இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (247)

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள்.

ஏற்கனவே வாழ்க்கைச் சிக்கல்களுக்குள் சிக்கி வாழ்வோடு கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் தென்கிழக்காசிய நாட்டு பகுதிகள் பலவற்றில் வாடும் மக்களை இயற்கையன்னை அடைமழை எனும் ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருக்கிறாள். அதேநேரம் வசதிகளுடன் வாழும் மேலைத்தேசமான அமெரிக்க நாட்டின் பல பகுதிகளை இதுவரை கண்டிராத சூறாவளியினால் சிதைத்துக் கொண்டிருக்கிறாள். ஆம், இயற்கையன்னை மனிதன் தன் சுயலாபத்திற்காக இயற்கையைச் சீரழிப்பது கண்டு சீற்றம் கொண்டிருப்பது போல உலகின் பல பகுதிகளிலும் இயர்கையன்னையின் ஆவேசக்கோலம் நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறது. உலகில் மனிதராகப் பிறந்த எம் அனைவருக்கும் எமது இறுதி முடிவு எதுவெனத் தெரிகிறது. இது ஓர் ஓட்டப் போட்டியே! அதன் இறுதிக் கயிற்றை யார் முதலில் தொடுகிறார்கள் என்பதுதான் யாருக்கும் தெரியாத மர்மமாக அமைந்துள்ளது. அது யாருக்கும் தெரியாமல் இருக்கும் காரணத்தினால் தான் மனிதர்களில் பெரும்பான்மையோர் இன்றும் மனிதத் தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

“அரிது, அரிது மானிடராகப் பிறப்பது அரிது ” என்றாள் தமிழ் மூதாட்டி. இத்தகைய அரிய பிறப்பெடுத்த நாமே , மற்றைய அரிய பிறப்புக்கைளை மதம், பணம், பொருள், காமம், காணி எனும் பல பேராசைகளின் காரணமாகச் சர்வசாதாரணமாக அழித்துக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது. பிறப்பு என்பது யாரையும் கேட்டு நடப்பதல்ல. ஆணும்,பெண்ணும் அனுபவிக்கும் இல்லற சுகத்தின் பலனாக அவர்களுக்கு அளிக்கப்படும் அன்புப்பரிசு என்பது அதற்கான ஒரு தூய விளக்கமாக இருந்தது. ஆனால் இன்றைய நாகரிக உலகத்திலே இல்லற வாழ்க்கை என்பதன் அடையாளமே மாறிப்போய்விட்டிருக்கிறது. அதுவும் குறிப்பாக மேலைத்தேசங்களில் வாழ்வோர் எப்படியும் வாழலாம் எனும் ஒரு கருத்துக்குள் தம்மைப்புதைத்து வாழ்வது போலத் தென்படுகிறது. ஆனால் அதே மேலைத்தேசங்களில் தமது பழைய கலாசார, சமயக் கோட்பாடுகளை வாழ்வின் நெறிமுறைகளாக வகுத்து வாழ்வோர் இல்லையென்று கூறி விட முடியாது. வேறு நாட்டினைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் தம்நாடுகளில் குடியேறி அங்கு அவர்களது கலாசாரங்களைப் பரவவிட்டு எங்கே தமது கலாசாரக் கோட்பாடுகளை அழித்து விடுவார்களோ எனும் அச்சம் பல மேலைத்தேச நாடுகளின் மக்கள் மனங்களில் ஊசலாடுவதின் காரணமே இங்கிலாந்தின்”ப்ரெக்ஸிட்” தேர்தல் முடிவு.

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ட்ரம்ப் என்பதுவே இன்றைய யதார்த்தமாகத் தென்படுகிறது. ஹிட்லர் எனும் சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சியின் பின்னால் அத்தகைய ஒரு நிலை உலகில் வந்துவிடக்கூடாது எனும் காரணத்தினால் மேலைத்தேசங்கள் பலவும் சுதந்திர நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது என்பது உண்மையே. அடுக்கடுக்காய் வந்த அரசாங்கங்கள் நிறவெறி, மதவெறி, இனவெறி என்பன தலைதூக்கி விடக்கூடாது என்பதற்காக பல சட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தன. அடிப்படையில் இவையனைத்தும் அந்தந்த நாடுகளில் குடியேறி வாழும் வேற்று நாட்டினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. ஆனால் அவைகளின் அதியுச்ச நிலையாக அந்த நாட்டின் மக்கள் தமது மனத்தில் நிலவும் கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. காலப்போக்கில் வேற்று நாட்டினரின் குடியேற்றம் கட்டுமீறிச் சென்றதாலும், மேலைத்தேச நாடுகளின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதாலும் ஒரு விகாரநிலை உருவெடுத்தது. இந்நிலையால் பொதுவாக மிகவும் மிதமான கொள்கைகளைக் கொண்ட பல மேலைத்தேச மக்கள் மனங்களில் கடுமையான வேற்றினத்தவருக்கெதிரான கொள்கைகள் வலுப்பெற்றன. அதன் பிரதிபலிப்பே இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இங்கிலாந்தின் “பிரெக்ஸிட்” எனும் சிக்கலும் என்பதே உண்மை.

