ஈரோடு – கேஏஎஸ் நகரில் வாசகர் வட்டத் தொடக்கவிழா…
*********************************************************************************************************************
ஈரோடு – கேஏஎஸ் நகரில் வாசகர் வட்டத் தொடக்கவிழா…
*********************************************************************************************************************
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் மாநிலமெங்கும் வாசகர் வட்டங்கள் தொடங்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு, பூந்துறை ரோடு 46 புதூர் கேஏஎஸ் நகர் பகுதியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா 03.09.2017 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இவ்வாசகர் வட்டத்தின் தலைவர் திரு கே.கே.ஏ. ஹாஜி சையது அகமது அலி அவர்கள் தலைமையேற்றார். இவர் கே.ஏ.எஸ் நகர் என்ற புதிய நகரையே உருவாக்கிய 82 வயதுப் பெரியவராவார். இவர் ‘ நகரத்தந்தை ’ என்றே இந்நகர் மக்களால் அழைக்கப்படுகிறார். இவர் இப்பகுதியில் இவரது சொந்தப் பொறுப்பில் ஒரு தனியார் நூலகத்தைத் தொடங்கி அதில் ஏராளமான நூல்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் வாங்கி மக்கள் பயன்பாட்டிற்காக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு த. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாசகர் வட்டத்தைத் தொடக்கிவைத்து உரை நிகழ்த்தினார். இவர் தனது உரையில் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் வாசிப்புப் பழக்கத்தின் நன்மைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். தமிழகத்தில் எங்கெல்லாம் தொடர்பும் வாய்ப்பும் உள்ளதோ அங்கெல்லாம் இதுபோன்ற வாசகர் வட்டங்கள் தொடங்க பேரவை முழுமூச்சாகச் செயல்பட்டு வருவதாக தனது உரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டார் பேரவைத் தலைவர்.
முன்னதாக வாசகர் வட்டச் செயலாளர் அரிமா எஸ். கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் திரு என். தமிழ்செல்வன் நன்றி கூறினார். காசிபாளையம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் திரு கே. துரைராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
இப்பகுதியில் வசிக்கும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் மட்டுமல்லாது ஈரோடு நகரின் மிகமுக்கியப் பிரமுகர்கள் பலரும் பார்வையாளர்களாக இந்நிகழ்வில் பங்கேற்றது இக்கூட்டத்திற்குச் சிறப்புச் சேர்த்த அம்சமாகும்.
படக்குறிப்பு :
- மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் வாசகர் வட்டத்தைத் தொடக்கி வைத்துச் சிறப்புரையாற்றுதல்…
- திரளாகப் பங்கேற்ற பார்வையாளர்கள்…
- குடும்பங்களுடன் பங்கேற்றோர்…
- ஆர்வமிக்க வாசகர் வட்டத் தலைவர் திரு கே.கே.ஏ ஹாஜி சையது அகமது அலி அவர்களுக்கு செயலாளர் திரு எஸ். கார்த்திகேயன் சால்வை அணிவித்தல்…