பாஸ்கர் சேஷாத்ரி

சார், நீங்க இவங்களுக்கு என்ன வேணும்?

தம்பி சார்.

பேரு?

வரது சார்

அவங்க பேரு?

பிரமிளா

என்ன வயசு?

நாற்பது சார்

தீப்பிடிச்சப்ப நீங்க எங்க இருந்தீங்க?

ஆபிஸ்ல , நைட் ஷிபிட்

யார் சொன்னாங்க?

அவங்க ஹஸ்பன்ட்.

எங்க அவரு?

படுத்துண்டு இருக்கார்

வாஹ்ட்

சாரி சார் போதை சார்

ஓ அதான் இஷுயுவா.

எப்படி பேசினாருன்னு புரியல. ஆனா பிரச்சினைன்னு புரிஞ்சுண்டு வந்துட்டேன்

எங்க வேலை செய்யறீங்க?

பிரேக்ஸ் இந்தியா சார்.

நீங்க போய் உக்காருங்க.

நான் போய் அவங்களைப் பாக்கலாமா?

வாட் டூ யு மீன், இது போலீஸ் கேஸ்

உங்க முகத்துக்காக நான் கொஞ்சம் பேசினேன்

உங்களுக்கு அந்த க்ராவிடி தெரியாது .

தெரியும் சார். முதலுதவி கொஞ்சம் தெரியும்

சார் டோன்ட் ஜோக் ஹியர். சிஸ்டர்ஸ் உடம்பைத் தொடக்கூட முடியல. கையோடு எல்லாம் வரது

ஐயோ நாராயணா.

ரிலாக்ஸ் சார். வாசல்ல அவுட் போஸ்டுல ஒரு புகார் கொடுத்துட்டு வாங்க. கையில எதாவது டாகுமென்ட் இருக்கா.

டிரைவிங் லைசென்ஸ்.

நோ யூஸ்.

நீங்க போங்க . அவங்க என்ன செய்யணும்னு சொல்லுவாங்க

சார் வெளிய இருந்து பாக்கலாமா?

ஒன்னும் தெரியாது.

குழந்தைங்க எல்லாம் சின்னப் பசங்க சார்

சார் நான் இப்ப தியேட்டருக்குப் போறேன். டோன்ட் ஹோல்ட் மீ. எண்பது சதம் தீக்காயங்கள்.

சார். ஒரு நிமிஷம் சார்.

வாணி இவரைக் கூட்டிட்டுப் போங்க . உடனே கூட்டிட்டு வாங்க .

சார் அங்க போய் ஏதும் பேசாதீங்க.

உள்ளே பேன் காற்றில் வெள்ளைத் துணி லேசாக அசைந்தது .

பரிக்கா.

சார் பேசாதீங்க

ஒரு நிமிஷம் மா.

பரிக்கா.

மெல்ல தொட்டவுடன் உடல் கூழாய்க் கையில் ஒட்டிக்கொண்டது .

சார். நான் டாக்டரைக் கூப்பிடுவேன், கிளம்புங்க .

பரிக்கா. அவள் உடம்பெல்லாம் வெள்ளைத் துணி. முகமெல்லாம் கட்டு. அங்கெங்கே கறுப்பு தேய்ந்த முகம் . அறை முழுக்க மண்ணெண்ணெய் வாசம்

பரிக்கா.

சட்டென அவள் கண்கள் திறந்தன. இமைகளைத் திருப்பவில்லை. திறந்த நோக்கில் பார்வை.

வரது எனக் கூப்பிட்டது போல இருந்தது.

உதடுகள் அசைந்தன.

வார்த்தைகள் வெளியே வரவில்லை . .

சார் கிளம்புங்க.

போம்மா நான் பாத்துக்கிறேன் .

பரி.

அவள் பதில் பேசவில்லை .

சார், அவங்க செத்துட்டாங்க

சும்மா இரும்மா.

பல்ஸ் இல்லை.

அவங்க என்ன தான் பாக்கறாங்க.

இல்ல சார்.

பேசினாங்க மா

தெரியும். அப்புறம்தான் உயிர் போச்சு.

ம்மா, அவங்க என்ன கூப்பிட்டது காதுல விழுந்ததா?

தெர்ல சார், போலாம்.

கொதிக்கற பால் பட்டவுடன் எரிச்சல், சிகரட் சூடே தாங்க முடியல, எப்படிக்கா நீ?

சார் உங்களை டாக்டர் கூப்பிடறாரு.

வேணாம்பா, அவங்க என்கிட்டே பேசிட்டாங்க.

என்னை வரதுன்னு கூட்டாங்க. உதடு அசஞ்சுது பா

டாக்டர் அவர் வரமாட்டேன்கறாரு .

வரது , ஷி டைட் எனிவே பீஸ்புல்லி.

சொன்னங்க வாணி.

சரி நம்ப பார்மாலிடீஸ் பாக்கலாம். ஆனாகூட அவங்க பேசினது த்ரில் வரது .

ஆமா சார். கொஞ்சம் மனசு ஆறுதலா இருக்கு சார்.

வாணி ரிப்போர்ட் எல்லாம் ரெடி பண்ணு. அடாப்சி செக் பண்ணு.

எல்லாம் ரெடி சார்

சார் டைம் ஆப் டெத் என்ன சார் போட?

அவரு எப்ப உள்ள போனாரு

பதினொன்றரை சார்.

சரி அப்ப நிஜ டைம் ஒம்போதரைன்னு போடாம, பதினொன்னு இருபதுன்னு போடுங்க. டூ இட் ரைட்.

சரி சார்.

வரது தேநீர்க் கோப்பையைக் கைமாற்றிக்கொண்டு இருந்தான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *