புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006. 
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

திருக்குறளில் ‘நோக்கு’

முன்னுரை

‘நோக்கம்’ என்ற சொல்லை அனைவரும் அறிவர். ‘பார்வை’ என்ற சொல்லும் ‘காட்சி’ என்பதும் அவ்வாறு பழக்கமானதே. ஆனால் ‘நோக்கு’ என்ற சொல் அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நோக்கம் என்னும் சொல்லின் திரிந்த வடிவம் ‘நோக்கு’ எனவும் சிலர் கருதியிருக்கக் கூடும்.  கண்ணின் வினை ‘பார்வை’ என்றால் மனத்தோடு கூடிய கண்ணின் வினைக்கு நோக்கம் என்று பெயர். திருவள்ளுவர் முன்னதைப் ‘பொதுநோக்கு’ என்பார். பின்னதை ‘நோக்கு’ என்பார். இன்னும் தெளிவாகச் சொன்னால் உள்ளக்குறிப்பினைக் கண் வெளிப்படுத்துவதற்கே நோக்கம் என்று பெயர். ஆனால் நோக்கு என்பது ‘பார்வை’, ‘நோக்கம்’ என்பவற்றினின்றும் மாறுபட்டது. இவற்றுக்கும் ‘நோக்கு’ என்பதற்கும் எள்ளின் முனையளவும் தொடர்பு கிடையாது. இந்த நோக்கு திருக்குறளில் அமைந்திருக்கும் பாங்கினை உரையாசிரியர் பரிமேலழகர் வெளிப்படுத்துமாற்றை ஆராய்வதையே இக்கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

நோக்கு என்றால் என்ன?

உண்மையில் இந்த ‘நோக்கு’ என்பது மக்கள் வழக்கில் உள்ளதே. திருமண வீட்டில் விருந்துண்டவன் சொல்வான் “விருந்து சாப்பிடுகிற மாதிரி இல்லையே?”  இளைஞர் வட்டத்தில் ஒரு பேச்சு கேட்டிருக்கலாம் “படம் பாக்குற மாதிரி இல்லையே?” விருந்து உண்கிற மாதிரி இருக்க வேண்டும். படம் பார்க்கிற மாதிரி இருக்க வேண்டும். ஊன்றிக் கவனித்தால் ‘விருந்து’ என்பதும் ‘படம்’ என்பதும் சில அம்சங்களை உள்ளடக்கி இருக்கவில்லையே என்னும் ஏக்கம் அந்தத் தொடர்களில் அமைந்திருப்பதைக் காணலாம். இந்த அம்சங்கள் செயப்படுபொருளில் அமைந்திருக்க வேண்டும். சரியா? கவிஞன் படைக்கிறான். இந்த அம்சங்கள் படைப்பில் இருக்க வேண்டும். இதுபோல்தான் நோக்கு என்பதும். ‘நோக்கு’ என்பது நோக்குகிற வினையைக் குறிக்கும். அந்த வினைக்கு உகந்ததாக அதற்கான செயப்படுபொருள் அமைந்திருக்க வேண்டும். ஒருவன் ஒரு கவிதையைப் ‘பார்த்தான்’ என்பதற்கும் ‘படித்தான்’ என்பதற்கும் ‘நோக்கினான்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. நோக்கிற்கான கூறுகள் இருந்தால்தான் அது நோக்கிற்குரியது. அந்தக் கூறு காலங்கடந்தும் எண்ணி வியப்பதாயும் வியந்து திளைப்பதாயும் அமைதல் வேண்டும். இதிலிருந்து ‘நோக்கு’ என்பது கவிதையில் அமைந்திருக்கும் கூறுகளின் தொகுதி என்பது பெறப்படும். இது ஒரு செய்யுளின் அல்லது கவிதையின் மாத்திரை முதலாக அடி ஈறாக அமைந்திருக்கும். எப்படி அடுத்த பத்தியில்.

தொல்காப்பியம் கூறும் நோக்கு

பொருளதிகாரச் செய்யுளியலில் செய்யுளின் உறுப்புக்களாக முப்பத்திரண்டு கூறுகளை ‘மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ’ (தொல் 1259) என நிரல்படுத்தும் தொல்காப்பியம் “நோக்கே” என்று இதனைக் குறிப்பிடுகிறது. இது மேற்குறிப்பிட்ட நூற்பாவில் முற்பகுதியான இருபத்தாறு சிறந்த கூறுகளில் ஒன்று. நூற்பாவின் பிற்பகுதியில் கூறப்படும் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எட்டும் முன்னர்க் கூறிய இருபத்தாறுக்கு இணையானவை அல்ல என்பது இளம்பூரணர் கருத்து.

“மாத்திரை முதலா அடிநிலை காறும்
நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” (1306)

என்னும் நூற்பாவில் நோக்கு என்பதற்கான விளக்கமும் பொருள் வரையறையும் பெறப்படுகிறது. இந்த நூற்பாவிற்கு உரையாசிரியப் பெருமக்கள் எழுதிய குறிப்புரைகளைக் காண்பது பொருள் தெளிவுக்கு உதவக்கூடும்.

நோக்கிற்கான இளம்பூரணர் விளக்கம்

தொல்காப்பியத்திற்கு உரைத்தடம் காட்டிய ஆசிரியர் இளம்பூரணர் மேற்கண்ட நூற்பாவிற்குப் பின்வருமாறு உரையெழுதுகிறார்.

“மாத்திரை முதலா அடிநிலையளவும் நோக்குதலாகிய கருவி நோக்கென்று சொல்லப்படும். காரணம் எனினும் கருவியெனினும் ஒக்கும். நோக்குதற்காரணம் என்பதால் உண்டற்தொழில் என்றாற்போலக் கொள்க” அதாவது யாதானும் ஒன்றைத் தொடுக்கும் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங் காலும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை.”

உரையாசிரியர் இட்ட தடத்தைப் பின்வந்த உரையாசிரியர்கள் சிறிதளவு செப்பமிட்டார்களே தவிர அடிப்படையில் பொருள் மாற்றம் ஏதும் செய்ய  இயலவில்லை என்பதை அவர்தம் உரைகளால் அறிந்து கொள்ள முடியும்.

பேராசிரியர் கருத்து

“ஆறுதலையிட்ட அந்நாலைந்து’ எனவும் ‘எட்டு’ எனவும் இருவகையான தோன்றக் கூறியது ஏனையது போலாமல் எட்டுறுப்பும் ஓரொரு செய்யுட்கு ஒரோ ஒன்றேயும் வரும் என்பது அறிவித்தற்கும் அவைதாம் அச்செய்யுள் பல தொடர்ந்த வழியே பெரும்பான்மையும் உறுப்பு என்பது அறிவித்தற்கும் அவ்வாறு கூறினான் என்க. எனவே ஒழிந்த உறுப்பு இருபத்தாறும் ஒன்று ஒன்றனை இன்றியமையாவென்பது பெற்றாம். “நோக்கென்பது மாத்திரை முதலாகிய உறுப்புக்களைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல்” எனப் பொதுநூற்பாவில் எழுதிய பேராசிரியர்,

“மாத்திரையும் எழுத்தும் அசைநிலையும் சீரும் முதலாகக் கொண்ட  அடி நிரம்பும் துணையும் நோக்குடையவாகச் செய்தல் வன்மையாற் பெறப்படுவது நோக்கென்னும் உறுப்பாவது. ………………..…….. நோக்கிப் பயன்கொள்ளும் கருவியை நோக்குதற் காரணம் என்றான் என்பது”

என்று நோக்கு என்பதற்குப் பொருள் விளக்கம் தருகிறார். நச்சினார்க்கினியர் கருத்து பின்வருமாறு அமைந்திருக்கிறது.

நச்சினார்க்கினியர் கருத்து

இலக்கியத்தை இலக்கணமாக்கி, இலக்கணத்தை இலக்கியமாக்கி உரையெழுதி உரைக்கோபுரத்தின் உச்சந்தொட்ட உரைக்கடல் நச்சினார்க்கினியர் இந்த நோக்கு பற்றித் தம் கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.

“நோக்கென்றது மாத்திரை முதலிய உறுப்புக்களையுடைத்தாய்க் கேட்போர்க்கு நோக்குதல்படச் செய்தவை. நோக்குதல் – பயன்போடல் என்று பொருள் வரையறை எழுதி,

“மாத்திரை முதலிய அடிநிரம்பும் துணையும் கேட்டோர் மீண்டும் நோக்கிப் பயன்கோடலையுடையதாகச் செய்யும் கருவி, நோக்கென்று  பெயர் கூறப்படும் என்றவாறு”

என ‘நோக்கு’ பற்றிய மேற்கண்ட நூற்பாவிற்குப் பொழிப்புரை தருகிறார். நோக்கு பற்றி ஏனைய உரையாசிரியர்களினும் நச்சினார்க்கினியர் கருத்து பெரிதும் ஆராயத்தக்கதும் தகுதி மிக்கதுமாம். அவர் எழுதிய உரைகளில் இந்த உறுப்பைப் பயன்படுத்தாமல் உரைகண்ட வரலாறே இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம்.

உரையாசிரியர்கள் பார்வையில்

உரையாசிரியர் இளம்பூரணர் நோக்கிற்கான பொருள் வரையறை தந்து அதனை “ஒரு நோக்காக ஓடுதல், பல நோக்காக ஓடுதல், இடையிட்டு  நோக்குதல்” என மூவகை எனப் பகுத்தும் காட்டுகிறார். காட்டி, நாலடியாரிலிருந்து இரண்டு பாடல்களை (1, 172) முதலிரண்டிற்கும் “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு’ எனத் தொடங்கும் திருமுருகாற்றுப்படையை இடையிட்டு நோக்குதலுக்கும் எடுத்துக்காட்டி விளக்கம் தருகிறார். பேராசிரியரும் பின்னர் வந்த நச்சினார்க்கினியரும் “முல்லை வைந்துனை தோன்ற” எனத் தொடங்கும் (அகம். 4) பாடலை எடுத்துக்காட்டி விளக்குகின்றனர். நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணி குணமாலை இலம்பக வரிகளை மேற்கோள் காட்டி கூடுதல் விளக்கம் தருகிறார்.

நோக்கு என்ற சொல்லின் இலக்கியப் பயன்பாடு

கூறாமை நோக்கி, முகம் நோக்கி, இருநோக்கு, சிறுநோக்கம்,  நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள், ‘யான் நோக்குங்காலை’ குறிக்கொண்டு நோக்காமை, செற்றார்போல் நோக்கும் யான் நோக்க பொதுநோக்கு, கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் என்பன திருக்குறளில் உள்ள ‘குறிப்பறிதல்’ என்னும் இரண்டு அதிகாரங்களுள் பயின்று வரும் சொற்களாகும். ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்பது கம்பராமாயணம். ‘நோக்கரிய நோக்கே’ என்பது திருவாசகம். ‘நோக்க நோக்க களியாட்டம்’ என்பது பாரதி வாக்கு. ‘நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்’ என்பது பாவேந்தர் வரி. எண்ணற்ற பயன்பாடுகள் உள. காட்டப் புகின் கட்டுரை அளவு விஞ்சும்.

நோக்கு எனபது பற்றிய கட்டுரையாளர் விளக்கம்

முன்னுரையில் குறிப்பிட்டதுபோல ‘நோக்கு’ என்பது படைப்பில் இருக்க வேண்டிய அரிய கூறுகள். அது மாத்திரையிலிருந்து தொடங்கும். சான்றாக அளபெடை பற்றிப் பலரும் அறிவர். ஆனால் அந்த அளபெடையை ஒரு நோக்கத்திற்காகத்தான் பயன்படுத்தியிருக்கிறார் திருவள்ளுவர். இது பற்றிய விரிவு அடுத்த கட்டுரையில். குறட்பாவில் பயன்படுத்தபட்டுள்ள ஒவ்வொரு மாத்திரையும் அசையும் சீரும் அடியும் ஒரு காரணம் பற்றியனவாகவே இருக்கின்றன. இந்தக் காரணங்களே அவற்றை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. எனவே ஒரு நூல் பன்முறை படிக்கப்படுகிறது என்றால் படிப்பதற்கான காரணங்கள் அங்கே அமைந்திருக்கின்றன என்பதை அறிதல் வேண்டும். இந்தக் காரணங்களையே ‘நோக்கு’ என்னும் சொல் குறிக்கிறது. ‘நோக்குதற் காரணம்’ என்பது அதுதான். இனிக் குறிப்பிட்ட குறட்பாவில் ‘நோக்கு’ அமைந்துள்ள சிறப்பினைக் கண்டு மகிழலாம்.