இந்தப் பின்னணியில்தான் இப்போது இங்கிலாந்தில் ஒரு புதிய கடுமைப் போக்கைக் கொண்ட ஒரு தலைமை கன்சர்வேடிவ் கட்சிக்குள் உருவாகிறதோ எனும் கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்தின் தற்போதைய பிரதமரும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவியுமான தெரேசா மே அவர்களின் அரசியல் எதிர்காலம் மிகவும் குறைந்ததாகவே காணப்படுக்கிறது. அவரைத் தொடர்ந்து யார் கன்சர்வேடிவ் கட்சியை வழிநடத்தப் போக்கிறார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. இங்கேதான் “ஜேக்கப் ரீஸ் மொஹ் ( Jacob Rees-Mogg) என்பவர் பிரசன்னமாகிறார். ஆக்ஸ்வேர்ட் பல்கலைகழகத்தில் பட்டாதாரியான இவர் இங்கிலாந்தின் பொருளாதார நிறுவனங்களில் பணிபுரிந்தவராவார். 1997ஆம் ஆண்டு தொடங்கி தேர்தல்களில் முயன்று 2010ஆம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகியவர். தீவிரமான கத்தோலிக்கரான இவர் மதக்கோட்பாடுகளுக்கு முதன்மை அளிப்பவர். ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதித்துவத்துக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர். இன்றைய இங்கிலாந்து மக்களின் அரசியல் உணர்வு இத்தகைய கடுமையான கொள்கைகளை உடைய தலைவர்கள்பால் திரும்புமா ? எனும் கேள்வி இங்கிலாந்து அரசியல் அவதானிகளிடமும் எழுகிறது.

இந்தச் சூழலில் தான் இவர் சமீபத்தில் தான் கருக்கலைப்பு மற்றும் ஓரினத் திருமணங்கள் ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானவர் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். கத்தோலிக்க மதத்தில் இவையிரண்டும் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இங்கிலாந்தின் சட்டநிலைப்பாடுகள் இவையிரண்டையும் ஆதரிக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. அவர் சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி பழமைவாய்ந்த கொள்கைகளையும், கிறீஸ்துவ மதக் கோட்பாடுகளையும் முக்கியமாகக் கொண்டிருந்தாலும் இந்த இரண்டு அம்சங்களிலும் அவருக்கு எதிரான நிலையையே பெரும்பான்மையான கன்சர்வேடிவ் பாரளுமன்ற அங்கத்தினர்கள் கொண்டிருக்கிறார்கள். திடீரென இவர் இத்தகைய தனது தீவிரக் கொள்கைகளை வெளியிட்டிருப்பது சந்தேகங்களுடன் கூடிய சர்ச்சையை அரசியல் வட்டாரங்களில் கிளப்பி விட்டிருக்கின்றன. இவர் தனது கொள்கைகளைச் சமூக வலைத்தளமான ட்வீட்டர் மூலமாக வெளியிட்டிருந்தார். இன்றைய மேலைத்தேச அரசியல் சூழலில் ட்ரம்ப் உட்பட பல தீவிர வலதுசாரப் போக்குடைய தலைவர்கள் தமது பிரசாரங்களுக்கு வழமையான ஊடங்களான பத்திரிகை,வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றை விடுத்துச் சமூக வலைதளங்களை உபயோகிக்கும் நிலையேற்பட்டுள்ளது.அமெரிக்காவில் ட்ரம்ப் அவர்களுக்கு ஏற்பட்ட திடீர்ச் செல்வாக்குப் போல இவர் தனக்கும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் செயற்பட்டு, கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைமைப் பதவிக்கு வலைவீசுகிறாரா? என்பதுவே தற்போதைய சர்ச்சை ஆகும்.

அதுமட்டுமல்ல… பொதுவாகக் கருக்கலைப்புக்கு எதிரானவன் என்று சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை இவரோ கற்பழிப்பு மற்றும் முறைகேடான உறவுகளின் மூலம் தோன்றிய கரு என எதுவாக இருப்பினும் அனைத்தையும் கலைப்பதற்கு எதிரானவன் என்று கூறியிருப்பதுதான் தன்னை ட்ரம்ப் வகையிலான ஒரு தீவிர வலதுசாரத் தலைவன் என்று முன்னிலைப்படுத்த முனையும் செயலா? என்பதுவே கேள்வியாகிறது.

இதன் எதிரொலிகள் அரசியல் அரங்குகளில் மட்டுமல்ல பல பெண்களின் பதுகாப்புக்கான அமைப்புக்களையும் மிகவும் ஆவேசத்துக்குள்ளாக்கியிருக்கின்றன.  பல வானொலி கருத்தாடு களங்களில் பலமாக இவர் பற்றிய விவாதங்கள் கடந்த சில தினங்களாக நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன.

ஒருவேளை இவைகள்தாம் இயற்கையன்னையின் சீற்றத்துக்குக் காரணமோ?

என்னதான் நடக்கும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *