இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(251)

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள். மடலோடு உங்களுடன் கலந்துரையாட விரைந்து வரும் வேளையிது. இருந்தால் இருப்போம், மடிந்தால் மடிவோம் இதுதான் உலக வாழ்க்கையின் நியதி. காலங்கள் எத்தனையோ மாறினாலும், விஞ்ஞானம் கரைபுரண்டோடினாலும் அன்றும், இன்றும் இவ்வகிலத்தில் நாமறிந்த மாற முடியாத, எம் ஒருவராலும் மாற்ற இயலாத உண்மை இதுவேயாகும். இவ்வுண்மை தினமும் எமக்குள் உறைந்திருந்தாலும் சமயங்களில் அனைத்தையும்விட நாம் தேடும் விடயங்கள் எமக்கு வாழ்வினில் முக்கியமானவைகளாக மாறிவிடுகின்றன. நிலையற்ற வாழ்வில் நாம் தேடும் பொருள்கள் மட்டும் ஏனோ நிலையானவை போலத் தென்படுகிறது. இதுதான் மனத்தின் மாயை என்று கூறப்பட்டதோ எனும் எண்ணம் மனதில் எழாமலில்லை..

எங்கெங்கோ பிறந்தவர்கள் இன்று எங்கெங்கோ இடம் பெயர்ந்து வேறெங்கோ தம் வாழ்வினை அமைத்து வாழும் நிலை காண்கிறோம். காலக் காற்றில் அகப்பட்ட சருகினைப் போல வாழ்வின் தேவைகள் எனும் திசையில் நாம் அடித்துச் செல்லப்படுகிறோம். ஆனால் அப்படியான பிரயாணம் கூட சில கட்டுப்பாடுகள், சில கட்டுக்கோப்புகள், சில நியதிகளுக்குள் தான் நடந்தேற வேண்டுமென்ற நியதி இவ்வுலகில் விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்விதிகளை, இந்நியதிகளை வெவ்வேறு நாடுகளில் அந்த நாடுகளின் கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தார்கள். மன்னராட்சி என்று தொடங்கி இன்று மக்களாட்சி எனும் வகை ஜனநாயகம் எனும் பெயரில் பல நாடுகளில் காட்சிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேறு சில நாடுகளிலோ தனிமனித அதிகாரங்கள் சர்வாதிகாரமாக மக்களின் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்விருவகையிலான அமைப்புக்களின் தாக்கங்கள் அந்த நாடுகளில் வாழும் சாதாரண பிரஜைகளின் மீதே தெறிக்கின்றன. தமது முறையில் நியாங்களை முன்வைப்பதையே ஊடகப் பிரசாரங்கள் மூலம் அந்த நாடுகளின் அதிகார வர்க்கங்கள் இயம்பிக் கொண்டிருக்கின்றன.

உண்மைக்குப் புறம்பான விடயங்கள், உண்மையே அல்லாத விடயங்கள் ஊடகங்களின் மூலம் நியாயப்படுத்தப்படும்போது அங்கே உண்மையின் சாட்சியங்கள் வாயடைத்துப்போய் மெளனிகளாகி விடுகின்றன.

என்ன எதை நோக்கி எனது இவ்வார மடல் பயணிக்கிறது? எனும் கேள்வி எழுகிறதா ? சற்றுப்பொறுங்கள்… விளக்கத்துக்கு வருகிறேன்.

இன்றைய இங்கிலாந்தின் சரித்திரம் இன்று ஒரு முக்கியமான சந்தியில் நிற்கின்றது . இது முச்சந்தியோ அன்றி நாற்சந்தியோ அல்ல; வெறும் இரண்டே இரண்டு தெருக்களைக் கொண்ட ஒரு சந்தியே. இச்சந்தியில் எந்தப் பாதையில் போவது என்பதை மக்களே நீங்களே தீர்மானியுங்கள் என்று எமது முன்னால் பிரதமர் டேவிட் கமரன் மக்களின் முடிவுக்கு 2016ஆம் ஆண்டு விட்டார். ஆனால் எந்தப் பாதையில் போகக்கூடாது என்று தான் நம்புகிறேன் என்பதையும் கூறினார். விளைவு மக்கள் தேர்ந்தெடுத்த பாதை அவர் சிபாரிசு செய்த பாதைக்கு முற்றிலும் முரணானது. இன்று அவர் பிரதம மந்திரியாகக் கூட அல்ல அரசியலை விட்டே ஒதுங்கி விட்டார். இன்றைய இங்கிலாந்து மக்களின் முன்னால் இருக்கும் கேள்வி அவரைப் பற்றியதல்ல. அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையை தேர்ந்தெடுக்கும்படி செய்யப்பட்ட பிரசார கர்த்தாக்கள் உண்மைகளை உண்மையாக அவர்களுக்கு புடம் போட்டுக் காட்டினார்களா? அன்றி உண்மைகளின் தோற்றத்துக்கு மெருகேற்றி அவைகளை மிகைப்படுத்தப்பட்ட உண்மைகளாகக் காட்டினார்களா ?என்பதுவே ! ஒருவர் அரசியலுக்குள் நுழைவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு.

  1. ஒரு கொள்கை மீது கொண்ட தீவிரமான பிடிப்பு
  2. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் உன்னத நோக்கம்
  3. தம் தேசத்தின் மீது கொண்ட பற்று

இங்கு எது முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் பொறுத்தே அவர்களின் அரசியல் பிரவேசத்தின் உண்மையான பரிணாமம் விளங்கப் பெறுகிறது. நாடும், மக்களும் எக்கேடு கெட்டுப் போனாலும் நான் கொண்ட கொள்கை வெற்றி பெற்றால் அதுவே என் வெற்றி என்று நினைப்பவர் ஒரு புறம், மக்களின் நன்மைக்காக, எனது தேசத்தின் சுபிட்சத்துக்காக எனது கொள்கை குறுக்கே வரும்போது அதைக் கொஞ்சம் மாறுதலுக்குள்ளாக்கி ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்கள் மறுபக்கம் நின்று மக்களுக்காக, மக்களையே குழப்பும் ஒரு நிலைக்கு இன்றைய இங்கிலாந்து மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றொரு உணர்வு எழுகிறது.

ஒரு தொண்டனுக்குக் கொள்கையும், கட்சியும் முக்கியம் என்பது மறுக்கப்பட முடியாதது. ஆனால் நாடு சீரழியப் போகிறது எனும் ஒரு நிலை வரும்போது தமது கட்சி பேதங்களை ஒருபுறம் தள்ளி ஒருமைப்பட்ட குரலில் , தமது வலுவினைக் காட்டி தமது நாட்டிற்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் மன தைரியம் இன்றைய இங்கிலாந்து முக்கியக் கட்சிகளின் தலைவர்களுக்கு உண்டா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

“ப்ரெக்ஸிட்” எனும் பாதையில் இங்கிலாந்தின் எதிர்காலப் பயணம் அமையப்போகிறது என்பதை மக்கள் தீர்மானித்த பின்னர் இப்பாதையில் பயணிப்பதற்கு அதன் கரடு முரடான பாதையின் குலுக்கல்களைச் சந்திப்பதற்கு பயணப்படும் வாகனம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு நடத்தப்படும் பேச்சுக்களில் இங்கிலாந்து ஒரு வலுவற்ற நிலையில் கலந்து கொள்ளுமேயாகில் அப்பேச்சுக்களினால் விளையப் போகும் முடிவுகள் பயணத்தை இலகுவாக்க உதவாது. இன்று இங்கிலாந்துப் பிரதமர் தெரேசா மே அவர்களைக் கவிழ்க்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்குவது எதிர்பார்க்கக்கூடிய விடயமென்றாலும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே தமது சுயலாபங்களுக்காக அவரது முதுகில் குத்தும் முயற்சியில் இறங்குவது நடுத்தரமான நிலையில் நாட்டின் பொருளாதார நிலையை நோக்கி கவலைப்படுவோரை கலங்க வைக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. எமது படையை வழிநடத்தும் தளபதியை நாமே காயப்படுத்தி விட்டு எதிரணியில் இருப்பவர்களுடன் வலுவான நிலையில் எதிர்ப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனமான செயல்.

இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகித் தனியான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய காலக்கெடுவின் இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. எமது எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கை ஒரு நிலையான அடித்தளத்தில் உருவாக்கப்பட வேண்டுமென்றால் இன்று எம்முன்னே இருக்கும் கடமை தெளிவானது. கட்சி பேதங்களை மறந்து எமது பிரதமருடன் ஆரோக்கியமான வாதங்களை முன்வைத்து அவருடைய ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சு வார்த்தைகளின் வெற்றிக்கு எமது பக்கபலத்தை அளிப்பது முக்கியமானது. எமது பிரதமர் முதலில் எமது ஆதரவுடன் எம்மால் எதிர்பார்க்கப்பட்ட வகையில் இப்பேச்சுகளை வெற்றியாக முடித்து எம்மை சரியான பாதையில் பயணிக்க வைக்கட்டும். அதன் பின்னால் நாம் எமது உள்நாட்டு அரசியல் சகோதரச் சண்டைகளை வாக்குப் பெட்டிகளின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

“நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு?
நாமென்ன செய்தோம் அதற்கு என நினைத்தால் நன்மை எமக்கு!
 

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *