திருச்சி புலவர் இராமமூர்த்தி

பாடல் :

அப்பொன்  பதியின்   இடைவேளாண்   குலத்தை  விளக்க  அவதரித்தார்
செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய   கழல்பற்றி
எப்பற் றினையும்  அறஎறிவார்; எல்லை  தெரிய  ஒண்ணாதார்
மெய்ப்பத்   தர்கள்பால்   பரிவுடையார்  எம்பி   ரானார்;  விறன்மிண்டர்

பொருள்

அந்த அழகிய பதியிலே வேளாண் குலத்தை விளக்கம் செய்ய அவதரித்தார்; சொல்லுதற்கரிய பெருஞ் சீர்த்தியுடைய சிவபெருமானாரின் சேவடிகளையே பற்றுக்கோடாகக் கொண்டு ஏனைய எல்லாப் பற்றுக்களையும் அறஎறிவார்; எல்லையிட வொண்ணாதார் உண்மையடியார்களிடத்து அன்புமிக உடையவர்; எமது பெருமானாராகிய விறன்மிண்டர்.

பொன்பதி – பொன் -அழகு. திருவுடைமையுமாம். இவற்றின் காரணம் முன்பாட்டில் உரைக்கப்பெற்றது.

வேளாண் குலத்தை விளக்க  – என்ற தொடர்  வேளாளர் என்ற குலம் இவர் அதனுள் வந்தவதரிக்கப் பெற்றமையால் விளக்கமடைந்தது. வேளாளர் குலத்திற்கு முன்னரிருந்த அளவிளாத பெருமைகளினும், திருத்தொண்டத்தொகையை உலகம் பெற்றுய்தற்குக் காரணராயிருந்த இவரைத் தன்னுட் பெற்றது அக்குலத்திற்கு மிகப் பெருமையும் விளக்கமும் தந்தது என்க.

“ஆசின் மறைக்,
கைப்படுத்து சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச்,
செப்பு நெறி வழிவந்தார் சிவபாத விருதயர்“ என்றும்,

“கானவர் குலம் விளங்கத் தத்தைபாற் கருப்பம் நீட“ என்றும்

சேக்கிழார்  கூறிய   திருவாக்குக்கள்  குலமாண்பை சிறப்பித்தமை  காண்க.

செப்பற்கரிய பெருஞ் சீர்த்திச் சிவனார் –  என்ற தொடர்  ‘செப்பற்கரிய’  அதாவது , “உலகெலா  முணர்ந்   தோதற் கரியவன்“ என முதற்கண்ணே ஒதியதை  நினைவூட்டுகிறது.

“யதோ வாசோ நிவர்த்தந்தே“ – (எதினின்றும் வாக்குக்கள் திரும்பிவிடுகின்றனவோ) – என்னும் பொருள் காட்டும்  உபநிடதத்தால்   செப்பற்கருமை உணரப்படும். பெரும் – மிகச்சிறியதும் செப்பரிதாம்   ஆதலின் அதனை  விலக்க, ‘பெரும்’ என்றார்.

சீர்த்தி – இச் சீர்த்திகளை மறைகள் பற்பலவாறு பேசித் திளைத்துணர்த்தும் சிவம் என்ற சொல் இருத்தல் – கிடத்தல் எனப் பொருள் தருதலால், எங்கும் இருப்பது – எங்கும் பதிந்து கிடப்பது எனப் பொருள் கொண்டு சிவபெருமானது எல்லா மறியுந் தன்மை, ஒன்றாயும் வேறாயும் உடனாயும் இருக்குந் தன்மை முதலிய பல சீர்த்திகளையும் மறைகள் பேசும். வேதங்களுள்ளே திருவுருத்திரமும்,

“மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகி“,

“மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை“,

என்பன முதலிய எண்ணிறந்த தமிழ் மறைகளும் இறைவன் எல்லாமாய் அல்லனுமாய் நின்றருளும் இச்சீர்த்தியை மிக விதந்து பேசுகின்றன. இறைவன் உயிர்களுக்கருள்புரியும் சீர்த்தியே அவனது கீர்த்திகளுள் மிகச் சிறந்ததாம். மாணிக்கவாசக அடிகள் கீர்த்தித் திருவகவலுள்ளே இதனை விரித்துப் பாராட்டியிருத்தலைக்  கண்டு தெளிக..

இனி வேதம்,  முன்னுரையாகப்  பிரமன் விட்டுணு முதலிய தெய்வங்களின் புகழ்களையும் பேசும். ஆனால் அவை, இறைமைக் குணங்கள் முற்றும் உடையவரல்லாதாரை அவையுடையரெனப் பேசுதலால், பொருள் சேராவாம். அவை அவற்றினும் வலிமையுடைய கூற்றுக்களாற் பாதிக்கப்பட்டு இறுதியில் சிவனது சீர்த்தியே பெரியதாய்ப் பேசப்பெறும்.

பிரமனை, அயன் – அசன் – பிறப்பில்லாதான் என உபசரிக்கும் கூற்று, பிரமன் விட்டுணு உந்தியிற் பிறந்தான் என்றபோது பொருள் சேராப் புகழாயொழியும். அவ்வாறே விட்டுணுவைப் பேசும் நாராயண உபநிடதம், நாராயணன் ஆத்மா – ‘’அவர் சத்தியம் – அவர் முதலில் இருந்தவர் – அவரே இந்திரன்’’ – என்றெல்லாம் புகழும். ஆயின் முடிவில் நாராயணன் ஆத்மா – அவர் சத்தியம் – அவர் முதலில் இருந்தவர் – அவரே இந்திரன் – என்றெல்லாம் புகழும். ஆயின் முடிவில், நாராயண:பரோத்யாதா – சுவேதாசுவதரம், அவர்தியானிக்கிறவர்; சிவனொருவனே தியானிக்கத்தக்கவர்; தியானிக்கப் படுபவர். சிவ ஏகோத்யேம்: (அதர்வசிகை) என முடிக்கின்றபோது முன்னர்க் கூறிய புகழ்கள் பொருள் சேராவாம்.

“பையஞ் சுடர்விடு நாகப் பள்ளி கொள் வானுள்ளத் தான்“, “திருமாலகத்தான்“, “தொழப்படுந் தேவர் தொழப்படுவானை“, “சேர்ந்தறியாக் கையான்“, “தன்னாற் றொழப்படுவா-ரில்லை தானே“ என்பனவாதி எண்ணிறந்த தமிழ்

மறைகளும் இக்கருத்தே பற்றியன.

(இவை திரு.க. சதாசிவ செட்டியா ரவர்கள் உரைக் குறிப்புக்கள்.)

சிவனார் – ஆர் விகுதி உயர்வு குறித்தது. செய்ய கழல்- சேவடி “அரவணையான் சிந்தித் தரற்றும்படி“ என்பது முதலாகத் திருவடித் திருத்தாண்டகத்திற் கூறியன காண்க.

கழல் – ஆகுபெயர். திருவருள் நிறைவே திருவடியாகக் கூறப்பெறும். இறைவனுக்குத் திருமேனி கற்பிக்கப் பெறும்போது திருவடியும் கற்பிக்கப் பெறுமென்க. திருவடியே சிவசத்தியாம் – அதுவே தாரகமாவது.

செய்ய – செம்மையுடைய – வீடுபேறுதரும் – என்ற பொருளில் வந்தது. செய்ய -சிவந்த எனக் கூறலுமாம். எல்லாரும் மலரிட்டு அருச்சித்து வணங்குதலால்  சிவந்தது.

“தேவரெல்லாந் தொழச்சிவந்த செந்தாள் முக்கட் செங்கரும்பே“ – தாயுமானார்;

“நின்போ லமரர்கள் நீண்முடி சாய்த்து நினைந்துகுத்த,
பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன“ (அப்பர் – திருவிருத்தம்).

அருச்சித்த மலர்களினின்றும் தேன்பாய்ந்து சிவந்தது என்பதுமொரு கருத்து.

 “சிறந்து வானோர் ,
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
வின்மலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி,
நனைந்தனைய திருவடி“      என்பது  திருமுறை .

கழல்பற்றி எப்பற்றினையும் அற எறிவார் – பற்றத்தக்கது கழலேயாம் என்பது. அதனைப் பற்றுவதும் பிற எல்லாப் பற்றுக்களும் அறுதற்கேயாம். பிற பற்றுக்களற்ற போதே திருவடிப் பற்று உளதாம். திருவடிப் பற்று உளதாகப் பிற பற்றுக்கள் அறும். இவ்விரண்டும் திருவருளால் உண்டாகவேண்டும் என்க. “முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே“ என்ற தேவாரமும் காண்க.

எப்பற்றினையும் – யான் எனது என்ற அகப்பற்று, புறப்பற்றுக்கள் அனைத்தையும்; தேவலோக நாகலோக பூலோகப் பற்றுக்களையும்.

“போகம்வேண்டிவேண்டிலேன்புரந்த ராதி இன்பமும்,
ஏக நின் கழலிணை யலாது  இலேன்“ என்பது திருவாசகம்.

கழற்பற்று ஒன்றொழித்து வேறு எல்லாப் பற்றுக்களையும் எப்பற்றினையும் என்றதனால் “வீடும் வேண்டா விறலின் விளங்கினார்“, “ஈசனோ டாயினு மாசை யறுமின்“ என்றபடி நிராசையாகிய தொண்டர் நிலையுங் கொள்ளப்பெறும்.

இந்நாயனார் இறைவனிடத்து வீடும் வேண்டா விறலை உடையராய், அவனையும் புற கென்ற திறத்தைக் காண்க. அற எறிவார் – அற – அறவே – முழுதும். அறும்படியாக என்றலுமாம். எறிவார் – எறிவாராயினர்.

எல்லைதெரிய ஒண்ணாதார்  என்ற தொடர்,  பொருளின் அளவால் அளக்க லாகாதவருடைய. முன் செப்பற்கரிய என்றது உரையின் அளவால்  அளக்கலாகாமை குறித்தது.  இதனை நாயனார்க்குக் கூட்டி, அளவிடமுடியாத பெருமையுடையவர் என்றுரைப்பதும்  உண்டு. எல்லை தெரிய ஒண்ணா இறைவன் கழல்பற்றியவராதலின் இவரும் அத்தன்மையினரே.

மெய்ப்பத்தர்கள் – உண்மை யன்பர்கள். மெய்ப்பொருணாயனார் போலல்லாது இந்நாயனார் உண்மை யன்பர்கள் பாலே பத்தி செய்வார். ஆயின் இவர் வேடத்தைச் சிந்தை செய்யாரோ எனின், வேடத்துடன் உண்மை யன்பும் உடன்சேர்த்தி எண்ணி அன்பு செய்வார் என்க.

இது இவரது சரிதக் குறிப்பாகும். நம்பியாரூரரையும் அவரை ஆட்கொண்ட பெருமானையும் புறகு என்று கூறவல்ல விறல் படைத்தவராதலின் இவரது திருவுள்ளம் மெய்ப் பத்தர்கள் பாற் பரிவுடையது என்றார். பரிவுடைமை – அன்பு பூண்டொழுகுதல்.

எம்பிரானார் – எமது பெருமானார். தலைவர் என்று ஆசிரியர் இங்குக் குறித்ததன் காரணம்இப்புராணப்  பாட்டிற் காண்க. இப்புராணத்திற்கு முதனூலாகிய திருத்தொண்டத் தொகை இவராலே உலகம் பெறுதற்குக் காரணமாயிற்று என்ற நன்றி கருதி வணங்கினார் என்க. அதனாலே தொண்டர் கூட்டமும் அவர் புகழும் உலகெலாம் எங்கும் நிலவி நின்றதென்பதுமாம்.

அவதரித்தாராகவும், எறிவாராகவும், உடையாராகவும், பிரானாராகவும்  விளங்கிய விறன்மிண்டர் என முடிக்க.

நாயனாரது பெயரை முதலிற் கூற நேர்ந்தபோது, இவ்விடத்து “மெய்ப்பத்தர்கள்“ அடியின் அடியில் ஆசிரியர் அமைத்துக்காட்டி, நாயனாரது உண்மை நிலையைக் குறித்த அழகு காண்க. மெய்ப்பத்தர்கள்பாற் பரிவுடைமையே “கூட்டம் பேணா தேகும் ஊரனுக்கும் புறகு“ என்று நாயனார் கூறக் காரணமாயிற் றென்பதும், இதுவும் இச்சரிதக் குறிப்பாம் என்பதும் இங்கும் காண்க. வரும் பாட்டுக்களிலும்   காண்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.