மிட்டாய் மலை இழுத்துச் செல்கின்ற எறும்பு!

-ராஜகவி ராகில்

கூந்தல் விரித்துத் தரையில்
நீ நடந்துகொண்டிருந்த ஒரு தருணத்தில்
பச்சைப் புல்வெளி ஆனதாம் கறுப்பாய்

நான் அறிந்திருந்தேன்
உன் நிழல் பார்த்து மயங்கி விழுந்தபோது
உன் அழகு நிஜத் தண்ணீர் தெளித்து என்னை எழுப்பிவிட்டதாய்!

பலநிறப் பூக்கள் வாழும் வாசப் பிரதேசம்
மலர்களெல்லாம் வெண்மையான
ஒரு திடீர்ப் பொழுது
நீ வந்து கொண்டிருந்தாய் புன்னகை வெயிலெறித்தபடி!

ஈர்ப்பு பூமிக்கு இருப்பதாக
நியூட்டன் சொன்ன கருத்து மறுத்து
இதுவரைப் பேசிக்கொண்டிருக்கின்றன உனது கண்கள்!

புல்லாங்குழல் கூறியது…
‘என் துளைகளுக்கு உன் பார்வை மட்டும் ஊட்டினால் போதும் ‘ என!

உப்பு மணற்காடு
நீ சிப்பிகள் சேர்த்துக் கொண்டிருந்த ஓர் அந்தி
என்னைப் போல ஒரு புலவன் கண்டு சொன்னான்
‘முத்து,
சிப்பிகள் பொறுக்கிக் கொண்டிருக்கின்றது’ என!

தென்றல் விசாரணை நடத்தியது
‘எந்தச் செடியில்
எந்தக் கிளையில்
நீ மலர்ந்து உதிர்ந்து நடந்து வந்தாய்’ என்று!

எறும்புக் கூட்டம் உன்னை இழுத்துச் செல்லலாம்
அல்லது
கடத்திவிடலாம்
எவரும் எவையும்
இதுவரை ஏறாத இனிப்பு மலையென்று! 

நிலா
ஓய்வு தேவையெனக் கேட்ட வேளை
உன்னைக் காட்டியதாம் பதிலீடாய்! 

காக்கையொன்று
உன்னைக் கடந்து சென்ற நேரம் மயிலானதும்
நீ ஆற்றில் கால்கள் நனைத்தபோது பொங்கிச் சூடானதும்
எப்போதோ அறிந்திருந்தேன்
நான் என் காதலுடன்!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.