திருமந்திரத்திலிருந்து சில சிந்தனைத் துளிகள் 32

0

க. பாலசுப்பிரமணியன்

அறிவே அறிவைத் தேடி ..

திருமூலர்-1-3

பாசத்திலிருந்து விடுபடவேண்டும் என்று துடிக்கின்ற மனம் அந்த மயக்கத்தை விலக்க அறிவின் துணையை நாடுகின்றது. உயிர்களுக்குள் இருப்பதோ சிற்றறிவு. பேரறிவாளனாகி எங்கும் ஆதிக்கம் செய்து இருப்பவனோ இறைவன். ஆகவே இந்த சிற்றறிவு பேரறிவின் துணை கொண்டாலன்றி அதனோடு ஒன்றாகி ஆனந்த அனுபவ நிலைக்குச் செல்ல முடியாது. இந்தத் தேடல் எப்படிப்பட்டது?  திருமூலருக்கு இந்தத் தேடல் இருந்ததா ?

திருமூலர் கூறுகின்றார்

தேடுகின்றேன் திசை எட்டோடு இரண்டையும்

நாடுகின்றேன் நலமே உடையான் அடி

பாடுகின்றேன் பரமே துணையாம் எனக்

கூறுகின்றேன் குறையா மனத்தாலே

இதை விடச் சிறந்த விளக்கம் நமக்குத் தேவையோ ?

தேடல் ஒரு அருமையான அனுபவம். அது நம்முடைய உயிரின் ஒரு பயிற்சி நிலை. இடைவிடாத முயற்சியால் அது இந்தப் பயிற்சியின் மூலம் உண்மை அறிவை நாடிச் செல்லுகின்றது. ஒளி மையமாக விளங்கும், அன்பின் வடிவமாக விளங்கும் அந்தப் பேரறிவின் அடிகளைச் சென்று அணைக்க விரும்புகின்றது. இந்த முயற்சியின் முடிவில் அது எதைத்தான் அறிந்துகொள்கின்றது? விளக்கம் இதோ : 

என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்

என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

என்னை அறிந்திட்டு இருத்தலும

என்னை இட்டு என்னை உணர்கின்றேனே

என்னை அறிந்திலேன் என்று தன் அறியாமை நிலையை விளக்கிய பின் “என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்” என்று தன்னுடைய விடுதலை அடைந்த முக்தி நிலையையும் தெளிவாக விளக்குகின்றார்

“என்னை இட்டு என்னை உணர்கின்றேன்” – என்ன அருமையான கருத்து. சிற்றறிவின் சின்னமாக விளங்கும் இந்த உயிர் பேரறிவின் ஒளியோடு இணையும் பொழுது நானும் நானாகின்ற நிலை- வியப்பாக உள்ளதன்றோ? – ஒரு மிகப் பெரிய ஆன்மீகக் கருத்தை திருமூலர் எவ்வளவு அழகாக விளக்குகின்றார்

இந்த முயற்சியின் பல்வேறு வளர் வடிவ நிலைகளை உள்ளம் உருகும் வகையில் மாணிக்கவாசகர் தம்முடைய திருவாசகத்தில் முன்வைக்கின்றார்

புல்லாகி பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிக் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லகர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்யான் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே”

.பிறந்து பிறந்து இளைத்த பெருந்தகையின் உள்ளுணர்வு நமக்கு எவ்வளவு பெரிய பாடத்தைப் புகட்டுகின்றது? இந்த வகையிலே ஒவ்வொரு அடியார்களும் ஒவ்வொரு விதமாக அந்தப் பேரருளாளனை  நாடியிருக்கின்றார்கள். பட்டினத்தார் இந்த அறிய அனுபவத்தைப் பெற என்ன முயற்சி செய்தார்? அவரே கூறுகின்றார்

அஞ்சகக் கரமென்னும் கோடாலி கொண்டிந்த ஐம்புலன்கலாம்

வஞ்சப் புலக்கட்டை வேர்அற வெட்டி வளங்கள் செய்து

விஞ்சத் திருத்தி சதாசிவம் என்கின்ற வித்தை விட்டுப்

புஞ்சக் களைபறித்தேன்; வளர்த்தேன் சிவபோகத்தையே “ 

அந்த ஐம்புலன்களின் தூண்டுதலால் நமக்கு வரும் துன்பங்களைக் கட்டுப்படுத்த என்னென்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கின்றது! திருநாவுக்கரசரோ இதற்கு உள்ள ஒரே வழியாக மனத்தைக் கட்டுப்படுத்தி அறிவு என்னும் ஒளியை ஏற்றுவதன் அவசியத்தை அழகாக எடுத்துரைக்கின்றார்

 உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக

மடம்படும் உணர்நெய்யட்டி உயிரேனும் திரிமயக்கி

இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்

கடம்பர் காளை தாதை கழலடி காணலாமே

 இந்தப் பேரறிவின் திருவடிகளை அடைவதற்கு நம்முடைய சிற்றறிவு என்ன முயற்சி செய்கின்றது? இந்த முயற்சிகள் அதனுடைய வலிமையினாலோ அல்லது வளத்தினாலோ கிடைத்ததா? இல்லை அதற்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா ? மனத்தைக் கட்டுப்படுத்தி கிடைக்கும் அறிவின் தன்மை எப்படிப்பட்டது ?

திருமூலர் விளக்குகின்றார் :

அறிவுக்கு அழிவு இல்லை ஆக்கமும் இல்ல

அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை

அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு

அறைகின்றன மறையீறுகள் தாமே.

என்ன ஒரு அடக்கம் அவருடைய சொற்களில் ! ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகின்றேன் என்று சொல்லாமல் “அறைகின்றன மறையீறுகள் தாமே” என்று சொல்லி தன்னுடைய கருத்தை வலிமைப் படுத்திக்கொள்ளுகின்றார்.

அறிவின் வடிவாய் அமர்ந்த அந்தப் பேரறிவாளனின் வண்ணத்தை காரைக்கால் அம்மையார் எவ்வாறு காண்கின்றார் தெரியுமா ?

அறிவானுந் தானே அறிவிப்பான் தானே

அறிவால் அறிகின்றான் தானே – அறிகின்ற

மெய்ப்பொருளுந் தானே விரி-சுடர்பார் ஆகாயம்

அப்பொருளுந் தானே அவன்

ஆகவே நலமான வாழ்விற்கு வளமான வாழ்விற்கு ஐம்பொறிகளின் தூண்டுதலால் கிடைக்கின்ற சிற்றறிவின் விளைவான சிற்றின்பங்களைத் துறந்து பேரின்பத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும். இந்தக் கருத்தை தன்னுடைய ஈரடிகள் மூலம் வள்ளுவர் அழகாகச் சொல்லுகின்றார்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்

திருமூலரின் ஒவ்வொரு பாடலும் நம்முடைய சிந்தனையை வளர்த்து பேரின்ப வாழ்வுக்கு ஒளிவிளக்காக அமைந்துள்ளது.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *