Category: தொடர்கள்

  • பழகத் தெரிய வேணும் – 45

    பழகத் தெரிய வேணும் – 45

    நிர்மலா ராகவன்

    மனைவி கணவனது உடைமையா?

    ஆப்ரஹாம் லிங்கனிடம், “இந்த உலகில் நாம் செய்யும் எல்லா செயல்களும் சுயநலத்தின் அடிப்படையில் எழுந்தவைதான்,” என்று நண்பர் ஒருவர் கூற, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி அதை மறுத்தார்.

    “நான் பிறருக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன். அது எப்படி சுயநலமாகும்?” என்று கேட்டார்.

    நண்பர் அயராமல், “அப்படி உதவி செய்தால், உனக்கு என்ன கிடைக்கிறது?” என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

    “மகிழ்ச்சி,” என்று பதில் வர, “பார்த்தாயா? உன் மகிழ்ச்சிக்காகச் செய்வது சுயநலமில்லையா?” என்று மடக்கினார் நண்பர்.

    நம் நலனைக் கவனித்துக்கொள்வது அவ்வளவு விரும்பத்தகாத குணமா?

    `தன்னலமற்ற சேவை செய்பவர்’ என்று அபூர்வமான சிலரைப் போற்றுகிறோம்.

    ஒருவர் தன் சொந்த நலனைப் பெரிதாகப் பாராட்டாது, அறவே ஒதுக்கினால், அவரால் எப்படிப் பிறருக்குச் சேவை செய்யமுடியும் என்கின்ற கேள்வி எழுகிறதே!

    பொதுவாகவே, பெண்கள் இப்படி இருந்தால்தான் அவர்களுக்கு நல்ல பெயர் கிட்டுகிறது.

    கதை

    லட்சுமி சிறுவயதிலிருந்தே ஆண்கள் சொற்படி கேட்டு நடக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டு வளர்ந்திருந்தாள்.

    அவள் செய்யப்போகும் ஒவ்வொரு காரியமும் இப்படித்தான் இருக்கவேண்டும், தான் யாருடன் பேசலாம் என்று கூறுகிறோமோ அவருடன் மட்டும்தான் அவள் பேசவேண்டும் என்று பலவகையிலும் கணவர் கட்டுப்படுத்தியபோது அவரது போக்கைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை அவளுக்கு.

    கைத்தொலைபேசியில் அவள் யாருடனெல்லாம் தொடர்பு கொள்கிறாள் என்று அவர் வேவு பார்த்தபோது, அவளுக்கு வாழ்வில் உற்சாகம் குறைந்துகொண்டே போயிற்று.

    கணவருடைய அன்புக்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம் என்று நினைத்தபோதும், தான் ஏன் மகிழ்ச்சியே இல்லாமல் இருக்கிறோம் என்று அவளுக்குப் புரியவில்லை. சிலமுறை கணவனின் போக்கை எதிர்த்துப்பார்த்தாள்.

    “எனக்கு உன்மேல் மிகுந்த அன்பு, அதனால்தான் நீ பிறருடன் பழகினால் பொறாமை வருகிறது,” என்று சமாதானப்படுத்தினான் அவன். அவளுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பது அவனுக்குப் புரியவில்லை.

    இம்மாதிரியான ஆணுக்கு மனைவிமேல் நம்பிக்கை கிடையாது என்பதில்லை. சுயநம்பிக்கை குறைவு. அவ்வளவுதான். தன்னைவிட அவள் எந்த விதத்திலாவது உயர்ந்தவள் என்று தோன்ற, அப்படி நடக்கிறான்.

    ஒருவர் தன் மகிழ்ச்சிக்காகவோ, இல்லை, சொந்த நலனுக்காகவோ பிறரைக் கஷ்டப்படுத்துவது அன்பில் சேர்த்தியில்லை.

    இப்படிப்பட்ட கணவனுக்காக விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால் குடும்பத்தில் எவருக்குமே மகிழ்ச்சி கிட்டாது.

    ஒரேமாதிரி அனுபவம் வெவ்வேறு மனிதர்களிடம் வித்தியாசமான பாதிப்புகள் ஏற்படுத்தும்.

    கதை

    வனமாலா தன்னைக் கட்டுப்படுத்திய கணவனிடம் சிறிது காலம் அடங்கிப்போனாள். காதலனாக இருந்தபோது, அவனுக்கு விட்டுக்கொடுத்து நடந்தவள் அவள். ஆனால், அப்படியே நடந்தபோது, தன் இயல்பான குணாதிசயமே மாறிக்கொண்டு வருகிறது என்பதை உணர்ந்தாள்.

    எதிலும் சவாலை எதிர்நோக்கும் குணத்தால் இப்படி ஒருவரை மணந்துவிட்டோமோ என்று முதலில் குழம்பினாள் அந்த விளையாட்டு வீராங்கனை.

    பிறகு, `கணவனுக்குத் தீயகுணம்கொண்ட நண்பர்கள் இருந்தால் என்ன, இது என் வாழ்க்கை!’ என்று தெளிந்தாள். தனக்குப் பிடித்த, பிறருக்குத் தீங்கு விளைவிக்காதவற்றில் ஈடுபட்டாள்.

    கரடுமுரடான பாதையில் ஏறுவது கடினமாக இருந்தாலும், மனங்கலங்காது தொடர்ந்தால் அழகான காட்சிகள் அமையலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

    `சுயநலம் பிடித்தவள்!’ என்று கணவன் பழித்ததை அலட்சியம் செய்தாள். (அவன் மட்டும் சுயநலக்காரன் இல்லையா?)

    காதலனாக இருந்தபோது அவனிடம் அவளுக்கு அவனிடம் பிடித்த குணங்களை மீண்டும் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை எழ, பொறுமையாக இருந்தாள்.

    தன் போக்கால் அவளுக்குத் தன்னிடம் அன்பு குறைந்து வருவது புரிய, முதலில் கேலி, பிறகு சண்டை என்று இருந்தவன் நாளடைவில் மாறினான். அவளைக் கட்டுப்படுத்துவதைக் குறைத்துக்கொண்டான்.

    கதை

    பெண்பார்க்கும் படலம் முடிந்ததும், `எனக்கு இந்தப் பெண் வேண்டாம். அவளுக்கு நிறைய சாதிக்கவேண்டும் என்ற கனவுகள் இருக்கின்றன,’ என்று ஓர் இளைஞன் மறுத்தான்.

    அவனைப் பொறுத்தவரை, ஓர் இலக்குடன் சாதிக்கும் வெறி நிறைந்த பெண்களிடம் பெண்மைக்குணம் இருக்காது.

    மனைவி அவனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பொருள். அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்துகொடுத்தால் அவள் அன்பான மனைவி. அவளுக்குத் தனக்கென்று எந்த ஒரு லட்சியமோ, ஆசையோ இருக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்டவன்.

    அது மட்டுமா? பெண் என்றால் அதிர்ந்து பேசாது, அல்லது பிறர் எதிரில் வாயே திறக்காது, கணவனுக்குக் கீழ்ப்படிகிறவள்.

    அப்படிப்பட்ட ஒரு பெண் திருமணமானதும், குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டோமே, ஏன் வாழ்க்கை மகிழ்ச்சியற்றுப் போய்விட்டது என்று புரியாது தவித்தாள்.

    கதை

    “எல்லாப் பெண்களுக்கும் பிடித்த ஒன்று எது என்று கண்டுபிடித்து வா,” என்று அரசன் ஒருவனுக்குக் கட்டளையிட்டான்.

    அந்த மனிதன் எங்கெங்கோ தேடி, அறிவாளி என்று பிறர் சிபாரிசு செய்த ஒரு சூனியக் கிழவியிடம் அக்கேள்வியைக் கேட்டான்.

    `நான் விடையளித்தால் உன் உயிர் தப்பும். எனக்கு என்ன கிடைக்கும்?” என்று அவள் கேட்க, “நீ கேட்பதைத் தருகிறேன்,” என்று வாக்களித்தான்.

    எக்காலத்துக்கும் பொருந்தும் அவள் பதில்: “தான் சம்பந்தப்பட்ட சமாசாரங்களில் எந்தப் பெண்ணும் சுயமாக முடிவெடுக்கவே விரும்புகிறாள்”.

    அரசனுடைய பாராட்டுடன் அவளை மீண்டும் சந்தித்தவன், “உனக்கு வேண்டியதைக் கேள்,” என்றான்.

    “என்னை மணந்துகொள்,” என்றவள் ஒரு நிபந்தனையும் விதித்தாள். “நீ வெளியில் போகும்போது நான் கிழத்தோற்றத்துடன் வருவேன். வீட்டில் இளம்பெண்ணாக நடப்பேன். இல்லையேல், வீட்டில் கிழவி, வெளியில் இளம்பெண். உனக்கு எப்படி வேண்டும்?”

    “உன் விருப்பம்!”

    அவள் மகிழ்ந்து, எப்போதும் இளம்பெண்ணாகவே தோற்றமளிப்பதாக உறுதியளித்தாள்.

    `திருமண வாழ்க்கை நான் எதிர்பார்த்தபடி இல்லை,’ என்று இளம்பெண்கள் மனம் வெறுத்துப் பேசுகிறார்கள்.

    திருமணத்திற்கு முன்னால், திருமணத்திற்குப் பின்னால் என்று ஆராய்ந்தால், உறவில் நிறைய வேறுபாடுகள் இருக்கும்.

    எப்போதும் கணவன் அல்லது மனைவி தன்னையே நாடவேண்டும், தான் சொற்படி நடக்கவேண்டும், பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு ஒவ்வாதது.

    நல்ல குடும்பம் என்றால், ஒவ்வொருவருடைய திறமையும் வெளிப்பட அவர்கள் நினைத்ததைச் சாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும் – அது ஆணோ, பெண்ணோ, குழந்தைகளோ! எவரிடமும் எதிர்பார்ப்பு இல்லாது செலுத்துவதே அன்பு.

    தான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் வாழ்க்கைத்துணையிடம் சொல்லி, அனுமதி கேட்கும் நிலை வந்தால் அது அடிமைத்தனம்.

    “உங்களுக்காக எவ்வளவு செய்தேன்!” என்று சொல்லிக்காட்டினால், பெற்ற குழந்தைகள் கொண்டிருக்கும் அன்புகூட குறைந்துபோகும் அபாயம் இருக்கிறது.

    “நான் இப்போது செய்கிறேன். நீங்கள் நாளைக்குச் செய்யவேண்டும்!” என்பவர்களும் உண்டு. உறவுகள் என்ன, பண்டமாற்று வியாபாரமா?

    பெற்ற குழந்தைகளிடம் அன்பு செலுத்துவது அவர்கள் பிற்காலத்தில் நன்றியுடன் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனா?

    அல்லது, வயது முதிர்ந்த பிராயத்தில் அவர்கள் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்றா?

    குடும்பத்தினர் நல்லபடியாக வளர்வதைக் கண்டே மகிழ்ச்சி அடையலாமே!

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 1

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 1

    மீனாட்சி பாலகணேஷ்

    1. கோலம் வரையும் பருவம்

      (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    அனைத்துக் குழந்தைகளின் வளர்ச்சியிலும் அழகான சுவையான பல பருவங்களும், நிகழ்வுகளும் உண்டு. இந்தத் தொடரில் என் கருத்தில் தோன்றிய, பாடல் பெறாத ஒருசில பருவங்களை நாம் காணப்போகிறோம். பெரிதளவில் பிள்ளைத்தமிழ் நூல்களை பெண்பாற் புலவர்கள் பாடாமையாலோ என்னவோ, சில அழகான குழந்தைப்பருவத்து நிகழ்வுகள் பாடல்பெறாமலே போய்விட்டன. பெண்பாற் புலவர்களால் பாடப்பட்ட ஓரிரு பிள்ளைத்தமிழ் நூல்களும் இன்றுவரை தேடியும் என் கைக்குக் கிட்டவில்லை.

    பெண்களுக்கும் ஆடவருக்கும் குழந்தையின் ஒரு செயலைக் காணும்போழ்தில் தோன்றும் கற்பனைகள் வேறுபடும் அல்லவா? மேலும் தாய்மாரே குழந்தையுடன் பெரும்பொழுதுகளைக் கழிப்பதனால், அவர்கள் தத்தம் குழந்தைகளுடன் செய்து மகிழும் செயல்களும் பாடப்பட வேண்டும் அல்லவா?

    ஆகவே இவற்றைப் பதிவுசெய்யலாம் எனும் ஆர்வத்தினால் எழுந்த கட்டுரைகள் இவை. இக்கட்டுரையைப் பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்களுக்கு அனுப்பிவைத்து, அவர் பார்த்தபின்பே பதிப்பிற்கு அனுப்புகிறேன். பேராசிரியர் ஐயா, இனி இப்பருவங்களையும் பிள்ளைத்தமிழ் பாடுவோர் தமது நூல்களில் சேர்த்துப் பாடப் பரிந்துரைக்கலாம் எனத் தமது கருத்தைக் கூறியுள்ளார்.

                                                   —————————————

    ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில், ‘தையொரு திங்களும்,’ எனத்துவங்கும் பாசுரத்தொகுப்பில் கோலம் வரைவதனைப் பற்றிக் கூறுகிறாள்.

    தை மாதம் முழுவதும் (எல்லா நாட்களிலும்) கண்ணபிரான் வரும் இடம் முழுவதிலும், தரையைத் தூய்மை செய்து, அலங்கரித்து, அழகாக உள்ள மண்டலவடிவில் (வட்டவடிவில்) கோலம் இட்டு, அவன் வரும்வழியினை அழகுபடுத்தி வைத்தேன்,’ என்கிறாள். ‘கண்ணனோடு என்னைச் சேர்த்துவை,’ என அனங்கனான காமவேளையும் அவன் தம்பியையும் வேண்டுவன இப்பாடல்கள்.

    ‘தையொரு திங்களும் தரைவிளக்கித்
             தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
    ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
             …………………………………..‘ என்பது பாடல்.

    –—————————-&————————-

    இனி, பிள்ளைத்தமிழில் எவ்வாறு இப்பாடல்களை அமைக்கலாம் எனக் காணலாம்.

    அதிகாலை நேரத்தில் வீட்டின்முன் பசுஞ்சாண நீர்தெளித்துக் கூட்டி, கோலமாவினால் அழகான கோலங்களை வரைந்து வைப்பது நம் மிகப்பழைய வழக்கம். பெண்குழந்தைகள் அரிசிமாவையோ அல்லது வெண்கற்களையும் நுண்ணிய வெண்மணலையும் பொடித்து, இடித்துச் சலித்துச் செய்த கோலப்பொடியையோ கொண்டு சாணநீரால் தெளித்துக் கூட்டிய வீட்டு முன்வாசலில் கோலமிடுவதில் ஐந்தாறு வயது முதலே ஆர்வம் காட்டுவார்கள்.

    அவ்வாறு இச்சிறுபெண், பத்துவயதுப் பைங்கிளி, வட்டிலில் கோலமாவை எடுத்துவந்து அன்னை அருகிருக்கப் பிஞ்சுவிரல்களால் மாவினை எடுத்து முதலில் புள்ளிகளை வைக்கின்றாள். தாய் அவள் வயதுக்கேற்ற  சிறிய கோலங்களைக் கற்றுக் கொடுத்துள்ளாள். இவளோ தாயும் அறியாமல் பாட்டியிடமும் மற்றவர்களிடமும் தன் திறமைக்கும் மிஞ்சிய பெரிய கோலங்களை வரையக் கற்றுக் கொண்டுள்ளாள்.

    அதுவும் மகளிர் விரும்பும் மார்கழிமாதம் வந்துவிட்டால் போதும்! எங்கு நோக்கினும் தெருவெங்கும் கோலங்கள்! விதவிதமான கற்பனைகள்! ஓரிடத்தில் ஒரு மங்கை அவளுடைய இல்லத்தின் முன்பு நீராழி மண்டபம் கோலம் வரைகின்றாள். புள்ளிகளைக் கணக்கிட்டு வைத்து, இரு விரல்களிடையே அள்ளிய வெண்மையான கோலமாவை அழகான இழைகளாக்கி அப்புள்ளிகளை இணைத்தும் வளைத்தும் அவளிடும் கோலம் கண்ணுக்கு விருந்தாகிறது.

    ‘எதற்காக இன்று இவ்வளவு பெரிய கோலம்? மார்கழிமாதம் கூட இல்லையே!’ எனப் பெண்டிர் வியக்கின்றனர். அவள் இழைக்கும், வரையும் கோலத்தின் அழகைக் காண பெரியவர்களும் சிறுவர்களுமாக பெண்கள் கூட்டம். அவள் கோலம்வரையும் நளினமான அழகைக்காணப் பல பாட்டிமார்கள்! சாட்டைபோலவந்து முன்னே விழும் அழகான கருநாகம்போலும் பின்னல். அதனை பின்னால் தள்ளிக் கொண்டபடியே மும்முரமாகக் குனிந்து புள்ளிவைப்பதிலும் கோலத்தில் இழைகளைச் சேர்ப்பதிலும் முனைந்திருக்கிறாள்.

    “மங்கையை உள்ளே அழைத்துக்கொண்டுபோய் சுற்றிப்போடடி அம்மா!” என ஒரு முதியவள் ‘அறம்வளர்க்கும் மங்கை’ எனப்பெயர் கொண்ட அப்பெண்ணின் தாயிடம் கரிசனத்துடன் கூறுகிறாள். அவளருகேயும் வந்து, “மங்கை, இங்குவா,”என அவளை அழைத்த பக்கத்து வீட்டம்மாள், உரிமையோடு அவளுடைய நீண்ட பின்னலைப் பிடித்துச் சுற்றிச் சுருட்டி ஒரு கொண்டையாக்கி விடுகிறாள். அவளைப் பார்த்துக் கன்னங்குழியப் புன்னகைக்கும் மங்கையை ஆசைதீரக் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்து, விரல்களைச் சொடுக்கிக் கொள்கிறாள். அறம்வளர்க்கும்மங்கை ஊரில் எல்லாருக்கும் செல்லப்பெண்!

    இன்று பஞ்சநதீஸ்வரர் எனும் ஐயாறப்பர் திருவீதி ஊர்வலம் வரப்போகிறாராம். கோவிலும் அதனைச் சூழ்ந்த தெருக்களும் அமளிதுமளிப்படுகின்றன. தெருக்களில் நீர் தெளிக்கப்பட்டு, கோலங்களிழைக்கப்படுகின்றன. மங்கையின் அண்ணன் மணிவண்ணனும் அவர்கள் இல்லத்தின் முன்பு அழகான தோரணங்களைக் கட்டிவைத்துள்ளான். ஐயாறப்பர் வலம்வரும் பிரதான வீதியிலன்றோ அவர்கள் இல்லம் அமைந்துள்ளது!

    கோலமிழைக்கும் இப்பெண் யார்? அந்த அறம்வளர்த்த நாயகியே சிறுபெண்ணாக வந்துதித்தாளோ?கண்டு மயங்குகிறோம்!

    விநாயகப்பெருமான், மயிலேறி உலவும் முருகன், ஆலமரத்தடி அமர்ந்து மௌனகுருவாகி உபதேசிக்கும் அண்ணல் சிவபிரான், மாலவனாம் மாயவனாகிய திருமால் அனைவரும் மனம் மகிழும் மங்கை இந்த அறம்வளர்க்கும் நங்கை.

    அத்தன் சிவபிரானளித்த இருநாழி நெல்லினைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் சலியாது செய்து உலக மக்களைப் புரப்பவள் அறம்வளர்த்த நாயகி அம்மை!

    நாதசுரம் எனும் மங்கள வாத்தியத்தினின்று எழும் இன்னிசையுடனும், பின்னால் மறையோதும் அந்தணர்கள் வேதவொலி முழக்கி வர, வீதித் திருவுலா வருகின்ற ஐயாறப்பனின் வரவுக்காக, அனைவரும்  தத்தம் மனைகள்முன்பு, நீர்தெளித்து, அழகான பெரிய  கோலங்களை வரைந்து அவன் வருகையை ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர்.

    சிறுபெண்ணான அன்னையே! அவனை வரவேற்க நீயும் அழகழகான கோலங்களை இழைத்தருளுக.

    குறும்பும் உற்சாகமும், மகிழ்வும் மலர்ச்சியும், அழகும் நளினமும் கூத்தாடும் இளம்சிறுமியான அன்னையே! அறம்வளர்க்கும் நாயகியே! எம்மை ஆண்டருள்கவே!

    இதோ எமது எளிய காணிக்கை உன் திருவடிகளுக்குத் தாயே!

    ஞாலமுதல் வனாவேழமுகத் தனுநீல மயிலேறி
    உலவும் சமர்த்தனு
    மாலமரத்தடி யில்நாளும மர்ந்து அருள்மழை
    வழங்கிடு மண்ணலு
    மாலவன் மாயவனு முளமகிழு மங்கையே
    அறம்வளர்க்கு நாயகியே!
    கோலமயில் நீயுந் தோழியருட னிணைந்து
    கோலம்வரைந் திடுவாயே! (1)

    நாழியிரண்டு நெல்லளித்து நல்லறம்நீ
    ஆற்றுகென நாதன்பணித்திட
    ஆழிசூழகில மெலாந்தாவி யணைத்தரு
    ளுந்தேவியான வாதிசத்திதாயும்நீ
    வாழிவளமுட னெண்னான்கு அறமியற்றி
    வழுவாதுவர மருளுந்தேவி
    கோழிகூவுங் காலைப்போதில் கன்னியருடன்
    கூடிக்கோலமி ழைத்திடுவாயே! (2)

    நாதசுர முழங்க கீதவொலி யெழும்ப
    வேதமறை யொலிக்கவுன்       
    நாதனை யாறப்பன் வீதிவல(ம்) வருங்கால்
    காதலுடன் காந்தள்       
    போதனைய கையால் கோலப்பொ டியதனை
    யள்ளிப்புள்ளி களிட்டு
    மாதரசே! மனமிக மகிழ்ந்து மாடக்குள
    சித்திரமாம் கோலமிடுவாயே! (3)

    (இவை திருஐயாறு அறம்வளர்த்த நாயகி மீது இயற்றப்பட்ட பாடல்கள்)

    சித்திரம் வரைந்தது: டாக்டர் சுப்பையா புகழேந்தி.

    (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 20

    பரிமேலழகர் உரைத்திறன் – 20

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சொல் – சொற்பொருள் – சொற்பொருள் விளக்கம்

    முன்னுரை

    திருக்குறளில் பயின்று வரும் சீர்களாகிய சொற்கள் உரையாசிரியர்கள் பார்வையில் அகராதிப் பொருளைத் தருவதில்லை. திருக்குறளின்  பொருண்மையை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டு எழுதும் உரையாசிரியர்கள் அச்சொற்களுக்குப் புலனெறி வழக்கத்திலும் உலகியல் வழக்கத்திலும் உள்ள பொருளைத் தராது சிறப்புப் பொருளைத் தருகின்றனர். இவ்வாறு இயல்பாக உள்ள பொருளைத் தவிர்த்துப் பொருள்புலப்பாட்டை நோக்கமாகக் கொண்டு பாட்டில் அமைந்துள்ள சொற்களுக்குச் சிறப்புப் பொருள் தருவதையே தலைப்பின் ‘சொற்பொருள்’ என்பது குறிக்கும். இனி அப்பொருளுக்கேற்ற விளக்கத்தையும் அவர்கள் தந்திருக்கிறார்கள். சொல், சொற்பொருள், அதற்கான விளக்கம் என்னும் நிரலை முற்றுமாகக் கற்கின்ற நிலையில்தான் அச்சொல்லுக்கு இயல்பான பொருளைத் தவிர்த்துச் சிறப்புப் பொருள் தந்ததன் உரை நுட்பம் புலப்படுகிறது. ஆசிரியர் பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் இவ்வாறு உரைத்த சில இடங்களை ஆராய்ந்து சுட்டிக்காட்டுவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    சேர்தல் – நினைத்தல்

    ‘’அவன் சென்னை சென்று சேர்ந்தான்’’ ‘இந்த வண்டி மதுரைக்கு எப்போது சென்று சேரும்?’ ‘இந்தப் பள்ளியில் நான் சேரலாமா?’ என்றெல்லாம் செவிமடுத்திருக்கலாம் இந்தத் தொடர்களில் உள்ள ‘சேர்தல்’ என்னும் சொல் அந்த வாகனம் அல்லது மாணவன் பௌதிக ரீதியாகச் சேர்வதைக் குறிக்கும். அதாவது வாகனம் சென்னை சேரும். மதுரை சேரும். மாணவன் பள்ளியில் சேர்வான். இந்தச் ‘சேர்தல்’ என்னும் சொல் ‘மானம்’ என்னும் பகுதிப்பொருள் விகுதி பெற்றும் வழக்கில் பேசப்படுவது உண்டு. ‘அவன் நல்லவனாகத்தான் இருந்தான் சேர்மானம் சரியில்லை, கெட்டுவிட்டான்’ என்பது போல அது அமையும். இங்கே ‘சேர்மானம்’ என்பதைப் ‘பிடிமானம், அடமானம், வெகுமானம், வருமானம்’ என்ற சொற்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால்,

    “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்” (3)

    என்னும் குறட்பாவில் வரும் ‘சேர்ந்தார்’ என்னும் சொல்லுக்கு மேற்கண்ட பொருள் கொண்டால் இறைவனுடைய திருவடியை அடியார் தழுவிக் கொண்டதாகப் பொருள்படும். பாட்டின் பொருண்மை அதுவன்று. தற்காலத்தில் ஒருவர் ‘இறைவனடி சேர்ந்தார்’ என்றால் இறந்துபோனார் என்றுதான் பொருள். அவருக்குத்தான் சுவரொட்டி வழியாகக் கண்ணீர் சிந்துவார்கள். அதே பொருளை இங்கே கொண்டால் பாட்டுக்கான பொருள் முரண்படும். என்ன முரண்? உள்ளத்தில் இறைவனை இடைவிடாது எண்ணுவார் வீட்டுலகின்கண்  அழிவின்றி வாழ்வார் என்பதுதான் பாட்டின் பொருள். கடவுள்வாழ்த்து பாயிரத்துள் அமைந்திருப்பதாலும் நூலின் ஒட்டுமொத்தப் பொருளையும் சுருக்கமாக முன்னுரைபோலச் சொல்ல வேண்டியது பாயிரத்தின் பணியாதலாலும் மேற்கண்ட ‘சேர்ந்தார்’ என்னும் சொல்லுக்கு இயல்பான அகராதிப் பொருளைச் சொல்லுவது முரணாகும் என்பதோடு குழப்பத்தையும் உண்டாக்கும். எனவே பரிமேலழகர்,

    “சேர்தல் – இடைவிடாது நினைத்தல்”

    என்று உரையெழுதிக் காட்டுகிறார். சரி, இவ்வாறு இவர் உரைகொள்ளுவது சரியா? சரியானால் அதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால் திருக்குறள் அதிகாரக் குறட்பாக்களை அவர் நோக்கிய பாங்கு புலப்படும். அதாவது,

    “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்” (3)

    “வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல” (4)

    “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (5)

    “பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்” (7)

    என்னும் நான்கு குறட்பாக்களையும் அவர் ஓரலகாகக் கொள்கிறார். அது என்ன ஓரலகு? இறைவனை வழிபடு முறைகளின் தொகுப்பாகக் காண்கிறார். மனம், மொழி, மெய்களால் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான் வழிபடு முறைகள். நினைப்பதும் வழிபாடு. இறைவன் திருநாமங்களைச் சொல்வதும் வழிபாடு. நித்திய, நைமித்தியங்கள் செய்வதும் வழிபாடே. மூன்றும் தத்தம் அளவில் சிறந்து நிற்பன. ‘உள்ளம் பெருங்கோயில்’ என்றார் திருமூலர். ‘வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்’ என்பார் அப்பர் பெருமான். “தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க” என்பார் ஆண்டாள் நாச்சியார்.

    மேற்கண்ட உணர்வுப் பதிவுகளை உற்றுநோக்குவார் பரிமேலழகர் அதிகாரத்துக்குள் உள்ள இந்த நான்கு குறட்பாவையும் ‘இறைவழிபாடு’ என்னும் ஓர் அலகுக்குள் கொண்டு வரும் நுட்பம் உணரக்கூடும். அதாவது இறைவனை நினைத்தவர்க்கும் வீடுபேறு உண்டு. அவன் திருநாமங்கள் வாழ்த்தியோருக்கும் வீடுபேறு உண்டு. அவன் நெறிநின்றார் தமக்கும் வீடுபேறு உண்டு என்பது கருத்து.

    ‘நெறிநின்றார்’ எனத் தெளிவாக அமைந்திருக்கிறது. ‘புரிதல்’ என்பதும் ‘சேர்தல்’ என்பதும் அவ்வாறு அமைந்திருப்பதாகக் கருத முடியாது. புரிதல் என்பதற்குப் புரிந்து கொள்ளுதல் என்பதே நேர்பொருளாகும். எனவே ‘புரிதல்’ என்பதற்கு ‘எப்போதும் சொல்லுதல்’ என்று உரை காண்கிறார் அழகர். அதாவது இறைவன் திருநாமங்களை எப்போது உச்சரிப்பது ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’  அத்திருநாமங்களைச் சொல்லுவது வீடுபேற்றுக்கு வழிவகுக்கும் ஆதலின் இறைவனுடைய பொருள்சேர் புகழை விரும்பிச் சொல்லுதல் வேண்டும் என்கிறார். இதற்கேற்பப் ‘புரிதல்’ என்னும் சொல்லுக்கு ‘எப்போதும் சொல்லுதல்’ என உரைகாண்பதை அறியலாம்.

    அறியவே மனத்தால் எண்ணுவார்க்கும் வீடுபேறு என்பதும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதனைத் திருவள்ளுவர் இரண்டு பாடல்களால் சொல்லுவதாகப் பரிமேலழகர் கருதுகிறார். இறைவனை எண்ணுகிறபோது அவனுடைய ஏனைய உறுப்புக்களைவிடத் திருவடியே நினைவுக்கு வரும்., வரவேண்டும் என்பது மரபு. ‘ஈசன் அடிபோற்றி எந்தையடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி’, ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்னும் திருவாசகமும் அவை. ‘மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’ என்பது பெரியபுராணம். ‘திருவடிப்புகழ்ச்சி’ என்பது வள்ளலார் பாடியது. ‘சொற்கழிவு பாதமலர்’ என்பது திருவாசகம். அந்தத் திருவடியை மனத்தால் எண்ணுதல் வேண்டுமல்லவா? ‘மாணடி சேர்ந்தார்’, ‘இலானடி சேர்ந்தார்’ என்னும் இரு பாடல்களில் பயின்றுள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கு இடைவிடாது நினைத்தல் என உரைகாண்கிறார். ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை’ என்பது அபிராமி அந்தாதி. ‘மாணடி சேர்ந்தார்’ என்பதிலுள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கு இவ்வாறு உரைகண்ட பரிமேலழகர் அடுத்த பாடலில் ‘இலானடி சேர்ந்தார்’ என்பதில் உள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கான அவ்விளக்கத்தை மீளவும் குறிக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

    1. ‘மாணடி சேர்ந்தார்’, இலானடி சேர்ந்தார்’ என்னும் இரண்டு குறட்பாக்களையும் இறைவனைச் சிந்திப்பதற்கும்
    1. ‘புகழ்புரிந்தார்’ என்பதை இறைவன் திருநாமங்களைச் சொல்லுவதற்கும்
    1. ‘ஒழுக்க நெறிநின்றார்’ என்பதைச் செயலுக்கும்

    அவர் பொருத்திக் காட்டி எழுதுகிறார்.

    “இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும் வாழ்த்தலும் அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவார் என்பது கூறப்பட்டது”

    என்னும் விளக்கத்தாலேயே அவர் ‘சேர்தல்’ என்பதற்கு ‘இடைவிடாது நினைத்தல்’ என்றும் புரிதல் என்பதற்கு எப்போதும் சொல்லுதல் என்றும் உரையெழுதியதற்கான காரணம் புலப்படுகிறது. ‘சேர்தல் என்பது குறட்பாச் சொல். இடைவிடாது நினைத்தல் என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள்.  ‘புரிதல்’ என்பது குறட்பாச் சொல். ‘எப்போதும் சொல்லுதல்’ என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள். இவ்விரு சொற்பொருளுக்குமான அவர் தந்த காரண விளக்கங்கள் மேலே தரப்பட்டன.

    ‘குறை’ என்றால் இன்றிமையாத பொருள் (முக்கியம்)

    பொதுவாகக் ‘குறை’ என்ற சொல்லுக்குக் குற்றம் என்பது பொருள். ‘எப்பொழுதும் குறைசொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கு இயல்பு’ குறையே இல்லாதவர் இவ்வுலகில் இலர். நிலவிலும் குறை உண்டு ‘நிறைகுறை நோக்கி’ என்பன வழக்கு. இலக்கியங்களிலும் இப்பொருளே பெரும்பான்மை. ஆனால் பரிமேலழகர் இந்தச் சொல்லுக்கு ‘இன்றியமையாமை’ என்று உரைகண்டிருக்கிறார்.

    “வினைக்கண் வினைகெடல் ஓம்பல்! வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு” (612)

    “வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது. அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக!” என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். பாட்டில் அமைந்துள்ள தொடர்களை முன்பின்னாக்கி உலகு வினைக்குறை தீர்ந்தாரின் (ஐ) தீர்த்துவிடும் ஆதலின் வினைக்கண் வினை கெடல் ஓம்பாது ஒழிக’ என்னுமாறு கண்ணழித்து உரையெழுதுகிறார்.

    இங்கே ஆய்வுக்குள்ளாவது ‘வினைக்குறை’ என்னும் சொல்லாகும். வினையாகிய இன்றியமையாத பொருளைக் கைவிட்டாரை இந்த உலகம் மதிக்காது என்பது கருத்து. இந்த உரையை முன்னெடுக்கும் பரிமேலழகர் ‘குறை’ என்பதற்கு ‘இன்றியமையாமை’ என்று உரைகாண்கிறார். பாட்டில் ‘குறை’ என்று இருக்க பரிமேலழகரோ (வினையாகிய) ‘இன்றியமையாத பொருள்’ என்று உரைசொல்வதற்குரிய முகாந்திரம் ஏதேனும் உண்டா என்பதே கருதுகோள்.

    குறை – இன்றியமையாப் பொருள்.

    அதாவது வினையாகிய இன்றியமையாத பொருளாம். தொடக்கத்தில் கூறியவாறு ‘குறை’ என்பதற்குப் ‘பழுது’ என்றே பொருளிருக்க பரிமேலழகர் தாம் கொண்ட பொருளுக்குப் புறநானூற்றுப் பாடலில் வந்த இந்தச் சொல்லைத் துணைக்கழைக்கிறார். அந்தப் பாட்டு,

    “படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும்
    உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
    குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
    இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
    மயக்குறு மக்களை இல்லோர்க்கு
    ‘பயக்குறை இல்லை’ தாம் வாழும் நாளே!” (188)

    என்னும் பாடலாகும். இந்தப் பாடலின் இறுதி வரியிலுள்ள ‘பயக்குறை’ என்ற சொல்லில் உள்ள ‘குறை’ என்பதற்கான பழைய உரையைத் தன்னுரைக்குச் சான்றாக்கிக் கொள்கிறார். மழலையின் செயல்களால் அறிவு மயங்கும். அத்தகைய குழந்தைகளைப் பெறாதவர்க்கு இல்லறத்தின் பயனாகிய ‘இன்றியமையாப் பொருள்’ வேறு ஏதும் இல்லை என்பது இப்பாட்டிற்கான பழைய உரை. இதனை,

    அது “பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே” என்பதனானும் அறிக.

    என்னும் தமது விளக்கவுரைக் குறிப்பின் வழி இதனை அறிய வைக்கிறார் பரிமேலழகர். மழலையாகிய இன்றியமையாத பொருள் இல்லையெனின் வாழ்நாள் பெருமை இல்லை. வினையாகிய இன்றியாமையாப் பொருள் இல்லையெனின் ஆள்வினைப் பெருமை இல்லை என இயைத்துப் பொருளறிக.

    ‘குறை’ என்பது குறட்பாச் சொல். இன்றியமையாப் பொருள் என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள். அச்சொல் அப்பொருளுக்கு உரித்தாமாறு புறநானூறு கொண்டு விளக்கியது அவர்தம் சொற்பொருள் விளக்கம்.

    இதற்கு இவ்வாறு உரைகாணாது வேறுவகையாக உரைகண்டால் ‘வினையே ஆடவர்க்குயிரே’ என்னும் கருத்தினை உள்வாங்கிக் குறள் கூறும் கருத்து சிறக்காமல் போய்விடுவதுடன் ‘ஆள்வினையுடைமை’ என்னும் அதிகாரத்தோடும் பொருந்தாதாம்.

    ‘உயர்வு’ என்பது பணியாமை

    உலகியலிலும் இலக்கிய வழக்கிலும் உயர்வு என்பது உடன்பாட்டுச் சொல். அது எதிர்மறை அன்று. ஒருவன் உயர்ந்தான் என்றால் அவன் தாழ்ச்சியடையவில்லை என்பது பொருளன்று. முன்பு இருந்த நிலையைவிட இன்னும் உயர்ந்திருக்கிறான் என்பதுதான் பொருள். ‘தாழ்ச்சியடையவில்லை’ என்றால் இருந்த நிலையிலேயே இருந்திருக்கிறான் என்றே பொருளாகும்.  இத்தகைய பொருளைப் பரிமேலழகர் குறட்பா ஒன்றில் பதிவு செய்து தம் உரை நுண்ணியத்தை உறுதி செய்வதைக் காணலாம்.

    “பெருக்கத்து வேண்டும் பணிதல்., சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு”  963

    என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்குக்,

    “குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உளதாயவழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும். குறைந்த நல்குரவு உளதாயவழிப் பணியாமை வேண்டும்.”

    என்று பொழிப்புரை எழுதுகிறார். பெருக்கத்து வேண்டும் பணிதல் என்பதற்கு அவர் எழுதிய செல்வம் உளதாயவழிப் பணிவு வேண்டும் என்ற உரையில் மாறுபாடு ஏதுமில்லை. ஆனால் சுருக்கத்து வேண்டும் உயர்வு என்பதற்கு அவர் ‘நல்குரவு உளதாயவழிப் பணியாமை வேண்டும்’ என்று எழுதுகிற உரைதான் ஆய்வுப் பொருளாகிறது.

    இந்த உரைக்கு மூலமாக அவர் வருவித்துக் கொண்ட சொல் ‘குடிப்பிறந்தார்’ என்பதாகும். இது இதற்கு (97) முந்தைய அதிகாரமான ‘குடிமை’ (96) என்னும் அதிகாரப் பொருண்மை நோக்கி அமைந்ததாகும். எப்படி? குடிப்பிறந்தார்க்குப் பணிவு இயல்பு. ‘தன்னிலையில் தாழாமை’ (96) என்று குறிப்பாகப் பொருள் விரிப்பார் பரிமேலழகர். எனவே செல்வம் வந்து உற்றக்காலை ஆணவம் கொள்வதும் செல்வம் குறைந்து வறுமை வந்தக்கால் குலைந்து நடுங்குவதும் அவர் அறியாதவை. வறுமையாகிய சுருக்கம் வந்துற்ற காலை அவர் நிமிர்ந்து நிற்பது முந்தைய பணிவு நிலையையே குறிக்கும். இந்தப் பணிவு செல்வம் வந்து குவியும் போது உயராது. அதனால் செல்வம் குறைகிறபோது தாழாது. அதாவது முந்தைய பணிவிலிருந்து குறையாது. அதனால்தான்,

    ‘பணியாமை – தாழ்வு வராமல் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல்’

    என்று உரையெழுதுகிறார். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று கருதிய பரிமேலழகர்,

    “செல்வக்காலை அது உயர்ச்சி செய்யத் தாம் தாழ்தலும் அல்லற்காலை அது தாழ்வு செய்ய தாம் உயர்தலும் வேண்டும் என்பதாம்”

    என்றும் விளக்கவுரை எழுதுகிறார். செல்வம் தன்னை உயர்த்துங்கால் உயராமல் தாழ்ந்து நிற்றலும் செல்வம் இல்லாத போது அச்செல்வம் தன்னைத் தாழ்த்த தான் உயர்ந்து நிற்றலும் குடிப்பிறந்தார்க்கு இயல்பாம் என்பது இவ்விளக்கவுரையால் பெறப்படும். பணிவும் உயர்வும் செல்வத்தை நோக்கியது என்பது அறிக.

    இவ்வுரையில் ‘உயர்வு’ என்பது குறட்பாச் சொல். அதற்குப் பணியாமை என்பது பரிமேலழகர் கண்ட சொற்பொருள். “அது (செல்வம்) தாழ்வு செய்ய தாம் உயர்தலும் வேண்டும்” என்பது அச்சொற்பொருளுக்கான விளக்கம்.

    உயர்வு ‘பணியாமை’ என்றால் பணிவு ‘உயராமை’ என்பது பெறப்படும். ‘மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு’ என்பதும் ‘மெய்த்திருப் பதம் மேவு என்ற போதினும் ‘இத்திரு துறந்து ஏகு’ என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்திருக்கும் முகம்’ (5088) என்னும் கம்பராமாயணமும் இந்த வெளிப்பாட்டை ஒத்திருப்பதை உணரலாம். இது எந்த நிலை வந்தாலும் இருந்தநிலை மாறாதிருத்தல். இவ்வாறு உரைகாணாது ‘உயர்வு’ என்பதற்கு இயல்பான பொருளைக் கொண்டால் குடிப்பிறந்தார் இயல்பாகக் கொண்டிருந்த பணிவு சலனத்திற்கு ஆளாகிவிடும் என்பது அறிக.

    நிறைவுரை

    வள்ளுவர் சொல்லுக்குப் பரிமேலழகர் காணும் பொருளும் அதற்கான விளக்கமும் ஒரே அலைவரிசையில் நிற்பதைக் காணலாம். திருக்குறளில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த உரைநெறியை அவர் பின்பற்றியிருக்கிறார். அவர் சொல்லுக்கு இவர் தரும் பொருள் அகராதியில் கிட்டாது. முன்னது மொழிசார்ந்தது. பின்னது படைப்பவன் உள்ளம் அறியும் முயற்சி சார்ந்தது. ஏனைய உரையாசிரியர்களாலும், இல்லாத காரணங்களைச் சுட்டியோ மிகச் சிறுபான்மை மாற்றுக்கருத்துக்களுக்காகவோ அவர் கருத்தினை மிகக் கடுமையாக மறுப்பவர்களாலும் எண்ணிப் பார்க்க இயலாத இத்தகைய புலமைப் பேராற்றல் அவருக்கு இயல்பு.

    (தொடரும்…)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 31

    கதை வடிவில் பழமொழி நானூறு – 31

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 63

    மறந்தானும் தாமுடைய தாம்போற்றின் அல்லால்
    சிறந்தார் தமரென்று தோற்றார்கை வையார்
    கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப!
    ‘இறந்தது பேர்தறிவார் இல்’.

    பழமொழி – ‘இறந்தது பேர்த்தறிவார் இல்’

    என்னிக்குமில்லாத படபடப்பு இன்னிக்கு. நிலவன் அந்த அறையின் குறுக்கும் நெடுக்குமா எதையோ யோசிச்சுக்கிட்டே நடந்துக்கிட்டு இருக்கார். அந்த அறை குளிரூட்டப்பட்டு இருந்தாலும் அவருக்கு வேர்க்குது. அவர் மனைவி வேலைக்காரிக்கு கட்டளையிடறாங்க.

    மேகலா… ஐயாவுக்கு சட்னு ஒரு ஜூஸ் எடுத்துட்டு வாம்மா.

    சொல்லிவிட்டு அந்த அறையில் போடப்பட்டிருக்கிற பெரிய சைஸ் குஷன் நாற்காலியில சாய்ந்து உட்கார்ந்து தன் ஆரணி பட்டுப் புடவைத் தலைப்பால முகத்தைத் துடைச்சிக்கிறாங்க. ஆரஞ்சு நிற புடவையிலிருக்கிற நீலநிற வண்ணத்துப்பூச்சிகள் அதிலேருந்து விடுதலையாகி அந்த அறை முழுக்க பறக்கற மாதிரி இருக்கு. அந்த வண்ணத்துப் பூச்சிகளப் பாத்தவொடனே நிலவனுக்கு மனதில் சந்தோசம். இருக்காதா பின்ன அவர் கவிஞர் இல்லயா. கவிதை எழுதி தான் சம்பாதிச்ச இருபது பவுன் நகைகளில் பிரச்சினைன்னுதானே இப்ப இவ்வளவு துக்கம் அவருக்கு.

    யோவ்…. நிறுத்துய்யா. வண்ணத்துப்பூச்சி புடவைத் தலைப்புலேந்து வெளிய வந்து பறக்குதுங்கறதே ஜாஸ்தி. அதுல ஒரு கவிஞர் கவிதை எழுதியே இவ்வளவு சம்பாதிச்சிட்டாருன்னு காட்டினா சீரியல யாரும் பாக்க மாட்டாங்க. நமக்கு நஷ்டம்தான்.

    யாருய்யா இந்த எழுத்தாளர இங்க கூட்டிக்கிட்டு வந்தது. இவர் ஏதோ குழந்தைகளுக்குக் கதை எழுதரவர் போல. நம்ம சீரியலோட ரேஞ்சுக்கு ஒருத்தரக் கூட்டிக்கிட்டு வாங்கன்னா ….. என்னய்யா நீங்கயெல்லாம். பேசாம நானே உக்காந்து எழுதித் தொலைச்சிரலாம் போல. இப்ப நேரம் வேற இல்ல.

    சரி. உன் கற்பனையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு நேரடியா கதையச் சொல்லு. அதுல ஏதாவது மாற்றம் செய்யணும்னா நான் சொல்றேன். டேரக்சன்லேந்து மேக்கப் வரை எல்லாம் பண்ணியாச்சு. என்ன…. எனக்குக் கற்பனை கொஞ்சம் கம்மினு நினைச்சு கதை எழுத முயற்சிக்கல. இனிமே அதையும் செஞ்சிட வேண்டியதுதான்.

    அந்த சிடுமூஞ்சி சீரியல் டேரக்டர் வசவுகளை நிறுத்தியவுடன் நான் சொல்ல ஆரம்பித்தேன். அந்த நிலவனுக்கு அன்னிக்கு வங்கியிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதுல அவர் அடகு வைத்த இருபது பவுன் நகைகளும் போலினு நிரூபிக்கப்பட்டதால இருபத்துநான்கு மணிநேரத்துக்குள்ள வங்கியிலேந்து வாங்கின பணத்தைத் திருப்பிக்கட்டணும்னு சொன்னாங்க. இல்லையினா சட்டப்படி நடவடிக்கை எடுப்பாங்களாம். இதைச் சொன்னது.வங்கி மேலாளரான அவரதுநெடுநாள் நண்பர்தான். அவராலதான் பணம் விரைவா கிடைச்சது. வாங்கின பணத்தை மகனோட பொறியியல் படிப்புக்காக கல்லூரியில கட்டியாச்சு. மிச்சப் பணத்த பெரியப்பா மகனுக்கு அனுப்பி ஒரு துண்டு நிலமும் வாங்கச் சொல்லியாச்சு. இப்ப போயி இப்படின்னா மானப் பிரச்சினையில்லயா.

    மனைவியோட நகை முழுக்க பெண் கல்யாணத்துக்கு செலவழிஞ்சுபோச்சு.

    நிலவனோட மனைவி அந்த நகை வாங்கிய கடையோட சீட்டத் தேடிக்கிட்டு இருக்காங்க. அவங்க போலி நகை வித்தாங்களானு கண்டுபிடிக்க. இது இப்படியிருக்க அவரோட பெரியப்பா மகன்னு ஒரு கேரக்டர் சொன்னேனே அவர் மனசுக்குள்ள சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்கார்.

    நிலவன் அண்ணன் பட்டணத்துல நல்லா சம்பாதிக்குது போல. நம்மகிட்ட குடுத்துவச்சிருந்த இருபது பவுன ஆட்டையப்போட்டு மக கல்யாணத்த சிறப்பா நடத்தியாச்சு. இருந்தாலும் எம் பொஞ்சாதி கெட்டிக்காரி. அண்ணன சமாளிச்சுக்கிடலாம்னு  அதுகணக்காவே கவரிங் நகை வாங்கி குடுத்து உட்டுட்டா.  அண்ணன் பேங்குல வைக்கப்போறேம்னு சொன்னப்போ கொஞ்சம் திக்குனு இருந்திச்சு. பெறகு அதைவச்சு வாங்கின பணத்தையும் எங்கிட்டல்லா அனுப்பி நிலம் வாங்கச்சொல்லுது. இனி ஒரு பிரச்சினையில்ல…. மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டே வரப்ப்புல நடந்துக்கிட்டு இருக்கார்.

    என்னய்யா இது. உன் கதையில எல்லாரும் நடந்துக்கிட்டே இருக்காங்க. தனக்குத்தானே பேசிக்கிறாங்க. இதுல ஒரு வசீகரமும் இல்லயே… சரி உன்னயத் திட்டி எனக்கு என்ன லாபம். நாளைக்கு வா பாக்கலாம்… என்னை அனுப்பி விட்டார் சிடுமூஞ்சி டேரக்டர். ஏதோ கதை சொல்லி கொஞ்சம்பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்ச எனக்கு ஏமாற்றம்தான். மொதல்ல வீட்டுக்குப்போய் உக்காந்து அம்மா கூட எல்லா சீரியலயும் பாக்கணும்.அப்பதான் இவர் என்ன எதிர்பார்க்கறார்னு தெரியும். நான் என்னமோ கருத்து சொல்லலாம்னு இந்தக் கதையச் சொன்னேன். முழுசா சொல்ல உட்டாதானே. ‘இறந்தது பேர்த்தறிவார் இல்’ங்கற பழமொழியச் சொல்லி தம்முடைய உடைமைகளைத் தாமே காத்துப் பேண வேண்டுமேயல்லாமல், நம்பிக்கையற்ற பிறர் பேணுவார் என விடுதல், அதனை இழத்தற்கே காரணமாகும் அப்டிங்கற அதன் பொருளக் கடைசியில சொல்லணும்னு இருந்தேன்.

    நல்லவேளை சொல்லல. சொல்லியிருந்தா நான் என்ன பொழுதுபோக்குக்காக சீரியல் எடுக்கறேனா அல்லது பாடம் நடத்தறேனான்னு அதுக்கும் கத்தியிருப்பார். நல்லதுக்குக் காலம் இல்ல.

    பாடல் 64

    இரப்பவர்க்(கு) ஈயக் குறைபடும் என்றெண்ணிக்
    கரப்பவர் கண்டறியார் கொல்லோ – பரப்பிற்
    துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
    ‘இறைத்தோறும் ஊறும் கிணறு’.

    பழமொழி – ‘இறைத்தொறும் ஊறும் கிணறு’

    ஏ…..ஐயா…. கதவ ஒருக்களிச்சு வச்சுக்கிட்டு சாப்பிடக்கூடாதா. மட்ட மல்லாக்க திறந்து வச்சா யாரும் உள்ள வந்துற மாட்டாகளா… அப்பத்தா தன் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போகிறாள். இன்னிக்கு எங்க வீட்ல ஸ்பெஷல் சமயல். அவியல், சாம்பார், வாழைக்கா பொடிமாஸ், வாழைப்பூ வடை, அப்பளம்….. இப்படி. எங்க அப்பத்தா சமைச்சது. நானும் என் மனைவியும் எல்லாத்தையும் மேசைமேல பரப்பி வச்சிக்கிட்டு நிதானமா ஒரு கட்டு கட்டிக்கிட்டு இருக்கோம்

    பாம்பேக்கு தனிக்குடித்தனம் வந்ததிலேந்து நம்ம ஊரு சமயல இப்படி சாப்பிடவே முடியல. வந்த முதல் நாளே வெள்ளக் காடா இருந்த பாம்பேயில தான் கால் வைச்சோம். கொரோனா ஊரடங்கால வொர்க் ப்ரம் ஹோம்னு சொல்லிட்டதால வெளியில போக வேண்டிய அவசியமே ஏற்படல. சாமான்களையும் வீட்டுக்கே வர வச்சிடறோம். திரும்பத் திரும்ப சமைச்சு சாப்பிட்டுட்டு வீட்டுக்குள்ளயே இருக்கறதால இங்க உள்ள பழக்கப்படி சப்பாத்திக்கு அதிகமா மாறிட்டோம். இரண்டு நாள் முன்ன அப்பாவும், அப்பத்தாவும் வந்ததிலேருந்துதான் தோசை,இட்லி எல்லாம் பாக்க முடியுது. சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போதே எதிர் ப்ளாக் அன்மோல் வருகிறார். அவர் கூட அவரோட பத்து வயசுபொண்ணும் நுழையறாங்க.

    என்ன பையா சௌத் இந்தியன் சாப்பாடு மணக்குது. பாட்டியோட கைப்பக்குவமானு கேட்டுக்கிட்டே டைனிங் டேபிள் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கிட்டு உட்காரறார். அங்க இருந்த தட்டை எடுத்துவச்சி என் மனைவி அவரை உபசரிக்கிறாள். பாப்பா இப்பதான் சாப்பிட்டான்னு சொல்லிட்டு தான் பாட்டுக்கு ரசிச்சுச் சாப்பிட ஆரம்பிச்சுட்டார். நாங்க இங்க குடி வந்ததிலேருந்து அவர் அப்படி வித்தியாசம் பாக்காம சொந்தக்காரன் மாதிரிதான் பழகிக்கிட்டு இருக்கார். ஆனா அப்பாக்கும் பாட்டிக்கும் இது புடிக்கலனு நல்லாவே தெரியுது.

    அப்பத்தா திரும்பவும் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்குதான் கதவ மூடி சாப்பிடுனு சொன்னேன். சொன்னா அப்பத்தா… கஞ்சம்னு நினைச்சுக்கிடுவீங்க.. நாங்களும் நாலுபேருக்கு தினமும் சோறுபோட்டுதான் வாழ்ந்தோம். உங்க தாத்தா தெனைக்கும் வரையிலேயே யாரையாச்சும் கூட்டிக்கிட்டு தான் சாப்பிட உட்காருவார். விறகு அடுப்புல சமைக்கறதால பொசுக்குனு பொங்கிப்போட முடியாதுனு மதியம் நாலுபேருக்குள்ள சாப்பாட்ட சேத்து பொங்கறது வழக்கந்தான். ஆனா அவுக கூட்டிக்கிட்டு வாரவுகயெல்லாம் சோத்துக்கு வீங்கி அலையுதவங்கயில்ல. வெறுங்கைய வீசிக்கிட்டு வரமாட்டாக. ஒரு குலை வாழைப்பழம், மாங்கா, என்னமும் விளைஞ்சத கையில குடுத்துட்டுதான் அடுத்த வீட்ல கைநனைப்பாக. என்னம்போ எம் மனசுல பட்டதச் சொல்லிப்போட்டேன். இந்த ஆளு சாப்புட உக்காந்தாலே வந்துருதார். சோத்துல கொதி போட்டுட்டாருன்னா  பொறவு சங்கடந்தான். அதுக்குத்தான் சொல்லுதேன்.

    அன்மோல் அப்பத்தாவப் பார்த்து சொல்றது எதுவும் அவங்களுக்குப் புரியல. அவர் அவங்கள தன்னோட குழந்தைகள் காப்பகத்துக்கு வரச்சொல்லி அழைக்கிறார். அவங்களுக்காக புது கட்டிடம் கட்டியிருக்காராம். இப்ப இருக்கற கட்டிடத்துல அடிக்கடி வெள்ள நீர் நுழைஞ்சிருதாம். அதோட தொடக்க பூசைக்குதான் அப்பத்தாவ வரச்சொல்றார். அங்க இருக்கற இருபது பிள்ளைகளுக்கும் ஏதாவது ஸ்வீட் பண்ணிக்குடுக்க முடியுமான்னு கேக்கறார். லட்டு பண்ண மிடாயிவாலாவ வரச்சொன்னாராம். அப்பத்தா சரின்னாங்கன்னா அவன வரவேண்டாம்னு சொல்லிடுவேங்கறார்.

    அவர் சொன்னதை முழுசும் சொல்லாம என் மனைவி, அப்பத்தா…..  உங்களுக்கு லட்டு பண்ணத் தெரியுமா இவர் கேக்கறார்னு சொன்னவுடனே கோவிச்சுக்கிட்டு எழுந்து போயிட்டாங்க. படுத்துக்கிட்டு இருந்த அப்பாவ எழுப்பி கூட்டிக்கிட்டு வராங்க.

    உம்மவன் செய்யுத நாயத்த நீயே கேளு அய்யா. நான் பேசுதது எதுவும் புரிஞ்சுக்கிடாம புருசனும் பொஞ்சாதியும் அந்த ஆளுக்கே பரிஞ்சுக்கிட்டு வாராக. இனி நான் இருக்க மாட்டேன். ரயிலுக்கு புக் பண்ணிப்போடு. அப்பத்தா கத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். அப்பா எல்லாத்தையும் பொறுமையா உக்காந்து கேட்டுட்டு அப்பத்தாவுக்கு வயசாகிப்போச்சு. திடீர்னு லட்டு பண்ணச்சொன்னா டென்சன் ஆயிடும்னு சொல்லிட்டார்.

    அடுத்த நாள் எல்லாரும் கிளம்பி அன்மோல் நடத்தற காப்பகத்துக்கு வந்துட்டோம். உள்ள நுழையும்போதே ஒரு ஒல்லியான பையன் ஓடி வந்து ஆச்சினு அப்பத்தாள கட்டிப்பிடிச்சிக்கிட்டான். அவன் அழுதுக்கிட்டே எங்க ஆச்சியும் உங்கள மாதிரிதான் இருப்பாங்க. எங்கம்மாவும் அப்பாவும் விபத்துல இறந்த பிறகு ஆச்சிதான் என்னய இட்லி வித்து காப்பாத்திக்கிட்டு வந்தாங்க. பெறகு போனவருசம் பெய்த மழையில குளிர்தாங்க முடியாம ஆச்சி இறந்துட்டாங்க. பக்கத்துல கடை வச்சிருந்த அண்ணாச்சி என்னய இங்க கொண்டு வந்து சேத்து விட்டாங்கனு சொல்றான்.

    அப்பத்தாளுக்கு கண்ணுலேந்து கண்ணீர் தாரதாரையா கொட்டுது. என்னப்பெத்த ஐயா இவ்வளவு நல்ல மனசுக்காரன புரிஞ்சுக்கிடாம என்னமெல்லாம் பேசிப்போட்டேன். அப்பன் ஆத்தா இல்லாம ரோட்டுல நிக்குத புள்ளைங்கள கூட்டியாந்து தம் பிள்ளை கணக்கா பாத்துக்கிடுதவருக்கு ஒரு வாய் சோறுபோடாம வாய் ஓயாம வஞ்சிக்கிட்டு இருந்தேனே….. இந்தப் பிள்ளைங்களுக்கு நாளைக்கு நானே என் கையால சோறு ஆக்கி பரிமாறுவேன். அதை அன்மோலுக்கு விளக்கியவுடன்… பேசிக்கிட்டே நிக்கற அப்பத்தாள அன்மோல் கட்டிக்கொள்கிறார். நீ ஒண்ணுத்துக்கும் கவலப்படாத. ‘இறைத்தொறும் ஊறும் கிணறு’னு பழமொழியே இருக்கு. உனக்கு மேல மேல நிறைய காசுபணம் வந்து சேரும். அப்பத்தா வாழ்த்த அதன் பொருளை அறிய என் முகத்தைப் பார்க்கிறார் அன்மோல்.

    அது ஒண்ணுமில்ல. கொடுக்க கொடுக்க செல்வம் பெருகும்னு சொல்றாங்கனு நான் அவருக்கு விளக்கறேன்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 44

    பழகத் தெரிய வேணும் – 44

    நிர்மலா ராகவன்

    நம்மையே வருத்திக்கொள்ளலமா?

    எல்லா வயதிலும் மன அழுத்தம் உண்டாகிறது.

    `தவறு செய்தால் தாய் திட்டுவார்களோ!’ என்ற பயம் சிறுவர்களுக்கு.

    `தாய்’ என்ற வார்த்தைக்குப்பதில் அலுவலக மேலதிகாரி, வீட்டில் கணவன் அல்லது மனைவி என்று போட்டுப் பார்த்தால், அனேகருக்கும் பொருந்தும்.

    எல்லாத் தருணங்களிலும், பிறரை மகிழ்விக்க விரும்புவோருக்கு, `மாட்டேன்,’ `வேண்டாம்,’ என்றெல்லாம் கூறத் தெரியாது. இதனால், தம்மையே வருத்திக்கொள்கிறார்கள்.

    கதை

    திருமணமான முதல் வருடம் ஒரு பெண் அழுதுகொண்டே இருந்தாள். பொறுக்க முடியாது, அவளைத் தாய்வீட்டுக்கே அனுப்பினார் கணவர்.

    எந்நேரமும் அழுதுகொண்டிருந்தவளுக்கு என்ன குறை என்று புரியாத தந்தை உளவியல் சிகிச்சைக்கு அழைத்துப்போனார். அங்கு, தன்னால் தன் பழைய காதலனை மறக்க முடியவில்லை என்று மேலும் அழுதாள்.

    `காதலனைத்தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன்,’ என்ற உறுதி அவளுக்கு இருக்கவில்லை. அப்போது நிதானமாக யோசித்து, தனக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்காதது அவளுடைய குற்றம்.

    கணவன்மேல் குற்றம் கண்டுபிடித்து, `காதலனை மணந்திருந்தால் இப்படியெல்லாம் ஆகியிருக்காதே!’ என்று சிலர் வருந்துவார்கள். அவனுக்கு மட்டும் குறைகளே இருந்திருக்காதா? காதலனாக இருக்கும்போது வெளிவராத பல குணாதிசயங்கள் கணவனானபிறகுதான் தெரியவரும்.

    சில சமயம், விரும்பி ஏற்ற உறவுகள் முறியலாம். ஆனால், ஆரம்பத்தில் மன ஒற்றுமை இருந்ததால்தானே இணைந்திருப்பார்கள்?

    கனடா நாட்டில் நான் சந்தித்த ஒரு பெண் தான் காதலித்து மணந்த கணவன் தன் அனுமதி இல்லாமல் தன்னுடன் உடலுறவு கொண்டான், அது வன்முறை என்று வழக்கு தொடுத்து, விவாகரத்து பெற்றிருந்தாள்.

    “ஆனால், எங்களுக்குள் சில இனிமையான தருணங்களும் இருந்தன,” என்று அந்த இளம்பெண் கூறியபோது, அந்த நேர்மை எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது.

    கீதோபதேசம்

    ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் அது நடந்தே ஆகும். `நடந்திருக்கக் கூடாதா!’ என்று காலங்கடந்து ஏங்கி என்ன பயன்?

    கதை

    நான் இயற்றிய பாடல்களை உடனுக்குடன் எழுதி வைத்துக்கொள்வேன். அலமாரியில் வைத்திருந்த நாலைந்து நோட்டுப் புத்தகங்களில் சிறு புழுக்கள் இருந்ததைப் பார்த்து அவைகளை வெயிலில் காயவைத்தேன். (புழுக்களை அல்ல).

    செய்த காரியத்தை மறந்துவிட்டு, வெளியில் போய் திரும்பியபோது, மழையில் புத்தகங்கள் நனைந்து, நுனியிலிருந்த எழுத்துக்கள் உருமாறி இருந்தன.

    `நடந்ததை இனி மாற்றவா முடியும்? என்று தோன்ற, நான் புத்தகங்களைக் காயவைத்ததோடு நிம்மதி அடைய வேண்டியதாயிற்று.

    `அதைப்பற்றி நினைக்காதே!’ என்று என்னை நானே கடிந்துகொண்டு, அதன்படி நடந்துகொண்டேன்.

    விடாமுயற்சி இங்கு உதவாது

    எதையாவது தொலைத்துவிட்டு, வெகு நேரம் தேடினாலும் அது கிடைக்காது. தேடும்போது மன உளைச்சலுக்கு ஆளாவதுதான் மிச்சம். பிறகு, நாம் எதிர்பாராத விதத்தில் எங்கிருந்தாவது கிடைத்துவிடும். இது புரியாது, தொலைந்ததை விடாது தேடி, மன உளைச்சலுக்குத் தம்மை ஆளாக்கிக்கொள்கிறவர்கள் பலர்.

    ஒரு கதையையோ, பாடலையோ எழுத ஆரம்பித்தபின், பாதியில் எப்படித் தொடர்வது என்று எனக்குப் புரியாதுபோகும். அதை அப்படியே விட்டுவிட்டு, வேறு காரியங்களில் கவனம் செலுத்துவேன். ஓரிரு மாதங்கள் கழிந்தபின், அது முற்றுப்பெற்றதும் உண்டு. இதனால், `பாதியில் நின்றுவிட்டதே! அப்புறம் என்னவென்று தெரியவில்லையே!’ என்று மனதைக் குழப்பிக்கொள்வது கிடையாது.

    நம் வாழ்வில் தினமுமே நம்மை ஆத்திரப்படவைக்கும், ஏமாறவைக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை அதிகம் பாராட்டாமல் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும்.

    வம்படித்துப் பொழுது போக்குகிறவர்

    நம்மை ஆத்திரப்படவைக்கிறாரா ஒருவர்?

    `அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று பெரியமனதுடன் விடவேண்டியதுதான்.

    பெண்கள் தமக்குப் பிடித்ததைப்பற்றியே பேசுவார்கள் என்று கூறுவதுண்டு. பிடிக்கிறதோ, இல்லையோ, கடந்த காலத்திலேயே நிலைத்திருப்பார்கள் சிலர். தம்மை நோகடித்ததைப்பற்றி, பலமுறை, பிற பெண்களிடம் கூறிக்கொள்வார்கள். அப்போது கிடைக்கும் அனுதாபம் அவர்களுக்கு அன்பாகத் தோன்றிவிடும்.

    அதேபோல், பிறர் வாழ்வில் நடந்த அசம்பாவிதங்களைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். அப்போதுதானே, `நல்லவேளை, நமக்கு இப்படி நிகழவில்லையே!’ என்று திருப்தி அடையமுடியும்?

    “உன் மகனைப்பற்றிச் சொல்!” என்றாள் என்னுடன் எப்போதோ வேலைபார்த்த ஒருத்தி, சற்று அதிகாரமாக. அவன் மறைந்ததைப்பற்றி அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளைப் பொறுத்தவரை, பொழுதைப் போக்க அது ஒரு வழி. அவ்வளவுதான்.

    அது புரிந்து, “ஸாரி. நான் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை,” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு, அப்பால் நகர்ந்தேன், தான் அலட்சியமாக நடத்தப்பட்டுவிட்டோமே என்ற அதிர்ச்சியை அவளுக்கு அளித்துவிட்டு.

    நம்மைப் பாதித்ததைப்பற்றி ஓயாது பேசினாலோ, வருந்தினாலோ அதன் பாதிப்பு குறைந்துவிடப்போவதில்லை. ஒவ்வொரு முறையும் மேலெழுந்து, நம்மை வாட்டும். மாற்ற முடியாததை ஏற்பதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்?

    நம் துயரத்தைப் புரிந்துகொள்கிற ஓரிருவரிடம் மட்டும் கூறுவதுதான் விவேகம். ஆறுதல் கிடைக்கும்.

    ஏமாற்றத்தின் விளைவுகள் பலவிதம்

    சிறுவயதில் நாம் எதையாவது அடைய விரும்பி, அது கிடைக்காமல் போனால் ஏமாற்றம் விளையும். வளர்ந்தபின்னும் அதே மனநிலை இருந்தால் திண்டாட்டம்தான்.

    மன நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் நீண்டகாலம் தங்கியிருந்த ஓர் இளைஞனைப் பார்த்தேன்.

    தெரிந்த கதைதான். ஒரு பெண் அவனைக் காதலிப்பதாகச் சொல்லி நம்ப வைத்துவிட்டு, பிறகு ஏமாற்றிவிட்டாள்.

    நன்றாகப் படித்துக்கொண்டிருந்தவனுக்கு அதற்குப்பின் எல்லாவற்றிலும் ஆர்வம் போயிற்று.

    இதேபோன்று, ஒரு பெண் ஏமாற்றப்பட்டபோது, அவளுடைய நெருங்கிய தோழிகள் இருவர், `இது உன் தவறல்ல. உன் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை,’ என்று ஆதரவாக இருந்தனர்.

    பிறகு, வேறு ஒருவரைக் கல்யாணம் செய்துகொண்டாள். எப்போதாவது மனம் உறுத்தும். ஆனால், தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு, அதைச் சமாதானப்படுத்திக்கொள்ள அவளுக்குத் தெரிந்திருந்தது.

    பல வருடங்கள் கழிந்ததும், `அந்த கயவன் செய்த காரியத்துக்காகவா அவ்வளவு வருத்தப்பட்டேன்!’ என்று தோன்றிப்போயிற்று.

    எதிர்மறையான உணர்வுகள் நம்மைத் தாக்கும்போது ஆக்கபூர்வமான, கடினமான எதையாவது செய்தால் மனநிலையில் மாற்றம் உண்டாகும். தோட்டவேலை, விளையாட்டு, நாட்டியம் – இப்படி அவரவர்களுக்குப் பிடித்தது ஏதாவது இருக்காதா?

    பொறுக்க முடியாததைப் பொறுத்தபின்

    வெளிநாட்டுக்கு உத்தியோக நிமித்தம் செல்பவர்களுக்கு, `வாழ்க்கை இத்தனை கடினமானதா!’ என்ற அயர்ச்சி உண்டாகும். புதிய இடம், வசதியின்மை, கலாசார மாறுபாடு, உறவினரைப் பிரிந்து, தனிமையில் வாடவேண்டிய கொடுமை என்று எவ்வளவு இல்லை!

    எப்படியோ சகித்துக்கொண்டு காலத்தை ஓட்டியபின், `நாம் எத்தனை இடர்களைத் தாங்கி, அவைகளைக் கடந்து வந்திருக்கிறோம்!’ என்ற மலைப்புடன், பெருமையும் எழும். பிறருக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு உயர்ந்திருப்பார்கள்.

    உனக்காகவும் நேரம் ஒதுக்கு

    நான் உத்தியோகம் பார்த்த காலத்தில், திங்கட்கிழமையிலிருந்து, சில சமயம், சனிக்கிழமைகூட வேலை செய்ய வேண்டியிருக்கும். எனக்கென்று ஞாயிற்றுக்கிழமையை ஒதுக்கி இருப்பேன் — கூடியவரை, அன்று பகலில் வெளியில் போவதைத் தவிர்த்துவிட்டு.

    இது சுயநலமா? எனக்கு முக்கியமான, பிடித்த காரியங்களில் நேரத்தைச் செலவிட முடிகிறதே!

    பிறருக்குப் பயந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்துவிட்டு, மகிழ்ச்சியின்றி எதற்கு வாழ்வது?

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 107 (திருவார்)

    சேக்கிழார் பாடல் நயம் – 107 (திருவார்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    திருவார் பெருமை திகழ்கின்ற “தேவா சிரிய னிடைப்பொலிந்து    
    மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது  வந்தணையா
    தொருவாறொதுங்கும்வன்றொண்டன்புறகென்றுரைப்பச்சிவனருளாற்
    பெருகா நின்ற பெரும்பேறு பெற்றார்; மற்றும் பெறநின்றார்.

    பொருள்

    அருட்டிரு நிறைந்த பெருமை  எந்நாளும் விளங்குகின்ற தேவாசிரிய மண்டபத்திற் பொலிந்து பொருந்தி வீற்றிருக்கின்ற சிவனடி யார்களைத் தொழுது, அவர்கள்பால் வந்து அணையாமல் ஒரு புறமாக ஒதுங்கிச் செல்லும் வன்றொண்டன், ‘புறகு’ என்று உரைப்பதற்குச் சிவபெருமானருளிற் பெருகுகின்ற பெரிய பேறு பெற்றார் இந்நாயனார்.அதுவேயுமன்றிமேலும் பெறுதற்கமைந்து நின்றாரானார்

    விளக்கம்

    ‘’திருவார் பெருமை திகழ்கின்ற தேவாசிரியன்’’ என்ற  தொடரில்,   திரு -அருட்டிரு. ஆர் பெருமை – அடைந்தாரை உய்விக்கவல்ல திருநீறு, கண்டிகை,பஞ்சாக்கரம் முதலிய சாதனங்களும் இவை பூண்டொழுகும் சீர் அடியார்களும் எப்போதும் இடையறாது விளங்குதல் குறித்தது.

    இவை பற்றி முன்னர்த் திருக் கூட்டச் சிறப்பிலே சிறப்புறச் சில திருப்பாட்டுக்களில் உரைத்துள்ளார்.

    மாவா ழகலத்து மால் என்றதனால் இங்குத் திரு என்றதும் இலக்குமியைக் குறித்தது என்று உரைப்பாரும்  உண்டு.

    பொலிந்து – சிவசாதனங்களாலே பொலிவு பெற்று. “புரந்த அஞ்செழுத்து  ஓசை பொலிதலால்“ (438)என்றதும் காண்க. இச்-சிவசாதனங்கள் ஆன்மாக்களைத் தம்வசமாக்கிக் கொள்ள இறைவனால் அருளப்பெற்றவை களவு செய்வானொருவன் மிகு செல்வமுடையோனை மந்திரத்தாலும், மருந்தாலும், தந்திரத்தாலும் பேதித்துத் தன்வசமாக்கி அவன் பொருளை வௌவுதல்போல இறைவனும் திருநீறென்கிற மருந்தாலும், சீபஞ்சாக்கரம் என்கிற மந்திரத்தாலும், சொரூபமென்கிற தந்திரத்தாலும் ஆன்மாக்களைப் பேதித்துத் தன்வசமாக்கி அவரவர் வினைகளை அபகரிக்கின்றான்.

    “கள்ளரோ டில்ல முமையார் கலந்திடில்.
    வெள்ள- வெளியாமென்றுந்தீபற,
    வீடு மெளிதாமென் றுந்தீபற“ – திருவுந்தியார்-23.

    தொழுது வந்து அணையாது ஒருவாறு ஒதுங்கும் வன்றொண்டன் – நம்பியாரூரர் திருவாரூரில் தினமும்  பூங்கோயிலுக்குச் சென்று இறைஞ்சி வருகின்ற நியதிப்படி ஒருநாட்செல்வார், “இங்குத் தேவாசிரியனிற் கூடி எழுந்தருளி யிருக்கும் அடியார்களுக்கு என்னை அடியேனாகப் பண்ணுநாள் எந்நாளோ?“ என்று இறைவர் பாதங்களைச் சிந்தித்துக் கொண்டே செயல் மறந்து திருக்கோயிலினுட் சென்றார். இறைவரும் அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டித் திருவாயிலின் நேரே எழுந்தருளி வந்து, எதிர் காட்சி தந்து, ‘இவர்கள் பெருமைகளைத் தேற்றிப் பாடெ’ன்று பணித்து, அதற்குத் “தில்லை வாழந்தணர்தம் மடியார்க்கு மடியேன்“ என்று அடியும் எடுத்துக் கொடுத்தருளினர்.அதன்வழியேஎடுத்து நம்பிகள் இவ்வடியவர்க ளுக்கெல்லாம் தனித்தனி வேறடியேன் என்று, ‘திருத் தொண்டத்தொகை’ பாடித் தொழுது திருக்கூட்டத்தின் நடுவணைந்தார் என்ற வரலாறு தடுத்தாட் கொண்ட புராணத்தினுட் கூறப்பெற்றது. இவ்வரலாற்றின் சரித நிகழ்ச்சியிலே நம்பிகள் திருக் கோயிலினுட் சென்றபோது எழுந்தது, இப்பாட்டிற் கண்ட விறன்மிண்ட நாயனாரின் செற்றம் பற்றிய செய்தி.

    அங்கு ஒருபுறம் நம்பி ஆரூரர் இவ்வடியவர்களுக்கு ஆளாகப் பண்ணுநாள் எந்நாள் என்று இறைவனை வேண்டி நேரே கோயிலினுட் செல்கின்றார்; அதனை நோக்கி இங்குத் தேவாசிரியனில் இருந்த விறன்மிண்ட நாயனார் நம்பிகள் திருக்கூட்டம் தொழுது வந்து அணையாது ஒருவாறு ஒதுங்கி உட் செல்கின்றார் என்று சினந்து மொழிகின்றார். திருக்கூட்டத் தெதிர்முன் பரவும் அருள்பெற்றே பின் இறைவர் பாதந் தொழப்பெற்றார் விறன்மிண்டர்

    அந்நியதியே விதி எனக்கொண்ட அவர் அதன்வழி ஒழுகாது உட்சென்றது பற்றி நம்பிகள்பாற் சினந்தார். நம்பிகளும், அடியாரை வணங்கி அணையா விடினும், அடியாரைப் பணிய வேண்டியே இறைவனைத் தொழ உட்சென்றனர். எனவே, இருவர் கருத்தும் அடியார்பணி என்ற ஒரு வழியிலே படிந்திருந்தன என்க. ஆயின் கருத்தினைப் பின்பற்றிய புற வழிபாடு நிகழாமையின் “புறகு“ என்ற மொழியும் எழுந்தது. இருவருள்ளும் உயிர்க்குயிராய் உடன் இருந்த இறைவன் இருவர் கருத்தையும் முற்றுவித்துத் திருத்தொண்டின் திறத்தை உலகம் உய்ய உணர்த்தி யருளினார் என்பதனை ஈண்டுச் சிந்திக்க.

    அணையாது ஒருவாறு ஒதுங்கும் – அணைந்தோர் அடியவர்கள். அவரை அணைவது சீவன் முத்தர் நிலை என்பது சாத்திரம்.

    “அன்பரொடு மரீஇ“ – சிவஞானபோதம். அவ்வாறு அணையாது நேரே உட்சென்று ஒதுங்கும். அடியார் வழியே நேர்வழி; பிற வழிகள் ஒதுங்கிய தூர வழியாம் என்பது இந்நாயனார் கொள்கை. ஆதலின் அடியார் தம்மைத் தொழுது வந்தணையாது இறைவரை வணங்கச் செல்லுதலை ஒதுங்கும் என்று  ஒதுக்கினார் நாயனார்.

    புறகு – புறம்பாவான். பெருகாநின்ற பெரும் பேறு – பேறு – பாக்கியம். இப்பேறுபெரியது. இயல்பிற் பெரிதா யிருப்பதுடன் பின்னும் மேன்மேலும் பெருகி வளர்கின்றது என்க. பெருகுதலின் விரிவு மேல்வரும் இரண்டு பாட்டுக்களும் குறித்தன. அவை யன்றியும் திருத்தொண்டத் தொகையால் உலகம் என்றும் உய்ந்து நிகழ்கின்றதும் குறிப்பாம்.

    அவர்பாற் பேறு பெற்றார் – புறகு என்று நாயனார் சொல்லியதும் திருவருளாலே ஆகியதாம். “அகில காரணர் தாள்பணிவார்கள் தாம், அகில லோகமு மாளற்குரியர்“  என்றபடி அடியவர்களே முதல்வராவார் என்பது இந்நாயனார் கொள்கை.

    அதற்கிணங்க இறைவரும் உலகம் உய்யத் திருத்தொண்டத்தொகையினைத் தோற்றுவிப்பதும், நம்பிகளைத் திருக்கூட்டத்தினுட் கூட்டுவிப்பதும் ஆகிய இரண்டினையும் தாமே செய்வதினும் இந்நாயனாரைக் கொண்டு செய்விப்பது தக்கதென்று திருவுளம் பற்றி இவ்வாறு இவர் சொல்லுமாறு செய்தனர் என்க.

    மற்றும் பெற நின்றார் – மற்றும் – வன்றொண்டர் புறகென்றதேயன்றி அவருக்குப் பிரானாகிய சிவபிரானும்  புறகு என்பது. இதுவும் திருவருள் வழியே நிகழ்வதாகலின், மற்றும் – என எச்சவும்மை கொடுத்தோதினார். அதனோடு மேலும், “அல்லல் தீர்ந்துலகுய்ய மறையளித்த“ தமது திருவாக்கினாலே இறைவர் “தில்லைவாழந்தணர்த மடியார்க்கு மடியேன்“ என்று அடியார்க்கு அடிமைத்திறம் தாமே வகுத்தருளப் பெற்றதும், அவ்வருட்டுணை கொண்டு, அதுவே உண்ணின்று உணர்த்திப் பாடுவிக்க  நம்பிகள் திருத்தொண்டத்தொகை பாடித் தொழுது திருக்கூட்டத்தின் நடுவண் வந்து அணையப்பெற்றதும்  ஆகிய பேறுகளுமாம். பெற நின்றார் – இனிப் பெறுதற்குரியராய் நின்றார்.

    இப்பாடல்  அடியார் பெருமையை  ஆண்டவனே ஏற்று மகிழ்வார் என்பதைத்  தெளிவாக்குகிறது.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 19

    பரிமேலழகர் உரைத்திறன் – 19

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ஒருமுறை சொல்வதே உரைக்கழகு!

    முன்னுரை

    ‘அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்’ என்பார் நம்மாழ்வார். அதனைச் சற்று மாற்றி ‘இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன்’ என்று வைத்துக் கொண்டால் இந்தக் கட்டுரையின் சாரம் நன்கு விளங்கும். ‘சுருங்கச் சொல்லல்’ என்பது நூலுக்கு ஓதப்பட்ட பத்து அழகுகளில் ஒன்று. ‘கூறியது கூறல்’ என்பது நூலுக்கு இருக்கக் கூடாது என விலக்கப்பட்ட குற்றங்கள் பத்தினுள் ஒன்று. அழகையும் குற்றத்தையும் திசைகளைப்போலப் பத்தாக வைத்த பாங்கு எண்ணத்தக்கது. பரிமேலழகர் தம் உரையில் ஒருமுறை கூறியதை மறுமுறை கூறுவதில்லை. அவ்வாறு கூற வேண்டிய நிலை ஏற்படின் முன்பே கூறப்பட்டது என வாளாச் சுட்டிச் சென்றுவிடுகிறார். இதனால் நினைவாற்றல் உள்ளவர்க்கே என்பதும் அத்தகையோரே நூல்பயிலத் தகுதியானவர் என்பதும் அவற்கே அந்நூற்பயிற்சி பயன்படும் என்பதும் பெறப்படும். ஒவ்வொரு முறையும் முன்னர்க் கூறியதையே பின்னரும் எடுத்தோதுவது கற்பாருக்குச் சலிப்பை ஏற்படுத்துவதுடன் நூலுள் அல்லது உரையுள் இருக்கக் கூடாத குற்றங்களைத் தெரிந்தே செய்வது போலாகிவிடும் என்று அவர் கருதியிருக்கலாம். கூறியது கூறலாகிய குற்றம் தவிர்க்கும் பரிமேலழகரின் உரைத்திறனை முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை தொடர்கிறது.

    உழைப்பவர்க்கன்றி உரை புரியாது

    உத்திவகை முப்பத்திரண்டு எனப்படுவது போலப் புத்திவகையும் பல உள. மண்புத்தி, மரபுத்தி, கல்புத்தி, மூங்கில் புத்தி, எண்ணெய் புத்தி என்று ஐந்து வகையாகப் பகுப்பர். (வடநூலார் இதனை முறையே மிருத்து புத்தி, தாரு புத்தி, சிலா புத்தி, வேணுபுத்தி, தைலபுத்தி என்பர்). பிறவகை புத்திகளை விரிப்பின் பெருகும். தைலமாகிய எண்ணெய் நீர்ப்பரப்பில் ஒரு துளி வீழினும் அப்பரப்பு முழுவதையும் பரவ எத்தனிப்பதைப்போல ஒரு கருத்தினை ஒருமுறை செவிமடுப்பின் அது தொடர்பான அத்தனைப் பொருண்மைகளையும் உள்வாங்கும் ஆற்றலுடையாரைத் ‘தைலபுத்தி உடையவர்’ என்பது வழக்கு. பரிமேலழகர் உரை தைலபுத்தி உடையார்க்கே செய்யப்பட்டது என்பது அதனை ஒருமுறை நோக்குவார்க்கும் புலப்படும் உண்மையாகும்.

    ‘அழுக்காறு’ – பொருள் வரையறை

    அறத்துப்பால் பதினேழாவது அதிகாரத் தலைப்பு ‘அழுக்காறாமை’ என்பதாகும். திருவள்ளுவர் இருக்கக்கூடாத பண்புகளை எதிர்மறையில் சுட்டுவார். வெஃகாமை, புறங்கூறாமை, வெகுளாமை என்பன போல. இருக்க வேண்டிய பண்புகளை உடன்பாட்டில் வைத்துக் கூறுவார். ஒழுக்கமுடைமை, அறிவுடைமை, பண்புடைமை என்பன போல. ‘அழுக்காறு’ என்பது இருக்கக்கூடாத பண்பாதலின் அதனை எதிர்மறையில் வைத்து ‘அழுக்காறாமை’ என்று கூறுகிறார். அதிகாரத் தலைப்பிற்குப் பொருள் கூறும் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    ‘அழுக்காறு’ என்பது ஒரு சொல். அதற்குப் பொருள் மேலே உரைத்தாம். அச்சொல் பின் ‘அழுக்காற்றைச் செய்யாமை’ என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகர ஐகார விகுதியும் பெற்று ’அழுக்காறாமை’ என நின்றது.

    மேலே சொன்ன விளக்கத்தால் இரண்டு உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். ஒன்று, ‘அழுக்காறு’ என்பது ஒருசொல் என்பதும் ‘அழுக்கு + அறு’ என இதனை இரண்டு சொல்லாக நோக்கக் கூடாது என்பதுமாகியன சொல்லுக்கான புறநிலை விளக்கம். இரண்டு, அதற்கான பொருள் இதற்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது என்பதனால் கூறியது கூறலாக இங்குப் பதிவிடவில்லை என்னும் பொருள்நிலை விளக்கம்.

    “அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
    இழுக்கா இயன்ற தறம்” (35)

    என்பது அறத்துப்பால் முப்பத்தைந்தாவது குறட்பா. இந்தக் குறட்பாவில் பயின்றுள்ளள ‘அழுக்காறு’ என்ற சொல்லுக்குத்தான் பிறர் ஆக்கம் பொறாமை (பிறருடைய வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாமை – அடைப்பிற்குள் இருப்பன கட்டுரையாளர் கருத்து) என்று உரைப்பொருள் தந்திருக்கிறார். பிறர் ஆக்கம் பொறாமை என்னும் மூன்று சொற்களைக் கூட மீளவும் சுட்டுதல் உரைக்கட்டுமானத்தைப் பாதிக்கும் எனக் கருதுகிறார் பரிமேலழகர். கருதி ‘அதற்குப் பொருள் மேலே உரைத்தாம்’ என 125 குறட்பாக்களுக்கு முன்னால் தான் எழுதிய உரைப்பொருளை நோக்கிய பயணத்திற்கு முன்னோக்கப் பணிக்கிறார். பரிமேலழகரின் படிப்பும் பணியும் ஓலைச்சுவடிகளில் நிகழ்ந்திருக்கிறது என்பதைக் கருத்திற் கொண்டால் அவருடைய அளப்பரிய நினைவாற்றல் புலப்படக் கூடும்.

    ஏழாவது அதிகாரமும் எழுபிறப்பு உண்மையும்

    இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது பாசுரம். இந்த ஏழு பிறவியைத் திருவள்ளுவர் நட்போடு பொருத்திப் பார்த்திருக்கிறார். ‘செய்ந்நன்றி’ என்பதன் பொருள் செய்பவனுக்கு ஆகாது செய்யப்பட்டவனுக்கு ஆகிவரும். அதாவது உதவியைப் பெற்றுக் கொண்டவன் என்றைக்கும் அதனை மறக்காமல் இருப்பதே செய்ந்நன்றி. இதனை ‘உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து’ என்று பின்னும் ஓதுவார் திருவள்ளுவர். நல்லோர், ஒருவன் இப்பிறவியில் தனக்கு உதவி செய்தவனுடைய நட்பினை எழுபிறப்பிலும் எண்ணிப் பார்ப்பர்’ என்ற கருத்தினைச் சொல்லுகிற குறட்பா,

    “எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
    விழுமம் துடைத்தவர் நட்பு” (107)

    என்று அமைகிறது. இந்தக் குறட்பாவில் சொல்லப்பட்டிருக்கும் ‘எழுபிறப்பு’ என்பதற்குப் பரிமேலழகர் உரை விளக்கம் சொல்லாமல் அதற்கு முன்னதிகாரங்களில் உள்ள ஒரு குறட்பாவிற்குத் தான் சொல்லிச் சென்ற பொருள் நோக்கிக் கற்பாரை ஆற்றுப்படுத்துகிறார்.

    “எழுமை என்றது வினைப்பயன் தொடரும் எழுபிறப்பினை. அது வளையாபதியுட் கண்டது. ‘எழுவகைப் பிறப்பு மேலே (62) உரைத்தாம்”

    என அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்திற்குக் கற்பார் கவனத்தைக் கொண்டு செல்கிறார். பிறப்பு ஏழாவன,

    “ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
    நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் — சீரிய
    பந்தம் ஆம் தேவர் பதினாறு அயன்படைத்த
    அந்தமில்சீர்த் தாவரம் நாலைந்து”

    என்னும் வெண்பா அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்தில் காணப்படுகிறது. 107 ஆவது குறட்பா பொருள் விளக்கத்திற்காக அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்தைக் காட்டிச் செல்கிறார். அது மட்டுமன்று. இந்த வெண்பாவின் எழுபிறவி பற்றிய உள்ளடக்கம் வளையாபதி என்னும் காப்பியத்தில் அடங்கியுள்ளது என்பதையும் (107) குறளுரையில் சுட்டுகிறார்.

    அளவைகள் ‘ஆறும்’ பொருந்தும் ஆறும்

    மெய்யுணர்தல் அதிகாரத்தில் உள்ள குறட்பா ஒன்றிற்குப் பரிமேலழகர் விளக்கம் எழுதுகிறார். இது துறவறவியல் சார்ந்ததாதலின் சமயக் கொள்கைகள் சார்ந்த நுட்பமான பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வதிகாரத்தில் உள்ள ஒரு குறள்,

    “ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” (357)

    என்று அமைந்திருக்கிறது. உயிர்களின் நிலையாமை நோக்கி அவற்றின் மீது வைத்த பற்றினைத் துறந்த ஒருவன் பரம்பொருள் ஒன்றே அழியாதது என்பதை உணர்ந்தால் அவனுக்குப் பிறப்பு தொடராது” என்பது இக்குறட்பாவிற்கான எளிய இயல்பான பொருள். குறட்பாவிலுள்ள ‘உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின்’ என்னும் தொடருக்குப் பரிமேலழகர்,

    “அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும் தெளிய ஆராய்ந்து அதனால் முதற்பொருளை உணருமாயின் அவனுக்கு மாறிப் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டா”

    என்று பொழிப்புரை எழுதிச் சுருக்கமான விளக்கவுரையில்,

    “அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம்”

    என இன்னும் சுருங்கிய தொடரைக் கையாள்கிறார். இந்தக் குறட்பாவில் கண்ட ‘அளவைகள்’ என்பன தனக்குத் துணையாகும் அறங்களை அறிகின்ற அளவுகோல்கள். ‘இதனைச் செய்ய இயலும்’, ‘இதனைச் செய்ய இயலாது’ என்று வரையறுத்துக் கொள்வதற்குப் ‘பொருந்தும் ஆறு’ என்று பெயர். இவற்றையெல்லாம் இந்தக் குறட்பாவிற்கும் பொருத்தியுரைக்கும் பரிமேலழகர் விளக்கத்தை இன்னொரு முறை பதிவிடாமல் தான் ஏற்கனவே பதிவிட்ட குறட்பாவுக்குக் கற்பாரை வழி நடத்துகிறார்.

    “நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
    தேரினும் அஃதே துணை” (242)

    இந்தக் குறட்பாவுக்கு “அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும் நன்றான நெறியிலே நின்று நமக்குத் துணையாம் அறம் யாது என ஆராய்ந்து அருளுடையராக, ஒன்றையொன்று ஒவ்வாத சமயநெறிகள் எல்லாவற்றாலும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே பிறிதில்லை” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் மேற்கண்ட அளவைகள் பற்றியும் பொருந்தும் ஆறு பற்றியும் பின்வருமாறு விளக்கிக் காட்டுகிறார்.

    அளவைகளாவன,

    “பொறிகளால் காணும் காட்சியும் குறிகளால் உயத்துணரும் அனுமானமும் கருத்தா மொழியாகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும் இங்ஙனம் அன்றாயின் இது கூடாதென்று உணரும் அருத்தாபத்தியும் உண்மைக்கு மாறாய இன்மையும் என இவற்றைக் கூட்டி ஆறென்பாரும் உளர். இவையும் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து.

    பொருந்தும் ஆறாவன,

    “இது கூடும் இது கூடாது எனத் தன் கண்ணே தோன்றுவது“

    இவ்வளவு விளக்கங்களையும் திருக்குறளில் ‘அளவைகள் மற்றும் பொருந்தும் ஆறு’ என வருகிற இடங்களில் எல்லாம் ஒவ்வொரு முறையும் சொன்னால் என்ன ஆகும்? உரைச் செறிவு குறையும், கற்பார் உள்ளம் சலிப்படையும். எனவேதான் பரிமேலழகர் தானும் உரைக்குற்றத்தில் சிக்காமல் உரையின் செறிவும் குன்றாமல், கற்பாருக்குக் கைகாட்டியாய் விளங்க நிற்கிறார். கற்பார்தம்  நினைவாற்றலையும் அவ்வப்போது சோதித்துக் கொள்கிறார்.

    எஞ்சாமையும் நீங்காமையும் ஏழுக்கும் உண்டு

    ‘இறைமாட்சி’ என்னும் அதிகாரப் பொருண்மையாக அரசர்க்கு அங்கம், அவனது மாட்சி, மாட்சியும் பயனும் என மூன்றாகப் பகுத்துக் கொள்கிறார் பரிமேலழகர். இவற்றுள் அரசனது மாட்சியை நான்கு குறட்பாக்களில் அடக்கிக் காட்டும் பரிமேலழகர் அவற்றுள் இரண்டு பாட்டினை பொருண்மையால் ஓர் அலகாகக் கொள்வதைக் காணமுடிகிறது. அவ்விரண்டு பாடல்கள் வருமாறு,

    “அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” (382)

    “தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலன்ஆள் பவர்க்கு” (383)

    இவ்விரண்டு பாடல்களினாலும் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை என்னும் ஏழு பண்புகளும் மன்னனிடத்து இயல்பாகவே அமைந்திருத்தல் வேண்டும் என்பதை வள்ளுவர் பதிவு செய்கிறார்.  இப்பொருண்மையை,

    “அரசனுக்கு இயல்பாவது திண்மையும் கொடையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல்” (382)  “நிலத்தினை ஆளும் திருவுடையார்க்கு அக்காரியங்களில் (அரச காரியங்களில்) விரைவுடைமையும் அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடைமையும் ஆண்மையுடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா” (383)

    என்னும் பரிமேலழகரின் பொழிப்புரைகளால் அறியலாம். அரசனுக்கு இருக்கவேண்டிய இந்த ஏழு பண்புகளையும் தனித்தனிக் குறட்பாக்களில் பதிவு செய்தமைக்குக் குறள் யாப்பே காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது கட்டுரையாளர் அனுமானம். மேலும் ‘ஏழு’ என்னும் தொகைக்கான விரியைத் திருக்குறள் யாண்டும் கையாண்டிருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு பாடல்களிலும் சொல்லப்பட்ட பண்புகள் மன்னனிடத்து இடையறாது நிற்க வேண்டும் என்பதுதான் மூலப்பொருள்.

    ‘அஞ்சாமை’ முதலிய நான்கு பண்புகளும் எஞ்சாது இருத்தல் வேண்டும் என்னும் திருக்குறளில் ‘எஞ்சாமை’ என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் எழுதியிருக்கும் பரிமேலழகர் அடுத்த குறட்பாவில் ‘தூங்காமை’ முதலிய பண்புகளும் நீங்காது இருத்தல் வேண்டும் என்னும் திருக்குறளில் ‘நீங்கா’ என்பதற்கு விளக்கம் எழுதவில்லை. ஆனால்,

    “நீங்கா என்பதற்கு மேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க”

    என்று எழுதிவிடுகிறார். பல குறட்பாக்களை முன்நோக்கி உரையெழுதிய பரிமேலழகர் இங்கே முந்தைய குறட்பாவினை (382) நோக்கி இரண்டையும் ஓரலகாகக் கருதுமாறு உரையெழுதுகிறார். முதலில் முதற்குறட்பாவில்,

    “உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கில் அரசர்க்குக் கெடுவன பல ஆம் ஆகலின் இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார் ‘எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு” என்றார்.”

    என்று எழுதிய விளக்கத்தை அடுத்த குறட்பாவில் பயிலும் ‘நீங்கா’ என்பதற்கும் பொருத்திக் கொள்க என்று சுருக்கிக் கொள்கிறார். இதனால், இந்த ஏழு பண்புகளுக்கும்,

    “உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கில் அரசர்க்குக் கெடுவன பல ஆம் ஆகலின் இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும்” என்று (382) எழுதிய உரை பொருந்தும் என்பது பெறப்படும். பரிமேலழகர் உரையால்,

    1. உயிர்க் குணங்கள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும்
    2. சொல்லப்பட்ட ஏழு குணங்களும் ஒரே நேரத்தில் இடையறாது இருத்தல் வேண்டும்.
    3. அதனால்தான் ‘எஞ்சாமை’ என்ற சொல்லையும் ‘நீங்கா’ என்ற சொல்லையும் திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.

    இவ்வளவு பொருள் விளக்கங்களையும்,

    “நீங்கா என்பதற்கு மேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க”

    என்னும் ஆறு சொற்களில் பதித்துக் காட்டும் பரிமேலழகர் உரைத்திறனை எப்படிப் புகழ்வது?

    எப்படிக் கொடுப்பது?

    ‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்பது பழமொழி. இந்தப் பழமொழியின் சாரம் படைப்பிலக்கியத்தில் பதிவு செய்யப்படுகிறபோது அதன் மதிப்பும் பாதுகாப்பும் கூடிவிடுகிறது.

    “ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கும் நெறி” (477)

    என்னும் குறட்பா ‘வலியறிதல்’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது. அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகையாற்றலில் பெருமையின் பகுதியாக இருப்பது பொருள். பொருளைப் பிறர்க்கு ஈவது அறத்துப்பாலில் ஈகையெனும் அறமாகக் கருதப்படினும் பொருட்பாலில் அரசனுக்குரிய வலிமைகளுள் ஒன்றின் பகுதியாகக் கருதப்படுகிறது. அறத்துப்பாலில் ‘வறியார்க்கொன்றீவதே ஈகை’ என்பது பொருந்தும். பொருட்பாலில் அதற்கு நோக்கமும் வரையறையும் உண்டு. அதனைக் கூறுகிறது இந்தப் பாடல்.

    “ஈயும் நெறியானே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக்கொண்டு ஒழுகும் நெறியாம்!”

    என்னும் பரிமேலழகரின் பொழிப்புரையால் இந்தப் பாடல் அரசநீதி செலுத்தும் மன்னன் பொருளைப் பயன்படுத்தும் நெறி பற்றிக் கூறுவதாகக் கருதப்படும். ‘அளவறிந்து ஈக’ என்னும் தொடருக்கு ஈயும் நெறியான் என உரைகண்ட பரிமேலழகர் அந்த நெறியை இங்கே விளக்காது தான் முன்பே விளக்கிய இன்னொரு குறட்பாவின் விளக்கவுரையைச் சுட்டுகிறார்.

    “ஈயும் நெறி மேல் இறைமாட்சியுள் ‘வகுத்தலும் வல்லதரசு’ (385) என்புழி உரைத்தாம்”

    என்று எழுதுகிறார். அந்தப் பாட்டின் விளக்கவுரையில் “காத்த வகுத்தலாவது,

    1. கடவுளர் அந்தணர் வறியோர் என்ற இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும்
    2. யானை, குதிரை, படை, நாடு, அரண் என்ற இவற்றிற்கும் பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும் தன்னிற் பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட்பொருட்டாகவும்
    3. மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும் ஐம்புலன்களால் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலை இன்பப் பொருட்டாகவும் கொள்க

    என ஈதலின் நெறி பற்றி விளக்கும் பரிமேலழகர், பொருட்பாலில் ஈதலின் தன்மையை அறத்துப்பாலினின்றும் முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதை அறியலாம். ‘வறியார்க்கு’ என்னும் அறத்துப்பாலின் வரையறை இங்கே முற்றிலும் நீங்கி அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள் நோக்கத்தை முன்னெடுப்பதையே இந்தக் குறட்பாவில் பரிமேலழகர் விளக்குகிறார். இந்த விளக்கத்தைத்தான் ‘ஆற்றின் அளவறிந்து ஈக’ என்னும் தொடருக்கும் பொருத்திக் கொள்ளச் சொல்கிறார். ஒரு நூறு குறட்பாக்கள் கடந்து உரையெழுதினாலும் எந்தக் குறட்பாவில் எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருளை உரைத்தோம் என்பதைத் தம் நினைவுப் பேழையில் இருந்து எடுத்தளிக்கும் அழகரின் ஆற்றல் சொல்லுந்தரமன்று!

    உடன் நிகழ்ச்சியும் உண்டு

    ‘காலமறிதல்’ என்னும் அதிகாரத்தில் ஒரு பாட்டு. காலமும் இடமும் அறிந்து ஒரு செயலை நன்கு திட்டமிட்டுச் செயல்படுகிற ஒருவன்  இவ்வுலகத்தையே ஆள நினைத்தாலும் அது கைகூடும் என்னும் பொதுவான கருத்தைச் சொல்வது போல் அமைந்திருக்கிறது.

    “ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
    கருதி இடத்தாற் செயின்” (484)

    “ஒருவன் ஞாலம் முழுதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது ஒருவன் கையகத்ததாம் அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்”

    என்று இதற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் தொடர்ந்து எழுதிய விளக்கவுரையில்,

    ‘இடத்தான்’ என்பதற்கு மேல் ‘கருவியான்’ என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க’

    என்று எழுதிக் காட்டுகிறார்.

    இந்தப் பாடடில் உள்ள உரைநுட்பம்

    முந்தைய பாட்டில் ‘கருவியால்’ என மூன்றாம் வேற்றுமை ‘ஆன்’ உருபு பயின்று வந்திருக்கிறது. இந்த ‘ஆன்’ என்னும் உருபு கருவிப் பொருள் தருவதாக இருந்தாலும் இந்த இடத்தில் அது ‘ஒடு’ உருபின் உடனிகழ்ச்சிப் பொருளைத் தருவதாகக் கொள்கிறார். கொண்டு, ‘கருவிகளுடனே’ என்று உரையெழுதுகிறார்.

    “கருவிகளாவன – மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். ‘அவை உளவாய வழியும் காலம் வேண்டும்’ என்பது அறிவித்தற்குக் ‘கருவியான்’ என்றான்.”

    என்னும் அழகர் விளக்கம் கருவிகள் இன்னின்ன எனப் பட்டியலிடுகிறது. அறிவு, ஆண்மை, பெருமை என்பன மூவகை ஆற்றல். சாம, பேத, தான, தண்டம் என்பன நால்வகை உபாயம். காலத்தால் வினையாற்றினும் இந்தக் கருவிகளோடு வினையாற்ற வேண்டும் என்பது கருத்து. அதாவது இந்தக் ‘கருவிகளால்’ வினையாற்றாமல் ‘கருவிகளோடு’ வினையாற்ற வேண்டுமாம். இவ்வாறாகவே பின்னால் வரும் ‘இடத்தான்’ என்பதற்கும் பொருள் கொள்ள வேண்டும் என்பதைத்தான் ‘மேல் கருவியான் என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க’ எனச் சுருக்கம் காட்டுகிறார். இதனால் ‘இடத்தாற்செயின்’ என்பதற்கு ‘இடத்தினால் செய்’ என்னாது ‘இடத்தோடு’ என்பது பொருளாம்.

    ‘கருவியான் செய்’ என்பதற்குக் ‘கருவியோடு செய்’ என உரை கண்டதால் முன்னுள்ள வலியறிதல் என்னும் அதிகாரத்தோடும் ‘இடத்தான் செய்’ என்பதற்கு ‘இடத்தொடு செய்’ என உரைகண்டதால் பின்னுள்ள இடனறிதல் என்னும் அதிகாரத்தோடும் இயைத்து சிங்கநோக்காகக் ‘காலமறிதல்’ என்னும் இவ்வதிகார அமைப்பு முறை நுட்பம் உணர்த்தினார் என்க.

    நிறைவுரை

    ‘இதற்கான பொருள் அங்கே உரைக்கப்பட்டது’ என்பதை ‘உரைத்தாம்’ என்றும், ‘அங்கே உரைத்ததைப்போல இங்கேயும் பொருள் கொள்க’ என்பதை ‘உரைத்தாங்கு உரைக்க’ என்றும் தெளிவுபடுத்துகிறார் பரிமேலழகர். ஒருசில இடங்களில் மட்டும் முந்தைய அதிகாரத்தின் பெயர் சுட்டும் பரிமேலழகர் பெரும்பாலான இடங்களில் அதிகாரப் பெயரையும் சுட்டுவதில்லை. குறட்பா எண்ணையும் குறிப்பதில்லை. ‘உரைக்குற்றம் வந்துவிடக் கூடாது’ என்னும் பொறுப்புணர்வும், ‘கற்றுணர வல்லார்க்கே அரிய இலக்கிய உரைகள் கைவரபெறும்’ என்னும் கல்விக் கொள்கையும் ஒருங்கே கொண்ட உரையாசிரியர்களுள் பரிமேலழகர் தனித்து நிற்கிறார். ‘உழைத்தால் உயரலாம்’ என்பது பழமொழி! இலக்கியத்தைப் பொருத்தவரையில் ‘உழைக்காதவர்க்கு உரை புரியாது’ என்பது புதுமொழி!

    (தொடரும்…)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 30

    கதை வடிவில் பழமொழி நானூறு – 30

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 61

    கற்றதொன்(று) இன்றி விடினும் கருமத்தை
    அற்ற முடிப்போன் அறிவுடையான் – உற்றியம்பும்
    நீத்தநீர்ச் சேர்ப்ப! ‘இளையோனே ஆயினும்
    மூத்தோனே ஆடு மகன்’.

    பழமொழி –  ‘இளையோனே யாயினும் மூத்தானே ஆடு மகன்’

    கான்பால் பாபியின் பையன் ஷுப்கருக்கு இன்னிக்கு பாராட்டு விழா. நானே ஆட்டோ பிடிச்சு கிளம்பி வந்துட்டேன். உள்ளுக்குள்ள இருக்கற  நீ இன்னும் கிளம்பலையே. உனக்குத் தெரியாதா? கேட்டுக் கொண்டே வருகிறாள் என் தோழி வசுதா. நானூறு வீடுகள் கொண்ட எங்கள் சொசைட்டியில் முன்பு குடியிருந்தவள் அவள்.

    ஆமாம்.. நேற்றைக்கு துர்கா பூசையிலேயே எல்லாரும் இதைப்பற்றி அலசிட்டாங்க. உனக்குத்தான் தெரியுமே நம்ம சொசையிட்டியில ரெண்டு குரூப் இருக்குனு. அதில நம்ம கமலா ஆன்ட்டி குரூப் நேற்றைக்கு பயங்கரமா விமர்சனம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. என்னை அவசரப்படுத்தியவள் வம்பு கேட்க உள்ளே வந்து உட்கார்ந்து விட்டாள்.

    பூசை ஏற்பாடு அமக்களமா இருந்துச்சு. பத்துநாட்கள் நடக்கற பூசையில நேத்தைக்குத்தானே முதல் நாள். நம்ம சொசைட்டி பிரசிடெண்ட் ஏற்பாடாச்சே. என ஆரம்பித்து நான் அவளை அந்நிகழ்வுக்கே அழைத்துச் சென்றேன்.

    துர்கா மாதாவுக்கு இன்னிக்கு அணிவித்திருக்கிற உடை முதல் ஆபரணம் வரை எல்லாம் எங்க குடும்பச் செலவு. மாதா அருளால என் மனைவி போட்டிருக்கிறத விட அதிக விலையில அவளுக்கு வாங்கி அணிவிச்சிருக்கேன். பெருமையாக ஆரம்பித்தார். சொசைட்டி பிரசிடெண்ட் கௌரவ் தோபால்.

    இந்தத் தடவை துர்கா பூஜா பந்தலோட தீம் பசுமைங்கறதால பச்சைக்கலரிலேயே அலங்காரங்களப் பண்ணச் சொன்னேன்.  நம்ம சொசையிட்டி பொதுக்கூடமே உருமாறி இருக்கறத நீங்க கவனிச்சிருப்பீங்க. வெளியிலேந்து பார்த்தா ஏதோ ஒரு மர பொந்துக்குள்ள நுழையற மாதிரி  பெரிய ஆல மர வடிவத்தைச் செய்து வாயிலை மறைத்திருக்காங்க. உள்ள நுழைந்தவுடனே சுவர்கள் முழுக்க பறவை உருவங்களும் அவைகளோட கூடுகளையும் வச்சிருக்காங்க. தரையில் பல விலங்கு உருவங்கள். மொத்தத்துல ஒரு காட்டுக்குள்ள துர்கா நிக்கற மாதிரி இருக்கு.

    பூசை முடிஞ்சு ஷுப்கர் தீச்சட்டியப் புடிச்சு முதலில தனுசி நடனத்தை ஆரம்பிச்சான். அவன் ஆடி முடிச்சவொடனே அவன் நண்பன் பபுலு கிட்ட குடுத்துட்டான். அதுக்கப்புறம்தான் கமலா ஆன்ட்டி குரூப் வம்புபேச ஆரம்பிச்சிட்டாங்க. ஷுப்கர் ஆடி முடிச்சு தீச்சட்டிய என் பேத்தி கையிலதான் குடுத்திருக்கணும். அவளும் அவ தோழிகளும் ரொம்ப நேரமா துர்கா மாதா ஆசி வாங்க காத்திருக்காங்க. சின்ன பிள்ளைங்க போய் படிக்க வேணாமா. இவங்க எப்ப தனுசி ஆட உடுவாங்கனு காத்துக்கிட்டா நிக்க முடியும். சரி அதுதான் போகட்டும். குறைந்த பட்சம் சங்கு ஊதறதுக்காவது விட்டிருக்கணும்.அதையும் ஷுப்கர் அம்மா கான்பால் வாங்கி கையில வச்சிக்கிட்டாங்க. என்னவோ இந்த பூசையே இவங்களுக்காகப் பண்ணற மாதிரி குடும்பமே இப்படி முன்னால நின்னா எப்படி.

    பாரு பத்ராஜி குடும்பம் எவ்ளோ நேரம் காத்துக்கிட்டு நிக்கறாங்க. அவங்க பெங்காலி இல்லையா. அவங்களுக்குதானே இந்தப் பூசை முக்கியம். இதுலயும் பீஹாரி, பஞ்சாபி எல்லாரும் முன்னால வந்துட்டா நல்லாவா இருக்கு. அடுத்து வர சத் பூஜா இதுல எல்லாம் அவங்க செய்துக்க வேண்டியது தானேன்னு ஆரம்பிச்சதுதான் தாமதம். பிரசிடெண்ட் மைக் எடுத்து அமைதினு சொல்ற வரை எல்லாரும் கூடிப்பேச ஆரம்பிச்சிட்டாங்க.

    அப்பறமாதான் தோபால்ஜி ஒருவழியா எல்லாருக்கும் விளக்கிச் சொன்னார். கான்பால் அவர்களின் பையனான ஷுப்கர் தன் நண்பர்கள் உதவியோட உங்க எல்லார் பிளாக்கோட மொட்டைமாடிகளிலும், உங்க ஒவ்வொரு வீட்டு பால்கனியிலயும் செடிகள் வைக்க முயற்சி செஞ்சான். அப்ப எவ்வளவு பாடுபட்டிருப்பான். இப்ப பாக்கறதுக்கு நம்ம சொசைட்டியே நல்லா இருக்கு. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மையத்திலிருந்து அவனோட இந்தச் சேவையைப் பாராட்டி பரிசு கொடுத்தாங்க. அந்தப் பணம் பத்தாயிரத்தையும் அவன் சொசைட்டியின் நலத்துக்கே கொடுத்துட்டான். அதைப் பாராட்டிதான் நாளைக்குவிழா எடுக்கப்போறோம். எல்லாரும் அவசியம் கலந்துக்கணும்.

    அப்டின்னு அவர் உரையை முடிச்சவொடனே பாக்கணுமே கமலா ஆன்ட்டி குரூப்ல எல்லார் முகத்திலயும் எள்ளும் கொள்ளும் வெடிச்சுச்சு.

    இவங்களப் பத்தி தெரியாதா என்ன. நாளைக்கே இவங்க பேத்தி பன்னிரண்டாம் வகுப்பில் தொண்ணூறு சதவிகிதத்துக்கு மேல மதிப்பெண் எடுத்தான்னா சொசையிட்டி சார்புல பரிசுத்தொகை குடுப்பாங்கல்ல. அப்ப இந்த பிரசிடெண்ட்ட உட்டா வேற ஆள் இல்லனு முகஸ்துதி பாடுவாங்க.

    பாவம் அந்த ஷுப்கர் எத்தன வருசமா பாடுபட்டான். அவனுக்கு இந்த மரியாதை கம்மி தான். ‘இளையோனே யாயினும் மூத்தானே ஆடு மகன்’னு பழமொழியே இருக்கே. இறுதி வரையும் ஏற்றதை முடித்துக் காணும் தளராத முயற்சி உடைமையே அறிவுடைமையாகும் அப்டிங்கறதுதான் அதோட பொருள்.

    அம்மா மதுரை நகர் சங்கப் புலவியே… கிளம்பலாமா என வசுதாவைக் கலாய்த்துக்கொண்டே விழாவிற்குச் செல்ல வீட்டைப் பூட்டுகிறேன். .

    பாடல் 62

    நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின்
    காட்டிக் களைதும் எனவேண்டா – ஓட்டி
    இடம்பட்ட கண்ணாய்! ‘இறக்கும்மை யாட்டை
    உடம்படுத்து வெளவுண்டார் இல்’.

    ‘இறக்குமையாட்டை உடம்படுத்து வௌவுண்டார் இல்’

    அவன் நம்ம சோலிக்கு சரிப்பட்டு வரமாட்டாம்னு சொல்லிக்கிட்டே கெடக்கேன். செவி குடுத்து கேக்கானான்னு பாரு. ஏல…. போக்கத்தவனே. நான் இங்ஙன கெடையா கெடந்து கத்திக்கிட்டு கெடக்கேன். நீ உம்பாட்டுக்கு போய்க்கிட்டே இருந்தா எப்டி. ஏல…..செத்த நில்லு… என் ராசாப்பய நான் சொன்னா கேளு அய்யா……  ஆத்தா எப்பமும் உன் நல்லதுக்குத் தான் சொல்லுவேனாம். கத்த ஆரம்பிச்ச ஆச்சி.. கோவத்த அடக்கிக்கிட்டு குழைந்து பேசறாங்க.

    கொஞ்ச நேரமா நான் என் எதிர்வீட்ட கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். ஆச்சிக்கு வயல் வயக்காடு இதுதான் மொத்த வாழ்க்கையும். அவ மகன் சோலையப்பனும் விவசாயம் தான் பாக்கறான். நல்ல நாணயமான பையன். கல்லூரி வரைக்கும் படிச்சுட்டு திரும்பவும் விவசாயத்துக்கே வந்துட்டாம்னு ஆச்சிதான் அப்பப்ப பொலம்பும். அவங்களுக்கு என்ன பிரச்சினையோ. நாம நம்ம பொழைப்பப் பாப்போம். தீர்மானத்துடன் எழுந்து குளிக்கப் போனேன். குளிச்சிட்டு வந்த பெறகும் ஆச்சி தனக்குத்தானே பேசிக்கிட்டு என் வீட்டுப்பக்கத்துல இருக்கற வைக்கல்படைப்ப ஒழுங்கு படுத்திக்கிட்டு நிக்கறாங்க. பாவம்னு நினைச்சு என்ன ஆச்சினு கேக்கறேன்.

    ஒண்ணுமில்ல ராசா. இப்பம் கொரோனாவால பிள்ளைகளெல்லாம் பள்ளிக்கூடம் போகறதில்ல. எப்டி வெரட்டி உட்டாலும் கேக்காம வைக்கல்படைப்பு மேல ஏறி ஏறி குதிச்சு உருளுதுங்க. அதான் வைக்கல் பூராவும் சிதறிக்கிடக்கு. ஒழுங்கு படுத்துக்கிட்டு நிக்குதேம். அவள் முடித்துவிட்டாள். சரி. காலையில என்ன பிரச்சினைனு சொல்ல விருப்பமில்ல போலன்னு நினைச்சு திரும்பி நடக்க ஆரம்பிச்சேன்.

    யய்யா… . சோலிகெடக்கோ. ஆமா உனக்கு ஆயிரம் சோலி கெடக்கும். பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்குடுக்கணுமா இல்லையா. நீ போய்வானு சொல்லறாங்க. நான் கிராமப்புற பள்ளியில் வேலைபாக்கறதால பாடங்களப் பதிவு பண்ணி வாட்ஸஅப்ல அனுப்பிக்கிட்டு இருக்கேன். ஏற்கனவே தொலைக்காட்சி வழி கல்வி கற்பிப்பதற்காக பதிவு செஞ்சு அனுப்பிட்டோமே. அதெல்லாம் சொன்னா இந்த ஆச்சிக்குப் புரியாது.இருந்தாலும் பள்ளிக்கூட வாத்தியார்னு எம்மேல இவங்களுக்கு ரொம்ப மரியாதை. அதுமட்டுமில்லாம தனியா சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்னு ஒரு பரிவும் தான். அப்பப்ப சொந்தத்துல பொண்ணுகிண்ணு இருக்கா. பாக்கட்டுமான்னு கேப்பாங்க.

    எனக்கு இப்ப வேற சோலி எதுவுமில்ல. உங்களுக்கு ஏதும் உதவி வேணுமா.., ஆரம்பித்தேன். ஒண்ணுமில்ல. கொழக்கட்ட அவிச்சேன். சூடா ரெண்டு வந்து சாப்பிடுனு அழைப்பு விடுக்கிறாங்க. சரினு சொல்லி வீட்டுக்குள்ள போனேன்.

    கருப்பட்டி, தேங்காய், பாசிபருப்பு எல்லாம் சேந்த பூரணம். நல்லாயிருக்கா. இந்த இன்னும் ரெண்டு போட்டுக்கோ. பனங்கிழங்கு அவிச்சு வச்சிருக்கேன் நாலு எடுத்துக்கிட்டு போ. எம்மவன்தான் புத்திகெட்டு விருட்டுனு சாப்புடாம போயிட்டான். நீயும் எம்புள்ளமாதிரிதான் சாப்புடு. உபசரிக்கிறாள்.

    சாப்பிட்டுக்கொண்டே என்ன பிரச்சினைனு கேக்கறேன். ஒண்ணுமில்ல. அவன்கூட கல்லூரியில படிச்ச புள்ள ஒருத்தனுக்கு வேலை வேணும்னு சொன்னான். நானும் நம்ம மில்லுல வேலை வாங்கித் தரப்போறாம்னு நினைச்சு சரின்னுட்டேன். இப்பந்தான் தெரியுது. இவன் அவன கூடமாட ஒத்தாசைக்கு வச்சிக்கிடப் போறானாம். அந்தப் பிள்ளை வயக்காட்டுச் சோலிக்கு ஒத்துவருவாம்னு எனக்குத் தோணல. மெல்லிசா உடம்புல கதியே இல்ல. ஏதும் உக்காந்து பாக்குத வேலைக்குதான் அவன் லாயக்கு படுவான். அதச் சொன்னா இவனுக்குக் கோவம் பொத்துக்கிட்டு வருது. இவன்தான் ஊருக்கு உபகாரியாச்சே. காலையில நீ பாத்துக்கிட்டு இருந்தயில்ல. எப்டி முறுக்கிக்கிட்டு போனான்.

    கவலைப்படாதீங்க ஆச்சி.  உங்க மவன்கிட்ட நான் பேசிப்பாக்கறேன். அப்போதைக்கு அவளைச் சமாதானப்படுத்தினேன். மதியம் பார்க்கும்போது சோலையப்பனுடன் அந்த நண்பனும் வந்திருந்தான். சன்னல் வழியா அவன் உருவத்தைப் பார்த்தபோது  காலையில ஆச்சி சொன்னது நினைவுக்கு வருது

    முறத்த உசத்தி புடிச்சிக்கிட்டு காத்து வீசுத திசையில போரடிச்ச நெல்லை தூத்துவிட்டோம்னா உமி எப்டி பறக்குமோ அப்டி அந்தப் பயலும் நல்ல காத்துல திசை தெரியாம பறந்துடுவாம். கதியத்த பய…  உண்மதான். எவ்வளவு ஒல்லியா இருக்கான் இந்தப் பையன். இதுதான் சந்தர்ப்பம். சோலையப்பன் சீக்கிரமா சாப்பிட்டு எழுந்தரிச்சிட்டான். அந்தப்பையன் இன்னும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கான். ஆச்சியோட குரல் கேக்குது.

    சோத்த அளஞ்சுக்கிட்டே இருக்காதப்பா நல்லா அள்ளி வாயில போடு. இளம்பிள்ளை. நாலு வகைய அள்ளிவச்சு வஞ்சகமில்லாம முழுங்கணும். அப்பந்தான் உடம்பு தேறும்.

    நான் சோலையப்பனை வெளியே அழைத்துப் பேச ஆரம்பித்தேன். நீங்க உங்க நண்பனுக்கு ஏற்ற ஏதாவது அலுவலக வேலைக்கு டிரை பண்ணச் சொல்லலாமே. எதுக்குத் தேவையில்லாம இங்க கூட்டிக்கிட்டு வந்து….. நான் முடிப்பதற்குள் அவன் ஆரம்பித்தான்.

    இல்ல அண்ணே. அவனுக்கு அப்பா கிடையாது. என்னய மாதிரிதான். சொத்து சொகமும் ரொம்ப இல்ல. சம்பாதிச்சே ஆகணும்னு நிலைமை. விவசாயம் பழகிக்கிட்டாம்னா சொந்தக்கால்ல நிக்கலாம்னு நினைச்சிருப்பான் போல. அதான் எங்கிட்ட உதவி கேட்டான். எனக்கும் தெரியும் அவனுக்கு உடல் உழைப்பு ஒத்துவராதுனு. ஆனா மொதல்ல சேத்துக்கிட்டு பிறகு மெதுமெதுவா புரிய வைக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள என் ஆத்தா கத்தி ஊரைக்கூட்டுது.

    உங்க ஆத்தா சொல்றது நியாயம்தான். ‘இறக்குமையாட்டை உடம்படுத்து வௌவுண்டார் இல்’ னு பழமொழியே இருக்கே. நான் ஆரம்பிச்சேன். ஆட்டோட இரத்தத்த சமைக்கணும்னு நினைக்கறவங்க அதுகிட்ட பேசி சம்மதிக்க வச்ச பிறகா சாப்பிடுவாங்க. அதுமாதிரிதான் உன் நண்பனச் சேத்துக்கிட்டு அவனுக்கு தகுதியில்லைனு தெரியப்படுத்தி பிறகு விலக்கறத விட மொதலிலேயே நீக்கிடலாமே. சோலையப்பன் யோசிக்க ஆரம்பித்துவிட்டான். நல்ல முடிவு எடுப்பான்னு நம்பி நானும் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குள் போனேன்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 43

    பழகத் தெரிய வேணும் – 43

    நிர்மலா ராகவன்

    குழந்தைகளுக்குச் சுதந்திரம் எதற்கு?

    “அந்தப் பையனைப் பார்! எவ்வளவு சமர்த்தாக தனக்கு வேண்டும் என்கிறதைத் தானே கேட்டு வாங்கிக்கிறான்!”

    உணவுக்கடையொன்றில் அடுத்த மேசையிலிருந்த சிறுவனைக் காட்டி, தன் பேத்தியின் சாமர்த்தியம் இன்மையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தாள் அந்த மூதாட்டி. பெண்ணுக்குச் சுமார் எட்டு வயதிருக்கும்.

    நானும் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். தனக்கு என்ன வேண்டும் என்று அவள் சொல்வதற்கே அவளுடன் வந்திருந்த அம்மாவும் பாட்டியும் அனுமதிக்கவில்லை. `இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்!’ என்று அவர்களே தீர்மானித்து, ஒவ்வொரு பிடியின்போதும், ஏதாவது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தார்கள்.

    விருப்பப்படி சாப்பிடுவதற்குக்கூட விடாது, அவளுடைய சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டால், புதிய இடத்தில் எதைச் செய்யத்தான் அவளுக்குத் துணிச்சல் எழும்?

    எப்படி யோசிப்பது என்று கற்றுக்கொடுப்பதைவிட்டு, `இப்படித்தான் யோசிக்கவேண்டும்!’ என்றா கட்டாயப்படுத்துவார்கள்?

    `சிறு வயதிலிருந்தே இவனுக்குச் சுயமாக எதுவும் செய்துகொள்ளத் தெரியாது! நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டோம்!’ என்று சலித்துக்கொள்ளும் பெற்றோர் தம்மீதுதான் தவறு என்று உணர்வதில்லை.

    இப்போக்கைத்தான், `சொல்லிக்கொடுத்த வார்த்தையும் கட்டிக்கொடுத்த சோறும் எத்தனை நாட்களுக்கு வரும்?’ என்று மறைமுகமாகக் கண்டிக்கிறார்கள்.

    `வெளியே போறியா? முகக் கவசம் எடுத்துண்டு போ!’ தற்போது அடிக்கடி கேட்கும் வாசகம். அப்போது எழும் எரிச்சலில், `பெரியவர்கள் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது?’ என்று ஏறுமாறாக நடக்கத்தான் தோன்றும்.

    சொல்வதைவிட செய்துகாட்டுவதுதான் பயனளிக்கும்.

    `உன்னால் முடியும்!’ என்று நம்பினால், சிறுவர்களும் அதை நம்பிவிடுவார்கள்.

    கதை

    இரண்டு வயதாக இருந்தபோது, என் பேரனை குழந்தைகளுக்கான `ஜிம்’மிற்கு அழைத்துப் போயிருந்தேன். அங்கு நான்கடி உயரத்தில் ஏணியைப்போன்ற ஒரு சாதனம். ஆனால், படிகள் கிடையாது. இரு பக்கமும் கால் விரல்களை மட்டும் சிறு பள்ளத்தில் பதித்துக்கொண்டு ஏறவேண்டும்.

    பயத்தால் குழந்தையின் கண்கள் விரிந்தன.

    “ஏறு. விழமாட்டே. நான் பிடிச்சுக்கறேன்!” என்று தைரியம் அளித்து, அவன் உடலைச்சுற்றி ஒரு கையைப் போட்டு இறுக்கி, இன்னொரு கையால், “இப்போ இங்கே கால் வைக்கணும்,’ என்று காட்டி, ஒவ்வொரு அடியாகப் பழக்கினேன். ஏறி முடித்ததும், பாராட்டு.

    அடுத்த முறை நான் அவனைப் பிடித்துக்கொள்ளப்போக, “எனக்குத் தெரியும்,” என்று என் கையை விலக்கினான்.

    ஓரிரு முறை செய்துகாட்டி, மேற்பார்வை மட்டும் பார்த்தால் சிறுவர்களின் தைரியம் பெருகுகிறது. புதிய காரியங்களில் ஈடுபடும் துணிச்சல் வரும்.

    இது புரிந்துதான் பரம்பரைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தம் குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே சிறு, சிறு வேலைகளைக் கொடுத்துப் பழக்குகிறார்கள்.

    சமையலறையில், வேகவைத்த உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் ஆகியவைகளின் தோலை உரிப்பது என்று ஆரம்பித்து, பெண் குழந்தைகள் சிறுகச் சிறுக சமையல் கற்றுக்கொள்கிறார்கள்.

    எந்த வேலையையும், `இப்படிச் செய்!’ என்று அதிகாரமாகக் கூறுவதைவிட, `நான் இப்படிப் பண்ணுவேன். நீ உன் சௌகரிப்படி செய்!’ என்று விட்டுக்கொடுத்தால், நம்மைப்போலவே செய்வார்கள்! நம்மீது மதிப்பும் பெருகும்.

    குழந்தைகள் எப்போதும் பெரியவர்கள்போல் `நார்மலாக’ இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. (நம்மில் எத்தனை பேர் அப்படி இருக்கிறோம்?).

    தம் விளையாட்டுச் சாமான்களை தரை பூராவும் பரப்புவது அவர்களுக்குப் பிடித்தமான சமாசாரம்.

    `குப்பை போடாதே!’ என்று கண்டிப்பதைவிட்டு, `இந்த ஓரமா வெச்சுக்கோ,’ என்று ஒரு மூலையை ஒழித்துக்கொடுக்கலாம்.

    சில தாய்மார்கள் உடனுக்குடனே அந்த விளையாட்டுச் சாமான்களைத் திரட்டி வைத்துவிடுவார்கள். சொல்வதைக் கேட்காவிட்டால் தண்டனை. தாயை எதிர்க்கவும் முடியாத நிலையில், அவளிடம் அன்பைவிட அச்சம்தான் அதிகமாக எழும்.

    சிறுவயதில் எல்லாவற்றிற்கும் பயந்து வளர்பவன் முரடனாகிறான் — `நான் பெற்ற பயம் இவ்வையகமும் அடைக!’ என்பதுபோல். இல்லையேல், பயந்தாங்கொள்ளியாக ஆகிறான்.

    குழந்தைகளை அஞ்சவோ, அழவோ வைத்தால் ஒருவருடைய பலம் கூடிவிடுவது போன்ற உணர்வு ஏற்படலாம். அதற்காக சுயநலம் கொண்டவர்களாக ஆகலாமா?

    மகிழ்ச்சியாக வளரும் குழந்தைகளே நல்லவர்களாக வளர்கிறார்கள்.

    சுதந்திரத்திற்கு வயதில்லை

    ஒரு குழந்தையைத் புத்திசாலியாகவும் தைரியசாலியாகவும் வளர்ப்பது வளர்க்கிறவர்களுக்கும் உற்சாகமானதாக இருக்கும். அவர்களும் கூடவே வளர்வார்கள்.

    “உனக்கு இப்போ ஹார்லிக்ஸ் வேணுமா, மைலோ வேணுமா?” ஒன்றரை வயதானதும், என் குழந்தைகளைக் கேட்பேன். “இப்போ என்ன குடிக்கப்போறே?”

    நான் சொல்வது புரியாது, குழந்தை விழிக்கும்.

    “இது வெள்ளையா இருக்கு, பாரு! இன்னொண்ணு ப்ரௌன்,” என்று சந்தடி சாக்கில் வண்ண பேதத்தையும் சொல்லிக்கொடுப்பேன்.

    சற்று யோசித்துவிட்டு, “இது. இல்லை, இது!” என்று ஏதாவது ஒன்றைக் காலை வேளையில் குடிக்கத் தேர்ந்தெடுப்பார்கள்.

    ஒரு முறை, வெள்ளையான பானத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள் என் பன்னிரண்டு வயது மகள்.

    அவளுடைய தம்பி கால்களை உதைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தான். ஏனெனில், அவனுடைய தேர்வு மதிக்கப்படவில்லை.

    அவளைத் திட்டுவதுபோல் பாவனை செய்துவிட்டு, “இதிலேயே கொஞ்சம் மைலோ கலந்து கொண்டுவா!” என்றேன், ரகசியக்குரலில்.

    “சகிக்காது,” என்றாள். ஆனாலும் அப்படியே செய்தாள்.

    குழந்தை மகிழ்ச்சியுடன் குடித்தான். அவனைப் பொறுத்தவரை, காலையில் குடிக்க அவன் தேர்ந்தெடுத்தது கோக்கோ கலராக இருக்கும். அந்த வயதில், ருசியைப்பற்றிய அக்கறையோ, அறிவோ கிடையாது.

    என் மகளுக்கு ஒரு வயதானபோது, இதே வளர்ப்பு முறையை நான் கையாண்டேன்.

    அதைப் பார்த்த என் தாய், “இது என்ன, பெரிய மனுஷி? இதுகிட்ட கேக்கறே?” என்றாள்.

    “சுயமா யோசிக்க கத்துக் குடுக்கறேன்,” என்றேன். அவர்கள் சம்பந்தப்பட்ட சமாசாரங்களுக்கு அவர்கள்தாம் பொறுப்பு என்று மறைமுகமாக உணர்த்துவதாகத்தான் நான் நினைத்தேன்.

    ஆனால் அம்மாவோ, “ஒன் குழந்தைகளுக்குப் பைத்தியம்தான் பிடிக்கப்போறது!” என்றாள்!

    `அன்பு’ என்ற பெயரில் எட்டு வயதானபின்னும் தன் மகளைத் தூக்கி வைத்துக்கொள்ளும் தாய் அறிவதில்லை, அவளுக்குத் தீங்கு இழைக்கிறோம் என்று.

    பதினோரு மாதங்களே ஆன என் மகளின் கையைப் பிடித்து நான் தெருவில் நடந்தபோது, இந்தியாவில் பெண்கள் சிரித்தார்கள், ஏதோ பெரிய வேடிக்கையைக் கண்டுவிட்டதுபோல்.

    “இது ரொம்ப அநியாயம்!” என்று அவர்கள் சொல்லிக்கொண்டு போனது கேட்டது.

    நான் `கொடுமைப்படுத்துவதை’ பொறுக்கமுடியாத ஒருவர், “தூக்கிக்குங்கம்மா,” என்று சிபாரிசு செய்தார்.

    நடக்க ஆரம்பித்ததுமே, குழந்தைகள் ஓடுவார்கள். அடிக்கடி விழுந்தாலும், அடுத்த முறையும் ஓடுவார்கள். பதட்டப்படாது, `இதுதான் அவர்கள் பொழுதுபோக்கு!’ என்று விடவேண்டியதுதான்

    தாய் இரக்கம் காட்டும்போதுதான் சுயபரிதாபம் எழுகிறது. கவனிக்காததுபோல் இருந்தால் கீழே விழுந்தாலும், தாமே எழுந்துவிடுவார்கள்.

    எல்லா வயதிலும் `வீழ்ச்சி’ என்று ஒன்று இருக்கிறது. அப்போது அயர்ந்துபோய், கீழேயே கிடக்க வேண்டாம், மீண்டும் எழ வேண்டும் என்ற பாடத்தைச் சிறுவயதிலேயே புகட்டலாமே!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 106 (அப்பொன்)

    சேக்கிழார் பாடல் நயம் – 106 (அப்பொன்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல் :

    அப்பொன்  பதியின்   இடைவேளாண்   குலத்தை  விளக்க  அவதரித்தார்
    செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய   கழல்பற்றி
    எப்பற் றினையும்  அறஎறிவார்; எல்லை  தெரிய  ஒண்ணாதார்
    மெய்ப்பத்   தர்கள்பால்   பரிவுடையார்  எம்பி   ரானார்;  விறன்மிண்டர்

    பொருள்

    அந்த அழகிய பதியிலே வேளாண் குலத்தை விளக்கம் செய்ய அவதரித்தார்; சொல்லுதற்கரிய பெருஞ் சீர்த்தியுடைய சிவபெருமானாரின் சேவடிகளையே பற்றுக்கோடாகக் கொண்டு ஏனைய எல்லாப் பற்றுக்களையும் அறஎறிவார்; எல்லையிட வொண்ணாதார் உண்மையடியார்களிடத்து அன்புமிக உடையவர்; எமது பெருமானாராகிய விறன்மிண்டர்.

    பொன்பதி – பொன் -அழகு. திருவுடைமையுமாம். இவற்றின் காரணம் முன்பாட்டில் உரைக்கப்பெற்றது.

    வேளாண் குலத்தை விளக்க  – என்ற தொடர்  வேளாளர் என்ற குலம் இவர் அதனுள் வந்தவதரிக்கப் பெற்றமையால் விளக்கமடைந்தது. வேளாளர் குலத்திற்கு முன்னரிருந்த அளவிளாத பெருமைகளினும், திருத்தொண்டத்தொகையை உலகம் பெற்றுய்தற்குக் காரணராயிருந்த இவரைத் தன்னுட் பெற்றது அக்குலத்திற்கு மிகப் பெருமையும் விளக்கமும் தந்தது என்க.

    “ஆசின் மறைக்,
    கைப்படுத்து சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச்,
    செப்பு நெறி வழிவந்தார் சிவபாத விருதயர்“ என்றும்,

    “கானவர் குலம் விளங்கத் தத்தைபாற் கருப்பம் நீட“ என்றும்

    சேக்கிழார்  கூறிய   திருவாக்குக்கள்  குலமாண்பை சிறப்பித்தமை  காண்க.

    செப்பற்கரிய பெருஞ் சீர்த்திச் சிவனார் –  என்ற தொடர்  ‘செப்பற்கரிய’  அதாவது , “உலகெலா  முணர்ந்   தோதற் கரியவன்“ என முதற்கண்ணே ஒதியதை  நினைவூட்டுகிறது.

    “யதோ வாசோ நிவர்த்தந்தே“ – (எதினின்றும் வாக்குக்கள் திரும்பிவிடுகின்றனவோ) – என்னும் பொருள் காட்டும்  உபநிடதத்தால்   செப்பற்கருமை உணரப்படும். பெரும் – மிகச்சிறியதும் செப்பரிதாம்   ஆதலின் அதனை  விலக்க, ‘பெரும்’ என்றார்.

    சீர்த்தி – இச் சீர்த்திகளை மறைகள் பற்பலவாறு பேசித் திளைத்துணர்த்தும் சிவம் என்ற சொல் இருத்தல் – கிடத்தல் எனப் பொருள் தருதலால், எங்கும் இருப்பது – எங்கும் பதிந்து கிடப்பது எனப் பொருள் கொண்டு சிவபெருமானது எல்லா மறியுந் தன்மை, ஒன்றாயும் வேறாயும் உடனாயும் இருக்குந் தன்மை முதலிய பல சீர்த்திகளையும் மறைகள் பேசும். வேதங்களுள்ளே திருவுருத்திரமும்,

    “மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
    வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகி“,

    “மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
    மலையல்லை கடலல்லை வாயு வல்லை“,

    என்பன முதலிய எண்ணிறந்த தமிழ் மறைகளும் இறைவன் எல்லாமாய் அல்லனுமாய் நின்றருளும் இச்சீர்த்தியை மிக விதந்து பேசுகின்றன. இறைவன் உயிர்களுக்கருள்புரியும் சீர்த்தியே அவனது கீர்த்திகளுள் மிகச் சிறந்ததாம். மாணிக்கவாசக அடிகள் கீர்த்தித் திருவகவலுள்ளே இதனை விரித்துப் பாராட்டியிருத்தலைக்  கண்டு தெளிக..

    இனி வேதம்,  முன்னுரையாகப்  பிரமன் விட்டுணு முதலிய தெய்வங்களின் புகழ்களையும் பேசும். ஆனால் அவை, இறைமைக் குணங்கள் முற்றும் உடையவரல்லாதாரை அவையுடையரெனப் பேசுதலால், பொருள் சேராவாம். அவை அவற்றினும் வலிமையுடைய கூற்றுக்களாற் பாதிக்கப்பட்டு இறுதியில் சிவனது சீர்த்தியே பெரியதாய்ப் பேசப்பெறும்.

    பிரமனை, அயன் – அசன் – பிறப்பில்லாதான் என உபசரிக்கும் கூற்று, பிரமன் விட்டுணு உந்தியிற் பிறந்தான் என்றபோது பொருள் சேராப் புகழாயொழியும். அவ்வாறே விட்டுணுவைப் பேசும் நாராயண உபநிடதம், நாராயணன் ஆத்மா – ‘’அவர் சத்தியம் – அவர் முதலில் இருந்தவர் – அவரே இந்திரன்’’ – என்றெல்லாம் புகழும். ஆயின் முடிவில் நாராயணன் ஆத்மா – அவர் சத்தியம் – அவர் முதலில் இருந்தவர் – அவரே இந்திரன் – என்றெல்லாம் புகழும். ஆயின் முடிவில், நாராயண:பரோத்யாதா – சுவேதாசுவதரம், அவர்தியானிக்கிறவர்; சிவனொருவனே தியானிக்கத்தக்கவர்; தியானிக்கப் படுபவர். சிவ ஏகோத்யேம்: (அதர்வசிகை) என முடிக்கின்றபோது முன்னர்க் கூறிய புகழ்கள் பொருள் சேராவாம்.

    “பையஞ் சுடர்விடு நாகப் பள்ளி கொள் வானுள்ளத் தான்“, “திருமாலகத்தான்“, “தொழப்படுந் தேவர் தொழப்படுவானை“, “சேர்ந்தறியாக் கையான்“, “தன்னாற் றொழப்படுவா-ரில்லை தானே“ என்பனவாதி எண்ணிறந்த தமிழ்

    மறைகளும் இக்கருத்தே பற்றியன.

    (இவை திரு.க. சதாசிவ செட்டியா ரவர்கள் உரைக் குறிப்புக்கள்.)

    சிவனார் – ஆர் விகுதி உயர்வு குறித்தது. செய்ய கழல்- சேவடி “அரவணையான் சிந்தித் தரற்றும்படி“ என்பது முதலாகத் திருவடித் திருத்தாண்டகத்திற் கூறியன காண்க.

    கழல் – ஆகுபெயர். திருவருள் நிறைவே திருவடியாகக் கூறப்பெறும். இறைவனுக்குத் திருமேனி கற்பிக்கப் பெறும்போது திருவடியும் கற்பிக்கப் பெறுமென்க. திருவடியே சிவசத்தியாம் – அதுவே தாரகமாவது.

    செய்ய – செம்மையுடைய – வீடுபேறுதரும் – என்ற பொருளில் வந்தது. செய்ய -சிவந்த எனக் கூறலுமாம். எல்லாரும் மலரிட்டு அருச்சித்து வணங்குதலால்  சிவந்தது.

    “தேவரெல்லாந் தொழச்சிவந்த செந்தாள் முக்கட் செங்கரும்பே“ – தாயுமானார்;

    “நின்போ லமரர்கள் நீண்முடி சாய்த்து நினைந்துகுத்த,
    பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன“ (அப்பர் – திருவிருத்தம்).

    அருச்சித்த மலர்களினின்றும் தேன்பாய்ந்து சிவந்தது என்பதுமொரு கருத்து.

     “சிறந்து வானோர் ,
    இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
    வின்மலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி,
    நனைந்தனைய திருவடி“      என்பது  திருமுறை .

    கழல்பற்றி எப்பற்றினையும் அற எறிவார் – பற்றத்தக்கது கழலேயாம் என்பது. அதனைப் பற்றுவதும் பிற எல்லாப் பற்றுக்களும் அறுதற்கேயாம். பிற பற்றுக்களற்ற போதே திருவடிப் பற்று உளதாம். திருவடிப் பற்று உளதாகப் பிற பற்றுக்கள் அறும். இவ்விரண்டும் திருவருளால் உண்டாகவேண்டும் என்க. “முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே“ என்ற தேவாரமும் காண்க.

    எப்பற்றினையும் – யான் எனது என்ற அகப்பற்று, புறப்பற்றுக்கள் அனைத்தையும்; தேவலோக நாகலோக பூலோகப் பற்றுக்களையும்.

    “போகம்வேண்டிவேண்டிலேன்புரந்த ராதி இன்பமும்,
    ஏக நின் கழலிணை யலாது  இலேன்“ என்பது திருவாசகம்.

    கழற்பற்று ஒன்றொழித்து வேறு எல்லாப் பற்றுக்களையும் எப்பற்றினையும் என்றதனால் “வீடும் வேண்டா விறலின் விளங்கினார்“, “ஈசனோ டாயினு மாசை யறுமின்“ என்றபடி நிராசையாகிய தொண்டர் நிலையுங் கொள்ளப்பெறும்.

    இந்நாயனார் இறைவனிடத்து வீடும் வேண்டா விறலை உடையராய், அவனையும் புற கென்ற திறத்தைக் காண்க. அற எறிவார் – அற – அறவே – முழுதும். அறும்படியாக என்றலுமாம். எறிவார் – எறிவாராயினர்.

    எல்லைதெரிய ஒண்ணாதார்  என்ற தொடர்,  பொருளின் அளவால் அளக்க லாகாதவருடைய. முன் செப்பற்கரிய என்றது உரையின் அளவால்  அளக்கலாகாமை குறித்தது.  இதனை நாயனார்க்குக் கூட்டி, அளவிடமுடியாத பெருமையுடையவர் என்றுரைப்பதும்  உண்டு. எல்லை தெரிய ஒண்ணா இறைவன் கழல்பற்றியவராதலின் இவரும் அத்தன்மையினரே.

    மெய்ப்பத்தர்கள் – உண்மை யன்பர்கள். மெய்ப்பொருணாயனார் போலல்லாது இந்நாயனார் உண்மை யன்பர்கள் பாலே பத்தி செய்வார். ஆயின் இவர் வேடத்தைச் சிந்தை செய்யாரோ எனின், வேடத்துடன் உண்மை யன்பும் உடன்சேர்த்தி எண்ணி அன்பு செய்வார் என்க.

    இது இவரது சரிதக் குறிப்பாகும். நம்பியாரூரரையும் அவரை ஆட்கொண்ட பெருமானையும் புறகு என்று கூறவல்ல விறல் படைத்தவராதலின் இவரது திருவுள்ளம் மெய்ப் பத்தர்கள் பாற் பரிவுடையது என்றார். பரிவுடைமை – அன்பு பூண்டொழுகுதல்.

    எம்பிரானார் – எமது பெருமானார். தலைவர் என்று ஆசிரியர் இங்குக் குறித்ததன் காரணம்இப்புராணப்  பாட்டிற் காண்க. இப்புராணத்திற்கு முதனூலாகிய திருத்தொண்டத் தொகை இவராலே உலகம் பெறுதற்குக் காரணமாயிற்று என்ற நன்றி கருதி வணங்கினார் என்க. அதனாலே தொண்டர் கூட்டமும் அவர் புகழும் உலகெலாம் எங்கும் நிலவி நின்றதென்பதுமாம்.

    அவதரித்தாராகவும், எறிவாராகவும், உடையாராகவும், பிரானாராகவும்  விளங்கிய விறன்மிண்டர் என முடிக்க.

    நாயனாரது பெயரை முதலிற் கூற நேர்ந்தபோது, இவ்விடத்து “மெய்ப்பத்தர்கள்“ அடியின் அடியில் ஆசிரியர் அமைத்துக்காட்டி, நாயனாரது உண்மை நிலையைக் குறித்த அழகு காண்க. மெய்ப்பத்தர்கள்பாற் பரிவுடைமையே “கூட்டம் பேணா தேகும் ஊரனுக்கும் புறகு“ என்று நாயனார் கூறக் காரணமாயிற் றென்பதும், இதுவும் இச்சரிதக் குறிப்பாம் என்பதும் இங்கும் காண்க. வரும் பாட்டுக்களிலும்   காண்போம்.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 18

    பரிமேலழகர் உரைத்திறன் – 18

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    மனங்கோணா மறுப்பு

    முன்னுரை

    உள்ளங்களின் எண்ணிக்கையும் கருத்து வேறுபாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. அவை ஒன்றே போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தல் ஆகாது. இலக்கிய உரை பற்றிய சிந்தனைகளில் உள்ளங்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டதால் இலக்கிய உரைவளர்ச்சி தடைபட்டதுதான் கண்ட பயன். அறிவும் புலமையும் சார்ந்த அறிஞர்கள் தம் சிந்தனைக்கேற்ப உரைமாற்றம் காண்பது ஏற்கத்தக்கதே. பரிமேலழகரைப் பொருத்தவரையில் அரசியல் கொள்கை, குறுகிய மனப்பான்மை, குறைந்த புலமை, உரைப்பொருள் தவிர வேறுபிற காரணிகள் இவற்றின் அடிப்படையில் மறுப்புக்கு ஆளானவர். பரிமேலழகரின் உரையை மறுப்போர்கள் அவர்தம் உரைமறுப்புக் கோட்பாடுகளையும் உரைமறுப்புத்திறனையும் வகைகளையும் உணர்ந்திருந்தால் இத்தகைய நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். முன்னோர் கண்ட உரைகளை அவர் மறுக்கும் முறைகளே ஒரு ஆய்வுப்பட்டத்திற்கு உரிய பொருளாம். ‘அடிப்பது தெரியாமல் அடிக்க வேண்டும்’ என்றாற்போல மறுப்பது தெரியாமல் மறுக்க வேண்டும் என்ற கொள்கையையும் பரிமேலழகர் பின்பற்றியிருக்கிறார் என்பதை நிறுவுவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    சொல்லக் கூடாததும் செய்ய வேண்டியதும்

    ‘ஈகை’ என்னும் அதிகாரத்தில் நல்ல குடி பிறந்தவனிடத்தில் இருக்கின்ற இரண்டு பண்புநலன்களைக் கூறுவதாக ஒரு பாட்டு இருக்கிறது.

    “‘இலன்’ என்னும் எவ்வம் உரையாமை, ஈதல்
    குலன் உடையான் கண்ணே உள” (223)

    இந்தப் பாட்டுக்குப் பரிமேலழகர்,

    “யான் வறியன் என்று (இரப்பான்) சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும் அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும் இவையிரண்டும் உளவாவன குடிப்பிறந்தான் கண்ணே”

    என்று பொழிப்புரை எழுதி,

    “மேல் ‘தீது’ என ஒழிதற்கும் ‘நன்று’ என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி, ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்’ என்பதற்கு, ‘அவ்விளிவரவை (ஒருவன் தனக்குச்) சொல்வதற்கு முன்னே (அவன் குறிப்பறிந்து கொடுத்தல்)’ எனவும், அதனைப் பின்னும் பிறன் ஒருவன் பால் சென்று அவன்) உரையாவகையால் கொடுத்தல்’ எனவும், ‘(யான் இது பொழுது) பொருளுடையேனல்லேன்’ எனக் ‘கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல்’ எனவும் உரைப்பாருமுளர். அவர் ‘ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பார்”

    என்று விளக்கவுரையும் தந்திருக்கிறார்.

    பரிமேலழகர் உரை விளக்கத்திற்கு விளக்கம்

    “நல்ல குடியில் பிறந்தவனிடத்தில் இருக்கின்ற இரண்டு பண்புகளாவன, ஒன்று தான் எந்த நிலையிலும் தனது இளிவரவைப் பிறரிடம் சொல்லாத தன்மை. இரண்டு அவ்வாறு தன்னிடம் வந்து தமது இளிவரவைச் சொல்லி இரப்பார்க்கு இல்லையென்னாது கொடுக்கும் இயல்பு.”

    பரிமேலழகர் உரை அமைந்த காரணம்

    இந்தத் தொடரின் பல நேர்வுகளில் சொல்லியவாறு பரிமேலழகர் எந்தக் குறட்பாவையும் தனி அலகாகக் கொள்வதில்லை. அதாவது ஒரு குறட்பா (இன்றைக்குப் பேராசிரியர்கள் உட்பட பலரும் கருதியுரைப்பதுபோல்) தனிப்பட்ட நீதியினைக் கூறுவதாகக் கருதிலர். குறட்பாவின் பொருளமைதியை அதிகாரம், அதிகாரத்தின் பொருண்மை, பகுப்பின் முழுமை, குறட்பா இடம்பெறும் இயல், பால் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நோக்கி உரையெழுதுவதைக் குறித்திருந்தோம். இந்தக் குறட்பாவையும் அங்ஙனம் நோக்கித்தான் உரையெழுதுகிறார். இந்தப் பாட்டுக்கு முந்தைய பாடல்,

    “நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று” (222)

    இந்தப் பாட்டில் ‘கொளல்’, ‘ஈதல்’ என்னும் தொழில் இடம்பெற்றிருக்கின்றதேயன்றி எழுவாய் இல்லை என்பதை அறியலாம். அதாவது யார் கொள்ளுவது தீது? யார் ஈதல் நன்று? என்னும் வினாவிற்குப் பாட்டில் விடையில்லை. பொதுப்படையான நீதியுரைப்பதாகவே அமைந்திருக்கிறது. ஈகையாகிய உயர்பண்பு பொதுப்படையாக அமைய வாய்ப்பில்லை. இதனை அவர் எழுதிய விளக்கவுரையில்,

    “மேல் தீது என ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு”.

    எனத் தெளிவுபடுத்துகிறார். ‘உரியவன்’ என்னும் சொல் பொதுமைப்பண்பு கொண்டதன்று. எனவே இந்தப் பாடலுக்கான வினைமுதல் அல்லது எழுவாய் அடுத்த பாட்டில் அமைந்திருப்பதை அவர் நோக்கியிருக்கிறார். அதனால் அடுத்த பாட்டுக்கு உரையெழுதுகிறபோது பாட்டின் அமைப்பைப் பற்றி ஆராயமுடிகிறது. முதல் பாட்டில் எழுவாய் இல்லாமல் எழுதிய திருவள்ளுவர் அடுத்தபாட்டில் எழுவாயோடு (குலனுடையான்) எழுதுகிறார். பரிமேலழகர் இதனை (இரண்டுக்கான தொடர்பை)த் தம் புலமையாற்றலால் கண்டறிகிறார்.

    எஞ்சிய உரைகளும் பரிமேலழகர் பார்வையும்

    ஒரே குறட்பாவிற்குக் கற்பார் புலமைக்கும் சிந்தனையாற்றலுக்கும் ஏற்பப்  பல உரைகளைக் காண முடியும். ஆனால் ஒரே உரையாசிரியர், பிற உரையாசிரியர் கூறும் உரைக்கருத்துக்களை முன்மொழிந்து கற்பார் முன் வைப்பது என்பது அரியது. அரியவற்றுள் அரியனவற்றை இயல்பாகச் செய்துகாட்டும் அழகர் இதனையும் செய்துகாட்டியிருக்கிறார். ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை, ஈதல்” என்பதற்குக் குலனுடையானுக்கு இருக்கும் இருவேறு சிறப்பியல்புகள் என உரைகண்ட தன் கருத்துக்கு மாற்றாக உரையாசிரியர்கள் பிறர் கூறும் கருத்துக்களை அவர் முன்மொழிகிறார். அழகர் முன்மொழியும் பிறருடைய கருத்துக்களையும் அவர் உரைகொண்ட பாங்கினையும் தொடர்ந்து காணலாம். இனி ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை’ என்பதற்கு,

    1. ‘(ஒருவன் தனக்குச்) சொல்வதற்கு முன்னே (அவன் குறிப்பறிந்து) கொடுத்தல் எனவும்’ கண்ட உரையினை முன்மொழிகிறார். இந்த உரையால் ‘எவ்வம் உரையாமை’ என்பதற்கு இரப்பவன் இளிவரவைச் சொல்லுதற்கு முன்பாக’ என்பது பெறப்படுகிறது. படவே ‘உரையாமை’ என்பது இரப்பவனுக்கு ஆகிறது.
    2. ‘அதனைப் பின்னும் பிறன் ஒருவன் பால் சென்று அவன்) உரையாவகையால் கொடுத்தல் எனவும் கண்ட உரையினை அடுத்ததாக முன்மொழிகிறார். இதிலும் ‘உரையாமை’ என்பது இரப்பவனுக்கே ஆகி வருகிறது. வரினும் பொருள் பெற்றவன் அதன் பற்றாக்குறை கருதி மற்றொருவனிடம் சென்று (போதவில்லை என்று) ‘உரையாமை’ என்ற பொருளைத் தருகிறது. கொடுக்கின்ற அளவு நோக்கிய அவன் வருத்தத்தைக் குறிப்பதாக இது அமைந்திருக்கிறது என்பதை அறிதல் வேண்டும்.
    3. (யான் இது பொழுது) பொருளுடையேனல்லேன் எனக் கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் கண்ட உரையினையும் முன்மொழிகிறார். முன்னிரண்டு உரைகளில் உரையாமை என்பது இரப்பவனுக்கு ஆக, இந்த உரையில் அது ஈதலைச் செய்பவனுக்கு ஆகி வருகிறது. முந்தைய இரண்டு உரைகளிலும் ‘உரையாமை’ என்பதை மற்ற இரு உரையாசிரியர்களும் தொழிற்பெயராகக் கொள்ள இவ்வாசிரியர் இதனை வினையெச்சமாகக் கொண்டு உரையெழுதியுள்ளார்.

     பரிமேலழகரின் பண்பாட்டு முதிர்ச்சி

    ‘என்னுடைய பார்வை இது’ என்பதில் உறுதியாயிருக்கும் பரிமேலழகர் தவறு கண்ட இடத்துச் சுட்டிக்காட்டத் தயங்கினாரல்லர். ஆனால் இந்தக் குறட்பாவுக்கான உரைவேற்றுமைகளை மனமுவந்து முன்மொழிகிறார். ‘‘இப்படியும் சொல்லுகிறார்கள்’ எனப் பிற உரைகளுக்குப் பாசத்தோடு பரிந்துரைக் கடிதம் தருகிறார். அந்தக் கடிதத்தில் ‘அவர்கள் ஏன் அப்படி உரைசொன்னார்கள்?’ என்பதற்கான காரணத்தையும் விளக்குகிறார். அவர்தம் புலமைத்திறத்தை மெச்சுகிறார். எப்படி? உரையாமை என்பதற்குப் பொருள் காண்பதில் தொழிற்பெயராகவும் வினையெச்சமாகவும் உரைகண்ட சான்றோர்கள். ‘ஈதல்’ என்பதை தொழிற்பெயராகக் கருதாது பொருட்பன்மையாகவே கருதி உரையெழுதியிருக்கின்றனர். இவ்வாறு பொருட்பன்மையாகக் கருதலாம் என்பதுதான் பரிமேலழகர் கருத்தும். ஆனால் அவர் அதனைப் பொருட்பன்மையாகக் கருதாதற்குக் காரணம் பின்னர் உரைக்கப்படும்.

    பொருட்பன்மை என்றால் என்ன?

    ‘உரையாமை’, ‘ஈதல்’ ஆகிய இரண்டனையும் பரிமேலழகர் எதிர்மறை மற்றும் உடன்பாட்டுத் தொழிற்பெயர்களாகக்  கொண்டு உரையெழுதினார்.  அவர் சுட்டிய ஏனைய உரைகளில் ‘ஈதல்’ என்பது பொருட்பன்மையாக்கி உரைக்கப்பட்டிக்கிறது என்று அவர் கூட்டுகிறார். நம் உள்ள வினா ‘பொருட்பன்மை என்றால் என்ன?’ என்பதுதான். ஈதல் என்பது தொழில். அது ஒருதன்மைத்து ஆகாது. பலவகையாக விரியும். தானம் என்பதும் அது. தானம் பல வகைப்படும். ஈதல் தொழில் ஒன்றாயினும் இரப்பவர்க்குக் கொடுக்கப்படும் பொருட்களால் பலவாகும். அன்னதானம், கன்னிகாதானம், சொர்ணதானம், பூதானம், கோதானம், வித்யாதானம் என்பதனைக் காண்க. எனவே பிறர் உரைகளில் இந்த ‘ஈதல்’ என்பது பால்பகா அஃறிணைப் பன்மைப் பெயராகக் கொண்டு ‘உள’ என்னும் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிந்தது. ‘உரையாமை’ என்பதற்குப் பிறரெல்லாம் கண்ட உரைகள் மேலே சுட்டப்பட்டன. ‘ஈதல்’ என்பதற்கான விளக்கம் இங்கே குறிக்கப்பட்டு,

    ‘அவர் ‘ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பார்’

    என்னும் பரிமேலழகரின் விளக்கத்திற்கான காரணம் தரப்பட்டது.

    பரிமேலழகர் மறுக்கிறாரா? ஏற்கிறாரா?

    ‘ஈதல்’ என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைக்கும் பரிலேழகர் அதனைப் பன்மைப் பொருட்பெயராக உரைப்பார் கருத்துக்களை முன்னெடுக்கிறார். ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்கிறாரா என்பது தெளிவாகவில்லை. பல இடங்களில் ‘உரைப்பாரும் உளர். இன்ன காரணத்தினால் அதனை ஏற்கவில்லை’ என்பார். முரண்பாடுகளைச் சுட்டி ‘அஃது உரையன்மை அறிக’ என்பார். ‘அதிகாரப் பொருளோடு இயையாமையின் உரையன்று’ என்பார் இவற்றுள் எதனையும் குறிப்பிடாது வாளாச் சுட்டிக் கற்பாருக்கு ஒரு சிக்கலையும் உண்டாக்கி விடுகிறார். பிறர் உரைகளைப் பரிமேலழகர் சுட்டுவதனின்றும் அவற்றை மதித்துப் போற்றுகிறார். சரி. இவர் ஏன் அவ்வாறு உரையெழுதவில்லை? அல்லது இவர் ஏன் இவ்வாறு (உரையாமையை எதிர்மறைத் தொழிற்பெயராகவும் ஈதலை உடன்பாட்டுத் தொழிற்பெயராகவும் கொண்டு) உரையெழுதியிருக்கிறார் என்ற வினா தோன்றுகிறது.

    பரிமேலழகரின் உரை நுட்பம்

    பரிமேலழகரின் உரை விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் முந்தைய குறட்பாவின் (222) கருத்தினை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

    “நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று” (222)

    என்பது அந்தக் குறட்பா.

    “ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது. ஈந்தார்க்கு அவ்வுலகம் எய்துதல் இல்லை என்பார் உளராயினும் ஈதலே நன்று”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    ‘எனினும்’ என்பது இருவழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களில் ஈதல் சிறந்ததென்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.

    என்ற விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

    உரை மதிப்பீடு

    தன்னுரை தருகிறார். பிறர் உரைகளைச் சுட்டுகிறார். பிறர் உரைக்கான காரணத்தையும் பதிவு செய்கிறார். அவற்றை மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை. அதனால் ஆய்வுச் சிந்தனைக்கு அழகர் வழிவிடுகிறார். பரிமேலழகர் உரையெழுதுங்கால் இரண்டு உண்மைகளைக் கருத்திற் கொள்கிறார்.

    1. அதிகாரத் தலைப்பு
    2. அதிகாரப் பொருண்மை.

    அதிகாரத் தலைப்பு ஈகை என்பது. ‘ஈகை’ என்பது கொடுப்பவனைச் சார்ந்தது. இரப்பவனுக்கும் ஈகைக்கும் தொடர்பேதும் இல்லை. ‘ஈகை’ என்பது தொழிற்பெயர். அந்தத் தொழில் கொடுப்பவனுக்கே உரியதன்றிப் பெறுபவனுக்குப் பொருந்தாது. அதிகாரத்தின் எந்த இடத்திலும் இரப்பவனைப் பற்றிய குறிப்பேதும் இல்லை. அதிகாரப் பொருண்மை பகுப்பிலும் இது எதிரொளிக்கிறது.

    1. ஈகையின் இலக்கணம் (1)
    2. ஈதலின் சிறப்பு (2-7)
    3. ஈயாமையின் குற்றம் (8-10)

    இந்தச் சிந்தனை பிற உரையாசிரியப் பெருமக்களிடம் இருந்திருக்குமாயின் ‘உரையாமை’ என்பதை இரப்பவனுக்கு ஏற்றி இடர்ப்பட்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் ‘உரையாமை’ என்பது கொடுப்பவனுக்குரியது. அதிகாரம் அவனைப் பற்றியே பேசுகிறதாதலின். ‘ஏற்பது இகழ்ச்சி’ என்பது ஔவை மொழியாலும் ‘இரவச்சம்’ என்னும் நாயனார் அதிகாரத்தாலும் பெறப்படும். காட்டப்பட்ட உரைகளில் மூன்றாவது உரையிலும் ‘உரையாமை’ என்பதைக் கொடுப்பவனுக்கே உரித்தாக்கியுரைத்திருப்பதையும் காண்க. எனவே ‘உரையாமை’ என்பதை இரப்பவனுக்கு ஆக்கி உரைப்பது அதிகாரத்தின் குறட்பாக்களின் பொருண்மையோடும் மையக்கருத்தோடும் பொருந்தவில்லை என்பதைப் பரிமேலழகர் உணர்கிறார்.

    இரண்டாவதாக முன்பே சுட்டியபடி ‘நல்லாறு எனினும்’ எனத் தொடங்கும் குறட்பாவில் வினைமுதல் இல்லை. ‘தீச்செயல்’ ஒன்றும் ‘நற்செயல்’ ஒன்றும் என இரண்டு செயல்கள் குறிக்கப்படுகின்றனவேயன்றி அவை யாருக்கு உரியது என்பது தெளிவாகவில்லை. செய்யக் கூடாத செயலைத் தவிர்க்க வேண்டியவன் யார்? என்பதற்கும் ‘செய்ய வேண்டிய செயலைச் செய்பவன் யார்? என்பதற்கும் குறட்பாவில் (222) விளக்கமில்லை. ‘மாட்டேறு’ என்பது அழகர் அறிந்த உரை உத்தியாதலின் முந்தைய குறட்பாவையும் இந்தக் குறட்பாவையும் மாட்டேற்றி குறட்பாக்களின் கருத்துக்களை ஒன்றிணைத்துக் காட்டுகிறார். ‘உரையாமை’ என்பதையும் ‘ஈகை’ என்பதனையும் இனம் பற்றியும் ஒருவனுக்கே உரிய குணம் பற்றியும் தொழிற்பெயராகவே கொண்டு தமது கருத்தினைக் குறிப்பால் புலப்பட வைக்கிறார்.

    மனங்கோணா மறுப்பும் தெளிவும்

    பரிமேலழகரைத் தவிர மற்றவர்கள் ‘உரையாமையை’ இரவலனுக்கு ஆக்கியதால் ஈகை செய்வானுக்கு இருக்கக் கூடாத பண்பும் இருக்க வேண்டிய பண்பும் வெளிப்படவில்லை. இதனால் ‘நல்லாறு எனினும் ‘கொளல் தீது’ என்னும் நீதி ‘கேட்பாரின்றித்’ தவிக்கிறது. ஈதலைப் பொருட்பன்மையாகக் கருதி உரைத்ததால் குறட்பாவுக்குக் கூடுதல் பொருட்சிறப்பு வந்ததாகக் கருத முடியவில்லை. மாறாகப் பரிமேலழகரின் உரையால் முந்தைய குறட்பாவின் வினைமுதல் தெளிவாகிறது. ‘எல்லாரும் ஈகை செய்ய இயலாது. குலனுடையானுக்குரிய ஒழுக்கம் அது’ என்னும் தெளிவு கிட்டுகிறது. அவ்வொழுக்கமும் இருபகுதிகளை உள்ளடக்கியது என்பதும் புலனாகிறது. பிறருடைய உரைகளை மதித்துப் போற்றும் பரிமேலழகர் ‘தானாஅட்டித் தனது நிறுத்தல்’ என்னும் உத்தியை மிகவும் இலாவகமாகப் பயன்படுத்திப் பிற சான்றோர்களின் கருத்துக்களைச் சுட்டுவதோடு அமைகிறார். அவர் உரைநெறி பற்றிய தமது கருத்துக்களைத் தவிர்த்துவிடுகிறார். விளைவு? தம்மைப் பற்றிய பரிமேலழகர் கருத்து என்ன என்பது அறியாமலேயே அவ்வுரைகள் அமைதியாகின்றன.

    நிறைவுரை

    மாற்றுரை காணும் நேர்வுகளில் (583, 1001, 1116) ‘உரைப்பினும் அமையும்’ என்று ஏற்றுக் கொள்கிற பரிமேலழகர் இங்கே அவ்வாறு குறிக்காதது நோக்குதற்குரியது. அவ்வுரைகளால் குறட்பாவின் பொருண்மைப்பகுதி முழுமை பெற்றதாக அவரால் கருத இயலவில்லை போலும்! “உரையாமையையும் ஈதலையும்” தொழிற்பெயராக்கி உரைகண்ட தமது நெறியையும், ஈதலைப் பொருட்பன்மையாக்கிப் பிறர் கண்ட உரைநெறியையும் பந்தி வைக்கும் பரிமேலழகர் சீர் தூக்கும் பொறுப்பினைக் கற்பாருக்கு விட்டு ஒதுங்கிக் கொள்கிறார். ஏற்றுக் கொள்ளாததை மறுக்காமல் மறுக்கிறார். பிறர் மனம் கோணாமல் மறுக்கிறார். பரிமேலழகரின் உரை மட்டும் மாட்சியுடையதன்று. அவரும் மாட்சிமை உடையவரே என்பது இதனால் புலனாகலாம்.

    (தொடரும்…)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 29

    கதை வடிவில் பழமொழி நானூறு – 29

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல்- 59

    சீர்த்தகு மன்னர் சிறந்ததனைத்தும் கெட்டாலும்
    நேர்த்துரைத்(து) எள்ளார் நிலைநோக்கிச் – சீர்த்த
    கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும்
    ‘இளைதென்று பாம்பிகழ்வார் இல்’  

    பழமொழி- ‘இளைதென்று பாம்பிகழ்வார் இல்’

    எழுத்தாளரான  நான் கதை எழுத வந்திருக்கிறேன். குக்கிராமத்து வாழ்வியலை எழுதணும்ங்கறது என் நீண்ட நாள் ஆசை. புளோரிடாவில் வசிக்கும் எனக்கு இந்திய குக்கிராமத்தைப் பற்றி என்ன தெரியும். பிறந்து படித்து வேலைக்குப் போகிற வரை தில்லி வாசம். அப்பப்போ தமிழ்நாட்டு சொந்தக்காரங்களைப் பாக்கறதுக்காக சென்னை வருவது வழக்கம். அவ்வளவுதான். கல்யாணத்துக்கப்பறம் புளோரிடா போயாச்சு.

    நல்லவேளை தஞ்சாவூர் கல்யாணத்துல கலந்துக்கறதுக்காக இந்தியா வந்த இடத்துல மாயனப் பாத்தது நல்லதாப் போச்சு. கல்யாணத்துல சுருசுருப்பா அவன்தான் ஓடியாடி வேலைசெஞ்சான். சரி அவனை ஊக்குவிப்போமேன்னு நினைச்சு பேச்சு குடுத்ததுல பக்கத்து கிராமத்தச் சேந்தவன்னு தெரிஞ்சது. அதோட விளைவு அவன் கூட இப்ப இங்க வந்து உட்கார்ந்து இருக்கேன்.

    பஸ் ஸ்டாண்டுலேந்து நடந்துவந்த களைப்பப் போக்க ஆல மரத்தடியில போடப்பட்டிருக்கிற கல்திண்ணையில நான் இப்ப உக்காந்து இருக்கேன். மேல நிமிர்ந்து பாத்தா இடைவெளியில்லாம இலைகள். விதவிதமான பறவைகளின் ஒலி  சுத்திலும் ஏதோ நீர்நிலை இருக்கு போல. குளிர்ச்சியான காற்றுவேற வீசுது. ஆனா இதையெல்லாம் யாரும் ரசிக்கறதாத் தெரியவே இல்ல. சொல்லப்போனா ஆள் நடமாட்டமே இல்ல.

    மாயன் உட்கார்ந்து ஓய்வு எடுக்காம குறுக்கும் நெடுக்குமா நடக்கறான். ஒரு பக்கத்துல கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் வெளிகள். சரி அவனுக்கு என்ன அவசர வேலை இருக்கோன்னு நினைச்சு கிளம்பலாம்னு சொன்னேன். வரப்பு வழியா என்ன கூட்டிக்கிட்டு  போறான். இப்பதான் நாத்து நட்டுவச்சிருக்காங்க போல,  அந்த வயல் என்னயப்பாத்து நான் சொட்ட மண்டையா இருக்கேன்னு நினைக்காத. கொஞ்ச நாள் கழிச்சு வா என் தலையில அடர்த்தியா நெற்கதிர் விளைஞ்சு நிக்கும்னு சொல்லுது. அதுக்கு அடுத்த வயல இப்பதான் உழுதுகிட்டு இருக்காங்க.  அது  எனக்கு மொட்ட போடறாங்கனு சொல்லுமோ. இந்தக் கற்பனையும் நல்லாத்தான் இருக்கு. யோசிச்சுக்கிட்டே மாயனப் பின்தொடர்ந்து  நடக்கறேன். வரப்புக்குப் பக்கத்துல இருக்கற மரத்துலேந்து தூக்கணாங்குருவிக் கூடு விழுந்துகிடக்கு. இந்த வீடு பழசாயிடுச்சுன்னு நினைச்சு இப்ப அந்த குருவி புது வீடு கட்டிக்கிட்டு இருக்குமோ? எதுக்கும் இருக்கட்டும் காட்சிப்பொருளா அதை வைக்கலாம்னு கையில் எடுத்துப் பாக்கறேன்.

    மாயன் கைய அசைச்சு என்னயக் கூப்பிடறான். அடுத்த வயலுக்கு நடுவுல அவன் இறங்கி நிக்கறதால நானும் வரப்ப உட்டு கீழ இறங்கறேன். கால் சேத்துல புதைஞ்சு செருப்பு உள்ள மாட்டிக்கிச்சு. வேற வழியில்லாம செருப்ப அங்கயே உட்டுட்டு கஷ்டப்பட்டு நடந்து அவன் இருக்கற இடத்த அடைஞ்சேன்.

    மாயன் என்னயப் பாத்து சிரிக்கறான். ஏன்சார் மண்ணுக்குள்ள முதல் தடவ கால வச்சிருப்பீங்க போல. எப்படி இருக்கு அனுபவம். இதையும் எழுதி வச்சிக்கோங்கங்கறான். நிசமாவே ஒரு கிலோமீட்டர் நடந்து மக்கள் வசிக்கும் அந்தக் குடிசைப் பகுதிக்குப் போகறதுக்குள்ள ரொம்ப கஷ்டமாயிடுச்சு.

    சுத்திவர ஐம்பது அறுபது மண் குடிசைவீடுகள். மண்ணால கட்டப்பட்ட நாலு சுவத்துக்கு மேல ஒலைக் கூரை வேய்ந்து இருப்பாங்கபோல.  குடிசைக்கு உள்ளேயும் வெளியிலயும் தரைய சாணியால மெழுகி சுத்தமா வச்சிருக்காங்க. மின்சார வசதி இல்லாத கிராமங்கறதால எல்லா வீட்லயும் விளக்கு வைக்க வெளிச் சுவத்துல மாடாக் குழி அமைச்சிருக்காங்க. குடிசையோட கூரை மேல இடைவெளி விட்டு ஓரளவு காய்ந்த எருமுட்டைனு சொல்லப்படற வறட்டிய பரப்பி வச்சிருக்காங்க. அடுப்பெரிக்க விறகுகூட சேர்த்து உபயோகிப்பாங்களோ என்னவோ?  அந்த குடிசைகளுக்கு  நடுவுல ஒரு கல் மண்டபம் தெரியுது. இவ்வளவுதான் அந்தக் கிராமத்தின் அமைப்பு. மத்தபடி உள்ள எல்லா இடத்திலயும் வயல்கள்தான் இருக்கு.  நடுவுல இருக்கற கல் மண்டபத்தப் பத்தி கதை எழுததான் நான் இவ்வளவு சிரமப்பட்டு இங்க வந்தேன். மாயனத்தவிர வேற யாரும் பேச்சு குடுக்க மாட்டேங்கறாங்க. அவங்கவங்க வேலையில கண்ணும் கருத்துமா இருக்காங்க. சின்னஞ்சிறுசுங்க மாடு,வயல் வேலையப் பாக்கறாங்க. வீட்டைவிட்டு இறங்கமுடியா வயசானவங்க தென்னங்கீத்து, பனை ஓலை இதையெல்லாம் சீவி துடைப்பம், விசிறி, கூடை  இந்தமாதிரி சாமான்கள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

    மாயன் ஆரம்பிக்கிறான். இந்த மண்டபம் சோழர் கால குறுநில மன்னரோட சமாதி. எங்க ஊரோட கடவுள் இவர்தான். உருவம் எதுவும் வைக்கல காலையில எழுந்து எல்லாரும் இந்த மண்டபத்தப் பாத்து கையெடுத்து கும்பிட்டுட்டுத் தான் வேலைக்குப் போவாங்க. இவர் இந்த மாதிரி ஆறு கிராமங்களுக்கு மன்னரா இருந்தார். தன்னோட ஆட்சிக்குட்பட்ட வயல் வெளிகள எல்லாக் குடும்பத்துக்கும் சரிசமமா பிரிச்சிக்குடுத்து விவசாயம் பாக்க வச்சாராம். அதனால ஏழை பணக்காரன்னு வித்தியாசம் இருக்கல. இப்பவரை அப்படித்தான். கடைசி வரை அவர் தனக்குனு எந்த நிலத்தையும் வச்சுக்கல. இராச பரம்பரை முடிவுக்கு வந்தபிறகு அவர் வம்சத்துல வாழறவங்க  பிழைப்புக்குனு வேறவேற வேலையப் பாக்க ஆரம்பிச்சுட்டோம்.

    அப்டின்னா நீங்களும் அந்த மன்னர் பரம்பரையச் சேர்ந்தவரா. ஆச்சரியம் எனக்கு. மாயன் ஆமாம் என்கிறான். ஊருக்குள்ள எனக்கு இப்பவும் நல்ல மரியாதைதான். இருந்தாலும் பரம்பரை கவுரவத்தக் காப்பத்தணும் இல்லயா. அதனாலதான் டவுணுக்கு வந்து எனக்குத் தெரிஞ்ச வேலையப் பாத்து சம்பாதிக்கிறேன். கொஞ்ச பணம் சேந்தவொடனே இதே ஊரிலயே ஒரு வயல விலைக்கு வாங்கணும். அதுதான் என் இலட்சியம். அவன் பேசிக்கொண்டே போக என் மனதுள் ‘இளைதென்று பாம்பிகழ்வார் இல்’ எனும் பழமொழி ஞாபகத்துக்கு வருது. தன் கூட்டத்த விட்டுட்டு தனியா வந்துநிக்குதுங்கறதுக்காக பாம்ப யாராவது குறைச்சு எடை போடுவாங்களா. அதுபோலத்தான் மன்னர்களும் தம் நிலமையில தாழ்ந்தாலும் அவங்க பெருமை கெடாது. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தானே. என் கண்முன் மாயன் மணிமுடி தரித்த சோழமன்னனாகவே தெரிகிறான். அவனை முன்னால் நிற்கச் செய்து அந்த மண்டபத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.     .

    பாடல் – 60

    சிறியதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார்
    பெரிதாய கூழும் பெறுவர் – அரிதாம்
    ‘இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்
    கிடப்புழியும் பெற்று விடும்’..

    பழமொழி – . ‘இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும்’

    ராம்லீலா மைதானம் நிரம்பி வழிகிறது. வீட்டுக்குப் பக்கத்துல இருந்தாலும் ஒவ்வொரு வருசமும் இந்தக் கூட்டத்தப் பாத்து பயந்து கிட்ட போகறதேயில்ல. இந்தத் தடவ கண்டிப்பா பாத்தேயாகணும்ங்கற மன உறுதியோட நான் பக்கத்துவீட்டு பாசுவதி முகர்ஜி குடும்பத்தோட கிளம்பி வந்துட்டேன். முன்னால நிக்கற வரிசை நகருகிற மாதிரியே தெரியல. அவளோட ஐந்து வயசு குழந்தை வேற குதிக்க ஆரம்பிச்சிட்டான். பக்கவாட்டுல தெரியற ராட்சச ராட்டினம் அவனுக்கு பயத்தக் குடுக்குது போல. தூக்கிக்கச் சொல்லி அழறான். இன்னிக்கு எப்டித்தான் சுத்திப்பாக்கப் போறோமோ. அந்த மைதானத்துக்குள்ள மேஜிக் ஷோ, மரணக்கிணறு, விதவிதமான ராட்டினங்கள், கடைகள் எல்லாம் இருக்காம். எதிர் வீட்டு ஆன்ட்டி சொன்னாங்க. எது எப்படியோ அவங்க வாங்கிட்டு வந்த ஊறுகாய்களும், அப்பள வகைகளும் நல்லா இருந்திச்சு. அத வாங்கதான் நான் கஷ்டப்பட்டு போய்க்கிட்டிருக்கேன். பாசுவதி வேற எள்ளுமிட்டாய், கடலை மிட்டாய் எல்லாம் விதவிதமா கிடைக்கும்ங்கறா. முதல்ல உள்ள போனாதானே.

    அதுக்குள்ள முன்னால கூச்சலும் குழப்பமும். வரிசைய ஒழுங்குபடுத்த நிறைய போலீஸ் நிக்கறாங்க. என்ன பிரயோசனம். நம்ம மக்கள ஒழுங்கு படுத்தறது பிரம்ம வித்தையாச்சே. ஐயோ பாவம். ஒரு போலீஸ்காரர் மைக்ல கத்திக்கிட்டு நிக்கறார். இங்க நடக்கறது இராமயண நாடகம்தான். இதில நடிக்கறவங்க

    யெல்லாம் மனுசங்க. அதனால யாரும் உணர்ச்சிவசப்படக் கூடாதுனு. எனக்கு முன்னால நிக்கற அம்மா விளக்கம் சொல்றாங்க. அது ஒண்ணுமில்ல பாபி. இராவணன் வேஷம் போட்டவன் சிகரெட் குடிக்கறதுக்காக பந்தல விட்டு வெளிய வந்தான் போல. யாரோ ஒரு இராம பக்தன் அவனப் போட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டான். அதப் போலீஸ் தடுக்கப் போனா எங்க சீதா மாதாவ இவன் அவமானப்படுத்திட்டு எப்டி உயிரோட இருக்கலாம்னு சண்டை போடறானாம். அந்த நேரம் பாத்து என்ன சண்டைனு பாக்கறதுக்காக இராமர் வேசம் போட்டவன் வெளிய வரதப் பாத்து மொத்தக் கூட்டமும் ஜெய் ஸ்ரீராம்னு கத்திக்கிட்டே கீழ உழுந்து கும்பிட்டிருக்கு. அதனால பந்தலில போட்ட மண்ணு பூராகிளம்பி இப்ப புழுதியா நிக்குது. இராவணனுக்கு அடிபட்டதுனால நடிக்க முடியாதாம். அதான் வேற ஒருத்தன ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்ப என்னடான்னா நாடகத்த ஏன் நிறுத்தினீங்க. இது அபசகுனம்னு இன்னொரு கூட்டம் கத்துது.

    ஓ அதுதானா. நாங்க இந்த வரிசையில வந்து நிக்கும்போது ஜெய்ஸ்ரீராம்னு சத்தம் கேட்டது. சரி. இந்தக் குழம்பமெல்லாம் தீர்ந்து எப்ப கேட்டத் திறப்பாங்களோ. யோச்சிச்சுக்கிட்டே நிக்கறேன். பின்னாலேந்து யாரோ கூப்பிடற மாதிரி இருக்கு. திரும்பிப்பார்த்தேன். ஒரே ஆச்சரியம். முன்னால என் வீட்டுப் பக்கத்துல குடியிருந்த கரிஷ்மா நிக்கறா. மெதுவா என்னய அவ பின்னால வரச் சொல்றா.

    பாசுவதிக்கு பொறுமை போயிடுச்சு. அவ வீட்டுக்குத் திரும்பிப்போறேன்னு சொல்லிட்டா. நான் மட்டும் வரிசையிலேந்து விலகி கரிஷ்மா பின்னால போறேன். அவ எனக்கு ஒரு ஸ்பெஷல் பாஸ் குடுத்து இன்னொரு கேட் வழியா உள்ள கூட்டிக்கிட்டுப் போயிட்டா. அந்தப் பகுதியில ஒரே கடைகளா இருக்கு. எல்லாமே இந்த ராம்லீலாவுக்காக போடப்பட்ட கடைகள். அதில ஒரு கடைக்கு என்னயக் கூட்டிக்கிட்டுப் போய் உட்காறச் சொல்றா. அது ஒரு உயர் ரக கையேந்தி பவன் மாதிரி இருக்கு. என்ன சாப்பிடறீங்கனு கேட்டுட்டுப் பதிலை எதிர்பார்க்காம உள்ள போய் கட்லெட் கொண்டு வந்து வைக்கறா.

    வேற வழியில்லாம அவ முகத்தையே பாக்கறேன். தீதீ(அக்கா)  என என்னை அன்பா அழைச்சுட்டு இந்த கட்லெட் ஞாபகம் இருக்கானு கேக்கறா. எனக்கு ஒண்ணும் புரியல. அவ பேசப் பேச எனக்கு எல்லாம் ஞாபகம் வருது.

    அவ எங்க சொசைடியில குடியிருக்கும்போது துர்கா பூசைக்காக அவங்கவங்க விருப்பப்படுகிற கடைகளைப் போடலாம்னு அறிவிச்சாங்க. அப்ப நான்தான் அவகிட்ட கட்லெட் பண்ணி எடுத்துக்கிட்டு வா. விக்கலாம்னு சொன்னேன். ரொம்ப தயங்கித் தயங்கி ஐம்பது கட்லெட் பண்ணி எடுத்துக்கிட்டு வந்தா. எல்லாப் பொருளின் விலையும் பத்து ரூபாய்தான் இருக்கணும்ங்கற நியதிப்படி இரண்டு கட்லெட்டை ஒரு தட்டில் வைத்து பத்து ரூபாய்னு வித்தோம். அன்னிக்கு இராத்திரி அவ என்ன புலம்பு புலம்பினா. நாம அநியாய விலைக்கு வித்துட்டோம்னு நினைக்கிறேன். செலவு செஞ்சதவிட மிக அதிகமா பணம்வந்திருச்சுனு.

    மெதுவா அவளுக்குப் புரியறமாதிரி எடுத்துச்சொன்னேன். நீ எப்பவும் ஸ்வெட்டர் போட்டு பணம் சம்பாதிக்கற இல்ல. அத வியாபாரம்னு நினைக்கறதால வர இலாபம் உனக்குத் தப்பாத் தோணல. இப்போ இதை நீ பொழுதுபோக்குக்கு செஞ்சதா நினைக்கிற. அதனாலதான் வருத்தப்படற. பேசாம இதையே நீ நிரந்தர வியாபாரமா பண்ணலாமே. உன் கைப்பக்குவம் நல்லா இருக்கு என ஹிந்தியில் அவளுக்கு உசுப்பு ஏத்தினேன்.

    அதோடவிளைவு வீடு மாத்தி போனப்புறம் வியாபாரத்த மாத்திட்டாளாம். முதலில சின்னதா ஆரம்பிச்சு விரிவுபடுத்தி இப்ப பல கிளைகள் உள்ள கட்லெட் ஸ்டாலுக்கு அவள் சொந்தக்காரியாம். என்னயப் பாத்து நீங்க எனக்கு இருக்கறதுக்கு இடம் சொன்னீங்க. நான் அதை உபயோகிச்சு படுக்க இடம் தயார் பண்ணிட்டேன்கிறா. நம்ம ஊர்ல இதத்தான் ‘இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும்னு பழமொழியாச் சொல்லுவாங்க. அது எங்க இவளுக்குப் புரியப் போகுது. இருந்தாலும் அவளை மனதார வாழ்த்திவிட்டு என் ஊறுகாய் மற்றும் அப்பளம் ஸ்டால்களுக்கு வழி கேட்டுக்கொண்டுஎழுந்தேன்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 42

    பழகத் தெரிய வேணும் – 42

    நிர்மலா ராகவன்

    பெண்களுக்கு அழகு எதற்கு?

    சீனாவில் சாவோயாங் (Chaoyang) என்ற மிக ஏழ்மையான ஒரு கிராமம். அருகிலுள்ள நகரம் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

    அக்கிராமத்து ஆண்கள் வேலை வாய்ப்பைத் தேடி நகர்ப்புறங்களுக்குச் சென்றுவிட, பெண்களும் குழந்தைகளும் மட்டுமே எஞ்சியிருந்தனர். பல ஆண்கள் வருடத்திற்கு ஒருமுறைதான் திரும்பி வருவார்கள்.

    `நம் அழகைக் கண்டு ரசிக்க ஆண்கள் இல்லாத நிலையில் எதற்கு நல்ல ஆடைகளை அணிந்து, ஒப்பனையும் செய்துகொள்ள வேண்டும்?’ என்று பெண்கள் நினைக்கவில்லை. ஆனாலும், தம் புற அழகில் அசிரத்தையாக இருந்தார்கள்.

    அவர்களுடைய ஓயாத வேலை அப்படி.

    இஞ்சி, தர்பூசணி போன்றவைகளைப் பயிரிடுவதோடு, பன்றிகளையும் வளர்த்துவந்தார்கள். கடும்வெயிலைப் பொருட்படுத்தாது வேலை செய்துவிட்டு வந்தபின், குழந்தைகளையும் வீட்டு வேலைகளையும் கவனித்தாக வேண்டும்.

    இந்நிலையில், தங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றாமல் போனதில் அதிசயமில்லை.

    அவ்வப்போது, நகர்ப்புறங்களில் வாழும் நாகரிகமான பெண்களுடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டு, சிறுமை உணர்ச்சியுடன் காலந்தள்ளிவந்தார்கள்.

    ஒரே ஒரு இளம்பெண்ணுக்கு மட்டும் இந்நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அதைச் செயலாக்கினாள், பத்து ஆண்டுகளுக்குமுன்.

    சீனாவின் தலைநகருக்குப் போய் ஒப்பனைக்கலையைக் கற்றுக்கொண்டு, அவளுடைய கிராமத்துக்கு அருகே இருந்த நகரில் ஓர் அழகுநிலையத்தைத் திறந்தாள்.

    கடந்த பிப்ரவரி மாதம் கிராமத்திற்கு வந்தபோது, கோவிட் தொற்றுக் கட்டுப்பாட்டால் அங்கேயே தங்க நேர்ந்தது.

    அவளுடைய நாகரிகமான ஆடையணிகளுடன் ஒப்பனையால் நேர்த்தியாக இருந்த முகமும் பிற பெண்களின் கவனத்தைத் தூண்டியது. ஒப்பனையைப்பற்றி அவளை விசாரித்தாலும், அவர்களுக்கு ஏதோ தயக்கம். அதைப் போக்க முடிவெடுத்தாள் அந்த அழகுக்கலை நிபுணர்.

    அவளுடைய பாட்டிதான் அவளுடைய முதல் வாடிக்கையாளர்.

    ஓய்வு, ஒழிச்சல் இல்லாத வேலையால் அங்கிருந்த பிறரைப்போலவே பாட்டியின் கைகளும் காய்த்துப்போயிருந்தன. கால்களும் வெடித்துப்போயிருந்தன. அவற்றை மிருதுவாக்க முயற்சி எடுத்தாள் பேத்தி Zhou. (இப்பெயரைத் தமிழில் எப்படி எழுதுவது? ஜௌ என்றா?)

    பாட்டிக்கு முக ஒப்பனையும் உண்டு.

    அந்த மாற்றத்தைக் கண்ட பிற பெண்களுக்கு ஆச்சரியத்துடன், ஆசையும் எழுந்தது: `நம்மால்கூட அழகாக மாறமுடியும் போலிருக்கிறதே!’

    துணிந்து வந்தார்கள்.

    ஒப்பனை செய்துகொண்டதும், பண்டிகைக்காலங்களுக்கென்று வாங்கி வைத்திருந்த ஆடைகளை அணிந்து தம்மை அழகுபடுத்திக்கொண்டனர்.

    Zhou தன் உபகரணங்களுடன் தயாராக வைத்திருந்த கண்ணாடியைக் காட்டி, அவர்களும் அழகுதான் என்ற நம்பிக்கையை ஊட்டினாள். (பல பெண்களிடம் முகம் பார்க்கும் கண்ணாடிகூட கிடையாது). அவர்களது மாற்றத்தைப் புகைப்படத்தில் எடுத்தாள்.

    ஒரு பெண்மணிக்கு மட்டும் வீட்டில் எவ்வளவு தேடியும், நல்ல உடை எதுவும் கிடைக்கவில்லை.

    `என் குடும்பத்திற்காகவே உழைத்து வந்ததில், என்னைப்பற்றிய சிந்தனையே எனக்கு இல்லாமல் போய்விட்டது,’ என்ற வருத்தம் எழ, `இனிமேல், எனக்காகவும் ஏதாவது செய்துகொள்ளப்போகிறேன். அழகான ஆடைகளை உடுத்தப்போகிறேன்,’ என்று தீர்மானித்தாள்.

    இருபது பெண்களுக்கு மேற்பட்டவர்கள் அப்படி அழகாக மாறினார்கள். ஒப்பனை செய்துகொள்ள ஒவ்வொரு முறையும் ஒன்றரை மணிநேரம் செலவழிந்தாலும், அதனால் அவர்கள் மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது.

    `இப்போது, `நாம் ஒன்றும் நகர்ப்புற மக்களைவிட தாழ்ந்தவர்கள் இல்லை என்ற தன்னம்பிக்கை பிறந்துவிட்டது,’ என்ற ஒரு பெண்மணி, எப்போதோ விழுந்திருந்த பல்லுக்கு மாற்றுப்பல் பொருத்திக்கொண்டாளாம்!

    அலங்காரம் ஆண்களுக்காக அல்ல

    `ஆண் மயில் தோகை விரித்து ஆடுவது பெண் மயிலை மயக்கத்தான்! அதுபோல், பெண்கள் அலங்கரித்துக்கொள்வது ஆண்களுக்காகத்தான்!’ என்பது பெரும்பாலான ஆண்களின் கருத்து.

    `யாருக்காக இப்படி அழகாக அலங்கரித்துக்கொண்டிருக்கிறாய்?’ என்று மனைவியைப் பார்த்து ஒரு கணவன் கேட்டால், அவன் முட்டாள். பெண்களைப் புரிந்துகொள்ளத் தெரியாத, அல்லது விரும்பாத, ஆணாதிக்கவாதி.

    இரண்டே வயதான பெண்குழந்தைகூட ஒரு புதிய ஆடையோ, வளையோ அணிந்துகொண்டவுடன் கண்ணாடியை நோக்கி ஓடும் — தன்னை அழகுபார்த்துக்கொள்ள. யாரையும் கவர வேண்டும் என்பது அக்குழந்தையின் நோக்கமல்ல. தான் அழகாக இருக்கிறோம் என்பதில் ஒரு மகிழ்ச்சி.

    “நான் அழகா இருக்கேன். இல்லே?” என்று பெருமைப்பட்டுக்கொள்ள, தன்னம்பிக்கை கூடும்.

    பொதுவாகவே, பெண்கள் தம் மகிழ்ச்சிக்காகத்தான் அலங்கரித்துக்கொள்கிறார்கள்.

    `கல்யாணம் ஆகிவிட்டது. இனி எதற்கு அழகு?’

    `முப்பது வயதுக்குமேல் அலங்காரம் செய்துகொண்டால், பிறர் என்ன சொல்வார்களோ!’

    `நிமிர்ந்து நடப்பதும், உடலழகைப் பராமரிப்பதும் விமானப் பணிப்பெண்களுக்குத்தான்!’

    ஏதோ பயமே பெண்களை அப்படிப் பேசவைக்கிறது.

    அத்துடன், அழகைப் பராமரிக்க அளவான உணவு, உடற்பயிற்சி என்று உடலை வருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறதே! (சிறு வயதில் போதிய ஆகாரம் கிடைக்காது அவதிப்பட்டவர்கள் வசதி கிடைத்ததும், அளவுக்கு அதிகமாக உண்பார்கள்).

    தன்னம்பிக்கை வளர உணவைக் கட்டுப்படுத்து

    நான் எந்த மருத்துவரிடம் போனாலும், `எடையைச் சற்றுக் குறைக்கலாம்,’ என்பார், நைச்சியமாக.

    நாற்பத்து ஐந்து வயதுக்குமேல் உடற்பயிற்சி மட்டும் போதவில்லை. ஆகாரத்தையும் பாதியாகக் குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஐந்து வருடங்களுக்குப்பின், இன்னும் குறைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால், எடை ஏறிக்கொண்டே போனதை இடுப்பில் தொங்கிய சதை பறைசாற்றியது.

    கனமான வேலை செய்யாததாலும், உடல் வளர்ச்சி குன்றியதாலும் ஒரே அளவு ஆகாரமே எடையைக் கூட்டியது.

    `குண்டானால் என்ன!’ என்ற அலட்சியம் ஏற்படவில்லை. கால்வலி, சோம்பல், ஓயாத அசதி என்று எழுந்த வேண்டாத உபாதைகளைப் பொறுத்துப்போவதைவிட உணவுக் கட்டுப்பாடு உகந்ததாகப்பட்டது. பழங்களை நிறையச் சாப்பிட்டு, சர்க்கரையையும் வெகுவாகக் குறைத்துக்கொண்டேன்.

    எனக்கோ, இனிப்பு வகைகள் மிகவும் பிடிக்கும். முதலில், `நான் பாவம்!’ என்ற தன்னிரக்கம் ஏற்பட்டது. ஆனால், சுறுசுறுப்பு அதிகரிப்பது போலிருக்க என் `தியாகம்’ பெரிதாகப்படவில்லை.

    சீனக் கிராமத்துப் பெண்கள் தம் நலனைப் பெரிதாகக் கருதாது, கடமை உணர்வையே பெரிதாக மதித்ததால் அவர்களுடைய தன்னம்பிக்கை எப்படிப் பாதிக்கப்பட்டுவிட்டது, பார்த்தீர்களா?

    தனிப்பட்ட காரணங்களுக்காக நான் என் உடலைப் பராமரித்ததால் பிற பெண்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும் என்று நினைத்ததில்லை.

    கதை

    மேற்பயிற்சிக்காக என்னைத் தலைநகரிலிருந்து மலேசியாவின் வடபகுதியிலிருந்த ஊருக்கு அனுப்பியிருந்தார்கள். எப்போதும்போல் இல்லாவிட்டால், புது இடத்தில் வெறுமை, சலிப்பு என்று ஏதாவது வரும் என்று தயாராகப் போயிருந்தேன்.

    மற்ற ஊர்களிலிருந்து வந்தவர்கள் என்னைப்பற்றி நிறைய வம்பு பேசினார்கள். உதட்டுச்சாயமும் காலணிகளும்கூட என் புடவை வண்ணத்தில் இருந்தது கண்டு அவர்களுக்கு ஆச்சரியம். மருதோன்றி உபயத்தில், தலைமயிர் சிவப்பு நிறத்தில் மின்னியது!

    நாற்பது வயதுக்கு மேற்பட்ட அந்த மலாய்பெண்கள் மத போதனைக்கான பாடத்தைக் கற்பிக்கிறவர்கள். கை, கால் இரண்டிற்கும் உறை அணிந்திருப்பார்கள். தலைமயிரும் வெளியில் தெரியாதபடி `தூடோங்’கால் (TUDUNG) மறைத்திருப்பார்கள்.

    வெளித்தோற்றத்தில் நான் வெகுவாக மாறுபட்டிருந்ததால்  அவநம்பிக்கை.

    அவர்களில் ஒருத்தி வயிற்றுவலியால் துடிக்க, “என்னால் உதவ முடியும். செய்யட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அவளுடைய விரல்களைப் பிடித்து அழுத்தி, சிகிச்சை அளித்தேன். சில நிமிடங்களில் குணமாகியது.

    பிறகு, ஒருத்தி ரகசியமாகத் தெரிவித்தாள்: “நீ அழகாக அலங்கரித்துக்கொள்வது ஆண்களைக் கவரத்தான் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம்!”

    நான் தலையில் அடித்துக்கொள்ளாத குறை.

    அதன்பின், என்னைக் கண்டால் முகமலர்ந்து, கட்டி அணைத்துக்கொள்வார்கள்!

    உதவி செய்ததில் வித்தியாசங்கள் மறைந்துபோய்விட்டன!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 105 (வாரி)

    சேக்கிழார் பாடல் நயம் – 105 (வாரி)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    பாடல் :

    வாரி   சொரியும்  கடல்முத்தும்  வயல்மென்  கரும்பிற்  படுமுத்தும்
    வேரால் விளையும்  குளிர்முத்தும்  வேழ  மருப்பின்  ஒளிர்முத்தும்
    மூரல்  எனச்சொல்  வெண்முத்த  நகையார்  தெரிந்து  முறைகோக்கும்
    சேரர்  திருநாட்  டூர்களின்முன்   சிறந்த  மூதூர்  செங்குன்றூர்.

    பொருள் :

    கடலில் மிகவும்  எடுத்தெறியம்  வண்ணம்   விளைகின்ற ஒளி வீசும் முத்துக்களையும், வயலில்  விளைகின்ற கரும்பிலே படுகின்ற முத்துக்களையும், மூங்கில்களில் விளைகின்ற குளிர்ச்சியுடைய முத்துக்களையும், யானைத்  தந்தங்களில் களிற் பிறக்கும் விளக்கமுடைய முத்துக்களையும் இம்முத்துக்களே இவர்களது பல்வரிசைகள் என்று சொல்லத்தக்க வெண்முத்துப் போன்ற நகையினை யுடைய பெண்கள், வகை தெரிந்து முறைப்படக் கோக்கின்ற சிறப்புடைய, சேரர்களது திருநாட்டிலே உள்ள பல ஊர்களிலும் முன்வைத்து எண்ணும்படி சிறந்த பழமையான ஊரே    திருச்செங்குன்றூர்.

    விளக்கம்:

    முன்பாட்டிற் சொல்லிய கடல், நிலம் ,மலை  வளங்களிலே சிறந்த வளத்தினை அவ்வந்நிலங்களில் முறைப்பட  வைத்து வளப்படுத்திக் காட்டுகிற  அழகைக்  காண்க. முத்துக்கள் பற்பல இடங்களிற் பிறக்கு மென்பது நூல் துணிபு. முன்குறித்த இம் மூன்றிடங்களினும் வரும் ஏனைய வளங்கள் தவிர, முத்து என்பதொருவளனே இங்கு இம் மூன்றிடங்களினும் விளையவும்,  அவை ஊர்களின் வந்து உடன் பெருகிமல்கவும் உள்ள சிறப்புக் கூறுகின்றது காண்க. திரைசெய் கடலின் வளனுக்கு இங்கு வாரி சொரியும் கதிர்முத்தும் என்றும், திருந்து நிலனின் செழுவளனுக்கு வயல்மென் கரும்பிற் படுமுத்தும் என்றும், வரையின் வளனுக்கு வேரல் விளையுங் குளிர்முத்தும் வேழமருப்பின் ஒளிர்முத்தும் என்றும் முறையே வகுத்துக் காட்டினார்.

    முத்து என்றதொரு வளனை  மட்டுமே  காட்ட.  இதுபோலவே பிறவும் காண்க எனக் கூறியதாயிற்று. மலை நாடாதலின் அச்சிறப்பு நோக்கி அதற்கு வேரல்  முத்தும் வேழ முத்தும் என இரட்டிப்பு வளன் கூறினார். வேரல் – மூங்கில். வேழம் – யானை. இவ்விரண்டும் குறிஞ்சிநிலக் கருப்பொருள்கள். இவற்றின் வரும் முத்துக்கள் அப்பொருள்களில்  உண்டாகும்  வளன்களாம்.

    வாரி சொரியும் கதிர் முத்தும் – சொரியும் – மிகுதி காட்டிற்று. திருமறைக்காடு, கொற்கை முதலிய  முத்துக் குளிக்கும் கடற்றுறைகளில் அவ்வப்பருவக்  காலங்களில் இவை மிகுதியாய்ச் சொரியும் காட்சி காணத்தக்கது.

    “உப்பளத்தின், முன்றில் தோறுஞ் சிறுமடவார் முத்தங் கொழிக்கு மறைக்காட்டு“   முதலியவை காண்க.

    வயல் மென் கரும்பிற் படும் முத்து – திருந்து நிலனின் செழுவளன் என்றதற்கேற்ப, அவ்வாறு திருந்திய வயல்களில்  விளைவித்த கரும்பு திருந்த விளைந்து மனிதர் கைப்படும் முத்து. படுதல் – விளைதல், கைப்படுதல் என இருபொருளுங்கொள்ள நின்றது. வயலின் விளைகின்ற கரும்புகள்  அத்தனையிலும் காண்பரிதாகிக் குறித்த சிலவற்றில் மட்டும் விளைவதாம். அவைதானும் மனிதர் கைப்படுதல் மிக அரிதாம். ஆதலிற் படும் என்றார்.

    வேரல் விளையும் குளிர் முத்தும் வேழமருப்பின் ஒளிர் முத்தும் – ஒரோர் காலத்தன்றி இவை மனிதர் கையில் அங்கங்குக் கிடைப்பரிதாய் மலைகளில் உதிர்க்கப்பட்டு மழை வெள்ளத்தின் வழி, ஆறுகளில் அடித்துக்கொண்டுவரப் பெறும் நாட்டு வளன்கள். கதிர் முத்து, படு முத்து, குளிர் முத்து, ஒளிர் முத்து என்ற நால்வகை அடைமொழிகளின் வேறுபாடு அவ்வம் முத்துக்களுக்குரிய சிறப்பியல்புகள் குறித்து நின்றது. கடன் முத்தம் சலசம் எனப்படும். நீரிற் பிறப்பதால் நீரோட்டம் என்ற கதிர்ப் பரப்பு உடையது. இவை இப்பி சங்குகளிற் பிறப்பன. கரும்பிற்படும் முத்தம் இறுகிக் கடினமானது.

    “கருஞ்சகட மிளகவளர் கரும்பிரிய வகம்பாயுங்\ கழுமலமே“ என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமுங் காண்க. மூங்கின் முத்துக் குளிர்ந்த கிரணங்களும், யானை முத்துத் தொகுதியாய்க் கூடிய ஒளியும் உடையன என்பர். இவற்றின் விரிவுகள் திருவிளையாடற் புராணம் மாணிக்கம் விற்ற படலத்துள்ளும் பின்னும் இவைகட்குரிய கலைஞான நூல்களுள்ளும் கண்டு கொள்க.

    முன்பாட்டினும் இப்பாட்டினும் கடலினின்றும் நாடு சென்று, அங்கு நின்று மலையேறிச் செல்லும் பொருள் வைப்பு முறையும் காண்க. உயிர்களை, அவை வீழ்ந்து நின்ற கடலாழத்தினின்றும் ஏற்றி மலையுச்சியிற் சேர்த்தி வைக்கும் நாடு என்பது உட்குறிப்புப் போலும். இது பற்றியே வரும்பாட்டில்

    “உலகேறும் பெறுமை யுடையதுதான்“என்றதும் காண்க. “திருத்தொண்டத் தொகையாலுலகு விளங்க வரும், பேறு தனக்குக் காரணராம்“ (501) என முடித்துக் காட்டியபடி, இந்நாயனார் உலகிற்கு  உதவிய பேறு இந்நாட்டின் நன்மைக்குப் பொருத்தமுடைத்து எனப் பொருந்தக் காட்டிய குறிப்பும் காண்க. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனக் கூறும் வைப்பு முறையை  மாற்றி நெய்தலை முதலாக வைத்துக் கூறியதற்கும் இதுவே கருத்துப் போலும்.திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தும் பிற இடங்களிலும் காண்க.  அன்றியும், இந்நாடு மழுவீசியதாற், கடலினின்றும் போந்துபெற்ற நாடாதலின் அப்பிறப்பிடத்தின் சிறப்பும் பண்பும் தோன்ற நெய்தலை முதலிற் கூறினார் என்றலுமாம். சிருட்டி முறையிலும் நீரினின்றே நிலனுண்டாவதா மென்பர்.

    தீதிலாத் திருத்தொண்டத் தொகை (35) என்ற இடத்துப்பார்க்க. வளன் பலவற்றுள்ளும் முத்துக்களை எடுத்துக் கூறிச் சிறப்புரைத்ததும் அக்குறிப்பினைப் பற்றியதேயாம். என்னை? முத்து – விடுபடுவது என்ற பொருள் தருதலானும், முத்தியும் அக்காரணம்பற்றியே அப்பெயர் பெறுதலானும், இங்கு இந்நாடு நெய்தல் நிலம், மருதநிலம், குறிஞ்சி நிலம்,   எங்கணும் உயிர்களுக்கு வீடுபேற்றினையே காட்டும் முத்திப்பொருள் தருவதாம் எனப் பொருத்திக் கூறியபடி. திருமணம் காண வந்தார்க்கெல்லாம் முத்திப் பேறளித்த எமது ஆளுடைய பிள்ளையாருக்குத் திருமண அணிகலன் முற்றும் முத்துக்களாற் செய்து குறியிட்டுக் காட்டிய ஆசிரியர் திறமுங் காண்க.. அச்சிறப்பினை இங்கு வைத்து இதன் உள்ளுறை

    சிறப்பையும் அணிநலனையுங் கண்டு களிக்க. உயிர்களின் நால்வகைத் தோற்றமும், அவை பெறும் நால்வகைப்பேறும் குறிக்க நால்வகை முத்துக் கூறினார் என்றலுமாம்,முல்லையும் உடன் கொள்ளப்படுமென்று முன்னர்க்குறித்தற் கேற்பக் குறிஞ்சிக்கு இரண்டு முத்துக்கள் கூறிய பொருத்தமுங்காண்க.

    மூரல் எனச்சொல் வெண்முத்த நகையார் – இம்முத்துக்கள் இவர்களின் மூரலேயாம் என்று உவமிக்கப் பெறுகின்ற பல்வரிசையினையுடைய பெண்கள். மூரல் – புன்முறுவல். பற்கள் முத்துப்போல்வன என்றுவமிப்பது வழக்கு. முத்துக்கள் பல்போல்வன என்ற  சிறப்பும் காண்க. நகை -ஆகுபெயராய்ப் பல்வரிசையை உணர்திற்று.

    அறிவில்லாத பொருள்கள் ஆகிய கடல், கரும்பு, மூங்கில், யானைக் கோடு இவை தாமும் அந்நாட்டில் முத்துடையனவாயின், அறிவும் உயிரும் உள்ள பெண்களும் முத்துடையவர்களேயாம் என்றார். அம்முத்துக்கள் எவையும் எமது மூரலுக்கு ஒப்பாகா என அவைகளைக் கண்டு அவர் நகைக்கின்றனர் என்ற நயமுங் காண்க.

    தெரிந்து முறைகோக்கும் – ஒளி – வடிவு – கனம் – கதிர் என்பனவற்றின் வேற்றுமை ஒற்றுமைகளைத் தெரிந்து எம்முறையில் முறைப்படுத்திக் கோத்தால் அழகும், அதிக மதிப்பும் பெறுமோ அம்முறையிற் கோக்கின்ற, இப்பாட்டாலே அந்நாட்டுக் கருப்பொருள் உரிப்பொருள்களின்சிறப்பும், நீர்வளம், நிலவளம், பொருள்வளம், மக்கட்சிறப்பு, தொழில் முதலிய பலவும் அழகுபெற ஆசிரியர் முறைகோத்து அமைத்தது கண்டு மகிழ்க.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 17

    பரிமேலழகர் உரைத்திறன் – 17

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    திருக்குறளில் ‘நோக்கு’

    முன்னுரை

    ‘நோக்கம்’ என்ற சொல்லை அனைவரும் அறிவர். ‘பார்வை’ என்ற சொல்லும் ‘காட்சி’ என்பதும் அவ்வாறு பழக்கமானதே. ஆனால் ‘நோக்கு’ என்ற சொல் அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நோக்கம் என்னும் சொல்லின் திரிந்த வடிவம் ‘நோக்கு’ எனவும் சிலர் கருதியிருக்கக் கூடும்.  கண்ணின் வினை ‘பார்வை’ என்றால் மனத்தோடு கூடிய கண்ணின் வினைக்கு நோக்கம் என்று பெயர். திருவள்ளுவர் முன்னதைப் ‘பொதுநோக்கு’ என்பார். பின்னதை ‘நோக்கு’ என்பார். இன்னும் தெளிவாகச் சொன்னால் உள்ளக்குறிப்பினைக் கண் வெளிப்படுத்துவதற்கே நோக்கம் என்று பெயர். ஆனால் நோக்கு என்பது ‘பார்வை’, ‘நோக்கம்’ என்பவற்றினின்றும் மாறுபட்டது. இவற்றுக்கும் ‘நோக்கு’ என்பதற்கும் எள்ளின் முனையளவும் தொடர்பு கிடையாது. இந்த நோக்கு திருக்குறளில் அமைந்திருக்கும் பாங்கினை உரையாசிரியர் பரிமேலழகர் வெளிப்படுத்துமாற்றை ஆராய்வதையே இக்கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    நோக்கு என்றால் என்ன?

    உண்மையில் இந்த ‘நோக்கு’ என்பது மக்கள் வழக்கில் உள்ளதே. திருமண வீட்டில் விருந்துண்டவன் சொல்வான் “விருந்து சாப்பிடுகிற மாதிரி இல்லையே?”  இளைஞர் வட்டத்தில் ஒரு பேச்சு கேட்டிருக்கலாம் “படம் பாக்குற மாதிரி இல்லையே?” விருந்து உண்கிற மாதிரி இருக்க வேண்டும். படம் பார்க்கிற மாதிரி இருக்க வேண்டும். ஊன்றிக் கவனித்தால் ‘விருந்து’ என்பதும் ‘படம்’ என்பதும் சில அம்சங்களை உள்ளடக்கி இருக்கவில்லையே என்னும் ஏக்கம் அந்தத் தொடர்களில் அமைந்திருப்பதைக் காணலாம். இந்த அம்சங்கள் செயப்படுபொருளில் அமைந்திருக்க வேண்டும். சரியா? கவிஞன் படைக்கிறான். இந்த அம்சங்கள் படைப்பில் இருக்க வேண்டும். இதுபோல்தான் நோக்கு என்பதும். ‘நோக்கு’ என்பது நோக்குகிற வினையைக் குறிக்கும். அந்த வினைக்கு உகந்ததாக அதற்கான செயப்படுபொருள் அமைந்திருக்க வேண்டும். ஒருவன் ஒரு கவிதையைப் ‘பார்த்தான்’ என்பதற்கும் ‘படித்தான்’ என்பதற்கும் ‘நோக்கினான்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. நோக்கிற்கான கூறுகள் இருந்தால்தான் அது நோக்கிற்குரியது. அந்தக் கூறு காலங்கடந்தும் எண்ணி வியப்பதாயும் வியந்து திளைப்பதாயும் அமைதல் வேண்டும். இதிலிருந்து ‘நோக்கு’ என்பது கவிதையில் அமைந்திருக்கும் கூறுகளின் தொகுதி என்பது பெறப்படும். இது ஒரு செய்யுளின் அல்லது கவிதையின் மாத்திரை முதலாக அடி ஈறாக அமைந்திருக்கும். எப்படி அடுத்த பத்தியில்.

    தொல்காப்பியம் கூறும் நோக்கு

    பொருளதிகாரச் செய்யுளியலில் செய்யுளின் உறுப்புக்களாக முப்பத்திரண்டு கூறுகளை ‘மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ’ (தொல் 1259) என நிரல்படுத்தும் தொல்காப்பியம் “நோக்கே” என்று இதனைக் குறிப்பிடுகிறது. இது மேற்குறிப்பிட்ட நூற்பாவில் முற்பகுதியான இருபத்தாறு சிறந்த கூறுகளில் ஒன்று. நூற்பாவின் பிற்பகுதியில் கூறப்படும் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எட்டும் முன்னர்க் கூறிய இருபத்தாறுக்கு இணையானவை அல்ல என்பது இளம்பூரணர் கருத்து.

    “மாத்திரை முதலா அடிநிலை காறும்
    நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” (1306)

    என்னும் நூற்பாவில் நோக்கு என்பதற்கான விளக்கமும் பொருள் வரையறையும் பெறப்படுகிறது. இந்த நூற்பாவிற்கு உரையாசிரியப் பெருமக்கள் எழுதிய குறிப்புரைகளைக் காண்பது பொருள் தெளிவுக்கு உதவக்கூடும்.

    நோக்கிற்கான இளம்பூரணர் விளக்கம்

    தொல்காப்பியத்திற்கு உரைத்தடம் காட்டிய ஆசிரியர் இளம்பூரணர் மேற்கண்ட நூற்பாவிற்குப் பின்வருமாறு உரையெழுதுகிறார்.

    “மாத்திரை முதலா அடிநிலையளவும் நோக்குதலாகிய கருவி நோக்கென்று சொல்லப்படும். காரணம் எனினும் கருவியெனினும் ஒக்கும். நோக்குதற்காரணம் என்பதால் உண்டற்தொழில் என்றாற்போலக் கொள்க” அதாவது யாதானும் ஒன்றைத் தொடுக்கும் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங் காலும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை.”

    உரையாசிரியர் இட்ட தடத்தைப் பின்வந்த உரையாசிரியர்கள் சிறிதளவு செப்பமிட்டார்களே தவிர அடிப்படையில் பொருள் மாற்றம் ஏதும் செய்ய  இயலவில்லை என்பதை அவர்தம் உரைகளால் அறிந்து கொள்ள முடியும்.

    பேராசிரியர் கருத்து

    “ஆறுதலையிட்ட அந்நாலைந்து’ எனவும் ‘எட்டு’ எனவும் இருவகையான தோன்றக் கூறியது ஏனையது போலாமல் எட்டுறுப்பும் ஓரொரு செய்யுட்கு ஒரோ ஒன்றேயும் வரும் என்பது அறிவித்தற்கும் அவைதாம் அச்செய்யுள் பல தொடர்ந்த வழியே பெரும்பான்மையும் உறுப்பு என்பது அறிவித்தற்கும் அவ்வாறு கூறினான் என்க. எனவே ஒழிந்த உறுப்பு இருபத்தாறும் ஒன்று ஒன்றனை இன்றியமையாவென்பது பெற்றாம். “நோக்கென்பது மாத்திரை முதலாகிய உறுப்புக்களைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல்” எனப் பொதுநூற்பாவில் எழுதிய பேராசிரியர்,

    “மாத்திரையும் எழுத்தும் அசைநிலையும் சீரும் முதலாகக் கொண்ட  அடி நிரம்பும் துணையும் நோக்குடையவாகச் செய்தல் வன்மையாற் பெறப்படுவது நோக்கென்னும் உறுப்பாவது. ………………..…….. நோக்கிப் பயன்கொள்ளும் கருவியை நோக்குதற் காரணம் என்றான் என்பது”

    என்று நோக்கு என்பதற்குப் பொருள் விளக்கம் தருகிறார். நச்சினார்க்கினியர் கருத்து பின்வருமாறு அமைந்திருக்கிறது.

    நச்சினார்க்கினியர் கருத்து

    இலக்கியத்தை இலக்கணமாக்கி, இலக்கணத்தை இலக்கியமாக்கி உரையெழுதி உரைக்கோபுரத்தின் உச்சந்தொட்ட உரைக்கடல் நச்சினார்க்கினியர் இந்த நோக்கு பற்றித் தம் கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.

    “நோக்கென்றது மாத்திரை முதலிய உறுப்புக்களையுடைத்தாய்க் கேட்போர்க்கு நோக்குதல்படச் செய்தவை. நோக்குதல் – பயன்போடல் என்று பொருள் வரையறை எழுதி,

    “மாத்திரை முதலிய அடிநிரம்பும் துணையும் கேட்டோர் மீண்டும் நோக்கிப் பயன்கோடலையுடையதாகச் செய்யும் கருவி, நோக்கென்று  பெயர் கூறப்படும் என்றவாறு”

    என ‘நோக்கு’ பற்றிய மேற்கண்ட நூற்பாவிற்குப் பொழிப்புரை தருகிறார். நோக்கு பற்றி ஏனைய உரையாசிரியர்களினும் நச்சினார்க்கினியர் கருத்து பெரிதும் ஆராயத்தக்கதும் தகுதி மிக்கதுமாம். அவர் எழுதிய உரைகளில் இந்த உறுப்பைப் பயன்படுத்தாமல் உரைகண்ட வரலாறே இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம்.

    உரையாசிரியர்கள் பார்வையில்

    உரையாசிரியர் இளம்பூரணர் நோக்கிற்கான பொருள் வரையறை தந்து அதனை “ஒரு நோக்காக ஓடுதல், பல நோக்காக ஓடுதல், இடையிட்டு  நோக்குதல்” என மூவகை எனப் பகுத்தும் காட்டுகிறார். காட்டி, நாலடியாரிலிருந்து இரண்டு பாடல்களை (1, 172) முதலிரண்டிற்கும் “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு’ எனத் தொடங்கும் திருமுருகாற்றுப்படையை இடையிட்டு நோக்குதலுக்கும் எடுத்துக்காட்டி விளக்கம் தருகிறார். பேராசிரியரும் பின்னர் வந்த நச்சினார்க்கினியரும் “முல்லை வைந்துனை தோன்ற” எனத் தொடங்கும் (அகம். 4) பாடலை எடுத்துக்காட்டி விளக்குகின்றனர். நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணி குணமாலை இலம்பக வரிகளை மேற்கோள் காட்டி கூடுதல் விளக்கம் தருகிறார்.

    நோக்கு என்ற சொல்லின் இலக்கியப் பயன்பாடு

    கூறாமை நோக்கி, முகம் நோக்கி, இருநோக்கு, சிறுநோக்கம்,  நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள், ‘யான் நோக்குங்காலை’ குறிக்கொண்டு நோக்காமை, செற்றார்போல் நோக்கும் யான் நோக்க பொதுநோக்கு, கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் என்பன திருக்குறளில் உள்ள ‘குறிப்பறிதல்’ என்னும் இரண்டு அதிகாரங்களுள் பயின்று வரும் சொற்களாகும். ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்பது கம்பராமாயணம். ‘நோக்கரிய நோக்கே’ என்பது திருவாசகம். ‘நோக்க நோக்க களியாட்டம்’ என்பது பாரதி வாக்கு. ‘நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்’ என்பது பாவேந்தர் வரி. எண்ணற்ற பயன்பாடுகள் உள. காட்டப் புகின் கட்டுரை அளவு விஞ்சும்.

    நோக்கு எனபது பற்றிய கட்டுரையாளர் விளக்கம்

    முன்னுரையில் குறிப்பிட்டதுபோல ‘நோக்கு’ என்பது படைப்பில் இருக்க வேண்டிய அரிய கூறுகள். அது மாத்திரையிலிருந்து தொடங்கும். சான்றாக அளபெடை பற்றிப் பலரும் அறிவர். ஆனால் அந்த அளபெடையை ஒரு நோக்கத்திற்காகத்தான் பயன்படுத்தியிருக்கிறார் திருவள்ளுவர். இது பற்றிய விரிவு அடுத்த கட்டுரையில். குறட்பாவில் பயன்படுத்தபட்டுள்ள ஒவ்வொரு மாத்திரையும் அசையும் சீரும் அடியும் ஒரு காரணம் பற்றியனவாகவே இருக்கின்றன. இந்தக் காரணங்களே அவற்றை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. எனவே ஒரு நூல் பன்முறை படிக்கப்படுகிறது என்றால் படிப்பதற்கான காரணங்கள் அங்கே அமைந்திருக்கின்றன என்பதை அறிதல் வேண்டும். இந்தக் காரணங்களையே ‘நோக்கு’ என்னும் சொல் குறிக்கிறது. ‘நோக்குதற் காரணம்’ என்பது அதுதான். இனிக் குறிப்பிட்ட குறட்பாவில் ‘நோக்கு’ அமைந்துள்ள சிறப்பினைக் கண்டு மகிழலாம்.

    குறட்பா – பொழிப்பு –  விளக்கம்

    திருக்குறள் கட்டுமானம் முழுமையும் நோக்கிற்குரியதாகவே இருக்கிறது என்பது பரிமேலழகர் கருத்து. அவர் கருத்து இதுதான் என்பதை அவர் எழுதிய உரை நன்கு புலப்படுத்தும். பரிமேலழகரின் உரைநுண்ணியத்திற்கு ஈடு கொடுக்கும் அளவுக்குக் குறள் அமைந்திருக்கிறது. இது வள்ளுவத்தைத் தாழ்த்துவதோ குறைத்து மதிப்பிடுவதோ ஆகாது. ஏனைய உரைகளைக் கற்றார் பரிமேலழகர் உரையினைக் கற்கும் பொழுது உள்ளத்தில் ஏற்படும் உணர்வே இது. ‘பரிமேலழகர் நோக்கியதை மற்றவர் ஏன் நோக்கவில்லை?’ என்ற எண்ணம் தோன்றுவதை யாரே தடுக்க இயலும்? வேறு வாய்பாட்டில் சொன்னால் திருக்குறளில் அமைந்துள்ள நோக்கினைக் கண்டறிந்து கூறுவதில் பரிமேலழகர் முன்களப் பணியாளராகவே திகழ்கிறார் எனலாம். இவ்வாறு பரிமேலழகரின் தனித்த உரைநோக்கிற்கு உரிய குறட்பாக்களில்,

    “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
    ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்” (415)

    என்னும் குறட்பாவும் ஒன்று. இதற்கு,

    “வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும். காவற்சாகாடு உகைப்பார்க்கு  ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.”

    (இதனைக் காவற்சாகாடு உகைப்பாற்கு ஒழுக்கமுடையார் வாய்ச்சொற்கள் “வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும் எனப் பொருள் உவமம் என்ற நிலையில் படிக்கலாம். இந்தப்  பொழிப்புரையைத் தொடர்ந்து,

    “அவாய் நிலையான் வந்த உவமையடையால் பொருளடை வருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல்போல உதவுதல் தளர்ந்துழி அதனை நீக்குதல். ‘கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின் அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பது தோன்ற ‘ஒழுக்கமுடையார்  ‘வாய்’ என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்பு உணர நின்றது. அவற்றைக் கேட்க என்பது குறிப்பெச்சம்”

    என்று விளக்கவுரை தந்திருக்கிறார்.

    நோக்கு அமைந்திருக்கும் இடம்

    ஒழுக்கமுடையார் சொல், வழுக்குநிலத்தில் ஊற்றுக்கோல் போல் என்பது மட்டுமே குறட்பாவில் உள்ளது. குறட்பாவை ஊன்றிப் படித்தால் இது புலனாகும்.  ஒழுக்கமுடையார் சொல் யாருக்குப் பயன்படும் என்பதற்குப் பாட்டில் குறிப்பில்லை. ஊற்றுக்கோலின் பயன்பாடு வழுக்கு நிலத்திற்கா? அந்நிலத்தில் நடப்பர்க்கா என்பதற்கும் விடையில்லை. ஊற்றுக்கோல் என்ன செய்யும் என்பதற்கும் தெளிவில்லை. வாயிலிருந்து வருவதே சொல்லாயிருக்க ‘வாய்ச்சொல்’ எனக் கூறியது ஏன் என்பதற்கான விடையும் காணவேண்டியதிருக்கிறது. சொல்லை ஊற்றுக்கோலோடு ஒப்பிடுவதால் மட்டும் குறட்பாவின் கருத்து நிறைவடைந்துவிடுமா (ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் ஊற்றுக்கோல் அற்று என்றுதானே உள்ளது)? என்பதும் புரியவில்லை. ஆனால் நமக்குப் புரியவில்லை என்பதற்காக இல்லை என்று சொல்லிவிட இயலுமா? இந்தக் கூறுகளை (நோக்கினை) உள்ளடக்கித்தான் திருவள்ளுவர் குறட்பா எழுதியிருக்கிறார். அவற்றைத்தான் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார். பரிமேலழகரின் உரை நோக்கிற்கான காரணங்கள் குறட்பாவில் ஆழ்ந்து பரவியிருக்கின்றன. அவை ஒவ்வொன்றினையும் முற்றாக அறிந்து கொள்வதன் மூலம் திருக்குறளின் குறட்பாக்கள் நோக்கு என்னும் உறுப்பால் கட்டியமைக்கப்பட்டிருக்கும் பாங்கு புலனாகலாம்.

    ஏழு சீர்களில் பரிமேலழகர் கண்டறிந்த நோக்கு

    இந்தப் பாட்டில் நோக்கு அமைந்திருக்கும் பாங்கினை இனிக் காணலாம். அதாவது இந்தச் சொல்லை இந்த இடத்தில் பெய்ததற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து கண்டறியுமாறு அந்தச் சொல் அமைந்திருப்பதுதான் நோக்கு.  ஏழு சீர்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பரிமேலழகர் பிரித்து நோக்கித்  திருக்குறளில் ‘நோக்கு’ அமைந்திருக்கும் சிறப்பினை எடுத்துக் காட்டுகிறார். பொழிப்புரை, விளக்கவுரை என்னும் இரண்டின் அடிப்படையிலும் இதனை நிரலாகக் காணலாம்.

    1. ‘இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே’ என்றுதான் பாட்டில் இருக்கிறது. ஆனால் பரிமேலழகர் “ வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும்” என்று உரையெழுதுகிறார். வழுக்கல் நிலத்துக்கும் ஊற்றுக்கோலுக்கும் தொடர்பில்லை. வழுக்கல் நிலத்தில் இயங்குவார்க்கும் ஊற்றுக்கோலுக்குமே தொடர்பு.  இயங்குவார்க்குத்தான் ஊற்றுக்கோல் உதவுமே தவிர நிலத்திற்கு உதவாது. பாட்டில் இல்லாத இந்தத் தெளிவினைப் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார். இனி, ‘இயங்குவார்க்கு ஊற்றுக்கோல்’ என்றால் பொருள் புலப்படாது. ‘இயங்குவார்க்கு ஊற்றுக்கோல் என்ன செய்யும்? ‘உதவும்’. ஊன்றப் பயன்படுவதால் அது உதவி.
    1. இனி ‘ஊற்றுக்கோல் அற்றே’ என்றே பாட்டில் அமைந்துள்ளது. ‘அது அவர்க்கு உதவுவதுபோல என்று இல்லை. பரிமேலழகர் ‘உதவுதல்போல’ என்று நோக்கி உரையெழுதுகிறார். ‘ஊற்றுக்கோல் உதவுதல் அற்றே’ என்று கொள்ள வேண்டுமாம்.
    1. ‘ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்’ என்பதற்குக் காவற்சாகாடு உகைப்பார்க்கு (அரசனுக்கு) ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்’ என்று உரை காண்கிறார் பரிமேலழகர். அதாவது வழுக்கல் நிலத்து இயங்குவார்க்கு ஊற்றுக்கோல் உதவும் என்றால் ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் யாருக்கு உதவும் என்பதற்குத் திருக்குறளில் விடையில்லை.  அதாவது ஊற்றுக்கோல் யாருக்கு உதவும் என்பதும் பாட்டில் இல்லை. ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல் யாருக்கு உதவும் என்பதும் பாட்டில் இல்லை. ‘இயங்குவார்க்கு’ என்ற அடைச்சொல்லை அவாவி உவமத் தொடர் அமைந்திருப்பது போலவே, காவற்சாகாடு உகைத்தார்க்கு என்னும் அடைச்சொல்லை உவமேயத்திற்கு அதாவது பொருளிற்கு வருவித்துக் கொள்கிறார் பரிமேலழகர். நிலமாளும் அரசனுக்கு உதவும் என்பது கருத்து. அதனை வருவித்து உரையெழுதுகிறார். இதனை,

    “அவாய் நிலையான் வந்த உவமையடையால் பொருளடை வருவிக்கப்பட்டது.”

    என்னுந் தொடரால் விளக்கிக் காட்டுகிறார். உவமத்தில் அது அவாய் நிலையாம். பொருளில் அதனை வருவித்துக் கொள்கிறாராம். என்ன நுட்பம்?

    1. ஊற்றுக்கோல் வழுக்காமல் காக்கும். சரி. ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் காவாற்சாகாடு உகைத்தார்க்கு உதவுவது யாங்ஙனம்? இதற்கும் பரிமேலழகர் எழுதிக்காட்டுகிறார். அரசபாரம் தாங்காது மனம் தளர்ச்சியடைந்தவழி அத்தளர்ச்சியை ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் போக்குமாம். இதனை “உதவுதல் தளர்ந்துழி (வறுமையினால் அல்லது அறியாமையினால் துன்பமுற்றபோது) அதனை நீக்குதல்” என்ற தொடரால் விளக்குகிறார்.
    2. ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் என்பது குறட்பாவில் பயின்றுள்ள தொடர். இந்தத் தொடரில் இரண்டு சொற்கள் பரிமேலழகரின் நோக்கிற்குக் காரணமாகிறது. ஒன்று ‘ஒழுக்கமுடையார்’ என்ற சொல். இரண்டு வாய்ச்சொல். கேள்வி என்ற அதிகாரத்தில் வருகின்ற இந்தப் பாட்டில் ஒழுக்கத்திற்குத் திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுப்பானேன் என்னும் தன் வினாவிற்குப் பரிமேலழகரே விடைசொல்லுகிறார். எப்படி? இப்படி!

    ‘கல்வியுடையரேனும் ஒழுக்கமிலாதார் அறிவிலராகலின் அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பது தோன்ற ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்’ என்றார்”.

    1. இரண்டாவது ‘வாய்ச்சொல்.’ சொல் என்ற அளவே போதுமானதாயிருக்க வாய்ச்சொல் என வேண்டாது கூறியது ஏன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அதற்கும் விடையிறுக்கிறார்.

    “‘வாய்’ என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்பு உணர நின்றது”.

    என்று எழுதுகிறார். சொல் என்னும் கருவி எவர்வழியாகச் செயல்படவேண்டும் என்பதில் பரிமேலழகரின் நோக்கு வியப்பளிப்பதாக உள்ளது. இவ்வளவு நோக்கிற்கும் திருக்குறள் இடந்தருகிறது.

    பரிமேலழகரின் மீயுயர் நோக்கு

    1. இந்தப் பாட்டு ‘கேள்வி என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. கேள்வி என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் தந்த பரிமேலழகர் “கேட்கப்படும் நூற்பொருளைக் கற்றறிந்தார் கூறக் கேட்டல்” என்று விளக்கம் தருகிறார். அதாவது கேள்வி என்பது தொழிற்பெயர். அதனை வியங்கோள் பொருளில் பயன்படுத்தியே இந்த அதிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பாட்டில் கேட்க என்று பொருள்படும்படியான சொல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை நோக்குகிறார் பரிமேலழகர். வழுக்கல் நிலத்தில் இயங்குவார்க்கு ஊன்றுகோல் உதவுவது போலத் தளர்ச்சி வந்துழி காவற்சாகாடு உகைப்போர்க்கு ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் உதவும்! அதனால் அவர் சொல்லைக் கேட்கவேண்டும்’ என்று இருந்தாலேயே பொருண்மை நிறைவுறும் எனக் கருதுகிறார் பரிமேலழகர். அவர் எழுதுகிறார்,

    அவற்றைக் கேட்க என்பது குறிப்பெச்சம்”

    பாட்டில் சொல்லாவிட்டாலும் அதிகாரம் கேள்வியாதலின் அத்தகைகய பயன்தரும் சொற்களை நாட்டை ஆளுகிற மன்னன் கேட்டுச் செலுத்துவதே செங்கோல் சிறக்கும் நெறியாகும்’ என விளக்கமளிக்கிறார் பரிமேலழகர்.

    நிறைவுரை

    ‘உறுப்பு இருபத்தாறும் ஒன்று ஒன்றனை இன்றியமையாவென்பது பெற்றாம்.’ என்னும் பேராசிரியர் கருத்தும் ‘கேட்போர்க்கு நோக்குதல்படச் செய்தவை’ என்னும் நச்சினார்க்கினியர் விளக்கமும் நோக்கு என்பதன் பொருளைத் தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்றன. பொதுவாக ‘நோக்கு’ என்பது பார்ப்பவர் வினையாக இருக்கும். இங்கே அது படைப்பிலுள்ள கூறுகளைக் குறிப்பதாக அமையும். இந்தக் கூறுகளே அதற்குப் பெருஞ்சிறப்பைத் தந்து அவ்விலக்கியம் நீடித்து நிலைப்பதற்குக் காரணமாக அமையும். திருக்குறளில் நோக்கு அமையாத குறளே இல்லை என்பதும் அதில் பரிமேலழகர் அறியாத நோக்கும் இல்லை என்பதும் அவ்விரண்டனையும் கற்பார் அடையும் வியப்பு!. ‘பானை சோற்றுக்குப் பதச்சோறாக’ மேற்கண்ட குறளில் அமைந்துள்ள நோக்கினைப் பரிமேலழகர்வழி ஆராய்ந்து கண்டதன் மூலம் அவர் உரைத்திறம் உணரலாம்!

    (தொடரும்…..)

    Share