-இன்னம்பூரான்
அக்டோபர் 25, 2017

innam

பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா எனப்படும் பாரதவர்ஷம் முழுவதையும் ஒரு மன்னர்பிரான் ஆண்டுவந்தார். வெண்குடை, கிரீடம், சாமரம், சிம்மாசனம், செங்கோல் போன்ற அரசாட்சி சின்னங்களும், பட்டு, ஜரிகை, பீதாம்பரம் போன்ற படாடோப ஆடைகளும், ஜொலிக்கும் வைரம், மரகதம், வைடூர்யம், பவழம், நன்முத்து போன்றவை மாசறு பொன்னில் பதித்த அணிகலன்களையும் அணிந்து அவன் யானை மீது அமர்ந்தோ, குதிரை சவாரி செய்தோ, இரதத்தில் பவனி வந்தோ, அந்தப்புரத்திலிருந்து அரண்மணை தர்பார் மண்டபத்துக்கு வருவது கண்கொள்ளாக்காட்சி என்று மக்கள் கூறுவர். ராஜகுரு, மந்திரிமார், தளபதி ஆகிய உயர் அதிகாரிகள் நாணயத்துக்கும், வாய்மை அணுகுமுறைக்கும், மக்கள் நலத்துக்கு உழைப்பதற்கும், ராஜவிசுவாசத்திற்கும் அழியாப்புகழ் பெற்றவர்கள். சுற்று வட்டாரங்கள் அவரவர் பொறுப்புகளைக் கவனத்துடன் சிறப்பாக ஆற்றுவதில் ஈடு, இணை இல்லாதவர்கள். சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு கிடையாது. தகுதிக்கு மட்டும் தான் மதிப்பு. சிபாரிசு என்பது மன்னனுக்கு ஒவ்வாதது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருந்தது என்று பேசிக்கொள்வார்கள்.

அந்தக்காலத்தில் பல மனைவிகளை மணந்து கொள்ளும் வழக்கம் கிடையாது. ஆகவே, மஹாராணி என்ற அந்தஸ்து ஒரே ஒரு அழகிய பெண்மணியை மட்டும் சாரும். அவரும் சுயம்வரத்தின் போதுதான் இவரைத் தேர்ந்தெடுத்தார். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்ற உலகவழக்குக்கிணங்க, அந்தப்புரத்தில் அவள்தான் ராணி. ராஜா அவளை தாஜா பண்ணுவதே ஒரு சுவையான காட்சி என்று தாதிகள் தங்கள் தங்கள் கணவர்களிடம் கூறி, அடக்கி ஆள்வார்கள். அலங்காரத்தில், அரசனை விட ஓர் இம்மி அளவு குறைவு இல்லை என்றாலும், அவர் குணவதி. ராஜகுமாரி அரசுப்பள்ளியில் தான் படித்துவந்தாள். மதிய உணவு அரண்மணையிலிருந்து வராது. மற்றவர்களுடன், அவளும், வரகுச்சோறு, கம்பங்கூழ், கேழ்வரகு அடை, தினைப் பாயசம் போன்றவற்றை உண்டு ஆரோக்யமாக இருந்தாள். செல்வனின் மூதாதையர்கள் கூடப் பிறவாத காலமது. பேலியோ டயட் நடைமுறைக்கு வரவில்லை. பசுஞ்கன்றுகளும் சேஃப்; பன்றிக்குட்டிகளும் சேஃப்; மீன்குஞ்சுகளும் சேஃப்; காடை கெளதாரிகளும் சேஃப். வாத்துக்கள் அன்னநடை போட்டன. புலியும் ஆடும் நட்பு பாராட்டி ஒரே ஓடையில் நீர் பருகின. ஆனாலும், பக்கத்து ராஜாங்கத்தில் சிலர் மர்மமான பேலியோர்கள் என்று இலைமறைவு காய்மறைவாகச் சொல்லப்படுவது உண்டு. இது நிற்க.

சுருங்கச்சொல்லின், அரசாட்சியின் மேன்மை பாதரசக்கண்ணாடி போல் மக்கள் முகத்தில் மகிழ்ச்சியாகத் திகழ்ந்தது. இப்படியிருக்கும்போது ராஜாவின் முகம் ஒருநாள் இருண்டது. அவர் கவலையில் ஆழ்ந்து விட்டதைக் கண்டு, ராணியும், ராஜகுமாரியும் கண்கலங்கினர். தாதிகள் மூலம் ட்விட்டர் துணுக் போன்றவைத் தற்கால டெங்குவைவிட வேகமாகப் பரவியதால், மக்களும் யாது செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அரண்மனைக்கு எதிர்வாடையில் ஒரு மினி தர்பார் மண்டபம் உளது. அங்கு அரசர் வரும் மரபு கிடையாது. எனவே, ராஜகுரு, மந்திரிமார், தளபதி ஆகிய உயர் அதிகாரிகள் அங்கு கூடி மந்திராலோசனை செய்தார்கள்; குழப்பம் கூடியது தான் மிச்சம்.

[தொடரும்]

***

சித்திரத்துக்கு நன்றி:
https://i.ebayimg.com/images/g/~OAAAOSwCQZZB-lj/s-l225.jpg

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.