(எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா) 

தலைவைத்து மடிமீது
நானுந்தன் முகம்பார்த்து
நிலைதளரும் வேளைதனில்
நீயென்னைத் தலைதடவி
உளம்நிறைய ஆவலுடன்
உணர்வுகொண்டு உருக்கமுடன்
இருக்கின்ற நிலைகாண
ஏங்கிநான் இருக்கின்றேன்!

ஓடிநீ   விழுந்துவிட்டால்
என்னுதிரம் கொட்டிவிடும்
உன்கண்ணில் நீர்வழிந்தால்
என்னுள்ளம் பதறிவிடும்
வாடிவிடும் முகம்காணின்
வந்துவிடும் பெருங்கவலை
வையகத்தில் என்னுயிரே
வடிவழகே நீதானே!

நடுச்சாமம் முழித்துவிட்டால்
நடுக்கமுடன் எனையணைப்பாய்
படுக்கையிலே என்னருகே
படுத்துவிட அடம்பிடிப்பாய்
பிடித்தபடி படுத்திடுவாய்
பெருவிருப்போ டிருப்பாய்
உடுத்திருக்கும் உடுப்பையெல்லாம்
உதறிநீ எறிந்திடுவாய்!

என்மார்பில் முகம்புதைத்து
என்கழுத்தை இறுக்கிடவே
உன்கைகள் தனைக்கொண்டு
உணர்வுடனே பற்றிடுவாய்
எப்போதும் அதைநினைத்து
இன்றுமே பார்க்கின்றேன்
எனையிறுக அணைப்பதற்கு
எவருமின்றித் தவிக்கின்றேன்!

இல்லத்தில் விட்டுவிட்டு
ஏன்மகளே சென்றுவிட்டாய்
நல்லபடி உனைவளர்த்து
நான்மகிழ்ந்து இருந்தேனே
தொல்லையென நீநினைத்து
என்னையிங்கு விட்டுவிட்டாய்
நல்லபடி நீவாழ
நானிறையை வேண்டுகிறேன்!

உன்கையின் அணைப்பாலே
உலகினையே மறந்தேனே
உன்பேச்சைக் கேட்டவுடன்
உளம்நிறைவு பெற்றேனே
உன்சிரிப்பு என்னாளும்
உயர்மருந்து ஆனதடி
என்தவிப்பை உன்மனது
ஏனின்னும் உணரலையோ!

எப்படிநீ இருந்தாலும்
என்னிதயம் உன்வசமே
தப்புநீ செய்தாலும்
தாங்குவது என்னியல்பே
எப்பவுமே என்மகளே
இடரின்றி நீயிருக்க
இறைவனிடம் என்னாளும்
இறைஞ்சுகிறேன் என்னுயிரே!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *