைப் பெற முயன்ற அவளது விருப்பத்தை, பூசையாகிய பெருநெறியை நோக்கிப் பெருமான் வளைத்ததால், அவ்விடமானது, ‘திருக்காமக்கோட்டம்’ எனப் பெயர்க் கொண்டது. மேலும், உறுதிப்பொருள்கள் நான்கனுள், வீடுபேறே இறுதியாக (கோடியாக) அமைவது. அம்மை, உலக உயிர்களுக்கு, இன்பநாட்டமாகிய காமத்தை விளைவித்து, அதன் வழியே வீடுபேற்றையும் அளித்தருள்பவள். அதனால், அவள் வீற்றுள்ள திருக்கோயிலும், ‘திருக்காமக்கோட்டம்’ எனப் பெயர்க் கொண்டதை’ என்பது காஞ்சிப் புராண, வீரட்டாகாசப் படலம் (37) விளக்குகின்றது.

    செம்பவளச் செல்வியாகிய காமக்கோட்டி
    அம்மை, ‘கருநிற மேனி உடையவளாக இருந்த நிலையில், பெருமான் அவளை, ‘காளீ’ என விளித்தான். அதைக் கேட்ட அம்மை, ‘பெருமானே!, நீர் செம்பவள மேனியுடையவராக விளங்குபவர்; அதனால், நானும் அவ்வண்ணத்தைப் பெறுவதற்கு அருள்செய்ய வேண்டும்’ எனப் பெருமானைப் பணிந்தாள். பெருமானும் அதற்கு இயைந்து, பஞ்சநதிக்கரையில் அமைந்த தனது இலிங்கத் திருவுருவினை வழிபட அருளினான். அவ்வண்ணமே, திருமாலும், திருமகளும் இத்திருக்கோயிலிலிருந்து பெருமானை வழிபட்டுச் செம்பவள வண்ணத்தைப் பெற்றதென்பது, காஞ்சிப்புராண வரலாறு.

    ஒத்த வயதும், கல்வியும், செல்வமும், குலமும் தலைமக்களின் அன்புறவுக்கு அடிப்படை என்பது அகப்பொருள் நோக்கு. அவ்வகையிலேயே, பெருமானது அன்பினை, தான் முழுமையாகப் பெற வேண்டி, திருக்காமக்கோட்டத்தில் பூசை முதலான தவம் இயற்றி, பெருமானுக்கு இணையாகச் செந்நிறத்தைப் பெற்ற அம்மையை அப்பரடிகள்,
    ‘எரிகின்ற இளஞாயி றன்ன மேனி
    யிளங்கிழையோர் பாலுண்டோ’ (6:2:1)
    எனக் குறித்தருளியுள்ளார்.

    காமக்கோட்டியின் அருள்விண்ணப்பம்
    ‘ஆருயிர்கள், அப்பனாகிய பெருமானை வணங்கிப் பேரின்பமாகிய வீடுபேற்றினைப் பெறுவதற்கு ஓயாமல் முயலவேண்டும்’ என்பதை விளக்கவே, அம்மை திருக்காமக்கோட்டத்திலிருந்து, செந்நிறம் பெற விழைந்ததாகப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பெருமானின் பேரின்பத்தில், அம்மை கொண்ட விருப்பமே, மன்னுயிர்களும் பேரின்பத்தை விரும்பக் காரணமாகிறது. அவளது பெருவிருப்பே, வீடுபேறாகிய பேரின்பநாட்டத்தை உயிர்களுக்கு ஊட்டுகிறது. மண்ணுலகில் வாழ்கின்ற குடும்ப வாழ்வில், தாயே குழந்தைகளுக்கும், தந்தைக்கும் பாலமாக விளங்குகிறாள். அவள், தந்தை மீது பொழிகின்ற அன்பைக் கண்டு, குழந்தைகளும் தந்தையிடத்தில் நிறைந்த அன்பினைப் பொழிகின்றனர்; தந்தையும், குழந்தைகளுக்கு இனிய வாழ்வைத் தந்து மகிழ்கின்றார்.

    பெருமானிடத்தில், தனக்கென எதையும் வேண்டிடாதவளாகிய அம்மை, திருக்காமக்கோட்டத்தில் நிலைத்தவளாக, அன்பில் குறையாத பூசனையின் வழியாக, ஆருயிர்கள் அனைத்தின் நலனையும், தனது திருவாயினால் பெருமானிடத்தில், பெருவிண்ணப்பமாக ஓயாமல் வேண்டியவண்ணம் இருக்கின்றாள். அவளது அருள்நோக்கத்தை வெளிப்படுத்தி அருள்கின்ற திருவாயினையும் அப்பரடிகள் போற்றுபவராக,
    ‘கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி’ (6:4:10)
    எனக் குறித்துள்ளார்.

    பண்டாசுரனுக்காகக் கச்சி மயானம்
    ஆருயிர்களின் மீது பெருமான் கொண்ட அளவில்லாத கருணையின் வெளிப்பாடே, அவன் ஐந்தொழிலையும் நடத்துகின்ற நிலையாகும். பெருமானின் திருவருள் ஆணையின்வண்ணமே, அவ்வவ் உயிர்களின் வினைக்கேற்பப் பிறப்புகள் அமைகின்றன. உயிருக்கு உடல் கூட்டுவிக்கப்படுவதாகிய பிறப்பு நிலையே, படைத்தல் எனப்படும். ஐந்தொழில்களில் முதலாவதாகிய படைப்பினைச் செய்தருள்கின்ற பெருமானை, அப்பரடிகள், கச்சி ஏகம்பனாகப் போற்றுகின்றார்.

    ‘வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே
    தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்
    திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்
    எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண்அவனென் எண்ணத் தானே’ (6:65:1)

    கச்சிமயானத்தில் நின்ற ஏகம்பன்
    படைத்தல் தொழிலைச் செய்தருள, கச்சிஏகம்பன் செய்த அருளாடலானது, திருக்கச்சி மயானத் திருக்கோயில் வரலாறாகக் காஞ்சிப்புராணத்தில் விளக்கப்படுகிறது.
    பண்டம் – உடம்பு. பண்டன் என்னும் பெயர்க்கொண்ட அசுரன், நான்முகனிடத்தில் வரம்பெற்று, உயிர்களின் உடம்பினுள் இடம்கொண்டு, உடம்பின் பெருவலிமையினையும் உறிஞ்சி, அவை செயல்படாத வகையில், பெருந்துன்பம் விளைவித்தான். அதனால், உயிர்கள் அனைத்தும் வலிமையிழந்து, தசைக்கூடமாகிய வெற்றுடம்பினையே சுமந்திருந்தன. அதனால், ஐந்தொழிலும் பிறழ்கின்றநிலை ஏற்பட்டது. ‘அனைத்து உயிர்களின் உடம்பிலும் அவன் இடம்கொண்டிருந்தவன் ஆகையால், அவனை அழிப்பதற்குப் பெருமானின் பெருந்திறமே துணையாகும்’ என்று மூவர் முதலான தேவர்களும், பெருமானைப் பணிந்தனர். அவனை, அழித்தருளப் பெருமான் அருளுள்ளம் கொண்டான். அதற்கென வேள்வித்தீயை மூட்டி அதனுள், நான்முகன், திருமால் முதலான அனைத்துயிர்களின் உடம்பையும், அவியாகத் தீயிலிட்டான். அந்தந்த உடம்புகளிலும் இடம்கொண்டிருந்த பண்டனும், தீக்கிரையாகி வீழ்ந்தான். பண்டனை அழித்தருள, வேள்வித் தீயாகப் பெருமான் விளங்கிய இடமே, தற்போது, ‘கச்சி மயானம்’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

    ஏகம்பத்தில் பெருமான், படைப்புத் தொழிலைச் செய்தருள வேண்டி, தன்னிலிருந்து, அம்மையை, ‘இலளிதை’ என்னும் பெயருடன் வெளிப்படுத்தினான்; அம்மையும், பெருமானை வணங்கித் துதித்து, படைப்புத் தொழிலை மேற்கொண்டாள். அதன்வழி, உலகுயிர்களைப் படைத்தலாகிய அருந்தொழிலையும் ஆற்றுவதற்கு அருளாணையும் பெற்றுச் சிறந்தாள். அவ்வண்ணமே, மும்மூர்த்திகளையும், பிற உயிர்களையும் அம்மை படைத்தருளினாள். அவ்விடத்தில் அம்மையப்பரைப் பணிந்தெழுத்த மும்மூர்த்திகளும், அவர்கள்பால் பெருவிண்ணப்பம் ஒன்றைப் பணித்தனர்.

    காமக்கண்ணி என்னும் திருப்பெயர்
    ‘பெருமானே! ‘க’ என்னும் திருஎழுத்து, பிரமனையும், ‘ம’ என்னும் திருஎழுத்து, திருமாலையும், ‘உ’ என்னும் திருஎழுத்து, உருத்திரனையும் குறிக்கின்றன. தங்களது அருளாணையின் வண்ணம், எங்கள் மூவரையும், அம்மை தனது திருக்கண்களில் இருந்து தோற்றுவித்தார்கள். அப்பெருந்திறத்தைக் குறிக்கின்ற வகையில், க, ம, உ என்னும் திருஎழுத்துகளின் கூட்டாகிய திருப்பெயராக, ‘காமக்கண்ணி’ என்ற திருப்பெயருடன் அம்மை இத்திருக்கோயிலில் விளங்கியருளவேண்டும்’ என வேண்டினர். பெருமானும் அவ்வண்ணமே திகழ விதித்ததால், அம்மையும், அத்திருப்பெயரினை உவந்தேற்று அருளினாள்.
    இன்றளவும், திருக்காமக்கோட்டத்தில் விளங்குகின்ற அம்மையை, ‘காமாட்சி’ என வழங்குகிறோம்.
    காமம்-விருப்பம். அட்சம்-கண். அம்மை, ‘உயிர்களுக்கு அருள்கின்ற திருக்கண்களுடன், ‘காமாட்சி’யாகக் காஞ்சித் திருத்தலத்தில் வீற்றிருகின்றாள்’ என்பதை அப்பரடிகள் திருக்கச்சி மயானத் திருக்குறிப்பாகப் பாடியுள்ளார்.
    ‘மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான்’ (மேலது பாடல்)
    என்ற குறிப்பு மொழியில், அம்மையின் அருளேற்றம் சுட்டப்பட்டுள்ளது.

    திருக்கச்சி மயானத்தின்பால் ஆற்றுப்படுத்துதல்
    உயிர்கள், வீடுபேறாகிய பேரின்பத்தைப் பெருமானிடத்தில் பெற்று உய்வதற்குப் புறப்பூசைனையால் இலிங்கத்திருமேனியினை வழிபடத்தொடங்கி, அதனை ஆன்மார்த்த பூசனையாக வளர்த்துக்கொள்ளவேண்டும். அதற்குத் தடையாக விளங்குபவை, உலகியல் மயக்கங்களாகும். உயிரறிவிலிருந்து உலகியல் மயக்கங்கள் நீங்கிப் பெருமானைப் பற்றி உய்வதற்கு, அவன் அருளே கருவியாகும். அம்மையே, அத்திருவருளின் நிலையுடையவள். அவள், ஓயாத பெருவிருப்புடன், பெருமானை நித்தமும் பூசை செய்கிறாள். அப்பூசையின் பயனாகிய திருவருளே, அருவமாகிய பெருமானை, உயிர்களுக்குக் காட்டிஅருள்கிறது. அத்தத்துவத்தை விளக்குவதற்காகவே, ‘திருக்கச்சி மயானத்துப் பெருமானுடன் அம்மை உடன்பிரியாமல் விளங்குகிறாள்’ என அப்பரடிகள் பாடியுள்ளார்.

    ‘மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
    ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன்
    ஓரூரன் அல்லன் ஓருவமன் அல்லன்
    அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே
    கண்ணாகக் காணின் அல்லால்
    இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன்
    என்றெழுதிக் காட்டொ ணாதே’ (6:97:10)
    எனக் குறித்தருளியுள்ளார். மேற்கண்ட பாடலில் சுட்டப்படுகின்ற திருத்தலமானது, திருக்கச்சி ஏகம்பத் திருக்கோயிலின் கொடிமரத்தின் மேற்கே அமைந்துள்ளது.

    எண்ணத்தில் நீங்காத ஏகாம்பரன்
    வடமொழியில், ‘ஆம்ரம்’ என்பது, மாமரமாகும். ‘ஏகாம்பரம்’ என்பது, ‘ஒற்றை மாமரம்’ என்பதாகும். உலகிலுள்ள பிற மாமரங்களைப் போலல்லாமல், இம்மாமரம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. இது, வேத மாமரமாக, அரும்பொருளாகிய பெருமான் தங்குகின்ற பேறுபெற்றுள்ளது. அதனால், அது, ‘ஏக் ஆம்ரம்’; அதாவது, ‘ஒற்றை மாமரம்’ என்கின்ற சிறப்புப்பெயர்ப் பெறுகிறது. ஒருவனாகிய பெருமானும், தான் இடம்கொண்ட மாமரத்தின் பெயரால், தனக்கும் சிறப்புப்பெயர் விளங்க அருள்செய்தான். வடமொழியில் அத்திருப்பெயர், ‘ஏகாம்ரநாத:’ என வழங்கப்படும். அதுவே, திருவைந்தெழுத்தாகின்ற சிறப்பினைப் பெருமான், பிரமன் முதலான மூவர்க்கும் உரைத்தருளியதாகக் காஞ்சிப்புராணத் திருவேகம்பப் படலம் (பாடல்:27) போற்றியுரைக்கிறது.
    மேற்கண்ட திருப்பெயர் தமிழில், ‘ஏகாம்பரநாதன்’ எனக் குறிக்கப்படும். அப்பரடிகளின் அருள்மொழியில், ‘ஏகம்பன்’ எனப் பொலிவுறும். அத்திருப்பெயரை, அப்பரடிகளும், திருவைந்தெழுத்தாகவே கருதிப் பணிந்தார் எனலாம். அதன்பொருட்டே, திருத்தாண்டகத்தில் கச்சிஏகம்பத்தைப் பாடிய முதலாவது பதிகத்தில்,
    ’அஞ்செழுத்து நினைவார்க் கென்றும் மருந்தவன் காண்’ (6:64:9)
    என, ஐந்தெழுத்து மந்திரத்தின் அருள்சிறப்பினை அறிவுறுத்தியுள்ளார். ‘ஏகாம்பரநாதன்’ என்பதே, மேற்குறிக்கப்பட்ட திருவைந்தெழுத்து என்பதைச் சுட்டுபவராக, கச்சிஏகம்பத்தின் இரண்டாம் பதிகத்தில்,

    ‘பேதயேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
    மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்’
    வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்
    அருந்தவத்தாள் ஆயிழையாள் உமையாள் பாகம்
    அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த
    இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண்’ (6:65:5)
    எனப் பாடியுள்ளார். மேலும், அவ்வருஞ் சிறப்பினைத் திருமுறைத் திருநெறியாக நமக்கும் அறிவுறுத்த வேண்டியே, கச்சிஏகம்பப் பதிகங்கள் இரண்டுக்கும், ‘ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே’ எனப் பதிக மகுடம் சூட்டி மகிழ்ந்துள்ளார்.

    நால்வர்க்கும் தோன்றியருளிய கம்பன்
    பண்டனை அழித்தருளி, மீண்டும் உலக உயிர்களை உடம்புடன் கூட்டுவித்தலாகிய படைப்பினைத் தொடங்கக் கருதிய பெருமான், திருக்கச்சி மயானத்தின் மேற்கில் வேதங்களை, மாமரமாக நிற்கச் செய்தான். மாமரத்தின் மூலத்தில், அழல்பெருஞ் சோதியாகி எழுந்த பெருமான், சிவலிங்க மூர்த்தமாக அமைந்தான். அம்மை, தனது படைத்தல் தொழிலைச் சிறப்புறச் செய்யவேண்டிப் பெருமானை வேண்டினாள். அவளுக்கு அருளவேண்டிப் பெருமான், அச்சிவலிங்க மூர்த்தத்திலிருந்து வெளிப்பட்டருளினான். அவ்வருள்பேறு பெற்றே, இலளிதை அம்மை தனது, திருமுகத்திலிருந்து, பிரமன் முதலான மூவரையும் தோற்றுவித்தருளினாள். அம்மூவரும் தத்தமது தொழிலுக்கான நல்லறிவைப் பெறவேண்டிப் பெருமானைப் பணிந்தனர்.

    ‘பெருமானே! உமது கருணைத்திறத்தால், மூவரும் முத்தொழிலைச் செய்வதற்கான பேறுபெற்றுள்ளோம்; அவற்றை முறையாகச் செய்வதற்குரிய ஞானத்தையும் தாங்களே தந்தருள வேண்டும்!’ என்றனர். பெருமானும், ‘தான் உகந்த திருமேனியாகிய, சிவலிங்கத்திருமேனியைத் தாபித்து, வழிபட்டு அவ்வுயர்ப்பேற்றினைப் பெறுக’ என அறிவுறுத்தி அருளினான். அவ்வகையில், இலளிதையம்மையால் பூசிக்கப்படுவதாகிய மாவடி மூலத்தின் தென்பால், தேவர் மூவரும், இலிங்கத் திருமேனிகளைத் தாபித்து வழிபட்டனர்.

    பிரமன், தெளிந்த சிந்தையுடன் பெருமானைப் பூசித்ததால், ‘வெள்ளைக் கம்பர்’ எனவும் (திருஏகம்பப் படலம்: 86), உயிர்களை மயக்குகின்ற மாயவனாகிய தன்மை வேண்டிப் பூசித்ததால், திருமாலுக்கு, ‘கள்ளக் கம்பர்’ (திருஏகம்பப் படலம்: 87) எனவும், சிவோகம் பாவனையில் சிவத்தோடு ஒன்றிப் பூசைசெய்த உருத்திரருக்கு, ‘நல்ல கம்பர்’ (திருஏகம்பப் படலம்: 88) என்றும் காட்சி தந்தாக காஞ்சிபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அம்மைக்கும், தேவாதி மூவர்க்கும் அருள்செய்த ஏகம்பனை அப்பரடிகள்,

    ‘கடிநாறு பொழிற் கச்சிக் கம்பா வென்றும்
    கற்பகமே யென்றென்று கதறா நில்லே’ (6:31:2)
    எனக் குறித்தருளியுள்ளார்.
    ‘கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
    காணக் கண்ணடி யேன்பெற்றவாறே’ (7:61:10)
    என்ற அருள்மொழி, காஞ்சித்திருத்தலத்தில், இடக்கண் பெற்றுய்ந்து சுந்தரர்பெருமான் அருளியது.

    அம்மையின் திருக்காஞ்சிப் பயணம்
    அம்மை, இமவான் மகளாகி, பெருமானை மணந்து, அளவில்லாத மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள். அச்சமயத்தில், ‘பெருமானே, உலகங்களுக்கு ஒளிப்பொருளானவன்’ என்கின்ற பரத்துவத்தை உலகுயிர்கள் உணரவும், மண்ணுலகில் அறம் நிலைக்கவும், அம்மையைக்கொண்டு, பெருமான் அருள்விளையாடல் ஒன்றை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்டான். ஒருசமயம், அம்மை, பெருமானின் திருக்கண்களைக் கைகளால் மூடினாள். அதனால், கதிரவனும், தண்நிலவுமாகிய இருசுடர்களும் ஒளியிழந்தன. உலகங்கள் பேரிருளில் ஆழ்ந்தன. அறியாது அம்மை செய்த பிழைக்குக் கழுவாய் தேடும்படியான வாய்ப்பினைப் பெருமான், அவளுக்கு உரைத்தருளினான் (த.கு.படலம்: 25,26). ‘அம்மையே!, பூவுலகில் பூசைக்குப் பயனாகத் திருவடிசேர் முத்தியைத் தந்தருள்கின்ற அருள்நகரங்களுள் முதன்மையாக விளங்குவது, திருக்காஞ்சி நன்னகராகும். அந்நகரம், அறத்தேவதையை, யாம் விடையாக ஏற்றருளிய திருத்தலமாகும்; அங்கு எம்மைப் பூசித்து, ஆருயிர்களும் பூசித்து உய்யக்காட்டிருள்க!’ எனப் பெருமான் அம்மைக்கு அறிவுறுத்தினான். அதைக் கேட்ட அம்மை, ‘பெருமானே! உம்மை முறையாகப் பூசிக்கின்ற நெறிமுறைகளையும் அடியவளுக்கு அறிவுறுத்தி அருள்க!’ என்று பெருமானிடத்தில் வேண்டினாள்.

    பெருமானும் அதற்கு இசைந்து, சரியை முதலான படிநிலைகளையும், தீக்கை வகைகளையும், முத்தி நிலைகளையும், உயிர்கள் மண்ணுலகில் வினைவழியே பிறப்பெய்தி வாழ்கின்ற நிலைகளையும், பிறவாமையாகிய பெருநிலைக்குப் பூசையே கருவியாதலையும், அதற்கு ஏற்ற இடமாகக் காஞ்சி மாநகர் விளங்குவதையும் அம்மைக்கு எடுத்துரைத்தான் (த.கு.படலம்: 35-72). அம்மையும் அதை ஏற்று, வான் வழியே திருக்காஞ்சியை அடையப் புறப்பட்டாள்.

    அம்மையப்பருக்கு, புவனங்கள் அனைத்தும், இல்லமாகும். பிள்ளைகளின் நலம் சிறக்கவேண்டி, கணவனார் கூறுவதை, மனைவியார் செம்மையாகச் செய்துமுடிப்பார். ஆருயிர்களாகிய குழந்தைகளின் நலம் சிறக்கவேண்டி, அம்மையும், அப்பனின் அருஞ்சொல்லை ஏற்றுத் திருக்காஞ்சி நகரை அடைந்தாள்’ என்பதைக் காஞ்சிப் புராணம்,

    ‘களிவரு சிறப்பின் வான்நெறிப் படர்ந்தாள் கணவனார் அருள்வழி நின்றாள்’ (தழு.குழை.பட:121)
    என விரித்துரைக்கும்.

    அறச்சாலை நிறுவிய அம்மை
    காசி முதலான பல தலங்களிலும், இலிங்கத் திருமேனியைத் தாபித்து வணங்கி, ஐப்பசி மாதத் தேய்பிறை ஏகாதசித் திதி அமைந்த பூர நன்னாளில், அம்மை திருக்காஞ்சி நகரை அடைந்தாள். கங்கண தீர்த்தத்தில் நீராடி, கங்கணேசர், கடகேசர் ஆகிய இலிங்கங்களைத் தாபித்து வணங்கினாள். அந்நகரிலிருந்து, தான் இயற்றவுள்ள பூசனைகளாகிய பெருந்தவங்களுக்கு இடையூறு ஏற்படாதவகையில், காப்பும், கடகமும் அணிந்துகொண்டாள். அத்திருக்கோயில்கள், இந்நாளில், ‘கங்கணேச்சரம்’; ‘கடகேச்சரம்’ என வழங்கப்படுகின்றன. அம்மை, அங்கிருந்து உலகாணித் தீர்த்தக் கரையை அடைந்து, அறச்சாலையை நிறுவினாள். ‘வேள்விகள் புரிதல்’ முதலாக, ‘சரணடைந்தாரை பெருவிருப்புடன் தாங்குதல்’ ஈறாக அமைந்த, முப்பத்து இரண்டு அறங்களையும் நிறைவுற வளர்க்கின்ற அறச்செல்வியாகத் திகழந்தாள்.

    பூங்கொடியாள், பூசைக்கு விரைந்தாள்
    மாவடியில் விளங்குகின்ற ஏகம்பனை அன்றாடம் பணிகின்ற பெருவிருப்பு வழிநடத்த, அம்மை அன்றைய நாள் பூசைக்கான பெருவிருப்புடன் விரைத்தாள். விதிகள் பிழையாமல் பூசை செய்கின்ற அவள், பூசைக்குத் தேவையானவற்றைத் திரட்டிய நிகழ்வுகளைக் காஞ்சிப்புராணம் தழுவக் குழைந்த படலத்தில், 318-ஆம் பாடல் முதலாக, 341-ஆம் பாடல் வரையிலும் விரிவாகக் காணலாம். பூசைக்கு வேண்டுவதாகிய உடல் தூய்மைக்குத் தனி தீர்த்தமும், பெருமானைத் திருமுழுக்காட்டுவிக்கத் தனித் தீர்த்தமும் உருவாக்கப்பட்டன என்பதும், தனி நந்தவனத்திலிருந்து சிறந்த மலர்கள் தொகுக்கப்பட்டன என்பதும், திருவமுது படையலுக்காகத் தூயமுறையில் பல்வகை திருவுணவுகளும் படைக்கப்பட்டன என்பதுமான செய்திகள் சிவபூசை விதிகளை அறிய முயல்வோருக்கு அருந்துணையாகும். இவ்வாறு, பூசைக்குத் தேவையானவற்றை முறையாகத் திரட்டிக்கொண்ட பின்னர், கம்பமா நதியில் நீராடி, சிவ அனுட்டானம் முதலான ஒழுக்கங்களை முறையாகக் கடைப்பிடித்து, பூங்கொடி போன்றவராகிய அம்மை, பெருமானைப் பூசிக்க எழுந்தாள்.

    பெருமானைப் பணிந்த பெருந்தவக்கொழுந்து
    திருஏகம்பத் திருவாயிலில், மூத்த பிள்ளையாரையும், இளைய பிள்ளையாரையும் முறையாகத் தொழுது, துவார பாலகரையும் பணிந்து, நந்தி திருவாயிலை அடைந்தாள். ஆராத பெருவிருப்பின் வெளிப்பாடாகக் கண்ணீர் அரும்ப, மெய்யறிவின் பயனாகிய பூசையைத் தொடங்கினாள்; ஆகம விதிப்படி அருள்பூசைக்கு முனைந்தாள். ‘பெருமானே! உமது திருக்கண்களைப் புதைத்து, படைப்பு முதலான ஐந்தொழில்களுக்கும் இடையூறு விளைவிக்க எண்ணிய தீவினைக்குக் கழுவாய் தேடுகின்ற பெருநோக்கில், யான் புரிகின்ற பூசையில் குற்றம் நேராது காத்தருள வேண்டும்!’ எனப் பணிந்தாள். அவ்வேளையில், பெருமான் தனது திருவிளையாடலாக, கம்பைநதி பெருகி வரச் செய்தார். அதைக் கண்டோரின் கண்ணீரும் துணைநதியாகப் பெருகும்படி, பெருவெள்ளம் பாய்ந்தது.

    அம்மை, தனது திருவருள் குறைவினால், பூசைக்கு இத்தகைய இடையூறு ஏற்பட்டதாக எண்ணிக் கலங்கினாள். பெருவெள்ளமானது, பெருமானின் திருமுன்னர் பெருகி வந்து அவரை நலிவிக்கும்’ எனப் பதைத்தாள். உடனே, தனது வலது முழந்தாளைச் சிவலிங்கப் பீடத்தில் ஊன்றி, மேருமலையைப் இருபுறமிருந்தும் படர்கின்ற மல்லிகைக்கொடி போலக் கைகளால் அணைத்துக் காத்தாள். அந்நொடியில், இலிங்கத்திருமேனியிலிருந்து பெருமான், அம்மையின் வளைத்தழும்பும், முலைச்சுவடும் ஏற்றருளிய திருக்காட்சியைக் காட்டியருளினான். இவ்வரலாற்றுத் தொன்மத்தை அப்பரடிகள்,

    ‘கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
    கொங்கையினை அமர்பொருது கோலங் கொண்ட
    தழும்புளவே வரைமார்பில் வெண்ணூலுண்டே
    சாந்தமொடு சந்தனதி னளறு தங்கி
    அழுந்தியசெந் திருவுரு’ (6:4:10)
    எனக் குறித்தருளியுள்ளார்.

    ஏகம்பத்தில் திருமணக்கோலம்
    பெருமானைக் கண்டு அன்புருகி நின்ற அம்மையிடத்தில், ‘நீ வேண்டுகின்ற வரங்களும் யாவை?’ என்றான். ஏகம்பமாகிய இத்திருத்தலத்தில், தீவினைகள், உயிர்களைப் பற்றாமல் இருக்கவும், நல்வினைகள், பலநூறு மடங்காகப் பெருகவும், வீடுபேற்றுக்குக் கருவியாகிய அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப்பொருள்கள் நாளும் தழைக்கவும் அருளவேண்டும்’ என வேண்டினாள். பெருமானும், ‘அவ்வண்ணமே ஆகுக!’ என்று அருளினான்.

    அத்துடன், ‘பெருமானே!, எனது கரிய நிறத்தை நீக்கி, பொன்னிறத்தைத் தந்து, திருமண மங்கலப்பேற்றினையும் தந்தருளவேண்டும்’ எனப் பணிந்தாள். அவ்வண்ணமே, இத்திருக்கோயிலில், பங்குனி உத்திர நன்னாளில், திருமணம் நிகழ்ந்தேறவும், அகத்திய மாமுனி முதலான ஆருயிர்கள் அனைத்தும், அத்திருக்காட்சியினைக் கண்டு உய்யவும் அருளினான். செம்மேனிப் பெருமான், தனது இடப்பாகத்தில் அமைந்த பொன்னிறக் கொடியால், தானும் பொன்னிறம் கொண்ட திரு அழகினை,

    ‘செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
    செஞ்சடையெம் பெருமானே தெய்வம் நாறும்
    வம்பினாள் மலர்க்கூந்த லுமையாள் காதன்
    மணவாளனே’ (6:4:9)
    என வியந்து போற்றியுள்ளார்.

    திருமேற்றளி
    ‘உருத்திரப் பல்கணத்தார்’ என்போர் சிவவேடம் தரித்து, உள்ளன்புடன் பெருமானை வழிபடுவோராவர். அச்சிவனடியார்கள், நூறு பேராவர். அவர்களும், சிறப்புடைய அடியார் பிறரும் திருக்காஞ்சி நகரத்திலிருந்து பெருமானை, இலிங்கத்திருமேனியால் வழிபட்டுய்ந்த நூற்றுப்பதினெட்டுத் திருக்கோயில்கள், ‘கச்சிப்பல தளி’ எனப் போற்றப்பெறுகின்றன. இத்திருக்கோயில்கள், பதமுத்திகளைத் தந்தருள வல்லன. சரியை முதலான நாற்படி நிலைகளும், முறையே, சாலோகம், சாமீபம், சாரூபம் மற்றும் சாயுச்சியம் ஆகிய நால்வகைப் பதமுத்திகளைத் தரவல்லன. அவற்றுள், சாலோகம் என்பது, சிவலோகமாகிய திருக்கயிலையில் உறைகின்ற பேறு என்பது, காஞ்சிப்புராண உரை விளக்கம்.
    ‘கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும்
    கயிலாய நாதனையே காணலாமே’ (6:70:4)
    எனச் சாலோகப் பேறு முதலாகிய பதமுத்திகளுக்கு அப்பரடிகள் வழிநடத்துகின்றார். சாரூபம் என்பது, இறைவனின் திருவடிவத்தைப் பெறுதலாகிய பேறாகும். கச்சிப்பல தளி என்றமைந்த பல திருக்கோயில்களிலும், சாரூப முத்தி தரவல்லது ‘திரு மேற்றளி’ திருக்கோயிலாகும். திருமால், சாரூபப் பேறு வேண்டித் திருக்காஞ்சி நகரத்தில், இலிங்கத்திருமேனியைத் தாபித்துப் பெருமானைப் பலகாலம் வழிபட்டுவந்தார். கலியுகத்தில், திருஞானசம்பந்தப் பிள்ளையின் திருப்பதிகப் பாடல் கேட்டு, உள்ளம் உருகி, சாரூபப் பேற்றினைப் பெற்றுய்க!’ என்று பெருமானும் அருளினார். திருமாலும், அன்றாடப் பூசைநியமங்கள் தவறாமல், திருமேற்றளி நாதரை வழிபட்டுவந்த நாளில், பிள்ளையாரின் திருப்பாடலுக்கு உள்ளம் உருகித் தன்னை மறந்தான். ‘ஓதஉருகீசர்’ என்ற திருப்பெயருடன், பெருமானின் திருமுன்பில் இலிங்கத் திருமேனி பெற்றுய்ந்தார் (திருமேற்றளிப் படலம்: 11).

    திருமுறைநெறி விளங்குகின்ற திருமேற்றளி
    அன்றாடம், நாம் செய்கின்ற பூசைகளால், உடலும் உள்ளமும் ஒருசேரப் பண்படும். உண்மையன்புடன் ஒவ்வொரு நாளும் பூசைநெறியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினால், சில நாளில் பூசை நடைமுறைகள், வெறும் பயிற்சிகளாக அல்லாமல், உடலும் உள்ளமும் ஒருசேர உருகி, பெருமானை உணர்ந்து இன்புறுகின்ற பேற்றினைத் தந்தருளும். அவ்வாறு, ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உலப்பிலாத பேரின்பத்தை அருள்கின்ற பெருநெறியாக, ‘திருமுறைத் திருநெறி’ விளங்கவல்லது. இதனை உணர்த்த வேண்டியே பெருமான், சுந்தரருக்கு,

    ‘நமக்கு மன்பிற்
    பெருகிய சிறப்பின் மிக்க
    அற்சனை பாட்டே யாகும்
    ஆதலான் மண்மேல் நம்மைச்
    சொற்றமிழ் பாடு கென்றார்
    தூமறை பாடும் வாயார்’ (தடுத்தாட்கொண்ட புராணம்: 216)
    என அருளாணை வழங்கினார்.

    அப்பரடிகள், ஞானப்பிள்ளையாரைச் சிவிகையில் சுமந்தவர்; அவர்மீது பெருகியஅன்பில், நாளும் அவரைப் பணிந்தவர்; தூயஅன்புக்கும், பணிவுக்கும் பரிசாக, ‘அப்பரே!’ என்று அவரால் அழைக்கப்பட்டவர். மண்ணில் திருமுறைநெறி வாழச் சிவஞானக் கன்றாக வந்துதித்தவர், திருஞானசம்பந்தப் பிள்ளையார். அவர் முதலாகத் தழைக்கின்ற திருமுறைநெறியை, நமக்கு வாழ்வியல் நெறியாக உணர்த்தவேண்டியே அப்பரடிகள் திருமேற்றளியைப் போற்றிப் பாடினார்’ எனலாம்.
    அத்திருக்கோயிலை அப்பரடிகள்,
    ‘பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்
    பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
    கலிக்கச்சி மேற்றளியே யிருக்கக் கண்டேன்’ (6:97:7)
    எனக் குறித்தருளியுள்ளார்.

    ‘பாரூர் பல்லவனூர் மதிற்கச்சி மாநகர்வாய்ச்
    சீரூ ரும் புறவில் திருமேற் றளி’ (7:21:10)
    என்பது, சுந்தரர் பெருமானின் அருள்குறிப்பு.

    மேற்கண்ட அருள்நோக்கத்திலேயே, காஞ்சிப்புராணமும், ‘திருமால் சாரூபப் பேறு பெறப் பிள்ளையாரின் திருமுறைகள் கருவியானது’ எனத் திருமேற்றளி வரலாற்றை விவரித்துள்ளது. இத்தகைய அருள்வரலாற்றினைப் போற்றுகின்றவகையில், ‘திருமேற்றளி’ அமைந்துள்ள திருவீதியின் கிழக்குத்திசையில், திருஞானசம்பந்தப் பிள்ளையாரின் திருக்கோயில் விளங்குகிறது. அத்துடன், ஞானப்பிள்ளையாரின் பெயரால், ‘பிள்ளையார்பாளையம்’ என்ற திருவூரும் வழங்கிவருகிறது.

    முடிவுரை

    திருமுறையாசிரியர்கள், தொன்மக்கூறுகளைத் திருப்பாடல்களில் கையாண்டுள்ளதைத் திறனாய்வாளர்கள், ‘தொன்மவியல் படைப்பாக்க உத்தி’ எனக் குறிப்பிடுவர். திருமுறைகளிலும், சாத்திரங்களிலும், பெருமானது பரத்துவமும், உயிர்களது தற்சுதந்திரமின்மையும், உலகியலின் நிலையாமையாகிய உண்மைகளும் மையப்பொருளாகின்றன. அவற்றை, எளிதில் உணர்த்தவேண்டியே ஞானாசிரியர்கள், தமது திருப்பாடல்களில் சிவபுராணத் தொன்மங்களைக் கையாண்டனர். அவை, கதைப்போக்கில், அரிய தத்துவங்களையும் எளிமையாக விளக்குகின்றன. திருமுறை ஆசிரியர்கள் கையாண்ட, திருத்தலத்தொன்மங்கள், பின்னாளில் தல புராணங்களாக விரிந்தன. அவ்வகையில், திருத்தாண்டகத்திலுள்ள, காஞ்சிநகரத் திருக்கோயில் தொன்மக் குறிப்புகள், காஞ்சிப்புராணத்தில் தனிப்படலங்களாக மேலும் விரிந்து பக்திநெறியை விளக்குகின்றன. எனவே, திருமுறைகளில் இடம்பெறுகின்ற தொன்மக்கூறுகளை, ‘பயனற்ற கதைக்கூறுகள்’ என ஒதுக்குதல், சிறந்த இலக்கியப் பயிற்சியாகாது. அத்துடன், திருமுறைத்தொன்மங்களைப் பலமுறையும் நுண்ணுணர்வுடன் பயில்வது, திருமுறைத் திருத்தலங்களை, இம்மைப் பயன்களுக்காக மட்டுமேயல்லாமல், மெய்யறிவுத்தேடலுடனும் அணுக வழிகாட்டும்.

    ——————————————

    ஆய்வுத் துணை நூல்களும், இணையமும்
    1. ஆறாம் திருமுறை,
    பன்னிரு திருமுறை ஆய்வுமையம்,
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21.
    பதிப்பு ஆண்டு: அக்டோபர், 2015.

    2. தேவாரத் திருப்பதிகங்கள் (அடங்கன்முறை),
    பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் (பதிப்பாசிரியர்),
    கங்கை புத்தக நிலைய வெளியீடு, ஐந்தாம் பதிப்பு: சனவரி, 2005.

    3. சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப்புராணம், www.tamilvulibrary.org

    4. www.thevaaram.org

    —————————————————

    கட்டுரையாளர்கள்:

    சு. கோப்பெருந்தேவி1* – முனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

    முனைவர் இரா. மதன் குமார்2* – இணைப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

    Share
  • ஒப்பியல் நோக்கில் தமிழ் – மலையாளச் சிறுகதைகள் (நாஞ்சில்நாடன், சி.வி.பாலகிருஷ்ணன்)

    – முனைவர் நா. தீபா சரவணன்

    ஒப்பீட்டாய்வு, இலக்கியங்களை வளமைப்படுத்தும் என்பதும், தமிழ் இலக்கியத்திற்கு ஒப்பாய்வு இன்றியமையாதது என்பதும் அறிஞர்களின் கருத்து. இக்கருத்திற்கேற்ப எனது ஆய்வேடு ஒப்பீட்டு முறையில் அமைந்துள்ளது. நாஞ்சில்நாடன், சி.வி. பாலகிருஷ்ணன் ஆகிய இரு ஆசிரியர்களும் தமிழ், மலையாளம் எனும் இருவேறு மொழிப் பண்பாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள். இருவரும் மொழியாலும், வாழ்வியல் முறையாலும் மாறுபட்டவர்களாக இருப்பினும் அவரவர் பண்பாட்டுப் பின்புலத்தை நன்கு விளக்குகின்றனர். ஒரு எழுத்தாளனின் வாழ்வியல் சூழலும் அனுபவங்களும் அவருடைய எழுத்துலகப் பாதையில் அடிப்படைப் பங்கு வகிக்கின்றன என்பதை இவர்களின் படைப்புகள் வழி அறிய முடிகிறது. கதையின் பின்புலத்தை வெளிக்கொணரும்போது இருவரும் தான் வாழும் சமுதாயச் சூழலை மையமாக வைத்துப் பெரும்பான்மையான கதைகளையும், பிற சமூகப் பின்னல்களை மையமாக வைத்துச் சில கதைகளையும் படைத்துள்ளனர்.

    பண்பாடு சார்ந்த பின்புலங்களால் இரு படைப்பாளர்களையும் இரு வேறுபட்ட மொழிகள் பேசும் மக்களின் பழக்க வழக்கங்களையும் அறிய முடிகிறது. உணவு முறை, தொழில், நம்பிக்கைகள், சடங்குகள், கலைகள், விளையாட்டுகள் போன்றவை பின்புலமாக அமைவதால் மரபு சார்ந்த பண்பாடு அழியாமல் பாதுகாக்கும் விதம் அறிய முடிகிறது. தேர்ந்தெடுத்த கதைக் கருவைக் கதையாக விவரித்துக் கூறும் போது கதையின் நோக்கம் முழுமையடையும் விதமாக ஏராளமான உத்திகளை இரு ஆசிரியர்களும் பயன்படுத்தியுள்ளனர். பண்பாடு, கலாச்சாரம், மொழி, நாடு போன்றவற்றில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளும், சிக்கல்களும் ஒரே போலத்தான் இருக்கின்றன என்பது எனது ஆய்வேட்டில் கண்டறியப்பட்ட முடிவாக உள்ளது. இரு வேறுபட்ட மொழியில் அமைந்த இலக்கிய வகைகளின் அமைப்பும் சிக்கல்களும் பெரும்பாலும் ஒரே போலவே இருக்கின்றன. அவை வெளிக்காட்டும் விதத்தில் சிறுசிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.

    இருவேறு நாட்டைச் சார்ந்த இருவேறு மொழியைச் சார்ந்த படைப்பாளர்களின் படைப்புகளை ஒப்பியல் ஆய்வு செய்வதால் அவரவர் சமூகத்தின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் போன்றவை உணர்த்தப் படுவதோடு அவரவர் நாட்டின் கலைகள் வளர்க்கப்படும் விதம், பாதுகாக்கப்படும் விதம் குறித்தும் அறிய முடிகிறது. அழிவை நோக்கிச் செல்லும் சில கூறுகளின் வரலாற்று ஆவணங்களாகவும், மாற்றத்தை நோக்கிச் செல்லும் சில தூண்டல்களின் விடியலாகவும் ஒப்பாய்வு அமைகிறது.

    சி.வி. பாலகிருஷ்ணனின் மலையாளச் சிறுகதை ஒன்றைத் தமிழில் இங்கே மொழிபெயர்த்து வழங்கியுள்ளேன் – http://www.vallamai.com/?p=89725

    ********

    கட்டுரையாளர்

    முனைவர்.நா. தீபா சரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
    கோவை.

    Share
  • எழுகுளிறு மிதித்த ஒரு பழம் போல- பாடங்களும் பாடபேதங்களும்

    முனைவர் ச.கண்ணதாசன்,
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப் பிரிவு)
    மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,
    பசுமலை, மதுரை- 625004
    அலைபேசி – 9600484338 ,
    மின்னஞ்சல் – sendoordasan@gmail.com

    ———————————————-
    ஆய்வுக் கட்டுரைச் சுருக்கம் (Abstract)

    பரணரால் இயற்றப்பட்ட “கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்” எனத் தொடங்கும் குறுந்தொகையின் இருபத்து நான்காம் பாடலின் நான்காம் அடி “எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல” என்பது. இவ்வடியில் இடம்பெற்றுள்ள ‘எழுகுளிறு’ என்பதே இவ்வாய்வின் மையப்பொருள். குறுந்தொகையைப் பதிப்பித்த, உரைஎழுதிய ஒவ்வொருவரும் இச்சொல்லுக்கு ஒவ்வொரு விதமாகப் பாடம் கொண்டுள்ளனர். சௌரிப்பெருமாள் அரங்கன், மு.சண்முகம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர், எஸ்.வையாபுரிப்பிள்ளை, பொ.வே. சோமசுந்தரனார், இரா.இராகவையங்கார் ஆகியோர் முறையே ‘எழுகளிறு’, ‘எழுக்களிறு’ , ‘எழுகுளிறு’, ‘எழுக்குளிறு’, ‘எழுகுளிர்’ என அவரவருக்கு ஏற்புடையதை மூலபாடமாகவும், பிறவற்றைப் பாடபேதமாகவும் எடுத்தாண்டுள்ளனர். இவர்களுள் சிலர் பாட பேதத்தைச் சுட்டிக் காட்டியுள்ளனர். பொ.வே.சோமசுந்தரனார், மு.சண்முகம்பிள்ளை, இரா. இராகவையங்கார் ஆகியோர் தாங்கள் கொண்டதே சரியான பாடம் என்பதற்கு விளக்கம் தந்து பிறர் கொண்ட பாடம் பொருந்தாது என எடுத்துரைத்துக்கின்றனர். இவ்வாறு மேற்சுட்டிய ஒவ்வொருவரும் கொண்ட பாடங்களுள் ‘களிறு’, ‘ குளிறு’, ‘குளிர்’ இவற்றுள் எது பொருத்தமானதாக அமைகிறது என்பதைத் தக்க சான்றுகளுடன் இக்கட்டுரை ஆராய்கிறது.

    ——————————————————
    முன்னுரை

    பழந்தமிழ்ப் பதிப்பாசிரியர்கள் ஒரு நூலைப் பதிப்பிக்க முற்படும் பொழுது அந்நூலின் சுவடியானது தங்கள் கையில் இருந்தாலும், செம்பதிப்பாக அதை வெளிக்கொணரப் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுவடிகளைச் சேகரித்து, சேகரித்த சுவடிகளுள் பதிப்பிக்க இருக்கும் நூலின் சுவடிகளைத் தொகுத்து ஒன்றோடொன்று ஒப்புநோக்கி அவர்களுக்கு ஏற்பெனப்பட்டதை முதன்மைச் சுவடியாகவும் பிறவற்றைத் துணைமையாகவும் கொள்வதையே மரபாகக் கொண்டிருந்தனர். பதிப்பிக்கபோகும் ஒரு நூல் முன்பே இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒப்புநோக்கி செந்தரப்படுத்துவது பழம்பதிப்பாசிரியர்களிடையே காணப்பட்ட பொதுத்தன்மை.

    முதற்பதிப்பு கண்ட ஒரு நூலை பின்னாளில் மற்றொருவர் பதிப்பிக்கும் பொழுது,
    “ முன்னோர் நூலின் முடிபொருங்கு ஒத்துப்
    பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி…..”1
    எனும் வழிநூலுக்குரிய இலக்கணம், நூலைப் பதிப்பிப்போருக்கும் உரியதாக விளங்குகிறது. இதன் விளைவே பாடபேதம். பாடம் இன்னதென்பதைக் காட்டி, பாடபேதம் இன்னின்ன என்று கூறுவதே பதிப்பியல் நேர்மை. முற்;பதிப்பாசிரியர் பாடமாகக் காட்டியவை பிற்காலப் பதிப்பாசிரியருக்குப் பாடமாகவும் அமையும். அதாவது பாடம் பாடபேதமாகவும், பாடபேதம் பாடமாகவும் அமைவது மூலபாட ஆய்வில் இயற்கையே. அவ்வாறு அமைவதே ஆய்வுக்கான திறவுகோலாகவும் அமைகிறது. இத்தகைய தன்மையில் தான் குறுந்தொகையின் இருபத்து நான்காம் பாடல் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

    “கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்
    என்னை யின்றியும் கழிவது கொல்லோ
    ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்
    தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்
    குழையக் கொடியோர் நாவே
    காதல ரகலக் கல்லென் றவ்வே” (குறுந்தொகை.பா.24)

    (இங்கு கொடுக்கப்பட்டது உ.வே.சாமிநாதையரின் பதிப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது). பரணரால் பாலைத்திணையில் அமைந்ததாகப் பாடப்பெற்ற இப்பாடல் தலைவியின் கூற்றாக எழுந்தது; பருவங்கண்டு ஆற்றாலாகிய கிழத்தி உரைத்தது எனும் துறையில் அமைந்தது. இப்பாடலில் நான்காம் அடியாக அமைந்த “எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல”எனும் அடியே இங்கு மையப்பொருள். இவ்வடியில் இடம்பெற்றுள்ள ‘எழுகுளிறு’ என்பதே ஆய்வுப்பொருள்.

    குறுந்தொகையின் முதற் பதிப்பாசிரியரான சௌரிப்பெருமாள் அரங்கன், விரிவான உரை கண்ட உ.வே.சாமிநாதையர், கழக உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார், விளக்கவுரை கண்ட ரா. இராகவையங்கார், செம்பதிப்பென மூலத்தை வெளியிட்ட எஸ்.வையாபுரிப்பிள்ளை, பல்வேறு சுவடிகளை ஒப்புநோக்கி ஆய்வுப் பதிப்பாக வெளியிட்ட மு.சண்முகம் பிள்ளை ஆகியோரின் பதிப்புகளை ஒப்புநோக்கி இப்பாடலின் நான்காம் அடி ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. மேற்கூறிய அறுவரின் பதிப்புகளும் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க பதிப்புகள். இவர்கள் இவ்வடியை கையாண்டுள்ள விதம் கீழ்க்காணுமாறு அமைந்துள்ளது.

    “எழுகளிறு மிதித்த ஒருபழம் போல”2 – சௌரிப்பெருமாள்
    “எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல”3 – உ.வே.சாமிநாதையர் “எழுகளிறு மிதித்த ஒருபழம் போல” 4- மு.சண்முகம்பிள்ளை
    “எழுகுளிர் மிதித்த ஒருபழம் போல”5 – பொ.வே.சோமசுந்தரனார்
    “எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல”6 – எஸ்.வையாபுரிப்பிள்ளை
    “எழுகுளிர் மிதித்த ஒருபழம் போல”7 – ரா.இராகவையங்கார்

    இவர்களைத் தவிர மு.சண்முகம்பிள்ளை தன்னுடைய பதிப்பில் பின்னிணைப்பாகத் தந்துள்ள “பாடவேறுபாட்டு ஒப்புநோக்கு அட்டவணை, இலண்டனிலிருந்து பெறப்பட்ட தாள் சுவடியில் ‘எழுக்குளிறு’ என்றும், பூண்டியப்பரின் சுவடியில் ‘எழுகுளிர்’ என்றும், அடிகளாசிரியரிடமிருந்து பெறப்பட்ட தாள்சுவடியில் ‘எழுகுளிறு’ என்றும், கலாநிலையம் மற்றும் அருணாசலதேசிகரின் சுவடிகளில் ‘எழுகளிறு’ என்றும் பாடங்கள் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது”.8

    இவர்களுள் சாமிநாதையர் ‘எழுகளிறு’ என்பதை மட்டும் பாடபேதமாகவும், சண்முகம்பிள்ளை ‘எழுகுளிறு’ என்பதைப் பாட பேதமாகவும், இராகவையங்கார் ‘எழுகளிறு, ‘எழுகுளிறு, ‘எழுக்குளிறு’ ஆகிய மூன்றையும் பாடபேதங்களாகவும் காட்டிள்ளனர்.

    மேற்கூறியவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது இப்பாடலுக்கு மொத்தம் ‘எழுகுளிறு, ‘எழுக்குளிறு, ‘எழுகளிறு, ‘எழுக்குளிறு, ‘எழுகுளிர்’ என மொத்தம் ஐந்து பாடங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு இவ்வார்த்தைக்கு மட்டுமல்ல இப்பாடலிலேயே அதிகமான பாட வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் குறுந்தொகையின் பயன்பாட்டுத்தன்மையே.

    “ஏனைய தொகை நூல்களைக் காட்டிலும் குறுந்தொகையே உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோளாக எடுத்தாளப்படுகின்றது. இதனால் இத்தொகைநூற் செய்யுட்களில் உரையாசிரியர்கள் கருத்துக்கள் பெரிதும் ஈடுபட்டிருந்தன வென்று தெரிகின்றது. இந்நூலுள் இப்பொழுது தெரிந்த வரையில் 165 செய்யுட்களே பிறநூலுரையில் மேற்கோளாகக் காட்டப்பெறாதவை”9

    என்ற உ.சே.சா.வின் கூற்றின் மூலம் குறுந்தொகையைப் பலரும் பயின்றுவந்துள்ளனர் என்பது புலப்படுகின்றது. இக்காரணத்தினால் அதைப் படியெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்திருக்கும் என்று கூறலாம்.

    “கரிய தாளினை உடைய வேப்ப மரத்தினது ஒள்ளிய பூவின் புது வருவாயானது என்னுடைய தலைவன் இல்லாமலும் செல்வதோ. அயலாராகிய கொடிய மகளிருடைய நாக்கள் என் காதலன் என்னை நீங்கிச் செல்ல, ஆற்றங்கரையில் வளர்ந்த வெள்ளிய கொம்புகளை உடைய அத்திமரத்தினது உண்ண விரும்பிய ஏழு நண்டுகளால் மிதிக்கப்பட்ட ஒற்றைப் பழம் குழைவது போல நான் வருந்தும்படி கூறி கல்லென்று முழங்கின”10 என்பது இப்பாடலுக்கு உ.வே.சாமிநாதையர் தரும் விளக்கம். ‘எழுகுளிறு மிதித்த’ என்று பாடம்கொண்டு உரை எழுதியுள்ளார் அவர்.

    ‘எழுகுளிர்’ எனப் பாடம்கொண்ட பொ.வே.சோமசுந்தரனாரும், இராகவையங்காரும் இன்னும் சற்று நுட்பமாக “ஏழு நண்டுகள் பற்றிக் குழைத்த”11 எனப் பொருள்கண்டுள்ளனர். இவர்களுக்கும்; நண்டுகள் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை, ஆனால் ‘குளிறு’ என்பது ‘குளிர்’ என்று கொள்ளப்பட்டுள்ளது.

    ‘களிறு’ எனப் பாடங்கொண்டவர்களுள் சௌரிப்பெருமாள் அரங்கன் “ஆற்றில் மூழ்கி எழுந்த களிறு மிதித்திட்ட ஒரு பழம் போல”12 என்றும், சண்முகம்பிள்ளை “ஆண்யானையின் காலால் மிதித்து உழக்கப்;பெற்ற”13 என்றும் பொருள் கூறியுள்ளனர். மேலும் இவர்கள் ‘எழு’ என்பதை ஏழு என்னும் எண்ணுப்பெயராகக் கொள்ளாமல் எழுகின்ற எனும் வினையாக மாற்றியுள்ளனர். களிறு உருவத்தில் பெரியது என்பதால் ஏழு எனப்; பொருள் கொள்வதில் இடர்பாடு ஏற்படுகின்றது.

    ‘எழுகளிறு’ பாடமாகுமா?

    ‘எழுகளிறு’ அல்லது ‘எழுக்களிறு’ என்ற பாடம் பொருந்துமா என்பதை ஆராயவேண்டும். பாடலின் சூழல் ஊரார் அலர் தூற்றுவதால் மனதளவில் மிகுந்த துன்பத்தை அனுபவிக்கும் தலைவியின் புலம்பலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தலைவியின் மனமானது பதறுகிறுது; கவலைகொள்கிறது; வருந்துகிறது. அதனால் மனம் வண்டுகளால் உருட்டப்பட்ட அத்திப்பழம் போல அங்கும் இங்கும் அலைபாய்கிறது என்று கொள்வது பொருத்தமாகும். அல்லது வண்டுகளால் அத்திப்பழம் உருட்டப்படுவதைப் போல அவள் மனமும் உடலும் தலைவனின் நினைவுகளால் பந்தாடப்படுகிறது என்பதும் பொருத்தமாக அமையும்.

    யானை ஆற்றிலிருந்து எழுந்து வந்து வேண்டுமென்றெ அத்திப் பழத்தை மிதிப்பதில்லை. பெரிய உருவம் கொண்ட அது தெரியாமல் கூட பழத்தை மிதித்திருக்கும். அலர் கூறுபவர்கள் தலைவியின் காதில் படவேண்டும் என்று வேண்டுமென்றே தெரிந்தும் தெரியாததுபோல் அவள் மனம் புண்படும்படி கூறுவர் என்பதே இயல்பு. யானை மிதித்தால் அத்திப் பழம் சிதையுமே தவிர குழையாது. ஒட்டுமொத்தமாக அழிவதை விட மெள்ள மெள்ளச் சிதைதல் என்பது கொடியது. துன்பத்தை அதிகரிக்கச் செய்வது. நண்டுகள் உருட்டுவதால் பழம் படும் பாட்டை நண்டுகள் அறியாதது போல் அலர் தூற்றுவதால் என் மனம் படும்பாட்டை இவ்வூரார் அறியார் எனத் தலைவி எண்ணுவதாலேயே “குழையக் கொடியோர் நாவே” என்று கூறுகிறாள் என்றும் கூறலாம். எனவே ‘நண்டு’ என்று பொருள் கொள்வதே சரியானதாக அமையும்.

    “உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்”14 என்பது தொல்காப்பிய விதி. இவற்றின் அடிப்படையில் பார்த்தாலும் ‘களிறு’ எனப் பாடங்கொள்ளுதலும், அதற்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களும் பொருத்தமுடையனவாக இல்லை. “ ‘எழுகளிறு’ எனப்பாடம் கொண்டு ஏழு யானைகள் என்பாரும் உளர். ஏழு யானைகள் மிதிப்புழிப் பழம் உருத்தெரியாமல் சிதைந்தழியுமாயின் குழைந்தது எனப் பொருந்தாதல் உணர்க15 என்ற பொ.வே.சோமசுந்தரனாரின் கூற்றும் ஒப்புநோக்கத்தக்கது. எனவே ‘எழுகளிறு’ என்னும் பாடம் பொருத்தமாக அமையவில்லை. இதனால் ‘எழுக்களிறு’ என்பதும் இங்கே ஏற்புடைத்தாகாது.

    ‘எழுகளிறு’என்பதை ‘ஏழுகளிறு’ எனப்பொருள் கொண்டும் பொருள் எழுதப்பட்டுள்ளதை பொ.வே.சோ.வின் உரை குறிப்பிடுகின்றது.

    ‘எழுகுளிறு’ அல்லது ‘எழுகுளிர்’ ?

    ‘களிறு’ என்பது பொருந்தாப் பாடமாக அமையும் பொழுது, ‘குளிறு’ அல்லது குளிர் இவற்றுள் எது பொருத்தாமான பாடமாக அமையும் என்பதை ஆராய வேண்டும். ‘ஏழுகுளிறு’ எனப் பாடம் கொண்ட உ.வே.சா. நண்டு அத்திப்பழத்தை விரும்புவதற்கு வழக்கம் போல் தன்னுடைய ஒப்புமைப் பகுதியில் அதற்கான பிற இலக்கிய மேற்கோள்களை எடுத்துக்காட்டிள்ளார். ‘நண்டு’ எனப் பொருள் கொள்வதில் உ.வே.சா., பொ.வே.சோ., வையாபுரிப்பிள்ளை, இராகவையங்கார் ஆகியோருக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் குளிறா? குளிரா? என்பதில் தான் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முன்னோர் ‘குளிறு’ என்றும் பின்னோர் ‘குளிர்’ என்றும் எடுத்தாண்டுள்ளனர்.

    “ ‘குளிர் – நண்டு என்பது,
    “களவன் குளிர் நெண்டு கற்கடக மட்டை
    செளுகங் கறையான் சிதல் (உரிச்சொனிகண்டு,விலங்கு, 26),
    குளீர – கற்கடக என்பது அமரகோசம், இவற்றால் குளிறு என்பது நண்டின் பெயரன்மை
    உணரலாம்”16
    என்று விளக்கம் கூறி ‘குளிர்’ எனக் கொள்வதே சரியான பாடம் என்று சொல்லாமல் சொல்லுகிறார். பொ.வே.சோ. ‘களிறு’ என்பதற்கே மறுப்புரை எழுதியுள்ளாரே தவிர ‘குளிறு’ என்பதற்கு எழுதவில்லை.

    மேல் இராகவையங்கார் சுட்டிக்காட்டியதைப் போலப் பிற நிகண்டுகளிலும் உள்ள கருத்துக்களை ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில் அகராதிகளும், சொல்லடைவுகளும் வருவதற்கு முன்பாக நிகண்டுகளே முதன்மையான பொருள்விளக்கிகளாக இருந்துள்ளன.

    குளிர் என்பதற்குச் சூடாமணி நிகண்டு,
    “ஞெண்டின் பெயர் – களவன், குளிரம், நள்ளி, கவைத்தாள், கர்க்கடகம்”17 என்று பொருள் தருகின்றது. சேந்தன் திவாகரம்,
    “அலவன், நள்ளி,குளிர், ஞெண்டு, ஆர்மதி
    களவன் என்றிவை கர்க்கடகப் பெயரே”18
    என்று நண்டிற்குரிய வேறு பெயர்களை எடுத்தியம்புகின்றன. மேல் காணப்பட்ட இரண்டிலுமே ‘குளிரம், குளிர்’ ஆகிய சொற்கள் இடம்பெற்றுள்ளன. ‘குளிறு’ எனும் சொல் இடம்பெறவில்லை.

    அடுத்ததாக அகராதியுள் சிறந்ததாகச் சொல்லப்படும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி,
    “ குளிர் – நண்டு (பிங்கலம்), குளிர் – வெண்குடை, மீனொழுங்கு (சூடாமணி),குளிர் – கர்க்கடகராசி (திவாகரம்)”19, “குளிறு – ஒளி(சூடாமணி)”20 என்று குளிர், குளிறு ஆகிய பொருள்களுக்குரிய பொருள்களை எடுத்துரைக்கின்றது.

    இங்குக் கூறப்பட்டுள்ள அனைத்து நிகண்டுகளும் ‘குளிர்’ என்பதே நண்டு எனும் பொருளுடையது என்று கூறுவதைப் பார்க்கும் பொழுது ‘குளிறு’ என்பதைப் பாடம் கொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது.

    உ.வே.சா.விற்கு நிகண்டுகளில் நல்ல புலமை உண்டு என்பதை அவருடைய என் சரித்திரத்தின் வாயிலாக அறியமுடியும். ஆனால் அவ்வாறு நிகண்டுகளில் பரிட்சயம் பெற்றிருந்தும் அவர் ‘குளிர்’ எனக் கொள்ளாமல் ‘குளிறு’ எனப் பொருள் கொண்டுள்ளது கேள்விக்குறியாக அமைகிறது. இக்கருத்து செந்தமிழ்ச் சொற்பிறப்பியலைப் பதிப்பித்த வையாபுரிப்பிள்ளைக்கும் பொருந்தும். அவர் பதிப்பித்த அகரமுதலியில் ஒரு இடத்தில் கூட ‘குளிறு’ என்பதற்கு ‘நண்டு’ என்று பொருள் குறிக்கப்படவில்லை என்பதும் நினைவிற் கொள்ளத்தக்கது.

    நிகண்களுக்குப் பின்னால் வந்த தமிழ்-தமிழ் அகரமுதலி, சங்க இலக்கியச் சொல்லடைவு, கழக அகராதி, சங்க இலக்கியச் சொல்லகராதி போன்றவற்றில்தான் ‘குளிறு’என்பதற்கு ‘நண்டு’ எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

    ஆனால் சண்முகம் பிள்ளையால் உருவாக்கப்பட்ட தமிழ் – தமிழ் அகரமுதலி “குளிறு – ஒலி”21 என்றே பொருள் தருகின்றது.

    சங்க இலக்கியச் சொல்லடைவு “குளிறு – குறுந்.: 2-4;22 என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும் பொழுது ‘குளிறு’ எனும் சொல் குறுந்தொகையைத் தவிர பிற சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லை. இதனால் உ.வே.சா.வும் வையாபுரிப்பிள்ளையும் ‘குளிறு’ என்று பொருள் கொண்டு பதிப்பித்ததற்குப் பின்பே இச்சொல் அகராதிகளுள் ஏறியுள்ளது.

    இக்கருத்துக்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது எழுகுளிர் என்று உ.வே.சா.வும், வையாபுரிப்பிள்ளையும் கொண்டுள்ள ‘எழுகுளிறு’ எனும் பாடம் ஏற்புடையதாக அமையவில்லை. பொ.வே.சோ.வும் இராகவையங்காரும் கொண்ட ‘எழுகுளிர்’ என்பதே பொருத்தமாக அமைகிறது.

    முடிபுகள்

    பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர்களிடையே பாடவேறுபாடு ஏற்படுவது இயற்கையானதே. ஆனால் அவ்வாறு அவர்கள் கொண்டுள்ள பாடம் பொருத்தமானதா என்பதை ஆராயும் நோக்கில் குறுந்தொகையின் இருபத்திநான்காம் பாடலின் நான்காம் அடியில் இடம்பெற்றுள்ள ‘எழுகுளிறு’ எனும் வார்த்தை ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

    ‘எழுகளிறு’, ‘எழுக்களிறு’ , ‘எழுகுளிறு’, ‘எழுக்குளிறு’, ‘எழுகுளிர்’ என ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்பெனப்பட்டதைப் பாடமாகக் கொண்டாலும், பாடபேதமாகக் கொண்டவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளதே பின்னாளில் வரும் ஆய்வாளர்களுக்கு ஆய்வுக்களமாக அமைகிறது.

    ‘எழுகளிறு’ என சௌரிப்பெருமாள் அரங்கனும், மு.சண்முகம் பிள்ளையும் கொண்ட பாடம் (உவமை) பாடலின் கருத்தைத் தெளிவுபடுத்துவதற்குப் பொருத்தமாக அமையவில்லை.

    ‘எழுகுளிறு, ‘எழுகுளிர்’ என்பவற்றுள் நிகண்டுகளின் துணைகொண்டு பார்க்கும் பொழுது ‘குளிர்’ என்பதே ‘நண்டு’ எனும் பொருண்மையில் அமைவதால், உ.வே.சா., மற்றும் வையாபுரிப்பிள்ளை ஆகியோர் எடுத்தாண்ட ‘எழுகுளிறு’ எனும் பாடம் ஏற்புடையதன்று என்பதை அறியமுடிகிறது.

    குறிப்புகள்

    1. நன்னூல் எழுத்து, பொதுப்பாயிரம், நூ.7;1-2
    2. சௌரிப்பெருமாள் அரங்கன் (உ.ஆ), நா. சந்திரசேகரன்,
    (ப.ஆ),குறுந்தொகை உரையுடன், ப.42
    3. உ.வே.சாமிநாதையர் (உ.ஆ), குறுந்தொகை, ப.63
    4. மு.சண்முகம் பிள்ளை (உ.ஆ), குறுந்தொகை மூலமும் உரையும், ப.27
    5. பொ.வே.சோமசுந்தரனார் (உ.ஆ), குறுந்தொகை மூலமும் உரையும், ப.62
    6. எஸ்.வையாபுரிப்பிள்ளை(ப.ஆ), சங்க இலக்கியம் முழுவதும்
    (பாட்டும் தொகையும்), இரண்டாம் தொகுதி, ப.708
    7. இரா.இராகவையங்கார் (உ.ஆ), குறுந்தொகை விளக்கம்,ப.65
    8. மு.சண்முகம் பிள்ளை (உ.ஆ), முன்னூல், ப.374
    9. உ.வே.சாமிநாதையர் (உ.ஆ), குறுந்தொகை, முகவுரை,ப.6
    10. மேலது,ப.63
    11. பொ.வே.சோமசுந்தரனார்(உ.ஆ), முன்னூல், ப.63 &
    இரா.இராகவையங்கார் (உ.ஆ), முன்னூல்,ப. 66
    12. சௌரிப்பெருமாள் அரங்கன் (உ.ஆ), நா. சந்திரசேகரன்,
    (ப.ஆ),முன்னூல், ப.42
    13. மு.சண்முகம் பிள்ளை (உ.ஆ), முன்னூல், ப.27
    14. தொல்காப்பியம்,பொருளதிகாரம், உவமவியல்,நூ.8
    15. பொ.வே.சோமசுந்தரனார் (உ.ஆ),முன்னூல்,ப.63
    16. இரா.இராகவையங்கார் (உ.ஆ), முன்னூல்,ப.66
    17. tamilvu.org ( தமிழ் இணையக் கல்விக் கழகம்), சூடாமணி நிகண்டு,ப.79
    18. tamilvu.org ( தமிழ் இணையக் கல்விக் கழகம்), சேந்தன் திவாகரம்,ப.73
    19. tamilvu.org (தமிழ் இணையக் கல்விக் கழகம்), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
    பேரகரமுதலி,ப.1041
    20. மேலது,ப.1042
    21. tamilvu.org (( தமிழ் இணையக் கல்விக் கழகம்), தமிழ் – தமிழ் அகரமுதலி ,ப.359
    22. tamilvu.org ( தமிழ் இணையக் கல்விக் கழகம்), சங்கஇலக்கியச் சொல்லடைவு,ப.542

    துணைநின்ற நூல்கள் மற்றும் இணையத்தளம்

    1.இராகவையங்கார்,ரா.,(உ.ஆ) – குறுந்தொகை விளக்கம்
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
    முதற்பதிப்பு – 1993
    2.இளம்பூரணர் (உ.ஆ) – தொல்காப்பியம் மூலமும் உரையும் –
    பொருளதிகாரம் (மூன்றாம் பகுதி)
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்,
    சென்னை – 600018, பதிப்பு – 2004
    3.கழகப் புலவர்குழு – தமிழ் அகராதி,
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ
    சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
    சென்னை. மூன்றாம் பதிப்பு, 1974.

    4.கழகப் புலவர்குழு – நன்னூல் காண்டிகையுரை – எழுத்ததிகாரம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
    சென்னை. பதிப்பு, 2002

    5.சண்முகம் பிள்ளை,மு., (ப.ஆ) – குறுந்தொகை மூலமும் உரையும்
    தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு – 1994

    6.சாமிநாதையர், உ.வே., (உ.ஆ) – குறுந்தொகை
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
    (திருப்பனந்தாள் காசிமட நிதிய வெளியீடு)
    முதற்பதிப்பு – 1983

    7.சோமசுந்தரனார், பொ.வே., – குறுந்தொகை மூலமும் உரையும்,
    (உ.ஆ.) திருநெல்வேலி தென்னிந்திய சைவ
    சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
    522, டி.டி.கே. சாலை, சென்னை. மறுபதிப்பு,2007

    8.சௌரிப்பெருமாள் – குறுந்தொகை விளக்கம்
    அரங்கன்,(உ.ஆ),& முல்லைநிலையம்,
    சந்திரசேகரன், நா., (ப.ஆ) 9, பாரதிநகர் முதல்தெரு,
    தி.நகர், சென்னை-600017
    மறுபதிப்பு,2008

    9.வையாபுரிப் பிள்ளை,எஸ்..,(ப.ஆ) – சங்க இலக்கியம் முழுவதும் ( பாட்டும்
    தொகையும்), இரண்டாம் தொகுதி,
    முல்லைநிலையம்,9, பாரதிநகர் முதல்தெரு,
    தி.நகர், சென்னை-600017,மறுபதிப்பு,2010

    10. இணையத்தளம் – tamilvu.org ( தமிழ் இணையக் கல்விக் கழகம்)
    (நிகண்டுகள், சொல்லடைவு, அகரமுதலி
    ஆகியவற்றின் பார்வைக்கு மட்டும்)

    Share