நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 63

மறந்தானும் தாமுடைய தாம்போற்றின் அல்லால்
சிறந்தார் தமரென்று தோற்றார்கை வையார்
கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப!
‘இறந்தது பேர்தறிவார் இல்’.

பழமொழி – ‘இறந்தது பேர்த்தறிவார் இல்’

என்னிக்குமில்லாத படபடப்பு இன்னிக்கு. நிலவன் அந்த அறையின் குறுக்கும் நெடுக்குமா எதையோ யோசிச்சுக்கிட்டே நடந்துக்கிட்டு இருக்கார். அந்த அறை குளிரூட்டப்பட்டு இருந்தாலும் அவருக்கு வேர்க்குது. அவர் மனைவி வேலைக்காரிக்கு கட்டளையிடறாங்க.

மேகலா… ஐயாவுக்கு சட்னு ஒரு ஜூஸ் எடுத்துட்டு வாம்மா.

சொல்லிவிட்டு அந்த அறையில் போடப்பட்டிருக்கிற பெரிய சைஸ் குஷன் நாற்காலியில சாய்ந்து உட்கார்ந்து தன் ஆரணி பட்டுப் புடவைத் தலைப்பால முகத்தைத் துடைச்சிக்கிறாங்க. ஆரஞ்சு நிற புடவையிலிருக்கிற நீலநிற வண்ணத்துப்பூச்சிகள் அதிலேருந்து விடுதலையாகி அந்த அறை முழுக்க பறக்கற மாதிரி இருக்கு. அந்த வண்ணத்துப் பூச்சிகளப் பாத்தவொடனே நிலவனுக்கு மனதில் சந்தோசம். இருக்காதா பின்ன அவர் கவிஞர் இல்லயா. கவிதை எழுதி தான் சம்பாதிச்ச இருபது பவுன் நகைகளில் பிரச்சினைன்னுதானே இப்ப இவ்வளவு துக்கம் அவருக்கு.

யோவ்…. நிறுத்துய்யா. வண்ணத்துப்பூச்சி புடவைத் தலைப்புலேந்து வெளிய வந்து பறக்குதுங்கறதே ஜாஸ்தி. அதுல ஒரு கவிஞர் கவிதை எழுதியே இவ்வளவு சம்பாதிச்சிட்டாருன்னு காட்டினா சீரியல யாரும் பாக்க மாட்டாங்க. நமக்கு நஷ்டம்தான்.

யாருய்யா இந்த எழுத்தாளர இங்க கூட்டிக்கிட்டு வந்தது. இவர் ஏதோ குழந்தைகளுக்குக் கதை எழுதரவர் போல. நம்ம சீரியலோட ரேஞ்சுக்கு ஒருத்தரக் கூட்டிக்கிட்டு வாங்கன்னா ….. என்னய்யா நீங்கயெல்லாம். பேசாம நானே உக்காந்து எழுதித் தொலைச்சிரலாம் போல. இப்ப நேரம் வேற இல்ல.

சரி. உன் கற்பனையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு நேரடியா கதையச் சொல்லு. அதுல ஏதாவது மாற்றம் செய்யணும்னா நான் சொல்றேன். டேரக்சன்லேந்து மேக்கப் வரை எல்லாம் பண்ணியாச்சு. என்ன…. எனக்குக் கற்பனை கொஞ்சம் கம்மினு நினைச்சு கதை எழுத முயற்சிக்கல. இனிமே அதையும் செஞ்சிட வேண்டியதுதான்.

அந்த சிடுமூஞ்சி சீரியல் டேரக்டர் வசவுகளை நிறுத்தியவுடன் நான் சொல்ல ஆரம்பித்தேன். அந்த நிலவனுக்கு அன்னிக்கு வங்கியிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதுல அவர் அடகு வைத்த இருபது பவுன் நகைகளும் போலினு நிரூபிக்கப்பட்டதால இருபத்துநான்கு மணிநேரத்துக்குள்ள வங்கியிலேந்து வாங்கின பணத்தைத் திருப்பிக்கட்டணும்னு சொன்னாங்க. இல்லையினா சட்டப்படி நடவடிக்கை எடுப்பாங்களாம். இதைச் சொன்னது.வங்கி மேலாளரான அவரதுநெடுநாள் நண்பர்தான். அவராலதான் பணம் விரைவா கிடைச்சது. வாங்கின பணத்தை மகனோட பொறியியல் படிப்புக்காக கல்லூரியில கட்டியாச்சு. மிச்சப் பணத்த பெரியப்பா மகனுக்கு அனுப்பி ஒரு துண்டு நிலமும் வாங்கச் சொல்லியாச்சு. இப்ப போயி இப்படின்னா மானப் பிரச்சினையில்லயா.

மனைவியோட நகை முழுக்க பெண் கல்யாணத்துக்கு செலவழிஞ்சுபோச்சு.

நிலவனோட மனைவி அந்த நகை வாங்கிய கடையோட சீட்டத் தேடிக்கிட்டு இருக்காங்க. அவங்க போலி நகை வித்தாங்களானு கண்டுபிடிக்க. இது இப்படியிருக்க அவரோட பெரியப்பா மகன்னு ஒரு கேரக்டர் சொன்னேனே அவர் மனசுக்குள்ள சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்கார்.

நிலவன் அண்ணன் பட்டணத்துல நல்லா சம்பாதிக்குது போல. நம்மகிட்ட குடுத்துவச்சிருந்த இருபது பவுன ஆட்டையப்போட்டு மக கல்யாணத்த சிறப்பா நடத்தியாச்சு. இருந்தாலும் எம் பொஞ்சாதி கெட்டிக்காரி. அண்ணன சமாளிச்சுக்கிடலாம்னு  அதுகணக்காவே கவரிங் நகை வாங்கி குடுத்து உட்டுட்டா.  அண்ணன் பேங்குல வைக்கப்போறேம்னு சொன்னப்போ கொஞ்சம் திக்குனு இருந்திச்சு. பெறகு அதைவச்சு வாங்கின பணத்தையும் எங்கிட்டல்லா அனுப்பி நிலம் வாங்கச்சொல்லுது. இனி ஒரு பிரச்சினையில்ல…. மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டே வரப்ப்புல நடந்துக்கிட்டு இருக்கார்.

என்னய்யா இது. உன் கதையில எல்லாரும் நடந்துக்கிட்டே இருக்காங்க. தனக்குத்தானே பேசிக்கிறாங்க. இதுல ஒரு வசீகரமும் இல்லயே… சரி உன்னயத் திட்டி எனக்கு என்ன லாபம். நாளைக்கு வா பாக்கலாம்… என்னை அனுப்பி விட்டார் சிடுமூஞ்சி டேரக்டர். ஏதோ கதை சொல்லி கொஞ்சம்பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்ச எனக்கு ஏமாற்றம்தான். மொதல்ல வீட்டுக்குப்போய் உக்காந்து அம்மா கூட எல்லா சீரியலயும் பாக்கணும்.அப்பதான் இவர் என்ன எதிர்பார்க்கறார்னு தெரியும். நான் என்னமோ கருத்து சொல்லலாம்னு இந்தக் கதையச் சொன்னேன். முழுசா சொல்ல உட்டாதானே. ‘இறந்தது பேர்த்தறிவார் இல்’ங்கற பழமொழியச் சொல்லி தம்முடைய உடைமைகளைத் தாமே காத்துப் பேண வேண்டுமேயல்லாமல், நம்பிக்கையற்ற பிறர் பேணுவார் என விடுதல், அதனை இழத்தற்கே காரணமாகும் அப்டிங்கற அதன் பொருளக் கடைசியில சொல்லணும்னு இருந்தேன்.

நல்லவேளை சொல்லல. சொல்லியிருந்தா நான் என்ன பொழுதுபோக்குக்காக சீரியல் எடுக்கறேனா அல்லது பாடம் நடத்தறேனான்னு அதுக்கும் கத்தியிருப்பார். நல்லதுக்குக் காலம் இல்ல.

பாடல் 64

இரப்பவர்க்(கு) ஈயக் குறைபடும் என்றெண்ணிக்
கரப்பவர் கண்டறியார் கொல்லோ – பரப்பிற்
துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
‘இறைத்தோறும் ஊறும் கிணறு’.

பழமொழி – ‘இறைத்தொறும் ஊறும் கிணறு’

ஏ…..ஐயா…. கதவ ஒருக்களிச்சு வச்சுக்கிட்டு சாப்பிடக்கூடாதா. மட்ட மல்லாக்க திறந்து வச்சா யாரும் உள்ள வந்துற மாட்டாகளா… அப்பத்தா தன் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போகிறாள். இன்னிக்கு எங்க வீட்ல ஸ்பெஷல் சமயல். அவியல், சாம்பார், வாழைக்கா பொடிமாஸ், வாழைப்பூ வடை, அப்பளம்….. இப்படி. எங்க அப்பத்தா சமைச்சது. நானும் என் மனைவியும் எல்லாத்தையும் மேசைமேல பரப்பி வச்சிக்கிட்டு நிதானமா ஒரு கட்டு கட்டிக்கிட்டு இருக்கோம்

பாம்பேக்கு தனிக்குடித்தனம் வந்ததிலேந்து நம்ம ஊரு சமயல இப்படி சாப்பிடவே முடியல. வந்த முதல் நாளே வெள்ளக் காடா இருந்த பாம்பேயில தான் கால் வைச்சோம். கொரோனா ஊரடங்கால வொர்க் ப்ரம் ஹோம்னு சொல்லிட்டதால வெளியில போக வேண்டிய அவசியமே ஏற்படல. சாமான்களையும் வீட்டுக்கே வர வச்சிடறோம். திரும்பத் திரும்ப சமைச்சு சாப்பிட்டுட்டு வீட்டுக்குள்ளயே இருக்கறதால இங்க உள்ள பழக்கப்படி சப்பாத்திக்கு அதிகமா மாறிட்டோம். இரண்டு நாள் முன்ன அப்பாவும், அப்பத்தாவும் வந்ததிலேருந்துதான் தோசை,இட்லி எல்லாம் பாக்க முடியுது. சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போதே எதிர் ப்ளாக் அன்மோல் வருகிறார். அவர் கூட அவரோட பத்து வயசுபொண்ணும் நுழையறாங்க.

என்ன பையா சௌத் இந்தியன் சாப்பாடு மணக்குது. பாட்டியோட கைப்பக்குவமானு கேட்டுக்கிட்டே டைனிங் டேபிள் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கிட்டு உட்காரறார். அங்க இருந்த தட்டை எடுத்துவச்சி என் மனைவி அவரை உபசரிக்கிறாள். பாப்பா இப்பதான் சாப்பிட்டான்னு சொல்லிட்டு தான் பாட்டுக்கு ரசிச்சுச் சாப்பிட ஆரம்பிச்சுட்டார். நாங்க இங்க குடி வந்ததிலேருந்து அவர் அப்படி வித்தியாசம் பாக்காம சொந்தக்காரன் மாதிரிதான் பழகிக்கிட்டு இருக்கார். ஆனா அப்பாக்கும் பாட்டிக்கும் இது புடிக்கலனு நல்லாவே தெரியுது.

அப்பத்தா திரும்பவும் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்குதான் கதவ மூடி சாப்பிடுனு சொன்னேன். சொன்னா அப்பத்தா… கஞ்சம்னு நினைச்சுக்கிடுவீங்க.. நாங்களும் நாலுபேருக்கு தினமும் சோறுபோட்டுதான் வாழ்ந்தோம். உங்க தாத்தா தெனைக்கும் வரையிலேயே யாரையாச்சும் கூட்டிக்கிட்டு தான் சாப்பிட உட்காருவார். விறகு அடுப்புல சமைக்கறதால பொசுக்குனு பொங்கிப்போட முடியாதுனு மதியம் நாலுபேருக்குள்ள சாப்பாட்ட சேத்து பொங்கறது வழக்கந்தான். ஆனா அவுக கூட்டிக்கிட்டு வாரவுகயெல்லாம் சோத்துக்கு வீங்கி அலையுதவங்கயில்ல. வெறுங்கைய வீசிக்கிட்டு வரமாட்டாக. ஒரு குலை வாழைப்பழம், மாங்கா, என்னமும் விளைஞ்சத கையில குடுத்துட்டுதான் அடுத்த வீட்ல கைநனைப்பாக. என்னம்போ எம் மனசுல பட்டதச் சொல்லிப்போட்டேன். இந்த ஆளு சாப்புட உக்காந்தாலே வந்துருதார். சோத்துல கொதி போட்டுட்டாருன்னா  பொறவு சங்கடந்தான். அதுக்குத்தான் சொல்லுதேன்.

அன்மோல் அப்பத்தாவப் பார்த்து சொல்றது எதுவும் அவங்களுக்குப் புரியல. அவர் அவங்கள தன்னோட குழந்தைகள் காப்பகத்துக்கு வரச்சொல்லி அழைக்கிறார். அவங்களுக்காக புது கட்டிடம் கட்டியிருக்காராம். இப்ப இருக்கற கட்டிடத்துல அடிக்கடி வெள்ள நீர் நுழைஞ்சிருதாம். அதோட தொடக்க பூசைக்குதான் அப்பத்தாவ வரச்சொல்றார். அங்க இருக்கற இருபது பிள்ளைகளுக்கும் ஏதாவது ஸ்வீட் பண்ணிக்குடுக்க முடியுமான்னு கேக்கறார். லட்டு பண்ண மிடாயிவாலாவ வரச்சொன்னாராம். அப்பத்தா சரின்னாங்கன்னா அவன வரவேண்டாம்னு சொல்லிடுவேங்கறார்.

அவர் சொன்னதை முழுசும் சொல்லாம என் மனைவி, அப்பத்தா…..  உங்களுக்கு லட்டு பண்ணத் தெரியுமா இவர் கேக்கறார்னு சொன்னவுடனே கோவிச்சுக்கிட்டு எழுந்து போயிட்டாங்க. படுத்துக்கிட்டு இருந்த அப்பாவ எழுப்பி கூட்டிக்கிட்டு வராங்க.

உம்மவன் செய்யுத நாயத்த நீயே கேளு அய்யா. நான் பேசுதது எதுவும் புரிஞ்சுக்கிடாம புருசனும் பொஞ்சாதியும் அந்த ஆளுக்கே பரிஞ்சுக்கிட்டு வாராக. இனி நான் இருக்க மாட்டேன். ரயிலுக்கு புக் பண்ணிப்போடு. அப்பத்தா கத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். அப்பா எல்லாத்தையும் பொறுமையா உக்காந்து கேட்டுட்டு அப்பத்தாவுக்கு வயசாகிப்போச்சு. திடீர்னு லட்டு பண்ணச்சொன்னா டென்சன் ஆயிடும்னு சொல்லிட்டார்.

அடுத்த நாள் எல்லாரும் கிளம்பி அன்மோல் நடத்தற காப்பகத்துக்கு வந்துட்டோம். உள்ள நுழையும்போதே ஒரு ஒல்லியான பையன் ஓடி வந்து ஆச்சினு அப்பத்தாள கட்டிப்பிடிச்சிக்கிட்டான். அவன் அழுதுக்கிட்டே எங்க ஆச்சியும் உங்கள மாதிரிதான் இருப்பாங்க. எங்கம்மாவும் அப்பாவும் விபத்துல இறந்த பிறகு ஆச்சிதான் என்னய இட்லி வித்து காப்பாத்திக்கிட்டு வந்தாங்க. பெறகு போனவருசம் பெய்த மழையில குளிர்தாங்க முடியாம ஆச்சி இறந்துட்டாங்க. பக்கத்துல கடை வச்சிருந்த அண்ணாச்சி என்னய இங்க கொண்டு வந்து சேத்து விட்டாங்கனு சொல்றான்.

அப்பத்தாளுக்கு கண்ணுலேந்து கண்ணீர் தாரதாரையா கொட்டுது. என்னப்பெத்த ஐயா இவ்வளவு நல்ல மனசுக்காரன புரிஞ்சுக்கிடாம என்னமெல்லாம் பேசிப்போட்டேன். அப்பன் ஆத்தா இல்லாம ரோட்டுல நிக்குத புள்ளைங்கள கூட்டியாந்து தம் பிள்ளை கணக்கா பாத்துக்கிடுதவருக்கு ஒரு வாய் சோறுபோடாம வாய் ஓயாம வஞ்சிக்கிட்டு இருந்தேனே….. இந்தப் பிள்ளைங்களுக்கு நாளைக்கு நானே என் கையால சோறு ஆக்கி பரிமாறுவேன். அதை அன்மோலுக்கு விளக்கியவுடன்… பேசிக்கிட்டே நிக்கற அப்பத்தாள அன்மோல் கட்டிக்கொள்கிறார். நீ ஒண்ணுத்துக்கும் கவலப்படாத. ‘இறைத்தொறும் ஊறும் கிணறு’னு பழமொழியே இருக்கு. உனக்கு மேல மேல நிறைய காசுபணம் வந்து சேரும். அப்பத்தா வாழ்த்த அதன் பொருளை அறிய என் முகத்தைப் பார்க்கிறார் அன்மோல்.

அது ஒண்ணுமில்ல. கொடுக்க கொடுக்க செல்வம் பெருகும்னு சொல்றாங்கனு நான் அவருக்கு விளக்கறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *