அவன், அது , ஆத்மா” (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை 51)

0

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 51

கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்

கொங்குத் தமிழால் கொஞ்சும் கவிதைகளை எழுதி அதை அப்படியே கேட்போர் மனத்துள் அப்பிவிடும் ஆற்றல் படைத்த பெருமகனார் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் அவர்கள். சிறந்த மரபுக் கவிஞர். அவனுக்கு அவரது இசைகலந்த குரலில் அவரது கவிதையைக் கேட்க ஒரு தனி விருப்பம் உண்டு. பொதுவுடைமைக் கொள்கையையும், மனித நேயத்தையும் உட்கருத்தாகக் கொண்டிருக்கும் கவிதைகளைப் படைப்பவர் அவர். தும்பைப் பூப்போல வெள்ளை வெளேர் என்ற கதர் வேட்டியும், ஜிப்பாவும் போலவே அவரது மனமும் சுத்தமானது என்பது அவருடன் பழகியோர்களுக்கு நிச்சயம் புரியும். அவனுக்கு அந்தக் கவிஞருடன் பழகும் வாய்ப்பு அமைந்திருந்தது. “பாதை தெரியுது பார்” என்ற திரைப்படத்தில் அவர் எழுதி, எம்.பி. ஸ்ரீநிவாசன் இசையமைத்து மிகவும் பிரபலமடைந்த பாடல்தான்,

சின்னச் சின்ன மூக்குத்தியாம்
சிகப்புக் கல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பெண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்”

இந்தப் பாடலை அவன் இப்பொழுதும் விரும்பிக் கேட்டுக் கொண்டிருப்பான்.

கவிதை என் கைவாள் என்று சொன்னவரின் கவிதைத் தொகுப்பு “பாட்டு வராத குயில்”. நமது சமுதாயம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்ற அவரது நியாயமான எண்ணத்தை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு அது. உதாரணத்திற்கு ஒரு கவிதையை இங்கு தருகிறேன்.

“சாதிவேறு பாடுகள்கூறி

சண்டை நடக்கிறது – உங்கள்

மண்டை உடைகிறது.

சமய ஞானிகள் பேரைச் சொல்லி

தலைகள் உருள்கிறது – நூறு

கொலைகள் விழுகிறது”

“நமக்குண்ணே ஒரு

பொழுது விடியணும் – அது

நம்மாலேதான் நடந்து முடியணும்

சூரியன் கழுத்தில் துண்டைப் போட்டு

சுண்டி யிழுக் கோணும்

சும்மா நின்னா புண்ணியம் இல்லை இதை

கண்டு நடக்கோணும்”

1990ம் வருடம் செப்டம்பர் மாதத்தில், சென்னை தேனாம்பேட்டைப் பகுதியில் இருக்கும் ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் ஒரு கவியரங்கம். கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்தான் தலைமை. சுமார் ஒரு பதினைந்து கவிஞர்கள் கலந்து கொண்டார்கள். அவன் உட்பட கவிமாமணி வ.வே.சு., கவிதாயினி நிர்மலா சுரேஷ் ஆகியோர்களும் இருந்தனர்.

“கிணறு தோண்டுவோம் வா –தரையில்
கீரல் வெடிப்பினில் ஒருநாள் தண்ணீர்
பீறிட் டெழுவது திண்ணம் நம்பு
கிணறு தோண்டுவோம் வா “

என்ற கவிதையை வ.வே.சு. படித்தது இன்றும் அவரது குரலிலேயே அவனது செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அன்று அந்தக் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

1982ம் ஆண்டு கன்யாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மண்டைக்காடு என்ற பகுதியில் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் பகவதி அம்மன் கோவில் வழிபாட்டு விழாவின் போது நடந்த சண்டையில் ஏராளமானவர்கள் கொல்லப் பட்டனர். அந்தச் செய்தியை மறுநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் முதல் பக்கத்தில் படங்களுடன் வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்து அவன் உறைந்து போனான். அப்பொழுது அவனுள் எழுந்த உணர்வின் வெளிப்பாடுதான் “மனித நேயம்” என்ற கவிதை. அதைத்தான் அவன் அன்றும் படித்தான்.

“ஏசு நாதரும் விசுவ நாதரும்
நேசம் வைத்தநம் நெஞ்சின் சிலைகள்தான்
கன்னி மேரியோ கன்யா குமரியோ
தன்னை உணர்ந்தவர் கண்ணில் ஒன்றுதான்
பொய்யை மட்டுமே போற்றும் வாழ்க்கையில்
தெய்வ உண்மைகள் தெரிவ தில்லைதான்
மண்டைக் காட்டிலே மனித சக்திகள்
சண்டை போடவா சமயம் வந்தது ?
பெண்டு பிள்ளைகள் துண்டம் துண்டமாய்க்
கொண்டு போகவா கோவில் வைத்தது?
மதவ ளர்ச்சியா மனித நேயமா
எதுஉ யர்ச்சியாய் இவர்க்குப் பட்டது?”

இதை அவன் “மதவெறி ஏன்?” என்ற தலைப்பிட்டு 1982ம் ஆண்டே பாரதி கலைக்கழகக் கவியரங்கில் படித்தான். அவன் கவிதையைப் படித்து முடித்து அமர்ந்ததும் கவிமாமணி நா.சீ.வரதராஜன் அவர்கள் அவன் முதுகில் தட்டிக் கொடுத்து,” ரொம்ப நல்ல கவிதை விசு…” என்று பாராட்டி, இதன் தலைப்பை “மனித நேயம்” என்று மாற்றிக் கொள்” என்றார். அந்தக் கவிதையின் கருப்பொருள் இன்னும் மாறாது இருக்கும் வலியில்தான் எட்டு வருடங்கள் சென்ற பின்பும் அதை மீண்டும் அந்த அரங்கில் அவனைப் படிக்கத் தூண்டியது

சிறுகதை எழுதத் தூண்டிய கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்

அந்தக் கவியரங்கம் முடிந்தவுடன்,” தம்பி…உங்களது கவிதை என்னை உலுக்கி விட்டது. இதற்குள் ஒரு சமூகக் கதையே இருக்கிறது. நீங்கள் கவிதையும் எழுதுங்கள். அத்துடன் சிறுகதைகளும் எழுதுங்கள்” என்றார் கே.சி.எஸ். “எனக்கு சிறுகதை எழுதிப் பழக்க மில்லையே” என்றான். ” இல்லை தம்பி…உங்களால் நல்ல கதைகள் எழுத முடியும். நீங்கள் நாளையே ஒரு சிறுகதை எழுதி “தாமரை”க்குத் தாருங்கள்” என்று ஊக்கப் படுத்தினார். வீட்டிற்கு வரும் வழியில் அது பற்றியே அவன் சிந்தனை செய்து வந்தான். ஒரு பொறிதட்டியது. இரவில் பத்து மணிக்குமேல் அதை ஒரு சிறுகதையாக எழுதினான். “சிலேட்டு” என்று அதற்குத் தலைப்புத் தந்தான். மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து சில திருத்தங்கள் செய்து அந்தக் கதையை பிரதி எடுத்தான். இதைச் செய்து முடிக்கும் பொழுது இரவு இரண்டு மணியானது. தூக்கம் வராமல் படுத்தபடியே விடியலுக்காகக் காத்திருந்தான். காலையில் ஆறுமணிக்கு அந்தச் சிறுகதையை அவனுக்கு அப்பாவிடம் காட்டி,’ அப்பா இந்தக் கதையை இரவில் எழுதினேன். நீங்கள் படித்துப் பாருங்கள்” என்றான். அவருக்கு நல்ல வாசிப்புப் பழக்கம் இருந்தது. அப்பாவின் அருகிலேயே அவன் உட்கார்ந்து கொண்டான். கதையைப் படித்து முடித்தார். “நன்னா இருக்கு. இத “சீதா”விடமும் காட்டு” என்றார். அவன் அவனுக்கு மனைவியிடம் அந்தக் கதையைப் படிக்கக் கொடுத்தான். ” கதையின் கருவும், நடையும் நல்லாருக்கு” என்று அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மியும் சொன்னாள். ஒரு இனம் புரியாத இன்பத்தில் அவன் திளைத்தான். அலுவலகம் சென்று அங்குள்ள தன் நண்பர்களுக்கு அதைப் படிக்கக் கொடுத்து அவர்களது கருத்தையும் கேட்டறிந்தான். அவர்கள் பாராட்டினார்கள் அவனது சிறுகதை முயற்சியை. அவன் அந்தக் கதையை எடுத்துக் கொண்டு தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் (இப்பொழுது அதன் பெயர் செவாலியே சிவாஜி கணேசன் சாலை) இருக்கும் “வலது கம்யூனிஸ்ட் கட்சியின்” அலுவலகமான “பாலன்” இல்லத்திற்கு அன்று மதியம் இரண்டு மணிக்குச் சென்றான். அங்குதான் “தாமரை” மாத இதழின் அலுவலகமும் இருந்தது.

தோழர் ஆர். நல்லகண்ணு

தாமரை இதழ் அலுவலகத்தில் இருந்த ஒரு ஊழியரிடம் அவன் ஆசிரியர் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் இருக்கிறாரா ? என்று விசாரித்தான். அந்த ஊழியர் ஒரு கதர் வேட்டியும், சட்டை அணியாத திறந்த மார்புடன் தோளில் ஒரு துண்டையும் மடித்துப் போட்டிருந்தார். அவரைப் பார்க்க அவனது கிராமத்து ஒரு எளிய விவசாயியைப் போல இருந்தார். அவர் அவனிடம்,” என்ன விஷயமா அவரைப் பார்க்க வந்தீங்க?” என்றார். ” தாமரை இதழுக்காக ஒரு சிறுகதை கேட்டிருந்தார். அதை அவரிடம் கொடுக்க வேண்டும்” என்றான். ” என்னிடம் கொடுங்கள். இந்தக் கதையை தோழர் கே.சி.எஸ். வந்தவுடன் கொடுக்கிறேன்” என்றார். அவன் கொஞ்சம் தயங்கிய படியே நின்றான். “தம்பி..கவலைப் படடாதீர்கள். நான் அவரிடம் சேர்த்து விடுவேன். கதையை என்னிடம் தாருங்கள்” என்று வாங்கிக் கொண்டு, அங்கிருக்கும் ஒரு மரபெஞ்சைக் காட்டி ,” கொஞ்ச நேரம் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் வந்துவிடுகிறேன்” என்று உள்ளே சென்று விட்டார் அந்த எளிய மனிதர். இவர் யார் என்று தெரியாமலேயே கதையைக் கொடுத்து விட்டோமே என்ற நினைப்பில் அவன் அங்கே அமர்ந்திருந்தான். ஒரு பதினைந்து நிமிடங்கள் சென்ற பிறகு அந்த மனிதர் தன் கையில் அந்தச் சிறுகதையை வைத்துக் கொண்டு வெளியில் வந்து ,” தம்பி…இந்தக் கதை மிக நன்றாக இருக்கிறது. தொடர்ந்து நீங்கள் தாமரைக்கு உங்கள் படைப்புகளைத் தாருங்கள். ஆசிரியரிடம் இதைச் சேர்த்து விடுகிறேன்” என்று சொன்னார். அவன் மகிழ்ந்து போனான். அவரைப் பார்த்து,”ஐயா…நீங்கள் யார்?” என்று கேட்க, அவர் ,” தம்பி என்பெயர் ஆர்.நல்லகண்ணு” என்றார் ஒரு மெல்லிய புன்னகையோடு. அப்படிதான் அந்த எளிய மனிதர் அவனுக்கு அறிமுக மானார். அவனது முதல் சிறுகதை 1990ம் ஆண்டு அக்டோபர் மாத “தாமரை” இதழில் வெளியாகி அதன் ஒரு பிரதி அவனது வீட்டு முகவரிக்கே வந்து சேர்ந்தது.

இதழைப் பிரித்து அவன் எழுதிய கதையைப் படிக்கும் பொழுதே ஒரு பரவசம் அவனுக்குள் பரவியிருந்தது. தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரவேண்டும் என்ற உந்துதல் அவனுக்குள் பிரகாசமாகத் தெரிந்தது.

13.10.2017

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *