அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 21 (புதல்வன்)

0

ச. கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை

அகப்பாடல்களில் நேரில் இடம்பெறும்; வயதில் சிறிய பாத்திரம் புதல்வனாவான். அவன் பேசுவதும் கேட்பதும் நாடக வழக்கில் எங்கும் இல்லை. செவிலி, தலைவி,  தலைவன், காதற்பரத்தை, தோழி அனைவரது கூற்றிலும் இன்பமிகு இல்லறத்தின் அடையாளம் ஆகின்ற  பாத்திரமாக அமைகிறான்.

செவிலி ஏத்தும் புதல்வன்

செவிலிகூற்றுப் பத்தின் பாடல்கள் புதல்வனால் தலைவியின் இல்லறம் பெருமை பெறுவது பற்றிப் பேசுகின்றன. கணவனுடனும் தன் மகனுடனும் சேர்ந்து தலைவி துயில்கின்ற நிலையையும்; புதல்வன் சிறுதேர் உருட்டும் தளர்நடை பார்த்துத் தலைவன் மனம் மகிழ்வதையும் எடுத்துக்கூறுவதுடன்; மகளைப் ‘புதல்வன் தாய்’ என்று அழைக்கிறாள் (ஐங்.- 401-403, 405, 408, 409, 410).

காதற்பரத்தையின் கூற்றில் புதல்வன்

தலைவி மேல் சினம் கொள்ளும் போது கூட அவள் புதல்வனைப் பெற்றுத் தந்த பெருமைக்குரியவள் என்னும் கருத்துப்பட;

 “புதல்வன் தாய்” (குறு.- 8& ஐங்.- 90)

என்று சுட்டுகிறாள் காதற்பரத்தை. இது அன்றைய ஆண் முதன்மைச் சமுதாயத்தின் கொள்கை அடிப்படையில் அமைந்த அழைப்பு முறை ஆகும். ஏனெனில் ‘புதல்வி தாய்’ என்ற பெருமை தொகையிலக்கியத்தில் எந்தத் தாய்க்கும் வழங்கப்படவில்லை.

தோழியின் கூற்றில் புதல்வன் 

புதல்வனை ‘மாமகன்’ என்றழைத்து அவன் தலைவியைத் தழுவிக்  கொண்டு அழும் இன்குரல் பற்றிப் பேசுகிறாள் தோழி. தலைவன் வினை முடித்து மீண்டு வந்து விட்டான் ஆதலால்;

“கவவுக்கொள் இன்குரல் கேட்டொறும்
அவவுக்கொள் மனத்தேம் ஆகி”ப் (நற்.- 212)

பிரிந்து ஆற்றி இருந்த சோதனைக்காலம் முடிவுற்றது என்கிறாள்.

தலைவன் கூற்றில் புதல்வன்

தூங்குகின்ற பூங்கண் புதல்வன் அருகே நின்று கொண்டு;

 “வந்தீக எந்தை” (நற்.- 221)

என்று குரல் கொடுத்துத் தன் வருகையை மகிழ்ச்சியோடு தலைவி  எதிர்கொள்வாள் எனத் தலைவன் பேசுகிறான்.

தன் மனைவியைப் ‘புதல்வன் தாய்’ என்று அழைத்து அவள்
சினத்தைத் தவிர்க்க முயலும் தலைவனை; ‘மாயப் பொய்மொழி’
பேசுபவனாகத் தலைவி ஏசுகிறாள் (அகம்.- 6)

தலைவி பேச்சில் புதல்வன்

வினைவயிற் பிரிந்த தலைவனைப் பற்றிப் பேசும் தலைவி;

“………………………………….. மறந்தனன்
பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே” (ஐங்.- 265)

என்று தானும் மகனும் சேர்ந்திருக்கத்; தலைவன் மகனோடு சேர்ந்து இருக்கும் இன்பத்தைக் கருதாமல்; தனித்துப் பிரிந்து சென்று இருப்பதைக் கூறுகிறாள்.

புறத்தொழுகிப் பின்னர்  வாயில் வேண்டி வந்து நிற்கும் கணவனிடம் ‘எம் புதல்வனைத் தொடாதே’ என்று சண்டை இடுகிறாள் (கலி.- 79).

புதல்வன் பாத்திரத்தின் பருவம்

பிறந்த குழவி முதல்; விளையாடும் பருவம் வரையிலான புதல்வர் மட்டுமே அக இலக்கியத்தில் சிறுபாத்திரத் தகுதி பெறுகின்றனர்.

சுற்றத்தார் சூழ ஓம்புகின்ற சூல் உடையளாய்க் குடி விளங்கப் புதல்வனை ஈன்று; பாயலில்  படுத்திருந்தாள் காதல் மனைவி. நோய்த்தொற்றோ கிருமித்தாக்கமோ நிகழா வண்ணம் ஐயவி அரைத்து வீட்டில் நிலை கதவு எல்லாம் தடவி இருந்தனர். ‘இதுகாறும் மங்கைப் பருவத்தினளாய் இருந்தவள்; இனித் திதலை அல்குல் (stretch marks) உடைய மடந்தை எனும் முதுபெண்டு ஆயினள்’ எனத் தன் கையிலிருந்த குவளை மலரால் அவளது வயிற்றைத் தடவிக் கிண்டல் செய்கிறான் தலைவன். அவள் நாணம் கொண்டு கைகளால் கண்களை மூடி மகிழ்ந்தாள். அத்தருணத்தைத் தலைவன் நினைத்துப் பார்க்கிறான். அருகில் இருந்த பாணனிடம் சொல்லி நோகிறான். ஏனெனில் இப்போது அவள் இவனது புறத்தொழுக்கத்தால் ஊடி இருக்கிறாள் (நற்.- 370). இப்பாடல் அன்று பிறந்த புதல்வனைப் பற்றிப் பேசுகிறது.

முந்தைய நாள் பிறந்த புதல்வன் பற்றிய குறிப்பு இயற்கைப் புனைவில்  உவமையாக இடம் பெற்றுள்ளது. வாழை குலை தள்ளி உள்ளது. அக் குலையின் கொழுமடல் பூவினை காந்தள் பூ பொருந்திக் காட்சி அளித்தது. இது புதல்வனை ஈன்ற மடந்தை தன் கைகளால் முலை வாயுறுப்பது போலத் தோன்றியதாம் (நற்.- 355) குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கும்படி மருத்துவர்கள் ஆலோசனை கூறுவது இந்தக் காலம்; இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரை அப்படிக் கொடுக்கக் கூடாது எனும் கொள்கை தான் பாட்டி வைத்திய நடைமுறையில் இருந்தது. பிறந்த குழந்தைக்கு சேனை என்று சொல்லும் சர்க்கரை நீர்; அதில் ஒரு அரிசியளவு  மெலிதாக வெட்டிய பூண்டுத்துண்டு ஊறிக் கொண்டு இருக்கும்; அதை வடிகட்டித் தான் கொடுப்பர். குழந்தை வயிற்றுள் இருக்கும் காட்டுப்பீ ‘பசேர்’ என்று வெளியேறும். முழுவதாக வெளியேற பத்து அல்லது பன்னிரண்டு  மணி நேரம் வரை ஆகும். அதன் பிறகு தான் தாய்ப்பால் கொடுப்பர். இந்தப் பாடல் முதன்முதலில்  தாய்ப்பால் அருந்தும் புதல்வன் பற்றிப் பேசுகிறது.

ஈன்று நான்கு நாட்களான புதல்வனை அடையாளம் காட்டுபவள்; கருவுயிர்த்த நான்காம் நாள் முதல் தலைவழி நீராட்டுப் பெறும் தலைவி ஆவாள். மகப்பெற்ற தாய்க்கு முதல் தலைமுழுக்காட்டைப் பக்குவமாகச்  செய்வது இன்று வரை தமிழரிடம்  நிலைத்திருக்கும் வழக்கம் ஆகும்.

“புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த” (நற்.- 40)

என்ற வருணனை உடல்வலியும் அசதியும் நீங்க; தலைவழிக் குளியல் முடித்து சுகமான தூக்கம் கண்களைத் தழுவும் தலைவியைக் காட்சிப்  படுத்துகிறது. பெரும்பாலும் நான்காம் நாள் இயலவில்லை எனில்; ஏழாம் நாள் இக்குளியல் நிகழும். இன்று ஐயவி அரைத்துப் பூசும் வழக்கம் ஒழிந்து விட்டது எனினும்; மகவுயிர்த்த பெண்ணைப் பற்றிய புனைந்துரை இன்று வழக்கில் இருக்கும் சில சொலவடைகளை நினைவூட்டுகிறது. ‘பசுநெய் போன்ற மென்மையான உடலை உடையவள்’ என்று இப்பாடல் கூறுவது ‘பச்ச ஒடம்புக்காரி’ என்ற பாமரமொழியை உணர்த்துகிறது. அத்தகைய அவளது உடல்நலம் தனிப்படக் கவனிக்கப்பட வேண்டியது எனும் கருத்தை வலியுறுத்த; ‘பிள்ளப் பெத்த ஒடம்பும் மண்ணெடுத்த கெடங்கும் ஒன்னு’ எனச் சொல்லும் தாயர் கூற்றையும் நினைவூட்டுகிறது.

ஈன்று அணிமைப் பருவத்தினளாய தலைவி தன்னை நெருங்கிய கணவனிடம்;

“புதல்வனை ஈன்ற எம் மேனி
முயங்கன்மோ தெய்ய நின் மார்பு சிதைப்பதுவே” (ஐங்.- 65)

என்று அவனை விலக்குகிறாள். தலைவன் பரத்தமைக்காகத் தன் மார்பினை மலராலும் சாந்தாலும் அணிகலனாலும் புனைந்திருக்கும் அழகு பாலமுதம் பட்டுக் கெட்டு விடும் என்று அவனது ஒழுக்கத்தைச் சாடும் நுட்பம்; ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்து மகளிர் உயிரில் கலந்து; நாகரிகமாக உருவெடுத்த பண்பாட்டை வரையத் துணை செய்கிறது.

தத்தித் தத்தி நடக்கும் தன் மகனின் அழகை ரசித்து இன்புறும் தாயான தலைவி; அந்த இன்பத்தைக் காணாமல் புறத்தொழுகிய கணவனைக் குற்றம் கூறாத காதல் மனத்தினளாய்த்; தன் உடனிருந்து அனுபவிக்க இயலாதபடி பரத்தை அவனைத் தடை செய்கிறாள் என்னும் பொருள்பட;

“தளர்நடைப் புதல்வனை உள்ளி நின்
வளமனை வருதலும் வௌவியோளே”
என்று பரத்தையைக் குற்றம் கூறுகிறாள்.
தந்தையின் மார்பில் தனயன் ஏறி இறங்கி விளையாடும்
பருவத்து இன்பமயமான காட்சி காட்டுவழி வருணனையில்
உவமையாகவும் இடம் பெற்றுள்ளது (அகம்.- 197).

பால்குடி மறவாத மகனைச் சேடியோடு வெளியே புத்தேளிர் கோட்டம் அனுப்பினாள் தலைவி. சென்ற இடத்தில் புதல்வனுக்குத் தாய்  ஆகும் தகுதி வாய்ந்த பெண்கள்; அதாவது தலைவனின் பரத்தமைக்குத் துணை நிற்பவர் அவனைக் கண்டு கொஞ்சியதால்; வீடுதிரும்ப நேரமாகி விட்டது. தலைவிக்கோ இக்கட்டான நிலைமை; காலத்தில் தோன்றிய கொண்மூப் போல்; பால் கட்டி வீங்கிய நிலையில் ‘தவ நெடிது ஆயினை; புக்க வழி எல்லாம் கூறு’ என்று நிற்கவைத்துக் கேட்கிறாள். (கலி.- 82)

அதை அடுத்த நிலையாக; ‘விளையாடும் பருவத்துப் புதல்வனோடு உன்னைப் பிரியமாட்டேன்’ என விளையாட்டுத் தேரைப் பொய்த்தேர் என்று  பொருள்படச் சுட்டி  நம்பிக்கை கொடுக்கும் தலைவன்;

“பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்” (நற்.- 166)

என மகனை முதன்மைப்படுத்திப் பேசுகிறான். குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுவதைப் ‘பொய்த்தல்’ என்றே பண்டைத் தமிழர் கூறியுள்ளனர்.  (நற்.- 161& அகம்.- 54)

குறிஞ்சிநிலத்தில் யானைக்கன்றுடன் ஓடி விளையாடும் புதல்வன்;

“குறியிறைப் புதல்வன்” (குறு.- 394)

என்று அழைக்கப்படுகிறான். குறுகிய முன்கையை உடையவனாக இருப்பது அவனது இளம் பிராயத்தை உணர்த்துகிறது.

புதல்வனுக்குரிய தகுதியும் பெருமையும்

தன் பாட்டனின் பெயருக்கு உரியவன் என்ற பெருமை புதல்வனுக்கே உரித்தாக இருந்தமை;

“முதல்வன் பெரும்பெயர் முறையுளிப் பெற்ற….
அரும்பெறல் புதல்வனை” (கலி.- 75);

“சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே” (நற்.- 40)

என்றெல்லாம் போற்றப்படுவதால் அறிகிறோம்.பொன் போன்றவன், உயிர் போன்றவன், ஆலமர் செல்வன் போன்றவன், மாநிதிக் கிழவனாகிய குபேரன் போன்றவன், மாமகன் என்றெல்லாம் புதல்வன் புகழ் மொழிகளால் சுட்டப்படுவதை இக்  கட்டுரை நெடுகிலும் காணலாம். புதல்வனைப் பெற்ற தாய் குடிக்கு விளக்காகக் கருதப்படுவதுடன் எல்லா நலன்களும் பெற்ற ‘நன்னராட்டி’ (அகம்.- 176& 184) எனும் புகழ்மொழிக்கு உரியவர் ஆகின்றாள்.

இல்லறம் நிலைக்க வைக்கும்  புதல்வன்  

நல்லொழுக்கம் மிகுந்த கணவன் செவிலி கையிலிருந்த புதல்வனை நோக்கி; அவன் மேல் பாசம் பொங்கத்; தலைவியை நேருக்கு நேராக அணைக்க இயலாது; முதுகுப்புறத்தில் நின்று தழுவினானாம் (அகம்.- 26)

புறத்தொழுக்கத்தில் ஈடுபட்டிருந்த கணவனின் கொடுமையை மறக்கவும் ஊடலைத் தீர்க்கவும் புதல்வனே ஏற்ற துணையாக அமைகிறான் (கலி.- 70, 81& குறுந்.- 359). ‘ஆலமர் செல்வன் போல வந்த என் உயிரனைய புதல்வனை நெருங்காதீர்; உம் ஆடையில் பரத்தையர் தலைமுடியில் இருந்து சிந்திய மயிர்ச் சாந்தின் துகள்கள் ஒட்டி உள்ளன’ என்று ஊடிய மனைவியின் சொற்களை உதறிவிட்டு; ‘எந்தை பெயரனை யாம் கொள்வேம்’ என மகனைக் கொஞ்சியதால் ஊடல் தீர்ந்த வரலாற்றைத் தலைவி  கூறுகிறாள்.

புதுமணம் புரியத் தேரில் செல்லும் தலைவன் தன் மனையைக் கடக்கிறான். அவனது ஒழுக்கம் சீர்கெட்டு இருந்தது. ஒரு பரத்தையின் இருப்பிடத்திலிருந்து இன்னொரு பெண்ணை நாடிச் சென்ற அவனைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மகன் பார்த்து அழுதான். பாகனிடம் தேரை நிறுத்தச் சொல்லிப் ‘பூங்கண் புதல்வனைத்’ தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைகிறான் தந்தையானவன். மனைவியோ கணவன் போக்கைத் தடுத்தமைக்காக மகனை நொந்து கடிகிறாள். தன் கணவனது மனமும் விழைவும் நன்கு அறிந்தவள் ஆதலால்; அவன் மேலுள்ள கோபத்தை மகன் மேல் காட்ட முனைகிறாள். அந்த வேளையில் பரத்தை வீட்டிலிருந்து மணமுழவு ஒலிக்கிறது. ஆனாலும் அழுது அடம் பண்ணிய மகனைப் பிரிய மனமின்றி ‘மாநிதிக் கிழவனும் ஆவான்’ என்று மகனைக் கொஞ்சி அன்றைய புதுமணத்தைத் தவிர்க்கிறான் தலைவன். புதல்வனால் நேர்ந்த நன்மை இதுவென்று தோழியிடம் கூறுகிறாள் தலைவி (அகம்.- 66).

ஊடல் தணியாது; தலைவனை வீட்டினுள் விட மறுக்கும் தலைவியிடம் பின்விளைவைப் பேசும் தோழி; ‘இனி எப்படிப் புதல்வனுக்குப் பாலூட்டுவாய்?’ என்று வினவுகிறாள் (அகம்.- 316). கணவனைப் பிரிந்த வாழ்வில் வளமாக உண்ணப் போவதுமில்லை; தனிமை மனநலம் தரப்போவதும்  இல்லை. எனவே புதல்வனுக்குப் பாலூட்ட தலைவனின் தவறை மன்னித்து இல்லறம் பேணுவாயாக என்கிறாள். வினைவயிற் பிரிவைத் தடுக்கவும் ‘புதல்வன் பாலுக்கு அழுவான்’ என்ற காரணமே காட்டப்படுகிறது (ஐங்.- 424).

எந்தக் கேள்வியும் கேட்காமல் கணவனை வீட்டினுள் அனுமதிக்கும் தலைவியும் புதல்வனைப் பயந்தவளே. தன்னை வியந்த தோழியிடம்; ‘விருந்தெதிர் கொள்ள வேண்டும்; அவன் கூறிய பொய்ச்சூள் அவனைப் பாதித்துவிடக் கூடாது’ என்றெல்லாம் காரணம் கூறினாலும்  அவன் மகனைக் கட்டியணைத்துப் பாசத்தைப் பொழிவதைத் தான் முத்தாய்ப்பாக உரைக்கிறாள் (கலி.- 75). இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரை மணமுடிந்து ஓரிரு மாதங்களிலேயே ‘உண்டாயிட்டாளா?’ என்ற கேள்வி பார்ப்பவர் வாயிலிருந்து எல்லாம் எழுந்த காரணம்; நிலையான இல்லறத்திற்கு மகப்பேறு வலுவான அஸ்திவாரமாக அமைந்தமை எனலாம்.

புதல்வனைப் பேணல்

அன்றாடம் புதல்வனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளால் தாயின் உடையும் தோளும்; நெய்யும் குய்யும் ஆடி; மையோடு மாசுபட்டிருக்கும்.  பாலூட்டப்  புனிறு நாறும் (நற்.- 380). அன்றாடம் எண்ணெய் தேய்த்தல்;  குளிப்பாட்டுதல்; மணப்புகைத் தூபம் காட்டி ஈரம் போக்கல்; மையிட்டு அழகு படுத்திக்; கண்ணேறு கழிக்க முன்னேற்பாடு செய்தல் பாலூட்டுதல்  அனைத்தையும் கிரமப்படி இப்பாடல் சொல்கிறது. இன்று வரை தமிழகத்தில் தாய்மார் குழந்தையைப் பேணும் முறை இதுவே.

புதல்வன் தோற்றம்

புலிப்பல் தாலி அணிந்தவனாகப் புதல்வன் சித்தரிக்கப்படுகிறான் (குறுந்.- 161). பொலந்தொடியும் ‘பொன்னுடைத் தாலி’யும்  அணிந்தவன்

எனச் சுட்டப்படுகிறான் (அகம்.- 16, 54). பெருமுது செல்வரின் புதல்வர் பொன் ஆபரணங்கள் அணிந்தவராகவும்;  ‘அரிபெய் கிண்கிணி ஆர்ப்பத் தெருவில் தேருடன் நடை’ பயில்வதாகவும்; குரும்பை மணிப்பூணும்; பெருஞ்செய் கிண்கிணியும் அணிந்த புதல்வன் பாலார் துவர்வாயுடன் தன் தந்தையின் மார்பில் ஏறி இறங்குவதாகவும் பாடப்பெறுகின்றனர். (நற்.- 58, 250, 269). மழலை பேச முயலுங்கால் வாயிலிருந்து ஒழுகும் எச்சிலால் கழுத்தணி நனைய; தலையணி பிறைநெற்றியில் உருள ‘கிளர்மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் தளர்நடை’ பற்றிப் பேசும் பாடல்கள் பல (கலி.- 80& 81).

தெய்வத்திற்குரிய மழு ஆயுதம் குழந்தையின் கழுத்தணியில் கோத்துச் சூட்டப்பட்டது. காற்சதங்கை, அரைப் பொன்வடம், பவளவடம், பொற்றொடி, வெட்டாத வாளும் மழுவும் நெருக்கிக் கட்டி இடபம் பொறித்த பவளக் கழுத்தணி, முத்தும் மணியும் நீலமும் சேர்த்துக் கட்டிய மூன்று வடத் தலைமாலை என்று பாதாதிகேசம் வரை அணிகலன் பூட்டிய புதல்வனைப் பாராட்டிப் பாலூட்டித்; தன் கணவன் செய்யும் பரத்தமைக் கொடுமைக்கு மாற்றுத் தேடுகிறாள் தாயானவள். (கலி.- 85) தமிழர் இக்கலன்களைப் ‘பிள்ளைப் பண்டம்’ என்று இன்றும் குறிப்பிடுகின்றனர்.

பிறந்த முடியுடன் இருக்கும் புதல்வனின் தலை ‘புல்லுளைக் குடுமி’ கொண்டதாகச் சுட்டப்படுகிறது. மார்போடு அணைத்த மகனின் குடுமியில் ஒரு ஜோடி நீர்ப்பூம் பிணையலைச் சூட்டி; அழகுபடுத்தி இருந்தாள் தாய்.

“ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்”

என இக்காட்சி வருணிக்கப்பட்டுள்ளது. புதல்வனின் ‘புன்தலை’ அவனது பிள்ளைமைப் பருவத்து அடையாளமாகப் பலமுறை பேசப்படுகிறது (அகம்.- 5, 176, 245). இப்புல்லுளை களைவதைத் தான் இன்றும் ‘பிறந்தமுடி எடுத்தல்’ என்றும்; ‘தலைமொட்டை’ என்றும் சொல்லிக் குடும்ப விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

புதல்வனும் புதல்வியும்

மகனைப் பெற்ற தாயருக்கு அத்துணை சிறப்புக்களும் கொடுக்கப் படுவதை இதுகாறும் கண்டோம். மகளைப் பெற்ற தாயர் பற்றி நம் மனதில் கேள்வி எழுகிறது. பெண்குழந்தைகளைக் கண்டுகொள்ளவே இல்லையா? என்றும் ஐயம் எழுகிறது. மகளைப் பாசத்துடன் வளர்த்த தந்தையை  தந்தை பற்றிய கட்டுரையில் ஏற்கனவே கண்டோம். பெற்ற மகள் மங்கைப் பருவத்தை எட்ட; அவளுக்கு இளைய தம்பி ஒருவனைத் தாய் நெஞ்சோடு அணைத்துத் துயிலும் கோலம் அந்த மங்கையின் வாய்மொழியாகவே இடம் பெற்றுள்ளது. இரவுக்குறியில் சந்திக்கத் திட்டமிடும் காதல் ஜோடி; நினைத்தது நடக்கவில்லை. காரணம் என்ன என்பதை அவன் வேலிக்கு அப்பால் நிற்கும் போது தலைவி தோழியிடம் பேசுவது போல அவன் காதுபடப் பேசுகிறாள். இரவு முழுவதும் தாய் தூங்கவே இல்லை; தம்பியை அணைத்துத் தூங்க வைத்து; மகளை ‘அன்னாய் அன்னாய்’ என்று குரல் கொடுத்து அழைத்து ‘அவள் தூங்கி விட்டாளா’ என்று சோதித்துக் கொண்டே இருந்தாள். பதின்மவயது மகளைக் கண்காணிக்கும் தாயிடம் இருந்து தப்ப இயலாத தலைவியின் நிலை இது (குறு.- 161).

புதல்வனை மையப்படுத்தும் சுவையான காட்சிகள்

பரத்தமை பூண்டவன் தலைவனாக இருக்க; அதற்குத் துணை நின்ற பெண்கள் அனைவரும் பரத்தையர் அல்லர் என்று உணர்த்தும் பாடலுக்குப் புதல்வனே மையப்பொருள் ஆகிறான்.

தேரோடும் தெருவில் புதல்வன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவ்வழியாக வந்த பெண் தலைவனின் காமக்கிழத்தி; இக்காலத் தமிழில் ஆசைநாயகி. தன் அன்பிற்கு உரியவனின் புதல்வனை அடையாளம் கண்டு கொண்ட அவள் அடக்க முடியாத ஆசையுடன் அவனைத் தன் மார்போடு அணைக்கிறாள். தலைவி ஏற்கனவே தலைவனின் நடவடிக்கை தெரிந்தவள் ஆதலால்; இச்சூழல் அப்பெண்ணை நேரில் பார்க்க ஏதுவாகத்  தலைவிக்கு அமைந்தது. தலைவியைப் பார்த்தவுடன் நாணம் கொண்டு தலை கவிழ்ந்த அவளிடம் ‘நீயும் இவன்  தாயே’ என்று சொல்லிச்சூழலைச்  சமாளித்தாள் தலைவி. தலைவனோ தன் களவை மறைத்துப் பொய் கூறுவதை நிறுத்தவில்லை. நடந்ததைக் கூறி; நடப்பவற்றை மறைக்க இயலாது என்று அவனுக்கு உணர்த்திய மனைவி அக் காமக்கிழத்தி பற்றி ‘அவளும் அருந்ததி போன்ற கற்பினை உடையவள்’ என்று சான்று அளிக்கிறாள் (அகம்.- 16). அப்போது தலைவன் முகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்து ரசிக்கலாம். குடும்பத்திற்குள் உரிமை மனைவியின் நிலைமை பற்றித் தனிப்பட உளவியல் ஆய்வும், பெண்ணிய ஆய்வும் நிகழ்த்தலாம்.

கணவனைப் பிற பெண்களிடம் இழந்த மனைவி ஒருத்தி தீராத மனவுளைச்சலில் பொருமுகிறாள். அவளது புதல்வன் தன் கணவனின் சாயலைக் கொண்ட அழகன். கால்களில் கிண்கிணி ஒலிக்கப் போர்யானை போல் நடைபயிலும் கம்பீரம் மிகுந்தவனாம். இடுப்பில் தூக்கிவைத்துக் கொள்ளும் பருவத்தினனாகிய அவனிடம் ‘உன் தந்தையைப் போல் பகைவரை வென்று வெற்றி பெறுவாய்; ஆனால் நீ அவனைப் போல் பெண்கள் விஷயத்தில் எளியனாக இருக்காதே. நுகத்துப் பகலாணி போல ஒருபக்கம் சாயாத அவனது செங்கோல் தன்மையைப் போற்று; ஆனால் காதல் மனைவி இருக்கப் பிற பெண்களை நாடாதே. அவனைப் போல் ஈந்து புகழ் பெறுவாய்; ஆனால் அன்பு மனைவியை அழ வைக்காதே’ என்றெல்லாம் பாடம் சொல்கிறாள். தாயின் சொற்களைப் புரிந்து கேட்கும் பருவமடையாத புதல்வனின் முகத்திலும் நடையிலும் தன் நோய்க்கு மருந்தைத் தேடுகிறாள். ஒருபுறம் நகையைத் தோற்றுவித்தாலும்; இன்னொரு புறம் ஆழ்ந்து நோக்கும் போது அவளது நிலை அவலத்தைத் தோற்றுவிக்கிறது. (கலி.- 86)

எல்லாவற்றுக்கும் மேலாக மிகுந்த சிறப்பும் தனித்தன்மையும் உடைய புதல்வன் ஒருவனைத் தலைவி அடையாளம் காட்டுகிறாள். இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தன்னை மணந்து கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கத் தெரியாத தலைவன். தலைவியின் தமரோ எருமைப்பெடையைச் சீதனமாக நிறுத்தி வேற்றவர்க்கு மணம் பேசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். என்ன செய்ய வேண்டும்? என்ன சொல்ல வேண்டும்? வெற்றிகரமாகத் தன்னை மணப்பது எப்படி என்றெல்லாம் தோழி அவனுக்குப் பாடமெடுத்து அறத்தொடு நிற்க வற்புறுத்துகிறாள். அவன் கட்டிளம் காளை தான்; தலைவி மேல் காதல் மிகுந்தவன் தான். காரியக்காரனாக இல்லாமல்; விஷயம் கைமீறிப் போவதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் அவன்; பெண்கேட்கத் தன் பெற்றோரை வற்புறுத்தாமல் வாளா இருக்கிறான். அவனுக்கு ‘ஓரிப் புதல்வன்’ என்று பட்டம் கட்டுகிறாள் தலைவி. இதுகூடத் தெரியவில்லையே என்ற போக்கில் புலம்பும்  தலைவி அவனை மணந்து கொண்டு நடத்தவிருக்கும் இல்லறம் பற்றிக் கற்பனை செய்யும்போதே நகைச்சுவை தூள் கிளப்புகிறது.

முடிவுரை

செவிலி, தலைவி, தலைவன், காதற்பரத்தை, தோழி அனைவரது கூற்றிலும் இன்பமிகு இல்லறத்தின் அடையாளம் ஆகின்ற பாத்திரமாகப் புதல்வன் அமைகிறான். பிறந்த குழவி முதல்; விளையாடும் பருவம் வரையிலான புதல்வர் மட்டுமே அக இலக்கியத்தில் சிறுபாத்திரத் தகுதி பெறுகின்றனர். பாதாதிகேசம் வரை பொன் ஆபரணங்களும் புலிப்பல் தாலியும் அணிந்தவனாகவும் பிறந்த முடியுடனும் புதல்வன் சித்தரிக்கப்  படுகிறான். தெய்வத்தின் படைகள் புதல்வன் கழுத்தில் காப்பாகச் சூட்டப்  பட்டிருந்தன. அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் தாய்மார் குழந்தை பேணும் முறையில் பெருத்த மாற்றம் இல்லை. அன்றைய சமுதாயத்தில் இல்லறம் நிலைபெறப் புதல்வன் காரணமாக இருந்தான். தன் பாட்டனின் பெயருக்கு உரியவன் என்ற பெருமை புதல்வனுக்கே உரித்தாக இருந்தது. புதல்வனைப் பயந்த தாயே குடிக்கு விளக்காக; எல்லா நலன்களும் பெற்றவள் எனும் புகழ்மொழிக்கு உரியவளாக இருந்தாள். மகப்பேறு, குழந்தை வளர்ப்பு நடைமுறைகள் இன்று உள்ளது போன்றே தொகை இலக்கியத்தில் பேசப்படுகின்றன. செவ்விலக்கியக் காலச் சமுதாயம் ஆண் முதன்மைச் சமுதாயம் ஆதலால் புதல்வனைப் பெற்றவள் ‘புதல்வன் தாய்’ என்றே சுட்டப்படுகிறாள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *