பரிமேலழகர் உரைத்திறன் – 20

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
சொல் – சொற்பொருள் – சொற்பொருள் விளக்கம்
முன்னுரை
திருக்குறளில் பயின்று வரும் சீர்களாகிய சொற்கள் உரையாசிரியர்கள் பார்வையில் அகராதிப் பொருளைத் தருவதில்லை. திருக்குறளின் பொருண்மையை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டு எழுதும் உரையாசிரியர்கள் அச்சொற்களுக்குப் புலனெறி வழக்கத்திலும் உலகியல் வழக்கத்திலும் உள்ள பொருளைத் தராது சிறப்புப் பொருளைத் தருகின்றனர். இவ்வாறு இயல்பாக உள்ள பொருளைத் தவிர்த்துப் பொருள்புலப்பாட்டை நோக்கமாகக் கொண்டு பாட்டில் அமைந்துள்ள சொற்களுக்குச் சிறப்புப் பொருள் தருவதையே தலைப்பின் ‘சொற்பொருள்’ என்பது குறிக்கும். இனி அப்பொருளுக்கேற்ற விளக்கத்தையும் அவர்கள் தந்திருக்கிறார்கள். சொல், சொற்பொருள், அதற்கான விளக்கம் என்னும் நிரலை முற்றுமாகக் கற்கின்ற நிலையில்தான் அச்சொல்லுக்கு இயல்பான பொருளைத் தவிர்த்துச் சிறப்புப் பொருள் தந்ததன் உரை நுட்பம் புலப்படுகிறது. ஆசிரியர் பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் இவ்வாறு உரைத்த சில இடங்களை ஆராய்ந்து சுட்டிக்காட்டுவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.
சேர்தல் – நினைத்தல்
‘’அவன் சென்னை சென்று சேர்ந்தான்’’ ‘இந்த வண்டி மதுரைக்கு எப்போது சென்று சேரும்?’ ‘இந்தப் பள்ளியில் நான் சேரலாமா?’ என்றெல்லாம் செவிமடுத்திருக்கலாம் இந்தத் தொடர்களில் உள்ள ‘சேர்தல்’ என்னும் சொல் அந்த வாகனம் அல்லது மாணவன் பௌதிக ரீதியாகச் சேர்வதைக் குறிக்கும். அதாவது வாகனம் சென்னை சேரும். மதுரை சேரும். மாணவன் பள்ளியில் சேர்வான். இந்தச் ‘சேர்தல்’ என்னும் சொல் ‘மானம்’ என்னும் பகுதிப்பொருள் விகுதி பெற்றும் வழக்கில் பேசப்படுவது உண்டு. ‘அவன் நல்லவனாகத்தான் இருந்தான் சேர்மானம் சரியில்லை, கெட்டுவிட்டான்’ என்பது போல அது அமையும். இங்கே ‘சேர்மானம்’ என்பதைப் ‘பிடிமானம், அடமானம், வெகுமானம், வருமானம்’ என்ற சொற்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால்,
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்” (3)
என்னும் குறட்பாவில் வரும் ‘சேர்ந்தார்’ என்னும் சொல்லுக்கு மேற்கண்ட பொருள் கொண்டால் இறைவனுடைய திருவடியை அடியார் தழுவிக் கொண்டதாகப் பொருள்படும். பாட்டின் பொருண்மை அதுவன்று. தற்காலத்தில் ஒருவர் ‘இறைவனடி சேர்ந்தார்’ என்றால் இறந்துபோனார் என்றுதான் பொருள். அவருக்குத்தான் சுவரொட்டி வழியாகக் கண்ணீர் சிந்துவார்கள். அதே பொருளை இங்கே கொண்டால் பாட்டுக்கான பொருள் முரண்படும். என்ன முரண்? உள்ளத்தில் இறைவனை இடைவிடாது எண்ணுவார் வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார் என்பதுதான் பாட்டின் பொருள். கடவுள்வாழ்த்து பாயிரத்துள் அமைந்திருப்பதாலும் நூலின் ஒட்டுமொத்தப் பொருளையும் சுருக்கமாக முன்னுரைபோலச் சொல்ல வேண்டியது பாயிரத்தின் பணியாதலாலும் மேற்கண்ட ‘சேர்ந்தார்’ என்னும் சொல்லுக்கு இயல்பான அகராதிப் பொருளைச் சொல்லுவது முரணாகும் என்பதோடு குழப்பத்தையும் உண்டாக்கும். எனவே பரிமேலழகர்,
“சேர்தல் – இடைவிடாது நினைத்தல்”
என்று உரையெழுதிக் காட்டுகிறார். சரி, இவ்வாறு இவர் உரைகொள்ளுவது சரியா? சரியானால் அதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால் திருக்குறள் அதிகாரக் குறட்பாக்களை அவர் நோக்கிய பாங்கு புலப்படும். அதாவது,
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்” (3)
“வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல” (4)
“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (5)
“பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்” (7)
என்னும் நான்கு குறட்பாக்களையும் அவர் ஓரலகாகக் கொள்கிறார். அது என்ன ஓரலகு? இறைவனை வழிபடு முறைகளின் தொகுப்பாகக் காண்கிறார். மனம், மொழி, மெய்களால் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான் வழிபடு முறைகள். நினைப்பதும் வழிபாடு. இறைவன் திருநாமங்களைச் சொல்வதும் வழிபாடு. நித்திய, நைமித்தியங்கள் செய்வதும் வழிபாடே. மூன்றும் தத்தம் அளவில் சிறந்து நிற்பன. ‘உள்ளம் பெருங்கோயில்’ என்றார் திருமூலர். ‘வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்’ என்பார் அப்பர் பெருமான். “தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க” என்பார் ஆண்டாள் நாச்சியார்.
மேற்கண்ட உணர்வுப் பதிவுகளை உற்றுநோக்குவார் பரிமேலழகர் அதிகாரத்துக்குள் உள்ள இந்த நான்கு குறட்பாவையும் ‘இறைவழிபாடு’ என்னும் ஓர் அலகுக்குள் கொண்டு வரும் நுட்பம் உணரக்கூடும். அதாவது இறைவனை நினைத்தவர்க்கும் வீடுபேறு உண்டு. அவன் திருநாமங்கள் வாழ்த்தியோருக்கும் வீடுபேறு உண்டு. அவன் நெறிநின்றார் தமக்கும் வீடுபேறு உண்டு என்பது கருத்து.
‘நெறிநின்றார்’ எனத் தெளிவாக அமைந்திருக்கிறது. ‘புரிதல்’ என்பதும் ‘சேர்தல்’ என்பதும் அவ்வாறு அமைந்திருப்பதாகக் கருத முடியாது. புரிதல் என்பதற்குப் புரிந்து கொள்ளுதல் என்பதே நேர்பொருளாகும். எனவே ‘புரிதல்’ என்பதற்கு ‘எப்போதும் சொல்லுதல்’ என்று உரை காண்கிறார் அழகர். அதாவது இறைவன் திருநாமங்களை எப்போது உச்சரிப்பது ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ அத்திருநாமங்களைச் சொல்லுவது வீடுபேற்றுக்கு வழிவகுக்கும் ஆதலின் இறைவனுடைய பொருள்சேர் புகழை விரும்பிச் சொல்லுதல் வேண்டும் என்கிறார். இதற்கேற்பப் ‘புரிதல்’ என்னும் சொல்லுக்கு ‘எப்போதும் சொல்லுதல்’ என உரைகாண்பதை அறியலாம்.
அறியவே மனத்தால் எண்ணுவார்க்கும் வீடுபேறு என்பதும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதனைத் திருவள்ளுவர் இரண்டு பாடல்களால் சொல்லுவதாகப் பரிமேலழகர் கருதுகிறார். இறைவனை எண்ணுகிறபோது அவனுடைய ஏனைய உறுப்புக்களைவிடத் திருவடியே நினைவுக்கு வரும்., வரவேண்டும் என்பது மரபு. ‘ஈசன் அடிபோற்றி எந்தையடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி’, ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்னும் திருவாசகமும் அவை. ‘மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’ என்பது பெரியபுராணம். ‘திருவடிப்புகழ்ச்சி’ என்பது வள்ளலார் பாடியது. ‘சொற்கழிவு பாதமலர்’ என்பது திருவாசகம். அந்தத் திருவடியை மனத்தால் எண்ணுதல் வேண்டுமல்லவா? ‘மாணடி சேர்ந்தார்’, ‘இலானடி சேர்ந்தார்’ என்னும் இரு பாடல்களில் பயின்றுள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கு இடைவிடாது நினைத்தல் என உரைகாண்கிறார். ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை’ என்பது அபிராமி அந்தாதி. ‘மாணடி சேர்ந்தார்’ என்பதிலுள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கு இவ்வாறு உரைகண்ட பரிமேலழகர் அடுத்த பாடலில் ‘இலானடி சேர்ந்தார்’ என்பதில் உள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கான அவ்விளக்கத்தை மீளவும் குறிக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கது.
- ‘மாணடி சேர்ந்தார்’, இலானடி சேர்ந்தார்’ என்னும் இரண்டு குறட்பாக்களையும் இறைவனைச் சிந்திப்பதற்கும்
- ‘புகழ்புரிந்தார்’ என்பதை இறைவன் திருநாமங்களைச் சொல்லுவதற்கும்
- ‘ஒழுக்க நெறிநின்றார்’ என்பதைச் செயலுக்கும்
அவர் பொருத்திக் காட்டி எழுதுகிறார்.
“இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும் வாழ்த்தலும் அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவார் என்பது கூறப்பட்டது”
என்னும் விளக்கத்தாலேயே அவர் ‘சேர்தல்’ என்பதற்கு ‘இடைவிடாது நினைத்தல்’ என்றும் புரிதல் என்பதற்கு எப்போதும் சொல்லுதல் என்றும் உரையெழுதியதற்கான காரணம் புலப்படுகிறது. ‘சேர்தல் என்பது குறட்பாச் சொல். இடைவிடாது நினைத்தல் என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள். ‘புரிதல்’ என்பது குறட்பாச் சொல். ‘எப்போதும் சொல்லுதல்’ என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள். இவ்விரு சொற்பொருளுக்குமான அவர் தந்த காரண விளக்கங்கள் மேலே தரப்பட்டன.
‘குறை’ என்றால் இன்றிமையாத பொருள் (முக்கியம்)
பொதுவாகக் ‘குறை’ என்ற சொல்லுக்குக் குற்றம் என்பது பொருள். ‘எப்பொழுதும் குறைசொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கு இயல்பு’ குறையே இல்லாதவர் இவ்வுலகில் இலர். நிலவிலும் குறை உண்டு ‘நிறைகுறை நோக்கி’ என்பன வழக்கு. இலக்கியங்களிலும் இப்பொருளே பெரும்பான்மை. ஆனால் பரிமேலழகர் இந்தச் சொல்லுக்கு ‘இன்றியமையாமை’ என்று உரைகண்டிருக்கிறார்.
“வினைக்கண் வினைகெடல் ஓம்பல்! வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு” (612)
“வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது. அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக!” என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். பாட்டில் அமைந்துள்ள தொடர்களை முன்பின்னாக்கி உலகு வினைக்குறை தீர்ந்தாரின் (ஐ) தீர்த்துவிடும் ஆதலின் வினைக்கண் வினை கெடல் ஓம்பாது ஒழிக’ என்னுமாறு கண்ணழித்து உரையெழுதுகிறார்.
இங்கே ஆய்வுக்குள்ளாவது ‘வினைக்குறை’ என்னும் சொல்லாகும். வினையாகிய இன்றியமையாத பொருளைக் கைவிட்டாரை இந்த உலகம் மதிக்காது என்பது கருத்து. இந்த உரையை முன்னெடுக்கும் பரிமேலழகர் ‘குறை’ என்பதற்கு ‘இன்றியமையாமை’ என்று உரைகாண்கிறார். பாட்டில் ‘குறை’ என்று இருக்க பரிமேலழகரோ (வினையாகிய) ‘இன்றியமையாத பொருள்’ என்று உரைசொல்வதற்குரிய முகாந்திரம் ஏதேனும் உண்டா என்பதே கருதுகோள்.
குறை – இன்றியமையாப் பொருள்.
அதாவது வினையாகிய இன்றியமையாத பொருளாம். தொடக்கத்தில் கூறியவாறு ‘குறை’ என்பதற்குப் ‘பழுது’ என்றே பொருளிருக்க பரிமேலழகர் தாம் கொண்ட பொருளுக்குப் புறநானூற்றுப் பாடலில் வந்த இந்தச் சொல்லைத் துணைக்கழைக்கிறார். அந்தப் பாட்டு,
“படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்கு
‘பயக்குறை இல்லை’ தாம் வாழும் நாளே!” (188)
என்னும் பாடலாகும். இந்தப் பாடலின் இறுதி வரியிலுள்ள ‘பயக்குறை’ என்ற சொல்லில் உள்ள ‘குறை’ என்பதற்கான பழைய உரையைத் தன்னுரைக்குச் சான்றாக்கிக் கொள்கிறார். மழலையின் செயல்களால் அறிவு மயங்கும். அத்தகைய குழந்தைகளைப் பெறாதவர்க்கு இல்லறத்தின் பயனாகிய ‘இன்றியமையாப் பொருள்’ வேறு ஏதும் இல்லை என்பது இப்பாட்டிற்கான பழைய உரை. இதனை,
அது “பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே” என்பதனானும் அறிக.
என்னும் தமது விளக்கவுரைக் குறிப்பின் வழி இதனை அறிய வைக்கிறார் பரிமேலழகர். மழலையாகிய இன்றியமையாத பொருள் இல்லையெனின் வாழ்நாள் பெருமை இல்லை. வினையாகிய இன்றியாமையாப் பொருள் இல்லையெனின் ஆள்வினைப் பெருமை இல்லை என இயைத்துப் பொருளறிக.
‘குறை’ என்பது குறட்பாச் சொல். இன்றியமையாப் பொருள் என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள். அச்சொல் அப்பொருளுக்கு உரித்தாமாறு புறநானூறு கொண்டு விளக்கியது அவர்தம் சொற்பொருள் விளக்கம்.
இதற்கு இவ்வாறு உரைகாணாது வேறுவகையாக உரைகண்டால் ‘வினையே ஆடவர்க்குயிரே’ என்னும் கருத்தினை உள்வாங்கிக் குறள் கூறும் கருத்து சிறக்காமல் போய்விடுவதுடன் ‘ஆள்வினையுடைமை’ என்னும் அதிகாரத்தோடும் பொருந்தாதாம்.
‘உயர்வு’ என்பது பணியாமை
உலகியலிலும் இலக்கிய வழக்கிலும் உயர்வு என்பது உடன்பாட்டுச் சொல். அது எதிர்மறை அன்று. ஒருவன் உயர்ந்தான் என்றால் அவன் தாழ்ச்சியடையவில்லை என்பது பொருளன்று. முன்பு இருந்த நிலையைவிட இன்னும் உயர்ந்திருக்கிறான் என்பதுதான் பொருள். ‘தாழ்ச்சியடையவில்லை’ என்றால் இருந்த நிலையிலேயே இருந்திருக்கிறான் என்றே பொருளாகும். இத்தகைய பொருளைப் பரிமேலழகர் குறட்பா ஒன்றில் பதிவு செய்து தம் உரை நுண்ணியத்தை உறுதி செய்வதைக் காணலாம்.
“பெருக்கத்து வேண்டும் பணிதல்., சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு” 963
என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்குக்,
“குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உளதாயவழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும். குறைந்த நல்குரவு உளதாயவழிப் பணியாமை வேண்டும்.”
என்று பொழிப்புரை எழுதுகிறார். பெருக்கத்து வேண்டும் பணிதல் என்பதற்கு அவர் எழுதிய செல்வம் உளதாயவழிப் பணிவு வேண்டும் என்ற உரையில் மாறுபாடு ஏதுமில்லை. ஆனால் சுருக்கத்து வேண்டும் உயர்வு என்பதற்கு அவர் ‘நல்குரவு உளதாயவழிப் பணியாமை வேண்டும்’ என்று எழுதுகிற உரைதான் ஆய்வுப் பொருளாகிறது.
இந்த உரைக்கு மூலமாக அவர் வருவித்துக் கொண்ட சொல் ‘குடிப்பிறந்தார்’ என்பதாகும். இது இதற்கு (97) முந்தைய அதிகாரமான ‘குடிமை’ (96) என்னும் அதிகாரப் பொருண்மை நோக்கி அமைந்ததாகும். எப்படி? குடிப்பிறந்தார்க்குப் பணிவு இயல்பு. ‘தன்னிலையில் தாழாமை’ (96) என்று குறிப்பாகப் பொருள் விரிப்பார் பரிமேலழகர். எனவே செல்வம் வந்து உற்றக்காலை ஆணவம் கொள்வதும் செல்வம் குறைந்து வறுமை வந்தக்கால் குலைந்து நடுங்குவதும் அவர் அறியாதவை. வறுமையாகிய சுருக்கம் வந்துற்ற காலை அவர் நிமிர்ந்து நிற்பது முந்தைய பணிவு நிலையையே குறிக்கும். இந்தப் பணிவு செல்வம் வந்து குவியும் போது உயராது. அதனால் செல்வம் குறைகிறபோது தாழாது. அதாவது முந்தைய பணிவிலிருந்து குறையாது. அதனால்தான்,
‘பணியாமை – தாழ்வு வராமல் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல்’
என்று உரையெழுதுகிறார். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று கருதிய பரிமேலழகர்,
“செல்வக்காலை அது உயர்ச்சி செய்யத் தாம் தாழ்தலும் அல்லற்காலை அது தாழ்வு செய்ய தாம் உயர்தலும் வேண்டும் என்பதாம்”
என்றும் விளக்கவுரை எழுதுகிறார். செல்வம் தன்னை உயர்த்துங்கால் உயராமல் தாழ்ந்து நிற்றலும் செல்வம் இல்லாத போது அச்செல்வம் தன்னைத் தாழ்த்த தான் உயர்ந்து நிற்றலும் குடிப்பிறந்தார்க்கு இயல்பாம் என்பது இவ்விளக்கவுரையால் பெறப்படும். பணிவும் உயர்வும் செல்வத்தை நோக்கியது என்பது அறிக.
இவ்வுரையில் ‘உயர்வு’ என்பது குறட்பாச் சொல். அதற்குப் பணியாமை என்பது பரிமேலழகர் கண்ட சொற்பொருள். “அது (செல்வம்) தாழ்வு செய்ய தாம் உயர்தலும் வேண்டும்” என்பது அச்சொற்பொருளுக்கான விளக்கம்.
உயர்வு ‘பணியாமை’ என்றால் பணிவு ‘உயராமை’ என்பது பெறப்படும். ‘மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு’ என்பதும் ‘மெய்த்திருப் பதம் மேவு என்ற போதினும் ‘இத்திரு துறந்து ஏகு’ என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்திருக்கும் முகம்’ (5088) என்னும் கம்பராமாயணமும் இந்த வெளிப்பாட்டை ஒத்திருப்பதை உணரலாம். இது எந்த நிலை வந்தாலும் இருந்தநிலை மாறாதிருத்தல். இவ்வாறு உரைகாணாது ‘உயர்வு’ என்பதற்கு இயல்பான பொருளைக் கொண்டால் குடிப்பிறந்தார் இயல்பாகக் கொண்டிருந்த பணிவு சலனத்திற்கு ஆளாகிவிடும் என்பது அறிக.
நிறைவுரை
வள்ளுவர் சொல்லுக்குப் பரிமேலழகர் காணும் பொருளும் அதற்கான விளக்கமும் ஒரே அலைவரிசையில் நிற்பதைக் காணலாம். திருக்குறளில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த உரைநெறியை அவர் பின்பற்றியிருக்கிறார். அவர் சொல்லுக்கு இவர் தரும் பொருள் அகராதியில் கிட்டாது. முன்னது மொழிசார்ந்தது. பின்னது படைப்பவன் உள்ளம் அறியும் முயற்சி சார்ந்தது. ஏனைய உரையாசிரியர்களாலும், இல்லாத காரணங்களைச் சுட்டியோ மிகச் சிறுபான்மை மாற்றுக்கருத்துக்களுக்காகவோ அவர் கருத்தினை மிகக் கடுமையாக மறுப்பவர்களாலும் எண்ணிப் பார்க்க இயலாத இத்தகைய புலமைப் பேராற்றல் அவருக்கு இயல்பு.
(தொடரும்…)