Category: பொது

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (252)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். வாரமொன்று ஓடியது. மடலொன்று தவறியது. மீண்டும் அடுத்த மடலுடன் உங்கள் முன்னால் வந்திருக்கின்றேன். இருக்கும்போது தெரிவதில்லை இழக்கும் போதுதான் புரிகிறது. இது வாழ்க்கையில் பலவற்றிற்குப் பொருந்தும். எம்முடன் இருப்போரை, அல்லது எம்முடன் இருப்பவைகளை அவை எப்போதும் இருக்கும் தானே எனும் எண்ணத்தில் பெரிதாகக் கணக்கில் ஒன்றும் எடுத்துக் கொள்வதில்லை. இது மனித வாழ்க்கையில் அனைவருக்கும் ஏதோ ஓர் இடத்தில் நிகழ்கிறது. அதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கானவனில்லையே! என்ன எதைச் சக்தி கணக்கிலெடுக்காமல் விட்டு விட்டேன் என்று எண்ணுகிறீர்களா?

    சில வருடங்களுக்கு முன்னால் எனது இடது கண்ணில் ” யூவீஜட்டிஸ் ( Uveitis ) “என்றழைக்கப்படும் ஒரு நோய் வந்தது. இதன்போது கண் சிவப்பாகும், சூரியஒளியையோ அன்றி மின்விளக்கையோ நேரடியாகப் பார்க்கும்போது கண் வலிக்கும். இதற்கு உடனடியாகத் தகுந்த வைத்தியம் எடுக்காவிட்டால் கண்பார்வை வெகுவாகப் பாதிக்கப்படும்.

    ஹாஸ்பிட்டலுக்குச் சென்று வைத்தியம் செய்து கொண்டேன். ஆனால் இரண்டு மூன்று மாத இடைவெளிகளில் இந்நோய் திரும்பத் திரும்ப எனது இடது கண்ணைத் தாக்கியது. இதன் பின்னணிக் காரணத்தைக் கண்டறிய பலவிதமான பரிசோதனைகளை நடத்தியும் சரியான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து ஒன்றரை வருடத்துக்கு மேலாக கண்ணில் “ஸ்டெரோய்ட் (Steroid)“ஐ அடிப்படையாகக் கொண்ட மருத்தை இடது கண்ணில் உபயோகித்து வந்தேன். இதன் பக்கவிளைவு ” கண்புரை (Cateragh)” மிகவும் விரைவாக வளர்வது. அதன் காரணமாகச் சிறிது, சிறிதாக எனது இடது கண்பார்வை குறைந்து எதையும் இடது கண்ணால் பார்க்க முடியாது எனும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். இடது கண்பார்வையைச் சரி செய்வதற்காக இடது கண்ணில் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறினார்கள்.

    அறுவை சிகிச்சைக்கான திகதி அக்டோபர் 17ஆம் திகதி. இது மிகவும் பொதுவான, இலகுவான சிகிச்சை என்றாலும் மனதினில் உள்ளூர ஒரு சிறிய பயமிருந்தது. கண்பார்வை போய்விட்டால் . . . இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டேன். என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். அந்த நாளும் வந்தது காலை எட்டு மணிக்கு ஹாஸ்பிட்டலுக்கு வரும்படி பணித்திருந்தார்கள். காலையில் 7:15 மணிக்கு எனது மனைவியுடன் ஹாஸ்பிட்டலுக்குப் புறப்பட்டேன். அநேகமாக அன்றைய அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் நான் தான் முதலாவதாகச் சென்றிருப்பேன் போலும். அங்கிருந்த நர்ஸ் என்னை உள்ளே அழைத்து இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, இரத்த குளுக்கோஸ் அளவு என்பவற்றைக் குறித்துக் கொண்டு எனது பெயர் எழுதப்பட்ட பட்டியை எனது இடது கணுக்கையில் கட்டி விட்டார்.அதன் பின்பு மனைவியுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.

    சுமார் 30 நிமிடங்களின் பின் என்னை உள்ளே அழைத்து ஒரு நர்ஸ் எனக்கு என்ன சிகிச்சை நடைபெறப் போகிறது என்பதை விளக்கி விட்டு இடது கண்ணுக்குள் சில மருந்துத்துளிகளை விட்டுவிட்டுக் காத்திருக்கச் சொன்னார். அதன் பின்னால் டக்டருடனான சம்பாஷணை. கண்களை ஒரு இயந்திரம் கொண்டு பரிசோதித்து விட்டுத் தாம் கூப்பிடும்வரை காத்திருக்கச் சொன்னார். எனக்கு முன்னால் ஒரு எழுபது வயது மதிக்கத்தக்க ஆங்கிலேயரை ஆபரேஷன் தியேட்டர் உள்ளே அழைத்துச் சென்றார்கள். மணியைப் பார்த்துக் கொண்டேன்.அடுக்கடுக்காக அன்றைய சிகிச்சைக்காக மேலும் பலர் வந்து அதே அறையில் நான் சென்ற அதே நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு அங்கே உட்கார்த்தி வைக்கப்பட்டார்கள். சிலர் சக்கர நற்காலிகளிலும் வந்திருந்தார்கள். எனக்கு அருகே உட்கார்ந்திருந்த ஆசிய மனிதரின் கைபேசி ஏதோ ராகத்தில் அவரையழைத்தது. அங்கே அமர்ந்திருந்த தாதி அவர் மீது ஒரு கடினப்பார்வை வீசினார். ஆனால் அவரோ தன்பாட்டுக்கு தன் பாஷையில் கைபேசியில் அரட்டை அடித்தார்.

    சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னால் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட ஆங்கிலேயர் சக்கரநற்காலியில் உட்கார்த்தி அழைத்து வரப்பட்டார். அவரது இடது கண் மூடிக்கட்டப்பட்டிருந்தது. அனைவரும் அவரது முகத்தைப் பார்த்தார்கள் அவர் அனைவரையும் பார்த்துப் புன்னகைத்தார். அனைவரும் பெருமூச்சு விட்டார்கள். ஆசிய மனிதர் அந்த ஆங்கிலேயரிடம் ஆபரேஷன் நடக்குப்போது எப்படி இருந்தது? வலித்ததா? என்றெல்லாம் கேட்டார். இல்லை எதுவுமே தெரியவில்லை என்றார் அந்த ஆங்கிலேயர். மீண்டும் அதே ராகத்தில் கைபேசி பாடியதும் இப்போது தாதி மட்டுமல்ல அனைவரும் ஆசிய மனிதரை நோக்கி ஓர் கடினப்பார்வையை வீசினர். புரிந்து கொண்ட ஆசிய மனிதர் கைபேசியை மூடிப் பைகளில் திணித்துக் கொண்டார்.

    நான் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டேன்.  மனைவியிடம் சொல்லிக் கொண்டு பலிக்குச் செல்லும் ஆட்டுக்கடா போலச் சென்றேன். ஆபரேஷன் அறைக்குள் முதலில் விறைப்பு மருந்து விடும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். நான் உட்கார்ந்திருந்த நாற்காலியே ஒரு கட்டிலைப் போல விரிந்தது. இரண்டு ஆசியப் பெண் டாக்டர்கள் நின்றார்கள். இருவரும் எனது பெயர் , பிறந்த திகதி ஆகியவற்றை என்னிடம் கேட்டுச் சரிபார்த்த பின்னால் அவர்களில் ஒருவர் என் கண்களில் இரண்டு மூன்று சொட்டுத் துளிகளாய் மருந்திட்டார். எனது கண் உணர்வுகள் மரத்துப் போகும் வரை அவர்கள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். தாமிருவரும் எப்போது இந்தியாவுக்கு விடுமுறையில் போகப்போகிறார்கள் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். என் கண் உணர்வுகள் மரத்துப் போனதும் ஒரு ஊசி மூலம் மேலும் மருத்தை எனது விழிகளுக்குள் செலுத்தியது போலிருந்தது ஆனால் ஒருவிதமான உணர்வும் இருக்கவில்லை.

    அப்படியே அடுத்த அறையினுள் தள்ளிச் செல்லப்பட்டு மற்றொரு பெண்வைத்தியரிடம் கையளிக்கப்பட்டேன். பின்னணியில் ஆங்கில மென்மையான இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்படும் கண்ணுக்கு மட்டும் இடைவெளி விட்டு விட்டு ஒரு முகத்தை மறைக்கும் துணி விரிக்கப்பட்டது. இரு கூரிய வெளிச்சம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. தான் இப்போது கண்புரையை அகற்றி விட்டுச் செயற்கை லென்ஸ் பொருத்தப் போவதாகக் கூறிய பெண் வைத்தியர் சிகிச்சையில் ஈடுபட்டார். சுமார் நாற்பது நிமிடங்களில் அனைத்தும் முடிந்தது. சிகிச்சை முடிந்த கண் மட்டும் கட்டப்பட்டு நான் வெளியே அழைத்து வரப்பட்டேன். அழைத்து வந்த நர்ஸ் மிகவும் அன்பாக என் மனைவியை அழைத்து என் அருகில் அமர்த்தி விட்டு தேநீர், பிஸ்கட் ஆகியவற்றைக் கையளித்தார். எனது நிலையை அக்கறையோடு என் மனைவி விசாரித்தார். சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னால் மீண்டும் நர்ஸ் எனது இரத்த அழுத்தம், குளுக்கோஸ் ஆகியவற்றை அளந்து குறித்துக் கொண்டார். எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கித் தேவையான மருந்துகளைத் தந்து விட்டு அடுத்தநாள் காலை கண்கட்டுகளை அவிழ்க்கலாம் , கண்பார்வையில் பிரச்சனை இருந்தால் மட்டும் மீண்டும் வைத்தியசாலைக்கு வரும்படி கூறி வீட்டுக்கு அனுப்பினார்கள்.

    அடுத்தநாள் காலை எனது மனைவி தெரிந்த இறைவனின் பெயர்களையெல்லாம் அழைத்துத் துதித்த பின்னால் நம்பிக்கையோடு என் கண்கட்டை அவிழ்த்தேன். அப்பப்பா! இப்படிக்கூட அழகாகப் பார்க்கலாமா? எனும் அளவுக்கு எனது கண்பார்வை திரும்பியிருந்தது. ஆமாம் நண்பர்களே நாம் இழக்கும் வரை ஒன்றினதும் அருமை எமக்குப் புரிவதில்லை அது எமது உடல் உறுப்புக்களாக இருந்தால் கூட . . . கடந்தவாரம் எனது மடல் தவறிய காரணம் இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் இல்லையா?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • நேற்றைய நாளுக்கு ஏக்கம்!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++++

    jaya

     

    நேற்று எனது
    தொல்லைகள் எல்லாம் தெரிந்தன,
    வெகு வெகு
    தூரத்தில் இருப்பதாய்!
    இப்போது அவை எல்லாம்
    நிலைக்கப் போவதாய்
    கலக்கு தென்னை!
    நேற்றைய தினத்தை நம்பிக்
    கிடந்தேன்!

    திடீரென முன்பு இருந்ததில்
    அரை மனிதனாய்க் கூட நானில்லை!
    ஒரு கரிய நிழல் என்மீது
    படர்ந்துளது!

    அந்தோ!  திடீரென
    நேற்றைய தினம் வந்தது என் முன்னால்!
    ஏனவள் போக வேண்டுமென
    நானறியேன்! ஏன்
    அவளிங்கு தங்க வில்லை!
    தவறாய் ஏதும் சொல்லி விட்டேனா?
    இப்போது நான் ஏங்கித் தவிப்பது
    நேற்றைய தினத்துக்கு!

    காதல் விளையாட் டெனக்கு எத்தனை
    எத்தனை எளிதாய் இருந்தது,
    நேற்றைய தினத்தில்
    இப்போது நான் ஒளிந்து கொள்ள
    இடம் ஒன்று தேவை!
    அந்தோ!
    நேற்றைய தினத்தை நான்
    நம்பினேனே!

     

     

    Share
  • ஞானச் சுடர் [2]

    -இன்னம்பூரான்
    அக்டோபர் 25, 2017

    innam

    பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா எனப்படும் பாரதவர்ஷம் முழுவதையும் ஒரு மன்னர்பிரான் ஆண்டுவந்தார். வெண்குடை, கிரீடம், சாமரம், சிம்மாசனம், செங்கோல் போன்ற அரசாட்சி சின்னங்களும், பட்டு, ஜரிகை, பீதாம்பரம் போன்ற படாடோப ஆடைகளும், ஜொலிக்கும் வைரம், மரகதம், வைடூர்யம், பவழம், நன்முத்து போன்றவை மாசறு பொன்னில் பதித்த அணிகலன்களையும் அணிந்து அவன் யானை மீது அமர்ந்தோ, குதிரை சவாரி செய்தோ, இரதத்தில் பவனி வந்தோ, அந்தப்புரத்திலிருந்து அரண்மணை தர்பார் மண்டபத்துக்கு வருவது கண்கொள்ளாக்காட்சி என்று மக்கள் கூறுவர். ராஜகுரு, மந்திரிமார், தளபதி ஆகிய உயர் அதிகாரிகள் நாணயத்துக்கும், வாய்மை அணுகுமுறைக்கும், மக்கள் நலத்துக்கு உழைப்பதற்கும், ராஜவிசுவாசத்திற்கும் அழியாப்புகழ் பெற்றவர்கள். சுற்று வட்டாரங்கள் அவரவர் பொறுப்புகளைக் கவனத்துடன் சிறப்பாக ஆற்றுவதில் ஈடு, இணை இல்லாதவர்கள். சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு கிடையாது. தகுதிக்கு மட்டும் தான் மதிப்பு. சிபாரிசு என்பது மன்னனுக்கு ஒவ்வாதது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருந்தது என்று பேசிக்கொள்வார்கள்.

    அந்தக்காலத்தில் பல மனைவிகளை மணந்து கொள்ளும் வழக்கம் கிடையாது. ஆகவே, மஹாராணி என்ற அந்தஸ்து ஒரே ஒரு அழகிய பெண்மணியை மட்டும் சாரும். அவரும் சுயம்வரத்தின் போதுதான் இவரைத் தேர்ந்தெடுத்தார். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்ற உலகவழக்குக்கிணங்க, அந்தப்புரத்தில் அவள்தான் ராணி. ராஜா அவளை தாஜா பண்ணுவதே ஒரு சுவையான காட்சி என்று தாதிகள் தங்கள் தங்கள் கணவர்களிடம் கூறி, அடக்கி ஆள்வார்கள். அலங்காரத்தில், அரசனை விட ஓர் இம்மி அளவு குறைவு இல்லை என்றாலும், அவர் குணவதி. ராஜகுமாரி அரசுப்பள்ளியில் தான் படித்துவந்தாள். மதிய உணவு அரண்மணையிலிருந்து வராது. மற்றவர்களுடன், அவளும், வரகுச்சோறு, கம்பங்கூழ், கேழ்வரகு அடை, தினைப் பாயசம் போன்றவற்றை உண்டு ஆரோக்யமாக இருந்தாள். செல்வனின் மூதாதையர்கள் கூடப் பிறவாத காலமது. பேலியோ டயட் நடைமுறைக்கு வரவில்லை. பசுஞ்கன்றுகளும் சேஃப்; பன்றிக்குட்டிகளும் சேஃப்; மீன்குஞ்சுகளும் சேஃப்; காடை கெளதாரிகளும் சேஃப். வாத்துக்கள் அன்னநடை போட்டன. புலியும் ஆடும் நட்பு பாராட்டி ஒரே ஓடையில் நீர் பருகின. ஆனாலும், பக்கத்து ராஜாங்கத்தில் சிலர் மர்மமான பேலியோர்கள் என்று இலைமறைவு காய்மறைவாகச் சொல்லப்படுவது உண்டு. இது நிற்க.

    சுருங்கச்சொல்லின், அரசாட்சியின் மேன்மை பாதரசக்கண்ணாடி போல் மக்கள் முகத்தில் மகிழ்ச்சியாகத் திகழ்ந்தது. இப்படியிருக்கும்போது ராஜாவின் முகம் ஒருநாள் இருண்டது. அவர் கவலையில் ஆழ்ந்து விட்டதைக் கண்டு, ராணியும், ராஜகுமாரியும் கண்கலங்கினர். தாதிகள் மூலம் ட்விட்டர் துணுக் போன்றவைத் தற்கால டெங்குவைவிட வேகமாகப் பரவியதால், மக்களும் யாது செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அரண்மனைக்கு எதிர்வாடையில் ஒரு மினி தர்பார் மண்டபம் உளது. அங்கு அரசர் வரும் மரபு கிடையாது. எனவே, ராஜகுரு, மந்திரிமார், தளபதி ஆகிய உயர் அதிகாரிகள் அங்கு கூடி மந்திராலோசனை செய்தார்கள்; குழப்பம் கூடியது தான் மிச்சம்.

    [தொடரும்]

    ***

    சித்திரத்துக்கு நன்றி:
    https://i.ebayimg.com/images/g/~OAAAOSwCQZZB-lj/s-l225.jpg

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(251)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். மடலோடு உங்களுடன் கலந்துரையாட விரைந்து வரும் வேளையிது. இருந்தால் இருப்போம், மடிந்தால் மடிவோம் இதுதான் உலக வாழ்க்கையின் நியதி. காலங்கள் எத்தனையோ மாறினாலும், விஞ்ஞானம் கரைபுரண்டோடினாலும் அன்றும், இன்றும் இவ்வகிலத்தில் நாமறிந்த மாற முடியாத, எம் ஒருவராலும் மாற்ற இயலாத உண்மை இதுவேயாகும். இவ்வுண்மை தினமும் எமக்குள் உறைந்திருந்தாலும் சமயங்களில் அனைத்தையும்விட நாம் தேடும் விடயங்கள் எமக்கு வாழ்வினில் முக்கியமானவைகளாக மாறிவிடுகின்றன. நிலையற்ற வாழ்வில் நாம் தேடும் பொருள்கள் மட்டும் ஏனோ நிலையானவை போலத் தென்படுகிறது. இதுதான் மனத்தின் மாயை என்று கூறப்பட்டதோ எனும் எண்ணம் மனதில் எழாமலில்லை..

    எங்கெங்கோ பிறந்தவர்கள் இன்று எங்கெங்கோ இடம் பெயர்ந்து வேறெங்கோ தம் வாழ்வினை அமைத்து வாழும் நிலை காண்கிறோம். காலக் காற்றில் அகப்பட்ட சருகினைப் போல வாழ்வின் தேவைகள் எனும் திசையில் நாம் அடித்துச் செல்லப்படுகிறோம். ஆனால் அப்படியான பிரயாணம் கூட சில கட்டுப்பாடுகள், சில கட்டுக்கோப்புகள், சில நியதிகளுக்குள் தான் நடந்தேற வேண்டுமென்ற நியதி இவ்வுலகில் விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்விதிகளை, இந்நியதிகளை வெவ்வேறு நாடுகளில் அந்த நாடுகளின் கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தார்கள். மன்னராட்சி என்று தொடங்கி இன்று மக்களாட்சி எனும் வகை ஜனநாயகம் எனும் பெயரில் பல நாடுகளில் காட்சிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேறு சில நாடுகளிலோ தனிமனித அதிகாரங்கள் சர்வாதிகாரமாக மக்களின் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்விருவகையிலான அமைப்புக்களின் தாக்கங்கள் அந்த நாடுகளில் வாழும் சாதாரண பிரஜைகளின் மீதே தெறிக்கின்றன. தமது முறையில் நியாங்களை முன்வைப்பதையே ஊடகப் பிரசாரங்கள் மூலம் அந்த நாடுகளின் அதிகார வர்க்கங்கள் இயம்பிக் கொண்டிருக்கின்றன.

    உண்மைக்குப் புறம்பான விடயங்கள், உண்மையே அல்லாத விடயங்கள் ஊடகங்களின் மூலம் நியாயப்படுத்தப்படும்போது அங்கே உண்மையின் சாட்சியங்கள் வாயடைத்துப்போய் மெளனிகளாகி விடுகின்றன.

    என்ன எதை நோக்கி எனது இவ்வார மடல் பயணிக்கிறது? எனும் கேள்வி எழுகிறதா ? சற்றுப்பொறுங்கள்… விளக்கத்துக்கு வருகிறேன்.

    இன்றைய இங்கிலாந்தின் சரித்திரம் இன்று ஒரு முக்கியமான சந்தியில் நிற்கின்றது . இது முச்சந்தியோ அன்றி நாற்சந்தியோ அல்ல; வெறும் இரண்டே இரண்டு தெருக்களைக் கொண்ட ஒரு சந்தியே. இச்சந்தியில் எந்தப் பாதையில் போவது என்பதை மக்களே நீங்களே தீர்மானியுங்கள் என்று எமது முன்னால் பிரதமர் டேவிட் கமரன் மக்களின் முடிவுக்கு 2016ஆம் ஆண்டு விட்டார். ஆனால் எந்தப் பாதையில் போகக்கூடாது என்று தான் நம்புகிறேன் என்பதையும் கூறினார். விளைவு மக்கள் தேர்ந்தெடுத்த பாதை அவர் சிபாரிசு செய்த பாதைக்கு முற்றிலும் முரணானது. இன்று அவர் பிரதம மந்திரியாகக் கூட அல்ல அரசியலை விட்டே ஒதுங்கி விட்டார். இன்றைய இங்கிலாந்து மக்களின் முன்னால் இருக்கும் கேள்வி அவரைப் பற்றியதல்ல. அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையை தேர்ந்தெடுக்கும்படி செய்யப்பட்ட பிரசார கர்த்தாக்கள் உண்மைகளை உண்மையாக அவர்களுக்கு புடம் போட்டுக் காட்டினார்களா? அன்றி உண்மைகளின் தோற்றத்துக்கு மெருகேற்றி அவைகளை மிகைப்படுத்தப்பட்ட உண்மைகளாகக் காட்டினார்களா ?என்பதுவே ! ஒருவர் அரசியலுக்குள் நுழைவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு.

    1. ஒரு கொள்கை மீது கொண்ட தீவிரமான பிடிப்பு
    2. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் உன்னத நோக்கம்
    3. தம் தேசத்தின் மீது கொண்ட பற்று

    இங்கு எது முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் பொறுத்தே அவர்களின் அரசியல் பிரவேசத்தின் உண்மையான பரிணாமம் விளங்கப் பெறுகிறது. நாடும், மக்களும் எக்கேடு கெட்டுப் போனாலும் நான் கொண்ட கொள்கை வெற்றி பெற்றால் அதுவே என் வெற்றி என்று நினைப்பவர் ஒரு புறம், மக்களின் நன்மைக்காக, எனது தேசத்தின் சுபிட்சத்துக்காக எனது கொள்கை குறுக்கே வரும்போது அதைக் கொஞ்சம் மாறுதலுக்குள்ளாக்கி ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்கள் மறுபக்கம் நின்று மக்களுக்காக, மக்களையே குழப்பும் ஒரு நிலைக்கு இன்றைய இங்கிலாந்து மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றொரு உணர்வு எழுகிறது.

    ஒரு தொண்டனுக்குக் கொள்கையும், கட்சியும் முக்கியம் என்பது மறுக்கப்பட முடியாதது. ஆனால் நாடு சீரழியப் போகிறது எனும் ஒரு நிலை வரும்போது தமது கட்சி பேதங்களை ஒருபுறம் தள்ளி ஒருமைப்பட்ட குரலில் , தமது வலுவினைக் காட்டி தமது நாட்டிற்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் மன தைரியம் இன்றைய இங்கிலாந்து முக்கியக் கட்சிகளின் தலைவர்களுக்கு உண்டா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

    “ப்ரெக்ஸிட்” எனும் பாதையில் இங்கிலாந்தின் எதிர்காலப் பயணம் அமையப்போகிறது என்பதை மக்கள் தீர்மானித்த பின்னர் இப்பாதையில் பயணிப்பதற்கு அதன் கரடு முரடான பாதையின் குலுக்கல்களைச் சந்திப்பதற்கு பயணப்படும் வாகனம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு நடத்தப்படும் பேச்சுக்களில் இங்கிலாந்து ஒரு வலுவற்ற நிலையில் கலந்து கொள்ளுமேயாகில் அப்பேச்சுக்களினால் விளையப் போகும் முடிவுகள் பயணத்தை இலகுவாக்க உதவாது. இன்று இங்கிலாந்துப் பிரதமர் தெரேசா மே அவர்களைக் கவிழ்க்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்குவது எதிர்பார்க்கக்கூடிய விடயமென்றாலும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே தமது சுயலாபங்களுக்காக அவரது முதுகில் குத்தும் முயற்சியில் இறங்குவது நடுத்தரமான நிலையில் நாட்டின் பொருளாதார நிலையை நோக்கி கவலைப்படுவோரை கலங்க வைக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. எமது படையை வழிநடத்தும் தளபதியை நாமே காயப்படுத்தி விட்டு எதிரணியில் இருப்பவர்களுடன் வலுவான நிலையில் எதிர்ப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனமான செயல்.

    இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகித் தனியான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய காலக்கெடுவின் இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. எமது எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கை ஒரு நிலையான அடித்தளத்தில் உருவாக்கப்பட வேண்டுமென்றால் இன்று எம்முன்னே இருக்கும் கடமை தெளிவானது. கட்சி பேதங்களை மறந்து எமது பிரதமருடன் ஆரோக்கியமான வாதங்களை முன்வைத்து அவருடைய ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சு வார்த்தைகளின் வெற்றிக்கு எமது பக்கபலத்தை அளிப்பது முக்கியமானது. எமது பிரதமர் முதலில் எமது ஆதரவுடன் எம்மால் எதிர்பார்க்கப்பட்ட வகையில் இப்பேச்சுகளை வெற்றியாக முடித்து எம்மை சரியான பாதையில் பயணிக்க வைக்கட்டும். அதன் பின்னால் நாம் எமது உள்நாட்டு அரசியல் சகோதரச் சண்டைகளை வாக்குப் பெட்டிகளின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

    “நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு?
    நாமென்ன செய்தோம் அதற்கு என நினைத்தால் நன்மை எமக்கு!
     “

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • தமிழிசைப் பண்கள் – முத்துத்தாண்டவர்

    -சிறீ சிறீஸ்கந்தராஜா

    தமிழிசைப்பண்கள்
    **********************

    இசைத்தமிழின் தொன்மை – 80
    பழந்தமிழிசையில் பண்கள் 

    தமிழ் மும்மூர்த்திகள்
    *************************

    முத்துத் தாண்டவர் (1525-1625)
    அருணாசலக் கவிராயர் (1711-1779)
    மாரிமுத்துப் பிள்ளை (1712-1787)

    முத்துத் தாண்டவர் (1525-1625)

    muthuமுத்துத் தாண்டவர் (1525-1625) என்பார் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி ஆவார். ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன.

    ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள்:

    அருணாசலக் கவிராயர் (1712-1779),
    மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787),
    முத்துத் தாண்டவர்(1525-1625) ஆவர்.

    தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து கிருதி வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில் முத்துத்தாண்டவர் இருந்ததால், இந்த முன்னேற்றத்தில் அவருக்கும் பெரும் பங்கு உண்டெனச் சொல்லலாம். 

    அநுபல்லவியை இணைத்து, பல்லவி – அநுபல்லவி – சரணம் என்ற திரிதாது (திரி-மூன்று) முப்பிரிவு முறையை, தாளத்துக்கும் கதிக்கும் பொருந்தி முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவரே ஆவார். 

    பின் வந்தோர் அனைவருமே இதனை ஏற்றுக் கொண்டதால், கீர்த்தனை மரபின் பிதாமகர் என்றே கருதப்படுகின்றார். 

    இன்றைய கர்நாடக சங்கீதத்தின் நிறுவனராகவே முத்துத்தாண்டவரை மு.அருணாசலம் என்னும் இசை அறிஞர் சொல்கிறார். 

    பல்லவி-அநுபல்லவி-சரணம் என்னும் வடிவத்தில், ஜதி தாளக்கட்டுடன் இயற்றப்பட்ட பாடல்களை முத்துத்தாண்டவர் இயற்றிட அதுவே பிற்காலத்தில் வழக்காக மாறியது.

     இவரின் பாடல்கள் பல பதம் என்கிற வகையினைச் சாரும். இவை பெரிதும் நாட்டியத்திற்காகப் பயன்படுத்தப்படும் பாடல்கள் ஆகும். 

    மேலோட்டமாக சிருங்கார ரசமும், ஆழமாகப் பார்த்தால் தெய்வீக பக்தியைத் தரும் பதங்கள் அந்தக் காலகட்டத்தில் பிரபலம். அவற்றை உள் வாங்கிக்கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார். 

    முத்துத் தாண்டவர் மாணிக்கவாசகரைப் போல் தில்லைப் பெருவெளியில் மறைந்தருளினார் என்று சொல்லப்படுகின்றது. இவர் ஏராளமான இசைப் பாடல்களை இயற்றியுள்ளார். 

    இயற்றிப் பாடிவந்த பாடல்களில் சில: 

    பூலோககயி லாசகிரி சிதம்பரம்மல்லாற்,
    புவனத்தில் வேறுமுண்டோ.

    இராகம் கல்யாணி, தாளம் – ஜம்பை தாளம்

     ஈனமொருஸ்தல மின்னமொருகோயி, லின்னமொரு
    தெய்வ மிப்படியுண்டோ.

    இராகம் – தோடி, தாளம் – ஏக தாளம்

     சேவிக்க வேண்டுமையா – சிதம்பரம், சேவிக்க வேண்டுமையா. இராகம் -ஆந்தோளிகா, தாளம் ஆதி தாளம். 

    சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும்.
    இராகம் – நீலாம்பரி, தாளம் – திரிபுடை தாளம் 

    நடனங்கண்ட போதேயென்றன் சடலஞ்செய், பாக்கியமையா. இராகம் – ஆகிரி, தாளம் – ஆதி தாளம் 

    இவரது இயற்பெயர் தாண்டவர். இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். தில்லை ஆண்டவரை நினைத்து, தாண்டவம் ஆடுபவரான அவருடைய அழகை எண்ணி, அந்தப்பெயரையே பிள்ளைக்கும் வைத்தார்கள். 

    தாண்டவரை வாலிபப் பிராயத்தில் திடீரென என்னவென்றே அறியமுடியாத நோய் ஒன்று தாக்கியது. தொழுநோய் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட அவர், ஆதரவுக்காய் ஏங்கித் தவிக்கையில், சிவபாக்யம் என்ற தேவதாசிக் குலத்தில் பிறந்த பெண்ணின் பரிச்சயம் அவருக்குக் கிட்டியது. 

    சிவபெருமானின் புகழைப் பாடல்களாய்ப் பாடிய சிவபாக்யத்தின் குரலின் இனிமை அவரது துக்கத்தைப் பெரிதும் தணித்தது. நாளடைவில், சிவபாக்யத்தின் வீட்டிற்கு செல்வது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. அவரது குடும்பத்தினர் எத்தனையோ எடுத்துக் கூறியும், தாண்டவர் தன் பழக்கத்தை விடுவதாக இல்லை. இதனால் கோபமுற்ற அவர் குடும்பத்தினர், அவருக்கு உணவு அளிக்கக் கூட மறுத்தனர். 

    அப்பொழுது, ஒரு வேளைமட்டும் சிவன் கோயில் பிரசாதத்தை உண்டு விட்டு, மற்ற நேரங்களில் பட்டினியாகவே கிடந்தார். இதனால் ஏற்கெனெவே நலிவுற்றிருந்த அவர் உடல் மேலும் மோசமடைந்தது. 

    ஒரு நாள், சீர்காழி கோயிலில், சிவனை வழிபட்டுத் திரும்புகையில், உடல் தளர்ந்து, சிவபெருமானின் வாகனங்கள் வைத்திருந்த அறைக்கு அருகில் தள்ளாடி விழுந்தார். மெல்ல அந்த அறைக்குள் தவழ்ந்து சென்றவர் சற்றைக்கெல்லாம் நினைவிழந்தார். 

    இவர் மயங்கிக் கிடப்பதை கவனியாமல், விளக்கை அணைத்துவிட்டு கோயில் குருக்கள் கதவைப் பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து அறிவுற்ற தாண்டவர், தன் நிலையை உணர்ந்து கலங்கினார். உள்ளே கொலுவிருந்த பிரும்மபுரீஸ்வரரை நோக்கிக் கதறினார். தனக்கு ஆதரவளிக்கும்படி இறைஞ்சினார். 

    அழுது அழுது சோர்ந்து படுத்தவரை, சற்றைக்கெல்லாம் ஒரு சிறுமி வந்து எழுப்பினாள். விழித்துப் பார்த்த தாண்டவர், அவள் குருக்களின் மகள் என்பதைக் கண்டு கொண்டார். 

    தன் கையில் இருந்த பாத்திரத்தில் கொணர்ந்த உணவை தாண்டவருக்கு அளித்து, அவர் உண்டு முடித்ததும், அவருக்கு என்ன குறை என்று வினவினாள். தன் குறையைச் சொல்லி அழுத தாண்டவரைத் தேற்றி, சிதம்பரத்துக்குச் சென்று, அங்கு வீற்றிருந்த நடராஜப் பெருமானை நோக்கி, ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் புனையுமாறு பணித்தாள். 

    தனக்கு பாட்டேதும் புனையத் தெரியாதெனச் சொன்ன தாண்டவருக்கு, கோயிலில் தினமும் அவர் பார்க்கும் முதல் பக்தர் வாயில் இருந்து வரும் வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு பாடல் புனையுமாறு ஆலோசனை கூறி மாயமாய் மறைந்துவிட்டாள் அச்சிறுமி. 

    முத்துத்தாண்டவர், சிதம்பரத்தை நோக்கிப் பயணமானார். சிதம்பரத்தை அடைந்ததும் அவர் காதில், ‘பூலோக கைலாயகிரி சிதம்பரம்’ என்ற சொற்கள் விழுந்தது. அதையே தொடக்கமாக வைத்து ஒரு பாடலைப் புனைந்தார். அவர் முழுப்பாடலை பாடி முடித்ததும் ஐந்து பொற்காசுகள், அவர் நின்றிருந்த படிக்கருகில் தோன்றின. 

    ஈசன் மனம் கனிந்து அளித்ததை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு நாளும் அவர் காதில் விழுந்த முதல் வார்த்தையைக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தவாறு காலம் தள்ளினார் முத்துத்தாண்டவர். 

    நாள்தோறும் சீகாழியிலிருந்து சிதம்பரம் வரும் தாண்டவர், சந்நிதியில், முதலில் அவர் காதில் விழும் வார்த்தையைக் கொண்டே அன்றையப் பாடலப் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார். 

    ஒவ்வொரு நாளும் பாடி முடித்ததும் பஞ்சாட்சரப்படியில் பொற்காசுகளைப் பெறுவதும் தொடர்ந்தது. ஒருமுறை கோயிலுக்குச் செல்கையில், பாம்பு ஒன்று அவரைத் தீண்டியது. “அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே” என்று தில்லை ஈசனை நோக்கிப் பாட, விஷம் இருந்த இடம் தெரியாதபடி உடலை விட்டு நீங்கியது. 

    ஒருநாள் கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டோட, சிதம்பரம் செல்ல முடியாமல் தவித்துப் போனார். “காணாமல் வீணிலே காலம் கழித்தோமே” என்று மனமுருகப் பாடியதைக் கேட்டு மனமிரங்கி, ஆறு அவருக்கு இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. சிதம்பரம் செல்ல வழி பிறந்ததும், ‘தரிசனம் செய்வேனே” என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார். 

    1640-ஆம் வருடம், ஆவணிப் பூச நாளில், “மாணிக்க வாசகர் பேறு எனக்குத் தரவல்லாயோ அறியேன்” என்று நடராஜரை நோக்கிப் பாடவும் உடனே ஒரு பெரிய ஜோதிப்பிழம்பு வந்து அவரை ஆட்கொண்டது.

     

     

     

    Share
  • குளிர் வெப்பம்!

    -ராஜகவி ராகில்

    கோடை நிலமழை
    உன் வருகை

    மலர்கள் பார்த்துப் பேசுகிறேன்
    உன்னோடு உரையாடிய திருப்தியாதலால்

    அருகில் இருக்கின்ற இலைகள் கூட
    வாசமாகி நேசிக்கின்றன உன்னை

    காற்றைப் பிடித்துப் பிடித்து பார்க்கிறேன்
    உன் சொற்கள் இருக்கின்றனவா என்று

    மழைத் துளிகளை விடக் குளிர்கின்றன
    உன் வார்த்தைகள்

    கிளியிடம் உன் பெயர் சொன்னேன்
    அது திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது
    கனிகள் மறந்து

    உன்னைக் கண்ட
    நேற்றுக் கூட இன்றாகத்தான் இருக்கும்
    என்றுமே எனக்கு

    உன்னைப் பற்றிச் சொல்ல வேண்டும் என
    எழுத்துக்களெல்லாம்
    வரிசையாக வந்து நின்று அடம் பிடிக்கின்றன
    ஆசையுடன்

    கடலில் குளி நீ
    காலடியில் முத்துச் சிப்பிகள் நிரம்ப
    ஐஸ் மழை சிவப்பாகியது
    உன் மேனியில் விழுந்து

    பனிக்கட்டிகள்
    உனக்காகக் காத்திருக்கின்றன
    அழகான வெயிலாக
    குளிரான வெப்பமாக நீ வருவாய் என்று!

     

     

    Share
  • மிட்டாய் மலை இழுத்துச் செல்கின்ற எறும்பு!

    -ராஜகவி ராகில்

    கூந்தல் விரித்துத் தரையில்
    நீ நடந்துகொண்டிருந்த ஒரு தருணத்தில்
    பச்சைப் புல்வெளி ஆனதாம் கறுப்பாய்

    நான் அறிந்திருந்தேன்
    உன் நிழல் பார்த்து மயங்கி விழுந்தபோது
    உன் அழகு நிஜத் தண்ணீர் தெளித்து என்னை எழுப்பிவிட்டதாய்!

    பலநிறப் பூக்கள் வாழும் வாசப் பிரதேசம்
    மலர்களெல்லாம் வெண்மையான
    ஒரு திடீர்ப் பொழுது
    நீ வந்து கொண்டிருந்தாய் புன்னகை வெயிலெறித்தபடி!

    ஈர்ப்பு பூமிக்கு இருப்பதாக
    நியூட்டன் சொன்ன கருத்து மறுத்து
    இதுவரைப் பேசிக்கொண்டிருக்கின்றன உனது கண்கள்!

    புல்லாங்குழல் கூறியது…
    ‘என் துளைகளுக்கு உன் பார்வை மட்டும் ஊட்டினால் போதும் ‘ என!

    உப்பு மணற்காடு
    நீ சிப்பிகள் சேர்த்துக் கொண்டிருந்த ஓர் அந்தி
    என்னைப் போல ஒரு புலவன் கண்டு சொன்னான்
    ‘முத்து,
    சிப்பிகள் பொறுக்கிக் கொண்டிருக்கின்றது’ என!

    தென்றல் விசாரணை நடத்தியது
    ‘எந்தச் செடியில்
    எந்தக் கிளையில்
    நீ மலர்ந்து உதிர்ந்து நடந்து வந்தாய்’ என்று!

    எறும்புக் கூட்டம் உன்னை இழுத்துச் செல்லலாம்
    அல்லது
    கடத்திவிடலாம்
    எவரும் எவையும்
    இதுவரை ஏறாத இனிப்பு மலையென்று! 

    நிலா
    ஓய்வு தேவையெனக் கேட்ட வேளை
    உன்னைக் காட்டியதாம் பதிலீடாய்! 

    காக்கையொன்று
    உன்னைக் கடந்து சென்ற நேரம் மயிலானதும்
    நீ ஆற்றில் கால்கள் நனைத்தபோது பொங்கிச் சூடானதும்
    எப்போதோ அறிந்திருந்தேன்
    நான் என் காதலுடன்!

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 250 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலிலே உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். ஏதேதோ எண்ணங்களுடன் நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்வினுள் புகுந்து கொள்கிறோம். எதை எமது இலக்காகக் கொண்டு வாழ்வைத் தொடங்குகிறோமோ அந்த இலக்கை அடைந்து விட்டோம் எனும் பெருமையோடு வாழ்வை முடித்துக் கொள்பவர்கள் சிலரே! அதற்காக வாழ்வின் முடிவில் நாமடைந்த நிலையைப் பற்றி மற்றையோர்கள் பெருமைப்படக்கூடாது என்பதல்ல பொருள். நாமடைந்தவற்றைப் பெருமையாக எடுத்துக் கொள்ளும் பண்பு வாழ்வின் எமது வளர்ச்சியோடு வளர்ந்துள்ளதா என்பதுவே கேள்வி. ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எமது ஆரம்பப் புள்ளியிலிருந்து நாமடையப் போகும் புள்ளிக்கு இரண்டு மூன்று வழிகள் இருக்கும் அதை முன்கூட்டியே அறிந்து வைத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பிப்பதுவே எம்மில் அனுபவமிக்கவர்கள் செய்யும் செயல். ஏனெனில் ஒரு வழியில் தடையேற்பட்டால் மற்றொரு வழி மூலம் எமது இலக்கை அடையலாம் என்பதினாலேயே.

    ஆனால் வாழ்க்கைப் பயணம் அத்தகைய இலகுவானது அல்ல. எமது இலக்குக்கான பாதைகள் பல ஆரம்பிக்கும்போதே எமது கண்களுக்குத் தெரிவதில்லை. போகும் வழியில் எங்கோ ஓரிடத்தில் ஒரு தடையேற்படுகிறது. எமது இலக்குக்கான மாற்றுவழி தென்படாவிட்டால் நாம் இலக்கையே மாற்ற வேண்டிய தேவையேற்படுகிறது. இது நாம் வாழ்வில் தோல்வியடைந்து விட்டோம் என்று அர்த்தமாகுமா ? இங்கிலாந்துக்கு முதன் முதலில் வரும்போது ஐந்து வருடத் திட்டத்துடன் நுழைந்தவன் நான். ஐந்தே ஐந்து வருடங்களின் பின்னால் என் தாய்நாட்டிற்குத் தேர்ச்சி பெற்ற பொறியியலாளனாகத் திரும்பி எனது தாய்நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும் என்பது அன்றைய இலட்சியமாக இருந்தது. ஆனால் காலம் போட்ட கணக்கே வேறு.  இன்று ஏறத்தாழ 43 வருடங்களின் பின் அதே இங்கிலாந்தில் இருந்து மடல் வரைந்து கொண்டிருக்கிறேன். எனது பொறியியல் அனுபவங்கள் இங்கிலாந்து நாட்டின் நிறுவனத்துக்கு ஏறத்தாழ முப்பது வருடங்கள் சேவையாற்றியுள்ளது. என் வாழ்வினை நான் தோல்வி எனவும் எடுக்கலாம் அன்றி வெற்றி என்றும் எடுக்கலாம். ஒரு தோல்வியின் பின்னால் மறைந்துள்ள வெற்றி என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.

    விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்புவது ஒன்றே மனத்துக்கு அமைதியைக் கொடுக்கும்.  ஓர் ஓட்டப்போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக முன்னதாக இலக்கை அடைந்த முதல் மூன்று பேருக்கு மட்டுமே பரிசு கிடைக்கிறது. அவ்வோட்டப் போட்டியில் பங்குபற்றி இலக்கைத் தொட்ட அனைவருமே வெற்றி பெற்றவர்கள் எனும் உண்மையை இலகுவாக மறந்து போய்விடுகிறோம். வாழ்க்கையை ஓர் ஓட்டப்போட்டி என்று எடுத்துக் கொள்வோம். அதன் இறுதி இலக்கு அனைவருக்கும் பொதுவானதே. ஆனால் அதை யார் முதலில் தொடுவார்கள் என்பதை எம்மால் அறுதியிட்டுக் கூறி விட முடியுமா? ஒரு எண்பது வயதுப் பெரியவர் இன்னமும் ஓடிக் கொண்டேயிருப்பார் ஒரு முப்பது வயது இளைஞன் அவருக்கு முன்னாலேயே இலக்கைத் தொட்டு விட்டிருப்பான். இங்கு வெற்றி பெற்றவர் யார் ? எனது நல்ல நண்பர் ஒருவர். இங்கிலாந்தில் வாழும் வேளையில் தனக்கும், ஈழத்தில் வசிக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை கனடாவில் அமைத்துக் கொள்ள விரும்பினார் அதற்காக ஏறத்தாழ நான்கு முறைகள் முயற்சித்து நாலாம் தடவையே தன் முயற்சியில் வெற்றி கண்டார். இன்றோ கனடாவில் ஒரு நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். முதலாவது தோல்வியிலேயே மனம் தளர்ந்து போயிருப்பாரேயாகில் இன்றைய நல்ல வாழ்க்கையை அவர் அனுபவித்திருப்பாரா என்பது கேள்விக்குறியே!

    பூரணமான கணத்தைத் தேடுவதை விடுத்து எமக்குக் கிடைக்கும் கணங்கள் ஒவ்வொன்றையும் எவ்வாறு பூரணப்படுத்துவது என்று எண்ணுவதே சாலச்சிறந்ததாகும். எனது நாற்பதாவது வயதுவரை நான் ஒரு எழுத்தாளானாவேன் என்று கனவு கூடக் கண்டதில்லை. ஆனால் இன்று எழுத்து இல்லையேல் நானில்லை எனும் அளவுக்கு எழுவதை நேசிக்கும் ஒரு மனிதனாக வாழ்கிறேன். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் ஒவ்வொருவருடைய பாதையும் அவர்களின் ஆரம்ப இலக்கை அடையவில்லை எனினும் நாம் பயணிக்கும் பாதையை ரசிக்கவும், விரும்பவும் கற்றுக்கொள்ளும்போது அது ஒரு வெற்றிகரமான இலக்கையே எமக்குப் பரிசளிக்கிறது என்பதனை என் வாழ்வின் அடிப்படையில் இருந்து சுட்டிக்காட்டுவதற்காகவே! கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகள், “மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று, இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று” இவ்வுண்மையை எமக்கு அழகுறவே எடுத்துக்காட்டுகிறது.

    உங்களுடனான எனது மடல் உறவாடலில் 250 வாரங்களை எட்டிப்பிடித்து விட்டேன் என்று எண்ணும்போது கால ஓட்டத்தின் வேகத்தை உணர முடிகிறது. ஒரு நீண்ட பயணத்தை நடத்தும் ஒருவன் இடையிடையே சில மைல் கற்களில் அமர்ந்து தான்வந்த பாதையின் அனுபவங்களையும் இனித்தான் எட்ட வேண்டிய தூரத்தின் நீளத்தையும் அலசுவது போல இத்தகைய மைல் கற்களில் நானும் எனது இந்த எழுத்துப் பயணத்தின் நீளத்தையும், நோக்கத்தையும் அலசும் முகமாகவே இந்த மடல் வரைவு.

    இந்தப் பிரபஞ்சத்தின் காலத்தோடு ஒப்பிடுகையில் ஒரு நீர்க்குமிழி போன்ற எனது வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்களின் நீளம் இத்தனை பெரிதா? என்று எண்ணும் போது “எறும்பும் தன் கையால் எண்சாண்” எனும் முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது. எழுத்து என்பது புனைவு எனும் காலத்தை மாற்றியவர்களில் கவியரசர் வகித்த பாத்திரமும் முக்கியமானது. அவர் எழுத்துக்குக் கொடுத்த வடிவம் ஒரு புதுவகை அர்த்தத்தைத் தந்தது. சுய அலசல் எத்தனை தூரம் ஒரு மனிதனின் மனத்தின் அழுக்குகளைக் களைய உதவுகிறது எனும் உண்மை புலர ஆரம்பித்தது.

    எங்கோ பிறந்தேன் இன்று எங்கோ வாழ்கிறேன். ஆனால் நான் வாழும் இந்தப் புலம்பெயர் மண்ணில் நான் காணும் அன்றிக் கேட்கும் விடயங்களின் தாக்கங்களை ஒரு புலம்பெயர் தமிழன் எனும் வகையிலும் அந்நிய நாட்டிலிருந்து இங்கு வந்து இந்நாட்டின் குடியுரிமை பெற்றவன் எனும் வகையிலும் என் உடன்பிறவா உறவுகள், தமிழன்னை ஈந்த சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்வது அதுவும் தெரிந்தவற்றை எதுவித மாற்றமுமில்லாமல் அப்படியே பகிர்ந்து கொள்வது எனும் எனது நோக்கில் எத்தனை தூரம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதைத் தீர்மானிப்பவர்கள் என் அன்பு உள்ளங்களாகிய நீங்களே!

    ஒன்று மட்டும் எனது உள்ளத்துக்கு உறுதியாகத் தெரிகிறது. என் கையில் வலுவிருக்கும்வரை, எனது மனத்தின் உணர்வுகளை நான் காணும், கேட்கும், அனுபவிக்கும் விடயங்களை மடலாக பகிர்ந்து கொள்வேன் என்பதே அது.

    உங்கள் அன்பிற்கும் , ஆதரவுக்கும் அனைத்துக்கும் மேலாக பொறுமைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இழக்கப் போறாய் நீ அவளை!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா 

    ++++++++++++++

     jaya

     

    இழக்கப் போறாய் நீ அவளை!
    இழக்கப் போறாய் அவளை!
    இன்றிரவு நீ அவளைக் கூட்டிச் செல்லாவிடில்
    தன்மனதை மாற்றிக் கொள்வாள்;
    நானவளை அழைத்துச் செல்வேன்
    இன்றிரவு! மேலும்
    நானவளைக் கனிவுடன்
    நடத்துவேன்;

    நீ அவளை இழக்கப் போறாய்!
    நீ அவளை இழக்கப் போறாய்!
    கண்ணியமாய் நீ அவளை நடத்தா விடில்,
    திண்ணமாய் காணப் போறாய்
    அவள் இழந்து போவதை!
    ஏனெனில் கண்ணிய மாய் நடத்துவேன்
    நானவளை!
    பிறகு நீதான் தனித்துக் கிடப்பாய்!

    நீ அவளை இழந்தாய்! இன்று
    நீ அவளை இழந்தாய்!
    உன்னை விட்டு நானவளைப் பிரிப்பதென
    முடிவுக்கு வந்து விட்டேன்!
    நீ படுத்தும் கொடுமைக்கு
    வேறென்ன செய்வது நான்?

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (249)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். அடுத்தொரு மடலில் உங்களுடன் உரையாடுவதில் மனமகிழ்வடைகிறேன். சமீபத்தில் அமேரிக்காவில் ஒரு நகரத்தில் மக்களுக்கிடையிலான இனத்துவேஷம் பயங்கர உருவெடுத்தது. விளைவாக நிறவேற்றுமைக்கெதிராகக் குரல் கொடுக்கும் ஓர் இள அமெரிக்க நங்கை இனத்துவேஷி ஒருவரால் காரினால் அடித்துக் கொல்லப்பட்டார். இது நடந்தது திரு. டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் அதிபராயிருக்கும் அமேரிக்க நாட்டில் என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். இதற்கான அடிப்படைக் காரணம் என்னவென்று பார்ப்போமா?

    அந்த நகரில் அமெரிக்க வரலாற்றில் முக்கியமாகக் கருதப்படும் சரித்திரப் பிரசித்தி பெற்ற இராணுவத் தளபதி ஒருவரின் சிலை பலவருடங்களாக வைக்கப்பட்டிருந்தது. அவ்வமேரிக்கத் தளபதியின் காலத்தில் அடிமை முறை நடைமுறையிலிருந்தது. அந்நடைமுறைகளுக்கமைய அத்தளபதியும் பல ஆப்பிரிக்க அடிமைகளைக் கொண்டிருந்தார். ஆனால் இன்றைய அந்நகரத்தில் பல கறுப்பு இனத்தவர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இப்போது அச்சிலை அகற்றப்பட வேண்டும், அச்சிலை இருப்பதால் அது தமது மனதை சஞ்சலத்துக்குள்ளாக்கிறது எனும் கோஷத்தை அந்நகர கறுப்பு இனத்தவர் முன்வைத்தார்கள். அது எப்படி முடியும் ? அது எமது சரித்திர முக்கியம் வாய்ந்ததொரு சிலை அதை அகற்றுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நகரப் பழமைப் பெருமைகளை மதிக்கும் வெள்ளை இனத்தவர் கோஷமிட்டார்கள். எங்காவது ஓரிடத்தில் இனங்களுக்கிடையில் சிறிய பேதமேற்படாதா? அங்கு தாம் புகுந்து ஓர் அரசியல் குழப்பநிலையை உருவாக்கலாம் என்று காத்திருந்த அதிதீவிர இனத்துவேஷிகளை உள்ளடக்கிய தீவிரவாத அமைப்பு அந்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள். விளைவாக அங்குள்ள வெள்ளை இனத்தவர்களின் உணர்வுகளை ஒன்று திரட்டி ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்துக்கு எதிராக இனத்துவேஷத்தை எதிர்க்கும் அந்நகர மக்கள் தாமும் ஓர் எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள். அவ்வூர்வலத்தில் தான் ஒரு இனத்துவேஷி அணியின் மீது தனது மோட்டார் வாகனத்தை மோதியதில் ஓர் இளநங்கை உயிரிழந்தாள்.

    அதே பாணியில் இங்கிலாந்தில் சில சிலைகளை அகற்ற வேண்டுமென சில பகுதிகளில் இருந்து கிளம்பியுள்ளது. இது இங்கிலாந்தில் ஊடகங்களில் பல விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது. இங்கேதான் பல முக்கியமான வினாக்கள் எழுப்பப் படுகின்றன. மனித வாழ்க்கை பலவிதமான மாற்றங்களுக்குள்ளாகின்றது. ஆதி மனிதனுக்கும், இன்றைய மனிதனுக்கும் இடையில் காணப்படும் வித்தியாசங்கள் எண்ண முடியாத அளவுக்கு இருக்கின்றன. அன்றைய நிலையில் இருந்து இன்றைய நிலைக்கு மனிதன் மாற்றம் அடையும்போது அவனுடைய வாழ்க்கை முறைகளும் பலவிதமான மாற்றங்களுக்குள்ளாகி வந்துள்ளது. இவ்வாழ்க்கைமுறைகளில் சில இன்றைய உலகுக்கு ஏற்றுக் கொள்ளப்படக்கூடியனவாகவும், வேறுசில ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகவும் இருக்கின்றன. ஆனால் நடந்தவைகள் சரித்திர உண்மைகளே! அவைகளின் மாறுபடாத, திரிபடையாத பதிவுகள்தாம் மனிதனின் வாழ்க்கைச் சரித்திரம் ஆகிறது. எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நடைபெற்ற ஒன்றை நாம் இல்லையேன்று கூறிவிடமுடியாது. அப்படிக் கூறிவிடுவதால் மட்டும் அவை இல்லாமல் போய்விடாது.

    அதில் ஒரு பகுதிதான் மனிதனை மனிதன் அடிமைகொள்ளும் நிகழ்வும். ஒரு காலத்தில் அடிமைகளைக் கொண்டிருந்த தலைவர்கள் தான் பின்பு அடிமைத்தளையை உடைத்தெறிந்தவர்களாகவும் இருந்தார்கள் என்பதும் உண்மையே! அதில் ஓர் அங்கமாகத்தான் சில இடங்களில் சிலர் சரித்திர அடையாளங்களாக நிலைநிறுத்தப்படுகிறார்கள்.அப்படி நிறுத்தப்படுபவர்கள் சிலைகளின் சரித்திரத்தில் சில கறுப்பு நிகழ்வுகள் இருந்தால் அச்சிலைகளை பார்ப்பதன் மூலம் அத்தகைய நிகழ்வுகளை இனி உலகில் நடந்தேற அனுமதிக்கக்கூடாது எனும் உறுதி மனதில் ஏற்படவேண்டும். வெறுமையாக அச்சிலையை அகற்றி விடுவதால் மட்டும் சரித்திரத்தை மாற்றியமைத்து விட முடியாது.

    சரித்திர உண்மைகள் சரித்திர உண்மைகளே! ஆனால் அவற்றின்மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் மட்டும் முன்னேற்றப்பாதையில் உலகில் அமைதியையும்,சமாதானத்தையும் முன்னிலைப்படுத்துபவையாக இருக்க வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (248)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    நானிங்கு நலம், நீங்களனைவரும் நலமா ? எனும் கேள்வியுடன் எனது இவ்வார மடலுக்குள் என் எண்ணங்களைப் புதைக்கிறேன். தனிமனித வாழ்வாகட்டும், சமுதாயமாகட்டும், நாடாகட்டும் சரித்திரம் என்பது கடந்து போன காலங்களில் நடந்து போன உண்மை நிகழ்வுகளின் தொகுப்பேயாகும். அச்சரித்திர உண்மைகளுடன் நாம் ஒத்துப் போகிறோமோ இல்லையோ அவை உண்மைகள் எனும் நிலைப்பாட்டில் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில்தான் உலக மக்கள் இருக்கிறார்கள். சில இனிப்பவையாகவும், வேறு சில எமக்குக் கசப்பானவையாகவும் இருக்கலாம். அதற்காகக் கசப்பானவற்றைத் தள்ளி வைத்து விட்டுப் பெருமையானவைகளைப் பற்றிப் பேசிப் பேசி மார் தட்டிக் கொள்வது உண்மைக்குப் புறம்பானது.

    இந்த வகையிலே எனது இந்த 42 வருட இங்கிலாந்து அனுபவத்தில் இருந்து நான் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட பலவற்றில் இச்சரித்திரம் பற்றியவை மிகவும் முக்கியமானவை. சரித்திர நிகழ்வுகள் அவை தமக்கு எவ்வளவு கசப்பூட்டுபவையாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் இங்கிலாந்து மக்களின் செயற்பாடுகள் எனது அறிவுக்கு தீனி போட்டிருக்கின்றன. நான் இப்போது ஓய்வூதியம் பெற்று வருடங்கள் மூன்றாகப் போகிறது. எனது மனைவி இன்னமும் தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். நாம் வாழும் சறே (Surrey) எனும் பகுதியில் அமைந்திருந்த அவளது கம்பெனி சுமார் எட்டு வருடங்களின் முன்னால் இங்கிலாந்தின் வடபகுதியான ரக்பி(Rugby) எனும் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது ஆபிஸின் பலரும் கட்டாய ஓய்வில் பணிநீக்கம் செய்யப்பட்ட போது எனது மனைவிக்கு முக்கியமான நிர்வாகப் பொறுப்பையளித்து அவ்வடபகுதி ஆபிஸைத் தளமாகக் கொண்டு இயங்குமாறு பணித்தார்கள். அதன் நிமித்தம் வாரத்தில் இருநாட்கள் எமது இல்லத்திலிருந்து சுமார் 120 மைல் தொலைவிலுள்ள அவளது ஆபிஸுக்குச் சென்று பணிபுரிவாள். அப்போது ஓரிரவு அருகேயிருக்கும் ஹோட்டலில் அவளது ஆபிஸ் அவளுக்குத் தங்குவதற்கு ஏற்பாடு செய்வார்கள்.

    சரி எதற்காகச் சக்தியின் இந்த முன்விளக்கம் என்று சிந்திக்கிறீர்களா? அவசரப்படாதீர்கள் விஷயத்துக்கு வருக்கிறேன்.

    sakthi1அப்படியாக என் மனைவி தன்னுடைய ஆபிஸுக்கு வரும் வேளைகளில் சிலசமயங்களில் அவளுடன் இணைந்து நானும் அங்கே செல்வதுண்டு. அப்படியான ஒரு பொழுதுதான் நேற்றைய பொழுது. காலையில் எமது இல்லத்திலிருந்து புறப்பட்டு இரண்டரை மணி நேரங்களின் பின்னால் மனைவியை ஆபிஸில் இறக்கி விட்டு ஓட்டலை வந்தடைந்தேன். பின்பு இரவு உணவு உண்பதற்காக இருவரும் அருகிருந்த “டன்சேர்ச்(Dunchurch)” எனும் சிறிய கிராமத்திலிருந்த உணவு விடுதிக்குச் சென்றோம். இந்தக் கிராமத்திற்கு முன்பும் சில தடவைகள் எனது மனைவியுடன் வந்திருக்கிறேன். மிகவும் அமைதியான ஓர் இடம். இக்கிராமம் மிகவும் சிறிய கிராமம்; இரண்டு மூன்று உணவகங்கள், ஒரு சிறிய வாசகசாலை, கிராமங்களுக்கேயுரிய தேவாலயமென ஓர் ஆங்கிலக் கிராமத்தை அடையாளைப் படுத்தும் அம்சங்கள் அமைந்திருந்தன. மையத்திலே அழகாக “விலேஜ் கிறீன் (Village Green)” அதாவது கிராமத்துப்பச்சை எனப்படும் அழகிய பச்சை புற்தரை அமைந்திருந்தது.

    இத்தகைய அழகிய, அமைதியான ஆங்கிலக் கிராமம் தன்னுள் ஒரு முக்கிய சரித்திர நிகழ்வின் அங்கமொன்றை உள்ளடக்கியுள்ளது என்று கேள்வியுற்றதும் நான் ஆச்சரியப்பட்டேன். அது என்ன என்கிறீர்களா?

    அது 1605ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை “கிங் ஜேம்ஸ்sakthi2 1” எனும் கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிவுற்ற “புரட்டஸ்டண்ட்( Protestant) “ மதத்தைச் சேர்ந்த அரசன் ஆண்டு கொண்டிருந்த காலம். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சில தீவிர கத்தோலிக்கர்கள் இந்த அரசனை வீழ்த்தி அடுத்த முடிசூட்டும் தகுதிக்கான “எலிஸபெத்” எனும் இளவரசியை இராணியாக்குவதற்கு முயற்சித்தார்கள். அதற்கான திட்டத்தில் அவர்கள் இங்கிலாந்தின் யோக் நகரைச் சேர்ந்த Guy Fawkes என்பவனைத் தேர்ந்தெடுத்தார்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவன் தனது தாய் மறுமணம் செய்து கொண்ட கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவனால் தீவிர கத்தோலிக்க மதப்பற்றுடையவனாக வளர்க்கப்பட்டான். தனது வாலிபப் பருவத்தில் ஐரோப்பா சென்று அங்கே ஸ்பானிய கத்தோலிக்க படையில் இணைந்து எண்பதாண்டு யுத்தம் எனும் பெரும் யுத்தத்தில் போரிட்டு விட்டுப் பின் இங்கிலாந்து திரும்பியிருந்தான்.

    அவர்களது திட்டத்தின்படி இங்கிலாந்து பாராளுமன்றத்தை வெடிமருந்துகளைக் கொண்டு தகர்ப்பதாகும். திட்டப்படி பாராளுமன்றத்துக்கு கீழுள்ள கட்டிடத்தில் வெடிமருந்துகளுடன் Guy Fawkes முதல் நாளே தங்கியிருப்பது என்றும் சரியான நேரத்தில் வெடிமருந்துகளைப் பற்ற வைத்து பாராளுமன்றத்தை தகர்ப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. சரியான நேரத்தில் அவனது திட்டம் இங்கிலாந்து அரசுக்குத் தெரிந்து அவன் வெடிமருந்துகளுடன் கைதாக்கப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட்டான். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவனுக்குத் தூக்கு எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக அவன் மாடிக்கட்டத்திலிருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டான். அதுவே இந்நாள்வரை இங்கிலாந்து முழுவதும் Guy Fawkes day நவம்பர் மாதம் 5ஆம் திகதியொட்டி வரும் சனிக்கிழமை ஒன்றில் வாணவேடிக்கைகள் நடத்திக் கொண்டாடப் படுகின்றது.

    சரி அதற்கும் இனி போன டன்சேர்ச் எனும் கிராமத்துக்கும் என்ன தொடர்பு ? கேள்வி எழுகிறது அல்லவா?

    இந்த டன்சேர்ச் கிராமத்தில் பல விடுதிகள் இருக்கின்றன. அந்நாளில் இங்கிலாந்தின் வடக்கிலிருந்து மற்றப் பகுதிகளுக்குத் தபால் கொண்டு செல்லும் குதிரை வண்டிகள், மக்கள் பிரயாணம் செய்யும் குதிரை வண்டிகள் அனைத்தும் இவ்விடுதிகளில் தங்கி ஓய்வெடுத்துப் பிரயாணம் செய்வது வழக்கமாம். இத்தகைய விடுதி ஒன்றிலேயே 1605ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி ௸ Guy Fawkes இன் முயற்சியின் வெற்றிச் செய்தியைக் கேட்பதற்காக அவனுடன் சேர்ந்த சதிக்கும்பல் தங்கிருந்தார்கள். அந்த விடுதி இன்றும் Guy Fawkes House என்று அழைக்கப்படுகிறது. இது இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது அவனது முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இங்கிலாந்தின் சரித்திரமே மாற்றியமைக்கப்பட்டிருக்கும். இந்த விடுதியில் தங்கிய பல பிரபலங்களில் இங்கிலாந்தின் பழைய மகாராணி விக்டோரியாவும் அடங்குகிறார். இத்தகைய ஒரு சிறிய அழகிய கிராமம் தன்னுள் இத்தனை பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றின் ஓர் அம்சமாகத் திகழ்ந்த உண்மையைப் புதைத்து வைத்துள்ளது என்று எண்ணும்போது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

    அது சரி பயங்கரவாதிகள் எல்லோருக்கும் முன்னோடிகள் இவர்கள் தானோ ?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • எட்டு நாள் வாரத்தில்!

    மூலம்: பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++++ 

    jaya

    கண்ணே ! எனக்குத் தேவை உன் காதல்!
    பெண்ணே ! உண்மை அது நீ அறிவாய்!
    கண்ணே ! உனக்கும் தேவை என் காதல்!
    எனக்கும் தேவை அது போல்;
    காதலிப்பாய்! கட்டிப் பிடிப்பாய்! கண்ணே!
    காதல் புரிவதைத் தவிர
    வேறில்லை உனக்கு வேலை,
    வாரத்தின் எட்டு நாட்களும்!  

    உன்னை நேசிப்பேன் ஒவ்வோர் நாளும்,
    என்றும் நீ என் மனதில் தான்!
    ஒன்று மட்டும் சொல்வேன்,
    என்றும் உன்னைத் தான் நேசிப்பேன்!
    நேசிப்பாய் என்னை!
    நெருங்கிப் பிடிப்பாய் என்னை!

    காதல் தவிரக் கண்ணே! வேறொன்றில்
    கவனம் எதற்கு
    எட்டு நாள் வாரத் துக்கு?
    வாரத்தின் எட்டு நாட்களும்
    நானுன்னைத் தான் நேசிப்பேன்!

    வாரத் துக்கு
    நாட்கள் எட்டும் போதவே போதா,
    எனது கவனம் முழுதும்
    உனக்குச் செலுத்த!

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (247)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    ஏற்கனவே வாழ்க்கைச் சிக்கல்களுக்குள் சிக்கி வாழ்வோடு கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் தென்கிழக்காசிய நாட்டு பகுதிகள் பலவற்றில் வாடும் மக்களை இயற்கையன்னை அடைமழை எனும் ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருக்கிறாள். அதேநேரம் வசதிகளுடன் வாழும் மேலைத்தேசமான அமெரிக்க நாட்டின் பல பகுதிகளை இதுவரை கண்டிராத சூறாவளியினால் சிதைத்துக் கொண்டிருக்கிறாள். ஆம், இயற்கையன்னை மனிதன் தன் சுயலாபத்திற்காக இயற்கையைச் சீரழிப்பது கண்டு சீற்றம் கொண்டிருப்பது போல உலகின் பல பகுதிகளிலும் இயர்கையன்னையின் ஆவேசக்கோலம் நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறது. உலகில் மனிதராகப் பிறந்த எம் அனைவருக்கும் எமது இறுதி முடிவு எதுவெனத் தெரிகிறது. இது ஓர் ஓட்டப் போட்டியே! அதன் இறுதிக் கயிற்றை யார் முதலில் தொடுகிறார்கள் என்பதுதான் யாருக்கும் தெரியாத மர்மமாக அமைந்துள்ளது. அது யாருக்கும் தெரியாமல் இருக்கும் காரணத்தினால் தான் மனிதர்களில் பெரும்பான்மையோர் இன்றும் மனிதத் தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    “அரிது, அரிது மானிடராகப் பிறப்பது அரிது ” என்றாள் தமிழ் மூதாட்டி. இத்தகைய அரிய பிறப்பெடுத்த நாமே , மற்றைய அரிய பிறப்புக்கைளை மதம், பணம், பொருள், காமம், காணி எனும் பல பேராசைகளின் காரணமாகச் சர்வசாதாரணமாக அழித்துக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது. பிறப்பு என்பது யாரையும் கேட்டு நடப்பதல்ல. ஆணும்,பெண்ணும் அனுபவிக்கும் இல்லற சுகத்தின் பலனாக அவர்களுக்கு அளிக்கப்படும் அன்புப்பரிசு என்பது அதற்கான ஒரு தூய விளக்கமாக இருந்தது. ஆனால் இன்றைய நாகரிக உலகத்திலே இல்லற வாழ்க்கை என்பதன் அடையாளமே மாறிப்போய்விட்டிருக்கிறது. அதுவும் குறிப்பாக மேலைத்தேசங்களில் வாழ்வோர் எப்படியும் வாழலாம் எனும் ஒரு கருத்துக்குள் தம்மைப்புதைத்து வாழ்வது போலத் தென்படுகிறது. ஆனால் அதே மேலைத்தேசங்களில் தமது பழைய கலாசார, சமயக் கோட்பாடுகளை வாழ்வின் நெறிமுறைகளாக வகுத்து வாழ்வோர் இல்லையென்று கூறி விட முடியாது. வேறு நாட்டினைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் தம்நாடுகளில் குடியேறி அங்கு அவர்களது கலாசாரங்களைப் பரவவிட்டு எங்கே தமது கலாசாரக் கோட்பாடுகளை அழித்து விடுவார்களோ எனும் அச்சம் பல மேலைத்தேச நாடுகளின் மக்கள் மனங்களில் ஊசலாடுவதின் காரணமே இங்கிலாந்தின்”ப்ரெக்ஸிட்” தேர்தல் முடிவு.

    அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ட்ரம்ப் என்பதுவே இன்றைய யதார்த்தமாகத் தென்படுகிறது. ஹிட்லர் எனும் சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சியின் பின்னால் அத்தகைய ஒரு நிலை உலகில் வந்துவிடக்கூடாது எனும் காரணத்தினால் மேலைத்தேசங்கள் பலவும் சுதந்திர நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது என்பது உண்மையே. அடுக்கடுக்காய் வந்த அரசாங்கங்கள் நிறவெறி, மதவெறி, இனவெறி என்பன தலைதூக்கி விடக்கூடாது என்பதற்காக பல சட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தன. அடிப்படையில் இவையனைத்தும் அந்தந்த நாடுகளில் குடியேறி வாழும் வேற்று நாட்டினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. ஆனால் அவைகளின் அதியுச்ச நிலையாக அந்த நாட்டின் மக்கள் தமது மனத்தில் நிலவும் கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. காலப்போக்கில் வேற்று நாட்டினரின் குடியேற்றம் கட்டுமீறிச் சென்றதாலும், மேலைத்தேச நாடுகளின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதாலும் ஒரு விகாரநிலை உருவெடுத்தது. இந்நிலையால் பொதுவாக மிகவும் மிதமான கொள்கைகளைக் கொண்ட பல மேலைத்தேச மக்கள் மனங்களில் கடுமையான வேற்றினத்தவருக்கெதிரான கொள்கைகள் வலுப்பெற்றன. அதன் பிரதிபலிப்பே இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இங்கிலாந்தின் “பிரெக்ஸிட்” எனும் சிக்கலும் என்பதே உண்மை.

    இந்தப் பின்னணியில்தான் இப்போது இங்கிலாந்தில் ஒரு புதிய கடுமைப் போக்கைக் கொண்ட ஒரு தலைமை கன்சர்வேடிவ் கட்சிக்குள் உருவாகிறதோ எனும் கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்தின் தற்போதைய பிரதமரும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவியுமான தெரேசா மே அவர்களின் அரசியல் எதிர்காலம் மிகவும் குறைந்ததாகவே காணப்படுக்கிறது. அவரைத் தொடர்ந்து யார் கன்சர்வேடிவ் கட்சியை வழிநடத்தப் போக்கிறார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. இங்கேதான் “ஜேக்கப் ரீஸ் மொஹ் ( Jacob Rees-Mogg) என்பவர் பிரசன்னமாகிறார். ஆக்ஸ்வேர்ட் பல்கலைகழகத்தில் பட்டாதாரியான இவர் இங்கிலாந்தின் பொருளாதார நிறுவனங்களில் பணிபுரிந்தவராவார். 1997ஆம் ஆண்டு தொடங்கி தேர்தல்களில் முயன்று 2010ஆம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகியவர். தீவிரமான கத்தோலிக்கரான இவர் மதக்கோட்பாடுகளுக்கு முதன்மை அளிப்பவர். ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதித்துவத்துக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர். இன்றைய இங்கிலாந்து மக்களின் அரசியல் உணர்வு இத்தகைய கடுமையான கொள்கைகளை உடைய தலைவர்கள்பால் திரும்புமா ? எனும் கேள்வி இங்கிலாந்து அரசியல் அவதானிகளிடமும் எழுகிறது.

    இந்தச் சூழலில் தான் இவர் சமீபத்தில் தான் கருக்கலைப்பு மற்றும் ஓரினத் திருமணங்கள் ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானவர் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். கத்தோலிக்க மதத்தில் இவையிரண்டும் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இங்கிலாந்தின் சட்டநிலைப்பாடுகள் இவையிரண்டையும் ஆதரிக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. அவர் சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி பழமைவாய்ந்த கொள்கைகளையும், கிறீஸ்துவ மதக் கோட்பாடுகளையும் முக்கியமாகக் கொண்டிருந்தாலும் இந்த இரண்டு அம்சங்களிலும் அவருக்கு எதிரான நிலையையே பெரும்பான்மையான கன்சர்வேடிவ் பாரளுமன்ற அங்கத்தினர்கள் கொண்டிருக்கிறார்கள். திடீரென இவர் இத்தகைய தனது தீவிரக் கொள்கைகளை வெளியிட்டிருப்பது சந்தேகங்களுடன் கூடிய சர்ச்சையை அரசியல் வட்டாரங்களில் கிளப்பி விட்டிருக்கின்றன. இவர் தனது கொள்கைகளைச் சமூக வலைத்தளமான ட்வீட்டர் மூலமாக வெளியிட்டிருந்தார். இன்றைய மேலைத்தேச அரசியல் சூழலில் ட்ரம்ப் உட்பட பல தீவிர வலதுசாரப் போக்குடைய தலைவர்கள் தமது பிரசாரங்களுக்கு வழமையான ஊடங்களான பத்திரிகை,வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றை விடுத்துச் சமூக வலைதளங்களை உபயோகிக்கும் நிலையேற்பட்டுள்ளது.அமெரிக்காவில் ட்ரம்ப் அவர்களுக்கு ஏற்பட்ட திடீர்ச் செல்வாக்குப் போல இவர் தனக்கும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் செயற்பட்டு, கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைமைப் பதவிக்கு வலைவீசுகிறாரா? என்பதுவே தற்போதைய சர்ச்சை ஆகும்.

    அதுமட்டுமல்ல… பொதுவாகக் கருக்கலைப்புக்கு எதிரானவன் என்று சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை இவரோ கற்பழிப்பு மற்றும் முறைகேடான உறவுகளின் மூலம் தோன்றிய கரு என எதுவாக இருப்பினும் அனைத்தையும் கலைப்பதற்கு எதிரானவன் என்று கூறியிருப்பதுதான் தன்னை ட்ரம்ப் வகையிலான ஒரு தீவிர வலதுசாரத் தலைவன் என்று முன்னிலைப்படுத்த முனையும் செயலா? என்பதுவே கேள்வியாகிறது.

    இதன் எதிரொலிகள் அரசியல் அரங்குகளில் மட்டுமல்ல பல பெண்களின் பதுகாப்புக்கான அமைப்புக்களையும் மிகவும் ஆவேசத்துக்குள்ளாக்கியிருக்கின்றன.  பல வானொலி கருத்தாடு களங்களில் பலமாக இவர் பற்றிய விவாதங்கள் கடந்த சில தினங்களாக நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன.

    ஒருவேளை இவைகள்தாம் இயற்கையன்னையின் சீற்றத்துக்குக் காரணமோ?

    என்னதான் நடக்கும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share
  • தமிழ் சமுதாயம் 2077 [7]: சூடு, சொரணை காக்கும் கொலைகள்

     

    -இன்னம்பூரான்
    செப்டம்பர் 5, 2017

     

    innam

    2003ஆம் வருடம் ஒரு தீநிமித்தம். கதிரவன் உதிக்கும் முன், முன்னூறுக்கு மேற்பட்ட சராசரி கிராமத்தினர் இரு சடலங்கள் எரிந்து சாம்பலாவதைக் கண்டுகளிக்கக் கூடியிருந்தனர்,  விருத்தாசலத்துக்கு அருகில் இருக்கும் புதுக்கீரைப்பேட்டை என்ற கிராமத்தின் வெட்டவெளியில். மரணச் சான்று பெற, ஆதார் போன்ற மண்ணாங்கட்டிகள் எல்லாம் கிடையாது. தேவையுமில்லை அப்பனும் ஆத்தாளும் இருந்தால் கூட அவை அனாதைப்பிணங்கள். கூடப்பிறந்த அண்ணனும், அருமைச் சுற்றமும், அக்கம்பக்கத்து பிசாசுகளும், கண்ணகி என்ற பட்டதாரி பெண்ணை நஞ்சு உண்ணவைத்து அவள் மரணத்தைக் கொண்டாடினார்களாம். அவள் வன்னியர் குலத்தவள். அவள் காதலித்து மணந்த முருகேசன் என்ற கெமிகல் எஞ்சினியர் அருகில் உள்ள குப்பநத்தத்தில் நசுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து முன்னுக்கு வந்தவர். காதலித்து மணந்த இந்த ஜோடிக்கு தினந்தோறும் மரணபயம்.

    முருகேசன் கண்ணகியை மூங்கில்துறைப்பட்டு என்ற கிராமத்தில் உறவினர்கள் வீட்டில் பாதுகாப்புடன் வைத்துவிட்டு, வண்ணான்குடிக்கடவு என்ற கிராமத்துக்கு சென்றார். அவருடைய மாமன் மூலமாக இதைத் துப்பறிந்த வன்னியர்குலப் பெருந்தகைகள், நைச்சியமாக அவர்மூலம், முருகேசனைத் தருவித்து அவரை, கோயில் அருகில் ஒரு கம்பத்தில் கட்டினார்கள். கண்ணகியின் ரத்த உறவு அவரை விளாசித்தள்ள, வலி பொறுக்கமுடியாமல், அவர் கண்ணகி தஞ்சம் புகுந்த இடத்தை சொல்லிவிட்டார். 12 நபர்கள் கொண்ட படையை ஏற்றிக்கொண்டு கார்கள் பறந்தது. நம் கிராமவாசிகள் ஏழைகள். டில்லியில் கூத்தடிப்பார்கள். ஆனால், கார் மோர் எல்லாம் அத்துபடி. கந்துவட்டியும் அத்துபடியாக இருக்கலாம். அவள் வலுக்கட்டாயமாகக் கொணரப்பட்டாள். நஞ்சு ஊட்டப்பட்டு அவர்கள் இருவரும் -இளம்தம்பதிகள் – செத்துப்போனார்கள். Gleeயுடன் கொளுத்தப்பட்டார்கள். என்ன உலகமடா?

    அப்பனும் அண்ணனும் கண்ணகிக்கு நஞ்சு புகட்டியதாகவும், அப்பனும், மாமனும் முருகேசனுக்கு நஞ்சு புகட்டியதாகவும் விருத்தாசலம் போலீஸ், விடுதலைச் சிறுத்தை படையின் தலைவர் திருமாவளவன் தலையிட்டபின் சொல்கிறார்களாம். இந்தப்பக்கம் நான்கு பேர், அந்தப்பக்கம் நான்கு பேர். கைதாம், என்னே சமச்சீர்? 14 வருடங்கள் கழித்து ஆகஸ்ட் 2017 இறுதியில் கடலூரில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இரண்டு சாட்சிகள் முரண் சாட்சிகள் ஆயினர்.

    கடந்த அறுபது வருடங்களில், ‘வர வர மாமியார் கழுதைபோல் ஆன கதையாக‘ தமிழ்நாட்டு மக்கள், ஈ.வே.ரா. அவர்களின் சமத்துவ அறிவுரைகளைக் குப்பையில் போட்டுவிட்டு, ராஜாஜியின் விமோசனத் தொண்டுகளை மறந்துவிட்டு, காமராஜரின் பொது அறிவைக் கடாசிவிட்டு, காந்திஜியின் போதனைகளை முற்றும் உதறிவிட்டு, திரு.வி.க. அவர்களின் சீரிய கருத்துக்களைக் கொளுத்தி அழித்துவிட்டு, கொள்ளிவாய்ப் பிசாசுகளாக நடந்துகொண்ட கதை இது.

    ஈ.வே.ரா. அவர்களின் வழித்தோன்றல்கள் அறுபது ஆண்டுகளாகச் சாதி அடிப்படையில் ஆட்சி நடத்தியபோது, இவை அதிகரித்தன. போலீசிடம் கொடுத்த புகாரும், அவசர உதவி கேட்ட வேண்டுகோளையும் காவல்துறை கண்டுகொள்ள மறுத்ததாம்.  இந்த அழகில் நாம் என்றோ இதிகாசத்தில் சொல்லப்பட்ட உபகதை – துரோணன் என்ற பார்ப்பன க்ஷத்திரியர் ஏகலைவனிடம் கட்டை விரலை தக்ஷிணையாக கேட்டதாக சொன்னப்பட்டதை நினைவில் கொணர்ந்து கொதித்துப் போகிறோம். பாரதியார் அதனால் தான் பழங்கதைகளை தனக்குள்ளே பேசி மாய்ந்து போகவேண்டாம் என்று சொன்னார். கேட்பார் இல்லையே!

    தமிழ்நாட்டுக்குத் திரும்புவோம். கடந்த மூன்றாண்டுகளில் இந்த மாதிரி ‘சூடு, சுரணை காக்கும்’81 கொலைகள் நடந்துள்ளன. இப்படித்தான் கெளசல்யாவை மணந்த சங்கரை உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில், மக்கள் மன்றத்தில் நடுவில் அரிவாளால் வெட்டி கொன்றார்கள்.

    வெளிநாடுகளில் சொகுசாக அமர்ந்துகொண்டு தமிழ்நாட்டை, ட்விட்டர், ஃபேஸ்புக், லொட்டு, லொசுக்கு, மண்ணங்கட்டி செய்திகளை நம்பிப் பட்டி மன்றம் நடத்தும் நண்பர்களே! எவிடென்ஸ் கதிர் அவர்கள் சொல்வதை கேளும்:

    • இத்தகைய கொலைகள் அதிகரித்து வந்தபோதிலும், ஒரு கொலை வழக்கிலாவது தண்டனை கொடுக்கப்படவில்லை. ஏன்? எல்லாக் கொலையாளிகளும் குடும்பத்தினர் என்பதால்.
    • 22 மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் ‘மரியாதைக் கொலை’( இணையம் கொடுத்த மொழியாக்கம்) பற்றி விவரம் கொடுத்துள்ளனர். தமிழ்நாடு அவற்றில் ஒன்று அல்ல.
    • தற்கொலை என்று சொல்லித் தப்பிப்பது ஒரு வாழ்நெறி, இங்கு.

    இந்த வாழ்நெறி நசுக்கி ஒழித்து விடாப்பட்டால் 2077 தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இருக்காது; அதற்கு இருக்கவேண்டிய தகுதியும் இருக்காது. யாராவது சிலருக்காவது மனம் கொதிக்குதா என்று பார்ப்போம். மனம் இரங்குதா என்று பார்ப்போம்.காஷ்ட மவுனம் சாதிக்காமல், இந்த மாதிரியான வாழ்நெறியைக் கடைபிடிக்காத பிராமணர்களை மட்டும் தாக்கும் மனப்பான்மை தணிந்து நடுநிலை முக்கியத்துவம் பெற்றால், 2077 லாவது தமிழ்நாடு செழிப்புடன் திகழக்கூடும்.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    படித்தவை:

    http://www.deccanchronicle.com/nation/crime/150316/81-honour-killings-in-three-years-in-tamil-nadu.html

    http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/aug/31/trial-begins-2003-tamil-nadu-honour-killing-case-1650474.html

     

     

     

    Share
  • கங்காரு நாட்டின் கண்ணியம் 

     
    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    கங்காருநாடு என அழைக்கப்படுகின்ற அவுஸ்திரேலியா 200 வருட வரலாற்றினைக் கொண்டது. இங்குப் பல நாட்டினர், பல மொழிகளைப் பேசுபவர்கள், பல இன கலாசார பண்பாடுகளைக் கொண்டவர்கள் என 165 இனமக்களை அரவணைத்து அவர்களுக்கு அமைதியான ஆறுதலான வாழ்வினையும் வழங்கிக் கங்காருநாடு கண்ணியம் மிக்க நாடாக உலகில் விளங்குகிறது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

    ஜனநாயகத்தை நூறுசதவிகிதம் நிலைநாட்டி வெற்றியுடன் திகழும்  கண்ணியமும் இங்கு இருக்கிறது என்பது குறிப்பிடப்படவேண்டிய தொன்றேயாகும்.

    இந்த நாட்டின் ஆதிகுடிகள் “அபோர்ஜினிஸ்” என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் கங்காரு மண்ணுக்கு உரியவர்கள் ஆவர். ஆனால் பிரித்தானிய ஆக்கிரமிப்பால் நிலைமாறி இப்போது கங்காரு மண்ணின் சொந்தக்காரர் வெள்ளையர் ஆகிவிட்டார்கள். என்றாலும் ஆதிகுடிகள் வரலாறு கங்காரு மண்ணுடன் ஒட்டியே இருக்கிறது. அவர்களின் நிறம், அவர்களின் மொழியில் காணப்படும் சில சொற்கள், அவர்களின் விழாக்கால கொண்டாட்ட அலங்காரம் இவற்றையெல்லாம் உற்று நோக்கும்பொழுது தமிழர்களின் சாயல் அவர்களிடத்துப் படிந்திருப்பதாகக் கருத முடிகிறது. இதனால்தான் தமிழர்களையும் கங்காரு நாடு கைகொடுத்து வரவேற்றதோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.

    பல்லினக் கலாசாரத்தின் தொட்டிலாகக் கங்காரு நாடு திகழ்கிறது. மதம் கடந்தமக்கள் பலர் இங்கு இருப்பதனால் மதமென்னும் குணத்தை இங்கு காண்பது அரிதென்றே சொல்லலாம். அரசாங்கம் மதம்பற்றி எதுவுமே பேசுவதில்லை. அதே வேளை வழிபடும் சுதந்திரத்திலும் தலையிடுவதும் இல்லை. விரும்பியவர்கள் விரும்பியபடி தங்கள் சமயவழிபாடுகளை நிகழ்த்தும் உரிமையை இந்த நாடு வழங்கியிருக்கிறது. இதனால்  வழிபாட்டில் மக்கள் தாம்விரும்பியவாறு ஈடுபடும்முழுச் சுதந்திரம் இங்கு காணப்படுகிறது. இதனால்தான்  அவுஸ்திரேலிய மாநிலங்களில் பல இந்துக் கோவில்கள் எழுச்சிபெற்று இருக்கின்றன. படிக்கும் பாடசாலைகளிலும் மதம்பற்றிப் பேசப்படுவதில்லை. ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமியப் பாடசாலைகளில் அவரவர் மதக்கல்வி ஊட்டப்படுவதற்கும் எந்தவிதத் தடையும் போடப்படுவதும் இல்லை. அவுஸ்திரேலியர்களாக இருக்கின்றவர்கள் தங்களின் பெயர்களை கிறிஸ்தவப் பெயராக வைத்திருந்தும் அவர்கள் தாங்கள் எந்தமதம் என்று சொல்லிக்கொள்வதும் இல்லை. அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. இதனால் மதம் என்னும் பெயரால் இங்கு எந்தவிதச் சிக்கல்களோ மோதல்களோ ஏற்படுவதே இல்லை.

    பல்லினக் கலாசார நாடாக விளங்குகின்ற காரணத்தல் கறுப்பு வெள்ளை என்று பார்க்கும் குறுகிய நோக்கும் இங்கு இல்லை என்றே கூறலாம். இதனால் ஆசியநாட்டவரோ ஆப்பிரிக்க நாட்டவரோ அமைதியாக ஆறுதலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனலாம். மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு இந்த நாட்டின் முக்கியப் பண்பாடாக விளங்குகிறது. அரசியல் பிரமுகர்கள் கூட எதுவித ஆடம்பரமும் இன்றிச் சாதாரண மக்கள் போன்றே சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவார்கள். மந்திரியாக இருந்தாலும் கடைகளில் பொருட்களை வாங்கினால் அதற்குரிய பணத்தைக் கொடுத்தே வாங்குவார். மந்திரிக்கென்று தனியான சலுகைகள் கிடையாது. அவரும் சாதாரண பிரசையாகவே நடந்துகொள்ளும் முறையானது ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பினையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.

    முன்னேற விரும்பும் யாவருக்கும் இந்த நாடு நூறு சதவிகித ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. விரும்பியதைப் படிக்கலாம். விரும்பிய தொழிலைச்செய்யலாம். படிப்பதற்கு வயது இங்கு ஒரு தடையில்லை.எந்த வயதினரும் விரும்பியதைப் படிக்கும் வசதி இங்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

    வேலைசெய்ய முடியாதவர் எனக் கணிக்கப்பட்டவர்கள், வயதுவந்தவர்கள், வேலையினை இழந்தவர்கள் யாவருக்கும் அவர்கள் அன்றாடம் வாழும் வகைக்கு ஏற்ற பண உதவிகளை இந்தநாடு சிறப்பாக வழங்கியும் வருகிறது. மூத்தோருக்குப் பல சலுகைகளையும் கொடுத்து வருகிறது. பெண்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு இந்தநாட்டில் கிடைக்கிறது.  இந்த நாட்டுக்கு வந்த தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நாடு பல்கலாசாரத்தைப் பேணுவதால் தமிழர்தம் பண்பாடு கலாசாரங்களுக்கு மதிப்பளித்து அவர்களின் சமூக அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள சர்வ சுதந்திரமும் வழங்கி நிற்கிறது என்பது மிகவும் கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும்.

    தமிழை அரசாங்க அறிவித்தல்களில் கூட இந்தநாடு இடம்பெறச் செய்திருக்கிறது. தமிழை மட்டுமே தெரிந்தவர்கள் கூடத் தமது கருமங்களை ஆற்றுவதற்கு மொழிமாற்றுச் சேவையினையும் இலவசமாகக் கொடுத்து உதவி நிற்கிறது. தமிழ் அமைப்புகளுக்கு பண உதவிகளை வழங்குகிறது. தமிழ்ச் சங்கங்களின் விழாக்ககளுக்கு குறிப்பிட்டளவு பண உதவிகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதே.

    கங்காரு நாட்டில் தேர்தலில் இந்தநாட்டின் பிரசையாகிவிட்ட எவருமே வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழர்கள் கலந்து வெற்றியீட்டி அரசியலில் கலந்த சேவையாற்றும் வாய்ப்பும் இங்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்த நாட்டில் இருந்து படித்து தொழில் பார்க்க ஆங்கிலம் அவசியம் என்பதனால் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் அதே வேளை சொந்த மொழியை, பண்பாட்டை விட்டுவிடத்தான் வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. இது இங்கு வந்த யாவருக்கும் பெரும் வரப்பிரசாதம் என்றுதானே எண்ணவேண்டும்.

    இதனால் தமிழ் மொழி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. அவுஸ்திரேலிய அரசின் மொழிக்கொள்கையானது அவுஸ்திரேலியாவில் ஆங்கிலமும் பிற மொழிகளும் வளரப் பெருந்துணையாய் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. 1980ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கென்று ஒரு மொழிக்கொள்கை தேவை என்ற நோக்குடன் அரசின் மொழிக்கொள்கையை நடுவண் அரசு நான்கு முக்கியக் கோட்பாடுகளுடன் உருவாக்கி, தேசிய அளவில் அதை ஒழுங்குபடுத்தியது. அதில் ஆங்கில மற்ற மொழிகளைக் காத்தல், மற்ற மொழிகளிலும் அரசியல்சேவைகள் கிடைக்கப் பண்ணுதல், இரண்டாவது மொழி கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.

    இதன்படி 1987 ஆம் அவுஸ்திரேலியாவின் தேசிய மொழிக்கொள்கை நடுவண் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இக்கொள்ளை அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் ஆங்கிலம் பேசும் நாடுகளில் இப்படி ஒரு பன்மொழிக் கொள்கையை வகுத்த முதலாவது நாடாக அவுஸ்திரேலியா விளங்குகிறது என்பது இந்தநாட்டின் கண்ணியமான ஒரு செயற்பாடாக அமைகிறதல்லவா? தமிழை அரசாங்கம் ஒரு மொழியாக அங்கீகரிக்கும் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும் முக்கியமான விஷயம் எனலாம்.

    சில நாடுகளில் தங்கள் தாய் மொழியில் பேசவே பயப்படுகின்றனர். உதாரணமாக இலங்கையின் தலைநகரில் வாழும் தமிழ் மக்கள் வெளியிடங்களில் கூடியளவு தமிழில் பேசுவதை தவிக்கின்றார்கள். காரணம் அங்குள்ள பெரும்பான்மை இனத்தவர் தங்களை இனங்கண்டுவிடுவார்கள் என்னும் பயத்தினாலே. அப்படி இனங்காணப்பட்டால் தமக்குப் பாதுகாப்பு இல்லாமை வந்து விடலாம் என்று இன்றளவும் அஞ்சும் நிலை காணப்படுகிறது.

    ஆனால் கங்காரு மண்ணில் மட்டும் இந்தப் பயத்துக்கு இடமே இல்லை. வீட்டிலோ, தெருவிலோ, வேலைசெய்யும் இடத்திலோ, போக்குவரவு செய்யும் பஸ்சிலோ, புகைவண்டியிலோ, சந்தைகளிலோ, விமான நிலையத்திலோ எங்கு வேண்டுமானாலும் இன்பத் தமிழில் இனிமையாகப் பேசக்கூடிய சுகம் இந்த நாட்டில் இருக்கிறது. அந்த அளவு வேற்று மொழிக்கும் அவர்களது பண்பாடுகளுக்கும் கெளரவம் வழங்கும் கண்ணியம் மிகவும் தாராளமாக இங்கு இருக்கிறது என்பதை யாவரும் ஏற்றுக் கொள்ளுவார்கள்.

    இதனால்தான் தமிழ்விழாக்களையும், தமிழ் நூல்கள் வெளியீடுகளையும், இசை, நடன அரங்கேற்றங்களையும், தமிழ்ப் பத்திரிகைகளையும், தமிழ்ச் சங்கங்களையும் அமைத்துத் தமிழர்கள் தங்கள் சுயத்தினைத் தொலைக்காமல் கங்காரு நாட்டில் வாழ முடிகிறது என்றால் அதனை கங்காரு நாட்டின் கண்ணியம் என்று போற்றுவது பொருத்தமாக இருக்கிறதல்லவா!

    Share