புலவர் சூ.தாமசின் படைப்புகளில் வேளைநகர் அன்னையின் சிறப்புகள்

1

-அ.அல்போன்ஸ் சிந்தியா  

அமைதியின் உருவமாய், அழகின் வடிவமாய், உத்தமப் பெண்ணாய், அறத்தின் இமயமாய்த் திகழ்பவள் அன்னை மரியாள். முப்பொழுதும் கன்னியாய் இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து ஈன்றெடுத்த மகன் இயேசு கிறிஸ்து. இருப்பினும் தியாகத்தின் திருவுருவமாகவும், உலக மக்களின் தாயாகவும் திகழ்பவள். இவ்வன்னையின் புகழை, தனித்தன்மையை, புதுமையைப் பல்வேறு வடிவங்களில் கவி செய்துள்ளார் புலவர்  தாமஸ் அவர்கள். இவர் 1910 ஆகஸ்டு நான்காம் நாள் அன்று தஞ்சை மாவட்டத்தில் கோட்டரப்பட்டி என்ற சிற்றூரில் பிறந்தார்.

திருக்காட்டுப்பள்ளி சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை பயின்றார். அதன்பின் அவர் பெரிய தகப்பனார் வைத்திருந்த தேம்பாவணி, அரிச்சந்திர புராணம் முதலிய நூல்களைப் படித்ததனால் அப்பெருமனாருக்குத் தமிழ் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் உந்தப்பட்டு 1931 ஆம் ஆண்டு அவரது உறவினரும் திருச்சி ஆர்.சி.பயிற்சிப் பள்ளி தமிழாசிரியருமான சுயம்பிரகாச உடையார் வீட்டில் தங்கி, மதுரைத் தமிழ்ச் சங்கப் பிரவேச பண்டிதத் தேர்வுக்குப் படித்து 1932ஆம் ஆண்டில் வெற்றியும் பெற்றார்.

1933இல் அவருக்குத் தெரிந்த ஒரு பெரியாரின் உதவியால் உள் மாணவனாகச் சேர்ந்து 1936இல் தனித்தமிழ் வித்வான் தேர்வில் வெற்றி பெற்றார். 1938ஆம் ஆண்டில் தூத்துக்குடி தூய சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டு தமிழாசிரியராக இருந்தார். 39ஆம் ஆண்டு முதல் தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 22 ஆண்டுகள் தமிழாசானாய் விளங்கி ஓய்வுபெற்றார். அவரது உயர்ந்த பணியால் சிறப்பும் பெற்றார்.

தமிழில் பல கிறித்துவ இலக்கியங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. அவற்றுள் சிற்றிலக்கிய வகைமைகளை அடிப்படையாகக் கொண்டு தஞ்சைப் புலவர் சூ.தாமஸ் அவர்கள், சிறப்புடைய பத்தொன்பது தலைப்புகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு ‘ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்னும் தலைப்பில்  வெளிவந்துள்ளன. இறைமகன் ஏசுவின் எண்ணற்கரிய வாழ்வியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கவிபாடியுள்ள திறம், இலக்கிய இலக்கணச் செழுமை, சிற்றிலக்கிய வகைமை போன்றவை கிறித்துவ இலக்கிய வரலாறுகளில் நிலைத்த புகழ்பெற்று சிறப்படைந்துள்ளது.

இந்நூலிற்கு வணக்கம் தெரிவித்த சிந்தனைச் செல்வர் புலவர் நாகசண்முகம் அவர்கள், “போற்றத்தக்க நூல் எழுதுவது கருவூலத்திற்குச் சிலை வடிப்பதைப் போன்றது. அந்த நூலைச் சீரோடும் செம்மையோடும் பதிப்பிப்பது என்பது ஆலயம் எழுப்புவது போன்றது என்பன இளமைக் காலத்திலிருந்தே என் கருத்தோடு கலந்துவிட்டவை” என்று  கூறியுள்ளார். அவ்வாலயத்தில் இருக்கும் இறைவனே இப்புத்தகம்தான் என்பது என் கருத்து. புலவரின் புலமையை நிலைநாட்டும் விதமாக அவரது இலக்கியச் சுவையையும் அன்னையின் சிறப்பினையும் அரிய கருத்துக்களையும் வெளிக்கொணருவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வேளைநகரின் இயற்கை செழிப்பு   

புலவர் சூ.தாமசின் படைப்புகளில் முதலாவதாக, வேளை நகர் அன்னையின் பெருமைகளையும் அற்புதங்களையும் கருணைகளையும் எடுத்தியம்பும் திறம் வியப்பிற்குரியதாகும். இறை இயேசுவின் தாயாக விளங்கும் தூய கன்னிமரியாள் அற்புதக் காட்சி கொண்டு உறைவிடமாக வீற்றிருக்கும் வேளைநகர், பார்ப்பவரின் கண்ணைக் கவர்ந்திடும் வண்ணம் உன்னதக் காட்சிகள் பெற்று விளங்கும். ஒவ்வொரு நாளும் அருவியிலிருந்து விழுந்து கொண்டிருக்கும் நீரின் சத்தம் முழவின் ஓசையைப்போல் ஒலி எழுப்பும். குயில்கள் இசையை எழுப்பிக் கொண்டும், மயில்கள் நாடகப் பெண் போல நடனமாடிக் கொண்டும் மகிழும் காட்சி மனத்திற்கு குளிரூட்டும். இதனைப் புலவர்,

              “நித்தம் அருவியில் நீர் குதிக்கும் – அந்தச்
               சத்தம் முழவினைப் போல் தொனிக்கும்
               நத்தும் குயில்கள் இசை முழக்கும் – மயில்

               நாடக மாதரைப் போல் நடிக்கும்”   (ஏ.தீ – 1:3)  

என்ற வரிகளால் சிறப்பித்துள்ளார். மேலும் அந்நீரில் வாளை மீன்கள்; துள்ளிக் குதிப்பதையும் குளத்தில் தென்னங்குலை சாய்வதையும் தாழை மடல் மணம் வீசுவதையும் அழகுபடுத்தியுள்ளார்.

வேளை நகரில் வயல்களின் செழிப்பு

 ஞாயிறு தோன்றி தன் கதிர்களை பரப்பும் முன், உழவர்கள் வயலிற்குச் சென்று உழவுத்தொழில் ஈடுபட்டிருப்பார்கள் அச்சூழலில் காலை வேளையில் குரங்கினங்கள் இளநீர் பறித்துப் பாதசாரிகள் மீது வீசி ஆர்ப்பரித்து விளையாடி ஆரவாரிக்கும் சிறப்பினையும், நெற்கதிர்கள் கரும்பினைப் போல் வளர்ந்து காட்சித்தரும் தன்மையினையும், சேறு நிறைந்த வயல்களில் நண்டு உறங்கிக் கொண்டிருக்கும் செயலினையும், சேவல் அதன் பெடையோடு கண்ணுறங்குவதையும் நாற்று நடும் பெண்களின் இசையினையும் பறவையினங்கள் அதைக் கேட்டு மகிழும் திறத்தினையும் செம்மைபடுத்தியுள்ளார் இதனை,

          “சாலைக் குரங்கிள நீர் பறிக்கும்”         (ஏ.அ.தீ-1:7)
          “செந்நெல் கரும்பினைப் போல் வளரும்”  (ஏ.அ.தீ-1:8)
          “சேவல் பெடையோடு கண்ணுறங்கும்”   (ஏ.அ.தீ-1:10)

என்ற பாடல் வரிகளால் அறியலாம்.

மந்தியின் செயல்கள்

இயற்கையின் எழிலைக் கண்டுணர்ந்த புலவர், ஆலமரத்தில் தொங்கும் விழுதுகளைக் கண்டு பாம்பென்று அஞ்சி குரங்குகள் ஒதுங்கும் காட்சியினை எடுத்தியம்பும் திறம் சிறப்பிற்குரியதாகும். இதே கருத்தினை வாணிதாசன் கவிதை தொகுப்பில், உயிர் வாட்டும் காலம் என்னும் தலைப்பில்,

          “பசு மூங்கில் தேனடையைச் சிதைத்துண்ட மந்தி
           மால் கொண்ட கடுவன்வால் பாம்பென்
           றஞ்சும்” என்ற வரிகளால் மந்தியின் செயல்பாடுகளை ஒப்பு நோக்கி அறிய முடிகிறது.

இடையர்குலச் சிறுவன் கண்ட அதிசயம்

வேளைநகருக்குச் சற்றுத் தொலைவில் ஒரு சிற்றூர் பழங்காலத்தில் அதனை வேளாளர் காணியென்று அழைப்பர். சிலர் ஏருழுதும், சிலர் பால் கறந்தும், சிலர் மீன் பிடித்தும், சிலர்  குற்றேவல் செய்தும் வாழ்ந்து வந்தனர். பழைய ஊரான அச்சிற்றூரில் ஓர் தெருவில் வசித்து வந்த பெண் வறுமையுற்று வாழ்ந்து வந்தாள். அப்பெண்ணின் தனித்தன்மையைப் புலவர், 

          “கன்ன லெனப்படும் மென் மொழியாள் – இரு
           காதள வோடிய நீள் விழியாள்
           அன்ன மெனப்படும் நன்னடையாள் – அந்த
           ஆயர் குலத்துக் கொடியிடையாள்”        (ஏ.அ.தீ-1:33) என்ற வரிகளால் உவமைகள் வாயிலாக வர்ணித்துள்ளார் ஆசிரியர்.

அம்மங்கைக்கு  ஓர் ஆண் குழந்தை இருந்தது. பசுவும் கன்றுமே அவளுக்குச் சொத்தாக இருந்தது. காலையில் எழுந்ததும் குளித்து, வீட்டு வேலைகளைச் செய்து முடித்து, துயிலும் மகனை எழுப்பிவிட்டு பால் கறக்கச் சென்றாள். பால் செம்பை எடுத்துச் செல்ல மறந்து சிறிதும் பொறுப்பில்லாமல் விளையாடும் தன் மகனை அழைத்து, வறுமையறியாத மகனே!  நீ செல்ல தாமதித்தால், அடுப்பில் பூனை உறங்கும், கையில் காசும் இல்லை. அதனால் கவலை அதிகரிக்கும். எனவே நாகைக்கு விரைவாகச் சென்று வா என்று மொழிந்தாள். தாயின் புலம்பலைக் கண்ட அச்சிறுவன் மிக நொந்து கொண்டு மனமில்லாதவனாய் அடிமேல் அடி வைத்து கண்ணீர் ததும்ப மெல்ல மெல்ல நடந்து சென்றான். வெயிலின் வெம்மை அதிகரிக்கச் சிறுவனின் கால்கள் மண்ணில் பதிய மறுத்தன என்பதால் இளைப்பாற நினைத்துக் குளக்கரைக்கு அருகில் இருந்த ஆலமர நிழல் கண்டு ஒதுங்கினான். தென்றல் வீசவும், கிளைமீதினில் கிளிகள் பேசவும், தனிமையில் களைப்பு நீங்கவும் கண்ணை சுழற்றி உறங்கவே நல்லதொரு தூக்கத்தில் இனிமையானதொரு கனவும் தோன்றியது.

கன்னியும் குமாரனும்

சிறுவனின் கனவில் ஒரு பெண் வந்தாள். அவள் அழகிற்கு இணையேதும் இல்லை. அவள் கையில் ஒரு குழந்தை தூய்மையான சந்திரன்போல் ஒளி வீசியது. இக்காட்சியைக் கண்ட சிறுவன் விழித்துக் கொண்டான். களை சொட்டும் முகத்துடன் அவ்வன்னை அருகில் வர, சிறுவன் என்ன செய்வதென அறியாது திகைத்தான். கண்ணை கசக்கி இரு கைகளையும் கூப்பி நின்றான். தாயைக் கண்டு வியந்தான், அதிசயித்தான், தன்னை அறியாது மகிழ்ச்சியில் மூழ்கினான். இருப்பினும்  அவனுள் அச்சமும் ஏற்பட்டது. அத்தகைய அழகுமிக்க அன்னை மற்றும் சுதனின் தோற்றப் பொவை,

          “ கன்னி யொருத்தி இது போலே – எங்கும்
           கண்டறியேன் இப் புவிமேலே
           சின்னக் குழந்தை யோர் சித்திரமே – அதன்
           சிரிப்புதான் என்ன விசித்திரமே”          (ஏ.அ.தீ-1:53)

என்ற வரிகளால் அழகுபடுத்துகிறார் புலவர். தாயைக் கண்ட வியப்பில் ஆழ்ந்தான் சிறுவன். அவ்வேளையில், அத்தாய் பச்சைக் குழந்தையைக் காட்டி, செம்பின் பக்கம் கையை நீட்டிக் கொஞ்சம் பால் தருவாயா பிள்ளைக்கு என்று கேட்டாள். கையில் செம்பைக் கொடுத்தான். அதை தெய்வச் சிறுவனும் உண்டு களித்தான் நன்று என்று வாழ்த்தி மகிழ்ந்தாள் செம்பை கொடுத்துவிட்டு மறைந்தாள்.

சிறுவனின் மகிழ்ச்சியும் பயமும்

மெய்ம்மறந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க, செம்பில் பால் குறைந்த வருத்தத்தில் நாகைக் காரனின் சினம் கண்டு வருந்தி செம்பை மறவாமல் எடுத்துச் சென்றான். நாகையில் அந்த எஜமான் பால் வரவில்லையே என்று சினம்கொண்டு  தெரு வீதியைப் பார்த்தே சலித்துப் பாவி மகனின் பால் இனி எதற்கு என்றே திட்டித் தீர்த்தான். நடுங்கி வந்த சிறுவன் எஜமானின் சினம் கண்டு செம்பை வைத்துவிட்டு செம்பில் பால் குறையும் என்று சொன்னபடி ஓடினான். எஜமான் செம்பைத் திறக்க பால் பொங்கி வழிந்தது கண்டு மயங்கினான், சிறுவனும் வியந்தான். என்ன நடந்தது என்று கேட்க, சிறுவன் நடந்ததைக் கூற, மனம் குழம்பி என்னையும் அங்கு அழைத்துச்செல் என்று கூறினான் சிறுவனும் அழைத்துச் சென்றான். 

குளக்கரைக்கு அருகில் உள்ளம் உருகி நிற்கவே அந்த தாய் மறுபடியும் மகனுடன் வந்து காட்சி தந்தாள். எஜமான் கைகுவித்து வணங்கினான். இதனை,

          “ கண்டு வணங்கியே கைகுவித்தார் – தெய்வக்
           கன்னியிவள் எனவே மதித்தார்
            நின்ற பிறகும் அதிசயித்தார் – கண்ட
           நின்மலத் தாயினை யேதுதித்தார்”        (ஏ.அ.தீ-1:71)

என்ற பாடலால் காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். அன்று முதல் ஆலமரக்குளம் தெய்வ அன்னையின் மாதாக்குளம் என்று  அழைக்கப்பட்டது. இக்காட்சி வேளாங்கண்ணி பழைய கோவிலில் இன்றும் பக்தர்களின் பார்வையில் உள்ளது. அன்னையின் ஆசிர்பெற்ற இறைமக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

சற்குணத்தாயும் சப்பாணி மகனும்

     அவ்வேளை நகரிலே ஓர் விதவை மோர்விற்றுப் பிழைத்து வந்தாள். அவளுக்கு கால்கள் ஊனமுற்ற மகன் ஒருவன் இருந்தான். மரத்தால் சூழப்பட்ட வேளாங்கண்ணியில் நடுத்திட்டு என்னுமிடத்தில் மோர் பானையை வைத்துவிட்டு தன் முடமான மகனை அமரவைத்துவிட்டுச் செல்வாள். அவனும் திறத்துடன் விற்றுத்தருவான். அம்மோரின் சுவையை அழகிய வரிகளால் வர்ணிக்கும் பண்பை,

          “ மிக்க கரும்பின் சுவைநீரோ – தெங்கில்
           மேவிக் குளிர்ந்த இள நீரோ
           செப்பும் அமுதினம் மேலாமே – அந்தச்
           சிறுவன் வழங்கிடும் மோர்தாமே”         (ஏ.அ.தீ-1:79)

கரும்பு, இளநீர், மற்றும் அமிழ்தின் சுவையைக்காட்டிலும் சிறந்ததாக கூறும் பண்பு சிறப்பிற்குரியது. தள்ளாச் சிறுவனின் மொழி பாகுபோன்று இனிக்கின்ற தன்மையால் வழியில் செல்லும் மனிதரெல்லாம் மோர் அருந்திச் செல்வார்.

அன்னையின் இரக்கமும் அற்புதமும்

 ஏழையின் துயர்நீக்க அன்னை அப்பெண்ணின் வறுமையை போக்கவும் தனக்கென ஓர் ஆலயம் எழுப்பவும் எண்ணி ஓர் அற்புதம் நிகழ்த்தினாள். அன்றொரு நாள் சிறுவனின் மோர் வாங்குவோரின்றி கிடந்தது. பொழுது சாய்ந்தும் யாரும் வரவில்லையே என வருந்தியிருக்கும் நிலையில், அன்னை காட்சி தந்தாள் தன் மகனோடு. அன்னையின் தோற்றப் பொலிவை,

          “அருளைச் சுரந்திடும் மான் விழியாள் -ஞான
           அமுதைச் சொரிந்திடும் தேன் மொழியாள்
           இருளை அகற்றும் மதிமுகத்தாள் – தஞ்சம்
           எவருக்கும் வழங்கும் தளிர்பதத்தாள்”          (ஏ.அ.தீ-1:85)

என்று அன்னையின் அழகை அள்ளிப்பருகும் கவிஞர் தமிழ் எழுத்துக்களால் ஓவியமாக்கிக் காட்டும் புலமை வியப்பில் ஆழ்த்துகிறது. அன்னையின் கையில் உள்ள குழந்தை ஒளிவீசும் தங்கப் பதுமை போல் விளங்குவதாக பெருமைப்படுத்தியுள்ளார். அன்னை சிறுவனை அழைத்து, “சிறிது மோர் கொடு” என்று கேட்கிறாள். அன்னையின் காட்சியைக் கண்ட சிறுவனின் செயலாக்கத்தை புலவர்,

          “விழியொளி பெற்ற குருடனைப் போல் – நாட்டின்
           விடுதலை பெற்ற புருடனைப் போல்
           குளிர்மழை பெற்ற பயிரினைப் போல் – முழுக்
           குணம்வரப் பெற்ற  உயிரினைப் போல்
           தாங்கா மகிழ்ச்சியைக் கொண்டானே – மோரைத்
            தாராள மாய்மொண்டு தந்தானே”         (ஏ.அ.தீ-1:88,89)

போன்ற வரிகளால் எடுத்தியம்பியுள்ளார். சிறுவனின் காலில், கன்னி மற்றும் சுதனின் கண் ஒளிபட சுகமாயின. அதை உணராதவனாய் திகைத்த சிறுவனிடம், “நல்ல மோர் தந்ததால் நானும் மகிழ்ந்தேன் நான் சொல்லும் உதவியைச் செய்வாயா? சற்றுத் தொலைவில் உள்ள நாகைக்குச் செல்வாயா? அங்கு கிறித்துவ பக்தன் ஒருவன் உள்ளான் அவனிடம் நான் இங்கு இருப்பதாக கூறிவிட்டு வா” என்றாள். ஊனத்தை சொல்ல முடியாமல் தயங்கிய சிறுவனை, “கால் ஊன்றியே நட” என்றாள் அவனும் நடந்தான். அதிசயம் ஆனாலும் உண்மை. துள்ளி ஓடினான். நாகைக்காரனை அழைத்து வந்தான். இருவரும் மண்டியிட்டு புகழ அன்னை மறுபடியும் காட்சி தந்தாள் ஓர் ஆலயம் கட்டப் பணித்து மறைந்தாள். உடனே சின்னக் குடிசைக் கோவில் ஒன்று கட்டினான் அன்னையின் சொரூபம் கொண்டு அமைத்தான். அவ்வாலயத்தின் அருள் பொலிவை,

          “அன்றுமுதல் மக்கள் வந்தாரே – வேண்டி
           ஆரோக்கியம் பெற்றுச் சென்றாரே
           நன்றியாய் ஆரோக்கியத் தாயெனவே – ஒரு
           நாமஞ் சூட்டி மகிழ்ந்தாரே”.         (ஏ.அ.தீ-1:101)

போன்ற வரிகளில் அன்னையின் அற்புதச் சிறப்பை மொழிந்துள்ளார்.

மேலை நாட்டு வணிகர்

சீன நாட்டிலிருந்து இந்தியாவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போர்த்துகீசியரின் கப்பல் பெரும்புயல் ஒன்றில் சிக்கியது. கப்பலிலிருந்த அனைவரும் மரியன்னையை நோக்கி தங்களை அபாயத்திலிருந்து காப்பாற்றுமாறும், தங்களைக் கரை சேர்த்ததும், தங்கள் கரை சேர்ந்த இடத்தில் அன்னைக்கு ஓர் கோவில் எழுப்புவதாகவும் மன்றாடினார்கள். அவர்கள் மன்றாட்டு கேட்கப்பட்டது. கொந்தளித்த கடலிலிருந்து மக்களைக் காப்பாற்றி வாழ்வு தந்த அன்னைக்கு கோவில் கட்டி நன்றிக்கடன் செலுத்தினார்கள். இதனை,

          “கன்னி கருணை புரிகுவையேல் – எங்கள்
           கப்பலைக் காத்து தருகுவையேல்
           மண்ணில் உனக்கொரு கோவில் செய்வோம் –
என்றும்
           மறவோமினி யென நேர்ச்சை செய்தார்”. (ஏ.அ.தீ-1:106)

என்ற பாடலில் புலவர் சூ.தாமசின் புலமைத் திறன் வெளிப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கோவில் அமைத்த உடனே மரியன்னையின் சொரூபம் தன்னிச்சையாய் வந்தமைந்தது கண்டு அதிசயித்தனர். அவர்கள் கொண்ட துயர் விடப்பட்ட நன்னாள் ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் என அன்று அன்னையின் திருநாளைக் கொண்டாடினர். இவ்வாறு அன்னையின் அரும்பெரும் காட்சிகளை இலக்கிய நயங்களோடும் உவமைப் பொலிவோடும் பாடியுள்ளார் புலவர் சூ.தாமஸ் அவர்கள்.

*****

கட்டுரையாளர்
தமிழ்த்துறை பேராசிரியர்
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
தஞ்சாவூர்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “புலவர் சூ.தாமசின் படைப்புகளில் வேளைநகர் அன்னையின் சிறப்புகள்

  1. இது நீங்கள் எழுதிய நல்லதொரு ஆய்வுக்கட்டுரை. நாளை உங்களைப்பற்றிய ஆய்வுக்கட்டுரை இன்னொருவர் எழுதும் அளவிற்கு வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *