இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (252)

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள். வாரமொன்று ஓடியது. மடலொன்று தவறியது. மீண்டும் அடுத்த மடலுடன் உங்கள் முன்னால் வந்திருக்கின்றேன். இருக்கும்போது தெரிவதில்லை இழக்கும் போதுதான் புரிகிறது. இது வாழ்க்கையில் பலவற்றிற்குப் பொருந்தும். எம்முடன் இருப்போரை, அல்லது எம்முடன் இருப்பவைகளை அவை எப்போதும் இருக்கும் தானே எனும் எண்ணத்தில் பெரிதாகக் கணக்கில் ஒன்றும் எடுத்துக் கொள்வதில்லை. இது மனித வாழ்க்கையில் அனைவருக்கும் ஏதோ ஓர் இடத்தில் நிகழ்கிறது. அதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கானவனில்லையே! என்ன எதைச் சக்தி கணக்கிலெடுக்காமல் விட்டு விட்டேன் என்று எண்ணுகிறீர்களா?

சில வருடங்களுக்கு முன்னால் எனது இடது கண்ணில் ” யூவீஜட்டிஸ் ( Uveitis ) “என்றழைக்கப்படும் ஒரு நோய் வந்தது. இதன்போது கண் சிவப்பாகும், சூரியஒளியையோ அன்றி மின்விளக்கையோ நேரடியாகப் பார்க்கும்போது கண் வலிக்கும். இதற்கு உடனடியாகத் தகுந்த வைத்தியம் எடுக்காவிட்டால் கண்பார்வை வெகுவாகப் பாதிக்கப்படும்.

ஹாஸ்பிட்டலுக்குச் சென்று வைத்தியம் செய்து கொண்டேன். ஆனால் இரண்டு மூன்று மாத இடைவெளிகளில் இந்நோய் திரும்பத் திரும்ப எனது இடது கண்ணைத் தாக்கியது. இதன் பின்னணிக் காரணத்தைக் கண்டறிய பலவிதமான பரிசோதனைகளை நடத்தியும் சரியான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து ஒன்றரை வருடத்துக்கு மேலாக கண்ணில் “ஸ்டெரோய்ட் (Steroid)“ஐ அடிப்படையாகக் கொண்ட மருத்தை இடது கண்ணில் உபயோகித்து வந்தேன். இதன் பக்கவிளைவு ” கண்புரை (Cateragh)” மிகவும் விரைவாக வளர்வது. அதன் காரணமாகச் சிறிது, சிறிதாக எனது இடது கண்பார்வை குறைந்து எதையும் இடது கண்ணால் பார்க்க முடியாது எனும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். இடது கண்பார்வையைச் சரி செய்வதற்காக இடது கண்ணில் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறினார்கள்.

அறுவை சிகிச்சைக்கான திகதி அக்டோபர் 17ஆம் திகதி. இது மிகவும் பொதுவான, இலகுவான சிகிச்சை என்றாலும் மனதினில் உள்ளூர ஒரு சிறிய பயமிருந்தது. கண்பார்வை போய்விட்டால் . . . இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டேன். என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். அந்த நாளும் வந்தது காலை எட்டு மணிக்கு ஹாஸ்பிட்டலுக்கு வரும்படி பணித்திருந்தார்கள். காலையில் 7:15 மணிக்கு எனது மனைவியுடன் ஹாஸ்பிட்டலுக்குப் புறப்பட்டேன். அநேகமாக அன்றைய அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் நான் தான் முதலாவதாகச் சென்றிருப்பேன் போலும். அங்கிருந்த நர்ஸ் என்னை உள்ளே அழைத்து இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, இரத்த குளுக்கோஸ் அளவு என்பவற்றைக் குறித்துக் கொண்டு எனது பெயர் எழுதப்பட்ட பட்டியை எனது இடது கணுக்கையில் கட்டி விட்டார்.அதன் பின்பு மனைவியுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.

சுமார் 30 நிமிடங்களின் பின் என்னை உள்ளே அழைத்து ஒரு நர்ஸ் எனக்கு என்ன சிகிச்சை நடைபெறப் போகிறது என்பதை விளக்கி விட்டு இடது கண்ணுக்குள் சில மருந்துத்துளிகளை விட்டுவிட்டுக் காத்திருக்கச் சொன்னார். அதன் பின்னால் டக்டருடனான சம்பாஷணை. கண்களை ஒரு இயந்திரம் கொண்டு பரிசோதித்து விட்டுத் தாம் கூப்பிடும்வரை காத்திருக்கச் சொன்னார். எனக்கு முன்னால் ஒரு எழுபது வயது மதிக்கத்தக்க ஆங்கிலேயரை ஆபரேஷன் தியேட்டர் உள்ளே அழைத்துச் சென்றார்கள். மணியைப் பார்த்துக் கொண்டேன்.அடுக்கடுக்காக அன்றைய சிகிச்சைக்காக மேலும் பலர் வந்து அதே அறையில் நான் சென்ற அதே நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு அங்கே உட்கார்த்தி வைக்கப்பட்டார்கள். சிலர் சக்கர நற்காலிகளிலும் வந்திருந்தார்கள். எனக்கு அருகே உட்கார்ந்திருந்த ஆசிய மனிதரின் கைபேசி ஏதோ ராகத்தில் அவரையழைத்தது. அங்கே அமர்ந்திருந்த தாதி அவர் மீது ஒரு கடினப்பார்வை வீசினார். ஆனால் அவரோ தன்பாட்டுக்கு தன் பாஷையில் கைபேசியில் அரட்டை அடித்தார்.

சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னால் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட ஆங்கிலேயர் சக்கரநற்காலியில் உட்கார்த்தி அழைத்து வரப்பட்டார். அவரது இடது கண் மூடிக்கட்டப்பட்டிருந்தது. அனைவரும் அவரது முகத்தைப் பார்த்தார்கள் அவர் அனைவரையும் பார்த்துப் புன்னகைத்தார். அனைவரும் பெருமூச்சு விட்டார்கள். ஆசிய மனிதர் அந்த ஆங்கிலேயரிடம் ஆபரேஷன் நடக்குப்போது எப்படி இருந்தது? வலித்ததா? என்றெல்லாம் கேட்டார். இல்லை எதுவுமே தெரியவில்லை என்றார் அந்த ஆங்கிலேயர். மீண்டும் அதே ராகத்தில் கைபேசி பாடியதும் இப்போது தாதி மட்டுமல்ல அனைவரும் ஆசிய மனிதரை நோக்கி ஓர் கடினப்பார்வையை வீசினர். புரிந்து கொண்ட ஆசிய மனிதர் கைபேசியை மூடிப் பைகளில் திணித்துக் கொண்டார்.

நான் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டேன்.  மனைவியிடம் சொல்லிக் கொண்டு பலிக்குச் செல்லும் ஆட்டுக்கடா போலச் சென்றேன். ஆபரேஷன் அறைக்குள் முதலில் விறைப்பு மருந்து விடும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். நான் உட்கார்ந்திருந்த நாற்காலியே ஒரு கட்டிலைப் போல விரிந்தது. இரண்டு ஆசியப் பெண் டாக்டர்கள் நின்றார்கள். இருவரும் எனது பெயர் , பிறந்த திகதி ஆகியவற்றை என்னிடம் கேட்டுச் சரிபார்த்த பின்னால் அவர்களில் ஒருவர் என் கண்களில் இரண்டு மூன்று சொட்டுத் துளிகளாய் மருந்திட்டார். எனது கண் உணர்வுகள் மரத்துப் போகும் வரை அவர்கள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். தாமிருவரும் எப்போது இந்தியாவுக்கு விடுமுறையில் போகப்போகிறார்கள் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். என் கண் உணர்வுகள் மரத்துப் போனதும் ஒரு ஊசி மூலம் மேலும் மருத்தை எனது விழிகளுக்குள் செலுத்தியது போலிருந்தது ஆனால் ஒருவிதமான உணர்வும் இருக்கவில்லை.

அப்படியே அடுத்த அறையினுள் தள்ளிச் செல்லப்பட்டு மற்றொரு பெண்வைத்தியரிடம் கையளிக்கப்பட்டேன். பின்னணியில் ஆங்கில மென்மையான இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்படும் கண்ணுக்கு மட்டும் இடைவெளி விட்டு விட்டு ஒரு முகத்தை மறைக்கும் துணி விரிக்கப்பட்டது. இரு கூரிய வெளிச்சம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. தான் இப்போது கண்புரையை அகற்றி விட்டுச் செயற்கை லென்ஸ் பொருத்தப் போவதாகக் கூறிய பெண் வைத்தியர் சிகிச்சையில் ஈடுபட்டார். சுமார் நாற்பது நிமிடங்களில் அனைத்தும் முடிந்தது. சிகிச்சை முடிந்த கண் மட்டும் கட்டப்பட்டு நான் வெளியே அழைத்து வரப்பட்டேன். அழைத்து வந்த நர்ஸ் மிகவும் அன்பாக என் மனைவியை அழைத்து என் அருகில் அமர்த்தி விட்டு தேநீர், பிஸ்கட் ஆகியவற்றைக் கையளித்தார். எனது நிலையை அக்கறையோடு என் மனைவி விசாரித்தார். சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னால் மீண்டும் நர்ஸ் எனது இரத்த அழுத்தம், குளுக்கோஸ் ஆகியவற்றை அளந்து குறித்துக் கொண்டார். எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கித் தேவையான மருந்துகளைத் தந்து விட்டு அடுத்தநாள் காலை கண்கட்டுகளை அவிழ்க்கலாம் , கண்பார்வையில் பிரச்சனை இருந்தால் மட்டும் மீண்டும் வைத்தியசாலைக்கு வரும்படி கூறி வீட்டுக்கு அனுப்பினார்கள்.

அடுத்தநாள் காலை எனது மனைவி தெரிந்த இறைவனின் பெயர்களையெல்லாம் அழைத்துத் துதித்த பின்னால் நம்பிக்கையோடு என் கண்கட்டை அவிழ்த்தேன். அப்பப்பா! இப்படிக்கூட அழகாகப் பார்க்கலாமா? எனும் அளவுக்கு எனது கண்பார்வை திரும்பியிருந்தது. ஆமாம் நண்பர்களே நாம் இழக்கும் வரை ஒன்றினதும் அருமை எமக்குப் புரிவதில்லை அது எமது உடல் உறுப்புக்களாக இருந்தால் கூட . . . கடந்தவாரம் எனது மடல் தவறிய காரணம் இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் இல்லையா?

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.