குறட்பா – பொழிப்பு –  விளக்கம்

திருக்குறள் கட்டுமானம் முழுமையும் நோக்கிற்குரியதாகவே இருக்கிறது என்பது பரிமேலழகர் கருத்து. அவர் கருத்து இதுதான் என்பதை அவர் எழுதிய உரை நன்கு புலப்படுத்தும். பரிமேலழகரின் உரைநுண்ணியத்திற்கு ஈடு கொடுக்கும் அளவுக்குக் குறள் அமைந்திருக்கிறது. இது வள்ளுவத்தைத் தாழ்த்துவதோ குறைத்து மதிப்பிடுவதோ ஆகாது. ஏனைய உரைகளைக் கற்றார் பரிமேலழகர் உரையினைக் கற்கும் பொழுது உள்ளத்தில் ஏற்படும் உணர்வே இது. ‘பரிமேலழகர் நோக்கியதை மற்றவர் ஏன் நோக்கவில்லை?’ என்ற எண்ணம் தோன்றுவதை யாரே தடுக்க இயலும்? வேறு வாய்பாட்டில் சொன்னால் திருக்குறளில் அமைந்துள்ள நோக்கினைக் கண்டறிந்து கூறுவதில் பரிமேலழகர் முன்களப் பணியாளராகவே திகழ்கிறார் எனலாம். இவ்வாறு பரிமேலழகரின் தனித்த உரைநோக்கிற்கு உரிய குறட்பாக்களில்,

“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்” (415)

என்னும் குறட்பாவும் ஒன்று. இதற்கு,

“வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும். காவற்சாகாடு உகைப்பார்க்கு  ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.”

(இதனைக் காவற்சாகாடு உகைப்பாற்கு ஒழுக்கமுடையார் வாய்ச்சொற்கள் “வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும் எனப் பொருள் உவமம் என்ற நிலையில் படிக்கலாம். இந்தப்  பொழிப்புரையைத் தொடர்ந்து,

“அவாய் நிலையான் வந்த உவமையடையால் பொருளடை வருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல்போல உதவுதல் தளர்ந்துழி அதனை நீக்குதல். ‘கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின் அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பது தோன்ற ‘ஒழுக்கமுடையார்  ‘வாய்’ என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்பு உணர நின்றது. அவற்றைக் கேட்க என்பது குறிப்பெச்சம்”

என்று விளக்கவுரை தந்திருக்கிறார்.

நோக்கு அமைந்திருக்கும் இடம்

ஒழுக்கமுடையார் சொல், வழுக்குநிலத்தில் ஊற்றுக்கோல் போல் என்பது மட்டுமே குறட்பாவில் உள்ளது. குறட்பாவை ஊன்றிப் படித்தால் இது புலனாகும்.  ஒழுக்கமுடையார் சொல் யாருக்குப் பயன்படும் என்பதற்குப் பாட்டில் குறிப்பில்லை. ஊற்றுக்கோலின் பயன்பாடு வழுக்கு நிலத்திற்கா? அந்நிலத்தில் நடப்பர்க்கா என்பதற்கும் விடையில்லை. ஊற்றுக்கோல் என்ன செய்யும் என்பதற்கும் தெளிவில்லை. வாயிலிருந்து வருவதே சொல்லாயிருக்க ‘வாய்ச்சொல்’ எனக் கூறியது ஏன் என்பதற்கான விடையும் காணவேண்டியதிருக்கிறது. சொல்லை ஊற்றுக்கோலோடு ஒப்பிடுவதால் மட்டும் குறட்பாவின் கருத்து நிறைவடைந்துவிடுமா (ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் ஊற்றுக்கோல் அற்று என்றுதானே உள்ளது)? என்பதும் புரியவில்லை. ஆனால் நமக்குப் புரியவில்லை என்பதற்காக இல்லை என்று சொல்லிவிட இயலுமா? இந்தக் கூறுகளை (நோக்கினை) உள்ளடக்கித்தான் திருவள்ளுவர் குறட்பா எழுதியிருக்கிறார். அவற்றைத்தான் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார். பரிமேலழகரின் உரை நோக்கிற்கான காரணங்கள் குறட்பாவில் ஆழ்ந்து பரவியிருக்கின்றன. அவை ஒவ்வொன்றினையும் முற்றாக அறிந்து கொள்வதன் மூலம் திருக்குறளின் குறட்பாக்கள் நோக்கு என்னும் உறுப்பால் கட்டியமைக்கப்பட்டிருக்கும் பாங்கு புலனாகலாம்.

ஏழு சீர்களில் பரிமேலழகர் கண்டறிந்த நோக்கு

இந்தப் பாட்டில் நோக்கு அமைந்திருக்கும் பாங்கினை இனிக் காணலாம். அதாவது இந்தச் சொல்லை இந்த இடத்தில் பெய்ததற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து கண்டறியுமாறு அந்தச் சொல் அமைந்திருப்பதுதான் நோக்கு.  ஏழு சீர்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பரிமேலழகர் பிரித்து நோக்கித்  திருக்குறளில் ‘நோக்கு’ அமைந்திருக்கும் சிறப்பினை எடுத்துக் காட்டுகிறார். பொழிப்புரை, விளக்கவுரை என்னும் இரண்டின் அடிப்படையிலும் இதனை நிரலாகக் காணலாம்.

  1. ‘இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே’ என்றுதான் பாட்டில் இருக்கிறது. ஆனால் பரிமேலழகர் “ வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும்” என்று உரையெழுதுகிறார். வழுக்கல் நிலத்துக்கும் ஊற்றுக்கோலுக்கும் தொடர்பில்லை. வழுக்கல் நிலத்தில் இயங்குவார்க்கும் ஊற்றுக்கோலுக்குமே தொடர்பு.  இயங்குவார்க்குத்தான் ஊற்றுக்கோல் உதவுமே தவிர நிலத்திற்கு உதவாது. பாட்டில் இல்லாத இந்தத் தெளிவினைப் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார். இனி, ‘இயங்குவார்க்கு ஊற்றுக்கோல்’ என்றால் பொருள் புலப்படாது. ‘இயங்குவார்க்கு ஊற்றுக்கோல் என்ன செய்யும்? ‘உதவும்’. ஊன்றப் பயன்படுவதால் அது உதவி.
  1. இனி ‘ஊற்றுக்கோல் அற்றே’ என்றே பாட்டில் அமைந்துள்ளது. ‘அது அவர்க்கு உதவுவதுபோல என்று இல்லை. பரிமேலழகர் ‘உதவுதல்போல’ என்று நோக்கி உரையெழுதுகிறார். ‘ஊற்றுக்கோல் உதவுதல் அற்றே’ என்று கொள்ள வேண்டுமாம்.
  1. ‘ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்’ என்பதற்குக் காவற்சாகாடு உகைப்பார்க்கு (அரசனுக்கு) ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்’ என்று உரை காண்கிறார் பரிமேலழகர். அதாவது வழுக்கல் நிலத்து இயங்குவார்க்கு ஊற்றுக்கோல் உதவும் என்றால் ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் யாருக்கு உதவும் என்பதற்குத் திருக்குறளில் விடையில்லை.  அதாவது ஊற்றுக்கோல் யாருக்கு உதவும் என்பதும் பாட்டில் இல்லை. ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல் யாருக்கு உதவும் என்பதும் பாட்டில் இல்லை. ‘இயங்குவார்க்கு’ என்ற அடைச்சொல்லை அவாவி உவமத் தொடர் அமைந்திருப்பது போலவே, காவற்சாகாடு உகைத்தார்க்கு என்னும் அடைச்சொல்லை உவமேயத்திற்கு அதாவது பொருளிற்கு வருவித்துக் கொள்கிறார் பரிமேலழகர். நிலமாளும் அரசனுக்கு உதவும் என்பது கருத்து. அதனை வருவித்து உரையெழுதுகிறார். இதனை,

“அவாய் நிலையான் வந்த உவமையடையால் பொருளடை வருவிக்கப்பட்டது.”

என்னுந் தொடரால் விளக்கிக் காட்டுகிறார். உவமத்தில் அது அவாய் நிலையாம். பொருளில் அதனை வருவித்துக் கொள்கிறாராம். என்ன நுட்பம்?

  1. ஊற்றுக்கோல் வழுக்காமல் காக்கும். சரி. ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் காவாற்சாகாடு உகைத்தார்க்கு உதவுவது யாங்ஙனம்? இதற்கும் பரிமேலழகர் எழுதிக்காட்டுகிறார். அரசபாரம் தாங்காது மனம் தளர்ச்சியடைந்தவழி அத்தளர்ச்சியை ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் போக்குமாம். இதனை “உதவுதல் தளர்ந்துழி (வறுமையினால் அல்லது அறியாமையினால் துன்பமுற்றபோது) அதனை நீக்குதல்” என்ற தொடரால் விளக்குகிறார்.
  2. ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் என்பது குறட்பாவில் பயின்றுள்ள தொடர். இந்தத் தொடரில் இரண்டு சொற்கள் பரிமேலழகரின் நோக்கிற்குக் காரணமாகிறது. ஒன்று ‘ஒழுக்கமுடையார்’ என்ற சொல். இரண்டு வாய்ச்சொல். கேள்வி என்ற அதிகாரத்தில் வருகின்ற இந்தப் பாட்டில் ஒழுக்கத்திற்குத் திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுப்பானேன் என்னும் தன் வினாவிற்குப் பரிமேலழகரே விடைசொல்லுகிறார். எப்படி? இப்படி!

‘கல்வியுடையரேனும் ஒழுக்கமிலாதார் அறிவிலராகலின் அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பது தோன்ற ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்’ என்றார்”.

  1. இரண்டாவது ‘வாய்ச்சொல்.’ சொல் என்ற அளவே போதுமானதாயிருக்க வாய்ச்சொல் என வேண்டாது கூறியது ஏன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அதற்கும் விடையிறுக்கிறார்.

“‘வாய்’ என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்பு உணர நின்றது”.

என்று எழுதுகிறார். சொல் என்னும் கருவி எவர்வழியாகச் செயல்படவேண்டும் என்பதில் பரிமேலழகரின் நோக்கு வியப்பளிப்பதாக உள்ளது. இவ்வளவு நோக்கிற்கும் திருக்குறள் இடந்தருகிறது.

பரிமேலழகரின் மீயுயர் நோக்கு

  1. இந்தப் பாட்டு ‘கேள்வி என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. கேள்வி என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் தந்த பரிமேலழகர் “கேட்கப்படும் நூற்பொருளைக் கற்றறிந்தார் கூறக் கேட்டல்” என்று விளக்கம் தருகிறார். அதாவது கேள்வி என்பது தொழிற்பெயர். அதனை வியங்கோள் பொருளில் பயன்படுத்தியே இந்த அதிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பாட்டில் கேட்க என்று பொருள்படும்படியான சொல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை நோக்குகிறார் பரிமேலழகர். வழுக்கல் நிலத்தில் இயங்குவார்க்கு ஊன்றுகோல் உதவுவது போலத் தளர்ச்சி வந்துழி காவற்சாகாடு உகைப்போர்க்கு ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் உதவும்! அதனால் அவர் சொல்லைக் கேட்கவேண்டும்’ என்று இருந்தாலேயே பொருண்மை நிறைவுறும் எனக் கருதுகிறார் பரிமேலழகர். அவர் எழுதுகிறார்,

அவற்றைக் கேட்க என்பது குறிப்பெச்சம்”

பாட்டில் சொல்லாவிட்டாலும் அதிகாரம் கேள்வியாதலின் அத்தகைகய பயன்தரும் சொற்களை நாட்டை ஆளுகிற மன்னன் கேட்டுச் செலுத்துவதே செங்கோல் சிறக்கும் நெறியாகும்’ என விளக்கமளிக்கிறார் பரிமேலழகர்.

நிறைவுரை

‘உறுப்பு இருபத்தாறும் ஒன்று ஒன்றனை இன்றியமையாவென்பது பெற்றாம்.’ என்னும் பேராசிரியர் கருத்தும் ‘கேட்போர்க்கு நோக்குதல்படச் செய்தவை’ என்னும் நச்சினார்க்கினியர் விளக்கமும் நோக்கு என்பதன் பொருளைத் தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்றன. பொதுவாக ‘நோக்கு’ என்பது பார்ப்பவர் வினையாக இருக்கும். இங்கே அது படைப்பிலுள்ள கூறுகளைக் குறிப்பதாக அமையும். இந்தக் கூறுகளே அதற்குப் பெருஞ்சிறப்பைத் தந்து அவ்விலக்கியம் நீடித்து நிலைப்பதற்குக் காரணமாக அமையும். திருக்குறளில் நோக்கு அமையாத குறளே இல்லை என்பதும் அதில் பரிமேலழகர் அறியாத நோக்கும் இல்லை என்பதும் அவ்விரண்டனையும் கற்பார் அடையும் வியப்பு!. ‘பானை சோற்றுக்குப் பதச்சோறாக’ மேற்கண்ட குறளில் அமைந்துள்ள நோக்கினைப் பரிமேலழகர்வழி ஆராய்ந்து கண்டதன் மூலம் அவர் உரைத்திறம் உணரலாம்!

(தொடரும்…..)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *